Monthly Archives: April 26, 2015, 2:02 pm

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 30 இரா.முருகன்


அச்சுதம் கேசவம் – அத்தியாயம் முப்பது இரா.முருகன்

அமேயர் பாதிரியார் மரக் கூண்டுக்கு வெளியே நின்று எக்கிப் பார்த்தார். தூசு உறிஞ்சும் யந்திரத்தை அவ்வப்போது காலால் இயக்கிக் கொண்டு நடக்கிற நடுவயதுப் பெண் தவிர உள்ளே யாருமே இல்லை. பெரிய பூப்போட்ட உடுப்பும் மேலே நீலக் கோட்டும் அணிந்த லத்தீன் அமெரிக்கப் பெண்மணி அவள். உலகமே கண்ணாடிக் கூண்டுக்கு அந்தப் பக்கம் திரண்டு நின்று அழைத்தாலும் அவள் திரும்பி என்ன என்று பார்க்க உத்தேசித்திருந்ததாகத் தெரியவில்லை.

அந்த உலகத்தில் வேறு யாரையும் அவள் அலட்சியம் செய்யட்டும். அமேயர் பாதிரியாருக்குக் கவலை இல்லை. கால்டர்டேல் நகர நல்மேய்ப்பன். அவருடைய பட்டியில் இல்லாத ஆடுகளும் ஆடல்லாத இதர ஆப்ரஹாமிய ஜீவன்களும், சந்தித்த நேரம் தோறும் அன்பும் மரியாதையுமாக ஸ்தோத்திரம் சொல்லி வந்திக்கக் கூடியவரல்லவோ. தீர்மானமாக முகத்தை வேறு பக்கம் திருப்பியபடி தூசி அள்ளும் யந்திரத்தை நடத்திக் கொண்டிருந்த பெண்ணையும் சற்றே உய்விக்க அவளோடு பேச வேண்டும் என்று பாதிரியாருக்குக் கிடக்கை எழுந்தது.

பாதிரிக் குப்பாயத்தில் கைவிட்டுக் குடைந்து அவர் எதையோ எடுக்க முயற்சி செய்ய, கூடவே நின்ற கொச்சு தெரிசாவும் முசாபரும் மந்திரவாதி வித்தை காட்ட முற்படும் போது தோன்றும் ஆரவத்தோடு அவரைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள். அவர் முதலில் வெளியே எடுத்தது ஒரு வாரமாகத் தேடி எங்கோ விழுந்து தொலைந்து போய்விட்டது என்று கருதியிருந்த அவருடைய மூக்குக் கண்ணாடிக் கூடு. மரக் கூண்டின் ஜன்னல் ஓரம் விழுந்துவிடாமல் அதை வைத்துவிட்டு அடுத்துக் குப்பாயத்தில் தேட, கந்தலாகச் சுருண்ட நீல நிற வெல்வெட் துணியொன்று வந்தது. நாசம், பெண்பிள்ளைகள் பயன்படுத்துகிற கைக்குட்டை போல இருக்கும் இந்த வஸ்திரம் அவர் குப்பாயத்தில் எப்படி வந்தது என்று குழம்ப, நல்ல வேளையாக நினைவு வந்தது. புதுசாக மூக்குக் கண்ணாடி மாற்றியபோது, அது ஆறு மாதம் முன்பு, கடைக்காரன் மூக்குக் கண்ணாடி துடைக்க உகந்தது என்று சொல்லி இலவசமாகக் கொடுத்த துண்டுத் துணி அது.

முசாபர் கேள்வி ஏதும் எழுப்புவதற்குள் அந்தத் துணியின் பின்னணியைச் சொல்லி அதையும் கூண்டுக்கு வெளியே வைத்து விட்டு இன்னொரு முறை குப்பாயத்தில் தேட, முகத்தில் சீராக எழுதிய ஆனந்தம் குமிழிட்டு வந்தது. அவருடைய தபால் பெட்டியில் யாரோ போட்டு விட்டுப் போன இன்னொரு புத்தகமாக அது இருக்கலாம் என்று முசாபர் நினைப்பது போல் தெரிய, பாதிரியார் முந்திக் கொண்டார் –

புத்தகம், புறா எல்லாம் ஒண்ணும் இல்லே மக்களே. நான் மேய்ப்பன் மட்டும் தான். மந்திரக்காரன் இல்லே.

அவர் சொல்லியபடி, குப்பாயத்தில் இருந்து எடுத்த பத்து பென்ஸ் நாணயத்தை விரலால் சுண்டி, அதைக் கொண்டு மரக் கூண்டின் பலகையில் தொடர்ந்து சீராகத் தட்டத் தொடங்கினார்.

தூசி யந்திரத்தின் சீற்றத்தை அதிகப் படுத்தி கூண்டு போல ஏற்படுத்திய அறையின் இண்டு இடுக்குகளைச் சுத்தப் படுத்திக் கொண்டிருந்த பெண்மணி காதில் அது விழுந்திருக்காது தான். விழுந்திருந்தாலும் திரும்பியிருக்க மாட்டாள்.

எல்லா நன்மையும் உண்டாகட்டும் பெண்ணே. ஒரு வினாடி இதைக் கேள். கர்த்தர் உன்னில் உண்டு.

அவர் உரக்கச் சொல்ல, அந்தப் பெண்மணி திரும்பிப் பார்த்துக் கறாரான குரலில் ஸ்பானிஷ் உச்சரிப்பில் ஆங்கிலம் கலந்து சொன்னதைப் பாதிரியார் புரிந்து கொண்டது -

தெய்வம் அங்கேயே இருக்கட்டும். அல்லது உசிதம் போல் வேறெங்கும் போய் தங்கிக்கிடட்டும். இன்னும் பத்து நிமிடத்துலே நான் துப்புரவுக் காரியத்தை முடிச்சுக் கிளம்பலேன்னா நாசம். அகதிகளுக்குப் பாலும் முட்டையும் கொடுக்கற டிரஸ்டில் நான் போய் வாங்க ரெண்டுமே இல்லாம தீர்ந்து போயிடும். என்னை வேலை செய்ய விடுங்க பாதிரியாரே. கர்த்தர் உங்களை இறுக்கிப் பிடிச்சுக்கட்டும் ஆயுசுக்கும்.

பாதிரியார் ஆமென் சொல்லும் போது கொச்சு தெரிசாவும் சேர்ந்து கொண்டாள். அந்தப் பெண் தெரிசாவைக் கூர்ந்து பார்த்து விட்டுப் புன்னகையுடன் குப்பைக் கூடைகளை மேசைக்கு அடியிலிருந்து எடுக்க ஆரம்பித்தாள்.

அடுத்த நிமிடம் உள்ளேயிருந்து வந்த இரண்டு அதிகாரிகள் உயரம் கூடிய நாற்காலிகளில் ஏறி உட்கார்ந்தார்கள். துரைத்தனமான உடுப்பும் தோரணையுமாக அவர்கள் மரக் கூண்டின் சதுரம் சதுரமான பலகை அடைப்புகளை விலக்கினார்கள். அவர்களின் பார்வை அமேயர் பாதிரியார் மேல் நிலைக்க அவர் புன்னகை பூத்தார். அவர்களுடைய பிரார்த்தனையைச் செவிமடுத்து நல்ல வாக்குச் சொல்லி ஆசிர்வதிக்கத் தயாராக அவர் நிற்க, மேஜையைத் திறந்து குண்டூசி எடுத்துப் பற்களுக்கு நடுவே கடித்துப் பிடித்தபடி இருந்தார் அதில் ஒருத்தர். யாரோ உத்தரவு இட்டது போல் இரண்டு பேருமே காகிதக் கட்டுகளைப் பிரித்து மேலே இருந்த கோப்புகளை சிரத்தையாகப் புரட்ட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் வந்தனை சொல்லாவிட்டால் என்ன, பாதிரியார் சொல்வார். அவர் கையில் பிடித்திருந்த பத்து பென்ஸ் நாணயத்தால் கூண்டின் வெளியே தட்டியபடி ஸ்தோத்திரம் சொன்னார். அவர்கள் செவியைச் சாத்தானுக்குத் தத்தம் செய்தவர்களாகக் கையில் எடுத்த பணியில்லாத பணியிலேயே மூழ்கி முத்தெடுத்திருந்ததாகக் காட்டிக் கொண்டபடி இருந்தார்கள்.

மன்னிக்கவும் என்றார் பாதிரியார். அவரிடம் தான் மற்றவர்கள் அதைக் கேட்பார்கள். கருப்புத் துணித் திரைச்சீலையிட்ட இதைப் போன்ற ஆனால் சிறிய கூண்டில் அமர்ந்து பெண் பித்து பிடித்துத் தப்பு செய்ததையும், கோழி மாமிசத்துக்காகத் திருட்டும், திட்டுதலும் செய்தது பற்றியும், வயிறும் புத்தியும் நசிக்கக் கள் குடித்தது பற்றியுமெல்லாம் குற்ற ஒப்புதல் செய்து பாவமன்னிப்புக் கேட்பார்கள். ஒருத்தன் மாமியாருக்குக் கொடுக்க உத்தேசித்து எலுமிச்சைச் சாறும் ஜின்னுமாக மதுபானம் கலந்தபோது கக்கூஸ் குழாயிலிருந்து கொஞ்சம் அழுக்கு நீரும் கலந்து எடுத்துப் போனதற்காக வருத்தப்பட்டு மனப் பாரம் சுமந்ததை பாதிரியாரிடம் பகிர்ந்து, இறக்கி வைத்து இளைப்பாறினான். அது ஒரு மழைநாளில். ஜின்னோடும் எலுமிச்சைச் சாறோடும் கழிவறையின் அசுத்தமான தண்ணீரோடும், தான் வெளியேற்றிய வேறு நீரும் கலந்ததாக முழுசாக ஒப்புக் கொண்ட பிறகே மன்னிக்கப் பட்டான் அவன். ஆனால், இந்தியத் தூதரக ஊழியர்கள் மன்னிப்புக் கேட்க கால்டர்டேல் சர்ச் படியேறுகிறவர்கள் இல்லை. இவர்களிடம் ஒரு சுக்கும் அவர்களுக்குக் கெடுதல் செய்யாமல் வெற்று மன்னிப்புக் கேட்டுத்தான் பேச்சைத் தொடங்க வேண்டியிருக்கிறது. என்ன செய்ய?

என்ன வேணும்?

உள்ளே இருந்த அதிகாரிகளில் ஒருவர் பாதிரியாரைக் கேட்க, அவருக்குப் பின்னால் நின்றிருந்த முசாபர் விசாவுக்கு வந்திருப்பதாகப் பெருமையோடு அறிவித்தான்.

நான் உங்களைக் கேட்கவில்லை. பாதிரியாரைத்தான் கேட்டேன்.

அதிகாரி முசாபரைப் பார்த்தபடி நல்ல ஆங்கிலத்தில் சொன்னார். முசாபரை எதற்காவது நல்ல ஆங்கிலத்தில் கண்டிக்க வேண்டும் என்று அவருக்கு மனதில் தோன்றியிருக்கலாம்.

வேறே யாரும் வரவில்லையா?

குண்டூசியைப் பல்லில் இருந்து எடுத்து ஒரு காகிதத்தைத் துளைத்து வைத்துவிட்டு இன்னொரு அதிகாரி இன்னும் நல்ல ஆங்கிலத்தில் கேட்டார்.

கூண்டுக்கு இப்புறம் இருந்த மூவரும் இல்லை என்றார்கள்.

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டு விட்டு வந்திருக்கலாமே. நாங்கள் இன்று விசா வழங்காமல் மற்ற பணிகளை செய்வதாக இருந்தோம்.

அதிகாரி முகம் அதிருப்தியைக் காட்டியது. இந்தியா போன்ற அத்தனை பெரிய நாட்டுக்குப் போய் வர மூன்றே பேருக்கு மட்டும் அனுமதிக் கதவைத் திறப்பதை அவருடைய ஊழியம் தொடர்பான இழுக்காகக் கருதியிருப்பார் போல. மனதில் கோபம் மூண்டெழவோ என்னவோ பேசாமல் இருந்தார்.

நாங்கள் தொலைபேச முயற்சி செய்தோம். இணைப்பு கிடைக்கவில்லை.

தெரிசா சொன்னதை அவர் கேட்டதாகக் காட்டிக் கொள்ளாமல், பாதிரியாரைப் பார்த்து நீங்கள் சொல்லுங்கள், உங்களைத் தான் கேட்டேன் என்றார்.

நானும் இந்த தெரிசா வீட்டில் இருந்துதான் தொலை பேசினேன். சர்ச்சிலும் அதை அடுத்து எனக்கு ஒதுக்கிய வீட்டிலும் தொலைபேசி இல்லை. தேவன் இருந்தாலே போதாதா அங்கேயெல்லாம்?

பாதிரியார் சமாதானமாகச் சொன்னார்.

காண்டர்பரி ஆர்ச்பிஷப் உங்களுக்குத் தொலைபேச விரும்பினால் என்ன செய்வார்?

அதிகாரி ஆக்ரோஷமாகக் கேட்டார்.

காண்டர்பரி ஆர்ச்பிஷப் என்னோடு பேச விரும்பினால் ஆச்சரியமும் ஆனந்தமும் ஒருசேர அடைவேன். அவர் புராடஸ்டண்ட். நான் கத்தோலிக்க புரோகிதன்.

இந்திய அதிகாரி ஹே பகவான் என்று முனகிக் கொண்டார். அதைத் திருப்பிச் சொல்ல வேண்டுமா இல்லை விட்டுவிடலாமா என்ற குழப்பத்தில் பாதிரியார் நின்றார். அவருக்கென்னமோ அந்த அதிகாரி சொன்னது, எல்லோரையும் ஆசிர்வதியும் என்று இந்திய மொழி எதிலோ தெய்வத்திடம் மன்றாடுவதாகப் பட்டது. ஆபிரஹாமிய மதமாக இல்லாவிட்டாலும் மன்றாடலை உபாயமாகக் கடைப்பிடித்துத் தெய்வத்தைக் கூப்பிடுகிற எவனும் சங்கைக்குரியவனே.

முசாபர் ஏதோ சொல்ல வாயெடுத்தவனாக நிற்க, அதிகாரி அவனைச் சுருக்கமாகப் பேசச் சொன்னார். முசாபர் முன் யோசனையோடு தெரிசா காதில் ரகசியமாகக் கேட்டான்.

போன் செய்தால் யாரும் எடுக்கலை. ஒரே ஒரு தடவை எடுத்ததும் துப்புரவு செய்யற பெண் தான். யாரும் வரல்லேன்னாங்க. இதை இவர்கிட்டே சொல்லிடட்டா?

தெரிசா அந்தத் தகவல் ஒலிபரப்பப் தகுந்ததில்லை என்று அவசரமாகச் சொல்ல அவன் பேச ஒன்றுமில்லை என்ற முக பாவத்தோடு தலை குனிந்து நின்றான்.

ஏதாவது பேசணும்னா உங்கள் முறை வரும்போது சொல்லுங்க.

அதிகாரி சலுகை காட்டும் பாவனையில் கொச்சை ஆங்கிலத்தில் சொல்லியபடிச் செருகி வைத்த காகிததில் இருந்து குண்டூசியை உருவினார்.

ஒவ்வொருத்தராக பாஸ்போர்ட்டுகளைக் கொடுங்கள்.

அந்த அதிகாரி கழுத்து டையை இன்னும் இறுக்கிக் கொண்டு பேசினார். இதற்கு மேல் இறுக்கினால் இவருக்கு கல்லறை வளாகத்தில் தான் நாளை விடியும் என்று முசாபர், அமேயர் பாதிரியார் காதில் சொன்னான். தெரிசா அதை ரசிக்கவில்லை.

உங்கள் பாஸ்போர்ட்டை கொடுக்கச் சொன்னேன்.

அந்த அதிகாரி இன்னும் கொஞ்சம் கழுத்து டையை இறுக்க முயற்சி செய்து அது அசாத்தியம் என்று பட்டதுபோல், கை விலக்கி, அமேயர் பாதிரியார் கூண்டுக்குள் நுழைத்திருந்த அவருடைய பாஸ்போர்ட்டை அசிரத்தையோடு பார்த்தார்.

உங்க பாஸ்போர்ட்டா இது ஃபாதர்?

பாதிரியாருக்கு ஒரு வினாடி குப்பாயத்துக்குள் இருந்த அவர் பாஸ்போர்ட் மாறியிருக்கக் கூடுமோ என்று சந்தேகம் எழுந்தது. அல்லது குப்பாயமே வேறு எவருடையதோ?

அவர் நுனிக் காலில் நின்று சற்றே உள்ளே எம்பி, தன் பாஸ்போர்ட்டில் இருந்த புகைப்படத்தைப் பார்க்க முயற்சி செய்தார். அவரே தான். குருத்துவக் கல்லூரியில் படிக்கச் சேர்ந்தபோது எடுத்த படம். முப்பது வருடம் முந்தி எடுத்தது அது. அது படிக்கு இப்போதும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் சாத்தியமில்லை என்று அனுசரணையாகச் சொல்ல ஆயத்தமானார் அவர்.

அதிகாரி அடுத்தபடி கேட்டார் –

மைக்கேல் அண்டொயின் அம்மேயார்னு பெயர் இருக்கு இதிலே

மிக்கேல் அந்த்வான் அமேயர்.

பாதிரியார் சரியான பிரஞ்சு உச்சரிப்பில் தன் பெயரைச் சொன்னார். தேவனுக்கு ஸ்தோத்திரம். இந்த மாதிரியான சந்தர்பங்கள் அபூர்வமாகவே கிடைக்கின்றன.

மிக்கேலோ மைக்கேலோ ரெண்டும் ஒண்ணு தான். கிறிஸ்துவப் பெயர்கள்.

அதிகாரி அவருடைய உற்சாகத்தின் சுவாசத்தை உருவி விட்டபடி தொடர்ந்தார்.

ஃபாதர் அமேயர் என்று ஏன் போடப்படவில்லை இதில்?

நான் தியாலஜி காலேஜில் படித்தபோது எடுத்த பாஸ்போர்ட் இது.

படித்து முடித்ததும் பட்டம் கொடுத்திருப்பாங்களே, அப்போ பாஸ்போர்ட்டில் மாற்றியிருக்கலாமே

ஃபாதர் என்று பட்டம் எதுவும் தரவில்லை.

அப்போ, நீங்க பாதிரியார் என்று எப்படி நம்புவது? போப்பாண்டவரிடம் இருந்து கடிதம் வாங்கி வருவீர்களா?

அமேயர் பாதிரியாருக்கு, இது எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று புரியவில்லை.

இன்னொரு அதிகாரி அவரை ஆதரவாகப் பார்த்தபடி தன் சகாவிடம் ரகசியமாக ஏதோ சொல்ல, அவர் பாஸ்போர்ட் தகவல்களை ஒரு பேரேட்டில் பதிந்து, பாதிரியாரிடம் கேட்டார்

எத்தனை மாதம் இந்தியா போகிறீர்கள் ஃபாதர்?

அமேயர் பாதிரியாருக்கு உலகம் திரும்ப சகித்துக் கொள்ளக் கூடியதாகத் தோன்றியது. கர்த்தரின் சாம்ராஜ்யம் பிரபஞ்சம் முழுக்கப் பரந்தது. இந்தியாவும் அதில் அடக்கம். விசாவும் மற்றதும் தானே வந்து சேரும். அதற்காக அவர் இன்று மாலை நன்றி தெரிவித்துப் பிரார்த்தனை செய்வார்.

ஒரு மாதம் போதுமில்லையா?

அந்த அதிகாரி கேட்டபோது குரல் மென்மையாக இருந்ததை பாதிரியார் கவனிக்கத் தவறவில்லை.

பாஸ்போர்ட்டை சாயங்காலம் வந்து வாங்கிப் போகச் சொன்னார் அதிகாரி. எத்தனை மணிக்கு என்று தயக்கத்தோடு அமேயர் பாதிரியார் கேட்க, இரண்டு மணிக்கு என்றார் அவர். அது பிற்பகல் அல்லவோ. இருக்கட்டும். விசா கொடுக்கப்பட்ட நாட்டில் இரண்டு மணி என்பது மாலை நேரமாக இருக்கலாம். ராத்திரி எட்டு மணிக்கே எல்லோரும் படுக்கைக்குப் போகிறவர்களாகவும் இருக்கக் கூடும். ஜனத்தொகை அதிகமானதுக்கு அதுவும் காரணமோ என்னவோ.

அது பற்றிய கவலைகளை ஒத்தி வைத்துவிட்டு அவர் நிற்க, நீங்கள் போகலாமே ஃபாதர் என்றார் அதிகாரி.

நான் இவர்களுக்கு ஒத்தாசை செய்யவே நிற்கிறேன். தப்பாக நினைக்க மாட்டீர்களே?

அதிகாரி ஒன்றும் சொல்லாமல் கொச்சு தெரிசாவிடம் பாஸ்போர்ட் கேட்டார். வம்சாவளி இந்தியர் என்று முதல் பக்கத்திலேயே கொட்டை எழுத்தில் எழுதியிருந்ததை அவர் ரசித்தார் என்று தோன்றியது.

ஹௌஸ் ஒயிஃப் தானே?

கடை வச்சிருக்கேன். மீனும் வறுவலும் விற்கிற கடை.

அவர் பாஸ்போர்ட்டை ஏனோ முகர்ந்து பார்த்தார். திருப்தி அடைந்தபடி ஒரு மாதம் விசா அளித்ததாகச் சொன்னார். மீனும் வறுவலும் விசாவுக்கு உதவியதாக தெரிசாவுக்குத் தோன்றியது. கூட நிற்கிற அமேயர் பாதிரியாரின் செல்வாக்கும்.

முசாபர் பாஸ்போர்ட்டை உள்ளே நுழைத்தபோது அந்த அதிகாரி வியப்போடு சொன்னது –

பாகிஸ்தான் பாஸ்போர்ட்டா?

ஆமாம்.

உங்களுக்கு இந்தியா போக அனுமதி தர முடியாது

அவங்களுக்கு கொடுத்தீங்களே?

அவன் கொச்சு தெரிசாவைக் காட்ட, என்ன உறவு என்று கேட்டார் அதிகாரி.

மனைவி.

அவங்க இந்திய வம்சாவளி.

நானும் தான். என் முன்னோர்கள் தென்னிந்தியாவில் கடப்பா என்ற ஊர்லே இருந்து பாகிஸ்தான் போனவங்க.

அவங்க இங்கே வந்து அதை நிரூபிப்பாங்களா?

செத்துப் போய்ட்டாங்க. எப்பவோ போயாச்சு.

அப்போ உங்களுக்கு விசா கிடையாது.

எனக்கு வேணுமே.

முசாபர் குரல் உயர்த்தினான்.

அப்ப பாகிஸ்தான் விசா வாங்கிக்குங்க.

நீங்க தருவீங்களா?

அதுக்கு பாகிஸ்தான் கான்சலேட் தான் போகணும்.

பாகிஸ்தான் விசாவோடு நான் எப்படி இந்தியா போவது?

அது உங்க பிரச்சனை. என்னோடது இல்லே.

அமேயர் பாதிரியார் இரண்டு கையையும் தோள் அளவு உயர்த்தி உலகை எல்லாம் ஒரு சுற்றில் ஆசிர்வாதம் செய்தார். மதச் சடங்கை நிறைவேற்ற வாதிக்கனில் இருந்து அனுப்பப்பட்ட புரோகிதர் போல் குருத்துவக் கல்லூரியில் சொல்லிக் கொடுத்த லத்தீன் வாக்கியங்களைச் சொன்னார். அவை மறந்த இடத்தில் எல்லாம் ஆமென் என்று கூட்டிச் சேர்த்து முடித்த பிறகே நினைவு வந்தது, தான் சொன்னது லத்தீன் இலக்கியத்தில் எறும்புகள் மற்றும் வண்டுகள் பற்றிய கவிதை என்று. ஆனாலும் என்ன, எறும்புகளும் வண்டுகளும் கர்த்தரின் சிருஷ்டி தானே. அவற்றைப் பற்றிக் கவிதை சொல்வதும் வழிபாடே.

அதிகாரி திரும்ப குளிர்ந்த முகத்தோடு முசாபரைப் பார்த்தார். நீண்ட நெடுநாள் காணாமல் போயிருந்து திரும்பி வந்த மூத்த சகோதரனைப் பார்த்த மகிழ்ச்சி அவர் உடல் அசைவிலும் புன்னகையிலும் அர்த்தமானது.

பாய் சாப், மூட்டையைக் கட்டுங்க. இந்தியா உங்களை அழைக்குது.

(தொடரும்)

ரொமன் பொலன்ஸ்கி பற்றியும் மற்றவையும் – எழுத்துக்காரன் குறிப்புகள் – ஏப்ரல் 2015


வகுப்பு எடுப்பதற்காக, எத்தனையோ வருடம் கழித்து மறுபடி ரொமன் பொலன்ஸ்கியின் (Repulsion) ரெபல்ஷன் திரைப் படம் பார்த்தேன்

ஆழ்மனதில் பதிந்த வெறுப்பும், தனிமையும் மனதைக் குறக்களி காட்டி நிஜத்துக்கும் பிரமைக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க விடாமல் குழப்பி அந்தகாரத்தில் ஆழ்த்தும் கதை. கேதரின் டெனேயூ Catherine Deneuve அருமையாக சித்தப் பிரமை கண்ட கதாநாயகியாக நடித்திருப்பதைக் கண்டு இன்னொரு புகழ் பெற்ற பிரஞ்சு இயக்குனர் லூயி புனுவல் Luis Bunuel கேதரினுக்கு இதுபோல் மாறுதலான பெண் பாத்திரம் கொடுத்து, இன்னொரு புகழ் பெற்ற திரைப்படமான Le Belle De Jour அளித்திருக்கிறார்.

ஒரே ஒரு ரிபல்ஷன் படத்துக்காக ரொமன் பொலன்ஸ்கியின் சமூக விரோதத் தனி வாழ்க்கைக் குற்றங்களைக் கூட மன்னித்து விடலாம் என்று தோன்றுவது தவறே. ஆனாலும் உலக சினிமா தளத்தில் ரொமன் பொலன்ஸ்கி மறக்க முடியாத சாதனையாளர் தான்.

——————————————————————

திரு.இந்திரா பார்த்தசாரதி அவர்கள் அச்சுதம் கேசவம் நாவல் (அத்தியாயம் 28) குறித்து அனுப்பிய மின்னஞ்சலோடு தமிழ்ப் புத்தாண்டு புலர்ந்தது.

It is very interesting. You are a keen observer of men and manners. You are gifted with a natural sense of humor, which is, sadly missing in modern writing. Of course you are also a modern writer and you have not discarded the possible old influences as bad cargo!
———————————————————————–

கலாப்ரியா பத்திரிகை கலெக்‌ஷனில் கலைமகள் ஓவியம் அட்டையில் போட்டிருக்கும் தீபம் பத்திரிகை இதழ் கவனத்தை ஈர்த்தது

தீபம் ஆகஸ்ட் 1972 (இந்திய சுதந்திர வெள்ளி விழா) இதழ் அது. நான் அப்போது புதுவை தாகூர் கலைக் கல்லூரியில் இயற்பியல் இரண்டாம் ஆண்டு மாணவன். தீபம் நா.பா அந்த ஆண்டு கல்லூரிப் பேரவையைத் தொடங்கி வைக்க வந்தார். மாணவர்கள் இரு குழுக்களாக (காங்கிரஸ் – திமுக) செயல்படத் தொடங்கிய நேரம் அது. பேரவைத் துவக்க விழா நிகழ்ச்சி தொடங்கியதுமே சரமாரியாகக் கல்வீச்சு. நா.பா நல்ல வேளையாகக் காயமின்றித் தப்பினார்.

கலாப்ரியா கலெக்‌ஷனில் ஒரு பத்திரிகை இதழே இப்படி நினைவுகளில் முழுக வைத்துவிடுகிறதே.. எல்லாம் சேர்த்துப் படித்தால்…

அருமை நண்பன் கலாப்ரியா தான் சேகரித்துப் பாதுகாக்கும் பழைய இலக்கிய இதழ்களை நிழற்படங்களாகப் போட்டதைப் பார்த்து முதலில் வந்தது பொறாமை.

உடனொடத்தவன், நாலு வயசு பெரியவனா இருக்கலாம்.. எப்படி சேர்த்து வச்சிருக்கான்.. நான் சிவகங்கையிலேயே விட்டுட்டு ஊர் ஊராச் சுற்றி இந்த சந்தோஷம் இல்லாமல் போனேனேன்னு வருத்தம்..

பழையன கழிதலும் .. சரிதான்.. மனம் கேட்க மாட்டேங்குதே!
————————-

யூடியூபில் ‘மறிமாயம்’ சில எபிசோட்கள் பார்த்தேன்.

கேரளத்தில் அதிகம் பார்க்கப்படும் டிவி சடையர் இது. மழவில் மனோரமா சானலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வருவது.

மறிமாயம் என்றால் ஏமாற்று – cheating, hoodwinking, creating a delusion.. எல்லாம் தான்.

கேரள அரசாங்கத்தில் ஒரு துறை, ஒரு ஆபீஸ் விடாமல் ஒவ்வொரு வார எபிசோடிலும் தேர்ந்தெடுத்து மகா உக்ரமாகக் கிண்டல் செய்கிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் ’மறிமாயம்’ போல ஒரு நிகழ்ச்சி இப்படி ரெண்டு வருஷத்துக்கு மேலாக வெற்றிகரமாக நடப்பது அசாத்தியமான காரியம்.

லோலிதன், வல்சலா மேடம், மொய்து, மண்டோதரி, சத்யசீலன் என்று எல்லா எபிசோட்களிலும் அதே பெயர்களில் வரும் கதாபாத்திரங்கள் – லோலிதன் ஆஸ்பத்திரி எபிசோடில் டாக்டராக இருப்பார், ரேஷன்கடை எபிசோடில் சிவில் சப்ளை ஆபீஸ் கிளார்க்காக இருப்பார் – இப்படி.

இந்தக் கதாபாத்திரங்களாக நடிக்கும் நடிக, நடிகைகள் கேரளாவில் பிரபலமாகி இருக்கிறார்கள். முக்கியமாக, சிரிக்கக் கூடாத சந்தர்ப்பத்தில் வசீகரமாகச் சிரிக்கிற லோலிதனாக வரும் எஸ்,பி.ஸ்ரீகுமார்.

மொழிமாற்ற சீரியல்களாக இந்தியில் இருந்து கண்றாவி கதைகளைத்தான் இறக்குமதி செய்ய வேண்டுமா? மலையாளத்தில் இருந்து ‘மறிமாயம்’ இங்கே வரலாமே!
——————————————————————–


தேவராஜன் மாஸ்டரை நல்ல இசையமைப்பாளராக மட்டும் அறிந்தவர்கள் அநேகம். அவர் நல்ல பாடகரும் கூட. ஓஎன்வி குறூப் எழுதி, இவர் இசையமைத்துப் பாடிய ‘துஞ்சன் பறம்பிலே தத்தே’ அபூர்வமான ஒரு நாடக மேடைப் பாடல். (நிங்கள் என்னெ கம்யூனிஸ்ட் ஆக்கி என்ற பெயரில் தோப்பில் பாசி எழுதி கே.பி.ஏ.சி நிகழ்த்திய நாடகம் என்று நினைவு)

மோகனத்தில் முதல் சரணமும், ஷண்முகப்ரியாவில் அடுத்ததும், தொடர்ந்து பெஹாஹ் ராகத்தில் (??) இறுதிச் சரணமும் வரும். எப்போதோ கேட்டு மனதில் தங்கிய பாடல் இது -

————————-
நியூயார்கர் பத்திரிகைத் தளத்தில் ஹருகி முரகாமியின் ‘பூனைகளின் நகரம்’ படித்தேன்.
சர்ரியலிசமும், மினிமலிசமும், நுட்பமான சித்தரிப்பும் கலந்த அபூர்வமான கதையாடல்

புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 29 இரா.முருகன்


ஒரு மாசத்துக்குச் சாப்பாட்டுக் கடையை அடைச்சுப் பூட்டிட்டுப் போனா, கால்டர்டேல் ஊரில் பல பேர் பட்டினியால் செத்துப் போயிடுவாங்க. அப்படி இல்லேன்னாலும் தெரிசா கடையில் விற்கும் வறுத்த மீன் எப்படி இருக்கும், கூடவே வறுவல் எவ்வளவு வரும், கொஞ்சம் போல புளிப்பும் கொஞ்சம் போல காரமுமாக அது எப்படி மீனோட வாடையோடு சமாதானமாகச் சேரும்னு எல்லாம் மறந்து விடலாம். இந்தப் படிக்கு வேறு மீனும் வறுவலும் விக்கற பெரிய கடை கால்டர்டேலில் இதுவரை இல்லை. நாம் கடையை ஒரு மாசம் அடைச்சா யாராவது கடை போடலாம். அமேயர் பாதிரியாரே கூட வேறே யாரையாவது தயார்படுத்தி இதைச் செய்யலாம். பாதிரியார் மீன் விக்கக் கூடாதா என்ன?

முசாபர் அலி படித்துக் கொண்டிருந்த மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகையைக் கீழே போட்டான். அச்சு வாடையடிக்கும் காகிதம் பக்கம் பக்கமாகக் கலைந்து விழுந்து கிடக்கத் தலையை ஆட்டியபடி முணுமுணுத்துக் கொண்டான்.

அது விடிந்ததும் மீன் வாங்கப் புறப்பட்டுப் போன கொச்சு தெரசாவுக்குச் சொல்ல உத்தேசித்தது. விடிகாலை உறக்கத்தின் சுவட்டை முழுக்கக் கலைத்தபடி அவளிடம் இதைச் சொல்ல முடியவில்லை. அவன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக ஆன பொழுது, தெரிசா மார்க்கெட்டில் தானோ, அல்லாமல், கொஞ்சம் நடையை எட்டிப் போட்டு பீஸ்ஹால் வளாகத்திலோ மலிவாக மீன் கொள்முதல் செய்து கொண்டு இருக்கிறாள். என்றாலும் சொல்ல உத்தேசித்ததை அந்தப்படிக்கே சொல்லிப் பார்த்து விட்டால் நிச்சயமாக இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது சரஞ்சரமாக எல்லாம் வந்து விழும்.

பிரிட்டீஷ் அரசியல் சிக்கல்களோடு சொந்தக் குடும்பப் பிரச்சனைகளையும் விடியும்போது மனதில் அசைபோடுவது முசாபருக்குப் பழகிய ஒன்று. கொச்சு தெரிசா ஒரு மாதம் போல இந்தியாவுக்கு அதுவும் தென்னிந்தியப் பகுதிக்கு அவளுடைய சொந்த பந்தங்களைத் தேடிப் பிரயாணம் வைக்க முடிவு செய்ததில் இருந்து, கொப்பும் குழையுமாக அவனுக்கு அசைபோட நிறையக் கிடைக்கிறது.

இந்தியா போய் அங்கே மாதாகோவில்களிலும், உள்ளே போக அனுமதித்த அளவு புராதனமான கோவில்களிலும் நேர்ச்சைக் கடன் செலுத்தித் திரும்பி வந்தால் அவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகலாம் என்பது அவளுடைய வாதம்.

அங்கெல்லாம் போவதால் நல்லது ஏற்படும் என்றால் முசாபர் குறுக்கே நிற்கக் கூடிய ஆளில்லை. என்றாலும் குடும்ப வியாபரத்தையும் கணக்கில் கொள்ளணுமே.

காலடியில் போட்ட பத்திரிகை வாசலில் இருந்து மெல்ல அடிக்கும் காற்றில் அறைக்குள் அங்கேயும் இங்கேயும் அலங்கோலமாகப் பறந்தது. பத்திரிகையின் முமு மதிப்பு மனதில் படச் சற்றே சிரமப்பட்டுக் குனிந்து, பொறுமையாகப் பொறுக்கி எடுத்தான். பக்கங்களைச் சீராக நிறுத்தி, முனைகளை நீவி, தாறுமாறாக ஏற்பட்ட மடிப்பெல்லாம் நீக்கி சமனப்படுத்தினான். காலையில் வந்து விழுந்தபோது இருந்த ஒன்றுக்குப் பின் மற்றொன்றாகக் காகிதங்களை அடுக்கிய நீள்சதுர வடிவமைப்பு கிட்டத்தட்டத் திரும்ப எழுந்தது. திருப்தியோடு பத்திரிகையை நீள பெஞ்சில் ஓரமாக வைத்தான். பாதி கிழிந்த பழைய பத்திரிகை இதழ்களின் அடுக்கில் அது சேர்ந்தது.

எல்லாம் உபயோகப்படப் போகிறது. அலைந்து விலை படிந்து வந்து கொச்சு தெரிசா வாங்கி வரப்போகிற மீன் மட்டுமில்லை, மொத்தமாக வாங்கி, நமத்துப் போகாமல் இறுக அடைத்த தகரப் பெட்டிகளுக்குள் வைத்திருக்கிற வறுவல் மட்டுமில்லை, வீட்டுப் பின்பகுதியில் பலகை வைத்து வரிசை செய்து வைத்த சிறு எண்ணெய்ப் பீப்பாய்கள் மட்டுமில்லை, இந்த பத்திரிகைத் துண்டங்களும் பொறித்த மீனும் வறுவலும் விளம்பித் தரும் வியாபாரத்துக்கு வேண்டியவை.

எண்ணெய் சொட்டச் சொட்டப் பொறித்தெடுத்த மீன் துண்டங்களையும், வறுவலையும் வாங்குகிறவர்கள் பத்திரிகையில் கிழித்த காகிதத் துண்டில் வைத்துத் தருவதைத் தான் விரும்புகிறார்கள். பிஷ் அண்ட் சிப்ஸ் கடைகள் எல்லாவற்றிலும் இதுதான் வழக்கம். காகிதம் உறிஞ்சியது போக மிஞ்சிய எண்ணெயோடு சாப்பிடுகிற மீன் ருசியாக இருப்பதோடு வயிற்றுக்கும் கெடுதல் ஏதும் செய்வதில்லை என்பது பரவலான நம்பிக்கை. அதுவும் கார்டியன் பத்திரிகை அளவாக எண்ணெய் உறிஞ்சுவதால் நல்ல வாடையோடு மீன் சாப்பிட முடியும்.

கொச்சுத் தெரிசாவின் மீனும் வறுவலும் கடை இந்தப் பிராந்தியத்திலேயே பழையது. தெரிசாளின் தகப்பன் அந்த்ரோஸ் பதினெட்டு வயதாக இருக்கும்போதே
ஆரம்பிக்கப்பட்ட கடை இது என்பதை முசாபர் அறிவான். சொல்லப் போனால், அந்திரோஸ் அங்கிளுடைய அம்மாவான முழுக்க முழுக்க இந்தியப் பெயரோடு இருந்த பெண்மணி உண்டே. கொச்சுத் தெரிசா கூட அந்தப் பெயரை அமேயர் பாதிரியார் குடும்ப மரம் பற்றிப் பேசும்போது சொன்னாள், வயசான அந்த முதுபெண் இந்தக் கடையில் குந்தியிருந்து வியாபாரம் பார்த்திருக்கிறாளாம்.

பிறந்தது முதல் சுத்த சைவமாக இருந்தவளாம் அந்தக் கிழவி. கல்யாணத்துக்கு அப்புறமே கொஞ்சம் கொஞ்சமாக மாமிச பதார்த்தங்கள் பழகியவளாம். அமேயர் பாதிரியாரைக் கேட்டால் பெயர் தெரியலாம். கொச்சு தெரிசாவைக் கேட்டால், அதெல்லாம் தெரியணும் என்றால், இந்தியாவுக்குப் போய்விட்டு வந்துவிடலாம் என்பாள். அங்கே ஆரம்பித்தது தான் இந்தக் காலைநேர யோசனைகள்.

வாசலில் சைக்கிள் மணிச் சத்தம். தெரிசா சைக்கிள் ஓட்டுவதில்லை. எந்த நிமிஷத்திலும் விழுந்து விடலாம் என்ற நினைப்பு மனசின் அடித்தளத்தில் இருக்க, எல்லாம் ஒழுங்காக, நூல் பிடித்த மாதிரி நேராக நடக்கிறது என்று நம்பிக்கொண்டு அங்கும் இங்கும் சைக்கிளில் அலைந்து திரிய முடியாது என்கிறாள் தெரிசா. ஒரு வினாடி நிலைத்து நிற்பது, அப்படியே நகர்ந்து அந்த நிலைப்பை உடம்பில் தக்க வைத்துக் கொள்வது என்று விழுவது பற்றிய பயத்தைச் சிறகொடித்துப் போடத்தான் சைக்கிள் என்கிறான் முசாபர் அலி.

என்ன சொன்னாலும் அவளுக்கு சைக்கிள் அந்நியமானது. பயித்தாரத் தனமாக அவ்வப்போது நடந்து கொண்டாலும், மெட்காப் லண்டனில் வாங்கி வந்த கார் அவளுக்கு சங்கடம் தராதது. அவள் ஓட்டினால் சுவர் எதிலும் போய் மோதாமல், பர்மா ஷெல் கடையில் பெட்ரோல் போட்டால் சதி செய்து நின்று போகாமல், ஊரில், தேசத்தில் இருக்கப்பட்ட உடனொடுத்த கார்கள் மாதிரி அது உருண்டு போகிறது. மீன் வாங்கப் போவதில் அதற்கு அதிக உற்சாகம் என்கிறாள் தெரிசா.

வாசலில் சைக்கிளை காம்பவுண்ட் சுவரோடு சேர்த்துச் சாய்த்து நிறுத்தி விட்டு அதன் பின் சக்கரத்தில் சங்கிலியைச் செலுத்திப் பூட்டிக் கொண்டிருந்தார் அமேயர் பாதிரியார்.

விடிந்து ரெண்டு மணி நேரமோ, நடுப்பகலோ, ராத்திரி படுக்க ஒரு மணி முன்போ, அவருக்குப் பேச்சுத் துணை வேண்டியிருக்கிறது. சைக்கிளை ஓட்டிக் கொண்டு முசாபர் அலியைத் தேடி வந்து விடுகிறார்.

அவருடைய மந்தையில் இருக்கப்பட்ட ஆடுகளிடம் முறை வைத்து நாளைக்கு ஒருத்தர் என்று பேசினால் என்ன? முசாபர் கேட்டுப் பார்த்து விட்டான்.

கிட்டத்தட்ட மாதத்துக்கு ரெண்டு தடவை ஒரே நபரோடு பேச வேண்டியிருக்கும். ஒரு தடவை பேசுவதே பெரும்பாடு முசாபரே என்று சொல்லி விட்டார் பாதிரியார்.

அந்நிய மதம் ஆச்சே முசாபர் என்று அடுத்த வாதத்தை அவன் முன்வைத்தாலும் அமேயர் பாதிரியார் அதைப் பற்றிப் பெரிசாக அலட்டிக் கொள்ளவில்லை. அப்ரஹாமிய மதம் தானே ரெண்டும் என்பதை அவர் சற்று பெருமையோடு எடுத்துச் சொன்னாலும் முசாபருக்கு அதிலெல்லாம் சிரத்தை என்று ஒன்றுமில்லை.

இந்த அநியாயத்தைக் கேட்டியோ முசாபரே.

படி ஏறி வந்தபடிக்கே பாதிரியார் சொல்ல, அவருக்கான நாற்காலியை தீனி மேசையில் மடித்துக் குறுக்கே போட்டிருந்த துணி கொண்டு தட்டிச் சீராக்கினான் முசாபர். இன்னும் அரை மணி நேரத்துக்காவது பாதிரியாரின் வாய் பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

என் தபால் பெட்டியில் இன்னிக்கு என்ன கிடந்ததுன்னு நினைக்கறே?

காண்டாமிருகத்தின் கொம்பு? இற்றுப் போன ஒற்றை சாக்ஸ்? எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கோவிலைப் பிடிக்காதவர்கள் எதை வேண்டுமானாலும், அந்தத் தபால் பெட்டியில் போட்டு அமேயர் பாதிரியாரைப் பரிகசிக்க நினைக்கலாம்.

பாதிரியார் குப்பாயத்துக்குள் கை விட்டு செத்துப் போன எலியை எடுப்பது போல் இடது கையில் இரண்டே விரல்களால் தூக்கியபடி ஒரு சின்னப் புத்தகத்தை எடுத்து வெறுப்போடு முன்னால் இருந்த சின்ன மேசையில் போட்டார்.

இது என்ன?

இமல்டா உள்ளே சாயா எடுக்கிற சத்காரியம் செய்கிறாளா என்று அவசரமாகக் கிசுகிசுத்த குரலில் அவர் கேட்டார்.

இல்லையே பாதர். அவள் நேற்றும் இன்றும் லீட்ஸ் போக வேண்டி லீவு சொல்லி விட்டாள்.

நல்லதாகப் போச்சு என்றார் அமேயர் பாதிரியார்.

அதில் என்ன நல்லதாக இருக்கு என்று முசாபர் அலிக்குத் தெரியவில்லை. இமல்டா இருந்தாலும் எழுந்ததும் தெரிசாவை எதிர்பார்க்காமல் சுமாரான தரத்தில் சாயா கிடைக்கும். தானே போடலாம் என்றால் டீத்தூள் வேறே இல்லை. மீனோடு டார்ஜிலிங் டீத்தூளும் தெரிசா வாங்கி வரும் வரை வெறும் வென்னீரைக் குடித்தபடி வாய் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். அவன் பாதிரியார் மேசையில் போட்ட புத்தகத்தை அசிரத்தையோடு பார்த்தான்.

முசாபரே, மகா ஆபாசமும் அருவெறுப்புமான புத்தகம் இது. எவனோ சாத்தானுக்கு இஷ்டமான மனுஷ்யன் இதை என் தபாலோடு கொண்டு வந்து போட்டுப் போயிருக்கான். என்ன சொல்ல. மகா தரக் கேடான விஷயம் இது. அந்தப் பாவம் மனுஷனைப் பிடித்த சாத்தான் விலக சாயந்திரம் பிரார்த்தனை செய்ய உத்தேசம்.

முசாபர் இப்போது அந்தப் புத்தகத்தைப் பார்த்தது வித்தியாசமாக இருந்தது. அது சரி, ஆபாசமும் அருவெறுப்புமான புத்தகம் என்று எப்படி இவருக்குத் தெரியு வந்தது? உள்ளே அந்த மாதிரிப் பட்ட படம் எல்லாம் நிறைய இருக்குமோ?

சந்தேகத்தை உடனடியாக அமேயர் பாதிரியாரிடம் கேட்க, அவர் மகா உறுதியாக இல்லை என்று இடவலமாகத் தலையாட்டினார். அப்புறம் எப்படி?

என்ன மாதிரியான தரக்கேடும் நாணக்கேடும் இதெல்லாம்னு தெரிஞ்சுக்க நான் கொஞ்சம் வாசிச்சுப் பார்த்தேன். கல்யாணமான ஒரு ஸ்திரியும் அவளை இச்சித்த அயல் மனுஷன் ஒருத்தனும் அவன் வீட்டுலேயும் அவள் வீட்டிலேயும் அவர்களைக் கட்டியவர்கள் இல்லாத நேரங்களில் கிடந்து, தகாத காரியங்கள் செய்யறாங்க. அதுவும், ஜீவராசிகள் இனப்பெருக்கத்துக்காக சுபாவமா செய்யறது கூட இல்லே. மிருகங்கள் கூட செய்யாது. கற்பனையிலும் நினைக்க ஏலாத அசிங்கம் எல்லாம்.

அவர் சொல்லச் சொல்ல முசாபருக்கு அந்தப் புத்தகத்தை உடனே எடுத்துப் படிக்க வேண்டும் என்ற நினைப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகிக் கொண்டே போனது.

ஏன் முசாபரே, தெரியாமத் தான் கேக்கறேன். முழிச்சிருக்கற நேரம் எல்லாம் ஒரு மனுஷனோ மனுஷியோ இனக் கவர்ச்சியும் சேர்க்கையும் தவிர வேறெதும் நினைக்க மாட்டாங்களா?

அதுதானே என்றான் முசாபர் எதுதானே என்று புரியாமல்.

அந்தப் பெண் காலையில் எழுந்திருந்ததும் எந்த பேஸ்ட் உபயோகிச்சு பல் துலக்குவாள்? அவள் என்ன படிச்சிருக்கா? வென்னீரைக் கொதிக்க வைச்சு சாயா போடுவாளா இல்லே பாலில் டீ இலையைப் போட்டுக் கொதிக்க வைப்பாளா? காலையிலே என்ன சாப்பிட்டுப் பசியாறுவா? அவள் வயிறு எந்தத் தடசமும் உப்புசமும் இல்லாமல் கழிவை எல்லாம் கிரமமாக வெளியேற்றுமா? என்ன நிற உடுப்பு அவளுக்கு இஷ்டமானது? போன கிறிஸ்துமஸுக்கு கிறிஸ்துமஸ் மரம் வீட்டில் வச்சாளா? யாரு அதை அலங்காரம் செஞ்சது? சர்ச்சுக்குப் போவாளா? எந்த சங்கீதம் பிடிக்கும்? ரேடியோவிலே நியூஸ் கேட்பாளா? கார்டியன் படிப்பாளா? அதுன்னு இல்லே, எந்தப் பத்திரிகையாவது தினசரி படிப்பாளா?

அதெல்லாம் தெரிஞ்சுக்க இந்தப் புத்தகத்திலே வழி ஒண்ணும் இருக்கறதாத் தெரியலே பாதர்.

அவன் புத்தகத்தை சிரத்தையில்லாதவன் மாதிரி எங்கேயோ பார்த்துக் கொண்டு கவனமாக எடுக்கும்போது கொச்சு தெரிசா காரை ஓட்டிக் கொண்டு காம்பவுண்டுக்குள் நுழைந்தாள். சீராக முன்னால் போன கார் என்னமோ நினைத்துக் கொண்ட மாதிரி கொஞ்சம் பின்னால் நகர்ந்து அமேயார் பாதிரியாரின் சைக்கிளை இடித்துக் குடை சாய்த்தது.

கேடு கெட்ட இரும்பு வாகனமே.

பாதிரியார் கையை உயர்த்தி ஒரு எட்டு முன்னால் வைத்தார். கொச்சு தெரிசா காருக்குள் இருந்து ஸ்டீயரிங் பிடித்தபடி பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவள் தன்னைத் திட்டுவதாக அர்த்தம் செய்து கொள்ளக் கூடும் என்றுபட, சத்தத்தை அவசரமாக விழுங்கினார். அடிபட்ட மயில் மாதிரி விழுந்து கிடந்த சைக்கிளைப் பார்க்க அவர் உதடு துடிக்க அழுவது போல் முகம் கோணியது.

அவர் திரும்ப உள்ளே வந்து முசாபர் அலியிடமும் கொச்சு தெரிசாவிடமும், சொல்பேச்சு கேட்காத கார்கள் பற்றியும், அவற்றை உடனே களைய வேண்டியதன் அவசியம் பற்றியும், வாதிக்கனில் இருந்து இங்கே ஆயர்கள் வரும்போது இப்படியான தேவையற்ற பொருட்களைத் துறக்க வேண்டியது முக்கியம் என்று சொன்னதைப் பற்றியுமெல்லாம் சாயா ஆறியது பற்றிக்கூடக் கவலைப்படாமல் பேசுவார். பேசியிருக்கிறார். அந்தக் கேடுகெட்ட கார் முதல் தடவையாகவா அவர் சைக்கிளை இடித்து விட்டு ஏதும் நடக்காத மாதிரி முன்னேறிப் போயிருக்கிறது?

மீனை பூச்செண்டு மாதிரிச் சுமந்து கொண்டு கொச்சு தெரிசா உள்ளே வர, அமேயர் பாதிரியார் சுவாகதஞ் சொன்னார். பாதிரியாரின் வீட்டுக்குள் நுழைந்து விட்டோமா என்று தயங்கியது போல் ஒரு வினாடி தெரிசா பதற்றமாகப் பார்த்து, ஸ்தோத்ரம் என்றாள்.

அமேயர் கையை ஏதோ மாயம் செய்யப் போகிறது போல உயர்த்த, முசாபர் வெகு தந்திரமாகக் குட்டி மேசையில் கிடந்த புத்தகத்தைக் கைப்பற்றி பைஜாமா ஜேப்புக்குள் போட்டுக்கொண்டு உள்ளே போனான். பாதிரியார் புத்தகத்தை இங்கே எடுத்து வந்ததே அவனுக்குக் காட்டிக் கடைத் தேற்ற முயற்சி செய்ய வேண்டி இருக்கலாம் என்று முசாபருக்குத் தோன்றியது. சிருங்கார ரசம் மட்டும் மிகுதியாகச் சொட்டும் கிரந்தங்களை முசாபர் படிக்க மறைமுகமாக வழி செய்வதில் அவருக்கு இஷ்டம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், வேற்று மதத்தான், ஆப்ரஹாமிக பங்காளி, தாயாதி உறவு ஆனவன். இது பாவம் என்று அமேயர் பாதிரியார் எடுத்துச் சொல்வதை விட அவனே உணர்ந்து கொள்ளட்டும். கெட்ட பிறகு அவனை ரட்சிக்கலாம் என்று அவர் நினைத்திருக்கக் கூடும்.

அவர் கிடக்கட்டும். புத்தகத்தில் படம் பிடித்துப் போட்டு, நல்லதாக நாலைந்து சம்போகக் காட்சிகள் கண்ணில் பட்டால் இன்றைக்கு சீக்கிரமே மீனும் வறுவலும் கூறு கட்டி விற்பதை முடித்துக் கொண்டு தெரிசாவோடு பேசிக் கொண்டிருக்கலாம். அவளுக்கும் அந்தப் புத்தகத்தைப் படம் பார்க்கத் தரலாம். அமேயர் பாதிரியார் கொடுத்தது என்றால் அவள் கேள்வி ஏதும் கேட்கமாட்டாள்.

ஆனால் அவளுடைய மீன் வாடை நகக் கண்ணிலும் அடிக்கக் கூடியது. விடிகாலையிலேயே அணைத்துப் பிடித்துப் பெரிய பெரிய மீனாக வேறு தூக்கி வருகிறாள். ராத்திரி படுக்கைக்கு வரும்போது அது மிச்சம் இருக்கும். நாற்றம் கொஞ்சம் போல இருந்தால் தான் காமம் என்பது முசாபருக்குத் தெரியும். ஆனால் நாற்றமே காமம் என்று மூக்கைச் சாகடித்து விட்டுப் படுத்துக் களிக்க முடியாதே.

மீனை உள்ளே வச்சுட்டு வா. அவசரமா ஒண்ணு சொல்ல வேண்டியிருக்கு. அதுக்குத் தான் கிளம்பி வந்து விருத்தி கெட்ட என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தாச்சு.

அமேயர் பாதிரியார் சொல்லியபடி எதேச்சையாக மேசையைப் பார்க்க அது வெறுமையாக இருந்ததைக் கவனிக்கத் தவறவில்லை. முசாபர் தவிர யாரும் அந்தப் புத்தகத்தை எடுத்திருக்க முடியாது. போகட்டும். நல்லதுக்குத்தான் அது. சிலுவைப்பாடுகளில் அந்த ஆட்டுக்குட்டி நம்பிக்கை வைப்பது சீக்கிரம் நடக்கட்டும். அப்புறம் இதெல்லாம் சீ என்றுபோய்விடும். எப்போதாவது மனசு சஞ்சலப்பட்டாலும், அங்கே இங்கே தரிகெட்டு அலைந்தாலும், தப்பே செய்தாலும், அவர் இருக்கிறார். கோவில் இருக்கிறது. அங்கே மன்னிப்புப் பெட்டி இருக்கிறது.

கொச்சுத் தெரிசா சோப்பு வாடை அதிகமாக அடிக்கும் கையோடு தேநீர் கொண்டு வந்தபோது முசாபர் உள்ளேயிருந்து சகஜமான முகக் குறிப்போடு திரும்பி வந்து பாதிரியாருக்குத் தேநீர் உபசாரம் அளிப்பதில் மும்முரமானான்.

தெரிசா, மீன் வாங்குவதில் இருக்கும் நுட்பங்கள், பேரம் பேசுவதில் நெளிவு சுளிவுகள், பொறித்தால் எண்ணெய் அதிகமாகக் குடிக்காத மீன் எது, வாடிக்கையாளர்கள் எந்த மீனை அதிகமாக விரும்புகிறார்கள் என்பதை எல்லாம் உற்சாகமாகச் சொல்ல, பாதிரியார் மெல்லத் தேநீர் குடித்துத் திருப்தியடைந்தார்.

அப்புறம் தெரிசாளே, முசாபரே, உங்களுக்குச் சொல்ல ஒண்ணு உண்டு என்றேனே அது இதுதான்.

அவர் பாதிரிக் குப்பாயத்தின் இடுப்புப் பாக்கெட்டில் கை விட, முசாபர் சுவாரசியம் காட்டினான். இன்னொரு புத்தகம் அங்கே இருக்குமோ? இருந்தாலும் தெரிசாவுக்கு அதையெல்லாம் காட்டித் தர ஏன் சைக்கிளேறி வரவேண்டும் அவர்?

பாதிரியார் கையில் எடுத்தது மகாராணி படம் போட்ட தபால்தலை ஒட்டிய நீல நிறக் கடுதாசி உறையை.

தெக்கேபரம்பில் பாதிரியார் வாதிக்கன்லே இருந்து எழுதியது. உனக்கு அவரைப் பத்தி சொல்லியிருக்கேனே.

ஆமா, அவர் எழுதின கடிதத்தை படிக்கக் கொடுத்தீங்களே என்றாள் தெரிசா.

அதேபடி இதையும் வாசிச்சுடு கொச்சே கேட்போம். நான் மூக்குக் கண்ணாடி கொண்டு வரல்லே. இருந்தால் நானே படிச்சிருப்பேன். அப்புறம் உங்க இந்தியப் பெயர்கள் வேறே. வாய் சுளுக்கிக் கொள்ளும். சரிதானே.

தெரிசா உள்ளேயிருந்து மூக்குக் கண்ணாடி எடுத்து வரும்படி முசாபரிடம் சொல்ல அவன் வெகு வேகமாக எழுந்து படுக்கை அறைக்குப் போனான்.

பெட்ரூமுக்கு எதுக்குக் கண்ணாடி போச்சு?

தெரிசா கேடடாள்.

அதானே, அங்கே போக வேண்டியதே போகறதில்லே.

முசாபர் சிரித்தபடி பாதிரியாரைப் பார்த்தான். அவர் இதெல்லாம் காதில் விழவில்லை என்ற பாவனையோடு தேநீர்க் குவளையின் நீள அகலங்களை விரலால் அளந்து கன அளவு கணக்கிடும் மும்முரத்தில் ஈடுபடுத்திக் கொண்டார்.

குசினியில் இருந்து முசாபர் கொண்டு வந்த மூக்குக் கண்ணாடியோடு தெரிசா கடிதத்தைப் பிரித்து உரக்கப் படித்ததன் சாராம்சம் இது –

தெரிசாவும் முசாபிரும் இந்தியா போவதைக் குறித்து தெக்கே பரம்பில் பாதிரியார் மகிழ்ச்சியடைகிறதோடு தன் பிரார்த்தனைகளில் இந்தப் பயணம் சுககரமாக, சந்தோஷமானதாக இருக்கக் கர்த்தரிடம் மன்றாடுவார். அமேயர் பாதிரியார் அனுப்பித் தந்த தெரிசாவின் வம்சாவளி மரம் சுவாரசியமானது. தெரிசா இந்திய விசா வாங்க லண்டன் போகும்போது அங்கே தெக்கே பரம்பில் பாதிரியாரின் கல்லூரித் தோழரும் தற்போது இங்கே லண்டன் பல்கலைக் கழகத்தில் தத்துவம் கற்பிக்கிறவருமான பத்மன் எம் பத்மன் எம்-ரான் பத்மன் எம்-ரான் – த- ரி சேசுவே இப்படியும் சொல்லக் கடினமான பெயரா. பத்மன் லண்டன் விலாசம் இது. வெள்ளைக்குதிரை வீதியில் புண்ணியவாளர்கள் சர்ச் அருகே குடியிருக்கிறார். ஞாயிறு வீட்டில் இருப்பார். அவசியம் அவரை சந்திக்கவும். அவருக்கு கொச்சு தெரிசா வம்சாவளி பழக்கமாக இருக்கக் கூடும். அவரும் அதே ஊர் தான்.

வரும் திங்கள்கிழமை இந்திய விசா வாங்க லண்டன் போறோம். கடையை ஒரு மாதம் பூட்டி வைத்தால் ஊரில் ஆரோக்கியம் மிகுமே தவிரக் குறையாது.

தெரிசா சன்னமாகச் சொன்னாள்.

முசாபர் எப்போதோ மீனும் வறுவலும் சாப்பிட வந்த நெட்டை அமெரிக்கன் போல் தோளைக் குலுக்கிக் கொண்டான். தட் இஸ் த வே தி குக்கி க்ரம்பிள்ஸ் என்று பாட்டு வேறே சீட்டியாக வர, அடக்கிக் கொண்டான்.

அமேயர் பாதிரியார் எழுந்து நின்றார். வாதிக்கனில் போப்பரசர் நடுராத்திரியில் கிறிஸ்து பிறந்த அறிவிப்பை வெளியிடுவதுபோல நிறுத்தி நிதானமாக வார்த்தைகளின் கனம் குரலில் அழுத்தச் சொன்னார் -

நானும் உங்களோடு இந்தியாவுக்கு வரப் போறேன்.

(தொடரும்)

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 28 இரா.முருகன்


பாகம்பிரியாளூர் பஞ்சாபகேச சிரௌதிகள் அவருக்குப் பழக்கமான தினசரி கடமையில் லயித்திருந்தார்.

வால்மீகி ராமாயணத்தில் இருந்து தினசரி விடிந்ததும் ஒரு அரை, காலே அரைக்கால் ஸ்லோகம் எடுத்து வைத்துக் கொண்டு அதை விஸ்தாரமாக ஒரு மணி நேரம் சொல்வார் அவர். சில நாள் ஒரு ஒற்றை வரி மட்டும் இப்படி எடுக்கப்பட்டு வால்மீகி சொன்னது, பவபூதி சொன்னது, தெலுங்கில் ஒருத்தர், மலையாளத்தில் இன்னொருத்தர், உருது ராமாயணம், எல்லாத்துக்கும் மேல் பஞ்சாபகேசனின் சொந்த சிந்தனையில் வந்தது என்று ஒரு மணி நேரம் விடாமல் பொழிந்து நிறுத்துவார். அவர் வீட்டுத் திண்ணையில் தவறாது நடக்கும் சுபநிகழ்ச்சி இது.

முப்பது வருஷம் தினமும் இப்படி அசுர சாதகமாகத் தொடர்ந்து ராமாயணம் சொல்லிப் பட்டாபிஷேகத்தில் முடிக்கத் திட்டம். ஆரம்பித்து எட்டாவது வருடத்தில் இருந்தார் அவர்.

அரசூர் சிவன்கோவில் தெற்குத் தெருவும், ஜில்லாவும், பாரத கண்டமும், அகில உலகமுமே அந்த நித்தியச் சொற்பொழிவுக்காக தினசரி காத்துக் கொண்டிருக்கிறதாக ஐதீகம்.

ராமாயணத்துக்கு ஊரில் அங்கங்கே அடியார் இருந்தாலும், தினசரி விடிகாலையில் ராமாயணப் பிரசங்கம் இன்னும் முப்பது வருஷம் கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்ப்பு அவர்களைத் தர்மசங்கடத்தோடு விலக்கியே வைத்தது. ராமாயணம் என்று இல்லாவிட்டாலும், பஞ்சாபகேசன் என்ன பிரசங்கம் செய்தாலும் புளகாங்கிதமடைந்து கேட்க அங்கே ரெண்டு மூன்று பேர் வாய்த்தது சிரௌதிகளின் அதிர்ஷ்டம் காரணமாக அமைந்து போனது.

இவர்கள் கேட்க வந்தவர்களிடம் ராமாயணம் ஆரம்பிக்கும் முன்பாகவே வரப் போகும் பேச்சை சிலாகித்து, தட்சணையாகக் குறைந்த பட்சம் ஒரு தேங்காயாவது கொடுத்துப் போக வைக்க முயற்சி செய்வார்கள். சில அழுகுணிகள் அம்மா திவசத்துக்குப் புறப்பட்டது போல ஒற்றை வாழைக்காயோடும் தர்த்தியான இளிப்போடும் வந்து நிற்கும்போது ஸ்லோகம் சொல்லி ஒற்றைக் காயை ரெண்டாகப் பாவிக்க வைத்து வாங்கிப் போடுவதும் இவர்களே.

வராதவர்களைத் தெப்பக்குளக் கரையிலோ, பஜாரிலோ தோளைப் பிடித்து நிறுத்தி நைச்சியமாக ஆரம்பிப்பார்கள் இந்த சிஷ்ய கோடிகள் -

இன்னிக்கு ராமன் காட்டுக்குப் போறேன்னு சொல்றது. சிரௌதிகள் ராமன்னு சொன்னதுமே எல்லாரும் அழுதாச்சு. அவரும் கூட அழறார். காலையிலே அழலாமான்னு கண்ணைத் தொடச்சிண்டு ராமன் தாயாரிடத்திலே அம்மா, நான் காட்டுக்குப் போறேன் நீ அழாதேன்னு சொல்றான். ஆஹா. நீ வராம போய்ட்டியே.

பிடிபட்ட பேர்வழி முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் அமுக்குப்புளி போல நிற்பான். அப்படியே அசங்காமல் இருந்தால் அடியார் பிடியில் இருந்து சீக்கிரமாகத் தப்பித்துப் போய்விடலாம் என்று நப்பாசையே காரணம்.

என்ன சம்ஸ்கிருதம். என்ன ஸ்லோகம். மிரட்டறாராக்கும் பஞ்சுவண்ணா. புராணம் கேட்டால் அதி புண்ணியம்னு கைவல்ய நவநீதம் சொல்றது. இல்லே நரகம் தான்.

இருட்டில் தனியாக அற்ப சங்கை தீர்த்துக் கொள்ளக் குத்தவைப்பதற்கும், நரகத்துக்கும், வௌவால், எலி, கரப்பு போன்ற துஷ்ட ஜந்துக்களுக்கும் பயப்படுகிறவனாக இருந்தால் ஆழாக்கு அரிசியும் அரிசி மூட்டைக்குள் பழுப்பதற்காக அழுத்தி வைத்திருந்த வாழைத்தாரில் பிய்த்த மஞ்சளோடிய ரெண்டு வாழைக்காயுமாக அடுத்த தினம் காலையில் தலைகாட்டுவான் பிடிபட்டவன்.

அவன் திரும்பப் போகும்போது ராமன் வாசல் படிப்பக்கம் நின்று காட்டுக்குப் போகிறேன் என்று பஞ்சாபகேசனின் குரலில் சொல்வான். இன்னும் ஒரு வாரம் அவர் அயோத்தி அரண்மனைக்குள்ளே கண்ணில் படுகிற நெருங்கிய சொந்தம், விருந்தாளிகளாக வந்த தாயாதி பங்காளிகள், வேலைக்கு வந்தவர்கள், அந்தப்புரச் சேடிகள், புழங்கும் வஸ்துக்களான சந்தனம் அரைக்கும் கல், பாயசம் கொண்டு வந்த மூடி போட்ட தாமிரப் பாத்திரம், தென்னோலை விசிறி என்று சகலமானவர்களிடம், சகலமானதிடத்திலும் தன் தீர்மானத்தைச் சொல்வான். நித்தியப்படி கர்மம் இது.

கடைவீதியில் வழி மறிக்கப்பட்டவன் கொஞ்சம் வாய் சாலகம் உள்ளவன் என்றால் அடிப்பொடிகளைக் கேட்பது உண்டுதான் –

ஏன் ஸ்வாமி, வாத்தியார் முப்பது வருஷமாவா ராமாயணத்தைத் தினசரி சொல்வார்?

ஆமா. அப்படித்தான். அப்புறம் அவர் வாத்தியார் இல்லை. பண்டிதர்களுக்குச் சக்ரவர்த்தி. மகோன்னதமான பண்டிதர்.

அப்படியென்றால் சரி. சாஸ்திரிகள் முப்பது வருஷமா ஒரு திவசம் முடங்காமல் கதை சொல்லட்டும். எள்ளுப் போட்டால் எள்ளு விழாத பக்த ஜனக்கூட்டம் நிரம்பி வழியட்டும். ரொம்ப சந்தோஷமான விஷயம் தான் இது.

சாஸ்திரிகள் இல்லை. அதுக்கும் ரொம்ப மேலே உள்ள ஞானஸ்தர். தேசத்திலே, லோகத்திலேயே ரெண்டு பேர் தான் இப்படி. இவர் ஒண்ணு. ஆஸ்திரேலியாவிலே இன்னொருத்தர் இருக்கார்னு பேச்சு. அதீத புத்திமான். இவர் காலத்திலே நாம இருக்கறதே நமக்கு கிடைச்ச அதிர்ஷ்டம். அப்புறம், திவசம் எள் என்றெல்லாம் நல்ல காரியம் பற்றிப் பேசும்போது சொல்லாதீர், சரியா?

ஐயோ நான் மலையாளக் கரையில் பெண் எடுத்தவனாதலால் இப்படிப் பேச வந்தது. நாளைக்கு கோர்ட்டில் அமீனா உத்தியோகத்துக்குப் போகும் முன்பாக, தோட்டத்தில் விளைஞ்ச பறங்கிக்காய் சகிதம் ராமனைக் குசலம் விசாரிக்க வரேன். மகா பண்டிதர் ராமாயணத்தை தாராளமாக முப்பது என்ன, நாற்பது, ஏன், ஐம்பது வருஷம் தினசரி சொல்லட்டும். என் நமஸ்காரம். அவர் மங்களகரமாகப் பட்டாபிஷேகத்தில் முடிக்கும் போது நான் ஜீவித்திருந்தால் இன்னொரு நமஸ்காரமும் வாழைக்காயுமாக வருகிறேன்.

சில கல்லுளிமங்கன்கள் முகத்தை இறுக வைத்துக் கொண்டு சொல்வதோ வேறு தினுசாக இருக்கும் –

என் மாமியார் செத்ததில் இருந்து திவசத்தன்று தவறாமல் ராமாயணத்தைக் கேட்க ஐந்து நிமிஷமாவது தலைகாட்டி விட்டு, ஒரு ரூபாய் தட்சணையும் தட்டில் போட்டுத்தானே போறேன்? வேறே யாரும் போனாலும் வரலாம் தான். போகலியே?

இதுக்காக அவனைக் கண்டிப்பதா, சும்மா விட்டு விடுவதா இல்லை ஆதரவாக நாலு வார்த்தை சொல்வதா என்று யோசிப்பதற்குள் போயொழிந்திருப்பான்.

இன்னும் துடுக்கான பேர்வழி என்றால் பஞ்சாபகேசன் மகாபாரதத்தையும் தினசரி இப்படி இன்னொரு நூறு வருஷம் பிரவசனம் செய்யலாமே. அரசூரில் தான் சாவு என்பதே இல்லாமல் போனதே. ச்ரௌதிகளுக்கும், மகாபாரதத்துக்கும் அடியாருக்கும், எல்லாம் தீர்க்காயுசாச்சே என்று கேள்வி போடுவதும் உண்டு தான்.

அடிப்பொடி அடிப்பொடியாக இருப்பதால் இந்த மாதிரியான விதண்டாவாதங்கள் எல்லாம் முகச் சுளிப்பும் அசடர்களை அருளாலும் கசடர்களைக் கருணையாலும் எல்லாரையும் பயத்தாலும் ஆட்கொண்டு புராதன தத்துவ மெய்ஞான தரிசனம் கிட்டச் செய்யும் அவசரமுமாக எதிர்கொள்ளப் படும். எதிராளி தோளை இறுகப் பிடித்து இதோபதேசமாக வருவது இந்த மாதிரி இருக்கும்-

ஓய் அவர் ஐம்பது வருஷமும் சொல்வார். நூறு வருஷமும் சொல்வார். அனுமதி கொடுக்க நீர் யாராக்கும்? வந்தால் வாரும். இல்லாவிட்டால் வேடிக்கையும் விநோதமுமாக பாட்டும் லச்சை கெட்ட கூத்துமாகக் கிடந்து ஒழியும். இன்னும் நாலு மாசத்தில் சனி வக்கரிக்கும்போது நல்ல வார்த்தை கேட்காத எல்லோருக்கும் மகா கஷ்டமாம். நம்ம ச்ரொதிகளுக்கோ, நேப்பாள மகாராஜா வல்லவெட்டு கட்டி, வெள்ளித் தேங்காய் கொடுத்து வெள்ளைக் குதிரையில் ஏற்றிப் பவனி வரும்படிக்கு மரியாதை செய்யப் போகிறார் அப்போ நீரும் உம் போன்ற அதிகப் பிரசங்கிகளும் மூஞ்சியை எங்கே வைப்பீர்? பிழைத்துப் போம்.

நேப்பாள மகாராஜா அதெல்லாம் செய்யட்டும். எனக்கு ஒரு நோப்பாளமுமில்லை என்று சொல்ல ஆள் இருக்காது. அவன் ஓடி ரட்சைப் பட்டிருப்பான்.

இன்றைக்கு அடியார்களுக்குச் சொல்ல இன்னொரு புண்ணியச் சேதியும் உண்டு.

அரசூரில் சாவு அஸ்தமித்துப் போனதா?

இந்தக் கேள்வியே தலைப்பாக ஆங்கிலப் பத்திரிகையில் வந்த கட்டுரையைப் படித்து அமெரிக்காவில் இருந்து யாரோ அரசூருக்கு வருகிறார்களாம். அவர்கள் முக்கியமாகப் பேசப் போவது ச்ரௌதிகளோடு என்று தகவல் வந்தாச்சாம்.

குளித்து, மடி வேட்டியும் அங்கங்கே நைந்த பட்டுத் துண்டுமாகப் பிரதி தினம் உதயம் ஏழு மணிக்கு வீட்டுத் திண்ணையில் கிழக்குப் பார்த்து உட்கார்ந்து பஞ்சாபகேசன் ராமாயணம் சொல்ல ஆரம்பிப்பது வழக்கம். முன்னால், ஆகாசம் வெளிவாங்கின வெக்கையை கிளப்பும் சாதாரண தினத்தில் நாலு பேரும், மழை நாளில் ரெண்டு பேரும் மட்டுமே இருக்க அவர் யார் எவர் என்றெல்லாம் சிரத்தையில் போட்டுக் கொள்ளாமல் கட்டைக் குரலில் ஆரம்பித்து விடுவார்.

இன்றைக்கு திண்ணையில் இல்லை அவர். வாசலில் அவசரமாகப் போட்ட தென்னோலைப் பந்தலில் நிலம் தெளித்து வரி வரியாகக் கோலம் போட்டு அதன் நடுவிலே பாந்தமாகச் செம்மண் பூசியிருக்கிறது.

அந்துருண்டை மணக்கிற பட்டு வேஷ்டி இடுப்பில் நிற்பேனா என்கிறது. ரொம்ப நாள் மடித்தே இருந்ததால் வேட்டியின் முனைகளும் மடிப்புகளும் துருத்திக் கொண்டு தெரிகின்றன. எட்டு மாதம் முன்பாக விஜயதசமிக்கு பூஜை செய்ய உட்கார்ந்தபோது பானகம் சிந்திய கரை மடியில் தெரிகிறது. வேஷ்டியோடு அப்போது பகல் சாப்பாட்டுக்கு உட்கார்ந்தபோது குழம்பு வேறு பட்ட இடத்திலேயே திரும்பப் பட்டு கரையை இன்னும் விகாரமாக்கி இருக்கிறது.

துவைத்தால் கரை அநேகமாகப் போய் விடலாம். ஆனால் இப்போது இல்லை. ராம பட்டாபிஷேகத்தின் போது அதைப் பார்த்துக் கொண்டால் போதுமானது.

பஞ்சாபகேசன் ஓடுவதற்கு ஆயத்தம் செய்கிறது போல் கவிழ்ந்து உட்கார்ந்திருந்த ஆசனத்தைப் பார்த்தார்.

அடிக்கடி நகர்ந்து போய் அவர் எக்கிக் கீழே திணித்துக் கொள்ளும் கட்டைப் பலகை இல்லை ஆசனமாக. கோவிலில் அவசரமாகக் கடன் வாங்கி வந்து கிழக்கு நோக்கிப் போட்டிருக்கிறது தாமரைப் பூ விரித்த மாதிரி தரையிலிருந்து அரை அடியில் நிற்கிற ஆசனம். திருவாதிரைக்கு அதில் உட்கார்ந்து தான் தலைப்பா கட்டிய ஓதுவார் திருப்பாவை இருபதும் திருப்பள்ளி எழுச்சி பத்தும் பாடி ஒவ்வொரு பாட்டுக்கும் நிறுத்தி தீபாரதனை எடுக்கிற பழக்கம்.

கீகடமான அந்த ஆசனத்தில் எப்படி வருஷா வருஷம் நல்லசிவ ஓதுவார் உட்கார்ந்து பொறுமையாக முப்பது பாட்டு பாடி வெண்பொங்கல் மரியாதையோடு போகிறார் என்று பஞ்சாபகேசனுக்குப் புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் நிச்சயமானது. இந்த ஆசனத்தில் தினசரி உட்கார்ந்து தான் ராமாயணம் சொல்லணும் என்று சர்க்காரோ மற்ற யாரோ விதித்தால், சூர்ப்பனகை வருவதற்குள் பஞ்சாபகேசனுக்கு எமன் வந்துவிடலாம். ஊரோடு சாவு திரும்பி வருவதாக சூசனை கொடுத்தபடி மயில்கள் பின் நோக்கிப் பறக்கிற காலமாக இருக்கும் அது. அல்லது தாழப் பறக்கிற கழுகள் வட்டமிட இருட்டு நகர்ந்து போகிற தெருக்களாக அரசூர் வீதிகள் தட்டுப்படும்.

மனசில் எழுந்த இந்தச் சித்திரம் உள்ளபடிக்கே பஞ்சாபகேச ச்ரௌதிகளுக்கு இஷ்டமாக இருந்தது. யாராவது மஹாகவி, மஹரிஷி சொன்னதாக முன்பாரம் பின்பாரமாக ஏதாவது உபநிஷத்தில் இருந்து ரெண்டு ஸ்லோகம் சொல்லி நடுவில் கனமான அர்த்தமாக இதை வைத்து விளம்பி விடலாம். சாவு பயத்தோடு இருந்த தசரதனுக்கு அரண்மனை புரோகிதர் சொன்னதாக வைத்துக் கொள்ளலாம். வால்மீகி ராமாயணப் புத்தகத்தை தூசி தட்டி முகர்ந்து பார்த்த ஒருத்தனாவது இங்கே இருப்பதாக அவருக்கு நினைவில் இல்லை.

வழக்கத்துக்கு மாறாக ஐம்பது அறுபது பேர் வந்து காத்திருந்த பந்தலில் அவர் நிறையக் குரலை உயர்த்தி தியான சுலோகம் சொல்லி முடித்ததும் மனசில் சரஞ்சரமாக யோசனை. சோவியத் ராக்கெட்டில் ஒரு நாயும், அப்புறம் யூரி ககாரிதன்னு ஒரு விஞ்ஞானியும், அதானே பேரு, இல்லே யூரின் ககாரினா? போறது ஒரு எழுத்து ரெண்டெழுத்து கூடக் குறைய ஆனா என்ன கேடு வரப் போறது. அப்புறம் அந்தப் பொம்மனாட்டி ராக்கெட்லே போனாளே தெரண்டுகுளின்னு பேரு வருமே. வேண்டாம். பேரைச் சரி பார்க்க நியூஸ் பேப்பரைக் கொண்டான்னு காத்திருக்க முடியாது. நியூஸ்பேப்பர் பாத்துட்டுத்தானே அமெரிக்க தேசத்துலே இருந்து வரப் போறா.

அடுத்த பத்து நிமிஷத்தில் ரஷ்ய ராக்கெட், புஷ்பக விமானம், றெக்கை மொளைச்சுப் பறக்கும் கந்தர்வர்கள், ரஷ்ய ராட்சசர்களுடைய ராக்கெட்டில் உக்காந்து குண்டு போடப் போன ககாரிதன். அசுரர்களோட யுத்தம் பண்ண ஆசிர்வாதம் வாங்கியிருக்கற அமெரிக்க ஜனங்கள் இப்படி வரப் போகிற வெள்ளைக்காரர்களுக்காக ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்த ராமன் காட்டுக்குப் போவதை இன்னும் கொஞ்சம் தள்ளிப் போட்டான். அவன் ஓரமாகக் கூட்டத்தோடு கூட்டமாக நின்றான்.

ஏழே முக்கால் மணி ஆன போதும் அமெரிக்காக்காரன் வருகிற வழியாகக் காணோம். சிஷ்யகோடிகள் தெருமுனைக்கு ரெண்டு மூணு தடவை பொறுமையில்லாமல் நகர்ந்ததையும் அதில் ஒருத்தன் அங்கேயே குத்த வைத்துச் சங்கை தீர்த்து கை அலம்பாமல் கூட்டத்தில் திரும்பக் கலந்து நின்றதையும் பஞ்சாபகேசன் கவனிக்கத் தவறவில்லை.

கூட்டமாக இருக்கிற நேரத்தில் அயல்நாட்டான் வந்தால் இங்கே வாழைக்காயும் கத்திரி, வெண்டையும், அரை ஆழாக்கு அரிசியுமாக வந்திருக்கிற பெண்டுகளுக்கும், அரை ரூபாய், ஒரு ரூபாய்க்கு அதிகப்படாத தட்சிணையை காசாகக் கொண்டு வந்திருக்கும் புருஷர்களுக்கும் பஞ்சாபகேசன் யாரென்று மனசில் அழுத்தமாகப் பதியும். தினசரி ராமாயணம் அதுவும் முப்பது வருஷம் நாள் தவறாமல் சொல்வது சாதாரணப் பட்ட விஷயமா? இத்தனை நாள் இவர்கள் காட்டிய உதாசீனம், வெள்ளைக்காரன் தினசரி ராமாயணம் பற்றி விசாரிக்கும் போது மாறும். அவன் விசாரிப்பான். இல்லாவிட்டாலும் இவர் சொல்வார்.

முடிய இன்னும் ஐந்து நிமிஷமே பாக்கி என்றானபோது அயோத்தித் தெருவில் நடக்கிற ராமனைக் கொண்டு வந்து கொஞ்சம் நீட்டலாமா என்று யோசித்தார் பஞ்சாபகேசன். ஒவ்வொரு தெருவும் ஒரு மாதிரி – நால்வர்ணத்துக்கும் ஏற்பட்ட உடுப்பு, ஆபரணம், பேச்சு, ஆகாரம் என்று ஒவ்வொன்றாகச் சொல்லி ராமனைத் தெருவோடு நீள நடக்க வைக்கலாம்.

தெருமுனையில் ஒரு ஜட்கா வண்டி தட்டுப்பட்டது. அது ச்ரௌதிகள் வீட்டு வாசலுக்கு வந்து நிற்க ரெண்டே நிமிஷம் தான் ஆனது.

வெள்ளைக்காரர்கள். சின்னதாக பெட்டிக் கேமிராவும் கையில் சுருட்டிப் பிடித்த நோட்புக்கும். அவ்வளவுதான் கட்டிக் கொண்டு வந்த சொத்து. பெரிய பெரிய டேப்ரிகார்டர், விளக்கு, உசரமான ஸ்டாண்டில் பிரதிஷ்டை செய்ய வேண்டிய காமிரா, குச்சி கட்டின மாதிரி நீண்ட மைக் – எதுவும் இல்லை அவர்களிடத்தில்.

ஆனால் என்ன, வெள்ளைக்காரர்கள்.

அரசூர் அரண்மனையில் ஜமீந்தார் மருதையரோடு பேசியதில் நேரமாகி விட்டதாக அவர்கள் அறிவித்ததையும் அதற்காக மன்னிப்புக் கோரியதையும் கூடவே நின்ற ஒரு மதுரைக்காரர் மொழி மாற்றிச் சொன்னார். அவர் மருதையனின் கூட காலேஜில் ப்ரபசராக வேலை பார்த்தவர் என்றும் சொல்ல, ச்ரௌதிகள் சங்கடமாகப் புன்சிரித்தார். இவன்கள் தனியாக வந்திருந்தால் தன் போக்கில் நாலு வார்த்தை சொல்லி, வேண்டப்பட்டவர் மூலமாக சாதகமாக வெள்ளைக்காரன் மனசில் பதிய வைத்திருக்கலாம். இந்த மதுரைக்கார புரபசர் எல்லாத்திலும் மூக்கையும் இங்கிலீஷையும் நுழைத்து வேலையைக் கெடுத்து விடுவார்.

என்ன ஆனாலும் சரிதான் என்று மயில்கள் பறந்ததிலும், சாவு அற்றுப் போனதிலும், சம்ஸ்க்ருதத்தில் பழைய கிரந்தங்களில் மயிலுக்கும் சாவுக்கும் சம்பந்தம் இருப்பதைச் சொல்வது பற்றியும், அவர் ராமாயணத்தை எட்டு வருஷமாகச் சொல்லி வருவதையும் காட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிற ராமனுக்கு இன்னும் இருபத்திரெண்டு வருஷத்தில் பட்டாபிஷேகமாகும் என்றும் லோகத்தில் தன்னைத் தவிர இப்படி அசுர சாதகமாக முப்பது வருஷம் கதை சொல்லவில்லை என்பதையும் அதிவிநயமாகத் தெரியப் படுத்தினார். கூட வந்த மதுரைக்கார புரபசர் இதில் எத்தனை சதவிகிதம் துரைகள் காதில் விழ வகை செய்தாரோ, ஈஸ்வரனுக்கே வெளிச்சம்.

அவருக்குச் சட்டென்று நினைவு வந்த எப்போதோ வேத பாடசாலையில் உருப்போட்ட காளிதாசனின் ரகுவம்சம் காவிய வரிகளைச் சம்பந்தமில்லாமல் சொல்லி அப்படியான பாரத தேசம் என்று தேசபக்தி மூலமும் அப்படியான ராமன் என்று காவிய ரூபமாகவும் வெள்ளைக்காரர்கள் மெச்ச சம்பந்தம் உண்டாக்க முற்பட்ட போது தெருமுனையில் திரும்ப வண்டிச் சத்தம்.

இந்தத் தடவை அது பேரிரைச்சலாக இருந்தது.

அரசூர் ரயில்வே ஸ்டேஷனில் வழக்கமாக நிற்கிற ஐந்து வண்டியும் நிரம்பி வழிய ஐந்துமே இங்கே வந்து நிற்க, இறங்கினவர்களைப் பார்த்து பிரசங்கம் கேட்க வந்தவர்கள் உற்சாகமானார்கள்.

காசிக்கு போனவர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் கொண்டு வந்திருக்கும் கங்கைத் தண்ணீரையும், வடக்கத்திக் கோவிலில் தரும் அசட்டுத் திதிப்புப் பொறி பிரசாதத்தையும் எதிர்பார்த்து வண்டிப் பக்கம் போய் நின்றார்கள் எல்லோரும்.

ஆலாலசுந்தரம் மௌனமாக இறங்கினார். லோகசுந்தரிப் பாட்டி ஹரித்வாரில் உயிரை விட்ட தகவலைத் தெரியப் படுத்தினார். எப்போ எப்படி என்று சத்தம் உயர்ந்தது. பதில் வந்து சேர்ந்த எல்லோராலும் கொஞ்சம் கொஞ்சம் சொல்லப்பட்டு முழுமைப் படுத்தப் பட்டுக் கொண்டிருந்தது. பஞ்சாபகேசன் விஷயம் என்ன என்று தெரிய அடியார்களைப் பார்த்தார். அவர்கள் புதுசாக வந்த சாவுச் செய்தியின் பரபரப்பில் இருந்ததால் அவர் பக்கமே திரும்பவில்லை.

பந்தலில் மீதி இருந்த நாலைந்து பேரும் சுவாரசியம் கருதி இப்போது மற்றவர்களோடு கலந்து வெளியே வந்து நின்றார்கள். பஞ்சாபகேச ச்ரௌதிகள் வந்த வண்டிகளையும் வெளியே குவிந்த கூட்டத்தையும் பார்த்து கொண்டிருந்தார்.

ஒரு நிமிடம் தாமதித்து விட்டு ராமன் அரண்மனைக்கு வெளியே நடக்க ஆரம்பித்தான்.

வெள்ளைக்காரர்கள், மொழிபெயர்க்க வேண்டாம் என்று சொல்லி விட்டுக் கேட்டபடி இருந்தார்கள்.

(தொடரும்)

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 27 இரா.முருகன்


நாலு பக்க ஜன்னலும் மட்ட மல்லாக்கத் திறந்து வீடு முழுக்க வெளிச்சம் நிரம்பிக் கொண்டிருக்க, கற்பகம் சுருண்டு படுத்திருந்தாள்.

நீலகண்டன் போய்ச் சேர்ந்து ஒரு மாதமாகி விட்டது. போன மாதம் இந்தத் தேதிக்கு, இந்த நேரத்துக்குத் தான் அவனை மூங்கில் படுக்கையில் தூக்கிப் போய் எரித்து விட்டு வந்தார்கள்.

நீலகண்டனைக் கவனித்துக் கொள்ளும் மேல் நர்ஸ் லிங்கம் ஊருக்குப் போக லீவு எடுத்திருந்த நாள் அது. நடு ராத்திரிக்கு அப்புறம் எப்போதோ கூடத்துக்கும் பாத்ரூமுக்கும் நடுவில் பாலம் போட்டது போல விழுந்து நினைவு தெளியாமல் நீலகண்டன் போய்ச் சேர்ந்திருந்தான். விடிகாலை பால்காரன் குரல் கேட்டு எழுந்திருந்த கற்பகம் பார்த்ததும் உணர்ந்து கொள்ள அதிகம் கஷ்டப்படவில்லை.

சுற்றிலும் நரகலும் சிறுநீருமாகச் சால் கட்டித் தேங்கியிருக்க அவன் தலைகுப்புறப் படுத்திருந்ததைப் பார்த்ததுமே அவளுக்குப் போதமாகி விட்டது நீலகண்டன் இல்லாமல் போன விஷயம்.

அடுத்த வீட்டிலே பாலைக் கொடுத்துட்டுப் போ. இன்னும் ரெண்டு படி எருமைப்பால் இருந்தா அதையும் நான் சொன்னேன்னு அங்கே கொடுத்துடு. எல்லாம் வேண்டி இருக்கும்.

பால்காரனுக்கு அறிவித்த போது தன்னைத் திடமாக உணர்ந்தாள் கற்பகம்.

எங்கிருந்தோ அசுர சக்தி வந்து மேலே கவிய, பம்பாய்க்கு போன் போட, காம்பவுண்ட் சுவர் மேலே எக்கிப் பார்த்து அண்டை அயலாருக்குப் பதட்டமில்லாமல் தகவல் சொல்ல, வாசல் முன்னறையில் வந்தவர்கள் உட்கார ஏதுவாக, சோபா, நாற்காலியை உள்ளே கூடத்தில் இழுத்துப் போட என்று பரபரவென்று தனியாகவே செயல்பட்டாள் அவள்.

மதியத்துக்கு ஏராப்ளேன் பிடித்து கிருஷ்ணன் வந்து சேர்ந்தாகி விட்டது. செண்ட்ரல் மினிஸ்டர் வீட்டுச் சாவு, அதுவும் அவருடைய அப்பா காலமானார் என்றதால் அதது தன் பாட்டில் சுபாவமாக நடந்து முடிந்தது.

வீட்டு நிர்வாகத்தை மருமகள் கவனித்துக் கொண்டு வேளாவேளைக்குச் சாப்பாடாகவும், காப்பியாகவும் ராத்திரி கனிந்த வாழைப் பழமாகவும் அவளை உபசரித்தாள். அவ்வப்போது ரெண்டு வார்த்தை இதமாகப் பேசினவளும் அவள் தான்.

ஆனாலும் அவளும் தன் ஓரகத்தி பற்றி முழுசாகச் சொல்லவில்லை. ஆட்டக்காரியான அந்த ஓரகத்தி மனம் பிசகாகி சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை போகிற போக்கில் சொல்லிப் பேச்சை மாற்றிவிட்டாள். இருக்கிறதே போதாதா, அந்தத் துக்கமும் எதுக்கு கற்பகத்துக்கு என்று நினைத்திருக்கலாம்.

தம்பி வழக்கம் போல என் மேலே குரோதத்தோட தான் இருக்கான். அவன் பெண்டாட்டிக்கு பென்ஷன் நின்னு போச்சுன்னு டில்லியில் வந்து தர்ணா பண்ண உக்காந்தான். எனக்கு பிரச்சனை உண்டாக்கணும். அதுதான் அவனுக்கு முக்கியம். நான் கார் அனுப்பி கூட்டி வந்து எதமாப் பதமாச் சொல்லி அனுப்பினேன். காலை எடுத்தாலும் மனசிலே வன்மத்தை எடுக்க முடியாதேம்மா.

ரெண்டு பிள்ளைகளும் இன்னும் ஒத்துப் போகாதது பற்றி அழுதாள் கற்பகம். சின்னப் பிள்ளை பரமேஸ்வரனுக்கு ரயில் விபத்தில் கால் போனதற்காக ஒரு பாட்டம் அழுதாள் கற்பகம். நீலகண்டன் போனது நினைவில் பட, அதுக்கு இன்னொரு பாட்டம். அவளுக்கு மாற்றி மாற்றி அழ காரணமும் நேரமும் இருந்தது.

பம்பாய்க்கு வந்துடுங்கோ என்றாள் மருமகள். வந்துடும்மா என்றார் மினிஸ்டர். பம்பாய்லே போய் பிள்ளையோட இருங்கோ என்றார்கள் சாரி சாரியாக வந்து துக்கம் விசாரித்துக் காப்பி குடித்துப் போனவர்கள்.

கற்பகம் எங்கேயும் போக மாட்டாள் என்று எல்லோருக்கும் தெரியும்.

ரெண்டு வாரத்தில் காரியம் எல்லாம் முடிந்து எல்லோரும் புறப்பட்டுப் போய் வீடு வெறுமையாகிக் கிடக்கிறது. இனிமேல் எப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று கற்பகத்துக்குத் தோன்றியது.

மூத்திரம் படிந்த கூடத்துச் சுவர்களும், கதவு இடுக்கில் மலமும், சமையல்கட்டில் தண்ணீர்க் குடத்துக்கு மேல் விழுத்துப் போட்ட நனைந்த அண்டர்வேரும் இந்த வீட்டில் இனி அவளுக்கு ஆயுசுக்கும் பார்க்கவும் சகித்துக் கொள்ளவும் கிடைக்காது. அடிக்காதேடி அடிக்காதேடி இனிமே இப்படிப் பண்ண மாட்டேன் என்று குழந்தை போல வீறிட்டு அழுகிற நீலகண்டனின் யாசிக்கும் குரலும் அவள் பின்னால் சுற்றாது. விக்கிரமாதித்யன் முதுகை விட்டு வேதாளம் இறங்கியாச்சு.

புரண்டு படுத்தாள். மனம் முழுக்க அந்தப் பாழாய்ப் போனவன் தான்.

கழுத்தில் தடவிப் பார்த்துக் கொண்டாள். நீலகண்டன் கட்டிய தாலி தங்கக் கொடியில் கிழங்கு மாதிரி இன்னும் கழுத்தில் தொங்குகிற மயக்கம். பத்தாம் நாள் காரியம் முடிந்து யாரோ உறவுக்கார விதவைக் கிழவி அதை வாங்கிக் கொண்டு சங்கிலியை மட்டும் திருப்பிக் கொடுத்தாள்.

இதுலே தாலிக் குண்டு, கொம்பு எல்லாம் பத்திரமா இருக்கு. சரி பார்த்துக்கோ.

செயினாகவும், காகிதத்தில் மடித்து வைத்த தங்கக் குண்டும், கொம்புமாகப்ப் பார்த்துக் கொள்ள எல்லாம் தான் இருந்தது. அவள் தான் சரியாக இல்லை. நீலகண்டனும் எரிந்து ஒரு குடத்தில் சாம்பலாக அடங்கி, சமுத்திரக் கரையில் கரைந்து ஒன்றுமில்லாமல் போனான்.

ராத்திரியில் எழுப்பி, இருட்டு பயமா இருக்குடி என்று இடுப்பைக் கட்டிக் கொண்டு தூங்க இனி அவன் இல்லை. மேலெல்லாம் மூத்திர வாடை அடிக்க அந்த அணைப்பைத் தள்ளி விட மனசில்லாமல் அப்படியே நித்திரை போய் துணி நனைகிறது தெரிந்து விழித்துக் கொள்கிற காலைப் பொழுதுகளும் இனி இல்லை.

நாசமாப் போறவனே, கட்டிக்கறேன் கட்டிக்கறேன்னு மேலே மூத்திரத்தைப் பேஞ்சு வைச்சுட்டியே. உன் நாறத் துணியைக் கசக்கறதோட என் புடவையையும் இல்லே முக்கி முக்கித் தோய்க்க வேண்டியிருக்கு.

சின்னக் குச்சியால் வலிக்காமல் அடிக்கவும், வலியில் உசிர் போனது மாதிரி தீனமாகக் கூப்பாடு போடவும் நீலகண்டன் இல்லை.

அசுத்தமும் ஆர்ப்பாட்டமும் பிடிவாதமும் மூளை பிரண்டு போனதும் மட்டுமா நீலகண்டன்?

கற்பகம் தூரம் குளித்து நாலு நாள் ஆன உடம்பு மினுமினுப்பும் தேக வாசனையும், வாயில் தாம்பூலமும் தலை கொள்ளாமல் மல்லிகைப்பூவுமாகக் கையில் சுண்டக் காய்ச்சிய பாலோடு வந்து மச்சு உள்ளுக்குள் எட்டிப் பார்த்தது எப்போது? உள்ளே படுத்துக் கொண்டிருந்த, காத்துக் கொண்டிருந்த நீலகண்டன் யார்?

சுடச்சுடப் கொஞ்சம் பசும்பால் குடிச்சுட்டு தூங்கக் கூடாதா? சர்க்கார் உத்தியோகம் உடம்பை உருக்கி இப்படி நோஞ்சானாக்கிடுத்தே. பெலம் வேணாமா எல்லாத்துக்கும்?

அவள் எல்லா எதிர்பார்ப்புகளோடும் அது பற்றி எழுந்த வெட்கத்தோடும், நான் என் அகத்துக்காரனிடம் சுகம் எதிர்பார்க்கிறேன் அதைப் பற்றி யார் என்ன சொல்ல என்று சகலரையும் எடுத்தெறியும் தைரியத்தோடும் விசாரித்தது எந்த நீலகண்டனை?

சுபஹோரை கனிந்து வந்த மார்கழி மாசத்து ராத்திரியில் குளிரக் குளிர கற்பகத்தை ஆலிங்கனம் செய்து பக்கத்தில் கிடத்தி ராத்திரி முழுக்க அவள் மனம் கெக்கலி கொட்டிப் பறக்கச் சுகம் கொடுத்த நீலகண்டன் யார்? அவள் வெள்ளமாகப் பெருகிக் கரைய, ஒரு துளி விடாமல் முழுதும் கொண்ட நீலகண்டன் யார்?

ஆனாலும் நீர் ராட்சசர்ங்காணும். இப்படியா ஒரே ராத்திரியிலே.

கற்பகம் முணுமுணுத்தது எந்த யுகத்தில்? முகத்திலும் உடம்பு முழுக்கவும் திருப்தி எழுதியிருக்க இருட்டில் காலைப் பிணைத்து இறுக்கமாக ஒட்டிக் கொண்டு அவள் யார் காதுமடலைக் கடித்தாள்?

என் ராஜா.

எத்தனை துவைத்தாலும் சிறுநீர்க் கறையும் வாடையும் முழுக்கப் போகாத பஞ்சுத் தலகாணியை அணைத்துப் பிடித்துக் கொண்டு கண் கலங்கினாள் கற்பகம்.

என்னையும் கூட்டிண்டு போயிருக்கக் கூடாதா எழவு பிடிச்சவனே?

படுத்தபடி வெறும் வெளியில் கையெறிந்து திட்டியபோது அழுகை மனதில் முட்டி மோதி முனை முறிந்து சர்வ வியாபகமாகக் குரல் உயர்ந்து அதிர்ந்து நடுங்கி வந்தது.

தனியா விட்டுட்டியேப்பா என்னை பிடிக்கலியா ரொம்ப அடிச்சுட்டேனா வலிக்கறதா கொஞ்சம் பால் எடுத்துண்டு வரட்டுமா என் ராஜா?

அவள் அழுகை சத்தம் பிசிறி விம்மலாக உடைந்து சிதற வாசல் மணியை யாரோ திரும்பத் திரும்ப அடிக்கும் சத்தம்.

அவசரமாகக் கட்டிலில் எழுந்து உட்கார முயற்சி செய்தாள். முடியவில்லை. சட்டென்று ஒரு பயம் கவிந்தது. இப்படியே உடம்பு முடங்கிப் போய், வாசல் கதவும் சார்த்தி இருக்க, நாள் முழுக்க, வாரம் முழுக்க அனங்கமல் கிடந்து உயிர் போய் விடுமா? நாலு நாள் கழித்து கதவை உடைத்து யார்யாரோ உள்ளே வந்து புழுத்து அழுகிய பிணமாக உடம்பெல்லாம் ஈ மொய்த்துக் கிடக்க அவளைச் சுமந்து போய் எறிவார்களோ?

கிழட்டுப் பொணமே. சொல்லிட்டு சாக மாட்டே?

வேண்டாம். இப்போது சாகக் கூடாது. சகல சக்தியும் ஓய்ந்து போய் முழு பலகீனத்தோடு உடம்பு தளர்ந்து கிடந்தபடி உயிர் போக விடமாட்டாள் கற்பகம். அவள் இஷ்டப்படி தான் இருப்பாள். இறப்பாள்.

கையைக் கட்டில் விளிம்பில் பலமாக ஊன்றி உந்த, வாசலில் திரும்ப மணிச் சத்தம்.

இதோ வந்தாச்சு.

அவள் குரல் கணீரென்று ஒலித்தது. எழுந்து மெல்ல வாசலுக்கு நடந்தாள்.

இன்னொரு முறை மணிச் சத்தம். அப்படி என்ன பொறுமை இல்லாமல்?

கீல் சப்திக்க மெல்லப் பின்னால் உருண்டு வந்த கதவைத் திறந்தாள்.

பரமேஸ்வரா நீயா?

அவன் தரையில் வைத்திருந்த கேன்வாஸ் பையைத் தோளில் மாட்டிக் கொண்டான்.

பரமேஸ்வரா அப்பா போய்ட்டார்டா.

கற்பகம் பெருங்குரல் எடுக்க, திலீப் அவளை ஆதரவாக அணைத்துக் கூட்டிக் கொண்டு உள்ளே நடந்தான்.

ஜனனி அவனுக்குப் பின்னால் வந்தாள்.

உங்கப்பா நிர்க்கதியா என்னை விட்டுட்டுப் போய்ட்டார்டா. எரிச்சு கரைச்சு எல்லாம் ஆச்சு. போய்ட்டார்டா பரமேஸ்வரா.

பாட்டி, நான் திலீப்.

நிதானமாகச் சொன்னான்.

கற்பகம் ஆச்சரியத்தால் கண் விரியப் பார்த்தாள்.

பேரன் வந்திருக்கான். எத்தனை வருஷம் கழித்து பம்பாயிலிருந்து வந்திருக்கான். அப்பனைப் போலவே நெடுநெடுவென்று உசரமும், பூஞ்சையுமில்லாத, சதை போட்டுப் பருத்ததும் இல்லாத தேகமுமாக நிற்கிறவன்.

கூட இந்தப் பொண்ணு?

என்னைத் தெரியலியாடி கற்பகம்? உங்க மாமியார்.

அந்தக் குரலைக் கேட்டதும் கற்பகத்தின் துக்கம் எல்லாம் விலகி ஓடிப் பறந்து போனது. திரும்ப கும்மாளி கொட்டி மனம் முழுக்க வந்த மகிழ்ச்சி.

ஏண்டி ஜனனி, கழுதை, நான் தான் வந்திருக்கேன்னு சொல்ல வாய் வராதாடி உனக்கு? தம்பி பின்னாலே எதுக்கு ஒளிஞ்சுக்கறே? இப்போத்தான் வழி தெரிஞ்சுதான்னு நான் திட்டப் போறேன்னு பயமா என்ன?

சந்தோஷத்தை சாலை மறித்துக் கொண்டு திரும்ப மனம் துக்கத்தைத் தொட்டது.

ஏண்டா திலீபா, உங்கப்பன் கால்

குரல் பகீரென்று மேலோங்கி உறைந்து போக கற்பகம் தலையைப் பிடித்தபடி நடுக்கூடத்தில் குத்த வைத்து உட்கார்ந்தாள். நீலகண்டன் மாதிரி அங்கேயே அற்ப சங்கை தீர்ந்து படுக்க வேண்டுமென வினோதமான ஆசை உயர்ந்து வந்தது.

வேண்டாம். பேரன் வந்திருக்கான்.

பேத்தியும் கூடவே வந்து நிற்கிறாள்.

நடுக் கூட்டத்தில் அசுத்தப் படுத்தப் போறியா?

நீலகண்டன் புகைரூபமாக அவளைச் சுற்றிச் சுற்றிச் சிரித்தான். அவன் சுத்தமான வஸ்திரம் அணிந்திருக்கிறான். கையில் குடையும், கூடையில் கேரியரில் அவள் சமைத்துக் கொடுத்த மதியச் சாப்பாடுமாக ஆபீஸ் போகத் தயாராக நிற்கிறான். டிராமில் போகச் சரியான சில்லறை கற்பகம் எடுத்துத் தரவேண்டும். வாங்கிக் கொண்டபடியே உதட்டைக் கவ்விக் கடித்து விட்டுத்தான் கிளம்புவான்.

குழந்தைகள் எல்லாம் வந்திருக்கு. உங்க கடியும் பிடியும் அப்புறம் சாவகாசமா வச்சுக்கலாம். புரியறதா?

நாணத்தோடு சுவரைப் பார்த்தாள் கற்பகம்.

நீலகண்டன் சிரித்தபடி நெருங்கி வந்தான். வரும்போதே சதையெல்லாம் தளர்ந்து தொங்கத் தொண்டு கிழவனானான். வேட்டியைக் களைந்து வீசி விட்டு, தடதடவென்று சமையல்கட்டுக்கு ஓட நில்லு நில்லு என்றாள் கற்பகம்.

பாட்டி, யாரை நிக்கச் சொல்றே?

ஜனனி ஒரு பக்கமும் திலீப் இன்னொரு பக்கமும் அவளை அசைத்து எழுப்ப சுய நினைவுக்கு வந்தாள் கற்பகம்.

ஜனனியின் தோளைப் பிடித்து எழுந்து நின்றாள்.

ஏண்டி சமத்துக் குடமே. பால்காரன் பக்கத்து வீட்டுலே பழக்க தோஷத்திலே பால் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போயிருப்பான். நீ யார்னு சொல்லிட்டு வாங்கிண்டு வா.

ஜனனி கிளம்பிப் போனாள். கூடத்தில் மாடப்புரையில் இருந்த கோலமாவு டப்பாவைத் திறந்து முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்த திலீப் கையில் இருந்து அதைப் பிடுங்கி வைத்தாள்.

திலீபா, நீ ரெண்டு பேர் மூட்டை முடிச்சையும் உள் ரூம்லே கொண்டு போய் வை. வேம்பாவிலே ரெண்டு பக்கெட் தண்ணி ஊத்தி வென்னீர் போடு.

வேம்பாங்கறது என்ன பாஷை பாட்டி?

திலீப் கேட்டான். சின்ன வயசில் லீவுக்கு வந்தபோது தேங்காய் நாரில் தீ மூட்டி பாய்லர் பற்ற வைத்தபடி அவன் கேட்ட கேள்வி இது. இன்னும் பதில் இல்லை.

இன்னிக்கு பாயசம் பண்ணப் போறேன். தாத்தாவுக்குப் பிடிக்கும். முரண்டு பிடிக்காம ரெண்டு பேரும் சமத்தாக் குடிச்சுட்டு என்னோட உக்காந்து நாள் முழுக்கப் பேசிண்டே இருக்கணும்.

கற்பகம் தீர்மானமாகச் சொல்லிக் கொண்டு சமையல் கட்டுக்குப் போனாள்.

அடியே, தஞ்சாவூர்க்காரி நீ சொன்னா ஊரே கேட்கும். உன் பேரனும் பேத்தியும் மாட்டேன்னா சொல்லப் போறா?

நீலகண்டன் திரும்ப வயசு குறைந்து சமையல்கட்டிலிருந்து கக்கத்தில் இடுக்கிய குடையோடு வந்து அவளுக்கு ஒரு முத்தம் கொடுக்க முற்பட்டான்.

ஓய், காலையிலேயே ஆரம்பிச்சுட்டீரா?

(தொடரும்)