Monthly Archives: September 28, 2014, 1:16 pm

பூவெல்லாம் ஏலம் கேட்டுப் பார் – தி இந்து பத்திரிகையில் என் கட்டுரை

இன்றைய தி இந்து பத்திரிகையில் என் கட்டுரை

பூவெல்லாம் ஏலம் கேட்டுப் பார்

’புடவையும், சட்டைத் துணியும், அடுக்குப் பாத்திரமும், குடையும், இங்க் பாட்டிலும், கொண்டை ஊசியும், கடிகாரமும், ரூல்தடியும், பேனாக்கத்தியும், சாமி படமும், குண்டூசி டப்பாவும் என்று உலகில் படைக்கப்பட்ட சகலவிதமான பொருள்களையும் மணியை அடித்து அடித்துக் கொடுக்க, கண்ணாடிக்காரரும், நீலச்சட்டைக்காரரும், கழுத்தில் மப்ளர் சுற்றி இருக்கிறவரும், வலது கோடியில் உசரமாக நிற்கிற அண்ணாச்சியும் வாங்கிக் கொண்டு கூட்டத்தில் கலக்க, ராத்திரி பத்து மணியானதே தெரியாது’.

இது ஐம்பது வருடம் முன்பு தமிழகச் சிற்றூர்களுக்கு வந்த ஏலக்கடைகள் பற்றிய சிறுகதை வர்ணனை. சாதுரியமாக விலை கேட்டுப் பொருள் வாங்குகிற மகிழ்ச்சியையும், ஏலம் கேட்க நிற்கிற இரவுகளில் சந்தோஷமாகப் பொழுது போக்க வாய்ப்பையும் கொடுத்தவை இந்தக் கடைகள்.

ஏலம் என்றால் என்ன? சிறிய கூட்டத்தைக் கூட்டி வைத்துக் கொண்டு ஏலக்காரர் விற்க எடுத்த பொருளுக்கு குறைந்த பட்ச விலையில் தொடங்குவார்.

வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி, தாங்கள் தரத் தயாரான விலையைக் சொல்வார்கள். இறுதியாக விலை கேட்டவருக்கு அவர் கேட்ட, கூறப்பட்டதிலேயே அதிகமான தொகைக்குப் பொருள் விற்கப்படும். இதை ஆங்கிலேய முறை ஏலம் என்பார்கள்.

ஏலம் எங்கே பிறந்தது? பழையதைக் கிளறினால், இரண்டாயிரத்து ஐநூறு வருடம் முன்னால் பாபிலோனியர்கள் பெண்களை ஏலத்தில் எடுத்துக் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்கள். கி.பி இரண்டாம் நூற்றாண்டில், ரோம சாம்ராஜ்யத்தையே கூவிக் கூவி ஏலம் போட்டார்களாம். போரில் வென்று எதிரி நாட்டிலிருந்து கவர்ந்து வந்த சொத்துகளை மொத்தமாகக் குவித்து வைத்து ஏலம் போட்டும் ஐரோப்பியர்கள் காசு பார்த்திருக்கிறார்கள்.

ஆசியாவில் ஏலம் நுழைந்தது இருநூறு வருடம் முன்பு தான்.

லண்டன் சாத்பீஸ் போன்ற பழம்பெருமை வாய்ந்த ஏலக்கம்பெனிகள் முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இயங்க, இந்தத் தொழிலில் புரளும் பணமும், வரும் வருமானமும் முக்கியக் காரணம். பழைய புத்தகம், ஓவியம், நகை, இயந்திரம் என்று சகலமானதும் விற்கப்படும் உலக ஏலத்தொகை மதிப்பு,

ஆண்டுக்குக் கிட்டத்தட்ட முன்னூறு பில்லியன் டாலர். ஒரு டாலருக்கு குத்துமதிப்பாக 60 ரூபாய் விகிதத்தில் மாற்றிப் பார்த்துக் கொள்ளலாம்.

பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படும் ஆங்கிலேய முறை ஏலத்தை விடச் சற்றே மாறுபட்டது டச்சு முறை ஏலம். காய்கறி, பழம் என விரைவில் அழுகிப் பயன்படுத்த முடியாமல் போகும் பொருட்களைக் குவித்து வைத்து அன்றாடம் ஏலம் போடப் பயன்படுத்தப்படுவது இந்த ஏல முறை.

பொருளின் அதிக பட்ச மதிப்பை ஏலக்காரர் தீர்மானித்து அதைச் சொல்லி ஏலத்தைத் தொடங்குவார். வாங்க வந்தவர்கள், அந்த உயர்ந்த மதிப்பிலிருந்து சிறிது விலையை இறக்கி ஏலம் கேட்பார்கள். பொருளை விற்பவர் உத்தேசித்து வைத்திருந்த குறைந்த பட்ச விலை படியும்போது, பொருள் கைமாறும்.

ரிசர்வ் ப்ரைஸ்-ன்னு விற்பனையாளர் ஒரு குறைந்த பட்ச விலை வச்சிருப்பாங்க. அதுக்குக் கீழே விற்றால் கையைக் கடிக்கும். ரிசர்வ் ப்ரைஸ் 1000 ரூ-ன்னு வச்சுக்குங்க. ஏலம் 2000-ல் ஆரம்பிப்பாங்க. யாரும் ஏலம் கேட்க மாட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் bid. நூறு நூறாகக் குறைஞ்சுட்டுப் போகுதுன்னு வச்சுக்குங்க, 1500-னு சொல்லும்போது பத்து குரல் எழலாம் – 1450, 1470, 1430, 1490… இதில் 1490-க்கு ஏலம் படியும். அமுக்குப் பிள்ளையார் மாதிரி எல்லோரும் வாயைத் திறக்காம இருந்தா, ரிசர்வ் பிரைஸான 1000 போகறதுக்கு முந்தி, வணக்கம் கூறி விடை பெற்றுடுவாங்க !

டச்சு (ஹாலந்து) நாட்டில் பெரிய அளவில் பூக்களை விற்க டச்சு ஏலம் தான் பயன்படுத்தப் படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய பூ ஏலம் இது. ஹாலந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம் நகருக்குப் பத்து மைல் தூரத்தில் உள்ள ஆல்ஸ்மீரில் உள்ள 243 ஏக்கர் பரப்பளவுள்ள பிரம்மாண்டமான பூச்சந்தையில், தினசரி சூரிய உதயத்துக்கு முன் இந்த ஏலம் நடைபெறுகிறது.

உலகின் மொத்தக் குத்தகை பூ வணிகர்கள் பங்கு பெறும் ஏலம் இது. தினசரி ரூபாய் மதிப்பில் ஒவ்வொருவரும் குறைந்தது ஆறு கோடி ரூபாய் அளவுக்கு ஏலம் எடுத்து வியாபாரம் செய்யும் வணிகர்கள் இவர்கள். ஆல்ஸ்மீர் தவிர ஹாலந்தில் இன்னும் ஐந்து இடங்களிலும் சிறிய அளவில் பூ ஏலம் நிகழ்கிறது.

பறித்த 24 மணி நேரத்துக்குள் ஆம்ஸ்டர்டாம் நகரை அடைந்து, தினசரி 3 கோடி மலர்கள் ஏலம் கேட்கப் படுகின்றன. அன்னையர் தினம், காதலர் தினம் போன்ற நாட்களை ஒட்டி விற்பனை அதிகரிக்கிறது. 8 பில்லியன் டாலர் விலை மதிப்பில் வருடந் தோறும் ஆம்ஸ்டர்டாமில் பூக்கள் விற்பனையாகின்றன.

மலர் உற்பத்தியாளார்கள் 6000 பேர் இணைந்து எழுப்பி நிர்வகிப்பது ஆல்ஸ்மீர் பூச்சந்தை. அங்கே, மாபெரும் திரையரங்குகள் போல் வரிசையாக இருக்கைகள் அமைந்த மலர் ஏல மண்டபங்கள் உண்டு. அவற்றில், ஏலம் கேட்க வந்த, விற்க வந்த வணிகர்கள் சாரிசாரியாக அமர்கிறார்கள்.

பூ ஏல அமைப்பை இயக்கும் மென்பொருள், இவர்கள் ஒவ்வொருவர் முன்னும் ஆங்கிலம், பிரஞ்சு, டச்சு, ஜெர்மன் என நான்கு மொழிகளில் தொடு திரையில் விரிக்கிறது. ஒவ்வொரு குவியல் ஏலத்தின் போதும் என்ன மலர், அளவு எவ்வளவு, அதிக பட்ச விலை ஆகியவை திரையில் பளிச்சிட, திரையில் விலை விரைவாகவும், படிப்படியாகவும் குறைத்துப் போகப்படுகிறது. திரையில் தொட்டு, தொகையை வியாபாரி அறிவிக்க, நகரும் கடியார முள் போன்ற வடிவில் ஒவ்வொரு வினாடியும் மாறும் விலை விபரம் திரையில் சுழன்று காட்சி அளிக்கும்.

பூ வாங்க, விற்க என இரண்டு காரியங்களையும் அடுத்து அடுத்து டெர்மினல்களில் வேகமாக நடத்துகிற பல வணிகர்களும் இங்கே உண்டு. வாங்க வேண்டியதைத் தவறுதலாக விற்றும், விற்க வேண்டியதை வாங்கியும் ஏலத்தை நடத்தி விட்டால் அதை மாற்ற முடியாது என்பதால் ஆம்ஸ்டர்டாம் பூ வியாபாரம் செய்ய அனுபவமும் மேலதிகக் கவனமும் தேவைப்படுகிறது.

டூலீப் மலர்கள் அவை மலரும் காலத்தில் மிக அதிக விலைக்கு இந்த ஏலத்தில் விற்கப்படுவது உண்டு. ஒரு டுலீப் பூக்குழிழ் லட்ச ரூபாய் மதிப்புக்கு விலை போன காலங்களும் இருந்தன. இந்தப் பூக்கள் தவிர, பூச்செண்டுகள், மலர் வளையங்களில் இடம் பெறும் இதர மலர்களும், மலர்ச் செடிகளும் ஏலம் கேட்கப் படுகின்றன.

சில நொடிகளில் விலை படிந்து டன் கணக்கில் விமானங்களில் ஏற்றப்படுகின்றன. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கென்யா என்று பல நாடுகளையும் விரைவாக அடைந்து, மொத்த, சில்லறை விற்பனைக்கு வருகின்றன.

இணையத்தில் தொலை தூர வணிகம் மூலம் உலகில் எங்கேயிருந்தும் வியாபாரிகள் இந்தப் பூ ஏலத்தில் பங்கு பெறலாம் என்ற வசதி இருந்தாலும், நேரடியாக பூச்சந்தைக்குப் போய் ஏலம் கேட்பதையே, பூ விற்றுக் கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் வர்த்தகர்கள் விரும்புகிறார்கள்.

375-ம் பிறந்தநாள் கொண்டாடிய சென்னையில் பூ வணிகத்தைக் கணினி மயமாக்கினாலும், கோயம்பேட்டுக்குப் போய்க் கொள்முதல் செய்யும் மகிழ்ச்சி கிடைக்காது தான்.

இரா.முருகன்

லண்டன் டயரி புத்தகத்தில் இருந்து தலைவெட்டி லண்டன்

லண்டன் டயரி புத்தகத்தில் இருந்து

தலைவெட்டி லண்டன்

டியூடர் வம்ச முதல் அரசனான ஏழாம் ஹென்றி காலம் லண்டன் மாநகரின் அமைப்பையும் வளர்ச்சியையும் பொறுத்தவரை ஒரு பொற்காலம். ஐரோப்பியக் கலை, இலக்கிய உலகில் புதிய சிந்தனைகள் வெளிப்பட்டுப் புதுமை படைத்த மறுமலர்ச்சிக் காலம் (ரினைசான்ஸ்) இதுவே. வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலய வளாகத்தில் மறுமலர்ச்சிக் காலத்துக்கே உரிய அற்புதமான கட்டிட அமைப்போடு கூடிய, கிட்டத்தட்ட உலக அதிசயங்களில் ஒன்றான ‘ஏழாம் ஹென்றி வழிபாட்டு அரங்கு’ அமைத்தான் ஏழாம் ஹென்றி. தனக்கு முந்தைய அரசனும், ஒன்றுவிட்ட தாய்மாமனும் ஆகிய ‘பக்திமான் ஆறாம் ஹென்றி’யின் நினைவாகக் கட்டினாலும், அப்போதைய போப்பாண்டவர் அந்தப் பக்திமானுக்கு ஆசியருளிச் சொர்க்கம் புக அனுமதி வழங்க மறுத்துவிட்ட காரணத்தால், 1509-ல் ஏழாம் ஹென்றியின் சொந்த இறுதி உறக்கத்துக்கான இடமானது இது. அங்கே அடங்குவதற்குள் லண்டன் நகர எல்லைக்குள் தான் வசித்த பேனார்ட் கோட்டை, ரிச்மண்ட் அரண்மனை போன்ற இதரப் பெரிய கட்டடங்களையும் எழுப்பத் தவறவில்லை ஏழாம் ஹென்றி.

இவனுடைய மகன் எட்டாவது ஹென்றிக்கும் கட்டிடம் கட்டுவதில் அளவில்லாத ஆசை. அடுத்தடுத்து மூன்று அரசர்கள் இப்படிக் கட்டடக் கலையில் ஒரு வெறியோடு ஈடுபட்டதால், பெயரைக்கூட மாற்றச் சோம்பல்பட்டு ‘ஹென்றி’ என்ற ஒரே பெயருக்குப் பின்னால் நம்பரை மட்டும் கூட்டிக்கொண்டு கொத்தனார் சித்தாள் வகையறாக்களை மேற்பார்வை செய்துகொண்டிருந்ததாக வரலாற்றாசிரியர்கள் சொல்லவில்லை.

எட்டாம் ஹென்றி தனக்காகக் கட்டாமல், மதகுருவான யார்க் ஆர்ச்பிஷப் வசிக்க மாளிகை கட்டி, வெஸ்ட்மின்ஸ்டரை பக்கத்து சாரிங் கிராஸ் பகுதியோடு இணைத்தான். இந்த மாளிகைக்கு ஒயிட்ஹால் பேலஸ் என்று ரெடிமேட் துணிக்கடை போல் பெயர் வைத்ததும் இவன்தான். லண்டனின் நிதிநிர்வாகக் கேந்திரமான •ப்ளீட் தெருவை ஒட்டி புனித நீருக்குப் பேர்போன ஒரு புராதனமான கிணறு இருந்தது. அது தூர்ந்து போயிருந்த இடத்தில் கெட்டியாக அஸ்திவாரம் போட்டு ‘மணவாட்டி கிணறு அரண்மனை’ என்று அதிரடியாக மொழிபெயர்க்கக் கூடிய ப்ரைட்வெல் பேலேஸ் அமைத்தவன் எட்டாம் ஹென்றிதான். இந்தக் கிணற்று அரண்மனை கட்ட முக்கியமான காரணம் பழைய ஒய்ட்ஹால் அரண்மனை தீவிபத்தில் பாதிக்கப்பட்டதால் அங்கேயிருந்த மதகுருவையும் குழுவினரையும் இடம் மாற்றுவதே. அதென்னமோ, லண்டனுக்கும் தீவிபத்துகளுக்கும் அப்படி ஒரு நெருக்கம். இவன் கட்டிய மற்ற அரண்மனைகளில் செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனை, நான்சச் அரண்மனை ஆகியவையும் அடக்கம். சளைக்காமல் அரண்மனை கட்டினாலும், எட்டாம் ஹென்றிக்கு கிரீன்விச் அரண்மனைமேல்தான் பிரியம் அதிகம். இந்த கிரீன்விச் அரண்மனையை இவன் கட்டவில்லை என்பதற்கு ஒரே ஆதாரம் அங்கே அவன் பிறந்தான் என்பதுதான்.

யார்க் ஆர்ச்பிஷப்புக்கு ஒயிட் ஹால் என்றால், காண்டர்பரி ஆர்ச்பிஷப்புக்கு லாம்பெத் அரண்மனை. இப்படி எட்டாம் ஹென்றி கட்டிடம் கட்டிய நேரம் போகக் கல்யாணம் கட்டுவதில் மும்முரமாக இருந்தவன் என்பதை லண்டன் டவர் வளாகத்தில் பறக்கிற அண்டங்காக்கை கூடச் சொல்லும். இப்பேர்க்கொத்த இந்தப் பேர்வழி, ஆன்பொலின் மகாராணியைப் பரலோகம் அனுப்பிவிட்டு இன்னொரு தடவை மாப்பிள்ளைக் கோலத்தில் உலா வர ஏதுவாக, லாம்பத் அரண்மனையில்தான் ஆன்பொலின் அரசியை விசாரித்து அவளுக்கு எதிராகத் தீர்ப்புச் சொல்லப்பட்டது. அதற்கு நன்றிக்கடன் செலுத்தவோ என்னமோ, எட்டாம் ஹென்றி லாம்பெத் அரண்மனை வளாகத்தில் கேட் ஹவுஸ், கிரேட் ஹால் என்று இன்னும் இரண்டு பெரிய கட்டிடங்களை எழுப்பினான். டியூடர் வம்சத்தின் பெயர் சொல்லிக்கொண்டு இன்னும் இவை ஆன்போலின் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தியபடி நின்றுகொண்டிருக்கின்றன.

எட்டாம் ஹென்றி இப்படி இடித்துக் கட்டியதோடு, புதிதாகவும் அவ்வப்போது நல்ல காரியத்துக்காகக் கட்டிடம் கட்டினான். ஆறு தடவை கண்ணாலம் கட்டிய இவன், ஒவ்வொரு கல்யாணம் முடிந்ததும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்போது இப்படி நல்ல மனசோடு இயங்கியிருப்பான் என்று நினைக்க இடம் இருக்கிறது. இன்றளவும் பரபரப்பாக இயங்குகிற செயிண்ட் பார்த்தலோமியோ மருத்துவமனை இந்தத் தலைவெட்டித் தாண்டவராயன் எழுப்பியதுதான் என்று நம்பக் கஷ்டமாக இருந்தாலும் உண்மை அதுதான். அவன் எழுப்பிய இடத்திலிருந்து ஆஸ்பத்திரியைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இடமாற்றம் செய்துவிட்டார்கள் என்பது கொசுறான செய்தி. எட்டாம் ஹென்றி செய்த இன்னொரு உருப்படியான காரியம் லண்டன் பிஷப்கேட் பகுதியில் பெட்லாம் மனநல மருத்துவமனை நிறுவியது. பெட்லாம் என்ற வார்த்தை ஆகுபெயராக, குழப்பம் மிகுந்த சூழ்நிலையைக் குறிப்பதாக ஆங்கில அகராதியில் புகுந்தது அதைத் தொடர்ந்து நடந்த ஒன்று. பெட்லாம் மருத்துவமனையின் முதல் நோயாளி எட்டாம் ஹென்றியா என்று தோண்டித் துருவினால் இல்லை என்ற ஏமாற்றமான பதிலே கிடைக்கிறது.

1547-ல், எட்டாம் ஹென்றியின் மகனான ஆறாம் எட்வர்ட் ஆட்சிக்கு வந்தபோது, அரசாங்க அராஜகம் உச்சத்தை அல்லது அதலபாதாளத்தை அடைந்தது. செயிண்ட் பால் சார்னல் ஹவுஸ், கிளர்கென்வெல் ப்ரியரி போன்ற கத்தோலிக்க வழிபாட்டு இடங்களை இடித்துக் கருங்கல்லை அப்புறப்படுத்தி, அழகான மறுமலர்ச்சிகால மாளிகைகள் அமைக்கப்பட்டு, பிரபுக்கள் குடிபுகுந்தார்கள். சமர்செட் ஹவுஸ் என்று பெயர் வைத்து ஒரு பெரிய மாளிகை எழுப்ப எட்வர்ட் முடிவெடுத்தபோது அவனுடைய அரசவைப் பிரதானிகள் லண்டனின் இண்டு இடுக்கு விடாமல் சுற்றி, இன்னும் இடிக்காமல் விட்ட தேவாலயங்களைக் கவனமாகக் கணக்கு எடுத்தார்கள். அவர்களின் அதிர்ஷ்டம், ஸ்ட்ராண்ட் பகுதியில் நேட்டிவிட்டி தேவாலயம், பக்கத்து செஸ்டர், வொர்ஸ்டர் பகுதிகளில் குருமார்கள் குடியிருந்த மடங்கள் கண்ணில் பட, கடப்பாறைக்கு வேலை ஆரம்பமானது. இப்படி அரசனும் பிரபுக்களும் விளையாடியது போகவும் சில தேவாலயங்களும், குருமார்களின் மடாலயங்களும் மிஞ்ச, வர்த்தக நிறுவனங்கள் அவற்றை அரச ஆசியோடு ஆக்கிரமித்துக் கொண்டன.

லண்டன் மடாலயங்கள் இடிக்கப்பட்டு பிரபுக்கள் மாளிகை எழுந்தபோது, நகரின் ஏழைபாழைகள் படும் சிரமம் அதிகரிக்க ஆரம்பித்தது. தேவாலயங்கள் இந்த ஏழைகளுக்கு பசிக்கு உணவும், அவ்வப்போது கொஞ்சம் போலவாவது பொருளாதார உதவியும் செய்து வந்தது கிடைக்காமல் போனதால் ஏற்பட்ட நிலைமை இது

மடாலயங்களின் வீழ்ச்சி லண்டனில் மதகுருமார்கள் மூலம் நடைபெற்ற கல்வியறிவுப் பெருக்கத்தையும் பாதித்தது. தேவாலயங்களை இடித்து எட்டடுக்கு மாளிகை கட்டிக்கொண்டு பிரபுக்கள் குடியேற, படிக்க இடமும் போதிக்க ஆசிரியர்களும் இல்லாமல் சாதாரண மக்களின் குழந்தைகள் கஷ்டப்பட்ட நிலை பரவிய காலம் அது. ஆறாம் எட்வர்ட் மன்னன் பிரைட்வெல் அரண்மனையைப் பள்ளிக்கூடமாக மாற்ற அனுமதி கொடுத்தான். பள்ளிக்கூடம் வைத்தது போக மிஞ்சிய இடத்தில் அரண்மனையிலேயே சிறைச்சாலையையும் வைத்துக்கொள்ளலாம் என்ற அனுமதியும் தொடர்ந்து வந்தது. அரசர்களின் சிந்தனைப் போக்கே வினோதமானது.

வர்த்தகப் பிரமுகர்களும் கொஞ்சம் மனம் மாறி, சார்ட்டர்ஹவுஸ், செயிண்ட் பால், லண்டன் நகர்ப் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார்கள்..டியூடர் வம்ச காலத்துக்கு முன்பே இன்னர் டெம்பிள் பகுதியில் சட்டக் கல்விக்கு ஏற்படுத்தப்பட்ட கலாசாலை எந்தத் தொந்தரவும் இன்றித் தொடர்ந்ததும் லண்டனின் அதிர்ஷ்டத்தின் ஒரு அம்சம்தான். அந்தத் தொடர்ச்சி 1490-ல் தொடங்கி, 2007-லும் தொடர்கிறது. ஷேக்ஸ்பியர் தன் நாடகங்களை அவருடைய பராமரிப்பில் இருந்த தேம்ஸ் நதிக்கரைப் பகுதி குளோப் அரங்கத்தில் நடத்தியதோடு இங்கே சட்டம் பயின்ற மாணவர்களுக்காக அடிக்கடி வந்து அரங்கேறிப் போயிருக்கிறார் என்கிறது சரித்திரம். சட்டக் கல்லூரிக்கும் நாடகம், சினிமா மற்றும் அரசியலுக்கும் எல்லா நாட்டிலும் எல்லாக் காலத்திலும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்துகொண்டுதான் வருகிறது.

டியூடர் கால லண்டன் அரசியல் அமைதியில் பெரும்பாலும் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது கலவரம் எழாமல் இல்லை. ஆறாம் எட்வர்டு 1553-ல் இறந்தபிறகு ராணியாட்சி தொடங்கியது. எட்டாம் ஹென்றிக்கும் அவன் முதல் மனைவியும் ஸ்பானிஷ் ராணியுமான கேதரினுக்கும் பிறந்த மேரி மகாராணி படத்துக்கு வந்தாள். அவள் பட்டத்துக்கு வந்ததற்கு அடுத்த வருடமான 1554-ல் சர் தாமஸ் வயாட் என்ற பிரபு படையெடுத்து வந்தபோது நகர மதில் சுவர்களின் பின்னால் காவலைப் பலமாக்கிக் கதவை அடைக்க, தாமஸ் பிரபு வெற்றிகரமாகப் பின்வாங்கினார்.

மேரி மகாராணி அரியணை ஏற ஒன்பது நாள் காத்திருக்க வேண்டி வந்தது. இந்த இடைப்பட்ட ஒன்பது நாளில் நவராத்திரி நாயகியாக முடிசூட்டிக்கொண்டது ஜேன் கிரே சீமாட்டி. வணக்கத்துக்குரிய லண்டன் மேயர் பங்குபெறாமல் நடந்த இந்தப் பதவியேற்பு ஜேன் சீமாட்டி கொடி அதிக நாள் பறக்காது என்று சொல்லாமல் சொன்னது. அந்தம்மாவும், கிரீடத்தை வைத்தால் தலை அரிக்கிறது என்று அறிவித்து (இப்படிச் சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!) முடி துறக்க, மேரி மகாராணி ஜாம்ஜாமென்று சிம்மாசனம் ஏற, மேயர் அரசியை வாழ்த்த, அரசி அவரை வாழ்த்த, இந்தக் கூட்டணி நிலைத்தது.

ஒரே ஒரு சங்கடம், மேரி அரசியார் சுத்த கத்தோலிக்க கிறிஸ்துவர். லண்டன்வாழ் மக்கள் அவள் அப்பா ஹென்றி, அண்ணன் எட்வர்ட் காலத்திலேயே கத்தோலிக்க கிறிஸ்துவத்திலிருந்து மாறி, புராட்டஸ்டண்ட்களாகியிருந்தார்கள். இந்த அப்பாவும் பிள்ளையும் மடாலயங்களிலிருந்து மதகுருக்களை வெளியேற்றியதற்கெல்லாம் ஊரில் எதிர்ப்பில்லாமல் இருந்ததற்கு இதுவும் முக்கிய காரணம்.

திரும்பவும் அவர்களைக் கத்தோலிக்கர்களாகச் சொன்னாள் மேரி மகாராணி. லண்டன்வாசிகள், மேலே குறிப்பிட்ட தாமஸ் வயாட் பிரபுவை லண்டனுக்குள் நுழையவிடாமல் தடுத்து மகாராணி சிம்மாசனம் ஏற ஒத்தாசை புரிந்திருந்தாலும், மதம் மாற மறுத்த அந்த அப்பாவி மக்களில் நானூறு பேரைக் கட்டிவைத்து எரித்து மேரியம்மையார் சுவர்க்கம் போய்ச்சேர வைத்தார். அரசியலுக்கும் நன்றிக் கடனுக்கும் வெகுதூரம்.

மேரி மகாராணி 1558-ல் இறக்க, அவளுக்கு அடுத்து பட்டத்துக்கு வந்ததும் இன்னொரு ராணியம்மாதான். முதலாம் எலிசபெத் என்ற இவளும் எட்டாம் ஹென்றியின் மகள். ஹென்றிக்கும் அவன் சிரம் அறுத்துக் கொன்ற ஆன்போலினுக்கும் பிறந்தவள். இவள் ஆட்சியில் நிலைமை திரும்பத் தலைகீழானது. புராட்டஸ்டண்ட்களின் கை மறுபடி ஓங்க, மேரி காலத்து அரசியலில் கத்தோலிக்க மதகுருமார்கள் அனுபவித்த ஆதிக்கம் திரும்ப விலகியது. தேவாலயங்களிலிருந்தும் மடாலயங்களிலிருந்தும் அவர்கள் துரத்தப்பட்டு, அந்தக் கட்டிடங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன. வெளியேற மறுத்த கார்த்தூசியன் தேவாலய மதகுரு சங்கிலியால் பிணைக்கப்பட்டுத் தெருத்தெருவாக இழுத்துப் போகப்பட்டு டைபர்னில் கொலைக் குற்றவாளி போலத் தூக்கில் இடப்பட்டார். அவருடைய கையைத் துண்டித்து எடுத்து நகர எல்லையில் வாயில் கதவில் ஆணியடித்துத் தொங்கவிட்டு அடிபணியாத இதர அடியார் திருக்கூட்டங்கள் அச்சுறுத்தப்பட்டன. மதகுருமார்களிடமிருந்து பிடுங்கி அரசுடமையான கட்டிடங்கள் அரசியின் ஜால்ராக்கள் சுகவாசம் புரியும் இருப்பிடங்களாக விலாசம் மாற அதிக நாள் பிடிக்கவில்லை.

இந்த முதலாம் எலிசபெத் ஆட்சியின்போது இன்னொரு படையெடுப்பு., 1601-ல் எஸ்ஸெக்ஸ் பிரபு லண்டனைப் பிடிக்கப் படையோடு வந்தபோது நகர எல்லைக்குள் நுழையவே முடியாமல், மேரி மகாராணி ஆட்சியில் தாமஸ் பிரபு போல் பின்வாங்கி ஓடினார். அக்காவோ, தங்கையோ, கத்தோலிக்கரோ, புராட்டஸ்டண்டோ, கட்டிவைத்து எரிப்போ, கையைக் காலை வெட்டித் தூக்கு தண்டனையோ, எட்டாம் ஹென்றியின் பெண்ணரசிகளே ஆளட்டும் என்று லண்டன் மக்கள் அம்மா ஆட்சிக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்தது இப்படியான வெளி ஆக்கிரமிப்பு தோல்வியடைய முக்கியக் காரணம் ஆகும்.

கத்தோலிக்கர்கள் கிட்டத்தட்ட முழுமையாக அடக்கி ஒடுக்கப்பட, எலிசபெத் ஆட்சியில் சங்கடமான அமைதி நிலவியது. மக்களின் கவனத்தைக் கவர வேறு விஷயங்கள் வந்து சேர்ந்தன. ஷேக்ஸ்பியர் போன்ற நாடக மேதைகளின் நாடகங்கள் வெகு பிற்காலத் தமிழகத்தில் ஹரிதாஸ், சந்திரமுகி போல் வருடக்கணக்காக தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக நடந்த காலம் இது என்பதால், மக்கள் குளோப், ஸ்வான், ஹோப் போன்ற நாடகக் கொட்டகைகளுக்குத் தொடர்ந்து படையெடுத்தார்கள். நாடகம் பார்த்த நேரம் போக லண்டன் மக்கள், சேவல் சண்டை, கரடிச் சண்டை போன்ற வீரவிளையாட்டுகளில் பந்தயம் கட்டி வென்றார்கள். தோற்றார்கள். உலகத்தின் ஆதி தொழிலும் அமோகமாக லண்டன் சந்துமுனை இருட்டில் நடந்ததாகவும், இந்தப் பெண்களுக்கு முன்கூட்டியே லைசன்ஸ் வழங்கப்படும் ஏற்பாடு மூலம் கணிசமாக கஜானாவில் பணம் சேர்ந்ததாகவும் சரித்திர ஆசிரியர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

இப்படி அவரவர் வேலையில் மும்முரமாக லண்டன்காரர்கள் இருந்தபோது, பொழுதுபோகாத ஸ்பானிஷ் நாட்டுக்காரர்கள் (அவர்கள் நாட்டில் கரடிச் சண்டை, சந்துமுனை சிந்து சமாச்சாரங்கள் இல்லையோ என்னமோ) எலிசபெத் ஆட்சி தொடங்கிய 1558-ல் லண்டன் மேல் படையெடுத்து வந்தார்கள். கத்தி கபடாவோடு நுழைந்த இந்த டூரிஸ்டுகள் ஓடஓட விரட்டியடிக்கப்பட்டதோடு, வேறு யாரும் இதுபோல் துர்புத்தியோடு உள்ளே வரக்கூடாது என்பதற்காக, லண்டன் பாதுகாப்பு பலமாக்கப்பட்டது. மற்றபடி, மடாலயங்களிலிருந்து பிடுங்கிய நிலங்களைச் சுற்றி எழுந்த புத்தம்புதுக் கட்டிடங்களும், பாதிரியார்களை வெளியேற்றிவிட்டு இடித்துக் கட்டிய பிரபுக்களின் மாட மாளிகைகளுமாக லண்டன் ஜனத்தொகையின் ஒருபகுதி காசுமேலே காசு வந்து கொட்டுகிற நேரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. சாமானியர்களான மற்றவர்கள் கோழிச் சண்டை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

(லண்டன் டயரி – இரா.முருகன் – கிழக்கு பதிப்பகம் வெளியீடு)

வீடு கணக்கா ஓட்டல்

‘வீடு மாதிரியே சகல வசதியும் கொண்ட‘ என்று விளம்பரப் படுத்தப்படும் சாப்பாட்டு ஹோட்டலையோ, லாட்ஜையோ கண்டால் பலபேர் எப்படி காந்தத்தால் ஈர்க்கப்பட்ட இரும்புத் துண்டாக அங்கே போய் விழுகிறார்கள் என்பது புரியாத சமாசாரம். இப்படியான ‘ஹோம்லி’ அடைமொழியை விளம்பரப் பலகையில் பார்த்ததுமே கங்காருவாக நாலடி அந்தாண்டை தாண்டிக் குதித்து ஓடி ரட்சைப்பட வேண்டாமோ! படாதவன் பட்ட பாடு, அதுவும் பரங்கி தேசத்தில் – ஏன் கேக்கறீங்க, இதோ.

“முழிச்சிக்கோ பாய், இடம் வந்தாச்சு. வீடு கணக்கா சவுகரியமான ஓட்டல்” என்று சொன்னான் மான்செஸ்டர் ஏர்போர்ட்டிலிருந்து என்னை டாக்சியில் வைத்து ஓட்டி வந்த பாகிஸ்தானி இளைஞன்.

ஒரு ஏற்றம், ஒரு இறக்கம் என்று பத்து அடிக்கு ஒரு தடவை பூமியே தண்டால் பஸ்கி எடுக்கிற மாதிரி எழுந்து தாழ்ந்திருந்த பகுதியில் கார் நின்றிருந்தது. இங்கிலாந்துதான். ஆனால் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டு என்று கேஷுவலாக இருநூறு வருடம் பின்னால் போன மாதிரி உணர்வு .

மேற்கு யார்க்ஷையர் பகுதியில் அந்த சின்ன ஊரில் ஆளை அடிக்கிற மாதிரி பிரம்மாண்டமும், அழுக்கும் அடைசலுமாகக் கட்டிடங்கள். “இதுதான் எல்லா சவுகரியமும் இருக்கப்பட்ட விக்டோரியா ஓட்டல். குஷியாத் தங்கு”, டாக்சிக் கட்டணத்தை வாங்கிக் கொண்டு பாகிஸ்தானி போக, கொட்டாவி விட்டுக்கொண்டே ஒரு வெள்ளைக்காரக் கொள்ளுத் தாத்தா வாசல் கதவைத் திறந்து உள்ளே வரச்சொன்னார்.

அந்த ஒடுக்கமான வாசலைக் கடந்து நான், என் சூட்கேஸ்கள், லேப்டாப் கம்ப்யூட்டர் இத்தனையும் பத்திரமாக உள்ளே போக, புலி-ஆடு-புல்லுக்கட்டு புதிர் போல் வாசலுக்கும் உள்ளுமாக ஏகப்பட்ட விசிட். அதில் ஒரு பெட்டி கோபித்துக் கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று உருண்டு, சமவெளி இல்லாதபடியால் தெருக்கோடி தாண்டி ஊர் எல்லைக்கே போய்விட்டிருந்தது.

முதல் மாடியில் அறை. உளுத்துப்போக ஆரம்பித்திருக்கும் மரப்படிக்கட்டில் ஏறி அங்கே போக வேணும். அந்தப் படிக்கட்டு ஏழு தடவை வலமும் இடமும் வளைந்து திரும்ப, அங்கங்கே சின்ன மரக்கதவுகளைத் திறந்து மூடிக் கடந்து போக வேண்டிய கட்டாயம். ஒவ்வொரு கதவைக் கடக்கவும் இன்னொரு தடவை புலி – ஆடு – புல்லுக்கட்டு. எல்லாம் கடந்து போனால், தலையில் நாகரத்தினத்தை வைத்துக் கொண்டு ஒரு பாம்புக் கன்னி தெலுங்கு சினிமாப் பாட்டோடு வளைந்து நெளிந்து நடனமாடி என்னை வரவேற்கப் போகிறாள். அப்படித்தான் என் அந்தராத்மா காலதேச வர்த்தமானமில்லாமல், சுருட்டுக் குடித்துக் கொண்டு சொன்னது.

நாககன்னி இல்லை, கவுன் போட்ட பாட்டியம்மா வரவேற்றாள் அறைவாசலில்.

“கூரையிலே பயர் அலார்ம் இருக்கு. தீப்பிடிச்சா அலறும்” என்று சுருக்கமாக ராணியம்மா மிடுக்கில் சொன்னார் விடுதியின் காப்பாளரான அந்த அம்மையார். விக்டோரியா ராணியின் ரெண்டு விட்ட சித்தப்பா பேத்தியாக இருக்கலாம்.

அறையில் நாலு பீங்கான் கோப்பை, ஒரு மின்சாரக் கெட்டில், சோப்பு, பால்பொடி, சர்க்கரை, டீத்தூள் பொட்டலம் என்று சின்னச் சின்னதாக பிளாஸ்டிக் தட்டில் நிறைத்து வைத்துவிட்டுப் போன போது ‘கதவை மறக்காமல் தாழ்ப்பாள் போட்டுக்கோ” என்று உபதேசமும் அளித்தார் அவர்.

அறைச் சுவரில் விக்டோரியா மகாராணி புகைப்படம் கொஞ்சம் ஆம்பளைத்தனமாக முறைத்து ‘தலை பத்திரம். சிகரெட், சுருட்டு வாடை எல்லாம் எனக்குக் கட்டோடு பிடிக்காது பயலே” என்றது.

கட்டிலில் உட்கார்ந்தபடி மேல் கூரையைப் பார்த்தேன். தொட்டு விடும் தூரம் தான் அந்த மரக் கூரை. புகை விட்டு அங்கே பயர் அலாரத்தை அலற வைக்க வேண்டாம். மேலே அண்ணாந்து பார்த்து வாயைத் திறந்து ‘பயர்’ என்று கொஞ்சம் உரக்கச் சொன்னாலே போதும், அது கூவ ஆரம்பித்துவிடக் கூடும்.

கட்டிலுக்குப் பக்கம் மேஜைக்கு நடுவே இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் கருப்புப் பெட்டி வால்வ் ரேடியோவாக இருக்கலாம் என்று ஊகம். சுவிட்சைப் போட்டு ஐந்து நிமிஷம் சூடான பிறகு செய்தி அறிக்கையில் இரண்டாம் உலக யுத்தம் முடிந்த செய்தி வரும் என்று காத்திருந்தேன். ஒலிக்கு முன்னால் ஒளி வந்து சேர்ந்தது.

டெலிவிஷன் தான். அந்த வார்த்தைக்கு ஸ்பெல்லிங்க் ஏற்படுத்தி எழுதிக் கொண்டிருந்தபோது உருவாக்கினதாக இருக்கலாம். பிரிட்டீஷ் சர்க்கார் சமாச்சாரமான பி.பி.சி சானல் ஓடிக் கொண்டிருந்தது. பி.பி.சி ரேடியோவோ, டிவியோ, நாலு வயசன்மார் வட்ட மேஜையைச் சுற்றி உட்கார்ந்து உலக நடப்பு விவாதித்து, நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றுவது கனஜோராக நடக்கிற நிகழ்ச்சி. இப்போதும் அப்படியான துரைகளும், துரைசானிகளும் ஆஜர்.

பேசுகிற விஷயத்தை சுவாரசியமில்லாமல் கேட்டபடி படுக்கையில் விழுந்தபோதுதான் அவர்கள் எல்லோரும் நீலப்படங்களை சென்சார் செய்கிற பிரிட்டீஷ் சென்சார் போர்ட் உறுப்பினர்கள் என்று தெரிந்தது.

சென்னையிலிருந்து அடித்துப் பிடித்து நீ யார்க்ஷையர் வந்தது இழுத்திப் போர்த்திக் கொண்டு தூங்கவா என்று அவர்கள் கண்டித்த மாதிரி இருக்கவே எழுந்து உட்கார்ந்தேன். அந்த மூத்த தலைமுறை வெள்ளைக்காரர்கள் படும் கஷ்டம் இருக்கிறதே, அந்தோ பரிதாபம். ஒரு மாதத்தில் குறைந்தது பத்து நீலப்படங்களையாவது தணிக்கை செய்ய வேண்டியிருக்கிறது. அதில் எந்தெந்தக் காட்சி ரொம்ப மோசம், எது எல்லாம் சுமார் பாசம் என்று தெளிவான முடிவுக்கு வர, ஒவ்வொரு படத்தையும் குறைந்தது நாலு தடவையாவது முதலிலிருந்து கடைசி வரை பார்த்து குறிப்பு எடுக்க வேண்டும். அப்புறம் விவாதிக்க வேண்டும்.

கவர்மெண்ட் இந்த போர்ட் உறுப்பினர்களுக்கு இதற்கான ஊதியமாக மாதாமாதம் கொடுக்கும் பிசாத்து பீஸ் யிரத்துச் சில்லறை பவுண்ட் (சுமார் எழுபத்தையாயிரம் ரூபாய்) யாருக்கு வேணும்? இந்தத் துன்பத்தை எல்லாம் தாங்க அது ஈடாகுமா என்ன?

பெரிசுகள் அங்கலாய்த்தபோது தூக்கம் போய் எனக்கும் அழுவாச்சி அழுவாச்சியாக வந்தது. ‘விலகிக்கோ பெரிசு, நான் உங்க சார்பிலே நாலு நாள் இந்தக் கஷ்டத்தை எல்லாம் அனுபவிக்கறேன்’ என்று உதவிக்கரம் நீட்ட ஆசை.

‘கம்ப்யூட்டரைப் புளியஞ்சாதம் போல கட்டிக் கொடுத்து வேலை பார்த்துவிட்டு வான்னு அனுப்பினா நீலப்படமா பார்க்கிறே” என்று டெலிபதியில் சென்னைவாழ் வீட்டு, ஆப்பீஸ் தலைமைப் பீடங்கள் முறைக்க, டெலிவிஷனை அமர்த்திப் போட்டுத் தூங்கப் போனேன்.

சுருக் என்று ஏதோ முதுகுக்கு ரெண்டு செண்டிமீட்டர் கீழே கடித்ததாக உணர்ச்சி. பிரமைதான். இங்கிலாந்து குளிருக்கு ஊர்கிற, நகர்கிற, பறக்கிற, கடிக்கிற வர்க்கம் எல்லாம் உறைந்து போய் இருக்குமே. யார் சொன்னது என்று ஆட்சேபித்து, இன்னொரு சுருக் முந்தியதற்கு நாலு மில்லிமீட்டர் வலப்புறமாக.

எழுந்து உட்கார்ந்து விளக்கைப் போட்டால் முதல் காரியமாக பீஸ் ஆகியது அந்த பல்ப். “நூறு வருஷ பல்பை பியூஸ் ஆக்கிட்டியே” என்று இருட்டில் விக்டோரியா பார்வை முதுகைச் சுட்டபோது அடுத்த சுருக்.

டார்ச்சை எடுத்துப் படுக்கையைப் பரிசோதிக்க, நான் காண்பதென்ன? சூரியன் அஸ்தமிக்காத இங்கிலாந்து பெருநாட்டுத் தங்கும் விடுதியில் ஓர் ஒரிஜினல் மூட்டைப் பூச்சி. தொல்லைகள் தொடரட்டும் என்று வாழ்த்தி ஓடி மறைந்தது அது.

(தினமணி கதிர் – ‘சற்றே நகுக’ பகுதி)

இவிடம் நாவிற்கினிய எள்ளுப் புண்ணாக்கு

இவிடம் நாவிற்கினிய எள்ளுப் புண்ணாக்கு

அது என்னமோ தெரியவில்லை. சுவாரசியமான அறிவிப்புப் பலகைகள் என்னை விடாமல் துரத்துகின்றன.

ஒரு மழைக்கால சாயந்திரத்தில் கையில் உயர்த்திப் பிடித்த குடையோடு புறநகர் கடைத்தெருவில் போய்க் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது இது -’இவ்விடம் நாவிற்கினிய அரிசி, குருணை, தவிடு மற்றும் எள்ளுப் புண்ணாக்கு கிடைக்கும்.’

அடுப்பில் ஏற்றி வடித்தால் பொலபொலவென்று மல்லிகைப்பூ வெண்மையோடு சோறாக உதிரும் அரிசி இந்த நாக்கு இருக்கும் வரை சுவையானதுதான். குருணை? நாலு நாள் காய்ச்சலில் நாக்கு வறண்டு போய் முடங்கும்போது, அல்லது டயட்டில் இருக்கச் சொல்லி டாக்டர் கட்டளை போடும்போது, கஞ்சி வைத்து ஒரு துண்டு நார்த்தங்காய் ஊறுகாயோடு சாப்பிட்டால் அதுவும் ஏறக்குறைய தேவாமிர்தம்தான். கோழிக்கும் போடலாம்.

அப்புறம் தவிடு? அதை எப்படிச் சாப்பிட்டு நாவிற்கு இனியது என்று சர்டிபிகேட் தருவது?

மாஸ்கோவில் தொழிற்சாலை அமைத்து, தவிட்டிலிருந்து பிஸ்கட் தயாரித்ததாக பழைய ‘சோவியத் நாடு’ வழவழ பத்திரிகையில் படித்த ஞாபகம். பத்து வருஷம் முன்னால் திடீரென்று ஒரு விடிகாலையில் அந்தப் பத்திரிகையும், அதை அச்சடித்து வெளியிட்ட சோவியத் யூனியனும் காணாமல் போக, மாஸ்கோ மட்டும் எஞ்சி நிற்கிறது. அங்கே தவிட்டு பிஸ்கட் தயாரிக்கிறார்களா என்ற விவரம் தெரியவில்லை.

இதெல்லாம் கிடக்கட்டும். அறிவிப்புப் பலகையில் கடைசி ஐட்டமான எள்ளுப் புண்ணாக்கு. எத்தனை யோசித்தும் அதில் மறைந்திருக்கும் இனிமை என்ன மாதிரியானது என்று புரியாமல் கடைக்காரரிடமே கேட்டுவிட்டேன்.

“அது ஒண்ணுமில்லே சார். கோழித் தீவனம், மாட்டுத் தீவனம்னு விளம்பரப்படுத்தி இன்னும் ரெண்டு போர்டை நிப்பாட்டி வைக்கலாம்னா அப்புறம் நான் கல்லா போட்டு உட்கார இடம் இருக்காது. அதான் எல்லாத்தையும் ஒரே போர்டாக்கிட்டேன். ”

ஒரே போடாக அவர் போட்டபோது அவருக்குப் பின்னால் தேவத்தூதனின் சிறகுகள் முளைத்திருக்கிறதோ என்று கொஞ்சம் எக்கிப் பார்த்தேன். இப்படி மனிதன், மாடு, கோழி என்று எல்லா உயிரினத்தையும் ஒரே தட்டில் அல்லது போர்டில் வைத்துப் பார்க்கும் பரிபக்குவம் வருவது லேசான காரியமா என்ன?

பெங்களூரில் குடியிருந்தபோது ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு எதிரே புதுசாகக் கடை திறந்தார்கள். “பன்ரி’, “பன்ரி’ என்று அன்பொழுக அழைத்துப் போய், விடிகாலையிலேயே நெய் ஒழுகும் ரவா கேசரி, போண்டா விளம்பி, கடையின் விளம்பரப் பலகையைத் திறந்து வைக்கச் சொன்னார்கள்.

ஆங்கிலத்தில் எழுதிய போர்ட் அது. “டோர் டெலிவரி. உங்கள் வீடு தேடி வந்து எல்லா மொழியிலும் பால், பத்திரிகை வினியோகிக்கப்படும். ”

மொழிவாரியான பால்? எனக்கு உண்மையிலேயே குழப்பம். ‘பால்’ என்பது ‘ஹால்’ ஆகவும், ‘பல்’ என்பது ‘ஹல்’ ஆகவும் மாறும் கன்னட மொழி கம்பீரமாக வலம் வரும் புண்ணிய பூமியில் அரை லிட்டர் தமிழ்ப் பால் கேட்டால் வீடு தேடி வந்து ‘ஹல்’லை உடைத்துவிடுவார்களோ?

கடை ஆரம்பித்த நண்பரிடம் விளக்கம் கேட்க அவர் தலையில் கால் நூற்றாண்டு முன்னால் முடி இருந்த இடத்தைச் சொறிந்தபடி சங்கடமாகச் சிரித்தார்.

“பத்திரிகை ஏஜன்சி மட்டும்தான் முதல்லே எடுத்தேன். பாக்கெட் பால் வியாபாரமும் வச்சுக்கலாம்னு வீட்டுக்காரிதான் ஒரே அடம். எழுதக் கொடுத்திருந்த போர்டுலே கடைசி நிமிசத்திலே அவங்க விருப்பத்தையும் சேர்த்துட்டேன். ”

அதே பெங்களூரில், இன்னொரு நண்பரைப் பார்க்க அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏழாவது மாடியில் இருந்த வீட்டுக்குப் போயிருந்தேன். பக்கத்து பிளாட்டில் பெயர்ப் பலகையைப் பார்த்துக் குழம்பிப் போய் நின்றுவிட்டேன்.
‘டாக்டர் அனுமந்தப்பா, கால்நடை மருத்துவர், அவசர உதவிக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண்…’

அவசர உதவிக்கு ஆதிமூலமே என்று அழைத்தால் கருணாமூர்த்தியாக ஓடி வரும் வெட்டினரி டாக்டருக்கு எல்லா விலங்கினமும் நன்றி சொல்லும்தான். ஆனால் ஒரு பசுமாடோ, யானைக் குட்டியோ, ஆட்டுக் கிடாவோ எப்படி அந்த ஏழாம் மாடிக்குப் படியேறி வந்து வைத்தியம் பார்த்துக் கொள்ளும்?

“டாக்டர் புதுசாக் குடி வந்திருக்கார். கிளினிக்லே வச்சிருந்த ஒரு போர்டையே இப்ப சிரத்தைக்கு இங்கே மாட்டிட்டார்” என்றார் நண்பர் என் திருதிரு முழிக்கு விடையாக.

முந்தாநாள் கண் மருத்துவரின் கிளினிக் வாசலில் பார்த்த ‘புறக்கண் நோயாளிகளுக்கு இங்கே மருந்து தரப்படும்’ என்ற அறிவிப்பு என்ன மாதிரியானது என்று யோசித்துக்கொண்டே கம்ப்யூட்டரைத் திறந்து இண்டர்நெட்டில் மேய்ந்தேன்.

ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகாத கண் நோயாளியான அவுட் பேஷண்ட் ‘புறக்கண் நோயாளி’ ஆன சூத்திரம் புரிந்தபோது, இணையத்தில் லத்தீன் மொழிப் பல்கலைக்கழகத்தின் தகவல் பக்கத்தில் இருந்தேன். கிடைத்த தகவல் இது -

‘புராதன ரோம் நகரத்தில் துணிகளை பிளீச் செய்து தர நிறுவனங்கள் இருந்தன. பிளீச்சிங்குக்கு அமோனியா வேண்டுமே. அந்தக் காலத்தில் ஏது அமோனியா? அமோனியா நிறைந்த, அதாங்க ஒன் பாத்ரூமைத்தான் இந்தக் காரியத்துக்காக உபயோகப்படுத்தினார்கள். சலவைக்கடை வாசலில் பெரியதாகப் பள்ளம் தோண்டி, “இங்கே சிறுநீர் கழிக்கவும்’ என்று அறிவுப்புப் பலகை வைத்து, நகர மக்களை வேண்டி விரும்பி அழைத்தார்கள்.

ரோமானியர்கள் பற்றி இன்னொரு செய்தியும் இணையத்தில் படிக்கக் கிடைத்தது. அவர்கள் பிளீச் செய்யப் பயன்படுத்தியது போக மீந்த மேற்படி திரவத்தை வாய் கொப்பளிக்கவும் உபயோகித்தார்கள். துர்நாற்றம் இல்லாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. ரோமாபுரியிலேயே லோக்கலாகக் கிடைத்தது தவிர, ஸ்பெயின் பிரதேசத்திலிருந்து வரவழைத்த சரக்குக்கும் ஏக டிமாண்டாம். அதி சக்தி வாய்ந்த கிருமிநாசினி இந்த வெளிநாட்டுப் பொருள் என்று பரவலான நம்பிக்கை.

‘ரோமானியப் பேரரசின் இறக்குமதி லைசன்ஸ் பெற்ற கடை. இவ்விடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஸ்பெயினிலிருந்து வந்த நயம்…’

அறிவுப்புப் பலகை கற்பனையில் துரத்த ஆரம்பிக்க, கம்ப்யூட்டரை அவசரமாக மூடினேன்.

தினமணி கதிர் – ‘சற்றே நகுக’

சற்றே நகுக – தினமணி கதிர் பத்தி – 2006 – இரா.முருகன்

சற்றே நகுக – தினமணி கதிர் பத்தி – 2006 – இரா.முருகன்

மத்தியம வில்லன்

காலையில் பத்திரிகை வந்து விழக் காத்துக் கொண்டிருந்தபோது கை விரல் தன் பாட்டுக்கு டெலிவிஷன் பெட்டியின் ரிமோட்டை அழுத்துகிறது. சானல் சானலாகத் தாவுகிற காட்சி. சகலமான மொழியிலும் போன, முந்தைய தலைமுறைக்காரர்கள் ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தெலுங்கு சானலில் பழைய சினிமா பாட்டு சீன். புஷ்டியான கருப்பு வெள்ளை சுந்தரிகள் சேலை மாதிரி எதையோ தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு தொம்தொம்மென்று தரையதிரக் குதிக்கிறார்கள். யாரோ ஒரு ராவ் கதாநாயகர். கைத்தண்டையில் கவசம் போல் மல்லிகைச் சரத்தைச் சுற்றிக்கொண்டு, அழுக்கு கலர் பாட்டிலிலிருந்து ஊற்றிக் குடித்தபடி அந்தப் பூகம்ப நாட்டியத்தை ரசித்ததவாறு திண்டு தலையணையில் சாய்ந்திருக்கிறார். காமிரா நகர, நாலைந்து கண்டா முண்டா ஆசாமிகள் அவசரமாக உருட்டி விழித்தபடி வாசல் கதவு பக்கம் நிற்கிறார்கள். வில்லனின் கையாள்களாக இருக்க வேண்டும். வில்லன் எங்கேப்பா?

காமிரா உள்ளறையில் எட்டிப் பார்க்கிறது. கள்ளச் சிரிப்பும், பென்சிலால் வரைந்த மீசையுமாக திடகாத்திரமான வில்லன். பாட்டும் ஆட்டமுமாகப் பக்கத்து ஹாலில் அமளிதுமளிப் படுவது கொஞ்சம் கூடப் பாதிக்காமல் அந்த ஆள் ஒரு பழைய டைப்ரைட்டரில் லொட்டு லொட்டு என்று டைப் அடித்துக் கொண்டிருக்கிறான். கவனம் சிதறி, டைப் அடிப்பதில் எழுத்துப் பிழை வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகவோ என்னமோ, எப்போதும் வாயில் புகையும் சிகரெட்டைக் கூடக் கொளுத்தாமல் சும்மா உதட்டில் பற்றிக் கொண்டிருக்கிறான்.

டைப் ஆகிக் கொண்டிருப்பது ஒரு ஸ்டாம்ப் பேப்பரில். நீள நீளமான வாக்கியங்களாக வந்து விழுவது ஏதோ சொத்து விவரம் என்று ஊகிக்க முடிகிறது. பாட்டு முடிவதற்குள் டைப் அடித்து முடிக்க வேண்டும். அப்புறம் சொத்தைத் தன் பெயருக்கு எழுதித்தரச் சொல்லிக் கதாநாயகனை மிரட்ட வேண்டும்.

பாட்டு முடியும் நேரம் எதிர்பார்த்தபடியே கையில் ஸ்டாம்ப் பேப்பரோடு அறைவாசலில் அவன். நான் இன்னதென்று சொல்ல முடியாத ஆத்திரம் கொப்பளிக்க, டிவியை நிறுத்தினேன்.

பின்னே என்ன? வெளியே ஆடுகிற அழகி பாட்டு முடிந்த பிறகு பணத்தை வாங்கிக் கொண்டு பறந்து விடுவாள். அதற்குள் அவளுக்கு ஒரு ஹலோ சொல்லலாம். புறங்கையில் மல்லிகைப்பூவை இவனும் கேட்டு வாங்கிச் சுற்றிக் கொண்டு, அந்த அழுக்கு திரவத்தை இரண்டு மடக்கு குடிக்கலாம். லட்டு மாதிரி சந்தர்ப்பம் கிடைத்து ஹீரோவும் வேறு வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறான். பத்து ரூபாயை விட்டெறிந்திருந்தால் ரிஜிஸ்தர் ஆபீஸ் வாசல் தட்டச்சரோ, டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்காரர்களோ சர்க்கார் மொழியில் மணிமணியாக அடித்து நீட்டியிருப்பார்கள் இந்த லீகல் டாக்குமெண்ட் சங்கதியை எல்லாம். கையைத் தட்டினால் எடுபிடி கொண்டு வந்து கொடுத்துப் போவான். இல்லை, அவனே வில்லன் சார்பில் மிரட்டி, பேனாவை மூடி திறந்து மசியை உதறிச் சரிபார்த்துக் கொடுப்பான். ஹீரோ கையெழுத்துப் போடட்டும், போடாது போகட்டும். வில்லன் கெத்தைக் கைவிடலாமா என்ன?

இந்த விஷயத்தில் ஹாலிவுட் டைரக்டர் ஹிட்ச்காக் நம்ம கட்சி. அவர் பிரிட்டீஷ் காரர். இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவில் ஹாலிவுட்டுக்குப் போய்ப் படம் எடுத்தவர். 1940-ல் அவர் எடுத்த முதல் ஹாலிவுட் படம் ‘ரெபக்கா’. இந்தப் படத்தில் ஒரு பெண் வில்லனை (சரி, வில்லியை) அவர் சித்தரித்த விதத்துக்கு ஹாலிவுட்டே எழுந்து நின்று சலாம் போட்டு ஆஸ்கார் பரிசையும் தூக்கிக் கொடுத்தது.

அப்படி என்ன கதை ரெபக்கா படத்தில்? ஒரு கோடீஸ்வரப் பிரபு. முதல் மனைவி¨யான ரெபக்காவை இழந்த இவன் ஓர் அழகியைக் காதலித்து இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டு, தன் கோட்டைக்குப் போகிறான். அங்கே வீட்டை நிர்வகிக்கும் ஒரு மத்திய வயது ஸ்திரி. சீமானின் முதல் மனைவியான ரெபக்கா காலத்திலிருந்தே வேலையில் இருப்பவள். இந்த இரண்டாம் மனைவியின் வரவை அடியோடு வெறுக்கிற அவள், அந்தப் பெண்ணை வீட்டை விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்திக் கொண்டே இருக்கிறாள். அந்தப் பெண்ணும் இவளைக் கண்டாலே நடுங்க ஆரம்பிக்கிறாள்.

ரெபக்கா மேல் விசுவாசம், கிட்டத்தட்ட கண்மூடித்தனமான பிரியம் வைத்த இந்த நிர்வாகிப் பெண்தான் படத்தின் வில்லி. அவள் இரண்டாம் மனைவியைச் சந்திக்கும்போதெல்லாம் குரலை உயர்த்தாமல் மிரட்டுகிற காட்சிகள் படத்தின் சிறப்பு. இந்த வில்லி பாத்திரத்தின் கொடுமையைக் கூட்டாமல் குறைக்காமல் தர முடிவு செய்தார் ஹிட்ச்காக். எப்படி அதை நிறைவேற்றினார் என்பதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் -

“அந்த வில்லி வரும் காட்சி எதிலும் அவள் அறைக்குள் நுழைவதையோ, காட்ச்¢ முடிவில் அறையை விட்டு வெளியேறுவதையோ காட்டினால், அவள் பத்தோடு பதினொன்றாகியிருப்பாள். அந்தக் கதாபாத்திரத்தின் கொடூரம் மங்கிப் போகும். எனவே வில்லி தோன்றும் காட்சி எதிலும் மற்ற பாத்திரங்கள் உள்ளே வருவார்கள். போவார்கள். திடீரென்று வில்லி பேசுவது கேட்கும். காமிரா திரும்பிப் பார்க்கும்போது, அவள் அந்த அறையில் ஏற்கனவே இருப்பாள்.”

புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் லாரன்ஸ் ஒலீவியர் கதாநாயகனாகவும், ஜோன் •பாண்டைன் அவரின் இரண்டாம் மனைவியாகவும் நடித்த ‘ரெபக்கா’வில் இந்த வீட்டு நிர்வாகி பாத்திரத்தில் வந்து புகழை அள்ளிக்கொண்டு போனது ஆஸ்திரேலிய நடிகையான ஜூடித் ஆண்டர்சன். பின்னாளில் இங்கிலாந்து அரசியார் வழங்கிய கவுரவ ‘டேம்’ பட்டம் பெற்றவர் இவர்.(சர் பட்டம் ஆண்களுக்கு வழங்கப்படுவது; அதற்கு இணையான டேம் பெண்களுக்கு வழங்கப்படுவது), பட்டம் வழங்கியபோது இந்தம்மா ஏற்கனவே அறைக்குள் இருந்தாரா என்று தெரியவில்லை.

நாற்பதுகளில் வெளியான பிரபல தமிழ்ப்படம் ஒன்று. அப்போதெல்லாம் அரசர், சேனாதிபதி, மந்திரி, ராணி என்று யார் நாலுவரி வசனம் பேசினாலும், ஒரு குறிப்பிட்ட இனத்தின் பேச்சு மொழியைத்தான் பயன்படுத்துவது வழக்கம். இந்தப் படத்தில் ராஜா தான் வில்லனும் கூட. கதாநாயகி அரண்மனையிலிருந்து தப்பிக்கும்போது கொடுமைக்கார ராஜாவின் விசுவாசமான ஊழியர்கள் ஊதுகுழலை உரக்க ஊதுவார்கள். ஒரு நோடியில் படை வீரர்கள் திரண்டு வந்து கதாநாயகியைச் சுற்றி வளைப்பார்கள். மின்னல் வேகத்தில் இப்படிப் பிடிபட்ட கதாநாயகி மருட்சியோடு பார்க்க, வில்லன் விளக்குவான் – “அவா ஊதினா இவா வருவா”.

அட்டகாசமாகச் சிரித்தபடி அடித்தொண்டையிலிருந்து உறுமிச் சொல்ல வேண்டிய சங்கதியை இப்படி சாத்வீகமாக வில்லன் மொழிந்ததை அந்தக் காலத்தில் ரசித்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்.

வில்லனோடு சம்பந்தமில்லைதான். அரசியல்வாதி ஒருத்தர் சில ஆண்டுகள் முன்னால் சொன்னது இது – “நான் நாட்டியம், சங்கீதக் கச்சேரி எல்லாம் போகமாட்டேன். இந்த மாதிரியான ரசனைகள் நம் பெர்சனாலிட்டியைத் தொளதொளாவென்று ஆக்கி விடும்”

ஹிட்ச்காக் இருந்தால் இதைக் கேட்டு மகிழ்ந்ததோடு, இவரைக் கதை வசனம் எழுதவைத்து ஒரு தமிழ்ப் படத்தையும் எடுத்திருப்பார்!