Monthly Archives: November 4, 2008, 5:42 am

நவராத்திரி முடிந்த பிறகு ..

 

நெம்பர் 40, ரெட்டைத் தெரு புத்தகத்திலிருந்து

 

பதினேழு

நவராத்திரி முடிந்து விஜயதசமி காலையில் பூஜைக்கு வைத்த புத்தகங்களை எடுத்துக் கட்டாயத்தின் பேரில் படித்துக் கொண்டிருக்கும்போது ரெட்டைத் தெருவில் போகிற ஒவ்வொரு லாரியும் கவனத்தை ஈர்க்கும். ஊருக்குள் போவதால் மெதுவாகப் போகிற அவற்றில் ஒன்று மட்டும் ஊர்ந்தபடி வரும். அது தென்பட்ட நாலு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில், தெருவில் இருக்கப்பட்ட ஏழிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட பையன்கள் கூட்டம் ரங்கன் வாத்தியார் வீட்டு வாசலில் கூடிவிடும்.

ரங்கன் வாத்தியாரைப் பள்ளிக்கூடத்தில் பார்த்ததைவிட, தீபாவளிக்காக வீட்டுத் திண்ணையை ஒட்டிப் பட்டாசுக்கடை வைத்து நாலு திசையிலும் சிப்பந்திகளை ஏவிக்கொண்டு மும்முரமாக வியாபாரம் செய்துவந்த கோலத்தில் தான் நினைவிருக்கிறது.

தீபாவளிமலர் சிறுகதை

 

Short Story published in Amudhasurabhi Deepavali Malar 2008

கருப்பு வெளுப்பில் ஒரு படம்
***********************

நாயர்.

யாரோ கூப்பிட்டார்கள். அவனைத்தான்.

நாயர் என்று கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கவேண்டும் என்று இந்தப் பட்டணத்தில் குடியேறும் எல்லா மலையாளிகளையும் பழக்கியிருக்கிறார்கள். அல்லது அவரவர்களாகவே வந்த நாலைந்து நாளில் புரிந்து கொள்கிறார்கள்.

‘டீ வேணுமா, நாயர்?’

கூப்பிட்ட சின்னப் பையன் கையில் இரும்பு வளையத்தில் தூக்கு மாட்டித் தொங்கிய டீ கிளாசுகளும், அலுமினியத் தட்டில் எண்ணெய் மினுக்கோடு வடையுமாக நின்றான்.

குட்டப்பன் கார்னர் ஷோப்

 

‘வார்த்தை’ பத்தி

மூணரை மணிக்கு எழுந்தேன். அதிகாலைக்கு முற்பட்ட அசதியான காலை. தரையில் ஊன்றிய வலது குதிகால் போய்யா புண்ணாக்கு என்று முனகுகிறது. குளித்துத் தொழுது, ரசஞ் சாதமும் சுட்ட அப்பளமுமாகச் சாப்பாடு. தூக்கக் கலக்கத்தோடு வீட்டுக்காரி கேட்கிறாள் – உங்களுக்கே கேணத்தனமாத் தெரியலை இது?

நாலரை மணிக்கு சென்னை விமான நிலையம். தில்லி, மும்பை, கொல்கத்தா என்று எல்லா பெருநகரங்களுக்கும் போகிற முதல் விமானங்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் கிளம்புவதால் செக்யூரிட்டி செக் இன் கவுண்டர்களில் இரையெடுத்த மலைப்பாம்பாக நீண்டு மெல்ல நகரும் க்யூ. வரிசையில் நிற்கும் எத்தனை பேர் ரசஞ் சாதம் சாப்பிட்டு விட்டு வந்தவர்கள் என்று தெரியவில்லை. 

சரஸ்வதி பூஜையும் ஒரு காலும்

 

ஏதோ ஒரு பக்கம் -9

சரஸ்வதி பூஜை. தி.ஜானகிராமன் தான் உடனடியாக ஞாபகம் வருகிறார்.

சரஸ்வதி பூஜையன்று எதையும் படிக்கக் கூடாது என்று சாத்திரம். ஆனால் அன்றைக்குத் தான் எதையாவது படிக்க மனம் அலைபாய்கிறது. பல்பொடி மடித்து வந்த காகிதமாக இருந்தால் கூட சரிதான்.

ஜானகிராமனின் அச்சு அசல் வார்த்தைகளில் இதைப் படிக்க அம்மா வந்தாளைத் தேடணும். இன்றைக்கு முடியாது. என் வலது கால் நான் சொல்வதைக் கேட்க மறுத்து வேலை நிறுத்தம் செய்து இன்றோடு வெற்றிகரமான ஆறாவது நாள்.

போன வாரம் ஒரு ராத்திரி கொல்கத்தாவிலிருந்து வந்து சேர்ந்து விமானம் இறங்கும்போது ஏணிப்படியில் கடைசிப் படியைப் பார்க்காமல் அவசரமாக இறங்கி, சரிந்து விழுந்தேன். கால், காலே அரைக்கால் ஆகி விட்டது.