Monthly Archives: February 28, 2009, 11:42 am

(Updated) சுஜாதா – கிரேசி மோகன் அஞ்சலி

 

கதையா கவிதையா கட்டுரையா கேட்போர்க்(கு)
எதையும் வழங்கும் எழுத்துப் – புதையலே
சீரங்க தேவதையே ஈரங்க ராஜனே
பாரிங்கு நீரின்றிப் பாழ்

அந்தரங்க சுத்தியுடன் அந்தணங்கு ஆண்டாள்போல்
அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க வந்திறங்கி
வைகுண்டம் வாவென்று கைகொடுத்துத் தூக்கிவிடும்
பைகொண்ட நாகமுற்ற பொற்பு.

- க்ரேஸி மோகன்
(28.2.2009)

போகிற போக்கில் 3

 

Feb 27, 2009 வெள்ளி காலை 5 மணி.

நாரதகான சபா மூத்திர வாடை வழக்கப்படுத்திக் கொண்ட சமாசாரம். அதுவும் முதல் நாலைந்து வரிசை வி.ஐ.பி வரிசைகளில் உட்கார்ந்தால், கதவு திறக்கும் போது, மூடும் போது ‘கழிவறை உலகம் செய்தீர்’ என்று ஞானக்கூத்தனோடு சேர்ந்து மணம் கமழச் சொல்லலாம். சங்கீத சீசனில் சபா கேண்டீனில் கீரை வடை மேற்படி வாடையோடு சாப்பிட்டு சாப்பிட்டு கல்யாணி, காம்போதி, கீரை வடை, ஜோன்புரி, சுப பந்துவராளி என்று எதைக் கேட்டாலும் பார்த்தாலும் பக்கத்தில் டாய்லெட் இருக்கிறதா என்றுதான் அநிச்சையாகக் கண் தேடுகிறது.

போன ஞாயிற்றுக் கிழமை (ஃபெப்ரவரி 22) நாரத கான சபா தினமாகப் போய்விட்டது. காலை எழுந்தவுடன் கிரேசி மோகன் அங்கே என்றால் மாலை முழுதும் பர்வீன் சுல்தானா. கூடவே நாள் முழுக்க, ராசியான சபா வாசனை.

ஞாயிறு மாலை நா.கா.சபாவில் குனிதாஸ் சம்மேளன். இந்துஸ்தானி இசை விழா. மும்பையில் 33 வருடமாக வெற்றிகரமாக நடக்கிற இந்த விழா சென்னைக்கும் வந்து இது மூன்றாவது வருடம். இசைக் கலைஞர் சி.ஆர்.வியாஸ் குனிதாஸ் ட்ரஸ்ட் ஏற்படுத்தி நடத்தி வரும் விழாவை இப்போது முன்னால் கொண்டு போகிறவர் அவருடைய மகனும் சந்தூர் இசைக் கலைஞருமான சதீஷ் வ்யாஸ்.

போகிற போக்கில் 2

 

Feb 23, 2009 திங்கள் காலை 7 மணி

நேற்றுப் பகல் (ஞாயிறு, 22, ஃபிப்ரவரி 09) க்ரேஸி மோகனின் ‘சாக்லெட் கிருஷ்ணா’ 150-வது மேடையேற்றம் நாரதகான சபாவில் கோலாகலமாக நடந்தது. நம்ம வீட்டுக் கல்யாணம். கமல் அவர்கள் சிறப்பு விருந்தினர்.

மோகன் இதுவரை எழுதிய நாடகங்கள் 21. எல்லாமே குறைந்த பட்சம் 100 தடவையாவது மேடையேறியவை. இவற்றில் பல 200 ரன், மற்ற சில 500 ரன் அடித்து சனத் ஜெயசூர்யா மாதிரி இன்னும் சாதனை புரிந்து கொண்டிருக்கின்றன.

அவர் கதை வசனம் எழுதி பெருவெற்றி கண்ட 21 திரைப்படங்களில் கமலுக்காக மட்டும் 11 சூப்பர் ஹிட்ஸ். மோகன் கைவண்ணத்தில் உருவாகி சின்னத்திரையில் prime time சீரியல்களாக எட்டு நகைச்சுவைப் படைப்புகள் சக்கைப்போடு போட்டன.

போகிற போக்கில்

 

Feb 22, 2009 ஞாயிறு காலை 5 மணி

‘ஞானக்கூத்தன் கவிதைகள்’ (ஆழி பதிப்பகம் வெளியீடு) படித்துக் கொண்டிருக்கிறேன்.

கிட்டத்தட்ட ஐம்பது வருடமாகத் தமிழ்க் கவிதையில் தடம் பதித்த கவிஞரின் மொத்தப் படைப்புகளையும் ஒரு சேரப் படிக்கும் போது அவருடைய கவிமொழி, பாடுபொருள், கட்டமைப்பு, பார்வை, என்று எல்லாமே மலைக்க வைக்கிறது. மரபுத் தொடர்ச்சி இழை அற்றுப் போகாமல் புதுக் கவிதைக்குத் தடம் மாறுகிற வித்தையை ஞானக்கூத்தனிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

கோயில் வடைகளே சுவையில் சிறந்தவை.
சூடில்லை உப்பில்லை என்று பிறர் குறைகூறக்
கக்கத்தில் வியர்த்துக் கொண்டு ஒருத்தன்
மொண்ணைக் கத்தியால் ஒதுக்கிய வெங்காயத்
துண்டுகள் எதுவும் தென்படாது.
கோயில் வடைகள் ஆயுதம் போன்றவை.
ஏனென்றால் கடவுளிடம் வரங்கள் பெற்றவை.
துளைகறுத்த கோயில் வடைகளை நிறையவே
சளைக்காமல் தின்னலாம். அவற்றில் கொஞ்சம்
மிளகின் குறும்பு நீண்டதாய் இருக்கும்.
கடவுள்கள் அத்தனை பேரும் தங்கள் தங்கள்
முடிகளின் வைரத்தை நினைப்பதைக் காட்டிலும்
வடைகளின் வரவையே காத்திருப்பார்கள்.

(திணை உலகம்)

ஆண்கள் மற்றும் சம்சாரிகள்

 

Kungumam column – அற்ப விஷயம்-29 இரா.முருகன்

இரண்டு தலைமுறை முன்னால் கேள்விப் பட்டிருக்க முடியாத விஷயங்களைப் பட்டியல் போடு. ரொம்ப அக்கறையாக யாராவது வீட்டுக் கதவைத் தட்டி விசாரித்தால், இண்டர்நெட், டெலிவிஷன் மெகா சீரியல், மினரல் வாட்டர், பிட்சா என்று விரலை மடக்கலாம். அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்துவிட்டு இந்த லிஸ்டில் ஆணுறையையும் சேர்க்கலாமா? மகா மகா தப்பு. அதை எடுத்து விடவும்.

1937-ம் வருடத்துப் பத்திரிகை ஒன்றை மேய்ந்து கொண்டிருந்தபோது கிடைத்த ஞானோதயம் இது. மேற்படி விஷயத்தில் நம்முடைய பாட்டன், முப்பாட்டன் வகையறாக்கள் அலுப்பு சலிப்பு இல்லாமல் செயல் பட்டிருக்கிறார்கள் என்று அரசல் புரசலாகத் தெரியும். அதுவும் முன்னூறு வருடத்துக்கு முந்தி, பேரரசுகள் காணாமல் போய் பாளையக்காரர்களும் ஜமீந்தார்களும் அங்கங்கே ஊருக்கொரு ராஜாவாக செங்கோல் செலுத்திய காலத்தில் தமிழ்ப் புலவனுக்கு வேலை அதிகம்.