போகிற போக்கில் 3

 

Feb 27, 2009 வெள்ளி காலை 5 மணி.

நாரதகான சபா மூத்திர வாடை வழக்கப்படுத்திக் கொண்ட சமாசாரம். அதுவும் முதல் நாலைந்து வரிசை வி.ஐ.பி வரிசைகளில் உட்கார்ந்தால், கதவு திறக்கும் போது, மூடும் போது ‘கழிவறை உலகம் செய்தீர்’ என்று ஞானக்கூத்தனோடு சேர்ந்து மணம் கமழச் சொல்லலாம். சங்கீத சீசனில் சபா கேண்டீனில் கீரை வடை மேற்படி வாடையோடு சாப்பிட்டு சாப்பிட்டு கல்யாணி, காம்போதி, கீரை வடை, ஜோன்புரி, சுப பந்துவராளி என்று எதைக் கேட்டாலும் பார்த்தாலும் பக்கத்தில் டாய்லெட் இருக்கிறதா என்றுதான் அநிச்சையாகக் கண் தேடுகிறது.

போன ஞாயிற்றுக் கிழமை (ஃபெப்ரவரி 22) நாரத கான சபா தினமாகப் போய்விட்டது. காலை எழுந்தவுடன் கிரேசி மோகன் அங்கே என்றால் மாலை முழுதும் பர்வீன் சுல்தானா. கூடவே நாள் முழுக்க, ராசியான சபா வாசனை.

ஞாயிறு மாலை நா.கா.சபாவில் குனிதாஸ் சம்மேளன். இந்துஸ்தானி இசை விழா. மும்பையில் 33 வருடமாக வெற்றிகரமாக நடக்கிற இந்த விழா சென்னைக்கும் வந்து இது மூன்றாவது வருடம். இசைக் கலைஞர் சி.ஆர்.வியாஸ் குனிதாஸ் ட்ரஸ்ட் ஏற்படுத்தி நடத்தி வரும் விழாவை இப்போது முன்னால் கொண்டு போகிறவர் அவருடைய மகனும் சந்தூர் இசைக் கலைஞருமான சதீஷ் வ்யாஸ்.சதீஷ் வ்யாஸின் சந்தூர் கச்சேரியோடு ஐந்தரைக்கு ஆரம்பமாக வேண்டிய விழா ஆறு மணிக்கு தொடக்கம். இந்த சந்தூர் ரொம்ப சள்ளை பிடித்த வாத்தியம். சரிபாதியாக அறுத்த சவப் பெட்டிமேல், சரி வேணாம், வெறும் பெட்டி மேல் ஏகப்பட்ட தந்திகள். இதை ஒவ்வொன்றாக தட்டிக் கொட்டி முடுக்கிக் கட்ட, பக்க வாக்கில் ப்ருகடைகள். ஒவ்வொரு ராகம் வாசிக்கும் முன்பும் ராக, தாள லட்சணம் பார்த்து அங்கங்கே முடுக்கி, அங்கங்கே தளர்த்தி, தட்டிக் கொட்டி ஏகத்துக்கு மெனக்கெட வேண்டும்.

சதீஷ் ஒரு பதினைந்து நிமிஷம் இப்படி மல்லுக்கட்டிய பிறகு மதுவந்தி வாசிக்கப் போவதாக அறிவித்தார். கொஞ்சம் சிம்மேந்திர மத்யமம் சாயல் அடிக்கும் இந்த ராகத்தில் எனக்குப் பழக்கமான இந்தி சினிமாப் பாட்டு ஏதும் இல்லாததால் உதவிக்குக் கைகாட்ட முடியவில்லை.

மதுவந்தியை விளம்பித காலம் ‘ஏக் தாள்’ மற்றும் 16 அட்சரம் ‘தீன் தாள்’ துரித காலத்திலும் வாசிக்கப் போவதாக வேறு வ்யாஸ் அறிவித்ததால் பாதி நேரம் காரேஜில் மோட்டார் மெக்கானிக் கார் இஞ்சினை ட்யூன் பண்ணுவதை வேடிக்கை பார்க்கிறது போல் கழிந்து போனது. இதையும் மீறி மதுவந்தி அவ்வப்போது சுகமாக வந்து போனது.

பிற்பகல் ராகமான மதுவந்தியை அவர் முடித்தபோது வசந்தா ராகம் பாடும் சாயந்திரமும் கடந்து போய், ராத்திரி ஏழரை மணி. அவர் ஏறக் கட்டினால் தான் பர்வீன் சுல்தானா மேடையேற முடியும். வந்த கூட்டம் எல்லாம் (என்னையும் சேர்த்து) பர்வீன் பக்தர்கள். எல்லோருமே நேரில் அவர் இசையைக் கேட்டு ஏக காலமாகி விட்ட ஏக்கத்தோடு வந்து சேர்ந்தவர்கள்.

வ்யாஸ் முடிக்கும் முன் எடுத்துக் கொண்டது கீர்வாணி. நம் இளையராஜாவுக்கும் கர்னாடக சங்கீத வித்வான்களுக்கு மட்டும் பிரியமான ராகம் இல்லை இது. லட்சக்கணக்கான மசூதிகளில் தொழுகைக்கு அழைக்கிற வாங்கில் கூட கீர்வாணி சாயல் உண்டு. கீர்வாணியே அராபிய இறக்குமதி என்கிறார்கள்.

தீன் தாள் தான் என்றாலும் மதுவந்திக்காக முடுக்கிய தந்தி கீர்வாணி கிட்டே கூடப் போகாதோ என்னவோ. இன்னும் கொஞ்சம் ஒர்க் ஷாப் வேலை. அப்புறம் வாசிப்பு. பேசாமல் இனிமேல் சந்தூர் வித்துவான்கள் ராகத்துக்கு ஒன்றாக ட்யூன் செய்து ஏழெட்டு சந்தூரை பெட்டி போல் அடுக்கி – வேண்டாம் சர்ச் பக்கம் வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு போனால் சங்கடமாகப் போகும்.

பர்வீன் பாட வரும்போது ராத்திரி எட்டே கால் மணி. நாரதகான சபாவே அதிர்கிற படி கரகோஷம். சட்டென்று நம்ம குடும்பத்தில் ஒருத்தர் மேடையில் வந்து உட்கார்ந்த மாதிரி எல்லோரோடும் சகஜமாகப் பேசிச் சிரித்து ஒரு நிமிஷத்தில் அந்நியோன்னியத்தை ஸ்தாபிக்க அவரால் மட்டும் தான் முடியும். கர்னாடக சங்கீத பாடகிகள் யாரும் மேடைக்குப் போனால் இப்படிப் பேசுவது இல்லை. விசாஹா ஹரி என்ன ஆனார் என்று விரலை மடக்கினால் ஒத்துக் கொள்ள முடியாது. அவர் ஹரிகதை. சாவகாசமாக விசாகா.

‘நீங்க மெட்ராஸ். நல்ல அருமையான ரசனை. ஆனா, ராத்திரி ஒன்பது மணியானா டவுன் பஸ்ஸை ரயிலைப் பிடிக்கக் கிளம்பிடுவீங்க .. அதுக்குள்ளே முடிச்சுக்கறேன் .. சுருக்கமா ஒரு மாரு பெஹாக் மொதல்லே’. பர்வீன் தொடங்கினார்.

தன்யாசி மாதிரி ‘போர்க்கள’ ராகம் இது. அதனால் தானோ என்னமோ எத்தனையோ போர்க்களம் கண்ட சீக்கிய குருமார்களின் குரு க்ரந்த் சாகிப் – ‘குர்பானி’ பக்தி இசை கானங்கள் பலவற்றையும் மாரு பெஹாக் அலங்கரிக்கும்.

பர்வீன் சுல்தானாவின் மாரு பெஹாக்கை எழுத்தில் வர்ணிக்க நினைப்பது சமுத்திரத்தை உள்ளங்கையில் அள்ளிப் பார்க்கிற முயற்சிதான். அவருடைய இசையோடு கரைந்து கரைந்து ஒன்றுமில்லாமல் போயிருந்தால் எனக்கு முக்தி கிட்டியிருக்கும். தெய்வீக இசை என்றால் எம்.எஸ் மாதிரி பர்வீன் மட்டும் தான்.

மாரு பெஹாக் முடிந்ததும் கைதட்டோடு முழு அரங்கமே ‘பவானி, பவானி’ என்று குரல் கொடுத்தது. ‘தெரியும், நீங்க என்னை பவானி பாடாம விடமாட்டீங்க. அதுக்கு முந்தி ஒரு மீரா பஜன். அதுக்கும் முந்தி ரெண்டு வார்த்தைகள். நம்ம இசை உயர்ந்தது மட்டுமில்லே. புனிதமானது. ஒரே நாடு இந்தியா. ஒரே இசை இந்திய இசை. நம்மிடையே எந்தப் பாகுபாடும் இல்லை. இந்த இசையின் மாசற்ற தன்மையை, சுத்தத்தை, இதன் இந்திய குணத்தை தலைமுறை தலைமுறையா நாம பாதுகாத்து முன்னால் எடுத்து வந்திருக்கோம். வரும் தலைமுறையும் இதைத் தொடர்ந்து செய்ய வேணும்’ பர்வீன் உருக்கமாக வேண்டுகோள் விடுக்க அரங்கமே நெகிழ்ந்தது. ஒரு அரசியல்வாதி பேசினால் போலியாகத் தெரியும் இந்தச் சொற்கள் அந்த இசையரசியின் குரலில் உண்மையும் உயிர்த்துடிப்போடும் ஒலித்தன.

மாளவ்மாண்ட் ராகத்தில் (மாள்வா மற்றும் மாண்ட் கலப்பு) மீரா பஜன். தொடர்ந்து எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த ‘மா தீ பவானி’ மிஸ்ர பைரவ் ராகத்தில் இசையையும், பக்தியையும் அற்புதமாகக் குழைத்துத் தீட்டிய இசை ஓவியம். பர்வீன் இதைப் பாடும்போது அந்த அற்புத அனுபவத்தில் தோய்ந்து நெக்குருகி எத்தனையோ முறை இருந்திருக்கிறேன். இன்று அப்படிப்பட்ட தேவகணங்களில் இன்னொன்று.

‘பர்வீன் அம்மா, மாசா மாசம் சென்னைக்கு வாங்க’ முதல் வரிசையில் ஒரு இளம்பெண் கைதட்டலுக்கு இடையே சொன்னாள். பக்கத்தில் அமர்ந்திருந்த வயலின் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், திருச்சூர் ராமச்சந்திரன், சாருமதி ராமச்சந்திரன், டி.வி.ஜி போன்ற மூத்த கர்னாடக இசைக் கலைஞர்கள் கைதட்டி அதை வழிமொழிந்தார்கள். கண்ணில் கண்ணீரோடு, ஆன்மீக அனுபவத்தில் இன்னும் மூழ்கிக் கைகூப்பியபடி மேடையில் அமர்ந்திருந்தார் பர்வீன் சுல்தானா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன