Monthly Archives: December 17, 2014, 11:31 am

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 3

(காவ்யா இலக்கியக் காலாண்டிதழ் அக்டோபர் – டிசம்பர் 2014)

இரா.முருகன் : ‘தலைமுறைகள்’ நாவலில் வரும் உண்ணாமலை ஆச்சி, திரவி இந்த பாத்திரங்கள்..

நீல.பத்மநாபன்: கூனாங்கண்ணி பாட்டா.. திரவியம் .. இந்த மாதிரி கதாபாத்திரங்கள் எல்லாம் அசல் தமிழ் தான்.. தமிழ்லே தான் பேச்சு.. பேச்சுன்னா stream of consciousness .. நனைவோடை. சிலர் கேட்டாங்க.. சார் நீங்க வேணும்னா கதாபாத்திரங்கள் பேச்சுக்கு அந்த வட்டார வழக்கைக் கொடுக்கலாம்.. ஆனா நாவலாசிரியராக நீங்க சொல்வதாக இருக்கும் இடஙக்ளிலும் ஏன் அந்த மாதிரி தமிழை கொடுக்கறீங்க? நான் சொன்னேன் – ’அது என் மொழி இல்லை. திரவியுடைய எண்ணம்.. நனவோட உத்தியிலே சித்தரிக்கறதாலே அந்த எண்ணம் பதிவாகிறது தாறுமாறாகத்தான் இருக்கும்’ … தமிழர்கள் தூய்மையாளர்கள் (puritans). அதை அங்கீகரிக்க மாட்டாங்கன்னு தெரியும் தெரிஞ்சுதான் அதை நான் எதிர்நீச்சல் மாதிரி செய்தேன்.

கமல் ஹாசன்: தற்காப்புன்னு ஒண்ணு, உத்வேகம்னு ஒண்ணு, வியாபாரம்னு ஒண்ணு.. இருக்கு. நீங்களே பிரசுரம் செய்ய வேண்டிய நிலைமை வந்தபோது அதை நீங்க அந்த மூணுலே எதுவா வச்சு பண்ணினீங்க?

நீல: உத்வேகம்தான் இவ்வளவு தூரம் பண்றாங்களே.. நம்மாலே என்ன பண்ண முடியும்னு காட்டுவோம்னு உத்வேகம்.

கமல் விளைவுகளப் பற்றிக் கவலைப் படவில்லையா?

நீல: இல்லை. நாவலோட எல்லா பிரதிகளையும் இலவசமாக, பரிசாகத்தான் வழங்கினேன். எனக்கு புத்தகம் விற்றுப் பணம் எதுவும் கிடைக்கலே இன்னிக்கும் அப்படித்தான்.. தமிழ்நாட்டுலே புத்தகம் விலை கொடுத்து யார் வாங்கறாங்க? நான் அனுப்பி வச்சவங்க தான் டெல்லியில் அதை ’வாங்குவாங்குன்னு வாங்கினாங்க’ கொஞ்சம் பேர்.. நான் தான் அவங்களுக்கு புத்தகம் அனுப்பி வச்சேன்.. ரொம்ப பிரபலமானவங்க… கணையாழி பத்திரிகையிலே அப்போ இருந்தவங்க ..

கமல் ந்கையாடியவங்களுக்கு இந்த நகைக் கதை எல்லாம் தெரியாது

நீல: உயர் ஜாதி தஞ்சாவூர் கொச்சை திருநெல்வேலி கொச்சை ஏத்துப்பாங்க.. தலைமுறைகளில் வருவது போல இப்படி ஒரு கொச்சை.. வட்டார வழக்கு தமிழ்நாடூலே இருக்கான்னு கேட்டாங்க.

கமல்:இன்னும் ஒரு குறையும் உண்டு. தமிழர்கள தூய்மை விரும்பிகள் .. puritans-னு சொன்னீங்களே.. சிலதை தாங்கிப்பாங்க.. மற்ற சிலவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டாங்க.. ஒரு நாட்டார் வழக்கை ஏத்துக்கிட்டவங்க, இரணியல் பேச்சு வழக்கான இதை ஏன் ஏத்துக்கலேன்னு ஆச்சரியமாகத் தான் இருக்கு.

நீல: கடைசியிலே கநாசு தான் தலைமுறைகள் தமிழில் பத்து சிறந்த நாவல்க்ளில் ஒண்ணுன்னு சொன்னார்..Orinet Paperback ஓரியண்ட் பேப்பர் பேக் வெளியீடாக ஆங்கிலத்தில் பத்தாயிரம் காப்பி போட்டாங்க.. கநாசு தான் மொழி பெயர்த்தார். ஜெர்மன் மொழியில் வந்தது.. இன்னும் நிறைய மொழிகளில் பிரசுரமாகி வந்தது.. இப்படி ஓஹோன்னு வந்த பிறகு மூலத் தமிழ் நாவலுக்கு இங்கேயும் பாராட்டு வந்தது. எதிர்த்தவங்களும் அதைப் பாராட்டி சொன்னாங்க..

கமல்: இந்தமாதிரி கதை தான் நான் ப.சிங்காரம் பற்றியும் கேள்விப்பட்ட்து.. அவரைப் பேட்டி காணமுடியலே. இது மாதிரி அவர் நாவலை

இரா: புயலில் ஒரு தோணியா?

கமல்: ஆமா புயலில் ஒரு தோணியை சொந்தமாகவே பிரசுரம் பண்ணி விற்க முடியாமல் பீரோவிலே கட்டுக்கட்டாக வச்சிருந்தார்னு கேள்விப்பட்டிருக்கேன்

நீல: தலைமுறைகள் 400 பக்கத்துக்கு மேலே இருந்தது. பிரசுரம் செய்யவும் முதலீடு கணிசமாத் தான் வேண்டி இருந்ததது. நான் அதில் ஒரு வரி மாற்ற மாட்டேன்னு சொல்லிட்டேன்.

கமல்: ஓ மாற்றச் சொல்லி, சுருக்கச் சொல்லி வேறே கேட்டாங்களா? உங்க காசு தானே?

(சிரிப்பு)

நீல: எனக்கு வேகம்.. பைத்தியக்காரத்தனமான வேகமாகவும் இருக்கலாம்.. நான் அந்தக் காலத்தில் , இன்றைக்கு நினக்கற அளவுக்கு நெனக்கறது இல்லே.. .. நான் என்ன சொல்ல வந்தேன்னா பள்ளிகொண்டபுரம் தொடர்பாகவும் அந்த வேகம் இருந்ததுன்னு சொல்லணும்.. (ஒரு நாவல் முடித்தவுடன்) அடுத்த நாவல் பற்றி நினைச்சா, பிரசவ வைராக்கியம் மாதிரி ’போதுமடா சாமி இனியும் ஒரு நாவல் இப்படி எழுத வேணாம்.. இப்படி கஷ்டப்படவும் வேணாம்.. சக்தி ந்மக்குக் கிடையாது’ன்னு தோணும்…

கமல்: வேலை சம்பளம் இந்த மாதிரி சிந்தனைகள்..

நீல: வேலையையும் எழுத்தையும் நான் ஒண்ணாகவே நினைக்க மாட்டேன். வேலை எழுத்து ரெண்டும் ரெண்டு இணைக்கவே முடியாது ஆபீசில் ரொம்ப பேருக்கு நான் எழுத்தாளர்னு தெரியாது. எழுத்துத் துறையிலும் மின்னுலகம் மாதிரி நாவல் வர்றதுக்கு முன்னாடி நான் எஞ்ஜினியர்னு ரொம்ப பேருக்கு தெரியாது. அப்போது தான் … இனியும் கொஞ்சம் வருஷம் ஆன பிற்பாடு, எழுத வேண்டும்னு வேகம் வந்த போது இதுக்கு முன்னாடி பண்ணாதது மாதிரி இருக்கணும் தலைமுறைகளை வேணா இமிடேட் பண்ணலாம் நான் இந்த ஊரில் தான் பிறந்தேன் நான் பிறந்து வளர்ந்த நகரத்தை நடுநாயகமக்கி நாவல் எழுத முடியுமா? அதை நான் பிறந்து வளர்ந்த சமூகத்தை தலைமுறைகளில் கையாண்ட மாதிரி, இந்த நகரத்தை நாவலில் சித்தரிக்கணும்னு எழுதியதுதான் பள்ளிகொண்டபுரம்.. என்றாலும் ஒரு இடத்திலும் நகரத்தோட பெயரை சொல்லவே இல்லை சிலபேர் கேட்டாங்க.. இங்கே இருக்கற நாயர் சமுதாயத்தினுடைய (வரலாறு, வாழ்க்கை முறை) எல்லாம் சொல்லியிருந்தால் நாவல் இன்னும் கூட நல்லா இருந்திருகுமேன்னாங்க.. அவங்க முந்தைய நாவலை எதிர்த்தவங்க கூட. நான் சொன்னேன் – ‘நான் சமூகவியலில் விற்பன்னன் இல்லே.. மரபியல் வரலாற்றாளனும் (anthropologist) இல்லை.. எனக்கு அதல்ல விஷயம்..வரலாறு சொல்வது இல்லை குறிக்கோள்.. நான் முன்னாலே எழுதியதைச் சொல்லி கிடைக்கக் கூடிய எளிய வெற்றிய விட நான் இதுவரை எழுத்தில் செய்யாத சோதனை செய்து கிடைக்கக் கூடிய தோல்வியானாலும் ஏத்துக்கறேன்..’.. அப்படித்தான் அந்த நாவல் .. பள்ளிகொண்டபுரம் எழுதினேன்.. அதிர்ஷ்டவசமாக, வாசகர் வட்டம் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அதை ஏத்துக்கிட்டாங்க.. அவங்களுக்கு நாவல் பிடிச்சிருந்தது. அவங்க கேரளத்தில் கோட்டயத்திலே இருந்தவங்க

இரா: வாசகர் வட்டம் முதல் பதிப்பாக வந்தது.. அப்புறம் காலச்சுவடு..

நீல ஆமா, காலச்சுவடு க்ளாசிக் எடிஷனா ..செம்பதிப்பு போட்டாங்க

கமல் : வாசகர் வட்டம் எப்போ வெளிவந்தது?

நீல: 1970. மணிவாசகர் பதிப்பகம் இரண்டாம் பதிப்பு போட்டாங்க.. காலச்சுவ்டு நாலாவது பதிப்பு. வாசகர் வட்டம் இப்போ இல்லே.. மூடியாச்சு .. மணிவாசகர் பதிப்புக்கு ரொம்ப வரவேற்பு இருந்தது. அதை ரஷய மொழியிலே ஒரு ரஷ்யப் பெண்மணி மொழிபெயர்த்தாங்க… . நேஷன்ல் புக் டிரஸ்ட்லே எல்லா மொழிகளிலும் போட்டாங்க.. யாத்ரா கா அந்த் இந்தியில் வெளிவந்த மொழிபெயர்ப்பின் தலைப்பு.. மலையாளத்திலே ஹிந்தியிலே இருந்து மொழிபெயர்ப்பு. மலையாளத்திலே ரெண்டு மூணு பதிப்பு வந்திருக்கு.

இரா: இந்தியில் இருந்து மலையாளமா?

நீல இல்லே இங்கிலீஷ்லே இருந்து மலையாளம் போனது.

இரா அதைப் படிச்சுட்டு தானே கிருஷ்ண வாரியர் சிறப்பித்துச் சொன்னது.

நீல ஆங்கிலத்தில் CLS சி எல் எஸ் போட்டாங்க CLS தலைமை நிர்வாகியாக பாக்யமுத்து இருந்தார்…அதுக்கு எழுதின முன்னுரையில் தான் வாரியர்..நீங்க சொன்னதை பிரமாதமா சொல்லியிருக்கார் மத்தவங்க எல்லாம் திருவனந்தபுரத்தை நாவல்லே கையாண்டிருக்காங்க.. தகழி, சி.வி.ராமன் பிள்ளை எல்லோரும் .. சாதாரணமா சென்னை நாவல்னா மயிலாப்பூர்லேருந்து பஸ் ஏறிப் போனார்னு பெயரைக் குறிப்பிட்டு எழுதினால் தீர்ந்தது .. பள்ளிகொண்டபுரத்தில் வருவது நான் பிறந்து வளர்ந்து இருக்கற திருவனந்தபுரம். என்னோடது.. பத்மநாப சாமி. கோவில் கொண்ட, எனக்கு தெரிந்த பலரும் வாழும் இடம். எவ்வளவு தூரம் நினைவில் ஊறி இருக்கு என்றால், சின்ன வயசில் சின்னச் சந்து பார்த்தா.. இது எங்கே போறதுன்னு தெரிஞுச்க்க அது வழியா போய்ட்டே இருப்பேன்.. திரும்ப வழி தெரியாம அவஸ்தை பட்டிருக்கேன்.. அப்படி மனசிலே படிந்த இடமாக இது நாவலில் வந்தது.

கமல்: முருகன், நீங்க தான் எனக்குக் கொடுத்தீங்களான்னு நினைவு இல்லை… ரொம்பப் பழைய புத்தகம்..அறுபத்து மூவர் உற்சவத்துக்குப் போன கதை.. நொண்டிச் சிந்து.. எழுதினவங்க சென்னையப் பற்றி சொல்லணும்னு இல்லே. அறுபத்து மூவருக்கு போன கதையை சொல்லும்போது அந்தக் காலத்து தெரு இது, இடம் இதுன்னு பெயர் சொல்லிக்கிட்டே போறார்.. அந்தக் காலத்துச் சென்னையின் பழைய உருவைப் பற்றி அந்த பதிவு தான் இருக்கு…

நீல:அசோகமித்திரன் பழைய சென்னை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்காரே..

இரா ஆமா, அப்புறம் ஹைகோர்ட் சிந்துன்னு ஒரு புத்தகம் கூட இருக்கு.

(தொடரும்)

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 2

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 2

(காவ்யா இலக்கியக் காலாண்டிதழ் அக்டோபர் – டிசம்பர் 2014)

கமல்:நாடகம்னு சொல்லும்போது சுயநலமாக ஒரு கேள்வி.. ஷண்முகம் அண்ணாச்சி நாடகங்கள்லே என்னெல்லாம் பார்த்திருக்கீங்க? நான் அந்தக் குழுவிலே இருந்திருக்கேன்

நீல:அப்படியா? ஔவையார், மனிதன்.. எல்லாம் பார்த்திருக்கேன்..நீங்க அதிலே எல்லாம் நடிச்சிருக்கீங்களா?

கமல்: ஆமா, பஸ் டெர்மினஸுக்கு வர்றதுக்கு முன்னாடி, கடைசியாக ஒரு ஸ்டேஜ். பத்து பைசா டிக்கெட் வாங்கி எப்படியோ ஏறிட்டேன் ..

நீல:களத்தூர் கண்ணம்மா பார்த்திருக்கேன்

கமல்:அதுக்கு அப்புறம் இடைப்பட்ட காலத்திலே.. ரொம்ப பெரிய அனுபவம்.. ஷண்முகம் அண்ணாச்சிக்கு இலக்கிய ஆர்வ்ம் அதிகம். கேரளாவுக்கு வந்து நாடகம் போடறதுன்னா ரொம்ப கவனமாக, இன்னொரு முறை ஒத்திகை பார்க்கணும்பாரு.. ’நம்ம ஊர் மாதிரி இல்லேப்பா ஜாக்கிரதையா இருக்கணும்’னு சொல்வார்..

நீல:மனிதன் அன்னிக்கு அதிகமா பேசப்பட்ட நாடகம்..அதில் ஒரு வசனம் ’மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்’. அது ரொம்ப பிரபலம். அதைக்கூட சிலர் கேலி பண்ணினாங்க. நாடகத்துக்குக் கனமான கருப்பொருள். உங்களுக்கு நினைவு இருக்கலாம். மலையாளக் கதை, முன்ஷி பரமு பிள்ளை எழுதியது. அதைத் தமிழ்லே நாடகமா போட்டாங்க.

கமல்: ஆமா, விருமாண்டி படத்திலே கூட அந்த ‘மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்’ பாதிப்பு இருக்கு.எழுத்தாளர்களுக்கு எங்கெங்கோ இருந்து கதைக்கரு கிடைக்கும்.ஆனா வழக்கமாக எழுத்தாளர்கள் நாடகம் பற்றிப் பெரியதாகச் சொல்வது அபூர்வம்.

நீல:உண்மையிலேயே நான் அப்படித்தான் வந்தவன். இஞ்சினீயரிங் காலேஜ்லே படிக்கும்போது கூட எஞ்சினியர்னு ஒரு நாடகம் எழுதினேன். அப்போ நான் எஞ்சினியர் ஆகலே. படிச்சுட்டுத்தான் இருந்தேன். பிஎஸ்ஸி படிச்சுட்டுத்தான் இஞ்சினியரிங் படிக்க வந்தேன். வெகேஷன்லே பரீட்சை எழுதி பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலை கிடைச்சது. விடுமுறைக் காலத்தில் கிடைத்த வேலை. திருச்சூர்லே போட்டாங்க. பொதுப் பணித்துறை. அங்கே விண்ணப்பங்கள் அதிகம் வரும். அந்த இடத்திலே ரோடு போடறாங்க.. வெட்டறாங்க.. எனக்கு அந்த இடம் வேணும்.. இப்படி.வரும் விண்ணப்பங்களைப் படிச்சுட்டு பதில் எழுதணும். மூணு மாசம் தான் வேலை பார்த்தேன். திருச்சூர் பூரம் திருவிழா பார்த்துட்டு திரும்ப வந்துட்டேன். அந்தக் கருவை வச்சுத்தான் எஞ்சினியர்னு நாடகமா எழுதினேன். தமிழ் நாடகம்.

இரா:அதுதான் உங்க முதல் படைப்பா?

நீல:இல்லை. அது முதல் நாடகம். அதுக்கு முந்தி சிறுகதைகள் எழுதியிருக்கேன். உதயதாரகை நாவல் முதலாவதாக எழுதினேன். பதில் இல்லைன்னு ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். நாடகம் அப்போது எழுதி,, இங்கே நடிச்சு, அதை டேப் பண்ணி .. நான் தான் எழுதி இயக்கினேன். சின்ன வேஷத்திலும் நடிச்சேன். ஒலிப்பதிவு செஞ்சு அதை தேசிய அளவில் கல்லூரிகளுக்கான நாடகப் போட்டிக்கு அனுப்பினாங்க.. அங்கே சென்னைப் பல்கலைக் கழக நாடகம் வந்திருக்கு.. உஸ்மானியா பல்கலைக் கழகக் கல்லூரியில் இருந்தும் வந்திருந்தது.. ஆனால், இதுக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது..

கமல்: என்ன ரோல் பண்ணினீங்க நாடக்த்துலே?

நீல: என்ஞினியராகத் தான் நடிச்சேன். அந்த நாடகத்தையும், பிற்பாடு நான் எழுதின மற்ற நாடகங்களையும் சேர்த்து தனிமரம்-னு புத்தகம் வந்திருக்கு. கடந்த புத்தக விழாவில் வந்தது

கமல்: எத்தனை நாடகம் எழுதியிருக்கீங்க?

நீல: ஒரு எட்டு நாடகம் எழுதியிருக்கேன். புத்தகமா வந்தபோது அதை வானதி பதிப்பகம் போட்டாங்க. சிவசு தான் முன்னுரை எழுதினார்.

கமல், இது எனக்குப் புதிய செய்தி

நீல: நாடகாந்தம் கவித்வமனு சொல்வாங்க. நாடகத்திலே எல்லாமே வந்துடும். கவிதையானாலும் சரி. மற்ற இலக்கிய வடிவங்களானாலும் சரி, எல்லாமே வருது..அப்புறமா நாடகத்தை நான் விடக் காரணம் என்னன்னு கேட்டால், நாடகம் ஒரு குழு முயற்சி. எழுத்தாளன் தனிக்காட்டு ராஜா. எழுத நேரம் இல்லே ..கிடைக்கும் போது நாம் எழுதறோம் ஏகாந்தம் ..தனிமை அமையும் போது நாம் நம் பாட்டுக்கு கற்பனை உலகத்தில் இருந்து எழுதிக் கொண்டு போறோம்..ஆனால், காட்சியுருவில் நாடகமாக நடத்திக் காட்ட ஆட்களைத் தேடணும்.. .. எழுத எண்ணங்கள் வரணும் சொல்லிக் கொடுத்து நடத்திப் போகத் திறமை வேணும் என அலைவரிசையில் அவர்கள் எண்ணங்களும் இருக்கணும்..அதுக்கு creative energy.. அதிகம் வேண்டும்

கமல்: ரொம்பவே ஜனநாயகம் ஆன நடைமுறை நாடகம் நடத்தறது

நீல: ஆமா, எனக்கு அந்த organizing capacity இல்லே. அந்த அளவுக்கு creative energy-யும் இல்லே. என் படிப்பு.. எழுத்து இது ரெண்டும் ரெண்டாகத் தான் இருக்கு. ..தீவிர இலக்கியம் தான் படிப்பேன், வேலையும் தனியானது.தான். சேர்த்துச் செய்ய முடியாது.. அது மட்டும் இல்லே.. நாடக வடிவங்கள்.. dramatic forms-னு சொல்வாங்க. நாவல் எழுதும்போது அதுலே நான் அந்த வடிவங்களைக் கையாள முடிஞ்சுது. கவித்துவம் செய்ய முடிஞ்சுது. இலக்கியத்தில் எல்லாமே இணைஞ்சு தான் இருக்கு.. கதை, கவிதை, நாடகம் பேரு நாம தான் கொடுக்கறோம் .. எல்லாமே இலக்கியத்திலே வகையறா. மொத்தத்திலே இதை எல்லாம் கையாள நாவலும் சிறுகதையும் உதவியாக இருந்ததாலே நான் நாவலும் சிறுகதையும் கவிதையும் எழுதினேன். நாடகத்தை அதிகமாக எழுதலே.

இரா: ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு ஆத்மா உண்டு என்பது உண்மையானால், திருவனந்தபுரம் நகருக்கும் ஒரு ஆத்மா உண்டு. அதை எந்த மலையாள எழுத்தாளரும் இதுவரை தரிசிக்கவும் இல்லை; மற்ற்வர்கள் அறியச் சொல்லியதும் இல்லை. அதைச் செய்த ஒரே எழுத்தாள்ர், தமிழ் எழுத்தாளராகிய நீல பத்மநாபன் என்று ஒரு மலையாள் விமர்சகர் சொன்னார். அந்த அளவுக்கு உங்கள் கதைகளில் பௌதிக ரூபமாகவும் மன வெளியில் வந்து அதன் மூலம் வெளிப்படுவதாகவும் இந்த அனந்தை நகரம் உள்ளது. உங்களுக்கும் இந்த நகரத்துக்கும் உள்ள உறவு எப்படியானது? அது love-hate relationship அல்லது pure hate அல்லது ‘hate it but still want to be here– உறவா?

நீல: பள்ளிகொண்டபுரம் நாவலைப் பற்றி சொல்றதுக்கு முன்னாடி நான் தலைமுறைகள் நாவல் பற்றிச் சொல்லணும்

இரா: அது ரொம்ப முன்னால், உங்களோட இருபத்தெட்டாவது வ்யதில் எழுதின நாவல் இல்லையா?

கமல்: இருபத்தெட்டு வயசிலேயா?

நீல: ஆமா. நான் எதையும் எழுதும்போது இதைப் பிறர் யாரும் செய்யாது இருந்திருக்கணும்கறதுலே அக்கறை எடுத்துப்பேன்..ஏன்’னா நிறைய புத்தகங்கள் இருக்கு நிறைய எழுத்தாளர்கள் இருக்காங்க. எழுத்திலே நான் செய்யறதாக இருந்தால், என்னளவுக்கு இது புதுமையா இருக்கணும் .. என்னளவுக்கு யாரும் எழுதாத பாணியிலே அந்த நாவல் அமைஞ்சிருக்கணும்னு எப்பவுமே நான் நினைப்பேன்..அப்படித்தான் நான் தலைமுறைகள் எழுதினேன். நான் பிறந்து வளர்ந்த சமூகம். அவங்களோட ஆசார அனுஷ்டானங்கள்..:பேச்சு மொழி… .இரணிய்ல்லே செட்டிமார்கள் எப்படிப் பேசுவாங்கன்னு யாருக்கும் தெரியாது. மலையாளமான்னு பலரும் கேட்பாங்க.. ஆனா தமிழ்தான். அவ்ங்க காவேரிப்பட்டணத்திலே இருந்து வந்த கதை எல்லாம் பாட்டி சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும் ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தாய்த் தமிழன்னு சொல்லக் கூடியவங்க யாருக்கும் தெரியாது ஏன்னா இரணியல் வந்து அந்தக் காலத்திலே திருவாங்கூர்னு சொல்வாங்க இப்ப உள்ள கேரளத்துலே சேர்ந்து கிட்ந்தது. மாநில மறுசீரமைப்பு .. state reorganization வந்தபோது ஆரல்வாய்மொழியில் இருந்த செக்போஸ்டை எடுத்து களியக்காவிளையிலே வச்சாங்க. நீங்கள்ளாம் தமிழ்நாடு, இங்கே கேரளம்னு சொல்லி அப்படி வச்சாங்க முன்னாடியெல்லாம் இரணியல்லே உள்ளவங்க, நாகர்கோவில்லே இருந்தவங்க எல்லாம் தலைநகரம் என்றால் திருவனந்தபுரம் தான் வருவாங்க.. சென்னைக்கு போக மாட்டாங்க.. அப்படி இருந்ததாலே ஓணப் பண்டிகை கொண்டாடறது இருந்தது, மலையாளம் பேச்சு மொழி .. மலையாள கலாசாரம் அவ்ங்க கிட்டே இருந்தது. அடிப்படையில் அவங்க தமிழ் தான் அதை நான் தலைமுறைகள் நாவலில் கையாண்டிருந்தேன். அதனாலே முதல்லே அதுக்கு எதிர்ப்பு இருந்தது. ஜேசுதாசன் நாவலுக்கு ஒரு அருமையான முன்னுரை எழுதியிருந்தார் பிரமாதமா இருக்குன்னு பாராட்டினார்.. நகுலன் நல்ல விதமாகச் சொல்லியிருந்தார். ஆனா, நாவலை வெளியிட பதிப்பாளரோ, பத்திரிகையோ கிடைக்கலே. நான் என் மனைவி நகையை அடகு வச்சு திருநெல்வேலியில் – நாகர்கோவில்லே கூட அன்னிக்கு நல்ல பிரஸ் கெடயாது.. – கொண்டு போய் சொந்தமா போட்டேன்.. அந்த தலைமுறைகள் நாவல் தான் நிறையப் பதிப்புகள் வந்தது ரஷ்ய மொழியில் வந்தது

அற்ப விஷயம்-30

அற்ப விஷயம்-30 இரா.முருகன்
நரகல் பணியாளர்கள்

மும்முரமாக வேலையில் முழுகி முத்தெடுத்துக் கொண்டிருக்கும்போது செல்ஃபோன் சிணுங்கும். அல்லது முக்கியமான ஆபீஸ் மீட்டிங்கில் அனல் பறக்க விவாதித்துக் கொண்டிருக்கும்போது சத்தமில்லாமல் அலைபேசி அலைபாய்ந்து துடிக்கும். யாரோ அவசரமாகத் தொலை பேச அழைக்கிறார்கள். டென்ஷனோடு ஃபோனை எடுத்து ஹலோ சொன்னால் ஒரு பெண்குரல் வணக்கம் சொல்லும். ‘சார், ஏபிசிடி பேங்கிலிருந்து பேசறோம். பிளாட்டினம் கிரடிட் கார்ட் எந்த வித சார்ஜும் இல்லாமல் கொடுக்கறோம். நீங்களும் வாங்கிக்குங்களேன்’.

எனக்குத் தெரிந்து பலபேர் இப்படியான ஒரு செல்போன் அழைப்பு எதிர்பார்க்காத சூழ்நிலையில் வந்தபோது எதிர்கொண்ட விதத்தை இங்கே எழுத முடியாது., கார் ஜன்னல் வழியாகக் கையை நீட்டி உள்ளே தொட்டுப் பிச்சைக்காகக் கையேந்துகிற பெண்ணைத் திட்டுகிற கனவான்களின் மொழி அதைவிட மேன்மைப்பட்டதாக இருக்கும். புழுத்த நாயும் கேட்காத வசவுகளின் பெருமழை.

இந்த அவமானத்தை எப்படியோ விழுங்கி விட்டு எதிர்முனையில் இருந்து சகஜமாக அடுத்த விசாரிப்பு – ‘கிரடிட் கார்ட் வேணாம்னா போகுது சார். கார் லோன், வீடு கட்ட லோன், ஹோம் தியேட்டர் வாங்க சுலப தவணையில் வங்கிக் கடன். வாங்கிக்குங்களேன் சார்’. இந்தப் பக்கம் அதற்குள் தொலைபேசி மேஜை மேல் விட்டெறியப்படாமல் இருந்தால் இன்னொரு அசிங்கமான திட்டு எழுந்து சூழலை அசுத்தப்படுத்தும். செத்து விடலாமா என்று வாழ்க்கையின் எல்லைக்குப் போகவைக்கும் சுடுசொற்கள். ஆனால் எதிர்முனைப் பெண் அடுத்து வேறு யாரோ முகம் தெரியாத இன்னொருவருக்கு செல் வணக்கம் சொல்லத் தயாராகியிருப்பாள்.

மொபைல் தொலைபேசி எண்களின் பட்டியலை வைத்துக் கொண்டு இப்படி வலிய செல்போனில் அழைத்து கிரடிட் அட்டையும் கடனும் விற்பதற்கு மார்க்கெட்டிங் பெயர் ‘கோல்ட் கால்’, அதாவது குளிர்ந்த அழைப்பு. தினசரி பொழுது விடிந்து பொழுது போவதற்குள் எத்தனையோ பேரின் அமில வார்த்தைகள் அபிஷேகம் செய்ய, மனதுக்குள் வெதும்பித் திரும்பத் திரும்ப அந்த வெப்ப அனுபவங்களுக்குத் தயாராகிறது இவர்கள் அனுபவிக்கும் ஐம்பது சதவிகித துன்பம் மட்டும் தான். மீதி? இப்படிக் கூவி அழைத்தவர்களில் குறிப்பிட்ட ஒரு சதவிகிதம் பேராவது இவர்கள் பேச்சைக் கேட்டு கார்ட் வாங்க வேண்டும். அப்போதுதான் குளிர்ந்த அழைப்பு ஊழியர்கள் வீட்டில் அடுத்த மாதம் அடுப்பு எரியும். விற்காதவர்கள் வேலை இழக்கவும் நேரிடலாம். அவர்கள் குரலில் ஏறிய படபடப்பு இந்த பயத்தால் தான்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பதெல்லாம் ரொம்ப சரி. பசித்த வயிற்றுக்காக இப்படி சுயமரியாதையை முழுக்கக் களைந்து நக்னமாக நடந்து பேசிப் பிழைப்பது? ஆங்கிலத்தில் ‘ஷிட் ஒர்க்’ என்று முகம் சுளிக்க வைக்கும் பெயர். ‘கிரடிட் கார்ட் வேணுமா’ என்று விசாரிப்பது மட்டும் நரகல் வேலை இல்லை. வீடு வீடாக ஏறி இறங்கி சகாய விலைக்கு சவுக்காரம், அப்பளம், வடகம், மூங்கில் குருத்து ஊறுகாய் விற்பது இதெல்லாம் கூட தன்மானத்தை ரணப்படுத்திக் கொண்டு ஈடுபட்டு அற்ப வருமானம் தேட வேண்டிய தொழில் முறைகள். நாலு வீதி சந்திப்பு ட்ராபிக் சிக்னல் சிவப்பிலிருந்து பச்சையாக நிறம் மாற எதிர்பார்த்து நிற்கும் கார்கள், ஸ்கூட்டர்களுக்கு நடுவே பாய்ந்து ஓடி பொம்மை போட்ட பெரிய எழுத்து ஆங்கிலப் புத்தகம் விற்கும் சின்னப் பெண் செய்வது? ஷிட் ஒர்க்.

லண்டன் பாதாள ரயில் ஸ்டேஷன் படியேறி வெளியே வந்ததும் கண்டது ஒரு கிழக்கு ஐரோப்பிய நாட்டு அகதியை. ‘குறைந்த செலவில் தங்கும் இடமும் காலை சாப்பாடும் பத்து பவுண்ட் கட்டணத்தில்’ என்று எழுதிய அட்டையைப் பிடித்துக் கொண்டு நாள் முழுக்க பனியில் நனைந்தபடி நிற்கிறவர். விசாரித்தபோது அவர் சொன்னது மொழிபெயர்க்கத் தேவையே இல்லாமல் புரிந்தது. அதுவும் மலவேலை. செர்பியாவில் முதுகலைப் பட்டம் பெற்று, இனக் கலவரத்தில் எல்லாம் இழந்து பிரான்சில் தஞ்சம் புகுந்த அவருடைய மகள் விடுதிகளில் கழிப்பறை அலம்பிக் கொண்டிருக்கிறதாகப் பக்கத்தில் மதுக்கடை விளம்பரத்தோடு நின்ற அவர் சகபாடி ஓட்டை ஆங்கிலத்தில் சொன்னான். சென்னை ரங்கநாதன் தெருவில் கையில், தலையில், தோளில் அந்துருண்டை அட்டைகள் நூலாம்படையாகத் தொங்கக் கூவி விற்றபடி நடந்த ஒருவனைக் காவலர் கழுத்தில் கை வைத்துத் தள்ளியபோது அவன் குரலில் ஒரு குடும்பமே அழுதது. அவன் தன்னோடு சுமந்து எடுத்துப் போனது அந்தக் குடும்பத்தை. இன்னொரு நரக வாழ்க்கை. நரகல் பணி.

நாலு மாடி ஏறி வந்து ஆபீஸ் வாசலில் கதர் சட்டையும் வேட்டியுமாக ஒரு பெரியவர் பொறுமையாக நின்றார். என்ன வேணும் என்று விசாரித்தபோது கையில் இருந்த கதர்ப்பையில் இருந்து பெரிய புத்தகம் ஒன்றை எடுத்து நீட்டினார். சத்திய சோதனை. மகாத்மா காந்தியின் சுயசரிதம். ‘நூறு ரூபா புத்தகம் உங்களுக்காக சகாய விலையாக ஐம்பது ரூபாய்க்கு’. அவரை முடிக்க விடாமல் வாயிற்காப்பாளர் கையைப் பிடித்துத் தரதரவென்று வாசலுக்கே திரும்ப இழுத்துப் போய்விட்டார்.

நரகல் வேலை இதெல்லாம் என்றால், மனிதக் கழிவைத் தலையில் சுமந்து எடுத்துப் போய் தலைமுறை தலைமுறையாக ஒரு இனமே இங்கே வாழவேண்டி இருந்ததே? இன்னும் இருக்கிறதே. என்ன கிடைத்தது அவர்களுக்கு? மலத்தைச் சுமந்தால் போதாதாம். திண்ணியத்தில் அதைத் தின்னவும் வைத்து விட்டார்கள்.

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 3


டைப்ரைட்டர் சத்தம் நின்றது. இரண்டு அத்தியாயம் முடிந்த சந்தோஷத்தோடு வைத்தாஸ் எழுந்தான்.

அவனுடைய எட்டாவது ஆங்கில நாவல் கர்கடக மழையில் சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு ஆரம்பித்திருக்கிறது.

கர்கடகம். மெல்ல சொல்லிப் பார்த்தான். சரியாக வருகிறது.

நந்தினி, எழுந்திருக்கலியா?

கட்டில் பக்கம் போய்க் குனிந்தான். உஷ்ணமேறிய கரங்கள் போர்வைக்குள்ளிருந்து நீண்டு கழுத்தைச் சுற்றி அணைத்து, வலுவாக இழுத்தன.

கர்கடகம் மட்டும் போதாது. மற்றதும் வேணும். மறுபடியும்.

நந்தினி சிணுங்கினாள்.

ஞாயிற்றுக்கிழமைக் காலை போகத்தோடு விடிகிறது.

நான் எம்..எம்பிரா..

வைத்தாஸ் வார்த்தை கிடைக்காமல் தடுமாறினான்.

எம்பிராந்திரி

ப்ரா பிராந்தா

விஷமமாகப் பார்த்தபடி அவன் உதட்டில் கடித்தாள் நந்தினி.

நீண்ட, சோகையான வெளுப்பு படர்ந்த கைகள் அவனுடைய கருத்த காது மடலை வருடி நகம் பதித்தன.

எம்பிராந்திரி ரெண்டாவது அத்தியாயத்தில் வரட்டும். படகுத் துறையில் ஆரம்பிச்சா என்ன?

அவள் மார்பை அள்ளியபடி கேட்டான். பதிலை எதிர்பார்க்கிற கேள்வி இல்லை.

அஞ்சு அஞ்சு அத்தியாயம் முடிச்சு அனுப்பிட்டா தமிழிலேயும் மலையாளத்திலேயும் மொழி மாற்ற ஸ்தூல சரீரப் பெண்கள் தயாரா இருக்காங்க.

அவன் மூக்கில் குத்தினாள் நந்தினி. மெலிந்த தேகம் காதலுக்கு உகந்தது. காமத்துக்கில்லை என்று வைத்தாஸின் மனம் சொல்ல அதைச் சபித்தான்.

நந்தினி திரும்ப அவனை விஷமமாகப் பார்த்தாள்.

Why don’t you hand it over in person and return after Shrama parikaram?

(நீயே நேரே கொண்டு போய்க் கொடுத்திட்டு சிரம பரிகாரம் பண்ணிட்டு வாயேன்).

சிரம பரிகாரம். அடுத்த அத்தியாயத்தில் அல்லது தொடர்ந்து வருவதில் கலவி முயக்கத்தைச் சொல்லும் போது வைத்தாஸ் உபயோகிப்பான்.

வேணாம். எனக்கு இன்னொரு ஜன்மத்துக்கு பரிகாரம் பண்ணிக்க இது போதும் நந்தினி.

ஊர்ந்த கையை விலக்கினாள்.

அடுத்த தடவை அங்கே போறபோது ஹவுஸ்போட் வாடகைக்கு எடுத்து காயல்லே மிதந்த படிக்கே, ஓகே டா?

கண் சிமிட்டினாள்.

எல்லாம் முடிந்து சுத்தம் செஞ்சுக்கறது காயல்லே சுலபமில்லியோ. அப்படியே படகுக்கு வெளியே கையை விட்டு அள்ளி தண்ணி எடுத்து இப்படி

டெவில்.. அங்கே இருந்து கையை எடுக்கச் சொன்னேனே.
கூச்சலாகச் சொன்னாள். ஆனாலும் அந்தக் கையை விடுவிக்கவில்லை. இன்னொரு கையும் துணைக்கு வந்தது.

பாதகமில்லை. எல்லா பாதகமும் கொண்டும் கொடுத்தும் தொடரட்டும்.எல்லாமே வேண்டித்தான் இருக்கிறது.

முதல்லே அவன் பெயரை சேஞ்ச் பண்ணு. நீயும் வைத்தாஸ், அவனும் வைத்தாஸ். அப்படி இருக்க முடியாது,

வெற்று முதுகில் தட்டிச் சொன்னாள் நந்தினி.

எப்படிச் சொல்றே?

நேத்து நீ தூங்கின பிறகு வந்திருந்தான் அவன். மழை வாசனையோடு காயல்லே ரமித்தபடி நாங்க சந்தோஷமா இருந்தோம். அவன் போன பிற்பாடு கூட அந்த ஈர வாசனை கூட இருந்தது. காயல்.

நந்தினி கண் மூடிக் கொண்டு சொன்னாள்.

அவளோடு பேச அவனுடைய நாவலிலிருந்து சகலரும் இறங்கி வந்து விடுகிறார்கள். முடித்து, புத்தகம் வெளியிட்டு, நாலைந்து பதிப்பு போன நாவல் என்றால் பரவாயில்லை. அவர்கள் முடிந்த காலத்துக்குத் திரும்பியே ஆக வேண்டும். ஆனால் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் பாத்திரங்கள் இப்படி எல்லாத் திசைக்கும் வழுக்கி ஓடுவது எவ்வளவு தூரம் மேற்கொண்டு எழுதுவதைப் பாதிக்கும்?

வைத்தாஸுக்குத் தெரியவில்லை.

காயல். நல்லா இருக்கு இல்லே சொல்றதுக்கு?

நந்தினி கேட்டாள்.

இங்கிலீஷிலும் அப்படியே வச்சிருக்கேன். இதைக் கேளு.

எழுதியதை நினைவில் இருந்து சொல்ல ஆரம்பித்தான் வைத்தாஸ்.

ஏதாவது பேசாவிட்டால் காயல் காவு கொள்ளும் என்று பயந்தது போல் வெற்று வார்த்தைகளைப் பரிமாறியபடி நிற்கிறார்கள். வாய் ஓயாது பேசுகிறவர்கள் மழைநாளில் குரல் சலித்து ஓய்ந்த கணத்தைக் கணக்காக்கி, வந்த அலையைச் சாக்காக, போன அலையைச் சாட்சியாகக் கொண்டு தலை குப்புறக் கவிழ்த்துக் காலம் உறைந்த ஆழத்தில் அமிழ்த்தி உயிர் பறிக்கும் காயலை அவர்கள் அறிவார்கள். எல்லோரும் அறிவார்கள்.

கடவுளே. இது என்ன பனிக் கட்டியிலே பொம்மை பண்ற மாதிரி வெற்று வார்த்தையாப் பிசைஞ்சு நிறுத்தி வச்சிருக்கே?

நந்தினி சிரித்தாள்.

வைத்தாஸ் அவள் உதட்டில் விரலால் நீவினான்.

இந்த வெர்ஷன் தமிழிலே மொழிபெயர்க்கறதுக்குன்னே தயாராக்கினது. வார்த்தை விளையாட்டை அங்கே அதிகமா ரசிக்கறாங்கன்னு என் பப்ளிஷிங் ஏஜன்சி சொல்றாங்க. to threaten. மிரட்டினாத் தான் எழுத்தாம்.

நரகத்துக்குப் போகச் சொல்லு என்றாள் நந்தினி.

படகுத்துறையை முதல் அத்தியாயமாக வைத்தால் என்ன. காவு கொள்ளும் காவலில் தொடங்கி இன்னொரு ஈடு டைப் செஞ்சிடலாம்.

வைத்தாஸுக்கு மின்னலாக யோசனை வந்து போனது.

படகுத்துறையும் மற்றதுமெல்லாம் மழையில் உறைந்து நிற்கட்டும். இப்போது நந்தினியோடு கலப்பது மட்டும் போதுமானது

அவன் நக்னமாக எழுந்து நடந்து அலமாரியைத் திறந்தான்.

நக்ன யோகி மாதிரி இருக்கேடா.

நந்தினி குரல் பின்னால் தொடர்ந்தது.

திரும்பிப் பார்த்து, நிறைய ஒத்திகை பார்த்த குரலில் சொன்னான்.

யோகம் ஒரு மன நிலை. போகம் இன்னொரு மன நிலை. யோகத்துக்குள் போகம் உணர்ச்சிப் பெருக்கு மேவுதலால் அதீதமானது. போகத்துக்குள் யோகம் பெரும் ஞானிகளுக்கு வாய்க்கலாம். என் கதாபாத்திரங்களுக்கு அது சித்தியாகும். எனக்கு இல்லை.

நாலு மைக், ஆட்டோகிராப் வாங்க ரெண்டு பொண்ணுங்க. அப்போ உளறு.

இப்போ?

உறையை எடுத்தபடி விசாரித்தான்.

தனியா வாடா.

நந்தினி கண்டிப்பாகச் சொன்னாள். எடுத்த உறையைத் தலையணைக்குக் கீழே வைத்தபடி கட்டில் ஓரமாக உட்கார்ந்தான். அவசரமாகப் புரண்டு அவன் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள் அவள்.

வேணாம். ரூம் சர்வீஸ் காபி கொண்டு வருவாங்க.

வைத்தாஸ் குரல் அவள் உச்சந்தலையில் முத்தமாக ஒலி இதழ் பிரிந்து வழிந்தது.

இப்போ தானே ஃபோன் செஞ்சேன். இன்னும் பதினைந்து நிமிஷம் ஆகும். அதுக்குள்ளே நீ ராகம் தானம் பல்லவி முடிச்சுடலாம்.
நந்தினி அவனைப் பார்த்துத் திரும்பிச் சிரித்தபடி ராகம் இழுத்தாள்.

காபி வர வரைக்கும் பாட்டு போகணுமா இல்லியா?

அதுக்குள்ளே முடியலேன்னா?

வாடா.

நந்தினி அவனை மேலே இழுத்துக் கவிந்து கொண்ட போது எம்பிராந்தரி வீட்டு வாசலில் இருந்து வைத்தாஸும் சாமுவும் வீட்டு முன்னறைக்கு வந்து உட்கார்ந்தார்கள்.

பின் அலை ஆகஸ்ட் 28 1963 புதன்கிழமை
——————————————————————-

உள்ளே போகலாம் என்றான் சாமு. போய்த் தான் ஆக வேண்டுமா என்று வைத்தாஸுக்குத் தெரியவில்லை.

இது என்ன, சாமுவா வற்புறுத்தி குடைக் காம்பால் குத்தித் தள்ளி அழைத்துப் போவது? அவனா, இந்த மனையில் போய் பழைய கதை கிடைக்குமா பார், இந்தத் தரவாட்டில் அம்பலப்புழையும் மங்கலாபுரமும் சம்பந்தம் தேடிக் கிடைத்தவர்கள் உண்டா என்று பார் என்று விதித்தது?

ஊரும் மண்ணும் வைத்தாஸோடு ஒட்டுவதற்கு முன், இந்தப் பாவப்பட்ட சாமு எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்டு விட்டான்.

சாமுவின் மூன்றாம் கரம் போல கருத்து நீண்ட குடை மழைத் தண்ணீர் சொட்டச் சொட்ட அவன் தோளில் தொற்றியபடி எங்கே போனாலும் கூட வந்தது. அவன் குடையைப் பிடித்து, அந்தக் கூரைக்குள் வைத்தாஸையும் கூட்டி வைத்தபடி, இரண்டு பேருக்கும் தலை நனையாமல் நடக்க யத்தனித்த முயற்சிகள் இதுவரை தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன.

இந்த நடை முடிவதற்குள்ளோ மழைக்காலம் ஒரு முடிவுக்கு வருவதற்குள்ளோ அது நடைமுறை சாத்தியமாகலாம்.

அதை எதிர்பார்த்து, கை இடுக்கில் அந்தக் குடை புகுந்து உட்கார்வது வைத்தாஸுக்கு ஒவ்வாதது. குடைக்கு ஒரு ராஜ கம்பீரம் உண்டு. அது பொத்தல் குடையாக இருந்தாலும், மானியம் இழந்த ராஜா அந்த கெத்து உண்டு. கட்கத்தில் இடுக்கிய குடை சாமான்யமாகிப் போகும்.

ஒரு கட்டன் காப்பி கிடைக்குமானால்.

வைத்தாஸ் ஒரு கார்வை கொடுத்து இழுக்க, அவனுக்குள் மலையாளத் தன்மை பரிபூர்ணமாக வந்து இறங்கியது போல தோணல். இந்த விசாரிப்பு, நீட்டி நீட்டி வேகம் குறையாமல் பேசுவது, எங்கேயும் குறிப்பாகப் பதியாமல் எல்லா இடத்திலும் ஒரு வினாடி நட்டுப் போகும் பார்வை இதெல்லாம் வந்து கொண்டிருக்கின்றன.

எனக்கெதற்கு இது? எந்தப் பிறவியில் நான் இங்கே பிறந்து இதெல்லாம் மிச்ச சொச்சமாக வருகிறது? வைத்தாஸுக்குப் புரியவில்லை.

என்றாலும், அவனைச் செலுத்துகிற பலமான நினைவுகளுக்கு சொந்தமானவள் இந்தப் பிரதேசத்துப் பெண். சின்ன வயசுக் கிழவி அவள்.

குஞ்ஞம்மிணி.

(தொடரும்)

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 1

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 1

(காவ்யா இலக்கியக் காலாண்டிதழ் அக்டோபர் – டிசம்பர் 2014)

இரா.முருகன் குறிப்பு
——————-
பிரபலமானவர்களோடு பிரயாணம் போவதில் கொஞ்சம் கஷ்டம் உண்டு. நிச்சயம் அவர்களால் நமக்குக் கஷ்டம் கிடையாது. நாமும் அவர்களைத் துன்பப் படுத்துவதை மனதில் கூட நினைக்க மாட்டோம். ஆனாலும் ஆயிரம் ஜோடிக் கண்கள் அந்தப் பிரபலத்தின் மேல் நிலைத்திருக்க, கூட நடக்கிற, உட்கார்கிற, ரவா தோசை சாப்பிடுகிற, பேசுகிற, கேட்கிற நமக்கு சடாரென்று ஒரு பயம். இந்தாளு யாரென்று எல்லாரும் நம்மைப் பற்றி யோசித்திருப்பார்கள். அதிலே ஒருத்தராவது வாயைத் திறந்து யோவ் நீ யாருய்யான்னு கேட்டால் என்ன பதில் சொல்ல?

நான் எழுத்தாளன் – தமிழ்லே சொல்லுங்க –ரைட்டர்-சினிமா பத்திரிகை நிருபரா? ஊஹும்.

நம்ம இலக்கியத் தடம் எல்லாம் இங்கே சுவடில்லாமல் போய்விடும்.

உத்தியோகப் பெருமை பேசிவிடலாமா?

கம்ப்யூட்டர் கம்பெனியிலே அதிகாரி – சரி, இங்கே என்ன பண்றீங்க?

கதை எழுதி, பத்தி எழுதி, நாவல் எழுதி, சினிமா கதை வசனம் எழுதி எல்லாம் பிரயோஜனம் இல்லை. வேறே என்ன வழி? நாமும் கொஞ்சமாவது முகத்தைப் பார்த்து அடையாளம் காணும்படிக்கு பிரபலமாவதுதான்.

யோசித்துக் கொண்டே கமல் ஹாசன் என்ற ஒரு மகா பிரபலத்தோடு கிட்டத்தட்ட முழு நாளையும் கழிக்க அண்மையில் சந்தர்ப்பம் வாய்த்தது.

கோவளம் கடற்கரை ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரிசப்ஷனில் அவரைச் சந்தித்தபோது, சென்னை வீட்டில் சந்தித்தால் உட்காரச் சொல்லி பேசுகிறது போலதான் சகஜமாகப் பேசினார். அதற்குள் எத்தனையோ பேர் நின்று பார்த்துக் கடந்து போய்க் கொண்டே இருந்தார்கள். எனக்கென்னமோ அந்தப் பார்வையில் எல்லாம் பொறாமை கொழுந்து விட்டு எரிகிற மாதிரித் தெரிந்தது.

இவ்வளவு உற்சாகமா இவன் கிட்டே பேசிட்டு இருக்காரே? யாருடா புள்ளிக்காரன்? சினிமாக்காரன் மாதிரியும் தெரியலியே.

பள்ளிகொண்டபுரம் போய் அனந்தசயனனைத் தொழுது அவன் பெயர் கொண்ட எழுத்துலகச் சிற்பி நீல.பத்மநாபன் அவர்களின் வீட்டில் இறங்கி ஒரு வணக்கம் சொல்லி விட்டு கொஞ்சம் இலக்கிய உரையாடலும் செய்து வரத் தான் திட்டம்.

நெரிசல் மிகுந்த வீதிகளில் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. உள்ளே கமல் கம்மந்தான் கான்சாகிப் பெருமையை உயர்த்திப் பிடிக்க, செம்மண் பூமிக்காரனான நான், எங்க ஊர்க்காரரும் கான்சாவின் அம்மாவனும் அவனை மாமரத்தில் தொங்கவிட்டுத் தூக்குப் போட்டுக் கொல்லக் காரணமானவருமான தாண்டவராயன் பிள்ளையின் இன்னொரு பக்கத்தை அழுத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட காரசாரமான வாக்குவாதம். வண்டி ஓட்டிக் கொண்டிருந்த நண்பர் ஓரம் கட்டி நிறுத்தி விட்டு என்னை ஒரு கை பார்க்க பலமான சாத்தியக்கூறு. இவ்வளவு பிரபலமானவரோடு யாருடா இவன் சரிக்கு சரி கட்சி கட்டி அழிச்சாட்டியம் பண்ணுகிறான் என்று கோபம் வரலாம். வண்டி நின்றால் தெரு ஓரம் போனவர்கள் நடந்த சங்கதி கேட்டு கொதித்து என்னை சுசீந்திரம் எண்ணெய்க் கொப்பரையில் கை முக்க இழுத்துப் போகலாம்.

அதுக்கு முன்னால் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்கள் கமலோடு மொபைல் தொலைபேசியில் அவசரமான படம் எடுத்துக் கொள்வார்கள். கிடைத்த காகிதத்தை நீட்டி ஆட்டோகிராஃப் கோரலாம்.

நல்ல வேளையாக யாருக்கும் எந்த சேதாரமும் இல்லாமல் போக வேண்டிய இடம் போய்ச் சேர்ந்தோம். அடுத்த மூன்று மணி நேரம் நகரின் ஜன சந்தடி மிகுந்த அந்தப் பகுதியில் இந்தப் பிரமுகர் இருப்பதே தெரியாமல் நகரம் வேலை நாள் மெத்தனத்தோடு இயங்கிக் கொண்டிருக்க, உள்ளே காமிரா, விளக்கு, சட்டைக் காலரில் மைக் இன்ன பிற அம்சங்களோடு பேச்சைத் தொடர்ந்தோம். பேசப் பேச பேச்சு வளர்ந்தது.

பகல் ஒரு மணிக்கு மின்சாரம் போயே போச்சு. வீட்டுக்குப் பின்னால் அவுட் ஹவுஸ் – பழைய கால பாணி மர வீட்டில் பேச்சை உற்சாகமாகத் தொடர்ந்தோம். அந்த வீட்டு வாசல் படியில் உட்கார்ந்தபடி நான் சுற்றிலும் ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற அடுக்கு மாடிக் கட்டிடங்களைத் திகிலுடன் பார்த்தேன். யாராவது ஒருத்தர் பார்த்து அடையாளம் கண்டு கொண்டாலும் போதும். அப்புறம் நாங்கள் பார்க்கப் போனவர்களின் வீட்டுக்கு முன்னால் திருச்சூர் பூரம் போல ஜனசமுத்திரம் திரண்டு அலையடித்து எல்லோரையும் கடல் கொண்டு விடும்.

ஒரு ஜன்னல், ஒரு கதவு கூட அந்த ஒரு மணி நேரத்தில் பக்கத்தில் எங்கேயும் திறக்கப்படவில்லை. நகர வாழ்க்கையின் அமானுஷ்யத் தனிமையிலும் ஏக நன்மை!

வாய்க்கு ருசியான நாஞ்சில் நாட்டு சமையல். திருமதி பத்மநாபனின் அன்பான உபசரிப்பு. விருந்து முடிந்து வாசல் திண்ணையில் சகஜமாக பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மேல் வீட்டு குஜராத்தி குடும்பத்துக் குழந்தைகளோடு அரட்டை. சென்னை விமானத்தைப் பிடிக்கத்தான் நேரம் இருந்தது அதற்கு அப்புறம்.

பள்ளிகொண்டபுரம் நாவலைப் பற்றிய பரிமாற்றமே இன்னும் முடியவில்லை. நீல.பத்மநாபனின் தலைமுறைகள், உறவுகள், இலையுதிர்காலம் என்று மற்றப் படைப்புகள் பற்றிய கேள்விகள் எங்களோடு தான் இருக்கின்றன.

அவற்றோடு, விரைவில் அவரை மீண்டும் சந்திப்போம்.

(நேர்காணல் தினம் 3.2.2010)

நேர்காணல்
———-

கமல் ஹாசன்: ஐயா வணக்கம். ஒரு எழுத்தாளருடைய எழுத்து போக, அவருடைய பல பதிவுகள் தேவையாக இருக்கு. அவர் எப்படி இருப்பார், அவருடைய குரல் எப்படி இருக்கும், எப்படிப் பேசுவார் இப்படி … வாசகர்கள் போக எழுதணும்னு ஆசை இருக்கறவங்களும் எழுத்தாளரைப் பற்றிப் பல கோணங்களில் பதிவை எதிர்பார்ப்பாங்க. அதுலே ஒரு கோணம் இதுவாக இருக்கும்னு நம்பறேன். அதுக்காகத்தான் வந்திருக்கோம். இரா.முருகன் எழுதுகிறவர். நானும். ரெண்டு பேரும் சேர்ந்து சினிமாவுக்கு எழுதியிருக்கோம். எங்களுக்குப் பேச அருகதை இருக்கும்னு நம்பிக்கையில் இதைச் செய்யறோம். உங்க எழுத்துகளைப் படமாக எடுத்துட்டு இருக்காங்க. எனக்கு அந்தக் களம் தெரிஞ்ச களம். உங்க எழுத்தைப் பற்றி முதல்லே பேச ஆரம்பிக்கறேன். எப்போ எழுத ஆரம்பிச்சீங்க?

நீல.பத்மநாபன் : முதல்லே உங்க முயற்சிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிச்சுக்கறேன்.ஒரு எழுத்தாளர் வாழ்ந்த கால கட்டத்தைப் பற்றி வருங்காலத் தலைமுறையில் பல பேருக்குத் தெரியாது. வருங்காலம்னு கூட இல்லை, சமகாலத தலைமுறையிலேயே கூட அப்படித்தான். எழுதறவங்க ஏதாவது ஒரு ஊர்லே இருப்பாங்க.. நான் கூட இங்கே, திருவனந்தபுரத்தில் இருக்கேன்.. சென்னையில் இருக்கக் கூடிய, சமகாலத்திலே எழுதக் கூடிய எழுத்தாளனுக்கு, மற்றும் எங்கேயோ இருக்கக் கூடிய வாசகனுக்கு எப்படி இவர் இருந்தார், பழக்க வழக்கங்கள் என்னன்னு எல்லாம் தெரியாது. அதைப் பதிவு செய்ய நீங்க எடுத்திருக்கறது நல்ல விஷயம். சினிமா உலகத்துலே இருக்கறவங்களுக்கு இதெல்லாம் தோணாது. நீங்க வாசிப்பீங்க. படைப்பாளிகளோடு பழக்கம் இருக்கு. படைப்பாளின்னு சொன்னது ஜனரஞ்சகமாக எழுதக்கூடிய எழுத்தாளர்களை அல்ல. கநாசு அசோகமித்திரன் போன்ற ஆக்கபூர்வமான படைப்பாளிகளை. என் எழுத்துகளைக் கூட நீங்க படிச்சிருக்கீங்க..நான் பார்த்திருக்கேன். கமல் என்னைப் பத்தி சொல்லும்போது தனித்தன்மை வருது. சினிமாவுக்குன்னு ஒரு சக்தி

கமல்: அது ஊடகத்தோட பலம்னு நினைக்கறேன்

நீல: ஐயப்ப பணிக்கரோட என்னை இணைச்சு நீங்க சொல்லியிருக்கீங்கன்னு நிறைய நண்பர்கள் சொன்னாங்க..’கமலஹாசன் உங்களைப் பத்தி சொல்லியிருக்காரே.’என்று விசாரிச்சாங்க.. நான் ஐம்பது வருடமா எழுதிட்டிருந்தாலும் கூட கமல் ஹாசன் வாயிலாக வருவதிலே தனிச் சிறப்பு தான்,

கமல்: கருவியாக இருக்கறதுலே மகிழ்ச்சிங்க

நீல: நீங்க இப்படி ஒரு முயற்சியிலே ஈடுபடறதுக்கு ஒரு வாழ்த்து சொல்லிட்டு உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றேன்

என்னைப் பொறுத்த வரையிலே சின்ன வயசிலேயே, இலக்கியப் பாணிகள் எல்லாம் தெரியறதுக்கு முன்னாடியே எழுத்து எனக்கு பழகியது. காரணம் கேட்டால் எனக்குக் கதை கேட்கறதிலே ஒரு ஆர்வம். என் பாட்டி, அப்பா அம்மா எல்லோரும் கதைகள் சொல்வார்கள். அப்புறம், நான் இருந்த வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு நாடகக் கொட்டகை இருந்தது. ராஜமாணிக்கம் நாடகக் கம்பெனி. அவர், டி.கே ஷண்முகம் எல்லாம் வந்து நாடகம் போடுவாங்க. நாடக நடிகர், நடிகையர் எல்லாம் எங்க தெரு வழியாத்தான் போவாங்க.

இரா:முருகன் : திருவனந்தபுரத்திலா?

நீல:ஆமா சித்ரா தியெட்டர்னு சொல்வாங்க.. நான் எழுத்திலே பதிவு பண்ணியிருக்கேன் அதைப் பற்றி. எங்க வீடு இருந்த தெருவுக்கும், நாடகக் கொட்டகைக்கும் இடையிலே ஒரு மதில் தான் இருந்தது. அங்கே இருந்து தெரு வாசிகளுக்கு விடிய விடியப் பாட்டு, வசனம் எல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கும். அப்ப நாங்க சின்னக் குழந்தைகள் அதெல்லாம் பார்த்து நாங்களே எங்களுக்காக நடிக்க ஆரம்பிச்சோம்.. .. நடிக்கறதில் இருந்து, ரொம்ப சின்ன வயசிலேயே நான் எழுத்துக்கு வந்தேன். முதல்லே எழுதினதுன்னு சொல்லப் போனா, கவிதை. கவிதை கூட இல்லை. நாடகத்துக்குப் பாட்டு. அப்புறம் சிறு நாடகங்கள்.. இப்படித்தான் சின்ன வயசிலேயே நான் எழுத்துத் துறைக்கு வந்தேன்

(தொடரும்)

உரையாடல் எழுத்தாக்கம் : இரா.முருகன்