பெண்கள் இல்லாத நடனத்தை ரசிக்கும் மக்கள் கூட்டங்களும் அர்ஜுன நிருத்தமும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காம் நாவல்- அடுத்த சிறு பகுதி இங்கே

விநோதமான ஊர் இது. நெற்றியில் சந்தனம் பூசாமல் யாரும் வெளியே இறங்குவதில்லை போலிருக்கிறது. யாரை அடுத்துப் போனாலும் சந்தன வாசம் தான் மூக்கில் குத்துகிறது. கிறிஸ்தியானிகளும் இதரரும் கூட வீட்டுக்குள் இருக்கும்போது மணக்க மணக்கப் பூசி இருந்து, வெளியே இறங்கும்போது மனசே இல்லாமல் அழித்துத் துடைத்து விட்டு, ரோமக்கால்களில் இறங்கிய மிச்ச சொச்ச வாடையோடு தான் நடமாடுகிறதாகத் தோன்றுகிறது. அப்புறம் ஒன்று. இது ஆண்கள் பற்றிய கணிப்பு. பெண்களும் அதே தோதில் இருக்கலாம். நந்தினி போல.

 

நந்தினியின் மார்புக் குவட்டு வியர்வையில் கசியும் சந்தன வாடையை மனதில் அனுபவித்து நாசி விடர்த்த, வைத்தாஸின் கண் நிறைந்து போனது.

 

என் நந்தினி. இப்படி உன்னைப் பிரிந்து, கழிசடை நினைப்பும், எழுதி எழுதி இச்சை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யும் கேடுகெட்ட தனமும், அரசியல் என்றும் கலாசார உறவு என்றும் கடவுளின் மூத்த சகோதரி என்றும் புழுத்த பன்றி மாமிசமாக, புளிப்பு முற்றிப் பூசனம் பிடித்துக் களைய வேண்டிய காடியாக, ஆயிரம் தடைகள் உன்னோடு உறவாட முடியாமல் ஒரு சேர என் வழியை அடைக்க, இன்னும் ஒரு வாரம், இதோ அடுத்த மாதம், இதுவும் கடந்து போகட்டும், விரைவில் உன் அணைப்பின் கதகதப்பில் உயிர் கலந்து இருப்பேன் என்று காலத்தைக் கடத்தி வருவது என்ன மாதிரி வாழ்க்கையில் சேர்த்தி? என் எழுத்தும் என் பதவியும் என் வயதும் என் அனுபவமும் குப்பைக்குப் போகட்டும். எந்தத் தடையும் இடுப்புக்குக் கீழ் பிடித்துக் கட்டி நிறுத்தாமல் உன்னை நான் கலக்கும் நாள் என்றைக்கோ.

 

வைத்தாஸ் கண்களில் இன்னும் நடனம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அர்ஜுன நிருத்தம் என்று பெயர் சொல்கிறார் குறூப். கோவிலில் வெடி வெடித்து வழிபாடு நடத்தித் தரும் குடும்பமாம். அர்ஜுன நிருத்தம் ஆடுவாராம். ஆடி ஓய்ந்த கால் என்றாலும் நேற்று ராத்திரி ஆட்டக் காரர்களோடு சளைக்காமல், அசராமல் சேர்ந்து ஆடி அமர்க்களப் படுத்தி விட்டார் அவர். இவ்வளவுக்கும் அவருக்கு எழுபது வயது கடந்திருந்தது. அவர் சொல்லித்தான் அது தெரியும்.

 

அந்த ஆட்டமும் பாட்டும் வைத்தாஸ் நினைவில் இன்னும் சுழன்று கொண்டே இருந்தன. ஒரே வரியை கிட்டத்தட்ட நூறு முறை ஒவ்வொரு தடவையும் ஒரு சிறு மாற்றத்தை குரலின் கனத்திலும், ஒலித் துணுக்கைக் குறுக்கியும் விரித்தும் ஒலித்தும், இரங்கல், பரிவு, வற்புறுத்துதல், உரிமையோடு முழங்குவது என்று குரலில் வித்தியாசம் காண்பித்தும் ராத்திரி முழுக்கச் சளைக்காமல் ஆடினார்கள் அந்த ஆட்டக் காரர்கள். மயில் தோகையை இடுப்பைச் சுற்றி கம்பீரமாக அணிந்து ஆடிய அவர்கள் எல்லோரும் ஆண்கள்.

 

பெண்கள் இல்லாமல் நளினத்தை ஆடிக் காட்டும் நடனங்களில் இந்தப் பகுதி மக்கள் ஏன் அபார உற்சாகம் காட்டுகிறார்கள் என்று வைத்தாஸுக்குப் புரியவில்லை. இவ்வளவுக்கும் உருட்டி விட்ட வெங்கலச் சிலை போலத் திமிறும் அழகோடு நடமாடும் கருத்த சுந்தரிகளின் பூமி இது. நந்தினி என்ற தேவதையும் இங்கே இருந்து போன குடும்பத்தில் வந்தவள் தானே. என்ன தான்  இன்று கடவுளின் தமக்கை ஆகியிருந்தாலும் மயிலும் நிருத்தமும் அவளுக்குள்ளும் நிறைந்தவைதானே. ஆனாலும் அர்ஜுன நிருத்தத்தைப் பற்றி அவள் சொல்லியதாக நினைவு இல்லை.

 

வைத்தாஸ் ஷவரில் குளிக்க நின்றபோது நாளைக்கு மகாநாட்டில் அவன் எதை எல்லாம் குறித்துப் பேச வேண்டும் என்று துண்டு துணுக்காகத் தோன்றிப் போனது.

 

எப்படி ரசிக்கிறார்கள் இங்கே. தூக்கம், தூக்கம், மயில்பீலித் தூக்கம் என்று பதறியடித்துக் கொண்டு ஆணும் பெண்ணுமாக ஓடி வந்த உற்சாகம் அவன் நாட்டுக் கிராமங்களில் இரவு நேர ஆட்ட முரசு கேட்டதும் ஓடி வந்து குவியும் பெருங்கூட்டத்துக்கு இணையாக இருந்தது.

 

எல்லோருக்கும், எங்கும், கொட்டும், குரவையும், தாளத்தை இயல்பாக உள்வாங்கி  எல்லா வேகத்திலும் நடனமாடுவதும் உயிரணுக்களில் கடந்து வந்து அழியாத அடிப்படை ரசனையாக நிற்கிற அனுபவத்தை நினைக்க அவனுக்கு பிரமிப்பாக இருந்தது. ஆடத் தெரியாத யாரும் உலகில் இல்லை. ஆடாதவர் உண்டு. அவ்வளவே.

 

கந்தகம் கொளுத்தியது போல சகலரின் கம்புக் கூட்டுக்குள்ளும் இருந்து பிரவகித்த வியர்வை மூக்கில் குத்தும் வாடை அவன் மேல் இன்னும் பூசி இருந்தது. ஆட்டம் ஆரம்பித்த நிமிடங்களில் அசௌகரியமாக இருந்தாலும், நடனத்திலும் ஓங்கி ஒலிக்கும் பாட்டிலும் மனம் லயித்தபோது அந்த வாடை பிரக்ஞையில் இருந்து விலகி, அப்புறம் ஒரு கட்டத்தில் பாட்டு வரிகளில் கனமாகப் படிந்து திரும்ப வந்து சேர்ந்தது. இனி எப்போதும் வைத்தாஸ் மனதில் சந்தனத்தோடு சேர்ந்து எழுந்த, கூட்டமான வியர்வை மணமாகவே  அர்ஜுன நிருத்தம் நிற்கும்.

 

அது மட்டுமில்லை. இலுப்பை எண்ணெய் ஊற்றிய தீபங்களின் மஞ்சள் சுடர்கள் புழுக்கமான இரவில் நிறைக்கும் நெடியும் சந்தனத்தோடும் வியர்வையோடும் கலந்து பாட்டும் ஆட்டமும் ஆன ரசவாதம் அது.

 

ஆட்டக்காரிகள் எப்போ வருவார்கள்? வைத்தாஸ் விசாரித்தான்.

 

இது கதகளி போல ஆண்களே ஆடும் ஆட்டம். என்ன குறைச்சல் அதனால்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன