வயசாக வயசாக யாராவது காலில் விழுந்து கும்பிட்டால் நல்லாத்தான் இருக்கு

வாழ்ந்து போதீரே ] அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவதிலிருந்து அடுத்த பகுதி

ஊரோடு வெள்ளை உடுத்தியிருக்கிறார்கள். ஒண்ணு, இங்கே சாயக்காரன் எல்லாரும் அஸ்தமித்துப் போயிருக்கணும். இல்லையோ, சாயம் துணியில் ஏறாமல் போய் அவன்களை ஊருக்கு வெளியே வேலிக்காத்தான் மண்டிய தரிசு பூமி நெடுக, உடுப்பைப் பிடுங்கிக் கொண்டு முண்டக் கட்டையாக ஓட ஓட விரட்டியிருக்கணும். அப்புறம், சாயமுமாச்சு, சாராயமுமாச்சு, இருக்கவே இருக்கு  வெளுப்பு என்று வைராக்கியமாக உடுத்த ஆரம்பித்து இப்போது வெள்ளைப் பட்டியாகிப் போயிருக்கலாமோ இங்கே வந்து சேர்ந்த பிரதேசம்?

 

ராஜா தீவிரமாக யோசித்தபடி, இந்த ஊருக்கு என்ன பெயர் என்று பனியன் சகோதரர்களை விசாரித்தார். அதிலே குட்டையன் மிகமிஞ்சிய மரியாதையோடு விரை தரையில் மோதத் தாழ்ந்து உடம்பு வளைத்து வணங்கி முறையிடுகிற குரலில் சொன்னான் –

 

அம்பலப்புழை, மகாராஜா.

 

இதுக்கு அவன் நின்னபடிக்கே சொல்லி காலில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து எழுந்திருக்கலாம். வயசாக வயசாக, யாராவது காலில் விழுந்து வணங்கினால் ரொம்ப இஷ்டமாகப் போகிறது. ஒரு நாள் முழுக்க ஊர்க்காரன் எல்லோரும் வரிசையில் நின்று காலில் விழுந்து கும்பிட்டுப் போனால் ராஜா சோறு தண்ணியில்லாமல் சுவாரசியமாக வேடிக்கை பார்த்து அருள் பாலித்துக் கொண்டிருப்பார். சேடிப் பெண் போன்ற சின்னஞ்சிறிசுகள், என்னத்தை சின்னஞ்சிறிசு, நாப்பது வயசாவது ஆகியிருக்கும் சிறுக்கி மகளுக்கு, ஆனால் என்ன, உருண்ட தோளை இறுகப் பற்றி, காலில் விழுந்தவளை எழுப்பி நிறுத்த ராஜாவுக்கு கை தினவெடுத்தது.

 

கிடக்கட்டும் சேடிப் பெண்ணும் மற்ற பெண்களும். வந்த இடத்திலும் அந்நிய ஸ்திரியை இச்சிப்பதிலேயே சகதியில் எருமையாக நினைப்பை நிறுத்துவது என்ன நியாயம்?

 

மனசு இடிக்க, ராஜா சரியென்று சொல்லி, கண்ணில் பட்டதை எல்லாம் சுவாரசியமாகக் கவனிக்க ஆரம்பித்தார். அவர் காலத்துக்கு அப்புறம் நூறு வருஷமாவது கடந்து வருகிற காட்சி இதெல்லாம். நூதன வாகனக் களவாணிகளான பனியன் சகோதரர்கள் அவரை எல்லா விதத்திலும் ஆசை காட்டி இப்படி காலம் விட்டுக் காலம் கூட்டி வந்து நிறுத்தி விட்டார்கள். அவர்களுக்கு ராஜா கொடுத்த கும்பினியார் தங்கக் காசு மேல் வெகு இஷ்டம். ராஜாவுக்கோ ஊர் உலக நிலவரம் அறிந்து வைத்துக் கொள்ள மகா இஷ்டம்.

 

ராணிக்குத் தெரியாமல், வேறு யாருக்கும் தெரியாமல் நூதன வாகனத்தில் அந்தக் களவாணிகளோடு கிளம்பி வந்தாகி விட்டது. போகிற வழியில் இவன்கள் காதை அறுத்துக் கடுக்கனை எடுத்துக் கொள்வார்கள என்று முன்னோர்கள் பயமுறுத்த, அதை மட்டும் கழற்றி இடுப்புச் சோமனில் முடிந்து வைத்திருக்கிறார் மகாராஜா. அதாவது வேட்டி மடிப்பில்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன