Monthly Archives: April 30, 2013, 1:25 am

கச்சேரி

காய்த்ரி வெங்கட்ராகவனின் குரலும் எப்போதும் சிரித்த முகமும் மனதுக்கு இதமானவை. தம்பி ஈரோடு நாகராஜ் பக்க வாத்தியம் வேறே. நேற்று மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டம் இவர்கள் கச்சேரியால் களை கட்டியது.

வாசலில் ஆர்ய கௌடா வீதியில் ஒரு செகண்டுக்கு ஒரு மாநகராட்சி பஸ்ஸும், பதினேழரை ஆட்டோ, பத்து மோட்டார் பைக், ஏழு கார் என்று இரண்டு திசையிலும் ஊர்ந்து கொண்டிருக்க, இரண்டரை மணி நேரக் கச்சேரியின் போது யாருமே ஹாரன் அடிக்கவில்லை என்பது ஆச்சர்யம். அடித்திருந்தாலும் நிரம்பி வழிந்த ரசிகர்களில் யாரும் அதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள்.

வெகு பொருத்தமாக சாவேரி தொடங்கி ராகமாலிகையில் பாவயாமி ரகுராமம். அட்டகாசமான காம்போதி (ஏமய்யா ராம ப்ரஹ்மேந்த்ரா). ரஞ்சனி, நிறைவான நிரஞ்சனி..

கே வி என் சாரின் சிஷ்யைக்கு சிஷ்யையான காயத்ரி, அவர் பாடிப் பிரபலமான ‘வருகலாமோ’ (மாஞ்சி) பாடுவாரா என்று நாகராஜிடம் மதியமே விசாரித்து கோபால கிருஷ்ண பாரதியார் எப்படிக் கச்சேரியில் வருவார் என்று ஒரு மாதிரி விக்கி லீக்ஸ் விவரம் கிட்டியிருந்தது.

‘குனித்த புருவமும்’ என்று காயத்ரி அழகாகத் தேவாரத்தைத் தொடங்க, மேற்படி பாரதியார் மோகனமாக வருவார் என்று ஊர்ஜிதமானது. நந்தன் சரித்திரக் கீர்த்தனை ‘தரிசனம் கண்டார்க்கு’ நேற்று கச்சேரியில் கேட்டவர்கள் அடுத்த ராம நவமி வரை மறக்க மாட்டார்கள்.

தொடர்ந்து அம்ருதவர்ஷிணியாக சுதாமயி சுதாநிதி..

நாகராஜ் தனியாக மிருதங்கத்தோடு மேடையில் ஏறினாலே அமர்க்கப் படுத்துவார். நேற்று கடம், கஞ்சிரா என்று படையோடு வந்து இறங்கி விட்டார். தனி பொறி பறந்தது.

வயலினில் காயத்ரி குரலோடு சுநாதமாக இழைந்த சாருமதி வில்லை எடுத்தது கண்டார். இசைத்தது கேட்டார்.

காலை வாக்கிங் போகணும்.. சாவகாசமாக எழுதறேன்..

———————-
Kejriwal promises Aam Adhmi Party election manifesto for each constituency. Not enough. Each voter, one manifesto.
————————
அண்மையில் படித்த சிறுகதைகளில் மனதை வெகுவாகப் பாதித்த ஒரு கதை – சுப்ரஜா ஸ்ரீதரனின் ‘அம்மா’.

கதையில் வரும் கதை சொல்லி கதை இறுதியில் செய்தது மனதில் சுழன்றபடி இருக்கிறது. அதை நியாயப்படுத்தவில்லை. ஆனால்.. வேறு என்ன செய்திருக்க வேண்டும்?

சுப்ரஜா ஸ்ரீதரனின் வெற்றி இந்த விவாதத்தைத் துவக்கி வைத்ததில் தான்.

சாவடியும் சில்லும் சர்க்கரைத் தெருவும்

சாவடி என்றொரு மேடை நாடகம். கொத்தவால் சாவடி தான் களம். காலம்? 1914 செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமைக்கு இரண்டு நாள் சென்று. அந்தத் தேதியின் விசேஷம்? முதல் உலகப் போர் நேரம் அது. ஜெர்மனியக் கப்பல் எம்டன் சென்னைத் துறைமுகத்துக்கு அருகே வந்து குண்டு வீசித் தாக்கிய இரவு.

முதல் பிரதியில் சில மாற்றங்கள் செய்ய உட்கார்ந்தால் நாடகம் இன்னும் வளர்ந்து நிற்கிறது! சரி அப்படியே இருக்கக் கடவது. அதற்கு ஒரு தாற்காலிக முற்றும் போட்டு ‘சில்லு’ குறுநாவலை நாடகமாக்குவதில் நேற்றைய தினம் கடந்து போனது.

என்னமோ நாடகத்தில் இப்போது ஒரு விருப்பம்..

ராத்திரி திடீரென்று எகிப்திய் நாவலாசிரியர் நக்யுப் மெஹ்பூஸ் (Naguib Mahfouz) எழுதிய ‘கெய்ரோ மூன்று நாவல்’ வரிசையின் கடைசி நாவல் ‘சர்க்கரைத் தெரு’ (ஷுகர் ஸ்ட்ரீட்) நினைவு வந்தது. எங்கேயோ வைத்த பிரதியைத் தேடி.. கிடைக்கவில்லை.

மேஜிக்கல் ரியலிசத்தை எனக்குப் பாடம் சொன்ன கார்சியா மார்க்வேயை விட, நக்யுப் மெஹ்பூஸ் தன் கெய்ரோ மூன்று நாவல் தொகுதி மூலம் என்னைப் பாதித்தது அதிகம்.

சர்க்கரைத் தெருவின் வாசிப்பு இனிமையில் ஒரு துளியாவது அச்சுதம் கேசவம் தர, அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அருளட்டும்.

(இரா.மு 29.4.2013)

பதினாறாம் வாய்ப்பாடு

செந்தில் என்ற செந்தில்நாதன் எங்க ஆபீஸ் பையர். நால்பத்தஞ்சு வயசு கடந்தும் இன்னும் office boy தான். அதிலும் சகல் விதமான காகிதத்தையும் விழுங்கி, சீவல் பேப்பர் தயாரிக்கிற டாக்குமெண்ட் ஷ்ரெட்டர், போட்டோ காப்பியர்-பிரிண்டர் போன்ற மின்னணு சாதனங்களை இயக்க இன்னும் அவரை யாரும் ஏவுவதில்லை. ‘பாவம் அதெல்லாம் தெரியாது’ மனுஷன். எல்லா டேபிளிலும் தண்ணீர் பாட்டில் வைக்கிற காரியத்தை மனமுவந்து செய்வார் தினம் தினம்.

ஆபீஸ் கஃபேட்ரியாவில் நான் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது செந்திலும் மற்ற ஆபீஸ் பாய்களும் காலை உணவில் மும்முரமாக இருந்தார்கள்.

ஒண்ணே கால் காணி.. அப்படீன்னா..

செந்தில் தான். சரியாக சதுர அடி, ஏக்கர், சதுர மீட்டர் என்று காணியின் அளவை சொல்லிக் கொண்டிருந்தார். போன மாதம் என் நண்பர் ஒருவர் அவசரமாக டெலிபோனில் கேட்ட விவரம். நான் இந்த உலகத்து மற்ற ஜீவராசிகள் போல் கூகிளில் தேடித்தான் அவருக்குத் தகவல் அறிவித்தேன்.. இங்கே, தினசரி துடைக்க அல்லாமல் வேறு எதற்கும் கம்ப்யூட்டர் பக்கமே போகாத செந்தில் அடித்து விளாசிக் கொண்டிருக்கிறார்.

பெரிசு கணக்குலே புலி சார்.

நான் அவர்களின் உரையாடலைக் கவனிப்பதைப் பார்த்த இன்னொரு ஆபீஸ் பையன் சொன்னார் (ன் – ர் தான் – இலக்கணப்படி தப்பு, சமூக நாகரீகப்படி சரி).

பதினாறாம் வாய்ப்பாடு ஒப்பிப்பீங்களா?

நான் சிரித்தபடி கேட்டேன். எனக்கு பதினொரு பதினாறு, பனிரெண்டு பதினாறு எல்லாம் வராது.. எதோ பத்து பதினாறு நூற்று அறுபது வரை சமாளிப்பேன்.

பெரிசு பவ்யமாக எழுந்து நின்று இருபது பதினாறு வரைக்கும் சொன்னார். அதற்கு மேலும் கூடப் போயிருப்பார்..

சார், நீங்க ஏதாச்சும் டேட் கொடுங்க.. சுத்தமா என்ன நாளுன்னு சொல்வார்.

இன்னொரு ஆபீஸ் பையன் குறுக்கிட்டார்.

இருபத்தெட்டு ஆகஸ்ட் ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்து மூணு என்ன கிழமை செந்தில்?

நான் சட்டென்று கேட்டேன். எனக்குத் தெரிந்த தேதியோடு கூடிய ஒரே கிழமை.

பத்து செகண்ட் எதிர்ச் சுவரை வெறித்து விட்டு செந்தில் சொன்னார் -
‘வெள்ளிக்கிழமை சார்’.

மிகச் சரியான பதிலுக்காக நீங்களும் வென்றது ஒரு கோடி ரூபாய். இருந்தால் அட் சோர்ஸ் வரி பிடித்துக் கொண்டு கொடுக்கலாம்.

செந்தில் தோளைத் தட்டி பாராட்ட மட்டும் முடிந்தது. அடுத்த நாவலில் தேதி -நாள் கணக்கை சரிபார்க்க செந்தில் உதவியை நாடலாம்…

ஆமா, நீங்க என்ன உத்தியோகத்திலே இருக்கீங்க? பதினாறாம் வாய்ப்பாடு தெரியுமா? எங்கே, பதினெட்டு பதினாறு என்ன சொல்லுங்க பார்க்கலாம்.

லால்குடி

நாரதர் தும்புரு மீட்டிட நேரெதிர்
சேருமோர் நாதம் வயலினில் – யாரவர்
ஆலமர் ஆண்டவன் அம்மைக்குச் சொல்லுவான்
லால்குடி வந்தாச்சு பார்.

இரா.முருகன்

“பயணம் புரிந்தது பாரத ரத்னம்
அயனரன் மாலுக்(கு ) அருகே -வயலினை
வாசிக்க லால்குடி விண்ணுக்கு போனதோ!
பூசிக்கும் தெய்வமானார் பார்”….

கிரேசி மோகன்….

How can one forget his Brova Barama and the ‘pori parakkum’ thillaanaas?

As one living in the adjacent RAmanathan Street, T Nagar and a member of the walker community in Natesan Park, till a few years ago, he was a familiar father figure to many in our area who did not even know he wais a great Carnatic maestro ..

RIP Lalgudi sir

செம்மண் சுவடு -2 : ராஜம் அய்யங்காரும் ’டி.எஸ், பரமக்குடி’யும்

அரசூர் சுவாரசியமான கிராமம். எங்கள் குலதெய்வம் ஐயனார். பூசாரியார் வேளார். கோவில் மேற்பார்வையாளராக இருந்தவர் (காலம் சென்ற) கிராம கர்ணம் ராஜம் அய்யங்கார்.

அய்யங்காரை நான் சிறு வயதில் அரசூர் சென்றபோது பார்த்திருக்கிறேன். கெச்சலான, கொஞ்சம் கீச்சுக் கீச்சுக் குரலோடு எகிறி எகிறி நடக்கிற சிவப்புத் தலைமுடிக்காரர். (என் மனதில் என்னமோ அப்படித்தான் பதிவாகி இருக்கிறது).

அய்யங்கார் வீடு சிதிலமாகி இருக்கிறது. அவருடைய மகன் ஏசுதாஸ் தரங்கிணி குழுவில் இருந்ததாக அய்யங்கார் சொல்லிய நினைவு. சென்னையோடு போயிருக்கலாம்.

அய்யங்கார் வீட்டுக்கு நேர் பின்னே ஒரு காளி கோவில். நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது. இன்னொரு வேளார் கவனித்துக் கொள்கிறார்.

அவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.

‘இந்தக் காளியாத்தா இருக்குதே.. ஐயருக்கு (அய்யங்கார்) ரொம்ப வேண்டப்பட்டது. வெள்ளன எளுந்திருச்சு சாமி அவுக பல்லு வெளக்கிட்டு நிக்கறாக.. பின்னாடி ஏதோ சத்தம்.. ஆருங்கறீங்க..ஆத்தா உக்காந்திருக்கா.. என்னம்மா விசயம்னு வாயிலேருந்து வேப்பங்குச்சியை எடுத்துட்டு ஜாரிக்கறாரு ஐயர்சாமி.

ஒண்ணுமில்லேடா.. தெனம் பொங்கல் வெள்ளைச் சோறுன்னு படைச்சு வச்சதைத் தின்னு அலுத்துடுச்சு. அதான்..

அதான்னா என்ன அர்த்தம்?

நாக்குக்கு ருசியா இத்தினி கவிச்சி, ரத்தம்..

தோ பாரு.. நீ எங்க அம்மா .. வீட்டுப் பெரியவ.. நாங்க சாப்பிடறது, புழங்கறதுதான் உனக்கும்..

எப்பவுமா கேக்கறேன்? எப்பவாச்சும் ஒருக்கா தானே..

அதான் சொல்றேனே.. இங்கே எல்லாம் இப்படித்தான்.. சைவம் தான் எல்லாம்.. எனக்கு இல்லாட்டாலும் உனக்கு முதல்லே கொடுப்பேன் எப்பதிக்கும்.. சரிப்படும்னா இரு.. இல்லியோ..

அட ஏன் கோவிச்சுக்கறே..வேணாம்னா விடேன்.. நானும் தான் வேறே எங்கே போக? உங்களை எல்லாம் கவனிச்சுக்கிட்டு இங்கியே இருக்கேன்..

ஐயர் வாய் கொப்பளிக்கும்போது பின்னால் யாரோ நகர்ந்து போன ஒச்சை.
சாயந்திரம் ஐயர் மவன் சடார்னு சரிஞ்சுட்டான். திரேகம் கெடந்து துடிக்குது. கோழி அறுத்துக் கொண்டாங்க.. ஆடு அடிச்சுக் கொண்டாங்கன்னு ஒரே பொலம்பல்.. ஐயர் நேரே பின்னாடி போனார்.. ஆத்தாவைப் பாத்து சத்தம் போட்டார்.. என்னமோ எங்களைக் கவனிச்சுக்கறேன்னே.. இதானா நீ கவனிச்சுக்கறது? பேசறது ஒண்ணு செய்யறது ஒண்ணா?

துண்ணூறை அள்ளிக்கிட்டு ஐயர் வீட்டுக்குள்ளாற வரக்குள்ள பையன் சௌகரியா படுத்து தூங்கிட்டான். எல்லாம் பொறவு சரியாப் போயிடுத்து..

வேளார் பேசி முடித்தார்.

அடுத்த நாவலை எழுதி முடித்த நிறைவு எனக்கு.

வேளாரும், அய்யங்காரும், காளியும், அரசூரும் எனக்கு போதித்தது மேஜிக்கல் ரியலிசத்தின் பால பாடம்.

————————————————-

காளையார்கோவில் அருகே, நாலாம் தலைமுறை பிராமண கிறிஸ்துவர் ஒருவரை சந்திக்க அவருடைய அச்சகத்துக்குப் போயிருந்தேன். உள்ளே புத்தகம் புத்தகமாக அச்சடித்து அடுக்கியிருந்தது.

ஒன்றை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். புத்தகம் இல்லை. திருமண அழைப்பிதழ். அழைப்பிதழ் என்னமோ ஒரு பக்க நீளம் தான். ‘உங்களை அன்போடு வரவேற்கும் உறவினர்கள்’ பட்டியல் தான் பாக்கி ஒன்பது பக்கம். இந்துப் பெயர்களும், கிறிஸ்துவப் பெயர்களுமாக மாப்பிள்ளை – பெண் பக்க தாய் மாமன், சிற்றப்பா, பெரியப்பா என்று வரிசையாக உறவினர் பட்டியல்.

அச்சகத்தின் கண்ணாடித் தடுப்புக்கு அந்தப் பக்கம் இரண்டு இளைஞர்கள் கம்ப்யூட்டரில் ஒரு திருமண அழைப்பை வரிவரியாக சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘யார் பெயரும் விட்டிருந்ததோ, இல்லே பெயரிலே, ஊரிலே, உறவு சொல்றதிலே அச்சுப் பிழை இருந்ததோ, கொலை கூட விழலாம்’.

அச்சக உரிமையாளர் சிரித்துக் கொண்டே சொன்னார். எனக்கு பயமாக இருந்தது. நிஜமாகவே ப்ரிண்டர்ஸ் டெவில் தான்.

‘பேசாமா வாக்காளர் பட்டியல் வாங்கி பின்னிணைப்பா கொடுத்திடலாம் போல இருக்கு’ என்றார் ப்ரூப் கொண்டு வந்து வைத்த முதிய தொழிலாளி ஒருவர்.

அதானே.

———————————————————————-

காளையார்கோவில் பக்கம் கண்ணில் பட்ட பழைய போஸ்டர் ஒன்று –

அரிமா திரு…… பேத்தி காதணி விழா சிறக்க வருக வருக

லயன்ஸ் கிளப் உறுப்பினர் அரிமா திரு என்றால் ரோட்டரி கிளப் உறுப்பினர் சகடத் திருவா?

——————————————————–

சிவகங்கை போஸ்டர்களின் நகரம். அரண்மனை வாசலில் கண்ணில் பட்ட ஒரு போஸ்டர் -

மலேசியாவுக்கு உடனடியாக ஆட்கள் தேவை.

சப்ளையர் – மாத சம்பளம் ரூ 20,000

புரோட்டா மாஸ்டர் – மாதம் 30,000

சமையல்காரர் – மாதம் 40,000

Parotta master – role, responsibilities and KPAs please..

———————————————————-

பாகனேரி சுதந்திரப் போராட்ட தியாகி திரு எஸ்.ஓ.எஸ்பி. உடையப்பா 108-ம் ஆண்டு மலரை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று படித்துக் கொண்டிருக்கிறேன். கண்ணில் பட்ட செய்தி -

//வக்கீல் அமரர் டி.சீனிவாச அய்யங்கார் மிகச் சிறந்த காங்கிரஸ் தொண்டர். விடுதலைப் போராட்ட வீரர். சத்தியமூர்த்தி, ராஜாஜி, உடையப்பா, குமாரசாமி ராஜா போன்றோரின் நெருங்கிய தோழர். திரு உடையப்பா ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோது துணைத் தலைவராகப் பணியாற்றியவர். ‘D.S, பரமக்குடி’ என்று மட்டும் விலாசம் எழுதித் தபாலில் அனுப்பப்படும் கடிதங்கள் இவரைத் தவறாமல் சென்றடைந்து விடும்.//

D. S அவர்களிடம் ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார் – நீங்க கமலஹாசனோட அப்பாவா?

D.S : கமல் ஹாசன் என் மகன்.