வழக்கு முத்தச்சி வர்த்தமானங்கள்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் அடுத்த சிறு பகுதி இங்கே

 

வருகிறாள்.

 

நந்தினி வருகிறாள்

 

அது போதும். வைத்தாஸ் மனம் முழுக்க நிம்மதி நிறைந்திருக்க, டாக்சி வந்து விட்டது என்று யாரோ வந்து சொன்னார்கள். ஆலப்புழையில் போய் ஒரு முழுக்கை ஜிப்பாவும் வேஷ்டியும் எடுக்க வேண்டும். இன்னும் இரண்டு நாள் இங்கே நிகழ்கலை மாநாட்டுக்காக இருக்க வேண்டி இருக்கிறது. கால் சராய் போக முடியாத இடங்களிலும் மடித்துக் கட்டிய வேட்டி நுழையும்.

 

டாக்சிக்காரரைக் கொஞ்சம் இருக்கச் சொல்லியும் அவருக்கு ஒரு சாயா உண்டாக்கித் தரும்படியும் வைத்தாஸ் ஆங்கில பாணியில் சொன்ன மலையாள வார்த்தைகளுக்காக ஹோட்டல் நிர்வாகத்தாலும் தொலைபேசி இயக்கும் பெண்ணாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டான் வைத்தாஸ். அவன் சொற்கள் உடனே நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.

 

நன்றி சொல்லித் தனக்குக் காலை உணவாக ஆம்லெட் உண்டாக்கித் தர முடியுமா என்று வினயமாக விசாரித்தான் அவன்.

 

சார் க்‌ஷமிக்கணும். ப்ராதல் இன்னு வைகும்.

 

ஏன் தாமதமாகும் என்று விசாரிக்க, டெம்போ வேன் ஸ்ட்ரைக் என்று தெரிந்தது. அதனால்? கோழி முட்டை வராது. பக்கத்தில் யாரும் கோழி வளர்க்கிறார்களா? வளர்க்கிறார்கள், அவர்களிடம் வாங்கி ஆம்லெட் உண்டாக்கலாமே? இல்லை, அவர்கள் நூறு கிலோமீட்டர் தூரம் உள்ள நகரத்தில் தான் லாரியில் கொண்டு போய் அவற்றை விற்க வேண்டும். பஸ் கட்டணம் கொடுத்து ஆளனுப்பி, அங்கே போய் வாங்கி வர வேண்டும். டெம்போ ஸ்ட்ரைக்.

 

கோழிக்குப் பறக்க முடிந்தால் நூறு கிலோமீட்டர் தாண்டிப் பறந்து போய் முட்டை போட்டிருக்கும் என்று அவன் சொல்ல அவர்களில் யாரும் சிரிக்காமல் அனுதாபத்தோடு பார்த்தார்கள்.

 

வைத்தாஸ் சிரிப்பை அடக்கிக் கொண்டு டாக்சியில் ஏறினான்.

 

ஒரு நிமிஷம் என்று ஒற்றை விரல் காட்டி அடுத்திருந்த சாயாக் கடையில் நின்றிருந்த டாக்சி டிரைவரிடம் ஒப்புதலாகத்  தலையசைத்துக் காத்திருந்தான் வைத்தாஸ். அவன் ஓடி வந்ததும் பரபரப்பாக வண்டியை கிளப்பியதும் வைத்தாஸின் மனதுக்கு இஷ்டமாக இருந்தது. இந்த மாநிலத்தில் இப்படியான மரியாதை அபூர்வம் என்று தோன்றியது.

 

பக்கத்தில், இட்லியும் காப்பியும் கிடைக்கும் கடை ஏதாவது உண்டா என்று டிரைவரைக் கேட்க, சந்தனம் மணக்க இருந்த அந்த தாடிக்காரன், கல்யாணம், பிள்ளை பிறப்பு போன்ற அபூர்வமான சந்தர்ப்பங்களுக்காகச் சேமித்து வைத்திருந்த தன் சிரிப்பில் இருந்து ஒரு கண்ணி கிள்ளியெடுத்து வைத்தாஸுக்குக் கொடுத்தான்.

 

அசல் குட்டநாடன் சாப்பாட்டுக் கடை உண்டு. போகலாம் சாரே.

 

ஆலப்புழை போகிற வழியில் அவன் நிறுத்திய இடத்தில் நாலு பெஞ்சுகளையும் மர ஸ்டூல்களையும் பரத்திப் போட்டு ஒரு விடுதி. ஓரமாகத் தூங்கிய நாய்களையும், வாசலில் கட்டி வைத்த செம்மறி ஆட்டையும், பீடி புகைத்தபடி ஓட்டல் வாசல் படிகளில் உட்கார்ந்திருந்த கைலி அணிந்த பெரியவர்களையும் எல்லா ஓட்டல்களிலும் தான் பார்க்க முடியும். ஆனால் வாசலில் நட்ட நடுவே கால் பரப்பி மண் தரையில் அமர்ந்து இருக்கும் ஸ்தூல சரீரப் பெண்மணி?

 

ஓ, அவளா, வழக்கு முத்தச்சி. டாக்சி டிரைவர் சொன்னான்.

 

என்றால்? வைத்தாஸ் குழப்பமாகப் பார்த்தபடி காரை விட்டு இறங்க, அந்தப் பெண் இரைய ஆரம்பித்தாள். அவள் சொல்லுகிறதெல்லாம் ஆண்கள் கூடப் பேச யோசிக்கும் தெறிகள், என்றால் வசவுகள் என்று சொன்னான் டாக்சி டிரைவர் சிரித்தபடி.

 

யாரையாவது வாய்ச் சொல்லால் துன்பப் படுத்த வேணும் என்றால், அவர்கள் எங்கே இருந்தாலும் சரிதான், முத்தச்சிக்குக் காசு கொடுத்தால் இங்கே இருந்தே சரமாரியாக வசவு வீசி அவர்களை முட்டுக் குத்தச் செய்து விடுவாள் இவள்.

 

இங்கிருந்து திட்டினால் வேற்றூரில் எப்படி அது போய்ச் சேரும்?

 

அது என்னவென்று தெரியாது. ஆனால் இங்கே திட்டியதும் அங்கே போய் சேர்ந்த உடனே சம்பந்தப் பட்டவர்களுக்குப் பேதியாவதும், நாக்குழறி, வியர்த்துப் போய் சுருண்டு விழுவதும் கிரமமாக நடக்கிறதே.

 

டாக்சி டிரைவர் சொன்னபடி எட்டணா நாணயத்தை அந்தக் கிழவிக்கு முன்னால் போட்டு விவரம் சொன்னான் – மகம்மை பஞ்சாயத்து தெக்கே பரம்பில் சங்குண்யார். என்னு பறஞ்சால் காணாதுண்ணி சங்கு.

 

அவன் விலாசம் விவரம் சொல்லும்போதே புன்னகைக்க, வைத்தாஸ் என்ன விஷயம் என்று கேட்டபடித் தானும் சிரித்து வைத்தான்.

 

என் மாமனார் தான். யாரும் பார்க்காமல் ஒளிந்திருந்து சாப்பிடுகிறவன் என்று பட்டப் பெயர். எனக்கும் காசு தரமாட்டேன் என்கிறான் வயசன்.

 

அவன் பின்னும்  வெகு சத்தமாகச் சிரிக்க, கிழவி வைய ஆரம்பித்தாள். காற்றும் அபானவாயுவாக நாறிப் போனதாக யாரோ சொல்லி அந்தக் கிழவியின் அண்டையில் நின்று இன்னும் ஒருமுறை வசவைத் திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டார்கள்.

 

கடல் சிலந்தி புணரட்டும் என்கிறாள் கிழவி. ஆக்டோபஸ் பற்றி எங்கே தெரிந்து கொண்டாள்? வியப்போடு வேறே யாரோ சொன்னார்கள். அந்தப் பெண்பிள்ளை இந்த வயதிலும் புதுசு புதுசாக அறிந்து வைத்துக் கொள்வது வெகுவாகப் பாராட்டப் பட்டது.

 

காணாதுண்ணிக்கு  அரையில் புழுப் புழுத்து வீங்கி குறி அறுந்து விழச் சொல்லித் திட்டு என்று சொல்லியபடி டிரைவர் படியேற அதுக்குத் தனியாகத் தரணும் என்றாள் கிழவி.

 

துரெ, ஒரு ரூபாய் காசோ நோட்டொ இருந்தா தள்ளைக்குக் கொடு. பின்னாலே அட்ஜெஸ்ட் ஆக்கித் தரும்.

 

யாருக்கோ குறி புழு வைத்து அழுகி அறுந்து விழத் தானும் ஒத்தாசை செய்கிற குற்ற போதத்தோடு உள்ளே நுழைந்தான் வைத்தாஸ்.

 

வாசலை ஒட்டிப் போட்டிருந்த பெஞ்சில் இருந்து கிழவி சத்தத்தை மீறிய பெருங் கூச்சலாக யாரோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். மூக்குக் கண்ணாடி அணிந்த, முழங்கையில் மடித்து விட்ட சந்தன நிறச் சட்டை போட்ட கட்டை மீசை நடு வயதுக்காரன் அவன். கேட்டவர்களும் சந்தன நிற டெரிலின் சட்டைதான் போட்டிருந்தார்கள்.  மீசை வைக்காதவர்கள் அவர்கள்.

 

டாக்சி டிரைவரிடம் என்ன விஷயம் என்று விசாரித்தான் வைத்தாஸ். அவன் சுமாராக மொழிபெயர்த்தான் –

 

தோத்திரப் பாட்டுகளும் இலக்கியம் தான். எல்லாத் தெய்வங்களுக்கும் அவை உருவாக்கப் பட்டு விட்டன. ஆனாலும் தாழ்வில்லை. சகல விநோதங்களோடும் புதியவர்களை உருவாக்குவோம். புதிய இலக்கியங்களைப் பிறப்பிப்போம். இது இலக்கியம் இல்லை என்று சொல்கிறவர்களுக்கும் குறி அறுந்து விழப் புது வசவுகளை உருவாக்குவோம்.

 

டெரிலின் சட்டைகளைப் பார்க்க வைத்தாஸுக்கு வாத்சல்யமாகப் போனது. இவர்களும் இங்கிலீஷில் எழுதுகிறவர்களாக இருக்க முடியாது என்று தோன்றியது. இந்த உரையாடலை இனி வரும் அவனுடைய எந்தப் புத்தகத்திலும் புகுத்தி விட முடியும். மேடைப் பேச்சிலும் குறிப்பிடலாம்.

 

வைத்தாஸ் திருமேனி என்று யாரோ விளிக்கிற சத்தம். குடைக்கார சாமு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன