Monthly Archives: October 30, 2015, 11:53 pm

New Bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 25 இரா.முருகன்

டெலிபோன் ரொம்ப அழகாகச் சிணுங்கியது. கயலாக இருக்கும். அவள் கூப்பிட்டால் ஃபோனுக்குக் கூட குஷி தான்.

’என்ன பண்ணிட்டு இருக்கே’? கிண்கிணி கிணிகிணியென்று குளிரக் குளிரத் தெறிக்கும் குரல்.

’நாடகம் எழுத பிள்ளையார் சுழி போட்டேன் தேனே’.

‘தேனா? அது எங்க அக்கா’.

’சரி அவங்களையே கூப்பிட்டதா இருக்கட்டும’என்றேன் சாவதானமாக்.

‘கூப்பிட மாட்டே.. பல்லைத் தட்டிக் கையிலே கொடுத்திடுவேன்.’

‘செய் ..நமக்கு பிரஞ்சு கிஸ் பண்ண வசதியா இருக்கும்’..

’உவ்வே .. ஏண்டா இப்படி புத்தி போகுது? என் கிட்டே பேசாதே..’

’நீதான் போன் பண்ணினே?’.

‘சரி நான் தான் கூப்பிட்டேன். அதுக்காக பிரஞ்ச் கிஸ் அது இதுன்னு..?’

‘காதல்னா அப்படித்தான்.. முத்தம்னா இப்படித்தான்..’ நாக்கைத் துளாவிச் சத்தம் எழுப்பினேன்

‘நாக்குலே டெட்டால் போட்டுக் கழுவு’

‘கழுவிட்டு சுத்த பத்தமா நம்மூரு முத்தம் மட்டும் இனிமே தர்றேன்.. நீ சொன்னா அப்பீலே இல்லே என் குள்ள வாத்தே’. வழக்கம் போல் அந்த மோகினிப் பிசாசைச் சரணடைந்தேன்.

’ஆமா. நீ ஆறடி ஆகிருதி.. ஹேய்..ஒரு உதவி செய்’

’செய்கிறேன் கண்ணே. ஆனா, நோ மோர் கரப்பான் பூச்சி’.

‘அது எல்லாம் வேணாம். எனக்கு ஒரு நல்ல பூட்டு வாங்கித் தா.’

‘எங்கே பூட்டுப் போடணும்’?

‘உன் வாயிலே, அப்புறம் ‘

‘நீ எங்கே வரேன்னு தெரியுது..’ ஒரு சேஞ்சுக்காக அவள் டயலாக்கை எடுத்து விட்டேன்.

‘நான் நினைக்கலே, ஆனா நீயே கரெக்டா சொல்லிட்டே.. சரி … அங்கேயும் இருக்கட்டும்.. அதோடு முக்கியமா எங்க வீட்டு சமையல் கட்டுக்கு பெரிசா ஒரு பூட்டுப் போடணும்.. ’..

என்ன ஆச்சு? டெலிபோன் ஒரு அடி எழும்பிக் குதிக்கக் கேட்டேன்.

’அது பெரிய கதை. நேர்லே தான் சொல்லணும்.. பூட்டோடு வா’. இக்கு வைத்தாள் கயல்.

‘ஓகே, முன் பாரம் பின்பாரமா உங்க வீட்டுலே ரொம்ப சுமாரா ஒரு காபி சாப்பிட்டுக் கிட்டே கேட்கறேன்… மிசஸ் மதியை போட்டு வைக்கச் சொல்லு’

‘காப்பியா, அதெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளது.. மதிமுகம் சோர்ந்து போச்சு.. மத்த முகமெல்லாம் வாடிப் போச்சு’.. கயல் பேச்சு பிடிபடவில்லை. வீட்டில் காப்பிக் குடியை ஒழித்திருப்பாங்க போலே.

’நோ காபி நோ ப்ராப்ளம் …..வேணும்னா .முன்பாரம் பின்பாரமா முத்தம் கொடுத்துக்கலாம்’..

’ஆரம்பிச்சுட்டியா. உலகத்திலே உதடே யாருக்கும் இல்லேன்னா என்னடா செஞ்சிருப்பே?’ அவள் ஆக்ரோஷமாக விசாரித்தாள்.

‘சொன்னால் நீ கோபப்படுவே’.

’மாட்டேன் சொல்லு’

’பிரஞ்ச் கிஸ்தான் கொடுப்பேன், வேறே என்ன?’.

அந்த முனையில் டெலிபோனைத் தரையில் வீசியிருப்பாள் போல. காது வலித்தது.

அரை மணி நேரம் சென்று கயல் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் தான் நிலைமையின் தீவிரம் புலப்பட்டது.

‘’அம்மா சத்சங்கம் போயிருக்கு’ என்று வரவேற்றாள் கயல். அப்பா? பச்சைக் காய்கறி கொள்முதல் செய்ய ஏரிக்கரைத் தோட்டத்துக்குப் போயிருக்கிறாராம். ஏதோ போனால் சரிதான். மெல்லவே வரட்டும்.

சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து ’வா’ என்றேன். நெருங்கி அமர்ந்தாள்.

இடையைச் சுற்றிப் படர்ந்த என் கையை ஊர விடாமல் இறுகப் பற்றி இருந்தாள் கயல். கேசவர்த்தினியும் சந்தன சோப்பும் ரெமி ஸ்னோவும் கொஞ்சம் வியர்வையுமாகக் கலந்து அவளிடமிருந்து வந்த மணம் போதையேற்ற சொர்க்கத்தில் இருந்தேன். காத்லின் மணம் அது.

’கஷ்டம் எல்லாம் பத்து நாள் முந்தி ஆரம்பிச்சதுடா’..

கயல் சோகமாகச் சொன்னாள். வளைத்த இடையில், வளைந்த் கரத்தில், குளிர்ந்த குரலில், விரிந்த விழிகளில் இருந்த களைப்பு இதுவரை நான் காணாதது.

’தண்ணி குடி. இல்லேன்னா டீஹைட்ரேட் ஆயிடும்’ என்றேன்.

ம்ண்பானைத் தண்ணீர் மொண்டு ஒரு வாய் குடித்தாள் கயல். எனக்கும் தாகம் எடுத்ததாகச் சொன்னேன்.

’நினைச்சேன்’. அவள் திரும்ப வந்து பக்கத்தில் உட்கார்ந்து குவளையை ஒரு சுற்று சுழற்றி நீட்டினாள். ’என்ன பார்க்கிறே நான் வாய் வச்சுக் குடிச்ச் இடம் இப்போ தெரியாதே என்ன செய்வே?’.

குவளையை வாங்கி மேஜையில் வைத்தேன்.

‘அங்கே தெரியாட்ட என்ன, இங்கே தெரியுமே’ ஈர இதழ்களை ஒற்றினேன். அவள் வெட்கப்பட்டது ரொம்ப இயல்பாக இருந்தது.

ரெண்டு நாளா சோறு சாப்பிடலே என்றாள்.

பார்வேந்தனார் வீட்டில் அப்படித் திடீரென்று கொடிய வறுமை எங்கிருந்து வந்தது என்று அதிர்ச்சியாக இருந்தது. வாய் விட்டுச் சொல்லியும் விட்டேன்,

’அதெல்லாம் ஒண்ணும் இல்லேடா. சாப்பாடு கிடையாது. அவ்வளவு தான்’.

எதுக்காக எல்லோருமா சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கீங்க என்று விசாரித்தேன். வீட்டுக்குள் கொண்டு வந்து போராட என்ன பிரச்சனை?

’போராட்டம் எல்லாம் ஒண்ணும் இல்லே’ என்றாள் கயல் என் தோளை அணைத்து அந்த ஆதரவில் சாய்ந்து கண் மூடிக் கொண்டு.

’விரதமா? உனக்கு தம்பிப் பாப்பா பிறக்கப் போகுது. சரியா’?

’ஏண்டா எங்கம்மாவைப் பார்த்தா பிள்ளைத் தாச்சியா வந்து நிக்கற மாதிரியா தெரியுது? இந்த் ஆகஸ்டுக்கு அவங்க ஐம்பத்து மூணு வயசு. அப்பா அறுபத்து ஒண்ணு. இங்கே தேன்மொழி அக்காவும் நானும் பெத்து போட்டாத்தான் உண்டு’

’தேன்மொழி அக்கா கதையை சாவகாசமா கவனிச்சுக்கலாம். மத்தப்படிக்கு உனக்கு என் முழு ஆதரவு உண்டு..

‘ஈசா, இவனுக்கு புத்தி கொடேன்’ களைத்த குரலில் இருகரமும் கூப்பிப் பிரார்த்தனை செய்தாள். மூடிய இமைகளை மெல்ல நீவியபடி சொன்னேன் – ஜேசப்பா பேச வந்த விஷயத்தை உடனே சொல்றது எப்படின்னு இந்தச் சிறுமிக்குப் புத்தி தாரும்.. உம் ராஜ்ஜியமே வருக’.

என் கைகளை உடனே விலக்கி எழுந்து நின்றாள் கயல். பார்வையில் வெப்பம் ப்டர்ந்தது.

’என்ன, மதம் மாறியாச்சா? புதுப் பெயர் என்ன? ஜியார்ஜ் கோஷியா, ஜோஸ் வெர்கீஸா? கல்யாணம் என்னிக்கு? எந்த சர்ச்? நான் பொண்ணுக்குத் தோழியா தரையிலே புரளப் புரள வெள்ளை சேடின் பாவாடை கட்டிக்கிட்டு வரட்டா? ஜோசபினுக்கும் உனக்கும் என்ன கிப்ட் தரணும்? சோபா கம் பெட்.? மிக்சி? பத்தமடைப் பாய், தலகாணி?

கோபமே இல்லாமல் சொன்னாள். ஆனாலும் உஷ்ணம் தகித்தது.

’சர்ச், கோவில், மசூதி.. நல்லதே கொடுத்துக்கிட்டு இருக்கட்டும். கல்யாணமும், பேப்டிஸமும், அன்னப் பிரஸ்னமும், மார்க்கக் கல்யாணமும், வித்யாப்யாசமும், நிக்காவும், துலாபாரமும் நடத்தி எல்லோரும் நல்லா இருக்கட்டும். சர்வே ஜனா சுகினோ பவந்து’.

’அடடா, பகவத்கீதை எல்லாம் சொல்றியே’ பழித்தாள் உதடு சுழித்து. இதுவும் ஓர் அழகு தான் இவளிடம். இன்னும் எத்தனை உண்டோ.

’வேணாம் இது இப்போதைக்கு முடியாது.. நீ பத்து வரிகளுக்கு மிகாமல், பூட்டோடு என்னை வரச் சொல்லிக் கட்டளை பிறப்பித்தற்கு முன்கதை சொல். உயிரே’.

’மிகுந்தால் என்ன பண்ணுவே’?

’வரிக்கு அஞ்சுன்னு’. ..

‘கொடுப்பியா’?

‘இல்லே மடியிலே படுக்க வைச்சு நீ தரணும்’.

‘வேறே பொண்ணைப் பாரு’.

‘இது முடிச்சதுக்கு அப்புறம் போகறேன் .. இந்தத் தெருவிலேயே ரெண்டு பார்த்து வச்சிருக்கேன்… முக்கியமா அந்தக் கோடி வீட்டுலே சுருட்டை முடியும் காதிலே ஜிமிக்கியுமா ஒரு ரெட்டை ஜடை’.

கயல் பளாரென்று அறைந்தாள். ‘ரத்தக் கண்ணீர் எம் ஆர் ராதா மாதிரி கையும் காலும் அழுகி அலஞ்சு அலஞ்சு சாகப் போறே’ என்று சபித்தாள்.. மனம் சிரித்தாலும் கன்னம் வலித்தது.

நான் மொழுமொழுவென்று கயலுக்கு வாய்த்த அவள் கையையும் கொலுசு கவ்விய கணுக்காலையும் பார்த்தபடி நின்றேன்.

’எண்ணெய் தேச்சுக் குளிச்சியாடி? கண்ணைப் பறிக்குது கையும் காலும்’.

‘இனிமே உனக்கு முன்னாடி கோஷா தான் போட்டுட்டு வரணும். கண்ணாலேயே நீ நீ.. கர்ப்பமாக்கிடுவே’.

அவள் இரண்டு கையாலும் முகத்தைப் பொத்திக் கொள்ளக் கைகளை விலக்கி இன்னொரு தடவை அந்த உதடுகளைச் சிறைப் பிடித்தேன்.

விஷயத்துக்கு ஒருவழியாக வந்தாள் கயல் அதாவது நான் வர அனுமதித்தேன்.

’கல்லாடச் சித்தர்னு கேள்விப் பட்டிருக்கியா’ என்றாள் கயல்.

’இப்பத்தான் கேக்கறேன்’.

’திடீர்னு போன மாசம் ஒரு ஞாயித்துக்கிழமை சித்தாந்த சாமி மடத்துலே போய் உக்கார்ந்துக்கிட்டார்டா’.

‘பத்மாசனம் போட்டா’?

‘பத்மா ஆசனம் போடலே அவரே தான் போட்டுக்கிட்டு உக்காந்தது’.

’எங்கே இருந்து வந்தார்’?

‘தெரியாது’.

’கேட்கலாமில்லே’?

‘எதுக்கு’? எனக்குப் பதில் தெரியவில்லை.

’இங்கே யார் வேண்டப்பட்டவங்க’?

‘ரிடையர்ட் ஜட்ஜ் நாலு வீடு தள்ளி இருக்கார். அவர் பெயரைச் சொன்னார்’.

ஜட்ஜ் கிட்டே கேட்க வேண்டியதுதானே’.

’எங்கே… அவர் நைஸுக்குப் போய் நாலு மாசமாச்சு’.

’எங்கே போனார்னு சொன்னே’?

பேச்சை அந்தரத்தில் விட்டுவிட்டு கயல் பாய்ந்து வந்தாள்.

’டேய் நீ இப்போ பார்த்தே இல்லே…. இல்லேன்னு சொல்லு பார்க்கலாம்’. அவள் என் கண்ணைக் குத்துகிற மாதிரி விரல் நீட்டினாள். அவளுடைய இடையில் வைத்த கண்ணை அவசரமாக நகர்த்தினேன்..

’எங்கே பார்த்தேன்’? விடாப்பிடியாகக் கேட்டேன்.

’உனக்கே தெரியும்’.

’தெரிஞ்சா பாக்காம எப்படி இருக்கறது’?

அந்தக் கறுப்பு தாவணிக்கு வாய் இருந்தால் சிரிக்கும். இடுப்பை இன்னும் இறுக்கி மேலே சாக்லெட் உறை போல சிக்கென்று பரவிப் படர்ந்து அவளை இன்னும் எடுப்பாகக் காட்டியது. கயல் ஓ கயல்.

சரி, கல்லாடச் சித்தர் ஒரு ஞாயிற்றுக்கிழமை சித்தாந்தசாமி மடத்துக்கு வந்தார். அப்புறம்?

‘பசிக்குதுடா’.

கயல் பரிதாபமாகச் சொல்ல மேற்கொண்டு கதை கேட்க விருப்பம் இல்லை. அவளை என்ன காரணத்துக்காகவோ பட்டினி போட்டு நிலவறையில் தள்ளிச் சாட்டையால் அடிக்கிறதாகக் கற்பனை செய்து, அந்தப் போலிச் சாமியாரை சற்றே என் காலால் உதைத்தேன். கயலின் பசித்த முகம் பார்த்து, உதைத்தது போதாது என்று பட ஓங்கி சொல்லக் கூடாத இடத்தில் மிதித்தேன். கல்லாடச் சித்தா, நைந்து ஒழிந்து போ.

சைக்கிளில் பின்னால் வைத்து கயலை நான் ஓட்டி வந்து நிறுத்தியது கேளு நாயர் ஐயப்பா அஞ்சு நட்சத்திர ஓட்டல் என்று பெயர் மரக் க்தவில் எழுதிய இடத்துக்கு. ஆப்பாயில் முட்டை, ஆப்பம், ஸ்டூ, புட்டு கடலை என்று கதவிலேயே எழுதி இருந்த மெனு.

ஒரு புட்டும் கடலையும் ஓர்டர் செய்தேன் கேளு நாயரிடம். இவிடெ வச்சுக் கழிக்க என்று சொல்லிக் கயல் முகத்தைப் பார்க்க, அடக்க முடியாமல் சிரிப்பு பொங்கி வழிந்தது அவளுக்கு. இப்போ என்ன, நீங்க சாப்பிடுவீங்க, நாங்க கழிப்போம் என்றேன். சிரிப்பு ஓயவே இல்லை.

நாயர் சுடச்சுடப் புட்டும் கடலையும் வைத்துவிட்டு உள்ளே போனார்.

’பலகாரம் வேண்டாம்டா அப்பாவுக்குத் தெரிஞ்சா ஏசுவார்’.

’எதுக்காக ஏசுவார்? சாப்பிட்டாவா’?

’சாப்பிட்டா தப்பில்லே. ஆனா அது இயற்கை உணவா இருக்கணும்’..

‘இது இயற்கையா விளைஞ்ச நெல்லை அரைச்சு இயற்கையான தண்ணியைக் கலந்து அசல் நாயர் செஞ்ச புட்டு, சாப்பிடு’ என்றேன்.

கயல் ஆவலோடு நீளக் குழலாக இருந்த புட்டை உதிர்த்து எடுத்து வாயில் இட்டாள். அவள் முகவாயிலும் உதட்டிலும் தங்கிய துகள்களை ஒற்றி எடுத்து உண்டபடி கேட்டேன்.

’இயற்கை உணவா? அப்படீன்னா’?

’எப்படி சொல்றது.. சரி.. கேளு .. எங்க வீட்டுலே ரெண்டு நாளா இதுதான் மெனு – காலையிலே எழுந்ததும் தேங்காயைத் துருவிப் பிழிஞ்சு ஏலக்காய் பொடிச்சுப் போட்ட, காய்ச்சாத தேங்காய்ப் பால்.’

’எப்போவாவது குடிக்கலாம். தினமும் குடின்னா குமட்டுமே’?

’என்ன பண்ண? அதுதான் தினசரி நடைமுறை இனிமே’.

‘.அட கண்றாவியே அப்புறம்’?

’குளிர்ந்த தண்ணீர்லே சோப் கூட போடாம குளிச்சிட்டு ஆளுக்கு நூறு கிராம் வெண்டைக்காய், ஐம்பது கிராம் புடலங்காய், ஒரு தேக்கரண்டி மொச்சை, அதே அளவு ஊற வச்ச கொண்டைக்கடலை, ஒரு பச்சை மிளகாய், ஒரு பூவன் வாழைப்பழம்… காலையிலே பசியாற.. ப்ரேக்பாஸ்ட் இது’

’இத்தனையும் கலந்து போட்டு சமைச்சா எப்படிச் சாப்பிடறது’?

’சமையலா? அடுப்பு கிட்டேயே போக கூடாது.. பச்சையாத் திங்கணும். அதுவும் வாயிலே போட்டதை நல்லா ரெண்டு நிமிஷம் சவச்சு இறக்கணும்’.

அவள் என் கைக்குட்டையை உருவி சாவதானமாக எச்சில் கையைத் துடைத்து விட்டு எழுந்தாள்.

’இது யாருக்கு? காக்காய்க்கா’? மிச்சம் இருந்த புட்டையும் கடலையையும் காட்டிக் கேட்டேன்.

’உனக்குத்தான்.’

‘சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அப்படித்தான். பொண்டாட்டி சாப்பிட்ட எச்சலை புருஷன் தின்னா ரெண்டு பேருக்கும் சொர்க்கமாம்’

‘நீ ஜோசபினைக் கட்டிட்டு கிறிஸ்துவ சொர்க்கத்துக்கு போ.. நான் தனியா எங்க ஜாதிஜனம் இருக்கற சொர்க்கத்துக்குப் போறேன்’.

‘அப்படி ஒண்ணு இருக்காது.. இருந்தாலும் காலியா இருக்கும்’ என்றேன். எதிரே நின்றபடி சிரித்தாள்.

‘’உட்கார்ந்து மீதிக் கதையைச் சொல்லு. இத முடிச்சுடலாம்’.

நான் கிள்ளித் தின்றேன். கல்லாடச் சித்தர் ஞாயிற்றுக்கிழமை பகல் பொழுது ராகுகாலம் கழிந்து ஏழெட்டு ஊர்ப் பெருமக்களைச் சந்தித்து இயற்கை உணவு பற்றி சொல்லி நோட்டீசும் கொடுத்தாராம். சமையலறையே சாத்தான். சமைத்து உண்பது விஷத்தை உண்பது. இயற்கையை உண்ணுவீர் உடல் நலம் பேணுவீர் என்று போட்ட பிட் நோட்டீஸ்களாம் அதில் பலதும்.

நாயர் கொண்டு வைத்த டீயை ஆளுக்குக் கொஞ்சமாகக் குடித்தோம்.

’ஏன் கேக்கறே. அந்த சித்தர். ’.. கயல் சிரிக்க ஆரம்பித்தாள்

சித்தர் காலையிலே டாய்லெட் போய் வந்தால் கம்மென்று மணக்க மணக்க மல்லிகைப் பூ வாசனையாக இருக்குமாம்

உவ்வே என்றேன். அதை எல்லாமா ஒருத்தன் சாதனையாக்ச் சொல்வான்?

’அவர் சொல்றாரோ இல்லையோ, அவரோட சிஷ்யகோடிகள் அதைச் செஞ்சுடறாங்க. தெரு முழுக்க, எங்க பேட்டை முழுக்க அவருக்கு ஆட்பட்டாச்சு. தினம் ஒரு வீட்டுலே சத்சங்கம். ’

’சத்து மாவு திங்கறதுக்கா’?

’உனக்கு சிரிப்பா இருக்கும்டா. சின்னப் பிள்ளைகளுக்கு மட்டும் அதாவது பத்து வ்யசுக்குக் கீழே இருக்கற பசங்களுக்காக காய்ச்சின பால்லே கலந்த சத்து மாவு உருட்டித் தரலாம். மத்தவஙக், காய்ச்சாத பாலோடு தான் அதை சாப்பிடணும்.’

‘கொடுமையோ கொடுமை கண்ணம்மா’..

இந்தக் கூத்துக்கு சட்டம் எடுத்துக் கொள்வது என்று சடங்குப் பெயராம். அடுப்பே சாத்தான் என்று நாலு தடவை முழங்கி ஸ்டவ் அடுப்பை உடைத்துப் போட்டு, அது ஒரு ரகளையாம். கயல் வீட்டில் அந்தப் பேட்டைக்கே முதல்முதலாக சமையல் எரிவாயுவுக்குப் போயிருந்ததால் உடைக்க ஏதுமில்லையாம். மற்றபடி ஊருக்கு முதல் குடும்பமாக பார்வேந்தனார் ஏற்பாடு செய்து சட்டம் எடுத்தானது.

சத்சங்கம் முடிச்சு அம்மா வந்திருப்பாங்க’

தெருமுனையில் இறங்கி எனக்கு முன்னால் கயல் அவசரமாக நடக்க, நான் சைக்கிளில் பின் தொடர்ந்தேன். மதிமுகத்தம்மாள் வந்திருக்கவில்லை.

கயல் கதவைத் திறந்து என்னை உள்ளே அழைத்தபோது அம்மா வந்தாள்.

மதிமுகம் வாடியிருந்ததைக் கவனித்தேன். உடம்பும் தளர்ச்சி கூடி இருந்தது. உடம்பு சரியில்லாதவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடு நான் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்ள வலிந்து சிரிக்கும் சிரிப்பும் மிகையாகக் கையைக் காலை ஆட்டுவதுமாக இருப்பார்களே, மதிமுகத்தம்மாளைப் பார்க்க அதுதான் நினைவு வந்தது.

’ஆண்ட்டி, ரொம்ப உற்சாகமா இருக்கீங்களே, நெல்லிக்கனி ஏதாவது உண்டீர்களா’?

’நீ ஒண்ணு தம்பி, அது ஒண்ணு தான் பாக்கி. ஞாபகம் இல்லே போலே. சொன்னா அதையும் மார்க்கெட்டுலே வாங்கி மூட்டை கட்டிக் கொண்டு வந்து கொட்டி, பகல் சாப்பாட்டுக்கு வச்சுக்கோன்னுடுவாரு’.

’அட பாவமே, ஏன் இப்படி ஆச்சு? வாய்க்கு ருசியாச் சாப்பிடக் கட்டுப்பாடாமே’

’கட்டுப்பாடு எல்லாம் இல்லே. நல்லதைத் தின்னு நல்லதைப் பேசி நல்லதை நினைச்சு நல்லா இருப்போமேன்னு தான்’.

’ஆண்ட்டி பாருங்க நீங்களே மேடையிலே பேசற மாதிரி அழகா அடுக்கறீங்க .. நெல்லிக்கனி எபக்டே தான்’.

சாதா நாளாக இருந்தால் இந்தக் குளிர்ச்சியில் சிலிர்த்து சூடான காப்பியோ எலுமிச்சம்பழ ஷர்பத்தோ கொடுத்திருப்பாள்.

’இரு கொஞ்சம் முருங்கை இலைச் சாறு எடுத்து வரேன். ஒரு அரை மூடி தேங்காய் தரட்டுமா இல்லே உடச்ச காயைத் தரேன் நீ பல்லாலே துருவித் தின்னுக்கறியா’? கயல் அம்மா என்னை உபசரித்தாள்.

பல்லால் தேங்காய் மூடியைத் துருவித் தின்ன நான் என்ன அனுமான் அவதாரமா? சட்டென்று மனதில் வந்த ஓவியக் காட்சியில் கயல் வீட்டுத் தோட்டத்தில் ஆளுக்கொரு தென்னை மரமாக ஏறிப் போய் உட்கார்ந்து மட்டைத் தேங்காய் உரித்து தலையில் மோதி உடைத்து நீண்டு வளைந்த பல்லால் துருவித் துருவித் துருவித் தின்கிற பார்வேந்தர் குடும்பம் ஒரு வினாடி கடந்து வந்தது. கச்சையும் இடுப்பில் மேகலையும் பல்லவமும் இன்னும் ஏதோ சங்க கால நகையுமாக அந்தக் கோலத்திலும் கயல் டக்கராகத்தான் இருந்தாள்.

’வாடா இந்த மரம் காலியா இருக்கு’. கயல் கை காட்ட நான் பக்கத்து மரத்தில் ஏறும்போது எனக்கு வால் முளைத்துக் கொண்டிருந்தது.

’இன்னும் எத்தனை நாள் ஆண்ட்டீ இந்த விரதம்’?

’விரதம் இல்லேப்பா. சட்டம் எடுத்துட்டிருக்கோம். இனிமேல் எப்பவும் இப்படித்தான்’.

’ஐயையோ கயலும் கூடவா’?

’அவளுக்கு கல்யாணம் ஆகி உங்க வீட்டுலே என்ன சொல்றீங்கன்னு பொறுத்தது அது’

நான் உச்ச பட்ச சந்தோஷத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தேன்.

கயலை இருபத்து நாலு மணி நேரமும் பக்கத்திலேயே உட்கார வைத்துப் பார்த்துப் பசியாறினாலும் இந்த சந்தோஷம் கும்மாளி கொட்டிக் கொப்பளித்து வராது. மதிமுகத்து அம்மாளுக்கு மனதில் ஆயிரம் நன்றி சொன்னேன். அத்தை என்று கூப்பிடத் துடித்தேன்.

இவ்வளவு பிரியமும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருக்கிறவர்கள் இப்போதே கயலை என் பொறுப்பில் விடலாம் என்று தோன்றியது. ஐந்தாறு வருஷம் தேங்காய் தின்று கல்யாண நேரத்தில் அவள் பல்லெல்லாம் உள்ளே வளைந்து போகுமோ. அல்லது பச்சை வெண்டைக்காயும் மிளகாயும் புடலங்காயும் தின்று தின்று காய்கறி வாசனை கமகமக்க வருவாளோ.

சட்டம் ஏற்பதின் மகிமையை என்னிடம் சாங்கோபாங்கமாக விளக்க மதிமுகத்தம்மாள் முற்பட்டபோது ’ஆண்ட்டி ஏற்கனவே நீங்க சரியாச் சாப்பிடலே இதுலே ரொம்ப பேசினா சிரமமா இருக்கும். நான் வீட்டுக்குப் போறேன்’ என்று கிளம்பினேன்.

‘அடுத்த வாரம் காலேஜ் திறக்கறாங்க. கடைசி வருஷமாச்சே படிப்புலே கவனம் வைக்கப் போறீங்க தானே ரெண்டு பேரும்?’

’நிச்சயம் ஆண்ட்டி’.

’நல்லா படியுங்க. நல்லா வரணும். தேன்மொழி தான் வாய் ஓயாமச் சொல்லிட்டு இருக்கா. எனக்கு இஷ்ட்ம் தான்.. கயல் அப்பா தான் எப்படின்னு தெரியாது. கடிப்பார்னு போனா கட்டிப்பார். கொஞ்சுவார்னு நின்னா கொட்டுவார்’, கயல் அம்மா கனிவாகப் பார்த்தபடி சொன்னாள்..

’உங்களை கொஞ்சிட்டுக் கட்டிப்பாரா, கட்டிக்கிட்டுக் கொஞ்சுவாரா’?

’போங்க தம்பி’. நாணுகிற மதிமுகத்தம்மாள் கயலை விடப் பேரழகு.

காபி ஹவுசில் லெச்சுவும் சகாக்களும் கடுங்காப்பி குடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

’பால் வந்து சேரலையாம் மச்சி. அநியாயத்தைப் பாரு. கஷாயம் மாதிரி ப்ளாக் காபி. அதுக்கும் ரெண்டு ஸ்பூன் மேலே சக்கரை கிடையாதாம். சவரிராயன் அண்ணாச்சி சர்வாதிகாரம் ஒழிக’.

ப்ரான்ஸ்வாவைத் தொடந்து கோஷ்டியாக ஒழிக போட, வெயிட்டர் சவரிராயன் ரெண்டு கையையும் கருடாழ்வார் மாதிரிப் பரத்தி நின்று அறிவித்தார் –

’என் தங்கக் குடங்களா, பால் வந்தாச்சு. சத்தம் போடாம உக்காருங்க. தரச் சொல்றேன்.’

’நாடகம் எத்தனை பக்கம் வந்திருக்கு’?

லெச்சு என்னைக் கேட்க, பகீர் என்றது. காலையில் தான் மணல் பூக்கள் என்று தலைப்பு மட்டும் எழுதி ஆரம்பித்தேன். ஜோசபின் விஷயமாக அலைந்து கொண்டிருந்தபோது அவன் சொன்னதை நான் முழுக்க மறந்திருந்தேன். ஜோசபினிடமாவது சொல்லி வைத்திருக்கலாம். அடிக்கடி மென்மையாக ஞாபகப் படுத்துவது மட்டுமில்லை, பிரியமாக செல்லக் குரலில் நச்சரித்து எழுத வைத்திருப்பாள் அந்த வனமோகினி.

ஜோசபின் நினைவு வந்ததுமே இருப்புக் கொள்ளவில்லை. அவளிடம் நிறையப் பேச வேணும். முக்கியமாக கயல் அம்மா சொன்னதை ஒரு வார்த்தை, கமா, புள்ளி விடாமல் சொல்ல வேண்டும். நிச்சயம் ரசிப்பாள். நாம எப்போ கல்யாணம் கட்டிக்கிறது என்று கேட்பேன்.

’என்னடா நாடகம் பத்தி கேட்டா பிரமை பிடிச்ச மாதிரி உக்கார்ந்துட்டே. கதை என்ன அதையாவது சொல்லு’.

லெச்சு கேட்க, அந்துவான் ‘மச்சான் மச்சான்’ என்று எதற்கோ அடிபோட்டுக் கொண்டிருந்தான்.

கதைச் சுருக்கும் சொல்லுடா என்று திரும்ப வற்புறுத்தினான் லெச்சு. எழுதினால் இல்லே சொல்ல? காலையில் பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பித்த நேரம் கயல் டெலிபோன் செய்து என்னையும் என் எழுத்தையும் கடத்திப் போய் விட்டாள். போதாக்குறைக்கு இந்த கலலாடச் சித்தர் விஷயம்.

’பசங்க எத்தனை கதாபாத்திரம் இருந்தாலும் பிரச்சனை இல்லே. பொண்ணுங்க் தான் லிமிடெட் ஆக வைக்கணும். ஆள் பிடிச்சு ந்டிக்க வைக்கறதுக்குள்ளே மூச்சு முட்டிப் போயிடும்’.

வைத்தே சொல்ல எல்லோரும் ஆதரித்தார்கள்.

’கொஞ்சமா டயலாக், பார்க்க லட்சணமா இருக்கற பொண்ணு அப்படி வர்ற மாதிரி எழுது என்று சிற்சபேசன் யோசனை சொன்னான். நல்லா வாட்ட சாட்டமா எடுப்பா இருக்கற பொண்ணா வேணும் என்றான் பிரான்ஸ்வா. கருப்பா இருக்கட்டும், அப்போ தான் ஸ்டேஜ் விளக்கிலே அம்சமா வரும் என்றான் வைத்தே.

‘இவன் கேர்ள் பிரண்ட்கள் மாதிரி வரணும்’ என்னைக் காட்டி லெச்சு சொன்னான். ரொம்பப் பெருமையாக இருந்தது.

யாரைக் கதாநாயகியாக நடிக்கச் சொல்லிக் கேட்டுக் கொள்ளலாம் என்று பேச்சு திருமப நான் எதிர்பார்த்த படியே. ஜோசபினையும், கயலையும் கேட்டுப் பார்க்கச் சொல்லி யோசனைகள். பிடிவாதமாக நிராகரித்தேன்.

நானே வேணும்னா ஸ்திரி பார்ட் போடறேன்.. அவங்களைக் கேட்காதே என்று மன்றாடி அவர்களைப் பேச்சில் இருந்து விடுவித்தேன்.

’ஹீரோயின் வந்தாச்சு’

திடீரென்று லெச்சு சத்தமாக அறிவிக்க எல்லோரும் வாசலைப் பார்த்தோம்.

மோட்டார்பைக்கை நிறுத்தி விட்டு ருழேப் பொண்ணு வந்து கொண்டிருந்தாள். கூடவே அமேலி.

என் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. நாலு நாள் ஜோசபினைச் சந்திக்காமல் இருந்து அவள் வரும்போது தூரத்தில் இருந்து பார்க்கிற உணர்வில்லை இது. அங்கே பீரிட்டுப் பொங்கும் நேசம் முகம் இல்லாதது. அந்த அன்புக்கு நிறைவான விளக்கம் தர முடியாது. அவள் நானாகவும் நான் ஜோசபினாகவும் இருந்து தான் அதை இன்னொரு முறை நிகழ்த்த முடியும்.

ஒரு வாரம் ஏதேதோ காரணத்தால் என் கயலைச் சந்திக்க முடியாமல் போய் கண்ணுக்குள்ளேயே இருக்கும் அவள் தெருமுனையில் சைக்கிளில் மிதந்து வரும்போது மனது தளும்பிப் பிரவாகம் கொள்ளும் பாசமும் இல்லை இது. பிள்ளைக் காதலும், நம்பிக்கையும், சின்ன ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷமும், சிறு பூசலும், சமாதானமுமாக பொங்கிப் பிரவகிக்கும் அன்பின் வெளிப்பாடு அது.

அமேலியைப் பார்க்கும் போது எனக்கு ஏற்படும் அற்புதமான உணர்ச்சிக்கு என்ன பெயர்? அவள் ஏவாள், நான் ஆதம். இது ஈடன் தோட்டம். முதல் தடவையாகச் சந்திக்கிறோம். ஒவ்வொரு சந்திப்பும் முதல் சந்திப்பு தான். சேர்ந்து எரிந்து தான் இந்தத் தீ தணியுமோ.

அமேலி என்னைத்தான் பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள். ஒரு வினாடி காலடியில் பதிந்த அந்த விழிகள் மறுபடி உயரும். உயர்ந்து என்னை விழுங்குவது போல் பார்க்கும் மீண்டும் மீண்டும் மீண்டும். மெலிந்திருக்கிறாள். என் கனவுகளைக் காவு கொள்ளப் போகும் உடல் அவளுக்கு. மனதில் எழும் மிருகத்தைத் துரத்தி விட்டு, அலாதி சோபையோடு நடந்து வரும் அமேலியை எதிர்கொள்ள ஓடினேன்.

எப்படி இருக்கே? கண்ணால் விசாரித்தாள். அவள்

வைத்த கண் எடுக்காமல் பார்க்கும்போது ருழே பட்டென்று என் முன் கை சொடுக்கி உறங்கிட்டியா என்றாள். அமேலி என்ற கொல்லிப்பாவையை நினைத்தாலே உறக்கம் போயொழியாதோ?

அரசவைக்குப் பேரரசியைக் கூட்டி வரும் ராஜ ஆராதகனாக அமேலி கைபற்றி அழைத்துக் கொண்டு நான் உள்ளே மெல்ல நடக்க, லெச்சுவும் மற்ற சகாக்களும் உற்சாகமாகக் கை தட்டினார்கள். காபி சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரஞ்ச் முதிய தம்பதியும், லுமும்பா பல்கலைக்க் கழகம் கலாசாரத் துறை என்று எழுதிய கருப்பு ஸ்போர்ட்ஸ் சட்டை போட்ட கருப்பர் இனக் கல்லூரிப் பெண்களும், சவரிராயன் மற்றும் இதர வெயிட்டர்களும் கூடக் கைதட்ட ராணி கம்பீரமாகக் கை அசைத்து வந்து என் பக்கத்து நாற்காலியில் அமர்ந்தாள்.

அமேலிக்கும் ருழேக்கும் காப்பி சொன்னபோது,, அமேலி திரும்பக் கையசைத்து பிளாக் காபி என்றாள். கொஞ்ச நேரம் முன்பு வரைக்கும் அதான் எல்லோருமே குடிச்சிட்டிருந்தோம் என்றான் லெச்சு.

அமேலியை உற்றுப் பார்த்தேன். அவளிடம் ஏதோ மாற்றம் தெரிந்தது. தழையத் தழைய இருந்த கருங்கூந்தலைச் சின்னதாகச் செதுக்கி சற்றே சிவப்பாக ஒரு சாயமும் தோய்ந்த்திருந்ததாகத் தோன்றியது. கண்கள் இன்னும் காந்தமாக இன்னும் பெரியதாக இன்னும் கூர்மையாகத் துளைக்கிறவையாக உற்று நோக்கின. செழுமையாகத் திரண்ட செவ்விதழ்களையும் துடித்தெழுந்து நின்ற கனத்த மார்பையும் பார்க்கக் கூடாது என்று கட்டுப்ப்டுத்தினாலும் கண் அங்கே தான் நிலைக்கிறது. என் தவிப்பை அமேலி ரசிக்கிறாள் என்று தெரியும்.

இளைச்சுப் போயிட்டே அமீ என்றேன். பொய் என்றது அந்த மார்பு.

’இளைச்சுட்டேனா? ஈபில் டவர்லே தினம் ஏறி இறங்கிட்டிருந்தேன் அதான்.’.

அவள் என்னைப் பார்த்துச் சிரித்ததற்கு அர்த்தம் புரியவில்ல என்றாலும் மற்றவர்கள் சிரித்ததால் நானும் சிரித்து வைத்தேன்.

’நீ வரமாட்டேன்னு நினைச்சோம்’ என்றான் ப்ரான்ஸ்வா.

’எதுக்கு வந்தா இவன்னு இருக்கும் சில பேருக்கு. அதுக்காகத் தான் வந்தேன்’.

அவள் சுவாதீனமாக என் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள். விரலால் சதுரம் அமைத்து என் முகத்தை அதனூடே பார்த்தாள்.

’நீ இந்த கோணத்திலே அட்டகாசமா இருக்கே ஷான் கானரி மாதிரி’.

ருழே பொண்ணு தவிர மற்றவர்கள் காதிலிருந்து கரி ரயில் இஞ்சின் மாதிரி புகை வர, கிறங்கடிக்கும் பார்வையோடு என்னைப் பார்த்துச் சொன்னாள். மெர்சி சொன்னேன். மேஜைக்குக் கீழே என் உள்ளங்கையை நகத்தால் சுரண்டினாள்.

எனக்கு ஷகொலா எடுத்து வந்திருக்கியா என்று கேட்டேன். பதிலாக என் காதில் ரகசியமாக அவள் கிசுகிசுத்ததோடு ஒப்பிட்டால் பிரஞ்ச் கிஸ் சுத்த சைவம்.

அமைதியான அழகு சுடர்விட்ட பழைய அமேலி எங்கே போனாள்?

அவள் காப்பி அருந்த, அந்துவான் தான் மெல்லத் தொடங்கினான்.

’அமேலி டிராமாவிலே நீ ஹீரோயினா நடிக்கணும்னு நாங்க எல்லோரும் விரும்பறோம்’

எல்லோரும் ஓங்கிக் கைதட்டினார்கள். அந்த்வான் முழு வாக்கியத்தை நிறுத்தாமல் பேசியதற்கும் சேர்த்து ஏற்பட்ட மகிழ்ச்சி அது.

’ஐயோ, எனக்கு எல்லா சப்ஜெக்டும் அரியர்ஸ் விழுந்திருக்கு. ஒரு நண்பன் எல்லா உதவியும் செய்வான். நினைச்சது முழுக்கச் சாதிக்கலாம்ன்னு கிரிஸ்டல் பார்த்து பாரீஸ் ஈபில் கோபுரம் கிட்டே ஒரு மந்திரக்காரி ஜோசியம் சொன்னா. மும்முரமா இனி படிப்புதான்’.

அமேலி சொல்லியபடி என்னைப் பார்த்தாள். எனக்குப் புரிந்தது.

’சரி அமேலி அரியர்ஸை க்ளியர் பண்ணட்டும். ருழே நீ எப்படி’? லெச்சு கேட்டுக் கொண்டே இருக்க ருழே எங்கேயோ பார்த்தாள்.

’உன்னைத் தான் சாந்தி ரோஜர்’ என்றேன் நான் வேணுமென்றே.

’ரோஜர்னு ஒரு பிள்ளையும் இல்லே. நான் சாந்தி ருழே’..

அவள் பாய்ந்து வர, நான் எழுந்து அவள் தோளில் அழுத்திக் கிடுக்குப் பிடி போட்டு உட்கார வைத்தேன்.

இந்தப் பையன் இருந்தா இனிமே வரமாட்டேன் என்று பொய்க் கோபம் காட்டினாள் ருழே. சாரி சொன்னேன். காவாலே போடு என்றாள். அதாவது? அமேலியைப் பார்க்க அவள் சாக்கடையில் போடச் சொல்றா என்றாள். அமேலியின் கால் விரல்கள் டேபிளுக்குக் கீழே மெத்தென்று என் கால் விரல்களோடு பிணைந்து விளையாடிக் கொண்டிருந்தன்.

’யாராச்சும் ப்ரஞ்ச்லே தமில் எலுதினா பேஸ்டுவேன்’ என்றாள் ருழே.

லெச்சு உடனே வழி சொல்லி விட்டான். என்னைக் காட்டி, இவன் ஒரிஜினலை எழுதி அமேலி கிட்டே தரட்டும். அமேலி உனக்கு ப்ரஞ்சுலே அதை எழுதிக் கொடுத்திடுவா. சரியா?

’அம்ஹஸ் மா மோன் அமு, செர் ம ஃபோ இப்படி எல்லாம் வசனம் இருந்தால் பேச மாட்டேன்’ என்றாள். நான் அமேலியைப் பார்த்தேன்.

’உனக்காக உயிரையும் கொடுப்பேன், நீ இல்லாமல் நான் இல்லை இப்படி எல்லாம் செயற்கையா வசனம் இருந்தா பேச மாட்டாளாம்’

’இல்லாம எழுதித் தரேன்’ என்றேன்.

எல்லோரும் போன பிறகு நானும் அமேலியும் புறப்பட்டோம். கொண்டு போய் விடு என்றாள் அதிகாரமும் உரிமையுமாக.

‘அமீ, எங்கே போகணும் நீ?

‘அதே லலி தொலெந்தால் தெரு.. கர்ன்ல வீட்டுலே பேயிங் கெஸ்ட். உனக்கு ரொம்பப் பிடிச்ச் இடம் இல்லியா’?

மனதில் சட்டென்று எங்கோ பூட்டுத் திறந்தது. நுரைத்து போதையேற்றும் நெடியோடு திரவம் ஏதோ வெள்ளமாகப் பெருகி மூச்சு முட்ட வைத்துச் சூழ்ந்து உள்ளே அழுத்தியது.

என் சைக்கிளை அமேலி தள்ளிப் போக, எதுவும் பேசாமல் கூடவே நடந்தேன்.

இருட்டான தெருக் கோடியில் சைக்கிளை சமிதிக் கட்டிடச் சுவரில் சார்த்தி விட்டு வாடா என்றாள்.

என் தோள்களில் தன் கையிரண்டையும் மாலையாகப் படர வைத்து, தலையை அவசரமாகக் கீழே இழுத்துத் தன் தலையில் முட்ட, கண்கள் மூடி சற்றே குதிகால் உயர்த்தி அணைத்தாள்.. உதடுகளை உதடுகள் கொண்டு உணர்ந்து அவள் அளித்த உக்கிரமான, உள்ளே தீ பரவ வைத்த முத்தம் அது.

அவள் இதழ்கள் தீண்டிப் போன உதட்டில் பாஸ்பரஸ் தீற்றிய மாதிரி எரிந்து முகத்தைத் தகித்தது. என்னையும் பற்றிப் படர ஆரம்பித்த அக்னி அது.

’அம்ஹஸ் மா மோன் அமு, செர் ம ஃபோ’.

’அது செயற்கையானதுன்னு சொன்னியே.. நான் எழுத மாட்டேன் அபபடி’. மென்மையான காது மடலை மெல்லக் கடித்தேன். தலை உயர்த்திப் பார்த்தாள்.

’நிஜமான அர்த்தம் சொல்றேன் கேளு.. கிஸ் மி மை லவ், ஹக் மீ .. ஹோல்ட் மி டைட்… கமான்..’

இறுகத் தழுவினாள் அமேலி. கிறங்கி வழிகிற கண்கள். மனதிலோ உடலிலோ புகுந்த பிசாசு எதுவோ கொண்டு செலுத்துகிற அசைவுகள்.

எங்கேயோ கதவு திறந்து கூட்டமாகப் பேசியபடி வந்தார்கள். தெருவில் நடமாடம் கூடுவதை உணர்ந்தேன்.

’அமேலி, இங்கே வேணாம். ரோடு ,, வீட்டுக்குப் போய்’ ..

’இருடா’

’அமி வா.. வீட்டுலே விட்டுட்டுப் போறேன்..

’ம ஷெரி.. செர் ம ஃபோ இறுககி இன்னும் இறுக்கி அணைச்சு. கிஸ் பண்ணுடா. மாட்டியா.. நான் பண்றேன்….

ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தது. பேங்க் ஜீப்

டிரைவர் சின்னராஜு பக்கம் ஜீப்பின் தோல் வாரைப் பற்றியபடி அப்பா.

(தொடரும்)

இரா.முருகன் குறுநாவல்கள் – தொகுப்புக்கு எழுதிய முன்னுரையிலிருந்து


வெளிவர இருக்கும் ‘இரா.முருகன் குறுநாவல்கள்’ நூலுக்கு (கிழக்கு பதிப்பகம் வெளியீடு) நான் எழுதிய முன்னுரையில் இருந்து -

குறுநாவல் வடிவம் மட்டுமில்லை, அதைப் பற்றிய இன்னொரு நிதர்சனமும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே கற்றுக் கொண்டாயிற்று. குறுநாவல்கள் கண்டிப்பாக இலக்கியப் பத்திரிகைகளுக்கு, அதாவது சிற்றிதழ்களுக்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டியவை. வெகுஜனப் பத்திரிகைகள் இப்படி ஒரு இனம் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது என்ற பிரக்ஞையே இல்லாமல், அல்லது தெரிந்தும், இப்ப என்னங்கிறே என்கிற அலட்சியத்தோடு சிறுகதையை மட்டும் கலர்ப் படங்களோடு பிரசுரித்து தமிழ் கூறும் நல்லுலகத்துக்குக் கதை சொல்லும் கடமையாற்றிக் கொண்டிருந்தன. அது தமிழ்ச் சிறுகதையின் பொற்காலம் என்று சொல்லலாமா? தாராளமாகச் சொல்லிக் கொள்ளலாம்.

குறுநாவல் இலக்கணமாகப் பயின்று வரும் மற்றக் கூறுகள் யாவை? சொல்வோம்.

குறுநாவலுக்குப் பரபரப்பான முடிவு இருக்க வேண்டும். ஒரே ஒரு ஒற்றை இழையாகத் தான் கதை ஓட வேண்டும். சப் ப்ளாட் என்று கதைக்குள்ளே கதையாகக் குறுக்குச் சால் போட அனுமதி இல்லை. அத்தியாயங்களாகப் பிரித்து நம்பர் போட்டு எழுதக் கூடாது. போனால் போகிறது, இரண்டு அடுத்தடுத்த பகுதிகள் இடையே போதிய இடைவெளி கொடுத்துப் பிரிவினையை ஊக்குவிக்கலாம்.

இதெல்லாம் தெரியாததால் எல்லா இலக்கணத்தையும் மீறிக் குறுநாவ்ல எழுதப் போனோம். அத்தியாயங்களுக்கு நம்பர் போடுவதை மட்டும் பத்திரிகை கம்பாசிட்டர்களும் உதவி ஆசிரியர்களும் கவனித்துக் கொண்டார்கள்.

எல்லா இலக்கியப் பத்திரிகைகளும் குறுநாவல்களைக் கேட்டு வாங்கிப் பெற்று மகிழ்ந்து பிரசுரம் செய்தன என்று சொல்ல முடியாது. முப்பத்திரெண்டு பக்கமுள்ள பத்திரிகையில் குறுநாவல் முப்பது பக்கத்தை அடைத்துக் கொண்டு விட்டால், சந்தா அனுப்புங்கள் கோரிக்கையும் ’போன மாதம் வந்த எந்தக் கவிதையும் நன்றாக இல்லை’ என்ற வாசகர் கடிதமும் பிரசுரிக்க மீதி ரெண்டு பக்கம் மட்டும் இருக்கும்.. அபூர்வமாக கோல்ட் கவரிங் விளம்பரம் கிடைக்கும் பத்திரிகையாக இருந்தால் இந்த ஏற்பாடும் அலங்கோலமாகி விடக் கூடும்.

தமிழ் இலக்கிய இதழ்களில் குறுநாவலை மிகத் தீவிரமாக ஆதரித்து வந்த பத்திரிகைகளில் கணையாழிக்கு முக்கிய இடம் உண்டு. 1990-களில் ஆண்டு தவறாமல் குறுநாவல் போட்டி நடத்தித் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்த கணையாழியும் கஸ்தூரிரங்கன் சாரும் இல்லாமல் இருந்திருந்தால் நான் முதல் குறுநாவலான ‘விஷம்’ எழுதி இந்த இலக்கியப் பகுப்பில் அடியெடுத்து வைத்திருப்பேனா என்று சந்தேகம் தான்.

அந்தக் காலகட்டத்தில் என்னோடு ஆண்டு தோறும் கணையாழிப் போட்டிக்கு எழுதிய நண்பர்களான ஜெயமோகன், பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் நானும் நாவலுக்குப் போய்விட்டோம் அழகியசிங்கர் விருட்ச் நிழலில் அமர்ந்திருக்கிறார். மற்றவர்களும் குறுநாவலுக்குத் திரும்பும் உத்தேசத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

குமுதத்துக்கு சுஜாதா ஆசிரியராக இருந்த ஆண்டில் அவர் அந்த லட்சச் சுழற்சி வெகுஜன இதழில் புகுத்திய மாற்றங்களில் குறுநாவ்லும் உண்டு. அந்த அத்தி அவருக்குப் பின் பூக்கவில்லை.

இனியும் ஒரு முறை நீராட முடியாத நதியாகக் குறுநாவல் தோன்றுகிறது. என் இந்தக் குறுநாவல்களை பாசத்தோடு பார்க்கிறேன். மறு வாசிப்பிலும் இவை எனக்கு நல்ல வாசக அனுபவத்தையே தருகின்றன. முதல் வாசகனான எழுத்தாளனுக்குக் கிடைத்த அதே அனுபவம் இவற்றை நூல் வடிவில் இப்போது படிக்கும் வாசகர்களுக்கும் கிட்டும் என நம்புகிறேன்.

புது நாவல் : அச்சுதம் கேசவம் அத்தியாயம் 52 இரா.முருகன்


என்ன, கிருஷ்ண ஜெயந்தி வந்த மாதிரி கால் காலா மாக்கோலம்? உன் ஏற்பாடா?

பிடார் ஜெயம்மா காரில் வந்து இறங்கியதும் உரக்க விசாரித்தாள். ரொம்ப சிரத்தை எடுத்து கதர்ப் புடவையைக் கணுக்காலுக்கு உயர்த்திக் கொண்டு, கோலத்தை மிதிக்காமல் தத்தித் தத்தி சங்கரனின் அபார்ட்மெண்டில் நுழைந்தாள்.

சங்கரா, எங்கே போனே?

பாத்ரூமில் தண்ணீர் அடைத்துக் கொண்டு விட்டது என்று ஒட்டடைக் குச்சியால் குத்திக் கிண்டியபடிக்கு மடித்துக் கட்டிய வேட்டியோடு சின்னச் சங்கரன் பிரசன்னமானான்.

கல்சுரல் மினிஸ்டரி அண்டர் செக்ரட்டரி மாதிரியா இருக்கே நீ? ஜெயம்மா சிரித்தாள்.

‘ஆபீஸ்லே பாத்ரூம் அடைச்சாலும் முதல் குச்சி நான் தான்’ என்றான் சங்கரன்.

அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் அவன் லீவு போட்டு விடுவான். இல்லாவிட்டால் வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு டூர் கிளம்பி விடுவான்.

கித்தான் பையில் இருந்து சின்ன சைஸ் ஹோம குண்டத்தை எடுத்த சாஸ்திரிகள் மற்ற சாமக்கிரியைகள் வேணுமே என்று மகா பொதுவாகச் சொல்ல, ஜெயம்மா கேட்டாள் –

சாஸ்திரியவரே, அரணி கடைஞ்சு அக்னி கொண்டு வரப் போறேளா?

வயதான சாஸ்திரிகள். காப்பியை எதிர்நோக்கி இருமி விட்டு ஜெயம்மாவைப் பார்த்தார். எல்லோரும் எல்லாருக்கும் தெரிந்த தில்லி தென்னிந்தியச் சூழலில் புரோகிதர்கள் வெகு பிரபலம். அதுவும் ஜெயம்மா வீட்டுக்கு வந்து போகும் அதே சீனியர் வைதீகர் தான் இவர்.

இல்லேம்மா கொழந்தே, அரணியெல்லாம் எதுக்கு? ஒரு தீப்பெட்டியும் காக்கடாவும் எதேஷ்டம் என்றார்.

அப்படியே அண்டர் செக்ரட்டரி சார் கிட்டே சாக்கடை குத்தறதெல்லாம் சாவகாசமா வச்சுக்கலாம், ஸ்நானம் பண்ணிட்டு மனையிலே உக்காரும்ன்னு சொல்லும்மா.

உள்ளே இருந்து டபரா செட்டில் வழிய வழியக் காப்பி கொண்டு வந்து கொடுத்த சமையல் மாமியையும் தெரிந்தவர் என்பதால் தில்லியில் பீப்ரி காப்பிக் கொட்டை கிடைக்காமல் ரோபஸ்டா மட்டும் வறுத்து அரைத்த காப்பி தொண்டையில் இறங்க மறுப்பது பற்றி அவர் மாமியிடம் புகார் செய்ய, பாத்ரூம் பிரச்சனை தீர்த்து வந்த சங்கரன் தனக்கும் ஒரு காப்பி என்று அடி போட்டான்.

நான் காப்பி குடிக்கறதில்லே என்று ஜூனியர் சாஸ்திரிகள் டபராவை சங்கரனுக்கு நீட்ட, ஜெயம்மா உள்ளே திரும்பி குட்டி சாஸ்திரிக்கு நாலு ஸ்பூன் அஸ்காவும் நாலு கட்டெறும்பும் போட்டு பால் கொண்டாங்கோ என்று சத்தமிட்டாள். வெட்கத்தோடு தாங்க்ஸ் மாமி சொன்ன ஜூனியர், சீனியரிடம் இருந்து வாங்கிக் கொண்ட ஹோம குண்டத்தை மேல் வேஷ்டியால் பிரியமாகத் துடைத்தார்.

ஹோம குண்டம் இப்படி கைக்கடக்கமா செஞ்சு விக்கறதா? நம்மாத்திலே எல்லாம் தரையிலே செங்கல் வச்சுன்னா அக்னி வளர்த்தது? இது எனக்கு ஒண்ணு வேணுமே,

ஜெயம்மா புரோகிதர் கையில் இருந்து அஸ்பெஸ்டாசும் மரமும் இன்னும் ஏதோ உலோகமும் கலந்த ஹோம குண்டத்தை வாங்கிப் பார்த்து விட்டுக் கேட்டாள்.

ஆமா மாமி, புதுசுதான். இது நூர்ணி மேட்.

ஜூனியர் சாஸ்திரி சந்தோஷமாக அறிவித்தார்.

நூர்ணி அப்படீன்னா? ஜெயம்மா புரியாமல் கேட்டாள்.

பாலக்காட்டு பக்கம். எனக்கு ஸ்வதேசம்.

ஜூனியர் சாஸ்திரிகளுக்கு பெருமை பிடிபடவில்லை, சொந்த ஊரில் ஒரு கொல்லர், ஒரு தச்சர், ஒரு மோட்டார் மெக்கானிக் இப்படி ஒரு குழுவை அமைத்து டிசைன் ஸ்பெசிபிகேஷன் சொல்லி வாங்கி வந்த பெருமை அடுத்த ஐந்து நிமிடம் அரங்கேறியது.

என்ன செய்ய, தில்லி பட்டணத்துலே வந்து கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ் சிமெண்ட் தரையிலே அக்னி வளர்த்தா நாளக்கே மெமோ வரும்

உங்களுக்கு யார் மெமோ தர? ஜெயம்மா சிரித்தாள்.

ஏன் கேக்கறேள். ஒரே ஒரு காரியத்துக்குத் தான் கைக்கடக்கமா இன்னும் செஞ்சு வாங்கலே. அதுக்கு அங்கே நிகம்போத் காட்லே கொண்டு போய்க் கிடத்தினா எட்சட்ரா எட்சட்ரா

ஜூனியர் பால் குடித்தபடி தெம்பாகச் சொல்ல, அசத்தே அடக்கி வாசி என்றார் சீனியர்.

புண்ணியாஜனன நேரத்தில் சாவுச் சடங்கு பற்றி வேறெதும் குறிப்பிடாமல் கவனமாக அவர் தவிர்க்க, ஜெயம்மா உள்ளே நோக்கினாள்.

உங்க ப்ரண்டை பாஷாண்டியா நிக்காம குளிக்கச் சொல்லுங்கோ. புண்ணியமாப் போகும்.

வசந்தி மெல்ல குழந்தை உள்ளு என்று தாற்காலிகமாகப் பெயர் சூட்டிய உள்ளறையில் இருந்து எட்டிப் பார்த்து ஜெயம்மாவிடம் சொல்ல, அவள் சாடிப் பாய்ந்து அடி என் சமத்துக் கொடமே என்று வசந்தியைக் கட்டிக் கொண்டாள்.

இந்த மாதிரி அணைப்பு பெண்கள் மத்தியில் அந்நியோன்யத்தை அழகாகக் காட்டுகிற போது ஆண்கள் கட்டிக் கொண்டால் அராஜகமாக இருப்பதை நினைத்தபடி சங்கரன் குளிக்கப் போனான்.

உன்னை மாதிரி அழகா இருக்கா இந்தப் பொண்ணரசி.

பிடார் ஜெயம்மா குழந்தையை கன்னடத்திலோ, இல்லை, குழந்தைகளைக் கொஞ்சவே பொதுவாக யாரோ ஏற்படுத்திய மொழியிலேயோ சரம் சரமாக வார்த்தை சொல்லிக் கொஞ்சுவது குளியல் அறையில் எதிரொலிக்க, சோப்பு வாசனையோடு வந்து சாஸ்திரிகள் பக்கம் உட்கார்ந்தான் சங்கரன்.

இந்த வாசனைக்கும் இதமான பொழுதுக்கும் வசந்தி பக்கத்தில் இல்லையா உட்கார்ந்திருக்க வேண்டும்!

ஆரம்பிக்கலாமா? ஆத்துக்காரியை கூப்புடுங்கோ. நீங்க பஞ்ச கச்சம், அவா மடிசார். அதான் நியதி

சங்கரன் சற்றே சலிப்போடு வேஷ்டி மாற்ற உள்ளே போக, ஹோகித்தாரே, ஒன் மினிட் சாஸ்திரிகளே என்று ஜூனியர் சாஸ்திரியை அவனுக்கு பஞ்ச கஞ்சம் உடுத்தி விடக் கண் காட்டி உள்ளே அனுப்பியது ஜெயம்மா தான்.

ஏம்மா உனக்கு ஹெல்ப் தேவையா?

உள்ளே பார்த்து குரல் கொடுத்து விட்டு, சமையல் மாமிக்கும் தெரியாதுன்னா நான் வரேன் என்றாள் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு.

சங்கரனாலே அவுக்கவே முடியாம கொசுவம் வச்சுப் புடவை கட்ட நானாச்சு.

சொன்ன அடுத்த வினாடி அவளுடைய அவுட்டுச் சிரிப்பு வீடு பூரா எதிரொலித்துத் தொட்டில் குழந்தையை எழுப்பி விட்டது.

மங்களகரமான சிசு அழுகை என்றார் கடியாரத்தைப் பார்த்தபடி காத்துக் கொண்டிருந்த சாஸ்திரிகள்.

சாஸ்த்ரிகளே பசுமாடு, ஒட்டகம் எல்லாம் வராதே? பிடார் ஜெயம்மாள் அக்கறையாக விசாரித்தாள்.

அதை ஏன் கேக்கறேள் நியூஸ் மாமி. கல்காஜியிலே ஒரு ஆந்திராக்கார கிருஹத்திலே ஆயுட்ஷேமம் பண்றபோது பசுமாடும் கன்னுமா ஹோமகுண்ட அக்னி தெரிஞ்சதுன்னு நம்ம ராஜப்பா சாஸ்திரிகள் ரெண்டு மாசம் முந்தி சொன்னாலும் சொன்னார், எல்லோரும் அவரை தீவிரமா அவாவா கிருஹங்கள்லே வைதீகத்துக்குக் கூப்பட ஆரம்பிச்சுட்டா. கணபதி ஹோமம் பண்ணினா யானை, நவக்ரஹ ஹோமம் செஞ்சா சனி பகவான், திவசம் பண்ணினா போய்ச் சேர்ந்தவா இப்படி அக்னியிலே முகம் காட்டணும்னு ஆசைப் படறா. சொன்னா உடனே இதெல்லாம் நடக்க, கவர்மெண்ட் ஆர்டர் போட்டு நடத்திக்கறதா என்ன?

ஜூனியர் சொல்வதை புன்சிரிப்போடு அங்கீகரித்தபடி, காக்கடாவில் தீக்குச்சியால் பற்ற வைத்து கைக்கடக்கமான ஹோம குண்டத்தில் அக்னி வளர்க்க ஆரம்பித்தார் பெரியவர்.

சங்கரன் அவசரமாக உத்ருணியில் ஜலம் வார்த்து மூன்று தடவை உறிஞ்சி ஆசமனியம் செய்து விட்டு சாஸ்திரிகளை வெற்றிப் பார்வை பார்த்தான்.

ஏத்து வாங்கி மந்திரம் சொன்னாப் போறும் அண்டர் செக்ரட்டரி சார். நான் சொன்னதுக்கு அப்புறம் ஆசமனியம் செய்யுங்கோ. எதேஷ்டம்.

இந்த சடங்கை நிர்வகித்து நடத்திக் கொடுப்பதில் தனக்குத் தான் முதலிடம் என்று தெளிவாக சீனியர் நிலைநாட்ட சங்கரன் அவசரமாகப் பின்வாங்கிக் கட்டளையிடக் காத்துக் கொண்டிருந்தான்.

புண்ணியாஜனனத்திலே அக்னி வளர்த்தா அதிலே என்ன வரும்?

ஜெயம்மா கேட்க, ஓரமாக நின்ற பகவதியைப் பார்த்து நான் அக்னியிலே தலை காட்டப் போகட்டா என்று அவசரமாக விசாரித்தாள் குஞ்ஞம்மிணி.

வேண்டாம்டி கொழந்தே, இனிமே அங்கங்கே சட்டுபுட்டுனு போய் நின்னுடக் கூடாது. உனக்கு இன்னிக்கு இருந்தா எழுபது வயசு, பகவதிக்கு எண்பத்தைஞ்சு, எனக்கு நூத்துப் பத்து. வயசுக்கு ஏத்தாப்பல நடந்துக்கறது தான் சரிப்படும், கேட்டியா?

விசாலம் மன்னி சொல்லியபடி மற்ற இருவரையும் அங்கே இருந்து வெளியே நடத்திப் போனாள். குழந்தை அழுகை நின்று போன வீட்டில் மந்திரங்களின் ஒலி மட்டும் இருந்தது

அண்டர் செக்ரட்டரி சார் மந்திரம் சொல்லலாமோன்னோ

சங்கரன் ஹோம அக்னியில் பார்த்த மூன்று பெண்டுகளையும் காலையில் உறக்கமா விழிப்பா என்று விளங்காமல் கிடந்த நேரத்தில் பார்த்த நினைவு வந்தது. ஒன்று பகவதிப் பாட்டி, மற்ற இருவர்?

அவாள்ளாம் யாரு?

சங்கரன் சாஸ்திரிகளிடம் கேட்க, யாரெல்லாம் என்று எதிர்க் கேள்வி கேட்டார் அவர்.

அதற்கெல்லாம் நேரமே கொடுக்காமல் உள்ளே இருந்து மாவிலை, ஜிகினாக் காகிதம், பட்டு ரிப்பன் என்று அலங்காரம் செய்த ஆகி வந்த மகா பழைய தொட்டிலும் வசந்தி அம்மா ஜாக்கிரதையாகத் தலைக்குப் பின்னால் அணைத்துப் பிடித்த குழந்தையும் வந்தானது. அந்தத் தொட்டில் ஜெயம்மா வீட்டில் மூணு தலைமுறையாக வம்சம் வளர்ப்பது.

கொழந்தையை தோப்பனார் மடியிலே வச்சுக்க வேண்டியது.

சாஸ்திரிகள் அறிவிக்க, ஜெயம்மா கவுண்டர் போட்டாள்.

இவன் மடியிலா? வசந்தியைப் போட்டுண்டாலே ஒழுங்காப் பிடிச்சுக்கத் தெரியாது. தலை நிக்காத குழந்தை அவனோட சிசு. இருங்கோ. பின்னாலே நின்னு நான் பிடிச்சுக்கறேன்.

ஆறடியை நாலடியாக வாமனக் குறுக்கம் செய்து பின்னால் இருந்து குழந்தையை ஏந்தியபடி ஜெயம்மா நிற்க, சங்கரனுக்கு மனசு நிறைந்து போனது.

சிநேகிதம்னா இப்படி இருக்கணும் என்றாள் குஞ்ஞம்மிணியின் கண்ணீரைத் துடைத்தபடி பகவதி. இந்தக் காலத்திலும் இப்படி ஒருத்தருக்கொருத்தர் அனுசரணையாக இருக்கப்பட்ட சிநேகிதத்தை விசாலம் கை அசைத்து ஆசீர்வதித்தாள்.

அக்னியிலே யாரோ ஒரு மாமி ஆசிர்வாதம் பண்ற மாதிரி இருக்கு

வசந்தி சொல்ல, சாஸ்திரிகள் எல்லாம் புரிந்த திருப்திச் சிரிப்பு சிரித்தார்.

ரொம்ப நல்லது அண்டர் செக்ரட்டரி மாமி. இதை நான் நாலு ஆத்திலே சொன்னா, எனக்கும் வைதீகம் விருத்தியாகும்.

அந்தக் கதம்ப பாஷையையும் அதன் உள்ளுறை பொருளையும் ஜெயம்மா தவிர வேறு யாரும் புரிந்து கொண்டு சிலாகித்ததாகத் தெரியவில்லை. என்றாலும், ஜெயம்மாவின் அங்கீகாரத்தை ஏற்று வாங்கி, ஏமாற்றத்தை ஒதுக்கிவைத்தார் சீனியர் சாஸ்திரிகள்.

தொட்டில் போட்டு சீதா கல்யாண வைபோகமே பாடுவதையும் ஜெயம்மாவே எடுத்துக்கொண்டாள். வசந்தி வீட்டுக்காரர்களில் பாடத் தெரிந்தவர்கள் யாரும் கிடையாது. அவளுடைய அப்பா ஒரு வினாடி கூட யோசிக்கவில்லை.

கொழந்தே, நீ வசந்திக்கு உடன் பொறக்காத அக்கா. முகத்திலே ஜாடை கூட ஒரே மாதிரி இருக்கு, நீயே பாடு.

ரெண்டு குடும்பத்துக்கும் தீராத களங்கமாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக நல்வாக்கு சொன்னார் அவர். நற்சொல் என்பதால் அதற்குள் ரொம்ப ஆழமாக இறங்காமல் மேலோட்டமாகக் கால் நனைத்து அனுபவிக்க மட்டுமாக எல்லோரும் அதை எடுத்துக் கொண்டார்கள்.

தொட்டில் போட்டபோது பக்கத்தில், எதிரில் இருக்கும் சர்தார், வங்காளிக் குடும்பக் குழந்தைகள் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு குழந்தையை விட்ட தொட்டிலை மெல்ல ஆட்டி வசந்தி அம்மா சின்னச் சின்னதாக இந்துஸ்தான் டைம்ஸ் நியூஸ்பேப்பரில் கட்டி வைத்த காப்பரிசி வாங்கிக் கொண்டார்கள்.

தொட்டில் போட்டா இதான் ஸ்வீட் என்றாள் வசந்தியின் அம்மா.

அவள் தம்பி, ஜ்யோத்ஸ்னா நினைப்பில் இடுப்பு இடுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்ததை சங்கரன் தவிர வேறு யாரும் கவனிக்கவில்லை.

காப்பரிசியை அப்படியே சாப்பிட்டுட வேண்டியதுதான். அரிசி, வெல்லம், தேங்காய்க் கீத்து, வெள்ளை எள்ளு எல்லாம் போட்டது. நடுவிலேயே இருபது பைசாக் காசு வச்சிருக்கும். அதை முழுங்காம எடுத்துண்டு போய் அம்மா அப்பா கிட்டே கொடுங்கோ.

வசந்தியின் அப்பா சுந்தர வாத்தியார் பேசிய வினோத இந்தி புரியாமல் காப்பரசி மகத்துவமறியாது அதையும் தொட்டிலில் விட உத்தேசித்த அண்டை அயல் குழந்தைகளுக்காக ஜெயம்மா ஒரு பாக்கெட்டை பிரித்து ரெண்டு பிடியாக உள்ளே இருந்து எடுத்துச் சாப்பிட்டு, அதன் சேர்மானம் சொல்லி அதுகளையும் சாப்பிடவும், இலை போட்டபின் பந்திக்கு உட்காரவும் வைத்தாள்.

பந்தியில் பாயசம் பரிமாறிக் கொண்டிருந்தபோது கார் வந்து நிற்கும் சத்தம். சங்கரன் எட்டிப் பார்த்தான். ஏகமாக அம்பாசடரும், அடுத்த படியாக பியட் காரும் நிறைந்த தில்லியில் விசேஷமான இந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் கார் கொஞ்சம் தான் உண்டு. சங்கரனின் சிநேகிதனும் ஜாக்ரன் பத்திரிகை ஆசிரியருமான சந்தோஷிலால் குப்தா அதில் ஒருத்தன்

குப்தாக் கடன்காரனையும் வரச் சொல்லிக் கூப்பிட்டியா, பேஷ்.

வடையைக் கடித்துக் கொண்டே ஜெயம்மா சிலாகிக்க, ஞாயிற்றுக்கிழமை பகல் கானாவுக்கு அப்புறம் எப்பவாவது இப்படி குப்தா வருவது வாடிக்கை தான் என்றான் சங்கரன்.

சாப்பிட்டியாடா பிரம்மஹத்தி?

ஜெயம்மா குறையாத அன்போடு குப்தாவை விசாரிக்க, கழிச்சு கழிஞ்சு என்று விசித்திரமாக மூக்கை சுருக்கிக் கொண்டு பதில் சொன்னான் குப்தா.

அட பீடை, அது மலையாளம். எனக்கு அர்த்தமாகாது. நீ இந்தியிலேயே பேசு என்றபடி பரிமாறுகிற பெண்ணிடம் ஒரு இலை நறுக்கில் ரெண்டு வடையும் பால் திரட்டுப் பால் ஒரு குத்தும் வைத்து குப்தா உட்கார்ந்த அப்புறம் கொடுக்கச் சொன்னாள் ஜெயம்மா.

பாயசமும் கொண்டு போய் வை, தாராளமா குடிச்சுட்டு கழிஞ்சுண்டு கிடக்கட்டும்.

பந்திக்கு முதுகைக் காட்டிக் கொண்டு ஹால் ஓரமாகக் குரிச்சி போட்டு குப்தாவை உட்கார வைத்தான் சங்கரனின் மைத்துனன்.

சாம்பார் குடிக்கறானான்னு கேளு முதல்லே. அப்புறம் வடையும் திரட்டுப்பாலும் தின்னுட்டு பாயசம் குடிக்கட்டும்.

ஜெயம்மா கேட்டதுக்காகக் காத்திருந்த மாதிரி எல்லாத்துக்கும் சரி என்றான் குப்தா.

ஒரு பெரிய கும்பா நிறைய முருங்கைக்காய் சாம்பாரும் வெள்ளிக் கிண்ணம், ஸ்டெயின்லெஸ் தட்டில் மற்றதும் ஸ்டூல் போட்டு வைக்கப்பட குப்தா ஆசையாக வடையைக் கடித்து அரசூர் நியூஸ் சொல்லு என்றான் சங்கரனிடம்.

எச்சக் கையோடு என்னத்தைச் சொல்ல?

சங்கரன் கை அலம்பி விட்டு ஒரு வெற்றிலையை சர்க்கரை உள்ளே வைத்துப் போட்டுக் கொண்டு, குப்தா எதிரே, கதை சொல்கிற சுவாரசியத்தோடு வந்து உட்கார்ந்தான். அப்படியான மதராஸி பானும் வேண்டுமென்ற குப்தாவின் கோரிக்கை உடனே நிறைவேற்றப்பட்டது.

தினசரி ஒரு நாள் விடாமல் ராமாயணம் பிரசங்கம் செஞ்சு முப்பது வருஷத்துலே முடிக்க திட்டம் போட்டிருந்த பஞ்சாபகேச சாஸ்திரிகள்கற பண்டிதர் அரசூர்லே இருந்தார். ராமர் காட்டுக்குப் போகும் முன்பா ஒவ்வொருத்தராச் சொல்லிண்டு போற இடத்திலே ரொம்ப நாள் சிக்கி பரலோகம் போயிட்டார். இப்போ தினம் அவர் கதை சொல்ற நேரத்திலே ஒரு குடத்திலே தண்ணியைக் கொண்டு வந்து சபையிலே நடுவிலே வச்சுட்டா அதிலே ஆவாஹனமாகி கதையைத் தொடரறாராம். என்ன, குரல் கொஞ்சம் சன்னமா இருக்கு, அதோடு தண்ணியிலே வர்றதாலே அடிக்கடி தொண்டை கட்டிப் போயிடறதாம்.

இதை அடுத்த ஞாயிறு சப்ளிமெண்டுக்கு ஊர் பேர் போடாம கதையா எழுதிட சொல்றேன். ரெண்டு வடையை மிதக்க விட்டு இன்னும் கொஞ்சம் சாம்பார் கொடு.

குப்தா வாயும் காதுமே உடம்பாக இருந்து மீதிக் கதை கேட்க ஆயத்தமானான்.

வேறே என்ன விசேஷம் உங்க ஊர்லே என்று இலைக்கு முன்னால் கொஞ்சம் சிரமத்தோடு இருந்து தயிர் சாதத்தை ரசித்துக் கொண்டிருந்த ஜெயம்மாவும் கேட்டாள்.

அங்கே இப்போ மனுஷர்கள் எல்லாம் விதி முடிஞ்சு சாகறது திரும்ப நடக்கறது ஆனா, மிருகங்கள் ஆயுசு நீண்டு போயிருக்காம். சீரியஸா ஒரு தோஸ்த், தியாகராஜன்னு பேரு, எனக்கு போஸ்ட் கார்ட் போட்டிருக்கான். அங்கே சீனியர்மோஸ்ட் சாஸ்திரிகளாக்கும்.

உங்க ஊர்லே எல்லோரும் தரைக்கு அரை அடி மேலே கோழி, கரப்பான் பூச்சி மாதிரி பறக்கற வழக்கம் உண்டோ?

குப்தா சிரிக்காமல் கேட்க, ஜெயம்மாவுக்குப் புரை ஏறி விட்டது.

அரசூர்லே பறக்காட்ட என்ன, அம்பலப்புழையிலே உண்டே. எங்க சிநேகா மன்னி அப்பா சாவக்காட்டு வயசர், கோயில் கொடி மரத்தை நனைச்சுண்டு திந்தோம்னு பறந்தார்னு இந்த மனுஷருக்கு யாராவது சொல்லணும் என்றாள் யாருக்கும் கேட்காத குரலில், பகவதி. உள்ளே குட்டி பகவதி அசந்து தொட்டிலில் உறங்க குட்டியம்மிணி சீராக ஆட்டிக் கொண்டிருந்தாள்.

காத்துலே என்ன அழகா தொட்டில் ஆடறது பாருங்கோ.

வசந்தியின் தம்பி வெற்றிலை பாக்கு வாங்கிக் கொள்ள வந்த மேல் ப்ளாட் பஞ்சாபிப் பேரிளம் பெண்ணை வெறித்தபடி சங்கரனிடம் சொன்னான். நல்ல வேளையாக அவள் இடுப்பு தெரியாத படிக்கு சூடிதாரில் வந்திருந்தாள்.

வம்பும் வாய்க்கு ருசியான சாப்பாடுமாகக் கடந்து போன பகல் அது.

(தொடரும்)

New bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 24 இரா.முருகன்

ஏமி ஏமி ஏமி ஏமி என்று தெலுங்கு கே.பி.சுந்தராம்பாளாக அந்துவான் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிரே, உலகப் பிரச்சனைகளை எல்லாம் தானே ஒற்றையாகத் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறவராக, பதட்டம் முகத்தில் தெரிய புரபசர் வல்லூரி அமர்ந்து சாயா குடித்துக் கொண்டிருந்தார். கூட்டம் குறைவான, வெள்ளிக்கிழமை சாயந்திர காலேஜ் கேண்டீன்.

‘ஏமி பிராப்ளமு பொபஸே காரு? செப்பண்டி’ அந்துவான் பிரஞ்சு-தெலுங்கு கேள்விக் கணையை ஒருவாறு தொடுத்தான்.

பாவம்டா என்றான் லெச்சு. வல்லூரி எடுத்த வகுப்புக்களுக்கு எல்லாம் அவன் வந்திருக்காவிட்டாலும், அவர் மேல் அவனுக்குப் பூரண அனுதாபம். இத்தனைக்கும், வல்லூரி புதிதாகப் போன வருடம் சேர்ந்தபோது அவரை லெச்சு ரேகிங் செய்தது புரபசர், அசிஸ்டெண்ட் புரபசர், லெக்சரர், டெமோ என்ற டெமான்ஸ்ட்ரேடர், லேப் அசிஸ்டண்ட் இப்படிப் பலதரப்பட்ட கல்லூரி ஊழியர்கள் மத்தியிலும் பிரசித்தமானது.

’அந்த்வான், க்ளாஸ்லே தான் வல்லூரி சாரை நீ விட மாட்டேன்னா கேண்டீன்லே டீ குடிக்க வந்தாலும் நச்சரிக்கறியே’.

வைத்தே கேட்க, வல்லூரி அப்படி இல்லை என்று திடமாகத் தலையசைத்து, அந்த்வானின் தோளில் செல்லமாகத் தட்டினார். அவன் கையில் பிடித்த காபிக் கோப்பை தவறித் தறிகெட்டு ரெண்டு பேர் மேலும் அபிஷேகமாக வழிய, நடந்ததை எல்லாம் வழக்கமான ஆச்சரியத்தோடு பார்த்தார் வல்லூரி. அவருக்கு மட்டும் சதா விபத்தும் விபரீதமுமாக உலகம் விரிந்திருக்கிறது.

ஈரச் சட்டையும் உடம்பெல்லாம் கேண்டீன் சிக்கரிக் காப்பி மணமுமாக அவர்கள் ரெண்டு பேரும் கேண்டீன் மேஜைக்குத் திரும்பி வர அவசர அவசரமாக லெச்சு வல்லூரியோடு பேச்சு வார்த்தையை ஆரம்பித்தான்,

இருக்கற வீட்டை விட்டுட்டு இன்னொரு வீடு பார்க்கணுமா? அதுதான் தன் பிரச்சனை என்றார் வல்லூரி மிச்சம் சில சொட்டு இருந்த சாயாவைக் குடிக்க முயற்சி செய்து கொண்டு. லெச்சு அதை பிடுங்கி வைத்து விட்டுக் கேட்டான்

’ஏன் சார் வீடு பார்க்கணும்? இருக்கற வீட்டை என்ன செய்யப் போறீங்க? கொளுத்திடுவீங்களா இன்னொரு தடவை ப்யூஸை பிடுங்கி?’

அவர் இல்லை என்றார். வீட்டுக்கெல்லாம் ஒரு கேடும் இல்லை. ஊரில் இருந்து பெண்டாட்டியை இங்கே கொண்டு வந்து வைத்துக் கொள்ளச் சொல்லி வெடித்த வற்புறுத்தல் நடப்பாகிறதாம். குடித்தனம் வைக்க இந்த வாரக் கடைசியில் இங்கே புறப்பட்டு வரப் போகிறாராம் மிசஸ் வல்லூரி..

’இதுலே என்ன சார் கஷ்டம், இப்போ உங்க வீட்டுலே கூட இருக்கற ஈப்பன் வெர்கீஸ், அப்துல் ரசாக், கோலப்பன் இந்த மூணு டெமோக்களையும் வேறே இடம் பார்த்துக்கச் சொன்னா போதுமே.. நீங்க இங்கேயே இருக்கலாமே’.

’பாவம் அவங்க எங்கே போவாங்க? சம்பளம் கொறச்சல். வேலை அதிகம் .. அவங்களுக்கு யாரு காலையிலே பிரட் ஆம்லெட் போட்டுக் கொடுப்பாங்க’?

’அதுக்காக, நீங்க ஊர்லே இருந்து வல்லூரி மாமியைக் கொண்டு வந்து குடித்தனம் வைக்கறபோது இவங்களும் கொத்தனார் கொழுந்தனார்னு ஆம்லட் தின்னபடிக்கு அங்கேயே இருப்பாங்களா’? அடாவடியா இருக்கே’.

நியாயமான சந்தேகத்தை லெச்சு எழுப்ப, இன்னும் ரெண்டு மாசத்தில் அந்த டெமான்ஸ்ட்ரேட்டர் கிளிகளுக்கும் றெக்கை முளைச்சுடும். கூட்டை விட்டுப் பறந்து போயிடும் என்றார் அவர். சிவாஜி படம் கௌரவம் பார்த்த பாதிப்பு..

அப்படிப் போகாமல் மாமி சமையல் சுகங் கண்டு அவர்கள் அங்கேயே தொடர்ந்து இருக்கவும் கூடும் என்று இன்னொரு சந்தேகத்தை அந்துவான் முன் வைத்தான்.

’அதுவும் நடக்கலாம் தான்… அதான் சொல்றேன்.. அவங்களுக்கு ஏன் சிரமம், நானே வெளியே போயிடறேன்’ என்றார் வல்லூரி கொஞ்சம் யோசித்து. கண்டசாலா தமிழில் பாடுகிற மாதிரி கனமாக இருந்தது அவர் குரல்.

இப்படியாக, வல்லூரிக்காக வீடு தேடும் படலம் ஆரம்பமானது.

சாயந்திரம் காபி ஹவுஸில் வல்லூரியும் எங்களோடு இருந்தார். உடனே அவருக்கு வீடு அமையாவிட்டால் கஷ்டம் என்று புரிந்ததால் எந்தத் தெருவில் வீடு காலி அட்டை தொங்குகிறது என்று தேடி ஒரு தெரு, சந்து பொந்து சாவடி விடாமல் அலைய முடிவெடுத்த்திருந்தோம்.

’சோன்பப்டிக்காரன் மாதிரி தெருத் தெருவா மணியடிச்சுக்கிட்டுப் போறது சிரமம்டா. ஏழெட்டு சைக்கிள் இப்படி சேர்ந்து வந்தா, டிராபிக் போலீஸ்காரங்க எல்லாம் டென்ஷனாயிடுவாங்க. பூங்காவிலே யாராவது அடுக்கடுக்காகத் தும்மறதை நாலு பேர் நின்னு வேடிக்கை பார்த்தாக்கூட, ஜனக் கூட்டம் கூடுது, வேறே எங்கேயாவது போய்த் தும்முங்கன்னு அனுப்பறவங்க அவங்க.. பத்து சைக்கிள் சேர்ந்து போனால் அது சைக்கிள் ஊர்வலமாயிடும்.’

லெச்சு சொல்லிக் கொண்டிருக்க கையில் குடையோடு அந்த இடத்துக்கு ஒரு விதத்திலும் சம்பந்தமில்லாத ஒரு கெச்சலான நபர் படியேறி வந்தார்.

லெச்சுங்கறது? என்னைக் கேட்டார் அவர். மாறுகண் இல்லாவிட்டால் வல்லூரி சாரை இப்படிக் கேட்டிருப்பார். அல்லது லெச்சுவை.

குடைக்காரரை ஆற்றுப் படுத்தி என் அருகில் உட்காரச் சொன்னேன். அமேலியும், கயலும், ஜோசபினும் உட்கார்ந்து சிறப்பிக்கும் இடம் அது.

தான் ஒரு வீட்டு புரோக்கர் என்றார் மூக்குப்பொடி மணத்தோடு வந்தவர். எந்தப் பகுதியிலும் எந்த வாடகை வரம்பிலும் உடனே வீடு பார்த்து முடித்துக் கொடுத்து விடுவாராம். ஒரு மாச வாடகை அவருக்கு கமிஷன்.. வீட்டுக்குப் போய்ப் பால் காய்ச்சிக் குடிக்கும்போதே கமிஷன் கையில் வரணும் என்று நிபந்தனையும் சொன்னார்.

’எந்தத் தெருவில் வீடு வேணும்’?

ஊரே சொந்தமான தொனியில் கேட்க, நான் தியூப்ளே வீதி என்று நூல் விட்டுப் பார்த்தேன். அவர் காலியாக இருக்கும் வீடுகள் பட்டியலில் முதலில் சொன்ன கதவிலக்கம் நேரு கபே, அடுத்து எங்க வீடு. தவறான தகவல் என்று சுட்டிக் காட்டினேன். அவர் பட்டியல் சரிதானாம். நேரு கபே பின் போர்ஷனிலும் எங்க வீட்டு மொட்டை மாடியிலும் குடியிருக்க இடம் பிடித்துத் தருவதாக படு கேஷுவலாக புரோக்கர் சொல்ல மிரண்டு போய் என்னை நோக்கினார் வல்லூரி சார்.

புரோக்கரை நம்பி வல்லூரியும் கோஷ்டியும் கிளம்பக் கையசைத்து விட்டு நான் புறப்படப் பார்த்தேன். ஜோசபின் வரும் நேரம்.

’இன்னும் ஒரு வாரம் உனக்கு அகப் பத்தியம்’ என்றான் சிற்சபேசன்.

அப்படின்னா?

’எங்க சித்தப்பாவை விதை வீங்கிப் போய், நாட்டு வைத்தியர் கிட்டே கூட்டிப் போனபோது அவர் சொன்னது இந்த அகப் பத்தியம்’. என்றான் ப்ரான்ஸ்வா.

அகப் பத்தியம்னா பொம்பளை சகவாசம் கூடாதுன்னு அர்த்தம் என்று யாரும் கேட்காமலேயே உபரி தகவல் கொடுத்த குடைக்கார புரோக்கர் தொடர்ந்து உங்க சித்தப்பாவுக்கு என்ன வயசு என்று வைத்தேயைப் பார்த்துக் கேட்டார்.

இவர் வயசு தான், நாற்பது சொச்சம் என்று வல்லூரியைக் காட்டிச் சொன்னான் லெச்சு.

நாப்பதா? திருப்தியில்லாதவராகத் தலையாட்டினார் ப்ரோக்கர்.

’அப்போ வீடு கிடைக்காதா?’ வல்லூரி தொடர்ந்து கேட்க, புரோக்கர் குழம்பித்தான் போனார். என்ன மாதிரியான மேதைகள் கிட்டே மாட்டிக்கிட்டோம் என்று பயந்தோ என்னமோ மடியில் இருந்து சின்ன மரச் சிமிழை எடுத்து டொப் என்று அடித்துத் திருகித் திறந்தார். மணி அடித்துக் கொண்டே திறந்த பெட்டியில் இருந்து ஒரு கணிசமான சிட்டிகை மூக்குப் பொடி எடுத்துப் போட்டுக் கொண்டு கையை உதறினார். காபி ஹவுசில் எல்லோர் கண்ணிலும் பறந்து எரிய, வாங்க என்று குடையாடக் கிளம்பினார்.

’இப்போவே போகணுமா? நாளைக்கு சனிக்கிழ்மை தானே’?

வைத்தே கேட்க, அவர் தீர்மானமாகத் தலையாட்டினார். இன்னிக்குத் தான் இந்த சீசன்லே கடைசி நல்ல நாள்.. காலையிலே முகூர்த்தம் ஆச்சு. இன்னும் கொஞ்ச நேரத்திலே ஜாம்ஜாம்னு சாந்தி முகூர்த்தமும் ஆரம்பிச்சுடும்.

வல்லூரி என்ன என்ன என்று விசாரிக்க, லொடலொடக்காமல் சும்மா இருக்கச் சொன்னான் லெச்சு. இது என்ன கிளாஸா சும்மா ஏதாவது அர்த்தமில்லாம புலம்பிட்டிருக்க என்று அவன் சொன்னதை வல்லூரிக்கு மொழிபெயர்க்க நான் முற்பட வைத்தே காலில் ஓங்கி மிதித்து நிறுத்தினான்.

நேர்ந்து விட்ட ஆடு போல மிரண்டு போய் அவர் பின்னாடியே வர எங்கள் ஊர்வலம் மெல்ல ஊர்ந்து போனது. யாருப்பா போய்ச் சேர்ந்தது என்று விசாரித்து விட்டு, யாரும் இன்னும் போகலே என்று அந்துவான் நிறுத்தி நிதனமாகச் சொன்னதைக் காதில் வாங்காமல், நாங்கள் கடந்து போவதற்காக எதிர்த் திசை போக்குவரத்தை சற்றே நிறுத்தினார் போக்குவரத்துக் காவலர்.

ரங்கப்பிள்ளை தெருவில் மங்கலாக டியூப்லைட் வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்த வெங்காய மண்டி போன்ற வீட்டுத் திண்ணையில் எங்களை கோஷ்டியாக ஏற வைத்தார் தரகர். வீட்டுக்குள் இருந்து ப்ரஞ்சு மழை. அது பெண் குரலில் மட்டும் இருந்தது. நடுநடுவே உய் உய் என்று தாழ்ந்த ஸ்வரத்தில் பின்பாட்டு. அது பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் ஆண் குரலில்.

உள்ளே இருந்து கிட்டத்தட்ட ஆயிரம் பக்கம் இருக்கும் பிரஞ்சு வரலாறு புத்தகம் தொப்பென்று வாசலில் வந்து விழுந்தது. அட்டையில் இருந்த எத்தனையாவதோ பிரஞ்சு லூயி அரசர் தலை திண்ணை மரத்தூணில் மோதி அலற வல்லூரி நடுநடுங்கினார்.. அவ்வளவு தூரம் அதை வீச நிச்சயம் பழக்கமும் வலிமையும் வேண்டும். தூணையும் பறித்து வீசக்கூடிய வலிமை.

உள்ளே இருந்து என்ன வேண்டும் என்று அதிகாரமாகக் கேட்டபடி வந்த நாலரை அடி சோனி அம்மாள் நாற்பத்தைந்து வயதாவது காணுவாள். தொடர்ந்து பதற்றமாகப் பார்த்தபடி வந்த ஆறடி பிரஞ்சு இந்தியர் வல்லூரியையும் தொடர்ந்து லெச்சுவையும் பார்த்து ரொம்ப சந்தோஷப் பட்டார். வல்லூரியிடம் தமிழில் குசலம் விசாரிக்கவும், லெச்சுவிடம் அவன் முழி பிதுங்கி நிற்க ஏதோ தெலுங்கில் சரமாரியாக மாட்லாடவுமாக உணர்ச்சி வசப்பட்டவர் மெல்ல சமநிலைக்கு வந்து ஆளுக்கேற்ற மொழி மாற்றினார்.

லெச்சுவுக்கு ஒன்றோ இரண்டோ விட்ட மாமா உறவு என்று அவன் என்னிடம் சொல்லியதை முடிக்கக் கூட விடாமல் அவனை முடிந்தவரை கட்டிக் கொண்டு குடும்ப நிலவரம், ஊர், உலக நிலவரம் எல்லாம் விசாரிக்கத் தலைப்பட்டார் அவர். இதே யூனியன் பிரதேசமான தெலுங்கு பேசும் ஏனாம் பகுதியில் நிரந்தரமாகத் தங்கி பிரஞ்சுத் தெலுங்கராகவே போய் விட்டார் என்று லெச்சு சொல்ல, அவர் உய் என்றார். தன்னோடு கூட ஏனாம் பக்கத்து கல்லூரியில் படித்தவர் அவர் என்றார் வல்லூரி அவருக்கு மட்டும் உரித்தான சந்தோஷத்தோடு. அதற்கும் இன்னொரு உய் ஆதரவாக வந்து விழுந்தது.

பொறுமையாக நின்ற வீட்டம்மா, வீடு அமைதிப் பூங்காவாகவே இருக்கிறது என்பதை எங்களுக்கு நிரூபிக்க, திண்ணையில் கிட்ந்த வரலாற்றை நிதானமாகக் குனிந்து எடுத்தாள். ’ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு கோபம் ஆகாது; நெபோலியன் பத்தி தப்பா எழுதியிருக்குன்னா நீங்க திருத்தி இன்னொரு புத்தகம் எழுதுங்களேன்.. விட்டெறிவானேன்’ என்று ஏனாம் மாமாவிடம் நைச்சியமாகச் சொன்னாள். அவள் ஒரு ச்ண்டைக்கோழி என்று யார் சொன்னாலும் இனி நான் மட்டுமில்லை எங்கள் குழுவே நம்பாது.

வல்லூரி தெரிந்தவராக இருந்ததாலும் அவரும் மனைவியும் மட்டுமே வீட்டில் இருப்பார்கள் என்பதாலும் ஏனாம் மாமா வீட்டை அவருக்கு வாடகைக்குக் கொடுப்பதில் சிரம்ம் இல்லை. ஏனாம் மாமா வருடம் ரெண்டு தடவை இங்கே வந்து ஒரு வாரம் இருப்பாராம். மேல் மாடியில் வல்லூரி வசிக்க, கீழே பெரும்பாலும் அடைத்து வைத்த வீடாக அது இருக்கும்.

சனிக்கிழமை பிற்பகலுக்கு எங்கள் சைக்கிள்கள் ரங்கப்பிள்ளை தெருவுக்குப் படையெடுக்க, வல்லூரி வந்து சேரவே இல்லை. அந்தி சாயும்போது அவர் வந்தார். முழங்கையில் புதியதாகக் கட்டிய பேண்டேஜோடு காணப்பட்டார்.

’ஸ்கூட்டர்லே பின்னாடி பாத்திரம் பண்டம் எல்லாம் போட்ட பெட்டியை வச்சுக்கிட்டு இங்கே வந்துட்டிருந்தேன்.. வண்டி ப்ரேக் பிடிக்காம ஓடி ஸ்கிட் ஆகிடுத்து. நல்ல வேளை ஆஸ்பத்திரி வாசல்லே விழுந்தேனா, உன் தோஸ்த் நர்ஸா அங்கே இருக்குதே, அந்தப் பொண்ணு உடனே கவனிச்சு ஏடிஎஸ் போட்டு ஏதோ மருந்து கொடுத்து, போதாக்குறைக்கு பேண்டேஜும் வலுவாச் சுத்தி விட்டுச்சு..குட் கேர்ள்’ என்னிடம் பெருமையாக பேண்டேஜை காட்டினார்.

நல்ல பெண்ணு கட்டி விட்ட பேண்டேஜை பார்வையிட்டேன். அதன்மேல் சீக்கிரம் குணமடையவும் என்று ஆரஞ்சு பட்டை பேனாவால் எழுதி இருந்த கையெழுத்து எனக்கு பரிச்சயமானது. மிகச் சிறிய பொடி எழுத்தில் கீழே வேறே ஏதோ எழுதியிருந்தது . கண்ணை இடுக்கிக் கொண்டு படித்தேன்

நாளை மாலை கடற்கரைக்கு வா.

எனக்குத்தான். ஜோசபின் அனுப்பிய சங்கேதச் செய்தி அது.

அடுத்து எப்போது ஆஸ்பத்திரி வரச் சொல்லி இருக்காங்க சார் என்று வல்லூரியை ஆவலோடு விசாரித்தேன்.

ஏன் நாளைக்கு என்றார் அவர். அதற்குள் இந்தச் செய்திக்கு பதில் எழுதி ஆக வேண்டும், இதே இடத்தில்.

வல்லூரி முகம் வாடி இருந்ததைக் கவனித்தோம். வலிக்கிறதோ என்னமோ.

’ஏன் சார் இத்தனை நண்பர்கள் உங்களுக்காக இங்கே வந்து கூடி இருக்கோம். நீங்க என்னடான்னா தெலுங்குப் படத்துலே அப்பா கேரக்டர் மாதிரி சோகமா நிக்கறீங்களே. இதெல்லாம் ஆக்சிடெண்ட்லே சேர்த்தியா? காலேஜ் எலக்‌ஷன் நேரத்திலே பில்டிங்கே சரிய வச்சீங்க, தெருவுக்கே ப்யூஸை பிடுங்கி பத்தி எரிய வச்சீங்க.. காலேஜ் கெமிஸ்ட்ரி லேபில் காப்பர் சல்பேட் ஆறு பாய வைச்சீங்க.. அதை விடவா இதெல்லாம்’.

அனுமனுக்குத் தன் பலம் தெரியாமல் மயக்கம். வல்லூரிக்கு தன் விபத்துச் சரித்திரம் அவ்வப்போது மறந்து போவதால் குழப்பம். எடுத்துச் சொன்னோம்.

வல்லூரி கஷ்டப்பட்டு சிரித்தார்.

’இந்த வீடு நல்ல இடம் தான். நீங்க வந்ததாலே தான் உடனே முடிஞ்சது. ஆனா, வேறே ஒரு நியூஸ் கேட்டேன்.. அதான் கொஞ்சம் பீதியாக இருக்கு’.

என்ன என்று புரியாமல் அவரைப் பார்க்க, அவர் தயங்கியபடி சொன்னார் -

’இந்த வீட்டுலே முனி ஓட்டம் இருக்காம். நடு ராத்திரிக்கு மொட்டை மாடியிலே முனி தடதடன்னு ஓடுறதை கேட்க முடியுமாம்’.

லெச்சுவும் நானும் சிரித்தோம். வேறே யாரும் கூடச் சேராததால் சங்கடத்தோடு அடுத்த நிமிடம் அந்தச் சிரிப்பு நின்றது. ஒரு வேளை முனி ஓடுமோ? ஏன் மொட்டை மாடியில் ஓடணும்? எங்கேயிருந்து எங்கே?

வா போய் பார்த்துட்டு வரலாம் என்று லெச்சு கூப்பிட நான் மட்டும் தான் வாலண்டியர் ஆனேன். வல்லூரி நம்ம வீட்டு விஷயத்துக்கு நாமே இல்லாவிட்டால் எப்படி என்பது போல சகஜ பாவத்தோடு மொட்டை மாடிக்கு எங்களோடு படி ஏறினார்.

ஸ்கூட்டர் ஸ்கிட் ஆகிறபோது அந்த முனி .. அதான்னு நினைக்கறேன் குறுக்கே ஓடின மாதிரி தெரிஞ்சுது. இதுவரை இப்படி அனுபவப் பட்டதில்லே.

வல்லூரி முனிக்கு பகல் நேர ஓட்ட வேலையும் கொடுத்திருந்தார்.

மொட்டை மாடி ரம்மியமாக இருந்தது. தழையத் தழைய தென்னந்தட்டி வேய்ந்த கூரையில் சின்னச் செடிகொடிகளும் புல்லும் படர்ந்து ஏறியிருந்தன. பர்ணசாலை மாதிரி ஒரு தோற்றம். சூழ்நிலைக்காக ரெண்டு மான்களையும் நாலு முயலையும் அப்படி இப்படி அலைய விட்டால் கன கச்சிதமாக பர்ணசாலையே தான். கடல் காற்று வேறு சிண்டைப் பிய்க்கிறது. எங்கள் வீட்டு விஸ்தாரமான மொட்டை மாடி கூட இப்படி வல்லூரி வீடு மாதிரிக் கவிதையாக இல்லை. இருட்டும் காற்றும் இதமாக அணைக்கிற இடம் அது.

ஆஹா, இப்படி எங்க வீட்டுலே இருந்தா நான் ஜூடோ பழகியிருப்பேனே என்றான் பிரான்ஸ்வா. வல்லூரி பறந்து பறந்து உதைத்து முனியோடு ஜூடோ யுத்தம் புரிவதாகக் கற்பனை செய்ய ரசமாக இருந்தது.

வல்லூரி ரொம்ப யோசனையாக நின்றார். கூரை தாழ்வாகச் சரியும் இடத்தில் அவர் நிற்பதை நான் பயத்தோடு கவனிப்பதற்குள் அவர் எக்கி என்ன கண்றாவிக்காகவோ கூரைக்குக் குறுக்கே ஓடிய மூங்கிலைக் கையில் பிடித்தார். சடசட என்று எட்டு ஊருக்குச் சத்தம் போட்டுக் கொண்டு கூரை சரிந்து விழுந்தது. கீழே இருந்து ஏனாம் மாமாவும் மாமியும் ஓடி வந்து விட்டார்கள். வீடே இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது என்ற பயமாக்கும்.

கூரையை எடுத்து ஓரமாக அடுக்கினோம். மூங்கில் கழிகளை சுவரில் சார்த்தி வைத்து விட்டுக் கீழே இறங்கினோம். போகிற வழியில் வைத்தே கூரை போடுகிற அந்தோணிசாமியை ஏற்பாடு செய்வதாகச் சொல்லிப் பிரச்ச்னையின் உக்கிரத்தைக் குறைத்தான்.

’முனிக்கு நாம வந்தது பிடிக்கலே’ , மெல்லச் சொன்னார் வல்லூரி.

நான் இன்னிக்கு ராத்திரி இங்கே தான் தங்கப் போறேன். முனி கிட்டே பேச வேண்டியிருக்கு. பேசினா உங்க பயம் போயிடும் என்றான் லெச்சு. எதையோ கண்டடைந்த சந்தோஷம் மின்னியது அவன் முகத்தில்.

முனிக்கு அரவம் மாட்லாடத் தெரியுமோ என்னமோ என்ற கேள்வியை வல்லூரி எழுப்ப, அந்த்வானும் ப்ரான்ஸுவாவும், இந்த மலையாளச் சிறுவனும் (நான் தான்) வேறு மொழி எல்லாம் மொழிபெயர்ப்பார்கள் என்று விளக்கம் கொடுத்தான் லெச்சு. அவன் வேறே எதற்கோ அடி போடுகிறான் என்று எனக்குப் புரிந்து போனது. எதற்கு என்று தான் புரியவில்லை.

’முனி கிட்டே வல்லூரி சார் ஏன் எப்பவும் ஆக்சிடெண்ட்லே மாட்டிக்கறார்னு கேக்கணும்’. சிற்சபேசன் சொல்ல, அவர் பலமாக ஆட்சேபித்தார்.

’அடிக்கடி எல்லாம் இல்லே என்னிக்காவது கொஞ்சமா அடி பட்டுடுது’..

அவர் பூசணித் தோட்டத்தையே பிடியரிசிச் சோற்றில் மறைக்க, பக்கத்து மிலிட்டரி ஓட்டலில் பிரியாணி ஆர்டர் செய்யப் போனான் லெச்சு.

’டெமான்ஸ்ட்ரேட்டர்கள் லாஸ்ட் சப்பர் அவங்களோடு சாப்பிடணும்னு வற்புறத்தறாங்க.. நீங்க இருங்க..நான் போறேன்’ என்று கிளம்பினார் வல்லூரி.

கட்டாய பிரம்மச்சாரி வாழ்க்கையின் கடைசி தினமாம். பரொட்டா சாப்பிட்டுக் கொண்டாடப் போகிறார்களாம்.

ராத்திரி அங்கேயே இருந்து விட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு விடிகாலையிலே போய் மனைவியோடு இங்கே வருவதாகச் சொல்லிப் புறப்பட்டார் வல்லூரி. பத்திரமா இருங்க. முனி பேசாட்ட பரவாயில்லே என்று எங்களுக்கு தைரியம் ஊட்டவும் தவறவிலலை அவர்..

லெச்சு கொஞ்சம் தாமதமாகவே வந்தான். வந்தவன் நேரே மொட்டைமாடி ஏற ஆரம்பிக்க நான் இருட்டா இருக்கு, மெழுகுதிரி எடுத்துப் போ என்றேன்.

ஏண்டா என்ன ப்ரேயருக்கா போறேன் என்று நக்கலாகக் கேட்டான் லெச்சு.

அதெல்லாம் நீ செய்வியா என்ன?

புரியாமல் பார்த்தேன். அந்துவான் சொன்னான் – மச்சான் பியர் பியர் பியர்

’தொலைஞ்சது. இவன் ஒருத்தனே போதும் ஊரெல்லாம் ஒலிபரப்ப’.. லெச்சு கித்தான் பையோடு மொட்டை மாடி படியில் கால் வைத்தவ்ன கீழே வந்தான்

’ஒரே ஒரு பியர் சாப்பிட்டு சமத்தா உன் தோழிகளைத் தேடி போயிட்டு நாளைக்கு வா தப்பா நினைக்கலே ஜோசபினை ரொம்ப கேட்டதா சொல்லு’.

வாடா மச்சான் என்று பிரான்ஸ்வா இறங்கி வந்து பின்னால் இருந்து தள்ள, அந்துவான் முதல் படியில் ஏறி நின்று இழுத்தான். நான் இந்தப்படிக்கு நானே எதிர்பார்க்காதபடி மொட்டைமாடிக்குக் கொண்டு செலுத்தப் பட்டேன்.

மொட்டைமாடியில் பார்த்த சூழ்நிலைக்கும் காலேஜ் விட்டு வரும்போது வழியில் கள்ளுக்கடையில் பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை. நாலு பாட்டில் பியரை கித்தான் பையில் இருந்து எடுத்து வைத்தான் லெச்சு.

இன்னொரு சின்னப் பையில் இருந்து கொஞ்சம் சிறியதாக வைத்தே எடுத்து வைத்தது விஸ்கி என்று அவன் சொல்லித் தெரிந்து கொண்டேன்.

சிரிச்சபேசன் மகா பெரிய சணல் பையோடு மாடியேறி வந்து கொடுத்தது கோலி மற்றும் வெறும் சோடா. ஒரு சோடா கலரும் ஆரஞ்சு நிறத்தில் நுரை தப்பிக் கொண்டு அவற்றோடு இருந்தது.

உனக்குத் தாண்டா என்று லெச்சு எனக்குத் தர குழந்தை மாதிரி ஏக்கத்தோடு பார்த்தான் சிற்சபேசன். உனக்கும் ஒரு வாய் தரேண்டா என்று சொல்லி அவன் முகத்தில் சிரிப்பை வரவழைத்தேன்.

ஆப்பிரிக்க ஊடு மந்திரவாதி பேயோட்டுகிற சடங்கு செய்கிற மாதிரி உப்பு, எலுமிச்சை பழத்தை அரிந்த பாதி மூடி, வறுத்த மல்லாக் கொட்டை, பொரித்த அப்பளப்பூ, நீள மூக்கு கோப்பைகள் என்று ஜமுக்காளத்தில் எடுத்து வைத்தான் லெச்சு.

பியர் அடிக்க இம்புட்டு ஆர்ப்பாட்டமா?

அந்துவான் சிரித்தான். உப்பை எல்லாம் விழுங்கி விட்டு இதைக் குடிக்க வேண்டுமா? உலகம் பூரா இந்த நிமிடம் எத்தனை பேர் பியர் சாப்பிடுகிறார்களோ? அதில் ஐக்கியமாக நானும் வரிசைக் கடைசியில் இதோ.

இவனுக்கு கோப்பை இல்லைடா

என்னைக் காட்டி வைத்தே சொல்ல, லெச்சு கீழே போய் ஒரு எவர்சில்வர் டம்ளரை எடுத்து வந்தான். இதில் ஊத்திக் குடிச்சா ப்ளாக் காப்பி சாப்பிட்ட மாதிரி இருக்கும் என்றான். வேணாம் என்று மறுத்து பார்த்தேன்.

’அட அவசரத்துக்கு இதாவது இருக்கே.. நான் என்ன பாட்டிலைத் திறந்து வாயிலே அப்படியே தொரதொரன்னு ஊத்தறேன்னா சொன்னேன்? நாளைக்கே இன்னொரு பியர் மக் கெடச்சதும் உனக்கு அதுலே லேகர் பியர் இல்லாட்டாலும் கிர்ருனு ஜிஞ்சர் பீர் ஊத்தித் தரேன்.. காலையிலே கலகலன்னு வெளியே போய் உடம்பே இறகு மாதிரி லேசாயிடும்.. நம்பு’.

லெச்சு தேர்தல் வாக்குறுதி மாதிரி கொடுத்து விட்டு என்னை உலகக் குடிகாரர்களின் கும்பலில் முறையாகச் சேர்த்து உட்கார வைத்தான். சியர்ஸ் சொன்னதும் குடி என்று சிறப்புக் கட்டளை எனக்காக மட்டும் இடப்பட்டது.

எல்லோரும் வாயில் கவிழ்த்துக் கொள்ள நானும் குடிக்கலானேன். கசந்து வழியும் இந்தக் கண்றாவியையா இப்படி ஊரோடு உலகத்தோடு ராப்பகலாக குடித்துத் தீர்க்கிறார்கள்? இதில் என்ன சுகம்? சிற்சபேசனைக் கேட்டேன்.

ஒவ்வொரு சிநேகிதியும் ஒரு மாதிரி இல்லையா அது மாதிரி தான் பியரும் விஸ்கியும் ரம்மும் ஜின்னும் ஒயினும் ஷாம்பேனும்.. உனக்கு இப்போ புரிஞ்சிருக்கணுமே .. ஆமா, எத்தனை ஜி எப் டா உனக்கு நிஜத்திலே?

அந்த் அசடனுக்கு கோப்பையை முகர்ந்து பார்த்ததுமே வந்தேன் வந்தேன் என்று எல்லா போதையும் சேர்ந்து உள்ளே மூண்டெழுந்து வர, என் தோழிகளை இப்படி வம்புக்கிழுத்த்து எனக்குச் சற்றும் விருப்பமாக இல்லாததால் அவனை விட்டு விலகி ஓரமாக மாடிப் படியில் இருந்தேன்.

அரையிருட்டில் ஏதோ வாயில அவ்வப்போது திரவமாக விழுந்து தீயாக உள்ளே போக, மூளைக்கு உள்ளே ஜிவ்வென்று ஏதோ பற்றி ஏற, இன்னொரு பக்கம் சாவதானமான உலகம் என்னோடு சேர்ந்து உருண்டு கொண்டிருந்தது.

எலுமிச்சை பிழிந்த கடலை, ஊறுகாயில் தொட்ட சின்னச் சின்ன உப்பு பிஸ்கட், வாடை பிடிக்காவிட்டாலும் விடாப்பிடியாகத் தின்று மேலே விஸ்கியை ஊற்றி உள்ளே அனுப்பிய மாமிச பஜ்ஜி என்று தலை சுற்றியது.

வேறு யாரோ குடிகாரன் என் அச்சு அசலான ஜாடையில் ரொம்பவே தைரியசாலியாக, வாயைத் திறந்தால் கெட்ட வார்த்தை பொழிகிறவனாக அந்த ராத்திரியில் சும்மா நேரம் போக்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்,

கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவிலே நல்ல இடைவெளி இருக்கற மாதிரி கையை வச்சுக்க்ங்கடா. கொஞ்சம் டெக்கிலா அடிக்கலாம்’.

லெச்சு சடங்குகளைச் செய்ய நியமிக்கப்பட்ட ஆராதகனாக குழுவுக்கு உத்தரவிட்டான். அவன் அவ்வப்போது ஒரு மடக்கும் இரண்டு மடக்குமாகக் குடித்தது எதுவுமே செய்யவில்லை என்பது மட்டுமில்லை, குரல் கூட சாதாரணமாகத் தான் இருந்தது. நான் அவனிடம் அதைச் சொன்னேன்.

’சத்தம் போடாதேடா பக்கத்துலே எல்லாம் வீடு இருக்கு தெரியலே’.

நான் உச்சக் குரலில் பேசுகிறேன் என்பதே லெச்சு சொல்லித்தான் தெரியும்.

கையை மருதாணி போட்ட மாதிரி அவன் சொன்ன படி நீட்ட கெமிஸ்ட்ரி லாபரேட்டரி அட்டெண்டர் மாதிரி ஒவ்வொருத்தர் கையிலும் கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் கொஞ்சம் உப்பை வைத்தான். நான் உச்ச கட்ட போதையில் அதை உடனே சாப்பிட்டு பியர் கேட்டேன்.

’கிழிஞ்சுது போ. குடிக்கணும்னு ஆசை இருக்கு. எதை எப்படிக் குடிக்கறதுன்னு கத்துக்க பொறுமை இல்லியே’.. லெச்சு கண்டித்தான்.

சாரி சொல்லச் சொன்னான். சொன்னேன். எனக்கு என்ன போச்சு. இன்னொரு குவளை லாகர் பியர் உள்ளே போக மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தது. கீழே போகலாமா இல்லை இங்கேயே ஓரமாகக் குத்த வைத்து விடலாமா?

யார் கீழே கூட்டிப் போனது, எப்போது என்ன சாப்பிட்டேன், எப்படி படுக்கையில் விழுந்து அடித்துப் போட்டது போல் தூங்கினேன் என்று தெரியாது. லெச்சு உலுக்கி எழுப்பக் கண் விழித்தேன்.

வல்லூரி சாரும் மேடமும் ரயில்வே ஸ்டேஷன்லே இருந்து வந்துட்டு இருக்காங்க. எழுந்திருங்கடா. வீட்டை கொஞ்சம் க்ளீன் பண்ணிடலாம்

நேத்திக்கு சாயந்திரம் தானே அலம்பி விட்டு நீட்டா இருக்கே என்றேன்.

லெச்சு என் தோளை இறுகப் பற்றிக் கேட்டது –

’ஏண்டா நேத்து குடிச்ச பாட்டில் எல்லாம் மொட்டைமாடியில் கொட்டிக் கிடக்கே, அதை எடுக்க வேணாம்’?

போய் கோணிச் சாக்கில் வாரி எடுத்துக் கொண்டிருக்கும்போது பிரான்சுவா என்னிடம் சொன்னான் –

’நேத்து ராத்திரி நீ கீழே போய் தூங்கிட்டியே. அப்புறம் முனி இங்கே ஓடிச்சு’.

அந்துவான் சற்றே கூட்டிச் சேர்த்தான் -

’வல்லூரி சார் கூரையை பிடுங்கிப் போட்டுட்டாரா?ஓட முடியாம முனி கால் தடுக்கி விழுந்துடுச்சு பாவம். அடுத்த வீட்டுல ஒரு முனியம்மா இருக்கு. அதைத் தேடி வருதாம்.. சீக்கிரமே கூட்டிட்டு ஓடிடும்னு நினைக்கறேன் ..’

லெச்சு நக்கலாகச் சிரித்தபடி கோணிச்சாக்கை என் தோளிலும் அவன் தோளிலுமாகச் சுமக்கக் கொடுத்தான்.

’நிஜமாவாடா’? நான் நம்பாமல் கேட்டேன்.

’உனக்குத்தான் எல்லாக் கதையும் நறுக்குனு முடியணுமே .. வேணும்னா எடுத்துக்கோ இல்லைன்னா விடு’.

வல்லூரி மேடம் வந்ததும் ஆச்சரியங்கள் நிறைய ஏற்பட்டன

முதலாவது, அவள் மேடம் இல்லை. சதா சிரித்த முகத்தோடு வந்த அந்தம்மா எங்களை விட பத்து வ்யது பெரியவள் என்பதால் தன்னை லதா தீதி என்று மூத்த சகோதரியாக நினைத்துக் கூப்பிடச் சொன்னாள்.

இரண்டாவது லதா தீதிக்கு பேய் பிசாசு முனி இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. முதல் மாடி வீடு விஸ்தாரமாக இருக்கு, தண்ணி கொட்டு கொட்டுன்னு கொட்டறது குழாயிலே. காத்து சல்ல காலி தென்றல்னா அசல் சமுத்திரத் தென்றல். இதுவே சொர்க்கம் என்று அடித்துச் சொல்லி, வல்லூரிக்கு நம்பிக்கை டானிக் ஊட்டி அங்கேயே தங்க வைத்து விட்டாள்.

மூன்றாவது ஆச்சரியம், அவள் வந்ததற்கு அப்புறம் வல்லூரிக்கு ஒரு தடவை கூட ஸ்கூட்டர் விபத்து, சின்னதோ பெரியதோ எதுவும் ஏற்படவில்லை.

லதா தீதி வந்ததற்கு அடுத்த நாள் கல்லூரிச் சாலைச் சரிவில் நல்ல வேகத்தோடு ஒயிலாக முன்னேறிக் கொண்டிருந்த வல்லூரி சாரின் ஸ்கூட்டரை தீதி தான் ஓட்டிக் கொண்டிருந்தாள்.

பின்னால் பில்லியனில் கௌதம புத்தன் மாதிரி சாந்தமும் அமைதியுமாக வல்லூரி.

(தொடரும்)

புது நாவல் : அச்சுதம் கேசவம் அத்தியாயம் 51 இரா.முருகன்


விருச்சிக மாதப் பிறப்பு தினத்தில் பகவதி தில்லியில் சின்னச் சங்கரன் வீட்டுக்கு வந்தாள். மென்மையாகத் தில்லி குளிர்காலம் தொடங்கி இருந்த விடிகாலை நேரம் அது.

உன் பேரன் சின்னச் சங்கரன் உறங்கிண்டிருப்பான் என் பொன்னு பகவதி. பெத்துப் பொழச்ச குட்டிப் பொண்ணு, சின்னச் சங்கரன் பாரியாள் வசந்தியும் தான். அவளுக்கு பிறந்த சிசுவும் நல்ல உறக்கத்திலே இருக்கும். நமக்கு இப்ப போயே பற்றுமா?

தயக்கத்தோடு கேட்டபடி கூட வந்தாள் விசாலம் மன்னி. அவளால் யாருக்கும் ஈர்க்குச்சி அளவு கூட, ரணம் ஊறிச் சிவந்த காயம் உண்டாக்கவோ நுள்ளி நோவிக்கவோ, என்றால் கிள்ளி உபத்திரவப் படுத்தவோ முடியாது என்பதை பகவதி அறிவாள். அங்கே இங்கே அலைவதிலும் ஈர்ப்பு இல்லை அவளுக்கு. என்றாலும் வந்தே தீர வேண்டியதாகி விட்டிருந்தது. உதயத்துக்கு முன் இப்படி ஒரு வந்து சேருதல் இன்றைக்கு நடக்கிறது.

பாட்டி, சித்தெ இரேன்.

தாழச் சடை பின்னி, நீளமாக குச்சிப் பின்னல் போட்ட சிறுமி பின்னால் இருந்து குரல் கொடுக்க, விசாலம் மன்னி நிற்கிறாள்.

நீ போய் களிச்சுண்டு இரு குட்டியம்மிணி. அப்புறமா உன்னைக் கூட்டிண்டு வரேன்.

விசாலம் மன்னி அவசரமாக அவளைத் தடுக்கக் கை நீட்ட சின்னப் பெண் பகவதியின் பாதுகாப்பான கை வளையத்துக்குள் புகுந்து கொள்கிறாள்.

பகவதி அத்தை, நான் சமத்தா வருவேன். விசாரம் ஏதும் வேணாம். நம்ம மூணு பேருக்குமே உடம்பு இல்லையே. இருந்தாத் தானே மத்தவாளுக்கு கஷ்டம் தர?

குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டுக் கை பிடித்து அழைத்துப் போகிறாள் பகவதி.

இதெல்லாம் என்ன? அக்னியை உருளை உருளையாப் பிடிச்சு இப்படி வீட்டுக்குள்ளே அடுக்கி வச்சிருக்கே?

இது குளிர் போக்கறதுக்கு கரண்ட்லே வேலை செய்யற கணப்பு, குஞ்ஞே.

பகவதி பிரியமாகப் பகர்ந்து தருகிறாள். ஆயுள் முடிந்து போனாலும் புதுசு புதுசாகத் தெரிந்து கொண்டுதான் இருக்கிறாள் அவள்.

குட்டியம்மிணி சித்தாடையை இடுப்பு நழுவ விடாமல் பிடித்துக் கொண்டு வேகவேகமாக பகவதி பின்னாலேயே ஓடி வருகிறாள். அவளுக்கு இந்த இடமே புதுசாக, உள்ளே கிறங்கிச் சுற்ற உற்சாகமான இடமாக இருக்கிறது.

எய் அது பஞ்சசார டப்பா. துறக்கண்டா என்று விசாலம் சொல்வதற்குள் அம்மிணி சர்க்கரை டப்பாவைக் குதிகாலில் எழும்பி எடுக்கிறாள். சமையல் அறைத் தரை முழுக்க வெள்ளைத் துணி விசிறிப் போட்டது போல சர்க்கரை படியும் நேரத்தில் அம்மிணி கை காட்டி நிறுத்த எல்லாம் வழக்கம் போல் பழையபடி. குட்டியம்மிணி ரசித்துச் சிரிக்கிறாள்.

குறும்பையும் மத்ததையும் வேறே ஒரு பொழுதுக்கு மாற்றி வச்சுக்கோ குட்டியம்மிணி. குழந்தை பொறந்திருக்கற நேரம். அதன் பிருஷ்டத்துலே எறும்பு மொய்க்கப் போறது. கஷ்டம். கடிச்சா இத்திரி நோகும் கேட்டியா. உன்னாலே தானாக்கும் அதெல்லாம்.

விசாலம் கண்டிப்பதாக குட்டியம்மிணியைப் பார்த்துச் சொன்னதில் சிரிப்பு மட்டும் தான் இழைத்துச் சேர்த்திருக்கிறது. பகவதி தலையை வெளியே எக்கி சின்னச் சங்கரனைத் தேடுகிறாள்.

நான் இங்கேயே இருந்து ஆசீர்வாதம் பண்றேன்.

விசாலம் மன்னி குட்டியம்மிணியின் கைகளைப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள்.

பாட்டியும் பேத்தியும் சர்க்கரை டப்பாவை வச்சு விளையாடிண்டு இருங்கோ. நான் இதோ வரேன்.

தில்ஷித் கவுரை இறுக அணைத்த கற்பனையில் அரைத் தூக்கமும் மற்றபடி பிரக்ஞையுமாகப் புரண்டு படுக்கிற சின்னச் சங்கரனைப் படுக்கை அறையில் நுழைந்ததும் பார்க்கிறாள் பகவதி.

அட படவா, தாத்தா பேரை உனக்கு வச்சபோதே நினைச்சேன். சில்லுண்டி ஆட்டம் எல்லாம் ஆடுவேன்னு. சரியாப் போச்சு பாரு. அந்த ஸ்திரி அவளோட குஞ்ஞுக்கு ஊட்ட ஒண்ணுக்கு ரெண்டா அவளுக்கு மொல எழும்பியிருக்கு. உனக்கு சொப்பனத்திலேயும் விடாம பாக்கறதுக்கா பகவான் அதுகளை உண்டாக்கி வச்சு அனுப்பியிருக்கான்?

சங்கரன் வாசல் வழியாக மிதந்து உள்ளே வருகிறான். இவன் பெரிய சங்கரன். அரசூர்ப் புகையிலைக் கடைக்காரன். பகவதி என்ற சுந்தரிக் குட்டியை அம்பலப்புழையில் கல்யாணம் கழித்து அரசூர் வம்சம் தழைக்கக் கூட்டி வந்தவன்.

என் பகவதி கண்ணம்மா. பேரனை பெட்ரூமிலே வந்து பார்க்கறது தப்புடீ செல்லம்.

சும்மா இருக்கேளா. அதென்ன பெட்ரூம்? புருஷனும் பொண்டாடியும் கட்டிண்டு படுத்துக்கற உள்ளு தானே? அன்னிய ஸ்திரியை அங்கே எதுக்கு கூப்பிட்டு வச்சு அவளோட கம்பளி ஸ்வெட்டரை அவுக்கணும்? ஊர்லே இல்லாத ஸ்தனமா அவளுக்கு வாய்ச்சது?

என்னைக் கேட்டா?

பெரிய சங்கரன் சிரிக்கிறான்.

அதானே. நீங்க கப்பல்லே வெள்ளைக்காரிகளோடு ஓஹோன்னு ராக்கூத்து அடிச்ச மனுஷராச்சே. எதெது எங்கேன்னு தெரியாமத்தானே கூட்டமா இருந்து ரமிச்சதெல்லாம்?

பகவதி மிதந்து பெரிய சங்கரனின் தோளில் செல்லமாகக் கடித்து அவன் கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள். இரண்டு பேரும் உள்ளே இருட்டு கவிந்த அறைக்குப் போகிறார்கள்.

போன வாரம் பிறந்த குழந்தை தொட்டிலில் சிணுங்குகிறது. வசந்தி எழுந்து உட்கார, கீழே படுத்திருந்த அவளுடைய அம்மா சுவரைப் பிடித்துக் கொண்டு எழுந்து வந்து பால் கொடுக்கறியா என்று விசாரிக்கிறாள்.

பொகையிலை கடைக்காரா, நீ வெளியிலே போய் நில்லு. குஞ்ஞுக்கு மொல கொடுக்கப் போறா.

நான் தாத்தா, நீ பாட்டி. பாத்தா தப்பு இல்லே. மனசுலே கல்மிஷம் கிடையாது. மனசே இல்லை. உடம்பும் தான்.

சங்கரன் திடமாகச் சொல்கிறான்.

இவனுக்கு ஒரு பொண்ணு பிறக்கப் போறான்னு எனக்கு அவன் அம்பலப்புழை போய்ட்டு ஜோடியா இந்த முறிக்கு வந்த போதே தெரியும்.

ரகசியம் சொல்லும் குரலில் பகவதி சங்கரனிடம் தெரிவிக்கிறாள்.

பேரன் பெட்ரூம்லே, ஜோடியா இருக்கறபோது பார்த்ததும் தப்பு தான் செல்லம். எனக்கு ஒரு முத்தம் கொடு. தப்பு எல்லாம் நேராயிடும்.

கடைக்கார பிராமணா, இன்னுமா முத்தம், ஆலிங்கனம்னு அலையறே.

பகவதி முத்தம் கொடுத்து முகத்தை மூடிக் கொள்கிறாள். மெல்லக் கண் திறந்து பார்த்து சங்கரனிடம் மெதுவான குரலில் சொல்கிறாள் -

குழந்தைக்கு என் பெயரை வைக்கணும்னு சொல்றா விசாலம் மன்னி.

சரியாத்தான் சொல்றா. என் பகவதிக்குட்டியை இந்த வீட்டுலே திரும்பவும் வாய் நிறைய எல்லோரும் கூப்பிடட்டும்.

சங்கரன் உத்தரீயத்தை தோளைச் சுற்றி இறுக்கிக் கொண்டு பகவதியையும் அடுத்து அணைத்துக் கொண்டு சொல்கிறான்.

பால்யம் திரும்பறதா என்ன? நம்ம காலம் முடிஞ்சு போயாச்சு. கட்டிக்கறதும் கொஞ்சறதும் கொஞ்சம் கம்மி பண்ணணும், என்ன புரியறதா?

பகவதி பெரிய சங்கரனிடம் பொய்க் கோபத்துடன் சொல்ல, சின்னச் சங்கரன் தூக்கத்தில் குழந்தை மாதிரி சிரிக்கிறான்.

பொண்ணுக்கு பகவதி, பிள்ளைக்கு மருதையன் இதான் பெயர் வைக்க வேண்டியது

பெரிய சங்கரன் சொல்ல, பிள்ளையா அது எப்போ என்று மலைக்கிறாள் பகவதி.

இவன் எமகாதகன். வசந்தியை உபத்திரவிக்காமல் வேறே இடத்தில் புத்ர பாக்கியம்.

பெரிய சங்கரனும் பகவதியும் சின்னச் சங்கரனுடைய படுக்கை அறைக்குள் மறுபடி பிரவேசிக்கிறார்கள்.

யார் மூலம்? பின்னால் வந்த விசாலம் மன்னியும், குட்டியம்மிணியும் சங்கரனைச் சூழ்ந்து கொண்டு கேட்கிறார்கள். பகவதி ஆவலோடு அவன் முகத்தைப் பார்க்க, சின்னச் சங்கரன் எழுந்து ரகசியம் கேட்கத் தயாராக உட்கார்கிறான்.

வாசலில் காலிங் பெல் சத்தம்.

கனவு தான் என்று தெரிகிறது சின்னச் சங்கரனுக்கு. ஆனாலும் தெளிவாக துலக்கமாக வந்த பகவதிப் பாட்டியின் முகம், படத்தில் பார்த்துப் பழகி, அதே போல் பட்டையாக வீபுதியும் காதில் கடுக்கனும், முகத்தில் ரெண்டு நாள் தாடியுமாக தாத்தா பெரிய சங்கரன், இன்னும் யாரோ பழுத்த சுமங்கலியாக ஒரு கிழவி, பச்சை ரிப்பன் வைத்துப் பின்னிய தலைமுடியும் ரப்பர் வளையுமாக ஒரு சின்னப் பெண்.

எல்லோரும் இங்கே, இந்தச் சின்ன அறையில் தான் சுற்றிச் சுற்றி வந்தார்கள். எங்கே அவர்கள் எல்லாம்?

பகவதிப் பாட்டி. எங்கே போனே? உன் பெயரை வைக்க ஏற்கனவே முடிவு செஞ்சாச்சு.

சின்னச் சங்கரன் வாசல் கதவைத் திறக்கிறான்.

அதிகப் பால் வேணும்னு சொல்லியிருந்தாங்க மாதாஜி. வீட்டுலே விசேஷமாமே?

பத்து லிட்டர் பிடிக்கும் தகரக் குவளையை உள்ளே நகர்த்தி விட்டு தூத்வாலா நேரு மாதிரி ஷெர்வானி கோட்டை சரி செய்து கொண்டு வெளியே போகிறான்.

சின்னச் சங்கரன் குழந்தை அழுகை சத்தம் கேட்டு உள்ளே போகிறான். பெற்ற உடம்பு அதியுன்னதமாக உலகத்து தாய்மை எல்லாம் சேர்ந்து கவிந்து மின்ன வசந்தி மெல்ல அவனை ஒரு வினாடி பார்த்து விட்டு, தொட்டிலில் உறங்கும் பெண் குழந்தையை பிரியமாக நோக்குகிறாள்.

பொண்ணு. பரவாயில்லையா?

குழந்தை பிறந்த தினத்தில் அவன் ஆஸ்பத்திரிக்கு முதலில் வந்தபோது வசந்தி கேட்டது இது. அவளிடம் அவளுடைய அம்மாவும் அம்மாவிடம் அவர்களுக்கு உதவியாக ஆஸ்பத்திரியில் தங்கி இருந்த மூத்த உறவுக்காரப் பெண் ஒருத்தியும் கேட்டது இது.

வசந்தியிடம் மட்டும் சொன்னான் – நான் இவளைத் தான் எதிர்பார்த்தேன். பெயர் என்ன தெரியுமா? பகவதி. பகவதின்னு வச்சு பகவதிக்குட்டின்னு வாய் நிறையக் கூப்பிடணும்.

மலையாள வாடை தூக்கலா இருக்கே.

வசந்திக்குப் பிடித்த ரேஷ்மா, ஷிஃபாலி, கோமல்கலி போன்ற பெயர்களை நிராகரித்து விட்டான் சின்னச் சங்கரன். பசுமை மணக்கும் ஊரும், காயலும், அம்பலமும், சோபான சங்கீதமும், பால் பாயச இனிப்பும் மனதில் எழுப்பும் பகவதிக்கு ஈடாகுமா அதெல்லாம்?

வசந்தி ஒரு சமாதானத்தைச் சொன்னாள் – பகவதின்னு ஒரு பெயர் இருக்கட்டும். பெயர் சூட்டற அன்னிக்கு வரை பார்ப்போம். வேறே ஏதாவது கூப்பிடற பெயர் தட்டுப்பட்டா குழந்தைக்கு அதையும் சூட்டிடலாம்.

வசந்தி கண்ணால் சிரித்து குழந்தையைப் பார்வையால் காட்டி சின்னச் சங்கரனைப் பாரு என்றாள். பட்டுத் துணியில் பொதிந்த பழக்குவியல் மாதிரி சின்னதாக வாய் அசைத்து சின்னஞ்சிறு கண்கள் செருகி சற்றே திறந்து பின் மலர்ந்து உறக்கத்தில் லயித்த குழந்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சின்னச் சங்கரன்.

ஆண் குழந்தை. அதுவும் வருமாம். வசந்தி இல்லாமல்.

மனசு தப்புச் செய்த குறுகுறுப்பில்.

குழந்தைக்கு பக்கத்தில் இந்த மாதிரி மனநிலை ஏன் வரணும்? பரிசுத்தமான நினைப்பும் பார்வையும் பேச்சும் இருக்க வேண்டிய இடத்தில் தப்பு செய்கிற குறுகுறுப்பு ஏன்?

வசந்தி கண்ணை மெதுவாக மூடி அடுத்த உறக்கத்தில் அமிழ வெளியே வந்தான்.

ஒன்று விட்ட மைத்துனியோ, மைத்துனன் சம்சாரமோ, அவளுக்கு அம்மாவோ, தங்கையோ, இளம் வயதாகத் தெரிகிற பெண்பிள்ளை கலந்து கொடுத்த காப்பியோடு பொழுது தொடங்குகிறது. வசந்தி ஒத்துழைப்பு இல்லாமல் ஆண் குழந்தை. வேண்டாம். அது கனவு. தறிகெட்டு மனதை அது அலைக்கழிக்க வேண்டாம். தில்ஷித் கவுர்? அவள் வீட்டுக்காரன் புதுச் செருப்பு வாங்கி வந்து விலைச் சீட்டைப் பிய்த்து எறிந்து விட்டு அடிப்பான். தேவையா?

ஷங்கர் ஷார், சாஸ்திரிகள் எட்டு மணிக்கு ரெடியா இருக்கச் சொன்னார். புண்ணியாஜனனம் இன்னிக்கு.

ஷார்ட்ஸும் கான்வாஸ் ஷூவுமாக வெளியே வந்தபோது சின்ன மடேடர் வேனை ஓட்டி வந்து காம்பவுண்டுக்குள் நிறுத்திய மைத்துனன் சொன்னான்.

குழந்தைக்கு என்ன பெயர் சூட்டப் போறாப்பல?

இந்த போறாப்பல, வந்தாப்பல என்று கேள்வியை மொன்னையாக முடிப்பதெல்லாம் செம்மண் பூமி வழக்கம். வெறும் கேள்வி கூட கூர்மையாகக் காயப்படுத்தும் என்று யோசித்துக் கொண்டு எழுந்து வருவது அந்த பதவிசான மொண்ணை. சங்கரனின் மைத்துனன் அதை கேலி செய்கிறானாம்.

வெட்டிப் பயல். இப்போது இவனோடு வம்பு வளர்க்க சங்கரன் உடம்பில் சக்தி இருந்தாலும் மனசில் விருப்பம் இல்லை. இருந்தாலும் சும்மா இருந்தால் துளிர்த்து விடுவான். குட்டிக் கொண்டே இருக்க வேணும்.

என்ன பெயர் வைக்கலாம், நீயே சொல்லேன். நம்ம குடும்பத்திலேயே நேரு மாதிரி புத்திசாலி நீ மட்டும் தானே?

சங்கரன் குறுக்கே வெட்டினான்.

அய்யே நேருவெல்லாம் என்ன புத்திசாலியிலே சேர்த்தி? பி எல் சோந்தி மாதிரின்னு சொல்லுங்கோ.

நேரு எங்கே, இவன் கொண்டாடும் உதிரிகள் எங்கே?

சின்னச் சங்கரன் மணி பார்த்தான். சரியாக ஆறு மணி. இப்போது ஓடப் போனால் திரும்பி வரச் சரியாக இருக்கும்.

குழந்தைக்கு ஜ்யோத்ஸ்னான்னு பெயர் வைக்கலாம். டக்கரா இருக்கும். சரியா அத்திம்பேர்?

மைத்துனன் யாசிக்கிறான்.

ஓ, ஜ்யோத்ஸ்னாவா?

அதென்ன ஓ ?

உங்க பக்கத்து வீட்டுலே அதான் தல்வார் குடும்பத்துலே பொண்ணு தானே ஜ்யோத்ஸ்னா? அவள் மேலே உனக்கு ஒரு கண்ணு இருக்குன்னு ரொம்ப நாளா எனக்கு ஊகம்.

கண்ணெல்லாம் ஒண்ணுமில்லே அத்திம்பேர். பாக்க பளிச்சுனு பால் பாட்டில் மாதிரி இருக்கான்னு ஒரு அப்ரிசியேஷன்.

அப்பப்போ கடலை போடறது வேறே நடப்பாக்கும்?

சே சே எப்பவாவது நாலு வார்த்தை பேசறதுதான். முக்கியமா எண்ணெய் தேச்சுக் குளிச்சுட்டு நிகுநிகுன்னு இடுப்பு மின்ன நிக்கற போது.

அட படவா, பர ஸ்திரியை எங்கெல்லாம் பார்வையாலே தடவி இருக்கே. என் கிட்டே வேறே வெக்கமே இல்லாம சொல்லி மகிழ்ந்து போறே.

சின்னச் சங்கரன் மனசில் அவனை எடுத்தெறிந்து கொட்டையில் மிதித்துக் கூழாக்கினன். பேசித் தீர்க்க மட்டும் தான் இந்த இச்சை எல்லாம் என்கிறது அடுத்து அதே மனசு.

வேணாம். சொன்னாக் கேளு. கல்யாணம் ஆகி நாலு பிள்ளை பெத்தவ அந்த ஜ்யோத்ஸ்னா. பேச்சுலே தான் ஆரம்பிக்கும் சகலமும்.

சிரித்துக் கொண்டே சொல்கிறான் சங்கரன். அதை யாசித்து நின்ற மைத்துனன் முகம் நேசமாகிறது.

பேசினா என்ன தப்பு அத்திம்பேர்? உங்க ஆபீஸ்லே கூடத் தான் அந்த சர்தார் பொண்ணு. நீங்க சொல்லியிருக்கேள். மதமதன்னு மாரு. தினசரி தரிசனம். இறுக்கிப் பிடிச்ச ஸ்வெட்டர். சிவப்பு கலர் தானே? இன்னிக்கு அவளை வரச் சொல்லி கூப்பிட்டிருக்கோ?

மைத்துனனுடன் பானகம் சாப்பிடக் கூட இனி யோசிக்க வேண்டும். ஒரு மக் பியரில் சகல அந்தரங்கத்தையும் இவனிடம் எப்போதோ உளறி இருக்கிறான் சங்கரன்.

உள்ளே உங்கக்கா இருக்கா. தெரிஞ்சா என்னை இழுத்து வச்சு அருவாமணையிலே முழுசா நறுக்கிடுவா. அப்புறம் கவுரை நினைச்சாக் கூட வெத்து அரைக்கட்டுலே உயிர் போற மாதிரி வலிக்கும்.

தோல்வியை மறைத்துக் கொள்ள இன்னும் தாழ்த்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. போகட்டும். ஞாயிற்றுக்கிழமை எல்லா அவமரியாதையும் பொறுத்துக் கொள்ளக் கூடியதே. ரெண்டு வேளை ஒசத்தியான சாப்பாடும் கள்ளுச் செட்டு போல் காப்பியும் வெட்டியாக திவானில் சாய்ந்து நேரம் போக்கவுமாக ஆன தினம். இன்றைக்கு வீட்டு விசேஷம் என்பதால் திவானில் இளைப்பாற சாயந்திரம் ஆகி விடலாம். மற்றது உண்டு.

தலைக்கு மேலே வேலை. நம்மாத்திலே முப்பது பேருக்கு சமையலாக்கும் இந்த முகூர்த்ததுக்காக. போய் முடிச்சு எடுத்துண்டு வரணும்.

மைத்துனன் உள்ளே ஓடினான்.

நீ ஒரு துரும்பையும் நகர்த்தாமல் சும்மா லோதி கார்டனில் ஓடப் போகிற சோம்பேறிக் கழுவேறி என்றும் அவன் செய்கைக்கு அர்த்தம்.

நீ என் முடிக்கு சமானம் என்று மனதில் வழக்கம் போல் வடக்கு நோக்கி நின்று திட்டி விட்டு புது ஸ்கூட்டரைக் கிளப்பி மெதுவாக ஓட்டிப் போனான் சின்னச் சங்கரன்.

தோட்டத்தில் பெரிய கூட்டமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். கிடைத்த இடத்தில் ஓரமாக உட்கார்ந்து பத்மாசனம் போட்டு ஜமக்காளம் விரித்து இருந்தவர்களையும், சவாசனமாகப் படுத்து கால்களின் ஊர்வலத்தை ரசித்துக் கொண்டிருந்தவர்களையும் கடந்து மெதுவாக ஓட ஆரம்பித்தான் சின்னச் சங்கரன்.

அரே பாய் ஷங்கர், பெண் குழந்தையாமே. ஜீத்தே ரஹோ.

நாற்பத்தேழாம் வருடம் முதல் மந்திரிசபையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த எண்பது வயது தலைவர் வாக்கிங் ஸ்டிக்கால் சங்கரன் முதுகில் தட்டி வாழ்த்த அவனுக்கு வானத்தில் பறக்கிற சந்தோஷம். எவ்வளவு பெரிய மனுஷன் கையால் ஒரு சுபதினத்தில் முதல் வாழ்த்து கிடைத்திருக்கிறது. வசந்தியிடம் சொன்னால் இதன் மகத்துவம் புரியாது. சுதந்திரப் போராட்டம், ஜவஹர்லால் நேருவின் முதல் சர்க்கார், அமைச்சரவை என்று கொஞ்சம் முன்னால் போய் லோதி தோட்டத்தில் ஓடுகிற பெரியவருக்கு வர வேண்டும். தகவலில் பாதி சங்கரனுக்கே மறந்து போக ஆரம்பித்து விட்டது.

ஷங்கர் ஷம்போ.

குரலைக் கேட்க மனம் இன்னும் அதிகம் உற்சாகத்தில் துள்ளியது. ஜோதிர்மய் மித்ரா மோஷாய் மெம்பர் ஆப் பார்லிமெண்ட். முதல் லோக்சபாவில் இருந்து தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர். சுருட்டு குடிக்காத நேரம் எல்லாம் சுறுசுறுப்பாக தொகுதிக்காக சண்டை வலிக்கும் இடதுசாரி மனுஷர்.

இனிப்பும் மீனும் இல்லாமல் சந்தோஷ சமாசாரம் சொன்னால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று சொல்லியபடியே சங்கரனை அணைத்துக் கொண்டார் மோஷாய்.

ஓடி முடித்துப் போகும்பொழுது பக்கத்து வங்காளி ஸ்வீட் ஸ்டாலில் இங்கே இருக்கும் பெரியவர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் ரஸகுல்லா வாங்கித் தருவதாக உடனே வாக்குத் தத்தம் கொடுத்தான் சங்கரன் சந்தோஷமாக.

இங்கே ஓடற முக்கால் வாசிப் பேருக்கு, என்னையும் சேர்த்து ஷுகர் கம்ப்ளெயிண்ட்னு தெரிஞ்சு தானே சொல்றே?

வங்காளிகளின் புத்திசாலித் தனத்துக்கு என்றென்றும் தலை வணங்குவதாகச் சிரம் குவித்து அவரிடம் சின்னச் சங்கரன் சொல்ல, நீ மதறாஸிக் களவாணி என்று உன்னதமான பாராட்டு வழங்கினார் மோஷாய்.

சேர்ந்து மெதுவாக ஓட ஆரம்பித்தார்கள்.

பிரசவ ஆஸ்பத்திரி சேவை எல்லாம் சீராகக் கிடைக்கிறதா?

மோஷய் அக்கறையாகக் கேட்டார். ஏதாவது குறை இருந்தால் அவரிடம் சொன்னால் உடனே சரி பண்ணித் தருவதாகவும் சொன்னார். அவரால் அது முடியும்.

ஒரு பிரச்சனையும் இல்லே. வீட்டுக்கு முந்தாநாளே வந்துட்டா. நார்மல் டெலிவரி தான்.

பெயர் என்ன வைக்கப் போறே?

கனவு நினைவில் உடனடியாக வந்து புகுந்து கொண்டது. கூடவே வசந்தி ஒத்தாசை இல்லாமல் இன்னொரு குழந்தை.

ஆறடி ஆகிருதியாகக் கடந்து வந்து முன்னால் முந்திப் போன வடிவான பஞ்சாபிப் பெண்ணின் பின்னால் நிலைத்த பார்வையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எடுத்தான் சங்கரன். சங்கரனின் குழந்தையை அவள் ஏன் சுமக்க வேணும்? அடுத்த கனவில் விசாரித்தால் தெரியுமாக இருக்கும்.

பெயர் இன்னும் வைக்கலேன்னா கல்பனான்னு வை.

மோஷாய் நேராகப் பார்த்துக் கொண்டு சொன்னார்.

மார்க்சீயர்களுக்கு அச்சு வெல்லம் போல பெண் குழந்தை என்றால் உடனே நினைவு வரும் பெயர் இந்த கல்பனா. கல்பனா தத் பற்றியும் சிட்டகாங் நகரில் காங்கிரஸ் சோஷலிஸ்ட்கள் நடத்திய ஆயுதக் கிடங்கு ஆக்கிரமிப்பு பற்றியும் பிடார் ஜெயம்மா சங்கரனுக்கு நிறையச் சொல்லி இருக்கிறாள். அவளுக்கு இடதும் வலதும் ஒன்றுதான் என்றாலும் கல்பனாவை ரொம்பவே பிடிக்கும்.

குழந்தை வெள்ளிக்கிழமை பொறந்திருக்கா. சாரதான்னு பெயர் போடுடா. சிருங்கேரி பீடம் சாரதாம்பா தரிசனத்துக்குப் போயிருக்கியோ? நீ எங்கே போனே? லீவு கிடைச்சா அரசூருக்கு கோழி மேய்க்க ஓடிப் போயிடுவே.

பிடார் ஜெயம்மா கேண்டீனில் வழக்கம்போல ஒலிபரப்பி சங்கரனுக்குப் பெண் பிறந்த தகவல் புதிதாகப் போய்ச் சேர்ந்தது. சந்தோஷ சமாசாரம் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சி கடலை எண்ணெய் முழுக்காட்டிய கேண்டீன் ஜிலேபியாக முடிந்தது வேறே கதை.

மித்ரா மோஷாய் ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் கேண்டீனுக்கு வந்திருக்கிறார். அவருக்கு அங்கே காப்பி மட்டும் இஷ்டம். நசநசவென்று எண்ணெய் கையில் பிசினாக ஒட்டும் மதறாஸி இனிப்பெல்லாம் அவருக்குப் பகை.

கல்பனா, அஜிதா, மிருணாளினி இது தவிர வங்காளத்தில் பெண் குழந்தை பெயரே இல்லையா மோஷாய்?

ஓடிக் கொண்டே சங்கரன் விசாரித்தான்.

ஏன் இல்லாமல், காவேரி.

அது சுத்தத் தமிழ்ப் பெயர் தான் என்றான் சங்கரன். அப்புறம் குழந்தைக்கு அதை வைக்க என்ன தடை என்று விசாரித்தார் அவர். அதானே?

மோஷாய், மான்செஸ்டர் கார்டியன் பத்து நாள் பேப்பர் ஒற்றைக் கட்டாக பிளேனிலே அனுப்பி வச்சு பிரஸ் கிளப்பில் நேற்று வந்தது. படிச்சீங்களா?

பேச்சை மாற்றுவதற்காக இல்லை, உண்மையாகவே அந்த பிரிட்டீஷ் செய்தித்தாளைப் படிப்பதில் சகல மார்க்சீயர்களுக்கும் பெருவிருப்பம் இருப்பதை சங்கரன் அறிவான்.

படிச்சேன் ஷொங்கொர். அதென்ன, எலிசபெத் ராணிக்குக் கொடுக்கற மானியத்தை குறைக்கணும்னு ஹவுஸ் ஓஃப் காமன்ஸ்லே இப்படி வாக்குவாதம் பண்றாங்க. வேதனையா இருக்கு. ராணியம்மா மதிப்பு இந்த அறிவிலிகளுக்கு என்ன தெரியும்?

சங்கரன் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தான். எல்லா மார்க்சீயர்களும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் கொண்டே இங்கிலீஷ் கலாசாரத்தில். மரபில் லண்டன் மாநகரத்தில், பிரிட்டன் என்ற தேசத்தில் முழு ஈடுபாடு உடையவர்கள் என்று பிடார் ஜெயம்மா சொல்வது நினைவு வந்தது. இங்கே இருந்து விரட்டினால் அங்கே போய்க் குடியேறி விடுவார்களாக இருக்கும்.

பார் அட் லா அங்கே தான் படிச்சு வருவாங்க. பிரிட்டீஷ ராணி, ராஜ குடும்ப முதல் விசுவாசிகளோட பட்டியல் எடுத்தா இவங்க பெயர் முதல்லே இருக்கும்.

ராஜ விசுவாசிக்கு வாழ்த்து சொல்லி சங்கரன் கிளம்பினான்.

மயூரா. இந்தப் பெயர் எப்படி இருக்கு?

போகும்போது அவனை நிறுத்தி மோஷாய் கேட்டார்.

கல்பனா வேணாமா மோஷாய்?

அவ பாவம் ரொம்ப கஷ்டமான ஜீவிதம். கல்கத்தாவிலே தெருவுக்கு நாலு கல்பனா உண்டு. போதும் இப்போதைக்கு. மயூரா பிடிச்சிருக்கா? மயூரான்னா மயில். அழகும் உண்டு. போர்க் குணமும் உண்டு. இந்தக் காலப் பெண்ணுக்கு இதெல்லாம் தான் முக்கியம்.

மோஷாய் மூச்சு வாங்கிக் கொண்டு சொன்னபடி வாசலில் காரை நோக்கி நகர்ந்தார்.

சங்கரன் வீட்டில் நுழைந்தபோது வீட்டு முற்றத்தில் ஒரு மயில் தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்தது.

(தொடரும்)