புது நாவல் : அச்சுதம் கேசவம் அத்தியாயம் 51 இரா.முருகன்


விருச்சிக மாதப் பிறப்பு தினத்தில் பகவதி தில்லியில் சின்னச் சங்கரன் வீட்டுக்கு வந்தாள். மென்மையாகத் தில்லி குளிர்காலம் தொடங்கி இருந்த விடிகாலை நேரம் அது.

உன் பேரன் சின்னச் சங்கரன் உறங்கிண்டிருப்பான் என் பொன்னு பகவதி. பெத்துப் பொழச்ச குட்டிப் பொண்ணு, சின்னச் சங்கரன் பாரியாள் வசந்தியும் தான். அவளுக்கு பிறந்த சிசுவும் நல்ல உறக்கத்திலே இருக்கும். நமக்கு இப்ப போயே பற்றுமா?

தயக்கத்தோடு கேட்டபடி கூட வந்தாள் விசாலம் மன்னி. அவளால் யாருக்கும் ஈர்க்குச்சி அளவு கூட, ரணம் ஊறிச் சிவந்த காயம் உண்டாக்கவோ நுள்ளி நோவிக்கவோ, என்றால் கிள்ளி உபத்திரவப் படுத்தவோ முடியாது என்பதை பகவதி அறிவாள். அங்கே இங்கே அலைவதிலும் ஈர்ப்பு இல்லை அவளுக்கு. என்றாலும் வந்தே தீர வேண்டியதாகி விட்டிருந்தது. உதயத்துக்கு முன் இப்படி ஒரு வந்து சேருதல் இன்றைக்கு நடக்கிறது.

பாட்டி, சித்தெ இரேன்.

தாழச் சடை பின்னி, நீளமாக குச்சிப் பின்னல் போட்ட சிறுமி பின்னால் இருந்து குரல் கொடுக்க, விசாலம் மன்னி நிற்கிறாள்.

நீ போய் களிச்சுண்டு இரு குட்டியம்மிணி. அப்புறமா உன்னைக் கூட்டிண்டு வரேன்.

விசாலம் மன்னி அவசரமாக அவளைத் தடுக்கக் கை நீட்ட சின்னப் பெண் பகவதியின் பாதுகாப்பான கை வளையத்துக்குள் புகுந்து கொள்கிறாள்.

பகவதி அத்தை, நான் சமத்தா வருவேன். விசாரம் ஏதும் வேணாம். நம்ம மூணு பேருக்குமே உடம்பு இல்லையே. இருந்தாத் தானே மத்தவாளுக்கு கஷ்டம் தர?

குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டுக் கை பிடித்து அழைத்துப் போகிறாள் பகவதி.

இதெல்லாம் என்ன? அக்னியை உருளை உருளையாப் பிடிச்சு இப்படி வீட்டுக்குள்ளே அடுக்கி வச்சிருக்கே?

இது குளிர் போக்கறதுக்கு கரண்ட்லே வேலை செய்யற கணப்பு, குஞ்ஞே.

பகவதி பிரியமாகப் பகர்ந்து தருகிறாள். ஆயுள் முடிந்து போனாலும் புதுசு புதுசாகத் தெரிந்து கொண்டுதான் இருக்கிறாள் அவள்.

குட்டியம்மிணி சித்தாடையை இடுப்பு நழுவ விடாமல் பிடித்துக் கொண்டு வேகவேகமாக பகவதி பின்னாலேயே ஓடி வருகிறாள். அவளுக்கு இந்த இடமே புதுசாக, உள்ளே கிறங்கிச் சுற்ற உற்சாகமான இடமாக இருக்கிறது.

எய் அது பஞ்சசார டப்பா. துறக்கண்டா என்று விசாலம் சொல்வதற்குள் அம்மிணி சர்க்கரை டப்பாவைக் குதிகாலில் எழும்பி எடுக்கிறாள். சமையல் அறைத் தரை முழுக்க வெள்ளைத் துணி விசிறிப் போட்டது போல சர்க்கரை படியும் நேரத்தில் அம்மிணி கை காட்டி நிறுத்த எல்லாம் வழக்கம் போல் பழையபடி. குட்டியம்மிணி ரசித்துச் சிரிக்கிறாள்.

குறும்பையும் மத்ததையும் வேறே ஒரு பொழுதுக்கு மாற்றி வச்சுக்கோ குட்டியம்மிணி. குழந்தை பொறந்திருக்கற நேரம். அதன் பிருஷ்டத்துலே எறும்பு மொய்க்கப் போறது. கஷ்டம். கடிச்சா இத்திரி நோகும் கேட்டியா. உன்னாலே தானாக்கும் அதெல்லாம்.

விசாலம் கண்டிப்பதாக குட்டியம்மிணியைப் பார்த்துச் சொன்னதில் சிரிப்பு மட்டும் தான் இழைத்துச் சேர்த்திருக்கிறது. பகவதி தலையை வெளியே எக்கி சின்னச் சங்கரனைத் தேடுகிறாள்.

நான் இங்கேயே இருந்து ஆசீர்வாதம் பண்றேன்.

விசாலம் மன்னி குட்டியம்மிணியின் கைகளைப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள்.

பாட்டியும் பேத்தியும் சர்க்கரை டப்பாவை வச்சு விளையாடிண்டு இருங்கோ. நான் இதோ வரேன்.

தில்ஷித் கவுரை இறுக அணைத்த கற்பனையில் அரைத் தூக்கமும் மற்றபடி பிரக்ஞையுமாகப் புரண்டு படுக்கிற சின்னச் சங்கரனைப் படுக்கை அறையில் நுழைந்ததும் பார்க்கிறாள் பகவதி.

அட படவா, தாத்தா பேரை உனக்கு வச்சபோதே நினைச்சேன். சில்லுண்டி ஆட்டம் எல்லாம் ஆடுவேன்னு. சரியாப் போச்சு பாரு. அந்த ஸ்திரி அவளோட குஞ்ஞுக்கு ஊட்ட ஒண்ணுக்கு ரெண்டா அவளுக்கு மொல எழும்பியிருக்கு. உனக்கு சொப்பனத்திலேயும் விடாம பாக்கறதுக்கா பகவான் அதுகளை உண்டாக்கி வச்சு அனுப்பியிருக்கான்?

சங்கரன் வாசல் வழியாக மிதந்து உள்ளே வருகிறான். இவன் பெரிய சங்கரன். அரசூர்ப் புகையிலைக் கடைக்காரன். பகவதி என்ற சுந்தரிக் குட்டியை அம்பலப்புழையில் கல்யாணம் கழித்து அரசூர் வம்சம் தழைக்கக் கூட்டி வந்தவன்.

என் பகவதி கண்ணம்மா. பேரனை பெட்ரூமிலே வந்து பார்க்கறது தப்புடீ செல்லம்.

சும்மா இருக்கேளா. அதென்ன பெட்ரூம்? புருஷனும் பொண்டாடியும் கட்டிண்டு படுத்துக்கற உள்ளு தானே? அன்னிய ஸ்திரியை அங்கே எதுக்கு கூப்பிட்டு வச்சு அவளோட கம்பளி ஸ்வெட்டரை அவுக்கணும்? ஊர்லே இல்லாத ஸ்தனமா அவளுக்கு வாய்ச்சது?

என்னைக் கேட்டா?

பெரிய சங்கரன் சிரிக்கிறான்.

அதானே. நீங்க கப்பல்லே வெள்ளைக்காரிகளோடு ஓஹோன்னு ராக்கூத்து அடிச்ச மனுஷராச்சே. எதெது எங்கேன்னு தெரியாமத்தானே கூட்டமா இருந்து ரமிச்சதெல்லாம்?

பகவதி மிதந்து பெரிய சங்கரனின் தோளில் செல்லமாகக் கடித்து அவன் கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள். இரண்டு பேரும் உள்ளே இருட்டு கவிந்த அறைக்குப் போகிறார்கள்.

போன வாரம் பிறந்த குழந்தை தொட்டிலில் சிணுங்குகிறது. வசந்தி எழுந்து உட்கார, கீழே படுத்திருந்த அவளுடைய அம்மா சுவரைப் பிடித்துக் கொண்டு எழுந்து வந்து பால் கொடுக்கறியா என்று விசாரிக்கிறாள்.

பொகையிலை கடைக்காரா, நீ வெளியிலே போய் நில்லு. குஞ்ஞுக்கு மொல கொடுக்கப் போறா.

நான் தாத்தா, நீ பாட்டி. பாத்தா தப்பு இல்லே. மனசுலே கல்மிஷம் கிடையாது. மனசே இல்லை. உடம்பும் தான்.

சங்கரன் திடமாகச் சொல்கிறான்.

இவனுக்கு ஒரு பொண்ணு பிறக்கப் போறான்னு எனக்கு அவன் அம்பலப்புழை போய்ட்டு ஜோடியா இந்த முறிக்கு வந்த போதே தெரியும்.

ரகசியம் சொல்லும் குரலில் பகவதி சங்கரனிடம் தெரிவிக்கிறாள்.

பேரன் பெட்ரூம்லே, ஜோடியா இருக்கறபோது பார்த்ததும் தப்பு தான் செல்லம். எனக்கு ஒரு முத்தம் கொடு. தப்பு எல்லாம் நேராயிடும்.

கடைக்கார பிராமணா, இன்னுமா முத்தம், ஆலிங்கனம்னு அலையறே.

பகவதி முத்தம் கொடுத்து முகத்தை மூடிக் கொள்கிறாள். மெல்லக் கண் திறந்து பார்த்து சங்கரனிடம் மெதுவான குரலில் சொல்கிறாள் –

குழந்தைக்கு என் பெயரை வைக்கணும்னு சொல்றா விசாலம் மன்னி.

சரியாத்தான் சொல்றா. என் பகவதிக்குட்டியை இந்த வீட்டுலே திரும்பவும் வாய் நிறைய எல்லோரும் கூப்பிடட்டும்.

சங்கரன் உத்தரீயத்தை தோளைச் சுற்றி இறுக்கிக் கொண்டு பகவதியையும் அடுத்து அணைத்துக் கொண்டு சொல்கிறான்.

பால்யம் திரும்பறதா என்ன? நம்ம காலம் முடிஞ்சு போயாச்சு. கட்டிக்கறதும் கொஞ்சறதும் கொஞ்சம் கம்மி பண்ணணும், என்ன புரியறதா?

பகவதி பெரிய சங்கரனிடம் பொய்க் கோபத்துடன் சொல்ல, சின்னச் சங்கரன் தூக்கத்தில் குழந்தை மாதிரி சிரிக்கிறான்.

பொண்ணுக்கு பகவதி, பிள்ளைக்கு மருதையன் இதான் பெயர் வைக்க வேண்டியது

பெரிய சங்கரன் சொல்ல, பிள்ளையா அது எப்போ என்று மலைக்கிறாள் பகவதி.

இவன் எமகாதகன். வசந்தியை உபத்திரவிக்காமல் வேறே இடத்தில் புத்ர பாக்கியம்.

பெரிய சங்கரனும் பகவதியும் சின்னச் சங்கரனுடைய படுக்கை அறைக்குள் மறுபடி பிரவேசிக்கிறார்கள்.

யார் மூலம்? பின்னால் வந்த விசாலம் மன்னியும், குட்டியம்மிணியும் சங்கரனைச் சூழ்ந்து கொண்டு கேட்கிறார்கள். பகவதி ஆவலோடு அவன் முகத்தைப் பார்க்க, சின்னச் சங்கரன் எழுந்து ரகசியம் கேட்கத் தயாராக உட்கார்கிறான்.

வாசலில் காலிங் பெல் சத்தம்.

கனவு தான் என்று தெரிகிறது சின்னச் சங்கரனுக்கு. ஆனாலும் தெளிவாக துலக்கமாக வந்த பகவதிப் பாட்டியின் முகம், படத்தில் பார்த்துப் பழகி, அதே போல் பட்டையாக வீபுதியும் காதில் கடுக்கனும், முகத்தில் ரெண்டு நாள் தாடியுமாக தாத்தா பெரிய சங்கரன், இன்னும் யாரோ பழுத்த சுமங்கலியாக ஒரு கிழவி, பச்சை ரிப்பன் வைத்துப் பின்னிய தலைமுடியும் ரப்பர் வளையுமாக ஒரு சின்னப் பெண்.

எல்லோரும் இங்கே, இந்தச் சின்ன அறையில் தான் சுற்றிச் சுற்றி வந்தார்கள். எங்கே அவர்கள் எல்லாம்?

பகவதிப் பாட்டி. எங்கே போனே? உன் பெயரை வைக்க ஏற்கனவே முடிவு செஞ்சாச்சு.

சின்னச் சங்கரன் வாசல் கதவைத் திறக்கிறான்.

அதிகப் பால் வேணும்னு சொல்லியிருந்தாங்க மாதாஜி. வீட்டுலே விசேஷமாமே?

பத்து லிட்டர் பிடிக்கும் தகரக் குவளையை உள்ளே நகர்த்தி விட்டு தூத்வாலா நேரு மாதிரி ஷெர்வானி கோட்டை சரி செய்து கொண்டு வெளியே போகிறான்.

சின்னச் சங்கரன் குழந்தை அழுகை சத்தம் கேட்டு உள்ளே போகிறான். பெற்ற உடம்பு அதியுன்னதமாக உலகத்து தாய்மை எல்லாம் சேர்ந்து கவிந்து மின்ன வசந்தி மெல்ல அவனை ஒரு வினாடி பார்த்து விட்டு, தொட்டிலில் உறங்கும் பெண் குழந்தையை பிரியமாக நோக்குகிறாள்.

பொண்ணு. பரவாயில்லையா?

குழந்தை பிறந்த தினத்தில் அவன் ஆஸ்பத்திரிக்கு முதலில் வந்தபோது வசந்தி கேட்டது இது. அவளிடம் அவளுடைய அம்மாவும் அம்மாவிடம் அவர்களுக்கு உதவியாக ஆஸ்பத்திரியில் தங்கி இருந்த மூத்த உறவுக்காரப் பெண் ஒருத்தியும் கேட்டது இது.

வசந்தியிடம் மட்டும் சொன்னான் – நான் இவளைத் தான் எதிர்பார்த்தேன். பெயர் என்ன தெரியுமா? பகவதி. பகவதின்னு வச்சு பகவதிக்குட்டின்னு வாய் நிறையக் கூப்பிடணும்.

மலையாள வாடை தூக்கலா இருக்கே.

வசந்திக்குப் பிடித்த ரேஷ்மா, ஷிஃபாலி, கோமல்கலி போன்ற பெயர்களை நிராகரித்து விட்டான் சின்னச் சங்கரன். பசுமை மணக்கும் ஊரும், காயலும், அம்பலமும், சோபான சங்கீதமும், பால் பாயச இனிப்பும் மனதில் எழுப்பும் பகவதிக்கு ஈடாகுமா அதெல்லாம்?

வசந்தி ஒரு சமாதானத்தைச் சொன்னாள் – பகவதின்னு ஒரு பெயர் இருக்கட்டும். பெயர் சூட்டற அன்னிக்கு வரை பார்ப்போம். வேறே ஏதாவது கூப்பிடற பெயர் தட்டுப்பட்டா குழந்தைக்கு அதையும் சூட்டிடலாம்.

வசந்தி கண்ணால் சிரித்து குழந்தையைப் பார்வையால் காட்டி சின்னச் சங்கரனைப் பாரு என்றாள். பட்டுத் துணியில் பொதிந்த பழக்குவியல் மாதிரி சின்னதாக வாய் அசைத்து சின்னஞ்சிறு கண்கள் செருகி சற்றே திறந்து பின் மலர்ந்து உறக்கத்தில் லயித்த குழந்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சின்னச் சங்கரன்.

ஆண் குழந்தை. அதுவும் வருமாம். வசந்தி இல்லாமல்.

மனசு தப்புச் செய்த குறுகுறுப்பில்.

குழந்தைக்கு பக்கத்தில் இந்த மாதிரி மனநிலை ஏன் வரணும்? பரிசுத்தமான நினைப்பும் பார்வையும் பேச்சும் இருக்க வேண்டிய இடத்தில் தப்பு செய்கிற குறுகுறுப்பு ஏன்?

வசந்தி கண்ணை மெதுவாக மூடி அடுத்த உறக்கத்தில் அமிழ வெளியே வந்தான்.

ஒன்று விட்ட மைத்துனியோ, மைத்துனன் சம்சாரமோ, அவளுக்கு அம்மாவோ, தங்கையோ, இளம் வயதாகத் தெரிகிற பெண்பிள்ளை கலந்து கொடுத்த காப்பியோடு பொழுது தொடங்குகிறது. வசந்தி ஒத்துழைப்பு இல்லாமல் ஆண் குழந்தை. வேண்டாம். அது கனவு. தறிகெட்டு மனதை அது அலைக்கழிக்க வேண்டாம். தில்ஷித் கவுர்? அவள் வீட்டுக்காரன் புதுச் செருப்பு வாங்கி வந்து விலைச் சீட்டைப் பிய்த்து எறிந்து விட்டு அடிப்பான். தேவையா?

ஷங்கர் ஷார், சாஸ்திரிகள் எட்டு மணிக்கு ரெடியா இருக்கச் சொன்னார். புண்ணியாஜனனம் இன்னிக்கு.

ஷார்ட்ஸும் கான்வாஸ் ஷூவுமாக வெளியே வந்தபோது சின்ன மடேடர் வேனை ஓட்டி வந்து காம்பவுண்டுக்குள் நிறுத்திய மைத்துனன் சொன்னான்.

குழந்தைக்கு என்ன பெயர் சூட்டப் போறாப்பல?

இந்த போறாப்பல, வந்தாப்பல என்று கேள்வியை மொன்னையாக முடிப்பதெல்லாம் செம்மண் பூமி வழக்கம். வெறும் கேள்வி கூட கூர்மையாகக் காயப்படுத்தும் என்று யோசித்துக் கொண்டு எழுந்து வருவது அந்த பதவிசான மொண்ணை. சங்கரனின் மைத்துனன் அதை கேலி செய்கிறானாம்.

வெட்டிப் பயல். இப்போது இவனோடு வம்பு வளர்க்க சங்கரன் உடம்பில் சக்தி இருந்தாலும் மனசில் விருப்பம் இல்லை. இருந்தாலும் சும்மா இருந்தால் துளிர்த்து விடுவான். குட்டிக் கொண்டே இருக்க வேணும்.

என்ன பெயர் வைக்கலாம், நீயே சொல்லேன். நம்ம குடும்பத்திலேயே நேரு மாதிரி புத்திசாலி நீ மட்டும் தானே?

சங்கரன் குறுக்கே வெட்டினான்.

அய்யே நேருவெல்லாம் என்ன புத்திசாலியிலே சேர்த்தி? பி எல் சோந்தி மாதிரின்னு சொல்லுங்கோ.

நேரு எங்கே, இவன் கொண்டாடும் உதிரிகள் எங்கே?

சின்னச் சங்கரன் மணி பார்த்தான். சரியாக ஆறு மணி. இப்போது ஓடப் போனால் திரும்பி வரச் சரியாக இருக்கும்.

குழந்தைக்கு ஜ்யோத்ஸ்னான்னு பெயர் வைக்கலாம். டக்கரா இருக்கும். சரியா அத்திம்பேர்?

மைத்துனன் யாசிக்கிறான்.

ஓ, ஜ்யோத்ஸ்னாவா?

அதென்ன ஓ ?

உங்க பக்கத்து வீட்டுலே அதான் தல்வார் குடும்பத்துலே பொண்ணு தானே ஜ்யோத்ஸ்னா? அவள் மேலே உனக்கு ஒரு கண்ணு இருக்குன்னு ரொம்ப நாளா எனக்கு ஊகம்.

கண்ணெல்லாம் ஒண்ணுமில்லே அத்திம்பேர். பாக்க பளிச்சுனு பால் பாட்டில் மாதிரி இருக்கான்னு ஒரு அப்ரிசியேஷன்.

அப்பப்போ கடலை போடறது வேறே நடப்பாக்கும்?

சே சே எப்பவாவது நாலு வார்த்தை பேசறதுதான். முக்கியமா எண்ணெய் தேச்சுக் குளிச்சுட்டு நிகுநிகுன்னு இடுப்பு மின்ன நிக்கற போது.

அட படவா, பர ஸ்திரியை எங்கெல்லாம் பார்வையாலே தடவி இருக்கே. என் கிட்டே வேறே வெக்கமே இல்லாம சொல்லி மகிழ்ந்து போறே.

சின்னச் சங்கரன் மனசில் அவனை எடுத்தெறிந்து கொட்டையில் மிதித்துக் கூழாக்கினன். பேசித் தீர்க்க மட்டும் தான் இந்த இச்சை எல்லாம் என்கிறது அடுத்து அதே மனசு.

வேணாம். சொன்னாக் கேளு. கல்யாணம் ஆகி நாலு பிள்ளை பெத்தவ அந்த ஜ்யோத்ஸ்னா. பேச்சுலே தான் ஆரம்பிக்கும் சகலமும்.

சிரித்துக் கொண்டே சொல்கிறான் சங்கரன். அதை யாசித்து நின்ற மைத்துனன் முகம் நேசமாகிறது.

பேசினா என்ன தப்பு அத்திம்பேர்? உங்க ஆபீஸ்லே கூடத் தான் அந்த சர்தார் பொண்ணு. நீங்க சொல்லியிருக்கேள். மதமதன்னு மாரு. தினசரி தரிசனம். இறுக்கிப் பிடிச்ச ஸ்வெட்டர். சிவப்பு கலர் தானே? இன்னிக்கு அவளை வரச் சொல்லி கூப்பிட்டிருக்கோ?

மைத்துனனுடன் பானகம் சாப்பிடக் கூட இனி யோசிக்க வேண்டும். ஒரு மக் பியரில் சகல அந்தரங்கத்தையும் இவனிடம் எப்போதோ உளறி இருக்கிறான் சங்கரன்.

உள்ளே உங்கக்கா இருக்கா. தெரிஞ்சா என்னை இழுத்து வச்சு அருவாமணையிலே முழுசா நறுக்கிடுவா. அப்புறம் கவுரை நினைச்சாக் கூட வெத்து அரைக்கட்டுலே உயிர் போற மாதிரி வலிக்கும்.

தோல்வியை மறைத்துக் கொள்ள இன்னும் தாழ்த்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. போகட்டும். ஞாயிற்றுக்கிழமை எல்லா அவமரியாதையும் பொறுத்துக் கொள்ளக் கூடியதே. ரெண்டு வேளை ஒசத்தியான சாப்பாடும் கள்ளுச் செட்டு போல் காப்பியும் வெட்டியாக திவானில் சாய்ந்து நேரம் போக்கவுமாக ஆன தினம். இன்றைக்கு வீட்டு விசேஷம் என்பதால் திவானில் இளைப்பாற சாயந்திரம் ஆகி விடலாம். மற்றது உண்டு.

தலைக்கு மேலே வேலை. நம்மாத்திலே முப்பது பேருக்கு சமையலாக்கும் இந்த முகூர்த்ததுக்காக. போய் முடிச்சு எடுத்துண்டு வரணும்.

மைத்துனன் உள்ளே ஓடினான்.

நீ ஒரு துரும்பையும் நகர்த்தாமல் சும்மா லோதி கார்டனில் ஓடப் போகிற சோம்பேறிக் கழுவேறி என்றும் அவன் செய்கைக்கு அர்த்தம்.

நீ என் முடிக்கு சமானம் என்று மனதில் வழக்கம் போல் வடக்கு நோக்கி நின்று திட்டி விட்டு புது ஸ்கூட்டரைக் கிளப்பி மெதுவாக ஓட்டிப் போனான் சின்னச் சங்கரன்.

தோட்டத்தில் பெரிய கூட்டமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். கிடைத்த இடத்தில் ஓரமாக உட்கார்ந்து பத்மாசனம் போட்டு ஜமக்காளம் விரித்து இருந்தவர்களையும், சவாசனமாகப் படுத்து கால்களின் ஊர்வலத்தை ரசித்துக் கொண்டிருந்தவர்களையும் கடந்து மெதுவாக ஓட ஆரம்பித்தான் சின்னச் சங்கரன்.

அரே பாய் ஷங்கர், பெண் குழந்தையாமே. ஜீத்தே ரஹோ.

நாற்பத்தேழாம் வருடம் முதல் மந்திரிசபையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த எண்பது வயது தலைவர் வாக்கிங் ஸ்டிக்கால் சங்கரன் முதுகில் தட்டி வாழ்த்த அவனுக்கு வானத்தில் பறக்கிற சந்தோஷம். எவ்வளவு பெரிய மனுஷன் கையால் ஒரு சுபதினத்தில் முதல் வாழ்த்து கிடைத்திருக்கிறது. வசந்தியிடம் சொன்னால் இதன் மகத்துவம் புரியாது. சுதந்திரப் போராட்டம், ஜவஹர்லால் நேருவின் முதல் சர்க்கார், அமைச்சரவை என்று கொஞ்சம் முன்னால் போய் லோதி தோட்டத்தில் ஓடுகிற பெரியவருக்கு வர வேண்டும். தகவலில் பாதி சங்கரனுக்கே மறந்து போக ஆரம்பித்து விட்டது.

ஷங்கர் ஷம்போ.

குரலைக் கேட்க மனம் இன்னும் அதிகம் உற்சாகத்தில் துள்ளியது. ஜோதிர்மய் மித்ரா மோஷாய் மெம்பர் ஆப் பார்லிமெண்ட். முதல் லோக்சபாவில் இருந்து தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர். சுருட்டு குடிக்காத நேரம் எல்லாம் சுறுசுறுப்பாக தொகுதிக்காக சண்டை வலிக்கும் இடதுசாரி மனுஷர்.

இனிப்பும் மீனும் இல்லாமல் சந்தோஷ சமாசாரம் சொன்னால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று சொல்லியபடியே சங்கரனை அணைத்துக் கொண்டார் மோஷாய்.

ஓடி முடித்துப் போகும்பொழுது பக்கத்து வங்காளி ஸ்வீட் ஸ்டாலில் இங்கே இருக்கும் பெரியவர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் ரஸகுல்லா வாங்கித் தருவதாக உடனே வாக்குத் தத்தம் கொடுத்தான் சங்கரன் சந்தோஷமாக.

இங்கே ஓடற முக்கால் வாசிப் பேருக்கு, என்னையும் சேர்த்து ஷுகர் கம்ப்ளெயிண்ட்னு தெரிஞ்சு தானே சொல்றே?

வங்காளிகளின் புத்திசாலித் தனத்துக்கு என்றென்றும் தலை வணங்குவதாகச் சிரம் குவித்து அவரிடம் சின்னச் சங்கரன் சொல்ல, நீ மதறாஸிக் களவாணி என்று உன்னதமான பாராட்டு வழங்கினார் மோஷாய்.

சேர்ந்து மெதுவாக ஓட ஆரம்பித்தார்கள்.

பிரசவ ஆஸ்பத்திரி சேவை எல்லாம் சீராகக் கிடைக்கிறதா?

மோஷய் அக்கறையாகக் கேட்டார். ஏதாவது குறை இருந்தால் அவரிடம் சொன்னால் உடனே சரி பண்ணித் தருவதாகவும் சொன்னார். அவரால் அது முடியும்.

ஒரு பிரச்சனையும் இல்லே. வீட்டுக்கு முந்தாநாளே வந்துட்டா. நார்மல் டெலிவரி தான்.

பெயர் என்ன வைக்கப் போறே?

கனவு நினைவில் உடனடியாக வந்து புகுந்து கொண்டது. கூடவே வசந்தி ஒத்தாசை இல்லாமல் இன்னொரு குழந்தை.

ஆறடி ஆகிருதியாகக் கடந்து வந்து முன்னால் முந்திப் போன வடிவான பஞ்சாபிப் பெண்ணின் பின்னால் நிலைத்த பார்வையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எடுத்தான் சங்கரன். சங்கரனின் குழந்தையை அவள் ஏன் சுமக்க வேணும்? அடுத்த கனவில் விசாரித்தால் தெரியுமாக இருக்கும்.

பெயர் இன்னும் வைக்கலேன்னா கல்பனான்னு வை.

மோஷாய் நேராகப் பார்த்துக் கொண்டு சொன்னார்.

மார்க்சீயர்களுக்கு அச்சு வெல்லம் போல பெண் குழந்தை என்றால் உடனே நினைவு வரும் பெயர் இந்த கல்பனா. கல்பனா தத் பற்றியும் சிட்டகாங் நகரில் காங்கிரஸ் சோஷலிஸ்ட்கள் நடத்திய ஆயுதக் கிடங்கு ஆக்கிரமிப்பு பற்றியும் பிடார் ஜெயம்மா சங்கரனுக்கு நிறையச் சொல்லி இருக்கிறாள். அவளுக்கு இடதும் வலதும் ஒன்றுதான் என்றாலும் கல்பனாவை ரொம்பவே பிடிக்கும்.

குழந்தை வெள்ளிக்கிழமை பொறந்திருக்கா. சாரதான்னு பெயர் போடுடா. சிருங்கேரி பீடம் சாரதாம்பா தரிசனத்துக்குப் போயிருக்கியோ? நீ எங்கே போனே? லீவு கிடைச்சா அரசூருக்கு கோழி மேய்க்க ஓடிப் போயிடுவே.

பிடார் ஜெயம்மா கேண்டீனில் வழக்கம்போல ஒலிபரப்பி சங்கரனுக்குப் பெண் பிறந்த தகவல் புதிதாகப் போய்ச் சேர்ந்தது. சந்தோஷ சமாசாரம் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சி கடலை எண்ணெய் முழுக்காட்டிய கேண்டீன் ஜிலேபியாக முடிந்தது வேறே கதை.

மித்ரா மோஷாய் ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் கேண்டீனுக்கு வந்திருக்கிறார். அவருக்கு அங்கே காப்பி மட்டும் இஷ்டம். நசநசவென்று எண்ணெய் கையில் பிசினாக ஒட்டும் மதறாஸி இனிப்பெல்லாம் அவருக்குப் பகை.

கல்பனா, அஜிதா, மிருணாளினி இது தவிர வங்காளத்தில் பெண் குழந்தை பெயரே இல்லையா மோஷாய்?

ஓடிக் கொண்டே சங்கரன் விசாரித்தான்.

ஏன் இல்லாமல், காவேரி.

அது சுத்தத் தமிழ்ப் பெயர் தான் என்றான் சங்கரன். அப்புறம் குழந்தைக்கு அதை வைக்க என்ன தடை என்று விசாரித்தார் அவர். அதானே?

மோஷாய், மான்செஸ்டர் கார்டியன் பத்து நாள் பேப்பர் ஒற்றைக் கட்டாக பிளேனிலே அனுப்பி வச்சு பிரஸ் கிளப்பில் நேற்று வந்தது. படிச்சீங்களா?

பேச்சை மாற்றுவதற்காக இல்லை, உண்மையாகவே அந்த பிரிட்டீஷ் செய்தித்தாளைப் படிப்பதில் சகல மார்க்சீயர்களுக்கும் பெருவிருப்பம் இருப்பதை சங்கரன் அறிவான்.

படிச்சேன் ஷொங்கொர். அதென்ன, எலிசபெத் ராணிக்குக் கொடுக்கற மானியத்தை குறைக்கணும்னு ஹவுஸ் ஓஃப் காமன்ஸ்லே இப்படி வாக்குவாதம் பண்றாங்க. வேதனையா இருக்கு. ராணியம்மா மதிப்பு இந்த அறிவிலிகளுக்கு என்ன தெரியும்?

சங்கரன் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தான். எல்லா மார்க்சீயர்களும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் கொண்டே இங்கிலீஷ் கலாசாரத்தில். மரபில் லண்டன் மாநகரத்தில், பிரிட்டன் என்ற தேசத்தில் முழு ஈடுபாடு உடையவர்கள் என்று பிடார் ஜெயம்மா சொல்வது நினைவு வந்தது. இங்கே இருந்து விரட்டினால் அங்கே போய்க் குடியேறி விடுவார்களாக இருக்கும்.

பார் அட் லா அங்கே தான் படிச்சு வருவாங்க. பிரிட்டீஷ ராணி, ராஜ குடும்ப முதல் விசுவாசிகளோட பட்டியல் எடுத்தா இவங்க பெயர் முதல்லே இருக்கும்.

ராஜ விசுவாசிக்கு வாழ்த்து சொல்லி சங்கரன் கிளம்பினான்.

மயூரா. இந்தப் பெயர் எப்படி இருக்கு?

போகும்போது அவனை நிறுத்தி மோஷாய் கேட்டார்.

கல்பனா வேணாமா மோஷாய்?

அவ பாவம் ரொம்ப கஷ்டமான ஜீவிதம். கல்கத்தாவிலே தெருவுக்கு நாலு கல்பனா உண்டு. போதும் இப்போதைக்கு. மயூரா பிடிச்சிருக்கா? மயூரான்னா மயில். அழகும் உண்டு. போர்க் குணமும் உண்டு. இந்தக் காலப் பெண்ணுக்கு இதெல்லாம் தான் முக்கியம்.

மோஷாய் மூச்சு வாங்கிக் கொண்டு சொன்னபடி வாசலில் காரை நோக்கி நகர்ந்தார்.

சங்கரன் வீட்டில் நுழைந்தபோது வீட்டு முற்றத்தில் ஒரு மயில் தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்தது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன