Monthly Archives: February 28, 2013, 4:44 pm

சீக்கிரம் திரும்பி வாங்க

கல்யாண்ஜி ஃபேஸ்புக்கிலே இனிமே கவிதை எழுத மாட்டேன்; எப்பவாவது தோணிச்சுன்னா திரும்பி வருவேன். இல்லேன்னா இல்லேதான்னு system shut down செஞ்சுட்டார்.

வருத்தமா இருக்கு. எதுக்கு ஃபேஸ்புக்கை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கணும்? இது பத்திரிகையோ புத்தகமோ இல்லை. நண்பர்களோடு, முப்பது பேரோ மூவாயிரம் பேரோ எல்லோரோடயும் casual-ஆக அரட்டை அடிக்க, social networking செய்ய ஒரு இடம்.. one’s own publicly private digital space. அத்ரயே உள்ளு.

நான் இங்கே என் நாவலை promote செய்யும்போது எழுத்தாளனா இருப்பேன். மற்றபடிக்கு நாயுடு மெஸ் வெண்பா, நியூஸ்பேப்பர் செய்தியைக் கிண்டல் செய்யறது, சீரியஸா, லைட்டா உலகத்திலே இருக்கற ஒரு சப்ஜெக்ட் விடாம அரட்டை அடிக்கறது..யூடியூப் பாட்டை கேட்கச் சொல்லி எல்லாரையும் கட்டாயப்படுத்தறது..I enjoy doing all that .. ஜோக் கூட எழுதியிருக்கேன்..

ராத்திரி ஒரு அரை மணி நேரம், காலையிலே ஒரு அரை மணி நேரம்..பேஸ்புக்கில் இருந்து வெளியே வரும்போது அன்பான மனுஷர்கள் கிட்டே நாளைக்குப் பார்க்கலாம்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போற சந்தோஷமும் வருத்தமுமான ஒரு கலவை நினைப்பு.

கல்யாண்ஜி இங்கே கவிதை மட்டும் எழுதினார். மணி மணியான கவிதை ஒவ்வொண்ணும். ஆனாலும், கல்யாண்ஜிங்கற கவிஞரா மட்டும் தான் அவர் வந்தார். அல்லது அவரைப் படிச்சுட்டு உண்மையாகவே பாராட்டி மறுமொழி போட்டவங்க, விதந்து ஓதிப் பாராட்டியதிலேயே அவர் கவிஞர் வட்டத்துக்குள் இன்னும் உள்ளே போயிட்டார் போல தோணுது. திகசி சொன்ன வீரவணக்கம் வேண்டாம் என்பதை அவர் மகன் செயல் படுத்திட்டாரோ..

கலாப்ரியா எம்.ஜி.ஆர் சினிமா பத்தியோ, மனுஷ் சகலமானதையும் பத்தியோ எழுதி கவிஞர் என்ற ஒற்றைப் பரிமாணத்தை வெற்றிகரமா உடைச்சாங்க. நான் ஆரம்பத்திலே (யாஹு குழுமக் காலம்) இருந்தே லொட லொட. எனக்குன்னு தனி பிம்பம் ஏதும் வேண்டாம்கிறதிலே பிடிவாதம் உண்டு.. இருந்தா உடைச்சுடணும் ..

நெட்டுலே ராயர் காப்பி கிளப்புன்னு ஆரம்பிச்சு சீரியஸான விஷயங்களைக் கூட சாப்பாட்டுக்கடை idiom உபயோகிச்சு கொடுத்தோம். இலக்கியவாதின்னா தட்டுப்படும் மொடமொடன்னு கஞ்சிப்பசை போட்ட ஜிப்பா வேட்டி பிம்பத்தை, ராயர் ஓட்டல் தோசை மாஸ்டரா மாத்தி ரசிக்க வைச்சதுலே என் நண்பர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் பங்களிப்பு அதிகம். அங்கே எழுதின பலரும் எழுத்தாளர்கள், ஓவியர்கள் அல்லது எழுத ஆரம்பித்து எழுத்தாளர் ஆனவங்க. relaxed ஆக எழுதினதாலே நிறைய எழுத முடிஞ்சது..எனக்கு மட்டுமில்லே எல்லோருக்கும்.. அதோட miniature version தான் ஃபேஸ்புக்கிலே social networking செய்யறது..

யாருக்கும் தொடர்ந்து இங்கே கவிதையோ மற்றதோ எழுதக் கட்டாயம் கிடையாது. கல்யாண்ஜி கவிதையோட கூட சகஜமாக மற்றவர்களோடு உரையாட வந்திருந்தால் திரும்பப் போக விரும்பியிருக்க மாட்டார்னு தோணுது.

சுஜாதா சார் எண்பதுகள் ஆரம்பத்திலே அவர் சந்திக்க விரும்பும் பத்து பேரோடு கற்பனை கலந்துரையாடல் எழுதியிருந்தார். கணிதமேதை ராமானுஜம் மனைவி, அவருடைய பால்ய கால நண்பன் இப்படியான பட்டியல்லே சுஜாதா அதுவரை சந்தித்திருக்காத ரெண்டு எழுத்தாளர்கள் உண்டு. ஒண்ணு கல்யாண்ஜி. இன்னொருத்தர் மாஞ்சி மாஞ்சி இதைத் தட்டச்சிட்டு இருக்கற நான்..

‘இவ்வளவு கூட்டமா இருக்கும்னு தெரிஞ்சா வந்தே இருக்க மாட்டேன்’ அப்படீன்னு சங்கோஜத்தோடு கல்யாண்ஜி ஒதுங்கறாதா கற்பனை செய்திருப்பார் சுஜாதா. ரொம்ப சரியாக்கும் அது.

கல்யாண்ஜி, இங்கே கவிதை உங்களுக்குத் தோணும்போது எழுதுங்க.. மத்தபடி எல்லோரோடும் பேசுங்களேன்.. உலகத்திலே பேச கவிதை மட்டும் இல்லையே.. அதுவும் உங்க மாதிரி சக மனிதன் மேல் அடிப்படை அன்பு கொண்ட ஒருத்தருக்கு.. கடையிலே போய் முள்ளங்கி விலை விசாரிக்கற மாதிரி இயல்பா (ஆமா, எடுவர்ட் மானே சொன்னது தான்).. எத்தனை எத்தனை பேசலாம்.. உங்களுக்கு பிடிச்ச காலைப் பலகாரம் என்ன? சமீபத்தில் எந்த சினிமா பார்த்தீங்க? வாணி ஜெயராம் குரல் பிடிக்குமா உங்களுக்கு? ஜ.ரா.சு சார் எழுதின அப்புசாமி கதை, ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ், கவுண்டமணி காமெடி..பிடிக்குமா.. கர்னாடக சங்கீதம்? இந்துஸ்தானி? ராக் ம்யூசிக்? பாப்?

சீக்கிரம் திரும்பி வாங்க ..

——————————————

செய்திகள் – வாசிப்பது

அமெரிக்காவில்
போதை மருந்து மாபியாவைப்
பிடித்துத் தண்டனை கொடுத்த
சர்க்கார் அதிகாரிகள்
கூண்டோடு கட்சி மாறி
’எஸ் பாஸ்’ என்று மெக்சிகோவில் நின்றார்கள்.

பட்ஜெட் இன்றைக்கு
புதுசு புதுசாக என்ன வரியோடு
அவதாரம் எடுக்குமோ.


மலையாளி மனம் கவர்ந்த
ஆகாசவாணி, வார்த்தகள்’
நியூஸ் படித்த
மாவேலிக்கர ராமச்சந்திரன்
ரிடையர் ஆன பிறகு அனந்தையில்
காணாமல் போனார்
தேடுதல் தொடர்கிறது
எங்கே போனார்? ஏன்?

பெட்ரோல் விலை
அடுத்து எப்போது உயரும்?
எவ்வளவு?

மணிரத்னம் வீட்டுக்கு
சொந்த செலவில்
ரெண்டு போலீஸ் கான்ஸ்டபிள்
பாதுகாப்பு
ஹைகோர்ட் ஆணை.
கடல் கோள் நேரம்.

இந்த வரும் சென்னை தண்ணீர்ப் பஞ்சம்
எப்போது தொடங்கும்?

நம்ம டாய்லெட்
சூரியக் கழிப்பறை.

ஹெலிகாப்டர் ஊழலைக்
கண்டுபிடித்துக் கப்பலேற்ற
ஆந்தணி சார் நியமித்த
முப்பது எம்.பி கமிட்டி
புலன்விசாரணைக்காக
குடும்ப சகிதம்
எப்போது இத்தாலிக்கு
பயணம் வைக்கப் போகிறார்கள்?

சென்னை முழுக்க அப்புகிற
கொசுத் தொல்லை
எப்போது ஒழியும்?

ஒரு நாள் பேப்பரில்
கருத்து சொல்ல
கவிதை எழுத
எத்தனை இருக்கு.

எழுதிவிட்டு
ஆபீஸ் கிளம்பலாமா?
ஆபீஸ் போய்விட்டு வந்து
எழுதலாமா?

(era.murukan Feb 28 2013)

——————————–

கல்யாண்ஜி கவிதையை விரும்பியாச்சு
கலாப்ரியா எழுத மாட்டேங்கறான்
கேஷவ் ஓவியத்தை ரசிச்சாச்சு
கொலட்கரைப் பகிர்ந்து கொண்டாச்சு
என்ன செய்யலாம்?
கொம்பா முளைச்சிருக்கு?
எல்லோரையும் போல
ஆபீஸுக்குப் போகலாம்

——————————–

கொலட்கரின் கவித்துவம் சின்னச் சின்ன வாக்கியங்களில் அநாசயமாக ஒரு தலைமுறைச் சிந்தனையை உதிர்த்துப் போவது.

ஜெஜுரி வரண்ட, பாறைப் பிரதேசம். அங்கே தலயாத்திரை போவது எளிய மராத்தியர்களின் வழக்கம். காண்டோபா என்ற வன தெய்வ வழிபாடு.

கொலட்கரும் போய் வந்தார். அவருக்குக் கடவுளோடு கவிதையும் தரிசனமானது. சொற்சிக்கனமான கவிதை.

ஜெஜூரி கவிதை முடிவில் சொல்கிறது போல் -

scratch a rock and a legend springs

ஏதாவது கல்லை லேசாச் சுரண்டுங்க.
ஒரு கதை வரும்.

—————————-

இன்றைய மகிழ்ச்சி – காலை குளிரக் குளிரப் பொழுது விடிந்தது.

இன்றைய எரிச்சல் – எங்கள் அலுவலகம் ஆறாம் மாடியில் உள்ளது. பகல் உணவுக்குக் கீழ்த்தளத்துக்கு வந்துவிட்டு லிப்டில் மேலே போகத் திரும்பினால் பெண்கள் கூட்டம். எத்தனையோ கம்ப்யூட்டர் கம்பெனி எங்கள் வளாகத்தில். அதில் எந்த மாடியோ.

சொல்லி வைத்தாற்போல் எல்லாரும் லிப்ட் நிற்கும் மாடி எண்கள் பதித்த பலகைக்கு மிக அருகில் நின்று கொள்கிறார்கள். எல்லோரும் கிட்டத்தட்ட சராசரி உயரம்.

நான் ஆறாம் மாடிக்காக விரல் நீட்டிப் பொத்தானை அழுத்த முடியாமல், சிக்ஸ் ப்ளீஸ் சிக்ஸ் ப்ளீஸ் என்று பரிதாபமாகச் சொல்லிக் கொண்டே நிற்கிறேன்….

——————————

 

விஸ்வரூபம் நாவல் விமர்சனம்

என் அன்புத் தங்கை ஓவியர் – கவிஞர் ஜெயா (கோவை) விஸ்வரூபம் நாவல் பற்றி எழுதி அனுப்பியிருக்கிறாள். வீடு, பள்ளி (ஆசிரியை),  என்று ஆயிரத்தெட்டு பணிகளுக்கு நடுவில் என் நாவலையும் படித்துக் கவித்துவத்தோடு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறாள்.
கண்கள் பனிக்கின்றன. விழாவில் இதைப் படிக்கலாம் என்று இருக்கிறேன்.

viswaroopam (1)

விஸ்வரூபம்

——————

அருமை அண்ணாவிற்கு

சின்னதாய் ஒரு பகிர்தல் விஸ்வரூபம் பற்றி

புத்தக வெளியீடு நடக்கும் முன்பே எனக்கு

கிடைக்கும்படி செய்ததற்கு  முதலில்  நன்றிகள்

சொல்லும் உணர்வும் சேர்ந்தால் உள்ளம் கடவுள் அறியும்

படித்து முடித்தவுடன் விஞ்சி நின்றது பெருமூச்சு

முடித்தவுடன் பகிர்ந்து கொள்ளத்தோன்றியது

உங்கள் வார்த்தைகளின் பாதிப்பு இருக்கும் என்பதால்

சில நாட்கள் கடந்து இந்த பகிர்தல்

ஒருகாலம் கடந்த உணர்வுகளோடு கைகோர்த்த அனுபவம்

நழுவிப்போன கலாச்சாரமும் நசுங்கிய நாகரிகமும் முட்களாய்

மனதில் ஊடுருவிச் சென்றது

கதைக்கான களம் கண்முன் கற்பனையில் சுகமாய்

விரித்த கல்கண்டு வார்த்தைகள் காதோரம்

விசாலம் மன்னியின் ரகசியகுரல்களில்

நடேசனின் கிருஷ்ணனிடம் அறிமுகம் கிடைத்தால்

அடியேன் பாக்கியவான்

குரிசுக்குள் குடியேறிய குடும்பங்கள் ஜீசஸ் ரிஷி யானாலும்

அம்பலப்புழையின் கால்பதித்து நின்றது பூர்விகம் மாறாது

லண்டனும்  அம்பலமும் அடுத்தடுத்து வந்தது

அங்கேயே சென்ற வந்த உணர்வு

எடுத்துச் சென்றது வார்த்தைகளானாலும்

ஏக்கமாய் மனதில் ஆங்காங்கே வலிகள்

ஒரு ராஜ குடும்பம் சத்தமின்றி சங்கீதம் பாடியபோது.

எங்கே இருந்த நாம் எப்படி ஆனோம் என்பதில்

வரலாறு வம்சங்களாய்  அழிந்த கதை புரிந்தது

உடையும் நடையும்  உள்ளூரில் மாறினாலும்

உடனடியாக நடவடிக்கை எடுக்கும் காலத்தில்

முப்பாட்டன் முடிவை  மூடிவைத்த மூடர்கள் நாம் என்பதாய்

உண்மை முகத்தில் அறைந்தது

எந்த ஒருநபரும் ஏமாற்றம் இல்லாமல் மனதில் ஒட்டிக்கொண்டனர் எத்தனை உணர்வுகள் .!

வருஷப் பிறப்பின்போது அடித்த மாங்காபச்சடி வாசனை அருமை

அடுத்தவீட்டு ஐம்பது வருட வாழ்க்கையை

முத்தச்சன் முனகலாய் கூறியது போல் மெல்லிய வரிகள்

ஆவிகள் யாராக இருப்பினும் அதனோடு அளவளாவ ஆசைதான்

கட்டம் போட்டு ஆவி அழைத்த அனுபவம் அறிந்திருக்கிறேன்

ரெட்டியின் மனசுக்குள் கலந்த கலவியும் கள்ளத்தனமும்

பிடுங்கித் தின்னும் புத்தியும் பிணம்தின்னி குணமும்

நம்மில் பலரிடம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது

மறுப்பவர் மறுத்தாலும் மறையாது

பகவதியின் சுமை நீங்கிய மரணம் வேண்டியது மனம்

சுவாசம் நீக்கி உணர்வாய் வந்தவர்களின் உள்வருத்தம்

நாற்காலிபோட்டு நச்சென்று அமர்ந்தது

நானும் தெரிசாவானேன் இழந்த ஒன்றை கரைசேர்த்தேனா?

அறிந்தால் அமைதிவரும்

மாதாகோவில் மணியோசைக்குள் மறைவாய்கேட்டது மந்தரமும்

மாற்றுமொழி கற்க இப்படியும் ஒரு கதை படித்தால் போதும்

கண்மூடி கனவில் வாழ்ந்த அனுபவமாய் அத்தனையும்

போதை தரும் கதை படித்ததுண்டு அது போனகதை இப்போதுதான்

மனிதர் வாழ்ந்த வாழ்க்கை படிக்க வரலாற்று படிவம் வேண்டாம்

பலரின் மனதில் வாழும் உன் கதை போதும்

நன்றிகள் அண்ணா

இது வெறும் வார்த்தை அல்ல

வேறு ஒன்றும் இல்லை என் மனதை வெளிப்படுத்த  என்பதால்

பழைய சொல்லையே நானும் பயன்படுத்துகிறேன்

விஸ்வரூபம் நாவல் வெளியீட்டு விழா

விஸ்வரூபம் நாவல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

திண்ணையில் பிரசுரமான ‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வடிவம் கண்டு வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில் நடக்கிறது. வாசக நண்பர்கள் அவசியம்  கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன்.

அரசூர் வம்சம் மற்றும் அதனைத் தொடர்ந்து விஸ்வரூபம் என்ற என் இரு நாவல்களைப் பிரசுரம் செய்த திண்ணைக்கு பிரத்யோகமாக நன்றி சொல்ல வேண்டும். அவ்வப்போது பல காரணங்களால் இடைவெளி விட்டு நாவலை வளர்த்துப் போய், எழுதி அனுப்பிய அத்தியாயத்தில் திருத்தம் போடச் சொல்லி நச்சரித்து எல்லாத் தொல்லையும் நான் கொடுத்தாலும் திண்ணை ஆசிரியர் பொறுமையின் சிகரமாக அவற்றை எடுத்துக் கொண்டு நாவல் பிரசுரமாக உறுதுணையாக நின்றார். திண்ணைக்கு எப்படி நன்றி சொல்ல? அடுத்த அரசூர் நாவல் ‘அச்சுதம் கேசவம்’ திண்ணையில் விரைவில் தொடங்கி, மேலும் தொல்லை கொடுத்துத்தான்.

விஸ்வரூபம் – நாவல் வெளியீட்டு விழாவுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்.
நாள் மார்ச் 2 2013 சனிக்கிழமை

அழைப்பு இணைப்பில் உள்ளது.

கேளிர் வருக.

அன்போடு

இரா.முருகன்

———————————————————————

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வார்த்தை அவ்வப்போது நினைவில் திரும்பத் திரும்ப வரும்.

’வெற்றிலைத் துணுக்கு பல்லுக்கு இடையே சிக்கியது போல’ என்று அசோகமித்திரன் சார் எழுதிய ஞாபகம். அது நகுலனின் நாவல்களில் – ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு சொல் – ‘ஓ ஜானேவாலா’, ‘ஆசிப் பெண்ணே’ என்று அங்கங்கே உரைநடுக்கு இடையே வந்து போகிற ’அசைச் சொல்’ மாதிரி.

காலையில் யாரோ தெருவில் யாரிடமோ ‘அய்யே’ (சென்னை தொனியில் பரிகாசம்) என்று சொன்னதைக் கேட்டபடி நடந்தேன்…

அய்யே இல்லை அய்யோ.. ஐயோ அந்தக் கணத்தில் பலமாக ஆட்கொண்டது. இது அவலம் இல்லை, வியப்பு.

வேறு யார், கம்பநாட்டாழ்வான் தான்.

வெய்யோன் ஒளி தன் மேனியின்
விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
அழியா அழகு உடையான்.

கஙகைப் படலத்தில் வரும் இந்த அழகிய கவிதையில் ஐயோ தவிர மோனையில் வரும் வேறு சொல்லைப் பொதிந்து பாருங்கள்.. கவிதை ரொம்ப சுமார் ரகமாகி விடும்..

கவிதைன்னா சும்மாவா..கவிஞன் தான் எழுதமுடியும்!

——————————————–

அருண் கொலட்கரின் மராட்டி கவிதைத் தொகுப்பு ‘சிரிமிரி’யில் இருந்து (மொழியாக்கம் – இரா.முருகன்)

படம்

(மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில், வயிற்றுப் பிழைப்புக்காக உடல் விற்கும் ஒரு பெண், பண்டரிபுரம் திருவிழா பார்க்கப் போகிறாள். கண்ணனும் ருக்மணியும் அங்கே வழிபடப் படும் தெய்வங்கள். திருவிழாக் கடைகளில் ஒன்று – தலைவர்கள், சினிமா நடிகர்கள் போல யார் கூட வேண்டுமானாலும் சேர்ந்து நின்று புகைப்படம் (trick photography) எடுக்கும் இடம். அங்கே நுழைகிறாள் இவள்…)

ஏனாயா நீதான் படம் பிடிக்கிற ஆளா ?
என் படம் ஒண்ணு எடுத்துக் கொடு.
கண்ணணோடும் ருக்குமணியோடும்
நான் சேர்ந்து நிற்கற மாதிரி.

ருக்குப்பொண்ணு என் பீச்சாங்கைப் பக்கம்,
கண்ணன் வலப்புறம். நடுவிலே நான்.
அப்படித்தான் வேணும் எனக்கு.

அடா ருக்கு.. நகரு..கண்ணன் பக்கத்திலே
நான் நிற்கப் போறேன்.

கண்ணா..நீ ரொம்ப மோசம்ாயா.
இப்படித்தானா விறைப்பா நிக்கறது ?
எல்லாரும் அட்டைக் கடவுள்னு
கிண்டல் செய்யப் போறாங்க.

என் பக்கத்திலே வாடா கண்ணா..
என் தோளில் கை போட்டு அணைச்சுப் பிடி.
அப்படித்தான். இது நல்லா இருக்கு.

ருக்கு..உனக்கு ஆனாலும் பொறாமை நிறைய.
கவலைப் படாதே. மும்பை திரும்பும் முன்னால்
உன் கண்ணனை உன்னிடமே விட்டுடறேன்.

படக்காரரே..படத்தில் நல்லதா
வர்ணம் வரணும்.. தெரியுதா?
என் சேலை நீல நிறத்தில் இருக்கணும்.
கண்ணனின் உடுப்பும் அதே நிறந்தான் வேணும்.

நான் போய் திருவிழாக் கடையெல்லாம்
பார்த்து விட்டு, ராட்சச ராட்டினத்தில்
ஏறிச் சுற்றிவிட்டு வரேன்.
ஒரு கம்பளிப் போர்வை கூட வாங்கணும்.
நேரம் இருந்தால் மரணக் கூண்டையும்
எட்டிப் பார்த்து விட்டு வருவேன்.

ஒரு அரைமணியில் திரும்பி வந்து
படத்தை வாங்கிக்கலாம் இல்லையா ?

———————————————–

நாயுடு மெஸ் – 22 (அல்லது வேறே எண்)

நாயுடு மெஸ்ஸில் ராச்சாப்பாடு சாப்பிட்டு ஓல்ட் மகாபலிபுரம் ரோடு கம்ப்யூட்டர் கம்பெனியில் பொட்டி தட்டிக்கிட்டிருந்த பிள்ளை இங்கிலாந்துக்கு ப்ராஜெக்ட் ஒர்க்ன்னு போயிருக்கான். அங்கே இருந்து நாயுடுவுக்கு போன் செஞ்சு ஒரு பாட்டம் சாப்பாடு சரியில்லேன்னு புலம்பியிருக்கான் போல.. போதாக் குறைக்கு அங்கே குதிரை மாமிசத்தையில்லே போடறானுகளாம்.. நாயுடு வரவன்போறவன் கிட்டே எல்லாம் சொல்லிட்டு இருக்கார் -

லச்சுமணன் பேசினான்பா லண்டனுக்குப் போனபிள்ளை
நச்சுனு சாப்பிட்டு நாளாச்சாம் மிச்சம்
சதுராடி ஊர்திரும்ப சாலவுந்தி காலம்
குதிரைதான் திங்கறானாம் போ.

—————————————————

writing a book on Banking entirely in tweets. Hv begun with Forex & Money Market operations. To cover collateralization, securitization,CASA

——————————————–

Frm WshntonPost Oscar 13 live photos,I find H’wood actresses make a sweeping fashion statement with 10 ft long dress covering d road as well

——————————————————-

Professor P.V.Indiresan passes away. He never minced words when expressing his thoughts though you/I may not be with him at times.. RIP sir

————————————–

‎’Infosys turning the corner’ – JPMorgan. Trust they don’t mean Infy is going in circles

————————————

யார் மன்னிப்பு கேட்கணும்? யாரிடம்?

1919-ல் அமிர்தசரஸ் நகரில் பல இந்திய உயிர்களைத் துப்பாக்கிச் சூட்டில் ஆங்கிலேய ஏகாத்திபத்தியம் ஜெனரல் டயர் மூலம் பலி கொண்டதற்கு இன்றைய பிரிட்டீஷ் பிரதமர் கேமரூன் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

1857-ல் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட காலம். தில்லியின் கடைசி முகமதிய சுல்தான் கவி பஹதூர் ஷா ‘ஸஃபர்’ அரண்மனையான தில்லி செங்கோட்டையில் அவருடைய பாதுகாப்பைக் கோரி ஓடி வந்து தங்கி இருந்தார்கள் ஆங்கிலேயப் பெண்களும், குழந்தைகளும். கம்பேனியார் அதிகாரி துரைமார்களின் மனைவி – மக்கள் அவர்கள் எல்லோரும்.

பஹதூர் ஷா பார்த்துக் கொண்டிருக்க, அவர்களை நிற்க வைத்து வெட்டிக் கொன்று குவிததார்கள் மங்கல் பாண்டேயின் தலைமையில் இயங்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் கூட்டத்தினர்.

அவர்களுடைய செயலுக்கு யார் கேமரூனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்?

(வில்லியம் டால்ரிம்பிளின் ‘லாஸ்ட் மொகல்’ இந்த சம்பவத்தை விரிவாகச் சொல்லும்).

———————————————————————

1919-ல் நடந்த ஜாலியன்வாலா படுகொலைக்காக இந்தியா வந்துள்ள தற்போதைய பிரிட்டீஷ் பிரதமர் கேமரூன் மன்னிப்புக் கேட்கணும்.

அப்படியே, அதுக்கு முன்னால் களவாண்டு எடுத்துப் போய், லண்டன் டவர்லே காட்சிக்கு வச்சிருக்கற கோஹினூர் வைரத்தையும் திருப்பிக் கொடுக்கணும்.

———————————————————————

பேஸ்புக்கில் இருப்பதால் யாருக்கு என்ன பயனோ, எனக்கு தினமும் காலைப் பொழுது மூன்று நண்பர்களோடு இனிமையாகத் தொடங்குகிறது.

அன்புக்குரிய கல்யாண்ஜி, கலாப்ரியா, கேஷவ்,

You enable me make my day every day..

———————————-

எழுதாமல் வருடக் கணக்கில், மாதக் கணக்கில் இருக்கவும், எழுதத் தொடங்கி தினம் நாலு நல்ல கவிதையாகப் பொழியவும் எது நம்மை முடக்குகிறது, இயக்குகிறது?
கல்யாண்ஜி, கலாப்ரியாவுக்கு

————————————-

//நல்லா இருக்கு கல்யாண்ஜி. வீட்டில் எல்லாப் பெண்களுக்கும் கையில் மருதாணி வைத்துக் கிணற்றடிக்குப் போய்த் தன் கை பார்த்து அழும் விதவை அத்தையைப் பற்றி எழுதியது நீங்களா, சோமு கலாப்ரியாவா? அடிக்கடி நினைவு வரும் கவிதை அது – நான்

அது கலாப்ரியா இரா.முருகன். அவன் பக்கத்தில் நிற்கமுடியுமா நான்? – கல்யாண்ஜி

என் பதில்

//அது கலாப்ரியா இரா.முருகன். அவன் பக்கத்தில் நிற்கமுடியுமா நான்?// அவன் பாட்டுக்கு அவன், நீங்க பாட்டுக்கி நீங்க.. அப்புறம் நம்ம ரெயினிஸ் ஐயர் தெரு வண்ணநிலவன் .. உங்களைப் படிச்சு எழுத வந்தவன் நான் ..

வண்ணநிலவனோட ‘கடல்புரத்தில்’ நர்மதா பதிப்பக முதல் பதிப்பு ஞாபகம் இருக்கா? எனக்கு அதோட வாசனை கூட ஞாபகம் வருது கல்யாணி…

அப்புறம் இவன், கலாப்ரியா.. முதல் தொகுப்பு சோனியா செவலைக் குழந்தை மாதிரி.. திறந்தா, சோமுவோட கவித்துவம் பக்கத்துக்கு பக்கம்..

அட்டையிலேயே விமர்சனத்தைப் போட்டுப் புத்தகம் போட்ட முதல் ஆள் இவனாத்தான் இருக்கும்..

பாலகுமாரன் முன்னுரையில் சொல்வாரு ..’எதுக்குய்யா சசிகலாவுக்கு சிம்மாசனம் வெங்காயம்’..

அப்புறம் இலக்கியச் சிந்தனை தொகுப்பில் சிறப்புச் சிறுகதையா உங்க ‘தனுமை’.. காலை விந்தி விந்தி வரும் அந்த தனுவையும், ‘பறக்கத் துவங்கும் முன்னார்ல் -கூட்டுப் புழுக்களாக’ (பெயர் சரிதானா?) வேலை கிடைக்கக் காத்திருக்கிற இளைஞன் – கூடத்திலே படுத்தா மேல் சுவரில் துணியைக் கலைச்சுப் போட்ட மாதிரி மனதில் சிரிக்கும் உருவம்..

போங்கய்யா..

உங்க ’நெல்லை மூவருக்கும்’ நண்பராக இருப்பது எனக்குப் பெருமை.

———————————————-

மராத்திய – ஆங்கிலக் கவிஞர் அருண் கொலட்கரின் Jejuri, Kala Goda Piems என்ற இரு நூல்களையும் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன். அமரரான அருண் கொலட்கரின் மனைவியின் அனுமதியோடு புத்தகமாகப் பிரசுரம் செய்ய வேண்டும் என்ற எம் பிடிவாதத்தால் இதுவரை அது நூலாக்கம் செய்யப்படாமல், திண்ணையிலும், ராயர் காப்பி கிளப்பிலும் வெளியாகி, பதிப்பகத்தாரோடு நிற்கிறது.

நண்பர்கள் கல்யாண்ஜியும், கலாப்ரியாவும் தினசரி புதுக்கவிதை விருந்து படைக்கும் இந்த நன்னாட்களில், கொலட்கரும் கலந்து கொள்வார் – இன்று முதல்.

பூசாரி

குளிர்ந்த பிரகாரச் சுவர்மேல்
புட்டம் அமர்த்திப்
பூசாரி காத்திருக்கிறான்.

பஸ் இன்று தாமதமாக வருமோ,
பகல் சாப்பாட்டில் இனிப்பு இருக்காதோ,
அவனுக்குப் புதிய கவலைகள்.

தணுத்த கல்லில் பட்ட
விரைகளை வேகமாய் விலக்கி
வெய்யில் பக்கம் தலை திருப்புகிறான்.

இறந்தவன் கையில் தனரேகை போலச்
சும்மாக் கிடந்த தெரு.

பழக்கமான கிராம நாவிதன் போலக்
கன்னம் தடவித் தலையில்
கைவைக்கும் சூரியன்.

வெற்றிலைத் துண்டொன்று
மேலும் கீழுமாய் நாவில் சுற்றும்
மந்திரம் போல.

தூரத்தில் புள்ளியாய்த் தெரிந்த பஸ்
அவன் பல்லிப் பார்வையில்
மூக்கு மருவாக உருவம் பெருகும்.

பள்ளத்தில் குலுங்கி ஏறி
சத்தம் எழக் கடந்து
அவன் கண்ணில் நீலம் பூசும்.

ஒருவலம் வந்து அவன் முன்னால்
செல்ல உறுமலோடு
மெல்ல நிற்கும் பஸ்,
பூனைச் சிரிப்பும்
இந்தாபிடி என்று
உள்ளே யாத்ரீகர்களுமாக.

( அருண் கொலட்கரின் ‘ஜெஜுரி’ கவிதைத் தொகுப்பிலிருந்து – மொழியாக்கம் இரா முருகன்)

நம் குழந்தை போல் இன்னொரு சிறுவன்

தி ஹிந்து பத்திரிகையின் இணையத் தளத்தில் சற்று நேரம் முன்னால் புகுந்தபோது இந்தச் செய்தி கண்ணில் பட்டது. பிரமை பிடித்தது போல் உட்கார்ந்திருக்கிறேன்.

ஒரு 12 வயதுச் சிறுவனை.. அவன் குழந்தைத்தனமான முகம் மறக்க முடியாதபடி மனதைச் சுற்றிச் சுற்றி வருகிறது. முதல் இரண்டு புகைப்படத்தில் பங்கரில் உட்கார்ந்திருக்கிறான். சட்டையைக் கழற்றச் சொல்லிக் கட்டளை இட்டிருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு கைத்தறித் துண்டைத் தோளில் போட்டபடி ஒரு 12 வயதுப் பையன் உட்கார்ந்திருப்பது போல் இந்த 12 வயதுப் பையன் அமர்ந்திருக்கிறான்.வாயை வலிப்பது போல் ஏனோ கோணலாக வைத்திருக்கிறான். என்ன கேட்டார்களோ, என்ன பொய்யான நல்வாக்கு, போலியான அன்புப் பேச்செல்லாம் பேசியிருப்பார்களோ.. கடைசிப் படத்தில் இந்த இளந்தளிர் குண்டடி பட்டு இறந்து கிடக்கிறான்.

திருப்பதி என்ன, கைலாயத்துக்கே போய்த் தவமிருந்தாலும் கரையாத பாவம் இது. படிச்சவன் சூதும் பாதகமும் பண்ணினால் ஐயோன்னு போவான் …

போவான்.

(இந்தப் படம் எல்லாம் சேனல் நாலின் கைவேலை, போலி, அவர்கள் எத்தனை பேரைக் கொன்று குவித்தார்கள் என்று கீபோர்டில் முழங்க சில நண்பர்கள் காத்திருக்கலாம். தயை கூர்ந்து இன்று வேண்டாம். இங்கே வேண்டாம். குழந்தையைக் கொல்லும் கொடியோர் தம் செயலை நியாயப்படுத்த வேணாமே, ப்ளீஸ்.. தயவு செய்து..).

ஹிந்து பத்திரிகை செய்திக்கு இணைப்பு கொடுக்கக் கூட மனம் விரும்பவில்லை. அங்கேயே படித்துக் கொள்ளுங்கள்.