Monthly Archives: January 31, 2016, 12:29 pm

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 19 இரா.முருகன்

கொச்சு தெரிசா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட, தூர தேசத்திலிருந்து வந்த பெண்ணோடு ரேடியோ லைசன்ஸ் உத்தியோகஸ்தர் பேசுவதற்கு முன் பெருஞ் சத்தம் எழுப்பி கப்பி ரோடில் ஒரு சைக்கிள் தாறுமாறாக விழுந்தது. உடுப்பில் படிந்த செம்மண்ணைத் தட்டி உதிர்த்தபடி தரையில் இருந்து எழுந்த சைக்கிளோட்டி, உலகைக் கனிவாகப் பார்த்துப் புன்னகை செய்தபடி வண்டியை நிலை நிறுத்தினார்.

சக்கர வண்டிகள் நம்புதற்கு உரியவை அல்ல என்று அவரைப் பரிவோடு நோக்கியபடி ரேடியோ உத்தியோகஸ்தர் கூறினார். தன்னிடமும் அதே போல் தாந்தோன்றியான ஒரு மோட்டார் கார் இருந்தது என்று சொல்ல நினைத்த தெரிசா, இந்த நபர்களோடு உரையாடல் நீண்டால் அந்தத் தகவலைச் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தவளாக, கதா பிரசங்கம் செய்கிற கனவானின் வீடு இது தானே என்று மீண்டும் கேள்வியை, சைக்கிளோட்டி வந்த தியாகராஜ சாஸ்திரி என்ற மத்திய வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் புரோகிதனிடம், இந்த முறை, அவள் சற்றே பழகிக் கொண்டிருக்கும் மலையாளத்தில் கேட்டாள்.

இங்கிலீஷ் புழங்கும் தேசத்துப் பெண் வந்திருக்க, ரேடியோ லைசன்ஸ் போன்ற அற்பமான சமாசாரங்களை வலியுறுத்துவதையும், அவள் பார்த்திருக்கப் பெட்டியுடைப்பை நடத்துவதையும் தவிர்க்கலாம் என்று மனதில் பட்ட லைசன்ஸ் உத்தியோகஸ்தர் கையில் ஏந்திய, ஊருணி நீர் நிரம்பிய செம்பு சகிதம் பந்தலுக்குத் திரும்ப நடந்தார். அந்தப் பாத்திரத்தில் இருந்து, சன்னமான குரலில் சுருள் சுருளாக வசனம் சொல்லி ஆசிர்வதிப்பது கேட்டது.

நல்லது, அப்புறம் வைத்துக் கொள்ளலாம் இதையெல்லாம் என்று அந்தக் கலத்தை நோக்கி அன்போடு சொல்லியபடி நடந்தார் லைசன்ஸ் உத்தியோகஸ்தர்.

அவரை வியப்போடு பார்த்தபடி நின்ற கொச்சு தெரிசாவிடம் தியாகராஜ சாஸ்திரி சொன்னார் –

அது கும்பளங்காய் மகாத்மியம் என்ற அபூர்வமான ஹாஸ்ய கிரந்தத்தில் வரும் வரிகளாகும்.

தெரிசா அதென்ன என்று தெரிந்து கொள்ளும் அக்கறை முகத்தில் தெரிய முன்னால் வந்தாள்.

அந்த கிரந்தம் பற்றிப் பிற்பாடு விசாரித்துக் கொள்ளலாம் என்று முசாபர் பின்னால் இருந்து துரைமார்களின் தோரணையோடு கூடிய ஆங்கிலத்தில் சொல்ல, சாஸ்திரிகள் ஒரு வினாடி திகைத்து நின்றார். தன் ஆங்கிலம் தன் ஆகிருதிக்கு ஒத்து வராமல் லுங்கி கட்டிய துரை பிம்பத்தை உருவாக்குவதை எப்போதும் ரசிக்கத் தவறாத முசாபர் கொச்சு தெரிசாவிடம் கூறியது –

இந்த வீடாகத்தான் இருக்கும். இருட்டுகிற முன்பு உள்ளே போய்ப் பார்த்துட்டு வா. இங்கே தங்கியிருக்க விடுதி இருக்குமான்னு வேறே தேடணும்.

காலியாகிக் கொண்டிருந்த பந்தலில் ஓரமாக ஒரு மர நாற்காலியை இழுத்துப் போட்டு முசாபர் அமர, கொச்சு தெரிசா சற்றுத் தயக்கத்துடன் பந்தலை ஒட்டி இருந்த கட்டடத்துக்குள் போனாள். வட இந்தியப் பெண் போல பைஜாமா தரித்து, மேல் துணியால் தலையில் பதவிசாக முக்காடு போட்டிருந்த அவள் உள்ளே போகும்போதே வாசலில் மரப் பரணியில் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்தபடி நடந்தாள். முசாபர் அதைக் கவனித்திருந்தாலும் ஒன்றும் சொல்லியிருக்கப் போவதில்லை தான்.

தினசரி பண்டிகை கொண்டாடுகிற, காலண்டரைத் தொலைத்த வீடு போல அந்த இடம் இருந்தது. கூடை நிறைத்து இருந்த பூக்களின் வாசமும், சின்னதும் பெரிதுமான பாத்திரத்தில் பாலும், வைத்தியன் சொல்லி அனுப்பியபடி வாங்கி வைத்தது போல் தேனும், தட்டு நிறைய சர்க்கரை, இனிப்புப் பதார்த்தங்களும் பண்டிகைச் சூழலை அதிகப்படுத்தியது.

பனை ஓலைத் தடுக்குகளில் உட்கார்ந்திருந்த பஞ்சாபகேச சிரௌதிகளின் சிஷ்ய கோடிகள் உண்டியலில் சேர்ந்த சொற்பக் காசையும், பொருளாக வந்த காணிக்கையையும் கணக்கிட்டுப் புத்தகங்களில் கவனமாகப் பதிந்து கொண்டிருந்தார்கள். ராத்திரி ஒன்பது மணி அடிக்க இன்னும் முப்பது நிமிடம் இருக்கிறது, இருபத்தெட்டு நிமிடம் இருக்கிறது என்று ஒருவர் சிரத்தையாக அறிவித்துக் கொண்டிருந்தார். ஒன்பது மணிக்கு இங்கே ஏதோ அற்புதம் நிகழப் போவதாக இருக்கும் என்று தெரிசாவுக்குத் தோன்றியது.

தெரிசா கைப்பையில் இருந்து நூறு ரூபாய் நோட்டையும், ஒரு பிரிட்டீஷ் பவுண்ட் நாணயத்தையும் காணிக்கை வட்டிலில் போடப் பக்கத்தில் இருந்த பெண் சிஷ்யை எழுந்து நின்று என்ன மொழி என்று புலனாகாத கோரிக்கையாகவோ பிரார்த்தனையாகவோ ஓங்கிய குரலில் சொல்லி, இன்னொரு தடுக்கை அவளருகில் பரத்தித் தெரிசாவை இருக்கச் சொன்னாள்.

கதை சொல்லி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாரா?

தெரிசா கேள்விக்கு ஒரு சிரிப்பே பதிலாக வந்தது. சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு வாசலில் விட்டு விட்டு உள்ளே வந்த தியாகராஜ சாஸ்திரிகளை, உள்ளே இருந்தவர்கள் தன்னை வரவேற்றது போல் முகத்தில் மகிழ்ச்சியும் சிரிப்புமாக வரவேற்கவில்லை என்பதை தெரிசா கவனித்தாள்.

காலட்சேபக் காரர் போய்ச் சேர்ந்து ஒரு வருஷத்துக்கு மேலே ஆச்சே. போன மாசம் தான் ஊரோடு உக்காந்து எள்ளும் தண்ணியும் ஊத்தி பிண்டம் பிடிச்சு வச்சானது. அப்புறமா செம்புலே வரார், பைப்பிலே வரார்னு இவா ஏதோ சொல்லிண்டு இருக்கா. எல்லாம் அந்தக் கட்டேலே போற ஜவஹர்லால் நேரு கொடுக்கற தைரியம்.

தெரிசாவுக்கு மட்டும் கேட்கிற மாதிரி மெதுவாகச் சொல்லியபடி அவர் பின்னால் உட்கார்ந்தார்.

இந்த ஊருக்கும் ஜவஹர்லால் நேருவுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தாள் தெரிசா. ஒரு வேளை அந்தப் பெயரோடு இங்கே யாராவது மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்களோ என்னமோ.

தியாகராஜ சாஸ்திரிகள் சொந்த சகோதரியை, மகளைப் பார்க்கும் பிரியத்தோடு தெரிசாவை நோக்கினார். இதெல்லாம் முன்பே திட்டமிடப்பட்டவை. அவருக்கு நடப்பது இப்படித்தான் என்று தெரியும்.

இந்தப் பெண்ணுக்குத் தன்னாலான உதவியைச் செய்ய வேண்டுமென்று அவருக்கு மனதில் பட்டது முதல் தடவை இல்லை என்று நிச்சயமாக நம்பினார் தியாகராஜ சாஸ்திரிகள். மூன்று நாள் முன்பே, நடுப் பகலில் திவசச் சாப்பாடு சாப்பிட்டு விட்டுத் தூங்கியபோது இந்தப் பெண்ணில் முகம், இவள் நிறையப் படி உள்ள மண்டபத்தினுள், படைக்கிற வெய்யிலில் படி ஏறி வருவதாகப் படிந்து இருந்தது.

தியாகராஜனின் அருமைச் சிநேகிதன் சின்னச் சங்கரனின் பிரியமான புரபசர் மருதையன் மாமா நேற்றுத் தியாகராஜன் அரசூர் குடும்ப வீட்டைக் கடந்து சைக்கிளில் போனபோது வாசலில் நின்றிருந்தார். அவர் இறந்து ரெண்டு வருஷம் ஆனாலும் சைக்கிளில் தியாகராஜன் அந்தப் பக்கம் போகும்போது வாசலில் உட்கார்ந்து செய்தித் தாள் படித்த படியோ, தெரு முனையில் இருந்து பச்சைப் பசேல் என்று சாளூர்க் காய்கறி வாங்கி வந்து கொண்டிருப்பவராகவும் அவர் தியாகராஜ சாஸ்திரிக்குக் கண்ணில் படுகிறார்.

சொரிய முடியாத இடத்தில் வந்த வேர்க்கூறு போல தியாகராஜனுக்கு எரிச்சல் தர வைக்கிற ஒரே பிரச்சனை என்ன என்றால், புரபசருக்கு நேரு என்ற பெயர் நாகப்பட்டணம் மிட்டாய்க் கடை நெய் ஜாங்கிரி சாப்பிடுகிறது போல் அவ்வளவு பிரியமானது. அந்தக் குல்லாக் கடன்காரனைத் துதித்துப் பரவசப்படும் கும்பலைக் கண்டாலே தியாகராஜ சாஸ்திரிகளுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. ஒரு பொக்கைவாய்க் கிழவனைப் பரவசத்தோடு துதிப்பதைக் கூட அவர் சகித்துக் கொள்வார். ஆனால் வழுக்கைத் தலையில் தொப்பி தரித்த காஷ்மீரப் பண்டிதரை அவரால் சுபாவமாகவே சற்றும் பொறுக்க முடியாது போனது.

அவரும் தன்னால் இயன்ற வரைக்கும் நேருவைப் பற்றி தனக்கு உசிதமான தகவல்களைப் பேப்பரில் படித்ததாகவும், புத்தகத்தில் படித்ததாகவும் சொல்லிப் பரப்ப முயற்சி செய்து வருகிறார். அவர் படிக்கிற புத்தகங்கள் காந்தி, நேரு, அந்த மனுஷனுடைய தகப்பன் மோதிலால் நேரு, விபின் சந்த்ர பால், தாங்குதூரி பிரகாசம் என்று நிறையப் பேரைச் சகல கெட்ட குணங்களுக்கும் துர்நடவடிக்கைகளுக்கும் ஊற்றுக்கண்ணாகவும் உறைவிடமாக விவரித்தாலும், மற்ற துஷ்டர்களை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், நேருவை முதலில் உண்டு இல்லை என்று ஆக்கி விடலாம் என்று தியாகராஜ சாஸ்த்ரிகள் சதா யோசித்தபடி இருப்பார்.

புதுசாக நேரு விரோதத் தகவல் ஏதும் ஒரு மாதத்துக்கு வராவிட்டால் அவரே விடிகாலை எழுந்து காலைக் கடன் முடித்து, குளிக்கக் கிளம்பும் முன்னால் மேற்கு நோக்கி உட்கார்ந்து நேருவும் கவர்னர் ஜெனரல் சம்சாரமும் சிநேகிதமாக இருந்தது, நேருவும் இன்னொரு பெண்பிள்ளையும் கை கோர்த்தபடி நடந்தது, வேறோடு பெண்ணோடு ஒரே சிகரெட்டை மாற்றி மாற்றிப் புகைவிட்டது என்று கிளர்ச்சி உண்டாக்கும் கதைகளை உண்டாக்கி விட்டு உடனே உடல் அசுத்தம் நீங்கக் குளித்து விடுவார். அந்த மாதிரி ஒரு ஐம்பது கதைகளைப் பரப்பி அதில் நான்கைந்து அவர் தேடி வாசிக்கும் புத்தகங்களில் கூட அச்சடித்து வந்ததில் தியாகராஜ சாஸ்திரிக்கு அலாதிப் பெருமை.

என்றாலும் இந்த ரசாபாசமான கதைகளை உற்பத்தி செய்ய நிறையப் பெண்களை அந்த மனுஷரோடு பந்தப்பட்டவர்களாகக் கொண்டு வந்து நிறுத்த வேண்டியிருந்தது. இந்தி சினிமா நடிகைகள் பெயர்களைத் தெரிந்து மனதில் இருத்திக் கொள்ள லைபிரரியில் அபூர்வமாகத் தட்டுப்படும் ஆங்கில சினிமா பத்திரிகைகளைக் கருத்தோடு படிக்க வேண்டி இருந்தது. தமிழ் சினிமா நடிகைகள் பற்றிக் கற்பனை செய்யலாம் தான். ஆனால் இவ்வளவு தேக புஷ்டியுள்ள பெண்கள் நேருவுக்குப் பிடித்திருக்கும் என்று தியாகராஜ சாஸ்திரிகளுக்குத் தோன்றவில்லை. என்னதான் கதை என்றாலும் கதாபாத்திரத்துக்கு உகந்தது இல்லாததை அதுவும் ரதிக் கேளிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் வலிந்து புகுத்துவது தவறாச்சே.

இப்படிக் கதாநாயகிகள் பற்றிய விவரம் சேகரிப்பது தவிர, இந்த மாதிரி கேளிக்கைக் கதைகளைக் கட்டியமைக்கும்போது ஏற்படும் கிளர்ச்சி எவ்வளவு நேரம் வென்னீரில் குளித்தாலும் மனதை விட்டுப் போக மாட்டேன் என்று அடம் பிடித்தது. பச்சைத் தண்ணீரில் குளித்தால் போய்விடும் என்று தோன்றினாலும், அது பீனிசத்திலும் ஒற்றைத் தலைவலியிலும் கொண்டு போய் விடும் அபாயத்துக்கு, கிளர்ச்சி எவ்வளவோ தேவலை. சைக்கிளில் போகும் போதும் திவச வீட்டில் நுழையும் போதும் அது மனதில் அண்டாமல் பாதுகாத்துக் கொள்ள பதிமூன்றாம் வாய்ப்பாடை முழுக்க மனதில் சொல்வதை அவர் சீலமாகக் கொண்டிருந்தார்.

சிருங்கார நேரு வேண்டாம் என்று வலுக்கட்டாயமாக மனதில் ஒதுக்கி வைத்துக் கொலைகாரனும் சதிகாரனுமான நேருவைக் கற்பிக்கக் கொஞ்சம் எளிதாக இருந்தது. காந்தியில் தொடங்கி, ஏன் அவருக்கு முன்பே கோபால கிருஷ்ண கோகலேயில் ஆரம்பித்து எத்தனையோ தேசியத் தலைவர்களை ஒழித்துக் கட்ட நேரு சதி செய்ததாக அவ்வப்போது புத்தகத்தில் வந்த தகவல் என்று எடுத்து விடுவது சமயத்தில் அபாயகரமாகக் குடை சாய்ந்ததும் உண்டு.

வினோபா பாவேயை நேரு கொன்றாரா, வினோபா இன்னும் இருக்காரே என்று கேட்டுப் பேய்முழி முழித்த டிஸ்ட்ரிக்ட் கோர்ட் அமீனா ஒருத்தனிடம் வாய்சாலகமாகச் சமாதானம் சொல்ல வேண்டிப் போனது –

இவ்வளவு சதி நடந்தாலும் அந்த மனுஷர் வினோபா சப்தரிஷி ஆசிர்வாதத்தால் பூர்ண ஆயுளோடு இன்னும் ஆரோக்கியமாக இருக்க, நேருக் கடன்காரனுக்கு பிஸ்டுலாவாமே, உமக்குத் தெரியுமோ?

ஸ்வாமி என் மூலக் கடுப்பே வேஷ்டியில் ரத்தமாகக் கசிந்து கஷ்டப்படுத்துகிறது. நேருவுக்கும் எலிசபெத் மகாராணி புருஷனுக்கும் வேறே தீத்தாராண்டிக்கும் எங்கே எது வந்தால் எனக்கென்ன உமக்கென்ன என்று அங்கலாய்த்தபடி அந்தாண்டை போனான் அந்த அமீனா. ஆனாலும், யார் பெயரையும் நேருவுக்கு எதிர் வரிசையில் நிறுத்த கொலைச் சதிக் கட்டமைப்பு பயன்பட்டது. கதைகளைக் காற்றில் தூவி விடும் தியாகராஜ சாஸ்திரிகள் அதற்கான உத்தியைப் பற்றி மூச்சு விடுவதில்லை.

அது கிடக்கட்டும். என்ன தான் நேருப் பைத்தியமாக இருந்தாலும் புரபசர் மருதையன் நல்ல மனுஷன். கைலாச பதவி அடைந்து ஒரு வருஷம் கழித்தும் அவர் தியாகராஜ சாஸ்திரிகளின் கண்ணைக் கட்டுகிற மாதிரி இன்னும் அரசூர்த் தெருவிலும் வீட்டிலும் தட்டுப் பட்டால் அவர் சாஸ்திரி மேல் வைத்திருக்கிற பேரன்பு புலனாகும். அப்படி வந்து அவர், இந்தப் பெண்ணுக்கு உதவி செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டபோது தியாகராஜ சாஸ்திரியால் தட்ட முடியவில்லை.

அவருக்கும் தியாகராஜனுக்கும் ஒரே ஒரு விஷயத்தில் ஒரே அபிப்ராயம் – செம்பு நீருக்குள் இருந்து நடத்துவதாகச் சொல்லப்படும் இந்த பஞ்சாபகேச சிரௌதிகளின் தினசரி கதைப் பிரசங்கம் தான் உண்டாக்கிய, நேருவும் யாரோ பெண்ணும் பங்கு பெறும் கதைகள் போல, அதைவிட நீளமாக முடியாமல் நீளும் விஷயம் என்று தியாகராஜ சாஸ்திரிகள் நினைப்பதுண்டு.

புரபசருக்கு அந்தக் கதையாடலைக் கூடச் சகித்துக் கொள்ள முடியும். சிஷ்ய கோடிகளின் பிரதாபங்கள் தான் அவரை எரிச்சல் படுத்தியவை.

நேபாளத்திலே இருந்து மகாராஜாவே பத்து வருஷம் முந்தி இங்கே நம்ம சிரௌதிகள் அண்ணாவைத் தேடி வந்துட்டா. ஆயிரத்தொண்ணு ஸ்வர்ண புஷ்பமும் ஐயாயிரம் ரஜத புஷ்பமும் காணிக்கை வச்சு, அண்ணா காலைப் பாலும் தேனும் ஊத்தி அலம்பி ரோஜாப்பூ க்ரீடம் வச்சு அவருக்கு கதாபிரசங்க சக்ரவர்த்தின்னு பட்டம் கொடுத்துட்டுத் தான் வேறே வேலை பார்க்க நகர்வேன்னு அவர் ஒரே பிடிவாதம் பிடிச்சார் பாருங்கோ அண்ணா பட்டம் எல்லாம் வேணாம்னுட்டார். பட்டம் கொடுத்தா கதை சொல்றதுலே சிக்கல் வந்து கதையோட பீமனும் கடோத்கஜனும் உள்ளே வந்துடலாம்னு அபிப்ராயப்பட்டார். அதுக்கு என்ன போச்சு, ரெண்டு கதையையும் ஜாயின் பண்ணிக்க ரெண்டு மூணு ஷண்டிங் பாயிண்ட் இருக்கேன்னு மகாராஜா கேட்டார். அதெல்லாம் ஆதிகவிக்கும் மத்தவங்களுக்கும் ப்ரீதி ஏற்படுத்தாத விஷயம்னுட்டார் ஸ்ரௌதிகள்.

இப்படி ஒரு பிரகிருதி எடுத்து விட, புரபசர் கடுப்பாகி அவனோடு மல்லுக்கட்டியதைச் சொன்னது தியாகராஜனுக்கு நினைவு வந்தது.

ஓய் நேபாள மகாராஜா வந்ததை நீர் பார்த்தீரா என்று புரபசர் அவன் வாய் நாற்றத்தையும் சகித்துக் கொண்டு சட்டையைப் பிடித்து உலுக்குகிற நெருக்கத்தில் நிற்க அந்த சோழப் பிரம்மஹத்தி ஸ்வரம் இறங்கி வளைத்து உருட்டி வார்த்தையால் ஜிலேபி பிழிந்தான் -

நேபாள மகாராஜான்னா மகாராஜா தானா? வடக்குலே இருந்து வர்ற முக்கியஸ்தர். மகாராஜாங்கறது ஒரு சீலம் தானே. வடக்குலே தெற்கை விட எல்லா சீலமும் கிரமமா அனுஷ்டிக்கறதாலே நேபாள மகாராஜாவே மரியாதை செய்யறவங்க யாரோ அவங்க மகாராஜாவுக்கு நேர் தானே.

மடியில் நாலு ஓட்டைக் காலணாவை முடிந்து கொண்டு வந்த யாராவது பேர்வழி கதையைச் சீக்கிரம் முடிக்கச் சொல்லி பட்டம் சூட்டுங்கய்யா என்று குரல் கொடுத்ததாகக் கேள்வி. அது தான் ஏகத்துக்குத் திரிந்து நேபாள மகாராஜா கதையாச்சு என்பார் புரபசர். அதுக்கு நமக்கென்ன நோப்பாளம் என்று நினைத்தபடி சுற்றுமுற்றும் பார்த்தார் தியாகராஜ சாஸ்திரிகள்.

நாலைந்து பித்தளைத் தாம்பாளங்களை ஒருசேர உயர்த்திப் பிடித்து செப்புக் கரண்டிகளால் தட்டி ஒலி எழுப்ப, நாளைக்கு நேரத்துக்கு வரணும் என்று சொல்லி சிஷ்யர்கள் சும்மா வேடிக்கை பார்க்க வந்த வெளியூர் டூரிஸ்டுகளை வெளியே அனுப்பினார்கள். குண்டுராயர் ஓட்டலில் ராச்சாப்பாடு நன்றாக இருக்கும் என்ற தகவலும் அவர்களிடம் சொல்லப்பட்டது. ஓட்டல் உரிமையாளார் அதற்காக மாதாமாதம் தனியாக ஒரு தொகையை உபகாணிக்கையாக அவர்களுக்குத் தருவது தர்ம காரியமாகத் தினசரிக் கதையில் சொல்லப்படுவதைத் தியாகராஜன் அறிவார்.

நொடி நேரம் பிரார்த்தனையில் இருந்த தெரிசா கண் திறந்து பார்க்க, சிஷ்யகோடிகளிடம் ஏதோ சொன்ன தியாகராஜன் வெளியே பார்த்து முசாபரையும் உள்ளே வரச்சொல்லிக் கைகாட்டினார்.

படமாக மாட்டியிருந்த தெய்வங்களோடு கடைசி வரிசையில் வைத்திருந்த நேரு, காந்தி படங்களை சிஷ்யை அகற்றி அவற்றை அரிசிக் காணிக்கைப் பானைக்குள் வைத்ததை சாஸ்திரிகள் திருப்தியோடு பார்த்தார்

தெரிசா பொதுவாக நோக்கிச் சொன்னாள் –

நான் என் குடும்ப வேர்களைத் தேடி அம்பலப்புழை போனேன். அங்கே அம்பலத்துலே மேல்சாந்தி உண்டு. அவரோட மனைவி என் கிட்டே இருந்த தகவல்களைப் பார்த்து, என்னை அரசூர் போ, இன்னும் நிறையத் தகவல் கிட்டும்னு சொன்னாங்க. அம்பலப்புழையிலே ஏதோ சர்க்கார் மகாநாடு நடக்கறதாம். மினிஸ்டர்கள் எல்லாம் வர்றதாலே அங்கே எதிரி நாட்டுக் காரங்க யாரும் தங்கக் கூடாதாம். இன்னும் ஒரு வாரத்துக்கு இங்கே வராதேன்னு எங்களைத் துரத்தி விட்டுட்டாங்க

சிஷ்யர் பட்டாளம் எல்லா விதமாகவும் பரிதாபத்தையும் பச்சாதாபத்தையும் வெளிப்படுத்த, தியாகராஜன் தெரிசாவைக் கேட்டார் –

நீங்க இங்கிலாந்திலே இருந்துதானே வர்றீங்க. அது எதிரி தேசம்ன்னு கோட்டுலே ரோஜாப்பூ செருகிண்ட கபோதி சொல்லிட்டானா என்ன?

ரோஜாப்பூ சூடியவர்களை எனக்குத் தெரியாது, போகச் சொன்னவர்களைத்தான் தெரியும். என் புருஷன் பாகிஸ்தானில் இருந்து குடியேறிய குடும்பத்தில் வந்தவன். அவன் ஒரு வேளை எதிரியாக இருக்கலாம்.

முசாபர் மேலே பெரிதாக வழிந்த ஜிப்பாவில் கை விட்டு ஒரு பத்து பவுண்ட் கரன்சி நோட்டை எடுத்துக் காணிக்கை வட்டிலில் வைத்துக் குனிந்து சலாம் செய்தான்.

என் தரப்பில் இருந்து இந்தச் சிறு காணிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள்.

அவன் நேர்த்தியான ஆங்கிலத்தில் சொன்னதை அங்கே எல்லோரும் பிரியத்தோடு அங்கீகரித்தார்கள். மற்ற எல்லாவற்றையும் விட இந்த மிலேச்ச பாஷை இங்கே சகலரையும் சேர்த்து வைக்க வல்லமை படைத்தது என்று மனதில் தோன்றியதை வலுக்கட்டாயமாகச் சொல்லாமல் மறைத்துப் புன்னகை பூத்தான் முசாபர். அவனுடைய அத்தர் வாசம் எங்கும் நிறைந்தது.

உள்ளே இருந்து வந்த ஒரு சிஷ்யன் ஏதோ புத்தகத்தின் பிரதிகளை தெரிசாவிடமும் முசாபரிடமும் கொடுத்தான்.

கும்பளங்காய் மகாத்மியம்னு உன்னத நூல. சிரௌதிகள் எழுதியதை அமெரிக்காவிலே ஒரு ப்ரபசர் இங்கிலீஷ் பண்ணினது.

அவன் விளக்க, தியாகராஜன், அந்தப் புத்தகம் இருநூறு வருஷம் முந்தி எழுதின நகைச்சுவைப் பாட்டு ஆச்சே. சிரௌதிகள் எங்கே இதிலே வந்தார் என்று விசாரித்தார்.

பழைய புத்தகமாகவே இருக்கட்டும். அண்ணா அதை ஏடு தேடி எடுத்துச் செப்பம் பண்ணி புஸ்தகமாக்கினதாலே அது அவர் எழுதியது தான்

அந்த சிஷ்யன் மூக்கு விடைக்கச் சொல்லி தியாகராஜனைத் துச்சமாகப் பார்த்தான். இந்த மனுஷன் இங்கே ஏன் வந்து எழவு கூட்டுகிறான் என்று அதற்கு அர்த்தம் என்று தியாகராஜனுக்குத் தெரியும்.

மேல்சாந்தி மகாராஜா இங்கே வந்து ச்ரொதிகளை மரியாதை செஞ்சுட்டுப் போனதாக பெரியவங்க சொல்லி இருக்காங்க.

சிஷ்யன் தன்னை முக்கியமானவனாகக் காட்டிக் கொள்ளும் ஆவலில் கைகட்டிக் கம்பீரமாக நிற்க முயற்சி செய்தபடி சொல்ல, தியாகராஜன் எகிறினார் –

ஓய், மேல்சாந்தி ஒரு புரோகிதர். அம்புட்டுத்தான். மகாராஜா எல்லாம் இல்லை. அம்பலப்புழை ஒரு காலத்திலே செம்பகச்சேரி மகாராஜா ஆட்சியிலே இருந்தது. அது அப்புறம் திருவாங்கூர் மகாராஜா கிட்டே போனது

சொன்ன வரைக்கும் தப்பு எதுவும் இல்லை என்று தியாகராஜ சாஸ்திரிக்குத் தெரியும். அந்த நேருவுக்கு ப்ரீதியான ஒரு வரலாற்று ஆசிரியன் எழுதியது தான் அவருக்குப் படிக்கக் கிடைத்திருந்தது. போகிறது, நம்பித்தான் ஆகணும்.

அப்படி இல்லை.

சிஷ்யை வீணை வாசிக்க உட்கார்ந்தது போல் பாய் போட்டு சபை நிறைந்து அமர்ந்திருந்தாள். அவள் பார்வைக்கு ரொம்ப அழகாக இருந்தாள். இப்படியான பெண்கள் பெரிய குடும்பத்தை நிர்வாகம் செய்கிறவர்களாக, கலெக்டர் போன்ற பெரும் பதவிகளில் மலேரியா ஒழிக்கும் தீவிரத்தோடு ஜீப்பில் சதா பயணப்படுகிறவர்களாக இருப்பார்கள் என்று இங்கே படிக்கக் கிடைத்த பத்திரிகைச் செய்திகளிலும், இந்த இரண்டு மாதத்தில் நாலு மலையாள, இந்தி சினிமாக்களிலும் பார்க்கக் கிடைத்ததன் அடிப்படையிலும் முசாபர் நினைத்தான், மின்சார விசிறி கூட இல்லாத கட்டடத்தில் அந்தப் பெண் வியர்ப்பின் சுவடே
இல்லாமல் இருந்ததை அவன் கவனிக்கத் தவறவில்லை.

மேல்சாந்தி உலக ஷேமத்துக்காக, சாந்தியும் சந்துஷ்டியும் நிலவப் பகவானை அனுதினம் பிரார்த்திக்கிற சாது ஜீவன். மகாராஜா செய்ய வேண்டிய இந்தக் கடமைகளை அவர் நிறைவேற்றுவதால் ராஜா போல தான். அதுக்கும் மேல்.

அவள் வேற்று மொழியில் பாட்டு மாதிரிச் சொல்லி நிறுத்தாமல் போய்க் கொண்டிருக்க, தியாகராஜ சாஸ்திரி வெளியே நடந்தார். தெரிசா அந்தப் பெண் நிறுத்தும் வரை காத்திருந்து பொதுவாக நமஸ்காரம் சொல்லி வெளியே வந்தாள்.

உன் வம்சம் பற்றி இந்தக் குடும்ப மரங்கள் சொல்வதை விட நிறைய உண்டு. சோழிகள் அதில் கொஞ்சம் தான் சொல்லும். அரசூரில் கதாபிரசங்கக் காரருக்கு ஒருவேளை அதற்கு மேலேயும் தெரிந்திருக்கலாம்.

சோழி உருட்டிப் பார்த்த மேல்சாந்தி மனைவி இப்படிச் சொல்லி, அவளை பஞ்சாபகேச சிரௌதிகளிடம் விசாரிக்கச் சொல்லி இருந்தாள், அவள் நாசுக்காகக் குறிப்பிட்ட, நான்கு தலைமுறைக்கு முந்தி ஆவி போகம் அனுபவித்த அரசூர்க்காரனைப் பற்றிய செய்தி எதையும் செம்புத் தண்ணீர்க் குரலும், சிஷ்யகோடிகளும், இல்லாத வீணை வாசிக்கும் சிஷ்யையும் தருவார்கள் என்று தெரிசாவுக்குத் தோன்றவில்லை.

சைக்கிள் ஓட்டி விழுந்து எழுந்து வந்த சிநேகிதமான புரோகிதர் மூலம் ஏதும் கிடைக்குமானால் சரி, இல்லாவிட்டால் வந்த படிக்கு ஊரைப் பார்த்து விட்டு மதுரைக்குப் போவாள் தெரிசா.

அரசூர் மட்டுமில்லை, இந்தப் பூமி முழுவதுமே அவளோடு சம்பந்தப்பட்டது தான்.

(தொடரும்)

New Novel: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 18 இரா.முருகன்

சாமுவேல் என்று பெயர் சொன்னார். போன வாரம் வந்த போது சாமிவேல் என்று சொல்லியிருந்தார். அவருடைய பெயர் இந்த இரண்டில் எது என்று அரசூரில் ஒரு வாரமாகப் பலமான சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது.

எந்தப் பெயரோ, கருத்து மெலிந்த ஒட்டடைக் குச்சி போல ஓங்குதாங்காக வளர்ந்த ஒரு நடு வயசு மனுஷர் அரசூரில் வீடு வீடாக அத்து மீறிப் புகுந்து ரேடியோப் பெட்டிகளை உடைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

ரேடியோ பெட்டி வைத்து கானங்களையும், நேரம் கெட்ட நேரங்களில் யார் யாரோ தில்ரூபா வாசிப்பதையும், தேசப் பற்றைத் தூண்டும் பிரசங்கம் செய்வதையும், வீட்டுக்குள் சாய்வு நாற்காலியில் ஓய்வாக இருந்தபடி கேட்பதை இது தடை செய்தது. கிரிக்கெட்டில் ஈர்ப்பு உள்ள பிள்ளைகளையும் அவர்களின் நெருங்கிய உறவினர்களையும் யார் எத்தனை ஓட்டம் எடுத்தார், யார் பந்து வீசி அவரை வீழ்த்தினார் என்று சதா அறிவுத் தேட்டத்தில் ஈடுபடுவதையும் இந்த ஒட்டடைக் குச்சி மனுஷர் நிறுத்திப் போட்டார்.

பெட்டி வைத்திருக்க லைசன்ஸ் எடுத்தாக வேண்டும்.

அவர் கொட்டையை நெருக்கிய பிறகு தான் ஊரில் பாதிப் பேருக்கு இப்படி ஒரு சங்கதி இருப்பதே தெரிய வந்தது.

சர்க்கார் கேட்கச் சொல்லி பிராணனை வாங்குகிற பாட்டைக் கேட்க சர்க்காருக்கு ஏன் காசு கொடுக்கணும்? சங்கீதத்தை முறையாக எல்லோருக்கும் சொல்லித் தர ஏற்பாடு செய்யாமல், ராத்திரி உறங்கும் நேரத்தில் குடும்பத்தோடு விழித்திருந்து சங்கீதக் கச்சேரிகளை கேட்கச் சொல்வதற்கு அவர்கள் தானே காசு கொடுத்தாக வேண்டும்? அப்படி விழித்திருக்கிற, கம்பளி ஸ்வெட்டர் அணிந்த வடக்கத்தியக் குடும்பங்களைப் பத்திரிகை விளம்பரங்களில் மங்கிய புகைப்படமாகப் போட்டால் மட்டும் போதுமா?

ஊர்ப் பெரியவர்கள் கீழ்ப்பாத்தி கண்மாய்க் கரையில் விடிகாலை நேரம் கூடுவார்கள். விடிந்து விட்டது என்பதை நியாயப்படுத்துவதாக அவர்கள் கருதும் காரியம் முடிக்க அங்கே போய்க் குத்த வைக்கும் நேரம் அது. அப்போது புகைச் சுருட்டைச் செல்லாமாகக் கடித்தபடி பேச ஒரு தலை போகிற தகவல் கிடைத்தது.

ஏண்ணே, லைசன்ஸ் இல்லாட்ட பொட்டியை நடுத்தெருவிலே போட்டு உடைக்கறானாமே.

அதை ஏன் கேக்கறே’ப்பு? காளிமுத்தன் தெரு மாவன்னா ரானா வீட்டு ரேடியோவைப் இப்படி போட்டு உடைச்சு அது பத்து சுக்காகி தெரிச்சு விளுந்துச்சாம். ஒண்ணொண்ணும் ஒவ்வொரு ஓரம் ஓடினதாம். இப்போ நடு ராத்திரியிலே அவுக வீட்டுக் கிணத்துக்குள்ளே இருந்து ஐயங்கார் கச்சேரிப் பாட்டு பாடறது கேக்குதாம். மாடப் புறையிலே இருந்து மன்மத லீலையை வென்றாருண்டோ வருதாம். தோட்டத்திலே கீரைப் பாத்திக்கு உள்ளாற இருந்து குஜாலா கரகாட்டப் பாட்டு கேக்குதாமில்லே?

அது என்ன பாட்டு அண்ணே?

சனிக்கிளமை சாயந்திரம் சாயாக்கடை ஓரத்திலே வண்ண மணிக் குட்டச்சி

கேட்டதே இல்லையே. அங்கனக்குள்ள இருந்துக்கிட்டே முளுக்கப் பாடும்.

வேணாம். நீர் அதைக் கேட்டு வந்ததைத் தவிர வேறே காரியம் செஞ்சுடுவீர்.

டப்டப் என்று பிருஷ்டத்தில் அடித்தபடி புகை விட்டவர்கள் சிரித்தார்கள். ரேடியோ லைசன்ஸ் தீர்வை போல கீழ்ப்பாத்திக் கம்மாய்க் கரையில் கழிக்கவும் லைசன்ஸ் காசு கேட்பார்கள் இனி என்று எதிர்பார்க்கப் பட்டது.

ரெவ்வெண்டு லைசன்ஸா எடுத்தா சர்க்காரே ஆள் போட்டு அலம்பி விடுமாம். கட்டலேன்னா குண்டு வெடிக்கற மாதிரி குண்டி வெடிச்சுடும் ஆமா.

சிரிப்பு அவர்கள் வீடு போகும் வரை கூட வர வைத்த ரேடியோ இன்ஸ்பெக்டருக்கு அவர்கள் மனசார நன்றி சொல்லிக் கலைந்தார்கள்.

சாமுவேலோ சாமிவேலோ, அவர்களை வயசேறிய விடலைகள் ஆக்கியதில் அந்த மனுஷர் முழு வெற்றி பெற்றிருந்தார். அவர்கள் மட்டும் என்று இல்லை, ஒரு வாரமாக எல்லாப் பேச்சும் இதில் தான் போய் நிற்கிறது.

செட்டியூரணியில் இருந்து குடிதண்ணீர் சுமந்து போகும் பெண்கள், ரேடியோ லைசன்சுக்கார கழிச்சாலே போவான் சுக்கு நூறாகச் சிதறுத் தேங்காய் போல உடைத்துப் போட்ட ரேடியோப் பெட்டிகளில் இருந்து கரண்ட் தரையில் பரவி, வீட்டுத் தரை விரிசல் கண்டதாக உரக்கப் பேசி, தண்ணீர் சிலும்பி மேலே வழிந்து வளமான மாரிடம் நனைந்து, உடலில் வடிவாக ஒட்டிப் படிந்த சேலையோடு அதிரூப சுந்தரிகளாகக் குடம் சுமந்து போகிறார்கள்.

தணிந்த குரலில், அந்த மின்சாரம் பரவிய தரையில் இறுக்கப் பிணைந்து கிடந்து சுகிக்கும் ராத்திரி உறவின் போது நிறைய நேரம் ஈடுபட முடிவதாகச் சிரிப்புகளுக்கு இடையே தகவல் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ராத்திரிகளில் சப்தம் தாழ்த்தி வைத்த வானொலியில் ஒலிபரப்பாகும் அகில பாரத நாடகத்தில் குப்தாஜி, உங்கள் ஆசனத்தை உள்ளே கொண்டு வந்து, வாயை இனிப்பு ஆக்குங்கள் என்பது போன்ற வசனங்களைக் கேட்டபடிக் கலவியில் உச்சம் தொட்டதை விடத் தரையில் கசிந்த மின்சாரத்தால் வரும் சுகம் அதிகம் என்று அவர்கள் சொன்னாலும், அதற்காக ரேடியோ பெட்டியை உடைக்கக் கொடுப்பது தவறான நடவடிக்கை என்பதையும் கூடவே குறிப்பிடத் தவறுவதில்லை.

நவராத்திரி விடுமுறைக்கு அடைத்த நீதிமன்றங்கள் திறந்து, கேஸ் கட்டுகளை கேரியரில் வைத்துக் கொண்டு உற்சாகமாக உந்து வண்டி மிதித்துப் போன வக்கீல் குமாஸ்தாக்கள் மத்தியில் ரேடியோ உடைப்பு விதம் விதமாகச் சர்ச்சை செய்யப்பட்டது. அவர்களில் ஒருத்தர் ரேடியோ இன்ஸ்பெக்டர் வேலைக்கு சீமையில் தான் போய்ப் படித்து வரவேண்டும் என்றும் சர்க்கார் உத்தியோகங்களிலேயே, கலெக்டருக்கும், டிஸ்ட்ரிக்ட் கோர்ட் ஜட்ஜுகளுக்கும் கிடைக்கும் சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி சேர்த்து, இவர்களுக்கும் கிட்டும் என்றும் சொன்னார். எந்த வீட்டைக் கடந்து போகும்போதும் உள்ளே ரேடியோ இருக்கிறதா என்று ரேடியோ இன்ஸ்பெக்டர்களுக்குத் தெரிந்து விடும் என்றும் இதைக் கண்டுபிடிக்க, இடது கையில் தகடு கட்டி இருப்பார்கள் என்றும் இன்னொரு குமாஸ்தா தெரிவித்தார். லைசன்ஸ் இல்லாத ரேடியோக்களை மாசம் இவ்வளவு என்று இலக்கு நிர்ணயித்து உடைக்க அவர்களுக்கு உப ஜனாதிபதி மூலம் வருடம் இரண்டு முறை இந்தியில் எழுதிய தாக்கீது வரும் என்றார் அவர்.

வக்கீல்களுக்கும் நேரடியாக இல்லாவிட்டாலும் ரேடியோ லைசன்ஸ் பிரச்சனை மூலம் மறைமுகமாகப் பாதிப்பு இருந்தது.

கீழ்ப்பாத்திக் கம்மாய் வக்கீல்களுக்கு இல்லை என்பது எழுதாத விதி. அங்கே குமாஸ்தாக்களும், வேலை வெட்டி இல்லாத ஊர்ப் பெரிசுகளும் மட்டுமே சுருட்டோடும் புது வம்போடும் போய்க் குந்துவது வழக்கம்.

வக்கீல்கள் காலையில் வீட்டு வாசலில் வந்து விழும் ஆங்கிலப் பத்திரிகைகளில் விளையாட்டு பற்றிய பக்கத்தைத் திறந்தது, அதன் கீழ்ப் பகுதியில், யாரெல்லாம் செத்துப் போனார்கள் என்று புகைப்படங்களோடு அச்சடித்து அறிவிப்பு வந்திருப்பதைப் படித்ததும், கிரமமாகக் காலைக் கடன் கழிக்க அவரவர் தேகத்தைத் தயார் செய்து வைத்திருந்தார்கள். அதை விட விரசாகக் கழிவு நீக்க ரேடியோ சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

வக்கீல்கள் காலை ஏழரை மணிக்கு, ஆகாசவாணி, செய்திகள், வாசிப்பது என்று பத்து நிமிடம் வாசிக்கும் செய்தி அறிக்கை கேட்டு முடியும் போது அவர்களுக்கு வயிறு சந்தோஷ சமாசாரம் சொல்வது நடப்பானது. தினசரிப் பத்திரிகை வராத தினங்களிலும் ஆகாசவாணி உண்டென்பதால் நிலைமை சீராக இருந்தது.

அச்சமூட்டும்படி கூட்டம் கூட்டமாக வந்து இறங்கி ராப்பகல் பாராது, மழையும் வெய்யிலும் குளிரும் ஏற்படுத்திய காலநிலை வித்தியாசத்தை உணராமல் சதா மயில் ஆடிய வண்ணமாக இருந்தது போய், கழுகுகள் மட்டும் கூட்டமாகப் பறந்து கோயில் குருக்கள் மேலும் வக்கீல்கள் மேலும் தினசரி எச்சமிட்ட நேரம் அது. நடப்பதெல்லாம் நல்லதுக்குத் தானா என்று ராமாயணக் கதையை இன்னும் சுத்த ஜலம் நிறைத்த செம்பில் இருந்து தினமும் சொல்லி வரும் பஞ்சாபகேச சிரௌதிகளிடம் கேட்டார்கள். அவர் இதெல்லாம் நல்லதுக்கு இல்லை என்று தெரியப்படுத்திப் பரிகாரமும் சொன்னார்.

நமக்கு மூத்த குடியினர், முன்னூறு ஐநூறு வருஷம் முன் பயன்படுத்தாத, அதனால் நமக்கு அந்நியமான எல்லாவற்றையும் பகிஷ்கரித்தாலே போதுமானது என்றார் சிரௌதிகள். வக்கீல்கள் தவிர வேறே யாருக்கும் அதை எடுத்துச் செய்ய நேரமும் சிரத்தையும் கிட்டவில்லை. அவர்கள் புதுப் பழக்கத்தைப் பகிஷ்கரிப்பதற்காக டிகிரி காப்பி குடிப்பதையும் ஆங்கிலப் பத்திரிகை வாங்குவதையும் நிறுத்தி வைக்க வேண்டிப் போனது. முட்டைகோசும் காரட்டும் உருளைக் கிழங்கும் இதே நியாயத்திற்கு உட்பட்டு சாப்பிடுவது விலக்கப்பட வேண்டும் என்றாலும், செம்புத் தண்ணீருக்குள் பஞ்சாபகேசன் ஆவாஹனமாகாத நாளில் அவருடைய பெண் சிஷ்யை இந்த சாத்வீகமான காய்கறிகளைப் புசிக்க எந்தத் தடையும் இல்லை என்று நாலு ஸ்லோகங்களையும், பாரசீக, ஜப்பானிய, சீனப் பாடல்களையும் தலா ரெண்டடி பாடி நிரூபித்தாள். பஞ்சாபகேசன் செம்பில் இறங்கி இருந்தாலும் அதே தான் சொல்லியிருப்பார் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை.

ஒயிட் லெக்கான் கோழியும், முட்டையும் சாப்பிடத் தகுதி வாய்ந்தது தானா என்று ரயில்வே ஷ்டேஷன் மாஸ்டர் ரெட்டியார் பஞ்சாபகேசன் சிஷ்யையிடம் தகவல் கேட்க, அவள் ரயில் வராத தினங்களில் அப்படிச் செய்யலாம் என்று அபிப்பிராயம் சொன்னாள். ரெட்டியார் வெளியூருக்குப் போனாலும் அந்த விதிவிலக்கு உண்டு என்று கொசுறாக இன்னொரு சுலோகம் சொல்லி எடுத்துரைத்தாள். ரெட்டியார் வாரம் மூன்று தடவையாவது பத்து கிலோமீட்டர் கடந்து போய் விட்டு வருவதற்குக் காரணம் ஏதும் யாரிடமும் கூறுவதில்லை.

ரேடியோவை முன்னோர் உபயோகிக்காத பட்டியலில் சேர்த்து அதன் உபயோகத்தை நிறுத்தி விடுவதை வக்கீல்கள் விரும்பாததால் அதைப் பற்றி சர்ச்சை இல்லாமல் போனது. கரண்டில் இயங்கும் எதுவும் முன்னோர் ஆசியோடு உபயோகிக்கிறதால் எதேஷ்டமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பஞ்சாபகேசன் வகையறாக்கள் எடுத்துரைத்தார்கள். சிக்கல் இல்லாமல் போன ரேடியோ நடவடிக்கையை லைசன்ஸ் இன்ஸ்பெக்டர் சிக்கலானதாக்கி விட்டார். இவ்வளவுக்கும் வக்கீல்கள் பெரும்பாலும் பத்து ரூபாய் வருடாவருடம் அவரவர் வீட்டு ரேடியோவுக்கு லைசன்ஸ் எடுக்கிறவர்கள்.

இது இப்படி இருக்க, ராமாயணக் கதை மெல்ல முன்னேறுவதற்குக் காரணம் என்ன என்று ஓய்வு பெற்ற முன்சீப் கோர்ட் நீதிபதி நீலமேகம் பிள்ளை தலைமையில் தாங்களாவே ஏற்படுத்திக் கொண்ட ஏழு நபர் குழு ஆராய்ந்தது. கதை நேரத்தை ஆருடம் கேட்கப் பயன்படுத்துவதே காரணம் என்று அந்தக் குழு தீர்மானத்துக்கு வந்தாலும் அதை முழுக்க எடுத்துச் சொல்ல அவர்களுக்குச் சந்தர்ப்பம் தரப்படவில்லை. இவர்கள் குறிப்பிட்ட ஆரூடம் தினசரி கதை சொல்வதற்கு முன் கேள்வி பதில் ரூபத்தில் நிகழ்வது.

ஊர் நன்மையை உத்தேசித்து எழும் கேள்விகளில் ஒன்றாகப் போன வாரம் புதன்கிழமையன்று ரேடியோக்களை உடைத்துப் போடும் சர்க்கார் உத்தியோகஸ்தர் பற்றிச் செம்பு நீருக்குள் கேள்வி மரியாதையோடு தொடுக்கப்பட்டது. பஞ்சாபகேசனின் ஆதிகால சிஷ்யர்கள் கைத்தாளமிட்டும், ஜிங்குஜிங்கென்று கைக்கடக்கமான ஜால்ராக்களோடும் சந்தோஷ ஒலி எழுப்ப, தண்ணீரில் இருந்து வந்த பதில் இப்படி இருந்தது –

அந்த வெளியூர் மனுஷ்யர் சாமுவேலாக வரும் நாட்களில் நல்லவராகவும் சாமிவேலாக வரும் போது பிசாசு மேலேறியவராகவும் இருக்கிறார். பிசாசு தினங்களில் மட்டும் அவர் வானொலி உடைக்கிற துர்செயலில் ஈடுபடுகிறார். வீட்டு வாசல்களில் குங்குமம் பூசிய எலுமிச்சைகளை நிலைக்கு மேல் பொருத்தி வைத்தால் அவர் வீட்டுக்குள் நுழையாமல் இருப்பார். சர்க்காருக்குச் சேர வேண்டிய தொகையைச் செலுத்த எல்லோரிடமும் உபரியாகப் பணம் புழங்க, தினம் இங்கே உபரி சங்கீர்த்தனம் நடத்துவோம். எல்லோரும் புதிதாகப் பறித்த காய்கறிகளும், அரிசியும் பருப்பும், ரெண்டு ரூபாயிலிருந்து மேலே இஷ்டம் போலவும் உசிதம் போலவும் சுவர்ண புஷ்பமும் சமர்ப்பித்து எல்லா விக்னமும் விலகி ரேடியோ கேட்கலாம்.

செம்பில் இருந்து மேலதிக வழிகாட்டுதல் உத்தரவு கிட்டாவிட்டாலும், சிஷ்யை சொன்னதின் பேரில், எட்டு நபர் குழுவொன்று ரேடியோ உடைக்கும் சர்க்கார் உத்தியோகஸ்தனை, கடந்து போன சனிக்கிழமை காலையில் தெப்பக்குள மேற்குக் கரையில் உள்ள தபால் ஆபீசில் சந்தித்தார்கள்.

ரேடியோ உடைக்காத நேரங்களில் அந்த மனுஷர் போஸ்ட் ஆபீசில் தாற்காலிகமாக மேஜை போட்டு, ஏற்கனவே எழுதிய சர்க்கார் சாணித்தாள் கோப்புகளில் எல்லாப் பக்கங்களிலும் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். போனவர்கள் ஆச்சரியத்தோடு அதைப் பார்த்தபடி நின்றார்கள்.

இவர்களை அன்போடு வரவேற்று தன் மேஜை ஓரங்களிலும் பகுதி நாற்காலியிலும் உட்காரச் சொன்னார் அந்த மனுஷர், ஏன் பழைய கோப்புகளிலும் உதிரிக் காகிதங்களிலும் கையொப்பமிட வேண்டும் என்று அவரிடம் விசாரிக்கப்பட்டது. கை விரல்கள் நெறி கட்டி வலிக்காமல் இருக்க அப்படிச் செய்யச் சொல்லி நகரத்தில் டாக்டர்கள் ஆலோசனை கூறியதாகவும் ஐம்பது வருடத்துக்கு முந்திய பழைய ஃபைல்கள் இங்கே நிறைய இருப்பதால் கை விரல்கள் தற்போது சரியாக இயங்குவதாகவும் தெரிவித்தார் அவர்.

கை விரல்கள் சரியாக இல்லாவிட்டால் லைசன்ஸ் வாங்காத ரேடியோ பெட்டிகளை உடைப்பது சிரமமான காரியம் என்று விளக்கி அவர் வந்தவர்களிடம் வந்த காரணம் விசாரித்தார். அவர்களும் மென்று முழுங்காமல் அவர் செய்கிற இந்த நாசகாரச் செயலை உடனே நிறுத்திப் போட வேண்டும் என்று விண்ணப்பித்தார்கள். கையொப்பம் இடுவதையா என்று அவர் கேட்க, ரேடியோவை உடைப்பதை என்று விளக்கினார்கள்.

அவர் எழுந்து நின்று பிரசங்கி போல் உயர்த்திய குரலில் கூறியது :

உங்களுக்கு நான் ஒண்ணு சொல்ல வேண்டியிருக்கு. எதோ நான் உங்க ஊருக்கு வந்து தான் பொழுது போகாம வீடு வீடாகப் போய் ரேடியோ லைசன்ஸ் கேட்கறேன்னு தானே நினைக்கறீங்க.? அது சரியில்லே.

பின்னே எது தான் சரி? ரேடியோ சரஸ்வதி இல்லையா? சரஸ்வதி தான் வாணி. ஆகாசத்திலே இருந்து இறங்கின சரஸ்வதி அவ சாஸ்வதமா இருக்கற இடம் ரேடியோப் பெட்டி. அதைப் போய் உடைக்கறது என்ன புதுப் பழக்கம்?

அவரோ, இது புதுசொன்றும் இல்லை என்றும் லைசன்ஸ் கட்டணம் வசூலிப்பதை சர்க்கார் மும்முரமாக்கி இருப்பதால் போன வருஷமே அவரையும், விலாசம் சரியாக எழுதப்படாத கடிதங்களைப் பட்டுவாடா செய்யும் இறந்த கடிதங்களின் பிரிவிலிருந்து இன்னும் பத்து பேரையும் இந்த வேலைக்காக உத்தியோக மாற்றம் கொடுத்து அனுப்பி வைத்ததாகச் சொன்னார். சொற்பமான சம்பள உயர்வும் உண்டு என்பதை அவர் சொல்லாவிட்டாலும் அதிகமாக அது இருக்கும் என்பதையும் உடைக்காமல் இருக்க அவர் கையூட்டு வாங்கலாம் என்றும் எட்டு நபர் குழு நம்பியது.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, லஞ்சம் கொடுப்பது குற்றம் வாங்குவதும் குற்றம் என்று ரேடியோ அறிவிப்பாக அவர் தெரிவித்து, லைசன்ஸ் இல்லாத ரேடியோக்களை உடைத்துத் தகர்த்தெறியும் மன நிறைவான காரியத்தில் கை சுத்தமானவர்களே ஈடுபட முடியும் என்றும் இல்லையென்றால் மின் அதிர்ச்சியில் கை கருகி விழுந்து விடலாம் என்றும், அப்படியான ரேடியோக்கள் கேட்கும் போதே வெடித்து வீட்டுக்காரர்களுக்கும் துன்பம் தரும் என்றும் எச்சரித்தார்.

மலையாளக் கரையில் போன மாசம் வரை சர்க்காருக்காக இதே உத்தியோக கைங்கரியம் தான் செய்து வந்ததைக் குறிப்பிட்டு விளக்கினார்.

அங்கே சமுத்திரக் கரையில் ஒரு அம்பலம். அவங்க மொழியிலே கோவில். கோவில்லே பூசை வைக்கிற குருக்கள் வீடெல்லாம் கோவில் பக்கம். பெரிய குருக்களை மேல் சாந்தின்னு சொல்வாங்க. அவரோட வீட்டம்மா காலேஜ் வாத்திச்சியா இருந்து ரிடையர் ஆனவங்க. வீட்டுலே டெல்லி டிரான்சிஸ்டர் ரேடியோ உண்டு. அவங்க பாடுன்னு சொன்னா பாடும். பேசுன்னா பேசும். சும்மா இருன்னா இருக்கும். யட்சினி வேலை அடச்சு வச்ச பெரிய பெட்டி. சரியாப் பாடலேன்னு லைசன்ஸ் கட்டலே. நான் கண்டு பிடிச்சு உடைச்சுப் போடப் போனேன். மலையாளத்திலெ பெரிய விவாதம் எனக்கும் அந்த அம்மாவுக்கும். சோழி உருட்டி எல்லா குருக்களும் அவங்க தான் ஜெயிப்பாங்கன்னாங்க. ஆனா, கடைசியிலே சர்க்காருக்குத் தான் ஜெயம்.

மலையாளத்தில் பேசிப் பாடிய, கோவில் வீட்டம்மா சதா கேட்டுக் கொண்டிருந்த பெரிய பெட்டியை உடைத்துப் போட்ட தன் விரல்களைப் பாசத்தோடு பார்த்துக் கொண்டார் அவர்.

.அதெல்லாம் சரிதான், ஆனால், ரேடியோ இல்லாவிட்டால் நிறைய காரியம் கவனிக்க முடியாது என்பதை எல்லோரும் ஏகோபித்துச் சொன்னார்கள். சாப்பிடும் போது செய்தி அறிக்கை, பகல் நேரத்தில் சினிமா கானங்கள், சாயந்திரம் வித்துவான்களின் வாத்திய சங்கீதம் இதெல்லாம் இல்லாத வாழ்க்கை அலுப்படையச் செய்யக் கூடும், ஊரே இல்லாமல் போகலாம், அப்புறம் லைசன்ஸ் கட்ட ரேடியோ ஏது என்று பரவலான அச்சம் தெரிவிக்கப் பட்டது.

ரேடியோ இல்லேன்னா நல்லது நடக்கும்ங்கறதுக்கு ஒரே ஒரு உதாரணம் நம்ம பஞ்சு அண்ணா சொல்ற ராமாயணம் கேட்க நிறையக் கூட்டம் வரும்.

சிஷ்யர்களில் ஒருவர் புளகாங்கிதமடைந்து இரு கையும் தூக்கிக் கூப்பியபடி சொன்னார். அவருடைய கம்புக்கூட்டில் ரோமத் திரளை அருவருப்போடு பார்த்த ரேடியோக் காரர் திரும்புவதற்கு முன், அந்த சிஷ்யன், அதோ அந்த மயில்கள் போட ஆட வேண்டும் என்று பாடியாடி மற்றவர்களையும் கைகளை உயர்த்திப் பாடி ஆடச் சொன்னார். அக்குள்களின் அணிவகுப்பை எதிர்கொள்ளப் பயந்தவராக ரேடியோக் காரர், நல்லது, நான் நாளைக்குக் கதை கேட்க வருகிறேன் என்று சொல்லி வந்தவர்களை அனுப்பி வைத்தார். அது வேறே எங்கோ அழைத்துப் போகும் என்று அப்போது யாருக்கும் தெரியாது.

சொன்னபடி அவர் மறுநாள் வெள்ளியன்று கதைப் பந்தலுக்குப் போனார். பாரம்பரிய உடை தரித்து வராவிட்டாலும் ரேடியோக் காரர் மாட்டியிருந்த கால் சராய் உடம்போடு ஒட்டி விஜயசேனன், பிரஜாசேனன் போன்ற பெர்யகளுடைய ராஜகுமாரர்கள் கோட்டுச் சித்திரமாக்ச் சிறுவர்களுக்கான கதைப் புத்தகங்களில் உடுத்திக் காணபபடுவது போல தெரிந்தது. .அவர் சமயவேலாகத் தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினார்கள் அவரை வரவேற்ற சிஷ்யர்களும் ஒற்றை சிஷ்யையும்.

ரேடியோக் காரர் கையில் ஒரு கிடாரங்காயைக் காணிக்கை கொடுக்க வைத்திருந்ததையும் கூட்டத்தினர் கவனிக்கத் தவறவில்லை. முழுக்கப் பழங்களைக் காணிக்கையாகத் தராமல் காய்கறிகளையும் காப்பிக் கொட்டை, வெண்ணெய், பால், தயிர், நல்லெண்ணெய் போன்ற உன்னத உணவுகளையும் தரச் சொல்லிக் கதை கேட்க வருகிறவர்கள் சிஷ்யர்களால் ஊக்குவிக்கப் படுவது நடப்பதே. சிலர் அன்பின் மிகுதியால், வீட்டில் சமைத்த பொருட்களையும், கோழி முட்டை போன்ற வஸ்துக்களையும் எடுத்து வருவதைத் தடுப்பதும் அவர்களின் வேலையாக இருந்தது.

எனினும் இதுவரை எண்ணெயும் கார மிளகாயும் சேர்த்து ஊறுகாய் போட கிடாரங்காய் யாரும் காணிக்கை அளிக்கவில்லை என்பதை அவர்கள் நினைவு கூர்ந்தார்கள்.

வந்தவருக்கு எங்கிருந்தோ ஒரு மர முக்காலி கொண்டு வந்து ஆசனமாகப் போடப் பட்டது. அவரை முன் வரிசையில் அமரச் சொல்லியும் அன்றைய கதை முடிந்ததும் உபசாரமாகச் சில வார்த்தைகள் பேசச் சொல்லியும் அப்படியே ரேடியோ லைசன்ஸைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் குறித்து ஒரு பரவலான தெளிவை உண்டாக்கும் படியும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

ஒரு புன்முறுவலோடு அவர் அவர்களுடைய கோரிக்கைகளை, அவற்றில் முக்காலி தவிர மற்றவற்றை அங்கீகரித்தார். திரைக்குப் பின்னால் ஆவலோடு பார்வை நிலைக்க, கையில் பிடித்த கிடாரங்காயைப் பணிவாக ஏந்திய அவர் புண்ணியாத்மாக்களின் மன நிறைவை உடல்மொழியாகப் பிரதிபலித்தபடி நின்று கொண்டிருந்தார்.

கனமான குரலில் சிஷ்யகோடிகள் முன்னோடியாக வழக்கமாகப் பாடப்படும் தோத்திரப் பாடல்களைப் பாடி முடித்து ஒரு நிமிடம் இடைவெளி விட்டு பஞ்சாபகேச சிரௌதிகள் குரல் கொரகொரவென்று மெதுவாக ஒலிக்க ஆரம்பித்தது. இரண்டு நிமிடம் பேசி அது ஓய, பின்னால் பட்டுத் துணி விரிப்பில் பத்மாசனம் இட்டு அமர்ந்திருந்த சிஷ்யை தொண்டையைக் கனைத்துக் கொண்டு கம்பீரமாக அவர் விட்ட இடத்தில் தொடங்கினாள்.

ரேடியோக் காரரின் முகம் பொறுப்பையும் உத்தியோகத்தையும் பிரதிபலிக்க அவர் நிமிர்ந்து படை வீரன் போல நின்றார். கையில் கிடாரங்காய் அந்தக் கம்பீரத்தை அதிகரித்ததே ஒழியக் குறைக்கவில்லை.

அவர் ஏதோ கேட்கவோ சொல்லவோ கையுயர்த்த, பந்தலில் பலமான மௌனம் நிலவியது.

அந்த ரேடியோ பெட்டிக்கு லைசன்ஸ் இருக்கிறதா?

அவர் தண்ணீர் நிரப்பிப் பூமாலைகளும் மாவிலையும் சார்த்தி வைத்திருந்த செம்பைச் சுட்டிக் காட்டிக் கேட்டார்.

அது ரேடியோ இல்லை என்று அவசரமாக யார்யாரோ எழுந்து நின்று கை காட்டியும், உட்கார்ந்தபடிக்குச் சுற்றுமுற்றும் திகைப்போடு பார்த்து ஆமோதிக்க ஆள் தேடியும் கூச்சலாகச் சொன்னார்கள். ரேடியோக்காரர் எல்லாக் குரல்களையும் அரசு நடவடிக்கையாக உடனே தடை செய்து தன் புன்னகையை மறுபடி அணிந்து கொண்டு விளக்கினார் -

மனிதர்களின் பேச்சு தேகத்தில் இருந்து அந்நியப்பட்டு வந்து ஒரு ஜனக் கூட்டத்துக்குக் கேட்க கிடைக்கிறது. இதுவும் ஒரு வகை வானொலி தான். அவசியம் இதற்கான லைசன்ஸ் கட்டியிருக்க வேண்டும்.

ரேடியோக் காரர் முன்னால் நகர்ந்து செம்பைக் கைப்பற்றக் கை நீட்ட கூட்டத்தில் இரைச்சல். அவர் கம்பீரமாக எல்லோரையும் திரும்பிப் பார்த்துக் திரும்பவும் கையமர்த்தினார். பள்ளிப் பிள்ளைகளை சத்தம் போடாமல் கைகட்டி வாய்பொத்தி இருக்க உத்தரவிடும் ஆசிரியர்களின் சைகைகள் அவை என்று கூட்டத்தில் யாரோ அறிவித்தார்கள்.

சர்க்கார் உத்தியோகஸ்தரை வேலை செய்ய விடாமல் தொந்தரவு கொடுத்தால் உங்கள் எல்லோரையும் பிடித்துச் சிறையில் தள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு.

அவர் மிரட்டியபடியே தண்ணீர்ச் செம்பை எடுத்துக் கொண்டு வெளியே போனார்.

பேரிளம் பெண் ஒருத்தியும் கூடவே அவளுடைய வீட்டுக்காரன் என்று சொல்லத் தக்க விதத்தில் உயரமும் உடம்பு கனமும் கொண்ட ஒரு ஆணும் குதிரை வண்டி விட்டிறங்கி ரேடியோக் காரரை நோக்கி வந்தார்கள்..அந்தப் பெண் அவரை விசாரித்தாள் -

நான் கொச்சு தெரிசா.. இங்கிலாந்தில் இருந்து வரேன். கதாபிரசங்கம் நடக்கிற் இடம் இதுதானா?

(தொடரும்)

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 17 இரா.முருகன்

கொட்டும் மழையில் டாக்சியை விட்டு இறங்கி பாண்டுப் சர்வமங்கள் சால் இருக்கும் குறுகலான தெருவில் அகல்யா நுழைந்தாள்.

தேங்கி இருந்த மழைத் தண்ணீரையும் பின்னால் ஒடுங்கிக் கிடந்த தெருவையும் பார்த்து, உள்ளே வந்தால் திருப்பிப் போக சிரமம் என்று தெரு முனையிலேயே நிறுத்தி விட்டார் டாக்சி டிரைவர்.

ஆனாலும் ரெக்சின் பை, லெதர் பேக், பூ மாலை, செண்டு இதையெல்லாம் இறக்கவும், குடையை விரித்துப் பிடித்து திலீப்பிடம் தரவும் அவர் தவறவில்லை. வண்டியைக் கிளம்பும் முன் அவருடைய வாழ்த்தும் தார்வாட் பகுதி மராத்தியில் வந்ததைத் திலீப் கவனித்தான்.

ரொம்ப தூரம் நடக்கணுமா?

அகல்யா கேட்டாள். மழை சீரான சத்தம் எழுப்பிப் பாதையை நீர்த் திரையிட்டு மறைத்து முன்னால் ஓடியது. அகல்யா குடைக்குள், திலீப்புக்கு இன்னும் அருகில் வந்தாள். அவ்வளவு அருகில் திலீப்பின் வாயில் மட்டிப்பால் ஊதுபத்தி வாசனை எழுந்து வருவதாக அவள் நினைத்தாள். அது தானா அல்லது அவன் பல் கூடத் துலக்க நேரம் கிட்டாமல், அவளை அவசரமாகக் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கோவிலுக்கு ஓடி வந்தானா? எதுவோ, அந்த வாடை அவளுக்கு வேண்டி இருந்தது. ஆம்பிளை வாடை. அவளுடையவன்.

லெதர் பேக் என்கிட்டே கொடு. ஜிப் சரி இல்லே. உள்ளே தண்ணி போயிடும்.

குடையை இன்னும் தாழப் பிடித்தபடி கனமான அந்தப் பைக்காகக் கை நீட்டினான் திலீப். குடைக்கு வெளியே சத்தம் எழுப்பி விழுந்த மழை குடையின் சுற்றுவெளி மேலிருந்து சன்னமான தாரையாக வழிந்தது.

தலை குளித்து ஒரு முழம் கனகாம்பரப் பூ சூடி இருந்த அகல்யாவின் உச்சந்தலையில் இருந்து சீயக்காய்த் தூள் நெடியும், நெற்றியில் கோவில் குங்குமம் எழுப்பும் இனம் தெரியாத பாதுகாப்பான மஞ்சள் வாசனையும், கரைந்து கண்ணைச் சுற்றித் தடமிட்டுப் பூசிய கண்மையில் டிங்சர் அயோடின் கலந்த மெல்லிய வாடையும் சேர்ந்து எழுந்து திலீப்பின் நாசியை நிறைந்தன.

ஈரமும் அண்மையுமாக அவள் உடல் நெடி திலீப்பை பெரிய சாதனை முடித்து விருது வாங்கி வரும் மகிழ்ச்சியை அடைய வைத்திருந்தது. அது மயக்கமடைய வைப்பது. முயங்கிக் களித்துக் கிடக்கக் கட்டியம் கூறுவது.

பேக் இருக்கட்டும். உங்க வேஷ்டியைக் கவனியுங்கோ. விழுந்து வைக்கப் போறது..

ஈரமான பூமாலையில் இருந்து பூக்கள் கலவையாக மழை நீருக்கு மணம் ஏற்றி நெடி தரப் புது வேட்டி முனை ஈரத்தில் புரளாமல் உயர்த்திப் பிடித்தபடி திலீப் நிச்சயமற்று ஒரு வினாடி நின்றான்.

லெதர் பேக்கை தோளில் உள்ளொடுக்கி மாட்டியபடி ரெக்சின் பையை வலம் மாற்றினாள் அகல்யா. இரண்டு சுமைகளின் கனத்தால் பக்கவாட்டில் உடல் வளைய பிடிவாதமாக அடியெடுத்து வைத்து வந்து கொண்டிருந்த அவள் திரும்பிப் பார்த்தாள்.

வேஷ்டி தாறுமாறா அவுந்து வழியறது. விழுந்து வைக்கப் போறது. பிடியுங்கோ.ன்னா கேட்க மாட்டேளா?

நீண்ட அவள் கை மழையில் நனைந்து அவன் இடுப்பில் துணியைப் பிடித்து நிறுத்தியது. அவன் குடையைத் தோளில் சரித்தபடி அந்தக் கையைத் தன் கக்கத்தில் செருகிக் கொண்டு வேஷ்டியைச் சரியாகக் கட்டிக் கொண்டான்.

ஐயோ, கஷ்டம். ஆத்துக்குக் கூட்டிண்டு வர பொண்டாட்டி கையை எடுத்து ரொம்பக் காரியமா யாராவது கஷ்கத்திலே திணிச்சுப்பாளா? எட்டு ஊருக்கு திவ்விய வாசனையா இருக்கு. குளிச்சேளோ இன்னிக்கு?

அவள் சிரித்ததைப் பார்த்து அவனுக்கும் சிரிப்பு குமிழிட்டு வந்தது. திலீப்புக்கு இரண்டு விஷயங்கள் மனசிலானது. முதலாவதாக, இன்று காலை எந்தத் தடங்கலும் இல்லாமல் நடந்த கல்யாணமோ, அது முடிந்த நிச்சயத்தால் அவன் மேல் வந்து சேர்ந்த உரிமையோ அவளை சுபாவமாகச் சிடுசிடுக்கவும் கண்டிக்கவும் வைக்கிறது. ரெண்டாவது, அவள் பேசுகிற தமிழில் டோம்பிவிலி பிராமணக் கொச்சை ஏறியிருக்கிறது. உரிமை இன்னும் கொஞ்சம் நாளில் அவனை இடுப்பில் முடிந்து கொள்கிற சுவாதீனமாக மாறுமோ என்னமோ, அந்தக் கொச்சை அரைகுறை மலையாளம் வண்டலாகப் படிந்த பாலக்காட்டு பாஷையாக அடுத்த வினாயக சதுர்த்திக்குள் முழுசாக மாறிவிடும் என்று திலீப் அறிவான்.

இதானே நம்ம ஆ’ம்?

அகல்யா லெதர் பேக்கை தோளை உயர்த்திப் பின்னால் தள்ளியபடி திலீப்பைக் கூர்ந்து பார்த்துக் கேட்டாள். ஆமா என்று அவள் விரல்களை இறுக்கிய கை சொன்னது.

சர்வ மங்கள் சாலில், பழைய தினசரிப் பத்திரிகைப் பக்கமும், வாழைப் பழத் தோலும், வாழைச் சருகும், முட்டை ஓடும் மிதக்க, மழைத் தண்ணீர் கலங்கிச் சூழ்ந்த இரண்டாவது கட்டிடம். அங்கே முதல் மாடி. பால்கனியில் வைத்த டால்டா டப்பாவில் ஓங்கி உய்ரமாக ஏதோ செடி. அகல்யா அந்தக் குடியிருப்பில் எதிர்பார்த்த மெல்லிய ஆர்மோனியச் சத்தம் தான் கேட்கவில்லை.

படி இங்கே இருக்கு.

தண்ணீர் வழிந்து கொண்டிருந்த குறுகிய படிக்கட்டைக் காட்டினான் திலீப். அங்கே பெரிய நத்தை ஒன்று படிகளுக்கு இடையே ஊர்ந்து கொண்டிருந்தது. கீழே இன்னும் இரு சிறு நத்தைகள் தரையோடு ஒட்டியபடி கிடந்தன. மாடிப் படி ஏறும் வளைவு இருட்டில் இருந்து மராட்டியில் ஒரு குரல் குதூகலமாக வந்தது.

திலீப் மயிலோடு வந்துட்டான்.

அகல்யா திரும்பித் திலீப்பைப் பார்த்தாள். ஆமாம் என்று தலையசைத்தான். அம்மா தான்.

அவன் குடையை மடக்குவதற்குள் குனிந்து உள்ளே புகுந்து அகல்யாவின் கண்ணுக்கு மிக அருகே தன் சோர்ந்த கண்கள் நிலை குத்தி நிற்க, ஷாலினி சத்தமாக அறிவித்தாள் -

இந்த மயில் தான் இத்தனை நேரம் ஆடிட்டு இருந்தது இங்கே. மழை, ஈரம் எதுவும் பொருட்டில்லே இதுக்கு. எனக்காக ஆடறதுக்கே வந்திருக்காம். போய்ட்டு அப்புறம் வா தூங்கணும்னேன். பாரு, கேக்காம உன்னோட வந்துடுத்து.

அவள் ஈர்க்குச்சி போலிருந்த கைகளால் அகல்யாவின் கன்னத்தில் வருடியபடி பாட ஆரம்பித்தாள் –

அப்ஸரா ஆளி இந்த்ரபுரி துன் காலி

அகல்யா ஷாலினியை மெதுவாக அணைத்துக் கொண்டாள். ஷாலினி பாட்டிலேயே மூழ்கி,சட்டென்று விலகி நின்றாள். லாவணி தொடர, ஒரு கால் இழுத்திருக்க மற்றதை மட்டும் ஊன்றி திரும்பத் திரும்ப இந்திரபுரி விட்டு அப்சரஸ் வந்த அதிசயத்தைப் பாடிக் கொண்டிருந்தாள்.

சரி, அப்சரஸுக்கு வழி விடு அம்மா.

திலீப் ஷாலினித்தாய் தோளில் அன்போடு அணைத்தபடி சொல்லி விட்டு அகல்யாவைப் பார்த்தான்.

அகல்யா அவன் கையை இறுகப் பற்றிக் கண் காட்டினாள். இருவரும் மாடிப்படி வளைவு ஈரத்தில் ஷாலினியின் கால் தொட்டு வணங்கினார்கள்.
நமஸ்காரம் பண்ணனும். இங்கே எடம் இல்லே. உள்ளே வரட்டும்.

அகல்யா திலீப்பிடம் சொல்லிக் கொண்டிருக்க, படிகளில் தாய் தாய் என்று யாரோ விளித்தபடி இறங்கி வரும் ஓசை. அகல்யா நிமிர்ந்து பார்த்து உங்க பாட்டித் தள்ளையா என்றாள்.

அம்மாவை கவனிச்சுக்க நான் போட்டு வச்சிருக்கற நர்சிங் ஆர்டர்லி. ரேணுகாம்மா.

ரேணுகா, ஏண்டி ரேணுகா

ஸ்தூல சரீரத்தோடு மத்திய வயசு ஸ்திரி ரேணுகா இறங்கும்போதே அவளை அழைத்தபடி மேலே இருந்து வந்த குரல் யாரென்று அகல்யாவுக்குத் தெரிந்தது. திலீப் அடிக்கடி பெருமையோடும் வருத்தத்தோடும் சொல்கிற கற்பகம் பாட்டியம்மா. பெரிய மனுஷியாக வாழ்க்கை பூரா வாழ்ந்து கற்பூரமாக எரிந்து போனபடி கடைசித் துளியிலும் பிரகாசிக்கும் மகா மனுஷி என்று திலீப் அடிக்கடி சொல்வான்.

நிமிர்ந்து பார்த்தபோதே அவளுடைய கம்பீரமும் இந்த வயதிலும் உடம்பில் பிடிவாதமாகத் தங்கி இருக்கும் சௌந்தர்யமும் மனதை ஈர்க்க, மழைச் சாரல் புகையாகப் படிந்து இறங்கும் ஒடுங்கிய படிகளில் ஊறும் நத்தைகளை ஜாக்கிரதையாக விலக்கி மெல்லப் படி ஏறினாள் அகல்யா. சுமந்து வந்த கான்வாஸ் பையும் லெதர் பேக்கும் அவள் நடைக்குத் தடை சொல்லவில்லை. பின்னாலேயே ஷாலினியைத் தாங்கிப் பிடித்தபடி திலீப் வந்து கொண்டிருக்க, ரேணுகா உரக்கக் கேட்டாள் –

திலீப் தம்பி, கல்யாணம் ஆயிடுச்சா? எப்போ?

தடதடவென்று கட்டிடத்தில் சகல் குடித்தனங்களிலும் மழைக்காகவும், ஞாயிறு விடுமுறைக்குக் கிடந்து உறங்கி ஓய்வெடுக்கவும் அடைத்திருந்த கதவுகள் எல்லாம் திறந்தன. சந்தோஷமாக வரவேற்கிற குரல்கள் முன்னால் வர, ஆணும் பெண்ணுமாக அடுத்து அடுத்து வந்ததைப் பார்க்க அகல்யாவுக்கு மனம் கொள்ளாத மகிழ்ச்சி. அவள் இருப்பிடத்திலும் இப்படி நடந்திருக்குமா என்று தெரியவில்லை அவளுக்கு. அப்பா அவளை நுழைய விட்டிருப்பாரா?

அப்பா காலையில் கோவிலுக்கு வந்திருந்தார். படபடப்பு இல்லாமல் கையில் வைத்திருந்த வாழைப்பழச் சீப்பை அவளிடம் கொடுத்து விட்டுத் தரையில் உட்கார்ந்து கொஞ்சம் அழுதார். அவர் இந்த வருடக் கடைசியில் ரிடையர் ஆவதால், அகல்யா இல்லாமல் வீடு எப்படி இயங்கும் என்று கேட்டார்.

ஆர்ய சமாஜ்னு தப்பாச் சொல்லிட்டா. அங்கே போய் தேடிப் பார்த்துட்டு இங்கே வர நேரமாயிடுச்சு. செம்பூர்லே கோவில் இருக்குன்னே ரொம்பப் பேருக்குத் தெரியாது.

இந்தக் கடைசி வாக்கியத்தை கழுத்தில் மாலையோடு வந்த திலீப்பிடம் ஒரு தகவல் சொல்கிற குரலில் சொன்னார். சட்டையைப் பிடித்து இழுத்துக் கூச்சல் போட்டு சண்டை பிடிக்கும் ஒரு முதியவரைக் கற்பனை செய்து வந்திருந்த திலீப்புக்கு அந்த சாத்வீகமான மனிதர் பெரிய சங்கடத்தை அளித்தார். அவரையும் அகல்யாவின் அம்மாவையும் இரண்டு தம்பிகளையும் அவளுடைய மாதம் ஐநூறு ரூபாய் வருமானத்தில் இருந்து பிரித்து நிர்க்கதியாக நிற்க வைத்ததாகத் தன் மேலேயே கோபம் வந்தது அவனுக்கு.

கல்யாணம் ஆச்சா?

அவர் ஆவலோடு விசாரிக்க இல்லையென்றான் திலீப். குருக்கள் வந்துண்டிருக்கார் என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே காக்கி பேண்டும் டெர்லின் சட்டையுமாகப் பரபரவென்று உள்ளே வந்தார் ஒரு இளம் வயசுக்காரர், திலீப் வயது இருக்கலாம், அல்லது நாலைந்து அதிகமாக இருக்கலாம் அவருக்கு. சுவர் ஓரமாகப் போய் உடுப்பை அவிழ்த்தபடி மேலே வேஷ்டியை அணிந்து கொண்டு தலையைச் சிறு உச்சிக் குடுமியோடு முடித்து முப்பது வினாடி நேரத்தில் குருக்கள் ஆனார் அவர். விழுத்துப் போட்ட துணிகளை சீராக மடித்துக் கொடியில் போட்ட பிறகு நெற்றி நிறைய வீபுதியும் வாயில் அஷ்டோத்திரமுமாக சந்நிதிக்கு வந்தார்.

வரேளா?

திலீப் இதோ என்று சாடை காட்டி, அகல்யா அப்பாவையும் கூட வந்த அவள் சித்தப்பாவையும் அருகே அழைத்தான்.

அகல்யா அப்பாவை விட திலீப் குறைவான நேரத்தில், சொல்லப் போனால் உடனேயே விஷயத்துக்கு வந்து விட்டான். அகல்யா விருப்பம் போல் அவளுடைய சம்பாத்தியத்தைச் செலவு செய்யலாம் என்று சம்மதம் சொன்னான்.

அவ எங்கே இருப்பா?

இது ஒரு கேள்வியா சார். இந்தச் சால் விட்டா அந்தச் சால். அந்தச் சால் விட்டா இது. டால்டா டப்பாவிலே தண்ணியோட காத்திருக்கற டாய்லெட் ரெண்டு இடத்திலேயும் உண்டு.

மாப்பிள்ளே, என்ன கல்யாண நேரத்துலே டாய்லெட் பத்தி எல்லாம்.

அந்தக் கல்யாணம் மழைக்கு நடுவே சிரித்துக் கொண்டே நடந்து முடிந்தது காலையில் தான். குருக்கள் கூட தாலி எடுத்துக் கொடுக்கும் போது சிரித்துக் கொண்டே இருந்தார். மனதில் இறுக்கமாக உணர வைக்கும் மழை நாளில் சிரிக்க ஒரு சந்தர்ப்பத்தைத் தேடியிருந்த அவருக்கு அதற்கான சூழ்நிலை ஏற்பட்டதாக அவர் நினைத்திருக்கலாம். திலீப் மெல்ல விசாரிக்க, அவர் அகல்யாவைத் தவிர்த்துத் திலீப் காதில் மட்டு விழ, ரகசியம் பேசும் குரலில் அவனிடம் சொன்னார் –

குளிச்சுட்டுத் துவட்டின துண்டை இடுப்பிலே கட்டியிருந்தேனா. லோக்கல் டிரெயின் பிடிக்கற அவசரத்துலே அது மேலேயே பேண்ட்டைப் போட்டுண்டு வந்துட்டேன். இங்கே உங்களைக் காக்க வைச்சதுலே டென்ஷன். சட்டுனு ஏண்டா இடுப்பு கனமா இருக்குன்னு கையை வச்சுப் பாத்தா

அவர் இன்னும் சிரிக்க நிறைய இருந்தது. திலீப்பும் கல்யாணத்துக்கு வந்த அவன் சகாக்கள் ரெண்டு பேரும் சிரிக்க, அகல்யா அதற்காக இப்போது சர்வமங்கள் சாலில் சிரித்தாள்.

ரொம்ப தெய்வீகமா சிரிக்கறா இந்த மத்ராஸ் சோக்ரி

அண்டை அயலில் இருந்து பித்தளைத் தாம்பாளத்தில அவசரமாக மஞ்சள், குங்குமத்தைக் கரைத்து ஆரத்தி செய்து எடுத்து வந்த பெண்கள் தம்பதியருக்கு ஆரத்தி சுற்ற அப்ஸரா ஆளி என்று மழையோடு திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டிருந்தாள் ஷாலினி. அந்தப் பெண்களும் நேர்த்தியாக அவளோடு பாட ஆரம்பித்தார்கள். சிக்கல் சிடுக்கு இல்லாத வாழ்க்கை இவர்கள் எல்லோருக்கும் வாய்த்திருக்கும் என்று ஒரு வினாடி சந்தோஷமாக நம்பினாள் அகல்யா. அவளுக்கும் அது லாவணியின் துள்ளி வரும் குதூகலத்தோடு சதா வாய்க்கட்டும். அந்தப் பெண்கள் அதைத்தானே பாடினார்கள்.

ஆரத்தி எடுத்தவர்களுக்கு எல்லாம் சட்டை பாக்கெட்டில் தேடித் தேடி ஐம்பது பைசாவும் ஒரு ரூபாயுமாகத் தட்டில் போட்டான் திலீப்.

கஞ்சூஸ். அண்ணி கிட்டே கேட்டு வாங்கிப் பத்து ரூபா ஆளாளுக்குப் போடு.

பக்கத்துக் குடியிருப்புப் பெண் செல்லமாக மிரட்டி, அகல்யாவின் முகவாயை வருடி ஜவ்வரிசி வடை சாப்பிட்ட வாடையோடு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அப்சரா வந்த ஆரத்திப் பாடல் தொடர, தோளில் மாட்டிய பையில் இருந்து இன்னும் கொஞ்சம் பணம் எடுத்து திலீப்பிடம் கொடுத்தாள் அகல்யா. வாழ்த்துகிற இந்தப் பெண் இன்னும் நிறைய ஜவ்வரிசி வடை உண்டு மங்களம் பொங்கி வழிந்து ததும்ப நூறாண்டு இருக்கட்டும்.

உள்ளே வா. நீயும் வாம்மா. வலது கால். ஆமா அதுதான். முன்னால் அது வரட்டும். விழுந்துடாதே. பையை என்னத்துக்கு தூக்கிண்டு வரே? சுமக்க இனிமேல் தான் நிறைய வரும். இப்போ அக்கடான்னு இரேன். உன் பேரென்னம்மாடி குழந்தே?

கற்பகம் பாட்டி வரிசையாகச் சீனச்சரப் பட்டாசாகக் கேள்வி கேட்டபடி கதவுக்கு அந்தப் பக்கம் நின்றாள்.

அகல்யா அணை உடைந்து பொங்கிய அழுகையை வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டு அவள் காலில் விழுந்து நமஸ்கரித்தாள்.

ஏய் நீலகண்டன் பொண்டாட்டி, ரெண்டு அடி அடிச்சுடு.முதல்லே நல்ல வார்த்தை சாவகாசமாச் சொல்லு. நீ மட்டும் சொல்லலே.. பார்த்துக்கோ.

திலீப்பும் செல்லமாக மிரட்டியபடி கற்பகம் காலில் விழ அவள் ரெண்டு பேரையும் எழுப்பித் தழுவியபடி ஆசி சொன்னாள்.

ஏண்டா திருட்டு படுவா, பலசரக்குக் கடையிலே ஒரு வீசை சக்கரை வாங்கிண்டு வரேன்னு போற மாதிரி திடுதிப்புனு குண்டிவேஷ்டியோடு கிளம்பி ஓடிப் போய் கல்யாணம் பண்ணிண்டு வந்து நிக்கறியே. வெக்கமா இல்லே. நான் இருக்கேன்னு நினைவே இல்லியா? உன் தங்கை ஜனனிக்குச் சொன்னியா? லண்டன் தான் கொல்லைப் பக்கம் ஆயிடுத்தே. ஒரு போஸ்ட் கார்ட் அவளுக்குப் போடலாமில்லே? உங்க பெரியப்பாவுக்கு? சியாமளாவுக்கு? அண்டா முழுங்கி மாதிரி அமுக்கமா இருந்து இவளையும் இழுத்துப் பிடிச்சுக் கூட்டிண்டு வந்துட்டே?

திலீப் எல்லாக் கேள்விக்கும் ஒரே பதில் தான் சிரிப்பில் சொன்னான்.

உங்கிட்டே பேசறதே தண்டம் சோழப் பிரம்மசொருபமே. ஏண்டியம்மா கொழந்தே, இந்தக் கர்த்தபத்தை எப்படி செலக்ட் பண்ணினே?

அகல்யா, பாட்டி கேக்கறது புரியறதா?

கர்த்தபம்னா என்ன கற்பூரமா? அகல்யா திருப்பிக் கேட்க, கெட்டுது குடி என்று இன்னொரு தடவை சிரித்தான் திலீப். கல்யாண வீடு இப்படித்தான் உற்சாகமாக இருக்கும். இவர்கள் எல்லோருக்கும் சொல்லி அழைத்து விட்டு அகல்யாவைக் கைப்பிடித்திருக்கலாமோ என்று தோன்றியது அவனுக்கு.

மழையிலே நடந்து வந்தியாடி பொண்ணே என்றாள் கற்பகம் பாட்டி.

நானா? இவரோடு கூட ஃபியட் கார் டாக்சியிலே வந்தேன் பாட்ட.

அகல்யா அப்பாவியாகப் பதில் சொன்னாள்.

என்ன குசும்புடி கிழவி இந்த வயசிலே. நீ தஞ்சாவூர்க்காரின்னு சொல்லாமலேயே உலகத்துக்குப் புரியும்.

திலீப் இப்போது சிரித்தது மழைச் சத்தத்தோடு போட்டியிட்டு உயர்ந்தது. கற்பகம் பாட்டியும் அவனோடு சேர்ந்து சிரிக்க, சூழ்நிலை லேசாகிப் போனது. அது உணர்ச்சி மேம்பட்டு, கோபமோ, ஒதுக்குதல் பற்றிய ஆத்திரமோ மேலேறி வர இருக்கும் என்று திலீப் நினைத்ததில்லை.

தமிழ்லே ஓடறதுன்னா தெரியுமில்லையோ? வீட்டுலே சொல்லாமக் கொள்ளாம வந்து ரகசியமாக் கல்யாணம் செஞ்சுக்கறது. பாட்டி குசும்பா கேட்கறா நீ சீரியஸா பதில் சொல்றியே.

அவன் கற்பகம் பாட்டி கையைப் பிடித்தபடி சுருக்கமாகச் செம்பூர்க் கல்யாணம் பற்றிச் சொன்னான்.

போறது நன்னா இருங்கோ. எங்க காலத்திலே நாலு நாள் கல்யாணம். இப்போ எலக்ட்ரிக் ட்ரெயின் ஸ்டேஷன்லே நின்னு திரும்பக் கிளம்பற நேரத்துலே கல்யாணம் முடிஞ்சுடும்.

பாட்டி ஆச்சரியப்பட, அகல்யா வேலைக்குப் போகப் புடவையும், மற்ற உடு துணியும் சீவில்லிப்புத்தூர் ஸ்னானப் பவுடரும், சாந்துப் பொட்டு பாட்டிலும் அடைத்து எடுத்து வந்த பைகளைச் சுவர் ஓரமாக வைத்தாள். வெளியே மழை நின்றிருந்தது துல்லியமான வானமாக ஜன்னல் வழியே தெரிந்தது.

உக்காருங்கோ ரெண்டு பேரும். பூஷனிக்காய் சாம்பாரைக் கொஞ்சம் போல் பெருக்கி, ஒரு ஆழாக்கு சாதம் வடிச்சுட்டா எதேஷ்டம்.

கஷ்டப்பட்டுக்காதே சின்னக் குட்டி.

திலீப் பாட்டியைக் கன்னத்தில் தட்டினான். போடா வானரமே என்றபடி அவள் அகல்யாவைப் பார்த்தாள்.

ஒரு பாயசம் வச்சுடறேன் குழந்தே. போன வாரம் தான் தெருக்கோடி கன்னடக்காரா கடையிலே ஏழு ஏழு ஏழு பவுடர் எப்படி இருக்குன்னு பார்க்க வாங்கினேன். இப்படி உடனடியா உபயோகமாகும்னு தெரிஞ்சிருந்தா இன்னொரு பாக்கெட் வாங்கியிருப்பேன். ஒரு அரை மணி நேரம் பசி பொறுத்துப்பியோடீ? ரேணுகா, பக்கத்து கர் ஸே தூத் ஆவ். ஏண்டி சிரிக்கறே. கூறு கெட்டுப் போய் இவ ஒருத்தி. குருடும் செவிடும் கூத்துப் பார்த்த மாதிரி நானும் இவளும் இந்த அப்சரஸை பாத்துக்கறோம்.

தன் முன்னால் ஏக்கத்தோடு கன்றுக்குட்டி போல வந்து நின்ற ஷாலினியைத் தோளில் தட்டியபடி கற்பகம் பாட்டி சொன்னாள்.

நான் பாயசம் பண்றேன் பாட்டி. சுமாரா சமையல் பண்ணுவேன். அம்மா அதுவும் ரெண்டு கீர்த்தனையும் கத்துக் கொடுத்திருக்கா.

அகல்யா பேசியபடி சுவாதீனமாக அறை ஓரத்தில் அடுப்பை நோக்கி நடக்க, கீழ்த் தளத்தில் மர ஜன்னல் கரகரவென்று ஓசையோடு திறந்து, ஒரு பெண் குரல் கூவியது.

திலீப் அண்ணா, உங்களுக்கு மதராஸில் இருந்து ட்ரங்க் கால்.

(தொடரும்)

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 16 இரா.முருகன்

அரசூர் தெரியுமா? அகல்யா கேட்டாள்.

சிறிய சமோசாவைக் கடித்துக் கொண்டு தலையை இல்லை என்று ஆட்டினான் திலீப். இரானி ஹோட்டலில் மழைக்காக ஒதுங்க வருகிறவர்களின் கூட்டம் மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்தது.

மழை தொடங்கப் போகிறது என்று பூஜை செய்த பிள்ளையாரைச் சதுர்த்தி முடிந்து விசர்ஜன் நேரத்தில் கடலில் இடும்போதே எல்லோருக்கும் தெரியும். கணபதியைக் கரைத்ததும் மேகம் திரண்டு தென்மேற்குப் பருவ மழை ஆரம்பித்து விடும் என்ற நம்பிக்கையில் கையில் குடையோடு கணபதி பப்பா மோரியா பாடிக் கொண்டு வரும் சில வயதான மராட்டிய ஆண்களை, ஏன் பெண்களையும் கூடத் திலீப் பார்த்திருக்கிறான். அவர்களுக்காகவே ஏற்படுத்தியது போல சில சமயம் மழையும் பொழிந்து நின்றிருக்கிறது.

அரசூரா?

திலீப் அசிரத்தையாகக் கேட்டான்.

மெட்ராஸில் இருந்து ராமேஸ்வரம் போகிற ரயில் இருக்காம். போட் மெயில்னு அழகான பெயர் அதுக்கு. அந்த ரயில் போற பாதையில் இருக்கப் பட்ட ஊர் அப்படீன்னு கேட்டேன். அங்கே ஒரு விசேஷம், தெரியுமா?

அகல்யா தரையில் விழுந்த கைக்குட்டையை எடுத்து உதறி இடுப்பில் செருகியபடி சொன்னாள்.

மழைக்காக ஒதுங்கிய எல்லோரும் சின்ன சமோசாவும், டீயும் சாப்பிட்டுப் போக உடனடியாக உத்தேசித்தவர்களாகவே இருந்தார்கள். டீ தவிர ஓவல்டின், கோக்கோ மால்ட் போன்ற பானங்களும், இறுக்கமாக மூடிய உயரமான கண்ணாடி ஜாடிகளில் மைதா மாவு பிஸ்கட்டுகளும் விற்பனைக்கு இருந்தாலும், ஒற்றை விருப்பமாக டீயும் சமோசாவும் தான் விற்றாகிறது.

இவர்களில் ஆண்கள் எல்லோரும், வியர்வைக் கசகசப்பும் மழைத் தூறலும் நனைத்த முழுக்கைச் சட்டையைத் தோள்பட்டைக்கு ஏற்றி மடித்து விட்டபடி, சபர்பன் ரயிலில் தொங்கிக் கொண்டு, அவரவர் குடித்தனத்துக்குப் போனதும் மர ஸ்டூலைத் தேடுவார்கள். பரணில் போட்டு வைத்த மழைக் கோட்டும், குடைகளும், கம் பூட்ஸ்களும் தொப் தொப்பென்று தூசியோடு தரையில் விழ துடைத்துப் போட்டு மழைக் காலத்தை எதிர்கொள்ளத் தயாராவார்கள்.

மழையை முன் வைத்தே இனி மூன்று மாதம் எங்கே போனாலும் வந்தாலும் பேச்சு இருக்கும் என்பது திலீப்புக்கு நிம்மதியான விஷயமாகப் பட்டது. நிறைய யோசித்துத் தினமும் எத்தனையோ தடவை பேசப் புதிதாக எதையும் கண்டெடுக்க வேண்டிய கவலை தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

நான் ஒரு விசேஷம் பத்தி பேச ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷமாச்சு. ஊம் கொட்டவாவது செய்யலாமில்லே. மனசெல்லாம் எங்கே? பெரிசு பெரிசா மலையாளப் பாச்சிக்கு நடுவிலே போய் உக்கார்ந்துடுத்தா?

அகல்யா அவன் தோளில் அடித்தாள்.

உஸ் அந்த ஆளுக்குத் தமிழ் அர்த்தமாகும்.

ஜாக்கிரதையாகக் கோப்பையை ஏந்தி அதை விட சர்வ கவனத்தோடும் டீ குடித்துக் கொண்டிருந்த ஒரு ஆறடி சர்தார்ஜியைக் கண்ணால் காட்டிச் சொன்னான் திலீப்.

அவனுக்குத் தமிழ் தெரிந்திருந்தால் தான் என்ன போச்சு?

அகல்யா மென்மையாகச் சிரித்தபோது அவளுடைய புது மூக்குத்திப் பொட்டு ஒளிர்ந்ததைப் பார்த்த திலீப் மெல்ல நாசி முனையில் வருடினான்.

வேணாம் கை எடுக்கலாம். இல்லாட்ட தாறுமாறா கீழே இறங்கிடும்

அவள் குற்றப்படுத்தினாலும் அதில் எதிர்பார்ப்பும் தெரிந்ததைச் சிரிப்போடு கவனித்தான் திலீப்.

என்ன கேட்டே? கேள்வியை மறந்த மாதிரி கேட்டான். அவள் வாயால் மலையாள சௌந்தர்யம் திரும்ப நினைவு கூரப்பட அவனுக்கு இஷ்டம்தான்.

அரசூர் தெரியுமான்னு கேட்டேன்.

அகல்யா ஆதி கேள்விக்குப் போயிருந்தாள். அவளுக்கு கேரள வனப்பு தேவையில்லாத விஷயம். திலீப்புக்கும் அதே படி. ஆனால் அகல்யா இல்லாத நேரத்தில் அது தவிர யோசிக்க உருப்படியாக ஏதும் இல்லைதான்.

அரசூர்லே என்ன?

எனக்குப் பார்த்திருக்கற மாப்பிள்ளை அங்கே தான் கதா பிரசங்கம் பண்ணிண்டு இருக்கார்.

திலீப் நிமிர்ந்து உட்கார்ந்தான். இது என்ன புதுசாக கூக்ளி போடுகிறாள்?

ஆமா, நீங்க சும்மா உக்காத்தி வச்சு பேசிட்டு, ஈரானியிலே இப்படி எண்ணெய் முக்குளிச்ச சமோசா தின்னுட்டு, போரிவ்லி லோக்கல் பிடிக்கக் கூட வந்து அனுப்பி வச்சுட்டு, மலையாள மாரைப் பாக்க ஓடினா, பாத்து அலுத்துப் போய் திரும்ப வரும்போது வரட்டும்னு பொறுமையா உக்காந்திருக்க முடியுமா?

சிரித்தபடி நீளமாகக் கேட்டாள் அகல்யா. சுருக்கெழுத்து டிக்டேஷன் எடுக்கும் ஸ்டெனோகிராபர் இந்தப் பெண். வாக்கியத்தை எங்கே தொடங்கி எப்படிக் கொண்டு போய், எங்கே முடிப்பது என்பதில் அவளுக்கு இருக்கும் தெளிவு திலீப்பை மலைக்க வைக்கிறது. பேச்சும் சிரிப்பும் மனசை அள்ளுகின்றன. கண், இது முக்கியமான விஷயம் என்கிறது.

அரசூர்ங்கறது மேப்லே பார்த்தா தெரியும். பெரிய ஊராக எல்லாம் இருக்காது. இருந்தா அதைப் பத்தி நாலு பேர் பேசறதோட, தெற்குலே போற ரயில்லே நாலு சீட்டாவது அந்த ஊருக்குப் போக ரிசர்வேஷன் கோட்டா இருக்குமே.

லா பாயிண்ட் கண்டு பிடித்த வக்கீல் குமாஸ்தா போல தெம்பாகக் கேட்டான் திலீப். அவள் கையில் இருந்த எச்சில் சமோசாவைப் பிடுங்கிக் கொண்டு அவளுடைய உதடுகளையே பார்த்தபடி மென்றான்.

அகல்யா கண்ணைக் கவிந்து கொண்டாள். இன்னும் அரை மணி நேரம் இப்படிக் கூட்டத்துக்கு நடுவே சேர்ந்து இருந்தாலும் திலீப்போடு, நாகமும் சாரையுமாகப் பின்னிப் பிணைந்து கிடக்கச் சொல்லி உடம்பு சுகம் கேட்க ஆரம்பித்து விடும். வேறு எதுவும் இல்லாவிட்டாலும் பாறைக்குப் பின் கட்டி அணைத்து அவன் தரும் முத்தத்தை இன்னும் பத்து வினாடி நீடிக்க முடிந்தாலும் போதும்.

ரயில்வே ரிசர்வேஷன் பத்தி எல்லாம் தெரியாது. ஆனா, இந்த மனுஷர் அந்த ஊர்லே ராமாயணக் கதாபிரசங்கம் பண்ணி ஜீவிக்கிறாராம். அதுவும் மாசம் மூணு, இல்லேன்னா நாலு நாள் மட்டும்.

திலீப்புக்குச் சத்தியமாகப் புரியவில்லை. இத்தணூண்டு ஊரில் கதாபிரசங்கம். அதுவும் ஒரே கதை. அது கூட மாசத்துக்கு மூணு நாள். என்ன வருமானம் வந்து விடும்? காற்றைக் குடித்துக் கிடக்க அகல்யாவை வேறே கல்யாணம் செய்து கொள்ள வந்து விட்டானா அந்த மனுஷன்?

வெளியே மழை விட்டிருந்தது. தூறல் வலுக்காமல் அப்படியே பூச்சொரிந்து நாளைக்கு வரேன் மேள தாளத்தோடு என்று விடை பெற்றுப் போயிருந்ததை மேலுடுப்பில் நனைந்த தடம் இன்றி உள்ளே வந்து சூடான சமோசா கேட்கிற கும்பலை வைத்து அவதானித்திருந்தான் திலீப்.

அரசூர் ரொம்ப விநோதமாக இருக்கு. அப்பா தான் கதை கதையாச் சொன்னார்

சொல்லியபடி கைப்பையைத் தோளில் மாட்டியபடி எழுந்து நின்றாள் அகல்யா. இடுப்போடு வளைத்து அணைத்துக் கொள்ளத் திலீப்பின் கைகள் பரபரக்க, உள்ளே வரும் பங்குச் சந்தைத் தரகர்களின் உரத்த குரல்களில் கவனம் சிதறியது.

சிமெண்ட் இன்னும் ஒரு மாசம் இப்படித்தான். இன்னும் இறங்கும். கட்டுமானத் தொழில் சீனா யுத்தத்திலே சரிஞ்சது இதுக்குக் காரணம் இல்லே. பண வீக்கம் தான். யூனிவர்சிட்டி புரபசர் எல்லாம் சொல்றாங்க.

ஈரமான, குளிர் காற்று மெல்ல வீசும் ஒரு ரம்மியமான சாயந்திர நேரத்தில் சிமிண்ட் கம்பெனி பங்கு விற்கும் விலை பற்றியும் பண வீக்கத்தைப் பற்றியும் பேசுகிற மனுஷர்களின் அந்தரங்க வாழ்க்கை எப்படி இருக்கும்?

திலீப் அகல்யாவைக் கேட்டான். அவன் கையைப் பற்றி நடந்தபடி அவள் சொன்னாள் -

இவங்க இருக்கற இடத்தில் மற்ற எந்தப் பேச்சு வார்த்தையும், பிரியத்தைப் பரிமாறிக்கறதும் சரிப்பட்டு வராது. ராத்திரி பெண்டாட்டியோடு கிடக்கற நேரத்தில் கூட ஏசிசி சிமெண்ட் க்ளோசிங்க் கொடேஷன் இவ்வளவு இருந்தா விடிஞ்சு என்ன விலைக்கு ஷேர் விற்கலாம், வாங்க முடியும்னு நினைச்சுண்டு படுத்திருப்பாங்க, அப்படித்தானே?

என்னத்துக்கு சிரிக்கறே என்று திலீப்பைப் பக்கவாட்டில் பார்த்துக் கேட்டாள்.

ஞாபகம் வந்துது அதான்.

எதான்?

இவங்க எல்லாம் படுக்கையிலே பயங்கர சூரர்களா இருப்பாங்க.

எப்படிச் சொல்ல முடியும்?

போகம் முந்த விடாமல் சிமெண்டை, சமையல் சாமான் விக்கற கம்பெனி ஷேர்னா குத்திக் குத்திப் புளியை வச்சு அடச்சு.

சீ டர்ட்டி. உங்க வாயிலே தான் மிச்சப் புளியை அடைக்கணும்.

அகல்யா குறும்பாகப் பார்த்தபடி சொன்னாள். கோர்த்திருந்த கரங்கள் உயர்ந்து தாழ்ந்து உயர்ந்தன.

எல்லாம் வேண்டி இருக்கு உனக்கு ஆனாலும் ஒரு பிகு.

திலீப் சீண்டினான்.

புளி வேணாம். சிமிண்டும் சரிப்படாது. மத்தது இருந்துட்டுப் போகட்டும். இதெல்லாம் இருந்தாத்தான் அகல்யா இல்லேன்னா போரிவில்லி லோக்கல்லே போற வர, சோனியான வெறும் மதராஸ் சோக்ரி

மெல்லிய குரலில் அகல்யா பேசியபடி வந்தாள்.

வெறும் சோக்ரியோ வெல்லம் போட்ட சோக்ரியோ எனக்கு எல்லாம் இஷ்டம் தான்

அவள் கையை இறுகப் பற்றி நடந்தபடி சொன்னான் திலீப். இந்த கணத்தின் நிச்சயத்தன்மை இன்னும் தொடர்ந்து ஆயுசு முழுக்க வரட்டும் என்றது மனம்.

அரசூர் காளீஸ்வர சாஸ்திரிகளுக்கும் அதேபடி தான் இஷ்டமாம் என்றாள் அகல்யா.

அலைகள் சீராக உயர்ந்து தாழ்ந்து திரும்ப அமைதியாகப் பரவும் கடல் கூப்பிடு தூரத்தில். தொலைவில் கடலுக்கு நடுவே கம்பீரமாக நிற்கும் தர்க்காவைப் பார்த்தபடி ஒரு நிமிடம் நின்றார்கள்

காளீஸ்வர, யாரு அந்த கதாகாலட்சேபக் காரரா?

ஆமா, அவரே தான்.

அப்புறம். ஏன் சிரிக்கறே? திலீப் புரியாமல் பார்த்தான்.

ஒரு பெரிய கதை. கேட்க நேரம் இருக்குமா? அகல்யாவுக்கு சந்தேகம்.

இப்போ இல்லேன்னா, நீ எங்க வீட்டுக்கு வா. கதவை அடைச்சு வச்சுட்டு நாள் முழுக்கக் கேக்கறேன் அகல் செல்லம்மா.

அவள் கையில் அவன் பிடி இறுகியது. காது மடல் ஓரம் அவன் இதழ் ஊர்ந்து அகல்யா ராஜாத்தி என்றபோது பித்தாகிப் போயிருந்தாள் அவள்.

உங்க வீட்டுலே? கதவைச் சாத்திட்டு உள்ளே தனியா? வேறே கதை தான் நடக்கும்.

சொல்லும்போதே குப்பென்று வெட்கத்தில் சிவந்த முகம் அவளுக்கு.

மாதம் ஐநூறு ரூபாய் சம்பளம் வாங்கும், வட்ட டிபன் பாக்ஸில் அவல் உப்புமா எடுத்துப் போய் மத்தியான சாப்பாடு முடிக்கும் டைப்பிஸ்டுப் பெண்கள் மழைக் காலத்துக்குச் சற்றே முந்திய தூறல் சாயங்காலங்களில் அப்சரஸ் ஆவார்கள் என்று திலீப் நினைத்தான். அவன் கரம் பிடித்து வருகிற இவள் அவர்களில் கிரேட் ஒன் நிலை அப்சரஸ். நிமிஷத்துக்கு இருபது வார்த்தை சுருக்கெழுத்தும், பத்து வார்த்தை தட்டச்சும் செய்யும் இந்தத் தேவதை திலீப்புக்கு வசப்பட்டவள். காலில் ரப்பர் செருப்பு தவிர மற்றப்படி யட்சி போல வசீகரிக்கும் அணங்கே தான் அகல்யா.

வழியை விட்டு விலகிச் சற்றே நடந்து ஈரம் பூரித்துக் கிடந்த மணலில் அமர்ந்தார்கள்.

அரசூர்லே முப்பது வருஷமா ராமாயணம் சொன்ன ஒருத்தர் பரலோகம் போனாலும் கதை சொல்றதை விடலியாம். செம்புத் தண்ணியிலே அவரை ஆவாஹனம் செஞ்சு வச்சதும், விட்ட இடத்திலே இருந்து கதையை ஆரம்பிச்சு தொடர்ந்து போயிட்டிருக்காம்.

சந்தமாமா கதை சொல்லும் சுவாரசியத்தோடு தொடங்கினாள் அகல்யா.

எங்கே விட்டுப் போனாராம்? திலீப் கேட்டான்.

காட்டுக்குப் போற ராமன் எல்லோர் கிட்டேயும் சொல்லிட்டுப் போற இடம். இந்த மூணு மாசத்திலே ராமன் உள் தெருவெல்லாம் சொல்லி, கோட்டை மதிலுக்குப் பக்கத்துத் தெருவுக்கு வந்தாச்சாம்.

ரொம்ப வேகமாகத் தான் கதை நகர்றது.

திலீப் சிரிக்க, வேணாம் கிண்டல் எல்லாம் செய்யக் கூடாது என்று கண்டித்தாள் அகல்யா.

கதை சொல்ற போது பாத்திரத் தண்ணிக்குள்ளே வந்த அந்த ஆகாச வாணிக்குப் பக்கமா யாரெல்லாம் உண்டாம்?

திலீப் சுவாரசியம் தட்டுப்படாமல் மீண்டும் கேட்டான். ஆனாலும் இது சுவாரசியமானதுதான்.

பாகவதரோட சிஷ்யகோடிகள் தான். தினசரி அவருக்கு மாலை மரியாதைன்னு செம்புக்கு சூட்டறதாம். தட்சணையை முன்னாடி பட்டுத் துணியிலே எல்லோரும் போட்டு அப்புறமா குவிச்சு எடுத்துக்கறதாம்.

அகல்யா அதிசயம் கேட்ட குரலில், குரல் கீச்சிட, கைக்குட்டையால் வாயை அவ்வப்போது பொத்தியபடி கதை சொன்னாள்.

செம்பாவது, குரல் வரதாவது. எல்லாம் ப்ராட். பக்கத்துலே இருக்கப்பட்ட சிஷ்யகோடி ஏதாவது வெண்ட்ரிலோகிஸ்டா இருப்பான். வாயைத் திறக்காம பேசற கலை அது.

திலீப் சொல்ல நிறுத்தச் சொல்லிச் சைகை காட்டித் தொடர்ந்தாள் அகல்யா.

அப்படியான சித்து உண்டான சிஷ்யை ஒருத்தியும் உண்டாம். பெரியவர் குரல் வழக்கம் போல வரல்லேன்னா, இந்தப் பொண்ணு ஓரமா உக்கார்ந்து வாயை மூடியபடி கதை சொல்லுமாம் . அதுவும் ஒரு ரசம்னு கேட்பாங்களாம். பல நாள் குரல் வராதாம். இல்லே வந்து ஒரு நிமிஷம் பேசிட்டு நின்னுடுமாம். இந்தப் பொண்ணு தான் மீதி. என்ன கேட்கறீங்களா?

அகல்யா செல்லமாக அதட்டினாள்.

அதெல்லாம் சரி, இந்த மூணு நாள் ஆசாமி இதுலே எங்கே

கேட்க ஆரம்பித்து உடனடியாக பலமாகச் சிரித்தான் திலீப்.

அகல்யா அவசரமாக அவன் வாயைப் பொத்தினாள்.

ஆமா, அதிலே என்ன சிரிப்பு? எதுக்கு சிரிக்கறதுன்னு இல்லியா? தூரமீனா கதை சொன்னா யாரு கேப்பா? தூரம் குளிக்கற வரை சப்ஸ்டிட்யூட் வேணும் இல்லியா? அதான் மாசம் மூணு நாளாவது இவர். மனசிலாச்சோ?

பெரிய புதிரை விடுவித்த மாதிரி நிமிர்ந்து உட்கார்ந்து திலீப்பை ஆர்வமாகப் பார்த்தாள் அகல்யா.

இதுக்கு என்னதுக்காக கஷ்டப்படணும்? அந்த ராமா சாஸ்திரி கதை சொல்ற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கலாம். காட்டுக்குப் போறதை இன்னும் பத்து வருஷம் தடையில்லாம சொல்லி பேர் வாங்கலாம். என் அகல்யா கண்ணம்மாவுக்கு நான் தினசரி புதுக்கதை சொல்லுவேன்.

நீங்க காட்டுக்குப் போயிடுவீங்களே? அப்சரஸ்கள் மலையாளத்தில் பேசித் திரியும் வனம். விடிகாலையிலே குளக்கரையில், ஊரே அழகாத் திரண்டு, வடிவான முலையைக் காட்டி வரிசையா நிக்கற காடு.

காற்று திரண்டு வந்து கடலோடு ஆர்பரிக்க, மழை பெய்யத் தொடங்கியது.

(தொடரும்)

New: Era Murukan on The Hindu Literature for Life Festival 2016

Sadanand Manon as the interviewer is always a pleasure to watch. With his in depth knowledge of fine arts, he usually enhances the quality of the interview, enriching it with more info in addition to what the artist interviewed conveys.

Menon’s Raghu Rai interaction yesterday was one such memorable event. Rai came up with some from-the-heart talk like ‘put the heart on the camera sensor to get the photograph with a darshan not dhrushyam… you have to touch and connect to each and every minute space of the frame and have to enrich it with the inner spiritual experience .. et al.

Menon asked him as expected about Rai’s obsession with clouds and drew the best response from Rai.

(I’ll be writing a detailed article in Tamil on Raghu Rai interaction).

It is a pity not even a single photograph clicked by the master photographer was exhibited while the discussion was going on about them. Internet has tons of Raghu Rai photographs as everyone knows. Someone could have tapped that resource and could have provided on a flash drive enough material for the interaction.. ‪#‎TheHindu‬ Literary Festival
——————————————————————————————————————————-

Last century’s sculptor and paitner Ram Kinkar (Shanthiniketan)’s works are being recreated by ‘Installation artist’ and foremost painter/sculptor of present times, Vivan Sundaram. The exercise is comprehensively captured in a massive movie documentary of 120 minutes duration run time, by the ace cinematographer R.V.Ramani.

To engage a 500 strong crowd in a post lunch session on Ram Kinkar is pretty tough, as everyone other than the event organizers understand, especially when 90% of the audience don’t know Ram Kinkar, Ramani, Vivan and installation art, in that order.

But the interaction proceeded merrily and ate away 10 more extra minutes too ‪#‎TheHindu_Literary_Festival‬

————————————————————————————————————————————

Happy to observe Thirukkural is in the lime light again. There is absolutely no doubt It deserves all the adulation it receives and much more. But scholars and poets like A.R.Venkatachalapathy and Sukumaran going gaga over Gopalakrishna Gandhi’s translation of Thirukkural into English is something one can’t understand why. Gandhi recited a few of his translated kurals on stage today which left one wonder what is so extraordinary about them.

பரந்து கெடுக உலகு இயற்றியான் – let God wander cursed – Does this convey the meaning of பரந்து கெடுக?

Gopal Gandhi says Kural is like a telegram and within a 7 words structure, Valluvar has packed so much information in each kural paa. GG has sort of attempted to translate Kural into English, adopting the 7 word framework as in Tamil.

At least two generations of Tamils blissfully unaware of the technology of 19th century like telegraph now exist and the telegram metaphor cannot provide an instant connect with them being outdated. Tweet may be the new form that could engage the GenNext ensuring Kural glides efforlessly into the next century and it provides the ability to come out with brilliant transcreation 140 letters in length, per kural paa.

Setting Thirukural to (carnatic) is also not happening for the first time in history, now. 30 years ago a similar venture to release a series of discs commenced with much fanfare – a disc each for a chapter of 10 kural paas. The singer was Sirkazhi Govindarajan and the ambitious initiative petered out after singing full thorat, the first few chapters. ‪#‎TheHindu_Literary_Festival‬
—————————————————————————————————————————

Sanjay &Raghu Rai interaction superb…& painter Gulam Mohamed Sheik’s. Enchanting paintings.. Devadutt Pattanaik has lot of fans ‪#‎LitFest‬

————————————————

Question : Like bringing out national integration through sports, can’t it be ushered through carnatic music?

Response: Do you suggest getting 11 vocalists perform together on the stage?

Sanjay Subramanian – Audience interaction yesterday ‪#‎TheHindu‬ Literary Festival
———————————————————————–

Erotica created in English gets centre stage in the annual literary festival; its country cousin in Tamil gets the beep