New novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 15 இரா.முருகன்

மூன்று மாதத்தில் பம்பாய் மாறியதோ என்னமோ, கட்சியின் தலைமைக் காரியாலயம் ஏகத்துக்கு மாறி இருந்தது. வரப் போகும் மாநகராட்சித் தேர்தலில் கட்சி பெரும் வெற்றி அடையும் என்று பரவலாக, எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் கூட எதிர்பார்க்கப் படுவதாலோ என்னமோ அங்கே தாதர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் போலப் பரப்ரப்பான சூழ்நிலை.

திலீப் உள்ளே நுழைந்த போது காக்கிச் சட்டைக் காவலன் குறுக்கே விழுந்து தடுத்து நிறுத்தினான்.

ஜா நை சக்தா. பாஸ் திகாவ் நை தோ. ஹடாவ்

போடா நாயே பாஸ் இடுப்பிலே தொங்குது. அவுத்துக் காட்டறேன். நாத்த பிருஷ்டத்தை ஓரமா நகர்த்துடா பொணமே என்று அந்த நேபாளிக்குப் புரியாத தமிழில் சொல்ல ஆரம்பித்து, அவசரமாக நிறுத்திக் கொண்டான் திலீப்.

இங்கே தமிழில் பேசுவது அனர்த்தம். இந்தத் தடியனின் அரைகுறை இந்தி கூட வரவேற்கப்படுவதில்லை. மராத்தி, அது மட்டுமே செல்லுபடியாகிற நிலம் இது. நாளை மாநிலம் முழுக்க அப்படியே ஆகலாம்.

அதை விடப் பயங்கரம், இந்த வாசல் காக்கும் சேவகன், அகல்யா மாதிரி, திலீப் மாதிரி சரளமான வடக்கத்தியான் வேடம் கட்டிய உள்ளூர் பிரகிருதியாக இருக்கக் கூடும். அவனுக்கும் தமிழ் புரியுமாக இருக்கலாம்.

புரிந்தாலும் திருடனுக்குத் தேள் கொட்டிய அவஸ்தை தான் அவனுக்குக் கிடைக்கும். வசவையும் சாபத்தையும் வெளியே சொல்ல மாட்டான். உனக்கு எப்படி மதராஸி பாஷை தெரியும் என்று கொக்கிப் பிடி போட்டுக் கொட்டையை நெரிப்பார்கள். அவனுக்கு வேண்டிய உபசாரம் தான் அது.

ஆனால், ஏன் காவல்காரனின் விரோதத்தைச் சம்பாதித்து, கட்சி எலக்‌ஷன் டிக்கெட்டை யாசிக்க உள்ளே கடந்து போக வேண்டும்?

திரை விலகி உள்ளே இருந்து அதிகாரத் தோரணையோடு பேசிக் கொண்டு யாரோ வந்தார்கள். திலீப் நம்ப முடியாத ஆச்சரியத்தோடு பார்த்தான்.

கணபதி மோதக்.

மூணு மாசத்தில் மாற்றமாக, அவன் கட்சி ஆபீசில் கொஞ்சம் போல் முக்கியஸ்தனாக ஆகி இருந்ததாக அவன் பார்வையில் தெரிய வந்தது.

அட, மோதகமே, மதராசி ஹோட்டலை முற்றுகையிட்டு சாம்பார் வடை கவர்ந்து போய்ப் பெண்டாட்டிக்குச் சமர்ப்பிக்கத் தூக்குப் பாத்திரத்தோடு நீ வந்தது எந்த ஜன்மத்தில்? இன்னும் அந்த மாதிரிக் கைங்கர்யம் செய்கிறாயா?

என்ன பண்றே?

மோதக் ஆச்சரியப்பட்டு நின்றான். கூட நிற்கிறவர்கள் அவன் மேல் வைத்த ம்ரியாதையைக் குறைக்கிற நக்னமான கேள்வி.

திலீப் மோரே. மூன்று மாதம் முன்னால் திலீப் அண்ணா. இப்போது அவனுக்கு இங்கே செல்வாக்கு இல்லை. எதற்கு வந்து நிற்கிறான் என்று ஏளனமாகப் பார்த்தான்.

என்ன திலீப், ஆள் அடையாளமே காணோம். மெட்றாஸ்லே கட்சி பிராஞ்ச் ஆரம்பிச்சுட்டியா?

மோதக் அதிகாரியாக நின்று கேட்க திலீப் தலைக்குக் கோபம் ஏறியது.

சாம்பார் குடிக்கப் பாத்திரத்தோடு அலைந்த பயல், அண்ணா, அண்ணா என்று ஏங்கி, மூஞ்சூறு போல கெட்ட வாடையோடு நின்று முறையிடுகிறவன் இப்போது பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறான். செருப்பாலே அடி தேவடியாப் பையனை. இவனை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்.

என்னடா மோதக்கே, உன் பெண்டாட்டி சாம்பார் செய்யக் கத்துக்கிட்டாளா இல்லே நீயே ஆக்கி வச்சுப் போடறியா? தூக்குப் பாத்திரம் அதே தானே இல்லே இன்னும் பெரிசா வாங்கி வச்சுக்கிட்டியா? சாம்பார் குடிச்சுக் குடிச்சு சாலா மதராஸி ஆயிடுவே. பின்னாலே பிடுங்கிக்கும். ஜாக்கிரதை.

ஓங்கி அடித்ததும் நடுநடுங்கி, புட்டத்தில் வால் பதுக்கிய நாயானான் மோதக். அவனுக்கே நாலு பேர் பின்னால் சுற்ற இருந்தால் திலீப்புக்கு எத்தனை பேர் இருப்பார்கள் மூன்று மாதம் வெளியில் போயிருந்து விட்டு வந்தால் என்ன, திலீப் அடையாளம் இல்லாத வெற்று ஆளாகப் போய் விடுவானா என்ன?

அடடே திலீப் அண்ணா சும்மா தலைவர் குரல்லே பேசிப் பார்த்தேன்.

அவன் ஜரூராகப் பின்வாங்கிப் பணிய அதை அங்கீகரித்தபடி உள்ளே நடந்தான் திலீப். செக்யூரிட்டி சேவகன் ஒரு வார்த்தை சொல்லவில்லை.

முதல் அறையைக் கடக்கும் போதே அவனைப் பெயர் சொல்லி யாரோ அழைக்கிற சத்தம். உள்ளே இருந்து வேகமாக வந்து அவன் கையை அன்போடு பற்றிக் கொண்டார் மிட்டாய் ஸ்டால் பாலகிருஷ்ண கதம்.

பெங்களூர் போனா திரும்பி வரவே முடியாதும்பா என் மகள். நீ அங்கே போய் ஒரேயடியா செட்டில் ஆயிட்டே போலே. உடம்பெல்லாம் தகதகன்னு சிவாஜி மகாராஜ் மாதிரி மின்னுது. நல்லா இருக்கே தானே?

கதம் ஜி, நான் கேரளம் போயிருந்தேன். பெங்களூரிலே இருந்து கிட்டத்தட்ட ஐநூறு கிலோமீட்டர் தூரம்.

அப்படியா, ஏதோ போ. நல்ல வேளை சரியான நேரத்துக்கு வந்தே. லிஸ்ட் முடிக்கற நேரம்.

கதம் முகத்தில் அலாதி மகிழ்ச்சியைக் கண்டான் திலீப். ஆக, மிட்டாய்க்கடை கவுன்சிலர் தான் திலீப் வார்டுக்கு இனி வாய்க்கப் போகிறதாக்கும்.

ஏய், நான் கவுன்சில் எலக்‌ஷன் நிக்கலே. இன்னும் ஒரு வருஷ்த்துலே அசம்பிளி எலக்‌ஷன் வருதே. நேரே எம்.எல்.ஏ தான். என் வயசுக்கு கார்ப்பரேஷன் ஆபீசுக்குள்ளே குஸ்திச் சண்டை, தள்ளு முள்ளுன்னு தரையிலே கட்டிப் பிடித்து உருண்டு உதச்சு மெனக்கெட முடியாது.

ரொம்பப் பெருந்தன்மையாக அறிவித்தார் கதம். அவர் இல்லாவிட்டால்?

உன் பெயர் லிஸ்ட்லே இருக்கு. நம்ம வார்டுக்கு மூணு பேர் உண்டு.. உன்னைத் தவிர, ஸ்கூல் டீச்சர் ரகுநாத் காலே அப்புறம் ஒருத்தர்.

யார் நம்ம கணபத் மோதக் தானே?

அவனா, சோம்பேறி. பொறுக்கி மேஞ்சு சுத்திட்டிருப்பான். என் கடையிலே வேலை போட்டுக் கொடுத்தேன். பிடிப் பிடியா புஜியாவைத் தின்னு ரெண்டே நாள்லே நாலு கிலோ காயப். உடனே ஓட்டி விட்டுட்டேன் பன்னியை.

அவர் சிரித்தார். ஆனாலும் கவுன்சிலர் தேர்தலுக்கு வார்டில் டிக்கெட் கேட்கும் இன்னொருத்தர் யாரென்று சொல்லவில்லை.

உள்ளே போய் நமஸ்தே சொல்லிட்டு வரலாமா? ஏன் வரல்லேன்னு அப்புறம் திட்டு கிடைக்கும்.

திலீப் கேட்டான். அங்கே யார் இருப்பார்கள் என்று அவனுக்குத் தெரியாது. என்றாலும் பாலகிருஷ்ண கதம் அவனுக்கும் இங்கே ஒரு பிடிமானம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எல்லாக் கிரகமும் கூடி வந்து இவனுக்கும் கவுன்சிலர் பதவி கிடைத்து அவரும் எம்.எல்.ஏவோ மினிஸ்டரோ ஆனால், திலீப் மோரே என்ற பின்னணியில் ஆள் பலம், தலைமை ஆதரவு உள்ள கவுன்சிலர் அவருக்கு வலது கையாகச் சதா செயல் படுவான் என்பதை உணர வேண்டும்.

உள்ளே சின்னவர் தான் இருக்கார். போய் உடனே வந்துடு. பெரிய கூட்டம் காத்து நிக்குது உள்ளே போகறதுக்காக. மூட் வேறே சரியில்லே தலைமைக்கு. கட்சி ஆரம்பிச்சு வர்ற முதல் எலக்‌ஷன். அதான்.

கதம் காதில் சொல்லி அனுப்பி வைத்தார்.

கையில் கதம் கடையில் வாங்காத புத்தம்புது தூத்பேடாவோ, சரிகை மாலையோ கொண்டு வந்திருக்கலாம். மடுங்கா சங்கர மடம் வாசல் பூக்கடையில் ஜம்மென்று மல்லிகைப்பூ மாலை கூடப் புதிதாகக் கட்டியது கிடைக்கிறது. ஈரத்தோடு கொண்டு வந்து கழுத்தில் போட்டால் தெருவே மணக்கும்.

வேண்டாம். மதராஸித் தனத்தைக் கொஞ்சம் போலக் கூட வெளிப்படுத்தும் எந்த அடையாளத்தையும் இங்கே சுமந்து போகக் கூடாது. சரிகை மாலையும், வாசனை இல்லாத பூ நிறைய இடைவெளி விட்டுக் கட்டிய, நிற்கிற, நடக்கிற, மூச்சடங்கிக் கிடக்கிற யாருக்கும் பேதாபேதம் இல்லாமல் சூட்டி மகிழ்கிற உள்ளூர் ஆசாரத்துக்குப் பொருந்திய் துலுக்கஜவந்திப் பூமாலையும் எதேஷ்டமாகக் கிடைக்கும். அதில் ஒண்ணு ரெண்டாவது.

சீக்கிரம் வந்துடுங்க. இன்னும் பத்து நிமிஷத்துலே சித்திவினாயக் கோவில் போயிட்டிருக்கார் சின்னவர். மகனுக்குப் பிறந்த நாள்.

யாரோ சொல்லியபடி அவனை முன்னால் செலுத்தினார்கள்.

மாலை கொண்டு வராததற்காகத் தன்னையே சபித்துக் கொண்டாலும் கதவில் முட்டுகிறது போல் உள்ளே போனபோது திலீப் முகத்தில் மிகப் பெரிய சிரிப்பு ஒன்று ஒட்டி இருந்தது.

கதவு பக்கம் போட்டு வைத்திருந்த ஸ்டீல் மேஜையில் காகிதங்களைப் பரத்திக் கொண்டு அகல்யா உட்கார்ந்திருந்தாள். இவனைப் பார்த்ததும் மராத்தியில் கேட்டாள்

என்ன தேவ் ஆனந்த், லோக்சபா எலக்‌ஷனுக்கு சீட்டா? போய்ட்டு அடுத்த வருஷம் வாங்க.

அவள் டென்ஷன் எதுவும் இல்லாமல் வேலையில் இருப்பதை அனுபவித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க திலீப்புக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் அவளுக்குப் பின்னால் நாலு கட்சி முக்கியஸ்தர்கள் நிற்க, அறையின் அந்தக் கோடியில் சின்னவர் மட்டுமில்லை, பைப் புகைத்தபடி பெரியவரும் நின்று கொண்டிருந்தார்.

‘நம்ம கோட்டையிலே இப்போ மதராஸிக் கொடி தான் பறக்குது’

பெரியவர் சொல்ல, மற்றவர்கள் என்ன மாதிரி எதிர்வினை செய்வது என்று புரியாமல் நின்றார்கள். சின்னவர் ஆரம்பித்து வைக்க ஒரு பெரிய சிரிப்பு அறை முழுக்கச் சூழ்ந்தது. பைப்பை விலக்கிப் பிடித்தபடி பெரியவரும் புன்னகைத்தார்.

மாநகராட்சித் தேர்தலுக்கு வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் காரியத்தின் இறுக்கம் சற்றும் இல்லாத அந்தச் சூழலைத் திலீப் சந்தேகத்தோடு எதிர்கொண்டான்.

இது அவனுக்காக நடத்தப்படுகிற நாடகமா? அகல்யாவும் நடிக்கிறாளா? அவளை அவர்கள் விலைக்கு வாங்கி இருப்பார்களோ? எதைக் கொடுத்து?

உங்க தகப்பனார் காணாமல் போனது பற்றி மனப் பூர்வமா வருந்தறேன் தம்பி. ரொம்ப படிச்ச மார்க்சிஸ்ட்னு சொன்னாங்க. என் நண்பர்கள் எல்லோரும் மார்க்சிஸ்ட் தான். நான் மட்டும் பத்திரிகைக்குப் போகாட்ட, தாடி வளர்த்துட்டு, ரணதிவே, ரங்கனேக்கர் பின்னாடி தான் செங்கொடி பிடிச்சுட்டு சுத்திட்டு இருப்பேன். உங்கப்பாவை பரிசயம் ஆகியிருக்கும்னு மனசு சொல்லுது. ஆனா, அவர் இல்லையே, நான் சொல்றதைக் கேட்டு ஆமா, இல்லேன்னு சொல்ல.

பெரியவர் பேசி நிறுத்த, மற்றவர்கள் மௌனமாக அவனையே பார்த்தார்கள். அகல்யா ஒரு காகிதத்தை சின்னவரிடம் மரியாதையோடு கொடுத்தாள்.

வேட்பாளர் மனு. போன மாசமே கொடுத்திருக்கார்.

அவள் சொல்லும்போது திலீப்பைப் பார்த்து அழகாகச் சிரித்தாள். கூப்சூரத் மத்ராசி சோக்ரி. அவளே திலீப் சார்பில் தயாரித்து அவன் கையெழுத்தையும் அவன் ஒப்புதலோடு ஆபத்துக்குப் பாவமில்லை என்று போட்டு வைத்திருக்கிறாள்.

திலீப்புக்கு அவளை மேஜை கடந்து போய்க் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. பெரியவர் சம்மதிக்காவிட்டாலும் சின்னவர் கோபப்பட்டாலும் பரிவார தேவதைகள் முகம் சுளித்தாலும் அவளை உதட்டிலும் முகவாயிலும் முத்தமிட வேண்டும்.

இந்தக் காதல் சாஸ்வதமானது என்று முகம்மது ரஃபி குரலில் சோகம் இழையோடப் பாடுகிறவனாகத் தன்னைக் கற்பித்துக் கொண்டான். அப்பா ரசித்த அதிபயங்கர அழுகை ராகமான சிவரஞ்சனியிலோ அல்லது அதன் தாயாதி, பங்காளி ராகமான நீலமணியிலோ, விஜயநாகரியிலோ பாடுகிறவன்.

சின்னவர் கையில் வாங்கிய வேட்பு மனுவைப் படித்துக் கூடப் பார்க்காமல் பெரியவரிடம் கொடுத்தார். அடர்ந்த ஹவானா புகையிலை மூக்கில் குத்தும் கறாரான வாடையோடு புகைக்கும் குழாய் வெடித்துச் சிரித்ததுபோல் மேகத் தொகுதியாகச் சாம்பல் நிறப் புகையை வெளியேற்ற, பெரியவர் கண்ணாடி அணியாத கண்ணைச் சிறுத்து சில வினாடிகளில் அந்த மனுவைப் படித்து முடித்து விட்டார்.

திலீப் ஆவலாக அவர் என்ன சொல்லப் போகிறார் என்று காத்திருக்க, பெரியவர் அவன் பக்கம் கூடத் திரும்பவில்லை. அவர் பைப்பை ஜன்னல் மாடத்தில் வைத்து விட்டு, நேரே அகல்யாவின் நாற்காலிக்கு அருகே வந்தார்.

அக்ல்யா தாய்

அகல்யா எழுந்து நின்று கை கூப்பினாள். சிரிப்பு குமிழிட்டு வரச் சொன்னாள் –

சார், நான் உங்க பொண்ணு வயசு. தாய்ன்னு கூப்பிட்டா எங்க அம்மாவைக் கூப்பிடற மாதிரி இருக்கு.

அவர் வாஞ்சையோடு அவளை நோக்கினார்.

நீ என் அம்மாவுக்கே அம்மா என் மகளுக்கு மகள், குழந்தே. மதராஸி ஆனா என்ன, மராட்டி ஆனா என்ன? பெண்ணை மதிக்கற சமூகம் ரெண்டுமே.

பரிசு வாங்குவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஏதோ திரைப்படத்தில், கிளைமாக்ஸுக்கு முந்திய காட்சியைச் சாம்பிராணிப் புகைக்கு நடுவே இருந்து பார்ப்பது போல் கண்ணைக் கட்டியது திலீப்புக்கு. திரையரங்கில் கதவு திறந்து சாதரோடு நுழைந்த முதிய முகம்மதியர், உனக்குத தான் வெற்றி என்று சொல்லியபடி நகர்ந்தார்.

பெரியவர் திலீப்பைக் கூர்ந்து பார்த்தார் –

அகல்யாம்மா, உன் சிநேகிதன் விவரம் எல்லாம் ஓகே. அவர் முழு மதராஸின்னாலும் பிரச்சனை இல்லே. மாடுங்காவிலேயோ, முலுண்ட்லேயோ நிக்க வச்சுடுவேன். இல்லேன்னா கல்யாண் முனிசிபாலிடி எலக்‌ஷன் ஏப்ரல்லே இருக்கு. மதராஸின்னாத்தான் ஓட்டு விழும் அங்கே. நிச்சயம் ஜெயிப்பார்.

அகல்யா சட்டென்று குனிந்து அவர் பாதத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள, திலீப்பும் அப்படியே செய்தான். அவனுக்கும் அகல்யாவுக்கும் கல்யாணம் முடிந்து அவர் ஆசியைப் பெறுவதுபோல் இருந்தது. திலீப்புக்கு.

ஜீத்தே ரஹோ.

வாழ்த்திய பெரியவர் மெதுவான குரலில் தொடர்ந்தார்.

மற்ற கட்சி எல்லாம் பெரிசு. ரொம்பவே பெரிசு. ஒவ்வொரு கேண்டிடேட்டுக்கும் கட்சி நிதி எலக்‌ஷனுக்கு செலவழிக்கக் கிடைக்கும். இங்கே பணம் இல்லே. நீங்க் தான் தரணும். நன்கொடை இல்லே. பேங்குலே டிபாசிட் மாதிரி. தேர்தல் வேலைக்கும், கட்சியில் பொதுவாக தேர்தல் நிதியாகவும் ஒரு தொகை ஒவ்வொரு வேட்பாளர் கிட்டேயும் வாங்கிக்கறோம். அப்புறம் பத்து வருஷத்துலே நிதி நிலைமை சீரானதும் நிச்சயம் திருப்பிக் கொடுத்திடுவோம். நான் இற்ந்து போனாலும், இவங்க எல்லாம்.

அவர் சின்னவரையும் மற்றவர்களையும் சுண்டிக் கைகாட்டி ஜன்னல் மாடத்தில் இருந்து புகைக் குழாயை எடுத்துக் கொள்ள, எல்லோரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து, முறையிட்டார்கள் –

நீங்க நூறு வயசு இருப்பீங்க. இது என்ன பேச்சு.

திலீப்பும் மனப் பூர்வமாக அவர்களோடு சேர்ந்து கொண்டான். அவனுடைய அப்பா, அவனுக்காக எதுவும் செய்யாவிட்டாலும், எங்கே போனார் என்று தெரியாவிட்டாலும், அவரும் நூறு வருஷம் சௌக்கியமாக இருக்கட்டும்.

திலீப் தீர்மானத்தோடு சொன்னான் –

நான் எப்படியும் ஒரு லட்ச ரூபாய் அடைக்கப் பார்க்கறேன்.

நல்லது,

அவர் புன்னகையோடு கதவைத் திறந்து பைப் புகைத்தபடி வெளியே போக, அறைக்குள் சுற்றி வந்த புகை கலையும் வரை ஏதும் பேசாமல் மற்றவர்கள் நின்றார்கள்.

திலீப் வெளியே போகும் போது அகல்யா சொன்னாள் –

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நானும் வரேன். அரை நாள் லீவு சொல்லியிருக்கேன்

அவள் தமிழில் பேசியதை யாரும் கவனித்ததாகத் திலீப்புக்குத் தெரியவில்லை.

(தொடரும்)

.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன