Monthly Archives: February 28, 2014, 10:33 am

ராத்திரி வண்டி – பகுதி 3

ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 3

தேசிகர் ஒடுக்கத்தில் இருக்கிறார். வெளியே ஓதுவார்கள் சத்தம் போட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இது வழக்கமான தேவாரப் பண் இல்லை. இங்கிலீஷ் மோஸ்தரில் கட்டிய பாட்டு…

’துங்கஞ்சார் தருதுரைசை யில்வளர் சுப்பிரமணிய தயாநிதியே…’

அலையில் மிதக்கிற படகுபோல, பெங்குவின் பறவைகள் கூட்டமாக அடியெடுத்து வைக்கிறது போல், தோய்த்து உலர்த்திய காவித் துணிகள் காற்றில் பறந்து அலைக்கழிவது போல… காதிலே ஜவ்வந்திப் பூ வைத்து, கூரை வேய்ந்த மண்டபம் அதிரக் குதித்துக் குதித்து ஆடுகிறார்கள். ராமச்சந்திரன் காதில் பென்சிலைச் செருகிக் கொண்டு குற்றாலம் போக நேரமாகிவிட்டது என்று யாரிடமோ சொல்கிறான். ‘ஸ்டேஷன் மாஸ்டர் டீ போட்டு எடுத்து வரட்டும்.. சாப்பிட்டு விட்டுப் போகலாம்..’ என்கிரார் அவர். எல்லோரும் வெளியே வருகிறார்கள், முதலில் தேசிகர், அப்புறம் மகாவித்துவான். இன்னும் பாட்டை நிறுத்தாமலேயே ஓதுவார்கள். ராமச்சந்திரன் கடைசியில் கையில் ‘என் சரித்திர’த்தை இடுக்கிக் கொண்டு வருகிறான்…

ராமச்சந்திரன் கண்ணை மெல்லத் திறந்து பார்த்தான். ஸ்டேஷன் மாஸ்டர் வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது.

‘ஒய்ஃப் அம்மா வீட்டுக்குப் போயிருக்காங்க.’

ஸ்டேஷன் மாஸ்டர் டீ போட்டு எடுத்து வந்தான்.

‘குளிச்சிட்டுக் கிளம்பினா, ஒரு கால் அவர்லே டவுனுக்குப் போயிடலாம். ஜட்கா வண்டி இருக்கு. அங்கே ஓட்டல்லே சாப்பிட்டு, மண்டபம் போற பஸ்ஸைப் பிடிச்சா சாயந்திரத்துக்குள்ளே ராமேஸ்வரம் போய்ச் சேர்ந்துடலாம்..’

ராமேஸ்வரத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று இந்த ஸ்டேஷன் மாஸ்டர் தன்னைப் போகச் சொல்கிறான் என்று புரியவில்லை. அரசாங்கக் கட்டடத்தில் படம் வரைந்தது குற்றமென்று நேற்று ராத்திரி அவசரச் சட்டம் ஏதும் பிறப்பிக்கப்பட்டு, யாராவது பிடிவாரண்டோடு வருகிறார்களோ என்னமோ.

‘டீ குடியுங்க’

ஸ்டேஷன் மாஸ்டர் மேஜைப் பக்கம் கை காட்டினான்.

‘இன்னிக்குப் பால்காரன் வரலை. பால்பொடியிலே தான் போட்டேன். ஏதோ ஒண்ணு.. சூடா இருக்கணும்.. அவ்வளவுதான்..’

‘ஆமா, சூடா இல்லாட்ட வெளிக்குப் போக முடியாது’

ராமச்சந்திரன் சுபாவமாகப் பதில் சொல்லி விட்டு ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்த்து சிநேகிதமாகச் சிரித்தான். சகஜமான உரையாடலுக்கு இது போதாதோ என்னமோ. கொஞ்சம் யோசித்து விட்டுச் சொன்னான் -

‘வடக்கே எல்லாம் டீத்தூளையும் பாலோட சேர்த்துக் கொதிக்க வச்சுத்தான் டீ தயார் பண்ணுவாங்க’.

’நல்லா இருக்குமா என்ன அது?’

ஸ்டேஷன் மாஸ்டர் கவலையோடு கேட்டான்.

‘நான் வாரணாசியிலே இருந்தபோது அப்படிக் குடிச்சே பழகிடுத்து’

‘வாரணாசின்னா காசிதானே? பெரிய கோயிலெல்லாம் இருக்கு இல்லே?’

‘நான் அங்கே மசான கட்டத்தைத் தான் வரஞ்சுக்கிட்டிருந்தேன். எரிச்சு எரிச்சு கங்கையிலே விடுவாங்க. படிக்கட்டு எல்லாம் சாவு பூசிக்கிட்டு எப்பவும் வைராக்கியத்தோட கிடக்கும்’.

‘பார்க்க எப்படியோ இருக்குமே..’

‘நல்லா இருக்கும். புகையும் நெருப்பும் அழகுதானே.. ஏகப்பட்ட படிக்கட்டுக்கு நடுவே தண்ணியிலே நானே எரிஞ்சுக்கிட்டே மிதக்கறதா வரஞ்சேன்..’

‘இதிலே இருக்கா?’

ஸ்டேஷன் மாஸ்டர் ஹோல்டாலைக் காட்டிக் கேட்டான்.

‘இல்லை. சப்பாத்திக்கு காசு இல்லேன்னு கடைக்காரன் கிட்டே கொடுத்திட்டேன். அவன் அது பைசா பெறாதுன்னு சொன்னான். அவன் அப்பா படம் வரைஞ்சு தரச் சொல்லி போட்டோ கொண்டு வந்து கொடுத்தான். நான் தனியா எரிவானேன்னு அவன் அப்பாவும் கூடச் சேர்ந்து எரியறதா போட்டுக் கொடுத்தேன்..’

ஸ்டேஷன் மாஸ்டர் ஏன் இத்தனை ஆச்சரியமாகப் பார்க்கிறான் என்று தெரியவில்லை. சுபாவமாகக் கூட தன்னால் பேச முடியவில்லை என்று வருத்தமாக இருந்தது.

‘குளிக்கிறீங்களா? சீக்கிரமா கிளம்பினா மத்தியான சாப்பாட்டுக்கு மண்டபம் போயிடலாம்’

சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல், காட்டிய திசையில் நடந்தான். பின்னால் குரல் வந்தது -

‘துண்டு எடுத்துக்குங்க’.

ஹோல்டாலில் இருந்து ஒரு கட்டு காகிதத்தை உருவிக் கீழெ போட்டான்.

‘ஸ்கெட்ச். கான்வாஸிலே எல்லாம் போடணும். காசுதான் இல்லே.. அது கிடக்கு… பல்பொடி இருக்கா…உமிக்கரி கூட போதும்..’

‘பாத்ரூமிலே பயோரியா பல்பொடி டப்பா இருக்கு..துண்டு வேணுமா..’

அவன் நாக்கைத் துருத்தினான்.

‘எங்கிட்டே குற்றாலத் துண்டு இருக்கு.. போதும்..’

ஹோல்டாலில் இருந்து பழைய துண்டை எடுத்துப் போட்டான். தேசலாக ஒரு சோப்புத் துண்டும் உள்ளே இருந்து விழுந்தது.

‘நீங்க நல்லா டீ உண்டாக்கியிருந்தீங்க.. தாங்க்ஸ்’

‘பாத்ரூம் மக் வெளியிலே இருக்கு. அந்தப் பக்கம் டாய்லெட்’.

‘ரொம்ப தாங்க்ஸ். நீங்க சரவணன் மாதிரி ஹெல்ப் பண்றீங்க’.

‘யாரு அது?’

‘ஆர்ட் காலேஜ்லே சீனியர். பானர் வரையறான் இப்ப’

‘பாத்ரூமிலே கதவு சரியாச் சாத்தாது. கொஞ்சம் அறைஞ்சு சாத்தணும்’.

குவளை குவளையாகத் தண்ணீரை எடுத்து விட்டுக் கொண்டபோது அவன் குற்றாலத்தில் இருந்தான்.

சந்தோஷமாகப் பாடுகிற, அவ்வப்போது பயம் கொள்ள வைக்கிற, கூகூ என்று கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்யும்படி உற்சாகம் பீறிடச் செய்கிற, அரையில் சிறுநீர் பிரியப் பிரியத் தலைமேல் குளிர்ந்த தாரையாகக் கும்மாளம் போட்டு இறங்குகிற, சுற்றிலும் சின்னச் சின்னத் திவலைகளை வீசி, கண்ணுக்கு முன் நீர்க் கண்ணாடி வழியே எதிரே இருக்கிற மலைகள் எல்லாம் குவி ஆடியில் பார்க்கிறது போல எல்லா விகிதமும் மாற்றிக் காண்பிக்கிற் அருவி. ராமச்சந்திரன் குளித்து விட்டு வருகிறான். பென்னிங்க்டன் துரை அரையில் லங்கோட்டோடு குளிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார். பின்னால் டிபுடி தாசில்தார் அய்யங்கார், பெருமாளை எழுந்தருளப் பண்ணி நடந்து வருகிறது போல், குடையைப் பொத்தாம் பொதுவாகப் பிடித்துக் கொண்டு பவ்யமாக வருகிறார். யாரோ ராமச்சந்திரன் கையில் காகிதத்தைத் திணிக்கிறார்கள்.

‘பார்த்துப் பாடு’

’பென்னிங்டன் துரையே நின்னைக்
குற்றாலந் தனில்கண்ட குதூகலம் இங்கெவராலும்
கூற ஒண்ணாதே..’

குரல் உச்சஸ்தாயியில் போகும்போது தலையிலிருந்து வழிந்த தண்ணீர் தொண்டையில் இறங்குகிறது.

துரை தடுமாறுகிற தமிழில், ‘நீர் இன்று ஒரு ராத்திரி இங்கே தங்க வேண்டியிருக்கும். குட்ஸ் தரம் புரண்டு ரயில் ஓடாது. சும்மா இருக்கிற நேரத்தில் நன்றாகப் பாடிப் பழகிக் கொள்ளும். ஓதுவார்கள் இங்கிலீஷ் டியூன் சொல்லித் தருவார்கள்’ என்கிறார்.

மூக்கில் தண்ணீர் ஏற, ராமச்சந்திரன் இருமிக் கொண்டு வெளியே வந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டர் அவன் ஹோல்டாலிலிருந்து எடுத்துப் போட்ட படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.

(தொடரும்)

’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, ஜுன் 1992-ல் பிரசுரமானது. அட்சரா பதிப்பகம் வெளியிட்ட என் முதல் குறுநாவல் தொகுப்பான ‘தகவல்காரர்’ நூலில் இடம் பெற்றது.

மேக சந்தோஷம்

(தி இந்து தமிழ் இதழில் 25.2.2014 இதழில் வெளியானது)

ஆதியில் இனியாக் இருந்தது. 2,000 சதுர அடி இடத்தில் 18,000 மண்டை வால்வுகளை அடுக்கி, இணைத்து உருவாக்கிய கணிப்பொறி அது. 10 இலக்க எண்களை நினைவில் வைத்துக் கூட்டிக் கழித்து, அந்த முதன்மை (மெயின் ஃப்ரேம்) கணிப்பொறி 1940-களில் அமெரிக்க சர்க்கார் கணக்குகளைப் போட்டது.

“இனியாக் போல இன்னும் 10 முதன்மைக் கணிப்பொறிகள் போதும், உலகக் கணக்கு வழக்குகளை யெல்லாம் போட்டுவிடலாம்” என்ற அறிவியல் ஆரூடம் பொய்யானது 1980-களில். மேசைக் கணிப்பொறிகள் கோடிக் கணக்கில் பெருகி வீட்டு முன்னறை, பலசரக்குக் கடை, மருத்துவமனை, ரயில் நிலையம் என்று எங்கும் நிறைந்தன.

பேரேட்டிலிருந்து கணிப்பொறிக்கு…

எல்லாத் துறைகளையும்போல் வங்கித் துறையும் கம்ப்யூட்டர்களை இருகரம் நீட்டி வரவேற்க, வங்கிக் கிளையில் தூசி பரத்திய பேரேடுகள் காணாமல் போயின. சேமிப்புக் கணக்கு நடவடிக்கைகளுக்கு மென்பொருள் எழுதி இயக்க ஒரு கணிப்பொறி, வர்த்தகர்களின் நடப்புக் கணக்குக்கு இன்னொன்று, ஆறு மாதம், ஒரு வருடம் நிலையாகப் பணம் போட்டு வைக்கும் நிரந்தர வைப்புத்தொகைக்கு வேறு ஒன்று என்றானது.

ஒரு சிறிய சிக்கல். வங்கிக் கிளையில் பக்கத்தில் பக்கத்தில் இருந்தாலும் இந்த கணிப்பொறிகள் ‘பேசிக் கொள்வது’ கிடையாது. 5,000 ரூபாய் சேமிப்புக் கணக் கில் இருந்து எடுத்து, நிரந்தர வைப்புத்தொகையில் போட வேண்டும் என்றால், இரண்டு கணிப்பொறிகளிலும் தனித்தனியாகத் தகவல் பதிந்து, நாள் முடிவில் மொத்தக் கணக்கு விவரத்தையும் பேரேட்டில் தனியாக எழுத வேண்டும்.

கிளையன்ட் சர்வர்

ஒரே வங்கிக் கிளைக்குள் வெவ்வேறு துறைகளுக்கு வைத்திருக்கும் கணிப்பொறிகள் தொடர்புகொண்டு, தகவல் பரிமாறிக்கொள்ள முடியுமா என்று 1990-ல் வெகுவான எதிர்பார்ப்பு எழுந்தபோது, தொழில்நுட்பம் ‘கிளையன்ட் சர்வர்’ அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியது. சற்றே பெரிய ஒரு கணிப்பொறியில் (சர்வர்) சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, நிரந்தர வைப்புத்தொகை, கடன் வழங்குதல் என்று எல்லா முக்கிய வேலைகளையும் செய்யும் மென்பொருள் இருக்க, கவுன்ட்டரில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய கணிப்பொறிகள் குறைந்தபட்ச விவரங்களை மட்டும் பதிவுசெய்துகொண்டு, சர்வரோடு தொடர்புகொண்டு பற்றுவரவை வெற்றிகரமாக முடிக்கும்.

கிளயன்ட் சர்வர் கணிப்பொறி அமைப்பு நடைமுறைக்கு வந்தபோது, அதற்கு முன் உபயோகத்தில் இருந்த கணிப் பொறிகளை மென்பொருளோடு அகற்றிவிட்டு, புது மென்பொருள், புத்தம்புது வன்பொருள் என்று வங்கிக் கிளைகள்தோறும் நிரப்ப வேண்டியதானது. செலவுக் கணக்கு என்பதால், வங்கியின் லாபத்திலும் பாதிப்பு.

வங்கி மையம்

21-ம் நூற்றாண்டில், வங்கித் துறை வளரும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், கிளையன்ட் சர்வர் தொழில்நுட்பமும் விடைபெற, கிளைகளுக்கு இடையே தகவல்தொடர்பு கொண்டு பற்றுவரவு நடத்த வேண்டிய காலத்தின் கட்டாயம். வங்கி மையம் (கோர் பேங்கிங்) என்ற கோட்பாடு, இந்தச் சவாலைச் சமாளிக்க உதவிக்கரம் நீட்டியது. ஒரே வங்கியில், காரைக்குடி கிளையில் சேமிப்புக் கணக்கு இருந்தால், கொல்கத்தா பாலிகஞ்ச் கிளையில் கணக்குப் புத்தகத்தை நீட்டிப் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்பது வங்கி மையத்தின் எளிய விளக்கம். கொஞ்சம் இதையே நீட்டினால், தினசரி பற்றுவரவு முடித்ததும் கிளைகள் தனித்தனியாக மெனக்கெடாமல், ஒரே இடத்தில் அன்றைய கணக்கு வழக்கை முடித்து, அடுத்த நாள் கணக்கை ஆரம்பிக்க வசதி, பணம் வழங்கும் இயந்திரங்கள் (ஏ.டி.எம்.), கைபேசி மூலமாகவும், வீட்டிலிருந்தே இணையம் மூலமும் கணக்கை இயக்க வசதி… இப்படிப் பலவற்றுக்கும் வங்கி மையம் வழிவகுத்தது.

வங்கி மையம் ஏற்படுத்த, பழைய கிளையன்ட் சர்வர் அமைப்பைக் களைந்துவிட்டு, கிளைகளிலும் நிர்வாக அலுவலகங்களிலும் புதிய கணிப்பொறிகள், புது மென்பொருள் தேவையிருந்ததால் வேறு வழியின்றி இந்தக் கொள்முதலுக்குச் செலவுசெய்ய வேண்டிவந்தது. இது ஒரே முறை செய்யப்படும் செலவு இல்லை. வங்கிக் கணக்குகள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, சக்தி வாய்ந்த கணிப்பொறிகள், வேகமான மென்பொருள் என்று பழையன கழிதலும் புதியன புகுதலும் தேவையானது. செய்யாவிட்டால், இன்னொரு வங்கி இதை நடத்திக் காட்டி வெற்றிக் கோட்டை நோக்கி முன்னால் ஓடிவிடும் அபாயம்.

“இனி புதுசு புதுசாகக் கணிப்பொறிகள், மென் பொருள்கள் வாங்கக் காசு செலவு செய்ய முடியாது. தேவைப்பட்டபோது தற்காலிகமாகக் கொஞ்சம் கூடுதல் கணிப்பொறி சேமிப்பிடம், ஒன்றுக்கு நாலாக அவதாரம் எடுத்து இயங்க மென்பொருள், எவ்வளவு பற்றுவரவு வந்தாலும் தாங்கும் தகவல் பரப்பு. இத்தனையும் வேண்டும். இயக்கத்துக்கான செலவு (ஆபரேட்டிவ் எக்ஸ்பென்ஸ்) மட்டும் தரத் தயார்.”

மேகப் புரட்சி

வங்கிகளின் இந்த வேண்டுகோளுக்குத் திரும்பவும் தொழில்நுட்பம் செவிசாய்த்தது. மேகக் கணினித்துவம் (கிளவுடு கம்ப்யூட்டிங்) மூலம் இன்னொரு தகவல் புரட்சி ஏற்பட்டது. மேகம் என்பது இணையத்தைக் குறிக்கும் என்பதைச் சொல்லியாக வேண்டும்.

மேகக் கணினித்துவக் கோட்பாட்டின்படி, கணிப் பொறியோ மென்பொருளோ வாங்க வங்கிகள் செலவு செய்ய வேண்டாம். கணிப்பொறி நிறுவனங்களே அவற்றை அமைத்துத்தரும். இந்த வன்பொருளும் மென்பொருளும் உலகில் எங்கெல்லாமோ இருப்பவை. இணையம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட வலைப் பின்னலில் இவை இணைந்திருக்கும். எளிய கணிப்பொறிகளை நிறுவி, இந்த மேகக்கணினிகளை இணையம் மூலம் பாதுகாப்பாகத் தொடர்புகொண்டு வங்கிக் கிளைகள் தினசரிச் செயல்பாட்டை வெற்றிகரமாக முடிக்கலாம். மேகம் எவ்வளவு பயன்படுத்தப்பட்டதோ அவ்வளவு கட்டணம் செலுத்தினால் போதும்.

மென்பொருளை, தகவல் தளத்தை (டேட்டாபேஸ்), இயங்கவும் தகவல் சேகரித்து வைக்கவுமான கணிப்பொறி வன்பொருளை, இயக்கு மென்பொருளை (ஆபரேடிவ் சிஸ்டம்) எல்லாம் கிரமமாகத் தனிமைப்படுத்தி, எதையும் சாராது விட்டு விலகியிருக்க வைத்து, (வர்ச்சுவலை சேஷன்) அவற்றை இணையத்தின் மூலம் இயக்கிப் பின்னப்படும் மாபெரும் தகவல் வலைதான் கிள்வுட் கம்ப்யூட்டிங்.

“ஐயோ, என் தகவலை நெட்டுலே யாராவது சுட்டுட்டா?”

வங்கிகள் கவலையே படவேண்டாம். வளமையான பொதுவுடமை மேகம் (பப்ளிக் கிளவுடு) போக, பட்டா போட்ட தனியுடமை மேகம் (பிரைவேட் கிளவுடு), கலந்துகட்டியானது (ஹைபிரிட் கிளவுடு) எல்லாம் வந்துவிட்டன. என்ன, செலவு கொஞ்சம் அதிகம்.

மேகக் கணினித்துவத்தை அறிமுகப்படுத்திய கணிப்பொறி நிறுவனங்களின் கான்கிரீட் காட்டில் மேகம் திரண்டு மழை.

- இரா. முருகன், எழுத்தாளர், தொடர்புக்கு: eramurukan@gmail.com

ராத்திரி வண்டி – பகுதி 2

ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 2

’அசிங்கமாப் படம் போட்டிட்டிருக்கார் சார்.. இங்கே கொஞ்சம் வாங்க..’

புக்கிங் கிளார்க் ராமசாமி குரல் முன்னால் வந்தது. அப்புறம் சங்கடமாகச் சிரித்துக் கொண்டே கலாசி கணபதி.

பெஞ்சில் யாரது?

அவன் கொஞ்சம் வித்யாசமாகத் தெரிந்தான். பிடிவாதம் பிடிக்கும் குழந்தையைப் போல் நாக்கைத் துருத்திக்கொண்டு சிமெண்ட் பெஞ்சின் விளிம்பில் தொக்கினாற்போல் உட்கார்ந்திருந்தான். முன்னால் விரித்து வைத்த பலகை. ஒரு முப்பது வயது. அழுக்கு கதர் ஜிப்பா. தலை காடு. பெஞ்ச் பக்கத்தில் ஒரு ஹவாய் செருப்பும் பாதியும்.

சுற்றி இருந்தவர்கள் சும்மா லாந்தி விட்டுப் போக வந்தவர்கள். இப்படியே ஸ்டேஷன் வழியாக நடந்து கொஞ்சம் தள்ளி மதகடியில் குத்த வைத்துவிட்டு, காலைக்கடன் முடித்த தேஜஸோடு திரும்பி உலகை எதிர்கொள்ளப் புறப்பட்டவர்கள்.

‘ஊர் உலகம் கெட்டுப் போச்சுவே.. படத்தைப் பாத்தீரா? நட்ட நடுவிலே அவன் பாட்டுக்கு பலகையை நிறுத்தி வச்சுக்கிட்டு எளுதறான்….துணிக்கடைக்கு இருக்குமோ…கட்டினா எங்க சேலையைக் கட்டு.. இல்லே…இப்படி முண்டக்கட்டையா தரையிலே கால் பாவாம நில்லு..’

அவன் யாரையும் லட்சியம் செய்யாமல் படம் போட்டுக் கொண்டிருந்தான்.

‘கோன் ஹை பாய்?’

இந்திக்காரன் மாதிரி தெரியலியே. நல்ல கறுப்பா இருக்கான் பய.

‘யாருப்பா அது?’

முகத்தை நிமிர்த்தி அவன் பார்த்தான்.

ராசு.. ராசுப்பய இல்லே…?

அதே உயரம்.. மலங்க மலங்க முழிக்கறது.. நாக்கை வேறே துருத்திக்கிட்டு.. ராசு. தம்பி.. ஸ்டேஷன் மாஸ்டர் வேலையிலே சேர ஒரு நாள் இருக்கும்போது காணாமப் போனானே.. அவனே தான்… அவனா?

‘அப்பாவிப் பய.. தம்பிக்கு ஒரு வழி பண்ணுப்பா.. நீ நல்லா இருப்பே.. உன் உத்தியோகம் மேலே மேலே வரும்.. ராசு இங்கே வாடா.. அண்ணன் வேலையிலே சேரப் போறான்.. உடுப்பை இஸ்திரி போட்டு வாங்கிட்டு வாடா.. போய் டீக்கடையிலே உக்கார்ந்திடாதே… அண்ணன் ஊருக்குப் போகணும்..’

அப்பாவிப் பய டீக்கடைக்கார்ன் பொண்டாட்டியோட ஓடியே போனான்.

இங்கே எப்படி வந்தான்? நான் இருக்கறது தெரிஞ்சிருக்குமோ? மூணு வருஷத்துலே படம் போடக் கத்துக்க முடியுமா என்ன? அந்தப் பொம்பளையை வச்சுப் பழகிக்கிட்டானா? ஒரு சாயலுக்கு.. சாயல் என்ன, எப்படிப் பார்த்தாலும் என்னமா இருப்பா…

இல்லே.. இது ராசு இல்லே.. ராசுன்னா எழுந்து வது கட்டிக்க மாட்டானா என்ன? இவன் சிரிக்க மட்டும் சிரிக்கறான்.

’இதோ முடிச்சுட்டேன். ஃபைவ் மினிட்ஸ்.. கொஞ்சம் காயணும்..’

சிநேகமாகச் சொன்னான்.

டீசண்டான ஆள் தான். கேக்கற தோரணையே சொல்றதே.. என்ன தோணினதோ.. இங்கே எறங்கி வரைஞ்சுக்கிட்டிருக்கான்.. திடீர்னு மூடு வந்திருக்கும்.

‘நீங்க எல்லாரும் போங்க.. நான் பாத்துக்கறேன்.. ஆர்ட்டிஸ்ட்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க.. அவங்க கண்ணுலே அசிங்கம் கிடையாது.. மனசும் அப்படித்தான்..’

நமக்குக் கூட இப்படியெல்லாம் பேச வருதே. சொசைட்டி எலக்சனுக்கு நிக்க வேண்டியதுதான்.

சீவகன் பெஞ்ச் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டான். படத்தையும் வரைகிறவனையும் மாறிமாறிப் பார்த்தான்.

ஒரு பெரிய மண்டபம். சுருள் சுருளாக இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி நிறம் காட்ட, வளைந்து போகும் மாடிப் படிகள். அந்த மாய லோகத்தில் ஒரு பக்கம் ஓட்டை உடசல் நாற்காலி, பழைய கடியாரம், பெடஸ்டல் ஃபேன் என்று அம்பாரமாகக் குவிந்திருக்கிறது. உடம்பில் துணி இல்லாமல், ஒரு இளம்பெண் படிக்கட்டு அருகே தரையில் கால் பாவாமல் மிதந்து கொண்டிருக்கிறாள். கையில் கோல் விளக்கோடு அந்தரத்தில் அலைகிற யட்சி.

சுட்டெரிக்க ஆரம்பிக்கிற வெய்யில். ஸ்டேஷனுக்கு வெளியே சரளைக்கல் பரப்பில் பையன்கள் சைக்கிள் படித்துக் கொண்டிருந்தார்கள்.

ஸ்கூல் லீவ் விட்டா வீட்டுலே உக்காந்து புத்தகம் படிக்கறது.. படம் போடறது.. புறா.. பானை மூடியிலே மலை.. படகு..

சாயந்திரம் அஞ்சு மணிக்கு ஒரு ரயில், காலம்பற ஏழுக்கு ஒண்ணு.. இதுக்காக கோட்டை மாட்டிக்கிட்டு கொட்டக் கொட்ட உட்காந்திருக்கணும்.. இந்தப் படம்.. இத்தனையுமா இங்கே உக்காந்து வரைஞ்சிருப்பான்? பாதி வரஞ்சு எடுத்திட்டு வந்திருப்பானா இருக்கும்.. இதெல்லாம் வெலை போகுமா? எம்புட்டு பெறும்?

டிராயிங் மாஸ்டர் பானை மூடியில் ஓட்டை போட்டு … எப்படித் தான் போடுவாரோ … இயற்கைக் காட்சி வரஞ்சு தருவார்….மஞ்சப் பிள்ளையார் புடிச்சு வச்ச மாதிரி ரெண்டு மலை, தண்ணி, தலப்பா கட்டிக்கிட்டு ஓடத்திலே போறவன்.. எல்லாம் ஒரு ரூபாய்க்கு.

ஆனா.. ஸ்கூல்லே டிராயிங் கிளாஸ்லே புறா மட்டும் தான் வரைவார். அது என்னமோ, வருஷம் பூரா புறா வரஞ்சே ஒப்பேத்திட்டு, தினசரி சாயந்திரம் ஆனந்தா டாக்கீஸிலே டிக்கட் கிழிக்கப் போயிடுவார்.

சீவகன் மணலில் வலது கால் பெருவிரலால் புறா வரைய முயற்சி செய்தான். சரளைக்கல் பரவிய மண் உம்மென்று கிடந்தது.

இந்த மண்ணுலே காலைத் தேச்சா தோல் உரிஞ்சு ரத்தம் தான் வரும். நாகநாதர் கோயில் சுவரா என்ன, எம்மேலே எழுது எழுதுன்னு கூப்பிட? இந்தி ஒழிகன்னு எழுதி, புறா மண்டை வரைஞ்சு, அதிலேயிருந்து குல்லா வச்ச தலை வரஞ்சு… அந்த மாதிரி ஆசாமிங்கதான் திண்டு தலைகாணியிலே சாஞ்சுக்கிட்டு இந்தி வளர்க்க காரியக் கமிட்டி அது இதுன்னு கூட்டுவாங்க.. தமிழ்ப் பத்திரிகையிலே பாதி கருப்பா போட்டோ எல்லாம் வரும்… குல்லா வச்சுக்கிட்டு.. திண்டு தலைகாணியிலே சாஞ்சுக்கிட்டு… கீழே இந்தி ஒழிக எழுதி…பக்கத்திலே ஒத்தை மயிர்க் குடுமியோட இந்திப் பண்டிட்டும் வரஞ்சு.. அதுங்கீழே இந்திப் பண்டிட்டும் ஒழிக…

டிராயிங் மாஸ்டர் பார்த்தா சிரிச்சிருப்பார்.. போர்டைப் பார்த்து ரெட்டைப் புறா வரைங்கடா… கதையா? என்ன கதை? பூசணிக்காய் கதையா? போன வாரம் தானேடா சொன்னேன்.. சரி சொல்றேன்… ஆனந்தா தியேட்டர்லே இண்டர்வெல்லுலே ஊர்ப்பய எல்லாம் குத்த வச்சு மூத்தரம் போற மண்ணுலே பூசணிக்கா கொடி போட்டாங்க… என்னமா காச்சது தெரியுமா? இந்த மாதிரி..இப்படி.. இப்படி…அவன் அவன் எனக்கு உனக்குன்னு தூக்கிட்டுப் போனான்…இவன் பாரு தலையிலே தூக்கிட்டு ஓடுறான்.. இவன்.. சைக்கிள் காரியர்லே..கவுறு போட்டுக் கட்டி.. இவன் அறுத்து கோணிச் சாக்கிலே அடைச்சுக்கிட்டு… எல்லாப் பயபுள்ளையும் வீட்டுலே பூசணிக்கா சாம்பார் வச்சுச் சாப்பிட்டானுங்க.. சாப்பிடறான் பாரு.. மொழங்கையிலேருந்து நக்கிக்கிட்டு.. அப்பறம் என்ன ஆச்சு? என்ன ஆச்சுன்னா.. இதான் ஆச்சு.. சொரி.. உலக மகா சொரி.. எத்தனை கிலோ யூரியா.. சொரியறான் பாரு.. முதுகிலே இழுத்து இழுத்து.. குடுமியா.. போட்டுட்டாப் போச்சு..

குடுமி வைத்தவர்களையும் குல்லா போட்டவர்களையும் தாராளமாகக் கிண்டல் செய்யலாம். இந்தி பண்டிட்களையும். அப்புறம் பெண்டாட்டியைத் தொலைத்த டீக்கடைக்காரர்கள்…

ராசுப்பய ஓடினதுக்கு அப்புறம் கோயில் சுவர்லே எவனோ வடைன்னு ஆரம்பிச்சு எழுதியிருந்தான். பக்கத்திலே பொம்பளை படம். டிராயிஞ் மாஸ்டர் கிட்டே படிச்ச பயதான்… பொம்பளைக்கு எப்படி புறா சாயல் வரும்?

இந்தா வரையறானே இந்தப் பொம்பளைக்கு … பொம்பளையா, மோகினியா… இடுப்பிலே ஏதாவது முண்டு மாதிரி சுத்தியிருந்தா நல்லா இருக்கும்… மறைச்சாத் தானே பார்க்கத் தோணும்..அது என்ன.. கதையிலே வருமே.. இன்ப ஊகங்களுக்கு இடமளித்தது… யட்சிக்கு ரவிக்கை போட்டா? சிவகாசி காலண்டர்லே எட்டுக்கையோட வர்ற உருவம் கூட ரவிக்கை போட்டு, மாரு எடுப்பா இருக்கும்… தையக்காரன் எப்படி தைப்பான்? எப்படிப் போட்டுக்கறது?

சித்திரக்காரன் படத்தைச் சுருட்டி வைத்தான். சோம்பல் முறித்தான்.

‘நீங்க ஊர் மாறி இறங்கிட்டீங்கன்னு நெனைக்கறேன். இங்கே பக்கத்துலே பார்க்க வேண்டிய இடம்னு ஒண்ணும் கிடையாது.’

‘ராமேஸ்வரம் வரைக்கும் டிக்கெட் வாங்கியிருக்கேன்’

‘ராமேஸ்வரம் வண்டி இனிமே நாளைக்குக் காலையிலேதான் வரும்’.

‘அப்படியா?’

‘ஆமா, அதுக்கு வேறெ டிக்கட் வாங்கணும்’

‘சரி’

‘இங்கே சாயந்திரம் வரைக்கும் ஒரு வண்டி கூட வராது. சாயந்திரம் ஆறரைக்கு ராமேஸ்வரத்திலேருந்து திரும்பற வண்டி வரும். அவ்வளவு தான். இங்கே தங்கக்கூட ஓட்டல் அது இதுன்னு எதுவும் கிடையாது.’

‘நீங்க தண்ணி கொடுக்க மாட்டீங்களா? வாரணாசியிலே ஒரு சாமியார் தண்ணியக் குடிச்சு மூணு மாசம் விரதம் இருந்தாராம்.. எனக்கு காப்பி போதும்.. என் மூஞ்சி பிடிக்காம வாசல்லே நிக்க வச்சுப் பேசினாலும், திண்ணையிலே இருக்கச் சொல்லி காப்பி கொடுப்பாங்க..’

என்ன மனுசன் இவன்? கிறுக்கனா? சாமியாரா? சாமியார் ஏன் துணி இல்லாத படம் போடறான்?

இது ரயில்வே சொத்து. அத்துமீறி உள்ளே வந்து தங்கறது தப்புன்னு கறாராச் சொல்லிடலாமா? பாரு, பய திரும்பவும் நாக்கைத் துருத்திக்கிட்டு பரிதாபமா நிக்கறான்.. ராசு.. உன்னைப் பார்த்து பரிதாபப்பட்டுத்தான் அவ வந்தாளாடா? பின்னே அவன்? அந்த டீக்கடைக்காரன்? சாரமில்லேன்னு புதுசா பாய்லர் வாங்கி வேறே எங்கேயாவது கடை போட்டிருப்பான்…

பெஞ்சிலிருந்து ஒரு பெரிய ஹோல்டால் மாதிரி ஏதோ சரிந்து விழ உள்ளே நிறையப் படங்கள்.. ஒரு புத்தகம்..

சீவகன் புத்தகத்தைக் குனிந்து எடுத்தான்.

’என் சரித்திரம்’

சித்திரக்காரன் சந்தோஷமாகச் சொன்னான்.

’என்னுதுன்னா.. என்னோடது இல்ல… உ.வே.சாமிநாத அய்யரோடது..’

சீவகன் புத்தகத்தைப் புரட்ட, உத்தமதானபுரம், பண்டார சந்நிதிகள், ஆறுமுகத்தா பிள்ளை வரவு, இந்திர இழவூர் எடுத்த காதை என்று துண்டு துணுக்காகப் பார்வையில் தெரிந்து மறைந்தன.

‘இதெல்லாம் நல்ல விலைக்குப் போகுமா?’

சீவக்ன படத்தைக் காட்டிக் கேட்டான்.

‘உசைன்… பெந்த்ரே.. விவியன் சுந்தரம்.. பூபேன் கக்கர்.. கீவ் பட்டேல்.. அர்ப்பணா கவுர்.. ‘

ஒரு எழவும் புரியலேடா.

‘ராமச்சந்திரன் இந்த வரிசையிலே இல்லே’

‘அது யாரு?’

’நான் தான்.. எனக்கு குளிக்க மட்டும் ஏதாவது இடம் கிடைக்குமா? குளிச்சுட்டுக் கிளம்பிடறேன்..’

‘வாங்க போகலாம்..கணபதி, புக்கிங் கிளார்க்கை கொஞ்சம் பார்த்துக்கச் சொல்லு.. வீடு வரைக்கும் போய்ட்டு இதோ வந்துடறேன்..’

சீவகன் நடக்க ஆரம்பித்தான். பின்னாலேயே சித்திரக்காரனும்.

(தொடரும்)

’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, ஜுன் 1992-ல் பிரசுரமானது. அட்சரா பதிப்பகம் வெளியிட்ட என் முதல் குறுநாவல் தொகுப்பான ‘தகவல்காரர்’ நூலில் இடம் பெற்றது.

ராத்திரி வண்டி – குறுநாவல் – பகுதி 1

ராத்திரி வண்டி – குறுநாவல்

’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, ஜுன் 1992-ல் பிரசுரமானது.

இந்தக் குறுநாவலின் கதையாடல் பற்றிக் குறிப்பிட வேண்டும். நனவோடை சற்றே மாற்றமடைந்து கதைப் போக்கில் அவ்வப்போது முன்னால் வந்து வந்து போகும் இந்தக் கதையாடல், இதற்கு அப்புறம் எழுந்த என் அரசூர் நாவல்களுக்கான நடையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது, காலமும் ஒரு தூலமான பரிமாணமாகக் கதையில் முன்னும் பின்னும் நகர்ந்து சதா இயங்கிக் கொண்டே இருக்கிறது.

என்னை வெகுவாக பாதித்த உ.வே.சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ இந்தக் குறுநாவலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை, அதன் காலத்துக்கு நூறு ஆண்டுகள் பிற்பட்ட கதைக்களன் கொண்ட ஒரு புனைகதைக்குள் இழைந்து வரச் செய்யும் சோதனை முயற்சியில் நான் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். இது தமிழில் முதல் முயற்சியாக இருக்கும் பட்சத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

உள்ளடக்கத்துக்காகவும், கதை சொல்லும் உத்திக்காகவும் கவனிக்கப்பட்ட படைப்பு இது. முக்கியமாக மறைந்த திரு நகுலன் போன்ற தமிழின் உன்னத படைப்பாளிகளால் பேசப்பட்டது.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
——————————————————————-

ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 1

ஏ ஹமாரா கர்த்தவ்ய ஹை கி இஸ் தேஷ் கி உன்னதி கே லியே…!

அப்புறம் மறந்து போச்சு. படிச்சுப் பதினஞ்சு வருஷம் கழிச்சு அதெல்லாம் ஏது ஞாபகம்?

இந்தி பண்டிட்டா அவன்? படவா, மாட்டடி அடிச்சான்.

‘என்னடா சீவகப் பாண்டியா.. லக்னோக்காரன் கணகா கடகடன்னு இந்தி படிக்கிறே… புத்தகத்தைக் கொண்டா பார்ப்போம்..’

அந்த சின்ன ரயில்வே ஸ்டேஷன் அமளிப் பட்டுக் கொண்டிருந்தது. விடிந்ததும் வர வேண்டிய ராமேஸ்வரம் பாசஞ்சர் சரியான நேரத்துக்கு வந்து அரைமணி நேரமாக நிற்கிறது. சரக்கு ரயில் கிராஸிங்க். வண்டி வருகிற வழியாக இல்லை. நூறு இருநூறு பேர் திமுதிமுவென்று ஸ்டேஷன் மாஸ்டர் சீவகப் பாண்டியன் மேஜைக்கு வந்து டீ கேட்கிறார்கள். வடக்கே எங்கோ கிராமப் பிரதேசங்களிலிருந்து கூட்டமாகப் புறப்பட்டு ராமேஸ்வரம் யாத்திரை போகிறவர்கள். விடியற்காலையில் வென்னீர் கூடக் கிடைக்காமல் என்ன பிழைப்பு? கம்பார்ட்மெண்ட் குழாயிலும் தண்ணீர் இல்லை. இந்த ரயிலுக்கு என்ன கேடு? கிளம்புகிற உத்தேசமே இல்லையா? போகட்டும், ஒரு தேநீர்க்கடை கூடவா இங்கே இல்லை?

‘ஏ ஹமாரா கர்த்தவ்ய ஹை கி சாயா கடை இல்லேய்யா.. வண்டியிலே உட்காரு.. கிளம்பப் போறது..’

புயல் கடந்த, மொழி புரியாத பூமியில் குறைகளைக் கேட்டுக் கொண்டு நடக்கிறா பிரமுகராக, பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தனியாக அனுப்பப்பட்ட கான்ஸ்டபிளாக, சலோ சலோ என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொல்கிற கோமாளியாகத் தன்னை சீவகன் உணர்ந்து கொண்டிருந்தான்.

ஒழுங்கா இந்தி படிச்சிருந்தா இவனுகளை என்னமா சமாளிச்சிருக்கலாம்.. ‘கழுதே.. புத்தகத்திலே ஓரமா தமிழிலே எழுதி வச்சுக்கிட்டா படிக்கறே படவா? யார்டா எழுதிக் கொடுத்தது? பக்கத்து வீட்டு அக்கா… என்னடா வயசு? பாவாடை தாவணியா? கையைப் பிடிச்சு மடியிலே உக்கார வச்சுக்கிட்டு சொல்லிக் கொடுத்தாளா? தொட்டியா? சும்மா சொல்லுடா.. எங்கேல்லாம் தொட்டே? இந்தக் கைதானே தொட்டுது.. கொஞ்சம் நீட்டுடா..கொடுத்து வச்ச கைடா..’

’சார் சார்… அடிக்காதீங்க சார்..’

சீவகன் கையில் சுருட்டி வைத்திருந்த பச்சைக் கொடியால் இந்திப் பண்டிட்டைத் திருப்பி அடித்தான்.

போய்யா..யாருக்கு வேணும் உன் இந்தி? புஸ்தகத்தை எரிச்சாச்சு. இந்தி வாத்தியார் எல்லாம் ஆறாம் கிளாஸுக்கு சயன்ஸ் எடுக்கப் போனாங்க.. ஏ ஹமாரா கர்த்தவ்ய ஹை கி நீ பசுவின் ஜீரண உறுப்புகளைப் படம் வரைந்து பாகங்களைக் குறி.. பக்கத்து வீட்டு அக்காவை நான் பார்த்துக்கறேன். பாவாடை தாவணியா? உமக்கு ஏன்யா பொறாமை? பாவாடையும் இல்லை, தாவணியும் இல்லை…முண்டு ப்ளவுஸ்.. ராசுப்பய கூட்டிட்டு ஓடினானே, அந்த டீக்கடைக்காரன் பொண்டாட்டி மாதிரி.. கையப் பிடிச்சேனா? எங்கே தொட்டேனா? அது உமக்கு அனாவசியம்.. வண்டி கிளம்பப் போறது.. போய் ஏறிக்குங்க..

பாசஞ்சர் கிளம்பி ஊர்ந்த பொழுது சீவகனுக்குத் திரும்பவும் பதினைந்து வயது கூடியிருந்தது. அவன் சந்திக்கத் தயாராக இரண்டாவது அமளி ஆரம்பித்திருந்தது.

அது ஸ்டேஷன் சிமெண்ட் பெஞ்சில்.

(தொடரும்)

விஷ்ணுபுரம் தேர்தல் – குறுநாவல் – முழுமையானது

விஷ்ணுபுரம் தேர்தல் – குறுநாவல் (இரா.முருகன்) – அத்தியாயம் 1

’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, செப்டம்பர் 1993-ல் பிரசுரமானபோது இந்தக் குறுநாவலின் தலைப்பு – விஷ்ணுபுரம்.

நண்பர் ஜெயமோகனின் நாவல் விஷ்ணுபுரம் இதற்குப் பிறகே வெளியானதால் பெயர்க் குழப்பம் ஏற்படவில்லை. எனினும் இப்போது இந்தக் குறுநாவலைச் சற்றே பெயர் மாற்றி இருக்கிறேன். வர இருக்கும் குறுநாவல் தொகுப்பிலும் இந்தப் பெயரில் வெளியாகும்.

இந்தக் குறுநாவலே ’பயோபிக்‌ஷன்’ வாழ்க்கை வரலாற்று நாவலாக 2005-ல் வாராவாரம் தினமணி கதிரில் வெளியாகிப் பின்னர் நூல் வடிவமும், குறும்பட வடிவமும் பெற்ற ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’வுக்கு ஊற்றுக்கண்.

என் ‘தகவல்காரர்’ குறுநாவல் தொகுப்பில் (அட்சரா வெளியீடு – 1995) இடம்பெற்ற படைப்பு இந்த விஷ்ணுபுரம்.
——————————————————————-

விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 1

‘மதிப்புக்குரிய ஐயா, வணக்கம். நான் எட்டாவது வகுப்பில் படிக்கும் மாணவன். பள்ளியில் ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து விடுமுறை இப்போது. விஷ்ணுபுரம் என்ற ஊரில் இருக்கிறேன். விஷ்ணுபுரம் சிறிய, அழகான ஊர். தமிழ்நாட்டின் தெற்குக் கோடியில் உள்ளது. இங்கே அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறேன். உலகில் உள்ள எல்லா நாடுகளையும், மக்களையும் பற்றித் தெரிந்து கொள்வது என் அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று ஆசிரியப் பெருமக்கள் கூறுகிறார்கள். விடுமுறை நாட்களே இதற்கு உகந்தவையாம். உங்கள் நாட்டைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். உழைப்பால் உயர்ந்த மக்கள். தேச பக்தியில் சிறந்தவர்கள். ஜனநாயகத்தைப் பேணிக் காப்பவர்கள். அவர்களைப் பற்றி இன்னும் சிறப்பாக அறிந்து கொள்ள உதவும் வகையில் உங்களிடம் புத்தகங்களும், பத்திரிகைகளும் இருக்கும் என்று நம்புகிறேன். அவற்றை எனக்கு அனுப்பி வைத்தால் மிகவும் நன்றியுடையவனாவேன். என் அறிவுத் தாகத்தைத் தீர்த்து வைப்பது உங்கள் பொறுப்பு’.

மொத்தம் பனிரெண்டு பிரதிகள் எடுக்க வேணும். பக்கத்துத் தெருவில் யாரிடமிருந்தோ வாங்கி வந்த கசங்கிய காகிதத்தை சீதரன் எனக்குக் கொடுத்திருக்கிறான். என் கையெழுத்து கொஞ்சம் சொல்லிக் கொள்கிறார்போல் இருக்கும் என்பதால் வேலை என் தலையில்.

நாராயணன் கடையில் வாங்கி வந்த வெள்ளைக் காகிதமும் பேனாவுமாக அவனவன் காத்திருக்கிறான்.

‘எப்படிடா முடிக்கறது?’

கிரி சந்தேகத்தைக் கிளப்பினான்.

‘யுவர்ஸ் ஒபீட்னு ஏதோ லீவ் லெட்டர்லே எழுதுவோமேடா…’

வார்த்தை மறந்துவிட்டது. முழுப்பரீட்சை லீவில் அவனவன் பெயர் நினைவில் இருந்தாலே அதிகம்.

’ஒபீடியண்ட்லிடா..’

கண்ணன் ஸ்பெல்லிங்கோடு சொன்னான். வயிற்றுவலி என்று அடிக்கடி பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டிருக்கிறான் பயல்.

டெல்லியில் இருக்கிற கானா, செக்கோஸ்லோவேகியா, ஹங்கேரி, பிரான்ஸ், இன்னும் ஏதேதோ தூதரகங்களுக்கு கீழ்ப்படிதலுள்ள பனிரெண்டு பேரின் கடிதங்கள் தபாலில் சேர்க்கப் பட்டன.
**************************************

மாதவன் விந்தி விந்தி நடந்து வந்தான்.

பகல் வெப்பத்தில் நடமாட்டம் குறைவான தெரு. வக்கீல் மோகனதாசன் வீட்டுப் பக்கம், புருஷன், பெண்சாதி மாதிரி தெரிந்த இரண்டு பேர் தரையில் உட்கார்ந்து புஸ்புஸ்ஸென்று எதையோ அமுக்கி கலாய் பூசுகிறதை ஒரு மணி நேரமாக வேடிக்கை பார்க்கிறோம். அலுக்கிற நேரம் பார்த்து மாதவன் வந்தான்.

தோளில் பருப்புத் தேங்காய்க் கூடு மாதிரி தகரக் குவளை ஒலிபெருக்கி. சணலில் கட்டி அது தோளில் தொங்குகிறது. மாலை போட்ட மாதிரி ஒரு தமுக்கையும் மாட்டியிருக்கிறான். டமடமவென்று கொட்டி முழக்கிக் கொண்டு வருகிறான்.

பெருமாள் கோயில் தெருவும் எங்கள் தெருவும் சந்திக்கும் இடத்தில் ‘சாலாச்சி வருகடலை நிலையம். எங்கள் ஸ்கூல் தமிழ் வாத்தியார் நீலமேகம் வறுகடலை நிலையம் என்று திருத்தச் சொல்லியும் கடைக்காரர் மாட்டேன் என்று தீர்மானமாக மறுத்து விட்டார்.

’வருகடலைன்னு போட்டா வருமானம் வரும்.. மத்த மாதிரி போட்டா சொத்தக் கடலையை வறுத்து நானும் வாத்தியாரும் தான் வாயிலே அடச்சுக்கணும்’.

அவரோ, வாத்தியாரோ சொத்தைக் கடலை தின்ன வேண்டிய அவசியமில்லாதபடி வழக்கமாக போர்டில் வருகடலை நிலையம் தான் இருக்கிறது. அந்த போர்ட் பக்கத்தில் பெரிய வேப்பமரத்தில் செல்லமாக இடித்துக் கொண்டு நிற்கிறது. வேப்ப மர நிழல்.. மாதவன் அங்கே நிற்கிறான்.

அவனுக்கு முன் நாங்கள் ஆஜர்.

இதுதானா கூட்டம் என்பது போல எங்களை ஒரு பார்வை. சட்டைப் பையிலிருந்து நாலாக மடித்த காகிதத்தை எடுக்கிறான்.

இனிமேல்தான் நாங்கள் எதிர்பார்க்கிற சுவாரசியமான காரியம். தவற விடக்கூடாது. இன்னும் நெருக்கமாகப்போய் அவனுக்கு முன்னால் நின்று கொண்டோம்.

மாதவன் காகிதத்தைத் தலைகீழாகப் பிடித்தான். அதாவது அவனுக்கு எதிர்த்தாற்போல் நிற்கிற நாங்கள் படிக்க வசதியாக. பருப்புத் தேங்காய்க்கூடு வாய்ப் பக்கம் நகர்ந்தது.

’இதனால் யாவருக்கும் அறிவிப்பது என்ன என்றால்.. விஷ்ணுபுரம் நகரசபையாக அறிவிக்கப்பட்டது தெரிந்ததே.. நம் நகராட்சிக்கான தேர்தல் வரும் மே மாதம் இருபத்தெட்டாம் தேதி நடைபெறும் என்று இதனால் அறிவிக்கப்படுகிறது. மொத்தம் பதிமூன்று வார்டுகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. போட்டியிட விருப்பமுடையவர்கள் பஞ்சாயத்து ஆபீஸில் நகல் படிவம் முப்பத்தேழு.. நமூனா எண்..’

ரொம்ப ஜோராகக் கை தட்டினோம். இப்படி திடுதிப்பென்று ஒரு எலக்‌ஷன்.. அதுவும் பரீட்சை லீவில் பார்த்து..

‘யாரெல்லாம் நிப்பாங்க, மாதவன்?’

அவன் காதிலிருந்து பீடி எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு வெறுமனே சிரித்தான்.

அவனே நிற்கப் போகிறானோ என்னமோ.

****************************

நாராயண பவன்.

’பிரதமர் நான்கு நாள் நல்லெண்ணெய் விஜயமாக இரான் போய்ச் சேர்ந்தார்…’

ஆகாசவாணியில் தஸ்ஸுபுஸ்ஸென்று மூச்சு விட்டுக் கொண்டு டெல்லிச் செய்தி அறிக்கை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். பொழுது விடிந்ததும் ரவா உப்புமா சாப்பிட்டாக வேண்டும் என்று யாரோ தண்டனை விதித்த மாதிரி ஏழெட்டுப் பேர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பாலகிருஷ்ணன் என்ற பாலுசாமி கரண்டி கரண்டியாக மாவு கரைத்த சாம்பாரை எல்லா இலையிலும் வார்த்துக் கொண்டு சுற்றி வருகிறான்.

‘குருமூர்த்தி எங்கடா பாலு?’

கல்லாவிலிருந்து ராமுடு ஐயர் விசாரிப்பதற்கு பதிலே இல்லை. பாலுவுக்குக் காது மந்தம். அது சரியாக இருந்திருந்தால் இன்னேரம் பெரிய ஆளாக இருந்திருப்பான்.

ஆனாலும் என்ன? அவன் சினிமாவில் நடித்திருக்கிறான். அந்தப் பழைய படங்கள் ஸ்ரீ கிருஷ்ணா தியேட்டருக்கு எப்போதாவது வரும். நாகேசுவர ராவோ, ராமேசுவர ராவோ ‘உலகே மாயம்’ என்று தோராயமான தமிழில் பாடிக் கொண்டு தெருவில் போகும் போது, இவன் குடையோடு எதிரில் வருவானாம்.

ஜெமினிகணேசன், அஞ்சலி தேவியையோ சரோஜா தேவியையோ படமாக வரைய உத்தேசித்து, ‘யாரங்கே’ என்று கை தட்டவும் அரண்மனையின் உள்ளே கதவு திறந்து, வர்ணத் தட்டோடு இவன் வருவதை எதிர்பார்த்து இருந்தபோது படம் அறுந்து இடைவேளை விட்டார்கள்.

’யாரங்கே’.

காது வளர்த்த கிழவி கை தட்டுகிறாள்.

‘சக்கரை சாஸ்தியா ஒரு காப்பி சாமி..’

இட்லி வாங்க நின்ரு கொண்டிருக்கிறேன். பாலு என்னைப் பார்க்கவே இல்லை. அவன் சபரிமலை போகிறபோது தான் நான் தேவைப் படுவேன். என்னை.. கிருபாகரனை.. குள்ள கிட்டுவை.. கிரியை.. எல்லோரும் தேவைப்படுவோம்..

அக்பர் கூட ஒரு தடவை கூடவே வந்தான்.

‘அத்தா திட்டுவாங்க..போடா..’

பாலு சொன்னாலும் அக்பர் எங்களோடு கூட அவன் பின்னால் வந்தான்.

ஒவ்வொரு வருஷமும், மலைக்குப் போவதற்கு முன், கையில் நோட்புக்கும், தோளில் மாட்டிய பெரிய பையுமாக வீதி வலம் வருவான் பாலு ..பாலுசாமி.

அவனுக்கு முன்னால் சத்தமாக ச்ரணம் விளித்துக் கொண்டு போவது நாங்கள்.

‘மலை சவிட்டி விட்டு’ பாலு கொண்டு வந்து தருகிற அரவணைப் பாயசத்துக்கும், உண்ணியப்பத்துக்கும் மட்டுமில்லை இது. உச்சத்தில் சரணம் விளிக்கிற குஷிக்காகவும் நாங்கள் கூடவே போவோம்.

‘சாமியே..சரணம் அய்யப்பா…’’

தெரு முனையில் தான் அக்பரின் அத்தா அசன் ராவுத்தர் ரெடிமேட் துணிக்கடை வைத்திருக்கிறார். வீடு வீடாக அரிசியும் பணமும் வசூல் முடித்து விட்டு பாலு அங்கேயும் படி ஏறுவான்.

‘வாவர் சாமி.. மாலை போட்டிருக்கேன்..’

அத்தா ஐந்து ரூபாயும், கோடு போட்ட, யானைக்குப் போடுகிற சைஸில் இரண்டு லங்கோடும் தருகிற வழக்கம்.

மலைக்குப் போகிற வரை நாங்கள் எல்லாம் பாலுவுக்கு ‘ராமுசாமி, கிரிசாமி, குள்ளக்கிட்டு சாமி…’

திரும்பி வந்ததும், தாடியை மழித்துப் போட்டுவிட்டு, ‘முறுகலா ஒரு சாதா’ என்று நாராயண பவானில் உக்கிராணத்தைப் பார்த்துக் குரல் கொடுக்கும்போது கண்டு கொள்ளவே மாட்டான்.. அதுதான் நின்று கொண்டிருக்கிறேன்.

‘தம்பி.. இந்த டேபிளை துடைக்கிறியா..’

யாரோ.. என்னைத்தான் கேட்கிறார்கள்.

‘நான் இட்லி வாங்க வந்திருக்கேன் தெரியுமில்லே…’

நான் விரைப்பாக நின்றபடி சொல்கிறேன்.

வேட்டி கட்டிக் கொண்டு வந்திருக்க வேணும். அது இடுப்பில் சரியாக நிற்காவிட்டாலும் முன்னே பின்னே பழக்கமில்லாதவர்கள் டேபிள் துடைக்கச் சொல்லி ஏவ மானம் போகாது.

ஒரு வழியாக பாலு என்னைப் பார்த்தான்.

‘எத்தனை இட்லிடா?’

அனாசின் மாதிரி விரலை விரித்தேன்.

’நாலு இட்லி.. கெட்டி சட்னி தனியா பார்சல்லேஎஎஎஎ’

பதினைந்து மலை சவட்டிய வல்ய குருநாதனின் இடிக் குரல்.

‘பாத்துப்பா… பழைய கட்டிடம்.. உக்காந்துடப் போறது..’

கல்லாவிலிருந்து ராமுடு ஐயர் நிலைய வித்வானின் கோட்டு வாத்திய இசையோடு சொன்னார்.

———————————–

விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 2

அந்த ஆள் பார்க்க வினோதமாக இருந்தான். வயது கிருபாகரன் அண்ணன் புருஷோத்தமனை விட கொஞ்சம் கூட இருக்கலாம். இவனுக்குப் பெரிய மீசை இருந்தது. பட்டையாக நெற்றியில் வீபுதி பூசி இருந்தான். சந்தனம், குங்குமம், ஜெமினி கணேசன் போல தொளதொள பேண்ட். கோயிலுக்குப் போய்விட்டு, ‘காலங்களில் அவள் வசந்தம்’ பாடத் தயாராக நிற்கிற ஜெமினி. கோயில் வாசலிலேயே நிற்கிறான். ஒரு கையில் தொப்பி. கையில் ஏதோ காகிதம். கோபுரத்தை அண்ணாந்து பார்க்கிறான். எழுதுகிறான்.

பக்கத்தில் போனோம்.

‘தம்பிகளா.. நீங்க இந்தத் தெருவா?’

‘ஆமா’

‘இங்கே…டாக்டர் சச்சிதானந்தம் வீடு இருக்குன்னு சொன்னாங்க.. உங்களுக்கு..’

‘சதானந்தம்னு ஒரு டாக்டர் இருக்கார் இந்தத் தெருவிலே..’

‘அவரே தான்.. மாத்திச் சொல்றேன்..அவரே தான்.. எந்த வீடு தம்பி?’

காட்டினோம்.

‘நீங்க எங்கே இருந்து வரீங்க?’

‘இலங்கை தெரியுமா?’

தெரியாமல் என்ன? அங்கே நாள் முழுக்க சினிமா பாட்டு வைத்துவிட்டு, சாயந்திரம் ஆறு மணியானதும், ‘வணக்கம் கூறி விடை பெறுவது மயில்வாகனம்’ என்று முடிப்பார்கள். ‘சொக்கா.. ஆயிரமும் பொன்னாச்சே..’ என்று ரெண்டு வரி டயலாக் ஒலிபரப்பி, யாருடைய குரல் என்று அடையாளம் கண்டு பிடித்த அதிர்ஷ்டசாலிக்கு ப்ரவுன்சன் அண்ட் போல்ஸன் கஸ்டர்டும் – இது என்னமோ தெரியாது- கோபால் பல்பொடியும் மற்றதும் காலக்கிரமத்தில் அனுப்பி வைப்பார்கள். ‘ஸ்ரீலங்கா பத்திரிகையை ஒழுங்காக வாசியுங்கள்’ என்று பாடத்தை ஒழுங்கா படியுங்கடா சத்தம் போடும் சயின்ஸ் வாத்தியார் போல் மணிக்கொரு தடவை அறிவிப்பார்கள். அதை மட்டும் தவிர்த்து விட்டால், ஏறக்குறைய சந்தோஷமான ஊராக இருக்கும்.

’நான் இலங்கையிலிருந்து வரேன்..’

‘இங்கே என்ன பண்றீங்க?’

‘கோயில்கள் பற்றி, சைவ சமயம் பற்றி ஆராய்ச்சி பண்றேன்..’

‘அப்படீன்னா?’

‘அதாண்டா.. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி..’

சீதரன் முந்திரிக்கொட்டை மாதிரி நடுவிலே வெட்டினான்.

‘சபாஷ்.. திருவாசகம் எல்லாம் தெரிஞ்சிருக்கே..’

எப்படித் தெரியாமல் போகும்? நாலு வருஷமாகத் தமிழ்ப் புத்தகத்தைத் திறந்தால் அதுதான் முதல் பாட்டு.

‘தம்பி..’

அவன் குரலை ரகசியம் பேசுகிறதுபோல தாழ்த்தினான்/

‘என்ன அண்ணே?’

நாங்களும் அதே அளவுக்குத் தாழ்த்தி கோஷ்டியாகக் கேட்டோம்.

‘டாக்டர் வீட்டுலே புவனலோசனின்னு ஒரு அம்மா இருக்குதா?’

‘புவனலோசனி வேலுப்பிள்ளைன்னா.. உங்க ஊர் ரேடியோவிலே தானே..’

சதானந்தம் பெயரைத் தப்பாகச் சொன்ன மாதிரி இதுவும் ஆகியிருக்கும் என்ற நம்பிக்கையோடு கிரி கேட்டான். அதானே..

‘இல்லே தம்பி.. அவங்க இல்லே..இது குமரு..’

என்ன குமாரோ.. குமார் இல்லையாம்.. குமரு என்றால் சின்ன வயசுப் பெண்ணாம்.

டாக்டர் சதானந்தம் வீட்டில் குமரு உண்டுதான். புவனா இருக்கிறாள். எங்களுக்கு அக்கா வயசு. டாக்டர் வீட்டு மாமிக்குத் தங்கை. இரண்டு வருஷம் முன்னால் அவளும் அவள் அப்பாவும் இலங்கையிலிருந்து வந்தார்கள். அப்பா இப்போது உயிரோடு இல்லை.

புவனா காலேஜில் படிக்கிறாள். சாயந்திரம் கிருஷ்ணசாமி வாத்தியாரிடம் பாட்டு சொல்லிக் கொள்கிறாள்.

‘பரிபாலய.. பரிபாலய.. பரிபாலய ரகுராமா…’

’உட்காருகிற இடத்தில் சிரங்கு வந்தால் குப்பை மேனி இலையை விழுதாக அரைத்துப் பத்துப் போடணும்’ என்று பக்கத்தில் யாரிடமோ சொல்லிவிட்டு, அதே குரலில் வாத்தியார் பாட்டு சொல்லித் தருகிறார்,

‘அந்தக் குமருவுக்கு லெட்டர் கொடுக்கணுமா?’

சீதரன் கேட்டான்.

இந்த லெட்டர் கொடுப்பது விவகாரமான சங்கதி.

தெருவில் எங்களுக்கு கிட்டத்தட்ட ஏழெட்டு வருஷம் மூத்த செட் ஒன்று உண்டு. கிருபாகரனின் அண்ணன், சீதரனின் மாமா, கிரியுடைய சித்தப்பா என்று .. கஷ்டப்பட்டு மீசை வளர்த்துக் கொண்டிருக்கிறவர்கள் எல்லோரும்.. பக்கத்துத் தெருவிலிருந்து எல்லாம் இவர்களைப் பார்க்க சைக்கிளில் இவர்கள் வயது சிநேகிதர்கள் யாராவது எப்பவும் வருவது வழக்கம்.

இரண்டு மாதம் முன்பு வரை தினசரி சாயந்திரம் கோயில் பக்கத்தில் சைக்கிள் சகிதம் எல்லோரும் ஆஜர்.

புவனா கோயிலுக்குப் போவாள். அப்புறம் அக்பரின் அக்கா மெஹருன்னிசா மஜீத் தெருவில் அத்தை வீட்டுக்குப் போவாள்.

இவர்கள் இரண்டு பேரையும் பார்த்த பிறகு தான் சபை கலையும்.

புவனா தாட்தாட்டென்று தனியாகப் போகும்போது பின்னால் இருந்து சிரிப்பு கேட்கும். மெஹர் கூட அக்பரோ, நானோ போவோம்.

‘அந்தப் பக்கம் பாக்காம வாடா..’

அவள் முக்காட்டைக் கடித்துக் கொண்டு வேகமாக நடப்பாள்.

இரண்டு மாதம் முன்னால், பக்கத்துத் தெருவில் இருந்து வந்த சபையின் கவுரவ உறுப்பினன் எவனோ புவனாவுக்கு ‘லெட்டர்’ கொடுத்தானாம். போஸ்ட்மேன் வேல்சாமி தான் வழக்கமாக எல்லோருக்கும் லெட்டர் தருவார். இது என்ன ஸ்பெஷலோ?

போலீஸ்.. சத்தம்.. சமாதானம்.. தெருவே ஒரு வாரம் லோல்பட்டது.

கிருபாகரன் அணன் மெட்ராஸில் அவன் சின்னாயினா வீட்டுக்குப் போனான். மற்றவர்களும் உறவுக்காரர்களின் அட்ரஸைத் தேடி எடுத்துப் போனார்கள். சாயந்திர சபையின் கௌரவ உறுப்பினர்கள் தலை மட்டும் அவ்வப்போது தட்டுப்படுகிறது.

இந்த ஆள் லெட்டர் கொடுக்க வந்தவன் என்றான் உஷாராக இருக்க வேண்டும்.

இல்லையாம்.. சும்மா தான் கேட்டானாம்.

‘ஆராய்ச்சி பண்ணி என்ன செய்வீங்க?’

பழைய வம்புக்குத் தாவினோம்.

‘புத்தகம் போடுவேன்..’

’போஸ்ட் கார்ட் போட்டா அனுப்புவீங்களா?’

’பார்க்கலாம்..’

அவன் நடந்தான்.

காலக்கிரமத்தில் அனுப்புவான்.

***************************************

‘ராமு.. இன்னமா எழுந்திருக்கலே.. எட்டு மணியாறதே..’

‘அவனுக்கு எவனோ வேலை மெனக்கெட்டு டெல்லியிலிருந்து ஒரு மூட்டை புஸ்தகம் அனுப்பியிருக்கான்..’

ஆபீசுக்குப் போகிற அவசரத்தில் அப்பா. ரசம் மணக்கிற கை படுக்கைக்குப் பக்கத்தில் எதையோ போட்டது.

‘பாக்கு டப்பா எங்கே?’

‘ராமுதான் நேத்து அதுலே வெள்ளரிக்கா விதை தேடித் தேடித் தின்னுட்டிருந்தான்..’

இனியும் படுத்துக் கிடந்தால் டின் கட்டி விடுவார்கள்.

ஓடியே போய் சைக்கிள் பின்னாலிருந்து பாக்கு டப்பாவை எடுத்துக் கொடுத்துவிட்டு, எனக்கு வந்த பொக்கிஷத்தைப் பார்த்தேன்.

கலர் கரலாக ஏழெட்டுப் புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. நாலு வரியில் ஒரு கடிதம்.

செக்கோஸ்லோவாகியா தூதரகத்திலிருந்து அனுப்பி இருந்தார்கள்.

’மிஸ்டர் ராமு’என்று ஆரம்பித்தது. எனக்குத்தான் எழுதியிருக்கிறார்கள்.

சாவகாசமாகப் படித்துக் கொள்ளலாம். முதல் புத்தகத்தைப் பிரித்தேன். சுகமான காகித வாசனை. இதெல்லாம் படிக்கவா, முகர்ந்து பார்க்கவா?

பக்கத்துக்குப் பக்கம் ஏகப்பட்ட படங்கள். தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். கிழவிகள் ஆரஞ்சுப் பழம் உரித்துச் சாப்பிடுகிறார்கள். கிராப்புத் தலையோடு புவனா மாதிரிப் பெண்கள் சைக்கிளில் போகிறார்கள். பெரிய வயலிலிருந்து உருளைக் கிழங்கை லாரியில் ஏற்றுகிறார்கள். தொப்பொ போட்ட கிழவர்கள் டிராக்டர் ஓட்டுகிறார்கள்.

இவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பாட்டைப் பாடிக்கொண்டே இதை எல்லாம் செய்வார்கள் என்று தோன்றியது. ஆகாசவாணியில் அடிக்கடி இந்தியில் வரும் தேசபக்திப் பாடல் மாதிரி.

நாலு புத்தகத்துக்கு அப்புறம் படமே மருந்துக்குக் கூட இல்லாமல் ஒரு புத்தகம். புரட்டிப் பார்த்தேன். ஒரு இழவும் புரியவில்லை. இந்தப் புத்தகம் தான் மற்றதை விட வழுவழுப்பு. வாசனையும் இதற்குத்தான் அதிகம். என்ன பிரயோஜனம்? மிஸ்டர் ராமு இதெல்லாம் படிக்க மாட்டார்.

உள்ளே எட்டிப் பார்த்தேன். அம்மா சமையல்கட்டில்.

ஒரே ஓட்டம் வெளியே.

வக்கீல் மோகனதாசன் வாசல் படிக்கட்டில் உட்கார்ந்தபடி ஒரு கூட்டம் பொறாமையோடும் வயிற்றெரிச்சலோடும் என் புத்தகங்களைப் பார்வையிட்டது.

’நீ மொதல்லே தபால் பெட்டியிலே போட்டியே.. அதான் உனக்கு வந்திருக்கு.. எனக்கு மத்யானம் வரும் பாரு..’

கிருபாகரன் சொன்னான்.

அவனை யார் வாடகை சைக்கிளில் போய்த் தபாலில் போட வேண்டாம் என்று கையைப் பிடித்து இழுத்தது? இருக்கிற கைக்காசில் தனக்கு மட்டும் இல்லாமல், ராமானுஜ நாயுடு, மங்கத் தாயாரம்மாள், பங்காருசாமி நாயுடு என்று வீட்டில் இருக்கிற எல்லோர் பெயரிலும் புத்தகம் கேட்டு அனுப்பியிருக்கிறான்.

‘இந்த செக்கோஸ்லோவாகியா எங்கேடா இருக்கு?’

கிரி கேட்டான்.

‘படிச்சுத் தெரிஞ்சுக்கத்தானேடா அனுப்பியிருக்காங்க..’

‘தடிப்புத்தகம் என்னடா?’

‘அவங்க ஊர்லே பாடப்புத்தகம் போல இருக்கு…சாம்பிளுக்கு அனுப்பியிருப்பாங்க..’

‘சகாக்களே… சத்தம் போட வேணாம்..’

வக்கீல் மோகனதாசனின் குமாஸ்தா ஜீவராசன் தோளில் சிவப்புத் துண்டோடு, திண்ணையில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார்.

‘அவனுக்கு இருக்கற அறிவுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியா வந்திருக்க வேண்டியவன்.. கட்சி கிட்சின்னு அலஞ்சு இப்படி உருப்படாம போய்ட்டான்..’

அப்பா அடிக்கடி சொல்கிறதுபோல ஜீவராசன் உருப்படாமல் போயிருந்தால் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை வெடிச் சிரிப்பு சிரித்துக்கொண்டு எப்படி இருக்க முடியும்?

ஜீவராசன் ஒரு புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தார்.

’பாத்தியா.. உங்க வயசுதான் இருக்கும் இந்தப் புள்ளைக்கு.. என்ன சிநேகிதமா சிரிக்கிறான் பாரு.’

அவர் காட்டிய படத்தில் ஒரு பையன், லாரி மாதிரி ஒரு வாகனத்தில் இருந்த பட்டாளக்காரனோடு கை குலுக்கிக் கொண்டிருந்தான்.

‘யார் அண்ணே அது?’

பட்டாளக்காரனைக் காட்டிக் கேட்டோம்.

‘சோவியத் போர்வீரன்..’

ஜீவராசன் நரைத்துக் கொண்டிருக்கிற மீசையைத் தடவிக்கொண்டே சிரித்தார்.

‘இந்தப் பையன் என்னத்துக்குக் கை கொடுக்கிறான்?’

’அவன் நாட்டில் வந்து அமைதியை நிலைநாட்டினதுக்காக சந்தோஷப்படறான்..’

அவன் முகத்தில் அப்படி ஒன்றும் சந்தோஷம் தெரியவில்லை. ஒரு வேளை செக்கோஸ்லோவேகியாவில் சிரிக்காமலேயே சந்தோஷப்படுவார்கள் போலிருக்கிறது.

‘இது என்ன அண்ணாச்சி?’

கிரி பொம்மை போடாத புத்தகத்தை இரண்டு விரலால் தூக்கிக் காண்பித்தது, எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. என் புத்தகம். வீட்டுக்குப் போனதும் முதல் காரியமாக அட்டை போட வேண்டும். ராமகிருஷ்ணா மிஷனிலிருந்து வரும் தர்ம சக்கரம் பத்திரிகை சரியாக இருக்கும்.. ஒரு அலமாரி நிறைய இருக்கிறது.. தாத்தா அடுக்கி வைத்திருக்கிறார்..

ஜீவராசன் புத்தகத் தலைப்பைப் படித்தார். அர்த்தம் சொன்னார்.

’SPRING IN PRAGUE… சோவியத் நட்புறவு கலந்த பிரேக்கு வசந்தம்.’

பெரியவனானதும் ‘பிரேக்கு வசந்தம்’ படிக்க வேண்டும்.

———————————–

விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 3

‘என்னடா அம்பி.. படக்கூடாத எடத்துலே கிரிக்கெட் பந்து பட்டு வீங்கிடுத்தா?’

டாக்டர் சதானந்தம் ஒரு கட்டு வெற்றிலையை மேஜை மேல் வைத்து சாவதானமாக மென்று கொண்டிருந்தார்.

‘இல்லே டாக்டர் மாமா.. இது மருந்து சீசா..’

நான் டிரவுசர் பையிலிருந்து வெளியே எடுத்தேன்.

‘தாத்தாவுக்கு… மூணு நாளா..’

அசங்கிய விஷயம். எப்படிச் சொல்வது?

‘கொல்லைக்கு வரலியாமா?’

மவுனமாக சீசாவை நீட்டினேன்.

‘வாயு எல்லாம் கிரமமா பிரியறாரோ..’

நான் முழித்தேன். டாக்டர் வாயால் பர்ர்ர் என்றார்.

இப்படி எல்லாம் கேள்வி வரும் என்று தெரிந்திருந்தால் தாத்தாவையே வரச் சொல்லியிருக்கலாம்.

லீவு நாளில் இது ஒரு தொந்தரவு. தொட்டதற்கெல்லாம் ‘ராமு நீ போ…’

‘தெரியலே டாக்டர் மாமா..’

‘தெரியாதுடா.. கேக்கும்.. பக்கத்திலே நின்னா மூக்கிலே..’

டாக்டர் என்றால் எல்லாம் பேசலாம். ஆனாலும் சதானந்தன் டாக்டர் ஒரு வாக்கியத்துக்கு ஒரு பெரிய சிரிப்பாக, சுற்றி எல்லாம் வெற்றிலைச் சாறு தெறிக்கக் கேட்கிறார்.

எனக்குச் சிரிப்பு வந்தாலும் சிரிக்கக் கூடாது. எம்பசி புத்தகத்தில் செக்கோஸ்லோவேகியா பையன் பட்டாளத்தானோடு நிற்கிற மாதிரி நான் நிற்கிறேன்.

பேசாமல் செக்கோஸ்லோவேகியாவில் பிறந்திருக்கலாம். ஆரஞ்சு பழம் உரித்துச் சாப்பிட்டு விட்டுப் பட்டாளக்காரனோடு கை குலுக்கிக் கொண்டு..

‘வீரபத்ரா..’

டாக்டர் இன்னொரு வெற்றிலையை மடித்து வாயில் அடைத்துக் கொண்டு உள்ளே பார்த்துக் குரல் கொடுக்கிறார்.

அவர் முடிக்கும் முன்னரே கம்பவுண்டர் வீரபத்ரன் கார்பனேட் மிக்சரை நுரை பரக்க அவுன்ஸ் கிளாஸில் ஊற்றிக் கொண்டிருந்தான்.

இந்த கார்பனேட் மிக்சர் கெட்ட ஆஸ்பத்திரி வாடை அடிக்கிற சமாசாரம். கையில் எடுத்துப் போனால் தெருவே ‘வயிறு சரியில்லையா?’ என்று விசாரிக்கும். எத்தனை பேரிடம் தான் சொல்வது…’எனக்கில்லை’..

’கொட்டிப்புடாம எடுத்துப் போடா..’

கம்பவுண்டர் வீரபத்ரன் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு சீசாவை நீட்டினான்.

இப்படி ஜாலியான டாக்டருக்கு இந்த மாதிரி ஒரு உம்மணா மூஞ்சி கம்பவுண்டர்..

நான் வெளியே போகத் திரும்பியபோது ஒரு பெரிய கூட்டம் மாலையும் கையுமாகப் படி ஏறி வந்து கொண்டிருந்தது.

சுபாஷ் பஜார் இரும்புக்கடை ஸ்தானிஸ்லாஸ் நாடார்.. ஓட்டல் ராமுடு ஐயர்..தையல்கார தியாகி குருசாமி..

இன்னும் யார்யாரோ… எல்லோரும் ஒற்றுமையாகத் தொளதொளவென்று காதி வஸ்திராலயத்தில் வாங்கிய கதர் சட்டை போட்டிருந்தார்கள்.

‘டாக்டர்.. ராகுகாலம் முடிஞ்சுடுத்து.. கையெழுத்து போட்டுடலாம்..’

தியாகி என்னைப் பார்த்தார்.

‘தம்பி… டாக்டர் வீட்டம்மாவைக் கொஞ்சம் இங்கிட்டு வரச் சொல்லு..’

உள்ளே கையைக் காட்டினார். டாக்டர் வீடு பின் போர்ஷனில்.

நான் மருந்து சீசாவைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு திரையை விலக்கி உள்ளே போக, புவனா அதட்டலாக ‘என்னடா’ என்றாள்.

மாமி ஊஞ்சலில் உட்கார்ந்து ஆனந்தவிகடன் தொடர்கதை படித்துக் கொண்டே, ‘அவ மேலே பட்டுடாதேடா…’ என்றாள்.

பட்டால் போலீஸ் வருமோ என்னமோ..

‘வரச் சொன்னாங்க..’

நான் வாசலுக்குக் கையைக் காட்டினேன்.

‘என்னடா வயத்துலே கடப்பாறை வச்சுக் கெல்லணுமா.. கொடுக்காப்புளி, ஜவ்வு மிட்டாய்னு கண்டதையும் மொசுக்கினா இப்படித்தான்..’

புவனா மூக்கைச் சுளித்துக் கொண்டு என் கையில் பிடித்த கார்பனேட் மிக்சரை எகத்தாளமாகப் பார்த்தாள். நான் லட்சியமே செய்யவில்லை.

அந்த ‘வானாகி மண்ணாகி’ சைவ சமய இலங்கை ஆசாமி பற்றி அவளிடம் சொல்லலாமா என்று ஒரு நிமிடம் நினைத்தேன். ஊஹும்.. சொல்லப் போவதில்லை. கடப்பாறை வச்சுக் கெல்லினாலும்..

‘யாருடா வரச் சொன்னா?’

மாமி என் பதிலை எதிர்பார்க்காமல் வாசலுக்குப் போக, நான் கூடவே நடந்தேன்.

வாசலில், டாக்டருக்கு மாலை போட்டார்கள், அவர் ஏதோ பேப்பரில் கையெழுத்து போட்டார். தடதடவென்று கை தட்டினார்கள்.

‘மஹாத்மா காந்திக்கு ஜே.. வந்தே மாதரம்..’

தியாகி டெய்லர் இருமலை அடக்கிக் கொண்டு கோஷம் போட்டார்.

‘டாக்டருக்கு ஜே போடுங்கய்யா..’

ஓட்டல் ராமுடு ஐயர் திருத்தினார்.

‘மருத்துவர் வாழ்கன்னு சொல்லலாமா.. பசங்க கை தட்டுவாங்க..’

நாடார் என்னைப் பார்த்துச் சொல்ல, கூட்டமாகச் சிரித்தார்கள்.

‘கிளம்புங்க.. இப்படியே ஊர்வலமாப் போய் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டியதுதான்..’

எல்லோரும் சத்தமாகப் பேசிக் கொண்டே படி இறங்கிப் போக, நானும், மாமியும், வீரபத்ரனும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

‘எவ்வளவு சந்தோஷமா இருக்கு.. பாத்துக்கிட்டே இருங்க அம்மா.. டாக்டர் ஐயா ஜெயிச்சு முனிசிபல் சேர்மனே ஆகப் போறார்..’

நான் வீரபத்ரன் முகத்தைப் பார்த்தேன். ஒரு செக்கோஸ்லோவேகியா சந்தோஷம் தெரிந்தது.

************************************************************

வக்கீல் மோகனதாசன் ஆபீஸ் களைகட்டி இருந்தது.

கோர்ட் கட்சிக்காரர்களை விட, சிவப்புத் துண்டு போட்டவர்கள் தான் சாதாரணமாக் இங்கே அதிகம் தட்டுப்படுவார்கள். இப்போது, கருப்புத் துண்டு போட்ட பழக்கடை அறிவரசன், முனியாண்டி விலாஸ் தங்கராஜு, ரிக்‌ஷா நாச்சியப்பன் என்று ஏகக் கூட்டம்.

வக்கீல் வேதாத்திரி ஐயங்காரும் அங்கே தான் இருந்தார். இவர் ஒருத்தர் தான் கூட்டத்தில் கதர் சட்டை போட்டவர்.

நாங்கள் இடம் கிடைக்காமல் படிக்கட்டில் இடித்துப் பிடித்துக் கொண்டு நின்றோம்.

‘உங்களுக்கு என்னடா இங்கே வேலை.. போய் விளையாடுங்கடா..’

யாரோ விரட்டினார்கள்.

‘இவங்கதான் நமக்கு பிரச்சார அணி.. என்ன உடன்பிறப்புக்களே.. உதவி செய்வீங்களா..’

அறிவரசன் போல் அண்ணன் கேட்டுக்கொண்டால் கார்பனேட் மிக்சரைக்கூட கடகடவென்று குடித்து விடலாம்.

‘நண்பர்களே.. இந்த வார்டில் அவங்க டாக்டர் சதானந்தத்தை நிறுத்தியிருக்காங்க.. செல்வாக்கு.. பணம்…நிறையவே இருக்கப்பட்டவர்.. அவரை எதிர்த்து நாம போராடி வெற்றி அடையறது சாதாரணம் இல்லே.. ஆனால் பேரறிஞர் பெருந்தகை சொன்னபடி..’

அறிவரசன் மூக்கால் பேசுகிறது போல், ஆனால் பிரமாதமாக இழுத்து இழுத்து, கணீரென்று பேசினார்.

வேதாத்திரி ஐயங்கார் கடியாரத்தைப் பார்த்தார். அவர் முசாபரி பங்களாவில் பாட்மிண்டன் விளையாடப் போகிற நேரம்..

‘மிஸ்டர் அறிவு அரசு..’ கேண்டிடேட்டை ஃபர்ஸ்ட்லே அனவுன்ஸ் பண்ணிடலாம்.. பிரஸ் ரிப்போர்ட்டர் காத்துண்டிருக்கார்.. ரெண்டு வரி நியூஸ்னாலும் நமக்கு ஸோ இம்பார்ட்டண்ட்.. என்ன நான் சொல்றது?’

அறிவரசன் தோளிலிருந்து நீளமாக தரையைத் தொட்ட துண்டால் முகத்தை மெல்லத் துடைத்துக் கொண்டார்.

‘மதிப்புக்குரிய வழக்குரைஞர் ஐயா அவர்கள் கேட்டுக் கொண்டபடி, நம் வேட்பாளர்.. எந்த அறிமுகமும் தேவையில்லாத, எளிய, தொண்டே தன் மூச்சாக உலவி வரும் நம் இனிய நண்பர்..’

பெரிய சரீரத்தைத் தூக்கிக் கொண்டு பாலுசாமி எழுந்து நின்று வணக்கம் சொன்னான்.

—————————————-

விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 4

டாக்டருக்கு மீன். பாலுசாமிக்கு சைக்கிள்.

கேட்டதும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. மீனை சுலபமாக சாக்குக் கட்டியாலோ பேனாவாலோ வரைந்து விடலாம். டிராயிங் மாஸ்டர் சொல்லிக் கொடுத்ததில் அதுதான் சுலபமாக வரைய முடியும். ஆனால் சைக்கிள்? ஓட்டத்தான் முடியும்.

ஒரு சுவர் விடாமல் மீன் வரைந்து தள்ளி விட்டார்கள். மிஞ்சிய இடத்தில் சைக்கிள் எழுத ஒருத்தன் பிரஷ்ஷும் கையுமாக அலைந்தான்.

வக்கீல் ஆபீஸுக்குப் பக்கத்து வீட்டில் ‘சைக்கிள்’ ஆபீஸ். நாங்கள் உள்ளே மும்முரமாக ஸ்லிப் எழுதிக் கொண்டிருக்கிறோம்.

‘தம்பிகளா… இதை காமிச்சுத்தான் ஓட்டுப் போட சாவடிக்குப் போகணும்.. பார்த்து.. ஜாக்ரதையா நம்பரும் பேரும் எழுதணும்..’

அண்ணன் அறிவரசன் சொன்னதை அப்படியே கடைப்பிடிக்கிறோம்.

பாலுசாமி சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். எங்களுக்கு முன்னால் தினத்தந்தியைப் பிரித்துப் போட்டு மூட மூட வேர்க்கடலை. நாச்சியப்பன் ஓரமாக உட்கார்ந்து ஒண்டிப்பிலி சர்பத்தைப் பெரிய பாத்திரத்தில் ஊற்றி எலுமிச்சம்பழம் பிழிந்து கொண்டிருந்தான். அவன் ரிக்‌ஷாவில் இரண்டு பக்கமும் சைக்கிள் சின்னம் எழுதிய தட்டி கட்டி, ஒலிபெருக்கி வைத்திருந்தது. சாயந்திரம் அதில் ஏறி நின்றபடி பாலுசாமி நகர்வலம் வருவான். முன்னால் கோஷம் போட்டுக் கொண்டு ஒரு பட்டாளம் போகும்.

மொத்த வார்டையும் ஐந்து நிமிடத்தில் சுற்றி வந்துவிட முடியுமென்பதால், அடிக்கொரு தடவை இந்த ஊர்வலத்தை நிறுத்தி யாராவது பேசுவார்கள்.

எலக்‌ஷன் ஊர்வலத்தில் எல்லாம் கலந்து கொண்டு, கோஷம் போட்டுக் கொண்டு, தட்டி தூக்கிப் போக எல்லா வீட்டிலும் அவசரத் தடைச் சட்டம் கொண்டு வந்தார்கள்.

ஊர்வலத்தில் போகாவிட்டால் என்ன? ஸ்லிப் எழுதுவது, வீடு வீடாக பிட் நோட்டீஸ் கொண்டு போய் வீசுவது என்று ஏகப்பட்ட வேலைகள்…

இதற்கும் கடுமையான எதிர்ப்பு இருந்தது. என்றாலும் அவ்வப்போது கவனிக்காத நேரம் பார்த்து நழுவிவிட முடியும். வாசலிலேயே ஈசிசேர் போட்டு உட்கார்ந்திருக்கிற தாத்தாவை சமாளிப்பது தான் கொஞ்சம் கஷ்டம். வேதாத்திரி ஐயங்கார் வீட்டிலிருந்து ‘சுவராஜ்யா’வும், ‘பவன்ஸ் ஜேர்னல்’ பத்திரிகையும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால், ஒரு நாள் பூரா அவர் பாட்டுக்குப் படித்து மகிழ்ந்து கொண்டிருப்பார்.

இந்த இரண்டு புத்தகத்தையும் தினசரி ‘இண்டு’ பேப்பர் மாதிரி போட வேண்டும் என்று அரசாங்கத்தில் சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

‘இண்டு’ பேப்பர் என்பது வாசல் தெளித்தவுடன், ஈரமான திண்ணையில் நல்லையா சைக்கிளிலிருந்தே வீசிவிட்டுப் போவது. நான் எழுந்து வெளியே வரும்போது தாத்தா ‘ஸ்போர்ட்ஸ் பேஜை’ திருப்பியிருந்தால், அடுத்த நிமிடம், கவாஸ்கரையும் வடேக்கரையும் மட்டையோடு பார்க்க ‘இண்டு’ என் கையில்.

அது என்னமோ.. இந்தப் பக்கத்தில், ‘யாரெல்லாம் செத்துப் போனது’ என்று படிக்க ஆரம்பித்தவுடன் தாத்தா முகத்தில் ஒரு சந்தோஷம்…

‘டாய்லெட் காலியா இருக்கா?’

நல்லையா தாமதமாக வந்து தொலைத்தால், கார்பனேட் மிக்சருக்காக நான் தான் ஓட வேண்டும். இண்டு பேப்பரை ஏழு மணிக்கு முன்னால் போட வேண்டும் என்று கூட ஒரு சட்டம் வேணும்…

தாத்தாவை விடக் கஷ்டமான மனிதர் அக்பரின் அத்தா. அதுவும் தெருக்கோடியிலேயே துணிக்கடை என்பதால் திடீர் திடீரென்று வீட்டுக்கு வந்து விடக்கூடிய அபாயம்.

நேற்று அக்பர் வீட்டில், கோந்து பாட்டில் எடுக்க நாங்கள் போனபோது அத்தா வந்து சேர்ந்தார். நழுவலாம் என்று பார்த்தால், வாசல் கதவை வேறு சாத்தி விட்டுப் பத்து நிமிடம் ஜீவராசன் மாதிரி பிரசங்கம்.. பாட்டாளி வர்க்கமும், சோவியத் புரட்சியும் வராத பிரசங்கம் அது..

‘லீவுன்னா லைப்ரரிக்குப் போய் நல்ல புத்தகமா எடுத்துப் படிக்கறது.. நாலு கணக்கைப் போட்டுப் பார்க்கறது..என்ன நான் சொல்றது..’

அக்பரின் அத்தா எங்களுக்கு முன்னால் நின்று முழங்கினார்.

‘கணக்கு யாராவது கொடுத்தா போடலாம்’ என்ன்

சீதரன் எப்பவுமே முந்திரிக் கொட்டைதான்.

‘நான் தரேண்டா.. மெகரு..’

சண்டாளி. திரைக்கு அந்தப் பக்கம் ஒட்டுக் கேட்டுக் கொண்டு இருந்து விட்டு, உடனே எங்கிருந்தோ பழைய நோட்டுப் புத்தகத்தில் கிழித்த பேப்பரும், நாலைந்து பென்சிலுமாக சந்தோஷமாக எடுத்துக் கொண்டு வந்து நிற்கிறாள்.

இவள், ‘குப்பி வீட்டுக்குப் போகணும்.. அக்பரைக் காணோம்… நீ வர்றியாடா’ என்று இனிமேல் வரட்டும்… பார்த்துக்கறேன்..

‘குப்பி வீட்டுலே முறுக்கு சுட்டு எடுத்தாந்தியேம்மா.. இங்கிட்டு கொண்டா’

அத்தா பிரசங்கத்துக்கு நடுவே இரைகிறார்.

தட்டோடு மெகர் வந்தாள். தட்டு நிறைய தேன்குழல்.

‘எடுத்துக்குங்கட.. சீக்கிரமே அக்பருக்கு மார்க்கக் கல்யாணம் வருது.. நீங்க எல்லாம் ரெண்டு நாள் சாப்பாடு இங்கே தான்.. இந்தப் பக்கம் சைவம்.. அந்தப் பக்கம் ஆம்பூர் பிரியாணி..’

வெறும் தரையைச் சுட்டு விரலால் பிரித்துக் காட்டினபோது அக்பர் முகத்தில் சின்ன பயம். இந்த வயசில் அவனுக்கு என்ன கல்யாணம்? இருந்தால், அதுக்காகப் பயப்படுவது நியாயம் தான் என்று பட்டது.

’மார்க்கக் கல்யாணம்னா என்ன சார்?’

கிரி கேட்டான்.

அத்தா சிரித்துக் கொண்டார்.

நான் ஆம்பூர் பிரியாணியைப் பற்றிக் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது ‘பனியன் எட்டே முக்கால் ரூபா மேனிக்கு எட்டு
பனியன் விலை என்ன’ என்ற ரீதியில் கணக்குகளைச் சொல்ல ஆரம்பித்தார். நான் போடுகிற சைஸா, பாலுசாமி போடுகிற மாதிரியா?

.’யாரு மொதல்லே சரியா விடை கண்டு பிடிக்கறீகளோ அவுகளுக்கு ஒரு பார்க்கர் பேனா நம்ம தரப்பிலே ப்ரைஸ்’

அத்தா நைச்சியமாகச் சொன்ன படி நாலு பக்கமும் பார்த்தார்.

தூ.. பேனா எல்லாம் பரிசில் சேர்த்தியா.. சொக்கா அத்தனையும் பொன்னாச்சே அத்தனையும் பொன்னாச்சே என்று ஓயாமல் புலம்ப வைக்கிறதாக இருக்க வேண்டாமோ அது…

என்னவோ, ஆளை விட்டால் போதும். தலைக்கு மேலே வேலை கிடக்கிறது. வீட்டில் வேறே முடி வெட்டிக்கொள்ளப் போகச் சொல்லி பிடுங்கல்..

அது போனோம் வந்தோம் என்று நடந்து முடிகிற காரியமில்லை. சரோஜா முடிதிருத்தகத்தில் குட்டி சைஸ் செக்கோஸ்லோவேகியா டிராக்டர் மாதிரி ஒரு பயங்கர மெஷினை குமாரவேலு அண்ணாச்சி என் தலையை வெடுக்கென்று கீழே தாழ்த்தி, பிடரியில் கரகரவென்று மேய விடும் அராஜகம்.

முடிந்து வீட்டுக்குப் போனால் இரண்டு நபர் கமிஷனாக அம்மாவும் தாத்தாவுமோ அல்லது அம்மாவும் அத்தையுமோ என்னை விதவிதமாகத் திரும்பச் சொல்லி தலையை மேற்பார்வையிட்டு, ‘வலது பின்னம்பக்கம்.. காதுக்குக் கீழே இன்னும் கொஞ்சம் குறைக்கலாம்..போடா.. நான் சொன்னேன்னு சொல்லி எடுத்துண்டு வந்துடு.. குளிக்க வென்னீர் போட்டு வைக்கறேன்..’

குமாரவேலு நிற்க வைத்தே இன்னொரு தடவை தலையில் ஆழ உழுது அனுப்புவார்…

குள்ளக் கிட்டு தான் முதலில் முடித்தான்.

‘சபாஷ் தம்பி.. இந்தா..பிடி.. களுவிட்டு மசியடைச்சுக்கோ’

அத்தா மேஜையைத் திறந்து சிமெண்ட் கலரில் ஒரு சுமார் புதுசு பார்க்கர் பேனாவை நீட்டினார்.

‘அத்தா .. அவன் ஆளுதான் குட்டை… டென்த் ஸ்டாண்டர்ட்..’

அக்பர் கிட்டுவின் முதுகைப் பார்த்துக் கொண்டு அலறினான்.

‘யா அல்லா’

அத்தா ஆச்சரியப்பட்டு முடிப்பதற்குள் பிய்த்துக் கொண்டு கிளம்பினோம்

————————————————

விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 5

முறை வைத்துக் கொண்டு மீன் ஆபீஸிலும் சைக்கிள் ஆபீஸிலும் ஒலிபரப்பு நடத்தினார்கள்.

மீன் ஆபீஸில் ‘கப்பலோட்டிய தமிழன்’ பாட்டும், ‘திருவிளையாடல்’ வசனமும் போட்டார்கள். ‘நதியில் விளையாடிக் கொடியில் தலை சீவி..சீவி.. சீவி..’ என்று கிராமபோன் மக்கர் செய்த போது நிறுத்தி, ‘நான் கவிஞனுமில்லை’ போட்டார்கள்.

‘இங்கே ஒரு வருஷமாக விஷக் கிருமிகள் பரவிக் கொண்டிருக்கின்றன.. காப்போம் தேசம். இல்லையென்றால் நாசம்’.. என்று எழுதி வைத்துக் கொண்டு யாரோ படித்தார்கள்.

சாயந்திரம் புவனா ‘பரிபாலய.. பரிபாலய.. பரிபாலய ரகுராமா’ என்று கச்சேரி செய்தாள். இப்படித் தினம் மிரட்டினால் டாக்டர் ஜெயித்து விடுவார்.

மீன் ஆபீஸ் சமாசாரம் அப்படி என்றால் சைக்கிள் ஆபீஸில் இப்படி -

அங்கே செல்லம் சவுண்ட் சர்வீஸ்காரர் திரும்பத் திரும்ப ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’ போட்டார். அப்புறம் மதுரையில் போய் ரிக்கார்ட் புதிதாக வாங்கி வந்து ராத்திரி பத்து மணிக்கு ‘தூங்காதே தம்பி தூங்காதே’ போட்டார்.

ஜீவராசன் ‘மைக் டெஸ்டிங் ஒன் .. டூ .. த்ரி…’ சொல்லி விட்டு ‘சிற்பி லெனின் பெயர் சொல்லும் பொழுதிலே அற்புத சிந்தனை தோன்றி வரும்’ என்று கட்டைக் குரலில் பாடினார். ‘பரிபாலய ரகுராமா’வுக்குச் சரியான போட்டி மிரட்டல் அது.

அறிவரசன் ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து, வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாம் தமிழர்’ என்று மைக்கில் பேச ஆரம்பித்ததுமே தெரிந்தது, இதை எங்க தமிழ் வாத்தியார் கார்மேகம் தான் எழுதிக் கொடுத்திருக்கிறார் என்று. லீவ் லெட்டர் எழுதினாலும் அப்படித்தான் அவர் தொடங்குவது வழக்கம்.

வேதாத்திரி ஐயங்கார் சைக்கிள் ஆபீஸில் மைக்கைப் பிடித்து இருமித் துப்பி, ‘சுவராஜ்யாவிலே பெரியவா என்ன எழுதியிருக்கான்னா..’ என்று பேசியபோது தாத்தா முகத்தைப் பார்த்த மாத்திரத்தில், அவர் ஓட்டு பாலுசாமிக்கு என்று தெளிவாகியது – ‘இண்டு’ பத்திரிகை சரியாக நேரத்துக்கு வரும் பட்சத்தில்.

காம்ராஜ் வருகிறார்… எம்ஜியார் வருகிறார் என்று எல்லாம் பேச்சு அடிபட்டது.

‘இல்லை.. வரமாட்டார்.. நம்பாதே..’

நாகேஷ் வசனம் முழுவதும் மனப்பாடம் ஆனது.

‘சந்தைக்கடை மாதிரி ஒரே இரைச்சல்..’

தாத்தா ஹியரிங் எய்டைக் கழற்றியபோது அன்றைய ஒலிபரப்பு முடிவடைந்தது.

************************************************************************************************

’டாக்டர் சதானந்தம் மச்சினியோடு ஐலசா..’

வாரச் சந்தைக்கு வியாழக்கிழமை போய்க் கொண்டிருந்தபோது சுவரில் எழுதியிருந்ததை சுந்தரம் பலமாகப் படித்தான்.

சந்தைக்குப் போவது சாதாரணமாகப் பெரியவர்கள் செய்வது. ‘லீவு தானே.. இப்பப் பழகிக்காட்ட எப்பப் பழகிக்கறது..’ என்று எல்லா வீடுகளிலும் இருந்து எங்களைப் பையும் கையுமாகத் துரத்தி விட்டார்கள். சீதரன் வீட்டில் ஒவ்வொரு காய்கறி விலையும் உத்தேசமாகக் குறித்த துண்டுச் சீட்டு கொடுத்திருந்தார்கள். அதற்கு மேல் விலை கொடுக்கக் கூடாது. அவ்வளவு தான்.

‘ஐலசான்னா போட்டுலே போறது தானே..’

சீதரன் கேட்டான்.

‘ஐலசா இல்லேடா.. ஜல்ஸா…’

கிரி சொன்னான்.

இந்த வார்த்தையை வேறு எங்கேயோ பார்த்திருக்கிறோமே…

நினைவு வந்து விட்டது. காயாம்பு பெட்டிக்கடையில் கடலை மிட்டாய் பாட்டிலுக்குக் கீழே ‘இந்து நேசன்’ என்று போட்டு ‘குட்டி நடிகையோடு இன்னார் ஜல்ஸா’ என்று பெரிய எழுத்தில் அச்சான பேப்பர் தொங்குமே..

‘ஜல்ஸான்னா என்னடா?’

இதெல்லாம் சரியாகச் சொல்லக் கூடிய குள்ளக் கிட்டு வரவில்லை.

இது ஏதாவது நடிகை.. நடிப்பு.. பாட்டுப் பாடுவது சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கு,.. லெட்டர் கொடுக்கிறது மாதிரி கெட்ட காரியம்…

ஆம்பளையும் பொம்பிளையுமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டு.. பாட்டுப் பாடிக்கொண்டு..

புவனாவுக்குத் தெரிந்த ஒரே பாட்டு ‘பரிபாலய’ தான். சும்மா பாடினாலே பின்னாலிருந்து யாரோ குரல்வளையை நெரிக்கிற மாதிரி இருக்கும். கட்டிப் பிடித்தால் பாட்டு வருமா.. அதுவும் டாக்டரை..

இவர் ஐந்தடி தான் இருப்பார். அவள் ‘உசரமா சிவப்பா லிஸ் டெய்லர் மாதிரி’ இருப்பதாக கிருபாகரன் அண்ணன் வகையறாக்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டிருக்கிறோம். அம்மா கூட ‘கோயில் அம்மன் விக்ரகம் மாதிரி லட்சணமான பொண்ணு புவனா’ என்று எப்போதாவது சொல்வாள்.

ஒருத்தரே எப்படி அம்மன் ஆகவும், டெய்லராகவும் இருக்க முடியும் என்று தெரியவில்லை.

அது போகட்டும்.. புவனா ஏன் டாக்டரைக் கட்டிப் பிடித்துப் பாட வேண்டும்? பைண்டு செய்த தொடர்கதை படிக்காத நேரத்தில் மாமியே இதையெல்லாம் செய்யலாமே.. ஊஞ்சலில் உட்கார்ந்து வீசி வீசி ஆடுவது தவிர, சமயத்தில் அதில் படுத்திருக்கிற டாக்டருக்கு தலைவலி மருந்து தேய்த்து விடுகிற மாமியை விகடன் இரவல் வாங்கப் போனபோது பார்த்த ஞாபகம்.. அதெல்லாம் ஜல்ஸாவில் சேர்த்தி இல்லையோ..

ஒரு மண்ணும் விளங்கவில்லை. இருந்தாலும் ஒரு குறுகுறுப்பு.. வீட்டுக்குப் போனதும், குள்ள கிட்டுவைப் பார்க்க வேண்டும் ஜல்ஸா என்றால் பாட்டு மட்டும் இருக்காது.

‘கத்திரிக்காய் கிலோ ஒரு ரூபாய்க்குத் தருவீங்களா?’

கண்டிப்பான குரலில் கேட்டோம்.

‘தங்கமா எடுத்துட்டுப் போங்க.. எட்டணான்னு தான் கொடுத்துக்கிட்டிருக்கேன்..’

***********************************************

கிருபாகரன் சாப்பிட்டு விட்டு ஓட்டமும் நடையுமாக வந்தான். கையில் மஞ்சளும் சிவப்புமாக ஏதோ பத்திரிகை.

‘எனக்கு கானா நியூஸ் வந்திருக்குடா..’

கவரை வாங்கிப் பார்த்தோம். ‘மங்கத் தயிரம்மா, கேர் ஆப் ராம்நிஜம் நாயுடு’ என்று விலாசம் எழுதி, இருபத்து நாலு பக்கத்துக்கு இருந்தது. எல்லாப் பக்கத்திலும் நல்ல கருப்பாக ஒருவர் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். அதே சாயலில் ஏழெட்டுப் பேர் டமாரம் வாசிக்கிர படம் கடைசிப் பக்கத்தில்

‘பிரேக் வசந்த’த்துக்கு உறை போடக்கூட வராது.. என்றாலும் இது மாதாமாதம் வரும் போல் தெரிகிறது.

‘ஏண்டா இது உங்க பாட்டி பெயருக்கு மட்டும் வந்திருக்கு?’

‘நான் எல்லோர் பேர்லேயும் தாண்டா அனுப்பிச்சேன்.. அவங்க என்னமோ இது மட்டும் அனுப்பியிருக்காங்க..’

கண் சரிவரத் தெரியாமல், சதா கை உரலில் வெற்றிலை பாக்கு இடித்துக் கொண்டு, ‘தம்புடு பாக உந்தியா’ என்று நிலைப்படியில் யாராவது வருகிற சத்தம் கேட்டால் விசாரித்துக் கொண்டு பாக்கி நேரம் இருமிக் கொண்டு திண்ணையில் இருக்கப்பட்ட மங்கத்தாயாரம்மாளுக்கு கானா நாட்டு சமாசாரங்களை உடனுக்குடன் அறிவிப்பது தலை போகிற காரியமாக அவர்கள் நினைத்திருக்கலாம்.

‘எலோருக்கும் வந்தாச்சுடா.. ஏதாவது புஸ்தகம்.. பேப்பர்னு.. பாவம்டா சுந்தரம்.. அவனுக்கு இன்னம் வரலே..’

‘எனக்கு நேத்து ஜீவ வெளிச்சம் சர்ட்டிபிகேட் வந்ததே..’

சுந்தரம் விட்டுக் கொடுக்காமல் சொன்னான்.

அதில் நாங்களும் சேர்ந்து பாதியில் விட்டுவிட்டோம்.. வாரா வாரம் பைபிள் சம்பந்தமாகக் கேள்வி அச்சடித்த காகிதம் அனுப்புவார்கள். ‘காயினின் சகோதரன் பெயர் என்ன’ என்பது மாதிரிக் கேள்விகளுக்கு வேறு யாராவது எந்தத் தெருவிலாவது எழுதியதை வாங்கி வந்து பொறுமையாகப் பார்த்து எழுதி அனுப்பினால், அதைத் திருத்தி, ‘ஏசுவை விசுவாசி’ என்று எழுதி முன்பாரம் பின்பாரமாகச் சிலுவை வரைந்து கையெழுத்து போட்டுத் திருப்பி அனுப்புவார்கள். நாலு தடவை இப்படி கடிதப் போக்குவரத்து நடந்து முடிந்ததும் ஒரு சர்ட்டிபிகேட்டும், சின்னச் சின்னதாக நாலு புத்தகமும் வரும். ‘தேவ ஊழியம் செய்ய வாருங்கள்’ என்று சுந்தரத்துக்குக் கடிதம் கூட அச்சடித்து வந்திருக்கிறது.

‘இப்ப வரத் தோதுப்படாதுன்னு எழுதிடுடா.. எலக்‌ஷன் இருக்கு..’

எழுதினானா என்று தெரியவில்லை.

’ராமு போய்ச் சாப்பிட்டு வரலாமா..’

நான் சைக்கிள் ஆபீசிலிருந்து வெளியே வந்தேன்.

சுட்டெரிக்கிற வெய்யில். விஷ்ணுபுரத்தில் வருஷம் முழுக்க வெய்யில் தான். கோடை விடுமுறையை இன்னும் கூட இரண்டு மாதம் நீட்டிக்கலாம்.

இரண்டு மாதத்தில் நாலு கானா நியூஸ் வரும்.. கொடுத்து வைத்தவர்களுக்கு..

———————————————————-

விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 6

நான் உள்ளே நுழைந்தபோது, வீட்டுக் கூடத்தில் மெகருன்னிஸா.

இப்படிச் சுவரில் சாய்ந்து கொண்டு, காலை நீட்டிக் கொண்டு தொடர்கதை படிப்பதை அசன் ராவுத்தர் பார்த்தால் தொலைந்து விடுவார்.

அம்மாவுக்கு அவள் என்னமோ செல்லம். நித்தியப்படிக்கு மதியம் இங்கே தான். அம்மாவுக்கு எம்பிராய்டரி தெரியும். அதைக் கற்றுக் கொள்ள வருவதாகச் சாக்கு.

’நீங்க வச்ச மைசூர் ரசம் ரெம்ப நல்லா இருந்திச்சு மாமி… இவஹளே பூராக் குடிச்சுட்டாஹ..’ என்று அக்பரின் உம்மா கொல்லைக் கதவைத் திறந்து அம்மாவிடம் சொல்லவும், ‘உங்க நிலத்திலே பயிர் பண்ற வெள்ளரிக்கா தேவாமிர்தமா இருக்கு’ என்று அம்மா சர்ட்டிபிகேட் கொடுக்கவும் மெகர் மூலமாகப் பண்டமாற்று செய்யப்படுகிறது.

‘புவனா நல்ல பிள்ளை மாமி… யார் வம்புக்கும் போக மாட்டா.. என்ன, கொஞ்சம் ஹெட்வெயிட் அதிகம்.. காலேஜ்லே படிக்கிறா இல்லே.. அத்தா அனுப்பியிருந்தா நானும் காலேஜ் போயிருக்க மாட்டேனா என்ன..’

தெருமுழுக்க புவனா பேச்சுத்தான்.

‘கண்டிப்பா.. உன் புத்திசாலித்தனத்துக்கு கலெக்டராக் கூட வரலாம்.. தட்சணம் நிலைமையையும் பார்க்க வேண்டியிருக்கேடி..கலிகாலம்டியம்மா.. கலி..’

‘சும்மா வெளையாட்டா வேணும்னு எழுதியிருப்பானுங்க, மாமி..’

வேணும்னு எழுதினானோ வினையா எழுதினானோ.. எழுதியாச்சு.. படிச்சாச்சு..’

’யார் மாமி எழுதியிருப்பாங்க.. சைக்கிள் காரங்களா இருக்குமோ..’

பேச்சு என்னைப் பார்த்ததும் நின்றது. சைக்கிள்காரன்.

‘இவனை ஏன் மாமி எலக்‌ஷன் ஆபீஸுக்கு விடறிங்க… அக்பர் பயலும் சொன்னது கேக்காம அங்கே தான் ஓடுறான்.. லீவுன்னா பழைய பாடத்தை எல்லாம் மறக்காம எழுதிப் பார்க்கலாமில்லே..’

முக்காடும், நீளமான தலைமுடியுமாக புடவையில் இருக்கிற அசன் ராவுத்தர்..

‘நல்லா சொல்லுடியம்மா.. இவங்க அப்பாவும் என்ன ஏதுன்னு கேக்கறது இல்லே.. வாசல்லே இருக்கறதோ பரப்பிரம்மம்.. இண்டு பேப்பரே கைலாசம்.. பவான்ஸ் ஜேர்னலே வைகுந்தம்.. முக்காட்டைக் அடிச்சு எச்சப் பண்ணாதேடி.. காலை மடக்கி உக்காரு..’

அம்மா ரெண்டு சைடிலும் கோல் போடுவாள்.

அக்பரின் அத்தா எங்களைக் கணக்குப் போட வைத்த பிரதாபங்களை மெகர் அம்மாவிடம் விஸ்தாரமாகச் சொல்லிக் கொண்டிருந்தபோது நான் சமையல்கட்டில்.

‘அஞ்சு என்ன.. ராவுத்தர் அம்பது கணக்கு கொடுத்திருக்கணும்..’

அம்மா உள்ளே வந்தாள்.

‘கொஞ்சம் இரு.. இவனுக்கு சாதம் போட்டு அனுப்பிட்டு எம்ப்ராய்டரி ஆரம்பிக்கலாம்..’

‘அந்த அக்க சொல்றதை நம்பாதே அம்மா.. அவளுக்கு எம்ப்ராய்டரியும் வராது ஒண்ணும் வராது…சோம்பேறி..’

வாயில் அவசரமாக சாதத்தை அடைத்துக் கொண்டேன்.

‘பாவம்டா.. உனக்கு அக்கா இருந்தா .. இந்த மாதிரி.. இதே வயசு தான் இருக்கும்.. ஒரே மாசம்.. ரெணடு நாள் தான் வித்யாசம்.. இவ உம்மாவும் நானும் பக்கத்துப் பக்கத்துலே ஆஸ்பத்திரியிலே… ஒரு வ்யசுலே ஜன்னி வந்து உங்க அக்கா..’

அம்மா கண்கள் நிறைவதைப் பார்க்க சங்கடமாக இருந்தது.

திடீரென்று சிரித்தாள்.

‘நீ பொறந்த போதும் அதே மாதிரி பக்கத்து கட்டில்லே உம்மா.. வயத்துலே அக்பர்.. நீங்க ரெண்டும் சித்திரைச் சுழியன்கள்..’

‘மாமி.. நாளைக்கு உம்மாவும் அத்தாவும் நிலத்தைப் பார்க்க நெட்டூர் போறாங்க.. நன் உங்க வீட்டுலே சாப்பிட்டுக்கட்டா..’

மெகர் சமையல்கட்டு கதவைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.

‘பேஷா.. உனக்கு என்ன பிடிக்கும்… பருப்பு உசிலி தானே.. பண்ணிடறேன்..’

எனக்கும் இப்படி ஒரு அக்கா இருந்தால் தலை வாரி விடுவாள். கண்ணில் தூசு விழுந்தால் மெல்ல ஊதி எடுப்பாள். சயின்ஸ் நோட்டில் படம் போட்டுக் கொடுப்பாள். மர்கழி மாதம் வாசலில் பெரிய கோலம் போடுவாள்.

மெகருன்னிஸா கோலம் போடுவாள்?

————————————————————————————————————————-
————————————————————————————————————————–

டாக்டர் சதானந்தத்தை எத்தனையோ தடவை வக்கீல் மோகனதாசன் வீட்டுத் திண்ணையில் பார்த்திருக்கிறோம். மோகனதாசனுடனோ, ஜீவராசனுடனோ, இல்லை வருகிற சிவப்புத் துண்டுக்காரர்களிடமோ ஊர் வம்பு பேசிக்கொண்டு..

இது சாதாரணமாக ராத்திரி ஒன்பது மணிக்கு அவர் சாப்பிட்டு விட்டு பனியனுடன் வெளியே வரும்போது நடக்கும்.

அப்பா கூட சில சமயம் அங்கே போய் நிற்பார். ராத்திரி பதினொரு மணி வரை ‘பிரிவீபர்ஸ்’ என்று ஏதோ மணி பர்ஸ் மாதிரியான சமாச்சாரங்களைப் பற்றிப் பேச பெரியவர்களால் தான் முடியும்.

இப்போது நல்ல பகல் நேரம். மோகனதாசன் ஆபீஸில் டாக்டர் சதானந்தம், அவர் கூட தியாகி, நாடார், ஓட்டல் காரர்.. இன்னும், பரோபகாரி வரதன்..

நான் சாப்பிட்டுவிட்டு சைக்கிள் ஆபீஸில் நுழைந்தால் அது முழுக்கக் காலி. கூட்டம் எல்லாம் இங்கே தான்.

‘உங்களுக்கு ஓட்டுப் போடணும்னா ஒழுங்கா முறையாக் கேட்டுட்டுப் போங்க.. இது இன்னும் விஷ்ணுபுரம் அக்ரஹாரம் தான்.. பாரதியார் தெருன்னு பேர் வச்சதாலே மாறிப் போயிடலே.. உங்க வக்கீல் ஆபீஸை இங்கே விட்டதே தப்பு.. அந்த மிதப்பிலே நீங்க தெருவிலே போறவனை எல்லாம் கேண்டிடேட்டாக்கி.. ஒரு அந்தஸ்து வேணாம் டாக்டரோட மோத.. ஜெயிக்கப் போறதில்லேன்னு தெரிஞ்சதும் இப்படி ஆளை விட்டு, அசிங்கமா சுவத்துலே எழுதறது.. ஏன், மாதவ்ன் கிட்டே எழுதிக் கொடுக்க வேண்டியது தானே.. தமுக்கு அடிச்சுண்டு போய் ஊரெல்லாம் சொல்வான்..’

வரதன் கீச்சுக் கீச்சென்று அலறுகிறான்.

மூச்சு விடாமல் பேசியதால் வாயிலிருந்து எச்சில் வடிய, எங்களை முறைத்து விட்டுப் புறங்கையால் துடைத்துக் கொண்டான்.

வரதன் எப்போதோ ‘பரோபகார நிதி’ என்று ஆரம்பித்து, பணம் சேர்த்து, கம்பி நீட்டி விட்டுத் திரும்ப வந்ததாகத் தாத்தா சொல்வார். பார்த்தால் அப்படித் தெரியாது. நான் பிறந்ததிலிருந்து ஒரே வயதில் தான், காப்பிக் கொட்டை கலர் சட்டையும் நீர்க்காவி வேஷ்டியுமாக இருக்கிறான்.

நாடார் முகத்தைச் சுளிக்கிறார். டாக்டரும் தான். வரதனை ஏன் அப்புறம் கூடக் கூட்டி வர வேண்டும்?

தடாரென்று ஜீவராசன் எழுந்தார்.

‘இந்த உள்ளூரான்.. வெளியூரான்.. இந்தத் தெரு.. அடுத்த தெரு.. பேச்சு எல்லாம் இனியும் வேணாம்.. நீங்க விருப்பப் பட்டாலும் இல்லேன்னாலும் அக்ரகாரமும் சேரியும் செட்டித் தெருவும் வன்னியத் தெருவும் வலையத் தெருவும் இனிமே இருக்கப் போறதில்லே.. அசன் ராவுத்தர் இங்கே வந்து வீடு கட்டிப்பாரு.. ஜகன்னாத ஐயர் மிலிட்டரியிலேருந்து ரிடையர் ஆகி வந்து, மசூதி இருக்கிற ஆசாத் தெருவிலே விலை படிஞ்சு வந்தா வீடு வாங்கிக் குடி போவாரு.. என்னை மாதிரி ஆளுங்க சேரியைத் தாண்டி இப்படி துண்டு போட்டுக்கிட்டு வீதி நெடுக நடப்போம்.. ஒருத்தனும் ஏன்னு கேக்க முடியாது.. அது போறது.. விஷயத்துக்கு வருவோம்.. எவனோ எதையோ எங்கேயோ கிறுக்கினா நாங்க ஏன் பழி சுமக்கணும்.. டாக்டர் எங்க எல்லோருக்கும் நல்ல நண்பர்.. இந்த மாதிரி அசிங்கமா நாங்க நினைக்கக் கூட மாட்டோம்.. ஒரு வக்கரித்த மனசை இப்படி பெரிசு படுத்தறதை விட, ஒரு பக்கெட்டிலே தண்ணியும், பழைய துணியும் எடுத்துப் போய் கிறுக்கினதை அழிச்சுட்டி நாம இனி ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.. உங்களுக்கு முடியாட்ட நானே செய்யறேன்..’

கை தட்டினால் உதைப்பார்கள்.

‘மிஸ்டர் ஜீவா.. நீங்க எழுதினதா சொல்லலே.. உங்க ஆளுங்க.. முக்கியமா ஒரு அடிமட்டத் தொண்டன்.. பேரு சொல்றேனே.. ரிக்‌ஷா நாச்சியப்பன்.. அவனை புதன்கிழமை ராத்திரி சந்தைக் கடைப்பக்கம் பார்த்தா ஆளு இருக்கு..’

நாடார் சொன்னார்.

‘ஐயோ சாமி எனக்கு நாலு எழுத்து தெரிஞ்சிருந்தா நா ஏன் ரிக்‌ஷா மிதிக்கறேன்..’

நாச்சியப்பன் அழாத குறையாகச் சொன்னான்.

‘நாச்சியப்பா.. நீ சந்தைக்கடைப் பக்கம் போனியா?’

மோகனதாசன் கேட்டார்.

நாச்சியப்பன் தலை குனிந்திருந்தது.

‘எதுக்குப் போனே..’

‘அது .. சாமி.. அதெல்லாம் எதுக்குங்க..’

‘சொல்லு… கேப்போம்..அட சொல்லுப்பா..’

‘அது.. வந்து.. சும்மாத்தான்..’

’நீங்க போங்கடா..’

அதிசயமாக அறிவரசன் அண்ணன் எங்களை விரட்டினார்.

‘கிரக்கி.. ராத்திரி.. ஜாலியா..;

பம்மிப் பம்மி நாச்சியப்பன் குரல் அரைகுறையாகக் காதில் விழுந்தது.

‘அதாண்டா ஜல்ஸா..’

குள்ளக் கிட்டு கண்ணடித்தான்.

———————————————

விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 7

இன்று மீன் ஒலிபரப்பு இல்லை. சாயந்திரம் ‘பரிபாலய ரகுராமா’ இல்லை. டாக்டர் வீட்டில் இருந்து அழுகை சத்தம்.

‘நீ என்ன காப்பி கொண்டு போறது.. நான் சாதம் போட மாட்டேனா.. எங்கேயோ ஒழியறேன்… எல்லாரும் சௌக்கியமா இருங்கோ.. சந்தி சிரிச்சா என்ன போச்சு?’

டாக்டர் வீட்டு மாமி குரல் தான்.

மாமி விடுவிடுவென்று படி இறங்கிப் போனாள்.

‘அம்மா..’

வீரபத்ரன் பின்னாலேயே ஓடினான்.

‘விடுடா வீரபத்ரா.. நெட்டூருக்கு நிலத்தைப் பார்க்கப் போரேன்.. எங்க அப்பா சாகறபோது மஞ்சக்காணி சொத்தா கொடுத்துட்டுப் போனார் மகானுபாவன்.. அது தாண்டா எனக்கு கொழந்தை.. மனுஷா எல்லாம் கபடம்..’

பஸ் ஸ்டாண்டை நோக்கிப் போகிற மாமி…

‘சமையல் மாமியை தோசை மாவை அரைக்கச் சொல்லு.. காலம்பறயே ஊறப்போட்டது..அரை உப்பு போட்டா போதும்.. கல்லுப்பு..’

போகிற போக்கில் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்து விட்டுப் போனாள்.

சைக்கிள் ஆபீஸில் பாட்டுப் போட ஆரம்பித்ததும், ஜீவராசன் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

நாங்கள் வேறு தெருக்களில் வேடிக்கை பார்க்கப் போனோம். படகு, இங்க் பாட்டில், குடை, கடியாரம், ரேடியோ என்று ஊரே ஏகக் களேபரமாக இருந்தது.

‘குதிரை வீரன்’ சின்னத்துக்காக வேலாயுதசாமி கோவில் தெருவில் ஒரு சின்னப் பையன் குதிரையில் உட்கார்ந்து கொண்டு ‘நாயினா ..எறக்கி விடு.. ஒண்ணுக்கு’ என்று நச்சரித்தான்.

’ஊரில் நூத்து நால்பத்துநாலு தடையுத்தரவு போடப் பட்டுள்ளது’ என்று அறிவிக்க மட்டுமே பயன்பட்ட குருசாமி ஆசாரியின் சவுண்ட் சர்வீஸில் கூட யாரோ மைக் வாடகைக்கு எடுத்து, ‘ஒய்ங்ங்க்… ஒய்ங்ங்க்.’ என்ற ஓட்டை ஸ்பீக்கர் சத்தத்துக்கு நடுவே ‘படகு.. படகு..’ என்று பேசினார்கள்.

திரும்பி வந்தபோது, அக்பர் வீட்டு மாடியில் விளக்கு எரிந்தது.

‘சைவ சமயக் குரவர் நால்வர்..’

போன வருஷப் பாடத்தை அக்பர் படிக்கிற சத்தம். குப்குப் என்று ரயில் எஞ்சின் போல புகை.

அத்தா கோபமாக இருந்தால் சுருட்டு பிடிப்பார்.

————————————————————————-

பொழுது விடிந்து அதிகாலையில் குளத்தில் குளிக்கப் போன பாலுசாமியை யாரோ இருட்டில் கத்தியால் குத்தி விட்டு ஓடி விட்டார்கள். ஏராளமான ரத்த சேதத்தோடு அவனை மதுரை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிப் போனார்கள்.

கடை வீதியில் தியாகி டெய்லரின் தையல் கடை காலையில் பற்றி எரிந்து கொண்டிருந்தது.

நாச்சியப்பனை யாரோ துரத்தித் துரத்தி அடித்து அவன் ரிக்‌ஷாவையும் நொறுக்கினதாகப் பேச்சு…

தாத்தா வாசல் திண்ணையில் இருந்து கூடத்துக்கு நாற்காலியை மாற்றிக் கொண்டு, விட்ட இடத்திலிருந்து பவன்ஸ் ஜெர்னலைப் படிக்க ஆரம்பித்தார்.

‘இவன் வெளியே இறங்கினா காலை உடச்சுடு..’

அப்பா ஆபீஸ் போகிறபோது எட்டு ஊருக்குக் கேட்கிற குரலில் சொல்லி விட்டுப் போனதைக் கடைப்பிடிக்க அம்மாவுக்குக் கஷ்டமில்லை.

தெரு முழுக்க சிறைகள்… கிழவிகளோடு பல்லாங்குழி விளையாட நிர்ப்பந்திக்கப்பட்ட கைதிகள்.

ஒற்றைப் போலீஸ்காரன் கையில் பிரம்போடு சாவகாசமாக நடந்தபோது, பக்கத்துத் தெருக்களில் ஒலிபரப்புகள் சத்தமாக முழங்கிக் கொண்டிருந்தன.

ஒரு சாக்பீஸ்… ஒரு சுவர்.. மீனும் சைக்கிளும் போன இடம் தெரியவில்லை.

ஜல்ஸா என்றால் சந்தோஷமில்லை. பயங்கர பூதம்.

——————————————————————————————-

’மெழுகுவர்த்தி எங்கே தொலஞ்சது?’

‘இருட்டிலே வாசப்பக்கம் போகாதேடா… கதவைச் சார்த்து…’

‘உங்களுக்கு ஒண்ணுமில்லே… ஹியரிங் எய்டைக் கழட்டி வச்சுட்டுப் படுத்துக்குங்கோ.. .’

‘டார்ச் லைட் தலைமாட்டுலே தான் இருக்கு.. இண்டு பேப்பரை மடிச்சு பத்திரமா வச்சாச்சு.. எத்தனை தடவை தான் சொல்றதோ…’

‘எலக்‌ஷனும் மண்ணும் எதுக்காக வர்றதோ.. முனிசிபாலிடி ஆகலேன்னு யாரு அழுதா..வருஷம் பூரா தண்ணி கிடையாது.. மண்ணெண்ணை கிடையாது.. சக்கரை கிடையாது… க்ரண்டு வேறே இப்படி போயிடும்..’

‘எல்லோரையும் உள்ளே இருக்கச் சொல்லிட்டு இவர் எங்கே போனார்… தெருக் கோடியிலே நின்னு வம்பு பேசற நேரமா இது..’

‘என்ன சொல்றேள்.. டாக்டர் மாமியா.. எப்போ… நெட்டூருக்குப் போயிருக்கான்னு சமையல் பண்ற ராயர் மாமி சொன்னாளே…;

‘ஆமா.. நெட்டூர்லே ராவுத்தர் நிலத்துக்குப் பக்கத்து நிலம் தானே மாமிக்கு மஞ்சக்காணி.. ராவுத்தர் நல்ல வேளை தெய்வம் மாதிரி போயிருக்கார்….’

‘கிணத்துலே இருந்து ராவுத்தரா தூக்கி விட்டார்? யானை பலம்னா அவருக்கு.. இல்லாட்ட மங்களம் மாமியை கயிறு கட்டியில்லே இழுக்கணும்…’

‘மோகனதாசன் கார் அங்கே எங்கே வந்தது? மதுரையிலே பாலுசாமியை ஆஸ்பத்திரியிலே சேர்க்க வக்கீல் கார்லே போனாராமா?’

‘பாலுசாமிக்கு எப்படி இருக்காம்? பொழச்சுண்டுட்டானா… அப்பாடி.. எத்தனை மலை போயிருக்கான்.. பகவான் கண்ணை மூடிண்டு இருந்துடுவானா என்ன.. என்னமோ போறாத காலம்… எலக்‌ஷன்.. மண்ணாங்கட்டின்னு..’

‘மாமிக்கு ஒண்ணுமில்லையே.. மெல்ல போய்ப் பார்த்துக்கறேன்.. ராவுத்தருக்கும் உம்மாவுக்கும் தான் அவா நன்னியோடு இருக்கணும்… போக வேண்டிய உசிரைப் பிடிச்சு இழுத்துண்டு வந்திருக்காளே…’

‘படுடா போய்… பெரியவா பேசறபோது எல்லாம் வாய் பாத்துண்டு..குறுக்கே பேசிண்டு..’

—————————————————

விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 8

’நீ தமிழ்நாடு தானே..’

இருபது வருடமாக டெல்லியில் இருக்கிறேன். தமிழ்நாட்டில் எனக்கு என்று அரை அடி மண் கூட இல்லை. இங்கே முன்னீர்காவில் இரண்டு அறை கொண்ட, சுவர்கள் ஈரம் பூரித்து நிற்கிற, கழிவுநீர் தினம் அடைத்துக் கொள்கிற டி.டி.ஏ ஃப்ளாட் இருக்கிறது. பத்திரிகைக்காரன் என்பதால் பிழைத்துப் போ என்று கொடுத்தார்கள். என் மனைவி மராத்தி பேசுகிறாள். பள்ளிக்கூடம் போகிற பிள்ளை, ‘காய்கோ கூப்பிடறே சும்மா.. அப்பன் வெரி பிஸி..’ என்று புதிய மொழி பேசுகிறான். தமிழ்ப் பத்திரிகைக்காகவும், இட்லி சாம்பாருக்காகவும் எப்போதாவது காரை எடுத்துக் கொண்டு கரோல் பாக் வருகிறேன். பிள்ளைக்குத் தமிழ் சொல்லித் தரவில்லையே என்ற குற்ற உணர்ச்சி அப்போதெல்லாம் பலமாக உண்டாகிறது.

என்றாலும் நான் ’மதராஸி’ தான். தமிழ் பேசுகிறவன்..

‘விஷ்ணுபுரம் தெரியுமா?’

பத்திரிகையின் ஆசிரியர் தொடர்ந்து என்னைக் கேட்கிறார்.

‘பிறந்த ஊர் சார்..’

என் குரல் எனக்கே கொஞ்சம் பலமாக ஒலிக்கிறது. முப்பத்தைந்து வயதுக்கு மேல் உணர்ச்சி வசப்படுவதைக் குறைத்துக் கொள்ளாவிட்டால் உடம்புக்கு காலக் கிரமத்தில் ஏதோதோ வரலாம்… காலக் கிரமம்… மயில் வாகனம்… வணக்க்ம் கூறி விடை பெறுவது…

‘என்னப்பா யோசனையிலே மூழ்கிட்டே.. நீ உடனே விஷ்ணுபுரம் போ.. அங்கே இடைத் தேர்தல் நிலவரத்தைப் பத்தி ஒரு அனலைசிஸ் அனுப்பு.. நாடே கவனிக்கிற தேர்தல் இது.. அணிகள் சிதறியும் உருவாகியும் வர்ற சூழ்நிலை…’

ஆங்கிலப் பத்திரிகை. தேர்தலுக்குப் பதினைந்து நாள் முன்னால் தான் இப்படி விழித்துக் கொண்டு போகச் சொல்கிறார்கள். நான் புரட்டிய தமிழ்ப் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் ஏற்கனவே நிறைய அலசி விட்டார்கள். அவர்கள் எல்லாவற்றையுமே அலசுகிறார்கள்.. அரசியல் அலசல்.. சினிமா அலசல்… விலைவாசி அலசல்.. கலவர அலசல்… கலாச்சார அலசல்…வானிலை அலசலும் நீர்மட்ட அலசலும் தான் பாக்கி…

என் பங்குக்கு நானும் அலச வேண்டும்.

‘நாளைக்கு காலை மெட்ராஸ் ஃப்ளைட்..’

—————————————-

இருள் பிரியாத அதிகாலை. விஷ்ணுபுரத்தில் என்னை இறக்கி விட்டுத் தெற்கே போனது ரயில்.

எல்லா ரயில் நிலையத்துக்கும் ஒரே முகம்.. வாச்னை.. ஊருக்குள்ளேயே இருந்தாலும் ஊரோடு கலக்காமல்.. பஸ் ஸ்டாண்ட் போல ஒரு சம்சாரியின் சந்தோஷமும் துக்கமும் கலக்காத முகம்…

வெளியே வந்தேன். பழைய நினைவுகள் எதுவும் வந்து உடல் புல்லரிக்கவில்லை. ஒரு காப்பி சாப்பிட வேண்டும் முதலில். நிச்சயமாக நாராயண பவன் இருக்காது.

‘நல்ல ஓட்டலா பாத்துப் போப்பா..குதிரை வண்டி இப்பல்லாம் கிடையாதா.. ஒரே ரிக்‌ஷாவா கிடக்கே…’

புதுசு புதுசாகக் கட்டடங்கள். வரிசையாகக் குடம் வைத்துத் தண்ணீர் பிடிக்கிற பெண்கள், பால் வாங்கக் காத்திருக்கிற தூக்கம் கலையாத முகங்கள். லாரிகள். சுவரொட்டி. கட் அவுட்.

நேற்று பொதுக் கூட்டம் நடந்த இடத்தில் மூத்திரச் சுவடு. வேர்க்கடலைத் தோல். சிகரெட் துண்டுகள். மைக் செட்டைக் கழற்றுகிறவனின் கெட்ட வார்த்தை சத்தம். திருப்பத்தில் சிவன் கோவில்.

மனசு விம்முகிறது. இது விஷ்ணுபுரம். இந்தக் கோயில் போதும் அடையாளம் சொல்ல. பழைய நினைவுகளின் ஊர்வலம் தொடங்கி விட்டது.

அந்த நகரசபைத் தேர்தலில் டாக்டர் சதானந்தம் தான் ஜெயித்தார். டாக்டருக்கும் பாலுசாமிக்கும் ஒரே எண்ணிக்கையில் ஓட்டு .. சரியாக நூற்று நால்பத்தேழு… திரு உள்ளச் சீட்டு போட்டு டாக்டர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

ஒரே ஒரு ஓட்டு கூடுதலாகக் கிடைத்திருந்தால் பாலுசாமி ஜெயித்திருக்கலாம்…

எலக்‌ஷன் அன்று ‘இண்டு’ பேப்பர் வரவில்லை.

டாக்டர் வீட்டு வாசலில் எம்.பி.பி.எஸ் எம்.சி என்று போர்ட் போட்டுக் கொண்டார். அவர் கவுன்சிலராகத்தான் இருந்தார். முறுக்குக் கடைக்காரர் நகரசபைத் தலைவர்.

நான் கல்லூரிக்குப் போகிறவரை கானா நியூஸ் எல்லோருக்கும் வந்தது. அமெரிக்க எம்பஸியிலிருந்து ‘புத்தகம் கேட்டுத் தொந்தரவு பண்ண வேண்டாம். கைவசம் ஏதுமில்லை’ என்று கடிதம் வந்த நினைவு.

அக்பரின் மார்க்கக் கல்யாணத்தையோ, மெகரின் நிக்காவையோ நாங்கள் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கடை கடனில் மூழ்கி ராவுத்தர் வீட்டை லாரிக் கம்பெனி சாதிக் அலிக்கு விற்றுவிட்டு சாதிக் அலியின் லாரியில் தட்டுமுட்டு சாமானோடு குடும்பத்தையும் ஏற்றிக் கொண்டு சொந்த ஊரான புளியங்குடிக்குப் போனார். மெகர் சொல்லிக் கொள்ள வந்தபோது அம்மா கண் கலங்கினாள். அவள் லாரியில், அத்தா தூக்கிவிட ஏறியபோது அம்மா வாய்விட்டு அழுதாள்.

‘என் குழந்தே.. உனக்கு ஒரு குறையும் பகவான் வைக்க மாட்டான்..’…

அவள் ரயிலிலோ பஸ்ஸிலோ போயிருந்தால் அம்மா இத்தனை வருத்தப்பட்டிருக்க மாட்டாள் என்று தோன்றியது.

புவனா லிஸ்டெய்லர் மாதிரி அழகாக இருப்பதாக எனக்குத் தோன்ற ஆரம்பித்தபோதுதான் அவள் காணாமல் போயிருந்தாள். அவள் இலங்கையில் இருபதாகவும், அவள் கணவர் சைவ சமயம், திருக்கோவில்கள் பர்றி ஆராய்ந்து டாக்டர் பட்டம் வாங்கியவர் என்றும் சொன்னார்கள், வக்கீல் மோகனதாசன் ஒத்துழைப்போடு தான் அவள் கல்யாணம் நடந்ததாகச் சொன்னார்கள்.

அறிவரசன் கதர் சட்டை போட்டுக் கொண்டார். ஸ்தானிஸ்லாஸ் நாடார் பெரிய துண்டோடு காணப்பட்டார். தியாகி டெயிலர் மனநிலை சரியில்லாமல் பூங்கா பெஞ்சில் சதா உட்கார்ந்தபடி ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இறந்து போனார். நினைத்துக் கொண்டாற்போல, சங்கு ஊதத் தொடங்கும்போது அவர், ‘வந்தேமாதரம்’ என்று கத்திக் கொண்டே கடைத்தெருவில் ஓடுகிற காட்சி பழக்கமாகி இருந்தது அப்போது..

பாலுசாமி ஒரு இரண்டு வருஷம் போல சின்னதாக ஒரு ஓட்டல் நடத்தி நஷ்டப்பட்டு டாக்டர் சதானந்தத்திடம் எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்தான். ஒழிந்த நேரத்தில் சிங்கப்பூர் செண்டும், ரேபான்ஸ் கூலிங் கிளாஸும் ரகசியம் பேசுகிற குரலில் விற்றான். வீட்டுக்கு ஒருத்தர் சபரி மலைக்கு மாலை போட்டபோது, அவன் போவதை நிறுத்தி விட்டான்.

வக்கீல் மோகனதாசன் பப்ளிக் ப்ராசிக்யூட்டராகப் போனார். சிவப்புத் துண்டுக்காரர்கள் அவர் ஆபீஸ் பக்கம் வருவது குறைந்து நின்றே விட்டது.

சீதரனும், கிரியும், குள்ள கிட்டுவும் மூலைக்கு ஒருவராகப் போய் எங்கேயெல்லாமோ சுகமாக இருக்கிறதாகக் கேள்வி.

ஜீவராசன்…

‘வண்டியை நிறுத்துப்பா.. ஜீவராசன் அண்ணே.. நலமா… என்னை அடையாளம் தெரியுதா..’

‘பிரேக் வசந்தமா…’ என்றார் அந்தக் கிழவர்.

———————————————

விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 9

விஷ்ணுபுரம் தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கிற சிறு நகரம். தமிழகத்தின் மற்ற சிறு நகரங்கள் போல மார்பளாவு சிலைகளும் ஒடுங்கிய வீதிகளும், ஒன்றிரண்டு சினிமா தியேட்டர்களும், தெருவில் குறுக்கும் நெடுக்கும் படர்ந்து பந்தலிடுகின்ற கேபிள் டிவி ஒயர்களும், வாகன இரைச்சலும், மக்கள் தொகைப் பெருக்கமும் இங்கும் உண்டு.

கலாச்சார ரீதியாகவோ, வரலாற்று ரீதியாகவோ, தொழிற்துறை மேம்பாட்டாலோ இதுவரை இந்த ஊர் முதன்மைப்படுத்தலோ சிறப்பாகப் பேசப்படவோ இலக்கானதில்லை. இப்போது ஆகியிருக்கிறது.

அரசியல் நோக்கர்கள் இந்தத் தேர்தலை, ‘வருங்காலத்தை சூசகமாக உணர்த்துகிற’ ஒரு முடிவைத் தரப் போவதாக, மாறி வரும் அரசியல் சூழ்நிலைகளின் பின்னணியில் கட்சிகளின் பலத்தையும், பலவீனத்தையும் சரியாக மதிப்பிட வழிவகுப்பதாகக் கருதுகிறார்கள்.

இடைத் தேர்தல்கள், கருத்துக் கணிப்பு போல உடனடியான, பரவலான கண்ணோட்டங்களைப் பிரதிபலிக்கின்றன. ஆனால் இந்த வாக்காளர்களை, நாட்டின் ஒட்டுமொத்தமான மக்களைப் பிரதிநிதிப் படுத்துகிறவர்களாக நாம் கருத முடியாது. இடைத் தேர்தல்களின் பலமும் இதுதான். பலவீனமும் இதுதான்.

சராசரி மனிதர்களின் வாழ்க்கையை இந்தத் தேர்தல் எப்படிப் பாதிக்கிறது? ஒரு அலசல்.

வாரச்சந்தையில் கறிகாய்க் கடை வைத்திருக்கிற காமாட்சிநாதன் – ‘தக்காளி விலை ஏறினா மட்டும் லபோ திபோன்னு அடிச்சிக்கிறாங்க.. இப்படி சினிமா, வீடியோ, ஊர்வலம், விளக்கு அலங்காரம்னு செலவு செய்யறபோது யாரும் கணக்கை பார்க்கிறதே இல்லே… இதுக்கு செலவழிக்கறது யாரு பணம்? எப்படி வந்தது?’

பழக்கடை உரிமையாளரான அறிவரசன் – ‘நானும் ஒரு காலத்திலே இதிலே எல்லாம் தீவிரமா இருந்தவன் தான். இருபது முப்பது வருடத்தில் எல்லாமே மாறியிருக்கு.. என் வீட்டுலே யாருக்கும் அரசியல் ஈடுபாடு இல்லை..’

ரிக்‌ஷா ஓட்டும் நாச்சியப்பன் – ‘முப்பது வருஷமா ஓட்டறேன். பையனும் அதான் செய்யறான். எலக்‌ஷன் வந்தா நாலு காசு அதிகம் பார்க்கலாம். அடிக்கடி வரட்டும். வயிறு இருக்குதே..’

மரக்கடை நடத்தும் ஸ்தானிஸ்லாஸ் நாடார் – ‘வரவர எலக்‌ஷன்னா வன்முறைதான் அதிகமாவுது.. நான் சமீபத்துலே தான் அமெரிக்கா போய் வந்தேன்.. அங்கேயும் எலக்‌ஷன் நடக்கறதுன்னாங்க.. ஒரு ஸ்பீக்கர் சத்தம்..ஒண்ணு கேக்கணுமே.. ஊஹூம்..இல்லியே.. என் பையன் கம்ப்யூட்டர் எஞ்சினியரா அங்கே இருக்கான்.. கலிபோர்னியாவிலே.. இதுதான் போட்டோ.. ஆமா குடும்பத்தோட … வெள்ளைக்கார்ச்சிய கட்டிக்கிட்டான்.. மாமா மாமான்னு நல்ல மதிப்பு..அடக்கம்.. ரெண்டு பேரும் காரு ஓட்டுவாங்களா.. என்னை ;நம்மாளுங்க கட்டின பெருமாக் கோவிலுக்கு.. என்னங்க.. எலக்‌ஷனா… போய் ஓட்டுப் போடறாங்களோ இல்லே கம்ப்யூட்டர்லேயே போடுவாங்களோ.. தெரியலே..’

டாக்டர் சதானந்தம் – ‘நானும் ஒரு டெர்ம் முனிசிபல் கவுன்சிலரா இருந்தவன்.. அப்பல்லாம் தேர்தல் அமைதியா நடக்கும்.. வன்முறைன்னா என்னன்னே தெரியாது..’

லெனின் வாசக சாலை நடத்தும் ஜீவராசன் – ‘ வன்முறை எப்பத்தான் இல்லே? சுதந்திரப் போராட்டத்தும்போது தேவகோட்டை கோர்ட்டை எரிச்சதும், போஸ்ட் ஆபீஸ் சூறை போனதும் எனக்கு சின்ன வயசு ஞாபகம்.. இங்கே அடிப்படை மனித நேயம் குறைந்து வருது.. கலாச்சாரம், கலை, இலக்கியம்.. சகலமானதிலும் நாம் பழைய காலத்தின் தொடர்புகள் அறுந்து போய் அந்நியப்பட்டு நிர்கிறோம். தேர்தல் கால வன்முறைகள் இந்த வெற்றிடத்தில் கருக்கொள்பவை.. நம் பிரச்சார சாதனங்களும், பத்திரிகைகளும், திரைப்படங்களும் வளர்ப்பவை. எதிர்காலம்? எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மக்கள் சக்தியின் மீது..இறந்து போன சித்தாந்தமா? யார் சொன்னது… இறுதித் தீர்ப்பு இன்னும் எழுதப்படவிலை.. பீனிக்ஸ் பறவை போல மார்க்சீயம் உயிர்த்தெழும்.’

———————————

கடைசியாக வந்த செய்தி:

விஷ்ணுபுரம் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இரண்டு வன்முறை கோஷ்டிகள் மோதல். வாசகசாலை தீயிடப்பட்டது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் வாசகசாலைக்குள்ளிருந்து வெளியே வந்த முதியவர் காயம். எட்டுப் பேர் படுகாயம் அடைந்தார்கள். ஊரடங்கு உத்தரவு. அமைதி திரும்பிக் கொண்டிருப்பதாக மாவட்ட நிர்வாக அதிகாரி…

(நிறைந்தது)