Monthly Archives: January 31, 2009, 11:51 am

செருப்பு விடு தூது

 

Kungumam column அற்ப விஷயம் -26 இரா.முருகன்

பாதுகைகள் நடக்க ஆரம்பித்துப் பல காலம் ஆகிறது. இராம பிரான் காலடியில் இருந்து பரதனின் தலையேறிய காலணிகள் அடுத்து அரியணையும் ஏறின. அந்த ஒரு ஜோடி பாதுகைகளைத் தைத்துக் கொடுத்த புராணகாலத்து அயோத்தி நகரத் தொழிலாளி கூட்டத்தில் ஒருவனாக நின்று பார்த்துப் பெருமிதப்பட்டிருப்பான். அவன் உழைப்புக்குக் கிடைத்த மறைமுகமான அங்கீகாரம் அது.

கொடுமையின் மொத்த உருவமாக வேடம் புனைந்து மேடையில் வலம் வந்த நாடகக் கலைஞன் மேல், நாடகத்தில் லயித்துப்போன ரசிகன் ஒருவன் கோபத்தோடு செருப்பைக் கழற்றி வீசியதாகப் பழங்கதை உண்டு. பாத்திரமாகவே மேடையில் வாழ்ந்த நடிகன் செருப்பை நெஞ்சோடு அணைத்து, ‘எத்தனையோ மேடைகளில் யார் யார் கையில் இருந்தோ எல்லாம் கிடைத்ததை விட உன்னதமான பரிசு’ என்று கண்ணீர் விட்டானாம். பாராட்டிய பாதுகை இது. 

மைக் டெஸ்டிங் ஒன், டூ, த்ரீ

 

Kungumam column – அற்ப விஷயம் 23

இரா.முருகன்

கூட்டம் நடத்துவது என்ன மாதிரியான சங்கதி என்று இன்னும் சரியாகப் புலப்படவில்லை. அரசியல் கூட்டங்களைப் பற்றிய அங்கலாய்ப்பு இல்லை இது. அரசியல் போக, வேறே இலக்கியம், கலை, நற்பணி மன்றம் தொடங்கி, வைதேகி ப்ளாட்ஸ் கட்டிடக் குடித்தனக்காரர்கள் சங்கக் கூட்டம் வரையான பல தரப்பட்ட இனங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெறும். கூட்டங்கள் நடக்க என்ன காரணம்?

இம்மாதிரியான யோசனைகள் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை அல்லது பொது விடுமுறை தினத்தில் உருவாகும். மதியம் வீட்டில் வைத்த வெங்காய சாம்பாரையும் உருளைக்கிழங்கு ரோஸ்டையும் ஒரு பிடி பிடித்துவிட்டு தூக்கத்துக்கும் முழிப்புக்கும் நடுவே இன்பமாக அல்லாடிக் கொண்டிருக்கிற நேரத்தில் யார் மனதிலாவது கூட்டத்துக்கான பொறி தட்டும். அப்போது, உடனடியாக மல்லாந்தோ குப்புறப் படுத்தோ தூங்கி மாலையில் காப்பி சாப்பிட எழுந்திருப்பது நலம். பொறியை வளர்த்து, நேரில், தொலைபேசியில் ஏழெட்டுப் பேரைத் தொடர்பு கொண்டு, மேற்கொண்டு நடக்க வேண்டிய வேலைகளுக்காகத் திட்டம் போடத் தொடங்குவது தொல்லைகளில் தொடக்கம். குறிப்பாக, சிலபல மற்றவர்களுக்கு.

சத்திய சோதனை ஆந்திரா ஸ்டைல்

 

Kungumam column – அற்ப விஷயம் -24

எட்டுக்கால் பூச்சிக்குப் பட்ட காலிலே பட்டால் பரவாயில்லை. சொச்சம் இருக்கப்பட்ட ஏழு காலை வைத்து ஒப்பேற்றி வலை கட்டித் தொங்கிவிடலம். கம்ப்யூட்டர் துறை எட்டுக்கால் பூச்சி இல்லை என்பதால் அடி மேல் அடி விழுந்ததும் தாங்கச் சக்தி இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு தேசம் தந்த புத்தாண்டுப் பரிசு இந்த சட்டக் கல்லூரி ஹாஸ்டல் ஸ்டைல் அடி.

சாதாரணமாகவே பெரும்பாலான கம்ப்யூட்டர் கம்பெனிகளில் எழுதாத விதி ஒன்று உண்டு. ஆந்திரத்திலிருந்து யாராவது வேலைக்கு மனுப் போட்டால் நர்சரி ஸ்கூல் பாஸான சான்றிதழ் தொடங்கி பட்ட மேல்படிப்பு சான்றிதழ் வரை ஒன்று விடாமல் தூண்டித் துருவி, நிஜமாகவே வாங்கினதா இல்லை பெஜவாடாவில் யாராவது காசு வாங்கிக் கொண்டு உற்பத்தி செய்து கொடுத்ததா என்று ஆராய்ந்து தள்ளி விடுவார்கள். அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்கு ஆந்திர வாடுக்கள் போனாலும் இதே மரியாதைதான். இத்தனைக்கும் ஆந்திர சோதரர்கள் புத்தி கூர்மையிலும் படிப்பிலும் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை. ஆனாலும் அவர்களில் சிலர் முன்னொரு காலத்தில் செய்த சர்ட்டிபிகேட் மோசடியால் மற்றவர்களும் பாதிக்கப்பட்டார்கள். ஒரு மனவாடு செய்ததை விட மகாப் பெரிய மோசடியை கம்ப்யூட்டர் கம்பெனி நிர்வாகியான ஒரு ‘பெத்த மனவாடு’வே இன்று செய்தால்? 

மர்மயோகி ரசித்த படம்

 

வார்த்தை பத்தி – குட்டப்பன் கார்னர் ஷோப் 1ப்

அவசியம் இதைப் பாருங்க. அப்புறம் படியுங்க.

மர்மயோகி ஒரு குறுவட்டையும், கூடவே புத்தகத்தையும் நீட்டினார். இயக்குனர் பிரதியாக ஓர் ஆங்கிலத் திரைப்படம். பெயர் மேக்னோலியா. அதோடு இணைப்பாகப் படத்தின் திரைக்கதை புத்தக வடிவத்தில். பால் தாம்சன் ஆண்டர்சன் எழுதியது. படத்தை இயக்கியதும் ஆண்டர்சன் தான். இளைஞர்.

வழக்கம் போல் புத்தகத்தின் கடைசிப் பக்கத்திலிருந்து புரட்ட ஆரம்பித்தேன்.

மொதல்லே சி.டியைப் பார்க்கச் சொன்னேன். அப்புறம் படிக்கலாம்.

அன்பான கண்டிப்பு. தட்ட முடியாது. 

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்

 

Kungumam column – அற்ப விஷயம் -20

அஷ்டாவதானம் என்று ஒன்று உண்டு. நல்ல தமிழில் எண் கவனகம். அதாவது கவனத்தை ஈர்க்கும் எட்டு விதமான செயல்களை ஒரே நேரத்தில் செய்வது. உதாரணமாக, அஷ்டாவதானி முன்னால் ஒருத்தர் உட்கார்ந்து இறுதி அடியைக் கொடுத்து உடனே வெண்பா பாடச் சொல்லிக் கொண்டிருப்பார். இன்னொருத்தர் பதினெட்டு இலக்க எண்ணை ஐந்து நிமிடத்துக்கு ஒன்றாகத் தவணை முறையில் சொல்லி முழு எண்ணையும் திரும்பக் கூறும்படி கேட்பார். மற்றொருவர் கூட்டி வகுத்துப் பெருக்கிக் கழித்து ஒரு பெரிய மனக் கணக்காகப் போட்டு விடை வினவுவார். பின்னால் ஒருத்தர் பூவால் அவ்வப்போது மெல்லத் தொட்டு எத்தனை தடவை தொட்டேன் என்று கணக்கு விசாரிப்பார். இன்னொருத்தர் ஒவ்வொரு ராகமாகப் பாடி என்னென்ன என்று கண்டுபிடிக்கச் சொல்வார். கனமாக இருக்கா, சரி, அடுத்தவர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களின் பெயரை வரிசையாகச் சொல்லி, ஒவ்வொன்றுக்கும் கதாநாயகியின் பெயர் கேட்டபடி இருப்பார். இதோடு கூட இன்னும் ரெண்டு பேர் வேறு எதையாவது தூண்டித் துருவிக் கேட்பார்கள். எல்லாவற்றுக்கும் சரியாக, குறித்த காலத்துக்குள் விடை அளிக்க வேண்டும்.