Monthly Archives: February 26, 2015, 9:56 am

புதிய நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 18 இரா.முருகன்


கண்பத், சர்வலோக் கேலே?

ஹோகா. எல்லோரும் போயாச்சு

அணி, ஜண்டா வண்டா சக்ளா?

லேவுண் கேலே. கொடியெல்லாம் எடுத்துப் போயிட்டாங்க.

திலீப் சாங்க்லி பகுதி விவசாயிகளின் பேச்சு மொழியில் கண்பத் மோதகிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்.

அவன் இந்தக் கூட்டத்தைப் பொறுத்த வரை, பம்பாய் மாநகரத்துக்கு வேலை தேடி வந்தவன். கிராமத்தில் கரும்பு பயிரிட்டுப் பயிரும் ஜீவிதமும் கரிந்து போன விவசாயியின் பிள்ளை. எந்த வேலை, எவ்வளவு கூலி என்றாலும் அவனுக்கு சம்மதமே. சாப்பாட்டுக் கடையில் போய்ச் சத்தம் போடுவதும் அதில் ஒன்று தான்.

லுங்கிவாலா ஒருத்தனும் தெருவிலே நடமாடக் கூடாது.

மகாப் பெரிய தலைவர் சொன்னார். பெரிய தலைவர், தலைவர், பிரமுகரான தொண்டர், இடைப் பட்ட தொண்டர், கீழ் மட்டத் தொண்டர், தொண்டருக்குத் தொண்டர் என்று அடுத்த நிலை மனுஷர்களுக்கு அது எடுத்துரைக்கப் பட்டது. எத்தனாவது நிலை ஆசாமியோ, மிட்டாய்க்கடைக்காரரும், இந்தப் பகுதியில் கட்சியில் பிரமுகருமான பாலகிருஷ்ண கதம் திலீப்பை ஒரு பொருட்டாகக் கருதி இதை மந்திர உபதேசமாக அவனுக்கு எடுத்தோதினார். காசு கிடைக்குமென்றார்.

அண்டாகுண்டா வாலாக்களை அடித்து விரட்டணும். மதராஸுக்கு போகட்டும் வேசி மகன்கள் எல்லாரும். நமக்கு வரும் வேலை வாய்ப்பைத் தட்டிப் பறிக்கறாங்க பன்றிகள். நீர்யானைகள்.

திலீப் நீர்யானையைப் பார்த்தது கிடையாது தான். என்றாலும், உணர்ச்சிவசப்பட்டதாக முகத்தை வைத்துக் கொண்டு, குரல் பிசிறடிக்கச் சொன்னான்.

நாலு பேருக்கு முன்னால் குரலை உயர்த்தி, வசவு உதிர்த்துக் கோபப்பட இன்னும் அவனுக்குப் பழக்கமாகவில்லை. ஆனாலும் அவன் படித்தவன் என்பதால் பத்து இருபது பேரைக் கோஷம் போட நடத்திப் போகிறான். பணம் கிட்டும் ஏற்பாடு இது. அவனுக்கும், கூட வந்து சத்தம் போட்டு விட்டு நடக்கிற எல்லோருக்கும். அவனுக்குக் குரல் இன்னும் சத்தமாக வந்தால், நூறு இருநூறு பேரைக் கூட நடத்திப் போவான்.

பழக்கமாக வேண்டும். ஆகும். சீக்கிரம் அவனும் நேதாவாக, ஆயிரம் பேருக்கு வழி காட்டுவான். டெரிலின் சட்டையை தினசரி சாயந்திரம் துவைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இன்னும் ரெண்டு சட்டை வாங்குவான். கழட்டிப் போட்ட சட்டையில் நூறும் இருநூறும் எடுக்க மறந்து இருப்பதை எடுத்து, சோப்பு நுரைத்த ஈரக் கையோடு உள்ளே கொண்டு போய் வைக்கும்போது கையில் காசு புரளுகிற எக்களிப்பு கூடிவரும்.

கணபத் மோதக் தோளில் வழிந்து தொங்கும் ஜோல்னாப் பையோடு திலீப் பக்கத்தில் வந்தான். பைக்குள் கடமுட சத்தம் கேட்டது.

என்ன வச்சிருக்கே இதுக்குள்ளே?

பையைக் கொஞ்சம் போல் திறந்து காட்டினான் கண்பத். இறுக்கமாக மூடி போட்ட ஸ்டெயின்லெஸ் பாத்திரம். திலீப் சிரித்தான். அவனுக்குத் தெரியும் அந்தப் பாத்திரத்தை.

போராட்டத்துக்குப் போகிறபோது இது எதுக்கு கண்பத்?

என்ன அண்ணா சொல்றே? அங்கே போய் நாலு கோஷம் போட்டு இருக்கப்பட்டவனை நாலு சாத்து சாத்திட்டு வர மட்டுமா இப்படிக் காலங்கார்த்தாலே கிளம்பறோம்?

கண்பத் மோதக் மூணரை வரிசையாக வாயில் இருந்த பல் எல்லாம் முதலைக் குட்டி போல் தெரியக் கேட்டான்.

ஆமடா மோதகமே. அதுக்குத்தானே ஆபீஸ்லே காசு கொடுக்கறாங்க?

காசு மட்டும் கிடைக்குதுன்னு நான் வரல்லே,

கண்பத் மோதக் ரோஷத்தோடு சொன்னான். பின்னே வேறென்ன இருக்கும்?

இந்த ரெண்டு மாசத்துலே எத்தனை மதராஸி ஓட்டலுக்கு உள்ளே கூட்டம் சேர்த்து தடால்னு புகுந்திருக்கோம். போனதும் மதராஸியைத் திட்டி ரெண்டு கோஷம். பரிமாற எடுத்து வந்த பதார்த்தத்தை பறிச்சு தரையிலே வீசறது. உள்ளே உக்கார்ந்து சாப்பிடறவனை ஓட ஓட அடிச்சு விரட்டறது. கல்லாவில் இருந்து பைசாவை எடுக்கற மாதிரி போக்குக் காட்டறது மதராஸுக்குத் திரும்பப் போறேன்னு அங்கே இருக்கறவனை வலுக்கட்டாயமா சொல்ல வைக்கறது. அம்புட்டுத்தானே.

கண்பத் மோதக் கொஞ்சம் பொறு என்று கை காட்டி விட்டு, திலீப் தோளில் அவன் ஜோல்னாப் பையை மாட்டினான். கதவைத் திறந்து வைத்துக்கொண்டே ஆபீஸ் லெட்ரினில் தொரதொரவென்று மூத்திரம் பெய்துவிட்டுக் கையை பைஜாமா பாக்கெட்டில் விட்டபடி திரும்ப வந்தான்.

திலீப் அரை அடி இடைவெளி விட்டு நின்று அவனுடைய ஜோல்னாப் பையைத் திரும்ப நீட்டினான். இன்று முழுக்க இந்த மோதகன் தொட்டுக் கொடுத்த எந்தத் தீனியோ, பானமோ வாங்கப் போவதில்லை அவன்.

போன மாசம் வரைக்கும் நானும் அதெல்லாம் கிரமமா செஞ்சுட்டு வந்து இருபத்தைஞ்சு ரூபாய் வாங்கிட்டுப் போயிட்டிருந்தேன் திலீப் அண்ணா. இப்போ நிலைமை வேறே.

கணபத் மோதக் வாசல் கதவைப் பூட்ட பூட்டையும் சாவியையும் எடுத்துக் கொண்டான்.

விராரில் உள்ளொடுங்கி இருக்கப்பட்ட கட்டடத்தின் வெகு பின்னால் கதவு வைத்து இணைத்த மற்றொரு தொடுப்புக் கட்டடத்தில் நீள வாக்கில் பம்மிப் பதுங்கிய இடத்தில் பிளைவுட் சுவர் வைத்துத் தடுத்த பாதி அறை அது. வாசகசாலை. ரெண்டு பெஞ்ச், தலைவர் படம். பெரியதாக சத்ரபதி சிவாஜி மகராஜ் படம். கட்சி அலுவலகத்தில் திலீப்பும் கண்பத்தும் கையெழுத்துப் போட்டு வாங்கி வந்தது. நாலு தெரு தள்ளி பிரிஜ்வாசி மிட்டாய்க்கடை நடத்தும் பால்கிருஷ்ண கதம் வெள்ளைக் குல்லாய், பைஜாமாவில் வந்து திறந்து வைத்து, எல்லோருக்கும் எதிரி மதராஸி என்று முழங்கிப் போனது போன மாதம் தான்.

போன மாதக் கடைசியில் கண்பத் மோதக் கல்யாணம் ஆனது. திலீப் அழைக்கப் பட்டிருந்தான். பத்திரிகை வைக்கும்போதே பால் காச்சற குக்கர் வேணாம் அண்ணா என்று கோடி காட்டி விட்டான் கண்பத். வீட்டில் தினசரி புழங்க வேறு எது கொடுத்தாலும் அவனுக்கு இஷ்டமே என்று தெரிந்தது.

கண்பத் மோதக்கோடு தலைமை அலுவலகத்துக்குப் பத்திரிகை வைக்கத் துணைக்குப் போனபோது வாசல் முன்னறையில் மதராஸி சோக்ரி நீள விரல்களை நீட்டி நீட்டி எதோ டைப் அடித்துக் கொண்டிருந்தாள்.

என்ன தேவ் ஆனந்த் இங்கே விசிட்? ஷூட்டிங் இல்லியா?

அவள் திலீபைப் பார்த்துச் சிரித்தபடி இந்தியில் கேட்டபோது டைப்ரைட்டரோடு அவளைத் தூக்கி மடியில் வைத்துக் கொள்ள வேணும் போலிருந்தது அவனுக்கு. சனியன், ரெமிங்டன் டைப்ரைட்டர் எதுக்கு உல்லாச வேளையில் என்று புரியவில்லை.

அன்றைக்குத் தப்பித்தவறி அவள் தமிழில் பேசி விடுவாள் என்று ஒரு வினாடி பயந்தது தேவையில்லாதது என்று புரிந்தது திலீபுக்கு. இடம் பொருள் புரிந்து அவனோடு மராத்தியில் பேசினாள். தெய்வங்கள் கூட்டமாக நாகபுரி போயிருப்பதாகவும், அங்கே கல்யாணம், ஆபீஸ் திறப்பு, வாசகசாலை திறப்பு என்று மும்முரமாக இருப்பதாகவும் சொன்னாள்.

யாருமே என் கல்யாணத்துக்கு வர மாட்டாங்களா என்று கண்பத் சோகமாகக் கேட்டபோது, நான் வரேன் அண்ணா என்றாள் அவள். எத்தனையோ இந்தி, மராத்தி சினிமா பார்த்து உருகிக் கண்ணீர் விடும் பதத்தில் இருந்த கண்பத் உடனே நெகிழ்ந்து போய், ரெண்டு கையையும் நான் சொல்ல என்ன இருக்கு என்பது போல் விரித்தது திலீபுக்கு ஞாபகம் வந்தது.

உன்னை மாதிரி ஒரு தங்கை இருக்க எனக்குக் கொடுத்து வைக்கணுமே. பெயர் என்னம்மா?

கண்பத் கல்யாணப் பத்திரிகையைச் சணல் பையிலிருந்து எடுத்தபடி குரல் கமறக் கேட்டான்.

அகல்யா என்று பெயர் சொன்னாள் அவள்.

திலீப் மனதில் இந்தி நடிகை சைராபானு சிரிப்பதும் சாய்வதும் நிமிர்வதும் அகல்யா மாதிரித் தெரிய ஆரம்பித்தது அப்புறம் தான். சாய்ராபானு பூஞ்சை உடம்பு. அந்த உடம்புக்கு டைப்ரைட்டரோடு என்ன, மேஜை நாற்காலியோடு கூடவும் மடியில் இருத்திக் கொள்ளலாம் தான்.

கண்பத் கல்யாணத்துக்கு அகல்யா வரவில்லை. திலீப் கண்பத்துக்கு நாலு லிட்டர் பிடிக்கிற மாதிரி மூடி போட்ட தூக்குப் பாத்திரம் வாங்கிப் பரிசாகக் கொடுத்தான். அதுக்கு முந்திய வாரம் பரேல் உடுப்பி ஓட்டலுக்குப் போய் வந்ததில் கிட்டிய வருமானம் கிழங்கு மாதிரிப் பாத்திரமானது., கண்பத் மோதக்கின் கல்யாண அன்பளிப்பாக சிஞ்ச்போக்லி திலீப் மோரே கொடுத்தது என்று இங்கிலீஷில் பெயர் அடித்து இருப்பது அந்தப் பாத்திரம். பரிசாகக் கொடுப்பதற்கு முன் தாதர் ராணடே ரோடை அண்டி ஓரமாகப் படர்ந்திருக்கும் மதராஸி கடை வாசலில் எழுத்துக்கு இருபத்தைந்து பைசா கூலி வாங்கிக் கொண்டு தாடிக்கார மதராஸிக் கிழவன் பெயர் கொத்தித் தந்தான், அந்தப் பாத்திரத்தைத்தான் இப்போது கண்பத் கொண்டு வந்திருக்கிறான்.

விரார் ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்திருந்த சொற்ப நேரத்தில், பெண்டாட்டி ராத்திரி பல் துலக்கி, குளித்து விட்டுப் படுக்க வரச் சொல்வது பற்றியும், பிரிஜ்வாசி மிட்டாய்க்கடையில் இருந்து அவன் கல்யாணத்துக்குக் குறைந்த விலையில் பாலகிருஷ்ண கதம் கொண்டு வந்து கொடுத்த பாதி பரிசும் பாதி விலைக்கு வாங்கியதுமான தூத்பேடா, கல்யாண ராத்திரியிலேயே கெட்டுப் போயிருந்ததால், வீட்டுக்காரிக்கு வாந்தியாகி ராத்திரி முழுக்க அவளுக்கு வென்னீர் குடிக்கக் கொடுத்துப் பொழுது போனது பற்றியும் விளக்கினான் கண்பத்.

திலீப் நினைவு அகல்யாவைச் சுற்றி வந்து கொண்டிருந்தது. இந்தப் போராட்டம் இல்லையென்றால் அவளைப் பார்க்க, இன்று ஏதாவது சாக்கு சொல்லிக் கொண்டு கட்சி ஆபீசு போயிருப்பான். அகல்யாவை அவன் ஒரு நாள் அவன் கல்யாணம் செய்து கொள்வான். மதராஸிக் கல்யாணமாக அது இருக்காது. பால் காய்ச்சுகிற பீப்பாய் சைஸ் குக்கர்கள் அன்பளிப்பாக வரும் அப்போது.

ரயில் வந்து கொண்டிருந்த போது பாத்திரத்தைத் தட்டியபடி கண்பத் சொன்னது -

மதராஸி ஓட்டல் சாம்பாரும் வடையும் அவளுக்கு இஷ்டம்.

திலீப்புக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. இன்றைக்குப் போராட்டம் செய்ய வந்த எல்லோருமே புதுசாகக் கல்யாணம் ஆகி, எல்லோருடைய வீட்டுக்காரிகளுக்கும் மதராஸி ஓட்டல் பலகாரம் இஷ்டம் என்று, தூக்குப் பாத்திரங்களோடு வீட்டுக்காரர்களைக் குளிக்க, பல் துலக்க வைத்து அனுப்பியிருந்தால்?

தரையில் வீசி வீணடிப்பதற்குப் பதிலாக நாலு மராட்டிக் காரர்களாவது சாப்பிட்டு மதராஸியைத் துடைத்தெறியட்டும். போன காரியம் நல்ல படிக்கு நாசகரமாக முடிந்து, காசு வந்தால் போதும் திலீபுக்கு. யார் கொடுத்தாலும் சரி தான்.

ரயில் நிற்பதற்குள் கண்பத் ஓடி ஜன்னலைப் பிடித்தபடி ஏற, எதுக்கு அவசரப்படறே என்று சத்தம் போட்டான் திலீப். இப்படி யாராவது ஓடும் ரயிலில் ஏறினாலோ, நகர்கிற வண்டித் தொடரிலிருந்து குதித்து இறங்கினாலோ அவனைக் கன்னத்தில் அறைய வேண்டும் போல் ஆவேசம் வருகிறது அவனுக்கு.

ஐம்பது வயசிலும் இந்த தினசரி வாழ்க்கைக்கான சராசரி புத்தி கூர்மை இல்லாமல் அப்பா வீட்டில் உட்கார வேண்டிப் போனது இப்படி ஏறித்தான்.

கட்சிப் பத்திரிகையில் ஆங்கிலக் கட்டுரை எழுதுவதையும், இந்தியில் யாரோ எழுதிய நினைவுக் குறிப்புகளை இங்கிலீஷில் மொழிபெயர்க்க ஒப்புக் கொண்டதையும் இனி வேண்டாம் என்று அகற்றி வைத்தது அப்பாவின் சிறகு முறிந்த இந்த ஒரு வருடமாகத் தான். அவரும் அவருடைய மார்க்சிஸமும், சோஷலிசமுமாக, ரணதிவே, ரங்க்னேக்கர், லிமாயி என்று தேடிப் போய் பழசை அசைபோட்டு விட்டு கையில் நாலு பழைய புத்தகத்தோடு, அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றிய கவலையே இல்லாமல் அலைந்து கொண்டிருந்தவர் மனதால் மரித்த கணத்தை திலீப் அறிவான்.

அம்மா சித்தப் பிரமை கண்டதும் இந்த மாதங்களில் தான். திலீபின் பெரியப்பா அமைச்சரான போது, பாரம்பரியக் கலைகளைப் பாதுகாக்க சர்க்கார் நியமித்த ஏதோ கமிட்டியில் அவளை அங்கத்தினராக நியமித்திருந்ததால், மாதாமாதம் உருளைக்கிழங்கு வடையும் சாயாவுமாக ஒரு மீட்டிங், அதுக்குப் போய், நேரம் ஒதுக்கி விவாதம் செய்து – உருபடியாக ஒண்ணும் நடக்கலை என்பாள் அம்மா- திரும்பிய வகையில் உழைப்புக் கூலியாக ஒவ்வொரு கூட்டம் முடிந்தும் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிக் கையெழுத்துப் போட்டு இருநூறு ரூபாய் பேட்டா என்று இருந்த ஏற்பாடு அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ரொம்பவே தோதாக இருந்தது.

அம்மாவுக்கு வருகிற ஆர்டிஸ்ட் பென்ஷன் ரூபாய் முன்னூறும் அந்த இருநூறும் சேர, ஐநூறு ரூபாய் வந்து கொண்டிருந்தது. கஷ்டமில்லாமல் மூணு பேர் ஜீவிக்க, மழைக் காலத்தில் புதுக் குடை வாங்க, விநாயகர் சதுர்த்திக்கு நாலு நாள் கொண்டாடி பூஜை செய்து, விசர்ஜன் அன்று கடலில் விட, கலர் விநாயகர் நடுத்தர சைஸில் வாங்க, செவ்வாய் தோறும் சாபுதானா வடை நைவேத்தியத்தோடு அம்மா உபவாசம் இருக்க என்று சீராகச் செலவாகி வந்தது அம்மா சித்தம் பேதலித்ததோடு முடங்கியது. சேர்த்து வைத்திருந்த சொற்பமும் அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்த வகையில் கரைந்து போனது.

எலக்ட்ரிக் ரயிலில் வயசான ஒரு கம்யூனிஸ்ட் காரன் தாவி ஏறி எத்தனை பேர் வாழ்க்கையைக் கெடுத்துப் போட்டான். திலீப்புக்குக் கோபம் அடங்கவில்லை இன்னும்.

என்ன ஸ்டேஷன்?

பயாந்தர் என்றான் கண்பத் மோதக்.

ரயில் ஒரு நிமிஷம் நிற்க பெரிய கும்பலாக ஆபீஸ் போகிற ஒரு படை முன்னேறி சர்வ சுதந்திரமும் உரிமையுமாக இரைச்சலோடு கம்பார்ட்மெண்டில் நுழைந்தது. அவசரமாக உள்ளே வந்த ஒரு நீல நிற முழுக்கைச் சட்டை, இடுப்பில் இருந்து வழியும் ட்வீட் பேண்ட் காரர் கையில் வைத்திருந்த இங்கிலீஷ் பேப்பரை கர்ம சிரத்தையாகப் படிக்க ஆரம்பித்தார்.

போரிவ்லி வர, அங்கே இன்னொரு கூட்டம். யாரும் இறங்குகிற வழியாக இல்லை. திலீப் பக்கத்தில் கம்பத்தைப் பிடித்துக் கொண்டு நின்றவர் கைக் கடியாரத்தில் எக்கி மணி பார்த்தான். ஒன்பதரை. காத்திருப்பார்கள்.

கடிகாரக் காரர் என்னத்துக்காகவோ கடிகாரத்தையும் அப்புறம் முகத்தையும் கைக்குட்டையால் துடைத்ததை எரிச்சலோடு பார்த்தான் கண்பத் மோதக்.

என்ன அவசரம், பார்த்து ஏறுங்க என்று உள்ளே வந்தவர்களிடம் மராத்தியில் கூச்சல் போட்டான் அவன்.

அந்தேரியில் தானே இறங்கணும் திலீப் அண்ணா?

இல்லேப்பா. சாந்தாக்ரூஸ்.

இறங்கி ஐந்து பத்து நிமிடம் நடக்க வேண்டும். மற்றவர்கள் எல்லோரும் போய்ச் சேர்ந்து காத்திருபார்கள். காத்திருக்கட்டும்.

ஆமோதித்துத் திருப்தியைத் தெரிவித்தான் கண்பத். அவர்கள் வந்தபிறகு ஆரம்பித்தால் போதும்.

கண்பத் ஒரு வினாடி கண்மூடி நிற்க என்ன விஷயம் என்று கேட்டான் திலீப்.

பதார்த்தம் எதிலும் பெருங்காயம் போட்டு இருக்கக் கூடாதுன்னு சித்திவினாயகரிடம் வேண்டிக்கிட்டேன் அண்ணா.

கண்பத் மொணமொணத்தான். பலமாகச் சிரித்தான் திலீப்.

ட்வீட் பேண்ட்காரன், ஒரு வளைவில் ரயில் வேகமாகத் திரும்பியபோது தடுமாறி திலீப் மேல் மோதிக் கொண்டான். அவசரமாக விலகினான் அவன். மலம் உடுப்பில் பட்டது போல் முகம் சுளித்தான். கைக்குட்டையால் மேலே துடைத்து திரும்பவும் கடியாரத்தைத் துடைத்து, ஒதுங்கி அருவருப்போடு நிற்க, கண்பத் குரல் உயர்த்தினான் –

ஏன், உன் புழுத்த மதராஸ் உடம்பு அசுத்தப்பட்டுப் போச்சா, மராத்தியன் மேலே பட்டு?

கம்பார்ட்மெண்டில் எல்லோரும் கலவரத்தோடு பார்த்தபடி நின்றார்கள். கிட்டத்தட்ட முழுக்க மதராஸிகளின் கூட்டம், இந்த நேரத்தில் கூட்டமாகக் கிளம்பி ஆபீஸ் போகிறவர்கள் இவர்கள் தான்.

கூட்டமாகப் பக்கத்தில் பக்கதில் புறாக்கூண்டு ப்ளாட்டில் இருந்து, கூட்டமாக கோவில் கட்டி, கூட்டமாக வருஷம் ஒரு தடவை பூணூல் மாற்றிக் கொண்டு, கூட்டமாக தென்னிந்திய சங்கீதக் கச்சேரி கேட்டு சிலாகித்துக் கொண்டு, தினசரி ஓடி நடக்கிறவர்கள்.

இவர்கள் எல்லோரும் அடுத்த ஸ்டேஷன் வரும்போது இறங்கி அடுத்த கம்பார்ட்மெண்டில் ஏறிக் கொள்வார்கள் அல்லது இறங்கி, அடுத்த ரயிலுக்காகக் காத்திருப்பார்கள் என்று தோன்றியது திலீப்புக்கு.

இறங்கலாம் கண்பத் என்றான் திலீப், ரயில் வேகம் குறைந்து ஸ்டேஷனுக்குள் வந்தபோது.

நகருங்க நகருங்க என்று கண்பத் குரல் விட்டுக் கொண்டே முன்னேற, முழுக் கூட்டம் மதராஸிகளும் ஒதுங்கி நின்று வழிவிட்டார்கள்.

அண்ணா, மதராஸி உடுப்பி ஓட்டல் வடை பிரமாதமா இருக்கும். சீக்கிரம் போகாட்ட தின்னே தீர்த்துடுவானுங்க.

கண்பத் கண்ணில் கனவு தெரிய ஓட ஆரம்பித்தான். நில்லு நில்லு என்றபடி திலீப் அவன் நடைக்குச் சரியாக வேகமாக ஓட, அவனுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.

என்ன அண்ணா, நம்ம புள்ளைங்க மாதிரி இருக்கு?

எதிரே ஒரு சின்னக் கூட்டம் கோஷம், போட்டபடி வந்து கொண்டிருந்தது.

கண்பத் கண்ணில் கலவரம் தெரிந்தது.

திலீப்போடு இன்றைக்குப் போராட்டம் நடத்த வந்த கும்பல் தான் இது.

நேரம் ஆச்சு. வாங்க.

கண்பத் அவர்களை இழுக்காத குறையாகக் கூப்பிட வெகு சோனியாகப் பல்லி மாதிரி இருந்த ஒருத்தன், காணாதது கண்டதாகப் பிரமிப்பு நீங்காத குரலில் சொன்னான் -

மதராஸி ஓட்டல்லே மயில் படத்தில் இருந்து உதி விழுது.

முழங்காலுக்கும் தாழ்ந்து பிரம்மாண்டமான பையைத் தோளில் மாட்டி இருந்த அந்தச் சோனன் சொன்னான். அற்புதங்களோடு மோத அவனால் முடியாது என்ற பாவம் அவன் குரலில் பூடகமாகப் பூசி நின்றது.

என்னது?

நம்ப முடியாமல் கேட்டான் திலீப். இன்னிக்கு பேட்டா வராதா?

உதி. சாம்பல். தொரதொரன்னு பொடியா உதிருது. சாப்பிடற இடத்துலே சுவர்லே மாட்டி வச்ச படத்திலே இருந்து விழுது அண்ணா. நானே பார்த்தேன். நாங்க எல்லோரும் பார்த்தோம்.

அதுனாலே?

ரெண்டு மாசமா, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை ஒன்பதரை மணிக்கும் பகல் மூணு மணிக்கும் கண்ணாடிச் சட்டத்துக்குள்ளே மயில் கழுத்தில் இருந்து பொலபொலன்னு இப்படி சாம்பல் கொட்டறதாம். பிரதி சனிக்கிழமை ராத்திரி எட்டேகாலுக்கும் இது உண்டாம்.

ஏதாவது தூசியா இருக்கும். பழைய படத்தை எல்லாம் வருஷக் கணக்கா மாட்டி வச்சிருக்கானே சாலா மதராஸி. சுவருக்கு சுண்ணாம்பு அடிச்சிருப்பானா ஹராம்சாதே. பல்லு வெளக்குவானா கமீனே? தூத்பேடா செய்யத் தெரியுமா பேவகூஃப்? வாங்க போய் அந்த லுங்கிவாலா குத்தா தலையிலே நாலு தட்டு செல்லமா ஓங்கித் தட்டிட்டு வருவோம்.

வடைகளின் நினைவு அபாரமாகக் கவிய, மூட நம்பிக்கையை நிர்மூலம் செய்கிற, எதிரிகளை எள்ளி நகையாடும் தொனியில் கண்பத் சொன்னான்.

நாங்க வரலே. இன்னிக்கு வேணாம். செவ்வாயும், சனியும் இல்லாத நாளில் வச்சுக்குவோம்.

சோனன் கையைக் குவித்தான். அவனுடைய ஜோல்னாப் பைக்குள் என்ன இருக்கும் என்று பார்க்க வேணும் போலிருந்தது திலீப்புக்கு.

கண்பத் சோனனின் தோளில் அழுத்திக் கேட்டான் -

அன்னிக்கு வடை போட்டிருப்பானா என்ன?

(தொடரும்)

நீல.பத்மநாபனோடு ஒரு நேர்காணல் – பகுதி 4

கமல் ஹாசன்: திருவனந்தபுரம் நகரத்தைப் பற்றிய பள்ளிகொண்டபுரம் முக்கியமான பதிவு. நீங்க நடந்து போன பாதையைப் பற்றியது ..

நீல.பத்மநாபன்: இப்படி அந்த மூலை முடுக்குகள் அங்கே இங்கேல்லாம் மனதில் நடந்து இந்த ஊரைப் பற்றிப் பதிவு செய்யணும்னு நினைச்சேன்.. இன்னொண்ணு காலப் பிரக்ஞை. …. திணை கோட்பாடு எல்லாம் அப்புறம் தான் படிக்கறேன்.. தொடங்கின காலத்திலே இருந்தே காலமும் வெளியும் ரொம்பவும் உறுத்தக்க் கூட்டிய விஷயம்… இப்பக்கூட நினைக்கிறேன்.. இப்ப பேசுறபோது காலம் ஆகிக்கிட்டு இருக்கு..ஒரு கதாபாத்திரம் வந்தா திடீர்னு பத்து இருபது வருஷம் கழித்துக் காலத்தில் போனது எல்லாம் எனக்கு கிடையாது. ஒவ்வொரு கணமும் முக்கியம்.. என் முதல் கதையில் இருந்து இப்போ. இலையுதிர் காலம் வரை எது படித்தாலும், காலம் – வெளி .. time and space உணர்வு இருந்திட்டு தான் இருக்கும்.. இது உள்மனதில் எப்பவும் இருக்கும்.. நடக்கக் கூடிய காலம்.. எங்கே நடக்குதுங்கறது .. படிக்கற உங்களுக்கு தெரியலேன்னாலும் என்னை அப்படியே உறுத்தும் அதே பிரக்ஞையோடு நான் எழுதிக்கிட்டே போவேன்.. அப்படித்தான் பள்ளிகொண்டபுரம்.. நாற்பத்தெட்டு மணி நேரத்தில் நடக்கிறது.

இரா.முருகன்: நாற்பத்தெட்டு மணி நேரம்.. அனந்தன் நாயரோட ஐம்பதாவது பிறந்த நாள்லே ஆரம்பமாகிற நாவல்..

கமல்: அதைப் பற்றி நானும் இவரும் (இரா.மு) காலையிலே பேசிக்கிட்டு இருந்தோம்.. அதிலே இன்னொன்னு.. மாக்ஸ் ஒபலஸ்னு (Max Ophüls) ஒரு ஜெர்மனி நாட்டு சினிமா இயக்குனர். திரைப்படத்தை முற்றாக எழுதி இயக்குகிறவர் அவர். வழக்கமாக திரைப்பட்ம் எடுக்கும்போது, காட்சிப் படுத்துவதாக வரும் shot.. ஷாட்டோட நீளத்தை வெட்டிக் குறுக்கி நேரத்தை செதுக்கிடுவோம் இல்லையா? மாக்ஸ் ஒபல்ஸ் அதெல்லாம் பண்ணவே மாட்டார் ஒரே ஷாட்லே காட்சி தொடர்ந்து காலத்திலே நீண்டு போகும்…அவரோட பாதிப்பு எனக்கு உண்டு குணாவிலே எல்லாம் ..நீளமா நீட்டி நீட்டி ஷாட் வரும். என்ன பார்க்கறோமோ அது தான் காலம்.. ரௌண்ட்னு ஒரு படம்.. இதே மாதிரி.. சுத்திச் சுத்தி வந்துட்டு இருக்கும்.. (இப்படி படத்தை உருவாக்கறது).அது ரொம்ப கஷ்டம்

நீல: ஒரு நாள் முடிச்சு.. கோவிலுக்குப் போய்ட்டு வந்து.. இறக்கறது.. அந்தக் கால கட்டத்தில் இருக்கப்பட்ட, மனதில் வரும் பழைய காலத்தில் இருந்து சந்திக்க கூடிய ஆட்கள்..இதெல்லாம் அதிலே பதிவு பண்ணியிருக்கும்… நாவலின் முதல் பகுதியில் அனந்தன் நாயர் வாழ்ந்த வாழ்க்கை சொல்லப்படுகிறது. கிடத்தட்ட அந்த காலகட்டத்திலே பள்ளிக்கூடத்தில் என் கூட படிச்ச பையன் ஒருவன் இருந்தான்.. அதை நான் இப்ப சொல்லணும்.. நாயர் பையன்.. அவன் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. அவன் அப்பா டிரைவராக இருந்தார். ஆஜானுபாகு. தண்ணி எல்லாம் போடுவார்.. ஒரு நாளக்கு அவரும் பிள்ளைகளும் வீட்டுக்கு வந்தபோது அந்த அம்மா, அவரோட் மனைவி வீட்டில் இல்லை. கேட்டபோது யார் கூடவோ போய்ட்டாங்கன்னு தெரிஞ்சது. அது அன்னிக்கு ஒரு பெரிய பேச்சு.. நான் பள்ளி மாணவன். ஐயோ கிருஷ்னன் குட்டியோட அம்மா போய்ட்டா.. பாட்டிதான் இருக்கா.. வயசான பாட்டி.. இப்படி எல்லோரும் சொன்னாங்க. அவனையும் அவன் சகோதரியையும் வள்ர்த்தியது அந்தப் பாட்டி. அது என் மனசுக்குல்லே எங்கேயோ கிடந்திருக்கு.. இந்த நாவல் எழுதினது எழுபதுகளிலே.. அதுக்கு முப்பது நாற்பது வருஷம் முந்திய சம்பவங்கள் இதெல்லாம். எழுதி எழுதி வந்தபோது நான் நினைச்சேன்.. இது எங்கே இருந்து வந்தது… இந்த மாதிரி மனைவி விட்டுட்டுப் போனது.. இந்த மன தத்தளிப்பு, தர்ம சங்கடம் எல்லாம் மன அவசமாக வந்தது.. ஏன்னா அந்தப் பையனோட மனம் எனக்கு தெரியும்.. கடைசியிலே அந்த அம்மா கூட சேர்ந்துடுவான்.. பொண்ணு சேர மாட்டா..நாங்க ஆச்சரியப் பட்டோம்.. என்னது இது.. நோய்ப் படுக்கையில் கிடந்த அப்பாவை விட்டுட்டு இப்படி போய் சேர்ந்துட்டானே.. அதை எல்லாம் துருவித்தான் காரணங்கள் இங்கே நாவலில் வருது ..இதெல்லாம் நினைச்சுப் பார்க்கும்போது வர்ற விஷயம்.. எழுதும்போது அதெல்லாம் வராது.. எந்தவிதமான முன்னேற்பாடும் கிடையாது.. நாவல் எழுதி எழுதி வரும்போது கொஞ்சம் ஏக தேசமா மனதில் ஒரு scketch இருக்குமே தவிர முழுக்க முழுக்க இவ்வளவுதான்னு போட்டுட்டு எழுத மாட்டேன்.. அப்படி செஞ்சா எனக்கும் சுவாரசியம் இல்லே. படிக்கற உங்களுக்கும் இருக்காது..

கமல்: ஒரு கேள்வி அதாவது இப்போ writing courses.. எழுத்துக்கான பயிற்சி அமெரிக்காவிலே. முழுத் திட்டம்னு அதை சொல்றங்க எங்கே போகிறாய் எதுக்காக போகிறாய் எங்கே தொடக்கம், எது முடிவு.. நடுவிலே என்னென்ன வரும் இதெல்லாம் வச்சுக்க்கணும்கிறாங்க.. எனக்கு ஒண்ணு தெரியுது கவிதைல்லாம் அப்படி எழுதினா வரவே வராது போகிற போக்குலே எழுதணும்.

நீல: வராது அது மனித மனம் சொல்லககூடியது. இப்படித்தான் நடக்கும்னு யாரும் ஆர்டர் பண்ண முடியாது ஆசைப்படலாம். நடக்கணும்கிறது அப்படி அந்தப் பக்கம் போனால், நடக்கறது இப்படி இந்தப் பக்கம் போயிடுவோம்.

கமல் நீங்க உங்க நாவல்லே அது போக்கிலே போய்ட்டே இருப்பீங்க இல்லியா

நீல நான் எப்பவுமே அப்படித் தான்.. கதாபாத்திரங்களில் கூடு பாய்தல்

கம்ல சாவா வாழ்வா முடிவு எல்லாம் நீங்க பண்றது இல்லே?

நீல எல்லாம் கூடு விட்டுப் கூடு பாயறதுதான்..என் மனைவி இப்படி போனா எப்படி இருக்கும்.. திரவியம் காரக்டர்லேயும் அதேதான். என் அக்கா தங்கைகு இது போல அவஸ்தை வந்தால் எபபடி இருக்கும்.. இது எல்லாம் நான் அனுபவிக்கறேன்

கமல் நடிப்பும் அதே தானே.. அது என் கதை இல்லே. எனக்கு அவனைப் பார்த்து கேலியாகவும் இருக்கலாம்.. ஆனா நடிக்கும்போது அவனாக மாறும்போது கூடு விட்டுக் கூடு பாயறோம்

நீல:அதுனாலே தான் அந்த தத்ரூபம்கறது .. எனக்கு சில வேடிக்கையான சம்பவங்கள் எல்லாம் உண்டு. உறவுகள் பத்தி பேசும்போது சொல்றேன்

கமல்: நான் சுந்தர ராமசாமி கிட்டே கேட்கும்போது ’நான் நிறைய திட்டம் போடுவேன்.. யார் எப்படி இருக்காங்க.. தாடி வச்சிருப்பாங்களா தாடி என்ன நிறம் நீளம் என்ன உயரம் என்ன.. சாக்கடை எங்கே இருக்கு. பக்கத்து வீடு எதிர் வீடு எல்லாம் எனக்கு தெரியணும் அந்த திட்டம் போட்டுட்டு அதுக்கு அப்புறம் வேறே திட்டங்கள் எல்லாம் கிடையாது’ன்னு சொன்னார் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.. அந்தத் திட்டம் வரைக்கும் கேட்கும்போது மேலைக் கல்வி western teaching-ல் இருக்கற மூன்றங்கக் கட்டுமான்ம் – three acts structure நினைவு வந்தது ..அரிஸ்டாடில் சொன்னது அதுதான் அப்படி இருக்கணும்கிறாங்க எனக்கு அதுலே கொஞ்சம் ஒப்புதல் இல்லே. இப்ப நீங்க சொன்னது நம்பிக்கையா இருக்கு

நீல: எனக்கும் உங்க கருத்துதான். எழுத்தாளன் முழுத் திட்டம் தீட்டி எழுதறது ஒரு பத்திரிகையாளர் தன்மை. அப்படி எழுதினால், பத்திரிகை எழுத்து தான் வரும். creative writing வராது. படைப்பிலக்கியம்.. ஆக்கபூர்வமான கற்பனை வளத்தோடு எழுதும்போது கற்பனை தான் அங்கே பிரதானம். இயல்பியல் யதார்த்த வாழ்க்கையைத் தான் நீங்க எழுதறீங்க. வாழ்க்கையாக இருந்தாலும் கூட அது இப்படி நடக்கணும்னு கேட்டாலும் கூட உங்க கற்பனையில் நடக்கப்பட்ட மாதிரி தான் நீங்க அதை கையாளறீங்க. அங்கே தான் உங்க craft.. கலைத்தன்மை வருது எல்லாமே முன்கூட்டியே திட்டம் போட்டு எழுதியாச்சுன்னா அது பாட்டுக்கு சிவனேன்னு போயிட்டு இருக்கும்..

கமல் படிக்கற்வனுக்கும் எழுதறவனுக்கும் (அணுகுமுறை) வித்யாசம இருக்கு படிக்கறவங்க எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி தானே நாம போய்ட்டு இருக்கோம்

நீல: எனக்கே சுவாரசியம் இல்லாம இருந்தால் வாசகனுக்கு எப்படி? இன்னும் மோசமாக இருக்கும்

இரா:ஒரு நாவலை நாம் எழுதும்போது ஒரு கள ஆய்வோ மற்ற வகை ஆய்வோ செய்து அடிப்படையான தகல்வகளை திரட்டின பிறகு தானே எழுதப் போறோம் அந்த மாதிரித்தானே இருக்கும்? நீங்க சொல்றது நாவல் எந்தப் போக்குலே போகுதோ … அது கற்பனையைப் பொறுத்தது. நான் அதைக் கேட்கலே. அந்த நாவல்லே வர்ற பாத்திரங்களுக்கான ஆய்வு .. அவர்களோட மொழிநடை …அவர்கள் கலாசாரம் பண்பாடு .. பின்னணி .. இதை எல்லாத்தையும் பற்றி நாம் ஆராய்நதிருப்போம் இல்லையா?

கமல் அந்த ஆராய்ச்சி எப்படி இருக்கும்?

நீல அது உங்க பாணி என்றால் அதை நான் எதிர்க்கலே

இரா இது என்னோட பாணின்னு சொல்லவில்லை.

நீல நீங்க சொல்லக்கூடிய பாணி. அதுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கலே எல்லா மனிதனுக்கு உள்ளும் படிச்சவன் படிக்காதவன் சாதா கூலி ஆள் இப்படி எல்லோருக்கும் அவங்க அவங்க மனசுக்குள்ளே மகோன்னதமான உலகங்கள் இயங்கிட்டு இருக்கு. அதை எழுதவே ஒரு ஆயுசு போதாது சார்.

இரா இதைப் பற்றி..இப்பத்தான் நாங்க வரும்போது பேசிட்டு வந்தோம் மனசுக்குள்ளே உலகங்கள்.. எழுத ஆயுசு போதாது.. இதே தான்.

கமல் பிரமாதமான கருத்து.. வெவ்வேறு எழுத்தாளர் கருத்து.. உங்க கூட ஒத்துப் போறது மட்டுமில்லே என்னோட கருத்தும் தான். அந்த நம்பிக்கையை ஊட்டிக் கொள்ளத்தான் உங்க கூட பேசறேன்.. சுயநலமான யாத்திரை இதுன்னு வச்சுக்குங்க .. அப்புறம் இந்த மேதைமை .. இது எல்லோருக்கும் இருக்கு ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி எழுதுவார்

நீல அதேதான். சிலர் கள ஆய்வுல்லாம் செய்வாங்க. பார்த்தா அவங்களும் அந்த எழுத்துப் பாணிதான் அங்கே கொண்டு போய் புகுத்தி இருப்பாங்க கதையின் களம் ..atmosphere மாறினால் மட்டும் விஷயமில்லை

கமல் கிட்டத்தட்ட சுந்தர ராமசாமி சொன்னதும் அப்படித்தான் .. ’நிறைய இருக்குங்க என் வாழ்க்கை அனுபவமே நிறைய இருக்குங்க.. எழுதி மாளாது’ம்பாரு இந்த மாளாதுங்கறது என்னன்னா, நேரம் இல்லேஙகறாரு

இரா: என்னப் ப்த்தியே நான் நிறைய எழுத வேண்டி இருக்கு என்னை சார்ந்தவர்களைப் பத்தியும் எழுத் வேண்டியிருக்கு

கமல்: உஙக்ளைப் பத்தி நீங்க சொல்றது தான் உங்க நட்பும் உங்க உரையாடலும் உங்க எழுத்தும். அதையும் சொல்லி முடிக்கப் போறதில்லே டைம் இல்லே

நீல: உங்களைப் பத்தி சொல்றதுன்னா … நீஙக் ஒரு சமூக ஜீவி தான் அது உங்களை பத்தி இல்லே சமூகத்தைப் பற்றித்தான் உங்க எழுத்தில் சொல்றீங்க. நீங்க எங்கே இருந்து வந்தாலும் உங்க உணர்வுகளை சொல்லும் போது என் உணர்வுகளை சொல்றீங்க. அவர் உணர்வுகளை சொல்றீங்க… அப்படித்தான்.. உறவுகள் நாவலை படிச்சு நிறையப் பேர் சொன்னாங்க எங்க அப்பா ஆஸ்பத்திரியிலே கிடந்தா எப்படி இருப்பாங்க அதே உணர்வுகளைத்தான் சொல்றீங்கன்னு.. எங்க அப்பா கிடந்தது எல்லாம் எனக்கு அப்படியே ஞாபக்ம் வருதும்பாங்க நான், எங்க அப்பா ஆஸ்பத்திரியில் கிடக்கும்போது பக்கத்திலே இருந்த எனக்கு ஏற்ப்ட்ட உணர்வுகளைத்தான் பதிவு பண்ணினேன்.. இந்த உணர்வு தான் எல்லோருக்கும் .. அப்பா மகனுக்குள் இருக்கக் கூடிய உறவை வேறே மொழியில் சொன்னாலும், அவங்களுக்கும் அப்படித்தான் தோணுது.. இது வந்து பொதுவான, அடிப்படை உணர்வுகள் ..

கமல் என்ன கோணத்தில் சொல்லணும்..angle decide பண்றதுங்கறது.. சினிமாவைப் பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு பார்வையாளரும் ஒரு கோணத்தைத் தீர்மானம் செஞ்சுடுவாங்க.. நான் இந்தக் கோணத்திலே வச்சாக்கூட மனசுக்குள்ளே அதை எதிர்க் கோணத்துலே இருந்து பார்க்கிறதுக்கான உத்தி அவங்க கிட்டே இருக்கு

இரா:உங்க point of view பார்வையாளனுடைய நோக்கு ஆக இருக்காது அப்படியா?

கமல்:என் பாயிண்ட் ஆப் வியூ எவ்வளவுதான் அழுத்தி நான் வச்சுட்டு இருந்தாலும் .. எதிர்க் கோணத்திலே .. மனசுக்குள்ளே இந்தப் பக்கத்துலே ஜன்னல் வழியா அவன் பாத்துட்டு இருப்பான். அதை பார்க்கிற தன்மை அவனுக்கு உண்டு அதனாலே தான் நமக்கு … அது ஏன்.அப்பிடி ஆச்சு அது பொய்யா இருக்கேன்னு நாம் கேட்கற கேள்வி கூட அதுனாலே தான்.

இரா. நேற்று திருவனந்தபுரம் புறப்பட்ட போது எங்க நண்பர் கிரேசி மோகன், ’நீல பத்மனாபனோடு நீள பத்மனாபனையும் பார்த்துட்டு வாங்க’ன்னார். சயனம் கொண்டு பாம்பணையில் கிடக்கும் நீள பத்மநாப சுவாமி.. அவரைப் பார்க்கக் .. கோவிலுக்குப் போயிருந்தேன்.. அங்கே, பள்ளிகொண்டபுரம் நாவலில் நீங்க சொல்ற மோகினி சிற்பம் எனக்கு பார்க்க கிடைக்கலே

நீல:இருக்கே. என்னோட வந்தா காணிச்சுத் தருவேன்.

இரா. நீங்க பள்ளிகொண்டபுரத்தில் ஊட்டுப்புரையைப் பற்றிச் சொல்லியிருக்கீங்க. அதிலே ஆதிசேஷய்யர் மகள் தான் கார்த்தியாயினின்னு சொல்லியிருக்கீர்கள். நம்பூத்ரிகள் வேறு ஜாதிப் பெண்களோடு தொடர்பு (பந்தம் புலர்த்துதல்) வைத்துக்கொண்டதாகத் தெரியும். தமிழ்நாட்டிலிருந்து மலையாள பூமி போன தமிழ்ப் பிராமணர்கள் (பட்டர்மார்) கூட பந்தம் புலர்த்தியிருக்காங்களா?

நீல: ஆமா இங்கே நிறைய இருந்ததே அது… அச்சிமார் உண்டு.. திருவனந்தபுரத்திலே இருந்தாங்க ’எண்டெ அச்சன் சாமியாணு அம்ம நாயராணு’ என்று சொல்லக் கூடிய எழுத்தாள நண்பர்கள் இருந்தாங்க.

கமல்:ஆமா மெட்றாஸ் வெஸ்டிஜெஸ்லேயே அதைப் பற்றி குறிப்புகள் உண்டு.

நீல அது வந்து எனக்கு ஒரு குறைவா தெரியலே. free sex வேணும்னு நான் சொல்லலே உலக வாழ்க்கையில் இந்த மாதிரி மன விழைவு இருக்கு பாருங்க.. சில தேவைகள் வருது. சிவசு எழுதியிருக்கார் இதைப் பற்றி.. பள்ளிகொண்டபுரம், அப்புறம்.. ‘இன்னொரு நாள்’னு ச்மீபத்தில் எழுதின கதை .. மனித மனத்தின் செயல்பாடு.. இந்த மாதிரி பல விதமாகவும் இருக்கலாம்.. நாம இதை காட்டுறது பூசி மெழுகித்தான்…idealism and realism .. ஆதர்சம், ஏக பத்னி விரதனா இருக்கணும் .. பொய் பேசக் கூடாது .. மெய் தான் பேசணும்.. சங்க இலக்கியத்திலே பாருங்க..பரத்தையை நாடிப் போகாமல் இருந்திருக்கானா? உண்மையான இலக்கியம் இதையும் சொல்றது தான்.. தாஸ்தாவெஸ்கி இதெல்லாம் எழுதியிருக்கார்.. இங்கே எழுத்தாளன் எழுதினால் அந்த எழுத்தை பாவமா நினைக்கறாங்க..எழுதறவனை பாவ ஜென்மமாக பார்க்கிறாங்க.. அசல் வாழ்க்கையிலே இது மாதிரி விஷயங்கள். அதுக்கெல்லாம் பல காரணங்கள் இருக்கலாம்.. இதுக்கெல்லாம் ஒவ்வொரு காரணமாக பார்க்கப் போகலாம்.. இதுலே விக்ரமன் தம்பியை நாடி கார்த்தியாயின் போறா என்றால், அனந்தன் நாயர் தான் காரணம்.. அப்படி பல பேர் சொல்றாங்க.. பல சூழ்நிலை வருது.. ஆணும் பெண்ணும் இந்த மாதிரி.. It is a fact

இரா: அனந்தன் நாயருக்குள்ளே தோற்கணும்னு வெறி.. ஒரு defeatism இருக்குன்னு நான் நினைக்கறேன்.. அவர் முதல் தடவையாக கார்த்தியாயினியைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கும்போது, இவ்வளவு பேரழகா.. நான் இதுக்கு தகுதி உடையவனான்னு யோசிக்க ஆரம்பிச்சுடறார்,, இந்தப் பெண்ணை நான் இழக்கணும்.. அந்தத் துயரத்திலும் பிரிவிலும் ஆற்றாமையிலும் தான் நம் வாழ்க்கையின் நியாயப் படுத்துத்லே இருக்க்குன்னு அவர் நினைக்கற மாதிரி எனக்கு தோண்றது

நீல: இதையும் சொல்லியிருக்காங்க.. வாழ்க்கையிலே இந்த சூழ்நிலை எப்படி வந்தது..வாழ்க்கையில் அவருக்கு வந்த கஷ்டங்கள் …நோய்க் கொடுமை.. வேலை விஷயங்கள் basic ஆக அவருடைய mental moulding .. மன வார்ப்பு எப்படி இருந்தது..அவருக்கு இந்த அம்மாவை பார்க்கும்போது முதல் ராத்திரியிலேயே இப்படி நீங்க சொன்னமாதிரி இருக்கறதா சில குறிப்புகள் இருக்கு .. நான் என்ன சொல்ல வரேன்னா இதெல்லாம் சாதாரண வாழ்க்கையிலே சர்வ சாதாரணமான விஷயங்கள்

கமல்:எல்லா கலாசாரத்திலேயும் அப்படித்தான். இப்ப நீங்க தாஸ்தாவ்ஸ்கின்னு சொன்னதினாலே கேக்கறேன்.. உங்களுக்கு அவரோட எழுத்தின் பாதிப்பு எப்படியானது?

நீல: என் வாசிப்பை பத்தி சொல்றேன்.. எனக்கு ரொம்ப இளமையான் வயசிலேயே திருவனந்தபுரம் பப்ளிக் லைபிரரி பரிச்சயம் ஆனது.. அங்கே ஏகப்பட்ட புத்தகம் புத்தகம் மேலே காதல்.. புரிஞ்சாலும் புரியாவிட்டாலும் எடுத்துட்டு வந்து ..தமிழ், மலையாளம், ஆங்கிலம் .கூட்டி வாசிக்கத்தன தெரியும். புரிஞ்சாலும் புரியாட்டாலும் cover to cover படிச்சுடுவேன்

கமல்: அங்கங்கே skip பண்ணிட்டு வந்து

நீல: ஆமா

கமல்:இது முக்கியமான செய்தி. ஆங்கிலம் நான் படிச்சது அப்படித்தான். சில வார்த்தைகளை பிற்பாடு துஷ்பிரயோகம் கூட செய்திருக்கேன் அப்போ.. யாராவது சொல்வாங்க. ’அதை அந்த மாதிரி சொல்லாதே’.. ’நான் புத்தகத்திலே படிச்சேன்’னு பதில் சொல்வேன்.. அவங்க சொல்வாங்க – ’வார்த்தை சரிதான்.. ஆனா இங்கே அது வராது’ . இப்படி.

நீல:இப்படி நிறைய படிச்சேன். அப்படித்தான் கநாசுவோட பொய்த்தேவு… சாகுந்தலம் தமிழ் மொழிபெயர்ப்பு.. சாகுந்தலத்திலேயே அருமையான கவிதை வனத்துரு தருக்காள் இளநீர் வார்க்குமுன் தானொரு துளிநீர் பருகாள் இதெல்லாம் அப்புறமாத்தான் தெரியுது..சும்மா படிச்சுட்டுப் போறது… கநாசு எவ்வளாவு பெரிய எழுத்தாளர்னு பின்னால் தான் தெரிஞ்சுது.. யூனிவர்சிடி காலேஜ்லே படிக்கும்போது ஒரு நிகழ்ச்சிக்கு .. பிரண்ட்ஸ்க்கு இடையில் ஒரு பரிசு தர வந்தார் ..அப்பத்தான் கநாசுவை தெரியும். அவரைத் தெரியாம பொய்த்தேவு படிச்சேன். தெரிஞ்சதும் இன்னொரு தடவை பொய்த்தேவு படிச்சேன் இன்னொரு meaning வருது

கமல்: நான் சொன்னேனே Crime and Punishment-ல் ஒரு குடிகாரன் வருவான் தன் கதையை சொல்வான்.. அந்தக் கதையை சொல்லும்போது அப்படியே ஒரு உலகம் விரியும்.. எனக்கே புரியுது நான் கல்யாணம் பன்ணாம பிரம்மசாரியா இருந்தாலும் அந்த உலகம் புரியும்.. ரொம்ப ஆச்சரியமா இருந்தது

நீல:ஆச்சரியமான உலகம். அதுலே பூசி மொழுகறது எல்லாம் கிடையாது மனித வாழ்க்கையிலே மனங்களை.. அன்னா கரினனா .. டால்ஸ்டாய் .. உலக வாழ்க்கையிலே இதெல்லாம் சர்வ சாதாரணமாகத்தான் நடக்குது. ஆனா இலக்கியத்திலே கையாளும் போது ரொம்ப பேர் அதை ஏத்துக்கறதில்லே

கமல்: அவங்க சொல்றது – ‘நாம் வழிகாட்டிகள்.. நாம் அப்படி எல்லாம் சொல்லக் கூடாது’

நீல: அதை சொல்றது மோசமானது இல்லை.. அப்படி இருந்தா இப்படி வருது… இலக்கிய.. வாசக அனுபவம் ஒரு தனி அனுபவம் ஒரு கலை உணர்வு அதை இப்படித்தான் நாம் define பண்ணலாம்னு சொல்ல முடியாது.. இந்த அனுபவத்துக்காகத் தான் எழுதறோம். நேர்மறையாகவும் எடுக்கலாம் எதிர்மறையாகவும் எடுக்கலாம்.. எடுக்கறவங்க மனத்தைப் பொறுத்திருக்கு.. மற்றதை எழுதினாலும் இதைச் சொல்லலாம் இப்படி எழுதினாலும் சொல்லலாம்..

கமல்: கடை வச்சிருக்கு.. குடிக்கறதும் குடிக்காததும் நீங்க செய்யற முடிவு. அதை ஒத்துக்க முடியுது. இதை ஏன் ஒத்துக்க முடியாது?

இரா: கநாசு பற்றி சொன்னீங்க .. கநாசுவை ஒரு படைப்பாளியாக இன்னொரு படைப்பாளி சொல்லி கேட்கறேன்.. அவரை ஒரு பட்டியல்காரராக பார்த்திருக்காங்க.. அப்பப்ப பட்டியலை மாத்துவார்னு சொல்வாங்க..உங்களுக்கு கநாசு மேலே ஒரு பெரிய மதிப்பு உண்டு இல்லையா

நீல: நீங்க மட்டும் இல்லை.. சமீபத்திலே இங்கே வந்த வளர்மதியும் கேட்டார்.. இப்ப வர்ற எழுத்தாளர்களிலே போன தலைமுறை எழுத்தாளார்களை பற்றியோ அவங்க சாதனை பற்றியோ அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது.. படிக்க மாட்டாங்கன்னு நினைக்கறேன்.. எல்லா எழுத்தாளனுக்கும் தான் எழுதினதுதான் எழுத்துன்னு தோணலாம்.. எனக்கும் தோணியிருக்கு.. ஆனா நான் ஒரு கண்ணி தான்.. எனக்கு முன்னும் உலகம் இருந்தது.. பின்னும் இருக்கும்..

கமல்: மரபுத் தொடர்ச்சி

நீல: ஆமா மரபுத் தொடர்ச்சி தான்.. நான் ஏன் supress பண்ணனும் எனக்குத் தெரியாது கநாசு அந்தக் காலத்திலே எழுதினார்.. மௌனி எழுதினார் தி.ஜானகிராமன் எழுதினார் .. அதுலே தான் நானும் வரேன்..(வட்டார வழக்கு) கொச்சை நாவல் பத்தியோ பிராந்திய நாவல் பத்தியோ யாரோ சொன்னாங்களாம் பத்மநாபன் பேர் இல்லைன்னா கூட நான் கவலைப் பட மாட்டேன்னு ..நான் தான் எழுதினேன் இவர் எங்கெ எழுதினார்னு கேட்டாக்கூட எனக்கு கவலை இல்லை .. ஏன்னா நாம் (அப்படி எழுதறதை) செஞ்சுக்கிட்டு இருக்கோம் .. அதுனாலே தான் கநாசு பண்ணினது முக்கியம்.. கநாசுக்கு இருந்த ஒரு peculiar தன்மை பற்றி சொல்றேன்..கநாசு நாவல்லே ‘வாழ்ந்தவர் கெட்டால்’னாலும் சரி, ‘பொய்த்தேவு’ன்னாலும் சரி ..ஜானகிராமன் கிட்டே இருந்த ஈர்ப்பு .. attraction .. கநாசு கிட்டே வரலே.. ஜானகிராமனை ஒப்புக்குவாங்க.. கநாசுவை ஒத்துக்க மாட்டாங்க.. ஜானகிராமன் கிட்டே அவர் எழுத்தில் ஒரு பாலுணர்வு sex மயக்கம்.,, குறையா சொல்லலே .. அதுவும் நமக்கெல்லாம் வாழ்க்கையில் வேண்டியது…

கமல்: ஆமா ஜானகிராம்ன் அதைக்கூட கொச்சையா சொல்லலே அவரோட நாவல்…

இரா: மோகமுள்?

கமல்: ’உறை அவிழ்த்த வீணையாய் மடியில் சாய்ந்தாள்’ம்பார். என்னென்னமோ வரும்.. form.. shape…

நீல: அம்மா வந்தாள்.. நல்லாத்தான் எழுதியிருந்தார்.. படிக்கும்போது கலை உணர்வு வரும்..மற்ற் வாசகர்களுக்கு அது போதும்..கநாசு கிட்டே அதுவும் கிடையாது

இரா: அதுக்கு மேலே போகணும்

நீல:அவரே சொல்லியிருக்கார்.. நான் கட்டுரைக் கதைதான் எழுதிட்டு இருக்கேன்னு சொல்வார்.. அவரு அதை சக்கையாகத் தள்ளுவார்.. அவருக்கு தனித்தன்மை இருந்தது.. அவரோட பொய்த்தேவு படிச்சா

இரா: பொய்த்தேவு படிச்சிருக்கேன்

நீல: வாழ்ந்தவர் கெட்டால்?

இரா: படிக்கலே பொய்த்தேவு தான் ஞாபகம் வருது..தாம்ஸ் வந்தார்னு கடைசியிலே எழுதினது படிச்சிருக்கேன்

நீல எல்லாமே அப்புறம் நடுத்தெரு..இலக்கிய வ்ட்டத்தில் வந்து புத்தகமானது அவரோட படைப்புகளோட தனித்தன்மை வந்து.நகுலன் கிட்டேயும் அதானே.. நிறைய பேரை அவர் நகுலன் encourage பண்ணியிருக்கார்… அவர் சோதனை பண்றார்னா அவரை ஒப்புக்குவாங்க.. .. கநாசு அப்படி இல்லே… உண்மையைச் சொல்வார் அதுனாலே ரொம்ப பேருக்கு எதிரி ஆகிட்டாரு .. ஜானகிராமனோட மோகமுள் பற்றி சொன்னீங்க.. அது craft-லேயும் கற்ப்னையிலும் சரி ந்ல்ல நாவல்.

கமல்: சினிமாவாக ஆக்கியிருக்காங்க

நீல: சரியாக வரலே

இரா: பள்ளிகொண்டபுரம் திருவனந்தபுரத்தை களமாக்கினது போல் மோகமுள் கும்பகோணத்தை களமாகக் கொண்டது. மோகமுள் கும்பகோணம் தவிர வேறு இடத்தில் நடக்கலாம் ஆனா பள்ளிகொண்டபுரம் திருவனந்தபுரத்தில் மட்டும் தான் நடக்க முடியும். ஏன்னா, அந்த நகரமே அந்த நாவலில் ஒரு முக்கியமான கேரக்டரா போயிருக்கு. இப்படி பௌதிகமான வெளி மனுஷனோட மன வெளியைப் பாதிக்கறது அபூர்வமானது. இந்த மாதிரி நடக்குமா?

கமல்: எது:

இரா: இப்படி ஒரு இடம்.. ஒரு நகரம் .. படைப்பை பாதிக்கறது

நீல: நீங்க சொன்னபோது நான் வேறே ஒண்ணு சொல்லணும். பள்ளிகொண்ட புரம் ஒற்றை இருப்பில் உட்கார்ந்து எழுதினது. மோகமுள்ளை திஜா சுதேசமித்திரன்லே தொடர்கதையா எழுதினார். அதுனாலே சில இடங்கள் நீர்த்துப் போயிருக்கலாம்..குறையாகச் சொல்லலே.

கமல்: ஆமா, அது ஒரு முறை … அவர் எழுதினது

நீல : Readability இருந்தது உண்மைதான் படிக்க ஒரு சுகம் இருந்தது. அது அதோட தனித்தன்மை. .. பள்ளிகொண்டபுரத்தை எடுத்தீங்கன்னா .. அப்படி இருக்காது.. கநாசு சொன்னது மாதிரி குறை வேணும்னா சொல்லலாம்..சில இடங்கள்லே crisp ஆகப் போயிருக்கலாம்.. சில இடத்திலே கதா காலட்சேபம்..கதாகாலட்சேபம் கேக்கறவங்களுக்கு melody பிடிக்காது.. melody கேக்கறவங்களுக்கு கதாகாலட்சேபம் பிடிக்காது.. என்னடா நீட்டி நீட்டிப் பாடிட்டு போகறான்.. எங்கே போய் நிக்கும்னு கேப்பாங்க.. ஒவ்வொருத்தரோட தனித் தன்மையோடு மனம் இயங்கும் . மோகமுள் நடக்கும் இடம் கும்பகோணமாக இருந்தாலும் கூட.. எனக்குத் தோணினது என்னன்னா.. மோகமுள்ளை ஒரே புத்தகமா உட்கார்ந்து எழுதியிருந்தா தனித்தன்மை வந்திருக்குமோ என்னமோ..ஆனா அம்மா வந்தாள் நாவலுக்கு அந்த குறை சொல்ல் முடியாது.

கமல் முடியாது தான்

நீல: தி.ஜானகிராமன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்.. கநாசு மாதிரி பிடித்த எழுத்தாளர் தான்

கமல்: இப்போ எங்களுக்கு தேவையான ஒரு விஷயம் கேட்கலாமா.. Rewriting எவ்வளவு பண்ணுவீங்க

நீல: நான் நிறைய பண்ணியிருக்கேன்.. முன்னாடி..இப்ப பண்றது இல்லே. தலைமுறைகள் எல்லாம் ரெண்டு மூணு தடவை எழுதியிருக்கேன்…

கமல்: முழுவதுமா

நீல: ஆமா, முழுவதும் எனக்கு வந்து மன இயக்கம் சித்தம் போக்கு சிவன் போக்கு.. விறுவிறுன்னு எழுதிட்டு போவேன் எனக்கே படிக்க க்‌ஷடமா இருக்கும்.. எழுத்தெல்லாம் எனக்கே மறுபடி படிக்கும்போது .. என்ன எழுதினேன்னு தெரியாது அந்த வேகத்திலே without editing எழுதிட்டே போவேன்.. திரவியத்தை எழுத்றதா இருந்தா அவனோட mental working மறந்து போயிடும்னு அவசரம் இப்படி…

கமல்: க்னவு மாதிரி.. அடுத்த நாள் யோசிச்சா விட்டுப் போயிடும்

நீல: இடையிலே பல விஷயங்கள் இருக்கு பாருங்க. ராத்திரி தான் எழுத்து.. வேலைக்கு போனா பகல்லே ஆபீஸ்.. குடும்ப விஷயம்.. ராத்திரி உக்காந்து எழுதி ஆரோக்கியம் பாதிக்கப் பட்டது.. எப்படியும் எழுதி முடிச்சுடணும்னு எழுதறது..இஞ்சினீயரிங்க் காலேஜ் படிக்கும் போது வீட்டுக்குப் பக்கம் நாடகக் கொட்டகை இருந்ததாலே படிக்கறது நாடகம் தீர்ந்து தான் படிப்பேன்.. சத்தம் இல்லாமல் அமைதியாக இருந்தால் தான் படிக்க முடியும். அது போல் எழுதறது.. அப்படி எழுதும்போது விறுவிறுனு நிறைய எழுதுவேன்.. சில நேரம் ரெண்டு மூணு draft எடுக்க வேண்டி வரும்.

கமல் அந்த draft-க்கு நீங்க திரும்பிப் போய் நடுவிலே நடுவிலே எடுப்பீங்களா அல்லது முழுதாகவே எடுப்பீங்களா

நீல: முழுசா எடுப்பேன்.. continuity இருந்தாகணும் முதல்லே இருந்தே எழுதுவேன்

இரா: தொழில்நுட்பம் நாம் பயன்படுத்தினால்,.. இதே நாவலை மடிக் கணினியில் எழுதக்கூடியதாக இருந்தா அந்த மாதிரி முழுவதும் மறுபடி எழுத எளிதாக இருக்கும் இல்லையா.. எல்லாத்தையும் களைஞ்சு தூக்கிப் போடாமல் என்ன வேணுமோ அதை வச்சுக்கலாம்.. என் நாவல்களை நான் கம்ப்யூட்டரிலே தான் எழுதறேன்

நீல: ஆமா டெக்னாலஜி இப்போ வந்துட்டுத்து.. அருந்ததி ராய் கூட சொனனாங்களே கம்ப்யூட்டர் இல்லாம இருந்தா என் நாவலை நான் எழுதியிருக்க மாட்டேன்னு.. கம்ப்யூட்டர்லே :அங்கங்கே எழுதி ஏத்தலாம்… கையாலே எழுதும்போது முடியாது..

கமல் ரொம்ப கொசகொசன்னு ஆயிடும்.. கோலம் மாதிரி..கழுதையை கழுவி ஊத்திட்டு புதுசா எழுதுன்னு போயிடுவோம்.

நீல ஐயோ பெரிய அவஸ்தை..கவலையா இருக்கும்..எழுதிய பிற்பாடு மொத்தமா எழுதின பிற்பாடு கூட திடீர்னு ஞாபகம் வரும்.. கூனாங்கண்ணி பாட்டா இந்த மாதிரி பேசினாரா இல்லியான்னு திருப்பிப் பார்த்து அங்கே கொண்டு போய் புகுத்தணும்.. அந்த கம்ப்யூட்டர் வேலையும் செஞ்சிருக்கேன்.. பெரிய் அவஸ்தை..easy இல்லையே எழுத இடம் இருக்காது

கமல்: கம்ப்யுட்டர் எழுத்தில் வசதி அதை நகர்த்தி வச்சுடலாம்..

இரா: காப்பி பண்ணிட்டு புதுசா எழுதலாமே

நீல எழுத்து பிரசவ வலி மாதிரிதான்.. Health affect பண்ணும் நம்ம blood pressure எடுத்துப் பார்த்தா ஒரேயடியாக ஏறி இருக்கும் வாழ்க்கையை … குடும்ப வாழ்க்கை மற்ற வாழ்க்கையை affect பண்ணிடும்… 24 மணி நேரம் மனசிலே எழுதற process தான் .. சதா பைத்தியம் மாதிரி திரவியம் ஸ்கூல் போயிருக்கான்.. டீச்சர் வந்திருக்கா .. அவன் அக்கா நாகம்மையை கொண்டு போய் விடறான் இப்படி மனசுலே ஓடிட்டே இருக்கும்

இரா:கம்ப்யூட்டர் background process மாதிரி

நீல: ஆமாம்.. இப்படி மனசைப் போட்டு படுத்தி..தேவையில்லாமே.. இப்பத்தான் நான் சொன்னேன். life long இப்படி எல்லாம் அவஸ்தைப்பட்டு பண்றோம். ஒண்ணுமே இல்லாமே எல்லாமே பேசாமப் பண்ணிட்டுப் போறாங்க (சிலர்).. உலக வாழ்க்கை அவ்வளவுதான்

கமல்: சிலபேர் சொல்வாங்க.. நான் ஒரு சிகரெட் பிடிச்சது கிடையாது கெட்ட பழக்கமே கிடையாது… இப்படி வந்துடுத்தே.. அவனைப் பாருங்க இப்படி இல்லையே-ன்னு..

நீல: ஆமா, சில நேரம் பலவீனமான தருணங்களிலே … .. இவ்வளவு அவஸ்தை எதுக்குன்னு தோணும்… பிறந்து வளந்த காலத்துலே இருந்து மனசுலே கிடந்த விஷய்ம் எல்லாம் இந்த நாவல்லே வந்திருக்கு.. உக்காந்து எழுதவே மூணு வருஷம் ஆச்சு.. எழுதின அப்புறம் போட ஆள் கிடையாது பாருங்க எவ்வளவு அவஸ்தை

கமல்:ஒருவேளை வாரப் பத்திரிகையிலே அடுத்த வாரம் வேணும் கொடுங்கன்னு கேட்கற மாதிரி இருந்திருந்தா வேறே மாதிரி இருந்திருக்குமா? இல்லே சண்டை போட்டிருப்பீங்களா?

நீல: இருந்திருக்கலாம். என்னோட way of writing ஒத்து வருமான்னு தெரியாது.. எனக்கு (மொத்தமாக எழுதிப் போகிற போது). முதல்லே இருக்கறதை கொஞ்சம் மாத்தணும்னு தோணும்

கமல் : முதல் அத்தியாயம் போய்ச் சேர்ந்து பிரசுரம் ஆகியிருக்கும்.. அப்புறம் மாத்தறது சாத்தியமில்லாம போயிருக்கும்..

நீல: ஆமா நம்ம scheme of things… அப்பப்ப நமக்கு இப்படி மாத்தணும்னா முழுத் திட்டம் போட முடியாதுங்கறதாலே அதெல்லாம் முடியாது

இரா: உங்க நாவல் தாமரையில் நாலைந்து மாதம் தொடர்ந்து வந்து படித்தது.. ஆடி ஆடி வந்து கொண்டிருந்தான் அவுரச்சன்.. மின் உலகம்?

நீல: அது ‘அனுபவங்கள்’. அது எப்படி தெரியுமா? மின்னுலகம் தீபம் – ஒரே இதழில் வந்தது… அனுபவங்கள் எங்கப்பா இறந்த நேரம். வாழ்க்கையில் பெரிய அதிர்ச்சி.. யாத்திரைன்னு நான் எழுதிய நாவல் .. நண்பன் இறந்து அவன் பிணத்தை நாலு பேர் தூக்கிப் போறாங்க.. அதை நான் கல்யாணம் கழிச்ச வருஷம் எழுதினேன். யாத்திரை ரெண்டாமத்து நாவல்.. மூணாமது நேற்று வந்தவன்.. நாலாவது நாவல் தலைமுறைகள்.. அது முதல்லே பேசப்பட்ட நாவல். உதயதாரகை romantic… டீச்சருக்கும் ஸ்டூடண்டுக்கும்…

கமல்? Almost, teen age-லே அவங்களுக்கு சக வயசு காரங்களோட ஈர்ப்பு தோணவே தோணாது.. ஏன்னா வளரணும்னு ஆசை இருக்கும் ..

இரா: கைக்கிளை, பெருந்திணை போலவா?

கமல்: அதை நோக்கித்தான் அவன் வளர்ச்சியே இருக்கறதாலே அதுதான் தன்னோட ஜோடின்னு தோணும்.. ஒரு உருவகம்.. குழந்தைகள் இன்னும் போடு இன்னும் போடுன்னு கேட்கற மாதிரி

நீல: ஆமா, உதயதாரகை நாவல்.. அப்புறம் தான் தலைமுறைகள்..பயணிகள்.. மின்னுலகம்.. எங்கப்பா இறந்தது பெரிய அதிர்ச்சி. அப்பாவை பொறுத்தவரை திடீர்னு மாரடைபு வந்ததாலே .. அறுபது அறுபத்திரெண்டில் அப்போ எல்லாம் அதுக்கு மருந்து கிடையாது நான் மூத்த மகன். உறவுகள் படிச்சாலே சில விஷயம் கிடைக்கும். சில விஷயங்கள்.. Promotiion ஆகி புனலூர்லே உத்தியோகம்…. அப்பா கூடவே உட்கார்ந்திருந்தேன். மெடிகல் காலேஜ் ஆஸ்பத்திரியிலே இறந்து போனார் . அவர் மேலே ஒரு பிரியம்.. He was very friendly with me .. .. அவர் இறந்த பிறகு தான் நான் தாடி வளர்க்க ஆரம்பிச்சேன்.. திகசியும் வல்லிக்கண்ணனும் அப்போ வந்திருக்காங்க.. திகசி தாமரை பத்திரிகை ஆசிரியராக இருந்தார் .. நீங்க அவசியம் நாவல் எழுதுங்க.. தாமரையிலே வரப் போறதுன்னு அறிவிப்பு போட்டுடறேன்னார்.. விடாப்பிடியா தொட்ர்ந்து தபால் அட்டையிலே எழுதி அனுப்பி எனக்கு அடிக்கடி நினைவு படுத்திட்டிருந்தார்.. அப்போ தான் அனுபவங்கள் நாவல் உருவானது.. நான் ஒரு நாவலும் வேறு யாரையும் வச்சு எழுத மாட்டேன். ஆனால், அனுபவங்களை dictate பண்ணி மனைவியை வச்சு எழுத வச்சேன்.. அந்த ஒரு நாவல் .. படுக்கையிலே கிடக்கேன்.. என்னெல்லாமோ நினைப்பு டாக்டர் கிட்டே போனேன்.. acidity… heart problem.. .. மன நிலை பாதிக்கப் படலே.. ஆனா அப்பா பத்தின நினைவுகள்.. depression.. அப்போ எனக்கு இருபத்தெட்டு .. முப்பது வயது ..அந்த நேரத்தில் தான் அனுபவங்கள் நாவல் அந்த ஒரு நாவல் தான் பத்திரிகைக்காக எழுதின நாவல். யாத்திரை, அனுபவங்கள், சமர் மூணையும் சேர்த்து புத்தகமா போட்டாங்க

இரா: உங்க அப்பாவோட மரணம் பாதிச்சது பற்றி சொன்னீங்க. நான் படிச்ச வரைக்கும் மன அவசங்களுக்கு உங்க எழுத்திலே முக்கிய இடம் இருக்கு. அவைதாம் நாவலையே வழி நடத்திப் போகுது. பள்ளிகொண்டபுரம் .. தலைமுறைகள்.. அந்த அனந்தன் நாயர் உற்சாகமான அனந்தன் நாயராக இருந்தா பள்ளிகொண்டபுரம் எப்படி போயிருக்கும்? இதை பள்ளிகொண்டபுரம் நாவல் அண்மைப் பதிப்புக்கு முன்னுரை எழுதிய சுகுமாரனும் கேட்டிருக்கார்.

நீல: என் கிட்டேயும் வேறு பலர் கேட்டிருக்காங்க. இன்னொண்ணும் கேட்கறாங்க.. பாருங்க.. எனக்கு பாட்டு கூட.. melody கேட்கறது சுகமான அனுபவம் .. தமிழ்நாட்டுலே ஒரு காலேஜ் இருக்கு.. ஐயப்பா காலேஜ்னோ என்னவோ பெயர்.. அங்கே சமாஜத்துலே பேச என்னைக் கூட்டிட்டு போனாங்க டீச்சர் தான் கூட்டிப் போனது.. அங்கே மாணவர்கள் மலையாளத்தில் பாடினாங்க.. வயலார் பாட்டு.. புஷ்ப பாதுகம் புறத்து வச்சு நீ..

இரா: சக்ரவர்த்தினி நினக்கு நானொரு சில்ப கோபுரம் துறன்னு..

நீல: ஆமா, எனக்கு அது மாதிரி பாட்டு கேட்டால் கண்ணு நிறைஞ்சிடும்.. பாருங்க.. அடுத்த பாட்டு தமிழ்லே பாடினாங்க.. முஸ்தபா முஸ்தபா உண்மையிலேயே எனக்கு.. முஸ்தபா பாடலை எல்லாம் குறை சொல்லலே.. உடனே நான் பக்கத்துலே இருந்த தமிழ் ஆசிரியை கிட்டே சொன்னேன்.. ஏம்மா மலையாளத்திலே நல்ல பாட்டா பாடிட்டு தமிழ்லே.. ஏன் சார் இந்தப் பாட்டுக்கு என்ன நல்லாத்தானே இருக்கு-ன்னாங்க .. அவங்க சொன்னதும் சரிதான்.. என் மன வார்ப்புக்கு, tragedy-யிலே ஒரு ஈடுபாடு உண்டு.. ஷேக்ஸ்பியர் .. அவர் ஹென்றி போர்த் எழுதினாலும் கூட, ஒதெல்லா, ஜூலியஸ் சீசர் … டிராஜடி தான் மாஸ்டர்பீஸ் ஆகியிருக்கு.. light-ஆக, நகைச்சுவையோடு நானும் சில சிறுகதைகள் எழுதியிருக்கேன்

இரா: ஆமா ஊமையன் துயரம் ஞாபகம் வருது… ரொம்ப சீரியஸா போய்ட்டு முடியும் போது தடால்னு அந்த ஆள் இன்னும் உயிரோடு தான் இருக்கார்னு முடியும்

கமல்: சாரோட படைப்புகளின் பின்புலத்தில் இருந்து நான் சொல்றேன்.. நகைச்சுவைங்கறது intellectual pursuit.. arithmetic அடிப்படை கூட நகைச்சுவைக்கு உண்டு.. … ஆனா tragedy உணர்வு பூர்வமானது.. அது எல்லோருக்கும் தெரிஞ்ச, அனுபவப் படுகிற விஷயம்.

நீல: அதுதான் நம்ம மனசை ரொம்ப பாதிக்குது.. மத்தது நாம சொல்ல வேண்டிய தேவை இல்லையே. சந்தோஷமா இருக்கக் கூடியவங்களை சங்கடப் படுத்த நாம எழுதலே தான்.. தலைமுறைகள் நாவலை பற்றி கூட சிலபேர் கேட்டாங்க.. ஏன் சார் கடைசியிலே கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாமில்லே.. ஏன் டிராஜடியா முடிச்சுட்டீங்க.. அப்படீன்னு.. கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு ஆசை தான்.. ஆனா அது நடக்கலியே நான் என்ன பண்றது!

(சிரிப்பு)

இரா: உங்க நாவல்கள் எல்லாத்திலேயும் பாத்திரங்கள் நிறைய பழஞ்சொல்.. பழமொழி பயன்படுத்தறாங்க.. அந்தக் கால சமுதாயத்தில் இப்படி இருந்ததா? படிக்கும்போது சுகமா இருக்கு. எங்கேயும் நெருடறது இல்லே .. அது உண்மைதான்

நீல: என்ன காரணம்னா நான் கூட்டுக் குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் சொன்னேனே என் பாட்டி.. பாட்டியோட கதை கேட்கறதிலே நான் ரொம்ப ஈடுபாடு உள்ளவன்.. அவங்க நெறைய பழமொழி சொல்வாங்க… தமிழிலும் மலையாளத்திலும் நிறைய உண்டு

இரா: ஆமா உங்க நாவல்லே படிச்சிருக்கேன்

கமல் :வீராசாமி செட்டியார் விநோதரச மஞ்சரியில் ப்ழமொழிகளைப் பற்றி வரும்..

நீல :ஆமா, வேலி சாடுன்ன பசுவினு கோலு கொண்டு மரணம்னு ஒரு பழமொழி. நான் எழுதி, கீழே விளக்கமும் கொடுத்திருக்கேன்..மரியாதைக்கு பேசாம இருக்கறவங்களுக்கு குழப்பம் இல்லை. சிலர் வேலி சாடற பசு மாதிரி போய் மூக்கை நுழைச்சு அவதிப்படறது பற்றி.. தமிழ்லே பழமொழி நானூறுன்னே பிற்கால இலக்கியம்

கமல்:நிறைய இருக்கு.. இன்னொன்னு எனக்கென்ன தோணுதுனா என் கருத்து. பழமொழி என்பது சிறுகதையின் மூதாதையார்.. ஏன்னா நம்ம மாதிரி கருத்துகளை பதிவு செய்யறது அந்தக் காலத்திலே எல்லோருக்கும் முடியாது.. இவர் மாதிரி எழுத இவரோட பாட்டி மாதிரியான பெண்மணிகளாலே அப்போ முடியாது.. அனுமதியும் இருந்திருக்காது..முழுக்கதையை தலைப்பு போல ரொம்ப வேகமாகச் சொல்ல அதை ஒரு பழமொழியாக, அவங்க பதிவு செஞ்சிருக்காங்க..

நீல:ஒரு நெடிய பாரம்பரியம் கொண்ட, தலைமுறை தலைமுறையாகத் தொடந்து வர்ற, தமிழ் மாதிரி ஒரு சமூகத்துக்குத் தான் வார்த்தைகளை இப்படி சுருக்கி வாழ்க்கை அனுபவத்தைக் கொடுக்க இயலும்.. சுருக்கமான, வளவளன்னு இல்லாம புதுக் கவிதை மாதிரி.. அதை நினைவு வைக்க சூத்திரம் மாதிரி எதுகை மோனை இருக்கும்.. என் எழுத்திலே அது தன்பாட்டில் புழங்கி வரும்.. ஆபீஸ்லே கூட நான் அவற்றை சாதாரணமா சொல்வேன்.. எழுத்திலே வேணாம்னு தவிர்க்கறது இல்லை.. வீட்டிலும் சொல்றதுதான்.. வீட்டுலே பெரிய குடும்பம்.. எங்கம்மாவுக்கு எட்டு சகோதரிகள். தக்கலையில் பிறந்த வீடு. அவங்க எல்லாம் இருந்து பேசும்போது .. புதுசா ஏதாவது பழமொழி காதுலே விழும் என்பதாலே. நானும் போய் உக்காருவேன்.. கோபி வந்தாச்சுன்னு சொல்வாங்க.. கோபின்னு என்னை வீட்டில் கூப்பிடுவாங்க.. ..கேட்கிற பழமொழியை எழுதி வச்சுக்கற்தெல்லாம் இல்லே.. அது பாட்டுக்கு மனசில் வரும்

கமல்: பழமொழி ஒரு code word பரிபாஷை மாதிரி. இந்த மாதிரின்னு கோடி காமிச்சுட்டா, முழுசுமே சொல்லாமே விளங்கிடும்

நீல: ஆமா, இந்த நாலைஞ்சு வார்த்தையை மட்டும் சொல்லிட்டா துல்லியமாக விளங்கிடும்.. பாருங்களேன்..வேலி சாடுன்ன பசுவினு கோலு கொண்டு மரணம்னா, எவ்வளவு அர்த்த்ம் அதில் வந்துடுச்சு..சும்மா இருந்தா குழப்பம் இல்லே.. போய் ஏதாவது தகிடுதத்தம் செஞ்சா..

இரா: இன்னொண்ணு கூட சொல்வீங்களே.. நீர்க்கோலி நெனச்சா

நீல: ஆமா, நீர்க்கோலி .. தண்ணிப் பாம்பு .. அது கடிச்சாலும்.. அத்தாழம் .. முடக்குன்ன ஸ்திதி.. ராச்சாப்பாடு இல்லேன்னு செய்யறது.. இது பழமொழி வழக்கு… இந்த சேறைன்னு சொல்வாங்களே .. அது பண்ணியாச்சுன்னா ராத்திரி சாப்பிடக் கூடாதுன்னு சொல்வாங்க.. பெரும்பாலும் எல்லாத்துக்குமே ஒரு காரணம், பின்னணி இருக்கு effect இருக்கு.. எதையுமே நாம தள்ள முடியாது

கமல் வீராசாமி செட்டியார் பக்கத்துக்கு நாலு பழமொழி உதிர்த்துக்கிட்டே போறார்.. தம்பிடிக்கு நாலு பட்டுத் துணி வித்தாலும் நாய்க்கு கோமணத்துக்கு ஆகுமான்னு அதில் ஒண்ணு..

(சிரிப்பு)

நீல: ஆமா, சிலதை நேரடியா சொல்லவும் முடியாது.. ஆனா ரொம்ப அர்த்தத்தோடு இருக்கும்.

கமல்: புரியாதவன் கிட்டே சொல்ற மாதிரி.. நாய் கிட்டே போய் பட்டுக் கோமணம் விக்க முடியாது

நீல: குளத்தோடு கோவிச்சுக்கிட்டுன்னு ஒரு பழமொழி கூட இது போல தான் .. நீங்க இந்தக் கேள்வி கேட்டதிலே சந்தோஷம்..

இரா: பள்ளிகொண்டபுரம் நாவல்லே சட்டம்பி சுவாமிகள் எப்படி வந்தார்?அவர் ஒரு கதாபாத்திரத்திடம், ’பிரபாகரா, குருவை பரீட்சை பண்ணாதே’ங்கறார்.. சட்டாம்பி சுவாமிகள் தானா.. இல்லே..அவர் போல..

நீல: சட்டம்பி சாமிகள் தான். அவர் வாழ்க்கையிலே இப்படி ஒரு நிக்ழ்வு இருந்ததா சொல்றாங்க..

இரா: உங்க கதைகளிலே ஒரு ஆன்மிகத் தேடல் வந்துட்டிருக்கே

நீல: ஆமா, கூண்டினுள் பட்சிகள் படிச்சிருக்கீங்களா

இரா: இல்லியே

நீல: கூண்டினுள் பட்சிகள் படிச்சதில்லையா? மைசூர் செண்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆப் லேங்க்வேஜஸ்லே கதாபாரதின்னு ஒரு ஸ்கீம் வச்சிருக்காங்க

இரா: ஓ.. கூண்டினுள் பட்சிகளா.. சாரி.. சரியாக் கேட்கலே.. படிச்சிருக்கேன்

நீல: என் தொண்டையும் கம்மிடுத்து வயசுக் காலத்துலே.. இந்த மாதிரி ஒரு ஆள் இருந்தாரான்னு எதிர்காலத்திலே கேட்க நீங்க இதைப் பதிவு பண்ணிட்டு இருக்கீங்க…கூண்டினுள் பட்சிகள்.. அதுலே நான் இதைக் கையாண்டிருக்கேன் .. நீங்க தலைமுறைகளை எடுத்தாலும் அதிலே.. கூனாங்கண்ணி பாட்டா, உண்ணாமலை ஆச்சி.. அவங்கெல்லாம் ஆத்மீகமா யோசிச்சு நடமாடறவங்க. இதை நான் வேணும்னு சேர்க்கலே. இதெல்லாம் நான் சின்ன வயசிலே . இப்ப நீங்க சொன்னீங்களே.. பள்ளிகொண்டபுரம்.. அதிலே இன்னொரு கேரக்டர்.. பாஸ்கரன் நாயர்.. இதுக்கு காரணம்னா.. நான் நேரமே சொன்ன மாதிரி யாத்திரைன்னு .. இத வந்து.. இப்போ சமீபத்துலே ஒரு நேர்காணல்லே கூட சொல்லியிருந்தேன்.. அந்தக் காலத்தில் எங்க தெருவிலே பாட்டிமார், வயசானவங்க நிறைய இருந்தாங்க.. சின்னக் குழந்தை பிராயத்திலே…. தெருவிலே அடிக்கடி சாவு நடக்கும்.. நாள் கணக்கா கிடப்பாங்க.. அப்புறம் சாவு.. இதெல்லாம் வாழ்க்கையிலே ஒரு அங்கம்னு அப்பவே பட்டது.. ராமாயணம், கருட புராணம் எல்லாம் அப்போ வாசிப்பாங்க.. அப்போ வயசானவங்களை பாரம்னு எங்கேயாவது கொண்டு தள்ள மாட்டாங்க.. ஹோம் நர்ஸ் வரமாட்டாங்க.. வீட்டோட தான் இருப்பாங்க.. என் பெரிய பாட்டி கூட இப்படித்தான்….அடிக்கடி தெருவிலே இப்படி இறப்பு நடக்கும் வீட்டுலே சொல்வாங்க. இதையெல்லாம் பாக்காதே.. பார்த்தா ராத்திரியிலே பயப்படுவே.. கனவு காணுவே. உள்ளே வந்துடும்பாங்க.. நான் அதை எல்லாம் கேட்க மாட்டேன் சங்கெல்லாம் ஊதிக்கிட்டு எடுத்துப் போவாங்க.. சின்ன தெரு பாருங்க.. ..சின்ன வயசிலே இருந்தே இதை பார்த்து பார்த்து வளர்ந்திட்டேன். . மரணம்.. நேற்றைக்கு இருந்தார்.. இப்போ இல்லே.. இந்தப் புரிதல்.. என் ஆத்மீக தேடலுக்கு நான் சந்தித்தபடி இருந்த மரணம் ஒரு முக்கிய காரணமா இருக்குமோன்னு இப்போ எனக்கு தோணறது..சாவு விழுந்த வீட்டுப் பக்கம் அது நடந்து கொஞ்ச நாள் போக மாட்டாங்க.. பயம்… பேய் பிசாசு இப்படி.. புதுமைப் பித்தன் சொன்ன மாதிரி.. நீங்க பேய் பிசாசை நம்பறீங்களா..இல்லே ஆனா பயமா இருக்கே அப்படி. மண்ணின் மைந்தன் கதையிலே சமீபத்திலே வந்தது நான் இதை சொல்லியிருக்கேன்.. இப்படி அந்தக் காலத்திலேயே மனசுலே படிஞ்சது என் ஆத்மீகச் சிந்தனைக்கு காரணமாக இருக்கலாம். ஆனா இது முழுக்க முழுக்க வந்தது கூண்டினுள் பட்சிகள் எழுதும்போது தான்.. அதுக்கு முன்னாடி அப்படி இல்லை..வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்கற போதம்.. என்ன தான் கழுதையாக் கத்தினாலும் ந்டக்கறது நடந்துட்டு தான் இருக்கும்.. நம்மால் சிலவற்றை சாதிக்க முடியும்..ஐடியலிசம் ரியலிசம் இந்த போராட்டம்.. சில் விஷயங்களை செய்யணும்… நான் மெடிடேஷன் பண்ணுவேன்.. பரமஹ்ம்ச யோகானந்தர் ஆசிரமம் …. ராஞ்சியிலே இருக்கு …அங்கே போயிருக்கேன்..வாழ்க்கை அது பாட்டுக்கு ஆறுபோல போய்க்கிட்டுத்தான் இருக்கும்.. நம்பிக்கையின்மையோடு சொல்லலே.. மத்தவங்களை திருத்திட்டு தான் ஓய்வேன்னு புறப்பட்டா நம்ம பிளட் பிரஷர் தான் கூடும்.. தேவையில்லாம நாம எல்லோர்கிட்டேயும் கெட்ட பெயர் வாங்குவோம்.. மனைவி ஆனாலும் சரி, குழந்தைகள் ஆனாலும் சரி, இலக்கியம் ஆனாலும் சரி.. . நம்மைப் பத்தி தப்பா மத்தவங்க சொன்னா கூட அது தப்பில்லேன்னு போய் argue பண்ணாதே Learn to accept blind criticism even though it is unjustifed and untrue, silently without retaliation அப்படின்னு சொல்வாங்க. அது பாட்டுக்கு நடக்கும். இதுக்கு அப்புறம் ஒண்ணுமே இல்லே பாருங்க.. அந்தக் காலத்திலே, இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதினோம் அதைப் போய் இப்படி சொல்லிட்டாங்களேன்னு எல்லாம் மனசு கஷ்டப்படும்.. இப்போ அப்படி இல்லை. அப்படியும் ஒரு கருத்து இருக்கலாமே..

கமல்: உங்க அனைத்துப் படைப்புகளையும் தொகுத்து வெளியிட முயற்சி ஏதும் நடந்துட்டிருக்கா?

நீல: சாகித்ய அகாதமியில் ஒரு பதிப்பு போட்டிருக்காங்க.. Neela Padmanabhan, a reader-னு தலைப்பு. பிரேமா நந்தகுமார் தான் அதை எடிட் பண்ணியிருக்காங்க. ரொம்ப முயற்சி எடுத்து ..வேறே எழுத்தாளர் யாருக்கும் வந்திருக்கறதா தெரியலே.. . அந்த CD எல்லாம் கூட தொலைஞ்சு போயிடுச்சு.. ஐயப்ப பணிக்கர் அகாதமி பதவியில் இருந்த நேரத்தில் வந்தது.. என் எல்லா படைப்பில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் போட்டு .. க.நா.சுவோட மொழிபெயர்ப்பு, நாவல் பகுதிகள், சில கதைகள்..என் சில கவிதைகள், கட்டுரைகள் .. மொழிபெயர்ப்பு நானே செய்தது எல்லாம் சேர்த்து நல்ல ஒரு அறிமுகத்தோடு சிறப்பாக வந்திருந்தது அது. சாதாரணமாக தமிழ்நாட்டில் நடக்காதது

கமல் : மலையாளத்தில் வந்ததா?

நீல:ஆங்கிலத்தில்

கமல்:தமிழில் வரலையா?

நீல:காவ்யா சண்முகசுந்தரம் தமிழில் போட முயற்சி எடுத்திட்டிருக்கார்.

கமல்: வந்ததும் அவசியம் வாங்கிப் படிக்கறேன். என் வாழ்த்துகள். நன்றி

நேர்காணல் பதிவு இரா.முருகன்

புதிய சிறுகதை: மீனாக (இரா.முருகன்)


மீனாக
இரா. முருகன்

மலர் காலை ஐந்து ஐமபத்தைந்துக்கு இரண்டு உறுதிமொழிகளை எடுத்திருந்தாள். அவற்றில் ஒன்றைப் பத்து நிமிஷம் முன்னால் மீறினாள்.

‘காலையிலே எழுந்தா குளிப்போம், சாப்பிடுவோம், ஆபீஸ் போவோம்னு கிடையாதா. எப்பப் பாரு மீனைக் கொஞ்சிக்கிட்டு உக்கார வேண்டியது’.

‘இன்னிக்கு கேஷுவல் லீவ். எடுக்கலேன்னா வேஸ்டாப் போகுது’.

பிஜோ சிரித்ததைப் பார்க்க அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. ஹாய்யாக மீன் தொட்டியில் கையை நனைத்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறவன் சின்னச் சிணுங்கலாக அவ்வப்போது முனகுகிறான். மீன் விரலைக் கடிக்கிற சுகம் அது.

‘வேஸ்ட்.. நானே அதான்.. பிள்ளையைப் பறி கொடுத்திட்டு மனசு உடஞ்சு நாள் முச்சூடும் அழுதுக்கிட்டிருக்கேனே.. கருதல் இல்லாத கல் மனசு’..

இன்றைக்கு குரல் உயர்த்த மாட்டேன் என்பது அவள் இரண்டாவதாக எடுத்திருந்த சங்கல்பம். குரல் எழுப்பிக் கலைக்க அது விழுந்து உடைந்தது.

‘மோட்டு வளையைப் பாத்து அழுதிட்டிருந்தா பிள்ளை வந்துடுமா என்ன? என்ன பாவம் செஞ்சியோ எந்த ஜன்மத்திலே யார் குடியைக் கெடுத்தியோ. ஒண்ணு வயத்திலே பிள்ளை தங்க மாட்டேங்குது. வந்து விழுந்தா தரையிலே கால் நிக்கறதில்லே. கருதலும் கண்றாவியும் என்ன எழவுக்கு வேணும்?’

மீன் தொட்டியில் இருந்து எடுத்த ஈரக் கையைச் சுவரில் தீற்றியபடி வார்த்தையால் சுட்டான் பிஜோ. தொட்டிக்குள் நீந்தியபடி ரெண்டு மீன்கள் வாயைத் திறந்து திறந்து ஆமா ஆமா என்றன. மலர் அவற்றை எரிச்சலோடு பார்த்தாள்.

‘இதுகளை சாவு கொண்டு போகாதா?’

அவள் மீன் தொட்டியைப் பார்த்தபடி அடுத்த ஒரு வினாடி நின்றாள். தலையுச்சிக்கு ஏறிய கோபம் மனதில் பிசாசுகளை எழுப்ப முன்னால் பாய்ந்து வந்தாள். அசுர வேகத்தோடு தொட்டியைக் கெல்லித் தரையில் உடைத்தெறிய முற்பட்டது போல் பக்கத்தில் பிடித்து அசைக்க, உள்ளே நீந்திய இரண்டு மீன்களும் அவளையே பார்த்தபடி வாய் திறந்து வசவு உதிர்த்தன. சின்னக் கண் பயத்தில் விழித்திருக்க, தொட்டி அடியில் அவசரமாகப் புகலிடம் தேடின.

அவன் நழுவிய லுங்கியைக் கூடக் கவனிக்காமல் எழுந்து அவள் கன்னத்தில் ஈரமும் மீனும் வாடையடிக்கும் கையால் அறைந்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனாள் மலர்.

வேண்டாம். நினைக்க நினைக்க மனம் தறிகெட்டு எங்கேயோ போகும். எல்லாம் அவள் தவறு தான். இழப்பின் சோகம் அவளுக்கு மட்டுமானதாக விதிக்கப் பட்டிருக்கிறது.

போய்ச் சேர்ந்து விட்டான் ஷரண். ஆசை ஆசையாக வைத்த பெயரை வாய் நிறையச் சொல்லிக் கூப்பிடக்கூட அவகாசம் தரவில்லை அருவியாகக் கும்மாளி கொட்டி வந்த சந்தோஷம் சட்டென்று வடிந்த சோகம்..

வாசலில் விழுந்து கிடந்த காலைத் தினசரியோடு உள்ளே வந்த பிஜோ, மீன் தொட்டிக்குப் பக்கத்து அலமாரியைத் திறந்தான்.

மீன்களுக்கு ஆகாரம். எது தவறினாலும், ஷரண் தவறிய துக்கம் ஆறாத இன்னொரு தினம் என்றாலும், பிஜோ சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும், மலர் மூச்சு விட்டாலும் விடாவிட்டாலும் இவை தீனி விழுங்க வேண்டும்.

‘சே தீர்ந்து போச்சு.. எழவு வீட்டுலே எப்பவும் எதுக்கும் இல்லே பாட்டுதான்’.

பிஜோ தொட்டிக்குள் பார்த்துச் சொல்கிறான். அந்தத் தொட்டியை உடைத்து எறிய மறுபடி ஆவேசம் வந்தது மலருக்கு. கொடூரமான நினைப்பு அது. குரோதத்தை விலக்குவேன் என்ற இன்றைய காலையின் முதல் சங்கல்பம் உடைய, சகலமானதையும் காவு வாங்கி விடப் போகிறது.

உடைந்த தொட்டியிலிருந்து வழிந்து, வீடு முழுக்க நீரும் தரையில் நெளியும் மீனுமாக நினைக்கவே குமட்டியது. வேண்டாம். அவள் சாந்தமாக இருப்பாள்.

பிஜோவுக்கு மீன் தொட்டி தான் சகலமும். தண்ணீர் பாதி நிறைத்த பிளாஸ்டிக் பையிலோ கண்ணாடிக் குடுவையிலோ அவ்வப்போது தொட்டிக்கு மீன் வாங்கி வருவான். ஐயாயிரமும் பத்தாயிரமும் இதுகள் அடிக்கடி வைக்கும் செலவு. மாச பட்ஜெட்டில் கணிசமாகத் தின்றபடி பட்டை விரித்தது போல நெளிந்த இரண்டு பெரிய மீன்களைப் போன மாதம் கொண்டு வந்தபோது ஷரணுக்குப் பால் கொடுத்துக் கொண்டு இருந்தாள் அவள்.

’மீன் இல்லேன்னு யார் அழறாங்க’?

முகத்தைச் சுளித்தாள் மலர்.

’உனக்குத் தெரியாது மலர். வீட்டுக்கு வர்ற யார் கண்ணு எப்படியோ.. இது வாஸ்து மீன். நெகட்டிவ் வைப்ரேஷன் உள்ளவங்க, அதான் நாம நல்லா இருக்கறது பிடிக்காதவ்ங்க வந்தா அவங்களோட எதிர்மறை அதிர்வை இது தொட்டியிலே இருந்தபடிக்கே முழுங்கிடும். நமக்கே நெகட்டிவ் ஆன சிந்தனை வந்தா அதையும் கூடத்தான். அப்புறம் என்ன, சுபம் தான்’.

வாஸ்து மீன்கள் தொட்டி முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்ள ஏற்கனவே இருந்த தங்க மீன்கள் நண்பர்களுக்கு தானமளிக்கப்பட்டன. இந்த ஜோசிய மீன்கள் சாப்பிட கண்ணாடி ஜாடியில் நீருக்குள் நீந்தியபடி குட்டி மீன்கள்.

’மீன் சாப்பிடற மீனா? என்ன கொடூரம்.. இதுக்கு வைப்ரேஷன் வேறே’.

மலரின் ஆத்திரம் கரைகடக்க, அப்புறம் பிஜோ யார் யாரையோ விசாரித்து பிசாசுகளுக்கு இரையாகப் போட ஏதோ கடல்பாசி வாங்கி வந்தான். மாதம் இரண்டாயிரம் ரூபாய் செலவு வைக்கும் அந்த மீன் உணவு, பிஜோவும் மலரும் காலையில் சாப்பிடும் இரண்டாம் டோஸ் காப்பியையும் மாசாந்திர சினிமாவையும் வழியனுப்பியது.

பிஜோ குளித்து விட்டு உம்மென்று வந்தான். குளிர்ந்த நீரில் குளித்து வந்தவர்கள் முகத்தில் சோப்பு வாசனையோடு தாமரைப் பூவாக மலர்ந்திருக்கும் சந்தோஷம் அவனைத் தொடாமலேயே போயிருந்தது. ஈரத் தலையை வாரி சீப்பை டைனிங் டேபிளில் ரொட்டி பாக்கெட் பக்கம் அவன் வைத்தபோது இன்னொரு முறை கோபம் எட்டிப் பார்க்க மலர் அடக்கிக் கொண்டாள். இல்லை, இனி அவள் ஆயுசுக்கும் கோபப்பட மாட்டாள்.

அவன் ரொட்டிப் துண்டுகளோடு மீன் தொட்டிக்குப் பக்கத்தில் உட்கார, மலர் படுக்கை அறைக்குப் போய்க் கதவைச் சார்த்திக் கொண்டு அழுதாள். காய்கறி வண்டிக்காரனும், கோலப்பொடி விற்கிற பாட்டியும் குரலால் தட்டியும் திறக்காத வாசல் அது. அழறா அழறா என்று சந்தோஷமாகக் குதித்திருக்கும் வாஸ்து மீன்கள்.

அழுகை ஐந்து நிமிஷ கண்ணயர்வில் முடிந்தது, எழுந்து முகத்தைத் துடைத்தபடி மலர் முன்னறைக்கு வந்தபோது அவன் வெளியே போயிருந்தான்.

அவள் மீன் தொட்டியைப் பார்த்தாள். ஓரமாக நீந்திக் கண்ணாடிச் சுவரில் முகம் பதித்தபடி ஒரு மீன் அவளையே பார்த்தது. ஒரு வினாடியில் அந்த முகம் நேபாளி கூர்க்கா குழந்தையாக மாறி பொக்கை வாயோடு சிரிக்க, ஷரண் என்று ஆதூரத்தோடு சொன்னாள் மலர். பாசிடிவ் வைப்ரேஷன் என்றது கூடவே நீந்திய இன்னொரு மீன். யாருக்குத் தெரியும்? மலருக்குத் தெரியாது.

ஷரண் மூன்றாம் மாதத்தில் அவளை உதறிப் போய் விட்டான். தலை கொள்ளா முடியும், திறந்து மூடும் செப்பு வாயும், சதா வாயில் வைத்துக் கொள்ள விரையும் குஞ்சுக் கையும், மெத்து மெத்தென்ற பிருஷ்டத்தில் இதமான குழந்தை வாசனையும் மலர் நினைவில் இன்னும் உறைந்திருக்கிறது. மூன்று மாதமாகத் தினமும் சுத்தம் செய்து, உடுப்பு துவைத்து உலர்த்தி உலர்த்திக் குழந்தையின் கழிவு வாடையும் வீடு முழுக்க இன்னும் காற்றில் தீற்றி நிற்கிறது. அலமாரியில் புடவைகளுக்கு இடையே குழந்தையின் பட்டு மாதிரி இடுப்புத் துணியும், இத்தணூன்ண்டு நீல டிராயரும், குட்டி பொம்மைச் சட்டையும் உயிரோடு துடிக்கிறது.

இந்த மீன்கள் எல்லாம் அவள் குழந்தையை மாரோடு அணைத்துப் பாலூட்டுவதைப் பார்த்தவை. போன வாரம் எல்லாம் முடிய, ஷரணை எடுத்துப் போன போது மீன் தொட்டியைத் துணி போட்டு மூடி வைத்திருந்தான் பிஜோ.

இரண்டு நாள் அந்தத் தொட்டியை மூடிய துணி திறக்கப்படவே இல்லை. அதைத் திறந்து கொஞ்சம் கொஞ்சமாக மீன் உணவைத் தூளாகத் தொட்டிக்குள் விட்டது மலர் தான். மார்பில் பால் கட்டிக் கொண்டு உடம்பைப் பிய்த்து எறிவது போல் வலி எழும்ப, வேதனையின் உச்சம். வீட்டு வாசலில் யாரோ அழைக்கிற சத்தம் அந்நேரம்.

அந்த நாளும் நிமிடமும் வந்தவனும் மனதில் நிழற்படமாக நிற்கிறது. வாசலில் நின்றவன் நேப்பாளி கூர்க்கா. .

’ஏங்க, கூர்க்காவுக்கு மாசாந்திரப் படி கொடுக்கலியா?’ உள்ளே பார்த்துக் கேட்டாள்.

‘பெஹன் ஜி, பைசா நை சாஹியே’.

சொன்னது கூர்க்கா இல்லை. அவனுக்குப் பின்னால் இருந்து சற்றே நகர்ந்து முன்னே வந்த பெண். மலர் வயது தான். அவள் அணைப்பில் கண் மலர்ந்தபடி இன்னொரு ஷரண்.

ஷரண் ஷரண் என்று குழந்தையைக் காட்டியபடி மலர் தடுமாற, அந்தப் பெண் குழந்தையை மலர் கையில் கொடுத்தாள். இறுக அணைத்துக் கண் மூடி அவள் நின்ற போது காலம் அப்படியே உறைந்து விடாதா என்று நினைத்தாள் அப்போது. உள்ளே இருந்து பிஜோ அவளுடைய செல்போனோடு வந்தான்.

‘டாக்டரம்மா பேசறாங்க. இவங்களைப் ப்த்தித்தான்னு தோணுது’.

குழந்தையை அந்த நேபாளிப் பெண்ணிடம் கொடுத்து விட்டு ஃபோனை வாங்கினாள் மலர்.

டாக்டர் கோமதி வழக்கமான அன்போடும் கரிசனத்தோடும் பேசினாள். இந்த அன்புக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் வலிமை இருந்தால் மலர் பெற்ற ஷரணை அவள் அணைப்பிலேயே தக்க வைத்திருக்கும்.

’சர்மிளாவுக்கு உன் உதவி தேவைப்படறது மலர். பால் சுரக்காம கஷ்டப்படறா. உன் மாரிலும் பால் கட்டி, நெஞ்சிலேயும் வேதனை. மன வேதனையை காலம் தான் போக்கணும், உடம்பு வேதனைக்கு நான் சொல்றபடி கேட்பியா?’

அந்த நேப்பாளிப் பெண்ணின் அணைப்பில் அலை பாய்ந்தபடி அழத் தொடங்கிய சிசுவைக் கையில் வாங்கி, வாசலுக்கு முதுகு காட்டித் தரையில் அமர்ந்தாள் மலர்.

உச்சம் தொட்ட வலி இன்பமாக, மனம் கரைய, தாய்மை சுரந்து பெருக ’ஷரண்’ என்றாள் அவள் அந்த நிமிடங்கள் மெல்ல அலையடித்துப் போக.

நாலு தெரு தள்ளி ஒரு சிறு குச்சு வீட்டில் வாடகைக்கு இருக்கிறதாக நிறைய சைகையும் மீதி இந்தியுமாக சர்மிளா சொன்னாள். குழந்தை அவள் அணைப்புக்கு வயிறு நிறைந்து திரும்பி வந்து கண் வளரத் தொடங்கியிருந்த நேரம் அது. மலரின் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டு அவள் கேட்டது மொழி கடந்து மலருக்குப் புரிந்தது. அவள் வீட்டுக்கு வரவேண்டுமாம்.

பிஜோவிடம் கண் காட்டி விட்டு அந்தப் பெண்ணோடு அவள் வீட்டுக்குப் போய் இடத்தைப் பார்த்து வைத்துக் கொண்டாள். அப்போது சர்மிளா புடவைத் தலைப்பில் இருந்து எதையோ எடுத்தாள். மலிவான விலைக்கு வாங்கிய செல்போன் அது.

’பஹன் ஜீ ஆப் கி நம்பர்’.

அவள் அந்த போனை வாங்கி தன் மொபைல் எண்ணைப் பதிந்து, பெயரையும் எழுதினாள். ‘மலர்’ சத்தமாகப் படித்துக் காட்டி விட்டு சர்மிளாவிடம் போனைக் கொடுத்தாள் அவள்.

’உன் நம்பர்.. தும் நம்பர்… க்யா?’

மலர் விசாரிக்க அந்தப் பெண் பூப்போல சிரித்தாள்.

‘மாலும் நை பெஹன்’.

மலர் திரும்ப போனை பிடுங்கி தன் நம்பருக்கு அழைப்பு விடுத்தாள். பளிச்சிட்ட எண்ணை ’ஷரண் அம்மா’ என்று சேமித்து வைக்கும்போது கண்ணீர் எட்டிப் பார்த்து விட்டு மறைந்தது.

‘அவளோ இந்திக்காரி. சுட்டுப் போட்டாலும் தமிழ் வராது. உனக்கும் இந்திக்கும் ஒட்டும் இல்லே உறவும் இல்லே. என்ன பேசிக்கப் போறீங்க செல்போன்லே?’

பிஜோ சீண்டிய போது அவளுக்கு என்னமோ அந்த நேப்பாளிப் பெண் சார்பில் வாதாட வேண்டும் என்று தோன்றியது.

‘பாவம் அவ. ஸ்டேடஸ் சிம்பல் மாதிரி ஒரு செல்போன் வச்சிருக்கா. அவ ஊர்லே அது பெரிய ஆடம்பரமா இருக்கும். போன் வாங்கறவங்க, வேண்டி இருக்கோ இல்லையோ மத்தவங்க நம்பரை வாங்கி போட்டு வச்சுக்கறதைப் பாத்திருக்கா. அவ நம்பர் என்னன்னே அவளுக்கு தெரியாது.’

காலையில் சரியாக எட்டு மணிக்கு, சர்மிளாவின் குழந்தை ஞானசம்பந்தனாகிறான். மலர் திரும்ப அம்மாவாகிக் கொண்டிருக்கிறாள். அந்தி சாயத் தொடங்கும்போது சர்மிளா இங்கே மலரைத் தேடி வந்து விடுகிறாள். மற்றப்படி அவள் புட்டிப்பாலுக்கு வந்தனம் சொல்வது குறைந்திருக்கிறதாக மலர் புரிந்து கொண்டாள்.

மொபைல் இரைச்சலாகக் கூப்பிட ஆரம்பித்தது. ஓடிப் போய் எடுத்தாள்.

ஷரண் அம்மா கூப்பிடுகிறாள்.

ஒரு வினாடி திக்கித்துப் போய் நின்றாள் மலர். பிஜோவோடு தொடுத்த மீன் தொட்டி யுத்த மும்முரத்தில் எட்டு மணி கடந்ததே தெரியவில்லை.

அவசரமாக ஹலோ சொன்னாள். ஷரண் அம்மா இந்தியில் பேசினால், என்னத்தை பதில் சொல்றது?

போனில் யாரும் பேசவில்லை. குழந்தை அழுகுரல் மட்டும் சத்தமாகக் கேட்டது.

ஷரண் பாலுக்காக அழுகிறான்.

’அம்மா உடனே வா. பசிக்குது’

எந்த மொழியும் தேவையில்லாமல் மலரோடு பேசுகிறான். மலரைக் கூப்பிடுகிறான். சர்மிளா ஃபோனை அவன் அருகே வைத்திருக்கிறாள்.

மலர் வாசல் கதவை வெறுமனே சார்த்தி விட்டு இறங்கி ஓடினாள். நாலு எட்டு ஓடியதும் தான் காலில் செருப்பு இல்லை என்று நினைவு வந்தது. போகட்டும். ஓடும் போது செருப்பு ஒரு அவஸ்தை. எதற்கு அது?

வீட்டு வாசலில் நின்றிருந்த சர்மிளாவை நெட்டித் தள்ளி உள்ளே புகுந்தாள் மலர். குழந்தையை வாரி எடுத்தாள். ஞானசம்பந்தன் தாடையெல்லாம் வழியப் பால் உண்ணுகிறான் அம்மையிடம்.

சர்மிளா அவள் தோளில் ஆதரவாகத் தொட்டுக் குனிந்தாள். மெல்ல அவள் தலையில் முத்தமிட்டாள் மலர். உலகமே மென்மையும் அழகுமாகத் தெரிந்தது. அவளுடைய ஷரண் சிரித்தான். மீன் தொட்டியில் மீனாக நீந்தியபடி வாயைத் திறந்து மூடினான். சர்மிளா வீட்டுத் தரையில் கால் உதைத்தபடி விளையாடிவிட்டுத் தூங்கினான்.

மலர் வீடடுக்குப் போகு்ம் வழியில் மீன்களுக்காக எம்போரியத்தில் உணவு வாங்கிக் கொண்டாள். ’வந்தாச்சு உங்க வயிற்றுக்கும் படைக்கணும்’.

வாசல் கதவு திறந்திருந்தது. மீன் தொட்டி இருந்த இடம் வெறுமையாக இருந்தது. அவசரமாக உள்ளே நடந்தாள். தோட்டத் தரையில் பதித்த சிமிட்டித் தண்ணீர்த் தொட்டியின் இரும்பு மூடி தூக்கித் திறக்கும் சத்தம்.

பிஜோ தண்ணீர்த் தொட்டி பக்கம் தரையில் உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் காலியான மீன் தொட்டி.

அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தான்.

‘மலர்,. உன் சோகத்தையும் துக்கத்தையும் ஒரு தாயாக அனுபவிச்சுப் புரிஞ்சுக்க என்னாலே முடியாது. கடவுளுக்கும் கிடைக்காத அனுபவம் அது. நான் அதிக பட்சம் செய்யறது, உனக்கு ஆதரவா ரெண்டு வார்த்தை சொல்லி, அன்போடு அணைச்சுக்கிட்டு நேரம் போக்கி, சமையல்கட்டுலே காப்பி போட்டு உனக்கு எடுத்து வந்து.. இதுவரை செய்யலே.. இனிமேலாவது’

’மீன் எங்கேங்க’?

’தொட்டி எல்லாம் சின்ன இருப்பிடம். தண்ணித் தொட்டியில் விட்டுட்டேன். நீஞ்சட்டும். அதிகம் போனா இன்னும் ஒரு வருஷம் உசிரோடு இருக்குமா? தினம் புதுத தண்ணி, உள்ளே தரையெல்லாம் படர்ந்திருக்கற பாசி, புழு பூச்சி.. படைச்சு விட்டவன் பார்த்துப்பான். நம்ம மகனுக்குத் தான் உசிர்த் தண்ணி ஊத்தலே.. போகட்டும்.. மீனுக்கு தர மாட்டானா? வா சாப்பிடலாம். லஞ்ச் வாங்கிட்டு வநதிருக்கேன்’.

மலர் அவன் அருகில் உட்கார்ந்தாள்.

அவசரப்பட்டு வார்த்தையைக் கொட்டியிருக்க வேண்டாம். அவனுடைய சோகத்தை மீன் விழுங்க வைத்துக் கடத்திய இயலாமையை இப்படி நிஷ்டூரமாக மிதித்து அழித்திருக்க வேண்டாம்.

‘சீக்கிரம் இது ரெண்டும் போய்ச் சேர்ந்திடும் மலர். இது உறிஞ்சற எதிர்மறை எல்லாம் சேர்ந்து சீக்கிரமே இதுங்க ஆயுசை அழிச்சிடும்’.

அவளால் பேச முடியவில்லை. பிஜோ அவள் முகத்தை நிமிர்த்தினான். கண்ணாடித் தொட்டி உள்ளே சுவரோடு முகம் பதித்து வாய் திறந்து மூடும் மீனாகத் தன்னை உணந்தாள் அவள்.

கையில் இருந்த மீன் உணவைப் பிரித்து தண்ணீர்த் தொட்டியில் மலர் கவிழ்த்தபோது அடிவயிற்றிலிருந்து அழுகை சுருள் பிரிந்து மேலே உயர்நதது.

‘ஜன்னல்’ பத்திரிகையில் (2015 ஃபெப்ரவரி 15) வெளியானது

புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 17 : இரா.முருகன்


இங்கேல்லாம் நிக்கக் கூடாது. மந்திரி சாப் வீடு. ஹட் ஜா.

மலபார் ஹில்ஸ் மந்திரி பங்களா வாசலில் துப்பாக்கி ஊன்றி நின்ற போலீஸ் சேவகன் சொன்னான். சொன்னதோடு மட்டுமில்லை. திலீப் தோளில் கை வைத்து ஓரமாகத் தள்ளினான் அவன்.

மதராஸி மந்திரி. உள்ளூரில் மந்திரி இல்லை தான். ஆனால், டில்லியில் மத்திய சர்க்காரில் சகல சக்தியோடும் இருக்கப் பட்டவர். மதராஸில் இருந்து இங்கே எப்போதோ குடி பெயர்ந்து, யூனியனில் பிரபலமாகி, கணிசமாக ஓட்டு வாங்கி லோக்சபா, ராஜ்யசபா என்று டில்லிக்குப் போனவர். போலீஸ் சேவகர்களாலும், மேலதிகாரிகளாலும் மதிக்கப்படுகிறவர். மராத்திக்காரராக இல்லாவிட்டாலும்.

திலீப் ஓரமாக நின்றான். பகலிலும் சூரியன் தொடாமல் இருளோ என்று கிடந்த அறைக்குள் இருந்து, ஒட்டடையும், தூசியும், குப்பையும் மண்டிய முடை நாற்றமடிக்கும் அறைக்குள் இருந்து, மூத்திரச் சுவடுகள் உலராமல் குளம் கட்டி நிற்கும் உயரம் தணிந்த அறையிலிருந்து அம்மா குரல் எழுந்து வந்தது.

என்னைத் திறந்து விடு. நான் ஆடணும்.

திலீப்பின் அம்மா அவன் நினைவில் ஒவ்வொரு கதவாகத் தட்டிக் கூப்பிடுகிறாள். ஆஸ்பத்திரியில் அணிவித்த அழுக்கு வெள்ளைச் சேலையை லாவணி ஆடத் தயாராக தூக்கிச் செருகி, குச்சியாக மெலிந்த கால்கள் நடுங்க நிற்கிறாள். ஜன்னல் ஜன்னலாகத் திறந்து அழுதபடி கூப்பிடுகிறாள்.

திலீப்பை போலீஸ் சேவகன் கூர்ந்து பார்த்தான்.

இளைஞன். போலீஸ்காரனை விட இளையவன். மதராஸி. கை மடித்து விட்ட மஞ்சள் டெர்லின் சட்டையும், காக்கி பேண்டுமாக மதராஸிகள் உலகமெங்கும் சகல உரிமையோடும் திரிந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு மதராஸி இருக்கும் இடத்தை, அது உலகத்தின் கோடியில் என்றாலும் எப்படியோ மோப்பம் பிடித்துத் தேடி, ஓடி வருகிறார்கள். கதவுகள் திறக்குமென்று நம்பி நிற்கிறார்கள்.

என்றால், தெருவில் போகிற எவனும் மந்திரி வீட்டில் நுழைந்து விடாமல் காக்கவே சர்க்கார் சம்பளமும் காக்கித் துணி சலவைக்கான வர்தி பேட்டாவும் போலீஸ் உத்தியோகத்தில் மாதாமாதம் வருகிறது. இவர்கள் மேல் சகிப்பும் கருணையும் காட்ட வேண்டியதில்லை. விலங்குகள் போன்றவர்கள். காம்பவுண்டுக்குள் நுழைந்த நாயை விரட்டித் துரத்துவது நியாயமே. போ. அங்கே இங்கே காலைத் தூக்காதே.

திலீப் சற்றே பின்னால் போய் நின்றான்.

மாதாமாதம் மந்திரி வீட்டுக் காவலுக்கு நிற்கிற இந்த போலீஸ் உத்தியோகஸ்தர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வீட்டில் இருப்பவர்களுக்கு நெருங்கிய உறவுக்காரன் திலீப் என்று அவர்களுக்கு முதலில் தெரியாது போகும். மந்திரி பங்களா வாசலில் ஏங்கி அழுது புலம்பி நிற்கிற யாசகனை விரட்டுகிற மாதிரித் துரத்துவார்கள். உள்ளே வாக்கி டாக்கி மூலம் கேட்கச் சொல்லி ஆயிரம் தடவை வேண்டினால், வேண்டா வெறுப்பாக ஒரு தடவை, ஒரே ஒரு தடவை, கரகரவென்று குழாயைப் உயர்த்திப் பேசுவார்கள்.

வாசலில் ஒரு மதராஸி பையன் ரொம்ப தொந்தரவு செய்கிறான். பெயர் திலீப் என்று சொல்றான். மந்திரி சாப் உறவு என்கிறான். துரத்தி அனுப்பி விடலாம் இல்லையா?

உள்ளே இருந்து அநேகமாக ஜனனியோ, அபூர்வமாகப் பெரியம்மாவோ , அதைவிட அபூர்வமாக, மினிஸ்டர் பெரியப்பாவோ, வாசலுக்கு வந்து வாடா என்று கையைப் பிடித்துக் கூட்டிப் போவார்கள். திரும்பும் போது முன்னால் காட்டிய முரட்டுத் தனம் பற்றிய சங்கடமும் புதிய சிநேகமுமாகப் புன்னகை புரியும் அந்தப் போலீஸ் சேவகன், அடுத்த முறை திலீப் பெரியப்பா வீட்டுக்குப் போகும் போது மாறி இருப்பான்.

மாறட்டும். என்னைத் திறந்து விடு. நான் ஆடணும்.

திலீப்பின் அம்மா ஆஸ்பத்திரிக் கதவுக்குப் பின்னால் யாரோ பலமாகப் பிடித்துப் பின்னால் இழுக்க, திமிறித் திமிறிச் சொல்கிறாள்.

முன் வாசல் பரபரப்பானது. உயரமாக நடுவில் நின்ற போலீஸ் உத்தியோகஸ்தன் கையில் பிடித்திருந்த வாக்கி டாக்கி உயிர் பெற்றது. காலில் அணிந்த கருப்பு பூட்ஸ் சப்திக்கக் குறுக்கும் நெடுக்கும் மற்றவர்கள் என்னத்துக்கோ ஓடினார்கள்.

மந்த்ரிசாப் மந்த்ரிசாப் மினிஸ்டர் சார்.

உள்ளே கதவு திறந்தது. கையில் அள்ளிப் பிடித்த சிவப்புத் துணியில் கட்டிய காகிதப் பொதியோடு, மூலக்கச்ச வேட்டி அணிந்த ஒருத்தர் வெளியே வந்தார். தீ விபத்தான வீட்டில் இருந்து வெளியேறுகிற அவசரத்தோடு அவர் அவசரமாகக் கையசைத்தார். ஓரமாக ஷெட்டில் நின்ற கருப்பு அம்பாசிடர் காரின் இஞ்சின் உயிர் பெற்று உறுமி கார் மெல்ல வாசல் பக்கமாக நகர்ந்து வந்தது.

பிசாசே அந்தாண்டை போ. மினிஸ்டர்ஜி வரார்.

போலீஸ் சேவகன் உரக்கக் கத்தி திலீப் நெஞ்சில் கை வைத்துத் தள்ளும்போது பெரியப்பா உள்ளே இருந்து தந்த பிரேம் மூக்குக் கண்ணாடியும், வெள்ளை ஷெர்வாணியும், தொளதொள பைஜாமாவும், தோளில் மந்திரி கோலத்துக்குப் பாந்தமில்லாத துணிப்பையுமாக வெளியே வந்தார்.

பெரியப்பா.

அவன் குரலை உயர்த்திக் கூவினான்.

ஒரு வினாடி நின்று என்னடா என்றார் சிரித்தபடி. போதும். கடவுள் திலீப் வசம் தான். அவன் தனக்கு முன்னால் நின்ற போலீஸ் உத்தியோகஸ்தனைத் துச்சமாகப் பார்க்க காக்கிச் சட்டைக்காரன் கிட்டத்தட்ட வாய் விட்டுக் கதறி அழப் போகிற பதத்துக்கு வந்திருந்தான்.

இந்த மதராஸிகள் வினோதமானவர்கள். சகல அதிகாரமும் கொண்ட மந்திரிப் பதவியில் இருந்தாலும் சரி, சேஃப்டி பின் சொருகிய ஹவாய் செருப்பும் கையில் மஞ்சள், சிவப்பு நிறத்தில் துணிப்பையும், மதராஸி பாஷையில் சதா கூச்சலாக வருகிற சளசள பேச்சுமாக லோக்கல் ட்ரெயினில் தாதரில் இருந்து டோம்பிவிலி போகிற, முகத்தில் நாலு நாள் தாடி மண்டியவனாக இருந்தாலும் சரி, இவர்கள் எப்படியோ உலகம் முழுக்க ஒருத்தருக்கு இன்னொருத்தர் உறவுக்காரராக இருப்பார்கள். அதை நினைவில் கொள்ளாமல் தோரணை காட்டினால், இதோ இந்தப் பையன் மந்திரியிடம் புகார் சொல்ல, முன்னூறு மைல் தெற்கே, அம்பேகாம் போலீஸ் ஸ்டேஷன் சரகத்தில் கள்ளச் சாராயக் காரர்களைத் துரத்தியபடிக்கு இனிமேல் அவன் உத்யோகம் திசைமாறிப் போகப் போகிறது. சர்வ நிச்சயம்.

அவன் திலீபிடம் சாப் கூப்பிடறார் போங்க என்று மரியாதை நிமித்தம் சிரித்தபடி சொன்னான். திலீப் அங்கீகரித்தபடி பாய்ச்சலாக போர்ட்டிகோவுக்கு ஓடினான்.

வந்து, அப்பா, உங்க கிட்டே .

அவன் தயங்கித் தயங்கி ஆரம்பிக்க, பெரியப்பா அவன் தோளில் கை வைத்து அன்போடு பார்த்தார்.

புனா போயிண்டிருக்கேன். வந்து பேசலாம். உள்ளே போடா. சாப்பிடு. அவல் கேசரி பண்ணச் சொல்லி இருக்கேன்.

பெரியப்பா கடந்து போனார்.

உள்ளே போய் என்னைத் திறந்து விடு. நான் ஆடணும்.

திலீப்பின் அம்மா அவல் கேசரியை அள்ளி முழுங்கியபடி கண் கலங்கச் சொல்கிறாள். அவள் தலைமுடி நார் நாராகக் கலைந்து தூசி படிந்து சிடுக்கேறி இருக்கிறது. எச்சில் கையைத் தலைக்கு உயர்த்தி, முடியில் கேசரி அப்ப வெறும் விரலால் பரபரவென்று கோதிக் கொள்கிறாள்.

உள்ளே மாடிப் படிகளை ஒட்டி இருந்த விசாலமான அறையில் இருந்து திலீப்புக்குப் பழக்கமில்லாத ஏதோ மொழியில், மத்தளம் கொட்டியபடி யாரோ ஆண்குரல் பாட்டு சாவகாசமான வேகத்தில் இழைந்து கேட்டுக் கொண்டிருந்தது.

சோபாவில் அரைக் கண்மூடி உட்கார்ந்தபடி, மத்திய வயசுக்காரர் ஒருத்தர். நூறு பேர் முழங்கிக் கொட்டும் இசைக்குழுவை நடத்துகிற மாதிரி மிகையாகக் கையசைத்துத் தாளம் போட்டுக் கொண்டிருந்த அவர் பக்கத்தில் அவர் மனைவியாக இருக்கக்கூடும் என்று ஊகிக்கத் தக்க ஸ்தூல சரீரப் பெண்மணி.

மூக்கு நுனியில் கண்ணாடியும், கையில் பேனாவுமாக பெரிய கிரண்டிக் டேப் ரிக்கார்டரில் அந்த சங்கீதத்தைக் கேட்டபடி பெரியம்மா அதைத்தானோ அல்லது வேறு எதையோ க்ளிப் போட்டுப் பிடித்த காகிதத்தில் எழுதிக் கொண்டிருந்தாள்.

அவள் கையில் பிடித்திருந்தது மசிப் பேனா இல்லை என்பதை திலீப் கவனித்தான். அழகாக நிப்புக்குப் பதிலாக உருண்டு திரண்ட உலோக முனையோடு பால்பாயிண்ட் பேனா அது. திலீப்புக்கு வேலை கிடைத்ததும் இது போல ஒரு பால்பாயிண்ட் பேனா வாங்குவான். பால்பாயிண்ட் பேனாவை யாசிக்கக் கூடாது.

பெரியம்மா அவனைப் பார்த்தாள். டேப் சத்தத்தைக் குறைத்தாள். பால்பாயிண்ட் பேனாவை டேப்ரிக்கார்டர் பக்கத்தில் வைத்தாள்.

வாடா, ஒரு மாசமா ஆளே காணோம். எப்படி இருக்கே?

பெரியம்மா பக்கத்து சோபாவில் உட்காரச் சொல்லிக் கை காட்டினாள்.

நல்லா இருக்கேன். என்னைத் திறந்து விடு. நான் ஆடணும்.

அம்மா சகஜ பாவனையில் சொல்ல, டாக்டர் இஞ்செக்‌ஷன் போடுகிறார். உடனே பணம் கட்டாவிட்டால், இந்தம்மாளைக் கூட்டிப் போகணும் என்று கண்டிப்பாகச் சொல்கிறார். போகலாம் போகலாம் என்று நச்சரிக்கிறாள் திலீப்பின் அம்மா.

கிரண்டிக் டேப் ரிக்கார்டரில் சீராக மத்தளம் கொட்டி பாட்டு தொடர்ந்தது.

இது அந்த கன்னி காணணம்னு மலையாளத்திலெ பாடுவாளே அது தானே.

பட்டுப் புடவையில் சற்றே வியர்த்து நெற்றியில் குங்குமம் அலுங்கியிருக்க உட்கார்ந்திருந்த பெண்மணி தயக்கத்தோடு கேட்டாள்.

அசடே அது கனி காணறது. நாமெல்லாம் விடிஞ்சு உள்ளங்கை ரேகையைத் தேச்சுப் பார்த்தபடி எழுந்திருக்கற மாதிரி கேரளாவிலே பழ வர்க்கத்தைப் பார்த்துத்தான் தினம் முழிச்சுப்பா. படுக்கை பக்கமா வரிசையா வாழை, பலான்னு வச்சிருப்பா. திவசம் திதின்னா இன்னும் விசேஷம். உக்ராணத்துலேயே படுக்கை.

பெரியம்மா பெரிதாகச் சிரித்தாள்.

சாஸ்திரி மாமா, நம்ம மாமியா இதுக்கெல்லாம் அசருவா? பரத நாட்டியம் மட்டும் இல்லை, மத்ததிலும் அதாரிட்டிதான் அவா. என்னைப் போல, ஜமுக்காளத்திலே வடிகட்டின அசடா என்னா? ஆனாலும் சொல்வேன், நீங்க ரொம்ப மோசம் மாமா.

அசடு என்று விளிக்கப்பட்ட ராம சாஸ்திரிகளின் பெண்ஜாதி பெரியம்மாவின் இந்தக் கிண்டலால் உற்சாகமடைந்து அவரைப் புச்சமாகப் பார்க்க, அந்த மனுஷர் யாரிவன் என்று தெரியாமலேயே திலீப்பின் ஆதரவைக் கண்ணால் யாசித்தார்.

இவன் மினிஸ்டரோட அண்ணா பிள்ளை. படிச்சுட்டு வேலை தேடிண்டு இருக்கான்.

பெரியம்மா சுருக்கமாக திலீப்பை விருந்தாளிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

திலீப், சாஸ்திரிகள்னா தர்ப்பைக் கட்டைப் பிடிச்சுண்டு அமாவாசை தர்ப்பணம் பண்ணி வைக்க லோக்கல் டிரெயின்லே ஓடற பிரகிருதி இல்லே. கல்கத்தாவிலே கெத்தான பிஸ்கட் கம்பெனியிலே டைரக்டர். நாட்டிய சாஸ்திரத்திலே எக்ஸ்பர்ட். அகமதாபாத்லே வாசம். என் குஜராத் யூனிவர்சிட்டி டாக்டரேட் தீசிஸ் கைடு இவர் தான். இது அவாத்து மாமி. அந்தக் கால நாட்டிய மேதை. உங்கம்மா மாதிரி.

பிள்ளாண்டன் என்ன படிச்சிருக்கான் என்று நாட்டிய மேதை விசாரிக்க, அதைத் தொடர்ந்து, இவா அம்மா பேரு என்ன, பாத்திருப்பேனா இருக்கும், பந்தநல்லூர் பாணியா, வழுவூர் பாணியா என்று பிஸ்கட் கேள்விக் கணை தொடுத்தார்.

பி.ஏ படித்திருப்பதாக திலீப் அறிவித்தான்.

பேஷ். எகனாமிக்ஸா?

பிஸ்கட் சுவாரசியம் மாற்றுக் குறையக் கேட்டார்.

இல்லே மாமா, பி.ஏ மராட்டி.

பிஸ்கட்டுக்கு சுத்தமாக அக்கறை போயொழிந்தது.

பி.காம் என்னாக்க கல்கத்தாவிலே அமையறதான்னு பார்க்கலாம். பிஏவுக்கு கொஞ்சம். கொஞ்சமென்ன ரொம்பவே பிரயத்னப் படணும். அதுவும் மராட்டி பி.ஏ.

உள்ளூர்லே கிடைச்சாலும் சரிதான். என்னடா திலீப்?

பெரியம்மா மூணாம் மனுஷத்தனத்தோடு பொத்தாம் பொதுவாகச் சொன்னாள்.

இங்கே எங்க பிஸ்கட் கம்பெனி இருந்தா முயற்சி பண்ணலாம். பிடிவாதமா கல்கத்தாவிலே வச்சு என்ன ஒரு கஷ்டம் பாருங்கோ. அகமதாபாத்தில் இருந்து மாசம் ஒரு தடவை ப்ளேனைப் பிடிச்சு, உசுரைக் கையில் பிடிச்சுண்டாக்கும் போய்ட்டு வரேன். இவளுக்கு திருமாங்கல்யம் இரும்பிலே அடிச்சுப் போட்டிருக்கு. அதான் எனக்கும் சாவே இல்லை.

நாட்டியத் தாரகை திருமாங்கல்யத்தைக் கண்ணில் ஒற்றிக் கொள்வாள் என்று திலீப் எதிர்பார்த்தான். அந்தம்மாள் ஆமா, எப்பவும் அச்சானியமா எதாவது சொல்ல வேண்டியது என்று உரக்க முணுமுணுத்தாள்.

அதுவும் சுமங்கலிப் பிரார்த்தனைக்கு மினிஸ்டர் மாமியைக் கூப்பிட வந்த இடத்திலே. உங்களுக்குப் போறவே போறாது.

பிஸ்கட். சூழ்நிலையைச் சகஜமாக்க திலீப்பைப் பார்த்தார். மினிஸ்டர் உறவுக்காரன். மாமா என்று வேறே சொல்லி விட்டான். பிஸ்கட் கம்பெனி வகையிலும், தன் வகையிலும் மினிஸ்டர் கருணை தேவை. மினிஸ்டர் மாமி டாக்டர் ஆவதோடு தொடர்பு முடிந்து விடக் கூடாது. சுமங்கலிப் பிரார்த்தனை, காதுகுத்து, வளைகாப்பு. போய்ச் சேர்ந்து பத்தாம் நாள் எள்ளுருண்டை, அப்பம், வடை. மினிஸ்டர் வந்தா ரொம்ப சந்தோஷப் படுவோம். டாக்டர் மாமி வாங்கோ.

அம்பி, பேஷா நான் கல்கத்தா வரேன் மாமா, மாசாமாசம் என்ன கிடைச்சாலும் பரவாயில்லேன்னு சொல்லு, பார்க்கலாம்.

பிஸ்கட் ஆதரவாகச் சொன்னார். கரண்ட் போன கல்கத்தா ஆபீசில் மாசம் முழுக்கக் கணக்கு எழுதிய அப்புறம் நூறு பாக்கெட் உப்பு பிஸ்கட் சம்பளமாக வாங்குவதாக திலீப் கற்பனை செய்தான். அப்படியே இருந்தாலும், பம்பாயில் சமாளிக்கலாம். சாலில் விற்றுக் காசாக்கி ஒரு மாசம் ஓட்டி விடலாம். கல்கத்தாவில் சிரமம். பொழுதுக்கும் விதவிதமாக மீன் சாப்பிடுகிற ஊர் அது.

ஏதோ பாருங்கோ. திலீப் ஒரு அப்ளிகேஷன் அனுப்பு சாஸ்திரி மாமாவுக்கு.

அனுப்பிட்டு என்னைத் திறந்து விடு. நான் ஆடணும்.

ஆஸ்பத்திரி கட்டிலுக்குக் கீழே இல்லாத சலங்கைகளைத் தேடி, இரும்புச் சங்கிலியை எடுத்துக் கணுக்காலில் கட்டித் தோற்கிறாள் திலீப்பின் அம்மா.

குழப்பமாகப் பெரியம்மாவைப் பார்த்து, சரியென்றான் திலீப். பசிக்கிறது. வந்த விஷயம் பற்றி இன்னும் பேச முடியவில்லை. கிரண்டிக் டேப் ரிக்கார்டரில் மைல் கணக்காக நீண்ட டேப் சலிப்பில்லாமல் பாடிக் கொண்டிருந்தது.

இது சோபான சங்கீதம். அர்ஜுன நிருத்தத்துலே வர்ற பின்பாட்டு.

பெரியம்மா சொன்னாள்.

அர்ஜுன நிருத்தம்னா ஒத்தைக் கால்லே ஆடறதா?

நாட்டிய மாமி அடுத்த அசடு பட்டத்தை எதிர்பார்த்தபடியோ என்னமோ கேட்டாள்.

பெரியம்மா எழுந்து நின்றாள். அறிவுத் தெளிவு உண்டு பண்ண அவளுக்குக் கிடைத்த மகத்தான சந்தர்ப்பம் இது. நழுவ விடப் போவதில்லை எந்தக் காரணத்துக்காகவும்.

டேப் ரிக்கார்டரை சத்தம் தாழ்த்தி வைத்தபடி பெரியம்மா சொன்னாள் -

அர்ஜுன நிருத்தம் ஆண்கள் மட்டும் ஆடறது. சில சமயம் ரெண்டு ஆம்பளை சேர்ந்து ஆடறதும் உண்டு. மயில் நிருத்தம்னும் இதைச் சொல்லுவா. போன மாசம், கேரளத்தில் கோட்டயம் ஜில்லா போயிருந்த போது ரெகார்ட் பண்ணினேன். இடுப்பைச் சுத்தி தழையத் தழைய மயில் பீலி கட்டிண்டு ரொம்ப மெதுவா ஆடுவா.

உள்ளே எதாவது போட்டுப்பாளா இருக்கும். றக்கை உதுந்துடுத்துன்னா ரசாபாசமாயிடுமே?

ராம சாஸ்திரிகள் இடைவெட்டினார்.

அசடே என்று அவரைப் பார்த்துக் கனிவாகச் சிரித்தபடி பெரியம்மா தொடர்ந்தாள்.

அடுத்த மாசம் லண்டன் போகணும். அதுக்குள்ளே மயில் நிருத்தம் மோனோகிராப் தயார் பண்ணிடறேன். ரிசர்ச் தீசிஸோட சேர்த்துடலாம். சரியா சாஸ்திரி மாமா?

மந்திரி பத்தினியான அவள் சட்டென்று எட்டாத உயரத்தில் அறிவின் சிகரமாக, கலை, கலாச்சாரத்தில் யூனிவர்சிட்டி டாக்டர் பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளராக பிரம்மாண்டமாக வியாபித்து நிற்கிறாள். ஆராய்ச்சி கைட் என்றாலும் அற்பமாக ராமா சாஸ்திரி பிஸ்கட்டை எச்சில் படுத்திக் கடித்துக் கொண்டு வெகு கீழே நிற்கிறார். அது கூட இல்லாமல் மாடிப் படிக்கட்டில் சோபான சங்கீதம் கேட்டபடி கீழ்ப்படியில் செருப்புத் துடைத்துக் கொண்டு திலீப் உட்கார்ந்திருக்கிறான்.

சமையல்கார மாமி வந்து நின்று இலை போட்டாச்சு, சாப்பிடலாம் என்றாள்.

அப்புறம் சாப்பிடலாம். என்னைத் திறந்து விடு. நான் ஆடணும்.

திலீப்பின் அம்மா பொறுமையின்றிச் சொல்கிறாள்.

ஓசிச் சாப்பாடு கிடைக்கறது அம்மா. உனக்கும் எடுத்து வரேன். சாப்பிட்டுட்டு ஆடலாம்.

திலீப் சொல்கிறான்.

மதராஸி பிராமணச் சாப்பாடு வேணாம்டா. பெருங்காயம் நாறும். கொலிவாடா மீன் வாங்கி கமகமன்னு சமைக்கறேன். திறந்து விடு. ஆடிட்டு வந்து சமைக்கறேன்.

அம்மா நினைவின் உள் அறையில் காலில் இரும்புச் சங்கிலியோடு படுத்துக் கொள்கிறாள்.

வாங்கோ டைனிங் ரூம் மாடியிலே இருக்கு. திலீப், மாமாவைக் கூட்டிண்டு வாடா.

பெரியம்மா தான் இன்னும் இளமையாக இருப்பதாக பரதநாட்டிய மாஜி நடன மணிக்குக் காட்டவோ என்னவோ மாடிப் படியில் வேகமாக ஏறினாள்.

வாஷ்பேசினில் கை கழுவும்போது ராமசாஸ்திரி ரெஸ்ட் ரூம் எது என்று திலீபிடம் சத்தம் குறைத்து விசாரித்தார். அவன் வெகுளியாக இடது கைப்பக்கம் இருந்த பெரிய படுக்கை அறையைக் காட்ட, பெரியம்மா சிரித்தபடி வாஷ்பேசினுக்குப் பின்னால் சாத்தி வைத்திருந்த லெட்ரினைச் சுட்டினாள்.

ராமா சாஸ்திரி சட்டைக்குள் கை விட்டுப் பூணூலைத் தூக்கிக் காதில் மாட்டிக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே போக, திலிப் புதியதாக ஒரு வார்த்தை கற்றுக் கொண்ட பெருமையும் ஈரக் கையுமாக டைனிங் டேபிளுக்கு வந்தான். இந்தப் புத்தறிவுக்காக ஒரு வேலை உடனே கிட்டினால் நன்றாக இருக்கும். கழிப்பறைக் கட்டணம் வசூலிக்கிற வேலை என்றாலும் சரிதான். ஆனால் கல்கத்தாவில் எல்லாம் வேண்டாம்.

எலையை நேராப் போட்டுக்கோ. கும்மாச்சி மாதிரி குமிச்சு நிறுத்தி வச்சா பரிமாற மட்டுமில்லே சாப்பிடவும் கஷ்டமாச்சே.

சமையல் மாமி சொல்லியபடி செங்குத்தாக வைத்த திலீப்பின் வாழை இலையைக் கிடைமட்டமாக்கி, கத்தரிக்காய்க் கறியும் அரிசிச் சாதமும் வைத்துப் போனாள்.

மராத்தி பழக்கம் இப்படி நேரா எலையை வச்சுக்கறது.

பெரியம்மா நடனமணியின் தகவலுக்காகச் சொல்ல அவள் வேறு கிரகத்திலிருந்து வந்தவனைப் பார்ப்பது போல் திலீப்பைப் பார்த்தாள்.

ஜனனி எங்கே பெரியம்மா, காலேஜ் போயிருக்காளோ?

ஒப்புக்காகக் கேட்டான். இதை சந்தோஷமாக வரவேற்று ஆமா என்ற பெரியம்மா தன் மகள் படிக்கும் பெண்கள் காலேஜின் சரித்திரம், அவள் படிக்கும் வகுப்பின் மேன்மை, ஜனனியின் நாட்டிய, இந்துஸ்தானி சங்கீத ஈடுபாடு என்று சொல்ல ஆரம்பித்தது, எல்லோரும் சாப்பிடுவதில் மும்முரமானபோது தேய்ந்து மறைந்தது.

இந்தப் பிள்ளையாண்டான் பெங்களூர் அன்னபூர்ணா அக்கா வகைதானே. முகத்திலே ஜாடை அச்சு அசலாத் தெரியறதே. மைசூர்லே நீ பிறந்த போது நான் அங்கே புரகிராம் கொடுக்க வந்திருந்தேன். ஆச்சு இருபத்தஞ்சு வருஷம் இருக்கும். அன்னபூர்ணா அக்கா மாதிரி வேகமா ஃபுட் ஒர்க் வேறே யாருண்டு?

ரசம் கலக்கி இங்கே போடுங்கோ. சரியாப் போச்சு. இவன் அம்மா மராத்தி. பண்டர்பூர் கங்கா பாய். எனக்கு ஓர்ப்படி. லாவணி ஆடுவா. சதாராவிலே மேடையிலே ஆடிண்டு இருக்கறச்சே இவன் பிறந்தான். என்னடா சரிதானே?

அவல் கேசரி போடுங்கோ மாமி.

திலீப் வேறு எதுவும் பேச மாட்டான். இப்போதைக்கு.

ராமா சாஸ்திரி புறப்பட்டுப் போன பிறகு திலீப் பெரியம்மாவிடம் ஐயாயிரம் ரூபாய் பணம் கேட்டான். அம்மா வைத்தியச் செலவுக்கு. மனநோய் ஆஸ்பத்திரியில் ஆயிரம் ரூபாய் கட்டாவிட்டால் அவளை அழைத்துப் போகச் சொல்கிறார்கள்.

பெரியப்பா கிட்டே கேட்டியோ?

இல்லே, அவர் கிளம்பிப் போய்ட்டார்.

திலீப் அறை வாசலிலேயே நின்று கொண்டிருந்தான். பெரியம்மா ரிக்கார்டரை ஆன் செய்தாள். கிரண்டிக் டேப் மெதுவாகக் அகவுவது தொடர்ந்தது.

அறைக்குள் மயில் ஒன்று நாட்டியம் ஆடிக் கொண்டிருப்பதாக திலீப்புக்குப் பட்டது.

அம்மா ஜன்னல் கதவுக்குப் பின்னால் நின்றபடி அவனையே கூர்ந்து பார்த்தாள்.

என்னைத் திறந்து விடு. நானும் ஆடணும்.

(தொடரும்)

புதிய நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 16 : இரா.முருகன்


அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதினாறு இரா.முருகன்

கடுதாசி வந்தாச்சு.

அமேயர் பாதிரியார் வந்தபடிக்கே, மூச்சு வாங்கிக் கொண்டு அறிவித்தார்.

போப்பரசர் உத்தரவு. குட்டி ஆடுகளைக் வழிப்படுத்தும் மேய்ப்பன் எழுத்து.

கையில் பிடித்திருந்த கடிதாசை உயர்த்திப் பிடித்து அவர் அன்போடு சிரித்தார்.

உலகெங்கும் வெள்ளமாகக் கருணை பொழிந்து இன்னும் மிச்சம் உள்ளதை வீட்டில் இருக்கப்பட்ட பீப்பாய், தண்ணீர் வாளி, பால் பாத்திரம், மேசைக் கரண்டி, மர ஸ்பூன் என்று எல்லாவற்றிலும் வழிய வழியப் பிடித்து அதுவுமெல்லாம் நிறைய, ஆளாளுக்கு கை குவித்து அள்ளி விழுங்கிக் கடைத்தேற வழி வகுத்து, ஊற்றுக்கண் வற்றாமல் இன்னும் இன்னும் பொங்கி வரும் பிரவாகம் அது.

அமேயர் அச்சா, கார். மெட்காபோட கார்.

இமல்டா குசினிக்குள்ளே ஒரு காலும் நடுவீட்டில் இன்னொரு காலுமாகக் கருணை வெள்ளக் கரையில் நின்றபடி கீச்சென்று குரலெழுப்பி அவசரப்படுத்தினாள்.

அமேயர் பாதிரியார் அவளைக் கண்ணெடுத்தும் பார்க்கவே இல்லை. அவர் கொண்டு வந்தது, எவ்வளவு முக்கியமான, கேட்டவர்கள் ஒருத்தர் விடாமல் மயிர்க்கூச்செரிந்து ஆனந்தம் மிகக் கொண்டு கண்ணில் துளித்த நீரோடு நிற்க வைக்கக் கூடிய அற்புதமான செய்தி!

இரும்பால் அடித்து நிறுத்திச் சகடம் பொருத்தி ஓட விட்ட அற்பமான காரையும் மோட்டார் சைக்கிளையும் கருத இது நேரமா என்ன?

இஸ்பானியப் பெண்ணே, உனக்கு சமாதானம் உண்டாகட்டும்.

அமேயர் பாதிரியாரின் கண்கள் இமல்டாவைக் கனிவோடு நோக்க, சமாதானம் அவளைச் சூழ்ந்தும் உள்ளிலும் பெருகுவதை உணர்ந்தாள், கொலம்பியாவிலிருந்து அகதியாக வந்த அந்தச் சிறு பெண். இவ்வளவு சமாதானம் இதுவரை அனுபவப்பட்டதில்லை என்பதால் மயக்கமடைந்து குசினித் தரையில் விழவும் செய்தாள் அவள்.

தெரிசா, கையில் பல் துலக்கும் பிரஷ்ஷும், கால் மாற்றி அணிந்த வீட்டுச் செருப்புமாக உடனே இமல்டா பக்கம் நகர்ந்தாள்.

ரெண்டு அடி முன்னால் வந்த அமேயர் பாதிரியார் அவள் தலையில் கைவைத்துச் சொன்னார் –

அவளை உறங்க விடு சிசுவே. அவளுக்கும் இந்த நற்செய்தி போய்ச் சேரும்.

இந்தக் கடிதம் அமேயர் பாதிரியார் வசம் நேற்றுப் பகலே வந்து விட்டது.

போஸ்ட் ஆபீஸில் கடிதங்களைப் பட்டுவாடா செய்ய அமர்த்தியிருக்கும் பெண் புதியவளாம்.கதவைத் தட்டிக் கையில் தராமல் என் தபால் பெட்டியில் போட்டிருக்கிறாள். காலையில் தான் பார்த்தேன்.

ஆகச் சிறந்த செய்தியோடு ஒரு நாள் தாமதமாக வந்ததற்காக மனப் பூர்வமாக வருத்தம் தெறிக்கும் குரலில் சொன்னார் அமேயர் பாதிரியார்.

தபால் பெட்டி, வந்த கடிதங்களைப் போடத்தானே என்பதாக தெரிசா அவரைப் பார்த்தாள்.

என் தபால் பெட்டியில் அண்டை அயல் குழந்தைகள் கல்லையும் மண்ணையும் நசுங்கிய ரப்பர் பந்தையும் தான் போடுகிற வாடிக்கை. ஒரு துஷ்டன் அடுத்த வீட்டுக்குக் குடி வந்து, குடித்தனக் காரர்கள் ராத்திரியில் உபயோகிக்கிற அசுத்தமான சமாசாரத்தையும் தபால் பெட்டி உள்ளேஎ போட்டிருந்தான். நல்லவேளை அது வாங்கியபடிக்கு புதுசானது என்பதால் அசுத்தம் குறைவாகவே இருந்தது.

அவர் பம்மிப் பம்மிச் சொல்ல தெரிசா குறுஞ்சிரிப்போடு தலையைக் குனிந்துகொண்டாள். வேலை மெனக்கெட்டுக் கடைக்கு நடந்து, காசு கொடுத்து காண்டோம் வாங்கி அதை ஜரூராக அமேயர் பாதிரியாரின் தபால் பெட்டியில் போட்டவன் முழு முட்டாளாக இருப்பான். ஒரு வேளை மெட்காபோ அது?

பாதிரியார் முன்னால் ராத்திரி உடுப்பில் நிற்க அவளுக்குக் வெட்கமாக இருந்தது.

கல்யாண தினத்தன்று, அந்தியில் அனுபவப்படது. மெட்காப் சுகமாக உறங்கும் சவப்பெட்டிக்கான விலையை, அதை வசூலிக்க வந்த கனவானிடம் கொடுத்தபோது உண்டானது. கலவி சுகம் கண்ட உடலைச் சுத்தப்படுத்திக் கொள்ளாமல் வந்ததற்காக அப்போது மனதில் படிந்த கூச்சம் போன்றது அது. இன்னொரு முறை அது அனுபவமானது விவரிக்க முடியாத ஏதோ விதத்தில் சந்தோஷமானதாகவும் இருந்தது.

அமேயர் பாதிரியாருக்குக் கிட்டியிருக்காது அதெல்லாம். தபால் பெட்டியில் போட்டிருந்த ஆணுறை போல விலகிப் போயிருக்கலாம். அல்லது கிடைத்திருந்தாலும், மனக் குமைச்சல் இல்லாமல் அவர் அனுபவித்திருக்க முடியாது அணிந்து கொள்ள விதிக்கப்பட்ட வெள்ளை அங்கி வருவித்த பயமே அதைத் தூர வீசச் சொல்லிக் கண்டித்திருக்கும்.

படுக்கை அறைக் கதவு திறந்தது. உள்ளே இருந்து, கோமாளி உடுப்பு மாதிரி தொளதொளத்த பைஜாமாவும், ஆரஞ்சு நிறத்தில் மேல் குப்பாயமும் அணிந்து வெளியே வந்தான் முசாபர். அவன் பார்வை தெரிசா மேல் மட்டும் நிலைத்திருந்தது.

காருக்கு என்ன ஆச்சு?

வேறு எந்தத் தகவலும், அற்புதமும், கருணையும், சமாதானமும் தனக்குத் தேவையில்லை என்ற கறாரான தொனியில் கேட்டான் முசாபர்.

கார் தெரு ஓரமாக நிற்கும். எந்தத் தெருவானாலும் சரிதான்.

கொச்சு தெரிசா நெஞ்சில் குரிசு வரைந்தபடி, பொதுவாகப் பார்த்துச் சொன்னாள்.

அமேயர் பாதிரியார் உடனடியாக ஒரு பிரார்த்தனை செய்து காரோட்டி இல்லாத அந்தக் காரை, போன வாரம் கால்டர்டேல் கல்லறையில் உறங்கப் போன மெட்காப் என்ற, குரிசுப் பள்ளிக்குள் ஒரு முறையும் கால் வைக்காத, இங்கிலீஷ் மட்டும் பேச, எழுதத் தெரிந்த நடு வயசு வெள்ளைக்காரன் வாங்கி வந்த தன் முனைப்பான அந்தப் பிசாசு யந்திரத்தை நிறுத்திப் போடட்டும்.

தெரிசாவின் பார்வை யாசித்தது.

அதெப்படி தானே நிக்கும்?

முசாபர் தேவ வேளையில் அபசுவரமாக மேற்கேள்வி கேட்டான். மீன் சாப்பிடும்போது பல் உதிர்ந்து போயிருந்த எயிற்று இடைவெளியில் முள் குத்திய அவஸ்தையைப் பார்வையில் காட்டினார் அமேயர் பாதிரியார்.

உம்மை சாவகாசமாக வந்து கவனித்துக் கொள்கிறேன் என்று முகத்தில் துச்சமான புன்னகையை ஒட்டிக் கொண்டு வாசலுக்கு விரைவாக நடந்த முசாபர், யாரோ சத்தமாக ஏதோ சொல்வது காதில் பட, வேகமாக ஓட ஆரம்பித்தான்.

அதையொண்ணும் கவனிக்காமல், அமேயர் பாதிரியார் கொச்சு தெரிசாவிடம் ஆவலாக விசாரித்தார்.

போன வாரம் இதே கிழமைக்கு, இங்கே ஆடிய பறவை நினைவு இருக்கா தெரிசாளே?

இல்லாமல் என்ன அச்சோ, நீங்க சொன்னீர்களே. அன்னப் பறவையல்லவோ அது.

தெரிசா ஆர்வத்தோடு கேட்க ஒரு புன்சிரிப்பால் அவளைத் தடுத்தாட்கொண்டார் அமேயர் பாதிரியார். அறிவின் பிரகாசமும் ஆராய்ந்து முடிவுக்கு வருவதும் தேவ ஊழியர்களுக்கும் அவ்வப்போது தடைப்படுவதும், பின்னர் தெளிகிறதும் நடப்பதுதான். கொச்சு தெரிசா போன்ற ஏதும் அறியாத ஆட்டுக் குட்டிகளை இது போன்ற சுகவீனம் இன்னும் சுளுவாகப் பீடிக்க வாய்ப்பு உண்டு. அறியாமை களைய அல்லவோ அங்கி தரித்து அலைந்து திரிகிறார் அமேயர் பாதிரியார்?

மகளே, உன் தகப்பன் ஆந்திரோஸுக்கு ரொம்பப் பிடித்த செயல் நினைவு இருக்கா?

அமேயர் பாதிரியார் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார, குசினியில் இமல்டா கருணை காரணமாகக் கவிந்த மயக்கம் தீர்ந்து எழுந்து அங்கிருந்தே அமேயர் பாதிரியாரைப் பார்த்துக் கூவினாள்.

ஆந்திரோஸ் ஐயா நான் வேலைக்கு வந்தபோது என்னைத் தரக் கேடான காரியம் செய்யச் சொல்லித் தூண்டுவாரே அதுதானே அவருக்கு ரொம்பப் பிடிச்சது?

அப்பன் அந்த்ரோஸ் பற்றி தெரிசாவுக்கு வெகு விவரமாகத் தெரியும் என்றாலும் பணிப்பெண் மூலம், அதுவும் அவள் வயசுக்கும் குறைந்த இமல்டா மூலம் இத்தனை காலையில் வெளிப்படுவது அவளுக்கு உடன்பாடாக இல்லை.

இமல்டாவின் அம்மா மீதும் இப்போது அபர்டீனில் சலவைக்கடை வைத்திருக்கும் இமல்டாவின் சாயல் கொண்ட அவளுடைய தம்பி மீதும் அந்திரோஸுக்கு ஈர்ப்பு இருந்ததை அவள் அறிவாள். அமேயர் பாதிரியாருக்கும் அதெல்லாம் தெரியும். அதைச் சொல்லிக் காட்டிக் களி கொண்டு கூவிக் கூத்தாடவா அவர் வந்திருக்கிறார்?

இமல்டா வலதுகையைப் பூமொட்டாகக் குவித்து வாயில் வைத்துக் கொண்டு சிரிக்க, அமேயர் இமல்டா மேல் சாத்தான் கவிந்ததாக அறிவித்தார்.

அவளை இன்னிக்கு முழுக்க எந்த வேலைக்கும் வரவேணாம் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பு என்று தெரசாவிடம் சொன்னார் பாதிரியார்.

இமல்டா கட்டாயமாக வெளியேற்றப்பட, வெளியே போகும்போது அவள் தெரிசாவின் கன்னத்தைக் கிள்ளி, காதில் அந்தரங்கமாக ஏதோ கேட்க தெரிசா முகம் கூச்சத்தால் சிவந்ததையும் அவள் இமல்டாவின் தலையில் தட்டித் தணிந்த குரலில் சிரிப்பதையும் நாற்காலியில் இருந்தே அமேயர் பாதிரியார் கண்டார்.

என்ன ரகசியமோ இந்தப் பெண்பிள்ளைகள் இடையில்? அதெல்லாம் அசங்கியமானதாக இருக்கும் என்று கையில் பிடித்திருந்த போப்பரசர் கடிதம் விரைப்பாகச் சொன்னது.

அச்சோ, இதோ வந்தாச்சு.

குசினிக்குப் போய் ரெண்டு கோப்பை சாயாவோடு தெரிசா நடுவீட்டுக்கு வந்தாள். பாதிரியார் போப்பரசரின் கடிதத்தை அங்கிக்குள் வைத்து விட்டு, நிறைய நன்றி சொல்லியபடி கோப்பையை வாங்கிக் கொண்டார். விடிந்து அருந்துகிற முதல் கோப்பை தேனீர் இது தான். காலையில் எழுந்ததும் போப்பரசர் கடிதப் பரபரப்பு தொடங்கி அதோடு கூட அலைபாயவே நேரம் சரியாக உள்ளது.

அந்திரோஸுக்கு குடும்ப மரம் வரைவதில் விருப்பம் அதிகம் உண்டு தானே?

அமேயர் பாதிரியார் கேட்டபடி இடது கையால், அங்கியின் பையில் இருந்து நாலாக மடித்த ஒரு காகிதத்தை எடுத்தார். அதைப் பிரித்து தெரிசாவிடம் கொடுக்க அவள் வேண்டாம் என்று அவசரமாக மறுத்தாள்.

அப்பன் எழுதிய நீள் சதுரங்களும், கோடுகளும் நிறைந்த குறிப்பு. நடு நடுவே ஆண், பெண் பெயர்கள் திருத்தமான கையெழுத்தில் சதுரத்துக்குள் இருந்து விழித்துப் பார்க்கும். அடிப்படையான காமம் மிகுந்து ராத்திரி முழுக்க சந்தோஷம் அனுபவித்து விட்டுக் குளிக்காமல் தெரிசா கை நீட்டித் தங்களைத் தொடுவதை அந்தப் பெயர்களைக் கொண்டவர்கள் விரும்ப மாட்டார்கள்.

அமேயர் பாதிரியார் புரிந்ததாகத் தலையசைத்து அவரே அந்தக் காகிதத்தை விளக்கினார்.

தெரிசாளே, போப்பரசர் சாம்ராஜ்ஜியத்தில் இருந்து வந்த கடிதத்தை அவருடைய கார்டினல்களில் ஒருவரான ஜோசப் ஈப்ப்ன் தெக்கேபரம்பில் பாதிரியார் எழுதியிருக்கார். கர்த்தர் அவருடைய பெயரை உச்சரிக்கக் கடினமானதாக வைத்த காரணம் தகுதியில்லாதவர்கள் அதைச் சொல்லிச் சிரமப்படுத்த வேண்டாமே என்பதாக இருக்கலாம்.

தெரிசா தேநீர்க் குடித்து முடித்திருந்தாள். குளிக்க வேண்டும் என்ற நினைவு இன்னும் வலுவாகத் தாக்க ஆரம்பித்திருந்தது. அமேயர் பாதிரியார் இப்போதைக்கு இறங்கிப் போவார் என்று தோன்றவில்லை. போப்பரசரில் தொடங்கி, இமல்டாவை வெளியேற வைத்து, குடும்ப மரத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு, கூடவே, யாரோ இந்தியக்கார பாதிரியாரின் மேன்மையைப் பாராட்டுகிற லயிப்பில் இருக்கிறார். அவர் போப்பாண்டவர் கடுதாசுக்கு வருவதற்குள் இன்று மதியமாகி விடும் என்று தெரிசாவுக்குப் பட்டது.

தெரிசா சற்றே நெளிந்து அசௌகரியம் காட்டினாள். நல்ல வேளை, அமேயர் பாதிரியார் விஷயத்துக்கு வந்தார்.

தெரிசாளே இது உங்க குடும்பத்தோட வம்சாவளியைச் சொல்கிற மரம். இந்தியாவில் தெற்கில் பெயர் வாயில் நுழையாத பிரதேசத்தில் ஒரு பிராமணக் குடும்பம். மூணு சகோதரர்கள். ரெண்டாமவன் கித்தாவயான்.

மன்னிக்கணும் அச்சா. அது இந்தியப் பெயர். ஜான் கிட்டாவய்யன்னு உச்சரிப்பு.

பாதிரியார் கலகலவென்று சிரித்தார்.

நல்லதாப் போச்சு. நீயே படி தெரிசாளே. ரெண்டே நிமிஷம் தான்.

அவர் சந்தோஷப் பட்டார். தெரிசா சாயாவில் தாராளமாகக் கலந்திருந்த சர்க்கரை புத்தியில் உற்சாகத்தை ஏற்றி சின்னச் சின்ன சந்தோஷங்களைப் பெரிசாக்கிக் காட்டுகிறது.

தமிழும் மலையாளமும் பேசும் அம்பலப்புழை பிராமணர்கள் மூணு பேர். அதிலே ரெண்டாமவன் கிட்டாவய்யன். ஜான் கிட்டாவய்யனான இவருக்கு தெரிசா மூத்த மகள், வேதையன் மகள். தெரிசா இங்கிலாந்து வந்து பீட்டர் மெக்கன்ஸியைக் கல்யாணம் செய்து, சந்ததி இல்லாமல் அந்தக் கண்ணி நின்று போனது. வேதையன், பரிபூரணத்தைக் கல்யாணம் செய்து அவளுக்கு ஒரே ஒரு பெண் குழந்தையாக தீபஜோதி. தீபஜோதியின் மகன் அந்திரோஸ், அவர் மனைவி நிக்கோலா. மகள் கொச்சு தெரிசா என்ற, அசுத்தமான இந்தப் பெண்குட்டி.

அமேயர் பாதிரியார் இதுக்கும் சிரித்தார்.

கொச்சு தெரிசாளே, போப்பரசர் அந்த தெக்கேபரம்பில் பாதிரியார் மூலம் சொல்ல வந்தது, அன்றைக்கு இங்கே ஆடியது அன்னப் பறவையில்லை. கண்டம் விட்டுக் கண்டம் போகும்போது வழி தவறிய மயிலாக இருக்கக் கூடும். மயில் வருவதாலோ வேறு பறவைகள் வருவதாலோ எந்தக் கெடுதலும் இல்லை. நல்லதே நடக்கும்.

இந்த இடத்தில் நிறுத்தி, அற்புத சுகமும் பரவசமும் அளிக்கிற தகவல் இல்லையோ இது தெரிசாளே. கெடுதல் அண்டாது விலகி ஓடும். இனி எப்போதும் நல்லதே நடக்கும் என்று ஆயரின் ஆயர் அளிக்கிற ஆசியும் செய்தியும் தினந்தினம் நாம் கால்டர்டேல் சந்தையில் மீனோடும் உருளைக் கிழங்கோடும் வெங்காயத்தோடும் வாங்கி வருகிற சமாசாரமா என்ன?

அது சரிதான். ஆனால் இந்தத் தகவலால் தனக்கு என்ன உபயோகம் என்கிறது போல் கொச்சு தெரிசா அமேயர் பாதிரியாரைப் பார்த்தாள்.

விஷயமுண்டு என்கிற தொனியில் அவர் இன்னொரு முறை சிரித்தார்.

இதுவரை போப்பரசர் சொன்னபடிக்கு இருக்கப்பட்ட கடிதத்தில் கண்ட வார்த்தைகள். தெக்கேபரம்பில் பாதிரியார் எனக்கு தனிப்பட எழுதிய கடிதம் ஒன்று உண்டு. அதைக் காண்பிப்பதற்கில்லை. மயில் எப்படி மிகச் சரியாக உன் வீட்டு முகப்பில் வந்து ஆடியது என்பதற்கான சிறு தகவலாவது உன் பூர்விகம் மூலம் தெரிய வரலாம் என்கிறார் அவர். மடம் மூட நம்பிக்கைகளை ஆதரிப்பதில்லை. உனக்குத் தெரியாததில்லை தெரிசாளே.

நான் என்ன செய்யணும்?

தெரிசா எழுந்து நின்றாள். அவளுக்கு இதொண்ணும் ஒரு சுக்கும் பிரயோஜனமானதாக இருக்கும் என்று தோன்றவில்லை.

உன் தேன்நிலவுக்கு முசாபரைக் கூட்டிக் கொண்டு நீ ஏன் இந்தியா போய்வரக் கூடாது?

அமேயர் பாதிரியார் கேட்டுக் கொண்டிருக்கும்போதே வாசலில் வெகு களேபரமாக மெட்காபின் கார் நுழைந்தது. முன் சுவரில் மோதி செங்கல் உதிர்த்து அது நிற்க உள்ளே இருந்து பெரிய சாதனை செய்த தோரணையில் முசாபர் இறங்கினான்.

(தொடரும்)