புதிய நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 15 : இரா.முருகன்

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதினைந்து இரா.முருகன்

கொச்சு தெரிசாவுக்கு விழிப்பு வந்தபோது கட்டிலில் புரண்டு படுத்து மெட்காபே, ஒரு முத்தம் தா என்றாள்.

எடி தெரிசாளே அவன், அந்தக் கேடுகெட்ட மெட்காப் தடியன் கல்லறையில் இருந்து இனியும் திரும்பி வந்து உனக்கு முத்தமும் மற்றதும் அனுபவப்படுத்துவானென்று தோணவில்லை. வந்தாலும் அந்நிய புருஷன் யாரும் அதையொண்ணும் உனக்குத் தரவேணாம். நானே தருகிறேன். வாங்கிக்கொள்.

முசாபர் புகையிலை மணக்க, ஒழுங்கில்லாமல் கோரைப் புல்லாக வளர்ந்த மீசை தெரிசாவின் மேலுதட்டில் படிந்து, உள்ளே எட்டிப் பார்த்து எச்சிலில் நனைய, கீழுதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான்.

கண்ணை மூடிக் கொண்டாள் தெரிசா. மெட்காப் சுகமாக என்றென்றைக்கும் உறங்கட்டும். முசாபர் அவளை உறங்க விடாமல் கிடத்த வந்து விட்டான். நாற்பதிலும் உடம்பு சுகம் சுகம் என்கிறது. புகையிலை வாடையைப் பொறுத்துக் கொண்டால், குறைந்த பட்சம் சௌகரியங்கள் உள்ள சொர்க்கம் தான்.

தெரிசாவுக்குக் கண்ணில் மயில் ஆடியது. ராத்திரி பனி விழுந்து இன்னும் தள்ளாத வீட்டு முகப்பில், மீனும் வறுவலும் கிடைக்கும் என்று தொங்கும் தகரப் பலகைக்கு வெகு கீழே ஆடுகிற பறவை அது. ஒரு வாரத்துக்கு முன், மெட்காப் இங்கே அவளோடு படுக்கையில் இருந்த போது ஆடியது.

அது ஒரு விதமான அன்னப் பறவை என்றார் மெட்காப் பாதிரியார். யார்க்‌ஷயரில் மயில்களும் அண்டங்காக்கைகளும் இல்லையே, எனவே அன்னம் தான் என்று விளக்கம் சொன்னார் அவர். அன்னப் பறவை கூடத்தான் இங்கே இல்லை என்று யாரோ சொன்னதற்கு, வேதப் புத்தகத்தில், இங்கே அன்னப் பறவைகள் நல்ல சேதி சொல்லிப் பறந்து போனதைப் பற்றிக் குறிப்பு உண்டு என்றார். அதெல்லாம் அந்தப் பொழுதில் தெரிசாவுக்கு மனசுக்கு இதமாக இருந்த தேவ வார்த்தைகள்.

மெட்காப்பின் மதுக்கடை சிநேகிதன் மஞ்சள் பல்லைக் காட்டிச் சிரித்துக் கொண்டு விடாப்பிடியாக, அது மயில் இல்லையோ என்ற போது அவனை ரெண்டு கன்னத்திலும் அவன் அபிப்பிராயத்தைக் கேட்காமல் அறைந்து கால்டர்டேல் சந்தையில் பன்றி மாமிசம் விற்கிற கடையில் நீளக் கொக்கியில் தொங்கும் தலையறுந்த பன்றியின் பிருஷ்ட பாகத்தில் இவன் முகம் புதையத் தொங்க விட வேண்டும் என்று ஆவேசம் வந்தது தெரிசாவுக்கு அன்று.

ஒண்ணும் உளறாமல் சும்மா இரு என்று அவனைக் கண்டிக்க அவள் முன்னால் போனபோது`சுற்றுக் காரியம் வைத்து ஒத்தாசையாக இருக்கும் இமல்டா வீட்டுக்குள் இருந்து ஓவென்று கூக்குரல் இட, அமேயார் பாதிரியாரோடு தெரிசாவும் உள்ளே ஓடினாள். மெட்காப் படுக்கையில் இருந்த படிக்கே பரலோகம் போயிருந்தான் அங்கே.

ஒரு நோய் நொடி இல்லை. இழுத்துப் பறித்துக் கொண்டு படுத்து எல்லார் வாயிலும் விழவில்லை. துர்நெடியும் இல்லை. சாவு திடமாக உட்கார்ந்த கண்கள் தாமதமாக இமைக்க, இருமலுக்கு நடுவே பேச முயற்சி செய்து தளர்ந்து, கோப்பையில் துப்பி மூச்சு முட்டும் அவலமும் அவனுக்கு இல்லாமல் போனது. ராத்திரி அவளோடு கலந்திருந்தான். வெள்ளை ஒயினை நடு ராத்திரிக்குத் தனியாக அருந்தி ரேடியோகிராமில் ஜிம் ரீவ்ஸ் என்ற அமெரிக்கன் பாடிய பாட்டுகளை அவன் உரக்க வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தபோது தெரிசா உறங்கியிருந்தாள்.

லண்டனுக்கும் மான்செஸ்டருக்கும் நினைத்துக் கொண்டது போல் கிளம்பிப் போவது மாதிரி ராத்திரி எத்தனை மணிக்கோ, அல்லது விடிந்த பிறகுதானோ, புறப்பட்டுப் போய்விட்டான் அவன். தெரிசாவால் நம்பக் கஷ்டமாக இருந்தது.

அவள் இதை எதிர்பார்க்கவில்லை என்றாலும், மெட்காப் போய்ச் சேர்ந்ததில் அவளுக்கு ஒரு துக்கமும் மேலெழுந்து வரவில்லை. ஒருவேளை அடுத்த தலைமுறை வீட்டில் தலையெடுத்து மகனும் மகளுமாக இடம் நிறைந்திருந்தால் அழுகை வந்திருக்குமோ.

என்றாலும் மெட்காபை கல்லறைத் தோட்டத்துக்கு நேர்த்தியான ஒரு சவப்பெட்டியில் வைத்து அனுப்பும்போது தெரிசா கொஞ்சம் அழுதாள்.

இது என்ன ஜீவிதம்? இந்தியாவில் அதுவும் தென்னிந்தியாவில் கடல் ஓரமாக இருக்கப்பட்ட ஏதோ பிரதேசத்தில் இருந்து அவளுடைய பாட்டித் தள்ளை தீபஜோதியம்மா இங்கே வந்தபோதே ஏதோ விதத்தில் கொச்சு தெரிசாவின் ஜீவிதமும் தீர்மானிக்கப்பட்டு விட்டது என்று அவளுக்குத் தெரியும்.

தீபஜோதி இங்கிலாந்து வந்த நடப்பு எல்லாம் கொச்சு தெரிசாவின் சின்ன வயசு ராத்திரி கதைகள். அவள் அப்பன் அந்திரோஸ் அவனுக்குத் தெரிந்த வரை சொன்னது. வலிய தெரிசா என்ற பெயரில் வீட்டுக்கு முக்கிய மனுஷி தேவ ஊழியம் செய்ய நூறு வருஷம் முன்பு இங்கே வந்ததாகவும். அவளுடைய வீட்டுக்காரன் வெள்ளைக்காரன் என்றும், அந்தப் பெரியவள் பெயரைத்தான் இந்தக் கொச்சு தெரிசாவுக்குச் சூட்டியதாகவும் அந்திரோஸ் தன் மகளுக்குச் சொல்லியிருக்கிறான்.

அவள் ஸ்மால் தெரிசா, அந்த மூத்த பெண்மணி ஓல்ட் தெரிசா. கொச்சு தெரிசாவுக்கு வயசாகும்போது அவளும் வலிய தெரிசா ஆகிவிடுவாளா?

மகளுடைய பயத்தை உடனே ஒதுக்கித் தள்ளினான் அந்திரோஸ் அப்போது.

நீ எப்பவும் கொச்சு தெரிசா தான் மகளே.

அந்த வெள்ளைக்காரனின் அரண்மனை போன்ற வீடும் மற்ற சொத்தும் முப்பது சொச்சம் பேருக்கு வாரிசு உரிமையாகப் பங்கு போடப்பட்டு, வந்த தொகையை தீபஜோதியம்மாவுக்கு அந்த வலிய தெரிசா எழுதி வைத்துவிட்டு எடின்பரோவில் அடக்கம் ஆகியிருக்கிறாள் என்று கொச்சு தெரிசாவுக்குத் தெரியும்.

அந்திரோஸ் ஒரு கல்லறைத் திருநாள் நேரத்தில் மகள் கொச்சு தெரிசாவை அங்கே கூட்டிப் போயிருக்கிறான்.

மெட்காபைக் கல்யாணம் கட்டி தேநிலவுக்கு எடின்பரோ போனபோதும் அந்தக் கல்லறை வளாகத்தைத் தேடிப் போயிருந்தாள் கொச்சு தெரிசா. கல்லறைகளை இடம் மாற்றி விட்டு அங்கே வீடு கட்டக் கடன் தரும் வங்கியின் தலைமை அலுவலகத்தை உசரமாகவும் விரிந்து பரந்தும் எழுப்பியிருப்பது கண்ணில் பட்டது.

மாற்றிக் குடிபோன இடத்தில் வலிய தெரிசாவைத் தொந்தரவு படுத்த மனசில்லாமல் தேன்நிலவு தம்பதி ஊர் வனப்புக் காண சிகப்பு பஸ்ஸின் கூரையில் உட்கார்ந்து புறப்பட்டு விட்டது அப்போது.

சாவகாசமாக ஒருநாள் திரும்பி வரலாம் என்றான் மெட்காப். இனி எப்போதுமே அவனுக்கு சாவகாசமான ஓய்வு தான். ஆனாலும் வருவது தான் சிரமம்.

எழுந்திருக்கலாம் என்றாள் கொச்சு தெரிசா, முசாபரிடம்.

மெட்காபின் கல்லறைப் பக்கம் மரம் முழுக்க பனி படர்ந்து ரம்மியமாக இருக்கு. இன்னிக்கு அங்கே போய் ஜோடியா நின்னு போட்டோ பிடிச்சுக்கலாமா?

முசாபர் கேட்டான். அவன் கொச்சு தெரிசாவின் வீட்டுக்காரன். மெட்காபின் கல்லறை ஈரம் காயும் வரை காத்துக் கொண்டிருந்து விட்டு இங்கே வந்து சேர்ந்து விட்டான்.

நீ திரண்ட தினத்தில் இருந்தே உனக்காக ஏங்கி காத்திருக்கேன்.

முசாபர், மெட்காப் இறந்து போன துக்கம் கேட்க வந்தபோது சொன்ன முதல் வாக்கியம் அதுதான். கொச்சு தெரிசா பெரியவளான தினத்தைச் சொன்னான் அடுத்தாற்போல. அது மிகச் சரியாக இருந்ததற்காக தெரிசா சந்தோஷப் பட்டாள்.

வீட்டு முன்னறையில் மெட்காப் இறந்த துக்கம் கேட்க வந்த மற்றவர்கள் சாயா குடித்தபடி இந்த வருஷம் பனிக்காலம் தரும் சுகவீனங்களைப் பட்டியல் போட்டுக் கொண்டிருக்க, பின்கட்டுக்கு வந்த முசாபர் மண்டி போட்டுக் கொச்சு தெரிசா முன் இருந்து அவளுடைய நைட்டியால் தன் முகவாய்க்கட்டையில் வடிந்த புகையிலை எச்சிலைத் துடைத்தபடி, அவளைக் காதலிப்பதாகச் சொன்னான்.

அவன் வரும் வாரம் புதன்கிழமை பிராட்போர்டுக்குப் போய் காஜியார் மூலம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றபோது மெட்காப் இறந்த தருணத்தில் மயில் ஆட ஆரம்பித்தது பற்றி வெளியே பேசிக் கொண்டிருந்தார்கள். அமேயர் பாதிரியார் அது அன்னப் பறவை என்று சொன்னதாக முசாபரின் தலைமுடியில் கைவைத்தபடி தெரிசா உள்ளிருந்த படியே விளக்கம் சொன்னாள்.

ரெண்டு பேருமே பிள்ளை குட்டி என்று முப்பது வயசு வரை பிக்கல் பிடுங்கல் இல்லாமல் கடந்தவர்கள் என்பதாலும், முசாபரின் முந்தைய ரெண்டு மனைவியரும் விவாகரத்து வாங்கிப் போய் அடுத்தடுத்து ஜோடி அமைந்து நல்ல வண்ணமாக இருக்கிற படியாலும், இந்தக் கல்யாணத்தில் அதன் அவசரம் தவிர வேறே பிரச்சனை ஏதும் எழவில்லை. முசாபர் பலசரக்குக் கடை வைத்திருக்கிறான்.

கல்யாண ஆலோசனை பற்றிக் கொச்சு தெரிசா கலந்தாலோசித்த போது, அமேயர் பாதிரியார் ரொம்ப யோசித்துச் சொன்னதாவது –

இத்தனை வேகமாக இந்த முசாபருக்கு நீ வேண்டி இருக்கிறதனாலே, என் கொச்சு தெரிசாளே, அவனை வேதத்தில் ஏற்ற முடியுமா என்று முயற்சி செய்யேன். கற்பாறை மீது வீடு கட்டுகிற தோதில் கர்த்தரில் அவன் நம்பிக்கை வைத்தால் அவனுக்கும் பரலோக சாம்ராஜ்ஜியத்தில் இடம் நிச்சயம் உண்டாச்சுதே. மற்ற விசுவாசங்கள் எதுவும் அவனை அங்கே கொண்டு சேர்க்காதென்றும் சொல்லு.

முசாபர் கிறிஸ்தியானி எல்லாம் ஆக மாட்டேன் என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டான். பிரஞ்சு பேசுவது போல் அவனை அவமானப்படுத்தும் தரத்தில் அமைந்திருக்கும் யோசனை அது என்று தெரிவித்தான் அவன். அப்படி கிறிஸ்தியானியாகாமல் அமேயர் பாதிரியார் அவனுக்குத் தெரிசாவை உடனடியாகக் கல்யாணம் செய்து வைப்பதாக இருந்தால், எரிமலைப் பக்கமோ, சமுத்திரத்தின் உள்ளேயோ கூடப் போய்க் மோதிரம் மாற்றத் தயார்தான்.

காஜியாரிடம் கொடுத்த முன்பணத்தையும் திருப்பி வாங்கி வந்துவிட்டதாகச் சொன்னான் முசாபர். அமேயர் பாதிரியார் கால்டர்டேலில் மெட்காபைப் புதைத்த கல்லறைத் தோட்டத்துக்கு அடுத்து இருக்கும் ஊர்ப் பொதுக் கட்டிடத்தை சொற்ப வாடகைக்கு ஒரு நாளைக்கு மட்டும் பிடித்துச் சுருங்கிய செலவு தெரிசாவுக்கு வைத்தபடி அங்கே அவள் கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

பிராட்போர்ட் காஜியாருக்கு அமேயர் பாதிரியார் வாழ்த்துகளோடு, சொர்க்கத்தில் சந்திப்போம் என்று அவர் கைப்பட எழுதிய காகித உறைக்குள் வைத்து முசாபர் திரும்ப வாங்கி வந்த பணம் அனுப்பப்பட்டது. சரிவரத் தபால்தலை ஒட்டாததால் தான் கைக்காசு போட்டு அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதாகவும், அமேயர் பாதிரியாருக்கு நன்றி சொல்வதாகவும் எழுதி காஜியார் அனுப்பிய கடிதம் உடன் வந்தது தெரிசாவுக்கு. கிறிஸ்தியானி சொர்க்கம் கால்டர்டேலை ஒட்டி இருக்கிறதா என்று காஜியார் அந்தக் கடிதத்தில் விசாரித்திருந்தார் . அதற்கு இன்னும் தெரிசா பதிலெழுதவில்லை.

இன்றைக்காவது எழுத வேணும். அதற்கு முதலில் எழுந்திருக்க வேணும். தெம்பாக ஒரு குவளை சாயா குடிக்க வேண்டும். தெரிசாவின் மார்பகங்களின் நடுவில் முகம் புதைத்து இப்படி சுகம் காணும், புகையிலையும் போகமும் தவிர அறியாத இந்த மளிகைக் கடைக்காரன் அவளை விட்டுத் தொலைக்க மாட்டேனென்கிறான். அவளுக்குப் புகையிலை பிடிக்காது. முசாபர் பரவாயில்லை.

முசாபர் மெல்லத் தலை தூக்கி, தெரிசாவின் உதட்டில் இன்னொரு புகையிலை முத்தம் கொடுத்தபடி தெரிசாவை சாரைப் பாம்பு கலக்கிறது போல இறுக்கிக் கொண்டான். இவ்வளவு போகம் கொண்டாடினால் நோக்காடு வந்து இவனை கபர்ஸ்தானில் விட்டுவிட்டு வர வேண்டியிருக்கலாம்.

அவன் போனால்? அமேயர் பாதிரியார் ஞாபகத்துக்கு வர சிரித்துக் கொண்டாள் தெரிசா. கம்பளிப் போர்வைக்குள் இருந்து கொஞ்சம் வெளிப்பட்டு, சொல்லிட்டு சிரி என்றான் முசாபர். உன் முலைக் காம்புகள் என்றாள் தெரிசா அவன் வெற்று மார்பைப் பார்த்து. அவன் சிரிக்கக் காவிப்பல் வரிசையில்லாமல் தெரிந்தது.

மெட்காபுக்கு இந்தக் கண்றாவியான புகையிலைப் பழக்கம் எல்லாம் கிடையாது. விஸ்கியும் பியரும் வகைதொகை இல்லாமல் குடித்துத் தீர்ப்பான். மெத்தையைத் தரையில் உருட்டி விட்டு அதிலே படுத்து விடுவான் வழக்கமாக. ஒண்ணு ரெண்டு முறை குசினியிலும், உலர்ந்த மாமிச வாடைக்கு நடுவே தூங்கியிருந்தான் அவன்.

புகையிலை தவிர, இன்னொரு மகா அசிங்கமான பழக்கத்தோடு வந்து சேர்ந்தான் முசாபர். போன வாரம் கல்யாணம் முடிந்து வந்தபோது பிற்பகல் மூணு மணி. அமேயர் பாதிரியாருக்கும், சர்ச் வளாகத்தில் கல்லறை தோண்டுகிற உத்தியோகஸ்தனுக்கும், இசைக்குழுவில் இருக்கப்பட்ட ஏழையான நாலு பையன்களுக்கும் கொச்சு தெரிசாவின் வீட்டுக் கடையிலேயே பொறித்த மீனும் வறுவலும் பழைய பத்திரிகையில் வைத்து எண்ணெய் சொட்டக் கொடுக்கப் பட்டது. பிக்கில் சாப்பாட்டுக் கடையில் வாங்கிய வான்கோழி மாமிசமும், ரொட்டியும், செபஸ்டியான் ஓகோனர் பேக்கரி கேக்கும், வென்னிலா ஐஸ்க்ரீமும் அவர்களுக்கு விருந்தாக அளிக்கப்பட்ட மற்ற உருப்படிகள்.

சாயந்திரம் ஐந்து மணிக்கு அவர்களெல்லாம் புறப்பட்டுப் போனபோது வீடு காலியாக, முசாபர் தெரிசாவிடம் சொன்னான் – கொஞ்சம் உறங்கலாம் வா.

அவன் தெரிசாவைப் பின்னால் இருந்து அணைத்தபடி கேட்டது – மெட்காப் இப்படி உன்னைக் கட்டிக் கொள்வானா?

கையை விடுவித்துப் படுக்கையில் உருண்டபடி தெரிசா அவனையும் இழுக்க, அவள் தோள்களை அவசரமாக வருடியபடி அவன் சொன்னது – தோள்கள், அதுவும் இறுக்கமான மேல்சட்டைக்குக் கீழே திண்ணென்று நிற்கும் தோள்கள் எனக்குக் கிளர்ச்சியூட்டுகிறவை. மெட்காப் உன் தோளை இப்படி வருடுவானா?

சரி மேலே ஆகட்டும் என்று அவள் கண்டிப்பாகச் சொல்ல, உறை தேடி எடுத்தபடி அவன் சொல்ல ஆரம்பித்தது – மெட்காப், உறைகளை.

அவன் முடிக்கும் முன் தெரிசா எழுந்து நின்று, மெட்காப் இருந்தால் இந்த மட்டித்தனத்தை எல்லாம் நான் சகித்துக் கொள்ள வேண்டியிருக்காது என்று சத்தமாகச் சொன்னாள். இரண்டு துண்டு சாக்லெட் கேக் சாப்பிட்டது திருப்தியான ஏப்பமாக வெளியேறி அவள் குரலின் கேலியை நிறையக் குறைத்துப் போட்டது.

தெரிசா காத்திருக்க, முசாபர் அவளுக்குள்ளே வந்தபோது வாசலில் காலிங் பெல் சத்தம்.

நான் போய்ப் பார்த்து விட்டு வரேன், மெட்காபாக இருக்கும் என்றான் அந்தப் பாழாப் போனவன். தெரிசா பலமாக அவனை இழுத்து வைக்க வேண்டி இருந்தது அப்போது.

அந்தரங்கமான நேரத்தில் யாராவது வாசலில் வந்து கூப்பிட்டால், மெட்காப்.

அவனை முடிக்க விடாமல் முகத்தில் ஓங்கி அறைந்தாள் தெரிசா அப்போது. இனிமேல் மெட்காப் பெயரையே சொல்ல மாட்டேன் என்றான் முசாபர். நல்லது என்றாள் அவள். வாசலில் அப்போது திரும்ப எழுந்த மணியோசையை ரெண்டு பேருமே நிராகரித்திருந்தார்கள் மயக்கம் சூழ்ந்த கல்யாண நாள் மாலையில்.

முசாபர் சாயா குடித்துவிட்டுப் படுக்கலாம் என்றான் அப்போது. அதுக்குப் பால் வாங்கவில்லை என்றாள் தெரிசா. சாயா இல்லாவிட்டால் பாதகமில்லை என்று முடிவானது.

கல்யாண தினத்து சாயங்காலம் நீண்டு இருட்டு நுழைந்த அந்தியாக, தெரிசா வாசலுக்குப் போனபோது, முன்வசத்தில் குளிரைச் சட்டை செய்யாமல் வசீகரமான கோட்டும், மஞ்சள் நிற கழுத்துப் பட்டியுமாக நின்றிருந்த உயரமான மனிதரைப் பார்த்தாள்.

அரசாங்க அதிகாரியாக இருக்கலாம், மெட்காப் எப்படி இறந்தான் என்று கேட்க வந்திருக்கலாம் என்று தெரிசாவுக்குத் தோன்றியது. மெட்காப் சாவுக்குக் கட்டியம் கூறிக் கொண்டு வாசலில் வந்து ஆடிய மயில் வேறு நினைவில் எழுந்து வந்தபடி இருந்தது. இந்தப் பிரதேசத்திலேயே, ஐரோப்பாவிலேயே மயில் இல்லை, அதுவும் இந்தக் கடும் குளிர்காலத்தில். ஆடிப் போனது அன்னப் பறவையாக்கும் என்றார் திரும்ப அமேயர் பாதிரியார் மனதில் எழுந்து.

உறவு கொண்டதற்கு அப்புறம் உடம்பு சுத்தப்படுத்திக் கொள்ளாமல் உடனடியாக அந்நிய ஆண்களைச் சந்தித்துப் பேசுகிறதில் கொச்சு தெரிசாவுக்குக் கூச்சமாக இருந்தது. ஆனாலும் என்ன, வந்தவர்களை இனியும் காக்க வைக்க முடியாது.

மெட்காபுக்கான சவப்பெட்டி விலையாக நூற்றிருபது பவுண்ட் வாங்கிப் போக வந்திருந்ததாக சூட்டும் டையும் அணிந்த கனவான் வெகு மரியாதையாகத் தெரிவித்த அந்த அந்தி நேரத்தில் தெரிசாவுக்கு அவளுடைய ரெண்டாம் கல்யாண தினம் சகல மகிழ்ச்சியும் கொண்டதாகத் தட்டுப்பட ஆரம்பித்தது.

கனவான்கள் சங்கடமான கேள்விகள் கேட்க மாட்டார்கள். அவர்கள் சவப்பெட்டி விற்பார்கள். எதிரில் நின்று பேசும் பெண்களின் அசௌகரியம் தெரிந்து, சந்திப்பை மிகச் சுருக்கமாக வைத்துக் கொள்வார்கள். சவப்பெட்டிக்கான பணம் பெற்றுக் கொண்டதற்கான ரசீது உடன் அளித்துவிட்டுத் திரும்புவார்கள்.

அந்த உத்தியோகஸ்தரின் முகத்தை நினைவில் வருவித்துப் பார்த்தபடி இருந்த தெரிசாவின் காதில் நீண்ட சீழ்க்கை சத்தம் படிந்தது. பால் காய்ச்ச எடுத்த அடுக்குப் பாத்திரம் ஒய்யாரமாக விசிலடிக்கும் சத்தம் அது. இமல்டா வந்திருப்பாள். விடிந்து வெகு நேரம் ஆகியிருக்குமோ?

கொச்சு தெரிசா வலுக்கட்டாயமாக முசாபரை உரித்து ஓரமாகப் போட்டு விட்டுக் குசினிக்குப் போனாள்.

இமல்டா பாலைக் காய்ச்சி இறக்கி விட்டுச் சொன்னாள் –

தெரிசா, தெரியுமா, மெட்காபின் கார் தன்னிச்சையாக கால்டர்டெல் கடந்து ஓடுறது. யார் மேலும் மோதாமல், எந்த சேதமும் இல்லாமல்.

வாசலில் அமேயர் பாதிரியார் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தது தெரிசாவுக்குத் தெரிந்தது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன