Monthly Archives: November 27, 2015, 2:04 pm

New Bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 29 இரா.முருகன்


என்னைப் பழி வாங்கும் வேகத்தோடு ராத்திரி வேகமாக நகர்ந்து வந்தது.

ஞாயிற்றுக்கிழமை இரவு இப்படி வராது. அது ரத்னா தியேட்டரில் ஷான் கானரி நடித்த ஜேம்ஸ் பாண்ட் படமாக இருக்கும். கயலோடு ஒற்றை பாக்கெட் பாப்கார்னையும் ஆர்வமான விரல்களையும் பகிர்ந்து கொள்ளும் இனிமையான சினிமா தியேட்டர் அரையிருட்டாக இருக்கும். கபே ஹவுஸில் லெச்சுவோடு ஓயாத அரட்டையாக, கட்டி தட்டிப் போன சர்க்கரையை வலிந்து கலக்கி ரசித்துக் குடிக்கும் ஆறிப் போன காப்பியாக இருக்கும். கடல்புரத்தில் ஜோசபினைப் பக்கத்தில் உட்கார வைத்துப் பார்த்துக் கொண்டு, இரு கை தாழ்த்தி அளைகிற கடற்கரை ஈர மணலாக இருக்கும். எங்கே போனாலும் எவ்வளவு நேரம் ஆனாலும் சகல பாதுகாப்போடும் உறங்க வந்து சேரும் வீடாக இருக்கும். அப்பாவின் திருநீற்று வாசனையாக இருக்கும். அவருடைய அன்பான குரலாக இருக்கும்.

எங்கே போக? யார் என்னை வரவேற்று உபசரித்து ராத்தங்கிப் போகச் சொல்லி உபசரிக்கக் காத்திருக்கிறார்கள்?

நான் கயல் வீட்டை விட்டு கிளம்பும்போது சாயந்திரம் ஐந்து மணியாகி விட்டிருந்தது. என் பிரியமான கயல்விழிக் கண்மணியோடு சேர்ந்து இருக்கக் கிடைத்த ஒரு வினாடியைக் கூட நழுவிப் போக விடாமல், மனப் பாரத்தை எல்லாம் அவளுடைய சிரிப்பிலும், தெறித்து விழும் கண்டிப்பிலும் கரைத்துத் தீர்க்க முனைந்து உட்கார்ந்திருந்தேன். ஜாக்கிரதையான சுயநலத்தோடு, இரண்டு நாளாக நான் சுமந்து திரியும் பாவச் சிலுவையைப் பற்றிச் சொல்லாமல் மறைத்தேன். அதைச் சுமந்து நான் நரகத்தில் பிரவேசிக்கும் போது கயலின் சிரிப்பை மனதில் வழிய வழிய நிறைத்துப் போவேன்.

’இங்கேயே தங்கிட்டு காலையிலே போயேன்’. கயல் சொன்னாள்.

வேண்டாம். என் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. எவ்வளவு பாதுகாப்பாக அவள் இருந்தாலும் என் மனது அவள் உடம்பை விழுங்கச் சொல்லி ராத்திரி எழுந்து சூழ்ந்து கட்டளையிட்டு உறக்கம் கெடுத்து விடும். கிடைக்காத சந்தர்ப்பத்தைக் கற்பனையாக நிகழ்த்திப் பார்த்து மறுபடி மறுபடி உசுப்பி விட்டுச் சுற்றிச் சுற்றி வர வைக்கும். இங்கே இருந்து நினைவு தறிகெட்டு ஓட வழி செய்தபடி ராத்திரியை மன உளைச்சலோடு கழிக்க வேண்டாம்.

என்றால் வேறெங்கே? சித்தாந்த சாமி மடத்து வாசல்? அங்கே தூங்க விடுவார்களா? ராத்திரி பூரா கடற்கரையில் இலக்கின்றி அலைந்து வரலாமா?

எங்கிருந்தோ வல்லூரி சார் மனதுக்குள் தாண்டிக் குதித்து நினைவுகளைத் தாறுமாறாக்கி உடல் முழுக்க பிளாஸ்திரியும் மாவுக் கட்டுமாகக் கடந்து வந்தார். அவருடைய பழைய வீட்டை நினைத்தேன். பிரியமான லதா தீதியோடு வல்லூரி குடித்தனம் வைப்பதற்கு முன்னால் இருந்த அந்தக் கூட்டுக் குடித்தன வீட்டோடு, சக குடித்தனக்காரர்களான டெமான்ஸ்ட்ரேட்டர்களும் கூடவே நினைவுக்கு வந்தார்கள். டெமோக்கள் இன்னும் அங்கே தான் இருக்கிறார்கள். போனால் இன்று ஒரு ராத்திரியோ, தொடர்ந்து தங்கவோ வழி பிறக்கலாம். இந்த யோசனை காலையிலேயே மனதில் வராததற்காக வல்லூரி சாரைக் கோபித்துக் கொண்டபடி பெடலை மிதித்தேன்.

வல்லூரி இருந்த வீட்டை இடித்துக் காரையும் செங்கலுமாகக் குவித்து வைத்து விட்டு, நாமமும், கந்தர்வர்களும் பதித்த பழைய வாசல் கதவைக் கெல்லி எடுத்து டெம்போவில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். ரெட்டைத்தெரு வீடு மரித்த போது எனக்கு அனுபவப்பட்ட, அந்த இடத்தில் நிற்கும் போது கனமாக மனதில் கவிந்து கண்ணீர் விட வைத்த காட்சி இது. என் வயதில் ஒரு ஆணோ, பெண்ணோ ஓரமாக நின்று விசும்புவதை எதிர்பார்த்துத் தேடினேன். இந்த வீட்டிற்கு அப்படி யாரும் சொந்தம் இல்லை போலிருக்கிறது. யார் நினைவிலும் ஏறாமல் ஒரு வீடு இறந்து போய், பௌதிக எச்சங்கள் களையப்பட்டு வெறுமையான வெட்டவெளி எழுகிறது..

தெரு முழுக்க, ஊர் முழுக்க, அதற்கு மேலும் விரிகிறது அன்னியர்கள் சுவாசிக்கிற உலகம். அவர்கள் பேச்சும், பழக்கமும், பழகுவதில் காட்டும் அலட்சியமும், அவர்களோடு பேசவும் ஏற்படும் தயக்கமும், யாசிப்பின் வெட்கமும், நிலை தாழ்ந்து போனது குறித்த துக்கமுமாக எனக்காக விரியும் உலகம் இது. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இங்கே தான் இனி. இன்னும் எத்தனை காலமோ. வெறும் காமம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப் போடும் என்றால் எதைக் கொண்டு அதையும் மாற்ற?

இங்கே சுற்றி அலைந்து கொண்டிருப்பதை விட வல்லூரி வாத்தியாரையே அவருடைய வீட்டில் போய்ச் சந்திக்கலாம் என்று முடிவு செய்து ரங்கப்பிள்ளை தெருவில் அவர் வீட்டுக்குப் போனேன். மேல் மாடியில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருக்க, கீழே அடைத்துப் பூட்டி இருளடைந்து கிடந்த பெரிய வீடு அவருடையது.

கீழே இருந்தபடிக்கு சார், சார் என்று கூப்பிட, இருட்டில் ஆள் அடையாளம் தெரியாமல் பால்கனியில் எட்டிப் பார்த்துத் திரும்பக் குரல் கொடுத்தபடி இருந்தார் வல்லூரி. விழுந்து வைக்கப் போகிறார் என்ற பயத்தில் சைக்கிளை உடனடியாக ஸ்டாண்ட் போட்டு, மேலே படி ஏறினேன். அது ஜோசபினுடைய சைக்கிள். காணாமல் போனால் பின்னும் பெரும் கஷ்டம். கீழே உடனே வந்து பூட்டி சாவியை பாக்கெட்டில் போட்டபடி திரும்பப் படி ஏறினேன். கையில் நேற்றைய காலைத் தினசரியில் சுற்றிச் சடம்பு வைத்துக் கட்டிய துணிகள். கயல் தங்கம் பிரியத்தோடு துவைத்து மடித்து அயர்ன் செய்து கொடுத்து அனுப்பியவை அதெல்லாம். மானசீகமாக அவளுக்கு ஒரு முத்தம் ஈந்தேன்.

கையில் சப்பாத்தி இடும் உருட்டுக் குழவியும் கையில் அப்பிய மாவுமாக மடித்துக் கட்டிய சாயவேட்டியோடு எதிர்ப்பட்டார் வல்லூரி. லதா தீதி தோளில் பேட்டரி விளக்கைத் தலை சாய்த்து இடுக்கிக் கொண்டு சுவிட்ச் போர்டில் டெஸ்டரை வைத்து ஏதோ மின் இணைப்பைச் சோதித்துக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. வைத்தே வீட்டு ரிக்கார்ட் ப்ளேயரில் ஏதோ குளறுபடியாகி, ஹேமந்த் குமாரும், மன்னா டேயும், முகம்மது ரஃபியும், கிஷோர் குமாரும் கூட அந்த்வானாக ஒரே வார்த்தையை நம்பிக்கையோடு திரும்பத் திரும்பச் சொல்லி விட்டு சட்டென்று அடுத்த அடிக்குப் போவது தவறாமல் நடக்க, தீதி காசு வாங்க மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லி அதைச் சரிப்படுத்திக் கொடுத்தாள். ரேடியோ ரிப்பேர் கூட செய்வாளாம். வல்லூரி வாத்தியார் கொடுத்து வைத்தவர்தான். அவருக்கு மச்சினி இருந்தால் அந்த்வானுக்குக் கேட்கலாம் என்று லெச்சு அபிப்ராயம் வைத்திருந்தான். அக்கா டேப் ரிக்கார்டருக்கு செஞ்சதை தங்கச்சி உன் திக்கலுக்குச் செய்ய முடியும் என்று தவறான நம்பிக்கை கிடைத்த அந்த்வான் புறப்பட்டு லதா தீதியை விசாரிக்க அவளுக்கு வேறே அக்கா தங்கை அண்ணன் தம்பி இல்லை என்று தெரிய வந்தது வேறு கதை.

’ஏமி காவாலி’?

மூக்குக் கண்ணாடி அணியாத நிச்சயமின்மையோடு இன்னொரு தடவை நான் யார் என்று விசாரித்தார் வல்லூரி மாஸ்டர். சொன்னேன்.

’அடடே ஏம்பா சொல்லியிருந்தா நானே கபே ஹவுஸுக்கு வந்திருப்பேனே. நாடகம் எழுதறே. கதையை கேட்கணும். அதானே’?

நான் சிரித்தேன். நாடகம் எழுதுகிற வேலையில்லை இப்போது. நடித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த காட்சி என்ன என்று தெரியாது. முடிவும் அறியேன்.

’நடிக்கிறியா? ரொம்ப நல்லது.. என்னிக்கு இனாகுரேஷன்’? குன்றாத ஆர்வத்தோடு கேட்டார் வல்லூரி.

‘விரைவில் எதிர்பாருங்கள். ஆனா நான் அதுக்கு வரல்லே சார்’.

’தெரியும். இங்கிலீஷ் கவிதைத் தொகுப்பு. அதானே? எத்தனை கவிதை எழுதியிருக்கே? கொடு பார்க்கலாம்’.

என் கையில் வைத்திருந்த துணிப் பொதியை வாங்கக் கை நீட்டினார் அந்த அப்பாவி நண்பர்.

’அதெல்லாம் இல்லே சார். வந்து ..’

வந்து?

‘இன்னிக்கு ராத்திரி தங்க இடம் வேணும்’.

நம்ப முடியாமல் தலையைக் குலுக்கிக் கொண்டார். ‘என்ன ஆச்சு, வீட்டுச் சாவியைத் தொலைச்சுட்டியா’?

வல்லூரி கேட்க வேறு வழி இல்லாமல் கதைச் சுருக்கம் சொன்னேன். கண்ணாடியைத் தேடி எடுத்துப் போட்டுக் கொண்டு ஒரு வினாடி என்னையே கூர்ந்து பார்த்தார் அவர்.

’அப்பா கூட சண்டையா? அதுக்காக வீட்டை விட்டு வந்துடுவியா? நாகேஸ்வரராவ் சினிமா மாதிரி இருக்கு. அந்த சீன்லே கண்டசாலா பாட்டு ஒண்ணு தான் பாக்கி’.

சொல்லி விட்டு வல்லூரி சார் பாடினார். நல்ல குரல். தெலுங்கு சோகத்தோடு சிரிப்பும் சேர்ந்து வழிந்தது வல்லூரி முகத்தில். நாலு வரி பாடியதும், நான் மெதுவாகச் சொன்னேன் -

’சார், இப்படிக் கஷ்டப்படுத்தினாலும் பரவாயில்லே. ராத்தங்க இடம்..’.

நிச்சயம் உண்டு என்று என் தோளில் அன்பாகத் தட்டினார் தோழர் வல்லூரி. லெச்சுவிடம் சொன்னால் நாளைக்கு காபி ஹவுஸ் வாசலில் அவரைக் கௌரவிக்க அணிவகுப்பு மரியாதையே நடத்தி விடுவான்.

‘சார் வீட்டை விட்டு கோவிச்சுக்கிட்டு வந்துட்டாராம்’

லதா தீதிக்காக குரலை உயர்த்தி அவர் சேதி சொல்ல, ஹாலில் விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. தீதி ஸ்டூலை விட்டு இறங்கி வா என்று பிரியத்தோடு கூப்பிட்டாள்.

’சாப்பிடறியாப்பா’?

வல்லூரியை விட வேகமாகத் தமிழ் கற்றுக் கொண்டு விட்டாள் தீதி. அவரை விட வேகமாக மனிதர்களைப் புரிந்து கொள்கிறாள். அந்த அன்பான தம்பதிகளைப் பார்க்க மனதுக்கு இதமாக இருந்தது. சூரியன் மேற்கில் ஒருவேளை உதித்து நான் கயலைக் கல்யாணம் செய்து கொண்டால் இப்படித்தான் இருப்போம். நான் கைப்பிடிப்பது ஜோசபினாக இருந்தால்? எப்படி இருப்போமோ அது கயலுக்குக் கட்டாயம் பிடிக்காது.

வீணான கற்பனைகளைத் தள்ளி, சாப்பிடறேன் தீதி என்றேன். தீதி கையில் இருந்து ஸ்க்ரூ ட்ரைவரை வாங்கி உடனே அதைக் கீழே போட்டார் வல்லூரி. நழுவி விழுந்த அது அவர் கால் கட்டை விரலைப் பதம் பார்க்க, வல்லூரி நிமிடங்களாக அடுத்த பத்து நிமிஷம் போனது.

காலில் பிளாஸ்திரி ஏறியதும் அவருக்கே இயல்பான அமைதியை மீட்டெடுத்த வல்லூரி சாரோடு இருந்து ரொட்டியும் தால் சென்னாவும் சாப்பிட்டேன். தீதி நாளைக்கு காலேஜ் திறப்பதை நினைவு படுத்தினாள்.

கயல் சலவை செய்து கொடுத்த உடுப்பும், காலேஜ் காண்டீன் குழாய்த் தண்ணீரும், நண்பர்கள் யாராவது மனம் இரங்கிக் கொடுத்தால் பகலுக்கு ஓசி சோறுமாக நாளை நடந்துவிடும் என்றேன் அவளிடம்.

காலையில் சித்தாந்தசாமி கோவிலில் பிரசாதம் கிடைத்தால் அதைவிட விசேஷம் என்று பட்டது. ஆனால் அதை தீதியிடம் சொல்வதைத் தவிர்த்தேன். ஏற்கனவே நான் கிறுக்கி வரைந்த சொற்சித்திரத்துக்கே அவள் உருகிப் போய் உட்கார்ந்து விட்டாள்.

’சரி மொட்டை மாடியில் ஜிலுஜிலுன்னு காத்து வாங்கிட்டு உறங்கு.. விடிஞ்சதும் யோசிக்கலாம்’.

தீதி பாயும் தலையணையும் கொண்டு வந்து கொடுத்தாள். நான் மெல்ல மாடிப்படி ஏற, வல்லூரி சார் கிசுகிசுப்பாகத் தீதியிடம் முனியோட்டம் பற்றி தெலுங்கில் நினைவு படுத்தியதை கேட்டேன். முனீஸ்வரலு என்றால் முனிதான். தீதி அதற்கெல்லாம் பயப்படுகிறவள் இல்லை என்றாலும் எனக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. சாத்தானே மாரத்தான் ஓடியாகி விட்டது. முனியாவது ஒன்றாவது. விடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம்.

விளக்கை அணைத்துப் படுத்ததும் ராட்சச வெறியாக அமேலி அமேலி என்று தேகம் தகிக்க ஆரம்பித்தது. இரண்டு நாளாக இரை கண்ட உடல் சுகம் எதிர்பார்த்தது. இன்று நான் உன் பேச்சைக் கேட்கப் போவதில்லை. நிம்மதியாக உறங்குவேன்.

பத்து நிமிடம் தூங்கி இருப்பேன். அல்லது அரை மணி நேரம். குழப்பமான கனவில் கடல் புரத்தில் சுங்கச் சாவடிக் கதவுகள் அதிசயமாகத் திறந்திருக்க, கடல் பாலத்தை ஒட்டிக் கப்பல் ஒன்று நங்கூரமிட்டு நிற்கிறது. நான் சுங்கச் சாவடிப் பக்கம் ஒரு நிமிடம் ஓடி நின்று பின்னால் பார்க்க, கப்பல் சங்கொலி எழுப்பி இரைகிறது. தியூப்ளே போல உடுப்பணிந்த யாரோ அல்லது அவர் தானோ கடலுக்குள் இறங்கி நடந்து வந்தபடி என்னிடம் பிரஞ்சில் சத்தம் போடுகிறார். கப்பலில் ஏறச் சொல்கிறார் என்று நினைத்து முன்னால் பாயப் பார்த்தால், சுங்கச் சாவடியில் யாரோ மணல் மூட்டைகளைச் சுமந்து போய்க் கப்பலில் ஏற்றச் சொல்லி இரைகிறார்கள். ஒவ்வொரு மூட்டையாகத் தூக்கிப் போய்க் கடல் பாலத்தின் முனையில் வைக்க, தலை கனத்து வலிக்கிறது. உடல் தளர்ந்து வியர்வையில் குளிக்கிறது. ஒரு மணல் மூட்டையை எடுத்துத் தலையில் சுமந்து கொண்டு கப்பலில் பிரவேசிக்க அடி எடுத்து வைப்பதற்குள் கப்பல் புறப்படுகிறது. என் ஒரு கால் கப்பலிலும் மற்றது கடல் பாலத்திலுமாக இருக்க, நடுங்கி விழித்துக் கொண்டேன். கண் எரிந்து, ஒற்றைத் தலைவலி உச்சத்தில் வலிக்கத் துடித்து, உடல் வெப்பம் ஆகக் கூட, ஜன்னி வந்த நிலை. பிதற்றுகிறேன் என்று தெரிந்தே பிதற்றுகிறேன்.

எழுந்து உட்கார நினைக்கும்போது கை கால்கள் வேலை செய்யாமல் மனது அமேலி கொடுத்த மாத்திரை விழுங்கினால் எல்லா ரோகமும் சரியாகப் போகும் என்கிறது. சுவர் ஏறிக் குதித்து அமேலி கொடுத்த குளிகையோடு அவளையும் இன்னொரு முறை அனுபவித்து வரலாம் என்று ஆசை காட்டுகிறது மனதில் ஒரு ஓரத்தில் பதுங்கிய மிருகம்.

தலைவலி தாங்கமுடியாமல், கண் விழிக்க இயலாமல் இருட்டில் உட்கார்ந்து அமேலி டேப்ளெட் அமேலி நீ வேணும் என்று கதற விளக்கு எரிகிறது.

பக்கத்தில் வந்து உட்கார்ந்து ஆதரவாக என் தோளைத் தொட்டவர் வல்லூரி சார். சின்ன டம்ளரில் வென்னீரும், ஏதோ ஒரு மாத்திரையுமாக லதா தீதி எனக்கு வலுக்கட்டாயமாகப் புகட்டுகிறாள். நான் பாதிக் கண் திறந்து கஷ்டப்பட்டு பார்க்க அவள் என் அம்மாவாக மாறி இருக்கிறாள். அம்மா அம்மா அம்மா என்று அரற்றி அவள் காலைப் பிடித்துக் குமுறிக் குமுறி அழுதபடி கண் மூடி உறங்க நினைத்தேன். உறங்கினேன்.

எழுந்ததும் தீதி முகத்தில் தான் முதலில் விழித்தேன்.

’என்னப்பா ஏதோ பொண்ணு பேரை ராத்திரி முழுக்கச் சொல்லிப் புலம்பினியே. கீழே வரைக்கும் கேட்டுது உன் சத்தம். ஜூரம் அதிகமாகி ஜன்னி கண்டுதோன்னு பயந்துட்டோம். சார் உன்னை ஆஸ்பத்திரியிலே சேர்த்துடலாம்னாரு’ என்றாள் லதா தீதி.

நான் கையெடுத்து அவளைக் கும்பிட்டேன். இரவு இரண்டு தடவை எனக்காக மாத்திரையும் வென்னீரும் கொடுத்து காய்ச்சலை அவள் கட்டுக்குள் வைக்காவிட்டால் நான் பிழைத்திருப்பேனோ என்னவோ.

’சிநேகம் எல்லாம் நல்லது தான். ஆனா நாம் படிக்க வந்திருக்கோம். அது தானே முதல் வேலை. நான் செம்படவ இனம். வல்லூரி சார் பிராமணர். ரெண்டு பேருமே ரொம்ப ஏழைக் குடும்பம். கடல்லே போய் வரவங்களைக் கெஞ்சி எங்க நயினா வாங்கிட்டு வர்ற மீனை தெருத் தெருவா வித்து காசு சேர்த்து படிச்சேன். வல்லூரி, புரோகிதருக்கு அசிஸ்டண்டா, பொணம் தூக்கற பிராமணனா போய் காலேஜ் பீஸுக்கு பணம் சேர்த்தார். காலேஜ்லே தான் எங்க காதலும் வந்துச்சு. ஆனா அது படிப்புக்கு நடுவே வரலே. ரெண்டு பக்கமும் எதிர்ப்பு. அவருக்கு வேலை கிடைச்சு தான் கல்யாணம். ஒண்ணும் கொறஞ்சு போயிடலே. காதலும் இருந்தது. கல்யாணமும் நடந்தது. இன்னிக்கு யாரையும் எதிர்பார்க்கலே நாங்க. இன்னிக்கும் எதிர்ப்பு இருக்கு. ஆனா மத்தவங்களுக்கு எங்களால முடிஞ்ச உதவி செய்யற நிறைவும் உண்டு’.

நான் அவர்களைப் புது மரியாதையோடு பார்த்தேன். எவ்வளவோ சாதித்து விட்டு இவர்கள் எதுவுமே நடக்காத மாதிரி சகஜமாக இருக்க, ஒன்றுமே சாதித்து முடிக்காத நான் ரகளை செய்து ஊரைக் கூட்டிக் கொண்டிருக்கிறேன்.

’நீ செய்த தவறும் இனி செய்ய நினைத்து செய்யாமல் போனதும் எல்லாம் நேத்திக்கு உன் அழுகையிலே கரைச்சுட்டே. உன் கண்ணிலே என் மகனைப் பார்த்தேன். இனி எந்தத் தப்பும் செய்யாதே. படிச்சு நல்லா வா’.

என் அம்மா காப்பியோடு சொன்னாள். லதா தீதியாக அவள் வீடு நிறைய மங்கலமாக நிறைந்து நின்றாள்.

காலேஜ் கிளம்பும் போது தீதி கொடுத்த சாயாவும், முந்திய ராத்திரி இட்ட ரொட்டியை உதிர்த்துச் செய்த உப்புமாவும் சித்தாந்தசாமி கோவில் வரிசையில் ஆண்டி பரதேசிகளோடு நிற்காமல் தெம்பாக காலேஜுக்கு வண்டி மிதித்துப் போக வழி செய்தது. தீதி, மெர்சி பெகூ..

’என்னடா லேடீஸ் சைக்கிள்லே வர்றே’?

காலேஜ் உள்ளே நுழையும்போது லெச்சு குரல் கேட்டது.

சட்டென்று நின்று குருவே என்று இரண்டு கையும் எடுத்து பெரிசாகச் சுழற்றி சைக்கிளில் இருந்தபடிக்கே வணக்கம் சொன்னேன். எதிர்பார்க்காத மகிழ்ச்சி இது.

’நீ எப்படி இங்கே லெச்சு? டிகிரி முடிச்சாச்சே’?

கேட்க ஆரம்பித்தபோதே பட்ட மேல்படிப்பு ஆரம்பிக்கப் பட்டது நினைவு வந்தது.

‘இங்கிலீஷ் இலக்கியத்திலே எம் ஏ பண்றேண்டா’ என்றான் லெச்சு. ஓரமாக ஷேக்ஸ்பியரும் கீட்ஸும் ஷெல்லியும் நடுநடுங்கி குழையை இடுப்பில் சொருகிக் கொண்டு லெச்சு கட்டளைப்படி ராகிங் நடனம் ஆட இருப்பதாகக் கற்பனை செய்யச் சிரிப்பு வந்து விட்டது.

சன்னமான சலங்கை சத்தம். நான் லெச்சுவோடு பேசுவதில் மும்முரமாக இருக்க, அவன் தான் முதலில் திரும்பிப் பார்த்தான்.

’கயல் நிக்குதுடா. உன்னைத்தான் தேடி வந்திருக்கு போல’.

காலை வெளிச்சமும் தலை குளித்த அழகும் வெள்ளைச் சூடிதாருமாக அம்சமாக இருந்தாள் கயல். முதல் நாள் வகுப்புக்குப் போகாமல் அவளைப் பக்கத்தில் நின்று நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. காலப் புத்தகத்தில் இரண்டு தாள்களை மட்டும் கிழித்துப் போட்டு விட்டு கயல் துணையிருக்க மேலே போக வேண்டியதுதான்.

லெச்சு ஒதுங்கக் கயலும் நானும் என் சி சி கட்டடம் பக்கமாக இதமாகச் சக்கரங்கள் சேர்ந்து உருள நகர்ந்து போனோம். அந்தச் சில வினாடிகள் மறுபடி வாழ்ந்த புத்துணர்ச்சி. இன்று இது மட்டும் கூட வரட்டும்.

சைக்கிள் கூடையிலிருந்து சின்ன ஸ்டெயின்லெஸ் டப்பாவைக் கஷடப்பட்டு திறந்தாள் கயல்.

’என்ன, தேங்காப் பத்தையும் பச்சை மிளகாயுமா’?

’இந்த இளக்காரத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே. நாலு தோசை சுட்டு எடுத்தாந்திருக்கேன். முன்னாலேயும் பின்னாலேயும் பொத்திட்டு தின்னுட்டு கம்முனு கிளாசுக்குப் போ’ என்று கண்டிப்பு காட்டினாள் கயல்.

’அய்யே பொத்திகினு என்னத்த துண்றதாம்’?

’நீ துண்ணு நான் பொ..’

கயல் அட்டகாசமாக ஆரம்பித்து சட்டென்று ப்ரேக் பிடித்து நிறுத்தினாள்.

நான்? நான் ரெண்டு தடவை நானை அழுத்தமாக்ச் சொல்ல அவள் முகத்தில் படர்ந்த வெட்கத்துக்கு அது கல்லூரியாக இல்லாமல் இருந்தால் அவளை இறுக அணைத்து, ஆமா அதே தான். முத்தத்துக்கு ஏது நேரம் காலம்?

’பகலுக்கு வைச்சுக்கறேன் கயல்’ என்று கிளம்பினேன்

’எதை’? கயல் விசாரித்தாள்.

’உன்னைத்தான்’.

’ஏன் ராத்திரிக்கு அமேலியா’?

கண்ணை விரித்துப் பார்த்தபடி இன்னொரு தடவை இப்படிக் கேட்டால் எல்லா உண்மையையும் கக்கி விடுவேன்.

அவள் நகர்ந்து போக, வகுப்புக்குப் புறப்பட்டேன்.

’போன்ஜூர்’.

அமேலி குரல் இது. கண்களில் கருவளையமும் களைப்புமாக அந்த அழகு ஓவியம் நிலைகுலைந்து நிற்க நான், நான் மட்டும் தான் காரணம் என்ற மனக் குமைச்சல் கூடிக் கொண்டிருந்தது.

சாப்பிட்டியா என்று கேட்டாள் அமேலி தாழ்ந்த சத்தத்தில். கயல் இவளை உலக அழகி என்றது நினைவு வந்தது. நிச்சயம் உலக அழகிதான்.

தலையாட்டினேன்.

‘பசிக்குது. கேண்டீன் போகலாம் வா’ என்றாள் அமேலி.

முதல் வகுப்பில் ஆப்டிக்ஸோ எலக்ட்ரானிக்ஸோ இருந்தால் புரபசர்கள் கோபமாகப் பார்க்க வாய்ப்பு உண்டு. இனிமேலாவது படிக்கணும் என்று அமேலி தான் மோகம் வடிந்ததும் சொன்னாள்.

’அமேலி சைக்கிள் மேலே உட்காரு’ என்றேன். கயல் கொண்டு வந்த பாத்திரத்தைக் கையில் ஏந்திப் பிடித்தேன்.

‘ஐயோ உனக்கு யாரோ, யாரோ என்ன, கயல் தானே எடுத்து வந்தது? beauté noire பொத்தி நுவா .. beaux yeux போ ஸ்யூ .. கருப்பழகி கண்ணழகி’. அமேலி சின்னச் சிரிப்போடு கேட்டாள்.

ரெண்டு பேரும் ஒருத்தரைப் பற்றி மற்றவர் கிண்டலாகச் சொன்னாலும் அதில் உண்மை உண்டென்று இருவருமே உணர்ந்துதான் இருக்கிறார்கள்.

அமேலி துண்டு துணுக்காக மெல்லச் சாப்பிட்டு முரண்டு பண்ண, நாலு பக்கமும் பார்த்து யாரும் பக்கத்தில் இல்லை என்று, முக்கியமாகக் கயல் இல்லை என்று உறுதி செய்து கொண்டு அமேலிக்கு ஊட்டி விட்டு ஐந்தே நிமிடத்தில் காலிப் பாத்திரத்தோடு வகுப்புக்குப் போனேன்.

அட்டாமிக் பிசிக்ஸ் பற்றி சளைக்காமல் ரெண்டு மணி நேரம் வகுப்பெடுத்தார் பிரின்சிபால். சப் அடாமிக் துகள்கள் பற்றிச் சொல்லும்போது நல்ல சப்ஜெக்ட் என்றாலும் உறக்கம் எங்கே எங்கே என்று ஓடி வந்தது. வெளியே புதியதாக சேர்ந்த பெண்கள் படை ஒன்று மெல்ல நடந்து போக கயல் போல, ஜோசபின் போல, அமேலி போல ஜாடையுள்ள பெண் உண்டா என்று கவனிக்க ஆரம்பித்தேன்.

வகுப்பு முடிந்தபோது பாதிநாள் மட்டும் கல்லூரி இன்று இயங்கும் என்று தெரிய வந்தது. எதிர்பார்த்ததுதான். மற்ற நாள் என்றால் மகிழ்ச்சியான எதிர்பார்ப்பாக அது இருக்கும். இப்போது, எல்லோரும் போய்விட, தனித்து நிற்க நீண்ட பொழுதாகத்தான் இந்தப் பொழுது கணக்காக்கப் படும். நட்பும் அறிமுகமானவர்களும் இருக்குமிடம் என்று காபி ஹவுஸ் போகக்கூடத் தயக்கம். காசு இல்லாமல், எனக்கு யாராவது காப்பி வாங்கிக் கொடுக்கக் காத்திருந்து நான் கதையளந்து கொண்டிருப்பதாக யாரும் நினைக்கக் கூடும்.

எல்லா காலேஜ் பஸ்களும் புறப்பட்டுப் போனபின்., சைக்கிள்கள் கூட்டமாகவும் தனியாகவும் பறந்தபின், ஹாஸ்டல் மாணவர்கள் புது ஹாஸ்டல் மெஸ் சாப்பாட்டுக்கு எதிர்பார்ப்போடு கூட்டமாக நகர்ந்து போனபின், பிரின்சிபாலின் கார் வழக்கம் போல் ரெண்டு அடி எடுத்து நின்று ரேடியேட்டரில் காலேஜ் ப்யூன் காயாம்பு தண்ணீர் ஊற்ற மேற்கொண்டு ஊர்ந்தபின், கல்லூரி வளாகத்தில் நானும், கயலும், அமேலியும் மட்டும்.

திருட்டுத்தனம் எவ்வளவு வெளிப்படும், எப்படி வெளிப்படும் என்ற படபடப்போடு நான் ரெண்டு பேரோடும் புல்தரையில் அமர்ந்தேன்.

அமேலி மதிய உணவுக்கு எதுவும் கொண்டு வரவில்லை என்று வகுப்பிலேயே தெரிந்து கொண்டதால் அவளையும் என்னோடு சேர்ந்து சாப்பிட அழைத்திருக்கிறதாகச் சொல்லிக் கையோடு கூட்டி வந்து விட்டாள் கயல். மூன்று பேரும் இரண்டு லஞ்ச் பாக்ஸ்களில் இருந்து சாப்பிட, கயல் தான் ஆரம்பித்தாள்.

’அமீ, இவன் வீட்டை விட்டு வந்துட்டான் தெரியுமா’?

அமேலி மௌனமாக இருந்தாள். ஒரு வினாடி என்னைப் பார்த்து விட்டுத் தலையைக் கவிழ்ந்து கொண்டாள். கயல் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரியும். அவள் பார்வையைத் தவிர்த்தேன். வாழ்க்கை பூரா இப்படிக் குமைந்து குமைந்து அவள் கண்ணைச் சந்திக்காமல் வாழ வேண்டி இருக்குமா என்ன?

பார்க்காவிட்டால் பரவாயில்லை. கயல் பக்கத்தில் இருக்கக் கொடுத்து வைத்தாலே போதும்.

’தப்பு செஞ்சா ஏத்துக்கிட்டு மன்னிப்பு கேட்கறது எந்த விதத்திலும் வெட்கப் படவைக்கிற விஷயம் இல்லே. ஃபிரண்ட்ஸ் கிட்டே ஈகோ இல்லாம பழகறபோது பெற்ற தகப்பன் கிட்டே சரிக்கு சரியா சண்டை போட்டு கட்சி கட்டி நிக்கறது நல்லா இல்லே. உன் ப்ரண்ட்ஸ் உனக்கு முக்கியம்னா நான் சொல்றதைக் கேளு… இன்னொரு சப்பாத்தி போடட்டா..கடைசியா ஒண்ணு’

’முழு சப்பாத்தி சாப்பிட வயத்திலே இடம் இல்லே கயல்’ என்றேன். அவள் கேட்டதில் இதற்கு மட்டும்தான் பதில் சொல்ல முடிந்தது.

’அப்போ நீயும் அமேலியும் ஷேர் பண்ணிக்குங்க’. கயல் சாதாரணமாகச் சொன்னாள்.

அமேலி என்னையும் நான் அவளையும் ஒரே மாதிரி உரிமையும் குற்ற உணர்வுமாகப் பார்த்தது ஒரு வினாடி நிகழ்ந்து கடந்தது. நல்ல வேளை, கயல் ரெண்டு பேரையுமே பார்க்கவில்லை.

’நான் உங்கப்பாவை நாளைக்கு பார்த்துப் பேசப் போறேன்.. நீ தான் லூஸுன்னா அவர் பெருந்தன்மையா உன்னை மன்னிக்கலாம் இல்லே. என்ன தப்பு நீ செஞ்சேன்னு அவரும் சொல்ல மாட்டேங்கறார். நீயும் சொல்லலே’. கயல் ஒரு துண்டு சப்பாத்தியைக் கிள்ளி எடுத்துத் தின்றபடி சொன்னாள்.

அமேலி மறுபடியும் என்னைப் பார்க்க, நான் எழுந்தேன்.

’அமேலி, நீயும் நாளைக்கு என்னோடு வா. இவங்க அப்பாவை சந்திக்கலாம்’.

என் முதுகில் நிலைத்த நாலு விழிகளை சூடாக உணர்ந்தேன்.

‘யாரும் யாரையும் பார்க்க வேணாம். இது என் சிலுவை. நான் தான் சுமக்கணும்’. விட்டேத்தியாகப் பதில் சொல்லி விட்டு சைக்கிள் பக்கம் போனேன்.

’ஜோசபினையும் கூட்டிப் போகறேன்’.

ஏதோ துப்பு கிடைத்த துடிப்பில் கயல் சொல்ல நான் பெடலை மிதித்து நகர்ந்தேன்.

பிற்பகல் நாலு மணி வெய்யில் வீதிக்கும் காபி ஹவுசுக்கும் தீர்க்கமான மஞ்சள் பூசிச் சிறப்பித்திருந்தது. கல்யாணப் பத்திரிகைத் தலைப்பில் சாய்த்துப் பிடித்த தம்புராக்களோடு றெக்கை முளைத்துப் பறக்கும் கந்தர்வர்களின் சாயலில் வெயிட்டர்கள் கப்புக் கப்பாக காபி எடுத்துப் போய்க் கொண்டிருந்தார்கள். காபி ஹவுசுக்குள் ஓரமாக சுவரை ஒட்டித் தென்றல் வீசிக் கொண்டிருந்தது. ஜோசபின்.

’என் பட்டுத் தங்கம், எப்படிடா இருக்கே? பகலுக்குப் பசியாறினியா?’

வாஞ்சையோடு ஜோசபின் என் தலையை வருடிக் கேட்க மென்மையாக அவள் உச்சந்தலையில் முத்தமிட்டேன். மனசாலும், நினைவாலும் செயலாலும் எந்தத் தவறையும் என் ஜோசபின் கூட இருக்கும் போது என்னைப் பற்றிப் பிடித்துப் பித்தாகப் படர விடமாட்டேன். ஜோசபின் என்னை இனியும் மன்னிப்பாள். விழுந்து நசித்துப் போகாமல் தடுத்தாட்கொள்வாள்.

கயலும் நானும் சேர்ந்து அவள் கொண்டு வந்ததைச் சாப்பிட்டதைச் சொன்னேன். ஏனோ அமேலியும் எங்களோடு இருந்தாள் என்று சொல்லத் தோன்றவில்லை.

’ரொம்ப நாழியா வெயிட் பண்றியா’ என்று ஜோசபினைக் கேட்டேன்.

’இல்லே. இப்போ தான் வந்தேன். ஒரு ஹெல்ப் பண்றியா’?

எல்லா விதத்திலும் அடிபட்டு விழுந்தாகி விட்டது. இந்தப் பலகீனமான தருணத்தில் நானே எல்லோருடைய உதவியையும் யாசித்து நிற்கிறேன். நான் என்ன உதவி செய்ய? அதுவும் என்னில் அவள் பகுதியாகி, அவளில் நான் இருப்பதாக உணர வைக்கும் ஜோசபினுக்கு?

’என்னாலே முடியுமான்னு தெரியலே ஜோசபின். முடிஞ்சா கட்டாயம்…’

’வீடு மாத்தறதுக்கு ஹெல்ப் பண்றது உன் டிபார்ட்மெண்ட் இல்லியா’?

சிரிக்காமல் கேட்டாள் ஜோசபின். வெயிட்டர் கனகராயன் நாலு கேக்குகளும் கோப்பை நிறைத்த காப்பியுமாக என் முன் வைத்தார். நான் உள்ளே வரும்போதே பார்த்து ஜோசபின் ஆர்டர் செய்திருக்கிறாள்.

அதென்ன நாலு கேக்? பசியோடு திரிகிறவன் என்று அனுசரணையா? ஜோசபினே அனுதாபப் பட்டாலும் எனக்கு இரக்கத்தோடு இரை தருவது வேண்டாம். அது என்னை இன்னமும் பலகீனமானவன் ஆக்குகிறது.

வேண்டாம் என்று டிரேயைத் தள்ள, என் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவளாக ஜோசபின் டிரே விழுந்து விடாமல் தாங்கி, ஓரமாக நகர்த்தினாள்.

’இதெல்லாம் உனக்கில்லே. இத்தனையும் தின்னா என்னோட ஃப்ரண்ட்லி பேஷண்டா ஒபிதால்லே வந்து படுத்துப்பே’. அவள் சிரித்தபடி சொன்னாள்.

’அப்போ தம் கட்டித் தின்னுடறேன்’ என்றேன்.

‘வேணாம்டா.. ஒபிதாலே உனக்கு வேணாம்.. கிழங்கு மாதிரி நல்ல ஆரோக்கியமாத் திரி ஆயுசுக்கும்’. ஜோசபின் வாழ்த்தினாள்.

நாலு கேக் எதுக்கு ஜோஸ்ஸி?

’ஏய், எனக்கு ஒண்ணு, அப்புறம் இன்னொரு விசிட்டர் இருக்காங்க. உன்னைப் பார்க்கத்தான் வந்துட்டிருக்காங்க.. அவங்களுக்கு ஒண்ணு’.

யாரென்று கேட்டேன். அதான் நீயே பார்க்கப் போறியே ஏன் அவசரம்? ஜோசபின் குறும்பாகச் சிரித்தபடி என் சட்டையை முகர்ந்தாள்.

’இன்னிக்கு சுத்தமா இருக்கு எங்கே துவைச்சே’?

கயல் என்றேன். அந்தச் சந்தோஷத்தை இவளிடம் இல்லாமல் வேறு யாரோடு பகிரப் போகிறேன். அறுத்து விடுவதாக அவள் மிரட்டியதையும் சொல்லலாமா?

சொன்னேன்.

சீய்ய் என்றபடி காதைப் பொத்திக் கொள்வதாகச் சைகை எல்லாம் செய்தாலும், ஜோசபின் சிரிப்பை அடக்க முடியாமல் நெளிந்தாள்.

’உனக்கு அந்தக் கோலம் வராது. அமேலி வீடு மாறப் போறாளே’. ஜோசபின் சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள்.

’என்ன ஆச்சு? உனக்கு எப்படி தெரியும்?’ என்றபடி அவள் பாதி கடித்து தட்டில் வைத்திருந்த சாக்லெட் கேக்கை எடுத்துக் கொண்டேன்.

’அமேலி கர்னல் வீட்டை காலி பண்ணிட்டு இனி என்னோடு தான், நானும் எமிலியும் தங்கியிருக்கிற எல்லையம்மன் தெரு வீட்டுக்கு வந்துடப் போறா’.

’அப்போ விசாலி’?

அவசரமாகக் கேட்டேன். நாலு பேர் தங்க அந்த இடம் கீகடமாக இருக்கும் என தோன்றியது. ஜோசபின், விசாலி, ரோசாலி, அமேலி.

’விசாலிக்கு என்ன இப்போ’?

பின்னால் சத்தம் கேட்டது. தோளில் தபால்காரர் மாதிரி ஒரு டிசைனர் கைத்தறிப் பையை மாட்டியபடி நீல ஜீன்ஸும் சந்தனக் கலர் அழுத்தமான ஜிப்பாவுமாக விசாலி புன்னகையே வடிவெடுத்த மாதிரி நின்றாள்.

’நான் போறேன் ஜோசபின். நீங்க…’

வாக்கியத்தை முடிக்காமலேயே வாயில் போட்ட கேக் முழுக்கத் தின்று தீர்க்காமல் அவசரமாக எழுந்தேன். விசாலியை நான் எதிர்கொள்ள முடியாது. இனி என்றென்றைக்கும்.

’ஹலோ உன்னைத்தான் பார்க்க வந்திருக்கேன். கோவிச்சுக்கிட்டு கிளம்பினா எப்படி’பா’?

விசாலி என்னைத் தான் கேட்டாள்.

’நான் நான் ..’

குரல் உடைகிறது. உதவி கேட்டு ஜோசபினைக் கெஞ்சுகிற பார்வையோடு எந்தப் பக்கம் போவது என்ற நிச்சயமின்றி நின்றேன். நான் செய்த பாவம், தவறு எல்லாவற்றுக்கும் தண்டனை தர அனுப்பப்பட்ட ஜீன்ஸ் அணிந்த, கைத்தறிப் பை தோளில் ஆட வரும் தேவதையாக விசாலி நிற்கிறாள்.

தேவதூதர்கள் கருணை பொழியவும், மன்னிக்கவும் அனுப்பப் பட்டவர்கள். ஜோசபின் போல.

நானும் தான் என்பது போல் விசாலி நட்புக் கரம் நீட்டினாள். ஒரே ஒரு தங்க வளையல் அழகு செய்த அந்தச் சிவந்த கரத்தையே பார்த்தபடி நான் நிற்க அவள் முன்னால் வந்து என் கையைப் பற்றிக் குலுக்கினாள்.

’நாம எப்பவும் பிரண்ட்ஸ், ஓகே’? விசாலி என் கையை விடாமல் சொன்னாள்.

சரி.

’எப்பவும் ப்ரண்ட்ஸ்தான்..’

ஊம் என்று சும்மா சொன்னேன்.

.ப்ரண்ட்ஸ் அப்படீன்னா கோபதாபம் இருக்கும்…’.

‘தப்பு பண்றது’? நான் கேட்டேன்.

‘தப்பா எடுத்துக்கலே.. ஒரு செகண்ட்லே வந்த தடுமாற்றம்னு எடுத்துக்கிட்டா’?

‘அப்பவும் தப்பு தப்புதான்..’ என்றேன்.

‘இதையே திரும்பத் திரும்பச் சொல்லிட்டு இருந்தா காலம் நகராம நின்னுடுமா’?

அவள் தன் கைப்பையில் இருந்து ஒரு வெள்ளைக் கடித உறையை எடுத்தாள். உள்ளே மஞ்சள் நிறத்தில் வழுவழுப்பான காகிதம் எட்டிப் பார்த்தது. நான் இதை விசாலி வீட்டில் பார்த்திருக்கிறேன். பார்த்த அடுத்த வினாடி தான் அவள் மேல் ஆக்கிரமித்தது. அவளிடம் அடி வாங்கியது.

’என் கல்யாணக் கடுதாசு. அடுத்த மாதம் ரெண்டாம் தேதி பள்ளத்தூர்லே கல்யாணம். உங்க ஊர்லே இருந்து பக்கம் தான்..’

கல்யாணம் முடித்து ஊருக்கும் போகலாம் என்று அவள் ஆசை காட்டிய மாதிரி தெரிந்தது.

பிரியத்தோடு அவள் கையைக் குலுக்கி வாழ்த்து சொன்னேன். என்றென்றும் அவளை அந்த வாழ்த்துகள் சூழட்டும். என் மனம் எங்கே அழகைப் பார்த்தாலும் அலையடிக்காமல் இருக்காது. அது சூறாவளியாகி என்னையும் அடுத்தவர்களையும் அழிக்காமல் இருக்கக் கட்டுப்பாடுகள் வளரட்டும் எனக்குள்ளும்.

கல்யாணப் பத்திரிகையை வாங்கிக் கொண்டேன். ஜோசபின் எழுந்தாள்.

’சரி, சைக்கிளை எடுத்துப் போறேன்.. நீ வர வேணாம்.. விசாலி ஹெல்ப் போதும்னு நினைக்கறேன்.. தேவைன்னா கூப்பிடறேன்’.

’எனக்கு சைக்கிள் கிடையாதா?’ நிராசையோடு கேட்டேன்.

’உனக்கு வேறே வரும்’. நமட்டுச் சிரிப்போடு அவள் கிளம்ப, நிறுத்தினேன். குரலைத் தாழ்த்திக் கேட்டேன்

’‘ஏன் திடீர்னு அமேலியை உங்க வீட்டுக்குக் கூட்டிப் போறே? இங்கே இருந்தா நான் சுவர் ஏறிக் குதிச்சு அவளை .. அவளை அசிங்கப் படுத்திடுவேன்னு பயமா’?

’அரண்டவன்’டா நீ பையா.. வழியை விடு.. போகணும்..’ என்றாள் ஜோசபின்.

‘எனக்கு அப்படித் தோணலே..’ என்றேன்.

‘உன் மேலே உனக்கு இன்னும் முழு நம்பிக்கை இல்லேன்னு அர்த்தம்..’.

’பின்னே எதுக்கு அமேலி லலி தொலாந்தர் தெருவிலே வேணாம்கிறே?’

’அந்த மாத்திரை சனியனை விட்டு விலகி வரத்தான்.. இருபத்துநாலு மணி நேரமும் நானோ, ரோசாலியோ பக்கத்துலே இருப்போமே.. மாத்திரை சாப்பிடணும்னு ஆசை வந்தா, அது வெறியாகாம நாங்க பார்த்துப்போம்.. அவ படிப்புலே கவனம் செலுத்துவா.. வெட்டி வம்பு வளர்க்க பசங்க … உன்னை மாதிரி வக்கணையா பேசற பிள்ளைங்க வர மாட்டாங்க… கண்ணைப் பாரு.. முட்டைக் கண்ணா..இவ்வளவு அழகான கண்ணை வச்சுக்கிட்டு ஏண்டா சுவர் ஏறிக் குதிக்கறதை எல்லாம் நினைக்கறே’?

நான் கண்ணை மூடிக் கொண்டேன். அவள் கையை விட மனசே இல்லை.

’சரி நான் போறேன் .. சைக்கிள் சாவியைக் கொடு’. கொடுத்தேன்.

’ஆமா அமேலிக்கு மாத்திரை சாப்பிடணும்னு தோணினா அதை இல்லாம ஆக்க நீ ஹெல்ப் செய்வே. எனக்கு ஆசை வந்தா’?

’நரகத்துக்குப் போ’

அவள் கோபம் நடித்து நகர்ந்து பின் நின்றாள்.

’அப்படி ஆசை வந்தா, கஸ்டம்ஸ் ஹவுஸ் அடைச்ச கதவுப் பக்கம் வா’.

விசாலி சொல்ல, அவள் முதுகில் ஓங்கி அடித்தாள் ஜோசபின். சிரித்தபடி போகிற ரெண்டு பேரையும் பார்த்தபடியே நின்றேன்.

’சார், நர்சம்மா உங்க கேக், காபிக்கு பணம் கொடுத்துட்டாங்க.. நீங்க சாப்பிடாம மிச்சம் வச்ச கேக்கை உங்ககிட்டேயே கட்டித் தரச் சொன்னாங்க.. வெளியிலே ப்ளாட்பாரத்துலே பாக்கற முதல் சின்னக் குழந்தைக்கு நீங்க கொடுக்கணுமாம்’.

வெயிட்டர் கனகராயன் தட்டை எடுத்தபடி சொன்னார்.

’வீவ் லமிடீ .. நட்பு வாழ்க’.

பின்னால் இருந்து யாரோ தோளைத் தொட்டு கீச்சென்று சொன்னார்கள்.

சந்தோஷமாக இருந்தது. என் மனதுக்குப் பிடித்தவர்கள் எல்லாம் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து என்னைச் சந்திக்கிற மாலை நேரம் இது.

’போன் ஸ்வாஹி மிஸ்யூ விக்தொ’. குரலெடுத்துக் கூவியபடி திரும்பினேன்.

விக்தொ அங்கிள் என் கையைப் பற்றி வெளியே போகலாம் என்று இழுத்தார்.

’நானே வந்துட்டுத்தான் இருக்கேன் அங்கிள்’.

அவருடைய வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓடி முன்னால் நின்ற யார் மேலோ மோதிக் கொண்டு நின்றேன்.

நிமிந்து பார்த்தேன். அப்பா.

’படவா, அப்படி என்னடா கோபம் என் மேலே உனக்கு’?

அப்பா முகம் முழுக்க சிரிப்பு அப்பியிருக்கக் கேட்டார்.

ஓடிப் போய்க் கட்டிக் கொண்டேன் அவரை. ரொம்ப சில்லியாக இருந்திருக்கும். ஒரு இருபது வயது இளைஞன் செய்கிறதில்லை இது. அதை விட சில்லியானது என்றால் அப்பா தோளில் சாய்ந்து அப்புறம் ஐந்து நிமிடம் குழந்தை போல அழுதேன்.

என்ன செய்ய? வாழ்க்கையில் சில நிமிடங்களில் காலம் பின் நோக்கிப் போகவும் செய்கிறது. அந்த வயதில் நிறுத்தி அழ வைத்து, சிரிக்க வைத்து உடனே நினைவுகள் மட்டும் கூட வர முன்னால் இழுத்துத் தள்ளுகிறது. சில்லியான தருணங்கள் அதெல்லாம். தெரிந்தாலும் வேண்டித்தான் இருக்கிறது. வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிற அந்த முட்டாள்தனத்துக்கு நன்றி.

’போத்தாமா பேங்கு மேனேஜர் காரு’?

அப்பா தோளில் இருந்து தலையை நகர்த்திப் பார்த்தேன். வல்லூரி சார்.

’ஏண்டா, என்ன மாதிரியான சிநேகிதம் உனக்கு வாச்சிருக்கு. எனக்குக் கூட அமைஞ்சதில்ல இது போல.. இப்படி ஒரு காலேஜ் ப்ரபசர் தன் கிட்ட படிக்கற ஸ்டூடண்டுக்காக கிருஷ்ண பராமாத்மா மகாபாரதத்திலே நடந்தது போல, என் கிட்டே வந்து மன்னாடறாரு.. கூடவே மகாலட்சுமி மாதிரி அவரோட மனைவி வேறே.. இவங்களோட உன்னோட தோழி ஜோசபின் .. வாட் அ டிக்னிஃபைட் லேடி அந்தப் பொண்ணு.. அப்புறம் அதோ நிக்கறாரே எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லேன்னு .. சார் வாங்கோ.. நம்ம விக்தொ..நம்ம வின்செண்ட் நடராஜன்… போதாக் குறைக்கு டெலிபோன் செஞ்சு பார்வேந்தனார், அவரோட சூட்டிகையான பொண்ணு கயல்விழி… ஸ்மார்ட் கேர்ள்..’

’எல்லாரும் என்ன சொன்னாங்க அப்பா, என்னை தண்ணி தெளிச்சு துரத்திடச் சொன்னாங்களா’?

’இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே.. காலம்பற பத்து மணிக்கு பேங்க் திறக்கும்போது இவங்க ஒவ்வொருத்தரா வந்து என் கேபின்லே ஒரே கூட்டம்..’

’நீங்க சீட்டுக்குப் போங்கன்னாரு சார்.. நான் இன்னிக்கு லீவுன்னுட்டேன்’.

விக்தொ சிரிக்க அப்பா அவரை விடப் பலமாகச் சிரித்தார்.

‘நான் நாளைக்குத் தான் க்ளாஸ் எடுக்கப் போகணும் ஆகவே இன்னிக்கு பூரா இந்த வேலைதான்’. வல்லூரி கபே ஹவுஸ் வாசலில் வைத்திருந்த பூந்தொட்டியில் அபாயகரமாகக் கால் ஊன்றியபடி சொன்னார்.

அப்பா பதில் சொல்வதற்குள் தொட்டி கவிழ்ந்து வல்லூரியும் குப்புற விழ இருந்தார். விக்தொ அதற்குள் அவரைத் தாங்கிப் பிடித்து தொட்டிக்கு விபத்து வராமல் காப்பாற்றினார்.

’வண்டியிலே ஏறுடா’.

வண்டி கிளம்பும்போது அப்பாவிடம் சாரி சொன்னேன். மனசைப் புண்படுத்திட்டேன் என்றேன். இனி இப்படி நடக்காது என்றேன். தப்பு செய்ய மாட்டேன் என்றேன்.

’நான் கேட்டேனா, எனக்கு உன் மேலே எப்பவும் நம்பிக்கை உண்டு. நல்லா வருவே’ என்றார் அப்பா.

சைக்கிள் மணிச் சத்தம். பேங்க் வண்டியைத் தொடர்ந்து உற்சாகமாக விசில் அடித்தபடி விக்தோ சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். என் ராலே சைக்கிள் அது.

(தொடரும்)

அச்சுதம் கேசவம் நாவல் முன்னுரையில் இருந்து -இரா.முருகன்


வெளிவர இருக்கும் என் அடுத்த நாவலான ‘அச்சுதம் கேசவம்’ (நூல் ஒன்று) புத்தகத்துக்கு நான் எழுதிய முன்னுரையில் இருந்து

அச்சுதம் கேசவம் (நூல் ஒன்று) முன்னுரை

பெருங்கதையாடலின் காலம் முடிந்து விட்டது. பெருங்கதையாடல் நீடு வாழ்க.

கிராண்ட் நெரேடிவ், மெடா நெரேடிவ் என்றெல்லாம் பெயர் கொடுத்துச் சுட்டப்பட்டு எழுத்தில் புனைவை இழைத்து வடித்த, நூறு நூறு ஆண்டுகளாக இங்கேயும் எங்கேயும் நிலவி வந்த, வாசாலகமாகப் பெரிய கதை சொல்லும் முறை அரசியல், சமூக, கலாசார, தொழில்நுட்ப மாற்றங்களின் நேரடியும் மறைமுகமுமான விளைவாக விடைபெற்றது.

பின் நவீனத்துவச் சான்றோரான ழான் ஃப்ரான்ஸ்வா லியோதாவும் ஃபூகோவும் அவதானிக்கா விட்டாலும், அறிவிக்காவிட்டாலும் பெருங்கதையாடல் ஓய்ந்து தானிருக்கும். மகத்தான கதாநாயகர்கள், எழுதப்படும் இலக்கியத்தின் பக்கங்களில் இருந்து நழுவி வீழ்ந்து காணாமல் போயிருப்பார்கள். பெரும் பயணங்களும், பெரிய நிகழ்வுகளும், பெரியது கண்டு உவக்கும் வாழ்வியலும், வாழ்வியல் சார்ந்த பெரிய குறிக்கோள்களும், பெரிய ஜனக் கூட்டத்தை பருந்துப் பார்வையில் அடைக்கும் கண்ணோட்டமும், மற்ற கதையாடல்களையும் மாற்றுப் பொருள் கோடலையும் அனுமதியாத போக்கும்காலம் கடந்து உயிர்த்திருக்காது.

அதிகாரக் கட்டமைப்புகளின் பிரம்மாண்டத்தையும் சர்வ வியாபகமான தன்மையையும் கோடிட்டுக் காட்டும், சிறப்பித்துத் தொழ வைக்கும் பெருங்கதையாடல் ஒழுங்கமைதியின்மையையே சீலமாகக் கொண்டு உயிர்க்கும் உலகின் அடிப்படைத் தன்மையைப் புறந்தள்ளுவது என்பதால் மட்டும் களையப்பட வேண்டியதில்லை. புதியன புகுதலும் பழையன நீங்குதலுமான உலக வழக்கு காரணமாகவும் இது நிகழ வேண்டியது.

மெடா நேரேடிவ் ஓய்ந்த, யானை இறந்த புனைவுப் பரப்பில், நூறு நூறு குறுங்கதையாடல்கள் வாழ்வின் சகல பரிமாணங்களையும் எழுத்து உணர்த்த வழி செய்து பன்முகத் தன்மை வாய்ந்த உரையாடலையும் கருத்தாக்கத்தையும் சமூக விமர்சனத்தையும் வன்மையோடு முன்னெடுத்துப் போகத் துணை புரிகின்றன.

அரசூர் நாவல் வரிசையில் மூன்றாம் புனைவு அச்சுதம் கேசவம். மாந்திரிக யதார்த்தமும் பெரிய கதையாடலுமாக முதல் இரண்டு நாவல்களான அரசூர் வம்சமும், விஸ்வரூபமும் கற்பித்துக் கொண்ட இலக்கு நோக்கி நகர்ந்தன. இவற்றில், ஏழு இழைகளாக, நாற்பதாண்டு கால அளவில், ஏழெட்டு கதைக்களனில் நிகழும் விஸ்வரூபம் கதை சொல்ல, சகலமானதையும் சகலமானவர்களையும் இணைத்து நடத்திப் போகும் பெருங் கதையாடல் துணை நின்றது. அந்த ஆசுவாசத்தை நீடிக்க அடுத்த நாவல் அதேபடிக்கு எழுத முடியாது.

ஒவ்வொரு அரசூர் நாவலும் அதன் முந்தைய, பின் வரும் நாவல்களோடு நிகழ்வு மற்றும் கதா பாத்திர அடிப்படையில் அடர்ந்து சார்ந்திருப்பதைத் தவிர்க்கிறேன். எனக்கு மூன்று தலைமுறை முந்தியவர்களை அவர்களின் வழி வந்தவன் என்று துதித்து வணங்கும் போது நான் அவர்களில் இருந்து வேறுபட்டவன் என்பதை மரியாதையோடும் ஆசுவாசத்தோடும் நினைவு கூறத் தவறுவதில்லை நான். வேறுபடுதலே நான் எழுதும் ஒவ்வொரு நாவலையும் அதனளவில் பொருளமைதி கொள்ளச் செய்கின்றது. தனித்து இயங்கச் செய்கிறது. அதற்கே உரித்தான வாசக அனுபவமளிக்கிறது. வேற்றுமையும் வேண்டும் இம்மாநிலத்தே, தோழரே.

அச்சுதம் கேசவம் நாவல் மற்ற அரசூர் நாவல்களோடு காலம், கதை மாந்தர், கருப் பொருள் இவற்றோடு கதையாடலிலும் முற்றிலும் மாறுபட்டது. குறுங்கதையாடலைக் கதை சொல்ல இங்கே கைகொண்டிருக்கிறேன். நாவலுக்கே உரித்தான தனித்தன்மையோடு, அந்தந்தக் கதாபாத்திரம் சார்ந்த, அத்தியாயப் பகுப்புகளிலூடும் முழுமை நோக்கிச் செய்யப்பட்டது இது. இந்தச் சிறு கதையாடல்கள் கதையோட்டத்தைத் தம் போக்கில் முன் செலுத்துகின்றன.

அரசூர் வம்சம் எழுதும் போது விஸ்வரூபமும் அச்சுதம் கேசவமும் அந்த வம்சத்தின் அடுத்தடுத்து வரும் தலைமுறைகளின் கதையைச் சொல்ல எழுதுவேன் என்று நான் நினைக்கவே இல்லை. நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் நகுயுக் மெஹ்ஃபஸின் கெய்ரோ முந்நாவல் வரிசையைப் படிக்கும் போது, குறிப்பாக அந்த மூன்று கெய்ரோ நாவல்களின் இறுதிப் புதினமான சர்க்கரை வீதி நாவலைப் படிக்கும்போது அரசூர் முந்நாவல்களுக்கான விழைவு பிறந்தது. சர்க்கரை வீதி போல் எனக்கு அச்சுதம் கேசவம், மூன்றிலும் முக்கியமான நாவலாகிறது. நான் வாழும் காலகட்டத்தில் இந்நாவல் நிகழ்வது தற்செயலானதே.

New Bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 28 இரா.முருகன்


கண் விழித்தபோது வெளியே குளிரக் குளிர மழை பெய்து கொண்டிருந்தது. ஒருக்களித்துத் திறந்து கொண்ட மேல் ஜன்னல் வழியே சின்னச் சரங்களாகச் சாரல் உள்ளே மிதந்து வந்து நனைத்தது,. தலை தொடங்கிக் கால் விரல் நுனி வரை தகித்து வெப்ப அலையுயர்த்தும் உடல் சூட்டைப் பகிர்ந்து கொண்டு நெருங்கிப் படுத்திருந்தாள் அமேலி. அவளை மேலும் இறுக அணைத்து நான் திரும்ப உறங்க முற்பட, அவள் குரல் மெதுவாகக் காதில் படிந்தது.

’கண்ணு, நீ ஹால்லே போய் படுத்துக்க’. அமேலி எழுந்து படுக்கையில் அமர்ந்து என்னிடம் சொன்னாள்.

’நீயும் வா மழைக்கு இதமா இருக்கும் அங்கே’ என்றபடி அவளை அருகே இழுத்தேன்.

’வேணாம்’யா .. இது .. வந்துடுச்சு போலே இருக்கு’.

எது என்று கேட்பதற்குள் அவள் விலக்கானதைக் காதில் சொல்லிவிட்டு கைப்பையை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள். .

அந்த விடிகாலை நேரத்தில் அம்மா நினைவில் வந்தாள். சமையலறையில் நான் காப்பி கலப்பதை, கூடத்துக்கு ஓரமாக இருந்து வழி நடத்திக் கொடுக்கவும், தூக்குப் பாத்திரமும் சின்ன பாசிமணி பர்ஸில் இரண்டு ரூபாயுமாக சங்கீதா மெஸ்ஸில் இட்லி வாங்கிவர அனுப்பவும், பழைய பத்திரிகைத் தொடர்கதை பைண்ட் புத்தகத்தை எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டும் அந்த மூன்று தினங்களில் அடிக்கடி குரல் கொடுத்தபடி இருப்பாள் அம்மா. நான் மனசே இல்லாமல் இயங்க, பின்னாலேயே பிரியமான கெஞ்சலாக நிற்பாள் அவள். அம்மா. வீட்டுக்கு விலக்காக உட்கார்ந்த போதெல்லாம் ரெட்டைத் தெரு வீட்டில் சின்னப் பையனாக எவ்வளவு நடந்தேன். பத்து வயதில், இன்னும் நடந்தபடி நான் ரெட்டைத் தெருவிலேயே இருந்திருக்கலாம்.

’அம்பி, ஏண்டா இப்படி பண்றே. நான் வளர்த்தது சரி இல்லையா? அப்பா பாவமோன்னோ. இப்படி இழுத்துப் பிச்சுண்டு வந்திருக்கியே, தப்பு இல்லியா? அந்தப் பொண்ணும் பாவம். உன்னை மாதிரி அவளும் எனக்குக் குழந்தை தான். தெற்று செய்யாதே. கேட்டியா. வேணாம்’..

அம்மாவின் குரல் உயர்ந்து தேய்ந்தது. நான் சுற்றிலுலும் தேட இருட்டும் ஒளியும் சேர்ந்து மழையோடு உள்ளே படிய வழி செய்து கொடுத்தபடி முழு ஜன்னலும் ஒரு வினாடி திறந்து காற்றில் அடித்துக் கொண்ட ஒலி. ஜன்னல் திரும்ப மூடி அடைத்துக் கொண்டபோது, என் அருகே வந்து அமர்ந்தபடிக்கு, அமேலி அழத் தொடங்கி இருந்தாள்.

’நாம ரெண்டு பேரும் செய்யறது தப்பு…இனியும் வேணாமே’.

மடித்த முழங்காலின் மேல் தலையணையைப் பரத்தி வைத்துக் கையூன்றி முகத்தை தாங்கியபடி குலுங்கிக் குலுங்கி அழுதாள் அமேலி.

’நான் உடம்பு பசி எடுத்து அலையறவ.. அப்படித்தானே நினைக்கறே’?

’இல்லே அமேலி. நான் தான் நீ தனிச்சு இருக்கறதையும் என் மேலே உனக்கு இருக்கப்பட்ட பிரியத்தையும் தப்பா பயன்படுத்திட்டேன்’..

இதை நேற்று நான் விசாலியிடம் சொல்லியிருக்க வேண்டும். அவள் என் கன்னத்தில் ஓங்கி அடித்துக் காலால் உதைக்க, எதிர்ப்பில்லாமல் வாங்கிக் கொண்டு தண்டனை கிடைத்த திருப்தியோடு வெளியேறி இருக்க வேண்டும். நேற்று விசாலி குரலை ஆகக் குறைவாகத் தாழ்த்தி, நான் வெளியே போகும் வரை என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து, த்ரையில் கண் பதித்து நின்றாள். நினைவில் திரும்ப வருகிறது அது.

’உனக்கும் இதெல்லாம் புதுசுன்னு எனக்கு நல்லாத் தெரியும் அமேலி. தப்பு தான்.. இந்தப் பாதையிலே இனியும் நாம் போக வேணாம்’. அமேலியின் கைகளை என் கரங்களில் ஏந்திக் கொண்டு சொன்னேன். .

சொல்லும்போதே மனது, ’மற்ற் இருள் பாதைகள் உண்டு.. சுகம் தேடிச் சேர்ந்து போக அழைத்தால் வருவாள்.. கூட்டிப் போ’ என்று காமம் வழித்துப் பூசி என்னைக் களியாக்கியதை பிடிவாதமாக ஒதுக்கினேன்.

’இனிமேல் தப்பு நடக்காது அமேலி. நான் பொறுப்பு’..

அவள் தலையில் ஆதரவாகத் தடவி முத்தமிட்டேன். என் கையை இறுகப் பற்றி, புறங்கையில் உதடு பதித்து வெகுநேரம் அமர்ந்திருந்தாள் அமேலி. நீர்த் தாரைகளின் சத்தம் வலுத்து வெளியே அடர்ந்து பெய்யும் மழை மௌனத்தை அழகு படுத்திக் கொண்டிருந்தது. உடைகளை உடுத்துக் கொண்டபோது இடியொன்று முழங்கி எங்களை அதட்டியது.

’தெற்று இனி செய்யாதேப்பா.. நீயும் இவளும். படிச்சு மேலே வரணும்’.

சின்ன ஓலைக் கொட்டானில் ஏலக்காயும், கிராம்பும், அசோகா பாக்கும், கோடாப்ரின் தலைவலி மாத்திரையும் கிடக்க, நடுவில் இருந்து அம்மா குரல் மறுபடி ஒலிக்கிறது. கொட்டானை எங்கே கை மறதியாக வைத்தேன்? மனம் தேடிக் கொண்டிருக்க, அமேலி இறங்கிப் போனாள்..

’ரொட்டி பாக்கெட் ரெண்டு நாள் முந்தியே காலாவதி ஆச்சு. பரவாயில்லே சாப்பிட்டுடலாம்’. அமேலி குரல் கிச்சனில் கேட்டது.

அமேலி வேண்டாம் என்று தூக்கிப் போட்டிருந்தாலும் பொறுக்கி எடுத்து வந்திருப்பேன். இன்றிலிருந்து கையில் காசு இல்லாத பிழைப்பு.

பேச எதுவுமில்லை என்பதாக மழையைக் காது கொடுத்துக் கேட்டபடி பிரட் ஆம்லெட் தின்று கொண்டிருக்க, அமேலி சொன்னாள் – ‘கர்னல் அங்கிள் இன்னிக்கு திரும்பறதா சொல்லியிருக்கார்’யா. அதனாலே’.

‘நான் வெளியே பாத்துக்கறேன்’. உடனடியாகச் சொன்னேன். அமேலியை தீர்க்கமாகப் பார்த்தேன். மனதில் ஏறி ஆடிக் கொண்டிருந்த மிருகம் கூக்குரல் இட்டது – திமிர்த்துத் திரண்டு நகக் கண்ணும் மின்னும் இந்த அழகு உடல் இனி எப்போது எனக்கு மறுபடி வசப்படும்?

’நாளைக்கு காலேஜ் திறக்குது.. கீப் இன் மைண்ட்… அரியர்ஸ் க்ளியா செய்யணும் அதான் இனிமேல் முக்கியமான வேலை.

அவள் சிரித்தாள். படிப்பு முடிப்பதைத் தவிர இப்போது வேறே என்ன நினைப்பு மனசில் இருக்கணும்? பட்ட மேல் வகுப்பு போக வேண்டாமா அடுத்து? எப்படிப் போக? பணம்? கவலைப் பட இன்னும் நேரம் உண்டு.

’போன வருஷமே மெடிக்கல் காலேஜ் டிரை பண்ணினேன். டாடி அதுக்கு மட்டும் பேங்க்லே கொஞ்சம் சேர்த்து வச்சிருக்கார். மத்தபடி பிரான்ஸ்லே இருந்தாலும், மிலிட்டரி பென்ஷன்லே வாயைக் கட்டி வயத்தைக் கட்டித்தான் வாழ்க்கை அங்கேயும். அவர் காசோட அருமை தெரிஞ்சு நான் இன்னும் பொறுப்பா நடந்திருக்கணும்..தப்பு செஞ்சாச்சு’.

எதுவும் பேசாமல் எச்சில் கையை நக்கியபடி வாய் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன சொல்ல முடியும்? நான் உன்னை டாக்டர் ஆக்கறேன் என்றா? உங்க அப்பா பாரீஸிலோ நைஸிலோ சகல சௌகரியங்களோடும் மிச்ச் ஆயுளைக் கழிக்க நான் ஏற்பாடு செய்யறேன் என்றா? வாக்குத் தத்தம் கொடுக்க காசுக் கடவுளா நான்?

’நீ என்ன பண்ணப் போறே? சொல்றேன்னு கோவிச்சுக்காதே.. வரட்டு பிடிவாதம் வேணாம்.. வீட்டுக்குப் போயிடு. அதான் நல்லது’

முடியாது என்றேன்.

’நீ போகாட்ட, நான் அங்கே போய் எல்லாத்துக்கும் மன்னிப்பு கேக்கறேன். ஜோசபினை, கயலை, சாந்தி ருழேயை கூட்டிப் போறேன்’. அமேலி சீரியஸாகச் சொன்னாள்.
.
’யாரும் எங்கேயும் போக வேணாம். என் பிரச்சனை, நான் பாத்துக்கறேன்’.

குளித்து விட்டு வந்தேன். எடுத்து வந்த சலவைத் துணி எங்கே? ஹாஸ்டலில் விட்டு விட்டு வந்திருக்கிறேன் போல. நேற்று ப்ரான்ஸ்வா வீட்டில் துவைத்து உலர்த்தியது? காணோம். கேரியரில் இருந்து விழுந்திருக்குமோ. போகட்டும். பழைய துணிதான் அது.

விழுத்துப் போட்ட துணியைத் திரும்ப எடுத்து உடுத்திக் கொண்டு, ஹாஸ்டலுக்குப் போக சைக்கிளில் ஏறினேன். நாளை காலேஜுக்கு உடுத்துப் போக ஹாஸ்டலில் விட்ட சலவைத்துணி கட்டாயம் வேண்டும். மனது தறிகெட்டு சஞ்சரிக்க வண்டி தன் போக்கில் ஓடியது.

மறந்து விட்டால் எல்லா பிரச்சனையும் தீர்ந்த மாதிரி. மாத்திரை வேணும் அதுக்கு. எல்லாம் சரி, கையில் காசு?

சட்டென்று புத்தியில் உறைத்தது. ஓட்டிக் கொண்டே என் ராலே சைக்கிளைப் பார்த்தேன். உன்னைப் பிரிய வேண்டிய நேரம் இது.

ஹேண்டில் பாரில் தோழனாக வைத்துப் பிடித்திருந்த கைகள் சற்றே நடுங்கின. வீடும், பெற்ற தகப்பனும், உற்ற சிநேகிதிகளும் என்னை விட்டு அகன்று போன பிறகு இந்த இரும்புச் சக்கர வண்டி மட்டுமா ஆயுள் முடியும் வரை என்னோடு ஒட்டிக்கொண்டு, தர்மபுத்திரனை மகாபாரத முடிவில் தொடர்ந்த் நாய்க்குட்டி போலக் கூடவே வரும்?

மனம் ’வேண்டாம், சைக்கிளைக் கொடுக்காதே’ என்றது. அமேலியை, கயலை, ஜோசபினை அணைத்துக் கூட்டிப் போன சைக்கிள் இது.

இருக்கட்டும். ஆசை காட்டிய நினைவுகளைத் தள்ளி விட்டு சைக்கிளில் இருந்து இறங்கினேன். பளபளவென்று ஏற்கனவே இருந்த வண்டியை கைக்குட்டை கொண்டு மேலும் சுத்தமாகத் துடைத்து நிறுத்தினேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் தட்டாஞ்சாவடி மாரிமுத்து என்ற மீன் வியாபரிக்கு என் ராலே கை மாறியது. மீன் வாசம் அடிக்க அவரிடம் இருந்து ஐந்து ரூபாய் மற்றும் பத்து ரூபாய் நோட்டாக முப்பத்துரெண்டு ரூபாய் பெற்றுக் கொண்டேன். கண்ணில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்து கன்னத்தை நனைக்க, துடைக்கக் கூடக் கை வராமல் கால் போன போக்கில் நடந்தது கடற்கரைக்கு.

கவர்னர் மாளிகை முன்னால் பாதுகாப்புக்காக அணிவகுத்த வீரர்கள் குழு ஓய்வெடுக்கப் போக இன்னொன்று பொறுப்பை ஏற்றெடுப்பதைப் பார்க்க ராஜ்பவன் தெருமுனையில் டூரிஸ்ட்கள் கூடியிருந்தார்கள். சில நிமிடங்கள் முன்பு தான் அந்த சேஞ்ஜ் ஆஃப் கார்ட் நிகழ்ச்சி முடிந்திருக்கும் போல. அவர்கள் கலையத் தொடங்கியிருந்தார்கள்.

சின்ன வய்சில் நான் போட்டிருந்தது போல் நீலச் சட்டையும், வெள்ளை டிரவுசரும், ஒட்ட வெட்டிய தலைமுடியும், வேற்றுக் கிரக வாசி போல நீட்டிக் கொண்டிருக்கும் காதுகளுமாக ஒரு சின்னப் பையன். ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும். உயரமாக, ட்வீட் பேண்டும், முழுக்கை பருத்திச் சட்டையும் தரித்த, நடுவயது மெல்லக் கவியத் தொடங்கும் அப்பாவின் கையைப் பிடித்தபடி அவன் நிற்க, அப்பா சொல்கிறார் –

’மணக்குளத்து வள்ளல் பாரதி பாட்டு சொல்லு பார்க்கலாம்’.

’வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணிமலரே’. விருத்தம் முழுவதையும் பிழை இல்லாமல் சொல்கிறான் அந்தப் பையன்.

அப்பா அந்தச் சிறுவனின் தலையில் கையளைந்து அன்போடு கேட்கிறார் – ’மணக்குளத்துக் வள்ளல்ன்னா?’

’மணக்குள விநாயகர்’, பையன் துடிப்பாகச் சொல்கிறான்.

’அடுத்து அவரைத்தானே பார்க்கப் போறோம்’.

பையன் அப்பாவை சந்தோஷமாகக் கட்டிக் கொள்கிறான்.

கண் நிறைந்து போக அங்கேயே நின்றேன். அந்தப் பையன் நான் தான். அது என் அப்பா. இந்தக் காட்சி பதினைந்து வருடம் முன் இங்கே அரங்கேறியது. பாசம் மிகுந்த தந்தையும், எல்லா நியதிகளையும் எப்போதும் கடைப்பிடித்து எல்லோருக்கும் என்றைக்கும் நல்லவனாக, ஆசை கடந்த, காமம் வென்ற, உண்மையே பேசி, சத்தியத்தில் மனதை இருத்தி அறிவு தெளிவுற்று உடல் ஒளிர்ந்து பிழம்பாக நகரும் மகனுமாக நல்ல உறவுகள் இங்கே வழிவழியாகத் தொடரட்டும். எனக்கு அது இல்லை. மோகம் வளர்த்தேன். போகம் தேடி அலைந்தேன். தேகம் கலந்து சுகித்தேன். காமம் உயிர்த்தோங்கி என்னை இரை கொள்ளட்டும்.

வந்த வழியே திரும்பி நடந்தேன். அங்கே .கண்டிருந்த, கேட்டிருந்த, அனுபவித்ததெல்லாம் இனியும் திரும்பி வரப் போவதில்லை. ஜோசபின், கயல், நீங்கள் அங்கே தான் இன்னும் நிற்கிறீர்களா?

மணி அடிக்காமல் ஜாக்கிரதையாக வளைத்துத் திருப்பி என் பாதைக்குக் குறுக்கே ஒரு சைக்கிள் வந்து நின்றது. மண்ணில் பதிந்த பார்வையை மிகச் சற்றே மேலே நகர்த்திப் பார்த்தேன். இந்த சைக்கிள் சக்கரத்தின் ஒவ்வொரு ஆரமும் எனக்குப் பிரியமானது. இந்த மணி நாதம் என் கனவுகளில் எதிரொலிப்பது என் ஜோசபின் ஓட்டி வரும் பூத்தேர் இது.

ஜோஸ்ஸி, ஜோஸ்ஸி.. ஜோஸ்ஸி..ஜோஸ்ஸி.. ஜோஸ்ஸி..ஜோசபின்..

நடுத்தெரு, நாலு பேர் இருக்கிறார்கள், நாற்பது பேர் நடக்கிறார்கள். அதில் பத்து பேர் நின்று நோக்குகிறார்கள். பிரக்ஞை எதுவும் இன்றி நான் ஜோசபினை இழுத்து அணைக்க, சாய்ந்த சைக்கிளை லாகவமாக விலக்கி என் ஜோசபின் புன்னகையோடு தோளில் மெல்லத் தட்டினாள்.

கேரியரில் பட்டுப் பைக்குள் வைத்த பைபிள் பிரதியும், தோளில் போர்த்திய மெல்லிய கருப்பு சால்வையுமாக ஜோசபின் பிரார்த்தனைக்குப் போய்க் கொண்டிருக்கிறாள். ஞாயிறு மாலையில் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவள் மறக்காமல் சொல்வது – உனக்காக, நீ நல்லா படிச்சு நல்லா வந்து மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் செல்வமும் மனநிறைவுமாக குடும்பம் நடத்தணும்னு வேண்டிக்கிட்டேண்டா. ஒரு பிள்ளை, ஒரு பொண்ணு..அழகான ஒய்ப்…

’அதுக்கு முந்தி நாம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கணும்னு வேண்டிக்கிட்டியா? ஒரு பொண்ணு உன்னைப் போல, பிறகு பிள்ளை..’

’விளையாடாதேடா. நான் மனசிலே இருந்து பேசிட்டு இருக்கேன்,, நீ’.

’நான் மட்டும் என்ன பம்பரம் விளையாடிக்கிட்டா சொல்றேன்? இங்கேயும் அதை விட சீரியஸ்தான்’ என்று அவளைச் சீண்டுவேன்.

எத்தனை ஞாயிற்றுக்கிழமை இதற்கு அப்புறம் ஜோசபினை முத்தமிட முயன்று அவள் மெல்ல விலகியது? எத்தனை தடவை முத்தமிட்டது!

’என்னடா ஒண்ணுமே பேசாம வந்துட்டிருக்கே என்ன ஆச்சு உனக்கு?’

ஜோசபின் சைக்கிளை உருட்டியபடி என்னைப் பார்த்தாள்.. சட்டென்று நின்று, உன் சைக்கிள் எங்கேடா என்றாள்.

நான் பாக்கெட்டிலிருந்து க்சங்கலாக முப்பத்து ரெண்டு ரூபாயை எடுத்துக் காட்டினேன்.

’ஜேசப்பா என்னடா ஆச்சு உனக்கு?.உடம்புக்கு கேடா, மனசுக்கா, ரெண்டுமா?’

‘ஒண்ணுமில்லே ஜோஸ்.. ஐ யாம் ஆல்ரைட்’

‘ஆல்ரைட்னா ஏண்டா இப்படி.. உனக்கு என்னமோ ஆகியிருக்கு.. என்கிட்டே சொல்ல மாட்டியா?’ ஜோசபின் தொடர்ந்து மெல்லிய குரலில் அரற்றியபடி வந்தாள்.

‘சொன்னேனே, ஒண்ணும் இல்லே.’ நான் எங்கோ பார்த்தபடி சொன்னேன். இவள் கண்ணைப் பார்த்தால் நான் கரைந்து விடுவேன்.

ஆள் அரவம் இல்லாத முடுக்குச் சந்தில் திரும்பும் தெருக் கோடியில் பூட்டிய வீட்டு முன்பாக சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாள். சரக்கொன்றை மலர்கள் பூத்த வாசல். பூக்களை மிதிக்காமல் நின்றேன்.

’உனக்கு ரொம்ப மனசு பாதிச்சு இருக்குன்னு விசாலி காலையிலே சொன்னா.. நேத்திக்கு நீ வந்தியாமே.. ’

‘உன்னைப் பார்த்து ஹலோ சொல்லத்தான்..’ நான் சொல்ல, அவள் என் காதில் கிசுகிசுப்பாகச் சொன்னாள் –

‘ராஜா, எனக்கு எல்லாம் தெரியும்டா.. நீ பூ மாதிரி.. கோபப்பட்டு பர்ர்த்தா கூட குழைஞ்சு விழுந்துடுவே. அவ்வளவு மென்மை.. உன் மேலே உசிரையே வச்சிருக்கேண்டா பைத்தியக்காரா.. நீ எப்படிடா ..அதுவும் நம்ம விசாலி கிட்டே’.

’தெரியலே ஜோஸ்ஸி…மனசுலே இன்னொருத்தன் இருக்கான் மனுஷன் இல்லே.. மிருகம் எப்படியோ என்னைப் பிடிச்சுடுத்து என்னைத் தின்னாம போகாது அது.. முடியும்னா எனக்காக ப்ரே பண்ணு ஓகே?’

உனக்காக பிரார்த்தனை செஞ்சு, மாஸ் முடிஞ்சதும்.. வீட்டுக்கே வந்து உன்னை பார்க்கணும்னு. தான் புறப்பட்டேன்.. என்னடா கோலம் இது?.’

குரல் கரகரத்துத் தேய்ந்து வாய் மட்டும் அசைந்து தோற்க, அவள் இரு கரங்களையும் கொண்டு என் முகத்தின் முன் தீபம் சுற்றுவது போல் நடுக்கத்தோடு சுழற்றி, இது சரியில்லை எனத் தலை குலுக்கி நின்றாள்.

அவளுடைய சூடான கண்ணீர்த் துளி என் புறங்கையில் விழுந்து என்னை நிலை குலைத்துத் தள்ளியது. அணை உடைந்தது அப்புறம்.

அப்பாவிடம் கூட அழவில்லை. இவள் பேசப்பேச நான் கேவி அழலானேன். இடைவிடா சகாய மாதாவாக, சகோதரியாக, தோழியாக, மனைவியாக உறவெலாம் சேர்ந்து உருவெடுத்து என்னுயிர் ஜோசபின் வந்திருக்கிறாள். அழுது அழுது அவள் மன்னிப்பை நாடித் தொழுது இளைப்பாறலாம். இயன்றால் கடைத்தேறலாம். எனக்கு உண்டோ அது.

அவள் தோளில் தலை வைத்து அழுதபடி வெளிச் சுவரில் சாய்ந்து நின்றேன். ஏதோ வெறியில், அந்தக் கருங்கல்லில் தலையை மோதி உடைத்து வாதனை தீர்ந்து விலகிப் புறப்பட அவ்சரம் காட்டினேன்.

ஜோசபின் வலுவாகக் கைநீட்டி என்னைப் பிடித்து நிறுத்தினாள். ’நான் இருக்கேன் உன்னை எந்தப் பாம்பும் பிடிக்க விடமாட்டேன் சாப்பிட்டியாடா? ஏன் தலை சீவலே? டிரஸ் எல்லாம் ஏன் கசங்கி இருக்கு? என் ராஜா இல்லே.. அழாதே.. என்னடா ஆச்சு என் செல்லம்’?

ஜோசபின் சொல்லச் சொல்லப் பேச முடியாமல், அழுகையை அடக்கப் பார்த்துத் தோற்று விசும்பியபடி உடல் நடுங்க நின்றேன்.

’வேணாம் கண்ணப்பா எல்லாரும் பார்க்கறாங்க. நம்ம இடத்துக்குப் போயிடலாம். வா, பின் சீட்லே ஏறிக்க’..

சுங்கச் சாவடிக்குப் பின்னால் அடைத்த கதவுகள் மௌனம் காக்கும் ஆள் வராத கடல்புரம். . பிரார்த்தனை நேரத்தில் தரையில் பரத்தி மண்டியிடச் சுருட்டி எடுத்து வந்திருந்த சின்னஞ்சிறு பத்தமடைப் பாயை விரித்து உட்காருடா என்றாள் ஜோசபின். நான் அவளுக்கும் இடம் விட்டு அமர, என் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.

கடவுளே என்னடா இது..காய்ச்சல் போலே இருக்கே’.

சட்டென்று கைப்பையில் இருந்து பாரசெடமால் குளிகை எடுத்துக் கொடுத்தாள். ’இரு வரேன், அப்படியே முழுங்க ட்ரை பண்ணாதே’

சைக்கிள் காதில் மாட்டியிருந்த சிறிய பிளாஸ்கை எடுத்து வந்தாள்.

’போன வாரம் பிரான்ஸ்லே இருந்து என் சிநேகிதி வந்தா.. எனக்கு அவ பரிசா கொடுத்தது.. காலேஜ் திறக்கற நேரம் உனக்குத் தரலாம்னு எடுத்து வந்தேன். இப்படி உன்னைப் பார்ப்பேன்னு தெரியாது’,

நான் யந்திரமாக மாத்திரை விழுங்கினேன்.

’ஜோசபின் நீ பிரார்த்தனைக்கு போய்ட்டு வா. நான் இங்கேயே இருக்கேன். எங்கேயும் போகல்லே. போக வேறே இடம் இல்லை’.

அதற்கு மேல் பேச முடியவில்லை. கண்ணில் திரையிட்டு மறைத்த நீர்ப் பரப்புக்கு அப்பால் நெகிழ்ந்து அசையும் பிம்பமாக ஜோசபின். நின்றாள். என்னை அன்போடு தோளில் சார்த்திக் கொண்டாள் அவள்.

’அடுத்த ஞாயிறு மாஸ் போகலாம். ஜேசப்பா எல்லாம் புரிஞ்சுப்பார்… சொல்லு ராஜா. என்னம்மாடி ஆச்சு என் கன்னுக்குட்டிக்கு’?

அவள் தாடையைத் தாங்கி வருட், தயங்கித் தயங்கி எல்லாம் சொல்லி முடித்தேன். அமேலி, அப்பா, விசாலி எல்லாம் எல்லாம் சொன்னேன்.

நடுவில் ஒரு வார்த்தை பேசாது, பார்வையாலோ உடல் அசைவாலோ கூடக் குறுக்கிடாது முழுக்கக் கேட்டுக் கொண்டிருந்தாள் ஜோசபின்.

நான் சொல்லி முடித்து திரும்ப மௌனமானேன். ஜோசபின் முகத்தில் இருந்து தற்காலிகமாக விலகிப் போயிருந்த சிரிப்பு திரும்ப வந்திருந்தது. ஆனால் அதில் ஒரு துளி விரக்தி ஒட்டியிருந்தது.

’அப்புறம்’? அவள் என்னை அந்தச் சிரிப்போடு பார்த்துக் கேட்டாள்

’அவ்வளவுதான். போதாதா?’ அவள் கைகளைப் பார்த்தபடி இருந்தேன்.

’போதும் போதாது நீதான் சொல்லணும் ராஜா. பாம்பு ஏணி ஆட்டத்துலே மறுபடி முதல் கட்டத்துக்கு வந்திருக்கே.. வாழ்த்துகள்’. என் தோளை உலுக்கிச் சிரித்தாள் ஜோசபின்.

’மேலே வரமுடியாது இனிமேல்..தெரியும்’என்று சொல்ல நினைத்தேன்.

’போன முறை ரெண்டு பேரும் தப்பிச்சீங்க. இப்போ எல்லா சிகரமும் பாதாளமும் கடந்தாச்சு.. ஒரு ராத்திரி இல்லே ரெண்டு.. சரியா தப்பா?’

ஒன்றும் பேசவில்லை.

’அந்த நல்ல மனுஷரை… உங்க அப்பாடா .. அவரை நோவிச்சு வீட்டை விட்டு இறங்கி வந்தது அடுத்த தப்பு. அப்புறம்…’

விசாலி என்றேன்

’என் தோழியை, எனக்கு பிரியமான்வன்கற ஒரே விஷயத்தாலே உன் மேல் அன்பு வச்ச பொண்ணை.. அசிங்கமா சொல்லவே கூசுது எதுக்கு கூச்சம்.. செஞ்ச உனக்கு கூசலியே.. அவ ப்ரஸ்டை இறுக்கப் பிடிச்சு.. அதென்னடா ஊர் உலகத்திலே வடிவா ஒரு பொண்ணு இருந்தா அவ மாரைப் பிடிப்பே.. பிடிச்சா அந்தப் பொண்ணு மறு பேச்சு பேசாம உன்கிட்டே மயங்கி உன்னோடு படுத்துக்க வந்துடணும்.. என்ன மாதிரி சுயநம்பிக்கைடா அது.. திருவிழா கூட்டத்திலே தொடறானே அவனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம், சொல்லுடா என் செல்லம்..’

’தப்புதான் ஜோசபின்’

’விசாலி பத்தி உனக்கு என்னடா தெரியும்? வீட்டுலே அப்பளம் போட்டு வித்து, மெஸ் வச்சு நடத்தி அவங்க அம்மா அவளை படிக்க வச்சாங்க. உன் வய்சு தான். ஆனா உன்னால் ஒரு பைசா சம்பாதிக்க முடியாது. அவ மாசச் சமபளமா அறுநூறு ரூபா ரெவென்யு ஸ்டாம்ப்லே கையெழுத்து போட்டு வாங்கறா. அடுத்த வருஷம் ஸ்காலர்ஷிப் எம்பிபிஎஸ் கிடைச்சிருக்கு. ஐந்து வருஷத்துலே அவ டாக்டர் ஆயிடுவா? நீ? போற இடத்துலே எல்லாம் பொண்ணு வாடை பிடிச்சுக்கிட்டு திரியப் போறே. என் பின்னாலேயும் வருவே. சரியா?’

நான் தரையில் விரல் தீற்றியபடித் தலை குனிந்து கேட்டுக் கொண்டிருந்தேன். வேண்டி இருந்தது.

’இங்கே நீ காலேஜ்லே சேர வந்தபோது நீதான் பியூசியிலே யூனிவர்சிடி பர்ஸ்டுனு பெருமையாம். இப்போ..’ அவள் என் கன்னத்தில் தட்டினாள்.

’யார் சொன்னது ஜோ? அப்பாவா’? நம்பிக்கையில்லாமல் கேட்டேன்.

’அவரை நான் இன்னும் பார்க்கலே.. விக்தோ அங்கிள் சொன்னார். தப்பு செய்யறார்னு அவர் கிட்டே நீ சொன்னதுமே திருத்திக்கிட்டு என் லைப்லே குறுக்கிட மாட்டேன்னு வாக்கு கொடுத்து டீசண்டா நடக்கற அவர் எங்கே, வாக்குக் கொடுத்துட்டு திரும்ப தப்பு பண்ணிட்டு வர நீ எங்கே? எனக்கு வெட்கமா இருக்குடா. நான் உனக்கு நல்ல நட்பைத் தரலே. உனக்கான அத்துகளை கொஞ்சம் அதிக தூரத்திலே போட நான் இடம் கொடுத்திட்டேன் போல. நீ மத்தவங்க கிட்டே அதை விட கூடுதலா எதிர்பார்க்க ஆரம்பிச்சுட்டே. அமேலி அல்டிமேட் உரிமையை உனக்கு சாக்லெட் ட்ப்பாவிலே ரெண்டாவது அடுக்கிலே வச்சு கொடுத்துட்டா. கல்யாணமான தம்பதிங்கன்னா இப்படி ராத்திரி முழுக்க.. உறவு வச்சுக்கிட்டா, எழுந்து குளிச்சு அடுத்த நாள் எப்படிப் போகும் எப்படி காசு கிடைக்கும் .. வர்ற காசுக்கு எவ்வளவு செலவு, எவ்வளவு சேமிக்கணும்னு திட்டம் போடுவாங்க. அது குடும்பம்…பாரு, நீ ஊர் சுத்திட்டிருக்கே. அந்தப் பொண்ணு படுத்துத் தூங்கிட்டு இருப்பா. திரும்ப சாயந்திரம் அரிப்பெடுத்து, லலி தொலெந்தால் தெருவுக்கு பம்மிப் பம்மி நடப்பே. இன்னும் எவ்வளவு காண்டம் பாக்கி வச்சிருக்கே’?

’ஜோசபின் வார்த்தையாலே என்னைக் கொல்லாதே இன்னிக்கு போகப் போறதில்லே. கர்னல் வ்ந்தாச்சு. வீடும் கிடையாது. நாளைக்கு காலேஜ் எப்படிப் போறது அதான் என் உடனடி பிராப்ளம்’ என்றேன் மெதுவாக.

’நீ வேணாம்னாலும் அவ விடுவாளா? சின்னப் பொண்ணு. உசுப்பி விட்டுட்டே. ஆடி அடங்க எவ்வளவு காலமாகுமோ’.

’அமேலி மேலே தப்பு ஒண்ணும் இல்லே ஜோசபின். மிருகம் என் மனசுலே தான் மறைஞ்சு திரிஞ்சுக்கிட்டிருந்தது. நீயும் கயலும் இருக்கற்போது அது தலை காட்ட பயந்து உள்ளறைகளிலே பதுங்கிக் கிடந்தது. அமேலி வந்து என்னை சந்திக்காமல் இருந்தா அது நாளாவட்டத்திலே செத்துச் செல்லரிச்சுப் போயிருக்கும். திரும்பி வந்தது தான் அவ செஞ்ச தப்பு. அபபடி எடுத்துக்கற்து சரியில்லே தான்.. சரியாச் சொன்னா அவ வந்ததை அவ தனியா இருக்கறதை என்மேலே அவளுக்கு ஒரு கிரஷ் இருக்கறதை எனக்கு சாதகமா எடுத்து அவளோடு போய் படுக்கையிலே… ரெண்டு உடம்பும் ஒண்ணாகிக் கலந்து…அமேலி கொடுத்த குளிகையை சாப்பிட்டது என் தப்பு தான்.. அவளும் அதைத்தான் சாப்பிட்டா..அங்கே தான் தொடக்கம்’.

’என்ன மாத்திரைடா? ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா? பேரு என்ன’? ஜோசபின் பரபரப்பாகக் கேட்டாள்.

நான் என் சட்டைப் பையில் தேடி, கசங்கிய காகித உறையை எடுத்து நீட்டினேன் அதைக் கூர்ந்து பார்த்துப் படித்தாள் ஜோசபின்.

’டேய் இது என்ன தெரியுமா’?

’பிரான்ஸ் மேக் ஆஸ்ப்ரின்? பாரசெடமால்’?

’ஹை பொடன்ஸி போதை மாத்திரை. ஒரு வாரம் சாப்பிட்டா அடிக்ட் ஆகி இதுவே சரணம்னு ஆயிடுவே. நீ கல்யாணம் செஞ்சுக்காமே குடும்பம் நடத்தறதைக் கூட ஒரு விதத்திலே மன்னிச்சுடலாம். காண்டோம் யூஸ் பண்ணினீங்களே அது நல்லதுக்குத்தான். .. இல்லேன்னா அவ வயத்துலே பிள்ளை உண்டாகியிருக்கும்.. என்ன பண்ணியிருப்பீங்க? கலைச்சுடலாம்னு மேரி ஸ்டோப்புக்கு போயிருப்பீங்க.. அது மகா பெரிய பாவம்டா. அறியாத சிசுவை உயிர்ப்பிக்க விடாமல் கொல்றது..அதோட ஒப்பிட்டா காண்டோம் பரவாயில்லே….ஆனா இந்த போதை மாத்திரை …வாழ்க்கையே இல்லாம தொடச்சுடும்.. என்னடா சொல்றதை கவனிக்கறியா’?

என் முன்னால் பாறையில் மோதிச் சிதறும் கடல் அலைகள் போல் காதில் அவள் வார்த்தைகள் மோதி அதிர, நான் மொழி புரியாத சிசுவாக அவள் வாயசைவையே பார்த்து ஒரு புன்னகையை யாசித்திருந்தேன்.

’முதல்லே எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு கொடு’. ஜோசபின் கேட்டாள்.

என் கையை நகர்த்தித் தன் கை மேல் வைத்துக் கொண்டாள் அவள். எல்லாம் மறந்து இப்படியே கையோடு கை சேர்த்து கடல் பாலத்தில் கப்பல் வரும் என்று எதிர்பார்த்து காலமெல்லாம் இருந்து விடலாமா?

’சொல்லு, இனிமேல் கடவுள் சத்தியமா, அம்மா சத்தியமா, கிறுக்கச்சி ஜோசபின் சத்தியமா, போதை மாத்திரை சாப்பிட மாட்டேன் வேறே யாரும் சாப்பிட உதவி செய்ய மாட்டேன். யாராவது என்னையோ பிறரையோ ஆசை காட்டினா, அவங்களை நல்வ்ழிப் படுத்துவேன்’.

நான் சூழ்நிலையின் அபத்தத்தை உள்வாங்கியபடி அவளிடம் மெல்ல அவள் வார்த்தைகளை, கிறுக்கச்சியை மட்டும் தேவதையாக மாற்றிச் சொல்லும்போது கடல் அலைகள் மெதுவாகக் குதித்து உயர ஆரம்பித்தன. ஒட்டுக் கேட்கும் ஆர்வத்தில் எங்கள் கால்களை நனைத்து குசலம் விசாரித்துச் சிரித்துப் போயின அவை..கிறுக்குதான்.

’ஹை டைட் .. வா போகலாம்’

ஜோசபின் எழுந்தாள்.

’அமேலி செஞ்ச தப்பு இதுலே எதுவும் இல்லே. ஜோஸ்ஸி…’ திரும்ப ஏனோ சொல்லத் தோன்றியது. சொன்னேன்.

’சரிடா அவ தப்பு ஒண்ணுமில்லே. நான் யார்கிட்டேயும் சொல்லவும் போறதில்லே’. கடல் பாலத்தை வெறித்தபடி ஜோசபின் கூறினாள்.

’விசாலம் கிட்டே நான் நேர்லே வந்து’.

’அதைப் பார்த்துக்கலாம். நான் சொல்லிக்கறேன். நல்ல பொண்ணு. அவளே காரண காரியம் எல்லாம் புரிஞ்சுக்கிட்டா’..

சரி என்று ஈன ஸ்வரத்தில் சொன்னேன்.

’கயலுக்கு தெரியுமாடா?’ ஜோசபின் என்னைக் கூர்ந்து பார்த்தாள்.

’சொல்லலே சொல்லவும் மாட்டேன் இது என்னோட கருத்த அத்தியாயம். உன் கிட்டே சொல்லி என் பாரத்தை இறக்கி வச்சாச்சு. எனக்கு இது இனி இல்லே. அப்படி எடுத்துத்தான் காலேஜ் போவேன்’.

’நல்லா போ. என்னாலே உன்னை திட்டவோ அடிக்கவோ முகத்திலே முழிக்க மாட்டேன்னு பிரிஞ்சு போகவோ முடியாது. நான் உனக்கு பாதிரியார் ..பாவத்தைச் சொல்லி மன்னிப்பு கேக்கற முந்தியே மன்னிச்சுட்டேன்.. நீ மன்னிப்பு வாங்கியாச்சு. இனி புதுசா தப்பு செய்ய போ.. திரும்பி வந்து அழுதுட்டு நில்லு… சிநேகிதி எதுக்கு? மன்னிக்க’.

இரு கை எடுத்து ஜோசபினைக் கும்பிட்டேன். மாட்டேன் என்றேன்.

’சாப்பிட்டியாடா? களைச்சு இருக்கே. ஜுரம் வேறே இருக்கு’. ஜோசபின் மறுபடி ஜோசபினானாள். நான் தான் நானாக முடியாது நின்றேன்.

திட்டினாலும் அடித்தாலும் அவளால் என்னை வெறுக்க முடியாது. கனிவு தவிர்க்க மாட்டாள் இந்த்ப் பரிதவிப்பு கருணையில் எழுந்தது.

’சாப்பிட்டாச்சு . பிரட் ஆம்லெட். பிரட் செத்துப் போச்சுடா… யூஸ் பை டேட் எக்ஸ்பயர் ஆயிடுச்சு’. சிரிக்க முயன்றேன். வாய் கோணியது.

’சாப்பிட்டாச்சா? எங்கே..’. என் கையைப் பற்றி முகர்ந்தாள் ஜோசபின். ’சைக்கிள் க்ரீஸ் வாடை தான் அடிக்குது’ என்றாள்.

’வண்டியை நல்லாத் தொடச்சா அஞ்சு ரூபா கூடக் கிடைக்கும்னு தோணிச்சு அதான்’ என்றேன். சிரிப்பு மறுபடியும் பழகியிருந்தது..

ஜோசபினுக்கு முன்னால் நான் நடக்க, கூப்பிட்டு நிற்கச் சொன்னாள்.

’என் சைக்கிள் உன் கிட்டே இருக்கட்டும். வேணும்கிற போது வாங்கிக்கறேன்’.

நான் ஒன்றும் சொல்லவில்லை.

’ராஜா, கோபிச்சுக்காதே. சட்டையிலே வியர்வை வாடை அதிகமா வருதுடா.. கொண்டு போய் துவைச்சு எடுத்து வரட்டா’? கெஞ்சினாள்.

’நானே துவைச்சுக்கறேன் உனக்கு இன்னும் எவ்வள்வு தொந்தரவு தர’?

’வீட்டுக்குப் போயிடுடா’

’வீடு இல்லே’

’நம்ம வீட்டுக்கு வா’.

விசாலம் இருக்கும் இடத்தில் குற்ற உணர்ச்சியில் குமைந்து குமைந்து ஒவ்வொரு நிமிடமும் போக்க வேண்டி வரும். அதற்கு சித்தாந்தசாமி மடம் தேவலை. குளிக்க, துணி துவைக்க, மஞ்சள் நிறமாக நீர்க்காவி அப்பி உடுத்திக் கொள்ள, மணி அடித்தால் பட்டை சோற்றுக்கு நிற்க..

’கையிலே கொஞ்சம் காசு தரட்டாடா? தப்பா நினைக்காதே’

’வேணாம் மீன்காசு இருக்கு.. கம்முனு வாச்னையா ஒரு வாரம் வரும்’.

என் இமைகளை நீவினாள். கையை உயர்த்திப் பிடித்து சிதார் வாசிப்பது போல் மெல்லத் தடவி மடித்து அவள் கன்னத்தில் அணையாக வைத்துக் கொண்டாள். கண்களில் கண்ணீர் பார்த்தேன்.

எதுக்கு அழறே ஜோஸ்ஸிம்மா என்று கேட்டேன்.

’ஒண்ணுமில்லே’. என் கையை எடுத்துத் தன் கண்ணீரை ஒற்றினாள்.

’நான் தளர்ந்து கிடந்த போது நீ தோழனா தோள் கொடுத்தே.. விக்தொ அங்கிள் கிட்டே சண்டை போட்டு எனக்காக என்ன எல்லாமோ செய்தே. உனக்கு ஒரு கஷ்டம் வரும்போது நான் ஒண்ணுமே செய்யலேடா’

அடக்க முடியாமல் ஜோசபின அழுதாள்.

என் கைகள் தாமே ஜோசபின் கண்ணைத் துடைத்தன. கண்ணம்மா, நீ அழுதா நான் உடஞ்சிடுவேன். வேணாம். சந்தோஷமாப் போ ராஜாத்தி.

அவள் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறும் வ்ரை பொறுமையாக அவள் சைக்கிளை உருட்டியபடி வந்தேன். என்னிடம் முரண்டு பிடித்தது அந்த வண்டி. ஜோசபினைப் பிரிந்திருக்க அதற்கு மட்டும் பிடிக்குமா என்ன?

’ரூ லலி தொலெந்தால்’ அவள் சொன்னதைக் காதில் வாங்கியபடி ஜோசபினுடைய சைக்கிளில் கடற்கரைச் சாலையூடே பயணமானேன்.

பட்டீசரி ரொட்டிக் கடை திறந்திருந்தது. இரண்டு துண்டு கேக்கும், ரெண்டு பன்னும் இன்று மதிய உணவாக இங்கே வாங்கிக் கட்டிக் கொண்டு குயில் தோப்பு போகலாம் என்று திட்டமிட்டேன். பாரதியார் பாடலில் வரும் அந்த இடத்தை நான் இதுவரை பர்ர்த்ததில்லை. நடந்தோ, பஸ்ஸிலோ போய் விட்டு ராத்தங்க என்ன செய்யலாம் என்று வரும்போது யோசிக்கலாம்.

யாரையோ யாரோ கூப்பிடும் சத்தம். கீச்சென்று வந்த மாதிரி இருந்தது. திரும்புவ்தற்குள் பியானோ அக்கார்டியன் சத்தம் இனிமையாக காதில் வந்து புகுந்தது. எனக்குப் பிடித்த பாடலும் கூடவே வந்தது

கட்ட்டம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்து ஏசுவுக்காய்

வேகமாக நகரும் அந்தக் கிறிஸ்துவ பக்தி கானத்தைப் பாடியபடி மேலே கான்வாஸ் கூரை போடாத சைக்கிள் ரிக்ஷாவில் எழுந்து நிற்கிறார் விக்தொ அங்கிள். தோளில் மாட்டிய அகார்டியன்.

நான் வண்டியைத் திருப்பிக் கொண்டு அவரை நோக்கி விரைந்து போனேன். அகார்டியனை ரிக்‌ஷாவில் இறக்கி வைத்தபடி பாட்டைத் தொடர்கிறார் விக்தோ.

உத்தமர் ஏசுவின் அஸ்திவாரம்
பத்திரமாகத் தாங்கிடுவார்

விக்தோ ரிக்‌ஷாவை விட்டு இறங்கி இரண்டு கையையும் அகல விரித்து என்னை வரவேற்றபடி பாடுகிறார்.

பாவமாம் மணலில் கட்டப் பட்ட
பற்பல வீடுகள் விழுந்திடுமே
ஆவலாய் ஏசுவின் வார்த்தை கேட்போம்
அவரே மூலைக்கல் ஆகிடுவார்

எல்லா துக்கமும்ம் கரைய அவருடைய இசையைக் காதில் வாங்கி மனதில் நிறைத்துக் கொண்டு கூடவே பாடுகிறேன். சைக்கிளை விட்டு விட்டு அவர் பக்கத்தில் போக விக்தோ ஒரு குழந்தையைத் தூக்குவது போல் என்னைக் கட்டித் தூக்கிச் சுற்றினார்.

’அங்கிள், கீழே போட்டுடாதீங்க. படாத இடத்துலே பட்டுதுன்னா எதிர்காலமே கேள்விக்குறியாகிடும்’.

’நான் தான் உன் தலையை பத்திரமா பிடிச்சிருக்கேன். அங்கெல்லாம் அடிபடாது’ என்றார் அவர் பெருந்தன்மையாக. புரிஞ்சுக்கலியா அங்கிள்?

’நீங்க கல்லுளிமங்கன். ரெண்டு பாறைக்கு நடுவே வச்சு நச்சுடுவீங்க’, அவரைக் கிண்டினேன்.

’அங்கே தான் தூக்கிட்டுப் போறேன்’.

விக்தோ சிரித்தபடி என்னைத் தாழ்த்த, நான் குதித்து இறங்கினேன். அடுத்த நிமிடம், ஒத்த வயதுத் தோழர்கள் போல கடற்கரையில் கை கோர்த்து ஓடிக் கொண்டிருந்தோம் நாங்கள்..

சர்ச் போகலியா அங்கிள்?

’போகலியா? இன்னிக்கு தான் பெஸ்ட் பெர்பார்மென்ஸ். கர்த்தருக்கு ஸ்தோத்ரம். சர்வீஸ் முடிஞ்சு இன்னிக்கு வாசிச்சதுக்கு எவ்வளவு கைதட்டல் தெரியுமா? பாதிரியார் ஆரம்பிக்க மாஸுக்கு வந்தவங்க எல்லாரும் எழுந்து நின்னு கை தட்டினாங்கன்னா பாரு’.

நித்திய இளைப்பாறுதலை அவங்க்ளுக்குக் கொடு ஜேசப்பா என்று வாய் விட்டுப் பிரார்த்தித்தேன்.

’அது போய்ச் சேர்ந்த அப்புறம் தானே? என் பாட்டைக் கேட்டுக்கிட்டே சவாரி விட்டுடுவாங்கன்னு சொல்றியோ’?

விக்தொவோடு சேர்ந்து நானும் ஓடிக் கொண்டே சிரித்தேன்.

’காலையிலே ஜாகிங்க் போகலே அதான் இப்போ’ என்றார் விக்தோ..

’ஏன் என்ன ஆச்சு’ என்று விசாரித்தேன்.

’நீ இல்லாம நான் மட்டும் ஏன் ஓடணும்’? அவர் உரிமையோடு கேட்க என்னிடம் பதில் இல்லை.

’மிசியே நானு போவட்டா?’

பின்னால் இருந்து ரிக்ஷாக்கார கேட்க, விக்தொ திரும்பிப் பார்த்துச் சொன்னார் – பரீ போற அவசரமா இல்லே லண்டனா? இரு வந்து துட்டு தரேன். தம்பி சைக்கிளையும் பக்கத்திலே எடுத்து வச்சுக்கோ

உய் மிஸ்ஸே பின்னால் இருந்து உத்தரவாதம் கேட்டது.

’சாப்பிட்டியா கண்ணு’?

நீங்களுமா? அவரை ஆச்சரியத்தோடு பார்த்தேன்.

ஆச்சு அங்கிள்.

’ஏம்ப்பா உனக்கு இந்தக் கஷ்டம்.?’

நான் சும்மா இருந்தேன். ’வீட்டுக்கு வந்துடுப்பா புண்ணியமாப் போகுது’.

அவர் என் கையை இறுகப் பற்றி வேண்டுகோள் விடுத்தார். ஏதோ கடல் பறவை கூராக ஒலியெழுப்பி மேலே பறந்து போனதைப் பார்த்திருந்தேன். ஒற்றைப் பறவை. கூடு அநேகமாக இருக்காது.

’அப்பா ரெண்டு நாளா சாப்பிடவே இல்லை. தூக்கமும் கிடையாது. ஆபீசிலேயே உட்கார்ந்து இருபத்து நாலு மணி நேரமும் வேலை செஞ்சுக்கிட்டிருக்காரு. சாத்தான் நடத்தற பேங்குலே அவர் ஆயுசு பூரா இப்படி உழைச்சாலும் இன்னும் வேலை இருக்கத்தான் செய்யும்’.

ஓடி ஒரு சிறிய வட்டம் அடித்து விட்டு ரிக்‌ஷா நின்ற இடத்துக்குத் திரும்ப வந்து கொண்டிருந்தோம்.

’விக்தொ அடிகளே’.

பின்னால் இருந்து கூப்பிட்டது பழக்கமான குரல். திரும்பிப் பார்த்தேன். பார்வேந்த்னார்.

உன்னைத் தான் தம்பி பார்க்க வந்தேன். அப்பா சொன்னாரு. சின்ன விடயத்திலே சினம் கொண்டு புறப்பட்டு விட்டாயாமே? ஆறுவது சினம் கூறுவது தமிழ். அறிவாய் தானே நீ?

விக்தொ விடை வாங்கிப் போக பார்வேந்தனார் என்னை ஆற்றுப் படுத்தத் துவங்கினார். இல்லை, விக்தொவிடம் காட்டிய அதே உறுதிதான் இவரிடமும் காட்டுவேன். அப்பாவுக்குத் தெரிய வேண்டும். ஏப்பை சாப்பையாக எல்லாவற்றுக்கும் பயந்து நடுங்கிக் கண்ணை உருட்டி முழித்ததுமே கட்டுப்பட்டுக் காலைப் பிடிக்கும் பிள்ளை இல்லை அவர் பெற்றது என்று. என் காலில் நிற்கிறேன். நிற்பேன்.

பேசித் தீர்த்தார் பா.வே. குரல் பலவீனமாக இருந்தது. ஒரு வாரமாக தேங்காய்ப் பாலும் முருங்கை இலைச் சாறும் மட்டும் சாப்பிட்டு வந்தால் நானெல்லாம் ஊர்ந்து போவேன். தள்ளாடி நிற்பேன். அடுத்த வேளை சாப்பிட, பூசணம் உதிர்க்கும் பந்தலில் அவரைக்காய் பறிப்பேன்.

பார்வேந்தனார் பளபளவென்று மின்னும் புத்தம்புது ஸ்கூட்டரில் வந்திருந்தார். எனக்கு மிகவும் பிடித்த லாம்ப்ரட்டா ஸ்கூட்டர் அது. நல்ல ஆரஞ்சு நிறத்தில் கண்ணைப் பறிக்கிற இறகுகளோடு வண்டி. நான் வேலைக்குப் போய், கல்யாணம் செய்து கொண்டு கயலை ஸ்கூட்டரில் தான் இங்கிலீஷ் சினிமாவுக்குக் கூட்டிப் போவேன்.

இந்த உந்தியையே வைத்துக் கொள் தம்பி.

வேணாம் பார்வேந்தனார் பழைய ஸ்கூட்டரை தலையில் கட்டி விடலாம் மோட்டார் பைக் வாங்கிக் கயலைச் செல்லமாக பக்கவாட்டில் உட்கார்த்தி இட்டுப் போவேன்.

’தம்பி, மதிமுகத்தாள் உன்னை உடனே உணவுக்கு இட்டுவரச் சொன்னாள்’.

பார்வேந்தனர்ர் பெருமையோடு அறிவித்தார்.

’ஏன் சார், சாத்வீகமாக் காய்கறி சாப்பிட்டு வந்ததை விட்டு நரமாமிசத்துக்கு போயாச்சா’ என்று கேட்டேன்.

கடவுளே, மதிமுகத்தாள் உன்னை திங்கறதுக்காகக் கூப்பிடலே. நீ வந்து சாப்பிடணும்னு கூப்பிடறாங்க என்று என் ஐயத்தைத் தெளிவித்தார்.

விக்தொ, பார்வேந்தனார், இன்னும் யார்யாரோ. அப்பா நான் சந்திப்பேன் என்று யூகித்த தனக்குப் பழக்கமான எல்லோரிடமும் என்னைப் பற்றி குறைந்த பட்சம் தகவ்ல அறிவித்து, வந்தால் கவனித்துக் கொள்ளச் சொல்லி இருக்கிறார். நல்ல புத்தி சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைப்பதுவும் அவர்கள் செய்தாக வேண்டிய உதவியில் அட்ங்குவதாக இருக்கும். அவர் ஆற்றாமை புரிகிறது.

பா.வே ஸ்கூட்டரை மெதுவாக ஓட்டிய்படி முன்னால் போக, நான் சைக்கிளில் அவருக்கு முன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விட்டேன்.

கயலைச் சந்திக்கக் கூடாது என்று வைராக்கியத்தோடு பதுங்கி ஓடிய ஒரு மனம் தாழ்ந்து போக, கயல் கயல் என்று ஓலமிட ஆரம்பித்தது இன்னொரு மனது. இரண்டு நாளுக்கு முன் எந்தக் கசடும் பற்றாத மனநிலையில் அவளை இங்கே விட்டுப் போனபிறகு அதே சூழலும் மனமும் எண்ணமுமாக இங்கே வருவதாக நம்ப முயற்சி செய்தேன்.

ஆளையே காணோம். தேங்கா தின்னச் சொல்லுவாங்கன்னு ஓடிட்டியா?

கயல் அன்போடு விசாரித்தாள்.

’இவரா, தகப்பன்சாமி. அப்பாரு கோவிச்சுக்கிட்டார்னு வீட்டை விட்டுப் போயிட்டாராம்’. பார்வேந்தனார் சிரிக்காமல் சொல்ல, கயல் என்னை ஆச்சரியத்தோடு பார்த்தாள். இது என்னடா புதுக் கிறுக்கு என்பது போல் அதில் ஒரு அழகான சுவாரசியம் தெரிந்தது.

பார்வேந்தனார் நாங்கள் பேச விட்டுவிட்டு வாசலில் இருந்த ஒரு பெரிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாக்கைத் தூக்கிக் கொண்டு உள்ளே போக, உங்க லஞ்ச் ரெடி போல இருக்கு என்றேன் கயலிடம்.

’ஏன் கேக்கறே. கல்லாடச் சித்தர் ஆஸ்பத்திரியிலே படுத்தாச்சு. டிஹைட்ரேஷன். வாந்தி பேதி’.

ஆஸ்பத்திரியே மல்லிகைப்பூ மணத்தோட திகழுமே என்று விசாரித்தேன்.

‘உனக்கு வேடிக்கையா இருக்காக்கும். சிரி. ஆமா, அப்பா கூட என்னடா சண்டை? கனவிலே ஜோசபின் .. ஜோசபின்னு உளறினியா’?

’கயல்னு தான் உளர்றது வழக்கம்’.

’சுத்துடா நல்லா ரீல் சுத்து’. அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மதிமுகத்தம்மாள் உள்ளே இருந்து பெரிய கேரியரில் சாப்பாட்டோடு வந்து ஸ்கூட்டர் பெட்டியில் வைத்தாள். பா.வே திரும்பக் கிளம்பினார்.

’கல்லாடச் சித்தருக்கு குழைய வடிச்ச சாதமும் ரசமும் இங்கே இருந்துதான் போவுது. அப்பா இப்படியான வேலைக்கெல்லாம் போக மாட்டார். புது ஸ்கூட்டரை ஓட்ட இதெல்லாம் சாக்கு இல்லையா. அதான் இழுத்துப் போட்டுக்கிட்டு ஓடறார்’.

கயல் சிரித்தாள். அவளுக்கு ரெண்டு நாள் நான் அனுபவித்து வந்த சுகமும் துக்கமும் தெரியாமல் இருப்பதில் எனக்கு சின்னதாக நிம்மதி.

புத்தக அல்மாரியில் இலக்கு இல்லாமல் புத்தகம் புரட்டிக் கொண்டு நின்றேன். கையில் கிடைத்த மூவரையன் விறலிவிடு தூது புத்தகத்தைப் புரட்டுவதற்குள் கயல் பறித்து வைத்தாள்.

’எப்படிடா இதெல்லாம் உன் கண்ணுலே படுது. விவரமான ஆளுடா நீ’..அவள் என்னை விழுங்கி விடுவது போலப் பார்க்க, தழுவிக் கொள்ள எதிர்பார்ப்பு புரிந்தது. இல்லை, இப்போது எனக்கு எந்தத் தகுதியும் இல்லை அதற்கெல்லாம்.

’கோபிச்சுக்கிட்டுப் போன சாமி கோவணத்தோட இல்லே போகணும்.?’.கயல் கலகலவென்று சிரித்தாள்.

அவளுடைய உற்சாகம் எனக்கு இனி தொற்றுமோ என்னவோ. அதனாலென்ன, அதைப் போலியாக முகத்தில் பூசி நிற்கலாம். கயலை வருத்தப்பட விடக் கூடாது. அவளுக்காக ஆடுடா ராமா என்று ஆடவும் தயார்தான். ஓடுடா நாயே என்று விரட்டினால் ஓடி ஒளியவும் ரெடியே

’சாப்பிட வாங்க தம்பி’

மதிமுகத்தம்மாள் விளிக்க, சர்க்கரை வ்ள்ளிக் கிழங்கா அம்மா என்று கேட்டேன். இல்லேப்பா, சோறு ரசம் வாழைக்காய். அமாவாசையாச்சே

அவள் உள்ளே போக கயல் என் உதடுகளில் மெல்ல மிக மெல்ல ஒரு முத்தம் ஈந்தாள். திருப்பித் தருவதா நன்றி சொல்வதா என்று குழம்பி கண் மூடி நின்று கொண்டிருந்தேன்.

’என்னடா சட்டை எல்லாம் ஒரே கப்பா இருக்கு? ஓ நீ தான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டே இல்லே?’

உள்ளே போய் ஒரு நாலு முழ வேட்டியும் கதர்த் துண்டுமாக வந்தாள்.

’இதை உடுத்திக்கிட்டு துணியை விழுத்துக் கொடுடா’.

வேணாம் கயல் என்று அவசரமாக மறுத்தேன்.

’போடறியா, நானே கழட்டட்டா’?

வேட்டி துண்டுக்கு மாறினேன். விழுத்துப் போட்ட துணிகளை பிளாஸ்டிக் வாளியில் போட்டு, கணுக்கால் தெரிய இழுத்துச் செருகிய பாவாடையோடு நகர்ந்த கயல் நின்றாள். திரும்பினாள்.

’உள்ளே போட்டிருக்கறதை யாரு துவைப்பா? போடுறா அதையும்’.

’கயல் கயல் ஓ கயல்’

’என்னடா கயல் கயல்னு ஜபம்’?

’நீ எதுக்கு அதை எல்லாம்’?

’அது உனக்கு தேவை இல்லாத கவலை’.

’சரி அப்படியே இருக்கட்டும். துவைக்கப் போட்டுட்டு எப்படி சாப்பிட உட்கார்றது? உங்க அம்மா பரிமாறினா எனக்கு கூச்சமா இருக்கும்’.

’சரி அவங்க சோறு போட வேணாம். நான் வந்து போடறேன்’.

’அய்யய்யோ அது இன்னும் கஷ்டம்’.

என்ன கஷ்டம்? அவள் கண்ணை விரித்துக் கேட்டு விட்டுச் சிரித்தாள்

’சரிடா, நல்ல ஒட்டப் பிழிஞ்சு தரேன் அதை மட்டும்’

’மெர்சி கயல்’

’ஏண்டா வீட்டை விட்டு ஓடற்துதான் ஓடறே ஒத்தை அண்டர்வேரோடயா இறங்குவே’?

நான் சங்கட்மாகச் சிரித்தேன்.

’ஆமா உன்னை லலி தொலெந்தால் வீதியிலே பார்த்ததா யாரோ சொன்னாங்களே? சாக்லெட் கடிச்சுக் கொடுக்கறேன், வான்னு கூப்பிட்டாளா உலக அழகி? மறுபடியும் திருவிளையாடல் ஆரம்ப்மா’?

’சே சே அதெல்லாம் இல்லே கயல்.. அரியர்ஸ் கிளியர் பண்ண பாடம் சொல்லிக் தரேன். ரொம்ப கேட்டா.. டிகிரி இல்லாம பிரான்ஸிலே வேலை தேட முடியாதாம்…வேலைக்குப் போயே ஆகணும்னு க்ட்டாயமாம்.. கேட்க கஷ்டமா இருந்தது’..

அது உண்மையும் தான். ஆனால் அது மட்டும் உண்மை இல்லை.

’அரியர்ஸ் கிளியர் பண்ண உதவி செய்யறது பாடத்தோட நிக்கட்டும். வேறே அரியர்ஸ் எல்லாம் அவளோட கூட இருந்து ஆனந்தமா முடிச்சுக்கலாம்னு மோப்பம் பிடிச்சு அங்கே போனே, மவனே’

உள்ளாடையை எந்த அருவறுப்பும் இல்லாமல் எடுத்து வாளித் துணிகளோடு இட்டாள் கயல். என் பக்கத்தில் வந்து சொன்னாள் -

’அறுத்துப் போட்டுடுவேன். ஜாக்கிரதை’.

(தொடரும்)

தியூப்ளே வீதியை நிறைவு செய்யும் நேரத்தில் …


எழுத்து பயில்வதில் எழும் மேலதிக மகிழ்ச்சி வாழ்வு சார்ந்த புதினம் – பயோ ஃபிக்‌ஷன் – எழுதும்போது தான்.

நெம்பர் 40, ரெட்டைத் தெரு எழுதும் போது அனுபவித்தது இது. தியூப்ளே வீதி எழுதிக் கொண்டிருக்கும் போது இன்னும் கூடுதலாக அனுபவித்துக் கொண்டிருப்பதும் இதுவே.

பதின்ம வயதின் இறுதியில் மறுபடி போய் நின்று கடந்து வந்த பாதையைப் பார்க்கும் போது, மறுபடி வாழ வாய்ப்புக் கிடைத்த பரவசம்.

அன்று நீராடிய நதிகளில் எல்லாம்
சென்று நீராட விரும்புகிறேன்

என்பார் ஜெயகாந்தன் ஒரு கவிதையில். பயோ பிக்‌ஷன் அந்த மறு பயணத்தை நோஸ்டால்ஜியாவாக மட்டும் இல்லாமல் அந்தக் கணங்களில் வாழ்ந்து நிகழ்த்த வழி செய்வது.

ஒவ்வொரு அத்தியாயத்தை எழுதத் தொடங்கும் முன்பும் உற்சாகமும் ஆனந்தமுமாக நினைவுகளின் ஊர்வலம் மனதில் கெக்கலி கொட்டிப் புறப்பட்டு விடும். புனைவு கலந்து அவற்றை எழுத்தாக வார்த்தெடுத்ததும் ஏற்படும் நிறைவு அலாதியானது.

எழுத்து வாழ்க்கையைச் சொன்னாலும் எழுதி முடித்த படைப்பிலிருந்து விலகி நின்று பன்முகப் பொருள் தரும் வாசிப்பை ஏற்படுத்த வழி செய்யவே நான் விரும்புவேன். எனினும் ரெட்டைத் தெரு எழுதி முடித்ததும் கொஞ்சம் அழுதேன். நூலை நிறைவு செய்யும் பக்கங்கள் மனதைக் கிள்ளியெடுத்துக் கொண்டுதான் இறங்கி நகர்ந்து மறைந்தன.

தியூப்ளே வீதி நாவலை நிறைவு செய்யும் அத்தியாயங்களை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். பிரியத்துக்கு உரிய அந்தத் தோழியரையும் நண்பர்களையும் மறுபடி பிரியும் துயரம் தலை தூக்கும் நேரத்தில் பிரான்ஸில் / சுவிட்சர்லாந்தில் குடிபுகுந்த, ஒரு புதுவை நண்பரின் கடிதம் வந்திருக்கிறது -

’நான் விரைவில் புதுவைக்கு வருகிறேன். அங்கே வந்து என்னோடு ஒரு நாள் செலவிட இயலுமா?’

ஆத்மார்த்தமாக அவருக்கு நன்றி சொன்னேன். போய் வர வேண்டும்.

எழுத்தும் நட்பும் இதமாகக் கலக்கும் சூழலில் தியூப்ளே வீதி நிறைவடைந்து கொண்டிருக்கிறது. விரைவில் 600 பக்க அளவில் நேர்த்தியான புத்தகமாக வெளிவரும்.

New Bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 27 இரா.முருகன்

நடராஜன், நீங்க கிளம்புங்க

அப்பா என் பக்கம் திரும்பாமல் நேரே வின்செண்ட் நடராஜனைப் பார்த்தபடி சத்தமாகச் சொன்னார்.

சார், டியூட்டி முடிய நேரம். இருக்குதுங்களே.’

வின்செண்ட்.தயங்கித் தயங்கிச் சொன்னார். அவர் பார்வை என் பேரிலேயே முழுக்க இருந்தது.

‘இன்னிக்கு ஒரு நாள் சீக்கிரம் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்களேன்.. மத்தவங்களுக்கு உழைச்சு உழைச்சு என்னத்தைக் கண்டோம். நம்மை நாமே தான் பார்த்துக்கணும். இல்லையோ மரியாதை கெட்டு சாவோம்’.

அப்பா அவச்சொல் சொல்லிக் கேட்டதே இல்லை. மனம் நொந்து போயிருக்கிறார். நான் தான் காரணம். அவர் சொல்லாமலேயே தெரியும். மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வின்செண்ட் நடராஜன் என்னையும் அப்பாவையும் மாறி மாறிப் பார்த்தபடி காம்பவுண்ட் ஓரமாக வைத்த சாக்குப் பையில் இருந்து வண்டி மாட்டுக்குப் போடும் கூளத்தை அள்ளிக் கொண்டு நடந்தார்.

‘நடராஜன், நீங்க போகிறபோது வெளியாள் யாரும் உள்ளே வேணாம். கதவை இழுத்துச் சாத்திட்டுப் போங்க’

அதற்குள் நடராஜன் வண்டி பூட்டிக் கிளம்பி விட்டார்.

‘அப்பா நான் வெளியாளா?’

யார்டா அப்பா? நீ என் பிள்ளையா? காவாலிப் பய. நடுத்தெருவிலே வெக்கமே இல்லாம பொம்மனாட்டியைக் கட்டிப் பிடிச்சுண்டு உருளற கழுவேறி.. நாய் கூட நாலு பேர் பக்கத்திலே இருந்தா இங்கே வேணாம், ஜனம் கல்லு கொண்டு எறியும்னு ஓரமா ஓடும். நீ? உசிருக்கு ஆபத்துலே பெத்தவன் இருந்தாக் கூட பொம்பளை வாடை பிடிச்சுண்டு ஓடற கிராதகன். எங்கே எங்கேன்னு நெட்டை விட்டுண்டு உடம்பு தேடற சுகம் தானாடா சகலமும்? அப்படி என்னத்துக்காக அதுக்கு தீனி போடணும்? உனக்கு மட்டும் அரைக்கெட்டுலே இல்லாம தலையிலேயா மொளச்சிருக்கு தறிகெட்டு திரியறதுக்கு? அப்படி இருந்தா அந்த அசிங்கத்தை அறுத்துப் போட வேண்டியது தானே? படிக்கற காலத்துலே பொண்ணு சகவாசத்துக்கு அலையற தெம்மாடி,. நீ எவ்வளவு கேவலமானவன் புரியற்தா? இந்தக் கண்றாவியை எல்லாம் நான் பார்க்கணும்னு விதிச்சிருக்கே. என் கண் காணாமே ஒழி. பிள்ளையே பிறக்கலேன்னு வைச்சுக்கறேன் போ புழுத்த தெருவு பட்டி.’.

நாயே என்று சொன்ன பிறகு இங்கே எனக்கென்ன வேலை? வெளியே வந்தேன். மனசு வெறுமையாக இருந்தது.

காம்பவுண்ட் ஓரமாக சைக்கிளை ஸ்டாண்ட் எடுக்கும்போது தோன்றியது, இதையும் விட்டுவிட்டுப் போக வேண்டுமோ?

பின்னால் திரும்பிப் பார்த்தேன். மாடிக் கதவுகள் ஆச்சரியப்பட்டுக் கூட்டாகச் ச்த்தமெழுப்பி, அடைத்து மூடிக் கொண்டன.

ராலே சைக்கிளை பிரியத்தோடு தடவிக் கொடுத்தேன். நீ என்னோடு இருப்பியா? என் சுகம் எல்லாம் கூட இருந்து பகிர்ந்தாச்சு. துக்கத்க்கும் நீ தான் இனி என் கூட வரணும்.

மௌனமாக சைக்கிள் ஓட்டிப் போக, மனதில் அடங்காமல் எழுந்து வந்த அழுகையைப் பிடிவாதமாக நிறுத்தினேன். அதற்கான வயது கடந்து போய் விட்டது.

புஸ்ஸே தெருவில் ஜபமேரி லாண்டரியின் கதவுப் பலகைகளை ஒவ்வொன்றாக எடுத்துத் திறந்து கொண்டிருந்தார் கடைக்காரர். ஒரு வினாடி நின்றேன். இன்னும் இரண்டு நாளில் காலேஜ் திறக்கிறது. மற்றது எல்லாம் எப்படியாவது சமாளித்தாலும் உடுப்பு? ஜபமேரி லாண்டரியில் வெளுக்கப் போட்டிருந்த துணி வந்திருக்குமா?

வந்திருந்தது.

’என் துணியை மட்டும் கொடுங்க. மத்ததை எல்லாம் வீட்டுலே கொடுத்திடுங்க அண்ணே. நான் ஊருக்கு போயிட்டிருக்கேன்’.

என்னை ஏற இறங்கப் பார்த்த லாண்டரிக்காரர் டோபி மார்க் பார்த்து பிரித்தெடுத்த துணி அடுக்கைக் காட்ட ரெண்டு பேண்டும் ரெண்டு சட்டையும் மட்டும் என்னுடையது. இனிமேல் எத்தனை காலம் இது ரெண்டு மட்டும் தான் உடுத்தி வலம் வரவேண்டுமோ தெரியவில்லை.

சட்டைப் பையைப் பார்த்தேன். லாண்டரிக்கு ஐந்து ரூபாய் கொடுத்தது போக, பர்ஸில் மொத்தமே முப்பத்தைந்து ரூபாய் தான் பணம். இன்னும் எத்தனை நாளைக்கு இது கூட வருமோ.

எங்கே போகலாம்? அமேலி வீட்டுக்கு? வேண்டாம். அங்கே போய்க் குடியேற உத்தேசம் இல்லை. அதுவும் அவள் வாடகைக்கு இருப்பிடமும் காசுக்குச் சாப்பாடும் வாங்கித் தங்கி இருக்கும் வீட்டில்

ஜோசபின்? மறுபடி கண் நிறைகிறது. ஜோசபின் என்ற ஆருயிர் சிநேகிதி கிடைக்க எனக்கு என்ன தகுதி? அவளை நினைக்கவும் எனக்குத் தகுதி இருக்கிறதா? தெரு நாய் நான். இதை விட நான் சுய மதிப்பிலும் மற்றவர் மதிப்பிலும் தாழ்ந்து போக முடியாது. இல்லை, நரகத்துக்குள் தலைகீழாக, போய்க் கொண்டிருக்கிறேன். குப்புற விழுவது நானாக மட்டும் இருக்கட்டும். என் கசடு எதுவும் தொடாத பரிசுத்தத்தோடு ஜோசபின் உயிர்க்கட்டும்.

கயல்? அந்தக் குழந்தையை நான் சந்தித்திருக்கவே கூடாது. அன்பைப் பொழிந்து ஆதரவாக அணைத்துப் புதுத் தும்பைப் பூவாகக் கண்ணுக்குள் வைத்துப் பாதுகாக்க வேண்டியவள் என் கயல். அணைக்கவும் அன்பு செலுத்தவும் இந்த நாய்க்கு என்ன உரிமை இனி? அவளை விட்டு விலகி இருப்பதே அவளுக்கு இப்போது செய்யக்கூடிய பெரிய உதவி.

கூட்டிக் கழித்து நடந்ததெல்லாம் அமேலி தலையிலா விடிய வேண்டும்? நிச்சயம் இல்லை. நான் அவளைச் சரியாக வழிநடத்தி இருக்க வேண்டும். அவளுடைய வலிமையற்ற நிலையைச் சாதகமாக்கி ருசித்து அவள் தசை சுவைத்த, காமமே உருவெடுத்த நாய் நான்.

கல்லூரி போகிற பாதையில் சைக்கிள் திரும்பியது. அதுவும் சரிதான். இன்னும் இரண்டு நாளில் காலேஜ் திறப்பதால், ஹாஸ்டல் முன்னதாகவே திறந்திருக்கும். கூடப் படிக்கிற எத்தனை பேர் அங்கே.

சைக்கிள் காலேஜ் மண்மேடு ஏறும்போது கயல் நினைவு. புயல் மழை நேரத்தில் அவளோடு இந்த ராலே சைக்கிளில் தான் நெருங்கி உட்கார்ந்து முழுக்க நனைந்தபடி பயணம் போனது. கயல் கண்ணம்மா என்னடி செஞ்சுக்கிட்டிருக்கே. என்னை நினைக்கறியா? வேணாம். மற.

ஹாஸ்டல் வாசலில் எப்போதும் போல் சகஜமாக உள்ளே போக அனுமதி கிடைக்கவில்லை. புதுசாக வாசலில் ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருந்த நேபாளி கூர்க்கா இந்தி மட்டும் தான் பேசினான். அவனுக்கு நான் உள்ளே போவதில் எந்த அக்கறையும் இல்லை. நான் இந்தக் காலேஜில் படிக்கிறேன் என்ற சுய அறிமுகமும் சல்லிக் காசுக்கு அவ்னுக்கு பிரயோஜனமில்லாத ஒன்று. என்னைப் போலவே.

’என்ன முஸ்யே இங்கே நிக்கறீங்க’?

ராஜராஜ பூபதி. போன வருடத்தோடேயே படிப்பு முடித்தவர்.

’என்ன அண்ணே, டிகிரி முடிச்சும் ஹாஸ்டலை விட மனசு வரலியா?’ என்று கேட்டேன்.

’தம்பி, டிகிரி ஓஞ்சுது இனி போஸ்ட் கிராஜுவேஷன்’, உலகமே வசப்பட்ட திருப்தி குரலில் தொனிக்கச் சிரத்தையாகச் சொன்னார் அவர்.

’அதுக்கு நீங்க மெட்ராஸ், சிதம்பரம், திருச்சின்னு போகணுமே’.

’யார் சொன்னது? இந்த வருஷத்திலே இருந்து நம்ம காலேஜிலேயே எம் ஏ எகனாமிக்ஸ், இங்கிலீஷ் லிட்டரச்சர். அடுத்த வருஷம் எம் எஸ்ஸி பிசிக்ஸ், அப்புறம் அறுத்துக் கட்டறது’.

’கல்யாணமா, சோஷியாலஜியா?’ ஆவலோடு விசாரித்தேன்.

’அட பூச்சி பொட்டு எல்லாம் மல்லாக்கப் போட்டு கத்தியாலே கிழிச்சு’.

’எம் எஸ்ஸி ஸுலஜியா’?

’அதான்.. ஜுவாலஜின்னு சரியா சொல்லணும்’, கற்றுக் கொடுத்தார்.

’ஒண்ணும் பிரச்சனை இல்லேண்ணே, சொல்லிடலாம்’.

மனசு முழுக்க இருண்டு கிடக்க, திடீரென்று நூறு வாட்ஸ் பல்ப் எரிய விட்ட மாதிரி ஒரு பிரகாசம். டிகிரி முடித்ததும் இந்த ஊரை, காலேஜை விட்டுப் போக வேண்டியதில்லை. இன்னும் ரெண்டு வருஷம் இங்கேயே குப்பை கொடட வழி பிறந்திருக்கிறது. நல்வாக்கு சொன்ன ராஜராஜ பூபதியைக் கட்டிக் கொண்டேன்.

’தம்பி செண்டிமெண்டு ஆகிட்டீங்க போல… என் பேரிலே இவ்வளவு பிரியம் வச்சுருக்கறவங்க எங்கம்மா மட்டும் தான்னு நினைச்சேன்’.

பூபதி நெகிழ்ந்து போனார். எனக்காக எதுவும் செய்வார் என்று தோன்றியது. நேப்பாளி கூர்க்காவை அலட்சியமாகப் பார்த்து ராஜராஜ பூபதியோடு ஹாஸ்டல் உள்ளே நுழைந்தேன்.

பழைய ரூம் மேட் யாரையோ வழியில் பார்த்து அவர் உடனடி ப்ரேக் போட்டு சாவகாசமாகக் குசலம் விசாரித்தபடி நிற்க நான் அவரிடம் சொல்லிக் கொண்டு முன்னால் நடந்தேன்.

ஒவ்வொரு அறையாகத் தேட வேண்டும். எப்படியும் நாலைந்து சகாக்களாவது வந்திருப்பார்கள். ஒவ்வொருத்தருடன் ஒரு வாரம் தங்கினால் ஒரு மாதம் தானே கடந்து போய்விடும். அவ்வளவு ஹாஸ்டல் நண்பர்கள் உண்டு. அதற்கு அப்புறம் எப்படி என்று நேரம் வரும்போது யோசித்துக் கொள்ளலாம்.

எல்லாம் சரி, இங்கேயே இன்னும் ரெண்டு வருஷம் டேரா போட, யார் என்னைப் பட்ட மேல்படிப்பு படிக்க வைக்கப் போகிறார்கள்?

நான் செய்யறேண்டா என்று மனதில் ஒரு பக்கத்தில் இருந்து மேகலாவும் மற்றதில் இருந்து ஜோசபினும் முன்னால் வந்தார்கள்.

முதல் காதலை எப்படி மறக்கப் போச்சு என்று மேகலா தெற்றுப் பல் சிரிப்போடு ஜோசபினிடம் சொன்னாள். ’இவனா? காதலா? முகத்தை வச்சு அடையாளம் காணறதை எப்பவோ விட்டுட்டான் தெண்டி.. படம் வரைஞ்சு பாகங்களைக் குறின்னு சொன்னா குஷியா நம்ம எல்லோரையும் ஒரு வழி பண்ணிடுவான். அமேலி தான் ஆரம்பம்’. கயல் அவர்களோடு சேர்ந்து நின்று என்னைக் கைகாட்டி இகழ்ந்தாள்.

அழகான பெண்களே, என் இன்னுயிர்த் தோழிகளே, எல்லா கசடுகளோடும் நான் இன்னும் உயிர் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் உங்கள் அன்பும் உங்கள் மேல் என் தீராக் காதலும் தான் காரணம். உடலும் காமமும் எரிந்து தீரும். நான் இருப்பேன் நீங்களாக.

ஒரு வாரம் பொள்ளாச்சி போய் மேகலா வீட்டில் இருந்து விட்டு வரலாமா? காலேஜுக்கு யார் போவது?

ஹாஸ்டல் கீழ்த் தளத்து அறைகளில் யாரும் வந்திருக்கவில்லை. மேலே நாலு ரூம் பூட்டியிருந்தது. யாரோ வந்து வெளியே போயிருக்கலாம். நாலாவது அறையில் மூன்று சகாக்கள் சிங்கப்பூர் லுங்கி கட்டி, மும்முரமாக சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

’லிங்கம், நல்லா இருக்கீங்களா? பாவெல் எப்படி இருக்காபல? அப்பாண்டை நயினார், சௌக்கியமா’?

ஹாஸ்டல் நண்பர்கள் கிட்டத்தட்ட எல்லோருமே வாங்க போங்க மரியாதைக் காரர்கள். வீட்டில் இருந்து தினசரி பஸ் ஏறி வந்து, சைக்கிள் சவட்டி வந்து படித்துப் போகிற டே ஸ்காலர்களோடு உருவாகிற வாடா, போடா, மச்சான் மாமன் உறவுகள் இங்கே அபூர்வமானதாகவே இருக்கிற உண்மையை ஆச்சரியத்தோடு நினைத்தபடி போன்ஷூர் சொன்னேன் மூவருக்கும்.

முகம் மலர்ந்து அவர்கள் எனக்குக் காலை வணக்கம் சொன்னார்கள் என்றாலும் ஏதோ குறைகிறது அவர்களின் குரலில். கண்ணில் உற்சாகம் குறைவாகத்தான் தட்டுப்படுகிறது. அப்படி ஒரு தோற்றம்.

’அதென்ன தம்பி, நாங்க தான் வெளியூர் ஆளுங்க. ரெண்டு நாள் முன்னாடியே கிளம்பி வந்து செட்டில் ஆகிட்டு இருக்கோம். நீங்க டே ஸ்காலர். காலேஜ் திறக்கற அன்னிக்கு கெத்தா வந்தா போதாதா’?

சீட்டை மார்போடு அணைத்துப் பிடித்தபடி நயினார் விசாரித்தார். கயல் வகுப்பு. பயமின்றி தவளை அறுத்து ஜூவாலஜி படிக்கிறார். கயல் என் பிரியமான தோழி என்று தெரிந்தவர். யாருக்குத் தான் தெரியாது?

பாவல் சீட்டை மடியில் வைத்துக் கொண்டு கள்ளச் சிரிப்பு சிரித்தார். வேதியியல் படிக்கிறார். வ்ல்லூரி சார் காப்பர் சல்பேட் திரவத்தை லேபரட்டரியில் ஆறு போல பெருக விட்ட தினத்தில் அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்த தொண்டர்களில் இவரும் அடக்கம்.

’தம்பி பத்தி தெரியாது உங்களுக்கு நயினார். அவர் முகத்தைப் பாருங்க. பால் வடியுது இல்லே. ஏமாந்திடாதீங்க. மகா கள்ளன். நீரும் தான் மூணு வருஷம் இங்கே டிகிரி சிங்கி அடிச்சுட்டு இப்போ எம் ஏ வந்திருக்கீங்க. ஒத்தையா ஒரே ஒரு பொம்பளை பிரண்டு உண்டா உமக்கு? ஆனா, தம்பிக்கு? கேட்டுப் பாருங்களேன் லிஸ்ட்டே உண்டு’.

’அய்யே களியாக்காதீங்க அண்ணே. காலேஜ் முழுக்க சிநேகிதங்க தான் எனக்கு. அதுலே ஆணென்ன பொண்ணு என்ன? பிரண்ட் பிரண்ட் தானே’. நான் வெட்கப் பட்டதாக நடித்தேன். வெட்கப்பட வேண்டியதற்கே வெட்கப்படவில்லை. இதுக்கென்ன போச்சு?

’நீங்க சரின்னா இங்கே ரெண்டுநாள் தங்கலாம்னு யோசனை’. இது கேண்டீனில் காராபூந்தி கொறிப்பது போல மிக சாதாரணமான விஷயம் என்பது குரலில் தொனிக்க வெகு ஜாக்கிரதையாகச் சொன்னேன். அதுக்கென்ன, ராஜா மாதிரி இருங்க என்று கட்டாயம் பதில் வரும். அப்புறம் இருக்கும் இடம் தவிர மற்றது பற்றி மட்டும் யோசிக்கலாம்.

மூன்று பேரும் சீட்டைப் பார்க்காமல் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். சங்கடமான ஒரு மௌனம் அங்கே நிலவியது.

நயினார் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். மற்றவர்கள் அவர் வாயைத் திறக்கும் முன்பே அவரோடு அனுசரணை கொண்டவர்கள் என்ற முகக் குறிப்பு புலப்படுத்தி இருந்தார்கள்.

’தம்பி ஒரு வருஷம் முந்தின்னா, நீங்க தங்கறேன்னு சொன்னதும் ரத்தினக் கம்பளமே வாடகைக்கு எடுத்து விரிச்சிருப்பேன்.. இப்போ நிலைமை மாறிப் போச்சே.. காலேஜ் ஆஸ்டல்லே தீவிரவாதிங்க அடைஞ்சு நாடு கெட்டுப் போயிட்டிருக்குன்னு புகாராம். கவர்மெண்ட், காலேஜ் நிர்வாகம், போலீஸ், கல்லூரி ஊழியர் சங்கம் இப்படி எல்லாத் தரப்பிலேயும் கெடுபிடி அதிகமாகிப் போச்சு. ஹாஸ்டல்லே பணம் கட்டிப் பதிவு செஞ்சு குடி இருக்கறவங்க தவிர வெளியாருக்கு இருக்க அனுமதி இல்லேன்னு வாசல்லே கட்டம் கட்டி கண்ணாடிப் பெட்டிக்குள்ளே வச்சு மாட்டி இல்லே இருக்காங்க. நீங்க பார்க்கலியா? குட்டி போட்ட பூனை மாதிரி வார்டன் அந்தோணிசாமி சுத்திச் சுத்தி வரார் தினமும்..பரீட்சைக்கு நாலு நாள் முந்தி நடு ராத்திரிக்கு வார்டன் ரெய்ட். என் ரூம்லே எலக்ட்ரிசிட்டி போர்ட்லே வேலை பார்க்கற ரெண்டு சிநேகிதங்க இருந்தாங்க. அவ்ங்களை எழுப்பி விட்டு தூக்கக் கலக்கத்துலே சுவர் ஏறிக் குதிச்சு வெளியே போக வச்சு.. ஒருத்தர் வேட்டியே கட்டாம ஓடினார்.. இன்னொருத்தர் தடுக்கி விழுந்து காயத்தோடு காணாமப் போனார் பாவம்..எளவு இது வேணுமா நமக்கு’?

நயினார் சீட்டைக் கவிழ்த்து வைத்து விட்டுக் கழிப்பறை போனார். என் பதிலைக் கேட்காமல் தவிர்க்க நினைத்திருக்கலாம்.

’அப்படி எல்லாம் உங்களை மாட்டி விட மாட்டேன் அண்ணே.. ரெண்டே ரெண்டு நாள்..’. பாவலிடம் சொன்னேன். சொன்னேனா, பிச்சைக்காரன் மாதிரி கூனிக் குறுகி யாசித்தேன்.

’கஷ்டம் தம்பி.. வேணும்னா ஒண்ணு செய்யலாம். இன்னிக்கு ஈவினிங் வரைக்கும் இருங்க. ராத்திரி ஒம்பதுக்கு வெளியேறிட்டு பெறகு காலையிலே எட்டுக்கு வந்துடுங்க. நாளைக்கு சாயந்திரத்தோட வேறே இடம் கிடைக்காமலா போயிடும்’? லிங்கம் நைச்சியமாகச் சொன்னார்.

சே என்று வெறுத்துப் போனது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அங்கே வெளியிலிருந்து வரும் யாருக்கும் தங்க என்ன, ஹாஸ்டல் அறையில் மணிக் கணக்காக உட்கார்ந்து பேசிப் பொழுது போகவும் இப்போது அனுமதி இல்லையாம். நான் வெளியே போகும் வரை இவர்களுக்கு நிம்மதி இருக்காது. இருக்க் இடம் இன்றி அலைந்து திரியும் யூதன் நான். Wandering Jew. வந்தாகி விட்டது. போயாக வேண்டும். இருக்குமிடம் இல்லை, தேடும் இயக்கம் மட்டும் நிரந்தரம்.

‘அண்ணே இப்போ நான் இங்கே குளிச்சுக்கலாமா?’ பாத்ரூமில் இருந்து வந்து கொண்டிருந்த நயினாரை பணிவாக விசாரித்தேன். மூத்திரம் போக இட வ்சதிக்குக் கூட கெஞ்சிக் கூத்தாடி நிற்பதாக ஒரு அச்சமூட்டும் எதிர்காலம் தெளிவில்லாமல் முன்னால் எழுந்து நின்றது.

’தண்ணி இப்போ தான் வர ஆரம்பிச்சிருக்கு. ஒரு பக்கெட் பிடிச்சு வச்சிருக்கேன். நீங்க குளிங்க தம்பி. முடிச்சு தண்ணி பிடிச்சு வச்சுடுங்க. வரல்லேன்னா, மொட்டை மாடி டேங்குக்கு வாளியை எடுத்துப் போய் பிடிச்சு வந்தா குளிச்சிடுவேன். நான் பார்த்துக்கறேன் நீங்க குளிங்க’.

நயினார் சீட்டுக் கட்டை பத்திரமாக சுவரில் வரிசையாகப் பதித்த சிமெண்ட் பலகைகளில் ஒன்றில் வைத்தபடி சொன்னார். மடித்து வைத்த ச்ட்டைகளும், ஷேவிங் பிரஷ்ஷும், பயோரியா பல்பொடியும், சித்தநாதன் வீபுதி பாக்கெட்டுமாக சுவர் அலமாரி முழுக்க இரைந்து கிடந்தது. ஒரு பேட்மிண்டன் மட்டையும் அழுக்கான இற்குப் பந்தும் கூட அங்கே உண்டு.

அவசரக் குளியல். வீட்டிலிருந்து சடுதியாக வெளியேறிய போது சோப் டப்பா எடுத்து வைத்துக் கொள்ளாமல் போனது உறைத்தது. பிக்னிக் வந்திருக்கிறேனா என்ன? அலையும் யூதன் குளிக்காவிட்டால் யாருக்கு நஷ்டம்? சோப் தேசலாகக் கிடைத்தாலும் சரி. இங்கே இருந்தால் எடுத்துத் தேய்த்துக் கொள்ளலாம் என்று ஈரக் கையால் தேடினேன். நயினாரோ யாரோ புது சந்தன சோப்பை டப்பாவில் வைத்திருந்தார்கள். அது வேண்டாம் என்று பின்னும் தேட, அலமாரியில் சோப்பு டப்பாவைச் சுற்றி நாலைந்து தேசல் சோப்புத் துண்டங்கள் தட்டுப்பட்டன. தண்ணீர் விட்டு அழுத்தி அதை எல்லாம் சேர்த்து கதம்பமாக ஒட்ட வைத்து இழுத்து தேய்த்துக் கொண்டு தண்ணீர் விட சோப் திட்டுத் திட்டாகத் தேமல் போல உடம்பில் தேங்கி நின்றது. தியூப்ளே வீதி வீட்டில் கொட்டு கொட்டென்று ஷவரில் அருவி விழக் குளிக்கிற சுகமெல்லாம் இனிமேல் கயல் போல் கனவில் தான்.

சலவை உடுப்பு மாட்டிக் கொள்ளும்போது விழுத்துப் போட்ட துணியைத் துவைக்கவில்லை என்று நினைவு வந்தது. உள்ளதுக்கே தண்ணீர் இல்லாத இடத்தில் துணி துவைக்க எங்கே போக? விழுத்துப் போட்ட துணிகளைச் சுருட்டி வைத்தேன். அதுகளுக்கு நேரம் காலம் வரும்போது அலக்கி உலர்த்தி அயர்ன் செய்து மாட்டிக் கொள்ளலாம்.

’தம்பி இங்கேயா இருக்கீங்க, தேடிட்டு இல்லே இருந்தேன்’.

ராஜராஜ பூபதி உள்ளே வேகமாக வந்தார்.

’ஒண்ணுமில்லே, அவசரமா ஒரு முப்பது ரூபா வேண்டியிருக்கு. பேங்க் கவுண்டர்லே எடுக்கலாம்னு பார்த்தா இங்கே கவுண்டரை அடுத்த வாரம் தான் திறக்கறாங்களாம். மெஸ் பீஸ் கட்ட குறையுது. டவுணுக்குப் போய் எடுத்து வந்து சாயந்திரம் தரேன்’ என்றார் அவர்.

‘மெஸ் பீஸ் தனியாக்கிட்டாங்களா, வாழ்க’ என்றார் நயினார் டவலை இடுப்பில் கட்டி நின்றபடிக்கு.

’அதை ஏன் கேக்கறீங்க. இதுவரை கேண்டீன்லே தானே நாம ஹாஸ்டல் ஸ்டூடண்ட்ஸ் சாப்பிட்டு வந்தோம்… மலையாளத்தான் மாட்டேன்னு சொல்லிட்டான் போல.. தனியா மெஸ் தொடங்கியாச்சு. கிட்ட முட்டப் போய் விசாரிச்சா அனேகமா இவனும் இன்னொரு மலையாளியா, கேண்டீன் நாயருக்கு சகலபாடி, சம்பந்தியாகத் தான் இருக்கும்’ என்றார் ராஜராஜ பூபதி.

நான் அவர்களோடு சேர்ந்து சிரித்தபடி பர்ஸில் இருந்து முப்பது ரூபாய் எடுத்து பூபதிக்குக் கொடுத்தேன். மிச்சம் ஒரு ஐந்து ரூபாய் நோட்டும் கொஞ்சம் சில்லறையும் இருந்தது. காசு ஏதோ உருண்டு வெளியே ஓடியது. அவசரமாகப் பொறுக்கி எடுத்தேன். காசு பணம் விஷயத்தில் ஜாக்கிரதையா இரு என்று மின்னும் புது ஐம்பது பைசா நாணயத்தில் இருந்த தொப்பி இல்லாத நேரு எச்சரிக்கை செய்தார்.

நயினார் குளிக்கக் கிளம்பினார்.

’மெஸ்ஸிலே இட்லி போடறானுங்களாம். ஹாஸ்டல் பசங்களுக்கு மட்டும் தான்னு கட்சி கட்டுவான். பார்த்துக்கலாம். நீங்க என்ன மிஞ்சிப் போனா ரெண்டு இட்லி திம்பீங்களா? நான் வாங்கி உங்க தட்டுலெ போட்டா என்ன செய்வானுங்களாம்’? பூபதி சந்தேகம் கேட்டார்.

அப்படி கேவ்லமாக இங்கே லா பாயிண்ட் பேசிச் சாப்பிட வேண்டுமா?

’வேணாம் அண்ணே. நான் டவுணுக்குப் போய் சாவகாசமா வரேன்’.

மூட்டை முடிச்சோடு கிளம்பினேன்.

’ஆமா, கேட்க விட்டுட்டேனே. ஏன் ஹாஸ்டல்லே தங்கணும்னு ஆகிப் போனது? அப்பா டிரான்ஸ்பர் ஆகிப் போய்ட்டாரா? ஒரே நாள்லே வீட்டை காலி எல்லாம் செய்ய சொல்ல மாட்டாங்களே..’. ராஜராஜ பூபதி நாலு அடி முன்னால் வைத்தவர் திரும்பி வந்து கேட்டார்.

’இல்லே அண்ணே.. ரெண்டு நாள் வெளியே இருந்தாக் வேண்டிய கட்டாயம்.. வந்து விவரம் சொல்றேன்;.

சைக்கிள் மண்சரிவு இறங்கிக் கொண்டிருந்தபோது உலகத் துக்கம் எல்லாம் ஒன்று சேர்ந்து வந்து என் தலைக்குள் இறங்கிய கனம் அழுத்தியது. என்ன செய்து கொண்டிருக்கிறேன்? நேற்று இருந்த நிலை என்ன, இன்றைக்கு இங்கே அகதியாக ஓடிக் கொண்டிருக்க என்ன பாவம் செய்தேன்? அப்பா திட்டினாலும் வாலைக் குழைத்து மன்னிப்பு கேட்டு ஈயென்று இளித்து அழுது பிடித்து பிடிவாதமாக உருண்டு புரண்டு வீட்டுக்குள், வாழ்க்கைக்கான பாதுகாப்புக்குள் பூனைக் குட்டி போல போய்த் திரும்ப முடங்கிச் சுருண்டிருக்க வேண்டுமா?

இதற்கெல்லாம் யார் காரணம்? அமேலி என்று நம்பச் சொல்லி மனசு ஆசை காட்டியது. அது சிறுபிள்ளைத் தனம். அமேலி திரும்பி வந்திருக்கா விட்டால் இதெல்லாம் நடந்திருக்குமா? வந்தாலும் நான் சந்தித்திருக்காவிட்டால் இன்றைக்கு காலைச் சாப்பாடு கையில் தானே வந்து விழுந்திருக்குமோ? அவளை சந்தித்து கண்ணியமாக நாலு வார்த்தை பேசி, கூட இருந்து காப்பி குடித்து வீட்டுக்கு அனுப்பி விட்டுத் திரும்பாதது யார் குற்றம்? அவள் உட்மபு தரும் சுகத்தை எதிர்பார்த்துத் தசையை மோப்பம் பிடித்து நாடிப் போனது நான் தானே.

கே சரா சரா. டோரிஸ் டே ஏதோ ஒரு ஹிட்ச்காக் படத்தில் பாடிய பாட்டு மனதில் ஒலித்தது. நடக்க வேண்டியது நடக்கும் என்று சொல்கிற வரிகள் அவை. கவலையை ஒதுக்கி வைத்து விட்டு வேலையைப் பாருடா என்று டோரிஸ் டே குரல் கொஞ்சம் ஆண்மை கலந்த பெண்குரலில் நம்பிக்கை தந்தபடி இருக்கும். ஜிக்கி பாடிய அந்தப் பாட்டின் தமிழ் வடிவம் கூட உண்டு. முதல் வரி என்ன?

ஆமா, பாட்டு வரி நினைவு வந்தால் பசி போய்விடுமாக்கும். உக்கிரமாகிக் கொண்டிருக்கிறது அது. கண்ணை அயர்வு வந்து அழுத்த, பசியும் களைப்பும் எந்த நிமிடமும் உடம்பை முழுவதும் ஆக்கிரமிக்கலாம் என்று உள்ளுணர்வு சொல்கிறது. அமேலியை படுக்கைக்கு அழைத்தபோத் நீ எங்கே போயிருந்தே என்று கேட்க அந்த உணர்வு செத்துப் போய் பாதையோரமாக இறக்கையற்ற காக்கையின் ச்வமாக விழுந்தது. ஒற்றைக் குயில் வெகு நேரமாகப் பாடிக் கொண்டிருக்கும் தென்னந்தோப்பு ஊடாக சைக்கிள் மெல்ல உருண்டது.

சித்தாந்த சாமி மடத்து வாசலில் ஏதோ கூட்டம். வண்டியில் இருந்தபடிக்கே என்ன என்று பார்த்தேன். உள்ளே இருந்து ஆண்டி பரதேசிகள் கையில் பூவரச இலைத் தொன்னையில் பொங்கல் சோறும், மேலெல்லாம் வீபுதியும் குங்குமமுமாகக் கொழகொழவென்று அப்பி இருந்த பூவன் பழமுமாக வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.

எங்கே இருந்து அந்த வேகம் வந்ததென்று தெரியவில்ல. சைக்கிளை ஸ்டாண்ட் போடக்கூட நேரமில்லாமல் தென்னை மரத்தில் சாய்ந்து விட்டு ஓட, அது பின்னால் சரிந்து விழுகிற சத்தம். சட்டை செய்யாமல் மடத்துக்குள் ஓடி வளைந்து நெளிந்து கிடந்த வரிசைக் கடைசியில் நின்றேன். எதிரில் மர பெஞ்சில் வைத்திருந்த பாத்திரத்தையே கவலையோடு பார்த்தேன். நான் கையை நீட்டி வாங்கப் போகும் வரை பாத்திரத்தில் பொங்கல் இருக்குமா?

இருந்தது. அலட்சியமாக என் கையில் தொப்பென்று போடபட்ட பூவரச இலைத் தொன்னை ஓட்டையாக் இருந்து கையில் பொங்கல் வழிந்தது. கூடவே போட்ட வாழைப்பழம் முழுக்க கருத்த தழும்புகள். ஊதுபத்தி ஸ்டாண்டாகவும் மடத்தில் உத்தியோகம் பார்த்திருக்க வேண்டும் அந்தப் பழம்.

வெளியே வரும்போது சைக்கிள் ரிக்‌ஷா மேலே மோதப் போய் சமாளித்து நிற்க, ரிக்‌ஷாக்காரர் ஏசினார் – பாத்து வரமாட்டியா, முட்டிட்டு போறியெ, தானம் கொடுத்த பட்டச் சோறு தான் வாங்கியாச்சுல்லே. குந்தி உக்காந்து துண்றதுக்கு என்ன அவசரம்?

நான் வேகமாக பின்வாங்கி முகத்தை மறைத்தபடி ந்டக்க என் பெயரை உரக்கக் கூப்பிடும் பெண்குரல். எனக்குப் பழகிய குரல் அது. எமிலி. ஜோசபினோடு ஆஸ்பத்திரியில் நர்ஸாக இருக்கிறாள் எமிலி.

ஓட ஆரம்பித்தேன். எமிலி குரலோடு ஓர் ஆண்குரலும் கேட்டது. அவள் வீட்டுக்காரனாக இருக்க வேண்டும். இவர்கள் கண்ணில் பட்டதே தப்பு. நின்று பேசுவது கட்டாயம் விலக்கப்பட வேண்டியது.

காலில் மரத்தின் வேர் தடுக்க, தொன்னை மண்ணில் சரிந்தது. ஒரு வினாடி நின்று குனிந்தேன். பொங்கலில் மேலே பரவிய பொடி மணலை வழித்துப் போட்டேன். வாழைப் பழம் முழுக்க மண் அப்பி இருந்தது. விட மனம் வரவில்லை. அப்படியே பிடித்தபடி எமிலி கண் பார்வை படும் தூரத்தில் இருந்து விலகி இருந்தேன்.

கை என்னை அறியாமல் கொண்டு வந்த பிச்சைச் சாப்பாட்டை அள்ளி விழுங்க ஆரம்பித்தது. தரையில் இருந்து பொங்கலில் ஏறிச் சுற்றிக் கொண்டிருந்த எறும்புகள், துப்பும் பொழுது வாயிலிருந்து தரையில் விழுந்து ஆச்சரியம் காட்டி நின்று நழுவின.

மடத்துக்குத் திரும்பி வந்தபோது எனக்காகக் குரல் எழுப்ப யாரும் இல்லை. மௌனத்தை ஊடுருவி உள்ளே போய் மண்பானைத் தண்ணீர் குடித்துக் கிளம்பினேன். முதலில் துணி துவைக்க வேண்டும். அடுத்து மதியச் சாப்பாட்டு வழி செய்தாக வேண்டும். இந்தப் பொங்கல் இன்னும் ஒரு மணி நேரம் தாக்குப் பிடிக்கும். அதற்கு மேல் கையேந்தி நிற்க இன்னொரு இடம் தேவை.

வைத்தே வீட்டு வாசலில் புரோகிதர்கள் நாலு பேர் வரிசையாக வந்து சைக்கிள் விட்டு இற்ங்கிக் கொண்டிருந்தார்கள்.

வைத்தே வாசலுக்கு வந்தவன் என்னைப் பார்த்து என்னடா மூட்டை முடிச்சோட கிளம்பிட்டே என்று விசாரித்தான். நாயனா தெரத்திட்டார்டா என்றேன். ஜோக் அடிக்கிறேன் என்று நினைத்துச் சிரித்தான். கொஞ்சம் யோசித்து, எடிட் செய்த கதைச் சுருக்கம் சொன்னேன். வருத்தப்பட்டான்.

’சோத்துக்கு என்ன பண்றே மச்சி?’ என்று நிஜமாகவே அக்கறையோடு கேட்டான்..

’அது வேணுங்கற போது கிடைக்கும் மாமு; இல்லாட்டாலும் கவலையில்லே’. விட்டேத்தியாகப் பதில் சொன்னேன். .

’நீ பூணூல் போட்டிருக்கியா?’, வைத்தே என் சட்டைக்குள் பார்த்தான்.

இல்லையே ஏன்?

போட்டிருந்தா, இங்கே இன்னிக்கு சாப்பிட்டிருக்கலாம் என்றான்.

என்ன விஷயம் என்று விசாரித்தேன்.

’தெவசம் மச்சி. தாத்தாவுக்கு திதி. மதியம் எள்ளுருண்டை, மோர்க்குழம்பு, அப்பம், போளின்னு ஒரு கட்டு கட்டலாம்’.

எனக்கு வாய்க்கவில்லை என்று சொல்லி சைக்கிளில் உட்கார்ந்தேன்.

லெச்சு வீட்டில் அவன் எங்கே போனான் என்றே தெரியவில்லை என்று ஒரு பாட்டம் அழுது தீர்த்தாள் அவன் தொத்தா. தேடிக் கூட்டி வருகிறேன் என்று வாக்குத்தத்தம் செய்து விட்டு வந்தேன்.

ஃபிரான்ஸ்வா வீட்டில் தனியாகத் தான் இருந்தான். ஒரே அழுக்காக உட்கார்ந்து ரேடியோ சிலோன் கேட்டுக் கொண்டிருந்தான். எதையோ சுவாரசியமாக மென்று கொண்டிருந்தான் அவன். தட்டைப் பார்த்தேன். பூச்சி பொட்டு மாதிரி இருந்தது. அரிசி போலவும் தெரிந்தது.

’ஈசல் பிடிச்சு எடுத்து வந்தாங்கடா. அதோட கூட அரிசி சேர்த்து வறுத்து வச்சுட்டு வில்லியனூர் போயிருக்கு எங்க பாட்டியமமா’.

நேற்று ராத்திரி கொஞ்ச நேரம் மழை பெய்த போது கிளம்பிய ஈசலாம். ராத்திரி மழையும் வெய்யிலும் எனக்கென்ன தெரியும்?

ஃபிரான்ஸ்வா வீட்டில் பக்கெட்டும் டிடர்ஜெண்டும் வாங்கி துணி ந்னைத்து ஊறப்போட பிரச்சனை இல்லை. இதையும் சேர்த்துக்கோ மச்சான் என்று பிரான்ஸ்வா தன் நாலு பேண்ட் சட்டையை எடுத்து வந்து பக்கெட்டை நிறைத்த விசேஷம் தவிர வேறே ஏதுமில்லை.

அவன் துணியையும் சேர்த்துத் துவைத்துப் போட வேண்டிப் போனது. எல்லாம் சேர்த்து உலர்த்தியும் முடித்தேன். இதற்குத் தான் காத்துக் கொண்டிருந்த மாதிரி அவன் அறையைச் சுத்தம் செய்ய உதவி செய்யக் கோரி அழைப்பு விடுத்தான்.. வேலையை ஆரம்பித்து வைப்பதில் இருந்த அவனுடைய சுறுசுறுப்பு ஈசல் அரிசி தின்பதற்கு மாற, அந்த வேலையும் என் தலையில் தான் விடிந்தது. இருக்கட்டும், சரஸ்வதி பூஜைக்கு கயல் என் வீட்டுக்கு வந்து என்னோடு உழைப்பைப் பகிர்ந்து கொள்ளவில்லையா? கயல் என்ற தேவதை எங்கே நான் எங்கே?

’மச்சான் மூணு மணி ஆச்சுடா பசியே இல்லை’,

ஃபிரான்ஸ்வா சோம்பல் முறித்தான். ரெண்டு மணி நேரத்தில் பத்து சதுர மைல் அளவு நிலப் பரப்பில் கெல்லி எடுத்த பல்லாயிரம் ஈசல்களை பிடிப் பிடியாகத் தின்று சாதனை படைத்துக் கொண்டிருந்தான் அவன். அந்த ஈசல்களுக்கு உயிர் வந்து அவனுடைய வயிற்றுக்குள் பறக்க ஆரம்பித்தால் அவனைத் தூக்கிக் கொண்டு போய் தியூப்ளே சிலைக்குப் பின்னால் கடலில் வீசிப் போட்டு விடும்.

அடுத்த வேளைக்கு தீனி தரச் சொல்லி என் வயிற்றில் மணி அடிக்க ஆரம்பித்தது.

’முட்டைக் குழம்பு தான் இருக்குடா. வா, ஊத்திக்கிட்டு பிரட் தின்னுடலாம் என்றான் பிரான்ஸ்வா.

கடல் காற்றுக்கும் வெயிலுக்கும் காய்ந்திருந்தன துணிகள். எடுத்து வைத்துக் கொண்டு ப்ரான்ஸ்வாவிடம் சொல்லிப் புறப்பட்ட நேரத்தில் அந்த்வான் வந்தான். அவன் அங்கே வந்து சேர்ந்தது என் நல்ல் காலம் என்று தான் சொல்ல வேண்டும். அவன் ஏதும் கேட்கும் முன், பசிக்குதுடா என்றேன். கேள்வி கேட்காமல் கூட அழைத்துப் போய் நாயர் கடையில் நிறுத்தினான். நேற்றுக் காலையில் தான் இங்கே என் செல்லக் கயலுக்கு புட்டும் கடலையும் வாங்கிக் கொடுத்தேன். அடுத்த வேளை சோறு பற்றிக் கவலையில்லாத பொழுது அது, கயலோடு சிரித்துச் சிரித்து நகர்த்தும் பொழுதுகள் இனி எப்போ வரும்? வராதோ.

அய்யோ சேட்டா எல்லாம் தீர்ன்னு போயி

வெறும் பாத்திரத்தைக் காட்டினார் நாயர். வாடா, வேறே எங்கேயாவது பார்க்கலாம் என்று அந்துவான் கிளம்ப அவன் பின்னால் பதைபதைத்து யாசகன் போல சோற்றைத் தேடி ஓடினேன்.

’மச்சான் பாக்கெட்டுலே மூணு ரூபா தான் இருக்கு. பிஸ்கட் வாங்கி தின்னுட்டு ரெண்டு பேரும் டீ குடிச்சுக்க்கலாம். ஓகே?’

அந்த்வான் யோசனைக்குச் சரி சொன்னேன்.

பொரை பிஸ்கட் தான் நாயரிடம் இருந்தது. அதுவும் அமுதமான பொழுது. நேரம் கேட்டேன் அந்த்வானை. நான் வாட்ச் எடுத்து வந்திருக்கலாம். அதை விற்றால் இன்னும் ஒரு வாரம் ஓட்டலாமே.

கடைக்குப் பக்கம் சைக்கிளோடு நின்று பேசிக் கொண்டிருந்தோம். கதைச் சுருக்கம் சொல்ல் வருத்தப்பட்டான். சாயந்திரம் ஐந்து மணி.

’வீட்டுலே தங்கச்சி மட்டும் தனியா இருக்கு. போறேண்டா.’.

அந்துவான் என்னை டூரிஸ்ட்கள் கூட்டம் நிறைந்த புல்வார்ட் பக்கம் விட்டு விட்டுப் போனான். என்ன உயிர் நண்பனாக இருந்தாலும் இனிமேல் இளம்தாரி பெண்கள் இருக்கும் வீடுகளில் என்னைப் படி ஏற்ற மாட்டார்கள் என்று தோன்றியது.

வெகு நேரம் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு வேடிக்கை பார்த்தபடி அதன் மேல் உட்கார்ந்திருந்தேன். எல்லோரும் என்னை காமாந்தகன் என்று சந்தேகத்தோடு பார்க்கிறதாகத் தோன்ற லலி தொலந்தர் வீதியில் என் ராலே சைக்கிள் உருண்டது.

சட்டென்று மனம் விழித்துக் கொண்டது.

நேற்று மைக்ரேனுக்கு அமேலி கொடுத்த குளிகை இன்றும் வேண்டும். அதோடு அமேலியும் வேண்டும்.

ஆசை நிமிஷத்துக்கு நிமிஷம் உக்கிரமாகப் போய்க் கொண்டிருந்த்து. லொலி தொலாந்தர் தெரு கர்னல் வீடு பூட்டி இருந்தது. அமேலி போன இடம் தெரியவில்லை.

குளிகை வேண்டும். அமேலி உடம்பு வேண்டும். அந்த உடல் கணப்பில் தஞ்சம் தேடிப் பூனையாகச் சுருண்டு கிடக்க இரவு வந்து கொண்டிருக்கிறது.

கார்த்திகை மாத நாய் போல் காமமே வடிவெடுத்தவனாக அமேலி வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தேன். ஒரு ஜன்னல், துணி உலர்த்தும் கொடி எங்காவது அமேலி உடுத்த துணி இருந்தாலும் முகர்ந்தபடி இந்தப் பசி சற்றே அட்ங்க முயற்சி செய்வேன்.

அமேலி வேண்டும். அவள் உடல் மதர்த்து என் மனதில் திமிறி எழுந்து என்னைத் தகிக்கிறது. அழகான் பெண் உடல். நக்னமான பெண் உடல். ஆடையும் காற்றும் கூட இடையில் வராமல் அணைத்துத் தழுவி உடல் கலப்பது தவிர வேறென்ன வேண்டும்?. அமேலி, உடனே வா. காத்திருக்கிறேன்.. நேற்றையும் விட நேர்த்தியாக போகம் பயில்வோம்.

மணி ஏழு என்று எங்கோ மாதாக் கோவிலில் மணிகள் தெரிவித்து முழங்கின. அமேலி அமேலி என்று உடம்பு ஆர்ப்பாட்டம் செய்தது. மனதுக்குள் என் கைகள் அவள் உடலில் மெல்ல ஊர்ந்து போக வாசலில் உட்கார்ந்து அமேலி அமேலி என்று மெல்லிய குரலில் அழைக்கத் தொடங்கினேன். அவள் இல்லை. சுகம் கண்ட உடம்பு திரும்ப இரை கேட்கிறது. அமேலி இல்லை. என்றால் ஜோசபின்.

முதல் தடவையாக ஜோசபினை அழகான அங்கங்களின் தொகுதியாக, கவர்ச்சி மிகுந்த உடலாக மட்டும் நினைத்தேன். நரம்புகளும் புத்தியும் காமம் துய்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டு என்னைச் செலுத்த ஜோசபின் என்ற உயிர்த் தோழியை மறந்து வடிவான அந்தக் கருப்பு உயிர்ச் சிலையோடு இணை விழைந்து கூடி இன்பம் துய்க்கக் கிளம்பினேன்.

எல்லையம்மன் கோவில் தெருவில் கண்ணில் பட்ட பெண்கள் எல்லோரும் காமரூபங்களாகத் தெரிந்தார்கள். தலையைக் குனிந்து, மனம் ஆர்ப்பரிக்க தெருவூடே மெல்லப் போனேன். தெருச் சத்தங்களும் தெரு ஓரத்தில் அங்கங்கே மூக்கில் குத்தும் சிறுநீர் வாடையும், எங்கோ மாமிசமோ மீனோ பொறிக்கும் வாடையும் எந்த பாதிப்பும் நிகழ்த்தாமல் உள்கடந்து போக, போகம் போகம் போகம் எனப் பிதற்றிப் போனேன்.

ஜோசபின் வீடு. வாசல் கதவைத் தள்ளினேன். திறந்து கொண்டது. ஜோசபினைக் கூப்பிட்டேன்.

’டியூட்டி போயிருக்கா. நீ உள்ளே வா’.

விசாலி குரல். என்னைத் திரும்பிப் பார்க்காமலேயே அடையாளம் கண்டு கொண்டாள்.

அவள் அறையில் முதுகைக் காட்டிக் கொண்டு ஏதோ எழுதியபடி இருக்கிறாள். எதிரே மேஜையில் மஞ்சள் மினுக்கும் காகித்ங்கள். வெள்ளை உறைகளில் விலாசம் எழுதி அழைப்பை உள்ளே வைத்தபடி இருக்கிறாள். யாருக்குக் கல்யாணம்? அவளுக்கா?

ஜோசபின் இல்லாவிட்டால் என்ன? என் காமத்தை ஆற்றுப்படுத்தி அக்கரை சேர்க்க விசாலி உண்டு. திரண்டு எழுந்த அவளுடைய உடல் என் மன விகாரத்தை ஜிவ்வென்று மேலே உயர்த்தி ரத்தத்தின் சூட்டை அதிகரிக்கிறது. உருண்ட அந்த செழுமையான தோள்களும் திமிர்த்து நிற்கும் கட்டுடலும் எனக்கு வேண்டும். இரை கண்ட மலைப் பாம்பாகப் பின்னால் இருந்து அவளை நெருங்குகிறேன். கிண்ணமாகக் குவிந்த இரண்டு கைகளைக் கொண்டு அவளுடைய மார்பை இறுகப் பற்றி வாயில் எச்சில் ஊற, கிசுகிசுப்பான குரலில் விசாலி என்கிறேன்.

சட்டென்று எழுந்து நின்று திரும்பினாள் விசாலி. பொறி பறக்க என்னை அறைந்தாள். தலைமுடியை ஆக்ரோஷமாகப் பிடித்துக் குலுக்கிக் கீழே தள்ளிக் காலால் உதைத்தாள்.

அவள் கால்களைப் பிடித்துக் கொண்டேன். பாதங்களில் முத்தமிட் முயன்றேன். மோகம் ஏறுகிறதே ஒழியக் குறையவில்லை.

புழுத்த நாயே, இறங்கிப் போடா.

(தொடரும்)