தியூப்ளே வீதியை நிறைவு செய்யும் நேரத்தில் …


எழுத்து பயில்வதில் எழும் மேலதிக மகிழ்ச்சி வாழ்வு சார்ந்த புதினம் – பயோ ஃபிக்‌ஷன் – எழுதும்போது தான்.

நெம்பர் 40, ரெட்டைத் தெரு எழுதும் போது அனுபவித்தது இது. தியூப்ளே வீதி எழுதிக் கொண்டிருக்கும் போது இன்னும் கூடுதலாக அனுபவித்துக் கொண்டிருப்பதும் இதுவே.

பதின்ம வயதின் இறுதியில் மறுபடி போய் நின்று கடந்து வந்த பாதையைப் பார்க்கும் போது, மறுபடி வாழ வாய்ப்புக் கிடைத்த பரவசம்.

அன்று நீராடிய நதிகளில் எல்லாம்
சென்று நீராட விரும்புகிறேன்

என்பார் ஜெயகாந்தன் ஒரு கவிதையில். பயோ பிக்‌ஷன் அந்த மறு பயணத்தை நோஸ்டால்ஜியாவாக மட்டும் இல்லாமல் அந்தக் கணங்களில் வாழ்ந்து நிகழ்த்த வழி செய்வது.

ஒவ்வொரு அத்தியாயத்தை எழுதத் தொடங்கும் முன்பும் உற்சாகமும் ஆனந்தமுமாக நினைவுகளின் ஊர்வலம் மனதில் கெக்கலி கொட்டிப் புறப்பட்டு விடும். புனைவு கலந்து அவற்றை எழுத்தாக வார்த்தெடுத்ததும் ஏற்படும் நிறைவு அலாதியானது.

எழுத்து வாழ்க்கையைச் சொன்னாலும் எழுதி முடித்த படைப்பிலிருந்து விலகி நின்று பன்முகப் பொருள் தரும் வாசிப்பை ஏற்படுத்த வழி செய்யவே நான் விரும்புவேன். எனினும் ரெட்டைத் தெரு எழுதி முடித்ததும் கொஞ்சம் அழுதேன். நூலை நிறைவு செய்யும் பக்கங்கள் மனதைக் கிள்ளியெடுத்துக் கொண்டுதான் இறங்கி நகர்ந்து மறைந்தன.

தியூப்ளே வீதி நாவலை நிறைவு செய்யும் அத்தியாயங்களை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். பிரியத்துக்கு உரிய அந்தத் தோழியரையும் நண்பர்களையும் மறுபடி பிரியும் துயரம் தலை தூக்கும் நேரத்தில் பிரான்ஸில் / சுவிட்சர்லாந்தில் குடிபுகுந்த, ஒரு புதுவை நண்பரின் கடிதம் வந்திருக்கிறது –

’நான் விரைவில் புதுவைக்கு வருகிறேன். அங்கே வந்து என்னோடு ஒரு நாள் செலவிட இயலுமா?’

ஆத்மார்த்தமாக அவருக்கு நன்றி சொன்னேன். போய் வர வேண்டும்.

எழுத்தும் நட்பும் இதமாகக் கலக்கும் சூழலில் தியூப்ளே வீதி நிறைவடைந்து கொண்டிருக்கிறது. விரைவில் 600 பக்க அளவில் நேர்த்தியான புத்தகமாக வெளிவரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன