ஆடத் தெரியாத தேவதைக்கு இங்கே இடம் இல்லை

வாழ்ந்து போதீரே = அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவதிலிருந்து அடுத்த சிறு பகுதி

=============================================================================

வைத்தாஸ் திருமேனி என்று யாரோ விளிக்கிற சத்தம். குடைக்கார சாமு.

 

ஒரு மழைக் காலத்தில் வைத்தாஸ் ஊருக்கு முதலில் வந்தது முதல் தனக்கு சிநேகிதமான சரித்திரத்தை வாய் நிறைய புட்டையும் கடலையும் அடைத்து மென்றபடி சாமு சொன்னபோது சுவரில் சார்த்தி வைத்திருந்த அவனுடைய குடையும் சுவாரசியமாகக் கேட்டது.

 

வைத்தாஸ் அடுத்த பெஞ்சில் உட்கார்ந்து பொதுவாகப் பார்த்துச் சிரித்தான்.

 

வைத்தாஸ் தொரே, இந்தச் செக்கன் நம்ம வெடிக் குறூப் போல மயில்பீலி தூக்க ஆப்பிஸிலே ஜோலி நோக்கறவன் தான்.

 

கெச்சலாக  ஓர் இளைஞனும் அவனோடு கூட ஆறடி உயரமும் பெண் டார்ஜான் போல ஆகிருதியுமாக  ஒரு ஐரோப்பிய இளம் பெண்ணும்  அங்கே இருந்தார்கள்.

 

அவன் திலீப் மோரே என்று பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு கை அலம்ப எழுந்தான். வைத்தாஸுக்கு முன் வானத்துக்கும் பூமிக்குமாக வளர்ந்த அந்த ஐரோப்பியப் பெண் தன் பெயராகச் சொன்னது கேட்க முடியாமல் வாசலில் கிழவி வேறு யாருக்கோ வசவு உதிர்க்க ஆரம்பித்தாள்.

 

நடாஷா வாசிலிவ்ஸ்கி.

 

வசவு மழை ஓயும் வரை எச்சில் கை உலர நின்ற அவள் வைத்தாஸிடம் திரும்பப் பெயர் சொல்ல, அவள் எடுத்துக் கொண்ட சிரமத்துக்குப் பரிகாரமாகவோ என்னவோ எழுந்து நின்று வணங்கினான் வைத்தாஸ்.

 

வைத்தாஸ் இக்வனொ ரெட்டி.

 

உங்கள் நாவல்களைப் படித்திருக்கிறேன்.

 

அந்தப் பெண் தேவதூதனைச் சந்தித்த பிரமிப்போடு சொல்லி நகர, வைத்தாஸூக்கு இது நல்ல படியாக விடிந்த ஒரு தினம் என்று தோன்றியது.

 

புட்டு, கடலை. புழுக்கின பழம். ஆகாரத்தைக் கொண்டு வந்தவன் வைத்து விட்டு அப்பால் போனான். பான் அப்பித்தி. மனசில் நந்தினி குரல் ஒலித்தது.

 

நாளைக்கு மாநாட்டில் நிகழ்கலைகள் பற்றி இப்படிப் பேசுவான் வைத்தாஸ் –

 

தெய்வத்தின் உற்றாரும் உறவினரும், மயில்களும், மயில் பீலி அணிந்த, கஷ்கத்தில் வியர்வை வடியும் ஆண்களும் சந்திக்கும் இடம் ஆட்டக் களம்.  புதியதாக உருவாக்கி, தோத்திரப் பாடல்களைக் கோர்த்து மாலை அணிவித்திருந்தாலும், ஆடத் தெரியாத கடவுளுக்கு அங்கே இடம் இல்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன