Monthly Archives: June 20, 2016, 1:54 pm

New Novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 31 இரா.முருகன்

ராத்திரி ஏழரை மணிக்கு நகரம் உறங்கப் போயிருந்தது. எண் எழுதிய கதவுப் பலகைகளைச் சரியாக எடுத்து வைத்துக் கடைகளை அடைக்கும் வேலை தெருவெங்கும் மும்முரமாக நடக்க, வீதிக் கோடி நூலகத்தின் அறைகள் ஒவ்வொன்றாக இருள் அணிந்தன. தொடர்ந்து நூலகத்தின், மணிகள் அலங்கரிக்கும் பெரிய வாசல் கதவுகளும் அடைபட்டுக் கொண்டிருக்க, ஓரத்துப் படிகள் வழியே இறங்கிய கடைசி இரண்டு பேர் நடாஷாவும் திலீபும் தான்.

ஆறரை மணிக்கு அடச்சுடுவோம். புரட்சியை நிகழ்த்திக் காட்டிய சித்தாந்தம் ஜெயிச்சு உலகை ஆளும் சோவியத் பூமியில் இருந்து வந்திருக்கீங்க. அதான் ஏழு மணி வரை உங்களுக்காக திறந்து வைக்கறோம்.

உள்ளே போய் நடாஷா தன்னை யாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டபோது பெருமையும் பாசமுமாகச் சொன்னார் நூலகர்.

நூறு வருஷம் அதுக்கும் முந்திய பழைய புத்தகங்கள் இருந்தால், பார்க்கலாமா?

நடாஷா கேட்டபோது அப்படி எதுவுமே இல்லை என்று கடவுள் மேலோ கட்சித் தலைமை மீதோ சத்தியம் செய்யத் தயாராக இருந்தார் அவர். இந்தப் பதவி கட்சி அளித்த கருணைக் கொடை என்று சொல்லி, சுவரைப் பார்க்க நின்று, உடுத்த வேட்டியை மறுபடி இடுப்பில் இறுக்கிக் கட்டுவது அவருக்கு உகந்த செயலாக அப்போது இருந்தது.

பிற்பகல் இரண்டு மணிக்கு நடாஷாவும் திலீபும் நூலகத்துக்குள் போனது தொடங்கி அடுத்த சில மணி நேரத்தில் ஒரு நூறு தடவையாவது அவருடைய கைகள் சலிப்பில்லாமல் உடுதுணியை அவிழ்க்கவும் கட்டவுமாகச் செயல்பட்டன. பின்னால் சுவர் இல்லாத இடங்களிலும் அது நடந்தேறியது.

அவருடைய கால்கள் தீக்குச்சி போல மெலிந்திருக்க, கைகள் தசை புடைத்து நல்ல வலிமையோடு காணப்பட இந்த உடற்பயிற்சியே காரணம்.

நடாஷா திலீப்பிடம் நூலகத்தில் இருந்து புறப்படும் போது சொன்னாள்.

அணிவகுப்பு மரியாதை போல அப்போது நூலகரும், உதவி நூலகரும், இன்னும் இருந்த இரண்டு ஊழியர்களும் சூழ்ந்திருந்து, ஒரே நேரத்தில் சாவி முடுக்கிய பொம்மைகளாக, இடுப்பு வேட்டியைத் திருத்தி அணிந்தபடி நடாஷாவுக்குப் பிரிவுபசாரம் சொன்னார்கள். நூலகர் மட்டும் அன்னிபெசண்ட் அம்மையாரின் படம் மாட்டிய சுவரைப் பார்க்கத் திரும்ப நின்றிருந்தார் அப்போது.

நடாஷா உள்ளே இருந்த ஐந்தரை மணி நேரத்தில். இங்க்லிஷ், பிரஞ்சு, தமிழ், சயாமிய மொழி, மலையாளக் காவியங்கள், நாவல்கள், வைத்திய சாஸ்திரம் என்று நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட நூல்கள் எல்லாவற்றையும் பொறுமையாகவும் கவனமாகவும் அவர்கள் நடாஷாவுக்குக் காட்டினார்கள்.

அவள் புராதன நூல்கள் என்று எழுதியிருந்த அறையில், ஒட்டடையும் தூசியுமாக மூக்கில் பட்டுத் தும்மிக் கொண்டு ஒரு பழைய நாற்காலியில் உட்கார்ந்திருக்க, திலீபும் மற்றவர்களும் அலமாரிகளில் சரிந்து கிடந்த புத்தகங்களைத் தடி கொண்டு தாக்கி உள்ளே இருந்த பாச்சைகளையும் வெள்ளிமீன் பூச்சிகளையும் விரட்டி, தூசி துடைத்த பிரதிகளை நடாஷாவுக்குப் படிக்கக் கொடுத்தனர். எனினும் அவை எல்லாம் 1940-க்குப் பிறகு பிரசுரமானவையாகவே இருந்தன.

நடாஷாவுக்குச் சாயாவும் பருப்பு வடையும் அன்போடு அளித்தார் நூலகர். மாஸ்கோ நகரில் இருந்து வரும் சிவப்புச் சிந்தனையாளர் குடும்பத்துப் பெண் அவள். ஒரே கொடியில் பூத்த சிவந்த மலர்கள் அவர்கள் எல்லாரும். மராத்திக்காரன் என்றாலும் திலீபும் புரட்சியாளனே. அந்த மண்ணில் போன தலைமுறை வரை முற்போக்கான சிந்தாகதி ஆழமாகச் சால்விட்டுப் போனது. மறுபடியும் அது அங்கே வரும். அதுவரை ஒரே கூட்டுப் பறவைகள் மின்விசிறிகள் கீழ் அமர்ந்து சாயாவும் பரிப்பு வடையும் கழித்திருக்கலாம் என்றார் நூலகர். அந்த உருவகம் அவசரமாகப் பிடித்ததால் சரியாக உருவாகாமல் போனதை உணர்ந்த அவர், வேட்டியை மறுபடி இடுப்பில் அவிழ்த்து அணிந்தபடி, ஒரே மனம் கொண்ட பல இனத்தவர் என மாற்றினார்.

பரிப்பு வடையா, பருப்பு வடையா?

திலீப் குழப்பமாகக் கேட்டான்.

ஹெ, இந்தத் தரங்கெட்ட பாண்டிகள், என்றால் மதராஸ் மாகாணத் தமிழர்கள், ஒரு வார்த்தையையும் சரியாகப் பேசுவதில்லை. பருப்பு என்று பிழையாகச் சொல்வது அவர்களின் பரம்பரைக் கெட்ட பழக்கம் என்று புன்னகையோடு திலீப்பின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முனைந்தார் ஞானம் ஒளிர்ந்த நூலகர்.

புத்தறிவுத் தெளிவோடு அவனும் நடாஷாவும் இன்னொரு தடவை இன்னும் புராதனமான புத்தகங்கள் பற்றிக் கேட்க, அவருக்கு நினைவு வந்திருந்தது. பரிப்பு வடை ஞாபக சக்தி வலுவடைய உதவும் என்று சொன்ன நூலகர் தன் மரமேஜைக்குள் இருந்து ஒரு பழைய இரும்புச் சாவியை எடுத்து ஊழியரிடம் கொடுத்து உள்ளே கழிப்பறைக்கு முந்திய அறையில் உள்ள அலமாரிகளைத் திறந்து அவற்றில் என்ன உண்டு என்று பார்க்கக் கட்டளையிட்டார். கழிப்பறைக் கதவைத் திறக்க வேணாம், அங்கே பார்க்கத் தகுந்த பொருள் ஏதுமில்லை என்று நகைச்சுவை ததும்பப் பேசிய அவர் நடாஷாவைச் சிரிப்பில் இணைத்தார்.

பதினைந்து நிமிடம் கழித்து இரண்டு மாபெரும் கள்ளியம்பெட்டிகளை ஏழெட்டுப் பேர் சத்தமெழ நூலக மண்டபத்துக்குள் தள்ளிக் கொண்டு வந்தார்கள். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு முன்னால் வந்த துணை நூலகரின் பார்வையிலும் நடையிலும் தீரச் செயல் செய்யும் மிடுக்கு இருந்தது.

இதெல்லாம் மிகப் பழைய புத்தகங்கள். சேரமான் பெருமாள் காலத்தில் வந்ததாக இருக்கலாம். அதற்கு முன்னும் ஆகலாம். கவனமாகப் பார்க்கவும்

அவர் பொறுப்பும் நிதானமுமாகச் சொல்ல, திலீப் அடக்க முடியாமல் கேட்டான் –

சேரர் காலத்தில் ஏது அச்சு யந்திரம்?

என்றால் ஓலையில் எழுதி வைத்தது. அதைப் பார்த்து அப்புறம் எழுதியானது. அவர்களுக்கு பின்னே ஆரோமல் உண்ணி தன் சொந்தம் கொட்டாரத்தில் இருந்து காகிதத்தில் எழுதிப் படிக்கச் செய்துவித்து ராஜ்ஜியம் பரித்தபோது.

மோட்சம் அளிக்கும் மதச் சடங்குகளில் ஓதும் புனிதச் சொற்கள் போல் நீட்டி இழுத்து அந்த இணை நூலகர் சொல்லியபோது காற்றும் நின்று போயிருந்தது.

இது எங்கே நீளும் விளங்காததால் திலீப் உடனே நிறுத்திக் கொண்டு கேட்க மட்டும் பிறப்பெடுத்த மராத்தி இளைஞனின் பிம்பத்தை அணிந்தான்.

அப்பாவித்தனத்தை வெளிச்சம் போடும் அவனுடைய முகபாவத்தை நடாஷா ரொம்பவும் ரசித்துப் புன்னகை செய்தபடி இருந்தாள்.

நூலகரும், அலமாரிகளும் இல்லாவிட்டால் அவள் வேறு விதமாகச் செயல்பட்டிருப்பாள் என்று திலீப் செய்ய முற்பட்ட கற்பனை அகல்யாவை பாந்த்ராவில் சகலரும் பார்க்க அவன் நிதானமாக முத்தமிடுவதில் நீட்சி பெற, பிஸ்கட் சாஸ்திரியைப் புட்டத்தில் உதைத்துத் தள்ளி முடித்து வைத்தான் அவன்.

வெறுப்பும் வேட்கையுமாக அவனுக்குள்ளே விநோதமான மிருகம் ஒன்று உட்புகுந்திருந்தது அந்தப் புழுக்கமான பகல் வேளையில். புத்தகங்களைக் கையில் வாங்கிப் பத்திரமாக, துணி விரித்த தன் மடியில் வைத்துப் புரட்ட ஆரம்பித்தாள் நடாஷா.

பெட்டிகளுக்குள் இருந்து முதலில் எடுக்கப்பட்ட புத்தகம் ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதில், பிரான்ஸ் நாட்டில் மார்செயில்ஸ் நகரில் அச்சுப் போடப்பட்ட குழந்தைகள் கதைத் தொகுப்பாக இருந்தது. கையில் வாங்கிப் பார்த்த நூலகர், எத்தனை அபூர்வமான நூல் பாருங்கள், முக்கியமாக இந்தக் குழந்தைப் பாடல்கள். எனக்கு மிகப் பிரியமானவை இவை.

அவர் சொல்லி விட்டுப் பாட ஆரம்பித்தார் –

Bonny was a warrior | Way-ay-ah போனி ஒரு படைவீரன் வேஐ ஆ
Boney went to Waterloo| Way-ay-ah, போனி வாடர்லூ போனான் வேஐ ஆ
Boney was defeated | Way-ay-ah, போனி தோற்று ஓடினான் வேஐ ஆ

நெப்போலியன் இங்கிலாந்தோடு செய்த யுத்தத்தில் தோற்றது குறித்து மனதை உருக்கும் பாடல் இது, கேட்டிருப்பீர்களே?

நூலகர் வினவ, ஆம் என்றாள் நடாஷா.

அப்போது, நீங்களும் சேர்ந்து பாடுங்களேன்.

நூலகர் வற்புறுத்தினார். அவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. ஏற்று வாங்கிப் பாடிய துணை நூலகரும் குரல் கம்ம, அழத் தொடங்கினார்.

நீங்கள் புத்தகங்களைப் பாருங்கள், இந்தச் சூழலில் நான் அழுது அழுதே, துக்கத்தில் கழுத்து வெடித்து இறந்து விடுவேன் போல இருக்கிறது.

நூலகரும் துணைவரும் தனித்தனியாகச் சொல்லி வெளியே போக, மற்ற ஊழியர்களும் வெளியே கதவைப் பகுதி மூடி, இன்று உலகத் துக்க தினமாவதால் நூலகம் பிற்பகலில் இயங்காது என்று சொல்லி மற்றவர்களை அனுப்பி விட்டு, வாசற்படிகளில் காத்திருந்தார்கள். அவர்கள் அத்தரும் புனுகும் ஏலமும் மணக்கும் புத்தகங்கள் பற்றி ஆர்வமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பிரான்சில் 1900-களில் பள்ளி வகுப்புகளுக்கான அறிவியல், வரலாறு, கணிதம், புவியியல் என்று ஏகப்பட்ட பிரஞ்சு மொழிப் பாடப் புத்தகங்கள் அந்தப் பெட்டியில் இருந்தாலும் அவற்றை கேரளத்தோடு தொடர்பு படுத்தும் விதமாக எதுவும் கிடைக்கவில்லை.

பிரான்சிலிருந்து அந்தக் காலத்தை அடுத்து வந்த யாரோ நூல் நிலையத்துக்குக் கொடுத்திருக்கலாம் என்று கருத்துச் சொன்னாள் நடாஷா. கதவு திறந்து சாயாவும் பரிப்பு வடைகளும் இன்னொரு முறை அன்போடு பரிமாறப்பட்டன.

அவர்களைக் கனிவுடன் பார்த்தபடி, முதலிரவுக்குப் புதுமணத் தம்பதியரை அனுப்பி வைத்து வெளியே கதவு அடைக்கும் அன்பான சுற்றமும் நட்பும் போல நூலக ஊழியர்கள் சாந்தமும் புன்சிரிப்புமாக வெளியேறினார்கள்.

திலீப் எழுந்து ஏதோ தேடினான். என்ன வேணும் என்றாள் நடாஷா. டாய்லெட் போகணும்.

இன்னும் ரெண்டு மூணு மணி நேரம் பொறுத்துக்க முடியாதா?

அவனுடைய சட்டைக் காலரைக் கொத்தாகப் பிடித்து உயர்த்தி தலையைக் கரகரவென்று நகர்த்தி அவளைப் பார்க்க வைத்தபடி மூச்சில் பூண்டு மணக்கக் கேட்டாள். திலீப்புக்கு இப்போது பூண்டு பிடிக்கும். அதுவும் வேண்டி இருக்கிறது.

புண்ணியமாப் போறது. பிராணன் நின்னுடுத்து. என்னை விட்டுடு.

திலீப் அவள் கண்ணைக் கூர்ந்து பார்த்துப் போலி அச்சத்தோடு சொன்னான். வேண்டி இருந்தது. இன்னும் வரட்டும்.

அந்தப் பழைய கட்டிடத்தின் உள்ளடுக்குகளில் நம்பிக்கையோடு அரையிருட்டில் திலீப் தேடிப் போனது வீணாகவில்லை. நல்ல முறையில் பராமரிக்கப் பட்ட ஒரு காற்றோட்டமான கழிப்பறையை அங்குக் கண்டான்.

திலீப் திரும்ப வந்தபோது இரண்டாம் பெட்டியில் இருந்து எடுத்த ஒரு அடுக்கு பனையோலை ஏடுகளையும் அவற்றைப் பொதிந்திருந்த சிவப்புப் பட்டுத் துணியில் ஏடுகளோடு கூட இருந்த பழுப்பேறிய கெட்டிக் காகிதத்தையும் சுவாரசியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் நடாஷா.

அவள் திலீப்புக்காகப் படித்துக் காட்டியது இந்தத் தோதில் இருந்தது.

கொல்லம் வருஷம் 1052 இங்கிலீஷ் வருஷம் 1877-ல் சாவக்காட்டு பிரான்சிஸ் ஸ்தாணுநாதன் என்ற, வேதத்தில் ஏறிய 67-வயது நபருக்குப் புதையல் கிட்டியது. அது நாலு நாழி அரிசி வடிக்கிற அளவிலே பழைய உலோகப் பானையில் தங்க நாணயங்களும், ஒரு குப்பியில் தைலமும், இந்த ஓலைச் சுவடிகளுமாக இருந்ததாம். சுவடிகள் தமிழ்ச் செய்யுளாக இருந்தபடியால் பாண்டிப் பிரதேசத்துப் பண்டிதர் ஒருவரிடம் கொடுத்து அவை பரீட்சிக்கப் பட்டன. அது சேரமான் பெருமாள் கைலாயம் போக விமானம் கட்டியது பற்றிய விளக்கமாகவோ அல்லாத பட்சத்தில் வஞ்சி என்ற பேரூரில் கழிவுநீர்ச் சாக்கடை அமைப்பு நிறுவியது குறித்தோ இருக்கும் என்று தெரிந்ததாம். அவற்றை அச்சுப் போட காலம் கனியாத காரணத்தால் இப்படிப் பெட்டியில் பத்திரமாக வைக்க சாவக்காட்டு பிரான்சிஸும், அரண்மனை உத்தியோகஸ்தர்களும், பாதிரியார் எஸ்தப்பன் மண்ணார்க்காடும் சம்மதித்து அதேபடி இங்கே வைக்கப் பட்டதாம்.

அந்தக் கடிதம் கையெழுத்தில் இல்லாமல், அச்சு யந்திரத்தில் எழுத்துக் கோர்த்து அச்சடித்திருந்தது நடாஷாவுக்கு சந்தோஷத்தை உளவாக்கியது. நல்ல ஆங்கிலத்திலும் தொடர்ந்து மலையாளத்திலும் இருந்த அந்தக் காகிதத்தில் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நேரத்தில் குரிசுப் பள்ளியில் சங்கீர்த்தனமாகப் பாடும் பதினேழு ஏசுசபைக் கானங்களும் திருவசனங்களும் அச்சாகி இருந்தன.

விரும்பிக் கேட்டவர்களுக்கு விநியோகிக்க என்று தலைப்பில் அச்சடித்திருந்ததால் அது இலவசமாகப் பலருக்கும் வழங்கப் பட்டது என்றும் நடாஷா திலீப்பிடம் சொன்னாள். அவிசுவாசிகளுக்குத் தருவதைத் தவிர்க்கவும் என்று கீழே அச்சிட்டிருந்ததால், தனிச் சுற்றுக்கு மட்டும் என்பதும் புலப்பட்டது. அந்தச் சிறு வெளியீட்டைப் பக்கம் பக்கமாகப் புகைப்படம் எடுத்ததோடு, சில ஓலைச் சுவடிகளையும் நடாஷாவின் விருப்பப்படி நூலகர் அனுமதியோடு திலீப் படம் எடுத்துக் கொடுத்தான்.

ஏழு மணிக்கு நூலகரும் உதவியாளரும் மரியாதையோடு அறிவித்தனர் – இன்றைக்கு நேரம் முடிந்து கொண்டிருக்கிறது. நாளை வரலாமே.

நாளைக்கு வேறே பணி இருப்பதாகத் திலீப் சொல்ல, நூலகர் கோரிக்கை தரும் குரலில் சொன்னது –

ஒரு ஐந்து நிமிடம் எனக்காக, எங்களுக்காக ஒதுக்க முடியுமா?

அதைவிட மகிழ்ச்சியான எதுவும் எனக்கு இல்லை என அறிவித்தாள் நடாஷா.

நூலகர் நூல் நிலையத் தோட்டத்துக்கு ஒரு மெழுகுவர்த்தி ஏந்திப் பிடித்தபடி அவர்களை இட்டுப் போனார். பவழமல்லி மரங்கள் பூச் சொரிந்து நிற்கும் அந்த அமைதிப் பிரதேசத்தில் இடுப்பு வரையான, கைகள் பழுதுபட்ட சில கல் சிற்பங்களை அவர்களுக்குக் காட்டி நடாஷாவிடம் கோரிக்கை வைத்தார் –

இவை சேரமான் பெருமான் காலமோ அதற்கும் முந்தியோ ஏற்படுத்திய சிற்பங்கள். இந்த இடம் கோவிலோ, துறவு பூண்ட புத்த மதத்து அடியார்கள் தங்கி இருந்த மடமோ ஆக இருந்திருக்கும். சர்க்கார் இதைச் செப்பனிடப் பணம் தரும் நிலையில் இல்லை. நீங்கள் படம் பிடித்துப் போய் உங்கள் நாட்டுப் பத்திரிகைகளில் எழுதி, சோவியத் உதவி கிட்டினால் நன்றாக இருக்கும்.

நடாஷாவின் புகைப்படங்களும் கட்டுரைகளும் சோவியத் தேசம் முழுதும் சிரத்தையோடு வாசிக்கப்படும் என்பதில் அவர் வைத்திருந்த நம்பிக்கை அவளுக்குப் பிடித்துப் போனது. அடுத்த ஒரு மணி நேரம் அந்தக் கட்டடத்தில் இன்னும் பல புகைப்படங்களை எடுக்க வேண்டி வந்தது திலீப்புக்கு. நூறு வருஷம் முற்பட்டது என்று நூலகர் காட்டிய பழைய நாற்காலியும், கிழிந்து தொங்கிய பங்காவும் இவற்றில் அடக்கம்.

சோவியத் அரசு, நட்பு நாட்டுக்கான உதவி செய்யும் என்பது உறுதி. அதற்கான முயற்சிகள் எடுப்பேன் என நடாஷா வாக்குத் தர, எல்லோருக்கும் பெருமகிழ்ச்சி.

வெளியே இறங்கிய நிமிடத்திலிருந்து பசி பசி என்று ஜபிக்கத் தொடங்கி விட்டாள் நடாஷா. இன்னும் பனிரெண்டே மணி நேரம். காலையிலே பசியாறிக்கலாம். பொறுத்துக்க முடியாதா?

திலீப் அவள் முன்பு சொன்னதைப் பத்திரமாக வைத்திருந்து மகிழ்ச்சியோடு திருப்பிக் கொடுக்க, அவனை இடுப்பில் கை வளைத்துத் தூக்கி ஒரு தடவை தட்டாமாலை சுற்றி, நூலகத்தின் புல் தரையில் போட்டாள் நடாஷா. சைக்கிள்களில் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த நூலகரும் மற்ற ஊழியர்களும் பலமாகக் கைதட்டி ஆர்பரித்து இந்திய சோவியத் கூட்டுறவை வாழ்த்தி, சைக்கிள் மணி ஒலித்துப் போக, திலீப் அவளைப் பார்த்த பார்வையில் முதல் முறையாக ஆசை தெரிந்தது. வேண்டி இருந்தது இதுவும் அவனுக்கு.

மகாத்மா காந்தி பெயரைச் சூட்டிக் கொண்ட மெயின் ரோடு தூங்கப் போய்க் கொண்டிருந்ததால் வீதியை ஓரமாகக் கீறிப் பிளந்து செல்லும் சிறு சந்துகள் ஒன்றில் புகுந்தான் திலீப். அவன் ஏமாற்றமே அடையத் தேவை இல்லாமல் ஊணு ரெடி என்ற பெயர்ப்பலகை வைத்த சாப்பாட்டுக் கடை திறந்திருந்தது.

வந்த இரண்டே வாரத்தில் நடாஷா ஆயுசுக்கும் இதைத் தான் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி மசாலா தோசை, இட்லி, பூரியும் கிழங்கும் என்று ரசித்துச் சாப்பிடப் பழகிக் கொண்டிருந்தாள். மதியம் சோற்றில் குழம்பைப் பிசைந்து உருட்டிச் சாப்பிடத்தான் இன்னும் சரியாக வரமாட்டேன் என்கிறது. உருட்டிப் பிடிப்பது உதிர்ந்து தான் போகிறது என்பதால் தனித் தனியாகத்தான் சாப்பிடும் வழக்கம்.

கடை உள்ளே நுழையும் போது சுவரில் குத்துச் சண்டைக்காரர்கள் இருவர் பொருதும் பெரிய புகைப்படம். தெய்வ உருவங்களை மட்டுமே கண்ணாடியும் மரச் சட்டமும் இட்டுச் சிறைப் பிடித்துச் சுவரில் மாட்டியிருக்கும் உணவு விடுதிகளில் ஒரு மாறுதலுக்காக வைத்த இந்தக் குத்துச் சண்டைப் படத்தை ரசித்தான் திலீப்.

இங்கே வேணாம், வேறே எங்காவது போகலாம் என்றாள் நடாஷா.

ஏன், நீதானே பசி பசின்னு கத்திட்டிருந்தே? திலீப் பொறுமை இழந்து கேட்டான்.

ஓங்கி அடிச்சு படத்திலே வலது பக்கம் நின்னு குத்துச் சண்டை போடறானே அது பார்க்க வேணாம்

ஏன் அவனைப் பிடிக்கலேன்னா இன்னொருத்தனைப் பாரு. இல்லே என்னப் பார்த்துக்கிட்டு சாப்பிடு.

திலீப் அவள் மறுபடி அவனை நெருங்கி ஆக்கிரமிப்பாள் என்று ஆசை பொங்கி வரக் காத்திருக்க நடாஷா குனிந்து அவன் காதில் அவசரமாகச் சொன்னாள் –

அவன் செர்யோஷா. என் பாய் ப்ரண்ட். விட்டுட்டுப் போயிட்டான் ராஸ்கல்.

சாப்பிடுவதாகப் பெயர் பண்ணிவிட்டு எழுந்தாள் நடாஷா. அவளுக்காக திலீப் போடச் சொல்லிக் கேட்டு வாங்கிய முட்டை தோசையைக் கூட விள்ளல் விள்ளலாக எடுத்துக் கொறித்து விட்டு அப்படியே வைத்து விட்டாள் அவள். தொடர்ந்து கண்ணீர் பெருக்கியபடி இருந்தவளை நேசமாகத் தோளில் தட்டி தனக்குத் தெரிந்த ஒரே பைபிள் வாசகத்தைச் சொன்னான் திலீப் –

இதுவும் கடந்து போகும்.

டிரைவர் இல்லாமல் இருட்டில் நிறுத்தி இருந்த ஆட்டோ ரிக்‌ஷாக்களையும், விளக்குக் கம்பத்தின் அடியில் உறங்கும் தெரு நாய்களையும், சகலரும் குத்த வைத்து எழ, மூத்திர ஈரம் விரியத் தொடங்கிய முடுக்குச் சந்துகளையும் நின்று நின்று பார்த்து அரை மணி நேரம் கழித்து அம்பாசடர் டாக்சி ஒன்று வந்தது. நம்பிக்கை இல்லாமல் திலீப் நிறுத்தச் சொல்லிக் கையசைத்தான். வண்டி சற்று தூரம் கடந்து போய் நின்றது.

சவாரி வரச் சம்மதம் சொன்னார் அந்த ஓட்டுனர். சிவப்போ அல்லது மற்றச் சிந்தனைகளோ இல்லாத அந்த வண்டியோட்டி மொத்தமாக முப்பது ரூபாய் தேவை என்றும் அதில் பத்து ரூபாயை இப்போதே தர வேண்டும் என்றும் நிபந்தனை போட்டார்.

மிகப் பெரிய கொம்பன் மீசை வைத்த, தலை கலைந்த ஓட்டுநர் அவர். குரலில் முரட்டுத் தனம் வழிந்தது. இருக்கட்டும், ரெண்டு பேர் உண்டே, என்ன செய்து விட முடியும்? அதுவும் ஆஜானுபாகுவான சோவியத் வீராங்கனை இவன் கூடவே உண்டு. போகலாம் என்றான் திலீப். ஏறிக் கொண்டார்கள்.

இருட்டான ஏதேதோ தெருக்களில் வண்டி ஊர்ந்து போக, திலீப் கையை இறுகப் பற்றிக் கொண்டாள் நடாஷா. பயமா இருக்கு என்று காதில் சொன்னாள். எதிரே கடந்து போன லாரி ஹெட் லைட் வெளிச்சத்தில் அவள் உரித்த வெள்ளைப் பூண்டு போல் அழகாகத் தெரிந்தாள்.

பிடி விடாத கைகள் இன்னும் இறுகி இருக்க, வண்டி நின்றது.

இருங்க, வீட்டுக்காரி கிட்டே பணத்தை கொடுத்துட்டு வந்துடறேன்.

பத்து நிமிடத்தில் இடுப்பில் குழந்தையும் பின்னால் டிரவுசர் வாரைத் தூக்கிப் பிடித்தபடி ஓடி வரும் சட்டை இடாத சின்னப் பையனும் பின் தொடர டிரைவர் வந்தார். அவர் வீட்டுக்காரி ஒரேயடியாக புகார் சொல்லும் குரலில் அதிவேகமாக மலையாளத்தில் சொல்லியபடி திலீப்பையும் நடாஷாவையும் ஆதரவு கோருவது போல் பார்த்தாள். போ, வரேன் என்று கையசைத்து வண்டியைக் கிளப்பிய டிரைவர் மேல் பயம் விலகிப் போக, திலீப் பேசத் தொடங்கினான். நாளை யாரையெல்லாம், எங்கே போய்ச் சந்திக்க வேண்டும் என்று விசாரித்தான் நடாஷாவை. கார் டிரைவர் இல்லாமல் இருந்தால் வேறு ஏதும் பேசியிருப்பான். அப்படித்தான் அவன் நினைத்தான். வேண்டித் தான் இருந்தது இதுவும் கூட.

செர்யோஷாவை உளவாளி எனக் குற்றம் சாட்டி, தேசத் துரோகத்துக்கான உச்ச பட்ச தண்டனை கொடுத்து சைபீரியாவுக்குக் கொண்டு போய்விட்டார்கள் என்று மட்டும், தகவல் சொன்ன நடாஷா அதற்கப்புறம் அழவில்லை.

ஆலப்புழையில் நடாஷா தங்கியிருக்கும் விடுதி எது என்று சொல்லாலமேயே சரியாக அங்கே போய்ச் சேர்ந்து விட்டது டாக்சி.

நீ அம்பலப்புழை எப்படிப் போவே? நடாஷா கேட்டாள்.

அலைச்சல் தான். லாரியாவது கிடைக்காதான்னு நம்பிக்கை.

இங்கேயே ஓட்டல் ரூம்லே இருந்து காலையிலே போகறியா?

வேறே வினையே வேணாம். இவர்கள் எல்லாம் ஏற்கனவே திலீப் நடாஷாவோடு தினம் பத்து நிமிடம் அவசரமான சிருங்காரச் செய்கைகளில் ஈடுபடுவதாக நினைக்கிறவர்கள். ஐரோப்பிய மதாம்மாவும் கறுத்த இந்திய உதவியாளனும் ஒருவரை ஒருவர் ஈர்க்கத் தொடங்கி இருக்கும் நேரம் இது.

கற்பனை செய்ய மாட்டான் திலீப். நிறையச் செய்தாகி விட்டது. விட்டுப் போனால் அகல்யா அழுவாள். இந்தித் திரைப்படங்களில் காதல், கல்யாணம், ஏமாற்றம், தியாகம், சோகம் எல்லாம் பாட்டுகள் மூலம் உணர்த்தப்படும். திலீப்புக்கு அவற்றை ரக வாரியாகப் பட்டியலிடப் பிடிக்கும் ஆனால் இன்றைக்கு அதைச் செய்ய மாட்டான். அசதி கண் இமை வரை தளும்பி நிற்கிறது.

நான் எப்படியாவது பார்த்துக்கறேன். போயே ஆகணும்.

திலீப் இறங்க முற்பட, அவன் மடியை இறுகப் பற்றி உட்கார்த்தினாள் நடாஷா.

நீ பஸ் பிடிக்க அலைஞ்சு கஷ்டப்பட வேணாம். டாக்சியிலேயே போயிடு. நான் இன்னும் பத்து ரூபா அதிகமாப் போட்டுத் தந்துடறேன்.

டிரைவரிடம் சின்ன இங்கிலீஷ் வாக்கியங்களாக அவள் பேச, அவர் ஏனோ தலையாட்டி முடியாது என மறுத்தார். நடாஷா லட்சியம் செய்யவில்லை. இது அதிக பட்ச கட்டணம், இதற்கு மேல் இந்த ராத்திரி இவர் சம்பாதிக்க முடியாது என்று அவள் அறிவாள். அவள் பேசிக் கொண்டே போனாள்.

பாக்கி இருபது ரூபா தரணும் தானே, கூட பத்து ரூபாய் சேர்த்து முப்பதாகக் கொடுத்திடறேன்.

நடாஷா அவளுடைய கைப்பையில் தேட, வேண்டாம் என்று கையமர்த்தினார் அந்த டிரைவர்.

அடுத்து அவர் செய்தது நம்ப முடியாததாகப் போனது திலீப்புக்கும் நடாஷாவுக்கும்.

மன்னிக்க வேணும். உங்க கிட்டே அதிகப் பிரசங்கித் தனமா முப்பது ரூபா கேட்டுட்டேன். பதினைந்து ரூபாயே அதிகம். வீட்டுக்காரி திட்டறா. இப்படி சம்பாதிக்கறது உடம்புலே ஒட்டாதாம். அதான் சின்னப் பையன் சட்டை போட முடியாம இருக்கு. போட்டா அஞ்சு நிமிஷத்துலே தோல் பொசுங்கிப் போவுது.

அவர் நிறுத்தி, திலீப்பைப் பார்த்தார்.

நீ வா ராஜா. ஒண்ணும் தரவேணாம். அம்பலப்புழையிலே இறக்கி விடறேன்.

நடாஷா இறங்க, திலீப் மனதில் ஏனோ பயம். இந்த டிரைவர் கூட்டிப் போய்க் கழுத்தை நெறித்து விட்டால்? இருக்காது, அப்படி ஆன பட்சத்தில் சொந்தக் கதை சொல்லிக் கொண்டு துக்கத்தைப் பகிர்ந்திருக்க மாட்டார்.

அம்பலப்புழையிலும் எங்கே போக வேண்டும் என்று கேட்காமல், நேரே மயில்பிலி தூக்க ஆப்பீஸ் என்று அறியப்பட்ட திலீப்பின் தங்குமிடமும் பணி செய்யும் இடமுமான பழைய வீட்டருகே டாக்சி நின்றது.

ஆபீஸ் வாசலில் கோணலாகப் படுத்துக் கொண்டிருந்த வெடிவழிபாட்டுக் குறூப் எழுந்து உட்கார்ந்து திலீப்பை வாசல் பூட்டைத் திறக்க வேண்டாம் என்றான்.

உள்ளே சமையல் நடந்துட்டிருக்கு. நான் சொல்வேனே, கோவில் கொடிமரம் பக்கம் பறந்து போய் மூத்ரம் ஒழிச்ச வயசன், அவன் பறந்து பறந்து சுத்தி வந்துட்டிருக்கான். உம் மேல் ஒழிச்சு வைக்கப் போறான். உ ள்ளே போகாதே.

குறூப், ஆபீஸ் இல்லேன்னு வயறு முட்டக் குடிச்சாச்சு போல.

சொல்லியபடி, திலீப் திறந்து உள்ளே போய்க் கதவைச் சார்த்திக் கொண்டான்.

மிக விரைவாக நித்திரை போனான் அவன். அலைச்சலின் அயர்வும், படித்தது, எழுதியது, போட்டோ எடுத்தது என்று உடம்பு வணங்கி வேலை பார்த்த அசதியும் கண்ணை மூட வைத்தது. சந்திக்காமலே மரணமடைந்த மத்தாயு மாப்பிள்ளையும், சேறு படிந்த பலகை மேலேறி டியூஷன் வகுப்பு போகும் அழகான இளம் பெண்களும், அகல்யாவும், அவன் மேல் பின்னிப் பிணைந்து கிடக்கும் நடாஷாவுமாக நிலை குழம்பி நினைவும் கனவும் இழைந்து நீண்டன.

வீட்டில் நடமாட்டம் இருப்பது போல் பிரமை. எழுந்து போக முடியாமல் காலை, கையைக் கட்டிப் போட்ட உறக்கம். சமையல் செய்யும் வாடையும், பெண்கள் சண்டை போடும் ஒலியுமாகக் கிடக்கும் வீடு. அது ஓய்ந்து முயங்கும் ஒலிகள். பக்கத்தில் எங்கேயோ. சணல் சாக்கில் கொட்டைப் புளி அடைத்து வைத்த வாடையும், போக வாடையும் மேலேறுகின்றன. லகரியில் மெல்லக் கூவும் பெண். மூச்சு வாங்க இயங்கும் ஆண். ஒரு வயசன் கண் மூடிப் பறந்தபடி வருகிறான். சணல் மூட்டை மேல், உடம்பு மெலிந்த, பல் நீண்ட பழைய கால உடுப்பு களைந்த ஸ்திரியை சாய்த்து வைத்து போகம் செய்கிறவனின் பிருஷ்டத்தில் இடித்து மேலே உயர்ந்து போகிறான் வயசன். அவனுடைய கண் மூடியே இருக்கிறது.

டெலிபோன் மணி அடிக்கும் ஓசை. நிமிஷத்து நிமிஷம் அது வலுவடைகிறது. நின்று போய் உடனே தொடர்கிறது. திரும்ப நிற்கிறது. மேலும் வலுக்கிறது.

திலீப் துள்ளி எழுந்து விழித்துக் கொண்டான். கனவு ஏதும் இல்லை. டெலிபோன்.

டெலிபோன் ஓசை மட்டும் நிஜம். இருட்டில் சத்தம் வழி காட்ட, ஓடிப் போய் எடுத்தான்.

திலீப் மோரே கிட்டே பேச முடியுமா?

அகல்யா குரல்.

ஏய் அகல், நான் தான். என்ன ஆச்சு? இப்போ இப்போ நீ இப்போ.

அவனுக்குக் குரல் பதற்றத்தில் சீராக எழும்பவில்லை.

நீங்க வரணும், கேட்டேளா. உங்க அம்மா உடம்பு நிலைமை கொஞ்சம் கவலைப்படற மாதிரி.

அவ போயிட்டாளா?

திலீப் கேட்டான். பதில் இல்லை. திரும்பவும் கேட்டான்.

அம்மா போய்ட்டாளா?

அகல்யா அழும் குரல் ஒரு வினாடி ஒலித்து தொலைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டது.

(தொடரும்)

New Novel: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 30 இரா.முருகன்

நாலு நாள் இனி ஆபீஸ் அடச்சுப் பூட்டி இருக்கும். நீ வழக்கம் போல் இங்கே தங்கிக்க தடை ஒண்ணும் இல்லே.

கல்கத்தா குக்கல் குரைத்தான். குக்கல் என்றால் நாய் என்று அப்பா சொன்னது திலீப் நினைவில் உண்டு. அந்த நாய் பிஸ்கட் கம்பெனி ரிடையர்ட் முடி பிடுங்கி நாய் ஜெனரல் மேனேஜர் சாஸ்திரி இப்படிச் சொன்னது நேற்று சாயந்திரம். திலீப் மறு பேச்சு பேசும் முன்னால், அடுத்த கட்டளையையும் வந்து விழுந்தது.

நடாஷா வாசிலிவிஸ்கி இங்கே பிரிண்டிங் பிரஸ் வந்தது, நிலைச்சதுன்னு நூறு வருஷ சரித்திரத்தையும் ஆராய்ச்சிக்கு எடுத்திண்டிருக்கா. கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு, எரணாகுளம், திருவனந்தபுரம்னு பல ஊர்லேயும் சந்திச்சுப் பேச ஒரு பெரிய லிஸ்டோட வந்திருக்கா. எல்லோரும் பத்திரிகை, அச்சுத் தொழில்லே பெரிய பேர். அவளை கூட்டிப் போய் வாரக் கடைசிக்குள்ளே எல்லாம் முடிச்சுத் தர வேண்டியது உன்னோட வேலை.

சியாமளா பெரியம்மா இப்படி மமதை தலைக்கேறிச் சொன்னபோது திலீப் ஏமாற்றத்தின் உச்சியில் இருந்தான். நாலு நாள் என்றால் நாலு நாள். மும்பைக்குப் போகிற ரயில் வண்டியில் இடம் இல்லாமல் கார்ட் கம்பார்ட்மெண்ட் கக்கூஸில் கால் மடித்து உட்கார்ந்தோ, வண்டிக்குப் பின்னால் ஓடியோ பம்பாய் போய் அகல்யாவோடு இருந்து விட்டு வர மனமும் உடம்பும் விடாப்பிடியாக வலியுறுத்திக் கொண்டிருந்தது. கல்யாணமாகி ரெண்டே தினத்தில் இந்தக் கிராதகர்கள் டிரங்க் கால் போட்டு திலீப்பை அகல்யாவின் வெப்பமான அணைப்பில் இருந்து பிய்த்தெடுத்து இங்கே வரவழைத்து விட்டார்கள்.

நாட்டுப்புறக் கலைவிழா சிறப்பாக முடிந்து, பம்பாய், தில்லி, கல்கத்தா பத்திரிகைகளில் பத்தாம் பக்க நியூஸ், மதராஸ் இங்கிலீஷ் பத்திரிகையில் எஃகுத் தொழிலில் பின்னடைவு பற்றி ரிடையரான சர்க்கார் அதிகாரி எழுதிய கடிதம், மாம்பலம் சபா சொற்பொழிவில் சுந்தரமூர்த்தி நாயனார் கைலாயம் போன விவரம் இவற்றோடு, நாலு காலத்துக்குக் கட்டம் கட்டி, சியாமளா பெரியம்மா மேடையில் பேசுகிற புகைப்படத்தோடு வந்த வியாசம் என்று அவளுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சியைக் கொடுத்த நிகழ்வுகள்.

சியாமளா பெரியம்மா யூனிவர்சிட்டிக்கு சமர்ப்பித்த, அர்ஜுன நிருத்தத்தை முன்வைத்து கேரள நிகழ்கலைப் பாரம்பரியத்தை ஆய்வு செய்திருந்த கட்டுரைக்கு அவளுக்கு டாக்டர் பட்ட அறிவிப்பும் நேற்று வந்து சேர்ந்து அந்த சந்தோஷ சமாசாரம் விழாப் பந்தலில் சகலரோடும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

கொங்கணிப் பெண்ணின் கொங்கைக் குவட்டில் மினிஸ்டர் பெரியப்பா விழுந்து கிடப்பதைக் கூடச் சட்டை செய்யாமல் பெரியம்மா உற்சாகமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டாள் அப்போது. பெரியம்மா சார்பில், விழாவுக்கு வந்த பிரமுகர்களுக்கு எல்லாம் விசேஷமாகக் கோவிலில் சொல்லி வைத்துக் காய்ச்சிக் கொண்டு வந்த பால் பாயசம் பிற்பகலில் குவளை குவளையாக வழங்கப்பட்டது. அந்த விழாவே டாக்டர் சியாமளா என்ற ஆராய்ச்சியாளர் எடுத்த விழாவாக எல்லாத் தரப்பாலும் போற்றப்பட, பெரியம்மா இன்னும் தன்னை மேம்பட்டவளாக உணர்ந்து, வெடிவழிபாட்டுக் கிழவன் சொல்லும் பழங்கதைகளில் வரும் சாவக்காட்டு முத்தச்சன் போல் தரைக்கு ஓரடி மேலே தான் பறந்து கொண்டிருக்கிறாள். அவளுக்குப் பெருமை என்றால் திலீபுக்கும் பெருமை தான்.

எது எப்படியோ, வெடிக்கார குறூப் கூட ஆபீசுக்கு வர வேண்டியதில்லை. ஆனால் திலீப் மட்டும் பெரியம்மா சொன்ன வேலைக்காக ஆஜானுபாகுவான அந்த சோவியத் பெண்ணோடு மழையில் சுற்றி வர வேண்டும். ஆறரை அடிக்கு அவள் திலீப் பக்கத்தில் நின்று குனிந்து பார்க்கும் போது மூக்கில் குத்தும் பூண்டு வாடை அவனை மிரட்டுகிறது. ஐரோப்பிய வெளுப்பும் உள்ளிப் பூண்டின் வாசமும், கனமான குரலுமாக அவள் திலீப்போடு கூட நடக்கும்போது அசூசையோடு பார்க்கும் உள்ளூர்க்காரர்களை திலீப்புக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆதூரத்தோடும் பச்சாதாபத்தோடும் இல்லையோ பார்க்க வேண்டும் அவனை? மலையாளக் கரையில் சகலத்திலும் செக்ஸ் உண்டல்லோ.

சரியாக காலை எட்டு மணிக்கு வந்திடு திலீப் என்று கட்டளையிட்டிருந்தாள் நடாஷா. அவள் சொன்னபடி உடனுக்குடன்செயல்பட வேண்டும் என்பது பிஸ்கட் குத்தா மற்றும் பெரியம்மா ஆணை. டூமா என்ற சோவியத் நாடாளுமன்றத்தில் பரபரப்பாகச் செயல்படும் உறுப்பினரின் மகளாம் நடாஷா. கட்சியில் முக்கியமானவர் அவர். ஐரோப்பிய அரிவாளும் ரஷ்ய சுத்தியலும் சிகப்பில் எழுதிய சீனப்பட்டுத் துணிக் கொடியில் பறக்கும் பூமி அது. கேரளா போல.

பெரியம்மா ஆப்பிரிக்கப் பயணம் போக, இங்கே வந்த தூதுவர் வைத்தாஸ் ரெட்டி மூலம் அழைப்பு வந்திருக்கிறதாக திலீப்புக்குத் தெரியும். அப்படியே ஐரோப்பாவிலும் பயணப்பட, தில்லியில் மினிஸ்டர் கணவர் மூலம் அவள் முயற்சி எடுப்பதும் தெரியும். கொங்கணிப் பெண் சரச விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளப் பெரியப்பா அவளை ஐரோப்பா அனுப்ப மும்முரமாக முயற்சி செய்வார் என்பது கூடத் திலீப்புக்குத் தெரியும்.

பத்து நாள் என்றால் பத்து நாள். பெரியம்மா உலகம் சுற்ற, பெரியப்பா நேரு நினைவுகளை கொங்கணி வாசனை மணக்க மணக்க அந்தச் சிவத்த ரெட்டை நாடிப் பெண்ணின் தேகத்தில் இருந்து ரசனையோடு அகழ்ந்தெடுப்பார். நடாஷா தயவில் சோவியத் பயணமும் பெரியம்மாவுக்கு வாய்த்தால், கொங்கணி மாமிக்கு அவர் ஒரு நல்ல நாளில் கர்ப்ப தானமும் செய்யக் கூடும். திலீபுக்கு எல்லாம் தெரியுமாக்கும். ஜனனியிடம் சொன்னால் சிரிப்பாள்.

யாரும் எங்கேயும் போகட்டும். யாரோடும் கூடிக் குலாவட்டும். அவனுக்குச் செய்ய வேலை இருக்கிறது. நடாஷாவை எரணாகுளம் கூட்டிப் போகணும்.

மழை நேரத்து ஆட்டோ கிடைக்க வழக்கம் போல் சிரமமாக இருந்தது. ஆனால் இங்கே ஒரு நல்ல விஷயம் – ஆட்டோ டிரைவருக்கு நல்ல மனது இருந்து போகலாம் என்று முடிவு செய்தால் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது பற்றி விவாதமே இல்லாத இடம். சரியான தொகைக்கு மேல் ஒரு காசு கூடக் கேட்க மாட்டார்கள் யாரும். அரிவாளும் சுத்தியலும் கற்றுக் கொடுத்த சத்திய வழி என்று பெருமிதத்தோடு போன வாரம் ஒரு வண்டியோட்டி சொன்னார். ஆனால் பாதி வழியில் அவருடைய ஆட்டோ ரிக்‌ஷா நின்று போனது.

ஆலப்புழை போகணும். ஆட்டோ வருமா?

கண்ணில் பட்ட வாகனத்தை நிறுத்த, ஓட்டி வந்தவன் எதிர்க் கேள்வி கேட்டான் -

சேட்டன் அங்கே ஓட்டலில் தங்கியிருக்கற மதாம்மாவைக் கூட்டிட்டு இங்கே வந்து மயில்பீலி தூக்கம் படிப்பிக்கணும். அதானே? அலைச்சல் இல்லாம மதாம்மா இங்கேயே ஜாகை ஏற்படுத்திக்கலாமே? பெட்ரோல் மிச்சம் கூட.

அது சரி, ஆனால் இன்னிக்கு ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகணும்.

திலீப் கர்ம சிரத்தையாக விளக்கம் சொன்னான்.

ரயில்வே ஸ்டேஷனா, அதுவும் பக்கம் தான். டிரைவர் உற்சாகமாகக் கூறினான்.

ஆனா நான் போய்க் கூட்டிப் போகணுமே.

விடாது, திலீப் மேலும் விளக்கினான்.

நல்ல வேளை, பஸ்ஸில் ஆலப்புழை போய் அங்கே ஓட்டலில் இருந்து பொடி நடையாக நடாஷாவை ரயில் ஏறக் கூட்டிப் போகலாமே என்று கேட்காமல் ஆட்டோ திலீப்பை ஏற்றிக் கொண்டு ஆலப்புழை கிளம்பியது.

நடாஷா இருந்த ஆலப்புழை ஓட்டலுக்கு முன் சேறும் சகதியுமாகக் கிடந்தது. அங்கங்கே மரப் பலகையைத் தரையில் இட்டு வைத்திருந்தது கண்ணில் பட்டது. அதன் மேல் ஜாக்கிரதையாகக் கால் வைத்த, தலை குளித்த பெண்கள் நோட்டுப் புத்தகம் சுமந்து பக்கத்தில் காலேஜுக்கோ, தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிற்சிக்கோ போய்க் கொண்டிருந்தார்கள். மழையும் வெள்ளமும் சகதியும் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டிருக்கும் அவர்களுக்கு.

திலீப்பும் மழை சுழன்றடிக்கும் பிரதேசத்தில் இருந்து வருகிறவன் தான். மராத்தியர்கள் ஒவ்வொரு வருஷமும் மழையை வரவேற்பது சகல கவனமும் எடுத்து. திலீப்புக்கு அதில் அசாத்தியப் பெருமை. மழைக்காலத்தில் பம்பாய் எலக்ட்ரிக் ரயிலில் போவதை விடவா இதெல்லாம் பெரிய விஷயம்?

இல்லல்லோ என்று எதுக்கோ சொல்லி தங்களுக்குள் சிரித்துப் போன பெண்களைத் தொடர்ந்து திலீப் மரப் பலகையில் கால் வைக்க, வழுக்கி சேற்றில் இரண்டு காலும் அழுத்த நின்றான்.

நல்ல வேளை. ஓட்டல் மேனேஜர் அவனைப் பார்த்திருந்தார். மதாம்மா அகத்து உண்டு என்று எதிர்பார்ப்புகளோடு தினம் செய்தி அளிப்பதை அவர் கடமையாக ஆற்றுகிறவர். இவன் நடாஷா இருந்த அறைக்குள் போய் பதினைந்து இருபது நிமிடங்களுக்கு அப்புறம் அவளோடு வெளியே போகும் போது எதற்காகக் கூர்ந்து பார்க்கிறார், எங்கே பார்க்கிறார் என்று திலீபுக்குத் தெரியும். அவரைப் போய்க் கேட்கவா முடியும்? அதுக்கெல்லாம் பத்து நிமிஷம் போதாதா என்று பதிலுக்குக் கேட்கக் கூடியவர். போதும் தான்.

யங் மேன், கொஞ்சம் நில்லு. ஆபீஸ் பாய் வெள்ளம் ஒழிப்பான்.

அவர் அவனை வாசலிலேயே நிறுத்தி விட்டார். சகதிக் காலோடு நடாஷாவை இவன் கட்டிலில் கிடத்திக் கலந்தால் படுக்கை விரிப்பும் தலையணையும் ஏன் அறையுமே சேறும் சகதியுமாகி விடாதா என்ற கரிசனம் திலீப்புக்குப் புரிந்தது.

மாடிப் படிக்கட்டில் விரித்த எத்தனையோ வருஷம் பழையதான கம்பளத்தில் ஈரக் கால்களை மணலோடு ஒற்றி ஒற்றிக் கடந்து, அவன் இரண்டாம் மாடியில் நடாஷா இருந்த அறைக்கு முன் நின்றான்.

ஆகக் குறைந்த உடுப்பில் கதவைத் திறந்தாள் அவள். அந்த அறையே உள்ளிப் பூண்டு வாடை சூழ்ந்து இருந்ததாக திலீப் நம்பத் தொடங்கி இருந்தான்.

உட்காரு, குளிச்சுட்டு வந்துடறேன்.

நடாஷா உள்ளே போனாள்.

ஒற்றை நாற்காலியில் மார்க் கச்சு தொங்கிக் கொண்டிருந்தது. விரித்து வைத்திருந்த ஈரமான பெரிய ஸ்கர்ட் பாதிக் கட்டிலை அடைத்துத் தரையில் வழிந்தது. ஈரத் துணி வாடையையும் சேர்த்து மேலே சீலிங் ஃபேன் பரத்திக் கொண்டிருந்தது. மீதிக் கட்டிலில் அரையில் உடுத்தும் பெண்கள் உள்ளாடை, கறுப்பு நிறத்தில். அதைத் தொட்டபடி, பாதி சாப்பிட்ட ரொட்டியும் ஆம்லெட்டுமாகப் பீங்கான் தட்டு. ஓரமாக காலி தேநீர்க் கோப்பை, எந்த நிமிஷமும் தரைக்குக் கவிழக் கூடும் என்ற நிலையில். எங்கே உட்கார?

யோசித்து ஏதோ குறுகுறுப்போடு நாற்காலி நுனியில் தொடுக்கினாற்போல் அமர்ந்தான். ஒரு வினாடி தான். சுற்று முற்றும் பார்த்து விட்டு நன்றாகப் பின்னால் சாய்ந்தான். இரண்டு தோளையும் தழுவிப் படர்ந்த, உடுத்து விழுத்துப் போட்ட மார்க்கச்சையின் ஒச்சை வாடை அவனுக்கு வேண்டி இருந்தது.

அகல் செல்லம் அகல் கண்ணம்மா

அவன் வெறியோடு அந்த மார்க்கச்சையைப் பின்னால் இருந்து எடுத்து ஆவேசமாக முகம் புதைத்துக் கொண்டான். வேண்டி இருந்தது. இன்னும் கூட.

பதுங்கிப் பதுங்கி, முன்னால் ரெண்டு அடி வைத்து கறுப்பு உள்ளாடையை ஆசையாகப் பற்றி எடுக்கும் போது குளியலறைக் கதவின் இறுகிக் கிடந்த தாழ் திறக்க முயற்சி செய்வதின் ஓசை. எடுத்ததை அப்படியே போட்டு விட்டு திலீப் அசதியோடு நாற்காலியில் உட்கார்ந்தான். சந்தன சோப்பும் பூண்டும் மணக்க நடாஷா, ஒரு டர்க்கி டவல் உடுத்து, மேலே சன்னமான துண்டு போர்த்தி, குளியலறைக்கு உள்ளே இருந்தபடிக்கு அவனைக் கை சுண்டி அழைத்தாள்.

என்னடி ஆம்பளைப் பிசாசே?

அவன் தமிழில் கேட்டதால் தப்பித்தான். தரையில் கிடக்கும் மார்க் கச்சையை எடுத்துக் கொண்டு வந்து தரும்படி கேட்டாள் நடாஷா. அப்படியே கட்டிலில் கிடக்கும் உள்ளாடையும் வேணுமாம்.

வெட்கமே இல்லியாடி முண்டே?

திலீப் சற்றே கை நடுங்க அந்த உடுப்புகளை எடுக்கும்போது திரும்ப உடலில் கிளர்ச்சியும் அகல்யா நினைப்பும் பரவியது. கல்யாணம் முடிந்து ரெண்டே நாள் அவளோடு சுகித்திருந்தபோது கிளர்ந்தெழுந்து, அவள் தேகம் வியர்ப்பில் துப்பிக் கிறுகிறுக்க வைத்த கறிவேப்பிலை மணமும்.

குளிரக் குளிர நின்ற நடாஷா இரண்டு துணியையும் வாங்கிக் கொண்டு அவனையே பார்த்தாள்.

என்ன யோசனை?

அவன் பதில் சொல்வதற்குள், சட்டென்று அவனை இடுப்பில் அணைத்து உயரத் தூக்கி கன்னத்தில் பப்பரப்ப என்று முத்தமிட்டுக் கீழே போட்டாள். சுடக்கெடுத்து விட்ட மாதிரி இருந்தது திலீப்புக்கு.

அடி திருட்டு லண்டி. விளையாட்டு வினையாயிடும்டி.

அவன் சொல்லி முடிப்பதற்குள் சிரித்தபடி குளியலறைக் கதவு அடைத்துத் திரும்ப உள்ளே போனாள். அவனுக்கு வேண்டித்தான் இருந்தது.

அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது மழை சிறிதும் இல்லாத, சூரியன் மித வெப்பமாகப் படியும் காலை ஒன்பது மணி. நாலு வழி சந்திப்பில் பஸ்ஸும், லாரியும், ஒன்றிரண்டு கார்களும், ரிக்‌ஷா வண்டிகளும் இடத்தை அடைக்க, போக வழி தெரியாமல் நின்றான் திலீப்.

அவனை கிட்டத்தட்ட பாதுகாப்பாக நெருக்கி அணைத்துக் குழந்தை போல செலுத்திக் கொண்டு திடமாக அடியெடுத்து வைத்துப் போனாள் நடாஷா.

எரணாகுளம் லோக்கல் வரும் நேரம். ரயிலிலேயே போகலாமா?

திலீப் கேட்டான்.

அவள் பஸ் ஏறுவதில் ஆர்வம் காட்டினாள்.

ரயிலில் போனால் பாதை முழுக்க பச்சைப் பசேல் என்று செடியும் கொடியும் தூரத்தில் காயலும் கடலுமாக இருக்கும்.

அவள் தோளில் மாட்டியிருந்த காமிராவைப் பார்த்தபடியே திலீப் சொன்னான்.

நடாஷா சம்மதித்தாள். ஆனாலும் பஸ்ஸில் தொங்கிக் கொண்டு போகிற கூட்டத்தில் கலக்க அவள் முகத்தில் ஆவல் இன்னும் இருந்தது.

இந்த மொழி மட்டும் புரிந்தால் நானும் படியில் நின்று சந்தோஷமாக திருவனந்தபுரம் கூட நாள் முழுக்கப் பயணம் போவேன் என்றாள் அவள்.

ரயில் பிரயாணமாக, ஏகத்துக்கு சோவியத் யூனியலில் போயிருக்கிறாளாம். நாலு நாள் தொடர்ந்து போகும் மாஸ்கோ – விளாடிவெஸ்டாக் டிரான்ஸ் சைபீரியன் ரயிலில் வருடம் நாலு தடவையாவது போய், ஒவ்வொரு பயணத்திலும் இருநூறு பக்கம் கவிதை எழுதி மாஸ்கோ திரும்பியதும் கொளுத்தி விடுவது தனக்கு வழக்கம் என்றாள் நடாஷா.

அரசாங்க விரோதக் கவிதையாக இருக்கலாம் அதெல்லாம் என்று நினைத்தான் திலீப். அல்லது லட்சணமான வாலிபனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு காமமுறும் பெண் பற்றி. இறக்கியே விடாத யட்சி. மிக வலுவானவள்.

ரயில் ஓட்டுகிறவரையும் பின்னால் கடைசிப் பெட்டியில் மலையாள தினப் பத்திரிகை படித்தபடி உட்கார்ந்திருந்த கார்டையும் தவிர ஆள் கூட்டம் இல்லாமல் ரயில் வந்து நின்றது. முந்திய ரயில் நிலையங்களில் கூட்டமெல்லாம் இறங்கி இருக்கக் கூடும் என்றான் திலீப். கூட்டமில்லாத ரயிலில் நடாஷாவைக் கூட்டிப் போகத் தான் முன்கூட்டியே திட்டம் ஏதும் போடவில்லை என்று அவளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் விளக்கத் தோன்றியது அவனுக்கு.

போன வாரம் உனக்குக் கொடுத்த நூற்றம்பது ரூபிளுக்குக் கணக்கு சொல்லு.

வண்டியில் ஏறி அமர்ந்ததும், நடாஷா கேட்க, திலீப் ரூபிள் எதுவும் தன்னிடம் இல்லை என்றான்.

சரி, ரூபாய்க் கணக்கு?

நீ கொடுத்த பணத்தில் வெடிக்கார குறூப் வயிற்றுப் போக்கில் படுத்து சிகிச்சை செய்யக் கொடுத்த வகையில் இருபது ரூபாயும், காயலில் இந்த ஒரு வாரத்தில் நாலு தடவை படகில் போன வகையில் எண்பது ரூபாயும் செலவாக, மீதம் இருக்கும் ஐம்பது இன்றைய செலவுக்கு வைத்துக் கொள்ளப்பட்டது.

எரணாகுளத்தில் வருஷம் 1880-களில் அச்சு யந்திரம் வைத்து தோத்திரப் பாடல்களும், நம்பூதிரிகள் பற்றிய நகைச்சுவைக் கதைகளையும் பிரசுரித்த குடும்பத்தில், இரண்டு பெரியவர்களைச் சந்திக்கிற திட்டத்தில் இருப்பதாக நடாஷா சொன்னாள்.

அவர்களிடம் அபூர்வமான பழைய புத்தகங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றைப் பத்திரமாகப் புகைப்படம் எடுக்கவும், மதியச் சாப்பாட்டுக்கும் பணம் தர வேண்டியிருக்கும் என்றாள்.

அந்தப் பழைய அச்சு யந்திரம் கல்லுக் குண்டாட்டம் அங்கே இருந்து அதை விற்கவும் தயார் என்று பெரியவர்கள் சம்மதித்தால் எவ்வளவு செலவாகும் என்று கேட்டாள் அவள்.

உனக்கென்ன ப்ராந்தா என்று திருப்பிக் கேட்டான் திலீப். அவனை இழுத்து மடியில் போட்டுக் கொண்டு முதுகில் ஓங்கித் தட்டிச் சிரித்தாள் நடாஷா.

இந்தப் பேய்க்கு வாழ்க்கைப்பட்டது வேண்டித் தான் இருக்கிறது. அதுவும் அகல்யாவோடு இன்னும் இன்னும் என்று இழைந்துச் சேர்ந்து தேடி உணர்ந்து சுகம் கொண்டாடி, அது கிட்டாது காய்ந்திருக்கும் போது.

எரணாகுளத்தில் நடாஷா சந்திக்க வேண்டிய இரண்டு முதியவர்களும் மாமன், மைத்துனன் உறவில் வந்த சிரியன் கிறிஸ்துவர்கள் என்பதும் உள்ளூர் மற்றும் மாவட்ட அளவு கிறிஸ்தியானி சமூக அமைப்பில் செல்வாக்குள்ள இல்லத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பரம்பரை வீடு ரயில் நிலையத்துக்கு அடுத்துத் தான் என்பதும் நடாஷாவுக்கு மகிழ்ச்சி அளித்தது.

அலைச்சல் இல்லாமல் மிச்சமாகும் நேரத்தை உருப்படியான பேச்சுகளில் செலவழிக்கலாம். திலீப்புக்கு இதில் எல்லாம் சிரத்தை இருக்குமா தெரியவில்லை. அவனும் குறிப்பெடுக்க, கேள்வி கேட்க ஒத்தாசை செய்தால் நிறையத் தகவல் சேகரிக்கவும், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இவர்கள் வழி காட்டுதலில் செயல் திட்டம் வகுக்கவும் முடியும்.

இரண்டு முதியவர்களும் மாப்பிள்ளை என்று முடியும் குலப் பெயரோடு இருந்தார்கள். வெர்கீஸ் மாப்பிள்ளையை மட்டும் தான் சந்திக்க முடிந்தது. அவருக்கு மைத்துனன் உறவான மத்தாயு மாப்பிள்ளை சாயந்திரம் ஒரு மணி நேரம் மட்டும் விழித்திருந்து மற்றப் பொழுதுகளில் உறக்கத்தில் இருப்பவர் என்று தெரிந்தது. மாலை ஆறு மணிக்கு அவர் எழுந்ததும் அவரிடம் உபரி தகவல் பெற்றுக் கொள்ளலாம் என்றார் வெர்கீஸ்.

தின்ணென்று நீண்ட நடாஷாவின் செழுமையான கைகள் திலீப் கண்ணை மயக்க, அவள் ரயிலில் அவனை வாரி மடியில் போட்டுக் கொண்டது மனதில் திரும்ப மெல்ல நகர்ந்து போனது. அகல்யா அகல்யா என்று பிடிவாதமாக உதடு அசைய நடாஷாவின் அண்மை தொடர்ந்து வசீகரித்துக் கொண்டிருந்தது.

போய்ச் சேர எட்டு மணி ஆகிவிடும் என்று கணக்குப் போட்டான் திலீப். அகல்யா என்ன செய்து கொண்டிருப்பாள்?

காலை பத்து மணிக்கு ஆபீஸில் மராத்தியும் இங்கிலீஷுமாக அறிக்கை, பத்திரிகைக் குறிப்பு, விளக்கம், பத்திரிகைத் தலையங்கம் என்று மாய்ந்து மாய்ந்து டைப் அடித்துக் கொண்டிருப்பாள்.

திலீப் போல அவள் மனமும் சஞ்சலப்படுமோ? சஞ்சலப்படுத்த, யாரெல்லாம் அங்கே உண்டு? என்ன உயரம் இருப்பார்கள் அவர்கள்?

சாயா, பிஸ்கட் உபசாரம் முடிந்து, வெர்கீஸ் மாப்பிள்ளை பேசத் தொடங்கினார் -

ஆயிரத்து எண்ணூத்து முப்பதில் மலையாளம் அச்சு யந்திரத்துக்கு ஏறியது. அப்போதெல்லாம் சதுர எழுத்து தான். முப்பதே வருஷத்தில் அது வட்டெழுத்து ஆகி, எழுத்துச் சீர்திருத்தமும் வந்தாகி விட்டது. சதுர எழுத்து அச்சுக்களை வடிவமைக்க நாங்களே பவுண்டரி நடத்தினோம். என் பாட்டனார் காலத்து அச்சுகளும் யந்திரமும் இன்னும் பத்திரமாக இந்த வீட்டில் உள்ளன.

வெர்கீஸ் மாப்பிள்ளை தன் பேச்சை தானே அனுபவித்துச் சொல்லிப் போனார்.

அதோ அங்கே தோட்ட வீட்டில் அந்தப் பழைய அச்சு யந்திரத்தை வைத்திருக்கிறோம். 1874-ல் ஜெர்மனியில் வாங்கிக் கப்பலில் வந்தது. போட்டோ வேணாமே. நீங்கள் பார்த்து, வேணுமென்றால் ஓவியம் வரைந்து கொள்ளலாம்.

சடசடவென்று இறகடிக்கும் சத்தம்.

கூட்டமாகப் பறந்து வந்த மயில்கள். அவை வெர்கீஸ் மாப்பிள்ளை வீட்டுத் தோட்டத்தில் ஒருசேர இறங்கின. ஆடாமல், அகவிச் சத்தம் எழுப்பாமல் அவை எதற்கோ காத்திருப்பது போல, மண்ணில் கால் பதித்து நின்றபடி இருந்தன.

நடாஷா கேமராவில் அவற்றைப் பகர்த்த நினைத்து தோளில் இருந்து காமராவை எடுத்தபடி திலீப்பைப் பார்க்க அவன் கண் மூடி இருந்தான். முன்னால் நகர்ந்த மயில்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தன.

சாவு வரும் நேரம். இவை சாவின் அடையாளம். இறப்பின் பிரதிநிதிகள்.

வெர்கீஸ் மாப்பிள்ளை மயில்களைச் சுட்டிய படிக்குத் தனக்குத் தெரிந்த ரகசியத்தைப் பகிரும் எக்காளத்தோடு சொல்ல உள்ளே இருந்து நடுவயதுப் பெண் ஒருத்தி ஓட்டமும் நடையுமாக வந்தாள்.

மேலே உயர்ந்து நடுங்கும் குரலில் அவள் அறிவித்தது -

மத்தாயு அச்சன் கண் நிலைகுத்தி சுவாசம் நின்று போனது.

ஆணோ?

அப்படியா என்ற அர்த்தத்தில் வெர்கீஸ் மாப்பிள்ளை ஆதரவாகக் கேட்டார். நான் சொன்னது சரியாப் போச்சா என்று திருப்தி தெரிவிக்கும் முகக் குறிப்பு. அதில் சந்தோஷம் கீறியிருந்தது.

வந்த பெண் இன்னும் சொல்ல விஷயம் உண்டு என்பது போல் நின்றாள்.

அப்புறம் என்ன?

வெர்கீஸ் மாப்பிள்ளை விசாரித்தார்.

தோட்ட வீட்டுக்குள் பழைய அச்சு யந்திரத்தில் இருந்து சத்தம் வந்து கொண்டிருக்கிறது. நிற்க மாட்டேன் என்கிறது.

மத்தாயு தனக்கான நீத்தார் அறிவிப்பு அடிச்சுக்கிட்டிருக்கான். சரம பத்ரம்.

அவர் சொல்லி விட்டுச் சிரிக்க ஆரம்பித்தார்.

(தொடரும்)

New Novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 29 இரா.முருகன்

எல்லாம், மழை வலுத்து வரும் காயலில் இருந்து படகு திரும்பத் துறைக்கு வந்ததோடு தொடங்கியது.

இருண்டு ஆர்பரிக்கும் கடல். அது தொட்டு விடும் தூரத்தில் என்றாலும் படகை எல்லாத் திசையிலும் சுழல வைக்கும் நீர்ப் பெருக்கும், மழையோடு கலந்த காற்றுப் பெருக்கும் கடலோடு செல்லாமல் திரும்பச் சொல்லி வற்புறுத்த, படகுத் துறைக்குத் திரும்பியபோது சங்கரனுக்கும் தெரிசாவுக்கும் பகல் நேர வயிற்றுப் பசியாக இந்தப் பொழுது தலையெடுத்தது.

புறப்பட்டுப் போன மற்றப் படகுகள் அருகே தீவில் ஒதுங்கியிருப்பதாகவும், அவை வந்து சேர மாலை ஐந்து ஆகி விடலாம் என்றும் படகுத்துறை ஊழியர் சங்கரனிடம் தகவல் தெரிவித்தார். பசி உச்சத்தில் அதைப் புறம் தள்ளினான் அவன்.

நாலு நாள் மாநாடு அமைச்சர் முடிவுரை நிகழ்த்தாவிட்டாலும் முடிந்துதான் போகும். ஆப்பிரிக்க நாட்டுத் தூதுவரும், இங்கிலீஷ் எழுத்தாளருமான வைத்தாஸ் இக்வனோ ரெட்டிக்கு யானைத் தந்தத்தில் செய்த கதகளி ஆட்டக் குழு ஆடி நிற்கும் சிற்பத்தை முதலமைச்சர் அன்பளித்து, மாலை அணிவித்து நாலு வார்த்தை உபசாரமாக மலையாளத்திலும் இங்கிலீஷிலும் சொல்லா விட்டால் என்ன? தூதருக்கு, அவர் இன்னும் இங்கே இருக்கும் பட்சத்தில் சிற்பத்தை ஓட்டல் அறையிலேயே மழைக்கு நடுவே கொடுத்து விடலாம். இன்று விடிகாலையில் அவர் திருவனந்தபுரம் போய் அங்கிருந்து இன்னேரம் தில்லி திரும்பியிருந்தால், சிறப்பு அலுவலர் மூலம் தில்லிக்குச் சிலையை அனுப்பலாம்.

தூதர் வைத்தாஸின் மனைவி அவருடைய நாட்டின் அதிபராம். அவளும் இங்கே வர வேண்டும் என நேற்றுக் காலை தில்லிக் காரியாலயத்தில் இருந்து இரைச்சலுக்கு நடுவே தேய்ந்து ஒலிக்கும் தொலைபேசி அழைப்பும், ஸ்டாப் என்று அங்கங்கே போட்டு பத்து வரியில் வந்த தந்தியும் சொன்னதாம். சங்கரன் தொழுது நிற்கும் அமைச்சர் அவனிடம் நேற்று விழாப் பந்தலில் விளக்கினார்.

அது மட்டுமில்லை, அந்த அமைச்சர், ஜரூராக இன்னொரு காரியமும் செய்திருந்தார்.

மலையாளக் கரை முழுக்க இப்போது மும்முரமாக மழை பெய்கிறது. அறிவிக்காமல் முன் கூட்டியே வந்த வடமேற்குப் பருவ மழை இது. இன்னும் ஒரு மாதம் மழை நீடிக்கும். ஆப்பிரிக்க தூதர் வைத்தாஸ் ரெட்டி பங்கு பெறும் விழாவும் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. இந்தச் சிறிய ஊருக்கு ஆப்பிரிக்கத் தலைவர் வந்தால் அந்த அம்மையாருக்குப் பாதுகாப்பு அளிப்பது சிரமமாக இருக்கும். இங்கே அவரைத் தங்க வைக்கவும் அவருடைய தகுதிக்குப் பொருத்தமான, நம் நட்பு நாட்டின் மிகச் சிறந்த விருந்தாளிகளுக்குத் தர வேண்டிய உபசரிப்பை அளிக்க இயலாமல் போகலாம். எனவே, அந்த மேன்மைக்குரிய அம்மையார் தில்லியில் இருப்பதே நல்லது. அவருடைய அன்புக் கணவர் தூதர் வைத்தாஸ், விழா இனிதே முடிந்து இன்று தில்லி வருவார்.

சங்கரன் தெரிசாவோடு ஓட்டலுக்குத் திரும்பிய போது அமைச்சர் புறப்பட்டுக் கொண்டிருந்தார். உற்சவத்தில் எழுந்தருளிய திருச்சூர் சிவபெருமான் வடக்கும்நாதனுக்குப் பிடித்த மாதிரி ஆகப் பெரிய வண்ணக் குடையோடு அவரை நடத்திப் போய்க் கொண்டிருந்தார்கள். செண்டை மேளம் மட்டும் இருந்தால், முன்னால் நிற்க யானையும் இருந்தால், உற்சவர் என்ன, கருவறைக் கடவுளாகவே ஆகியிருப்பார் உயரம் கூடிக் கருத்து மெலிந்த அந்த அமைச்சர்.

ஊருக்குப் போய்ட்டிருக்கேன். தொகுதியிலே ஒரு அவசர வேலை வந்திருக்கு.

அவர் பார்வை சங்கரனோடு நெருக்கமாக நகர்ந்து வந்த தெரிசாவின் மீது பதிந்தது. அடுத்த வினாடி சங்கரனைப் பார்த்துச் சிரிப்போடு கேட்டார் –

மேடம் தங்கி இருக்க இடம் கிடைச்சுதா? புகார் எதுவும் இப்போ இல்லையே?

அந்தச் சிரிப்பு வேறே மாதிரி சங்கரனுக்கு அர்த்தம் சொன்னது. போகிறது, நல்ல மனுஷர். கூட ஒரு அழகான பெண் இருந்தால் பார்த்தவர்களுக்கு எல்லாம் பேசத் தோன்றும். அதுவும், பூசியது போல் சற்றே உடல் பெருத்த, மேற்கத்திய உடை அணிந்த, கருத்த பெண். விந்திய மலைச்சாரலுக்குத் தெற்கே அழகு இதுதான்.

அமைச்சர் பொறாமைப் பட்டாலும் சரி, இன்றைக்கு சங்கரனின் நாள். தில்லியில் அவரைப் பார்க்கும் போது இதையெல்லாம் மறந்து போகட்டும்.

நீங்களும் வர்றீங்களா? கார்லேயே மதுரை போகிறோம். உங்க ஊர் கூட அங்கே தானே.

இல்லே சார், நான் இப்படியே தில்லிக்குப் போய்க்கறேன். வீட்டிலேயும் ஆபிசிலும் முடிக்க வேண்டிய வேலை ஒருபாடு இருக்கு.

அது என்ன ஒருபாடு? மலையாள பூமி உங்களையும் மாத்திடுச்சா?

இக்கு வைத்து மறுபடி பேசியபடி அமைச்சர் புறப்பட்டுப் போக தெரிசாவோடு பகல் உணவுக்காகப் போனான் சங்கரன்.

பெருமழை, புயல் சின்னம், சூறாவளி சுழன்றடிக்க வாய்ப்பு என்ற காரணங்களைச் சுட்டிக் காட்டி நாட்டுப்புறக் கலை விழாவின் நிறைவு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கும் சுற்றறிக்கையை டவாலி அணிந்த சேவகர்கள், எதிர்ப்பட்டவர்கள் அனைவருக்கும் காட்டிக் கையொப்பம் வாங்கிக் கொண்டு போனார்கள்.

சோற்றைப் பிசைந்து சாப்பிட இருந்த நிலையில் சங்கரனும் அவர்களால் கையெழுத்து இடும்படி கோரப்பட்டான். தெரிசா சார்பிலும் கணவர் என்று எழுதிக் கையொப்பமிடச் சொல்லிக் கேட்டார்கள். கையில் எடுத்த முள்கரண்டியும் கத்தியுமாகச் சாப்பிட உட்கார்ந்த அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

இங்கிலாந்தில் இருந்து வந்திருப்பதால் தூதரகம் அனுமதிக்காமல் எங்கும் கையெழுத்திடத் தனக்கு இயலாது என்று தெரிசா சொன்னதும் உடனே சரியென்று பின்வாங்கி அவர்கள் போனார்கள்.

ஏனோதானோ என்று ஆக்கி வைத்த ஊண் அது. பரிமாறவும் மிகச் சாவதானமாகவே வந்தார்கள். கடனே என்று இலையில் வட்டித்த சோறு சரியாக வேகாததால் காய்கறிகளை புளிக்காடியில் அமிழ்த்தி மெல்ல வேண்டிய கட்டாயம். எதிரும் புதிருமாக் உட்கார்ந்து ஒருவர் கண்ணில் மற்றவர் ஆழ்ந்து நோக்கியபடியான பேச்சு மும்முரத்தில் உணவும் பானமும் கவனத்தில் கொள்ளப்படாமல் நழுவிப் போக, அவர்களின் முணுமுணுத்த குரலும் அடிக்கடி எழும் சிரிப்பும் அந்த அறையில் சுற்றி வந்து கொண்டிருந்தது.

சங்கரன் முசாபர் அலியையும், மெட்காஃபையும் அவனுடைய விநோதமான காரையும் பரிச்சயம் செய்து கொண்டபோது, கார்ட்டூன் சித்திரங்களாக தெரிசா வசந்தியையும், பகவதிப் பாட்டியையும், பகவதிக் குட்டியையும், பிடார் ஜெயம்மாவையும் அறிமுகப் படுத்திக் கொண்ட பகல் உணவு நேரம் அது.

தெரிசா இனி என்றும் திரும்பிப் போகும் உத்தேசத்தில் தான் இல்லை என்றாள். இந்த மண்ணுக்குத் தன்னை இழுத்த சக்தி, காலச் சக்கரத்தின் சுழற்சியில், புறப்பட்ட இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்க உத்தேசித்திருக்கிறது என்று அவள் நம்பத் தொடங்கி இருந்தாள் என்பது சங்கரனுக்கு வியப்பான செய்தியாக இருந்தது. அன்று புறப்பட்டவள் அவள் இல்லை தான். இன்று திரும்புகிறவளும் அவள் இல்லை என்று மனதில் படுவதாகச் சிரித்தபடி விளக்கினாள் தெரிசா.

தேடி வந்து யார்க்‌ஷயரில் என் வீட்டு முகப்பில் ஆடிய மயிலும், சாவக்காட்டு வயசனின் பாழடைந்த வீட்டில் கட்டி இருந்த பசுவும், ராத்தூக்கத்தில் இருந்து எழுப்பி அவளையும் கலந்து கொள்ளச் சொல்லிக் கேட்ட மூங்கில் குரிசு ஊர்வலமும், அச்சில் கொண்டு வர வேண்டிய வலிய முத்தச்சன் ஆன ஜான் கிட்டாவய்யனின் கீர்த்தனங்களும், இந்த ஊர் அம்பலக் குளக்கரை மனதில் நிறைந்து கவிந்து சதா நீர்வாடை மூக்கில் படுவதும் இன்னும் எதெல்லாமோ அவளை இங்கேயே இருக்கும்படி வேண்டியும் கட்டாயப்படுத்தியும் மன்றாடியும் கேட்டுக் கொண்டிருப்பவை. அது தெரிசாவுக்கு அர்த்தமாகும்.

இங்கே இருக்கச் செலவுக்குத் தாராளமாகத் தன்னிடம் பணம் இருக்கிறது என்றாள் தெரிசா. தேவை என்றால் கால்டர்டெல்லில் மீனும்-வறுவலும் விற்கும் கடையையும் அங்கே ரெண்டு தலைமுறையாக இருக்கும் வீட்டையும் விற்றுப் பணம் அனுப்ப முசாபர் வழி செய்வான். சில லட்சங்கள் இந்திய ரூபாயில் அது இருக்கும். இங்கே நாலு பெரிய பங்களா, அம்பாசிடர் கார் என்று சொகுசாக நாலு தலைமுறை உட்கார்ந்து சாப்பிட அது வழி செய்யும். சிக்கனமாகச் செலவழித்தால், அதற்கு மேலும் நீடிக்கும்.

இந்தத் தீர்மானம் எல்லாம் தன்னைத் தெரிசா சந்திக்கும் முன்னே எடுத்திருந்தாள் என்பதில் சங்கரனுக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை. அவள் பயணப்பட்ட பாதை தன் வழியில் இணைவது தவிர்க்க முடியாதது என்றாகி இருந்தது அவனுக்கு வியப்பையும் சற்று பயத்தையும் உண்டாக்கியது.

தெரிசா அரசூர் போயிருக்கிறாள். சின்னச் சங்கரனின் பூர்வீக வீட்டை வாசலில் இருந்து பார்த்திருக்கிறாள். உள்ளே வரச் சொல்லி யாரோ முது பெண் தன்னை அழைத்ததாக நம்புகிறாள். சங்கரனின் ஆருயிர் நண்பன் தியாகராஜ சாஸ்திரி தன்னிச்சையாக அரசூரில் தெரிசாவுக்கு எல்லா உதவியும் செய்திருக்கிறார். அது மட்டுமில்லை, தெரிசாவின் மூத்த பாட்டன் எழுதிய கிறிஸ்துவ கீர்த்தனைகளைப் புத்தகமாகக் கொண்டு வரத் தகுந்தவர்களை மதுரையில் அறிமுகப்படுத்தி இருக்கிறான். இதெல்லாம் சங்கரன் செய்ய வேண்டியது.

அரசூர் மட்டுமில்லை, அம்பலப்புழையில் பரம்பரை வீட்டை வாங்கும்படி மேல்சாந்தியின் மனைவி தெரிசாவுக்கும் சொல்லியிருக்கிறாள். சங்கரனிடமும் வசந்தியிடமும் சொன்னது தான் அது. பகவதிக் குட்டி வழித் தோன்றலாகத் தன்னையும், பகவதியின் சகோதரன் ஜான் கிட்டாவய்யனின் பரம்பரையாக தெரிசாவையும் அடையாளம் கண்டவள் அவள். இன்னும் ஏதோ தன்னையும் தெரிசாவையும் ஒரு கோட்டில் இணைக்க உண்டு, அது என்ன? மறந்து விட்டது.

என்ன பலமான யோசனை?

பகல் உணவு முடித்து அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது தெரிசா கேட்டாள்.

நாளை அரசூர் போகணும். அங்கேயிருந்து மதராஸ், பிறகு டெல்லி. வீடு. ஆபீஸ்.

சங்கரன் சொன்னபடி தன் அறைக்கு முன் நின்றான். ஒரு வினாடி அவனைப் பார்த்து விட்டு தெரிசா அடுத்த அறைக்கு நடந்தாள்.

இந்தப் படகு வீட்டு உறவு பகல் சாப்பாட்டோடு முடிகிறது. இனியும் என்னைத் தொந்தரவு செய்யாதே என்று அவன் சொன்னதாக அவளுக்கு அர்த்தமாகியது.

அவள் நாளைக்கு இந்த அறையைக் காலி செய்ய வேண்டும். இந்த ஊரிலோ பக்கத்திலோ மாத வாடகைக்கு வீடு பார்க்க வேண்டும். மூத்த பாட்டனின் புத்தகம் தயாராகிக் கொண்டிருப்பதாக மதுரைத் தமிழ்ப் பண்டிதர் எழுதியிருந்தார். மதுரைக்கு ஒரு தடவை போய் வரணும். பரம்பரை வீட்டை வாங்க முன்னேற்பாடாக அங்கே இயங்குகிற நாட்டுப்புறக் கலை ஆராய்ச்சி மையத்தை வெளியே அனுப்ப வேண்டும். நடக்கிற காரியமா அது?

அந்த வீட்டை வாங்க, மேல்சாந்தியின் மனைவி சொல்லியபடி நான்கு பேர் தயாராக இருக்கிறார்கள். அவளும், சங்கரனும் தவிர ரெண்டு பேர். முதலாவதாக, அங்கே மயிலாட்ட ஆபீஸ் வைத்திருக்கும் மினிஸ்டர் மனைவி சியாமளா. அடுத்து, நேற்று விழாவில் பேசிவிட்டுப் போன ஆப்பிரிக்க நாட்டுத் தூதர் வைத்தாஸ் ரெட்டி. இரண்டு பேரிடமும் தெரிசா பேசிவிட்டாள். வைத்தாஸ் என்கிற நடு வயதை எட்டிய அந்த கனவான் தெரிசா அந்த வீட்டையோ, அம்பலப்புழையில் வேறு வீட்டையோ, இல்லை அந்த ஊர் முழுவதையுமோ வளைத்துப் பிடித்து வாங்குவதில் ஒரு ஆட்சேபமும் இல்லை என்று தெரிவித்து விட்டார். நேற்றைக்குக் காலையில் அவரை இதே ஓட்டலில், கீழே முதல் மாடியில் இருந்த அறையில் ஐந்து நிமிடம் சந்தித்தபோது அவர் தெரிசாவுக்கு இப்படி கண்ணியமும் கருணையுமாக வழிவிட்டு விலகினார்.

ஆனால் சியாமளா கிருஷ்ணன் என்ற மினிஸ்டர் மனைவி அப்படியானவள் இல்லை. போன வாரம் மதராஸ் போகும் முன் போய்ச் சந்தித்தபோது, உன்னோடு பேசி வீணாக்க எனக்கு நேரமில்லை என்று துரத்திவிட்டாள். ஐரோப்பியச் சாயலில் ஆறடி உயரத்தில் அவள் எதிரே ஒரு இளம்பெண் உட்கார்ந்து திகைத்தபடி பார்க்க, சியாமளா இரக்கமே இல்லாமல் விரல் சுட்டி வாசலைக் காட்டி தெரிசாவை வெளியே அனுப்பினாள் அப்போது. இன்னும் அது மனதில் வலித்தாலும் மேல்சாந்தி மனைவி நல்வாக்கு சொன்னபடி நல்லதே நடக்கப் போகிறது என்று திடமாக நம்புகிறாள் தெரிசா.

சோழி உருட்டிப் பார்த்துத்தான் இப்படி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது என்று சொல்லியிருக்கிறாள் அந்த முதுபெண். அவள் இன்னொன்றும் சொன்னாள். அதுவும் நடக்கக் காத்திருக்கிறாள் தெரிசா.

கைக்கடியாரத்தில் மணி பார்த்தாள். பிற்பகல் ரெண்டே முக்கால் மணி. மழையில் வெளியேயும் போகமுடியாது. சும்மா நாற்காலி போட்டு உட்கார்ந்து சுவரைப் பார்த்தபடி இருக்கவும் முடியாது. கொஞ்சம் படுத்து உறங்கினாலோ?

சுவருக்கு நடுவே மர பீரோவை அடுத்துத் திரை போட்டு வைத்திருந்த இடத்தில் பார்வை நிலைத்தது. அங்கே காற்றில் திரை விலக, மரக் கதவு தட்டுப்பட்டு திரும்பவும் அது திரை மறைவில் ஆனது.

இந்த அறை அடுத்த அறையோடு சேர்ந்த கூட்டு அறை என்ற எகாம்பனியிங் ரூம் என்று அப்போது தான் அவளுக்குத் தெரிய வந்தது. குழந்தை குட்டியோடு வரும் பெரிய குடும்பங்களில் குழந்தைகளை இங்கேயும் அடுத்த அறையில் பெரியவர்களையும் தங்க வைத்துச் சிறியவர்கள் மேல் கவனமும் கட்டுப்பாடுமாக இருக்கவும் வழி செய்யும் இந்த மாதிரி அறைகள் இங்கிலாந்து தங்கும் விடுதிகளில் அடிப்படை வசதி என்றாலும் இங்கே அப்படி ஒரு அமைப்பைப் பார்க்க அவளுக்கு வியப்பாக இருந்தது. குழந்தை தங்கும் அறையில் நான். அடுத்த அறையில் என்னைக் கண்காணிக்கும் பெரியவர்?

அந்தக் கதவைத் திறந்து பார்க்க, கட்டிலில் சிரசாசனம் செய்தபடி இருந்த சங்கரன் கண்ணில் பட்டான். முழங்கால் வரை வரும் உடுதுணியோடு, மேலே சட்டையில்லாமலும் மேல்கூரைக்குக் கால் உயர்த்தியும் நின்ற அவனைப் பார்த்ததும் சிரிப்பும் வெட்கமும் ஏற்படக் கதவை அவசரமாகத் திரும்ப அடைத்தாள் அவள்.

தாழ்ப்பாளைப் போடுவதற்குள் அந்தக் கதவு மறுபடி திறந்தது. சங்கரன் தான். கால்களுக்கு இடையே தார் பாய்ச்சி இறுகக் கட்டிய உடுப்பில் பதிந்த கண்ணை விலக்கி அவனைப் பார்த்துச் சிரிப்பில் என்ன விஷயம் என்று கேட்டாள் தெரிசா. அவன் இன்னும் நெருங்கி வந்து நின்றான். சங்கரன் மார்பிலிருந்து உருளும் வியர்வைத் துளியை விரல் மேல் வாங்கி உள்ளங்கையில் வைத்தபடி அவள் வசீகரமாகச் சிரித்தாள்.

தெரிசாவை அணைத்தபடி அங்கேயே நின்றான் சங்கரன். அவள் விலகினாள்.

போ வரேன்.

அவள் அலமாரிப் பக்கம் நடந்தாள். அங்கே பெட்டியில் இருந்து எடுத்ததை அவன் பார்க்க, வெட்கத்தோடு கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் தெரிசா.

நல்லதாப் போச்சு என்று மட்டும் சொன்னான் சங்கரன். முசாபர் கொண்டு வந்திருந்த ஆணுறைகளில் மிச்சம் இருந்தவை அவை.

மழை ஈரமும் இருட்டும் நிலையாகத் தங்கி இருந்த அறையில் தெரிசாவின் கண்ணுக்குள் விரிந்த பழைய வீட்டை அடையாளம் காண அவள் சிரமப்படவில்லை. அரசூரில் அவள் பார்த்தது. பூட்டி வைத்திருந்தது. உள்ளே வாசல் திண்ணையில் ஒரு கிழவி உட்கார்ந்து கனாக் கண்டேன் கனாக் கண்டேன் என்று பாடிக் கொண்டிருந்த வீடு. அது சங்கரனின் வீடு என்று தெரியும் அவளுக்கு.

கட்டிலில் அவளோடு அடுத்திருந்த சங்கரன் பார்வை அவனும் அங்கே இருப்பதைச் சொன்னது. இரண்டு பேரும் வாசலில் நிற்கத் திறந்து கொள்ளும் பூட்டுகள். உள்ளே நுழைகிறார்கள். உள்ளே புழுதி நெடியும் பறந்து தாழ இறங்குவது போல் போக்குக் காட்டி மேலே உயரும் வௌவால்களின் துர்க்கந்தமும் மூக்கில் பட, தெரிசா நடுநடுங்கி அவன் தோளைப் பற்றி இறுக்கிக் கொள்கிறாள். க்ரீச் என்று ஒலியெழுப்பி வீட்டுக் கூடத்தில் ஊஞ்சல் மெதுவாக மழைக் காற்றில் அசைகிறது. சங்கரன் கருத்துச் செழித்த தாடியும், பிடரிக்கு வழிந்து குடுமி கட்டிய தலையுமாக ஊஞ்சலில் இருந்தபடி தெரிசாவைத் தன்னருகில் இழுக்கிறான். அவள் தரைக்கு மேலே சற்றே உயர்ந்து பறந்து ஊஞ்சலைச் சுற்றி வர, பின்னாலேயே அவள் இடுப்பில் கை வைத்து அணைத்தபடி மறுபடி இழுக்கிறான் சங்கரன்.

குருக்கள் பொண்ணே, வாடி. வார்த்தை சொல்லிண்டிருப்போம்.

நீ எனக்கு நாலு தலைமுறை இளையவண்டா அயோக்கியா. ஏன் இப்படி அலைக்கழிக்கறே அறியாப் பொண்ணை? இதெல்லாம் போதும், ஆமா சொல்லிட்டேன். வேணாம். முடியலே. சொன்னாக் கேளு. போதும். வேணாம். ஏய்.

தெரிசா வேறு யாரோவாக அவளுக்குப் பரிச்சயம் இல்லாத மொழியில் லகரி கொண்டு பிதற்றி மோகம் தலைக்கேறச் சிரிக்கிறாள்.

படுடீ.

மாட்டேன் போடா, சாமிநாதா.

வா

சாமா, என்னை விட்டுடு. நான் இனி வரலே.

ஏண்டி மாட்டேங்கறே? இனிமேல் கூப்பிடலே, இப்போ வா. செல்லமில்லையோ.

மாட்டேன் போடா, நூறு வருஷம் உனக்கு மூத்தவ நான். ஆவி வேறே. உனக்கு உடம்பு இருக்கு. எனக்கு?

திரும்பவும் யாரோ பேச வேண்டியதை, பேசியதை தெரிசா பேசுகிறாள். யார் கேள்வியையோ அவள் கேட்கிறாள். யாரிடமோ.

உடம்பா? இதோ பாரு, இது மட்டும் நான். இதோ, இது மட்டும் நீ.

சாமிநாதன், சாமா என்று தெரிசா அழைத்த சங்கரன் விரல் சுண்டிக் காட்டுவது அவளை நாணம் கொள்ளச் செய்கிறது. பார்க்க மாட்டேன் என்று கண்ணை இறுக மூடி இருக்க சாமிநாதன் தெரசாவாகவும், ஆவி ரூபத்தில் வந்த பெண் சங்கரனாகவும் மாறும் கணங்களில் இருவரும் கலந்து கரையத் தொடங்குகிறார்கள்.

மழைச் சாரலின் ஈரம் நனைந்த தலையணைகளும், இரண்டு நாளாக மாற்றப்படாத மெத்தை விரிப்புகளும், சதா காற்றில் அடித்துத் திறந்து கொள்ளும் கழிப்பறையிலிருந்து புறப்பட்டு எங்கும் சூழ்ந்திருக்கும் மெல்லிய பினாயில் வாடையும் அடர்ந்த சூழலில் அவர்கள் முயங்கிக் கிடந்தார்கள்.

கதை என்றாலும் கைகொட்டி நகைத்து, இப்படியும் நடக்குமா என்று எக்காளம் மேலேறிச் சிரிக்க வைக்கும் சூழல் மெய்ம்மைப்பட, இரண்டே நாள் இடைகலந்து பழகிய இருவர் காலமெல்லாம் பிணைந்து கிடந்தது போல் கலவி செய்தார்கள்.

நேற்றைய நினைவுகளைக் காலம் உள்வளைந்து உருப் பெருக்கி நீட்டிய வெளியில் நாளையும் மறுநாளும் இனி எப்போதும் இது மட்டுமே நிலைக்கும் எனும் நிச்சயம் மேலிழைந்து இறுகப் போர்த்த, வியர்த்து உறவு கொண்டார்கள்.

மரபணுக்களில் பதித்த தேடல் இலக்குகளைப் புலன்கள் தொட்டு காலம் உறைய, பனித் திரளாகச் சுட்டு, வெப்பமாகக் குளிர்ந்த உடலும் உயிரும் கூடின.

இந்தக் கணத்தை இறுகப் பிடித்து நிறுத்தும் முயற்சியில் சங்கரன் தோற்றான். தெரிசாவின் கால் விரல் நகங்கள் கோடு கிழித்த விலாவில் இனிய வலி மூண்டது. விலங்காக, பறவையாக, இழிந்து சுவரில் ஊறும் நத்தையாகப் புணர்தலே இயக்கம், போகமே மூச்சு எனச் செயல்பட்டான் அவன். சங்கரனை இறுக அணைத்துக் கிடந்த தெரிசா அழத் தொடங்கினாள். அவளால் அப்படித்தான் மடையுடைத்துப் பெருகிய உணர்வு நதியோடு போக இயலும்.

பற்றிப் படர்ந்து மேலெழும் எல்லாப் புனைவுக்கும் தோற்றங்களுக்கும் சாட்சியாக அந்த ஊஞ்சல் அசைந்தபடி இருக்கிறது.

எந்த ஊஞ்சல்?

ஜன்னலில் தட்டித் தட்டி மழை கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல அவர்கள் இருவருக்கும் நேரம் இல்லை.

(தொடரும்)

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 28 இரா.முருகன்

நாட்டுப்புறக் கலை, கலாச்சார விழாவும் மாநாடும் எல்லோர் மீதும் பரிபூர்ணமாகக் கவிந்திருந்தது. ஆட்டக் கலைஞர்கள் மட்டுமில்லாமல் பிரதிநிதிகளும் கூட, நடக்கும் போதோ, இருந்து பேசும்போதோ அதே நினைவாக இருந்தார்கள். அவர்கள் கை கால் அசைவிலும், கண் அசைவிலும் அவ்வப்போது நளினம் தெறித்துக் காட்சி வைப்பது தன்னிச்சையாக நிகழ்ந்தது.

நாலு நாள் கொண்டாட்டம் இன்றைக்கு முடிவடைகிறது. மூன்று நாளிலேயே முடியும் விஷயத்தை வலிந்து நாலு ஆக்கிய சர்க்கார் உத்யோகஸ்தர்கள், நடத்த நிகழ்ச்சி இல்லாமல், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு என்ன வேடிக்கை காட்டலாம் என்று சிண்டைப் பிய்த்துக் கொண்டார்கள்.

அம்பலத்தில் இருந்து மாராரை வரவழைத்து, பத்து மணி தொடங்கி ஒரு மணி நேரம் சங்கீதமாக எடக்கையோ கடைக்கயோ தட்டிக் கொண்டு கேவி அழுது கேட்க வைக்கணும். அப்புறம் கெஸ்டுகளை நாலு ஹவுஸ்போட்டுகள், அதான் படகு வீடுகளில் அடைத்து ஆளுக்கு ரெண்டு போத்தல் பியரும் கொடுத்து வேம்பநாட்டுக் காயலில் போய் வரச் சொல்லணும். அப்படிச் செய்தால், சாயந்திரம் முடிவுரை, விருது என்று நடந்து எல்லோரும் சவுக்கியமாக வீடு போய்ச் சேர்ந்து, போக வர டிராவலிங் அலவன்சும், நாலு நாள் தங்குமிட அலவன்சும் கிளெய்ம் செய்யலாம்.

இந்த யோசனை எல்லாத் தரத்து அதிகாரிகளாலும், அவர்களுடைய உதவியாளர்களாலும் உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டுச் செயலாக்கப் பட, விழாப் பந்தலே வெறிச்சென்று போனது.

ராஜா ஒருத்தர், அவர் கூடவே ரெண்டு களவாணிகள் குட்டையும் நெட்டையும் கையில் பிடித்த எலுமிச்சம்பழமுமாக. பார்த்தேளா?

பட்டை நாமத்தோடு அரசூர் ஜோசியர் ஆளில்லாத பந்தலுக்குள் ஒன்றிரண்டாக உருண்டு நேரம் கெட்ட நேரத் தூக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி விசாரித்துக் கொண்டிருக்க, வேனில் மழை உக்ரமாகப் பொழியத் தொடங்கியது.

சின்னச் சங்கரன் குளித்து, புட்டும் கடலையும் காலை ஆகாரமாகக் கழித்து பந்தலில் வந்து நின்று எடக்க தட்டி, மாரார் பாடிய சோபான சங்கீதத்தைக் கேட்டபடி கொஞ்ச நேரம் நின்றான்.

கேரளா பக்கத்தில் சோபான சங்கீதம் என்று பாடுவார்கள். சகிக்காது.

இப்படி தில்லி ப்ரஸ் கிளப் கேண்டீனில் மங்களூர் போண்டா சாப்பிட்டு விட்டு வெற்றிலைச் சீவலைக் குதப்பிக் கொண்டு, பல் இல்லாத ஒரு கிழவர், க்ரிட்டிக்காம் அவர், எந்த பீ அள்ளும் பத்திரிகைக்கோ வியாசமெழுதி மயிரைப் பிடுங்குகிற கிழம், அந்த உச்சைக் கிறுக்கன் இப்படிப் பிதற்றிக் கொண்டிருப்பது நேரம் கெட்ட நேரமாக நினைவில் வந்தது. கிழம் இங்கே வந்திருந்தால், ஓரமாகக் கூட்டிப் போய் கையைக் காலை உடைத்து காதை அறுத்திருக்கலாம் என்று சங்கரனுக்கு தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட கோபம் தாறுமாறாக வந்தது. அறுத்த காதை என்ன செய்வது என அடுத்த யோசனையும் கூட.

மழைக்கு நடுவே வானத்தில் குறுக்கே கோடு கிழித்துப் பிரகாசமாகக் கிறுக்கிப் போன மின்னல் சங்கரனை தங்குமிடம் போய் உட்காரச் சொன்னது.

ராஜா உடுப்புலே ஒருத்தர்.

அரண்மனை ஜோசியர் சங்கரனைக் கும்பிட்டுக் கேட்டார்.

தில்லிக் கிழம் பற்றிய சினம் சின்னாபின்னமாகி மறைய அவரிடம் உபரி தகவல் கேட்க ஆரம்பித்த வினாடி வானமே பிய்த்துக் கொண்டு விழுந்த மாதிரி இடிச் சத்தம்.

யந்திரம் நிறுத்தினது என்ன ஆச்சோ. பார்த்துட்டு வரேன்.

ஜோசியர் அவசரமாக மழையில் நனைந்தபடி ஓட, யாரோ குடையோடு வந்து சங்கரனிடம் மரியாதையோடு நீட்டினார்கள். சர்க்கார் ஊழியராகத்தான் இருக்க வேண்டும். என்ன தான் கொடி பிடித்து முத்ரா வாக்கியம் முழக்கி எதிரெதிரே நின்று வர்க்கப் போராட்டம் நடத்தினாலும் ஒரு மழை, புயல், உக்ரமான வெய்யில் காரணமாக வரட்சி, அப்படி ஒன்று காரணமாக எல்லோருக்கும் விசேஷ அலவன்ஸ் அறிவித்து, வரத் தாமதம் என்றால் சர்க்கார் ஜீவனக்காரர்கள் காந்தத்தால் கவரப்பட்ட இரும்புத் துகள்களாக ஒற்றைக் கெட்டாக ஈஷிக் கொள்வார்கள். அதிலே செண்ட்ரல் என்ன, ஸ்டேட் என்ன?

சங்கரன் அறைக்குப் போய்ச் சேர்ந்த போது அங்கே ஒற்றைக் குழல் விளக்கு எரியாமல், சூரியன் தொடாமல், இருட்டு முழுக்க அப்பியிருந்தது. படுத்து உறங்கப் பாந்தமான சூழல். காலையில் பத்து மணிக்கு உறங்க வெறுப்பு மேலெழுந்து வந்து உடம்பு மறுக்க, அங்கே வந்து விழுந்த மலையாள செய்தித்தாளையும் ஒரு நாற்காலியையும் எடுத்துக் கொண்டு அறைக்கு வெளியே வராந்தாவில் போட்டான்.

ஆள் ஒழிந்த அந்தக் கட்டடத்தில், சத்தத்தோடு எழுத்துக் கூட்டிப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தபோது பின்னால் இருந்து காலை வணக்கம் சொல்லும் பெண் குரல் கேட்டது.

அவனுக்குத் தெரியும், கொச்சு தெரிசா தான்.

உட்கார்ந்த படிக்கே காலை வணக்கம் சொல்லிக் கையை நீட்டினான் சங்கரன். பற்றிக் குலுக்கிய கரத்தை விடாமல், வெளியே போகலியா என விசாரித்தான்.

இது என்ன கேள்வி? இவளோடு பேச இன்னும் என்ன எல்லாம் உண்டு?

தெரிசா தோளில் மாட்டிய தோல்பையும், கருப்புக் கண்ணாடியும் அவள் எங்கோ போய்க் கொண்டிருக்கிறாள் என்று சொன்னது. வெளிநாட்டுப் பிரயாணிகளுக்கே உரித்தான, சகல நேரமும் ஊர் சுற்றிப் பார்க்கும் பரபரப்பு. போய் இருந்து பார்த்து வருவதை விட, போனேன் வந்தேன் என்று பத்து இடத்தைப் பார்வையிட்டு மனதில் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு போவது அந்தப் பரபரப்பின் வெளிப்பாடு என்று சங்கரனுக்குத் தெரியும்.

தெரிசா மேல் இருந்து வந்த மெல்லிய யுதிகோலன் வாடை சங்கரனுக்குப் பிடித்திருந்தது. இங்கிலாந்தில் மீன் பஜ்ஜி விற்கிற பெண். அழகானவள். அவனுக்கு உறவு வேறு. அவனை ஈர்க்கிறவள். அவனால் ஈர்க்கப்படுகிறவள். தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட மோகம் அது. தானே வந்து கவிவது. பற்றிப் பிடிக்கக் காத்திருந்த மாதிரி மழை நாளில் மேலோங்கி எழுகிறது. அவனுக்கு வேண்டியிருக்கிறது. அவளுக்கும்.

இங்கே இருந்து, கடலோரமாகப் படகில் போகலாம் என்று சொன்னார்களே. யாரையும் காணோமே.

தெரிசா விசாரிக்க, சங்கரன் சிரித்தான். உறங்கிக் கிடந்த போது எல்லோரும் எழுந்து, குளித்துப் பசியாறிப் படகுத் துறைக்குப் போயாகி விட்டது. திரும்பப் படகு வந்து அழைத்துப் போகாது.

படகு இங்கே வராவிட்டால், நாம் அதைத் தேடிப் போனால் என்ன?

தீர்வு கண்ட நிம்மதியோடு தெரிசா சங்கரனிடம் கேட்டாள்.

இங்கே சும்மா மோட்டுவளையையும், மழையையும் பார்த்துக் கொண்டு இருப்பதைவிடப் படகு தேடிப் போவது சுவாரசியமானதாகவே இருக்கும் என்று சங்கரனுக்குப் பட்டது. ஆயுசில் எத்தனை தடவை இப்படிப் படகையும் ஓடத்தையும் தேடி, ஒரு அழகான கருத்த பெண் கூட வர நடக்கக் கொடுத்து வைத்திருக்கிறது?

வரு பூவாம் என்றான் சுமாரான மலையாளத்தில். அவளை மரியாதை விலக்கி உரிமையோடு ஒருமையில் விளித்து, அதைச் சந்தோஷமாகத் தெரியப்படுத்திச் செயல்படுவது இந்த வினாடியில் அவனுக்கு உகந்த செயலாக இருந்தது.

கோவிலைக் கடந்து கொஞ்ச தூரம் போனால் படகுத்துறை வரும் என்று யாரோ எப்போதோ சொன்னது சங்கரன் நினைவில் உண்டு. அது கொஞ்ச தூரமாக இல்லாவிட்டாலும் சரிதான். இவளோடு நடக்கவும், பேசவும் நேரம் கிடைக்கிறதே.

தூறல் சிறுமழையாக அடர்ந்து கொண்டு வந்தது. தெரிசா கையில் எடுத்து வந்திருந்த பூப்போட்ட குடையை விரித்தாள். சங்கரன் குடைக் கம்பி மேலே படாமல் விலகி நடக்க, மழை இன்னும் வலுத்தது.

தெரிசா குடையை சங்கரனிடம் கொடுத்து விட்டு அவனுக்கு இன்னும் அருகில், குடைக்குக் கீழ் நடக்கத் தொடங்கினாள். சங்கரனுக்கு இது போதும் இப்போது.

போட் ஜெட்டி என்று இங்கிலீஷிலும், கீழே படி பொண்டன் என்று பிரஞ்சிலும் அதன் கீழ் மலையாளத்திலும் எழுதிய பலகை வைத்த இடம். வலது புறம் காட்டும் கை இங்கிலீஷிலும், இடது வசம் சுட்டும் கை பிரஞ்சிலும் வரைந்திருந்தது. மலையாளத்தில் கைக்கு இடமில்லை.

இங்கிலீஷோடு போவோம் என்று தெரிசாவிடம் சொன்னான் சங்கரன். அவன் நினைத்தபடி அந்தப் பாதை காயலோரமாக, படகுத் துறையில் முடிந்தது.

எல்லாப் படகும் காயலோடு போயிருக்க, வெறுமையாகக் கிடந்த துறையில் சங்கரனும் தெரிசாவும் நின்றபோது மழை விடை பெற்றுப் போயிருந்தது. படகுத் துறைக்காரன் இவர்களைப் பார்த்து நின்றான்.

சங்கணாச்சேரி படகுக்கு வந்தீங்களா?

மரியாதை விலகாமல் சங்கரனைக் கேட்க அவன் இல்லை என்றான்.

காயலில் கொஞ்ச நேரம் போய் விட்டு வரலாம்னு நினைச்சேன்.

அதுக்கென்ன? போகலாமே என்று படகுத்துறைக்காரன் சிரித்தான்.

போகலாம்னா, தண்ணீரிலே நடந்தா போகணும்?

தெரிசா கற்றுக் கொண்டிருந்த மலையாளத்தில் கேட்க, அதெதுக்கு என்றான் படகுத்துறைக்காரன்.

வர்க்கீஸேட்டன் படகு வர ரெடியா இருக்கு. இன்னிக்கு காயல்லே போக வேணாம்னு காலையிலே தீர்மானிச்சு ஒரு மணி நேரத்துலே முடிவை மாத்திக்கிட்டான். நீங்க தான் முதல் சவாரி. வாங்க

பெருக்கெடுத்து ஓடும் காயலின் நீர்மைக்கு மேலேறி அவன் குரல் கொடுத்தான். கூவென்று கூவும் குரலாக வர்க்கியேட்டனுக்குப் போகும் அழைப்பு. கொதும்பு வள்ளம் என்ற சிறு ஓடமும், சரக்கு கொண்டு போகும் படகு ஓட்டுகிறவனும், வலை காயப் போட்ட மீனவனும் ஏற்று வாங்கி எதிரொலிக்க, அது நாலைந்து முறை துறை முழுக்க எதிரொலித்துக் கடந்தது.

அப்புறம் குருவி சலசலக்கும் ஓசையும் மரங்கொத்தியின் இடைவிடாத கூச்சலும் ஒலிக்க, அவற்றோடு சேர்ந்து தொலைவில் இருந்து தேய்ந்து ஒலிக்கும் குரல் ஒன்று.

வரும் ஒலியை மகிழ்ச்சியோடு செவிகொடுத்தவன் தலையசைத்துச் சொன்னான் –

வந்துக்கிட்டிருக்கான்.

அவன் சொல்லிப் பதினைந்து நிமிடம் சென்று அழகான நெட்டி, மற்றும் சன்னமான மர வேலைப்பாட்டோடு ஒரு படகு வீடு கம்பீரமாக மிதந்து வந்து படகுத் துறைப் பலகைக்கு அடுத்து நின்றது.

ஏறிக் கொண்டார்கள். அடுத்த மழை ஆர்ப்பாட்டமாக நானும் வருகிறேன் என்று சேர்ந்து கொண்டது.

படகு புறப்பட்டபோது படகுக்காரன் சங்கரனையும் தெரிசாவையும், கூரை இறக்கி வேய்ந்த படகு முனையில் இட்டு வைத்திருந்த நாற்காலிகளில் சௌகரியமாக உட்காரச் சொன்னான்.

மழை அடர்ந்த காயலையும், காயல் நிறம் பகர்த்திய மழையையும் எந்தக் குறுக்கீடும் இன்றி பார்த்துக் கொண்டே பொழுதைக் கரைக்க அந்தப் படகு முனை தவிர வேறே இடம் இருக்க முடியாது.

இந்த நாள், இந்த நிமிடம், இந்த நொடி ஏற்கனவே நிச்சயப்படுத்தியபடி உருவாகிக் கடந்து போகிறது.

தெரிசா தனக்குள் சொல்லிக் கொண்டாள். யார் நிச்சயித்தபடி என்று தெரியாது. கயிற்றில் ஆடும் தோல்பொம்மைகளாக இயங்குவது தவிர அவளுக்கும் சின்னச் சங்கரனுக்கும் இப்போது வேறே காரியம் ஏதும் இல்லை.

அவள் மனதை எதிரொலிப்பது போல் பார்த்த சங்கரன் அவள் அருகே நெருங்கி அமர்ந்து கையைப் பற்றிக் கொண்டான். அவனுடைய வெப்ப மூச்சு அவளுக்குப் பரிச்சயமாகி இருந்தது.

இதெல்லாம் சரிதானா? இல்லாவிட்டால் தான் என்ன? தெரிசா சங்கரனையே பார்த்தபடி இருந்தாள். முசாபர் ஒரு வினாடி அவள் நினைப்பில் எழுந்து காயல் அலைகளில் கலந்து காணாமல் போனான்.

காயல்லே மழை காலத்தில் படகு விட்டுப் போகிறது பற்றி எங்க தீபஜோதிப் பாட்டி சொல்லியிருக்காங்க.

அவள் உற்சாகமாகச் சொன்னாள். சங்கரன் அவளையே பார்த்தபடி இருந்தான். நீர்த் தாவரம் எதுவோ படகோடு வருவதைப் பார்த்து விட்டு மறுபடியும் தலை உயர்த்தினாள் தெரிசா.

தீபஜோதி பாட்டித் தள்ளை, எங்க கிரான்மா. இவங்க தான்.

ஃபேம்லி ட்ரீ படத்தைக் கைப்பையில் இருந்து எடுத்து அவன் விரல்களோடு பிணைந்திருந்த தன் கை கொண்டு படத்தில் சுட்டினாள் தெரிசா. அந்த எழுத்துகளில் தோல் சுருங்கி மூத்த தீபஜோதியைக் கண்டிருந்தாள் அவள்.

பாட்டித் தள்ளை அவங்க அப்பா கண்ணூர் புரபசர் வேதையன், அம்மா பரிபூரணத்தம்மா, வீட்டிலேயே இருந்த உறவுக்காரர் துர்க்கா பட்டன் அம்மாவன். தீபஜோதி முத்தச்சி எல்லோரையும் பற்றி நிறையச் சொல்லி இருக்கா. அந்தப் பழைய வீடு பற்றியும்.

அவளுக்கு பாட்டியின் வார்த்தைகள் முழுக்க நினைவு இருந்தன. அந்த மொழியும் இப்போது சட்டென்று மனதிற்குள் திரும்ப வந்திருந்தது.

அவள் குழந்தை தீபஜோதியானாள். சங்கரனின் தோளில் தலை சாய்த்து, மழை ஆதரவாகத் தாளம் கொட்டச் சொல்லத் தொடங்கினாள் –
//
ரெண்டு பக்கமும் காய்த்துக் குலை தள்ளி இருந்த வாழை மரங்களுக்கு நடுவே துர்க்கா பட்டன் தவழ்ந்து கொண்டிருந்தான்.

ஆன, ஆன, கொம்பன் ஆன. வேகம் போ ஆன. திருசூர் பூரம் போ ஆன.

இது பேசுகிற ஆனை. குழந்தை கூடச் சேர்ந்து கொம்மாளி கொட்டிச் சிரிக்கிற ஆனை.

வேதையனின் பெண் குழந்தை தீபஜோதி அவன் முதுகில் உட்கார்ந்து பூக்குடலையைக் கவிழ்த்த மாதிரிச் சிரித்தது. அவன் வயிற்றில் சின்னக் காலால் மிதித்தது. ஆனையைத் தோட்டத்து வடக்கு மதில் சுவர் பக்கம் நகர்ந்து போகும்படி அடம் பிடித்துக் கொண்டிருந்தது அது.

வேதையன் வீட்டுத் தோட்டத்தில் வாழை மரங்களின் வரிசை முடிந்து இனி தென்னை, பலா, மா அப்புறம் பூச்செடிகள். ஆனை போக முடியாத ஒற்றையடிப் பாதையை அடுத்து சின்ன வாய்க்காலாக கிணற்றுத் தண்ணீர் பொசிந்து கொண்டிருந்தது. கடைகால் கடைகாலாக கிணற்றில் இருந்து நீர் சேந்தி அந்தச் சாலில் செலுத்திய படிக்கு வீட்டுப் பணிக்காரன் ஒருத்தன் தோட்ட வேலையில் கருத்தும் காரியமுமாக இருந்தான்.

பட்டரே, குஞ்ஞம்மையைக் குப்புறத் தள்ளிடாதேயும். தென்னை நட வெட்டி வச்ச குழி உண்டு அங்கே. பின்னே நீரும் கூடி அதிலே விழுந்து வைக்கப் போறீர். கண்ணு தொறந்து ஆனை நடக்கட்டும்.

பணிக்காரன் தண்ணீர் இறைப்பதை நிறுத்திச் சொன்னான். பட்டன் முதுகில் உட்கார்ந்து ஆனையை முன்னால் செலுத்திக் கொண்டிருந்த மூணு வயசுப் பெண் குழந்தை தீப ஜோதி மழலையில் அவனை அதட்டியது.

சும்மா போ தோமச்சா.

எண்டெ பொன்னு குஞ்ஞம்மே. தோமச்சன் சும்மாவும் போகும். சுகமாயிட்டு பாரம் சுமந்தும் போகும். விதிச்சது தீர்ந்தால் பின்னே குரிசுப்பள்ளி உண்டல்லே கிடக்க.

அவன் முடிப்பதற்குள் துர்க்கா பட்டன் குழந்தையை லாகவமாக இடுப்பில் இருந்து இறக்கி தோளில் சுமந்தபடி எழுந்து நின்றான்.

தோமச்சா. குஞ்ஞுக் குட்டியோடு சம்சாரிக்க வேறே விஷயம் ஒண்ணும் கெடக்கலியா உனக்கு?

அவன் குழந்தை நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வைக் கீற்றைத் தன் மேல் முண்டால் பதமாகத் துடைத்தான். குழந்தை நெற்றியில் மெலிசாக முத்தம் இட்டபோது அது அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு திரும்ப கூச்சலிட்டது.

அம்மாவா, ஆன, ஆன.

அம்மாவனு வல்லாத்த ஷீணம் குஞ்ஞே. ஒரு கவளம் சோறு கழிச்சு வந்நு ஆனக் கொம்பன் திருச்சூர் பூரம் காணான் இறங்கும். சரியா.

ஞானும் வயும். மன்னி, பூயம். பூயம்.

குழந்தை ஓட்ட ஓட்டமாக அம்மாவிடம் அனுமதி வாங்க ஓடியது.
//

தெரிசா பூயம் என்றாள். அவள் பிடரியில் முகம் புதைத்து முத்தியபடி சங்கரன் பூரம் என்றான்.

தெரிசாவின் வரியோடிய உதடுகளைத் தன் இதழ் கொண்டு மூடித் திறந்தான்.

அவளுடைய நாவைப் பரிசித்துச் சொன்னான் –

நமுக்கு பூரம் காணான் பூவாம்.

அவளுக்குள் இருந்து எழுந்து வாயின் மேலன்னத்தில் மோதி எதிரொலித்து வந்த குரலாக இருந்தது அது. தெரிசா உடல் சிலிர்க்க முதுகு குறுக்கி அவனோடு ஒட்டிக் கொண்டாள்.

இதெல்லாம் சரிதானா? சரியில்லை என்றால் என்ன போச்சு? புண்ணியம், பாவம், நல்லது, கெட்டது கூட்டிக் கழித்து யாரிடமும் கணக்கு ஒப்பிக்க வேண்டியதில்லை.

அவள் அந்தக் கணத்தில் கரைந்தாள்.

படகுக் காரன் சாயாக் கோப்பைகளை முக்காலியில் வைத்துவிட்டு ஒன்றும் பார்க்காத, எதையும் கேளாத பாவனையில் உள்ளே போனான்.

கண்ணூர் வீட்டுக்கு நான் போயிருக்கேன்.

சங்கரன் சொன்னான்.

மாமா படிச்சிட்டிருக்கார். முன்வசம் போகாதேன்னு ஒரு ஸ்தூல சரீரப் பெண், சொல்றது நினைவு வருது. அவளை பரிபூர்ண மாமின்னு கூப்பிடுவோம்.

தெரிசாவின் உதடுகளில் திரும்ப முத்தமிட்டுச் சொன்னான் சின்னச் சங்கரன்.

இதெல்லாம் சரிதானா? இல்லாவிட்டால் தான் என்ன? வசந்தி அவன் நினைப்பில் ஒரு வினாடி எழுந்து, அடர்ந்து நெய்த மழைத் திரிகளில் கரைந்து போனாள்.

சங்கரன் தெரிசாவை அணைத்துக் கொண்டான்.

காயலும் வானமும் நீர்த் திரையால் இணைய அடர்ந்த மேகங்கள் நின்று சுரக்க, மழை சீராகப் பெய்த வண்ணம் இருந்தது.

(தொடரும்)

ராஜாமகளின் ‘இப்படிக்கு …. கோதை’ என்ற புத்தகம்


மாதவன் என் மணியினை
வலையிற் பிழைத்த பன்றி போல்
ஏதும் ஒன்றும் கொளத் தாரா
ஈசன்தன்னைக் கண்டீரே?
பீதக-ஆடை உடை தாழப்
பெருங் கார்மேகக் கன்றே போல்
வீதி ஆர வருவானை
விருந்தாவனத்தே கண்டோமே.

மடிக் கணினியில் சஞ்சய் சுப்ரமண்யன் குரலில் ஆண்டாளின் நாச்சியார் திருமொழி (சாமா ராகம்) ஒலிக்கிறது.

’வாழ்ந்து போதீரே’க்கு அடுத்து எழுத இருக்கும் நாவலுக்கான கள ஆய்வு செய்ய மங்களூர்-ரத்னகிரி வழிப் பயணத் திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கிறேன். கூரியர் சர்வீஸ் அழைப்பு.

கோதை தான். இப்போது நூல் வடிவில்.

புரட்டிப் பார்க்க, அரங்கனுக்கும் நாச்சியாருக்கும் நிகழ்ந்த கடித உரையாடலாக, ஸ்ரீமுகங்கள்.

//மாமாயனுக்குக் கோதை வரைவது. பொருத்தமுடைய நம்பி என உமைக் குறிப்பிட்டதற்கு மகிழ்ந்தீர்கள்.

தருமம் அறியாக் குறும்பனைத்
தன்கைச் சார்ங்கம் அதுவே போல்
புருவ வட்டம் அழகிய
பொருத்த மிலியைக் கண்டீரோ

என்று பட்டி மேய்ந்து என்னும் பதிகத்து ஆறாம் பாடலுள் உம்மைப் பாடியிருப்பதைக் கண்ணுறவில்லையோ. . நாணிலி
//

ஆண்டாள் கடிதத்தில் வெட்கமும் கிண்டலும் சீண்டுதலுமாக மொழி அமைந்தால் அரங்கன் கடிதம் கனகம்பீரம்.

//

’நம் வீட்டில் உள்ள குடவரும், கோவணரும், பூவிடுவோர், தழைவிடுவார், தண்ணீர் சுமப்பார், தண்டெடுப்பார் முதலியவர்களும், அணுக்கரும், கணக்கரும் நம்பால் வந்தனர். கோதை வீட்டினின்றும் அர்ச்சகரும், குடவரும், கோவணரும், தண்டெடுப்பாரும் ஸ்ரீராமானுஜ உடையாரும் வந்தார்கள் என விண்ணப்பித்தனர்’.

//

அருமையான புத்தகம் என்று புரட்டும் போதே தெரிகிறது.

நம் நண்பர் Naan Rajamagal நான்ராஜாமகள் எழுதியது.

விரைவில் படிக்க எடுக்க வேண்டும்.

ஜெயந்தி சங்கரின் அனைத்துப் படைப்புகளும் சேர்ந்த நூல், வித்யாசுப்ரமணியம் (உஷா மேடம்) எழுதிய உப்புக் கணக்கின் இறுதி அத்தியாயங்கள், துளசி சேச்சியின் அக்கா .. படிக்க வேண்டிய வரிசை இது.

இப்போது ராஜாமகள் (திருமதி தேன்மொழி) எழுதிய இப்படிக்கு ..கோதை நூலும்