New Novel: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 30 இரா.முருகன்

நாலு நாள் இனி ஆபீஸ் அடச்சுப் பூட்டி இருக்கும். நீ வழக்கம் போல் இங்கே தங்கிக்க தடை ஒண்ணும் இல்லே.

கல்கத்தா குக்கல் குரைத்தான். குக்கல் என்றால் நாய் என்று அப்பா சொன்னது திலீப் நினைவில் உண்டு. அந்த நாய் பிஸ்கட் கம்பெனி ரிடையர்ட் முடி பிடுங்கி நாய் ஜெனரல் மேனேஜர் சாஸ்திரி இப்படிச் சொன்னது நேற்று சாயந்திரம். திலீப் மறு பேச்சு பேசும் முன்னால், அடுத்த கட்டளையையும் வந்து விழுந்தது.

நடாஷா வாசிலிவிஸ்கி இங்கே பிரிண்டிங் பிரஸ் வந்தது, நிலைச்சதுன்னு நூறு வருஷ சரித்திரத்தையும் ஆராய்ச்சிக்கு எடுத்திண்டிருக்கா. கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு, எரணாகுளம், திருவனந்தபுரம்னு பல ஊர்லேயும் சந்திச்சுப் பேச ஒரு பெரிய லிஸ்டோட வந்திருக்கா. எல்லோரும் பத்திரிகை, அச்சுத் தொழில்லே பெரிய பேர். அவளை கூட்டிப் போய் வாரக் கடைசிக்குள்ளே எல்லாம் முடிச்சுத் தர வேண்டியது உன்னோட வேலை.

சியாமளா பெரியம்மா இப்படி மமதை தலைக்கேறிச் சொன்னபோது திலீப் ஏமாற்றத்தின் உச்சியில் இருந்தான். நாலு நாள் என்றால் நாலு நாள். மும்பைக்குப் போகிற ரயில் வண்டியில் இடம் இல்லாமல் கார்ட் கம்பார்ட்மெண்ட் கக்கூஸில் கால் மடித்து உட்கார்ந்தோ, வண்டிக்குப் பின்னால் ஓடியோ பம்பாய் போய் அகல்யாவோடு இருந்து விட்டு வர மனமும் உடம்பும் விடாப்பிடியாக வலியுறுத்திக் கொண்டிருந்தது. கல்யாணமாகி ரெண்டே தினத்தில் இந்தக் கிராதகர்கள் டிரங்க் கால் போட்டு திலீப்பை அகல்யாவின் வெப்பமான அணைப்பில் இருந்து பிய்த்தெடுத்து இங்கே வரவழைத்து விட்டார்கள்.

நாட்டுப்புறக் கலைவிழா சிறப்பாக முடிந்து, பம்பாய், தில்லி, கல்கத்தா பத்திரிகைகளில் பத்தாம் பக்க நியூஸ், மதராஸ் இங்கிலீஷ் பத்திரிகையில் எஃகுத் தொழிலில் பின்னடைவு பற்றி ரிடையரான சர்க்கார் அதிகாரி எழுதிய கடிதம், மாம்பலம் சபா சொற்பொழிவில் சுந்தரமூர்த்தி நாயனார் கைலாயம் போன விவரம் இவற்றோடு, நாலு காலத்துக்குக் கட்டம் கட்டி, சியாமளா பெரியம்மா மேடையில் பேசுகிற புகைப்படத்தோடு வந்த வியாசம் என்று அவளுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சியைக் கொடுத்த நிகழ்வுகள்.

சியாமளா பெரியம்மா யூனிவர்சிட்டிக்கு சமர்ப்பித்த, அர்ஜுன நிருத்தத்தை முன்வைத்து கேரள நிகழ்கலைப் பாரம்பரியத்தை ஆய்வு செய்திருந்த கட்டுரைக்கு அவளுக்கு டாக்டர் பட்ட அறிவிப்பும் நேற்று வந்து சேர்ந்து அந்த சந்தோஷ சமாசாரம் விழாப் பந்தலில் சகலரோடும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

கொங்கணிப் பெண்ணின் கொங்கைக் குவட்டில் மினிஸ்டர் பெரியப்பா விழுந்து கிடப்பதைக் கூடச் சட்டை செய்யாமல் பெரியம்மா உற்சாகமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டாள் அப்போது. பெரியம்மா சார்பில், விழாவுக்கு வந்த பிரமுகர்களுக்கு எல்லாம் விசேஷமாகக் கோவிலில் சொல்லி வைத்துக் காய்ச்சிக் கொண்டு வந்த பால் பாயசம் பிற்பகலில் குவளை குவளையாக வழங்கப்பட்டது. அந்த விழாவே டாக்டர் சியாமளா என்ற ஆராய்ச்சியாளர் எடுத்த விழாவாக எல்லாத் தரப்பாலும் போற்றப்பட, பெரியம்மா இன்னும் தன்னை மேம்பட்டவளாக உணர்ந்து, வெடிவழிபாட்டுக் கிழவன் சொல்லும் பழங்கதைகளில் வரும் சாவக்காட்டு முத்தச்சன் போல் தரைக்கு ஓரடி மேலே தான் பறந்து கொண்டிருக்கிறாள். அவளுக்குப் பெருமை என்றால் திலீபுக்கும் பெருமை தான்.

எது எப்படியோ, வெடிக்கார குறூப் கூட ஆபீசுக்கு வர வேண்டியதில்லை. ஆனால் திலீப் மட்டும் பெரியம்மா சொன்ன வேலைக்காக ஆஜானுபாகுவான அந்த சோவியத் பெண்ணோடு மழையில் சுற்றி வர வேண்டும். ஆறரை அடிக்கு அவள் திலீப் பக்கத்தில் நின்று குனிந்து பார்க்கும் போது மூக்கில் குத்தும் பூண்டு வாடை அவனை மிரட்டுகிறது. ஐரோப்பிய வெளுப்பும் உள்ளிப் பூண்டின் வாசமும், கனமான குரலுமாக அவள் திலீப்போடு கூட நடக்கும்போது அசூசையோடு பார்க்கும் உள்ளூர்க்காரர்களை திலீப்புக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆதூரத்தோடும் பச்சாதாபத்தோடும் இல்லையோ பார்க்க வேண்டும் அவனை? மலையாளக் கரையில் சகலத்திலும் செக்ஸ் உண்டல்லோ.

சரியாக காலை எட்டு மணிக்கு வந்திடு திலீப் என்று கட்டளையிட்டிருந்தாள் நடாஷா. அவள் சொன்னபடி உடனுக்குடன்செயல்பட வேண்டும் என்பது பிஸ்கட் குத்தா மற்றும் பெரியம்மா ஆணை. டூமா என்ற சோவியத் நாடாளுமன்றத்தில் பரபரப்பாகச் செயல்படும் உறுப்பினரின் மகளாம் நடாஷா. கட்சியில் முக்கியமானவர் அவர். ஐரோப்பிய அரிவாளும் ரஷ்ய சுத்தியலும் சிகப்பில் எழுதிய சீனப்பட்டுத் துணிக் கொடியில் பறக்கும் பூமி அது. கேரளா போல.

பெரியம்மா ஆப்பிரிக்கப் பயணம் போக, இங்கே வந்த தூதுவர் வைத்தாஸ் ரெட்டி மூலம் அழைப்பு வந்திருக்கிறதாக திலீப்புக்குத் தெரியும். அப்படியே ஐரோப்பாவிலும் பயணப்பட, தில்லியில் மினிஸ்டர் கணவர் மூலம் அவள் முயற்சி எடுப்பதும் தெரியும். கொங்கணிப் பெண் சரச விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளப் பெரியப்பா அவளை ஐரோப்பா அனுப்ப மும்முரமாக முயற்சி செய்வார் என்பது கூடத் திலீப்புக்குத் தெரியும்.

பத்து நாள் என்றால் பத்து நாள். பெரியம்மா உலகம் சுற்ற, பெரியப்பா நேரு நினைவுகளை கொங்கணி வாசனை மணக்க மணக்க அந்தச் சிவத்த ரெட்டை நாடிப் பெண்ணின் தேகத்தில் இருந்து ரசனையோடு அகழ்ந்தெடுப்பார். நடாஷா தயவில் சோவியத் பயணமும் பெரியம்மாவுக்கு வாய்த்தால், கொங்கணி மாமிக்கு அவர் ஒரு நல்ல நாளில் கர்ப்ப தானமும் செய்யக் கூடும். திலீபுக்கு எல்லாம் தெரியுமாக்கும். ஜனனியிடம் சொன்னால் சிரிப்பாள்.

யாரும் எங்கேயும் போகட்டும். யாரோடும் கூடிக் குலாவட்டும். அவனுக்குச் செய்ய வேலை இருக்கிறது. நடாஷாவை எரணாகுளம் கூட்டிப் போகணும்.

மழை நேரத்து ஆட்டோ கிடைக்க வழக்கம் போல் சிரமமாக இருந்தது. ஆனால் இங்கே ஒரு நல்ல விஷயம் – ஆட்டோ டிரைவருக்கு நல்ல மனது இருந்து போகலாம் என்று முடிவு செய்தால் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது பற்றி விவாதமே இல்லாத இடம். சரியான தொகைக்கு மேல் ஒரு காசு கூடக் கேட்க மாட்டார்கள் யாரும். அரிவாளும் சுத்தியலும் கற்றுக் கொடுத்த சத்திய வழி என்று பெருமிதத்தோடு போன வாரம் ஒரு வண்டியோட்டி சொன்னார். ஆனால் பாதி வழியில் அவருடைய ஆட்டோ ரிக்‌ஷா நின்று போனது.

ஆலப்புழை போகணும். ஆட்டோ வருமா?

கண்ணில் பட்ட வாகனத்தை நிறுத்த, ஓட்டி வந்தவன் எதிர்க் கேள்வி கேட்டான் –

சேட்டன் அங்கே ஓட்டலில் தங்கியிருக்கற மதாம்மாவைக் கூட்டிட்டு இங்கே வந்து மயில்பீலி தூக்கம் படிப்பிக்கணும். அதானே? அலைச்சல் இல்லாம மதாம்மா இங்கேயே ஜாகை ஏற்படுத்திக்கலாமே? பெட்ரோல் மிச்சம் கூட.

அது சரி, ஆனால் இன்னிக்கு ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகணும்.

திலீப் கர்ம சிரத்தையாக விளக்கம் சொன்னான்.

ரயில்வே ஸ்டேஷனா, அதுவும் பக்கம் தான். டிரைவர் உற்சாகமாகக் கூறினான்.

ஆனா நான் போய்க் கூட்டிப் போகணுமே.

விடாது, திலீப் மேலும் விளக்கினான்.

நல்ல வேளை, பஸ்ஸில் ஆலப்புழை போய் அங்கே ஓட்டலில் இருந்து பொடி நடையாக நடாஷாவை ரயில் ஏறக் கூட்டிப் போகலாமே என்று கேட்காமல் ஆட்டோ திலீப்பை ஏற்றிக் கொண்டு ஆலப்புழை கிளம்பியது.

நடாஷா இருந்த ஆலப்புழை ஓட்டலுக்கு முன் சேறும் சகதியுமாகக் கிடந்தது. அங்கங்கே மரப் பலகையைத் தரையில் இட்டு வைத்திருந்தது கண்ணில் பட்டது. அதன் மேல் ஜாக்கிரதையாகக் கால் வைத்த, தலை குளித்த பெண்கள் நோட்டுப் புத்தகம் சுமந்து பக்கத்தில் காலேஜுக்கோ, தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிற்சிக்கோ போய்க் கொண்டிருந்தார்கள். மழையும் வெள்ளமும் சகதியும் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டிருக்கும் அவர்களுக்கு.

திலீப்பும் மழை சுழன்றடிக்கும் பிரதேசத்தில் இருந்து வருகிறவன் தான். மராத்தியர்கள் ஒவ்வொரு வருஷமும் மழையை வரவேற்பது சகல கவனமும் எடுத்து. திலீப்புக்கு அதில் அசாத்தியப் பெருமை. மழைக்காலத்தில் பம்பாய் எலக்ட்ரிக் ரயிலில் போவதை விடவா இதெல்லாம் பெரிய விஷயம்?

இல்லல்லோ என்று எதுக்கோ சொல்லி தங்களுக்குள் சிரித்துப் போன பெண்களைத் தொடர்ந்து திலீப் மரப் பலகையில் கால் வைக்க, வழுக்கி சேற்றில் இரண்டு காலும் அழுத்த நின்றான்.

நல்ல வேளை. ஓட்டல் மேனேஜர் அவனைப் பார்த்திருந்தார். மதாம்மா அகத்து உண்டு என்று எதிர்பார்ப்புகளோடு தினம் செய்தி அளிப்பதை அவர் கடமையாக ஆற்றுகிறவர். இவன் நடாஷா இருந்த அறைக்குள் போய் பதினைந்து இருபது நிமிடங்களுக்கு அப்புறம் அவளோடு வெளியே போகும் போது எதற்காகக் கூர்ந்து பார்க்கிறார், எங்கே பார்க்கிறார் என்று திலீபுக்குத் தெரியும். அவரைப் போய்க் கேட்கவா முடியும்? அதுக்கெல்லாம் பத்து நிமிஷம் போதாதா என்று பதிலுக்குக் கேட்கக் கூடியவர். போதும் தான்.

யங் மேன், கொஞ்சம் நில்லு. ஆபீஸ் பாய் வெள்ளம் ஒழிப்பான்.

அவர் அவனை வாசலிலேயே நிறுத்தி விட்டார். சகதிக் காலோடு நடாஷாவை இவன் கட்டிலில் கிடத்திக் கலந்தால் படுக்கை விரிப்பும் தலையணையும் ஏன் அறையுமே சேறும் சகதியுமாகி விடாதா என்ற கரிசனம் திலீப்புக்குப் புரிந்தது.

மாடிப் படிக்கட்டில் விரித்த எத்தனையோ வருஷம் பழையதான கம்பளத்தில் ஈரக் கால்களை மணலோடு ஒற்றி ஒற்றிக் கடந்து, அவன் இரண்டாம் மாடியில் நடாஷா இருந்த அறைக்கு முன் நின்றான்.

ஆகக் குறைந்த உடுப்பில் கதவைத் திறந்தாள் அவள். அந்த அறையே உள்ளிப் பூண்டு வாடை சூழ்ந்து இருந்ததாக திலீப் நம்பத் தொடங்கி இருந்தான்.

உட்காரு, குளிச்சுட்டு வந்துடறேன்.

நடாஷா உள்ளே போனாள்.

ஒற்றை நாற்காலியில் மார்க் கச்சு தொங்கிக் கொண்டிருந்தது. விரித்து வைத்திருந்த ஈரமான பெரிய ஸ்கர்ட் பாதிக் கட்டிலை அடைத்துத் தரையில் வழிந்தது. ஈரத் துணி வாடையையும் சேர்த்து மேலே சீலிங் ஃபேன் பரத்திக் கொண்டிருந்தது. மீதிக் கட்டிலில் அரையில் உடுத்தும் பெண்கள் உள்ளாடை, கறுப்பு நிறத்தில். அதைத் தொட்டபடி, பாதி சாப்பிட்ட ரொட்டியும் ஆம்லெட்டுமாகப் பீங்கான் தட்டு. ஓரமாக காலி தேநீர்க் கோப்பை, எந்த நிமிஷமும் தரைக்குக் கவிழக் கூடும் என்ற நிலையில். எங்கே உட்கார?

யோசித்து ஏதோ குறுகுறுப்போடு நாற்காலி நுனியில் தொடுக்கினாற்போல் அமர்ந்தான். ஒரு வினாடி தான். சுற்று முற்றும் பார்த்து விட்டு நன்றாகப் பின்னால் சாய்ந்தான். இரண்டு தோளையும் தழுவிப் படர்ந்த, உடுத்து விழுத்துப் போட்ட மார்க்கச்சையின் ஒச்சை வாடை அவனுக்கு வேண்டி இருந்தது.

அகல் செல்லம் அகல் கண்ணம்மா

அவன் வெறியோடு அந்த மார்க்கச்சையைப் பின்னால் இருந்து எடுத்து ஆவேசமாக முகம் புதைத்துக் கொண்டான். வேண்டி இருந்தது. இன்னும் கூட.

பதுங்கிப் பதுங்கி, முன்னால் ரெண்டு அடி வைத்து கறுப்பு உள்ளாடையை ஆசையாகப் பற்றி எடுக்கும் போது குளியலறைக் கதவின் இறுகிக் கிடந்த தாழ் திறக்க முயற்சி செய்வதின் ஓசை. எடுத்ததை அப்படியே போட்டு விட்டு திலீப் அசதியோடு நாற்காலியில் உட்கார்ந்தான். சந்தன சோப்பும் பூண்டும் மணக்க நடாஷா, ஒரு டர்க்கி டவல் உடுத்து, மேலே சன்னமான துண்டு போர்த்தி, குளியலறைக்கு உள்ளே இருந்தபடிக்கு அவனைக் கை சுண்டி அழைத்தாள்.

என்னடி ஆம்பளைப் பிசாசே?

அவன் தமிழில் கேட்டதால் தப்பித்தான். தரையில் கிடக்கும் மார்க் கச்சையை எடுத்துக் கொண்டு வந்து தரும்படி கேட்டாள் நடாஷா. அப்படியே கட்டிலில் கிடக்கும் உள்ளாடையும் வேணுமாம்.

வெட்கமே இல்லியாடி முண்டே?

திலீப் சற்றே கை நடுங்க அந்த உடுப்புகளை எடுக்கும்போது திரும்ப உடலில் கிளர்ச்சியும் அகல்யா நினைப்பும் பரவியது. கல்யாணம் முடிந்து ரெண்டே நாள் அவளோடு சுகித்திருந்தபோது கிளர்ந்தெழுந்து, அவள் தேகம் வியர்ப்பில் துப்பிக் கிறுகிறுக்க வைத்த கறிவேப்பிலை மணமும்.

குளிரக் குளிர நின்ற நடாஷா இரண்டு துணியையும் வாங்கிக் கொண்டு அவனையே பார்த்தாள்.

என்ன யோசனை?

அவன் பதில் சொல்வதற்குள், சட்டென்று அவனை இடுப்பில் அணைத்து உயரத் தூக்கி கன்னத்தில் பப்பரப்ப என்று முத்தமிட்டுக் கீழே போட்டாள். சுடக்கெடுத்து விட்ட மாதிரி இருந்தது திலீப்புக்கு.

அடி திருட்டு லண்டி. விளையாட்டு வினையாயிடும்டி.

அவன் சொல்லி முடிப்பதற்குள் சிரித்தபடி குளியலறைக் கதவு அடைத்துத் திரும்ப உள்ளே போனாள். அவனுக்கு வேண்டித்தான் இருந்தது.

அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது மழை சிறிதும் இல்லாத, சூரியன் மித வெப்பமாகப் படியும் காலை ஒன்பது மணி. நாலு வழி சந்திப்பில் பஸ்ஸும், லாரியும், ஒன்றிரண்டு கார்களும், ரிக்‌ஷா வண்டிகளும் இடத்தை அடைக்க, போக வழி தெரியாமல் நின்றான் திலீப்.

அவனை கிட்டத்தட்ட பாதுகாப்பாக நெருக்கி அணைத்துக் குழந்தை போல செலுத்திக் கொண்டு திடமாக அடியெடுத்து வைத்துப் போனாள் நடாஷா.

எரணாகுளம் லோக்கல் வரும் நேரம். ரயிலிலேயே போகலாமா?

திலீப் கேட்டான்.

அவள் பஸ் ஏறுவதில் ஆர்வம் காட்டினாள்.

ரயிலில் போனால் பாதை முழுக்க பச்சைப் பசேல் என்று செடியும் கொடியும் தூரத்தில் காயலும் கடலுமாக இருக்கும்.

அவள் தோளில் மாட்டியிருந்த காமிராவைப் பார்த்தபடியே திலீப் சொன்னான்.

நடாஷா சம்மதித்தாள். ஆனாலும் பஸ்ஸில் தொங்கிக் கொண்டு போகிற கூட்டத்தில் கலக்க அவள் முகத்தில் ஆவல் இன்னும் இருந்தது.

இந்த மொழி மட்டும் புரிந்தால் நானும் படியில் நின்று சந்தோஷமாக திருவனந்தபுரம் கூட நாள் முழுக்கப் பயணம் போவேன் என்றாள் அவள்.

ரயில் பிரயாணமாக, ஏகத்துக்கு சோவியத் யூனியலில் போயிருக்கிறாளாம். நாலு நாள் தொடர்ந்து போகும் மாஸ்கோ – விளாடிவெஸ்டாக் டிரான்ஸ் சைபீரியன் ரயிலில் வருடம் நாலு தடவையாவது போய், ஒவ்வொரு பயணத்திலும் இருநூறு பக்கம் கவிதை எழுதி மாஸ்கோ திரும்பியதும் கொளுத்தி விடுவது தனக்கு வழக்கம் என்றாள் நடாஷா.

அரசாங்க விரோதக் கவிதையாக இருக்கலாம் அதெல்லாம் என்று நினைத்தான் திலீப். அல்லது லட்சணமான வாலிபனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு காமமுறும் பெண் பற்றி. இறக்கியே விடாத யட்சி. மிக வலுவானவள்.

ரயில் ஓட்டுகிறவரையும் பின்னால் கடைசிப் பெட்டியில் மலையாள தினப் பத்திரிகை படித்தபடி உட்கார்ந்திருந்த கார்டையும் தவிர ஆள் கூட்டம் இல்லாமல் ரயில் வந்து நின்றது. முந்திய ரயில் நிலையங்களில் கூட்டமெல்லாம் இறங்கி இருக்கக் கூடும் என்றான் திலீப். கூட்டமில்லாத ரயிலில் நடாஷாவைக் கூட்டிப் போகத் தான் முன்கூட்டியே திட்டம் ஏதும் போடவில்லை என்று அவளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் விளக்கத் தோன்றியது அவனுக்கு.

போன வாரம் உனக்குக் கொடுத்த நூற்றம்பது ரூபிளுக்குக் கணக்கு சொல்லு.

வண்டியில் ஏறி அமர்ந்ததும், நடாஷா கேட்க, திலீப் ரூபிள் எதுவும் தன்னிடம் இல்லை என்றான்.

சரி, ரூபாய்க் கணக்கு?

நீ கொடுத்த பணத்தில் வெடிக்கார குறூப் வயிற்றுப் போக்கில் படுத்து சிகிச்சை செய்யக் கொடுத்த வகையில் இருபது ரூபாயும், காயலில் இந்த ஒரு வாரத்தில் நாலு தடவை படகில் போன வகையில் எண்பது ரூபாயும் செலவாக, மீதம் இருக்கும் ஐம்பது இன்றைய செலவுக்கு வைத்துக் கொள்ளப்பட்டது.

எரணாகுளத்தில் வருஷம் 1880-களில் அச்சு யந்திரம் வைத்து தோத்திரப் பாடல்களும், நம்பூதிரிகள் பற்றிய நகைச்சுவைக் கதைகளையும் பிரசுரித்த குடும்பத்தில், இரண்டு பெரியவர்களைச் சந்திக்கிற திட்டத்தில் இருப்பதாக நடாஷா சொன்னாள்.

அவர்களிடம் அபூர்வமான பழைய புத்தகங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றைப் பத்திரமாகப் புகைப்படம் எடுக்கவும், மதியச் சாப்பாட்டுக்கும் பணம் தர வேண்டியிருக்கும் என்றாள்.

அந்தப் பழைய அச்சு யந்திரம் கல்லுக் குண்டாட்டம் அங்கே இருந்து அதை விற்கவும் தயார் என்று பெரியவர்கள் சம்மதித்தால் எவ்வளவு செலவாகும் என்று கேட்டாள் அவள்.

உனக்கென்ன ப்ராந்தா என்று திருப்பிக் கேட்டான் திலீப். அவனை இழுத்து மடியில் போட்டுக் கொண்டு முதுகில் ஓங்கித் தட்டிச் சிரித்தாள் நடாஷா.

இந்தப் பேய்க்கு வாழ்க்கைப்பட்டது வேண்டித் தான் இருக்கிறது. அதுவும் அகல்யாவோடு இன்னும் இன்னும் என்று இழைந்துச் சேர்ந்து தேடி உணர்ந்து சுகம் கொண்டாடி, அது கிட்டாது காய்ந்திருக்கும் போது.

எரணாகுளத்தில் நடாஷா சந்திக்க வேண்டிய இரண்டு முதியவர்களும் மாமன், மைத்துனன் உறவில் வந்த சிரியன் கிறிஸ்துவர்கள் என்பதும் உள்ளூர் மற்றும் மாவட்ட அளவு கிறிஸ்தியானி சமூக அமைப்பில் செல்வாக்குள்ள இல்லத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பரம்பரை வீடு ரயில் நிலையத்துக்கு அடுத்துத் தான் என்பதும் நடாஷாவுக்கு மகிழ்ச்சி அளித்தது.

அலைச்சல் இல்லாமல் மிச்சமாகும் நேரத்தை உருப்படியான பேச்சுகளில் செலவழிக்கலாம். திலீப்புக்கு இதில் எல்லாம் சிரத்தை இருக்குமா தெரியவில்லை. அவனும் குறிப்பெடுக்க, கேள்வி கேட்க ஒத்தாசை செய்தால் நிறையத் தகவல் சேகரிக்கவும், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இவர்கள் வழி காட்டுதலில் செயல் திட்டம் வகுக்கவும் முடியும்.

இரண்டு முதியவர்களும் மாப்பிள்ளை என்று முடியும் குலப் பெயரோடு இருந்தார்கள். வெர்கீஸ் மாப்பிள்ளையை மட்டும் தான் சந்திக்க முடிந்தது. அவருக்கு மைத்துனன் உறவான மத்தாயு மாப்பிள்ளை சாயந்திரம் ஒரு மணி நேரம் மட்டும் விழித்திருந்து மற்றப் பொழுதுகளில் உறக்கத்தில் இருப்பவர் என்று தெரிந்தது. மாலை ஆறு மணிக்கு அவர் எழுந்ததும் அவரிடம் உபரி தகவல் பெற்றுக் கொள்ளலாம் என்றார் வெர்கீஸ்.

தின்ணென்று நீண்ட நடாஷாவின் செழுமையான கைகள் திலீப் கண்ணை மயக்க, அவள் ரயிலில் அவனை வாரி மடியில் போட்டுக் கொண்டது மனதில் திரும்ப மெல்ல நகர்ந்து போனது. அகல்யா அகல்யா என்று பிடிவாதமாக உதடு அசைய நடாஷாவின் அண்மை தொடர்ந்து வசீகரித்துக் கொண்டிருந்தது.

போய்ச் சேர எட்டு மணி ஆகிவிடும் என்று கணக்குப் போட்டான் திலீப். அகல்யா என்ன செய்து கொண்டிருப்பாள்?

காலை பத்து மணிக்கு ஆபீஸில் மராத்தியும் இங்கிலீஷுமாக அறிக்கை, பத்திரிகைக் குறிப்பு, விளக்கம், பத்திரிகைத் தலையங்கம் என்று மாய்ந்து மாய்ந்து டைப் அடித்துக் கொண்டிருப்பாள்.

திலீப் போல அவள் மனமும் சஞ்சலப்படுமோ? சஞ்சலப்படுத்த, யாரெல்லாம் அங்கே உண்டு? என்ன உயரம் இருப்பார்கள் அவர்கள்?

சாயா, பிஸ்கட் உபசாரம் முடிந்து, வெர்கீஸ் மாப்பிள்ளை பேசத் தொடங்கினார் –

ஆயிரத்து எண்ணூத்து முப்பதில் மலையாளம் அச்சு யந்திரத்துக்கு ஏறியது. அப்போதெல்லாம் சதுர எழுத்து தான். முப்பதே வருஷத்தில் அது வட்டெழுத்து ஆகி, எழுத்துச் சீர்திருத்தமும் வந்தாகி விட்டது. சதுர எழுத்து அச்சுக்களை வடிவமைக்க நாங்களே பவுண்டரி நடத்தினோம். என் பாட்டனார் காலத்து அச்சுகளும் யந்திரமும் இன்னும் பத்திரமாக இந்த வீட்டில் உள்ளன.

வெர்கீஸ் மாப்பிள்ளை தன் பேச்சை தானே அனுபவித்துச் சொல்லிப் போனார்.

அதோ அங்கே தோட்ட வீட்டில் அந்தப் பழைய அச்சு யந்திரத்தை வைத்திருக்கிறோம். 1874-ல் ஜெர்மனியில் வாங்கிக் கப்பலில் வந்தது. போட்டோ வேணாமே. நீங்கள் பார்த்து, வேணுமென்றால் ஓவியம் வரைந்து கொள்ளலாம்.

சடசடவென்று இறகடிக்கும் சத்தம்.

கூட்டமாகப் பறந்து வந்த மயில்கள். அவை வெர்கீஸ் மாப்பிள்ளை வீட்டுத் தோட்டத்தில் ஒருசேர இறங்கின. ஆடாமல், அகவிச் சத்தம் எழுப்பாமல் அவை எதற்கோ காத்திருப்பது போல, மண்ணில் கால் பதித்து நின்றபடி இருந்தன.

நடாஷா கேமராவில் அவற்றைப் பகர்த்த நினைத்து தோளில் இருந்து காமராவை எடுத்தபடி திலீப்பைப் பார்க்க அவன் கண் மூடி இருந்தான். முன்னால் நகர்ந்த மயில்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தன.

சாவு வரும் நேரம். இவை சாவின் அடையாளம். இறப்பின் பிரதிநிதிகள்.

வெர்கீஸ் மாப்பிள்ளை மயில்களைச் சுட்டிய படிக்குத் தனக்குத் தெரிந்த ரகசியத்தைப் பகிரும் எக்காளத்தோடு சொல்ல உள்ளே இருந்து நடுவயதுப் பெண் ஒருத்தி ஓட்டமும் நடையுமாக வந்தாள்.

மேலே உயர்ந்து நடுங்கும் குரலில் அவள் அறிவித்தது –

மத்தாயு அச்சன் கண் நிலைகுத்தி சுவாசம் நின்று போனது.

ஆணோ?

அப்படியா என்ற அர்த்தத்தில் வெர்கீஸ் மாப்பிள்ளை ஆதரவாகக் கேட்டார். நான் சொன்னது சரியாப் போச்சா என்று திருப்தி தெரிவிக்கும் முகக் குறிப்பு. அதில் சந்தோஷம் கீறியிருந்தது.

வந்த பெண் இன்னும் சொல்ல விஷயம் உண்டு என்பது போல் நின்றாள்.

அப்புறம் என்ன?

வெர்கீஸ் மாப்பிள்ளை விசாரித்தார்.

தோட்ட வீட்டுக்குள் பழைய அச்சு யந்திரத்தில் இருந்து சத்தம் வந்து கொண்டிருக்கிறது. நிற்க மாட்டேன் என்கிறது.

மத்தாயு தனக்கான நீத்தார் அறிவிப்பு அடிச்சுக்கிட்டிருக்கான். சரம பத்ரம்.

அவர் சொல்லி விட்டுச் சிரிக்க ஆரம்பித்தார்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன