Monthly Archives: December 31, 2013, 11:26 pm

’தென்றல்’ பத்திரிகை நேர்காணல் – ஜனவரி 2014

1. ’நான் ஓர் எழுத்தாளன்’ என்ற எண்ணம் முதலில் எப்போது தோன்றியது?

நான் எழுதத் தொடங்கியது புதுக் கவிதைதான். தூண்டுதலுக்காக ரொம்ப தூரம் வெளியே போக வேண்டி இரு்க்காமல், எங்கள் ஊர் சிவகங்கையிலேயே, அதுவும் நான் படித்த கல்லூரியிலேயே எனக்குப் பேராசிரியராக இருந்தவர் தமிழ்ப் புதுக் கவிதையை மக்களிடம் எடுத்துச் சென்ற கவிஞர் மீரா (பேரா.மீ.ராசேந்திரன்). அவருடைய ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ புது கவிதைத் தொகுதியின் மூலம் எழுபதுகளில் உருவான கவிஞர்களில் நானும் ஒருவன். அதைக் கடந்து புதுக் கவிதைப் பரப்பில் ஏழெட்டு ஆண்டுகள் (கொஞ்சம் அதிகக் காலம் தான்) கடத்தி விட்டேன். அப்படி எழுதிய கவிதைகளில் ‘வினைத் தொகை’, ‘பலகை’ இரண்டையும் மறு வாசிப்பு செய்ய ஒரு தருணம் கிட்டியது. மறு வாசிப்பு என்றால் எழுதி முடித்து, வருடங்கள் சென்று நடந்ததில்லை. போன மாதம் எழுதி, இந்த மாதம் பிரசுரமாகி, நேற்றுக் கையில் பத்திரிகை வந்து படித்து, இன்றைக்கு மறுபடி படிக்கிற கிரமம்தான். திரும்ப கவிதையைப் படித்தபோது இன்னும் இதில் சொல்ல நிறைய உண்டே, இந்த இறுக்கம் இல்லாமல் கொஞ்சம் காலை வீசிப் போட்டு நடந்து பார்க்கலாமே என்று தோன்ற அவற்றைச் சிறுகதை ஆக்கினேன். அதற்கு முன்னாலும் சில சிறுகதைகள் எழுதியிருந்தேன். அவை என் கவிதையின் நீட்சியாகவே இருந்தன. ஆனால், கவிதைகளைச் சிறுகதைகளாக வடிவம் மாற்றிய இந்த முயற்சிகள் அவற்றை முற்றிலும் வேறான இலக்கிய வெளிப்பாடாக உணர வைத்தன. இரா.முருகன் என்ற புதுக் கவிஞன் விடை பெற்றுக் கொண்டான். இரா.முருகன் என்ற எழுத்தாளன் மீசையை நீவிக் கொண்டு எழுதத் தொடங்கினான்.

2. உங்கள் படைப்புகளில் பெரும்பாலானவை மாந்த்ரீக யதார்த்தப் பாணியில் எழுதப்பட்டவை. மேஜிகல் ரியலிஸத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம் உள்ளதா?

கதையாடலைக் கதைக் களன் தான் தீர்மானிக்கிறது. ஒரு நூறு சிறுகதைகளும், இருபது குறுநாவல்களும், மூன்று விரல் என்ற முதல் நாவலும் எழுதிய பிறகு தான் மாந்த்ரீக யதார்த்தத்துக்கு வந்தேன். மரபான கதையாடல் என்றாலும் என் கதைகளில் காலத்தை ஒரு பரிமாணமாகக் கொண்டு வருவதில் ஆரம்பம் தொட்டு எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்து வந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பான ’தேர்’ கதைகளில் சரி பாதிக்கு மேல் கதையோட்டத்தில் காலம் முன்னும் பின்னும் சதா அதிர்ந்து நகர்வதைப் பதிவு செய்தவை. அந்த உத்தியை அசோகமித்திரன் சார் ‘தேர்’ முன்னுரையில் ‘ஜம்ப் கட்’ என்று இனம் கண்டு அறிமுகம் செய்தார். ‘அப்போது தான் இவன் கொஞ்சம் வித்தியாசமாக எழுதுகிறான் என்று என்னைப் பற்றிய புரிதல் தொடங்கியது. ஆனாலும் ஒரு கட்டத்தில் ’சொல்ல நிறைய உண்டு. அதைச் சுருக்கமாக, சட்டென்று மனதில் படிகிற தோதில் சொல்ல வேணும். முழுக்கச் சொல்லாமல் கதையை படிக்கிறவர் மனதில் வாசக அனுபவம் மூலம் அதை நிகழ்த்திக் காட்ட வேண்டும்’ என்ற தேடலின்போது நான் ஜம்ப் கட்டைக் கடந்து போக வேண்டி இருந்தது. அப்போது கண்டடைந்தது மாந்திரீக யதார்த்தம். மார்க்வேஸின் ‘நூறாண்டு காலத் தனிமை’யைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். நான் எழுத ஆரம்பித்தபோது அந்த நூல் தமிழில் கிடைக்கவில்லை. ஆனால், மலையாளத்தில் மொழிபெயர்ப்பாகி நன்றாக விற்பனை ஆன அந்த நாவலை இரவு நேரங்களில் சென்னை மாநகராட்சி குடிநீர் வர அடிபம்பு பக்கத்தில் காத்திருந்த நடு இரவு கடந்த நேரங்களில் தான் முழுக்கப் படித்து முடித்தேன். அதன் விளைவாக ‘அடிபம்பும் காபிரியல் மார்க்வெஸும் புல்புல்தாராவும்’ என்ற என் முதல் மாந்திரீக யதார்த்தக் கதையை நான் எழுதும்போது சான் ஓசே, கலிபோர்னியாவில் வேலை நிமித்தம் வசித்து வந்தேன். சென்னையில் 1990-களின் மாதக் கணக்கில் நீண்ட குடிநீர் தட்டுப்பாடும், மார்க்வேஸின் ஒரு நூற்றாண்டு தனிமையும் என் கலிபோர்னியா வாசத் தனிமையும் ஏதோ ஒரு அற்புதக் கணத்தில் ஒன்று கலக்காவிட்டால் நான் மாந்த்ரீக யதார்த்தத்துக்கு வந்திருக்க மாட்டேனோ என்னமோ!

3. உங்கள் எழுத்தின் தனித்துவமாக நகைச்சுவையைச் சொல்லலாம். சிறுகதை, நாவல்கள் மட்டுமில்லாது கட்டுரைகளிலும், திரைப்பட வசனங்களிலும் காண முடிகிறது. எப்படிச் சாத்தியமாகிறது?

எல்லாம் இடுக்கண் வருங்கால் நகுக வகையறா தான். சதா இடுக்கண்ணிலே இருக்கேனோ என்னமோ, சதா சிரிச்சுக்கிட்டிருக்கேன். அப்புறம் ஒண்ணு, நான் பிறந்து வளர்ந்த செம்மண் பூமி சிவகங்கை சுபாவமாகவே நகைச்சுவையை அனுபவிக்கிற, உம்முனு போறவனையும் சீண்டி வேடிக்கை பார்க்கிற பிரதேசம். தமிழில் முதல் வசன காவியமான சிவகங்கை முத்துக்குட்டி புலவரின் ‘வசன சம்பிரதாயக் கதை’ படித்தாலே இது புரியும். பத்தொன்பதாம் நூற்றாண்டு மத்தியில் சம்பவித்த தாது வருஷ பஞ்சம் தான் கதைக் களன். பல்லாயிரம் உயிர்களைப் பட்டினி காவு கொண்ட அந்த மகத்தான சோகத்தையும் கொஞ்சம் வரண்ட wry humor நகைச்சுவையோடு சொல்லும்போது சோகம் இன்னும் அடர்த்தியாகக் கவியும். சிவகங்கைக்கே உரிய அந்த நகைச்சுவை மரபணு பிள்ளைப் பிராயத்தில் குடித்த ஆரஞ்சு நிறச் செம்மண் செட்டியூரணித் தண்ணீரோடு எனக்குள் கலந்திருக்கிறதாகவே உணர்கிறேன். விட்டு விலகி நின்று பார்க்கும் போது, என்னைப் பார்த்து எகத்தாளமாகச் சிரிக்கிற முதல் வேடிக்கை மனிதன் நான் தான். அவன் பார்வையில் மற்றவர்களிலும் நகைச்சுவை தட்டுப்படுகிறது.

4. அரசூர் வம்சமாகட்டும், சமீபத்திய விஸ்வரூபமாகட்டும். இரண்டுமே காலவெளியைக் கலைத்து முன்னும் பின்னும் நிரப்புவை. சுவாரஸ்யமாக இருக்கும் அதே சமயம் வாசகனின் கூர்மையான கவனத்தையும் கோருபவை. மிக நீளமானவை. இம்மாதிரி நாவல்களை எழுதுவதில் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன?

சிக்கல் ஒண்ணும் கிடையாது. படிக்கிறவர்களுக்கு சிக்கல் இல்லாமல் இருக்க வேணும் என்ப்து முதல் குறிக்கோள். ஆயிரம் பக்கம் எழுதினாலும் ஒவ்வொரு பக்கத்தையும் படித்துவிட்டுத் தான் புரட்ட வைக்க வேண்டும் என்று அடுத்த எதிர்பார்ப்பு. நாவல் எழுதணும்னு தீர்மானம் செய்த பிறகு, கதை நிகழ்கிற காலப் பரப்பில் அமிழ்ந்து விடுவேன். இது சாவதானமாக அனுபவித்துச் செய்ய வேண்டிய ஒன்று. தமிழ், மலையாளம், ஆங்கிலம் என்று படிக்க, பயணம் போக, இண்டர்நெட்டில் பல்கலைக் கழக இணையத் தளங்களில் பொறுமையாகத் தேடி நுண் தகவல் சேகரிக்க, கதைக்கான அவுட்லைன் எழுத என்று நேரம் போகும். நாவல் எழுதுவதை விட அதற்கான ஆயத்தம் செய்யும் இந்தத் தருணங்கள் மனதுக்கு நிறைவானவை. ஒரு வழியாக யாரெல்லாம் கதாபாத்திரங்கள், எத்தனை கதை இழைகள், எங்கே எது எநதக் காலகட்டத்தில் நிகழ்கிறது என்று தீர்மானம் செய்து கொண்டு, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமான attribute-களைச் சேர்த்து ஒரு ஆவணம் அடுத்துத் தயாராகும். கதாபாத்திரங்கள் யாருக்கு யார் எப்படி உறவு என்பதும் இன்னொரு நுணுக்கமான வரைபடமாகும். இதெல்லாம் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்க ஏற்பட்ட வரைமுறைகள். அப்படியே நாவலுக்கு இந்த க்ளாஸ் டயகிராம், எண்டிட்டி ரிலேஷன்ஷிப் டயகிராம், சீக்வென்ஸ் டயகிராம் சமாசாரங்களை எல்லாம் கடத்துவதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை. கணினித் துறையில் நான் இல்லாவிட்டால் இந்த ஒழுங்கு வந்திருக்காதுதான். கதை எழுத ஆரம்பித்தவுடன், நான் அமைத்த சட்டகத்தை நானே மீற வேண்டி வரும். கதையாடலின் வேகம் அதைத் தீர்மானிக்கும். எப்படி மீறினாலும் எங்கே போக வேண்டும், எப்படி இது நிறைவடைய வேண்டும் என்ற நோக்கைத் தவற விட்டதில்லை. இந்தத் தீர்மானமே குழப்பமில்லாத வாசிப்பை வாசகர்களுக்குத் தர வழி வகுக்கிறது. ஏழெட்டு கதை இழைகள், பத்து நிகழும் ஊர்கள், நான்கு நாடுகள், அறுபதுக்கு மேல் கதாபாத்திரங்கள், மூன்று காலகட்டங்கள் என்று கதை நிகழ்ந்தாலும் சிக்கல் வார்ப்பிலும் வாசிப்பிலும் வராது.

5. உங்களைச் ‘சின்ன வாத்தியார்’ என்று வாசகர்கள் கூறுமளவுக்கு சுஜாதாவின் நடையிலும், பொருளடக்கத்திலும் தோய்ந்தவர், பின்தொடர்ந்தவர் நீங்கள். அவரைப்பற்றிச் சொல்லுங்கள்.

நான் என்றும் மாணவன் தான். வாத்தியார் எல்லாம் இல்லை. சுஜாதா சார் பற்றி, அவரோடு கொண்டிருந்த குரு – சிஷ்ய உறவு பற்றி நிறைய எழுதி விட்டேன். இனியும் எழுதினால் பாசாங்காகி விடக்கூடிய அபாயம் உண்டு. அவர் என்னை பாசிட்டிவ் ஆகப் பாதித்தவர். அதே சமயம், அவர் எழுத்து அவரை மீறிக் கடக்கவும் எனக்கு உத்வேகம் அளித்த ஒன்று. முன்பு ஒரு பேட்டியில் சொல்லியது போல, சுஜாதா என்ற படைப்பாளி மேல் எனக்கு பக்தியும் அவர் செய்யாததைச் செய்ய வேகமும் ஒரே நேரத்தில் ஏற்பட்டது. அவர் மேல் வைத்த பக்தி பின்னாட்களில் என் அறிவியல் படைப்புகளின் வடிவத்தில் வெளிப்பட்டது. அறிவியலை எளிமையாக, சுவாரசியமாகத் தமிழில் எழுத சுஜாதா தமிழ் தவிர வேறே மார்க்கம் கிடையாது. சுஜாதா மாதிரி எழுதறான் என்று இசையும் வசையும் எனக்குக் கிட்ட என் கம்ப்யூட்டர் கட்டுரைகளும் அறிவியல் புனைகதைகளும் முக்கிய காரணம். சிறுகதை, நாவலில் சுஜாதா தொடாத மேஜிக்கல் ரியலிசம், காலம் ஒரு பரிமாணமாகக் கதை சொல்வது என்று நான் சுஜாதைவை விட்டு விலகியே நடக்கிறேன். அரசூர் வம்சம் வெளிவந்தபோது அவர் இருந்தார். நாவலை ரசித்ததோடு, தான் தயாரித்த சிறப்பு குமுதம் ஒன்றில் அதிலிருந்து ஒரு முழு அத்தியாயத்தைப் பிரசுரித்து, தமிழில் வாழையடி வாழையாக முன் தலைமுறை எழுத்தை உள்வாங்கிக் கொண்டு முகிழும் உரைநடைக்கு அந்த எழுத்தை உதாரணம் காட்டியிருந்தார். அந்தப் பெருந்தன்மையும் அன்பும் அவரைத் தவிர வேறு யாரிடமும் தென்பட்டதில்லை. அவர் மகான். நிச்சயமாக.
.

6. இன்றைக்கு தமிழகத்தின் நகரமெங்கும் புத்தகக் காட்சிகள் நடக்கின்றன. சில நூல்கள் நன்கு விற்கின்றன. ஆனால் வாசிப்பவர்களின் சதவீதம் குறைவாகவே உள்ளது. குறிப்பாக இளைஞர்களிடம் வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. காரணம் என்ன, வாசகப் பரப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டியதென்ன?

நானும் ஒவ்வொரு வருடமும் மார்ச் தொடங்கி டிசம்பர் வரை இப்படித்தான் வாசிப்பு குறைந்து போனதாக நினைக்கிறேன். ஜனவரியில் சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகம், அதுவும் தமிழ்ப் புத்தகம் வாங்க அலை மோதும் கூட்டத்தைப் பார்த்த பிறகு கருத்தை வெகுவாக மாற்றிக் கொள்கிறேன். பிப்ரவரியில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷல் நெட் ஒர்க்கிங் தளங்களில் வாங்கிய புத்தகங்கள், படிக்க எடுத்த புத்தகங்கள் என்று ஆளாளுக்குப் பட்டியல் போடுவதைப் படிக்க, அடுத்த தலைமுறை வாசிப்பைக் கைவிடவில்லை என்று நிச்சயம் செய்து கொள்கிறேன். மார்ச் மாசத்தில் அவர்கள் எல்லோரும் புத்தகங்களை அலமாரியில் வைத்து விட்டு பார்க்க வேண்டிய சினிமா, பின் பற்ற வேண்டிய அரசியல் தலைவர் என்று உணர்ச்சிகரமாக விவாதிக்கும் போது அடுத்த ஜனவரிக்காக காத்திருக்க ஆரம்பிக்கிறேன். படிக்கிற பழக்கம் இன்னும் அதிகமாக, ஜப்பான் போல் இங்கும் கிராபிக் நாவல் – சித்திரக் கதை – புத்தகங்களில் சிரத்தை செலுத்தலாம். முகமூடியும் இரும்புக்கை மாயாவியும் இந்திரஜால் காமிக்ஸுமாக இளையவர்களுக்கு மட்டுமில்லை கிராபிக் நாவல். கொஞ்சம் முயன்றால் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் நேர்த்தியான படக் கதையாகலாம்.

7. பத்திரிகைகள் இன்று நாவல், சிறுகதைகளை அதிகம் பிரசுரிப்பதில்லை. படைப்பிலக்கியம் குறைந்துவிட்டதா? அவற்றை வாசிப்போர் குறைந்துவிட்டனரா?

பத்திரிகைகள் எந்தக் காலத்திலும் நாவலைப் பிரசுரித்ததில்லை. தொடர்கதைகள் தாம் மும்முரமாக வாசிக்கப்பட்டன. ஜெயகாந்தன், ஜானகிராமன் எழுதிய சில தொடர்கதைகள் தொகுப்பு வாசிப்பில் நாவலும் ஆனது தற்செயலானதே. சிறுகதைகள் வார, மாதப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப் படுவது குறைந்து விட்டது உண்மைதான். பத்திரிகை வடிவம் மாறிக் கொண்டே வருவது இதன் முக்கிய காரணம். எந்த விஷயம் பற்றியும் மூன்று நிமிடத்துக்கு மேல் பார்வையைப் பிடித்து இழுத்து நிறுத்த முடியவில்லை. தொலைக்காட்சி சேனல்களை மாற்றி மாற்றிப் பார்க்கும் காட்சி சார்ந்த அனுபவம் அச்சு ஊடகத்துக்கும் கடந்து விட்டது. சிறுகதைகளின் இடத்தைக் கட்டுரைகள் பிடித்துக் கொண்டு விட்டன. நாவலும், கட்டுரையும் அடுத்தடுத்து எழுத மகிழ்ச்சியாக இருக்கிறது. நாவலும் சிறுகதையும் அடுத்தடுத்து எழுதுவது கொஞ்சம் சிரமம். நான் மாட்டேன்.

8. உங்கள் படைப்புகளின் அடிநாதமாக விளங்கும் அரசூர், அம்பலப்புழை ஆகியவை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

அரசூர் என்ற பெயரில் சிவகங்கை, திருவாடானையை அடுத்து இருக்கும் அழகான ஒரு கிராமம் என் பூர்வீக மண்ணாகும். ஆனால் என் கதைகளில் வரும் அரசூர் அது இல்லை. என் நினைவில் படிந்த சிவகங்கையும், நாட்டரசன்கோட்டையும், மதுரையும், பரமக்குடியும், வில்லிப்புத்தூரும் என் கற்பனையும் கலந்த என் சொந்த மால்குடி அது. அம்பலப்புழை என் வேர்களின் ஊர். கேரள மாநிலத்தில் குட்டநாடு பிரதேசமாக ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள கடலோரச் சிறுநகரம் அது. தகழியும், ஹரிப்பாடும், நெடுமுடியும் கூப்பிடு தூரத்தில் அமைந்த, ஸ்ரீகிருஷ்ணன் அம்பலம் நிறைந்து நிற்கும் ஊர். என் அரசூர் நாவல்களில அம்பலப்புழை கிருஷ்ணன் வராமல் இருந்ததில்லை.

9. இளம்படைப்பாளிகள் பற்றி உங்கள் கருத்தென்ன?

போன தலைமுறைகளின் படைப்பாளிகள் கூறத் தயங்கிய விஷயங்களையும் துணிச்சலாகக் கையாள இவர்களுக்குக் கை வரும் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பேஸ்புக்கில் குழுச் சண்டைகளில் இருந்து ஒதுங்கி இருந்தால் போதும். நிறைய சாதிக்கலாம்.

10. மலையாளத்திலிருந்து குறிப்பிடத் தகுந்த படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளீர்கள். இன்னும் எவற்றைக் கொண்டுவரும் எண்ணமுள்ளது?

சேதுவும் சாரா தாமஸும் தமிழில் இன்னும் அதிகம் அறியப்பட வேண்டியவர்கள். அது போல் மலையாள மரபு இலக்கியமும் தமிழுக்கு வரவேண்டிய அவசியம் உண்டு. தொன்மத்தைக் கொண்டாடும் கொட்டாரம் சங்குண்ணியின் ‘ஐதிஹ்ய மாலை’யும். அப்புறம் இன்னொன்று – வைக்கம் முகம்மது பஷீர் கதைகளை ஓர் அன்பர் முரட்டடியாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பஷீரின் கதை மொழி இப்போது தமிழில் வந்திருப்பது போன்றது இல்லை. மறு மொழிபெயர்ப்பு அவசியம்.

11. வணிக இலக்கியம், தீவிர இலக்கியம் என்ற வரைகோடு இருப்பது உண்மைதானா?

தீவிர இலக்கியத்துக்கு ஆயிரம் வாசகர் அதிகரித்ததும் வணிகமாகிறது. தீவிர இலக்கியம் என்றால் புரியாமல் எழுதுவது, வணிக இலக்கியம் என்றால் கற்பனைக்கு இடமே வைக்காமல் எட்டாம் வாய்ப்பாடு போல் எழுதுவது என்று நான் எப்போதுமே வரையறைகள் வைத்துக் கொள்வதில்லை.

12. பத்திரிக்கை, திரைப்படம் இரண்டிலும் வெற்றிகரமாக இயங்குபவர் நீங்கள். இரண்டுக்கும் இடையே என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்?

நண்பர் கமல் ஹாசன் சொல்வார் – ’தமிழ் எழுத்தாளர்கள் அவர்களின் இலக்கியத் தடத்தின் நீட்சியாகத் திரைப்படத்தை நினைக்கிறார்கள். நல்ல நாவலாசிரியர் சிறந்த திரைக்கதையாளராவது அபூர்வம். இரண்டும் வெவ்வேறு விதம் என்பதை ஒத்துக் கொள்வதில் பொதுவான தயக்கம் தெரிகிறது’. அவர் சொல்வது உண்மை. நான் திரைக்கதை எழுத அமரும்போது அந்த வடிவத்தை மட்டுமே கவனத்தில் வைக்கிறேன். தொடர்ச்சி குறைந்த, நுணுக்கமான பார்வை அடிப்படையிலான காட்சிகளாக நிகழ்வை நடத்திப் போவது அது. என் முதல் திரைக்கதை எழுதுவதை இலக்கியத்தில் கால் பதித்து வெகு காலம் சென்று, கமல்ஹாசன் என்ற தேர்ந்த திரைக்கதாசிரியரிடம் தான் கற்றேன் என்பதைச் சொல்வதில் எனக்குப் பெருமையே. திரைப்படம் நான் படைப்பு மூலம் தொடர்பு கொள்ளும் வட்டத்தைப் பெரிதாக்குகிறது. இந்த வட்டத்தில் என் எழுத்தைப் படித்தவர்கள் சிறுபான்மையே.

13. கமலுடன் உங்கள் அனுபவம் பற்றி….?

இனிமையான நட்பாகத் தொடர்வது அது. காலையில் வெண்பாவாக, மதியம் ரசித்த ஆங்கில நூலில் ஒரு வாக்கியத்தைப் பகிர்ந்து கொள்வதாக, சமயத்தில் இரவில் எழுப்பி, அன்று ஏற்பட்ட ஒரு சிறிய அனுபவத்தைப் பங்கு போட்டுக் கொள்வதாக அமைந்தது அது. சில நேரம் வாரக் கணக்கில் தொடர்பே இல்லாமல் இருந்து விட்டு அடுத்த உரையாடல், முன்னால் விட்ட இடத்தில் இருந்து தொடரும். கமல் அவர்களைப் போல் எனக்குக் கிடைத்த இன்னொரு நெருங்கிய நண்பர் க்ரேஸி மோகன். பைரப்பாவின் கன்னட நாவலான பருவத்தையும், காளிதாசனின் குமார சம்பவத்தையும், ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றையும் மோகன் சொல்லாமல் படித்திருக்க மாட்டேன். படித்து அறிந்து நட்புக் கொண்ட வகையில் ’பிஏகே அண்ணா’ (புலிநகக் கொன்றை நாவலாசிரியர் பி ஏ கிருஷ்ணன்) கமல், மோகன், நான் என்ற மூவருக்குமே நெருங்கிய நண்பராகிவிட்டார்.

14. இன்றைக்கு இலக்கிய விமர்சனம் என்பது மிகக் குறைந்துவிட்டது. ஒரு எழுத்தாளர் சக எழுத்தாளர்களின் நூல்களைப் படிப்பதில்லை, விமர்சிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதைப்பற்றி நீங்கள் கருதுவது என்ன?

சில புத்தகங்களைப் படிக்கும் போது அவற்றை எழுதியவரே தான் எழுதியதைப் படித்ததில்லை என்று தோன்றுகிறது. இது என்னுடைய இலக்கிய விமர்சனமா என்று கேட்காதீர்கள். சக எழுத்தாளர்களின் நூல்களைப் படிக்கலாம். விமர்சித்தால் பலருக்குப் பிடிப்பதில்லை. என்னையும் வேண்டுமானால் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.

15. அண்மையில் ‘ஸ்ரத்தா’ குழுவினர் உங்கள் மூன்று நாடகங்களை அரங்கேற்றினர். மேடை நாடக அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்.

மேடை நாடகம் ஒரு குழு சார்ந்த முயற்சி. ‘ஆழ்வார்’, ‘சிலிக்கன் வாசல்’, ‘எழுத்துக்காரர்’ என்ற என் மூன்று கதைகளை நாடகமாக்கும் போது அந்த கலை வடிவத்துக்கு எழுதும் நுட்பம் பிடிபட்டது. எழுதியதை ஒத்திகை பார்க்கும்போது அங்கங்கே மாற்றி எழுத வேண்டிய கட்டாயம். உரையாடல்கள் கூர்மையாக இருப்பதும், காட்சியில் யார் யார் பங்கு கொள்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று கவனம் வைப்பதும் நாடக எழுத்து முயற்சிகளை சுவாரசியமாக்குகின்றன. அரங்கு அமைப்பு, நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பு நாடகங்களை வெற்றி பெறச் செய்கின்றன. ஷ்ரத்தா குழு அப்படியான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. முழுமையான பாராட்டை எதிர்கொண்டோம். நாலே காட்சி மட்டும் அந்த வெற்றியைக் கொண்டாடி விட்டு ஓய்ந்து போவது தான் என்னைப் பொறுத்தவரை மகத்தான சோகம். அதனால் தளர்ந்து விடாமல், ‘சாவடி’ என்ற பெயரில் முதல் உலகப் போர் நேரத்தில் ஜெர்மானியப் போர்க் கப்பல் எம்டன் சென்னைத் துறைமுகத்தில் குண்டு வீசிய இரவை மையமாக வைத்து அடுத்த நாடகம் தயார்.

16. எழுத்துலகில் சாதித்தாயிற்றா? சாதிக்க வேண்டியது உள்ளதா?

சாதிக்க வேண்டி உள்ளது, சாதித்தாயிற்று என்ற இரண்டுமே நாமாக ஏற்படுத்திக் கொண்ட மனநிலை. நான் சாதிக்க முயன்று கொண்டே இருக்கிறேன்.

(நன்றி திரு மதுரபாரதி, அரவிந்த் சுவாமிநாதன்)

கேசவ் – கிருஷ்ணன் – மூன்று மணி நேரம்

ப்ரிவாதினியில் நண்பர் ஓவியர் கேஷவ் சொற்பொழிவு – LecDem on ‘My Experiments with Krishna’.

அந்நியோன்யத்தின் மறு பெயர் கேசவ். அடக்கத்துக்கும் அவர் முகவரிதான்.

காலையில் ஹிந்து பத்திரிகையில் கேசவின் அரசியல் கார்ட்டூனைப் பார்ப்பதில் பாதிப் பொழுது விடிகிறது என்றால், ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் அவருடைய ‘அன்றைய கிருஷ்ணா’ ஓவியத்தை தரிசிக்கும்போது காலை நிறைவாகத் தொடங்குகிறது நம்மில் பலருக்கும். ஒருநாள் கேசவ் ஓவியம் மேலே கூறிய சமூக வலைத் தளங்களில் வரவில்லை என்றால் காலை நேரத்துக் காப்பியைத் தவறவிட்ட ஏமாற்றம்.

பாரம்பரிய ஓவியக் கலையை இணையத் தொழில் நுட்பத்தைக் கைக்கொண்டு ஒரு பெரிய நண்பர் கூட்டத்துக்கு தினமும் போய்ச் சேர வைக்கிற மக்கள் ஓவியர் அவர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோற்றத்தில் கிருஷ்ணன். இந்திய, ஜப்பானிய, சீன, ஆப்பிரிக்க, மேற்கு திசை வரைகலை மரபுகள், சமகாலத் தன்மை, அப்ஸ்ட்ராக்‌ஷன் என்று ஓவியம் சம்பந்தமான சகல விதமான பரிசோதனைகளையும் இந்திய ஓவிய, காவிய, புராண மரபில் அழுத்தமாகக் காலூன்றி வெகு இயல்பாக நிகழ்த்துகிறவர் கேசவ். ஒரு முறையோ சில முறையோ அல்ல, தினம் தினம்.

ஆயிரக் கணக்கான நண்பர்களுக்கு அவருடைய ஓவியப் பரிச்சயம், ‘கடவுள் படம் போடறார்’ என்பதில் ஆரம்பித்து அவரோடு கூடப் படைப்பில் ஆழ்ந்து ஓவியப் பயணம் மேற்கொள்வதில் முடியும். அவருடைய ஓவியங்கள் நம்மோடு பேசுகிறவை. மரபார்ந்த புரிதலை சில படிகள் மேலே உயர்த்துகிறவை. கேள்வி கேட்கிறவை. பதிலை நம்மையே கண்டடையச் செய்கிறவை.

அதற்கு அவர் பார்வையாளனைத் தயார்ப் படுத்துவது மிக்க அன்பும் கவனமும் எடுத்து. எந்த சிரமமும் பார்வையாளனுக்குத் தராமல், நோகாமல் நோன்பு நூற்க வைக்கும் ஆற்றல் அது.

அர்ஜுனனுக்கு கண்ணபிரான் விசுவரூப தரிசனம் காட்டித் தரும் காட்சி என்றால் ஒரு நாள் அஜந்தா பாணி அல்லது ரவி வர்மா அதுவுமில்லை என்றால் ரெம்ப்ராண்டின் படிமங்களை உள்வாங்கி ஒரு ஓவியம் முதலில் வரும். அதில் அர்ஜுனன், கண்ணன், போர்க் களம், ரதம், குதிரைகள் என்று காட்சியை விளக்க எல்லாமே இருக்கும். அடுத்து தத்ரூபமாக சித்தரிக்கும் ’anatomical symmetry’யை விட காட்சி அனுபவத்துக்கு முக்கியத்துவம் தரும் இந்திய மரபு பாணியில் அர்ஜுனனின் வியப்பிலும் ஆனந்ததிலும் விரிந்த விழிகள் முகத்தில் முதன்மையாகப் பரவி நிற்க, கண்ணனின் கழல்கள் எதிரே முக்கியப்படுத்தப் படும். சில படங்கள் கடந்தபின் ஒரு கோட்டோவியம். அர்ஜுனன் மண்டி போட்டுத் தலை நிமிர்த்தி முன்னால் பார்த்துக் கொண்டிருப்பான். ரதம் எங்கே? குதிரைகள் எங்கே? கண்ணன் தான் எங்கே? ஓவியத்தை நம் மனதில் முடித்துக் கொள்ள விட்டு விட்டு கேசவ் காத்திருப்பார் நம் புரிதலிலும் ரசனையிலும் முழு நம்பிக்கை வைத்து.

ஒரு நல்ல ஓவியன் இப்படித்தான் அந்த அற்புத நுண்கலையை வெகுஜன அரங்குக்கு வெற்றிகரமாக எடுத்துப் போக முடியும்.

கேசவ் போல்.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி அம்பலத்தில் நிலவறை நிலவறையாகத் திறக்க பொன்னும் மணியுமாகக் குவிந்திருந்து வெளி வருவது போல் சொற்பொழிவுக்காக ‘விண்டோஸ் பிக்சர் வியூவ’ரில் ஃபோல்டர் ஃபோல்டராக கேசவ் திறக்க அவருடைய ஓவியங்கள் நிறைந்து தளும்பிக் காட்சிக்கு வருகின்றன.

காமிராவில் படம் பிடித்து டிஜிட்டைஸ் செய்து இப்படி கம்ப்யூட்டரில் சேமித்திருக்கும் ஓவியங்கள் கேசவ் வரைந்த மொத்த ஓவியங்களில் பாதி கூட இருக்குமா என்பது சந்தேகமே. என்றாலும் இதுவே கிட்டத்தட்ட ஐநூறு ஓவியங்களாவது வரும்.

கேசவ் சொன்னார் -

தினசரி கிருஷ்ணனை வரைவேன். சில நாள் ஒன்றுக்கு மேற்பட்ட ஓவியங்கள். சில நாள் ஒன்றே ஒன்று. இன்னும் சில நாள் அதுவும் இல்லை.

ஒரு முன்மாதிரிப் படம் போட்டு வைத்து விட்டு வரைகிற பழக்கம் இல்லை. அந்த நிமிடம் மனதில் தோன்றுகிற வடிவம், பாணி, வரை பொருள், வரையும் முறை – அக்ரெலிக் ஆன் கான்வாஸ், வாட்டர் கலர், சார்க்கோல் என்ற கரி உருவம், கோட்டோவியம், சீன மேட் (மூங்கில் திரை) ஓவியம், கேரள பஞ்ச வர்ண ஓவியம்.. எதுவுமே முன்கூட்டி திட்டமிடப்படுவதில்லை.

ராமாவதாரத்தில் தான் முதலில் ஆழ்ந்திருந்தேன். அனுமனின், வீடணனின் சரணாகதி என்னை நெக்குருக வைத்த காவிய நிகழ்வுகள்.

அனுமன் சரணாகதி ஓவியங்களில் அந்த வாயு புத்திரன் முதுகு வளைந்து ராமன் தாள் பற்றிக் குனிந்திருப்பது அன்னையின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆதரவற்ற, வேறு பாதுகாவல் ஏதுமற்ற பரிபூரணமாக சார்ந்து இருக்கும் நிலை. தான் என்ற அகம்பாவம் போகும்போது அந்த ச்ரணாகதி மனோநிலை வரும்.

ராமாவதாரத்தில் இருந்து கிருஷ்ணாவதாரத்துக்கு வந்தபோது அந்த சரணாகதித் தத்துவமும் கூடவே வந்தது. கோவர்த்தன கிரி உயர்த்திய நிகழ்ச்சியில் பிரம்மன் பணிவதும், அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மர் மகாபாரதப் போர்க் களத்தில் கண்ணன் தன் மடியில் கிடத்திக் கொண்டு நோக்க, உளமும் உயிரும் நெகிழ்ந்து பார்ப்பதும் சரணாகதியின் வெவ்வேறு விதமான வெளிப்பாடுகள்.

கண்ணன் சங்கின் ஒரு முனையை வாயில் வைத்தபோது குழந்தையாகிறான். அன்னை யசோதை மடியில் கிடத்தி, அன்போடு வற்புறுத்தியும், செல்லமாக மிரட்டியும் பாலூட்டும் மழலை. அதே கண்ணன், சங்கின் மறு முனையை வாயில் வைத்தபோது அது பாஞ்ஜசன்யம். போர்க்களத்திலும் நல்லோரைக் காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் கம்பீரமாக நிறைந்து ஒலிக்கும் நாதம் அது.

கர்னாடக இசையைக் கேட்டபடி வரைந்த கண்ணன் படங்களில் அந்த இசையின் பாதிப்பு தெரியும். சச்சின் சாயலில் கூட ஒரு கண்ணன் உண்டு – விளையாட்டுப் பிள்ளை அவன். (யமஹா) கீபோர்டில் கால் பாவ நிற்கும் கிருஷ்ணனும் வரையும் விரல்களிலிருந்து விகசித்துப் புன்னகைக்கிறவன்.

கார்ட்டூனிஸ்ட் கேசவ் உலக, தேசீய அரங்கில் அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கி வெளிப்புறமாக விரல் சுண்டுகிற, கேலிச் சித்திரமாக விமர்சனம் வைக்கும் படைப்பாளி. கிருஷ்ண கேசவ் மனதின் உள்ளே விரல் சுண்டி அகப் பயணம் போனபடி இருக்கிற, ஓவியத்தின் மூலம் அனுபூதி அடைய, பகிர்ந்து கொள்ள முயன்றபடி இருக்கும் கலைஞன். கற்ற ஓவியக் கலையே இருவருக்கும் பொதுவான அடிப்படைத் திறமை.

மூன்று மணி நேரம் கேசவ் பேசினார். அவர் ஓவியங்கள் இன்னும் பேசுகின்றன.

மணி ஐயருக்கு சாதம் போட்ட பெர்னாந்து

பரிவாதினி ‘பர்னாந்து’ விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. லலிதாராம் எதிர்பார்த்தபடி முதலில் கண்ணில் பட்டு வழக்கமான அன்பும் உற்சாகமுமாக வரவேற்றார்.

பர்னாந்து விருது – மிருதங்கம் உருவாக்கும் கலையில் விற்பன்னராக இருக்கும் குடும்பத்தில் போன தலைமுறை சாதனையாளார் காலம் சென்ற திரு பர்னாந்து என்ற பெர்னாண்டஸ். அவருடைய தகப்பனார் செவத்தியான் என்ற செபாஸ்டியனிடம் கற்று வழிவழியாக வரும் உருவாக்கக் கலை. பரிவாதினி இன்று விருது வாங்கி கவுரவித்தது பர்னாந்துவின் மகனான மிருதங்க உருவாக்கக் கலைஞர் திரு செல்வம் அவர்களுக்கு.

மூத்த இசைக் கலைஞர் திரு டி.கே.மூர்த்தி ‘பெர்னாந்து சாதம் வச்சா அப்புறம் பத்து நாள் சாதம் வேணாம்’ என்று சொன்னதை இசைப் பிரியர்கள் அல்லாதோர் கேட்டிருந்தால் பெர்னாந்துவை பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதன் போல, மூர்த்தி அவர்களுக்குத் தலைவாழை இலை போட்டு பொலபொல என்று பொன்னி அரிசி வடித்து பத்து கறி, பாயசம, பப்படம், அவியலோடு விருந்து போட்டதாக உருவகித்திருப்பார்கள். மூர்த்தி சார் சொன்னது மிருதங்கத்துக்கு ‘சாதம்’ வைத்துத் தயார்ப் படுத்துவதை.

‘அந்த மிருதங்கத்தை வாசிச்சே பார்க்க வேண்டாம். கச்சேரிக்குப் போய் உட்கார்ந்து சாப்பு வச்சா கனகச்சிதமா இருக்கும்’.

மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயரின் புதல்வர் திரு பாலக்காடு ராஜாராம் extempore சொற்பொழிவு பிரமாதமாக இருந்தது. இசைக் கலைஞர்களுக்கும் பர்னாந்து போன்ற ‘தொழில் நுட்ப’க் கலைஞர்களுக்கும் இருந்த – இருந்து வரும் ஒரு delicate equation, பரஸ்பர possessiveness எல்லாம் தெரிய வந்தது.

பேசிய இசைக் கலைஞர்கள் எல்லோருக்கும் பெர்னாந்துவோ செல்வமோ மிருதங்கம் மூலம் நெருக்கமானவராக இருந்ததால் / இருப்பதால், ஒரு நல்ல நண்பரைக் குறிப்பிடும் விதமாக ‘அவன்’ விளிதான். அந்த உருவாக்கும் சிற்பிகளுக்கும் இந்தக் கலைஞர்களோடு சரிக்கு சரி நின்று மோதி வேடிக்கை பார்க்கும் நட்பு இருந்திருக்கிற்து.

ராஜராம் சொன்னார் – செல்வம் உருவாக்கிக் கொண்டு வந்து கொடுத்த மிருதங்கத்தில் ஒலி திருப்திகரமாக இல்லை என்று ஏழெட்டுத் தடவை திருப்பி விட்ட பிறகு செல்வம் ஒரு மிருதங்கத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். வாசித்தால் வித்தியாசமான ஒலி. இதென்ன என்று கேட்டால் அவர் சொல்ல மாட்டேன் என்கிறார். ரொம்பக் கேட்டதும் சொன்னது – வழக்கமில்லா வழக்கமாக பன்றித் தோலில் செய்ததாம் அது.

பத்து தடவை உருவாக்கின மிருதங்கத்தைத் திருப்பி விட்டால் அவருக்குக் கோபம் வராமல் என்ன செய்யும் என்று ராஜாராம் சொல்லும் போது ஒரு அந்நியோன்யம் தெரிந்தது என்றால் ஓரமாக உட்கார்ந்திருந்த செல்வம் முகத்தில் நாணத்தோடு ஒரு சிறு புன்னகை. ரசமாக காட்சி.

நண்பர்கள் கவிஞர் ரவி சுப்பிரமணியன், அருண் நரசிம்மன் மற்றும் லலிதாராமின் பெற்றோர்கள் ஆகியோரை சந்தித்துப் பேச வாய்த்தது. ஹிந்து பத்திரிகை கோலப்பனையும்.

அருண் தினமலரில் எழுதும் இசை விழா கட்டுரைகளை இனிமேல்தான் படிக்க வேண்டும்.

கோலப்பன் அசல் நெல்லை மனுஷர். நண்பர் ஜெயமோகனோடுஅண்மையில் ஒரு பிறந்த நாள் விழாவில் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார் -’கோலப்பன் சென்னையில் இருந்தாலும் , மனசெல்லாம் நெல்லையில் தான்.. இன்னிக்கு கோவில்லே கொடை.. வில்லுப்பாட்டு நடக்கிற நாள்.. இப்படி’. சரியாகத்தான் சொன்னார்.

கோலப்பனிடம் ஒரு சேஞ்சுக்காக இலக்கியம் பேசிக் கொண்டிருந்தேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேளாள – பிராமண சமூக உறவு, ’ இரட்சண்ய யாத்திரீகம்’ ஹென்றி கிருஷ்ண பிள்ளையின் ‘கிருஷ்ண பிள்ளை கிறிஸ்துவன் ஆனது’ ( தமிழில் முதல் வாழ்க்கை வரலாற்று நூல் 1880-கள்), ‘சிறுகதை எழுதாதீங்கன்னு ஒரு பதிப்பாள நண்பர் சொன்னார்.. ஒவ்வொரு சிறுகதையையும் வளர்த்திப் போனால் நாவலாயிடும்’.. இப்படி.

அருண் நரசிம்மன் அதே பதிப்பாளரைப் பற்றிச் சொன்னது – அறிவியல் புத்தகம் எழுதிக் கொடுத்தால் படிச்சுட்டு சொன்னார் : சுஜாதா, இரா.முருகன் பாணியா இருக்கே..

என்ன செய்ய, அறிவியலை அப்படி எழுதினால் தான் படிக்க வாகாக இருக்கு.. தி இந்து போன வாரம் வந்த கட்டுரைக்கு எதிர்வினை இதை உறுதி செய்கிறதால், நம்ம அறிவியல் கட்டுரையில் நடை மாற்று செய்ய உத்தேசம் இல்லை..

நண்பர் சுகாவைத் தான் காணோம்.
————————————

டி எம் கிருஷ்ணா சங்கீத சாகரம் தான்.

முகத்தில் தெரிந்தது restlessness இல்லை. நிறைய விஷயஙக்ளை ஒரே நேரத்தில் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

சட்டென்று கரகரப்ரியாவில் தொடங்கி, ஒரு விஸ்தாரமான சக்கனி ராஜா. அவ்வப்போது இசையோடு அவர் உதிர்க்கும் ஆஹா பக்க வாத்தியக்காரர்களுக்கு மட்டுமில்லை, தனக்கும் தான்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் சக்கனி ராஜா பவனி வந்த பிறகு ‘இதோட முடிஞ்சுத்துன்னு நினைக்க வேணாம்’ என்று சொல்லி விட்டு இன்னும் கொஞ்சம்…

‘கீழே வாங்க,’ – சாரங்கா கடந்து யமுனா கல்யாணிக்கு வரும்போது வயலின் ஸ்ரிராம் குமாரிடம் கேட்கிறார். ’பஞ்சமம்’ – பின்னால் தம்புரா வாசித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சொல்லி விட்டு, திருப்தி ஏற்படாமல் தானே தம்புராவை வாங்கி மீட்டித் தருகிறார்.

வயலினின் ’இறங்கி வந்த’ இசைப் பெருமழையில் நனைந்து சிலிர்த்தபடி, ‘ஊஹும், நான் பாடி நீங்க வாசிக்கக் கூடாது.. நீங்க வாசியுங்க.. நான் அப்புறமா கலந்துக்கறேன்’.

ஒரு வினாடி தயங்கி விட்டு, கிருஷ்ணா நீ பேகனே பாரோ தனி வயலின் நாதமாகத் தொடர்ந்தது. பத்து நிமிடத்தில் ‘ஜகதோதாரணா, உடுப்பி ஸ்ரீக்ருஷ்ணா’ என்று டி எம் கிருஷ்ணா குரலும் சேர, தனி அழகோடு பூர்த்தியானது.

ஆற்றொழுக்கு மாதிரி கமாஸ் RTP ராகம் தானம் பல்லவி. பிரதானமானதே மனித நேயமே என்று பல்லவி.

முடித்து ராகம் இழுத்தார். ஹரிகாம்போதி போல இருந்தது. எனக்கு மட்டும் அப்படித் தோன்றியதா தெரியவில்லை. ‘நான் என்ன பாடறேன்னு எனக்கே தெரியலே’ பாதி நகைச்சுவையாக அவர் சொல்ல, தயங்கி விட்டு ரசிகர்கள் சிரிக்கிறார்கள். ‘என்ன ஆச்சு இந்தப் பிள்ளைக்கு . யார் கண்ணோ பட்டுடுத்து போலிருக்கு’ – பின் வரிசையில் ஒரு மாமி சொல்கிறார். அவர் சொல்லி முடிக்கும் முன் அடுத்த சுநாதப் பிரவாகம் – பாகேஸ்ரீ.

டி எம் கிருஷ்ணா பாடிக் கொண்டே இருக்கட்டும். பாடிக் கொண்டு மட்டும் என்று சொல்ல நமக்கு உரிமையில்லை…
————————–

பெருந்தகவல்

பெருந்தகவல் (Big Data)
- இரா.முருகன்

—————————————————————-

பென்சில். அதை வைத்து துண்டு காகிதத்தில் அவசரமாகத் தொலைபேசி எண் எழுதி வைக்கலாம். ஆயிரத்து முன்னூற்று எண்பத்தெட்டை அறுபத்தேழால் பெருக்கினால் என்ன எண் வரும் என்று அதே காகிதத்தில் மிச்ச இடம் இருந்தால் கணக்குப் போட்டுப் பார்க்கலாம். படிக்கிற புத்தகத்தில் பிடிக்கிற இடங்களைக் கோடு போட்டு அலங்காரமோ அலங்கோலமோ படுத்தலாம். முனை மழுங்கினால் சீவலாம். காணாமல் போனால் இன்னொரு பென்சில் வாங்கலாம்.

பென்சிலை வைத்துச் செய்யக் கூடியவை இவை எல்லாம். பென்சிலைப் பற்றிச் செய்ய என்ன உண்டு?

தகவல் சேர்க்கலாம். புதிதாக எடுத்த பென்சிலை வைத்துக் கோடு இழுத்துக் கொண்டே போனால், பென்சில் முழுவதும் கரைவதற்குள் 35 மைல் கோடு இழுத்திருப்போம். நிலவுக்குப் போகும்போது புவி ஈர்ப்பு இல்லாத காரணத்தால் பேனாவில் மசியின் ஓட்டம் தடைப்பட்டு எழுத முடியாமல் போகலாம். பென்சிலுக்கு அந்தப் பிரச்சனை இல்லை. நாமும் அந்தரத்தில் மிதந்து பென்சிலும் மிதந்தால் கூட இழுத்துப் பிடித்துப் பறந்தபடியே புதுக்கவிதை எழுதலாம். இன்னும் உலகின் பழைய பென்சிலின் படம், காந்தி பயன்படுத்திய பென்சில். பென்சில் பற்றி யாரோ தலைவர் எப்போதோ பேசியதன் ஒலிப்பதிவு, நேற்று குழந்தைக் கவிஞர் எழுதிய ‘இளம் வயதில் உயரமாக இருந்து, வயதானால், சீவிச் சீவிக் குள்ளமான பென்சில்’ பற்றிய பாட்டு.. தகவல் சேகரிப்புக்கு பென்சில் நீளமே எல்லை. அதுவும் கடந்து வானமே எல்லை.

பென்சில் மட்டுமிலலை, ஒவ்வொரு பொருள், மனிதர்கள், நிகழ்ச்சி, அறிவியல் ஆய்வு, பொருளாதாரம், வங்கித் தொழில், வணிகம், கர்னாடக சங்கீதம், கானா பாட்டு இப்படி சகலமானது பற்றியும் சேகரித்து வைத்துப் பகிர்ந்து கொள்ளத் தகவல் நிறைய உண்டு. காலத் தேர் முன்னோக்கி உருள உருள, தகவல்கள் கூடிக் கொண்டே போகின்றன. தலைப்புகள் முளைத்தபடி இருக்கின்றன.

எல்லா அலுவலகத்திலும் இருக்கப்பட்ட மனித வள மேம்பாட்டுத் துறையை எடுத்துக் கொள்வோம். அந்த அலுவலகத்தில் பணிபுரியும், பணி புரிந்த, வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள் எல்லோரைப் பற்றியும் பெயர், விலாசம், புகைப்படம், கல்வித் தகுதி, வேலை, ஊதியம் என்று தொடங்கி, ஏகப்பட்ட தகவல்கள் கணினித் தகவல் தளத்தில் (டேட்டாபேஸ்) சேகரித்து வைக்க வேண்டும். மாதாந்திர சம்பளப் பட்டுவாடாவில் இருந்து எத்தனையோ அலுவலகப் பணிகளுக்கு இப்படிச் சேமித்த தகவலைப் பயன்படுத்த நேரும்.

இருபது வருஷம் முன்பு அலுவலகத்தில் ஒரு கம்ப்யூட்டரிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் இணைந்த வலைப் பின்னலிலோ இப்படியான மனித வளத் துறை தகவல்களை சேர்த்து வைத்து, பயன்படுத்தலாம். மிஞ்சிப் போனால் ஒரு கிகாபைட் அளவு தகவல் மொத்தமாக. ஆரக்கிள், சைபேஸ், எஸ்க்யூஎல் செர்வர் இப்படியான தகவல் பரப்பு, அதை இயக்க மென்பொருள் கொண்டு இந்தத் தகவலை சுளுவாக நெறிப்படுத்தி சம்பளப் பட்டியலோ, தீபாவளி போனஸ் கணக்கோ போடலாம். வாழ்க்கையும் கணக்கும் சிக்கல் குறைந்து இருந்த காலம் அது.

இன்றைக்கு மனித வளத் துறைக்கு அடிப்படைத் தகவல் மட்டும் போதாது. புதிதாக வேலைக்கு சேர்ந்த ஊழியர் அளிக்கும் கல்விச் சான்றிதழ் உண்மையிலேயே சான்றிதழில் இருக்கும் பல்கலைக் கழகம் அளித்ததா, அப்படி ஒரு பல்கலைக் கழகம் இருக்கிறதா, அவர் முகவரி சரிதானா என்று ஆயிரத்தெட்டு தொடர்புடைய தகவல்களை ‘பின்னணி சரி பார்க்க’ நிறுவனத்தின் கம்ப்யூட்டரில் ஏற்ற வேண்டும். இன்னும் நேர்காணல்களின் வீடியோ பதிவுகள், தொலைபேசிப் பதிவுகள், படமாக்கப்பட்ட சான்றிதழ் பதிவுகள் என்று எத்தனையோ விதமான தகவல்கள் சேகரிக்கவும் பயன்படுத்தவுமான நிலை.

ஆயிரக் கணக்கில் ஊழியர்கள் உள்ள நிறுவனம் என்றால் மெகாபைட், கிகாபைட் எல்லாம் எகிறி, எக்ஸாபைட் அளவில் தான் இத்தனை தகவல் தேவை என்று கணக்கிட முடியும். எக்ஸாபைட்? பத்து பெருக்கல் பத்து பெருக்கல் பத்து பெருக்கல் பத்து என்று பதினெட்டு தடவை பெருக்கிக் கொண்டே போனால் கிடைக்கும் தகவல் துண்டுகள்! ஒரு கம்ப்யூட்டரிலோ வலைப்பின்னலிலோ சேகரித்து ஆரக்கிளும் சைபேஸும் இவ்வளவு தகவலைக் கையாண்டு வேண்டுவ்ன வேண்டியபடி எடுத்துத் தருவது மலையைத் தலைமுடி கட்டி இழுக்கிற பணியாகி விடும்.

பணி விவரத்துக்கே இந்தச் சவாலான சூழல் என்றால், தமிழ்த் திரைப்படங்கள் பற்றி ஒரு தகவல் பரப்பு அமைக்க வேண்டுமானால் எப்படி இருக்கும்? இதுவரை வெளிவந்த ஆயிரக் கணக்கான தமிழ்ப் படங்களில் டிஜிட்டல் வடிவங்கள், இசை, பட உருவாக்கம் பற்றிய தகவல்கள், படத்தை அறிவித்ததுமே போடப்பட்ட வழக்குகள், தீர்ப்பு விவரங்கள், வசூல் விவரங்கள், நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் என்று தகவல் பெருகிக் கொண்டே போகும்.

போக்குவரத்து, பங்குச் சந்தையில் வணிக நடவடிக்கைகள் என்று குறிப்பிட்ட பணிகளுக்கு இப்படி மலையாகக் குவியும் தகவலில் இருந்து விரைவாகவும், சரியான வழியிலும் தேடி, அடுத்த நிமிடம், அடுத்த மணி நேரம், அடுத்த நாள் எப்படி இந்த நடவடிக்கைகள் நிகழும் என்று தர்க்க ரீதியான ஆருடம் கணிக்க வேண்டி இருக்கும். நாம் புழங்கும் சாமான்யமான தகவல், நெறிப்படுத்தல் இல்லை இதெல்லாம். பெருந்தகவல் (Big Data) என்று இதன் சிறப்பு கருதிப் பட்டம் சூட்டி விடலாம்.

பெருந்தகவல் என்பது குறித்து ஒரு வாக்கியத்தில் சின்னஞ்சிறு குறிப்பு வரைக என்று கேட்டால், அதெல்லாம் முடியாது என்று வெளிநடப்பு செய்யாமல் சொல்ல இதோ பதில் – இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் எளிய தகவல் தளங்களில் கையாள முடியாமல், சிறப்பு நடவடிக்கை மூலம் கையாளப்பட வேண்டிய பிரம்மாண்டமான தகவல் அடுக்குகள். இவை அதிவேக உருவாக்கம், அதிகக் கொள்ளளவு, அதிக வகைகள் என்று மூன்று குணாதிசயம் கொண்டவை.

இம்மாதிரி தகவலை உருவாக்க, பிரித்தெடுக்க, தேவையற்றதை நீக்கி சுத்தப்படுத்தி இடம் மாற்ற, சேமிக்க, நெறிப்படுத்த, பொருத்திப் பார்க்க என்று பெருந்தகவல் தொடர்பான சவால்கள் தொடருமே தவிரக் குறையாது.

தினசரி உலகில் வணிக, தொழில், அறிவியல் என்று பல துறை சார்ந்து உருவாகும் தகவல் கிட்டத்தட்ட இரண்டரை எக்ஸாபைட். அதைப் போல் பல மடங்கு தகவலைச் சேமித்து வைக்க கணினி வன்பொருள் சாதனங்கள், இணையத்தில் ஏற்படுத்திக் கொள்ள இயலும் மேகக் கணினிகள், பல இடங்களில் அமைந்து ஒருங்கே இயங்கும் கணினி அமைப்புகள் என்று பல முறைகள் புழக்கத்தில் வந்து விட்டன. இருபது வருடம் முன், நாம் கையில் சில மெகாபைட்கள் கொள்ளளவு கொண்ட ப்ளாப்பிகளோடு அலுவலகங்களில் திரிந்து கொண்டிருந்தோம். இப்போதோ, சட்டைப் பையில் நூறு, இருநூறு கிகாபைட் தகவல் சேகரிக்கும் செருகு தகடுகளோடு (பென் டிரைவ்) நடமாடிக் கொண்டிருக்கிறோம். சேமிப்பு பரப்புக்காகத் தரவேண்டிய விலையும் பத்து மடங்கு விழுந்திருக்கிறது. உலகிலேயே தொடர்ந்து விலை சரியும் ஒரே பொருள் கணினி வன்பொருளாகத்தான் இருக்கும்.

போன வாரம் லெபனான் நாட்டுக் கடற்கரையை ஒட்டி இருபத்தைந்து ட்ரில்லியன் கன அடி நில வாயு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது (ஒரு ட்ரில்லியன் என்பது ஒன்றுக்கு அடுத்து பனிரெண்டு பூஜ்யங்கள் – அதாவது மில்லியன் மில்லியன்கள்!). அகன்ற நிலப்பரப்பு, மிக அடர்த்தியான வாயு கையிருப்பு. நிலத்தடியிலும் மேற்பரப்பிலும் ஆய்வு செய்த வகையில் அதிவேகமாக உருவாகி, நிலை மாறிப் பல தரத்தில் அமைந்ததாகக் குவியும் தகவல். துல்லியமாக வாயு இருக்கும் இடங்களைத் தேடி அடையாளம் காணவும் அந்த வளத்தை சீராகப் பயன்படுத்த பாதை வகுக்கவும் பெருந்தகவல் அமைப்புகளே கை கொடுக்கின்றன.

அண்மையில் செர்ன் என்ற அணு ஆய்வுக்கான ஐரோப்பிய கூட்டமைப்பு, ஹாட்ரான் என்ற அதி சக்தி அணுத் துகள் மோதல் நிகழ்த்து கருவி மூலம் ஆய்வு செய்து ஹிக் போஸன் என்ற ‘கடவுள் துகள’ இருப்பதை நிறுவ முற்பட்டது. இந்த ஹாட்ரான் கருவியில் பத்து லட்சம் சென்சர்கள் வினாடிக்கு நாலு கோடி அணுத் துகள் மோதல்களைப் பதிவு செய்தன. அவற்றுக்கான பெருந் தகவலில் இருந்து நூறோ இருநூறோ குறிப்பிடத் தகுந்த மோதல்கள் பற்றிய நுண் தகவலை மட்டும் பிரித்தெடுத்து ஆய்வு செய்ய வேண்டி இருந்தது.

பெருந் தகவல் அமைப்பும், தகவல் சேமிப்பும், கண் சிமிட்டும் நேரத்துக்குள் வேண்டிய தகவல் அடுக்கை வைக்கோல் போரில் ஊசியாகத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆற்றலும் கடவுள் துகளின் இருப்பை உறுதி செய்தன.

கடவுள் துகளைக் காணப் பெருந்தகவல் துணை புரியும். கடவுள் இருப்பதைக் காண? சின்ன நம்பிக்கை மனதில் இருந்தாலே போதுமோ!

இரா.முருகன் டிசம்பர் 20, 2013 – தி இந்து (தமிழ்) பத்திரிகையில் இதன் சற்றே சுருக்கமான வடிவம் பிரசுரமானது.

விட்டுடுங்க ப்ளீஸ் – பாவம் பாரதி, பாரதிதாசன்

ஒவ்வொரு பாரதி பிறந்த நாளன்றும் அவரைப் பற்றிப் புதுசு புதுசாக நிறையப் படிக்கிறேன். இந்த வருடம் பத்திரிகையில் படித்ததிலிருந்து ‘அறிந்து கொண்டது’ -

1) பாரதி புதுவையில் இருந்தபோது மனைவி செல்லம்மா பாரதியிடம் ஒரு குவளை காப்பி கேட்க, அவர் இல்லை என்று சொல்லியிருக்கிறார். பாரதி கோபித்துக் கொண்டு வெளியே போய்விட்டார்.

2) அப்போது அவரைத் தேடி வீட்டுக்கு வந்த பாரதிதாசன் விஷயம் அறிந்து பாரதியைத் தேடிப் போய் ஒரு டீக்கடை வாசலில் சந்திக்கிறார். அவர்களுடைய முகமதிய நண்பர் நடத்திய கடை அது. சாக்கடை ஓரமாக இருக்கிற கடை.

3) பாரதி ’ரெண்டு டீ’ போடச் சொல்கிறார். பாரதிதாசன் அங்கே டீ குடிக்க விருப்பமில்லாமல் டீயை மறைவாகக் கீழே கொட்டிவிடுகிறார். பாரதி ‘நாமெல்லாம் இங்கே டீ சாப்பிட்டால் தான் ஜாதி ஒழியும்’ என்கிறதுபோல் ஏதோ சொல்கிறார்.

4) பாரதி தன் மகள் வீட்டை விட்டு ஓடி சிங்கப்பூர், மலேயா இப்படி வெளிநாடு போய் அங்கிருந்து ‘மனதுக்குப் பிடித்தவ்ரைக் கைபிடித்து விட்டேன்’ என்று கடிதம் எழுதினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று பாரதிதாசனிடம் சொல்கிறார்.

5) செல்லம்மா பாரதி இல்லாத நேரத்தில் பாரதி, பாரதிதாசனுக்கு வீட்டில் காப்பி போட்டுத் தர அடுப்பைப் பற்ற வைத்து, அதில் காகிதத்தைப் போட்டு எரிக்கிறார். அடுப்பு எரிய கரி, விறகு தேவை, காகிதத்தை எரித்தால் புகை தான் வரும் என்ற அடிப்படை அறிவு கூட அவருக்கு இல்லை.

இப்படியான ‘தகவல்கள்’ அந்த மகா கவிகளுக்கு எந்த விதத்தில் பெருமை சேர்க்கும் என்று தெரியவில்லை.

போதும்.. அடுத்த பாரதி பிறந்த நாள் வரும்வரை பாரதியையும் பாரதிதாசனையும் சும்மா விட்டு வைக்கலாம்.
————————————————————-

நேற்றைய தி இந்து தமிழ் பத்திரிகையில் பாரதியார் ’கர்மயோகி’ பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையை எடுத்துப் போட்டிருக்கிறார்கள். ‘பாஞ்சாலி சபதம்’ நெடுங் கவிதையில் வரும் மாலை வர்ணனை பாடல்கள் பற்றி அவர் எழுதியது -

//ஸூர்யாஸ்தமன காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன்கூடப் போகிறதில்லை. அப்போது வானத்திலே இந்திரஜால மஹேந்திர ஜாலங்களெல்லாம் நடக்கின்றன. இந்த க்ஷணமிருந்த தோற்றம் அடுத்த க்ஷணமிருப்பதில்லை. //

கீழேயே ‘ஆசிரியருக்குக் கடிதம்’ -
தவிக்கவும்: ஸூர்யாஸ்தமனம், இந்திரஜால மஹேந்திர ஜாலங்களெல்லாம், க்ஷணமிருந்த, ஸூர்யாஸ்தமன,….

பாவம் பாரதியார், மன்னிச்சுடுங்க.. இனிமே இப்படி எழுத மாட்டார்.. சொல்லி வைக்கறேன்.

——————————————
பரிவாதினி வழங்கிய திரு.ஏ.கே.சி நடராஜனின் கிளாரினெட் இசை மழையில் நனையாதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள்.

அறுபது ஆண்டு காலமாக சுநாதமாக, கம்பீரமாக ஒலிக்கிற, இதயத்தை இதமாக வருடும் இசை அது. நம்மிடையே இருக்கும் ஒரு பொக்கிஷம் ஏ.கே.சி.

ஒரு காசு செலவில்லாமல், வீட்டுக்குள் அமுத மழை பெய்ய வைத்த பரிவாதினிக்கும், நண்பர் லலிதாராமுக்கும் நன்றி.

————————————————

A good article by Jonathan Jones on pulling down of Lenin statue in Kiev, Ukraine
(in The Guardian)

//This goes to the very heart of what a statue is. No other kind of art is directly associated with power in quite the same way.

Because statues are power, they cry out for acts of lèse-majesté. Even ancient Egyptian statues got vandalised, while Roman emperors often had their marble faces broken by Christians. Artistic excellence is no defence. In 16th-century Bologna a crowd pulled down a statue of the hated Pope Julius II and melted it down to make a cannon – no one cared that it happened to be a masterpiece by Michelangelo.//

http://www.theguardian.com/artanddesign/jonathanjonesblog/2013/dec/09/smashing-statues-sweetest-revenge-protesters-lenin-kiev