வாடிக்கையாளர் இல்லாத நாவலாசிரியரும் சிறாரில்லாத வாடிக்கையாளரும்

வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் நான்கில் அடுத்த சிறு பகுதி

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

இந்தப் புத்தகங்களில் ஒரு புதுமை இருக்கிறதே, கவனித்தீர்களா என்று கேட்டார் பக்கத்து இருக்கை தாடிக்கார பப்ளிஷர்.

 

பக்கங்கள் கொஞ்சம் கூடுதல் கனத்தோடு இருக்கின்றன. படங்கள் அடர்த்தியான வர்ண மசியில் அச்சடிக்கப் பட்டு இன்னும் அக்ரலிக் வாடை பலமாக மூக்கில் முட்டிக் கொண்டிருக்கிறது. சற்று பிசுபிசுப்பும் படத்தில் உண்டு. மற்றப்படி வேறுபட்டு எதுவும் இல்லையே?

 

நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள், தெரியுமே.

 

தொலைந்து போன பொம்மை கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கும் குழந்தை போலச் சொன்னார் பப்ளிஷர். அவர் வைத்தாஸின் கையில் இருந்த குழந்தைப் பாட்டுகள் அச்சடித்த புத்தகத்தைப் பிடுங்கிப் புரட்டி, கேலண்டர் படம் போட்டிருந்த பக்கத்தின் நடுவில் கை வைத்து அழுத்தினார்.

 

புத்தகத்தில் இருந்து குயில் கூவும் சத்தம் எழுந்தது. செப்டம்பர், ஏப்ரல், ஜூன், நவம்பர் மாதங்களில் முப்பது நாட்கள் உண்டு என்ற அரிய உண்மையைத் தெரிவிக்கும் பாடலின் முதல் அடியைச் சற்றே நகல் எடுத்த குயில் குரல்.

 

இந்தப் பாட்டுகளோடு ஓவியங்களையும் பார்த்தபடி எழுத்தைக் கவனமாகப் படிக்கும் குழந்தைகள் விரைவில் மாதங்களின் பெயரையும் நாள் கணக்கையும் தெரிந்து மனதில் இருத்திக் கொள்வார்கள். அது தானே?

 

சுவாரசியமின்றி தனக்குள் முனகினான் வைத்தாஸ்.

 

எங்கிருந்து தான் இப்படியான ஆட்கள் கிளம்பி உலகைச் சித்தரவதைப் படுத்த வருகிறார்கள் என்று வைத்தாஸுக்கு வியப்பாக இருந்தது. அவன் வாழ்நாளில் முதல் முறையாக இப்படி நர்சரி பாட்டுப் புத்தகங்களைப் பற்றி ஆர ஆமரக் கலந்து பேசி மிகையாக, வெகு மிகையாகப் பாராட்ட வேண்டி வந்திருக்கிறது. மூச்சுக் காற்றில் சந்தனமும், மற்றதும் மணக்கும் பப்ளிஷர் இந்த நிமிடம் மூச்சை நிறுத்திக் கொண்டால் கர்த்தருக்கு தோத்திரம் பல.

 

குழந்தைப் பாடல்கள் பற்றி ஒரு குழந்தையிடம் மகிழ்ச்சியோடு நிகழ்த்த வேண்டிய உரையாடலை, சித்தம் தடுமாறிய முதியவரோடு அன்பும் நட்பும் செயற்கையாகக் காட்டித் தொடர வேண்டிப் போனது துரதிருஷ்டம்.  அந்நிய நாட்டின் நல்லெண்ணத் தூதரான தன்னால் கடைப்பிடிக்க வேண்டிய கடமை அது. நினைவுகூர, வைத்தாஸை மரக்கட்டையாகப் பாவித்துக் கடந்து போன விமானப் பணிப்பெண் அவனை அலட்சியமாகப் பார்த்துச் சொன்னாள் –

 

(அந்தச் சிறுக்கியை எழுப்பி உட்கார்த்தடா கழுவேறி. இன்னும் பத்து நிமிடத்தில் சுவையான உணவு பரிமாறப்பட இருக்கிறது. நாய் மாதிரி தின்னுட்டு அபான வாயு விட்டபடி இங்கேயே புரளு. )

 

அசைவ உணவு தானே உங்களுக்கு? நினைவில் வைத்திருக்கிறேன் ஐயா.

 

(நாலு மணிநேரம்  ஈரத் துணியில்  புரட்டிய கோழி மாமிசத்தை நீ ரசித்துச் சாப்பிட எடுத்து வருகிறேன். உண்டு தூங்கி இறங்கு.)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன