எலுமிச்சம்பழத்தை கொடுத்துத் திருப்பி வாங்கும் அரசூர் மரியாதை

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காம் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி


சின்ன சரிகை தலைப்பாக வழியும் வெள்ளைச் சேலையில் சகலமான வயதுப் பெண்களும். பெண் குழந்தைகள் கூட வெள்ளைப் பாவாடையோடு தான் வளைய வருகிறார்கள். ஆண்களோ, தழையத் தழைய வேட்டி உடுத்தி, ஒண்ணு, இடது பக்கம் கணுக்காலில் இருந்து வேட்டி நுனியைத் தூக்கிப் பிடித்தோ, அல்லது சரி பாதியாக மடித்து முழங்காலுக்கு மேலே பட்டையாகக் கட்டியோ எந்தப் பரபரப்பும் இல்லாமல் சாவதானமாக நடக்கிறார்கள். கக்கத்தில் குடை வேறே.

 

வெள்ளைக்காரன் ஊரும் இதே படிக்குத் தான் இருக்குமோ? அங்கே சராய் உடுத்த வெள்ளையப்பன்கள் தானா ஊர் முச்சூடும் திரிவார்கள்?

 

ராஜா இன்னும் அந்த விசித்திரத்தை அனுபவிக்கிற தோதில் குண்டு குழியாகக் கிடக்கிற தெருவைப் பார்க்காமல் நடந்து வந்தார். பின்னாலேயே ஓட்டமும் நடையுமாக பனியன் சகோதரர்கள்.

 

சமூகம் பாதையிலே ஒரு கண்ணு வைக்க பிரார்த்திக்கிறோம். தடுக்கி விழுந்தால் அடி பட்டுடும். எங்களுக்கு சகிக்க ஒண்ணாத துன்பம் ஏற்படலாம்.

 

குழந்தைக்கு சொல்கிறது போல ராஜாவுக்கே யோசனை சொல்கிறான்கள்.

 

குண்டலினி மாதிரி கபால நடுவே ஜிவ்வென்று பற்றிக் கூராக ஏறிப் படர்ந்த கோபத்தை அடக்கிக் கொண்டு பனியன் சகோதரர்களை அவர் நோக்க, எதுவுமே நடக்காதது போல் அவர்கள் கள்ளச் சிரிப்பும் சகஜ பாவனையுமாக எலுமிச்சம் பழத்தையும் காகிதக் கட்டையும் நீட்டினார்கள். எதுக்காக அந்த அதீத உபசாரமெல்லாம்? அதுவும் எலுமிச்சம்பழம்? தாசி வீட்டுக்கா பயணம்?

 

மகாராஜாவும் ராணியம்மாவும் நல்ல சேமமாய் இருக்க, ஊர் செழிக்க, பயிர் பச்சை விளைய, மழை தவறாமல் பெய்ய, இங்கத்திய பகவான் கிருசுணசாமியை நேர்ந்துக்கிட்டோம். காணிக்கையோடு போய் நம்பூதிரிக்கு தட்சணை தரணும். பிரசாதமாகப் பால் பாயசம் சமூகத்துக்கு வந்து சேரணும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன