Monthly Archives: July 30, 2016, 10:12 am

New nove: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 36 இரா.முருகன்

மலா பாக ருபயீ த்யா, மோதா பாவு. அப்பன் காஹீ தூபா கரீதீ கரூ.

ஐந்து நிமிஷம் முன் டோம்பிவிலி ஃபாஸ்ட் லோக்கல் ரயிலில் வந்து சேர்ந்தவன், ரிடர்ன் டிக்கட்டை சிகரெட் பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்தியபடி திலீப்பிடம் சொன்னான். ஐந்து ரூபாய் வேணுமாம். போய் நெய் வாங்கி வருவானாம்.

நாலு மூங்கில் கழிகளும் தென்னங் கிடுகுமாக சைக்கிளில் வந்த இன்னொருத்தன் வண்டி பிரேக் பிடிக்காமலோ, இல்லை விளையாட்டாகவோ கட்டிடச் சுவரில், சினிமா கதாநாயகி நடிகை நூதன் படம் ஒட்டிய போஸ்டரில் இடுப்புக்குக் கீழ் முட்டி நிறுத்தினான்.

ஒன்றும் இரண்டுமாக மூலத்தார் வேட்டி உடுத்தி, வெள்ளைக் குல்லா வைத்த நடுவயசு மராட்டியர்களும் இளைய ஆண்களும் உரக்கப் பேசியபடி வந்து கொண்டிருந்தார்கள்.

பாண்டுப் சர்வமங்கள் சாலில் சாவுச் சடங்கு நடத்திக் கொடுக்க திலீபுக்கு ஒத்தாசையாக வருகிறவர்கள். அவர்கள் எல்லோரையும் திலீப் அறிவான். காமத் ஓட்டலில் சர்வர் விடுப்பில் போக டெம்பரவரியாக வடா பாவ் பார்சல் கட்டுகிறவர்கள். எச்சில் இலைகளை எடுத்து இரும்பு வாளியில் ரெண்டு பேராக நீளக் கயிறு கட்டித் தூக்கிப் போய் குப்பை குவிக்கும் பெருவெளியில் வீசி எறிந்து விட்டு பீடி புகைத்தபடி வருகிறவர்கள். விநாயக சதுர்த்திக்கு தாதரிலும் மடுங்காவிலும் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி விளாம்பழம் விற்கக் கடை போட்டு, பக்கத்து நடைபாதைக் கடைக் காரர்களால் வசவும் கேலியும் பெற்று பொருட்படுத்தாமல் வியாபாரம் செய்கிறவர்கள். தீபாவளிக்கு பெரிய முறங்களில் உள்ளூரிலோ மராத்வாடா பிரதேச கிராமங்களிலோ அபாயமில்லாத வெங்காய வெடி செய்து அனுப்புவதைப் பரத்தி அதே நடைபாதைகளில் ஒன்று இரண்டு வெடிகளைத் தரையில் எறிந்து பலமாக வெடித்து விற்பவர்கள். மகாலட்சுமி கோவில் வாசலில் செருப்பு டோக்கன் கொடுத்து காசு வசூலிப்பவர்கள். இல்லாத நேரங்களில் பிணம் தூக்குகிறவர்கள்.

எப்படியோ யார் மூலமோ தகவல் தெரிந்து சாவு விழுந்த மராட்டிய வீடுகளுக்கு எல்லாம் கிரமமாக நடத்திக் கொடுத்துப் பிணம் தூக்கிப் போக வந்து விடுகிறவர்கள். அவர்களை திலீப் வேறு இடங்களிலும் சந்தித்திருக்கிறான். அதெல்லாம் அவனும் போகக் கூடாத இடங்கள் தன். நல்ல வேளையாக அகல்யா வந்தாளோ அதை எல்லாம் விட்டு விலகி வந்தானோ.

பய்யா, பைசா கொடு. கொடுத்தாத் தான் நெய் வாங்கிட்டு வர முடியும்.

நெய் வாங்கக் காசு கேட்டவன் அண்டர்வேரோடு நின்று கால் சராயை மடித்து தோல்பையில் வைத்து கொண்டிருந்தான். மூலத்தார் வேட்டியை பக்கத்தில் இருந்தவன் தன் பையிலிருந்து எடுத்து நீட்டியபடி திலீபுக்காகப் பரிந்து வந்தான்

தருவான். அம்மாவைப் பறி கொடுத்த பிள்ளை. உனக்கு அந்த சோகம் தெரியாது

திலீப் அவனை விழித்துப் பார்த்தான். எல்லோரும் அவனிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். சினிமாவில் பார்த்தபடி, தொடர்கதையில் படித்தபடி, மேடை போட்டு நீட்டி முழக்கித் தலைவர்கள் பேசுவதைக் கேட்டபடி, எல்லாரும் எதிர்பார்க்கிற படி அவன் இப்போது அழுது புரண்டு கொண்டிருக்க வேண்டும். கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்து சட்டையை நனைக்க, விம்மி விம்மி அழ வேண்டும். பக்கத்தில் இருப்பவர்கள் தேற்றத் தேற்ற, அம்மாவைப் பற்றிய பழைய நினைவுகளில் மூழ்கி அதைத் திடுமெனத் தொடங்கும் மறு பாதியாக, நடுவிலிருந்து பிய்த்து எடுத்த ஒரு வார்த்தையாக, சொல்லத் தொடங்கி விம்மலில் கரைகிறதாக வெளியிட்டபடி இருக்க வேண்டும். எதுவுமே இல்லாவிட்டால், டர்க்கி டவலால் தோளைப் போர்த்திக் கொண்டு சூனியத்தில் பார்வை நிலைக்க விழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்.

அகல்யா, ஒரு வாய் காப்பி கொடு. தலையை வலிக்கறது.

வாசலுக்கு வந்த அகல்யா அவனைப் பார்க்க, திலீப் கேட்டான்.

அவள் அவனைக் கண்டிப்பது போல் உதட்டைச் சுழித்துக் காட்டி நெய் வாங்கப் போகிறவன் குறுக்கிட, சாவு நடந்த வீட்டு எஜமானியாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

அகல்யா தலையை இறுக்கமாக முடிந்தபடி அவசரமாக அவன் பக்கம் வந்தாள். வாழ்க்கை பூரா சர்வமங்கள் சால் குடியிருப்பில் இந்த மாதிரி சமாசாரங்களுக்கு நடுவே குடும்பம் நடத்தி, ஆபீஸ் போய் வந்து, தீபாவளியும் கணேஷ் சதுர்த்தியும் கொண்டாடி, ஞாயிறு பகல் பக்கத்துக் குடித்தனப் பெண்களோடு ஊர் வம்பு பேசி, வடா பாவ் வீட்டிலேயே செய்ய முயன்று கருகலும், எண்ணெய் முறுகலுமாக எதையோ செய்து முடித்துப் பகிர்ந்து சாப்பிட்டு கூடிய மட்டும் சந்தோஷமாக இருக்கிற பெண். தமிழ்ப் பிராமணத்தியோ, மராத்திக் காரியோ இல்லை. பெண். எல்லா சூழ்நிலைகளிலும் தலையை உயர்த்தி இருந்து, நதியோடு போய், எட்டரை மணி டோம்பிவிலி-தாதர் லோக்கல் போய் விட்டதா என்பது போன்ற கவலைகள் தவிர வேறே இல்லாத பெண்.

எதிர்க் குடித்தனத்திலே டாங்க்வாலே மருமகள் ரேகா காப்பி போட்டுண்டு இருக்கா. வடா பாவ் வாங்கி வந்தது இருந்தது, அதையும் ஸ்டவ்லே தண்ணி விட்டு மேலே வச்சு சூடாக்கறா. ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு நான் உள்ளே இருந்து கூப்பிடறேன். நேரே டாங்க்வாலே ப்ளாட்டுக்குள்ளே போயிடுங்கோ.

ரேகா எல்லாம் கொடுப்பாள்னா சரி.

அகல்யா அவனை மகா ஆச்சரியத்தோடு பார்த்தாள். அம்மாவைப் பறி கொடுத்து விட்டு நிற்கிறவன், பெண்டாட்டியிடம் ஏடாகூடமாக அர்த்தம் வரும் ஜோக் சொல்லுவானா என்ன? அவனுடைய சிந்தனையும் நினைவும் எல்லாம் ஈசுவரனிலும், உயிர் துறந்த ஆத்மாவை நற்கதிக்குக் கொண்டு செலுத்த இயன்றதைச் செய்வதிலும் அல்லவா இருக்கும்.

நீங்க எங்கேயும் போக வேண்டாம். சும்மா எதுவும் பேசாமா நின்னுண்டிருங்கோ. நானே வந்து கூட்டிப் போய்க் கொண்டு வந்து விடறேன்.

அவள் சொல்லி விட்டுப் போனவள் திரும்பி வந்தாள்.

வாசல்லே ஒரு ஷாமியானா பணிய வேண்டாமா? அகல்யா கேட்டாள்.

ஷாமியானா? புரியாமல் பார்த்தான் திலீப்.

பந்தல்.

எதுக்கு?

எதுக்கா? நாலு அண்டை அயல் பிராமணா குளிக்கறதுக்கு முந்தி வந்து எட்டிப் பார்த்துட்டு ஓடற கதையா என்ன?

வேறே என்னவாம்?

என்ன கேள்வி கேட்டாறது. நினைவில்லையா? நிறை சுமங்கலி. கல்யாணச் சாவு

அப்பா போயாச்சே. அப்புறம் என்ன சுமங்கலி?

அவர் காணாமல் தான் போனார். சௌக்கியமா எங்கேயோ இருக்கார்.

அதுக்கும் ஷாமியானாவுக்கும் என்ன சம்பந்தம்? திலீப் புரியாமல் கேட்டான்.

அது இருக்கட்டும். அம்மா பெரிய லாவணி ஆர்டிஸ்ட். மகாராஷ்ட்ரா பூரா தெரிஞ்சவா, சீஃப் மினிஸ்டர் வரலாம். உங்க பெரியப்பா. செண்ட்ரல் மினிஸ்டர் வருவார். கூடவே அதிகாரிகள் வரலாம். அப்புறம் உங்க தலைவர் கூட.

நிமிர்ந்து பார்த்தான் திலீப். உண்மைதான். அவனுடைய மராத்தி அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வது இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமானது. மராத்திக்காரி அம்மா இறந்து போனாள். அவனுக்குள் கொஞ்சமாவது அவளுடைய மராத்தி ரத்தமில்லையா ஓடுகிறது?

முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் நேரம். லாவணி ஆட்டக்காரி, மராத்தியப் பெண்மணி, ஷாலினிதாய்க்கு ஏக புத்ரன் திலீப். மராத்தியன் திலீப். திலீப் மோரே. இந்த வார்டில் போட்டியிடத் தகுதி. அம்மா இறக்க, திலீப்புக்கு கட்சி வேட்பாளர் அருகதை கிட்டும்.

சுறுசுறுப்பு தொற்றிக் கொண்டது. புதுசாக வந்து சேர்ந்த ஒரு எடுபிடியிடம் ஷாமியானா என்று சொல்ல அவன் சரியென்று சொல்லி, வந்த வேகத்தில் சைக்கிளைத் திருப்பி குலை தெறிக்க ஓட்டிப் போனான்.

வார்ட் பிரமுகர் மிட்டாய்க்கடை கதம் இந்தத் துக்கச் செய்தியைக் கேட்டு ஓடி வர வேணாமா?

ஓரமாகச் சுவரில் சாய்ந்து நின்று சிகரெட்டை ஊதிக் கொண்டிருந்த பிரக்ருதியை ஓடச் சொன்னான். அவனும் மகாராஜா உத்தரவு கொண்ட சிப்பாய் போல் சிட்டாகப் பறிந்தான்.

இந்தப் பயல்கள் எல்லோருக்கும் கணிசமாக, எல்லாம் முடிந்து போகும்போது கொடுக்க வேண்டும் என்று தெரியும். சகலத்துக்கும் செலவாகப் போகிற பணத்துக்கு என்ன செய்வது? பெரியம்மா சலுகை காட்ட, பிஸ்கட் பன்றி மனசே இன்றி அனுமதித்த நாலாயிரம் ரூபாய் கைவசம் உண்டு. அது போதுமா? அதுவும் இதெல்லாம் ஒரு நாள் காரியம் இல்லையே. தமிழோ, தெலுங்கோ, மராத்தியோ, பத்து நாளும் அதற்கு மேலும் இல்லையா ஏதேதோ வைதீகமும், விருந்துமாக முழங்குமே.

அவனுக்கு விசித்திரமாக இருந்தது. சொந்த அம்மா இறந்து போய் இப்படி அதைப் பற்றித் துக்கமோ வருத்தமோ இல்லாமல், மூன்றாம் மனிதன் மாதிரி, அதை அருகே இருந்து பார்த்து அனுபவப்படும் இழவாக மட்டும் எடுத்துக் கொள்ள எப்படி மனம் வந்தது? அடிப்படையிலேயே ஏதோ தவறு அவனிடம்.

இறப்பு சர்ட்டிபிகேட் வாங்கி வந்துடலாமா?

யாரோ கேட்டார்கள். நல்ல விதமாக உடுத்து, சட்டையைக் கால் சராய்க்குள் நுழைத்து கச்சிதமாக இடுப்பு வார் கட்டி இருந்தவர். டை மட்டும் தான் குறைகிறது. இருந்தால் பிஸ்கட் சாஸ்திரிக்கு சகலபாடி போல இருப்பான்.

நாசுக்கான, மேல் மட்டத்தில், அதிகாரப் பெரும் பரப்பில் நடத்தித் தர வேண்டிய காரியங்களைச் செய்வதே எனக்கு வேலை.

வந்தவன் சொன்னான். ஆக, மற்றவர்கள் மூலக் கச்சம் உடுத்தி திலீப்புக்கு சகாயம் புரிய வந்தால், நன்றாக உடுத்தி வேறே மாதிரி உதவி செய்ய வந்தவன் இவன். விரட்ட மனம் இல்லை. இவன் வகையில் நாலாயிரத்தில் ஆயிரமாவது போகலாம். போகட்டும். சாவு சர்டிபிகேட் இல்லாமல் எப்படி மயானத்தில் எரிப்பது?

முன்பணமாக அவனுக்கு இருநூறு ரூபாய் எடுத்துக் கொடுத்து, இன்னொரு எடுபிடிக்கு பதினைந்து ரூபாய் எண்ணிக் கொடுக்கும்போது உள்ளே இருந்து அகல்யா குரல். போனான்.

வேகமா சாப்பிடுங்கோ. அங்கே அம்மா தகனத்துக்குப் போறதுக்காகக் கிடக்கா. இங்கே என்னடான்னா வந்த மூதேவியும் வீட்டுப் பிள்ளையாண்டனும் கொண்டா கொண்டான்னு கொட்டிண்டிருக்கான்னு மூணு பாஷையிலே சொல்வா.

அவன் காதில் மட்டும் படச் சொல்லி முன்னால் நடந்தாள்.

வடாபாவை வாயில் திணித்துக் கொண்டிருந்தபோது அங்கேயே தேடி வந்த அகல்யாவின் அப்பா, மாப்பிள்ளை என்ன இப்படி ஆகிப் போச்சே என்று உலகத்துத் துக்கம் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டி நிறுத்தி திலீப்பிடம் விசாரிக்கும் குரலில் கேட்டார். போய்ட்டா என்றான் அவன் சகஜமாக.

எச்சில் கையை கால்சராயில் துடைத்தபடி வெளியே வர, ஒரு வேன் வந்து நிற்பது கண்ணில் பட்டது. கூட்டமாக யாரோ வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஓடி, வாசலில் போய் நின்றான். எடுபிடிகள் காந்தி குல்லாவை நேராக்கிக் கொண்டு அவனுக்கு முன்னால் நகர்ந்தார்கள்.

வேனிலிருந்து மெல்ல இறங்கி வந்து கொண்டிருப்பவர்கள் நகரத்துக்கு வெகு தூரம் வெளியில் இருக்கும் புறநகரப் பிரதேசங்களில் இருந்து வரும் பழைய லாவணி கலைஞர்கள். அம்மா செயலாக இருந்தபோது அவர்களில் பலரும் வீட்டுக்கு வந்து போனதை திலீப் மறக்க மாட்டான்.

கிராமத்துக் கலைகள் எல்லாம் நசித்துக் கொண்டிருக்க, அந்தக் கலைஞர்கள் சாயாக் கடை வைத்தும், தெருத்தெருவாக பன்னும் பிஸ்கட்டும் சைக்கிளில் கட்டி எடுத்துப் போய் விற்றும், தலையணைக்குப் பஞ்சு அடைத்துக் கொடுத்தும் ஜீவித்துக் கொண்டிருப்பவர்கள். சொற்பமான பெண்கள் இவர்களில் உண்டு. எச்சில் தட்டு அலம்பி, வீட்டு வேலை செய்தும், ஆஸ்பத்திரியில் ஆயாவாக பீத்துணி துவைத்தும், சித்தி வினாயகர் கோவில் வாசலில் ஜவந்திப்பூ மாலை விற்றும் வயிறு கழுவுகிறவர்கள். அம்மாவுக்கு வேண்டியவர்களான அவர்களைப் பார்க்க, திலீபுக்கு மனம் நிறைந்து வந்தது.

அவர்கள் ஓவென்று குலவையிட்டுக் கொண்டு வந்தார்கள். அம்மாவின் சடலத்துக்கு அருகே நின்றும் அமர்ந்தும் லாவணிப் பாடல்களைக் குரலெடுத்துப் பாடினார்கள். ஓரிருவர் சுவரில் மோதாமல், ஷாலினி தாய் உடலில் படாமல் சுவடு வைத்து நடனமும் ஆடினார்கள். ஒரு மகத்தான கலைஞருக்கு மற்ற கலைஞர்கள் செய்யும் மரியாதை மட்டுமில்லை, நிகழ்ந்து ஏறக்குறைய நிறைவாக முடிந்த வாழ்க்கைக்கான ஒரு கொண்டாட்டமாகவும் அது இருந்தது என்பதை திலீப் கவனித்தான்.

அகல்யா மறுபடி ஓடி வந்தாள்.

பாட்டி ஒண்ணும் சாப்பிட மாட்டேங்கறா. ரேகா கிட்டே சொல்லி ஒரு ஈடு இட்லி வார்த்து வச்சிருக்கு. ஒண்ணாவது கழிச்சு சிராங்காய் காப்பி குடிங்கோன்னா மாட்டேன்னு அடம். அவ தான் போயிருக்க வேண்டியவளாம். உங்கம்மா பாவம், தானே போய்ச் சேர்த்துட்டாளாம். நீங்க ஒரு வார்த்தை சொல்லி சாப்பிடச் சொல்லுங்கோ.

போனான். பழைய பட்டுப் புடவை வாடையடிக்க கற்பகம் பாட்டி சமையல்கட்டுக் கதவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். தளர்ந்து தான் போயிருந்தாள். ஒரு மத்தியதர மேல்தட்டுக் குடும்பத்தைத் தன்னந்தனியாகத் தாங்கி நிறுத்திய மனுஷி, பாம்பே அழுக்கு சாலில் ஊழியம் செய்து தேய்ந்து போன தளர்ச்சி. அவளுடைய வேர்களை விட்டு அகற்றி நட்டு வேடிக்கை பார்க்கிறதாகத் திலீப் உணர்ந்தான். இவளை இனி எங்கே இருத்த வேண்டும்? பெரியப்பா வீடு? அகல்யா கவனித்துக் கொள்ள மாட்டாளா? எத்தனை நாள்?

ஒரு விள்ளல் இட்லியும், ஒரு மடக்கு காப்பியும் அவளுக்கு ஊட்டி விட ரெண்டு பேர் கண்ணிலும் கண்ணீர். அம்மாவுக்கு அழவில்லையே என்று மனதில் ஆதங்கம் சூழ, திலீப் கீழே வந்தான்.

மேக மூட்டமாக இருந்தது. பறவைச் சத்தம். காக்கைகள் அவசரம் என்று குரல் விட்டு, விருட்டென்று மறைய, பழைய கட்டிடங்கள் எழுந்து நிரம்பிய குறுகிய தெருவில் உயரப் பறந்து ஒரு மயில் வந்தது. இன்னொரு மயில், கூட இன்னும் ஒன்று, அடுத்து ஒன்று என மொத்தம் நாலு மயில்கள்.

தாழ இறங்கிய அவை, கட்டத் தொடங்கி இருந்த மூங்கில் பல்லக்குக்கு அருகே நின்றவர்களைச் சிறகடித்து அகற்றிக் கிடைத்த வெளியில் ஆடத் தொடங்கின.

யாரும் எதுவும் பேசவில்லை. புகைக்கவும், சிறுசொல் சொல்லவும் மறந்து அனைவரும் அந்தக் கம்பீரமான அழகில் லயித்துப் போயிருந்தார்கள்.

ஷாலினிதாய்க்குப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை என்பதில் திலீப்புக்கு வருத்தம் மேலெழுந்து வந்தது.

கார் வந்து நிற்கிற சத்தம். இல்லை. அது ஒரு ஜீப். உள்ளே இருந்து குதித்த முதல் பாதுகாப்புக் காவலர் தரை வழுக்கிச் சரிந்தார். காந்தி குல்லாய் எடுபிடிகள், கெட்ட வார்த்தை வசவோ, வலியால் கத்துவதோ, கடவுளை அழைப்பதோ எதையோ மெல்லிய, தீனமான குரலில் சொல்லிய அவரைப் பத்திரமாகத் தூக்கி நிறுத்தினார்கள். உயரமான, கிளிமூக்கு கொண்ட நபர். மலைப் பிரதேசத்தில் இருந்து வந்தவராக இருக்கும் என்று திலீப் நினைத்தான்.,

ஜீப்பில் வந்த மற்றவர்கள் மெல்ல இறங்கித் துப்பாக்கி பிடித்து நிற்க, சைரன் முழங்கி வந்து நின்ற காரில் இருந்து வெளிப்பட்ட, கையில் ஃபைல் வைத்திருக்கும் அதிகாரிகள், சந்திர மண்டலத்தில் நடக்க உத்தேசிப்பது போல் நடந்தார்கள். அடுத்து வந்த காரில் இருந்து திலீப்பின் மினிஸ்டர் பெரியப்பா இறங்கினார்.

அவர் எல்லோரையும் பார்த்து, உறைந்த புன்னகையோடு கை கூப்பினார். மயில்கள் அது பாட்டுக்கு ஆடிக் கொண்டிருக்க, உள்ளே இருந்து வந்த லாவணிக் கலைஞர்கள் குல்லா கையில் எடுத்து வணக்கம் சொன்னார்கள்.

சாவு வீட்டுக்கு, அதுவும் சொந்த சகோதரனின் மனைவி இறந்து போன துக்கமான நிகழ்வுக்கு வந்திருக்கிற நினைவு வந்தோ என்னவோ பெரியப்பா உதடுகளைக் கோணி சிரிப்பை அழித்தபடி, துக்கம் தாங்காது போனது என்பது போல் தலையைத் தொடர்ந்து இடம் வலமாக ஆட்டியபடி வந்தார்.

கொங்கணிப் பெண்மணியின் முலைகள் நடுவே முகம் புதைத்து இப்படித் தலையசைய நேரு நினைவுகளை அவர் கெல்லி எடுத்துக் கொண்டிருந்தது திலீபுக்கு நினைவு வந்தது.

சாவு வீட்டில் நல்ல சிந்தனைகளே உன்னைச் சூழ்ந்திருக்கட்டும் என்று மயில்கள் அவனைப் பார்த்துச் சொல்லியபடி ஆடின.

அதுகளை யாராவது ஓட்டுங்கோ. கண்ணைக் குத்தி வைக்கப் போறது. நேரம் காலம் தெரியாம அது பாட்டுக்கு ஆடறது.

பெரியப்பா ஜாக்கிரதையான இந்தியில் சொன்னார். தில்லி புதுத் துரைத்தனத்து மொழி. லாவணிக் கலைஞர்கள் புரிந்து கொண்டு தலை ஆட்டினார்கள்.

அது போயிடும் சாப். மெல்ல கை அசைச்சா போதும்.

நாலைந்து பேர் கை அசைத்துக் கால் மாற்றி நின்று முன்னால் சென்று மீள, போங்கடா என்று அதுகள் பாட்டுக்கு ஆட்டத்தைத் தொடர்ந்தன.

அப்சரா ஆளி.

கூட்டமாக அவர்கள் பாடத் தொடங்கினார்கள். பூம்பூம் என்று முழங்கிய சாவுச் சங்குகள் குரல்களோடு கலந்து ஒலித்தன. வரட்டியில் பற்ற வைத்த அக்னி சாவு வாடையை விருத்தி செய்து கொண்டு பற்றிப் படர இன்னொரு வரட்டியைக் குல்லாய்க் காரன் ஒருத்தன் தரையில் இட்டான்.

மயில்கள் ஒரு வினாடி நின்றன. போகலாம் என்று யாரோ சொன்னது போல் அவை ஒரே நேரத்தில் இறகு வீசிப் பறந்து மேலே உயர்வதை திலீப் பார்த்தான். அவன் மனதுக்குள் அவற்றுக்கு நன்றி சொல்ல, அம்மா போகுமிடத்துக்கு அவளுக்குத் துணை உண்டு கவலைப் பட வேண்டாம் என்று அகவி உயர்ந்த மயில்கள், அடுத்த கணம் பார்வை வட்டத்தை விட்டு நீங்கின.

புதுப் புடவை வந்தாச்சா? மராத்தி புரோகிதன் விசாரித்தான்.

வாங்க ஆள் போயிருக்கு. யாரோ சொன்னார்கள்.

என்ன நிறம்? சோனியாக நின்ற ஒரு பெண் கேட்டாள். அண்டை வீடு.

வெள்ளை.

எதுக்கு வெள்ளைப் புடவை? சுமங்கலியாப் போயிருக்கா. சிவப்புப் புடவை தான் உகந்தது.

பக்கத்து, எதிர் குடித்தனப் பெண்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.

திலீப் அப்பாவை நினைத்துக் கொண்டான். அவர்கள் அவர் இன்னும் எங்கோ ஜீவித்திருப்பதாக திடமாக நம்புகிறார்கள். அகல்யா கூடத்தான். அதை மறுக்க எந்த ஆதாரமும் யாரிடமும் இல்லை. ஷாலினிதாய் மஞ்சளும் குங்குமமுமாகத் தான் சிதை ஏறுவாள்.

திலீப் மனசைத் திடப்படுத்திக்கோ. நாம கொடுத்து வச்சது அவ்வளவு தான்.

பெரியப்பா அவன் கையைப் பிடித்தபடி சொன்னார். என்னமோ தோன்ற அவர் தோளில் முகம் புதைத்துக்கொண்டான் திலீப். மெதுவாகத் தட்டியபடி, கம்போஸ் யுவர்செல்ப் என்று இரண்டு தடவை சொன்னார் பெரியப்பா.

உன் ஆத்துக்காரி எங்கே?

அகல்யா வந்து காலைத் தொட்டு வணங்க முற்பட, வேண்டாம் என்று விலக்கினார்.

அகல்யாவின் அப்பா எல்லோரையும் இடித்துக் கொண்டு முன்னால் வந்து பெரிதாக வணங்கி, கஷ்டப் படாம போனாளே அதுவே நிம்மதி என்று பெரியப்பாவிடம் சொல்ல அவர் யோசனையோடு பார்த்தார். எங்கப்பா என்றாள் அகல்யா.

குளிப்பாட்டிடலாமா?

யாரோ கேட்டார்கள்.

(தொடரும்)

New : Talespin – Column for The Wagon Magazine – July 2016 Era.Murukan

What the stars foretell and the sub-text of it

I just glanced through the astrological forecast for the week for my star sign, that was published in an internet magazine. The 300 word weekly prediction written in a tech-savvy lingo nudges me to stir out of my castle without losing further time and acquire a few heavy-duty electrical appliances like a state of the art cooking range for my kitchen, as this is the best time for me to procure assets of this kind. It also hints at my front loading washing machine becoming non-functional any time this week and that by tying a green piece of cloth on my left wrist, I can turn around my luck to be positive all along.

Now, I am surprised beyond any reasonable limit as to how and why the stars and planet constellations that constitute the universe and are in perpetual motion, take all the trouble to make it favourable time for a tiny, insignificant speck of galatic sub-particle dust like me, to procure a cooking range with the most recent design features that include a 6mm thick glass ceramic cooking surface on 2 independently controlled induction zones with a power of 3.5 kW per zone, all coming with a sleek illuminated console control?

And why would the same stars put their high temperature heads together and come up with a sinister plot to make my fully automatic turbo wash machine to stop unannounced its lovely hum and go on to add to the entropy in the isolated system, which my house always is.

Not only that, I am shocked to find that the cyber oracle rounds up his or her forecast with a strict warning made to me being, ‘Don’t have any interactions of whatsoever kind with thy neighbours, this week’.

I am aghast at the last byte of astro-advice as my ground-floor and up-one-floor neighbours are in perfect bonhomie and harmony with us for the past thirty years or so. We, all the good folks we always are, have met around 200 times in these 30 years on the elevator and have had exchanged smiles as elevator communication every time we went up or down together. I don’t think they will be envious if I go for a new cooking range or they would be a part of a faceless gang that would render my washing machine inert.

It is lamentable that all the technological advancement in the form of broadband internet dished out as 3G and 4G net connectivity has to end up at the binary doors of digital morons, like the folks behind the internet magazine I read.

I have come across another form of net astrology with no free counselling to unfriend my neighbour factored into the future-talk. It normally goes on with suggestions of the sapphire and emarald kind. The terse astro column would as a matter of fact observe that by wearing my blue diamond ring on my left index finger (note, index finger) my impending promotion at office will be a cake-walk and by wearing pure gold in the form of a necklace, my luck will be in ascendance especially if I indulge in horse racing, lottery or betting wherever it is legal. Taking four-weeks predictions together, a quick reckoning will yield the observation that I may require at least 10 different rings with embedded precious stones, a gold necklace, a pair of ear rings and diamond studded nose rings, the last three compulsory pieces of jewellery not suitable for me, a forty plus greying at the temples, Indian male. And if I am amenable to wear these queer ornaments, I may have to invest a million rupees an year to keep my ornamental inventory position up-to-date, in sync with what my stars foretell. I have a vague doubt these predictions are published at the instance of a cartel of all jewellers small and big breathing around in the planet now.

I remember going through an article at another astro-site with a tag labelling the write-up as ‘Chinese astrology’. The Chinese, I learnt by the time I read the article in full, do not go by star signs or are guided by the axiom, diamonds are for ever. Rather, they base their sooth-saying and crystal glazing on the birth dates. And it is not a miserly weekly prediction we are talking about, but it covers the entire year.

I with trepidation glided through the drop-down menus that obtain the information from me on my year of birth, month and date. The forecast page opened up immediately with all information that looks good for me in the year that is to be. It is going to be the luckiest period ever with income raining in incessantly, from all sources known and hitherto unknown to me. To make the cash-flow smooth and non-stop, what all I have to do is to have a Mandarin goose in my bed room.

I rubbed my eyes in disbelief and read it again. Yes, I understood it correctly –I should have a Mandarin goose in my bed room. Now, I don’t think with a live goose quacking in the bed room and moving around with unsteady steps, it would be possible for anyone to have a peaceful sleep at night. Still worse, the goose may climb up the bed and being not house-trained, it may soil my blanket or my face or both.

As at cue I went through the Chinese predictions for all my family members, my in-laws and after a series of invented elevator meetings with my neighbours, for them too. I was keen to find out which animal or bird each of them should have in the bed room. Of course, in our master bed room we cannot afford to have the junior entering with a squirrel, the sub junior with a rabbit, mother-in-law with a Cheshire cat and father-in-law with a guinea pig somewhat resembling him. It is after all a bed room and not a mini zoological park. And horror of horrors, how can one anticipate one’s life partner entering the bed room with a monkey in toe, grimacing, jumping and diving around merrily?

Chinese are not that cruel, I found to my delight. Whatever be the date of birth, each of us had received a suggestion to go to bed with a Mandarin goose. It would certainly be not the night of the iguana to worry about but could be the night of the Mandarin geese for the whole residential apartment complex, tonight, tomorrow and thereafter.

Whatever grouse we harbour against astrology, it has to be agreed upon that thirty years ago, astrological columns that were published in various newspapers of those times were much practical and in a sense ‘healthier’.

‘The planet Saturn is looking at your birth star and to ward off any hardship you may face due to it, visit every Sunday evening the village shrine, light a lamp there with sesame oil and go round the abode of Saturn in the shrine for a minimum 31 times, clockwise. You will have all your days happy and successful’. Thus ran the predictions of those days.

Telling the reader to visit the temple where you worship and socialize, light a lamp within the precincts making the pathways a little more illuminated and to go round the abode of Saturn under the neem tree 31 times breathing fresh air and getting provided with the much needed exercise for your limbs, these predictions offered the best psychological and health counselling with the least financial outlay. The simple and plain astrologers of the past are to be venerated for their service to humanity, even if you do not believe in their trade per se.

New : காட்டுக் கோவில் கவிதைகள் இரா.முருகன்

மறையும் கதிர்கள் மஞ்சள் பூசிய
நிலையும் கதவும் கடந்து
இலைகள் உதிர்ந்த
ஊர்வெளிக் கோவில்
வாசலில் யட்சி
கண்டோர்
மரித்தோர்
கலந்தோர்
கணக்கெதற்கு?

As twilight paints
a golden tinge
at the facade of
the dilapidated temple
the yakshi steps out
One more to behold, lust
and die
Do I care?

அந்தியில் உறங்கும்
நகர் எங்கும்
கனவுகளில்
கொண்டாட்டம்.
நானும் உண்டோ?
கதவு கதவாகத்
தட்டிப் போகும்
பயணி

In that town
that goes to bed
at dusk
dreams are made of
celebrations.
Let me in,
hisses the traveller
knocking on
every door

Kada kada vandi Kamatchi vandi
Chakka-de madalum Changun’yarum
Chaturbhujam chaturbhujam
The train has a lullaby for
each sleeping child

Pained
the arriving train
is for you;
more anguished
the one that just left
was for us
#traveller

மொழி புரியாத ஊரில்
வந்து சேர்ந்தவனின்
முதல் கவலை -
இவர்கள் மொழியில்
என் பெயர்
கெட்ட வார்த்தையாக
இருந்து விடக் கூடாதே

Entering the town
with an unfamiliar lingo,
with trepidation.
My name
should not be a
f-word in
their language.
#traveller

New novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 35 இரா.முருகன்

ஆல்பர்ட் மிடிங்டன் ரிச்சர்ட்சன் பிரபு நடுராத்திரிக்கு வழக்கம்போல் எழுந்து கொண்டார். அவர் உலவப் புறப்பட வேண்டிய நேரம் அது.

எழுந்ததும் தான் தெரிந்தது, அவர் கூடுதலாகவே உறங்கி விட்டிருந்தார் என்று. பொழுது புலர்ந்து கொண்டிருந்தது.

சலவை செய்த உடைகள் மர பீரோவில் இருப்பதை அவர் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவை எப்போதும் அணியத் தயாராக நானூறு வருடமாகப் புதியதாக இருப்பவை. தினசரி அவற்றை உடுத்தே அவர் நடப்பார்.

மர பீரோவில் அவருடைய துணிகள் கசங்கிக் கிடக்க, இரண்டு பாதிரியார் அங்கிகளும், கால் சராய்களும் உள்ளே உடுக்கும் துணிகளும் நடுநாயகமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. கீழ்த் தட்டில் ஒரு பெரிய தோல்பெட்டி நாராசமாக பயணவாடையைக் கிளப்பிக் கொண்டு பாதி திறந்து கிடந்தது. அதைச் சுற்றி அழுக்கான, வியர்வை உலர்ந்த காலுறைகள். கசங்கிச் சுருண்ட கைக்குட்டைகள். புழுதி படிந்த இரண்டு ஜதை காலணிகளும் கூட அங்கே உண்டு. ஆக, நானூறு ஆண்டு பழமையுள்ள அலமாரியும் பறிபோனது இன்று.

இது ஏர்ல் ஓஃப் ஃபோர்ட் லில்லியென்ற அல்லிக் கோட்டை பிரபுவான ஆல்பர்ட் ரிச்சர்டன் அவர்களின் சபிக்கப்பட்ட பொழுதாக இருக்கக் கூடும்.

ஒரு ராத்திரி விடாமல் தினம் தூய்மையான ஆடைகளை அணிந்து, காலில் தூசு இல்லாமல் மின்னும் படியாகத் துலக்கிய பாதுகைகளையும் இட்டுக் கொண்டு அவர் நீள நெடுக நடக்க வேண்டும். கீழ்வீடு முழுவதும், படியேறி மாடியிலும், வெளியே சிறு தோட்டத்திலும் காலாற உலாவ வேண்டும். ஓர் அறையிலிருந்து மற்றொன்றுக்குள், ஜன்னலை விரியத் திறந்து பிரவேசிக்க வேண்டும்.

எதற்காக அதை எல்லாம் செய்ய வேண்டும்? இன்று அவரால் முடியாது. என்ன பயித்தியக்காரத் தனம்? செய்யச் சொல்லி யார் விதித்தது?

கோபம் தலையேற அவர் வெளியே வரும்போது கதவு அடித்துச் சார்த்திக் கொள்ளும். காற்றால் மரக் கதவும் ஜன்னலும் மூடியதாகவும் திறந்ததாகவும் நினைக்கிற மனிதர்களுக்கு அவ்வப்போது தன் உருவத்தைக் காட்டித் தருவார்.

எதற்காக? ஆல்பர்ட் பிரபுவின் அந்தரங்க உறுப்பு ரோமத்தை விட இழிவானவர்கள் அவர்கள். அவருக்கு அப்படி ஒரு உறுப்பு தற்போது, ஒரு நானூறு வருஷமாக இல்லை தான். ஆனால் என்ன? அவருடைய சரி சமானமாக இங்கே பிருஷ்டத்தை வைக்க எவனுக்குத் தகுதி உண்டு. இந்த நாட்டை ஆளுகிற பக்கிங்ஹாம் வம்ச ராணியம்மாள் கூட இங்கே படியேற அருகதை இல்லாதவள். அவளை ஒரு நாள் அரண்மனைக்குப் போய்ப் பயமுறுத்தினால் என்ன?

ஏர்ல்ஸ் கோர்ட் வீட்டில் நாலடி நடக்கவே சோர்ந்து வருகிறது. அரண்மனைக்குப் பூச்சாண்டி காட்டப் போவதாவது ஒன்றாவது. ஆல்பர்ட் பிரபு போகத் தகுந்ததா அது. இந்த வீட்டின் கழிப்பறை அந்தஸ்து பெறுமா பக்கிங்ஹாம் அரண்மனை?

வீட்டு முன்னறையில் இரண்டு ஜோடி காலணிகளைப் பார்த்தார் ஆல்பர்ட் பிரபு. புதியதாகத் தெரியும், நல்ல தோலில் செய்யப்பட்ட, ஆண்கள் அணியும் பாதரட்சை ஒரு ஜோடி. எந்த நிமிடமும் அடிப்பாகம் அற்று விழுந்து உபயோகிப்பவரைத் தரை தொட வைக்கும் நைந்த ஜோடி மற்றது.

ஆல்பர்ட் பிரபு புன்னகை புரிந்தார். அவருக்கு நைந்த இந்தக் காலணிகளைத் தெரியும். பாதிரியார்களும் பிஷப்புகளும் அணிகிறவை அவை. நானூறு வருடமாக அப்படித்தான். இந்த வீட்டுக்குள் முன்னொரு முறை படியேறி வந்தவை. கூட இருக்கும் புதுச் செருப்புகளை அணிந்தவனையும் அவருக்குத் தெரியும்.

பாதிரியார் போன தடவை வந்தபோது கூடவே ஒரு செழிப்பான இந்தியப் பெண் வந்தாளே? அவள் என்ன ஆனாள்?

யாரும் எக்கேடும் கெட்டுப் போகட்டும். ஒரு நாளா, ரெண்டு நாளா, நானூறு வருஷமாகத் தினம் தினம் வழக்கமாக நடந்ததை இன்றைக்குத் தாறுமாறாக்கியது யாராக இருக்கும்?

இப்படி யார் யாரையோ வீட்டுக்குக் கூப்பிட்டு அரிசி வடித்துக் கொட்டித் தின்ன வைத்து ராத்திரி முழுக்க விளக்கைப் போட்டுக் கொண்டு கூட்டாலோசனை செய்து கொண்டிருக்கிறவன் தான் காரணம்.

இந்த வீட்டுக்குள் அவன் வந்தது முதலே ஆல்பர்ட் பிரபுவை மதிக்கிறதுமில்லை. கண்டு கொள்வதும் இல்லை. வீட்டுச் சொந்தக்காரர், நானூறு வருஷம் முன் மகா பிசகாக ஏதோ செய்து சமுத்திரத்தில் கப்பல் முழக மரித்தாலும் இன்னும் கடைத் தேறாத ஆவி என்பதெல்லாம் மூத்திரம் போவது போல அற்பக் காரியம் அவனுக்கு.

வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இந்த ஆவி சமாசாரத்துக்கு பக்கிங்ஹாம் அரண்மனை ராணி கூடப் பயப்படுவாள். என்னத்துக்கு அந்த அம்மாள் நினைவு?

வாசலை ஒட்டித் தணிந்த நிலைப்படி இருந்த அறையில் விளக்கு எரிகிறது. ஆல்பர்ட் பிரபு பார்த்துப் பார்த்து வடிவமைத்து, ஷாண்லியர் விளக்கு போட்டால் தலையில் முட்டும் என்று மெழுகுவர்த்தி நிறுத்தி வைக்க செப்புக் கிண்ணம் சுவரில் மாட்டிய அருமையான அறை. மெழுகுவர்த்தி வைக்க வந்த பணிப் பெண்களான எமிலி, ரீத், ஹன்னா, ரொபர்ட்டா, கிரேசி, டெய்சி, ஹெலன், கிளாரா, எடித், மரியா, ரூத், ரீகன், ஹென்றியெட்டா, சாரா, ஜூலியா, லியன், கரோலின், விர்ஜீனியா, சூஸன், ரேஷல், வொயலட் என்று எத்தனை பேரை சுவரில் சாய்த்து நிறுத்தி வைத்து சுகம் கொண்டாடி இருக்கிறார் அவர். லாரன்ஸா, கானரில், லில்லி, காதரின், நான்சி, ஷார்லெட், லோலா, ஈவா, ரெபக்கா, ஜென்னி, ஸ்டெல்லா, மேகி, ஏஞ்செலா, ரோஸ், சில்வியா, பார்பரா, ஆட்ரி, லிண்டா, எலிஸா, நவோமி, செல்மா, இசபெல், ஓபல், எம்மா என்று அவரோடு சுகித்த உறவுக்கார, அண்டை அயல் பெண்களையும் மறந்து விட முடியுமா? தினமும் இதில் யாராவது ஒருத்தியின் பிரத்யேக வாடையோடு தான் ராத்திரி முழுக்க இங்கே மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது.

அவர்கள் எல்லோரும் கல்லறைக்குப் போய் எலும்பும் பொடிபொடித்து அந்திம நித்திரையில் இருக்கிறார்கள். தினசரி அலைவது ஆல்பர்ட் துரைக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. தாமதமானாலும் அவர் நடந்து போய்த் தான் ஆக வேண்டும்.

கூடத்தில் சரவிளக்கு பாதிக்கு மட்டும் வெளிச்சம் வர எரிந்து கொண்டிருந்தது. ஆல்பர்ட் பிரபு தினசரி மிடுக்காக நடந்து வலது புறம் திரும்பும் இடத்தில் போட்டு வைத்த பெரிய மர மேஜையைச் சுற்றி மூன்று வேலைப்பாடமைந்த நாற்காலிகள்.

மேஜையும் நாற்காலிகளும் ஆல்பர்ட் பிரபு காலத்து மரவேலைப் பொருட்கள் போல் தோன்றவில்லை அவருக்கு. அவருடைய சந்ததியினர் வாங்கி வைத்திருக்கலாம்.

குடியும், சதா பெண் மோகமுமாக அலைந்து ஐவேசு சொத்தை எல்லாம் கரைத்த அந்த அயோக்கியர்கள் மேஜை வாங்கியா போட்டிருப்பார்கள். ஆல்பர்ட் பிரபு அவர்களுடைய அரைக்குக் கீழே புழுத்துத் தொங்கவும் வலிக்க வலிக்க அறுந்து விழவும் சபித்த பிற்பாடே அவருடைய சந்ததி அவரோடு முடிந்த விவரம் நினைவு வந்தது.

மூன்று மர நாற்காலிகளில் இரண்டில் பாதிரியார்கள் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருத்தர் ஏற்கனவே ஆல்பர்ட் பிரபு சந்தித்திருந்த பிரஞ்சுக் காரர். இன்னொருத்தனுக்கு முழுக்க இந்தியக் களை. ஆனாலும் பாதிரி உடுப்பு. இங்கிலாந்தில் பூசை வைக்கிறவன் இல்லை போல. இந்தியாவில் இருந்து வந்திருப்பானோ?

அந்த வைதிகன் எங்கே இருந்து வந்திருந்தாலும், இப்படி ஆல்பர்ட் பிரபு மாளிகையில் சர்வ சுதந்திரத்தோடு இருந்து சௌக்கியப்பட அவனுக்காகி இருக்கிறது. இருக்கட்டும். கருத்த பாதிரிகள் வாழ்த்தப்படட்டும்

மூன்றாவது நாற்காலியில் அந்த இந்தியப் பேராசிரியன், அவன் தான் வீட்டில் சட்டமாக குடி வந்தது மட்டுமில்லாமல், ஆல்பர்ட் பிரபுவின் ராத்திரி நேர சஞ்சாரங்களை ஒரு பொருட்டாக மதிக்காத மனுஷன். மந்திரவாதியோ என்னவோ. ஆல்பர்ட் பிரபுவை மந்திரத்தால் ஒரு சிறு மரச் செப்பில் அடைத்து தேம்ஸ் நதியில் மிதக்கவோ அமிழ்ந்து போகவோ கொண்டுபோய் விடக்கூடும். மரச் செப்புகள் இன்னும் கிடைக்கின்றனவா என்று அவருக்குத் தெரியவில்லை.

பிரபு இந்த மூன்று பேருக்கும் அருகில் போய் நோட்டமிட்டார். மூவரும் மேஜையில் தலை வைத்து அசந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். பக்கம் பக்கமாக எழுதி அடுக்கிய ஏதோ அவர்கள் அருகில் இருந்தது. இங்கிலீஷில் தான் எல்லாம்.

ஆல்பர்ட் பிரபு காலத்துக்கு அப்புறம் நிறைய நல்லது நடந்திருக்கிறது. முக்கியமான ஒன்றுண்டு. இந்தியாவுக்குள் புனிதமான அடியெடுத்து நுழைந்து, மேன்மை தாங்கிய ஆங்கிலேயப் பேரரசு அங்கே ஜனங்களுக்கு எல்லாம் இங்கிலீஷ் கற்றுக் கொடுத்துக் கடைத்தேற்றியதே அது. அப்படி நடக்காமல் இருந்தால் இந்த மூன்று பேரும் சட்டமாக உட்கார்ந்து இங்கிலீஷ் என்ற தேவ மொழியில் கத்தை கத்தையாக எழுதிக் குவிக்க முடியுமா என்ன?

மூன்றில் ஒருத்தர் பிரஞ்சுக் காரர் இல்லையோ? மிகச் சரிதான். பிரஞ்சுக் காரர்களுக்கும் காலம் காலமாக இங்கிலாந்து பேரரசு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்து, இங்கிலீஷ் பண்பாட்டைப் போதித்து வருகிறது. சதா பெண்களோடு சிருங்காரம் பாராட்டுவதிலும், நான்கு நாள் ஒயினும் மீனும் உலர்ந்து துர்வாடை அடிக்கும் அவர்களின் வாய்க்குள் நாவு நுழைத்து முத்தம் கொடுப்பதிலும் மட்டுமே சிரத்தை கொண்ட பிரஞ்சுக் காரர்களுக்கு இங்கிலீஷ் வரவேயில்லை.

ஆல்பர்ட் பிரபுவுக்கு பிரஞ்சுப் பெண்களின் வாய் நாற்றம் அனுபவம் உண்டு, மாளிகையில் அவ்வப்போது வேலைக்கு வந்த பிரஞ்சு பணிப்பெண்களுக்கு அவரும் பிரஞ்சு முத்தம் கொடுத்துப் பெற்றிருக்கிறார். அவர்கள் குளிக்கச் சோம்பல் பட்டவர்கள். அந்த உடல்வாடைக்கே அவருக்கு மீண்டும் உடல் எடுக்க ஆசை.

கிடக்கட்டும். இந்த பிரஞ்ச் பாதிரியாருக்கு சிநேகிதிகள் இருக்க மாட்டார்கள் என்பதால் அவருடைய இங்கிலீஷ் அறிவு சொல்லும் தரத்தில் இருக்கக் கூடும்.
இப்படியான சிந்தனைகளோடு நகர்ந்து, முதல் அறைக்குள் எட்டிப் பார்த்தார் ஆல்பர்ட் பிரபு. மேசை மேல் உடம்பைக் குறுக்கிக் கொண்டு கருப்பன் உறங்கிக் கொண்டிருந்தான். இவன் போன முறை பார்த்தபோது முட்டக் குடித்து விட்டு இந்தக் கென்ஸிங்டன் வீட்டுப் படியேறி இருந்தான். இப்போது குடித்தானா என்று தெரியவில்லை. ஆனால் உறக்கத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறான்.

ஆல்பர்ட் பிரபு உள்ளே நுழைந்து அவன் தலையில் கை வைத்தார். இது பனிக்கட்டியைக் கவசம் செய்து தலையில் கவிழ்த்தாற்போல் ஒரு குளிரை உடலெங்கும் பரவ வைக்கும். அவன் எழுந்து உட்காரட்டும். சத்தம் போடுவானோ தெரியவில்லை. என்றால், ஆல்பர்ட் பிரபுவுக்கு சத்தம் உகந்ததில்லை.

தெரிசா நீ மன்னிக்க நேரம் வந்திருக்கு. என்னை மன்னிச்சுக்க தெரிசா.

ஆசியக் களையுள்ள அவன் யாரிடமோ எதற்கோ மன்னிக்கச் சொல்லி நல்ல இங்கிலீஷில் மன்றாடுகிறான். அவனுடைய வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்ற வந்த சேடியோ? அவள் பிரஞ்சுக்காரியாக இருப்பாளோ?

அவன் எழுந்து உட்கார்ந்து கண்ணை மூடியபடியே ஆல்பர்ட் பிரபுவின் புகை வடிவெடுத்த கை மேல் தன் கரத்தை வைத்து இன்னொரு முறை அழும் குரலில் சொன்னான் –

உன் மேலே பிரியம் இருந்த காரணத்தாலே தான் இதைச் சொல்லாமலேயே இருந்துட்டேன். நான் செஞ்சது தப்பு தான் தெரிசா. என்னை மன்னிக்கணும் நீ.

ஆல்பர்ட் பிரபு கம்பீரமும், பொறுப்பும் கருணையும் இடைகலந்த குரலில் சத்தம் தாழ்த்தி அவனிடம் சொன்னார் –

நான் தெரிசா இல்லை. லார்ட் ஆல்பர்ட். நானூறு வருஷமா உலவறேன். இது என் வீடு.

அப்போது அவருடைய கையை இறுகப் பற்றிக் கொண்டு அவன் சொன்னது –

நல்லது. நீங்க எனக்கு பாவமன்னிப்பு தரணும். நானூறு வருஷம் பழையவர். அதுனாலே புனிதமானவர். பழையது எல்லாம் பரிசுத்தம் ஆனது.

பாவ மன்னிப்பு தர இந்த வீட்டுலே ஒண்ணுக்கு ரெண்டு பாதிரிமார் இருக்காங்களே. ஒருத்தர் பிரஞ்சுக் காரர், மற்றவர் இந்தியர்.

அமேயர் பாதிரியார் ப்ரஞ்சுக்காரர் . அவரோடு தான் இங்கே வந்தேன்.

அவர் கிட்டேயே கேட்கலாமே.

அவர் கோவில்லே பூசை வைக்கிறதை நிறுத்தச் சொல்லியிருக்காங்க.

யாரு?

டயோசிஸ்லே, மறை மாவட்ட நிர்வாகம் அவரை தாற்காலிகமா குரிசுப்பள்ளி ஊழியத்தை விட்டு ஒதுங்கி இருக்கச் சொல்லுது. அவிசுவாசின்னு சந்தேகப்படுது. விளக்கம் கேட்டிருக்கு.

இருக்கட்டுமே, பாதிரியார் பாதிரியார் தானே?

ஆமா, ஆனா அவர் வத்திகனுக்குப் போயிட்டு இருக்கறவர்.

அவிசுவாசி எதுக்கு வத்திகன் போகணும்?

அவர் அவிசுவாசி இல்லே, அழுத்தமான இறை ஊழியர்னு விளக்கிக் கடிதம் எழுதத் தான் அவங்க மூணு பேரும் உக்காந்திருக்காங்க.

இப்போ உறங்கிட்டிருக்காங்க.

தொடர்ந்து எட்டு மணி நேரம் லத்தீனில் பேசி, எழுதி வந்த களைப்பாக இருக்கும்.

நீயும் உறங்க வேண்டியதுதானே? நான் இங்கே காலாற நடக்கக் கூட இடம் விடாம நீங்க எல்லோரும் கெடுத்திட்டீங்க.

ஆல்பர்ட் பிரபு அலுத்துக் கொண்டார்.

அவன் இந்திய பாணியில் அவரை இரு கரம் கூப்பிக் கும்பிட்டுக் கேட்டான் –

துரையவர்கள் யாருன்னு புலப்படலே. அமேயர் பாதிரியாருக்கு உறவா?

பாதிரியாருக்கு எப்படி உறவு இருக்க முடியும்?

மன்னிக்கணும்.

அதைச் சொல்லியாச்சு.

ஆமா, ஆனா உங்க கிட்டே சொல்லலே. தெரிசா கிட்டே சொன்னேன்.

நான் கேட்டதாலே, என்கிட்டே சொன்னதாகவும் அர்த்தமாகும்.

அப்படியா?

அப்படித்தான்.

நீங்க பாதிரியார்னே வச்சுக்கட்டா?

எதுக்கு?

நான் பாவம் செஞ்சுட்டேன்.

பாவத்துக்கும் பாதிரியாருக்கும் என்ன சம்பந்தம்?

அவர் தான் பாவியை மன்னிப்பார்.

அது பாவம் இல்லேன்னா?

அதையும் அவர் தான் சொல்லணும்.

நீ என்ன பாவம் செஞ்சே?

நீங்க பாதிரியாரா இருக்கத் தயார்னா சொல்றேன்.

நான் நானூறு வருஷமா எதுவுமாகவும் இல்லே.

பரவாயில்லே, இந்த நிமிஷத்திலே இப்படி வந்து பேசிட்டு இருக்கீங்களே. இது போதும்.

பாவ மன்னிப்பு கேட்க நீ என் பார்வையிலே படும் மாதிரி இருக்கக் கூடாது. எனக்குக் கண் இல்லேன்னாலும் பார்க்கறேன்.

சரி நான் அடுத்த அறையிலே போய் அங்கே இருந்து பாவம் சொல்லட்டா?

அங்கே போய்க் கூச்சல் போட்டா வீட்டுலே, அடுத்த வீட்டுலே, தெருவிலே எல்லாரும் என்னன்னு கேட்டு வந்துடுவாங்க.

அங்கே எக்ஸ்டென்ஷன் ஃபோன் இருக்கே, அதுலே இருந்து பேசட்டுமா? நீங்க இங்கே எடுத்துக் கேட்கலாம்.

என்னாலே அந்த கருவியை எல்லாம் இயக்க முடியாது. நான் இருந்த போது அது இல்லை.

அப்போ நான் இப்படி கண்ணை மூடிக்கிட்டே உங்க கிட்டே சொல்றேன். நீங்க மன்னிச்சுடுங்க.

கேட்க முந்தி எப்படி மன்னிப்பேன்னு சொல்ல முடியும்?

மன்னிப்பை எதிர்பார்த்துத் தானே சொல்றது?

அது பாதிரியார்களுக்கு.

நீங்க இப்போ எனக்காக இந்த நிமிஷம் அப்படி இருங்க.

எனக்கு லத்தீன் மொழி தெரியாது. மன்னிப்பை லத்தீனில் தானே வழங்கணும்?

லத்தீனில் பாவ மன்னிப்பு தருவாங்கன்னு எனக்குத் தெரியாதே.

நீ அப்போ இதுவரை பாவம் செஞ்சதில்லை, அப்படியா?

இல்லே, இதுவரை மன்னிப்பு கேட்டதில்லை.

நீ கிறிஸ்துவன் தானே?

இல்லை, மற்ற மதம்.

அப்போ எதுக்கு மன்னிப்பு எல்லாம்?

பாவம் யார் செஞ்சாலும் கேட்கலாமே?

அதுக்கு பாதிரியார் எதுக்கு?

நீங்க தான் பாதிரியார் இல்லையே.

அவன் காரியமாகச் சொல்ல, ஆல்பர்ட் பிரபு சத்தம் எழுப்பாமல் சிரித்தார். அவனை ஏனோ பிடித்துப் போனது. நானூறு வருஷமாக அவரிடம் யாரும் உதவி என்று கேட்டதில்லை. இன்றைக்கு இந்த மனுஷன் அவரைப் பாதிரியார் ஆக்கியிருக்கிறான். அலமாரியில் கடற்படை மேலதிகாரியின் சலவை உடுப்புகள் கிட்டாமல் எதையோ அணிந்து வந்திருப்பதால், அவருக்கே தான் யாரென்று குழம்புகிறது. நேரம் வேறே விரைந்து கொண்டிருக்கிறது. அவர் மறுபடி உறங்கப் போக வேண்டும்.

சொல்லலாமா? அவன் கேட்டான்.

முதல்லே உன் பேரைச் சொல்லு.

முசாபர்.

முழுப் பெயர் அதுதானா?

முசாபர் உல்ஹக் ஸபர்.

ஸபர் குடும்பப் பெயரா?

புனைப்பெயர். கவிதை எழுத வச்சிக்கிட்டது.

கவிதை எல்லாம் எழுதுவியா?

ஆமா?

அப்புறம் எப்படி பாவமன்னிப்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கறே?

இப்போ எழுதறதில்லே.

என்ன மாதிரி கவிதைகள்?

உருதுவிலே காதல் கவிதைகள்.

யார் மேல்?

தெரிசா மேல்.

அதுக்குத் தான் மன்னிப்பு வேணுமா?

அதுக்கும். அந்தக் கவிதைகளை எழுதிய போது மெட்காஃப் உசிரோடு இருந்தான்.

யார் மெட்காஃப்?

தெரிசாவோட முதல் கணவன்.

கல்யாணக்காரி பற்றி காதல் கவிதை எழுதறது தப்பு இல்லையா?

அதுக்குத்தானே நீங்க மன்னிப்பு தரப் போறீங்க?

காதலுக்கா, கவிதைக்கா?

ரெண்டுக்கும் தான்.

காதலை மன்னிச்சுடறேன். மற்றதைப் பற்றிக் கடவுள் தான் தீர்ப்பு சொல்லணும்.

ஆல்பர்ட் பிரபு இல்லாமல் போய் நானூறு வருஷம் கழித்தும் வேறு மொழியில் கவிதை இருக்கிறதாம். அவருக்குப் பரிச்சயமான இங்கிலீஷிலும் கொஞ்சம் வித்தியாசத்தோடு அது இருக்கும். கல்யாணம் ஆன பெண்களைக் காமுறும் கவிஞர்கள் ஏர்ல்ஸ் கோர்ட் மதுக்கடையில் பியர் அருந்தியபடி சின்னச் சின்னதாகச் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

மன்னிச்சு முடிஞ்சுது. நான் போகறேன்.

இன்னும் நான் பாவமன்னிப்பு கோர இல்லையே.

இதுவரை சொன்னது?

இது இரண்டாம் நிலை பாவம். Collateral sin.

முதல் கட்டம் என்ன?

பத்து வருஷம் முன்பு நான் டோரதியோடு தேன்நிலவு பிரான்ஸ் போனேன்.

புரியலே.

என் முந்திய மனைவி டோரதியோடு பாரீஸ் போனேன்.

உனக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகி இருந்ததா?

ஆமா?

அந்த நிலையில் தான் இன்னொருத்தன் மனைவி பேரில் காதல் கவிதை எழுதினியா?

அதை நீங்க ஏற்கனவே மன்னிச்சாச்சு தானே?

சரி, வேறே என்ன மன்னிக்க இருக்கு?

நான் டோரதியோடு பாரீஸ் போனேன்னு சொன்னேனே.

அதை மன்னிக்க அதில் என்ன இருக்கு?

அவளோடு இருக்கும் போதும் அதாவது அந்தரங்கமாக இருக்கும் போதும் தெரிசாவை நினைத்துக் கொண்டிருந்தேன்.

மன்னித்தானது. அப்புறம்?

அவசரம் காட்டினார் ஆல்பர்ட் பிரபு. தெருவில் காலை நேரத்தின் ஓசைகள் உயர்ந்து கொண்டிருந்தன.

பாரீஸ்லே ஒரு சாலை விபத்தில் தெரு ஓரத்துச் சுவரில் என்னை அழுத்தி ஒரு ராணுவ வேன் மோதியது.

இது அசம்பாவிதம். வேன் ஓட்டுநர் தான் வருந்த வேணும்.

விபத்தில் என் உயிர்த் தலத்தில் அடி பட்டு இன விருத்தி செய்யும் ஆற்றல் அவிந்து போனது.

அனுதாபங்கள்.

அந்த விஷயத்தை தெரிசாவிடம் சொல்லாமலேயே அவளை மெட்காஃப் இறந்ததும் கல்யாணம் செய்து கொண்டேன்.

சரி அதுக்கு என்ன?

என்னவா? நான் பாவ மன்னிப்பு கேட்கிறேன்.

எதுக்கு?

சொல்லாமல் அவளை ஏமாற்றியது தப்பு இல்லையா?

எனக்குச் சரியாகத் தெரியவில்லை. எதற்கும் நீ அந்த ரெண்டு பாதிரியார்களிடம் நயமாக விசாரித்துப் பார். முறையற்ற காதலுக்கு உன்னை மன்னிப்பது மட்டும் நான் செய்தாகி விட்டது.

ஆல்பர்ட் பிரபு தீர்ப்பு வழங்கிய திருப்தியோடு வெளியேறும்போது கூடத்தில் கருப்பு இயந்திரம் தொடர்ந்து மணியடித்தது. எழுந்து, அதை எடுத்து ஸ்தோத்திரம் சொல்லிப் பேசினார் இந்தியச் சாயலுடைய பாதிரியார்.

அடுத்த சில நிமிடங்களில் அவர் மற்றவர்களை எழுப்பிக் கொண்டிருந்தார் –

எழுந்திருங்க. இது நற்காலையே தான். அமேயர் பாதிரியார் மேல் சுமத்தப்பட்ட எல்லா குற்றச்சாட்டுகளையும் வாதிக்கன் நிராகரித்திருக்கிறது. அமேயர் பாதிரியார் உடனே வாதிக்கனில் வந்து பணியில் அமரச் சொல்லி உத்தரவு.

பரிசுத்தரான அமேயர் பாதிரியார் முசாபர் உல்ஹக் ஸபரை மன்னிக்கட்டும்.

ஆல்பர்ட் பிரபு காற்று கடந்து போவது போல் தன் வீட்டுக்கு வெளியே மிதந்து வந்து எங்கும் படிந்து ஈரம் விதைத்துப் போன காலைத் தூறலில் கலந்து நகர்ந்தார்.

(தொடரும்)

New : உரைகொள் வெண்பா – சாக்பீஸ் அடிகொள் படிப்பு இரா.முருகன்

தொம்பங் கூத்தாடி அநாயாசமாக இரண்டு மூங்கில்களுக்கு நடுவே ஒரு பனை உயரத்தில் கட்டிய தாம்புக் கயிற்றில் நடந்தான். பிடி வழுக்காமல் கம்பம் ஏறி இறங்கினான். ஒரு கழியை விட்டு மற்றதற்கு நொடியில் தாவினான்.

பார்த்துக் கொண்டிருந்த திருடன் தொழில் கணக்கு போட்டான் – இவனைக் கூடச் சேர்த்துக் கொண்டு அரண்மனையில் திருடப் போனால் கை நிறைய, முதுகில் மூட்டை நிறையக் கொண்டு வரலாமே.

ஆளுக்குப் பாதி. ஒப்பந்தம் ஆனது. நடு ராத்திரி. அரண்மனை மதிலுக்கு அந்தப் பக்கம் இருட்டில் நின்றார்கள் ரெண்டு பேரும்.

‘விரசா ஆகட்டும்.. தாவி உள்ளே போ… இந்தச் சாவிக் கொத்து எந்தப் பூட்டையும் திறக்கும்…’

திருடன் சாவிக் கொத்தை நீட்டினான்.

தொம்பங் கூத்தாடி யாரையோ மும்முரமாகத் தேடிக் கொண்டிருந்தான்.

’நம்ப சோக்ராதான். பையன் திம்திம்முனு கொட்டினா நான் சரசரன்னு சுவர் ஏறிடுவேன்’.

டெக்னாலஜி நம்மை எந்த மதிலையும் கடந்து வென்று வரும் தொம்பங் கூத்தாடிகளாக்கி இருக்கிறது. பவர் பாயிண்ட் பிரசெண்டேஷன் ஒரு ஸ்லைடாவது இருந்தால் தான் பேச்சு வருகிறது. Death by power point – நான் அடிக்கடி செய்வது.

நேற்றும் செய்ய ஆயத்தமானேன்.

‘சார், ப்ரஜெக்டர் ஏதோ ப்ராப்ளம்.. மாத்தித் தரேன்’.

போனவர் வரவே இல்லை.

பார்த்தேன். பின்னால் வெள்ளை அக்ரலிக் பலகை. மார்க்கர் பேனாக்கள். முழுக்க ஒயிட் போர்டில் எழுதி விளக்கி, வரைந்து விவரம் தந்து பவர் பாயிண்டே இல்லாமல் வகுப்பு. சேம்பர் மியூசிக் கச்சேரி செய்த மாதிரி மனதுக்கு நிறைவாக இருந்தது.

ஒயிட் போர்டும், மார்க்கர் பேனாவும் தான் எதற்கு? சுற்றுச் சூழலை மாசு படுத்தும் இனங்கள் அல்லவோ இரண்டும்?

எல்லா நிறுவனங்களும் பள்ளி வகுப்பு போல கரும்பலகைக்கும் சாக்பீஸுக்கும் மாறினால் இன்னும் அந்நியோன்யமாக இருக்கும்.

பாடம் நடத்திக் கொண்டே, சாக்பீஸை உயர்த்திப் பிடித்து, கேரம் போர்ட் காயை அடிப்பது போல் சாக்பீஸின் தலையில் சுண்டி அந்தத் துண்டு கடைசி வரிசையில் பேசிக் கொண்டிருந்த சோமசுந்தரம் மேல் சரியாகப் போய் விழ, ‘பாடத்தைக் கவனி’ என்று கண்டித்தபடி க்வாட்ராடிக் ஈக்வேஷனைத் தொடர்ந்த எங்க ப்ரபசர் மாதிரி நானும் ஒரு நிமிடமாவது மாற ஆசைதான்.

பவர்பாய்ண்ட் திரையில் பலகதை பேச்சில்
உவப்பர் உறங்குவோர் ஓர்மை அவைநீங்கிப்
பாக்கள் இயற்றும் பழைய நினைவுவரும்
சாக்பீஸ் அடிகொள் படிப்பு.