Monthly Archives: January 31, 2014, 11:49 am

பகல் பத்து ராப் பத்து – அத்தியாயம் 4

பகல் பத்து ராப் பத்து இரா.முருகன்

அத்தியாயம் 4

ராமபத்ரன் ஓபராய் ஓட்டலை ஒட்டி நிழலில் நின்றார்.

டிபன்வாலா நேரம் தவறாமல் கொண்டு வந்து கொடுத்த காரியரில் வத்தல் குழம்பும் தயிர் சாதமும் சாப்பிட்ட திருப்தி.

நல்ல வேளையாக அகிலாண்டம் புளியோதரை வைக்கவில்லை.

‘சூனாம் தே..’

தட்டுக்கடைக்காரன் டூத் பேஸ்ட் போல ட்யூபில் அடைத்த சுண்ணாம்பை நீட்டினான்.

கடற்காற்று மெரின் டிரைவ் பக்கமிருந்து சீராக வீச ஆரம்பித்திருக்கிறது.

மணி பார்த்தார். இரண்டு முப்பது.

இன்னும் ஒரு பதினைந்து நிமிஷம் நிம்மதியாக ‘முறுக்க’லாம்.

தஞ்சாவூரிலிருந்து இருபத்தைந்து வருஷம் முன்னால் கிளம்பி வந்தபொழுது நாக்கில் புரண்ட தமிழில் ‘முறுக்குவது’ இல்லை. ‘வெற்றிலை போடுவது’ தான்.

பிரக்ஞையில் உரைக்காமலேயே தஞ்சாவூர்த் தமிழ் பாலக்காடாகி விட்டது. .. ‘கேட்டியா?..’ …’’ட்டேளா’ … ‘ வந்துட்டில்லே..’ …’சவட்டித் தள்ளு..’…

எதிர்த்த பேங்கில் முகப்பை இடித்துக் கொண்டிருந்தார்கள்.

கம்ப்யூட்டர் வைக்கப் போகிறார்களாம்.

சகலத்துக்கும் கம்ப்யூட்டர்.

கண்பத்ராவ் மளிகைக் கடையில் சுக்கு வாங்கினால் கூட, கம்ப்யூட்டர் பில்லைக் கிழித்து நீட்டுகிறான்.

கண்பத்ராவும் ராமபத்ரனின் குடியிருப்பில், முன்னூற்றுச் சொச்சம் சதுர அடியில் சுவாசித்துக் கொண்டிருந்தவன் தான். அது இருபது வருஷம் முன்னால்…

அரண்மனை போல வீடும், ஆஸ்துமாவுமாக அமர்க்களமாக இருக்கிறான் இப்போது..

சுக்கும் மிளகும் விற்றுக் கட்டின வீடு..

ராமபத்ரன் பற்றுவரவு நோட்டில் பதிந்து மளிகை வாங்கி, மாதம் பிறந்ததும் அடைத்துக் கொண்டு, அதே குச்சில் தான் சுகவாசம்.

அரைகுறையாக உடையணிந்த பெண்கள், டர்க்கி டவலால் லேசாக மாரை மறைத்து, வெளிநாட்டுக் காரில் வந்து இறங்கியதை வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே பார்த்தார்.

நாரி ஸ்தனபார தர்சனம் என்று இந்த நிமிஷத்துக்கு ஜாதக பலன் போல… எல்லோருக்கும் குளிர் விட்டுவிட்டது.

டெலிவிஷனில் பாதி நேரம் சதைபிடிப்பான முலைகளும் பிருஷ்டங்களும் தான் குலுங்கிக் கொண்டிருக்கின்றன.

கண்ணியமானவர்கள், ‘எனக்குப் பிடித்த பிருஷ்டங்கள் உள்ள அழகி இவள்’ என்று கொடுத்த தகவலை, பளபளப்பான இங்கிலீஷ் பத்திரிகைகளில் மூணு பக்கம் சர்வேயாக, உறுதி செய்கிற புகைப்படங்களோடு போடுகிறார்கள்..

கையில் நாலு பலூன்களைப் பிடித்தபடி, அராபிய ஷேக் பின்னால் ஓடி விற்க முயன்ற கந்தல் சட்டை குழந்தை, அவன் ’வேண்டாம்’ என்றதும், வயிற்றைத் தொட்டுக் காட்டி கையை விரித்து நீட்டுகிறது.

தொளதொள உடுப்பில் எங்கேயோ தேடி எடுத்து பைசாவை வீசிவிட்டுப் போகிறவன் ஒரு பார்வைக்கு தப்ளாம்புதூர் பஞ்சாபகேச சாஸ்திரி ஜாடையில்..

தஞ்சாவூரும் தப்ளாம்புதூரும் எப்போதாவது நினைப்பில் தலைகாட்டுவதோடு சரி. தப்ளாம்புதூர் காரைவீடு விற்று வந்த தொகை இங்கே ஃப்ளாட் வாங்கியதில் கரைந்து விட்டது. தஞ்சாவூரிலிருந்து இருபத்தைந்து வருஷம் முந்தி மடிசார் கட்டோடு கல்யாணம் பண்ணிக் கூட்டி வந்த அகிலாண்டம், சரளமாக மராத்தியில் பொரிந்து தள்ளுகிறாள்.

புனாவில் படிக்கிற ஒரே பிள்ளை லீவில் வரும்போது, ஆவக்காயோடு தமிழையும் தொட்டுக் கொள்கிறான்.

ஆபீஸில் சகல லோனும் வாங்கி, முதல் வருடப் படிப்பு முடிந்து என்ஞினியரிங் இரண்டாம் வருடம்.

முழுசும் முடிந்த பிறகும் இந்த உத்தியோகம் சீராகத் தொடர வேண்டும்.

அப்புறம்… அப்புறம் என்ன..

ஆயுசு முடிகிறவரை இனிமேல் இங்கேதான்.

முன்னூற்று ஐம்பது சதுர அடியில் காலண்டர் மாட்டிக் கிழித்து, விநாயக சதுர்த்திக்கு ஊரோடு பத்து நாள் கொண்டாடி, சௌபாத்தியில் சமுத்திரத்தில் கரைக்க விசர்ஜன் ஊர்வல லாரியில் வைத்து, தீபாவளிக்கு யாரோ கொடுத்த வாதுமைப் பருப்பும் கெட்டி அல்வாவும் தின்று வயிறு பொருமி, மழைக் கோட்டு கிழியக் கிழியத் தைத்துக் கொண்டு, கம் பூட்ஸுகளைப் பத்திரிகை சுற்றி அடுத்த மழைக் காலத்துக்குப் பாதுகாப்பாக முடக்கி, பேப்பரில் சுற்றித் தரும் பொடேடோ வடா, இஞ்சி அதக்கிக் கலந்த சாயாவோடு ருசித்து, கனவிலும் வரிசை தப்பாது வரும் ஸ்டேஷன்கள் வழியே தினசரி போய் வந்து, கோயில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தி, பங்கு மார்க்கெட்டில் சின்னதாகக் கோட்டை விட்டு, கேபிள் டிவியில் இந்தி டப்பிங்கில் ‘ரோஜா’ படம் தூக்கம் வருகிறவரை பார்த்து..

மழைக்காலத்தில் எல்லாம் யார் யாருக்கோ சாவு விழ, குடை பிடித்துக் கொண்டு போய் வந்த இந்த ஊர் மசானம்.. ஈர விறகு.. இந்தியில் சண்டை பிடிக்கிற, மாடுங்கா சங்கர மடவாசல் புரோகிதர்கள்… சூனாம்பட்டில் பத்தாம் நாள் காரியம் நடக்கிற இடம். கால் அலம்பி திரும்ப நுழைகிற ராமபத்ரனின் மூன்றாம் மாடி ஃப்ளாட்… இரண்டு பேர் சேர்ந்து நடக்க முடியாதபடி குறுகிய மாடிப்படி..

மூச்சு நின்றால் அந்தப் படி வழியே எப்படி இறக்குவார்கள்? ஒருக்களித்தாற்போல் பிடித்துக் கொண்டு.. ஜாக்கிரதை.. ஜாக்கிரதையா..

யோசித்தபடியே தெரு திரும்பி, ஏர் இந்தியா கட்டடம் வரை வந்து விட்டார்.

போன வருஷம் மார்ச் பனிரெண்டாம் தேதி இந்த நேரத்தில் பம்பாய் பற்றி எரிந்தபோது இங்கே வெடிகுண்டு வெடித்துக் கருகிய உடல்களை வரிசையாகத் திணி மூடி எடுத்துப் போனது சட்டென்று நினைவின் விளிம்பில் எட்டிப் பார்த்தது.

அப்படி எல்லாம் போகக் கூடாது.. இறக்கி எடுத்துப் போகச் சிரமப் பட்டாலும் பரவாயில்லை..சொந்த வீட்டில் தான்..

ஸ்டேட்டஸ் ஓட்டலில் நுழைந்து, ஒரு காப்பி குடிக்கலாம என்று தோணல்..

வேண்டாம்.. சரிப்படாது.. பத்து ரூபாய் பழுத்து விடும்.. காண்டீன் சாயாவே போதும்.

திரும்ப ஆபீஸில் நுழைந்தபோது ‘சின்ன கோகலே சாப்’ கூப்பிடுவதாக அட்டெண்டர் தாய்டே வந்து சொன்னான்.

சின்ன கோகலே நாளைக்கு ஸ்விட்சர்லாந்து போகிறான். வர ஒரு மாதம் ஆகும். மூத்த கோகலே கிட்டத்தட்ட சாய்வு நாற்காலியும் கட்டிலுமாக முடங்கி விட்டார். நடுவாந்திர கோகலேவுக்கு பிசினஸ் ஒரு எழவும் தெரியாது.

‘மிஸ்டர் அய்யர்.. நீங்க தான் கூட இருந்து பார்த்துக் கொள்ளணும்..’

ஜாதகத்தில் அடிமை உத்யோகம் என்று தீர்க்கமாக எழுதியிருக்கிறது.

இருபத்தெட்டு வருஷம் முன்பு தஞ்சாவூரிலிருந்து டிரங்க் பெட்டிக்குள் பிட்மென்ஸ் ஷார்ட் ஹேண்ட், சவுந்தர்ய லஹரி, சர்ட்டிபிகேட்கள், ட்வீட் பேண்ட், கோவிந்தா மஞ்சள் சட்டையோடு கிளம்பி வந்து, மாடுங்கா கன்சர்னில் மோர்க் குழம்போடு சாப்பிட்டுக் கொண்டு, முன்னூறு ரூபாய் சம்பளத்தில் ‘கோகலே அண்ட் கம்பெனி’யில் சேர்ந்ததிலிருந்து, தலைமைக் குமஸ்தனானது வரை அதேபடி தான்…

அப்போது ஆபீஸ் ஜி.பி.ஓ பக்கம் வெட்டிவேர்த் தட்டியும், நாலைந்து பெடஸ்டல் ஃபேனும், ரெமிங்டன் டைப்ரைட்டருமாக ஒரு பழைய கட்டடத்தில்…

‘மிஸ்டர் அய்யர்.. கம்ப்யூட்டர் செக்‌ஷன் பிள்ளைகள் என்ன கேட்டாலும் சாங்க்‌ஷன் செஞ்சுடுங்க.. காலம் மாறிக் கொண்டிருக்கு.. இந்தக் கம்பெனியையே அவங்க தான் தாங்கறாங்க..’

சின்ன கோகலே தங்கப் பல் தெரிய சிரித்துக் கொண்டே சொன்னான்.

டைப்பிஸ்டாகச் சேர்ந்து, விரல் நுனிகளில் கம்பெனியைத் தாங்கிய ராமபத்ரன்…

கண்ணாடிச் சுவர் தடுப்புக்கு அந்தப் பக்கம் தெரியும் டெர்மினல்களையும், மல்ட்டிப்ளக்ஸர்களையும் அவற்றோடு இழையும் ‘வாண்டுப் பசங்களை’யும் அசிரத்தையாகப் பார்த்தபடி ஷார்ட் ஹேண்ட் புலி வெற்றிலை மெல்லுகிறது.

புலிக்குப் பிறந்ததும் நாளை அவர்களின் பாஷை பேசும்.

’பழைய டைப்ரைட்டரை எல்லாம் ஏலத்தில் விடச் சொன்னேனே.. மறந்துட்டீங்களா? சும்மா கொடுத்தாலும் பரவாயில்லே.. சதுர அடிக்கு இருபதாயிரத்துக்கு மேலே விலை கொடுத்து வாங்கின இடத்தை அடைச்சுக்கிட்டு.. அடுத்த வாரம் இன்னும் நாலு கம்ப்யூட்டர் வருது.. உள்ளே வைக்கணும்..’

சின்ன கோகலே சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு ராமபத்ரனுக்கும் நீட்டினான்.

‘வேணாம்’.

எந்த துர்ப் பழக்கமும் இல்லாமல் நாற்பத்தொன்பது வயது கடந்து விட்டது. வெற்றிலை அந்தப் பட்டியலில் வராது.

‘உங்க கோயில் கட்டி முடிச்சாச்சா?’

வாய் நிறையப் புகையை விட்டுக் கொண்டு சின்ன கோகலே கேட்டான்.

‘வேலை நடக்குது..’

‘சார்’ என்று சேர்க்கத் தோன்றவில்லை.

‘திரும்பினதும் ஐம்பதாயிரத்து ஒண்ணு ரூபாய்க்கு செக் போட்டுத் தரேன்.. போகிற காரியம் ஜெயமாகட்டும்.. இந்த சாஃப்ட்வேர் பிபிஓ மட்டும் க்ளிக் ஆனா நாம எங்கேயோ போயிடுவோம்..’

‘விஷ் யூ ஆல் தி பெஸ்ட்.. தேங்க் யூ சார்’.

‘அய்யர் .. உங்க டேபிள்ளேயும் ஒரு கம்ப்யூட்டர் வைக்கச் சொல்றேன்.. நேரம் கிடைக்கறபோது வேர்ட் ப்ராசசிங்.. எக்செல் ஸ்ப்ரெட் ஷீட் இப்படிச் சின்னச் சின்னதா கத்துக்கிட்டா உபயோகமா இருக்கும்.. பசங்க யாரைக் கேட்டாலும் பொறுமையா சொல்லிக் கொடுப்பாங்க.. இவங்க எல்லாரோட அப்பன்மாரும் உடுப்பைக் கழட்டின நேரம் வெகு விசேஷமானது போல.. ஒருத்தன் விடாம தலையெல்லாம் மூளை..’

ராமபத்ரன் இருபது வருஷம் முந்திய, அடைமழை பெய்து வெள்ளக்காடாகி, ரயில் போகாததால் ஆபீஸ் போகாமல் வீட்டில் தங்க வேண்டி வந்த அந்த அதி விசேஷமான பகல் பொழுதை நினைத்துக் கொண்டார்.

‘ஏதாவது முக்கியம்னா ஈ-மெயில் செஞ்சுடுங்க.. பொடியன்கள் கிட்டே சொன்னா க்‌ஷணத்தில் தட்டி விட்டுடுவாங்க..’

கதவை மூடுகிறபோது சின்ன கோகலே சொன்னான்.

வெளியே அட்டெண்டர் தாய்டே சாவகாசமாக வெற்றிலை போட்டுக் கொண்டு, விரலில் மீந்த சுண்ணாம்பை டைப்ரைட்டர் ஓரமாகத் தடவிக் கொண்டிருந்தான்.

(குமுதம் 1995; ‘பகல் பத்து ராப் பத்து’ குறுநாவல் தொகுப்பு – தமிழ்ப் புத்தகாலயம் 1997)

தொடரும்….

பகல் பத்து ராப் பத்து – அத்தியாயம் 3

பகல் பத்து ராப் பத்து இரா.முருகன்
——————————————————————————————–
அத்தியாயம் 3

ப்ரீதி குளித்துக் கொண்டிருந்த பொழுது டெலிபோன் ஒலித்தது.

விக்ரம்… கோகுல் .. டெல்லியிலிருந்து பல்பீர் .. சீனாக்காரி அண்ணி..

பாத்டப்பிலிருந்து ஒரு கையை உயர்த்தி எடுக்க, ரிசீவர் தண்ணீரில் மிதந்தது.

‘மாதம் ஆறாயிரம் வாடகை… ஃப்ளாட்டில் ஃபோன், கீஸர்ம் பாத்டப், மைக்ரோ அவன் என்று சகலமானதும் ரொப்பியிருக்கிறேன்.. ரெண்டு மாதத்துக்கு ஒரு தடவை வந்து பார்ப்பேன் .. ஏதாவது ஒண்ணு நோக்காட்டில் விழுந்திருந்தால், உன் அட்வான்ஸ் ஒரு லட்சம் உன்னதில்லை..’

வீட்டுக்காரி மிசஸ் பாட்லி வாலா முதல் நாளே பயமுறுத்தி விட்டுப் போயிருக்கிறாள்.

என்ன இருந்தாலும், டெல்லியை விட பம்பாய் எவ்வளவோ மேல்…

ப்ரீதிக்கு இரண்டு வருஷ டெல்லி வாழ்க்கையை நினைத்தாலே எரிச்சலாக இருந்தது.

டெல்லி.. அது ஒரு ஜயண்ட் சைஸ் கிராமம்..

சின்ன வயசுப் பெண் வீடு வாடகைக்குக் கேட்டு வந்து நிற்கிறாள் என்றால் டிபன்ஸ் காலனியின் ஓய்வு பெற்ற மேஜர்களும், கர்னல்களும் ஹூக்கா புகைவிட்ட படி விசித்திரமாகத்தான் பார்ப்பார்கள்..

‘என்ன உத்யோகம்?’

வயதான சர்தாரிணிகள் விசாரிக்கும்போது, ‘மாடலிங்’ என்று பதில் சொன்னால், ‘பத்து நிமிஷம் முன்னால் யாரோடோ படுத்து விட்டு எழுந்து வந்த குட்டி’ என்கிறதுபோல சர்வ நிச்சயமாக சின்னச் சிரிப்போடு, ‘சின்னப் பெண்களைக் குடி வைப்பதில்லை’ என்று சொல்லிக் கதவைச் சாத்தி உள்ளே போவார்கள்.

பம்பாயில் பரந்த மனசு எல்லோருக்கும்..

‘மிஸ் ப்ரீதி அஹூஜா, மாடலிங் டீசண்டான தொழில் என்று எனக்குத் தெரியும்.. எல்லோரோடும் இழைவது தவிர்க்க முடியாதது .. ஒரு வரம்பில் மற்றவர்களை நிறுத்தினால் சரிதான் .. 1போன் இருக்கு .. டிராயிங் ரூமில், பாத்ரூமில், டாய்லெட்டில் எல்லாம் ஆர்ஜே லெவன் சாக்கெட் போட்டு இணைப்பு கொடுத்திருக்கேன் .. விடிய விடிய வேணுமானாலும் பேசு.. வர மட்டும் சொல்லாதே..’

‘இல்லை மிசஸ் பாட்லி வாலா.. எந்தத் தடியனும் வர மாட்டான். எனக்காகத் தோன்றுகிற வரை, என் கட்டிலில் நான் மட்டும் தான் ..’

‘ஏய் ப்ரீதி .. கூப்பிட்டது காதில் விழலியா?’

ஃபோன் ரிசீவரைத் திரும்ப எடுத்து சோப்புக் கையோடு காதில் வைக்க விக்ரம் குரல்.

‘குளிச்சிட்டிருக்கேன்’.

‘சே.. நாசமாப் போன இந்த நாட்டுக்கு வீடியோ போன் எப்போ வந்து சேரும்னு தெரியலே..’

‘அது வந்தாக் கூட முகம் மட்டும்தான் தெரியும்..’

ப்ரீதி கலகலவென்று சிரிக்க திரும்பவும் ரிசீவர் பிடி வழுக்கித் தண்ணீரில்.

‘சாரி விக்ரம் .. உன்னைச் சரியாப் பிடிச்சுக்கலே.. கீழே விழுந்துட்டே..’

‘கெட்டியாப் பிடிச்சுக்கற மாதிரி ஒரு விஷயம் சொல்லட்டா .. ரஷ்மி டிடர்ஜெண்ட் .. ஆரஞ்சு கலர் பவுட .. மேலே எல்லாம் நுரையைப் பூசிக்கிட்டு விக்கப் போறே… பெரைரா தெரியுமா.. அவன் தான் கேமராவிலே சுடறான்..’

குப்பென்று பொங்கிய சந்தோஷம் .. பிடரியில் குறுகுறுக்கும் ஈர மயிர்க்கால்கள்…

ப்ரீதி… நட்சத்திர அந்தஸ்தைப் பிடிக்கப் போகிறாய் ..

‘கான்செப்ட் டெவலப் பண்ணிட்டு இருக்கோம். சாய்ந்திரம் டிஸ்கஷனுக்கு வந்துடு .. பெரைரா உன் மூஞ்சியைப் பாத்துட்டுத்தான் ஷாட் கம்பொசிஷன் ஃபைனலைஸ் செய்வானாம்..’

’இப்பவே வேணும்னாலும் வரேன்..’

ஃபோனில் கண் அடிக்க முடியாது. வீடியோ ஃபோன் எப்போ வருமோ ..

‘வேணாம் .. டிராபிக் எல்லாம் ஜாமாயிடும்.. ஏதாவது உடுத்திக்கிட்டு சாயந்திரம் அஞ்சு மணிக்கு ரெடியா இரு.. என்ன சோப்பு தேச்சுக்கறே.. இங்கே வரைக்கும் வாசனை வர்றதே..’

’நாய்க்குட்டிக்குப் போடறது..’

ஃபோனை வைத்துவிட்டு பாத்டப்பில் இருந்து இறங்கினாள்.

கண்ணாடியில் முழுசாகத் தெரியும் ப்ரீதி.

‘யுரேக்கா ..’

உரக்கக் கூவியபடி டர்க்கி டவலை எடுத்துச் சுற்றியபடி வெளியே நிதானமாக நடந்தாள்.

கண்டுபிடித்தது இந்த உடம்பின் மகா வீர்யத்தை.

இரண்டு நிமிடக் கமர்ஷியல்களில், பார்க்கிறவர்கள் கண்ணைக் கட்டிப் போடும் வீர்யம்..

சோப்போ .. கரப்பான் பூச்சி மருந்தோ .. கார்பொரைஸ்ட் தீக்குச்சியோ .. இந்த வீர்யத்தால் எல்லாம் நினைவில் நிறுத்தப் படும். ‘ரீகால் பவர்’ கணிசமானது என்று மார்க்கெட் சர்வே சொல்லும்போது அடுத்த அசைன்மெண்ட் கதவைத் தட்டும்.

தட்டட்டும்… சமையல் உப்பில் தொடங்கி சானிடரி நாப்கின் வரை வந்தாகிவிட்டது.

டெல்லியில் திரும்பத் திரும்ப ஹவாய் செருப்பு, எட்டு லீவர் பூட்டு .. பல்பீர், ரந்தீர் என்று சதா ஜர்தாபான் குதப்பிக் கொண்டு உரக்கப் பேசுகிற சகாக்கள்..

அவர்கள் எடுக்கிற விளம்பரப் படங்களும் உரக்கச் சத்தம் போடும்.

ஜீன்ஸில் உடம்பை நுழைத்துக் கொண்ட போது, கதவிடுக்கு வழியே டைம்ஸ் ஆப் இந்தியா எட்டிப் பார்த்தது.

ஜீன்ஸ் உடம்பை இறுக்குகிறது போன தோணல்..

வென்னீரில் குளித்ததால் இருக்குமோ…

போன வாரம் கோகுலின் பார்ட்டியில் சாப்பிட்ட சாக்லெட்டா, ஐஸ்க்ரீமா..

எதுவாகவும் இருக்கட்டும்..

இனிமேல் ரெண்டு வாரம் தயிரும், ஆம்லெட்டும் கிடையாது.

சின்ன இடுப்பு.. வில்லாக வளையும் உடம்பு.. வசீகரமான சிரிப்பு ..

பெப்ஸியும் கோக்கும் கலர் டிவியும் வாஷிங் மிஷினும் உன் பாதையில் வரப் போகிறது பெண்ணே. மூக்குக்குள்ளே இருந்து எட்டிப் பார்க்கும் அந்த ஒற்றை ரோமத்தை மட்டும் அகற்றி விடு…

நாளை மறுநாள் ரோம நாசினி விளம்பர ஷூட்டிங்,

தொடை வரை மழித்துக் கொண்டு, சில்க் கைக்குட்டையை மேலே இழுத்துக் காட்ட வேண்டும்..

ப்ரீதி ஆஃப் தண்டரிங் தைஸ்..

நோ .. இது வடிவமான உடம்பு.. ப்ரீதி ஆஃப் லைட்னிங் ஸ்டெப்ஸ்..

சோபாவில் உட்கார்ந்து பத்திரிகையைப் பிரித்தாள்.

‘சூரத்தில் ப்ளேக்.. நகரம் காலியாகிறது..’

ஜாக்கிரதை தேவை.. குஜராத்திகள் பக்கம் போகவே கூடாது .. அவர்களின் ஒன்றுவிட்ட சித்தப்பாவோ, அத்தையோ சூரத்திலிருந்து கிளம்பி வந்திருக்கலாம்.. புறப்பட்டுக் கொண்டிருக்கலாம்..

இன்றைக்கும் ஆர்.கே.லக்‌ஷ்மண் கார்ட்டூன் புரியவில்லை.

டைம்ஸின் பக்கங்களை நிதானமாகப் புரட்டினாள்.

விளம்பரங்கள் .. பக்கம் பக்கமாக விளம்பரங்கள்..

குவைத்தில் கம்ப்யூட்டர் என்ஜினியர்களும், குதிரை பராமரிப்பவர்களும் தேவை..

முலுண்டிலிருந்து கொலாபாவுக்கு ஒரே காரில் வந்து திரும்பி, செலவைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய எக்ஸிக்யூட்டிவ்கள் தேவை …

செண்ட்டார் ஓட்டலில் செட்டிநாடு சாப்பாட்டுத் திருவிழா..

வீடு வாங்க.. விற்க ..

சீக்கிரம் ஒரு ஃப்ளாட் வாங்க வேண்டும். எப்பாடு பட்டாவது. யாரைப் பிடித்தாவது.

இனியும் சொந்த ஊர் திரும்ப அங்கே ஏதுமில்லை. அப்பா தன் பங்குக்கு விட்டுப் போன பத்து லட்சம் பாட்லி வாலாவுக்குக் கொடுத்த அட்வான்ஸ் போக பேங்கில் சமர்த்தாகக் குட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. அம்மா பாண்டிச்சேரி ஆசிரமத்தில் சேர்ந்து, கையால் தயாரான காகிதத்தில் மாதம் ஒரு தடவை, பச்சைக் காய்கறிகளும் பழங்களும் நிறையச் சாப்பிடச் சொல்லிக் கடிதம் எழுதுகிறாள்.

அண்ணன்கள் சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் சீனாக்காரிகளைக் கல்யாணம் செய்து கொண்டு, செல்லுலாய்ட் பொம்மைகளைப் போல குழந்தை பெற்றுக் கொண்டு, டெலிஃபோனில் பிறந்த நாள் வாழ்த்து சொல்லிக் கொண்டு, சாப்ஸ்டிக்கால் சாப்பிடக் கற்றுக் கொண்டு சவுக்கியமாக இருக்கிறார்கள்.

இனிமேல் இங்கேதான்..

முகம் மெல்ல பரிச்சயமாகி வருகிறது. தெருவில் போனால் ஒரு வினாடி உற்றுப் பார்க்கிறார்கள்.

‘சொட்டு நீலம் படத்துலே வர்றது நீங்க தானே?’

எதிர் ஃப்ளாட் வேலைக்காரி நேற்று லிஃப்டில் கேட்டாள்.

இந்த மாதம் தொடர்ச்சியாக மூன்று விளம்பரம். ஆணுறை விளம்பரப் படத்தில் நடிக்கச் சம்மதமா என்று கோகுல் கேட்டான். யோசித்துச் சொல்வதாக வாய்தா வாங்கியிருக்கிறாள்.

பெரைராவின் கேமிரா இந்த உடம்பை வருடப் போகிறது.

அப்புறம்.. மேலே.. மேலே.. ஒரு செஷனுக்கு லட்ச ரூபாய் ..

பாந்த்ராவில் ஃப்ளாட் விற்பனைக்கு.. எட்டே கால் கோடி ரூபாய்.

சினிமாவில் நடித்தால் கூட பக்கத்தில் போக முடியாது..

சினிமா.. அது வேறு உலகம்.. அதுவும் இந்தி சினிமா.. தெரிந்தவர்களே தடுமாறுகிற பூமி … நிறைய மெனக்கெட வேண்டும்.

சாந்தாக்ரூஸ் .. ரெண்டு பெட்ரூம்.. கன்சீல்ட் வயரிங்.. லிஃப்ட் உள்ள ஃப்ளாட்.. தொண்ணூற்று எட்டு லட்சம்..

ஒரு கார் கூடத்தான் தேவை..

வேண்டாம்.. காருக்கு என்ன அவசரம்.. வரச் சொன்னால் வந்து காத்திருந்து கூட்டிப் போகிறார்கள். திரும்பக் கொண்டு வந்து இறக்கி விடுகிறார்கள்… சின்ன சில்மிஷங்கள்.. இதுவரை பெரிதாகாமல் சீராக எல்லாம் போகிறது .. இனிமேல் எப்படியோ..

’செஷனுக்கு லட்ச ரூபாய்க்கும் மேலே தர்றேன்.. மூணு நிமிஷக் கமர்ஷியல்…’

இல்லை மிசஸ் பாட்லி வாலா.. சில விஷயங்களை அனுமதித்துத்தான் ஆக வேண்டும். நீங்கள் ஆணுறை விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா?

அந்தேரி.. மூன்றாம் மாடி.. லிஃப்ட் இல்லை… ஒரு பெட்ரூம்.. ஏழு லட்ச ரூபாய் தான்..

அந்தேரியில் வாங்கலாமா?

அதற்கு, மெட்ராஸில் குடியேறி இரண்டு தமிழ்ப் படம் செய்யலாம்.

உடம்பு ஊதிப் போனாலும் பரவாயில்லை.

பிடித்துப் போனால் கோயிலே கட்டிக் கும்பிடுவார்கள்.

ப்ரீதிக்குக் கோயில் வேண்டாம். சொந்த ஃப்ளாட் போதும்.

திரும்பத் தொலைபேசி சத்தம்.

என்ன விற்க வேண்டும் கனவான்களே? எவ்வளவு பணம் தருவீர்கள்?

(குமுதம் 1995; ‘பகல் பத்து ராப் பத்து’ குறுநாவல் தொகுப்பு – தமிழ்ப் புத்தகாலயம் 1997)

தொடரும்….

பகல் பத்து ராப் பத்து – குறுநாவல் (இரா.முருகன்) – அத்தியாயம் 2

பகல் பத்து ராப் பத்து இரா.முருகன்

அத்தியாயம் 2

’பாஞ்ச் ரூப்யோ கோ தோ .. பாஞ்ச் கோ தோ ..’

சாந்தாபாய் யந்திரமாகக் கூவிக் கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் தவழும் கிருஷ்ணன்.

பொடிப்பொடியாகத் தரையில் விழுந்து கொண்டிருந்த கிருஷ்ணன் கோலத்தைச் சுற்றி விரையும் கால்கள்.

இது ஆபீஸ் போகிற கூட்டம். கொலாபாவும், நாரிமன் பாயிண்டும் இன்னும் சமுத்திரக் கரையை ஒட்டிய மகா உயரக் கட்டிடங்களுமே இவர்களின் காலை நேர லட்சியம். சாந்தாபாயும், கோலக் குழல் கிருஷ்ணனும், விக்டோரியா டெர்மினஸின் இதர இயக்கங்களும் தினசரி சகித்துக் கொள்ள வேண்டிய தொந்தரவுகளாக விரியும் அவர்கள் உலகம்.

சாந்தாபாய் கிருஷ்ணனை நம்புகிறாள். நூறு கோலக் குழலாவது விற்றால்தான் தாராவியில் குடிசை தங்கும்.

‘சாப்புடறே .. புடவையை வழிச்சுட்டுக் குத்த வைக்கறே.. படுக்கறே .. வாடகை எங்கேடி?..

காலையில் கிளம்புகிற பொழுது, ஜம்னாதீதி நாக்கைப் பிடுங்குகிறதைப் போல் கேட்டாள்.

கங்காதர் செயலாக இருந்தவரை ஒரு மாதமாவது வாடகை தவறி இருக்குமா?

இரண்டு கோலக் குழல் ஐந்து ரூபாய். யார் வாங்க வருகிறார்கள்?

பெரிய பெரிய மூக்குத்தியும் எல்லா வண்ணத்திலும் பாவாடையுமாக எதிரே பத்திரிகை ஆபீஸ் பக்கம் இருந்து கடந்து வரும் கூட்டத்தில் சாந்தாபாயின் பார்வை நிலைக்கிறது.

ராஜஸ்தானிகள்.

பாலைவனத்தில் கோலம் போடுவார்களா? இதுவரை போடாவிட்டால் என்ன? இனிமேல் பழகினால் போகிறது.

சாங்க்லி கிராமத்து சாந்தாபாய் பம்பாய் நடைபாதையில் குந்தி இருந்து கூவி விற்கப் பழகிக் கொண்டது போல ..

‘பாஞ்ச் கோ தோ…’

சாந்தாபாயின் குரல் பிசிறு தட்டுகிறது. காலையில் கிளம்பும்போது சாப்பிட்ட தீய்ந்த ஒற்றைச் சப்பாத்தியோடு காய்கிற வயிறு.

வந்ததிலிருந்து ஐந்து ரூபாய்க்குக் கூட விற்காமல் கொட்டிக் கொள்ள இப்போது என்ன அவசரம்?

எல்லாமே அவசரம் தான். விடியும் முன்னே அழுக்கு டால்டா டப்பாவோடு கழிப்பறைக்கு ஓட.. தண்ணீர் பிடிக்க… கங்காதருக்கு ரொட்டி எடுத்து வைத்துவிட்டு கித்தான் பையில் கோலக் குழலையும் மாவுப் பொடியையும் கட்டித் தூக்கிக் கொண்டு ஓடி வர.. தெருவோரம் இடம் பிடிக்க..
போன வருடம் வரை கங்காதர்தான் இந்த அவசரத்தோடு ஓடியது.

விடிந்தது முதல் இருட்டும் வரை தாராவியின் அழுக்கிலும் சகதியிலுமே சாந்தாபாயின் உலகம் அடங்கி இருந்தது அப்போது.

ரயிலில் தொங்கிக் கொண்டுபோய்த் தவறி விழுந்து இரண்டு காலும் கணுக்காலுக்குக் கீழ் துண்டிக்கப்பட்டு கங்காதர் குடிசையில் முடங்கி ஒரு வருடம் ஆகிறது.

’என்ன விலை இதெல்லாம்?’

வயதான ராஜஸ்தானி, சாந்தாபாயைத்தான் கேட்கிறாள்.

முன் தள்ளிய மார்பும், ஏக காலத்தில் பேச்சுமாக மற்ற வண்ணப் பாவாடைகள், தெருவோரம் நெயில் பாலீஷ் விற்கிற நசீமைச் சூழ்ந்து நிற்க, நகம் முறிந்து சுருக்கம் கண்ட கைகள் சாந்தாபாயைச் சுற்றி நீள்கின்றன.

‘கிருஷ்ண கன்னையா.. கோபால கிருஷ்ணா.. கோகுல கிருஷ்ணா..’

சாந்தாபாய் நேர்த்தியாக நடைபாதையில் இன்னும் இரண்டு கிருஷ்ணனைத் தவழ விட்டாள்.

சாங்க்லியில் எப்போதோ பார்த்த சினிமாவில் லதா மங்கேஷ்கர் இப்படி வரிசையாக வார்த்தை அடுக்கிப் பாட, ஆஷா பரேக்கோ, நூதனோ, கையில் பொம்மையை இப்படியும் அப்படியுமாக ஆட்டிக் கொண்டு வாயசைப்பார்கள்…

சினிமா… பம்பாய் வந்து பத்து வருஷத்தில் பார்த்த சினிமா எல்லாம் கல்யாணம் ஆன முதல் வருஷத்தில் தான்.

‘கடைசியா என்ன விலை?’

ராஜஸ்தானி கிழவி கேட்கிறாள். ‘என்னை யாரும் ஏமாற்ற முடியாது’ என்ற தீர்மானம் தெறிக்கிற குரல். தலை தன் பாட்டுக்கு இப்படியும் அப்படியும் அசைகிறது.

இவள் வீட்டில் ஒட்டகம் வளர்ப்பாள் என்று ஏனோ சாந்தாபாய்க்குத் தோன்றியது.

‘நாலு கொடு’.

கிழவி சுருக்குப் பையில் இருந்து ஐந்து ரூபாய் நோட்டை நாலாக மடித்தபடியே நீட்டினாள்.

‘கட்டி வராது அம்மா..’.

வாடகை ராத்திரி வராட்ட, உன்னோட தட்டு முட்டு சாமானை, உதவாக்கரை புருஷனை, கோலக் குழலை எல்லாம் வெளியே எரிஞ்சிடுவேன்.
ஜம்னாதீதியின் குரல் இன்னும் விரட்டிக் கொண்டே தான் இருக்கிறது.

‘காலையிலே முதல் வியாபாரம். கூடவே ஒண்ணு பிடியுங்க’.

சாந்தாபாய் மூன்று கோலக் குழலை எடுத்துக் கொடுத்துவிட்டு நிமிர்ந்த பொழுது, பஸ்ஸைப் பிடிக்கிற அவசரத்தில் யாரோ பக்கத்தில் இருந்த மாவு பக்கெட்டைத் தட்டி விட்டுப் போனார்கள்.

’சாப், உனக்குக் கண் இல்லையா?’

தெருவின் சத்தத்துக்கு நடுவே அவள் குரல் எடுபடவில்லை.

(குமுதம் 1995; ‘பகல் பத்து ராப்பத்து’ குறுநாவல் தொகுப்பு நூல் – தமிழ்ப் புத்தகாலயம் -1997)

(தொடரும்)

பகல் பத்து ராப் பத்து – குறுநாவல் (இரா.முருகன்) – அத்தியாயம் 1

என் குறுநாவல்களில் மும்பாயைக் களனாகக் கொண்டது ‘பகல் பத்து ராப்பத்து’.

1990-களின் மத்தியில் மும்பை வங்கிக் கிளைகளில் கிளையண்ட் சர்வர் கம்ப்யூட்டிங்கில் யூனிக்ஸ் பிரதிஷ்டை செய்து சைபேஸ் டேட்டாபேஸ் கட்டி எழுப்புவது தொடங்கி நாங்களே உருவாக்கிய சி-மொழி அடிப்படையான மென்பொருளும், ஹப், டெர்மினல் கான்சண்ட்ரேட்டர் இன்னோரன்ன வன்பொருளும் சீராக நிறுவி வெற்றிகரமாக இயங்க வைக்க உயிரைக் கொடுத்துக் கொண்டிருந்த நேரம்.

நாளின் 18 மணி நேரம் கிளைகளிலும், மற்ற நேரம் செண்ட்ரல், வெஸ்டர்ன், ஹார்பர் என்ற மூன்று மின்சாரத் தடங்களில் பயணமும், கோழித் தூக்கமுமாகக் கழிந்த மறக்க முடியாத நாட்கள் அவை.

ராத்திரி பத்து மணிக்கு நாரிமன் பாயிண்ட், நடு நிசிக்கு சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தை ஒட்டிய வீதியில் நடமாட்டம், விடிகாலை நேர சர்ச்கேட், அமைதியும் ஆர்ப்பாட்டமுமாக நேரத்துக்கொரு முகம் காட்டும் அரபிக் கடல்.. பண்டிகைகள், அரசியல், சினிமா.. மராட்டியும் பாரதத்தில் புழங்கும் மற்ற மொழிகள் அனைத்தும் சுற்றிச் சூழ, காலையில் ஒரு திசையிலும் மாலையில் நேரெதிர் திசையிலுமாக ஜன சமுத்திரத்தின் பேரியக்கம் …

மும்பையின் ஒரு நாளில் – பகல் பத்து மணி முதல் இரவு பத்து வரை – நிகழும் குறுநாவல் ‘பகல் பத்து ராப்பத்து’.

சுஜாதா சார் குமுதம் ஆசிரியராக இருந்தபோது குமுதத்துக்கு அனுப்பி, அவர் பதவிக் காலம் முடிந்து வெளியானது.

தினம் ஒரு அத்தியாயத்தைப் பகிர்ந்து கொள்ளத் திட்டம். பார்க்கலாம்.
————————————————————————————————————-

பகல் பத்து ராப் பத்து இரா.முருகன்

அத்தியாயம் 1

ராமபத்ரன் நாக்கை நொந்து கொண்டார்.

கேடு கெட்ட புளியோதரை ஆசை. கர்ப்ப ஸ்திரி கேட்டாள் என்று செய்த புளியோதரை.

எதிர் ஃப்ளாட் சுதாகர் ஷிண்டே பெண்டாட்டி முழுகாமல் இருக்கிறாள். வயிற்றைத் தள்ளிக் கொண்டு ஸ்வெட்டர் பின்ன ஊசி வாங்க வந்த பொழுது சொன்னாளாம் -

‘மதராஸி ஸ்டைல் இம்லி சாவல் சாப்பிடணும் போல இருக்கு மிசஸ் அய்யர்..’

கரிசனமும், எள்ளுப் பொடியும், பெருங்காயமுமாக மணக்க மணக்க அகிலாண்டம் செய்து கொண்டுபோய்க் கொடுத்தது போக மீந்ததை உருளியில் மூடி வைத்திருக்க வேண்டாம் ..

நாற்பத்தேழு வயதில், ராத்திரி ஒன்பது மணிக்கு மேல், எண்ணெய் கசிகிற புளியோதிரை சாப்பிட்டு அஜீர்ணம், தூக்கமின்மை, மனைவியைச் சீண்டல், ஸ்கலிதம், அசதி, கண்ணயர்வு, நேரம் வெகுவாகத் தவறிக் கண்விழிப்பது, மலச்சிக்கல், ஆசன வாயில் எரிச்சல், தவறவிட்ட விரைவு ரயில்… ஸ்டேஷன் ஸ்டேஷனாக நின்று குசலம் விசாரித்துப் போகும் இந்த சாவகாச லோக்கல் டிரெயின் சனியன்.

ராமபத்திரன் கழுத்தை எக்கிப் பார்த்தார்.

இஷ்டர்களோ மித்திரர்களோ யாரும் தட்டுப்படவில்லை. அவர்கள் ஏழு ஐம்பத்தைந்து ஃபாஸ்ட் லோக்கலில் வழக்கம் போல புறப்பட்டுப் போயிருப்பார்கள். ராமபத்ரனைப் போல் முன்னூற்றுச் சில்லரை சதுர அடி இருப்பிடங்களில் முடங்குகிறவர்கள். எதிர் ஃப்ளாட்டில் கர்ப்பிணிகளோ, சித்ரான்னத்தில் இச்சையோ இல்லாதவர்கள். வருகிற தை மாதம் மகா கும்பாபிஷேகமாகப் போகிற சம்பாஜி காலனி சித்தி வினாயகர் கடாட்சத்தால் சகல சௌபாக்கியங்களும், தினசரி சீரான வாகன யோக சௌகரியங்களும் வாய்க்கப் பெற்றவர்கள்…

சராசரிக்கு மேற்பட்ட பம்பாய்த் தமிழர்கள்…

உள்ளேயும் போக முடியாமல் வெளியேயும் சாட முடியாமல் கம்பார்ட்மெண்டில் கூட்டம் முழி பிதுங்குகிறது. பக்கத்தில் உசரமாக நிற்கிறவன் குடம் குடமாகத் தோளில் வியர்வை வடித்துக் கொண்டிருக்கிறான். வெங்காய வாடையும், பூண்டு வாடையும், செண்டுமாக ஏக காலத்தில் மூக்கில் குடைகிறது. சட்டமாக காலை அகட்டி உட்கார்ந்து ‘லோக்சத்தா’ படிக்கிற வல்லபாய் பட்டேல் ஜாடை ஆசாமி தாதரில் இறங்குவானா என்று தெரியவில்லை.

எதற்கும் இருக்கட்டும் என்று கைப்பைய அவன் முதுகை மோப்பம் பிடிக்கிறதுபோல தொடுக்கி வைத்தார்.

‘சப்லோக் ஜாவேச்சே…’

குர்லாவில் ஏறிய இரண்டு குஜராத்திகள், இரைச்சலை மீறி சூரத் பட்டணம் காலியானதைப் பற்றிப் பேச ஆரம்பிக்க, ஏகப்பட்ட கைக்குட்டைகள் மூக்கைச் சுற்றி உயர்ந்தன.

ராமபத்ரன் அவசரமாகக் கைப்பையில் துழாவினார். கண்ணாடிக் கூடு, சீசன் டிக்கெட், வெற்றிலைப் பெட்டி .. துண்டு எங்கே தொலைந்தது?

பாழும் புளியோதரை ஆசை ப்ளேகில் கொண்டு விடுமோ?

இருபத்தைந்து வருட பம்பாய் வாசத்தில் எத்தனை அடைமழையும் கலவரமும் காய்ச்சலும் அனுபவித்தாகி விட்டது… ப்ளேக் தான் பாக்கி.

‘தாதரில் தேஷ்பாண்டே கிட்டே ஷேர் டிரான்ஸ்பர் ஃபாரம் கொடுத்திட்டு …’

யாரோ யாரிடமோ ஷேர் மார்க்கெட் அலசலுக்கு நடுவே சொல்ல , ராமபத்ரன் ஒரு நடுக்கத்துடன் தாதரை எதிர்பார்த்தார். இந்த ஜோதியில் கலக்க வரும் இன்னொரு ஜனக் கூட்டம் அங்கே காத்திருக்கும்.

பத்தரைக்குப் போக வேண்டிய ஆபீசுக்கு அரை மணி நேரம் கழித்துப் போய், யார் யாருக்கோ பதில் சொல்லி, சிரித்து மழுப்பி, கையெழுத்து போட்டு…

எகனாமிக்ஸ் டைம்ஸில் ஷேர் விலை பார்க்க நேரம் கிடைக்காது. மதியம் தான்.

மத்தியானம் போல வந்தால் சித்திவினாயகர் கோயில் நிதிக்கு கேசவ் ஷெனாய் முன்னூத்தியொண்ணு எழுதுவதாகச் சொன்னான். அவன்
பக்கத்தில் இன்னும் இரண்டு ஷெட்டியும், இரண்டு கினிகளும், ஒரு நாயக்கும் கூட எழுதக் கூடிய சாத்தியக் கூறுகள். கன்னடமும், பணமும் தாராளமாகப் புழங்குகிற பேங்க் அது.

ரசீதுப் புத்தகம்..

கைப்பையைத் திரும்பத் திறக்க முயற்சி செய்ய, ஸிப் பாதி வரை வந்து நகரமாட்டேன் என்றது.

ரசீதுப் புத்தகம் உள்ளே தான் இருக்கும் ..

எட்டு மாதமாக, ஆபீஸ் நேரம் போக கோயில் காரியம் தான் ..

எல்லாம் ஒரு சனிக்கிழமை சாயந்திர ரயில் பயணத்தில் தான் ஆரம்பமானது.

‘சம்பாஜி காலனி கோயில் சுவர் மழையிலே விழுந்துடுத்தாம்’.

சீட்டும், பஜனையும், அரட்டையும் அமர்க்களப்பட்ட கம்பார்ட்மெண்டில் திருமலாச்சாரிதான் பிரஸ்தாபித்தார்.

ரயிலில் இப்படிச் சேர்ந்து போய் வருகிறவர்கள் வசூல் செய்து, ஒரு ஐயாயிரம் பத்தாயிரம் ஏற்பாடு செய்தால் சுவர் எழும்பிவிடும் என்று தொடங்கியது.

சுவரிலிருந்து தளமும், தளத்திலிருந்து பிரகாரமும் என்று சேர, உற்சாகம் ஏறிக்கொண்டே போய் கும்பாபிஷேகத்தில் முடியப் போகிறது.
கமிட்டியும், கூட்டமும், ஆலோசனையும் எல்லாம் ரயிலில் தான்..

தாதர் வந்து விட்டது.

ராமபத்ரனை முழுதும் மறைத்த இரண்டு பேரின் பிருஷ்டங்களுக்கு இடையே ஒரு வினாடி தெரிந்த ஜன சமுத்திரம் வழக்கத்தை விடப் பெரியதாக இருந்தது. இதில் நாலும் ஒரு பங்கு உள்ளே நுழைந்தாலே நிற்பது கூடத் திண்டாட்டமாகி விடும்.

நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.

‘வெஸ்டர்ன் ரயில்வேயிலே தகராறு அண்ணாச்சி.. பயாந்தர்லே ஏதோ ஜகடா .. தாதரோட திருப்பி விடறானாம்.. எல்லாக் கூட்டமும் செண்ட்ரல் ரயில்வேயிலே தான்..’

கெச்சலாக ஒருத்தன் ஜன்னல் பக்கம் யாரிடமோ தமிழில் உரக்கச் சொல்கிறான்.

‘க்யா க்யா?’

வல்லபாய் பட்டேல் ராமபத்ரனைத் திரும்பப் பார்த்து விசாரித்தார்.

பின்னால் ஏழு யானை பலத்தோடு பதிகிற இறுக்கம்.

‘புளியோதரை’ என்றார் ராமபத்ரன்.

(தொடரும்)

சென்னை புத்தகக் கண்காட்சி 2014

சென்னை புத்தகக் கண்காட்சி – ஜீவா சிற்றரங்கு

காலச்சுவடு வெளியீடான ‘ஸ்ரீதரன் சிறுகதைகள்’ புத்தகத்தை பி.ஏ.கே அண்ணா வெளியிட்டுப் பேசினார். என் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய நண்பர்கள் லண்டன் பத்மனாப ஐயர், மு.நித்தியானந்தன் ஆகியோர் நிறுவிய தமிழியல் தரும் நூல் இது.

ஐயர் லண்டனிலிருந்து தொலைபேசி புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்ரீதரன் கதைகளை வெளியிட்டுப் பேச வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்ததைத் தட்ட முடியவில்லை என்றார் பி.ஏ.கே. 2002-ல் ஸ்ரீதரன் கதைகளைப் புத்தகமாக்க முயற்சி எடுத்து நிறைவேறாமல் தற்போது காலச்சுவடு மூலம் அது சாத்தியமாகிறது என்று ஐயர் குறிப்பிட்டதாகச் சொன்னார் அவர்.

பிஏகே பேச்சின் சாரம் :
//
சிறுகதை அவ்வளவாகத் திருப்தி தராத ஒன்று. அந்த இலக்கிய வடிவத்தைக் கையாள்வதில் உள்ள சிரமமே அதற்குக் காரணம். நகர்ந்து போகும் வாழ்க்கையில் நழுவி ஓடும் ஒரு கணத்தை உறைய வைத்த சிறந்த சிறுகதைகள் தமிழில் இருப்பது முக்கியமான நிகழ்வு.

ஸ்ரீதரனின் ஆரம்ப காலக் கதைகள் ஜெயகாந்தனை வியந்து அவருடைய சாயல் சமூக விமர்சனங்களைக் கொண்டவை. இந்தத் தொகுப்பில் முதலில் வரும் கதைகள் அவை. அவற்றைத் தொடர்ந்து வரும் ராமாயணக் கலகம் போன்ற கதைகளில் தனித்தன்மை தெரிகிறது.

ஸ்ரீதரன் அண்மைக் காலங்களில் சிறுகதை எதுவும் எழுதவில்லை என்று தெரிகிறது. அவர் தொடர்ந்து நல்ல சிறுகதைகளைப் படைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

//

புத்தகத்தை காலச்சுவடு கண்ணன் செம்பதிப்பாக வெளியிட்டுள்ளார். அச்சும் அமைப்பும் அபாரம். நண்பர் ஓவியர் லண்டன் ராஜாவின் ஓவியங்கள் சிறுகதைகளுக்கு அணி செய்கின்றன.
—————————————–
சிற்றரங்கு எங்கே இருக்கு? பதிப்பாளர்களிலேயே பலருக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்.

வெளியே இருக்குங்க என்றார் ஒருத்தர். பத்து ரூபாய் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கி விட்டு உடனே வெளியே போக மனம் இல்லாம இன்னும் இருவரிடம் கேட்க விதவிதமான் பதில்கள்.

எதிரே வந்த நண்பர் வண்ணதாசனிடம் நலம் விசாரித்த கையோடு அவ்ருக்கு இது சம்பந்தமாக ஏதும் தெரியுமா என்று விசாரித்தேன். நல்ல வேளை, அவரோடு வந்த நண்பர் சரியாக ஆற்றுப் படுத்தினார்.

வண்ணதாசனோடு இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம்.
————————————-
நண்பர்கள் காலச்சுவடு கண்ணன், நாகரத்தினம் கிருஷ்ணா சந்தித்தேன். விழா தொடங்கும் முன் பி ஏ கே அண்ணாவோடு சிற்றரங்கத்துக்கு வெளியே ‘ஓய்விட’த்தில் சமணர் கழுவேற்றம் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தேன்.

(ஓய்விடம் நாற்காலிகள் போட்டு வைத்த ஓய்விடம் தான். ரெஸ்ட் ரூம் அல்ல)

அவருடைய கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுக்குப் பதில் அளிப்பதாக ஒரு விளக்கமான கட்டுரை எழுதியிருப்பதாகச் சொன்னார்.

காலச்சுவடில் அல்லது செம்மலரில் எதிர்பார்க்கலாம்.
————————————-
கண்ணகி தொன்மம் புத்தக வெளியீடு

சு.ப.அறவாணன் கண்ணகி என்ற சொல் கண்ணால் சிரிக்கிறவள் (கண் +நகி) என்ற பொருள்படும் என்றார்.

கணிகை என்ற குலம் ஏற்பட்டது சிலம்பு காலத்தில் என்று தெரிகிறது.

நூலாசிரியரை எனக்கு காவ்யா சண்முகசுந்தரம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
—————————————–

Nagarathnam Krishna’s translation of Nobel laureate Jean-Marie Gustave Le Clézio’s novel Le Procès-Verbal.

As Prapanjan who was to have released the book is reported to be indisposed, Prof.Panchangam (please correct me if I am wrong) officiated in his place.

Le Clézio’s novel with the complex theme of the protagonist confused about where he comes from – whether from the army camp or from a psychiatry ward – poses a tough challenge to translators. Krishna has been remarkably successful at his attempt to render the book in Tamil.
———————-
பி ஏ கே அண்ணாவோடு வலம் வந்தபோது கண்ணில் பட்டவை -

நண்பர் காவ்யா ஷண்முகசுந்தரம் அவர்கள் தமிழ் வாசகர்களின் இலக்கியத் தேடல் மீது நம்பிக்கை வைத்து, பிரசுரம் செய்துள்ள நூல்களின் ரசகரமான தலைப்புகள்.

கநாசுயம், புதுமைப்பித்தம் .. இன்ன பிற

பிஏகிருஷ்ணம் எப்போ வரும்?
———————————–
சென்னை புத்தகக் கண்காட்சி 2014

வாங்க வேண்டாம் என்ற வைராக்கியத்தோடு போனாலும், அச்சு மோகினி மாயையில் ஆட்பட்டு நேற்று வாங்கிய புத்தகங்கள் -

- பஞ்சக் கும்மிகள் (புலவர் செ.இராசு தொகுத்தவை – காவ்யா

- தி.ஜானகிராமனின் ‘செம்பருத்தி’ (காலச்சுவடு)
————————————
.
நண்பர் சுகுமாரனுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடைய ‘வெலிங்டன்’ நாவல் வாங்கினேன். மலையாளத்திலும் கையெழுத்து போடச் சொல்லி நான் வற்புறுத்த, முதல் பக்கத்தில் ‘ஸ்நேகபூர்வம் முருகனு’ என்று எழுதிக் கொடுத்தார்.

அவருடைய தொகுப்பு மலையாளத்தில் வெளியாகும்போது தமிழில் கையெழுத்து வாங்கிக் கொள்ள வேணும்
———————-
கிழக்கு விற்பனையகத்தில் நண்பர் ஹரன் பிரச்சனாவுக்கு ஹலோ சொல்லி பத்ரியோடு பல பட்டடையாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

The best publishing business model, break even in terms of the print order, publishing paradigm shift and the future of digital publishing…

பத்ரி சொன்னதில் கிரகித்தது – ‘there is no one-size-fits-all solution’.

அரை மணி நேரம் கழித்து இன்னொரு முக்கியமான பதிப்பாளர் சொன்னார் – ‘மினிமம் ஐம்பது காப்பி போடுறேன்’ (ஆமா, ஐம்பது தான்).

விற்க விற்க கூடுதல் பிரதிகள் அச்சாகின்றன போல.

appears the common perception that print-on-demand has huge overheads may not be wholly true..
———————————–

‘என் எச் எம் ரைட்டர் எம்.எஸ்.வேர்டு ஃபைல் அடிக்க உபயோகிச்சா சில எழுத்து சரியா வரலியே’ – பிஏகே டு பத்ரி.

‘மைக்ரோசாப்ட் க்ளோஸ்ட் சோர்ஸ் கோட் எம் எஸ் வேர்ட் உள்ளே என்ன பண்றதுன்னு தெரியறதில்லை. safest bet is to write with NHM Writer in Notepad, copy it in MS Word and save’ – பத்ரி.

நோட்பேட் தான் எதுக்கு? நான் வேர்ட்பேடில் என் எச் எம் ரைட்டரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்தறதைச் சொன்னேன்.

விஸ்வரூபம் நாவல் முழுக்க அப்படி எழுதினது தான்.

அதுக்கு முன், அரசூர் வம்சம், ரெட்டைத் தெரு, லண்டன் டயரி இதெல்லாம் முரசு அஞ்சல் யூனிகோட் உபயோகிச்சு எம் எஸ் வேர்ட் கோப்பாக்கியது. அதற்கும் முன் பிராஜக்ட் மேனேஜ்மெண்ட், ராயர் காப்பி கிளப், சைக்கிள் முனி, மூன்று விரல் இதெல்லாம் முரசு அஞ்சல் TSCII in MS Word file. பிரச்சனை இல்லாம இருந்தது அப்போ. காரணம் முன்பு operating System Windows 2009, அதுக்கும் முற்பட்டவை.

இப்போ விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டாஸ். லாப்டாப்பில் ஓப்பன் சோர்ஸ் உபுண்டோ எல்லாம் பயன்படுத்த தைரியம் கம்மி. பயன்படுத்தினால் என் எச் எம் ரைட்டர் வழுக்கிட்டு சுகமா ஓடும்னு தோணுது.
——————————–
இன்னிக்கு ராத்திரி இங்கே தங்கணும் என்றார் பத்ரி

கண்காட்சி வளாகத்தில் இரவு முழுக்க ரோந்து வர வேண்டிய அவசியம். inventory-ஐ asset valuation செய்தால் குறைந்தது ஒரு கோடி ரூபாயாவது வரும். ஸ்டால்களைப் பூட்டி வைக்க முடியாது. ஆகவே இவ்வளவு மூலதனமும் வெட்டவெளியில். பாதுகாப்பு அவசியம்.

பபாசி சார்பில் தினசரி ஒரு குழு இந்தக் காவல் – ரோந்துப் பணி செய்கிறார்களாம். குழுவில் ஒரு உறுப்பினர் யாராவது ஒரு பதிப்பாளர்.

நேற்று பத்ரி முறை.

பெரிய ப்ளாஸ்கில் காப்பி போட்டு எடுத்து வந்துடுவீங்களா என்று கேட்டேன். அதெல்லாம் அவங்களே கொடுத்திடுவாங்கன்னு எதிர்பார்க்கிறேன் என்றார் தன் நம்பிக்கையைச் சற்றும் இழக்காத பத்ரி.

காவல் கோட்டத்தை வலம் வந்து ‘பாரா உஷார்’ என்று கூவியபடி (இது காபந்து செய்கிறதற்கான பாரா) பத்ரியைக் கற்பனை செய்ய நன்றாக இருக்கிறது.
———————-
தினமணியில் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் நாவல் ‘நிமித்தம்’ பற்றி -

//எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவல் “நிமித்தம்’ (ரூ.375, உயிர்மை பதிப்பகம்). தன்னுனோடு படித்த நண்பர் பற்றிய உருக்கமான கதையை அவர் எழுதியுள்ளார். காது கேளாக்குறைபாடு உடைய நண்பன் அவன். அந்தக் குறைப்பாட்டின் காரணமாகவே பிச்சை எடுத்துக் வாழக்கூடிய நிலைக்குத் தளப்பட்டு சமூக விதியில் அலைகிறான். அந்த வலியை பக்கங்களில் நிறைத்துள்ளார்.//

ரொம்ப எளிமைப் படுத்தி எழுதிய அறிமுகமாகத் தெரிகிறது. எஸ்.ரா நாவல் உலவும் தளம் இதுவாக இருக்காது. காது கேட்காததால் பிச்சை எடுத்தான் என்று நம்பிக்கையின்மையை எஸ்.ரா நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார்.

சரி, எம்.வி.வெங்கட்ராம் ‘காதுகள்’? அவை நம்பிக்கை பற்றியோ நம்பிக்கையின்மை பற்றியோ அல்ல. அகச்செவியும் உள்மனமும் சேர்ந்து நிகழ்த்திய ரசவாத எழுத்து எம்விவியுடையது.’
————————————-
சாகித்ய அகாதமி ஸ்டாலில் வாங்கிய புத்தகங்கள்

1) சே.ப.நரசிம்மலு நாயுடு – சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதியது. (விலை ரூ 10 – சற்றே பழுதடைந்த பிரதி)

2) ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு (தேர்ந்தெடுக்கப்பட்டது)

3) ஹென்றி கிருஷ்ணபிள்ளை (யோ.ஞானசந்திர ஜான்சன் எழுதியது)

மலையாளம்

1) குஞ்சன் நம்பியார் (வி.எஸ்.சர்மா எழுதியது)

2) எழுத்தும் வாயனயும் (வி.எஸ்.அனில்குமார் எடிட் செய்தது)
———————–
சென்னை புத்தகக் கண்காட்சி 2014

அசோகமித்திரன் சார். வணங்கினேன். புத்தகத்தில் கையெழுத்து போட காலச்சுவடு ஸ்டால் போகிற அவசரத்திலும் ’மோதிலால் தெரு தானே’ என்று அன்போடு விசாரித்தார். ‘ஆமா சார், அங்கே வந்துட்டேன்.. முந்திய தலைமுறை எழுத்தாளர் ந.சிதம்பரசுப்ரமணியன் இருந்த தெருன்னு நீங்க எழுதியிருந்தீங்களே’

அழகான, அளவான அசோகமித்திரன் சிரிப்பு. ‘ஆமாமா, நான் உங்களைத் தேடி ஒரு தடவை வந்திருக்கேன்.. உங்க அப்பா கூட என்கிட்டே சொன்னார் – கதை எழுத வச்சு அவனைக் கெடுத்திடாதீங்கன்னு.. ஞாபகம் இருக்கா?

நான் பதில் பேசாமல் சிரித்தேன். சில கேள்விகளை சாய்ஸில் விட்டு விடலாம். பதில் எதுவும் வேணாம். அந்த வாஞ்சையும் அன்பும் தான் முக்கியம்.