Monthly Archives: January 30, 2013, 1:52 am

என்னைப் போல் ஒருவன்

சார், இன்னிக்குக் கோயிலுக்குப் போயிருந்திருக்கா போலே இருக்கு

யார் சார்?

என் மகள் தான் சார்

எந்தக் கோவில்?

ஊர்லே ஒரு கோவில் விட மாட்டா.. நான் இப்படின்னா அவ அப்படி..

திட்டினீங்களா?

எதுக்கு? கையைக் குவிச்சு வச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே பக்கத்துலே வந்தா.. அப்பா, உன் நெத்தியிலே என்ன இங்கே கீறல்.. அவ கையாலே மெல்ல நெற்றியைத் தொட்டுட்டு ‘ஓ..ஒண்ணுமில்லே’ன்னு போயிட்டா.. எனக்குத் தெரியும்.. என் நெத்தியில் சின்னக் கீத்தா அவ வீபுதி இட்டிருக்கா..

சிரிக்கிறார். அதில் தந்தை மகள் மேல் கொண்ட பாசமும், மகள் தந்தை மேல் கொண்ட பேரன்பும் தெரிகிறது. எங்கேயும், எந்த நாட்டிலும் இனத்திலும் உள்ளது போல உன்னதமான தந்தை – மகள் பாசம்..

அந்தத் தகப்பனைப் போயா இப்படி தரக்குறைவாகப் பேசுவது?

எழுத்தாளர் நீல.பத்மநாபன் அவர்களை சந்தித்து விட்டு சென்னை திரும்ப திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உட்கார்ந்திருந்தோம்.

அவருக்கு மொபைலில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.

படித்துவிட்டு முகம் மலர்ந்தார். என்னிடம் மொபைலை நீட்டினார்.

‘அப்பா, என் முதல் சம்பளம் இன்று வாங்கினேன்’

மூத்த பொண்ணா, சார்? எனி மியூசிக் ஸ்கோரிங்க் அசைன்மெண்ட்?

இல்லே, சின்னவ. மும்பாய்லே அசிஸ்டெண்ட் டைரக்டரா ஒரு படத்துலே வேலை செய்யறா. அங்கே முதல் மாச சம்பளம்..

எவ்வளவு சார் இருக்கும்?

பத்தாயிரம் ரூபாய்.

பூவாகச் சிரிக்கிறார்.

அந்த நல்ல மனதையா நோகடிப்பது?

பழைய பேப்பர் வாங்கலியோ

1953-ம் வருடத்து தமிழ், மலையாள தினப் பத்திரிகைப் பிரதிகள் நண்பர்கள் யாரிடமாவது உண்டா? போட்டோ காப்பி எடுத்துக் கொண்டு நன்றியோடு (அடுத்த நாவலில் இரண்டாம் பக்கம்) திருப்பி அனுப்பப் படும். அட்வான்ஸ் தேங்க்ஸ்:-)

——————————————————————————————-

எஸ்.ஜானகி தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதைப் புறக்கணித்திருக்கிறார் – தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களை விட வட இந்தியர்களே பத்ம விருதுகளுக்காக அதிகம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லி.

அவர் குறிப்பிடும் bias உண்மைதான். ஆனால் தனக்கு அளிக்கப்பட்ட தேசிய அங்கீகாரத்தைப் புறம் தள்ளுவது ஜானகி போன்ற பன்மொழிக் கலைஞர்களுக்கு ஏற்புடையது அல்ல.

’ஜானகி வெகுளித்தனமானவர். சங்கீதம் தவிர வேறெதுவும் அவருக்குத் தெரியாது. ஆரம்பப் பள்ளி கூட்டல் கழித்தல் கூட அறியாதவர். ஆனால் பாட ஆரம்பித்தால் ஏழு சுவரமும் அவர் சொன்னபடி கேட்கும்’ என்று பொருள்பட எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவருடைய இசைத் திறமையை வியந்திருந்தார்.

ஜானகியும் அரசியலுக்கு வரப் போகிறாரா என்று தெரியவில்லை

——————————————————-

தில்லி நிர்பயா கூட்ட வன்புணர்வு வழக்கில் ஆறாவது குற்றவாளியான, பெயர் குறிப்பிடப்படாத சைத்தான் ‘மைனர்’ பயலாம். ஜூன் 4-ம் தேதி ’18 வயது முடியும்போது’ வெளியே வந்துவிடுவானாம்.

நிர்பயாவுக்குள் இரும்புக் குச்சியை நுழைத்து குடல் வரை குடைந்த கிராதகன் இவன். மைனராம் மைனர் பேடிப் பயல்.

இந்த நாட்டில் வெற்று ஆத்திரப்படலாம். எழுதலாம். அவ்வளவுதான் செய்ய முடியும்.

http://www.thehindu.com/news/national/gangrape-case-sixth-accused-declared-minor/article4353611.ece?homepage=true

மனுஷ்யபுத்ரனுக்கு ஆதரவு

நானும் மனுஷ்யபுத்ரனோடு. நண்பர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறேன்.

இரா.முருகன்

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் மீதான மதவாத தாக்குதலுக்கு கண்டனம்

சவுதி அரேபிய நாட்டில் வீட்டு வேலை செய்துவந்த 17 வயது சிறுமிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதை விமர்சித்த தமிழக எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனுக்கு எதிராக மதவாதிகள் தாக்குதல் தொடுப்பதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவருடன் தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்து சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் திங்களன்று (ஜன.28) வெளியிட்ட அறிக்கை வருமாறு:

 

எழுத்தாளரும் அரசியல் – சமூக விமர்சகருமான மனுஷ்யபுத்திரன் மீது மிரட்டல் தாக்குதல் தொடுக்கப்படுவதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவருடனும் கருத்துச் சுதந்திரத்திற்காக நிற்போருடனும் தமுஎகச தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது.

 

இலங்கையைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி ரிசானா நஃபீக் தன் குடும்ப வறுமை காரணமாக சவுதி அரேபியா நாட்டில் வீட்டு வேலை செய்துவந்தவர். ஒரு குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்தச் சிறுமி அரசின் மரணதண்டனைக்கு உள்ளானார். நீதிமன்றம், மதவாதம் சார்ந்த சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. கொடுமையான முறையில், பொது இடத்தில் அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 

பல இஸ்லாமிய நாடுகள் உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு வரும் இக்காலத்தில், ஒரு சிறுமியை இவ்வாறு கொன்றது ஏற்கத்தக்கது அல்ல என்ற கருத்தை, ‘நக்கீரன்’ வார இதழில் மனுஷ்யபுத்திரன் தாம் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். மரண தண்டனை குறித்து பலருக்கும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்ற போதிலும், மனுஷ்யபுத்திரனுக்குத் தனது கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரமும் உரிமையும் இருக்கிறது. அந்த உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டியதாகும்.

 

ஆனால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் மக்களின் ஏகப்பிரதிநிதியாகத் தம்மைத் தாமே நியமித்துக்கொண்டு, அவர்களது மார்க்கத்திற்கு எதிரான கருத்தை மனுஷ்யபுத்திரன் கூறிவிட்டார் என்று கூறி அவரையும் அதை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியர் கோபால் அவர்களையும் கண்டித்து கூட்டம் நடத்தியுள்ளது. எழுத்தாளரின் வாதத்தை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் மனுஷ்யபுத்திரனைத் தாக்குகிற கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒருவர் கொலைமிரட்டலே கூட விடுத்துள்ளார்.

 

மதத்தின் பெயரால் இப்படிப்பட்ட சகிப்பின்மைகள் வளர்வது மக்கள் ஒற்றுமைக்கும், ஜனநாயகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாகும். மேலும் இது, முஸ்லிம் மக்கள் அனைவரையுமே தவறான முறையில் சித்தரிக்க முயலும் சக்திகளுக்கே சாதகமானதுமாகும்.

 

பொதுவான முஸ்லிம் மக்கள் இயக்கங்கள் இப்படிப்பட்ட செயலில் இறங்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும். அந்த இயக்கங்கள் இத்தகைய பொறுமையற்ற மிரட்டல்களை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும் என்று தமுஎகச கேட்டுக்கொள்கிறது. தமிழகத்தில் உள்ள கலை இலக்கிய அமைப்புகளும், எழுத்தாளர்கள் – கலைஞர்களும், ஜனநாயக – மதச்சார்பற்ற சக்திகளும் இப்பிரச்சனையில் மனுஷ்புத்திரனோடு தங்களது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

சோறு போடும் கல்கி – குழம்பு விளம்பும் சுஜாதா

பிரசவ வைராக்கியம் போல் பொய்யாக சென்னைப் புத்தகக் கண்காட்சி 2013 இன்னொரு முறை (இதோடு சரி) போனேன்.

1) தமிழக அரசால் பொது உடமையாக்கப்பட்ட படைப்புகளை தி.ஜ.ர முதல் இரண்டு டஜன் படைப்பாளர்களாவது படைத்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களை மறுபிரசுரம் செய்வதில் இங்கே கடை போட்டிருக்கும் நானூற்றுச் சில்லரை பதிப்பகங்கள் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. அரசுத் துறையிலேயே இந்தப் புத்தகங்களைக் குறைந்தது பத்தாயிரம் காப்பி அடித்து நூலகங்களில் வைத்து மீந்ததை வெளியே விற்கலாமே?

2) பொதுவுடமையாக்கப்பட்ட கல்கி தான் பல பதிப்பாளர்களுக்கு மதியம் சோறும் குழம்பும் மோரும் ஆயுசுக்கும் வழங்குகிறார் என்று தெரிகிறது. எல்லோரும் பொன்னியின் செல்வனை பல சைஸ்களில் அடித்துத் தள்ளி இருக்கிறார்கள். வாங்கிப் போகிறவர்களுக்கும் குறைச்சல் இல்லை.

3) நேற்று சுஜாதா படைப்புகள் நாட்டுடமை ஆக்கப் பட்டதாகக் கனவு கண்டேன். பதிப்பக நண்பர்களிடம் இன்னும் சொல்லவில்லை.

4) காலச்சுவடு பதிப்பத்தில் கூட்டத்தைக் கடந்து கண்ணன் குரல். என்னை அழைத்து கையைக் காட்டினார். ’.சரியாயிடுச்சு, பேஸ்புக்லே போட்டுடுங்க.. மலேசியா,இங்கிலாந்து இப்படி பல நாடுகளில் இருந்து ஃபோன் செய்து விசாரிக்கறாங்க’.

நம்ம பேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட்டை உலகமே படிக்கிறது என்பதிலும் கண்ணனின் கைக்கட்டு காணாமல் போய் கால்கட்டோடு மட்டும் எப்பவும் போல் இருக்கிறார் என்று அறிவிப்பதிலும் மகிழ்ச்சி.

5) விஸ்வரூபம் நாவல் நன்றாகப் போவதாகக் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தில் நானே இன்னொரு காப்பி வாங்கி, என் போலவே அறுபதைத் தொட்டு இன்னும் கடக்காமல் பத்திரிகை மற்ற மீடியா ஜர்னலிசப் பணியை வெற்றிகரமாகத் தொடரும் நண்பருக்கு அன்பளித்தேன். பதிப்பகம் வைத்திருக்கும் அவரும் தன் நகர்வல அனுபவங்க்ளைப் பகிர்ந்து கொள்ளும் புத்தகத்தைப் பரிசளித்தார். அறுபதுக்கு அறுபது சரியாப் போச்சு.

6) பபாசி அடுத்த வருடமும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தினால், தமிழக அரசிடம் கோரி ஆறு டவுன் பஸ்களைக் கடனாகப் பெறலாம். அண்ணா சாலை முகப்பில் இருந்து பொருட்காட்சி முகப்புக்கும், அங்கே இருந்து திரும்ப இங்கேயும் விலையில்லாமல் புத்தகக் கண்காட்சிக்கும் வருகிறவர்களுக்கு போக்குவரத்து சேவை அளிக்கலாம். நடக்கிறவர்களுக்கும் நிம்மதி. காரில், மோட்டார் பைக்கில் நெரிசலில் ஓட்டி வருகிறவர்களுக்கும் நிம்மதி.

******************************

This is amazing indeed. I don’t remember any instance of Guardian’s film reviewer Peter Bradshaw giving a Five Star rating for a movie. ‘Django Unchained’ has earned this credit. And it is DiCaprio all the way without obstructing other players anywhere.

Peter says about DiCaprio’s character – ‘revolting racist and sadist Calvin Candie, unforgettably played by Leonardo DiCaprio…hideously self-possessed with Southern politesse and a crocodile grin revealing bad teeth …kind of ruined charisma, a shabby youth running to the seed of early middle age’..

Django again enters into my ‘would love to watch’ list nearly 40 years after he held me spellbound, enacted by Franco Nero.

********************************

விஸ்வரூபம் நாவல் – நண்பர்களோடு கலந்துரையாடல்

அன்பு நண்பர்களே

இந்த வாரம் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியான விஸ்வரூபம் நாவல் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பதிப்பாளர்களான கிழக்கு பதிப்பகத்தோடு சேர்ந்து ஒரு நூல் அறிமுக விழா பிப்ரவரியில் நடத்த திட்டம் உண்டு.

அதோடு கூட பிப்ரவரி 17 அல்லது 24 தேதி மாலை சென்னை கடற்கரையில் ஒரு சந்திப்பு வைத்துக் கொள்ளலாமா?  நண்பர்கள் நாவலைப் படித்து உரையாட கிட்டத்தட்ட 4 வாரங்கள் நேரம் கிடைக்கும்.

உங்கள் பின்னூட்டங்களின் அடிப்படையில் நாள் தீர்மானிக்கப்படும்.. பத்ரியோடு இது குறித்துப் பேசுகிறேன்.விஸ்வரூபம் விற்பனையில்

அன்புடன்

இரா.முருகன்