Delta in dangerசோழ நாடு வீடுடைத்து


கர்னாடகா மனம் இரங்காததால் காவிரி நீர் இல்லை. மழையும் பொய்த்துக் கொண்டிருக்கிறது. காவிரி டெல்டா விவசாயிகள் மூன்று போகம் சாகுபடி செய்த நிலை போய் ஒரு போகம் – குறுவை சாகுபடியோடு, அதையும் நிச்சயமில்லாத விளைவுகளை எதிர்பார்த்து நிறுத்த வேண்டிய நிலை.

ஏக்கருக்கு ஐந்து அல்லது ஆறாயிரம் ரூபாய் நெல் விற்ற கணக்கில் கிடைக்கும் லாபம் எல்லாம் பணத்தில் சேர்த்தியா?

தமிழக விவசாயி அவமானப்படுத்தப்பட்டு நிற்கும் நேரத்தில் வீட்டுமனை வியாபாரிகள் ஆசை காட்டி விளைநிலங்களை அவர்களிடமிருந்து வாங்குகிறார்கள். நெல்பயிர் செழித்து பசுமைத் தாயகமாக இருந்த நஞ்சைமண் முழுக்க அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டிடங்கள்.

ஹிந்து பத்திரிகையில் கும்பகோணம் அருகே அம்மா சத்திரம் கிராம நிலையை விளக்கியிருந்தார்கள். படிக்கப் படிக்க நெஞ்சு கனத்தது.

தஞ்சைத் தரணியில் உணவாகும் அரிசி அங்கே விளைந்ததில்லையாம். கர்னாடக அரிசியாம். இன்னும் சில வருடங்களில் சோழநாடு சோறுடைத்து பொய்யாகப் போகக்கூடும். சோழ நாடு அடுக்குமாடி வீடுடைத்து என்றாகலாம்.

விளைநிலம் எல்லாம் வீடானால், தமிழ்நாட்டில் விவசாயம் என்ன ஆகும்?

——————————————–

எங்கே சொல்லுங்க பார்க்கலாம், யாருடைய பாடல் இது?

ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகுமாய் ஒன்றாய் இரண்டுமாகி
உள்ளாகி வெளியாகி ஒளியாகி இருளாகி ஊருடன் பேருமாகிக்
கானாகி அலையாகி அலைகடலுமாகி மலை கானக விலங்குமாகிக்
கங்குல் பகலாகி மதியாகி ரவியாகி வெளிகண்ட பொருள் எவையுமாகி
நானாகி நீயாகி அவனாகி அவளாகி நாதமொடு பூதமாகி
நாடும் ஒளிபுரிய அடியெனும் உமை நம்பினேன் நன்மை செய்து ஆளுதற்கே….

குணங்குடியார் பாடலே தான். பத்து நூறாண்டுக்கு மேற்பட்ட சூபியிசத்தின் இறுதிக் கண்ணிகளில் இவரும் உண்டு. இறையன்பும், மனித நேயமும், பிற உயிர்களை நேசித்தலுமாக பரிபூரண சரணாகதியை நயம்படச் சொல்லும் சூபியசம் என்ற அழகான பாரம்பரியத்தை நாடு நாடாக மத அடிப்படைவாதிகள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது மாலி நாட்டில்.

——————————————————————–

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன