நர்சரி பாடல்களின் பயன்பாடு யாது எனச் சிற்றுரை ஆற்றுக

வாழ்ந்து போதீரே- அரசூர் நாவல் வரிசையில் நான்காம் நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி

 

நான் இங்கே உட்காரலாமா?

 

சந்தனமும் மற்றும் ஏதுமோ மணக்கும் குரல். அளவாக நறுக்கிச் சீராக்கிய நரைத் தாடி வைத்த மனுஷர் ஒருத்தர் வைத்தாஸின் இருக்கைக்கு அருகே எதிர்பார்ப்போடு இடுப்பு வளைத்து நின்று நைச்சியமாக அவனைக் கேட்டார்.

 

தாராளமாக உட்காரலாம்.

 

விமானப் பணிப் பெண் ஒழித்துப் போன இருக்கையில் அமர்ந்தவர் இரு கண்ணும் மூடி ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்தார். உடனே கண் திறந்து திருவனந்தபுரம் தானே போகிறீர்கள் என்று வைத்தாஸை விசாரித்தார்.

 

தில்லியில் புறப்பட்ட விமானம் நாக்பூரில் இறங்கிப் புறப்படும் என்பது நினைவுக்கு வந்த வைத்தாஸ் திருவனந்தபுரம் போவதாகச் சொன்னான்.

 

வந்து அமர்ந்தவரை வீராவாலி புது மிரட்சியோடு பார்த்தாள். விமானப் பயணம் அசௌகரியமானதும் பயத்தை உண்டாக்குவதுமாக அவளுக்கு அமைந்து போனது. யாரைக் கண்டாலும், புதிதாக யார் குரலைக் கேட்டாலும் படபடப்பும் பயமுமாக அவள் இருந்தாள்.

 

நான் இருந்த இருக்கைக்கு அடுத்து ஒரு மலேயாக்காரி நடு வயசுப் பெண் இருந்து கொண்டு, கூடவே வந்த சீனப் பெண் பிசாசுகளோடு பேசுகிறாள். அதுகளும் கெக்கெக்கென்று சிரித்துக் களேபரமாகக் கும்மாளம் போடுவதால் நான் தொழில் அபிவிருத்தியைப் பற்றி யோசிக்க ஒட்டாமல் போனது. விமானத்தில் வருவதே எல்லாத் தொந்தரவும் ஒருசேரக் களையத் தானே?

 

வந்தவர் நேசமாக வினவ, ஆதரித்துச் சிரித்தான் வைத்தாஸ். ரோகியான யாசகனுக்குக் கடமை கருதி முகம் சுளித்துத் தருவது போல் தேநீரும் காப்பியும் எல்லோருக்கும் விளம்பி விட்டு விமானப் பணிப்பெண் போனாள். சாயா குடித்து முடிக்கும் வரை பேச்சு எழாமல் நிசப்தமாக இருந்தது விமானம்.

 

அருகருகே அமர்ந்து தேநீர் பருகியது இறுக்கம் தளர்விக்க முகங்கள் புன்னகை அணிந்தன. கூடப் பறக்கும் போது அரும்பும் நேசம் குரல்களானது

 

நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்ற தாடிக்காரரின் கேள்விக்கு வெளிநாட்டு அரசாங்கத் தூதர் என்று சொல்லலாமா என்று யோசித்து, வேண்டாம் என்று ஒதுக்கி, நான் இங்கிலாந்தில் இருந்து வரும் ஒரு எழுத்தாளன், ஆங்கிலத்தில் நாவல்கள் எழுதுகிறேன் என்று தெரிவித்தான்.

 

அற்புதம், நானும் எழுத்து சம்பந்தமான தொழிலில் தான் உள்ளேன்.

 

அவர் உற்சாகமாகத் தெரிவித்தார். புத்தகங்களைப் பதிப்பிக்கும் உன்னதமாக பணியில் ஈடுபட்டிருப்பதாக அவர் அறிவித்தபடி விமானத்தைச் சுற்றிப் பார்வையை ஓட விட, பெரிய பிளாஸ்டிக் தட்டோடு வந்த விமானப் பணிப் பெண் மரியாதையோடு சிரித்து, நழுவும் முந்தானையை பெருமையோடு நகர்த்திக் கொண்டு அவர் முன்னால் குனிந்து இனிமையாகக் கேட்டாள்.

 

உங்களுக்கு மேலே வைத்த உங்கள் ட்ரங்க் பெட்டியில் இருந்து ஏதும் எடுத்துத் தர வேணுமா? (இவ்வளவு அசிங்கமான மூஞ்சியோடு தானா நீ புத்தகம் விற்பதும் படுத்துச் சுகிப்பதும்?) குளிர்ந்த துவாலை தரட்டுமா? (உனக்குப் பிறந்ததெல்லாம் மலவாடை அடிக்கிறவைகள் தானே?) ஐயா, நீங்கள் தேநீர் குடித்து முடித்திருந்தால், குவளையைத் தருகிறீர்களா? (சாக்கடைப் பன்றியின் கழிவு உண்ணும் புழு நீ) .  சௌகரியமாகச் சாய்ந்து உட்கார்ந்து இளைப்பாறுங்கள்.

 

அவள் போகும் போது வீராவாலியை ஒரு வினாடி நோக்கிப் போனாள்.  கலவி உச்சத்தில் வீராவாலி மயில் போல் அகவுவது அவளுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது என்று வைத்தாஸ் நம்பினான். வீராவாலி ஆங்கிலத்தில் காதலும் பிரஞ்சு மொழியில் காமமும் பரிமாறுவாள் என்று விமானப் பணிப்பெண் நினைத்தால் நன்றாக இருக்கும். பெய்ஸ ஃப்ரான்ஸெ எ ஆங்க்லே பெய்ஸே.

 

நேற்று வீராவாலியைத் தேடி அலைய வேண்டியில்லாமல், பழைய தில்லித் தெருவில் வைத்தாஸ் காலடி எடுத்து வைத்ததுமே கிடைத்தாள். சாந்தினிசௌக் கண்டேவாலா மிட்டாய்க் கடையை அடுத்து நீண்ட வீதியில் கழைக் கூத்து நடந்து கொண்டிருந்த சாயங்கால நேரம் அது. கூட்டம் விலக்கி நடந்து மிட்டாய்க்கடை வாசலில் வேடிக்கை பார்த்தபடி தோளில் குரங்குக் குட்டியோடு வீராவாலி வைத்தாஸுக்குத் தட்டுப்பட்ட இனிய பொழுது.

 

அவனை எதிர்பார்த்திருந்தாள். எப்படியோ அவன் வருகை தெரிந்திருந்தது. விலகி நின்றிருந்ததே விட்டு விலகி வெகு தூரம் போக ஆயத்தமாகத் தான்.

 

போகலாமா என்று அவள் காதில் கிசுகிசுத்தான் வைத்தாஸ். மெழுகு நாறும் அழகான காது. அவன் காமத்தில் அந்த வாடைக்கும் இடம் உண்டு. மிட்டாய்க் கடை இனிப்புகளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதாலோ என்னமோ அவளுடைய உமிழ்நீர் பெருகி அவன்  தோளில் படிய, வைத்தாஸ் கைக்குட்டை எடுத்து அவள் வாயைத் துடைத்து விட்டான். யாரும் பார்க்கவில்லை. மற்றவர்கள் ஏதும் பார்க்காமல் ஏதும் கேட்காமல் ஏதும் பேசாமல் சூழலை உருவாக்கித் தத்தம் போக்கில் உறைந்து நிற்கப் பணிக்கப் பட்டவர்கள்.

 

வைத்தாஸ் வாங்கி வந்த ஒரு இனிப்பைக் கவ்வி எடுத்துக் கொண்டு குரங்குக் குட்டி வீராவாலியின் தோளில் இருந்து குதித்து ஓட, ஒரு சுமை விலகிய நிம்மதி வைத்தாஸ் முகத்தில்.

 

(குழந்தையோடு வந்தவளைக் காமுற்று அந்த சிசுவை விலக்கி அவளைக் கவர்ந்து வந்து மடியில் முகம் நோக்கிக் கிடத்தி  சதா சுகிக்கும் கழிசடை தானே நீ?)

 

யாருக்கோ குவளையில் குளிர்ந்த நீர் எடுத்துப் போன விமானப் பணிப்பெண் கேட்டபடி போனாள்.

 

(ஆமா, அதுக்கென்ன என்று வெட்கமே இல்லாமல் சொன்னான் வைத்தாஸ்).

 

அவன் தோளில் வாடை உயர்த்திக் கோழை புரளும் கட்டி தட்டிய எச்சில் வழிய வீராவாலி தூங்கிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் மெல்லக் கனைக்கும் ஒலி. அடுத்த உரையாடலுக்கு ஆயத்தம் அது.

 

அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தவர் வைத்தாஸிடம் ஏமாற்றம் தொனிக்கும் குரலில் சொன்னார் – என்ன மாதிரியான புத்தகங்களை நான் பதிப்பிக்கிறேன் என்று கேட்பீர்கள் என எதிர்பார்த்தேன்.

 

அவன் பதிலுக்குக் காத்திராமல் எழுந்து நின்று மேலே வைத்திருந்த டிரங்குப் பெட்டியைத் திறக்க உள்ளே அடைத்து வைத்திருந்த புத்தகங்கள் வைத்தாஸ் தலையில் ஒன்றிரண்டாக விழுந்தன. குயில் சத்தமும் குருவிகள்  பொறுக்கும் போது அமர்த்திய குரலில் விவாதிக்கும் ஒலியுமாக நிறைந்தது.

 

ஒரு புத்தகத்தைத் தரையில் விழும் முன் தாங்கிப் பிடித்து வைத்தாஸ் புரட்டிப் பார்த்தான். கெட்டித் தாளில் நர்ஸரி ரைம்கள் ஆன குழந்தைப் பாட்டுகள் அச்சடித்துப் பிள்ளைகளுக்கான ஓவியங்களும் பளிச்சிட்ட புத்தகங்கள் அவை. குதித்தாடுகிற குழந்தைகளும் மிருகங்களும் சிரித்தன.

 

ஏனோ வைத்தாஸுக்கு ஏமாற்றமாகப் போனது. அவன் எதிர்பார்த்தது குழந்தைகளை இல்லை. என்றாலும் மரியாதைக்காக அந்தப் புத்தகங்களின் விற்பனை பற்றிக் கேட்டு வைத்தான். விமானத்தில் போகிற பப்ளிஷர். நிச்சயம் நன்றாகத் தான் விற்கும். வீடு வீடாக, பள்ளிக் கூடத்தில் வாங்கச் சொல்லிக் கட்டாயப் படுத்தி, சினிமா நட்சத்திரங்கள் கையில் பிடித்துக் கொண்டு பத்திரிகையில் புகைப்படம் போட்டு., ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் இலவசம் என்று அறிவித்து, குலுக்கல் நடத்தி பரிசு கொடுத்து. எப்படியோ இந்தப் புத்தகங்கள் விற்பனையில் பிய்த்துக் கொண்டு போகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன