A morning with Keshavகேசவ் – கிருஷ்ணன் – மூன்று மணி நேரம்

ப்ரிவாதினியில் நண்பர் ஓவியர் கேஷவ் சொற்பொழிவு – LecDem on ‘My Experiments with Krishna’.

அந்நியோன்யத்தின் மறு பெயர் கேசவ். அடக்கத்துக்கும் அவர் முகவரிதான்.

காலையில் ஹிந்து பத்திரிகையில் கேசவின் அரசியல் கார்ட்டூனைப் பார்ப்பதில் பாதிப் பொழுது விடிகிறது என்றால், ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் அவருடைய ‘அன்றைய கிருஷ்ணா’ ஓவியத்தை தரிசிக்கும்போது காலை நிறைவாகத் தொடங்குகிறது நம்மில் பலருக்கும். ஒருநாள் கேசவ் ஓவியம் மேலே கூறிய சமூக வலைத் தளங்களில் வரவில்லை என்றால் காலை நேரத்துக் காப்பியைத் தவறவிட்ட ஏமாற்றம்.

பாரம்பரிய ஓவியக் கலையை இணையத் தொழில் நுட்பத்தைக் கைக்கொண்டு ஒரு பெரிய நண்பர் கூட்டத்துக்கு தினமும் போய்ச் சேர வைக்கிற மக்கள் ஓவியர் அவர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோற்றத்தில் கிருஷ்ணன். இந்திய, ஜப்பானிய, சீன, ஆப்பிரிக்க, மேற்கு திசை வரைகலை மரபுகள், சமகாலத் தன்மை, அப்ஸ்ட்ராக்‌ஷன் என்று ஓவியம் சம்பந்தமான சகல விதமான பரிசோதனைகளையும் இந்திய ஓவிய, காவிய, புராண மரபில் அழுத்தமாகக் காலூன்றி வெகு இயல்பாக நிகழ்த்துகிறவர் கேசவ். ஒரு முறையோ சில முறையோ அல்ல, தினம் தினம்.

ஆயிரக் கணக்கான நண்பர்களுக்கு அவருடைய ஓவியப் பரிச்சயம், ‘கடவுள் படம் போடறார்’ என்பதில் ஆரம்பித்து அவரோடு கூடப் படைப்பில் ஆழ்ந்து ஓவியப் பயணம் மேற்கொள்வதில் முடியும். அவருடைய ஓவியங்கள் நம்மோடு பேசுகிறவை. மரபார்ந்த புரிதலை சில படிகள் மேலே உயர்த்துகிறவை. கேள்வி கேட்கிறவை. பதிலை நம்மையே கண்டடையச் செய்கிறவை.

அதற்கு அவர் பார்வையாளனைத் தயார்ப் படுத்துவது மிக்க அன்பும் கவனமும் எடுத்து. எந்த சிரமமும் பார்வையாளனுக்குத் தராமல், நோகாமல் நோன்பு நூற்க வைக்கும் ஆற்றல் அது.

அர்ஜுனனுக்கு கண்ணபிரான் விசுவரூப தரிசனம் காட்டித் தரும் காட்சி என்றால் ஒரு நாள் அஜந்தா பாணி அல்லது ரவி வர்மா அதுவுமில்லை என்றால் ரெம்ப்ராண்டின் படிமங்களை உள்வாங்கி ஒரு ஓவியம் முதலில் வரும். அதில் அர்ஜுனன், கண்ணன், போர்க் களம், ரதம், குதிரைகள் என்று காட்சியை விளக்க எல்லாமே இருக்கும். அடுத்து தத்ரூபமாக சித்தரிக்கும் ’anatomical symmetry’யை விட காட்சி அனுபவத்துக்கு முக்கியத்துவம் தரும் இந்திய மரபு பாணியில் அர்ஜுனனின் வியப்பிலும் ஆனந்ததிலும் விரிந்த விழிகள் முகத்தில் முதன்மையாகப் பரவி நிற்க, கண்ணனின் கழல்கள் எதிரே முக்கியப்படுத்தப் படும். சில படங்கள் கடந்தபின் ஒரு கோட்டோவியம். அர்ஜுனன் மண்டி போட்டுத் தலை நிமிர்த்தி முன்னால் பார்த்துக் கொண்டிருப்பான். ரதம் எங்கே? குதிரைகள் எங்கே? கண்ணன் தான் எங்கே? ஓவியத்தை நம் மனதில் முடித்துக் கொள்ள விட்டு விட்டு கேசவ் காத்திருப்பார் நம் புரிதலிலும் ரசனையிலும் முழு நம்பிக்கை வைத்து.

ஒரு நல்ல ஓவியன் இப்படித்தான் அந்த அற்புத நுண்கலையை வெகுஜன அரங்குக்கு வெற்றிகரமாக எடுத்துப் போக முடியும்.

கேசவ் போல்.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி அம்பலத்தில் நிலவறை நிலவறையாகத் திறக்க பொன்னும் மணியுமாகக் குவிந்திருந்து வெளி வருவது போல் சொற்பொழிவுக்காக ‘விண்டோஸ் பிக்சர் வியூவ’ரில் ஃபோல்டர் ஃபோல்டராக கேசவ் திறக்க அவருடைய ஓவியங்கள் நிறைந்து தளும்பிக் காட்சிக்கு வருகின்றன.

காமிராவில் படம் பிடித்து டிஜிட்டைஸ் செய்து இப்படி கம்ப்யூட்டரில் சேமித்திருக்கும் ஓவியங்கள் கேசவ் வரைந்த மொத்த ஓவியங்களில் பாதி கூட இருக்குமா என்பது சந்தேகமே. என்றாலும் இதுவே கிட்டத்தட்ட ஐநூறு ஓவியங்களாவது வரும்.

கேசவ் சொன்னார் –

தினசரி கிருஷ்ணனை வரைவேன். சில நாள் ஒன்றுக்கு மேற்பட்ட ஓவியங்கள். சில நாள் ஒன்றே ஒன்று. இன்னும் சில நாள் அதுவும் இல்லை.

ஒரு முன்மாதிரிப் படம் போட்டு வைத்து விட்டு வரைகிற பழக்கம் இல்லை. அந்த நிமிடம் மனதில் தோன்றுகிற வடிவம், பாணி, வரை பொருள், வரையும் முறை – அக்ரெலிக் ஆன் கான்வாஸ், வாட்டர் கலர், சார்க்கோல் என்ற கரி உருவம், கோட்டோவியம், சீன மேட் (மூங்கில் திரை) ஓவியம், கேரள பஞ்ச வர்ண ஓவியம்.. எதுவுமே முன்கூட்டி திட்டமிடப்படுவதில்லை.

ராமாவதாரத்தில் தான் முதலில் ஆழ்ந்திருந்தேன். அனுமனின், வீடணனின் சரணாகதி என்னை நெக்குருக வைத்த காவிய நிகழ்வுகள்.

அனுமன் சரணாகதி ஓவியங்களில் அந்த வாயு புத்திரன் முதுகு வளைந்து ராமன் தாள் பற்றிக் குனிந்திருப்பது அன்னையின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆதரவற்ற, வேறு பாதுகாவல் ஏதுமற்ற பரிபூரணமாக சார்ந்து இருக்கும் நிலை. தான் என்ற அகம்பாவம் போகும்போது அந்த ச்ரணாகதி மனோநிலை வரும்.

ராமாவதாரத்தில் இருந்து கிருஷ்ணாவதாரத்துக்கு வந்தபோது அந்த சரணாகதித் தத்துவமும் கூடவே வந்தது. கோவர்த்தன கிரி உயர்த்திய நிகழ்ச்சியில் பிரம்மன் பணிவதும், அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மர் மகாபாரதப் போர்க் களத்தில் கண்ணன் தன் மடியில் கிடத்திக் கொண்டு நோக்க, உளமும் உயிரும் நெகிழ்ந்து பார்ப்பதும் சரணாகதியின் வெவ்வேறு விதமான வெளிப்பாடுகள்.

கண்ணன் சங்கின் ஒரு முனையை வாயில் வைத்தபோது குழந்தையாகிறான். அன்னை யசோதை மடியில் கிடத்தி, அன்போடு வற்புறுத்தியும், செல்லமாக மிரட்டியும் பாலூட்டும் மழலை. அதே கண்ணன், சங்கின் மறு முனையை வாயில் வைத்தபோது அது பாஞ்ஜசன்யம். போர்க்களத்திலும் நல்லோரைக் காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் கம்பீரமாக நிறைந்து ஒலிக்கும் நாதம் அது.

கர்னாடக இசையைக் கேட்டபடி வரைந்த கண்ணன் படங்களில் அந்த இசையின் பாதிப்பு தெரியும். சச்சின் சாயலில் கூட ஒரு கண்ணன் உண்டு – விளையாட்டுப் பிள்ளை அவன். (யமஹா) கீபோர்டில் கால் பாவ நிற்கும் கிருஷ்ணனும் வரையும் விரல்களிலிருந்து விகசித்துப் புன்னகைக்கிறவன்.

கார்ட்டூனிஸ்ட் கேசவ் உலக, தேசீய அரங்கில் அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கி வெளிப்புறமாக விரல் சுண்டுகிற, கேலிச் சித்திரமாக விமர்சனம் வைக்கும் படைப்பாளி. கிருஷ்ண கேசவ் மனதின் உள்ளே விரல் சுண்டி அகப் பயணம் போனபடி இருக்கிற, ஓவியத்தின் மூலம் அனுபூதி அடைய, பகிர்ந்து கொள்ள முயன்றபடி இருக்கும் கலைஞன். கற்ற ஓவியக் கலையே இருவருக்கும் பொதுவான அடிப்படைத் திறமை.

மூன்று மணி நேரம் கேசவ் பேசினார். அவர் ஓவியங்கள் இன்னும் பேசுகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன