New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 28 இரா.முருகன்

நாட்டுப்புறக் கலை, கலாச்சார விழாவும் மாநாடும் எல்லோர் மீதும் பரிபூர்ணமாகக் கவிந்திருந்தது. ஆட்டக் கலைஞர்கள் மட்டுமில்லாமல் பிரதிநிதிகளும் கூட, நடக்கும் போதோ, இருந்து பேசும்போதோ அதே நினைவாக இருந்தார்கள். அவர்கள் கை கால் அசைவிலும், கண் அசைவிலும் அவ்வப்போது நளினம் தெறித்துக் காட்சி வைப்பது தன்னிச்சையாக நிகழ்ந்தது.

நாலு நாள் கொண்டாட்டம் இன்றைக்கு முடிவடைகிறது. மூன்று நாளிலேயே முடியும் விஷயத்தை வலிந்து நாலு ஆக்கிய சர்க்கார் உத்யோகஸ்தர்கள், நடத்த நிகழ்ச்சி இல்லாமல், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு என்ன வேடிக்கை காட்டலாம் என்று சிண்டைப் பிய்த்துக் கொண்டார்கள்.

அம்பலத்தில் இருந்து மாராரை வரவழைத்து, பத்து மணி தொடங்கி ஒரு மணி நேரம் சங்கீதமாக எடக்கையோ கடைக்கயோ தட்டிக் கொண்டு கேவி அழுது கேட்க வைக்கணும். அப்புறம் கெஸ்டுகளை நாலு ஹவுஸ்போட்டுகள், அதான் படகு வீடுகளில் அடைத்து ஆளுக்கு ரெண்டு போத்தல் பியரும் கொடுத்து வேம்பநாட்டுக் காயலில் போய் வரச் சொல்லணும். அப்படிச் செய்தால், சாயந்திரம் முடிவுரை, விருது என்று நடந்து எல்லோரும் சவுக்கியமாக வீடு போய்ச் சேர்ந்து, போக வர டிராவலிங் அலவன்சும், நாலு நாள் தங்குமிட அலவன்சும் கிளெய்ம் செய்யலாம்.

இந்த யோசனை எல்லாத் தரத்து அதிகாரிகளாலும், அவர்களுடைய உதவியாளர்களாலும் உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டுச் செயலாக்கப் பட, விழாப் பந்தலே வெறிச்சென்று போனது.

ராஜா ஒருத்தர், அவர் கூடவே ரெண்டு களவாணிகள் குட்டையும் நெட்டையும் கையில் பிடித்த எலுமிச்சம்பழமுமாக. பார்த்தேளா?

பட்டை நாமத்தோடு அரசூர் ஜோசியர் ஆளில்லாத பந்தலுக்குள் ஒன்றிரண்டாக உருண்டு நேரம் கெட்ட நேரத் தூக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி விசாரித்துக் கொண்டிருக்க, வேனில் மழை உக்ரமாகப் பொழியத் தொடங்கியது.

சின்னச் சங்கரன் குளித்து, புட்டும் கடலையும் காலை ஆகாரமாகக் கழித்து பந்தலில் வந்து நின்று எடக்க தட்டி, மாரார் பாடிய சோபான சங்கீதத்தைக் கேட்டபடி கொஞ்ச நேரம் நின்றான்.

கேரளா பக்கத்தில் சோபான சங்கீதம் என்று பாடுவார்கள். சகிக்காது.

இப்படி தில்லி ப்ரஸ் கிளப் கேண்டீனில் மங்களூர் போண்டா சாப்பிட்டு விட்டு வெற்றிலைச் சீவலைக் குதப்பிக் கொண்டு, பல் இல்லாத ஒரு கிழவர், க்ரிட்டிக்காம் அவர், எந்த பீ அள்ளும் பத்திரிகைக்கோ வியாசமெழுதி மயிரைப் பிடுங்குகிற கிழம், அந்த உச்சைக் கிறுக்கன் இப்படிப் பிதற்றிக் கொண்டிருப்பது நேரம் கெட்ட நேரமாக நினைவில் வந்தது. கிழம் இங்கே வந்திருந்தால், ஓரமாகக் கூட்டிப் போய் கையைக் காலை உடைத்து காதை அறுத்திருக்கலாம் என்று சங்கரனுக்கு தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட கோபம் தாறுமாறாக வந்தது. அறுத்த காதை என்ன செய்வது என அடுத்த யோசனையும் கூட.

மழைக்கு நடுவே வானத்தில் குறுக்கே கோடு கிழித்துப் பிரகாசமாகக் கிறுக்கிப் போன மின்னல் சங்கரனை தங்குமிடம் போய் உட்காரச் சொன்னது.

ராஜா உடுப்புலே ஒருத்தர்.

அரண்மனை ஜோசியர் சங்கரனைக் கும்பிட்டுக் கேட்டார்.

தில்லிக் கிழம் பற்றிய சினம் சின்னாபின்னமாகி மறைய அவரிடம் உபரி தகவல் கேட்க ஆரம்பித்த வினாடி வானமே பிய்த்துக் கொண்டு விழுந்த மாதிரி இடிச் சத்தம்.

யந்திரம் நிறுத்தினது என்ன ஆச்சோ. பார்த்துட்டு வரேன்.

ஜோசியர் அவசரமாக மழையில் நனைந்தபடி ஓட, யாரோ குடையோடு வந்து சங்கரனிடம் மரியாதையோடு நீட்டினார்கள். சர்க்கார் ஊழியராகத்தான் இருக்க வேண்டும். என்ன தான் கொடி பிடித்து முத்ரா வாக்கியம் முழக்கி எதிரெதிரே நின்று வர்க்கப் போராட்டம் நடத்தினாலும் ஒரு மழை, புயல், உக்ரமான வெய்யில் காரணமாக வரட்சி, அப்படி ஒன்று காரணமாக எல்லோருக்கும் விசேஷ அலவன்ஸ் அறிவித்து, வரத் தாமதம் என்றால் சர்க்கார் ஜீவனக்காரர்கள் காந்தத்தால் கவரப்பட்ட இரும்புத் துகள்களாக ஒற்றைக் கெட்டாக ஈஷிக் கொள்வார்கள். அதிலே செண்ட்ரல் என்ன, ஸ்டேட் என்ன?

சங்கரன் அறைக்குப் போய்ச் சேர்ந்த போது அங்கே ஒற்றைக் குழல் விளக்கு எரியாமல், சூரியன் தொடாமல், இருட்டு முழுக்க அப்பியிருந்தது. படுத்து உறங்கப் பாந்தமான சூழல். காலையில் பத்து மணிக்கு உறங்க வெறுப்பு மேலெழுந்து வந்து உடம்பு மறுக்க, அங்கே வந்து விழுந்த மலையாள செய்தித்தாளையும் ஒரு நாற்காலியையும் எடுத்துக் கொண்டு அறைக்கு வெளியே வராந்தாவில் போட்டான்.

ஆள் ஒழிந்த அந்தக் கட்டடத்தில், சத்தத்தோடு எழுத்துக் கூட்டிப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தபோது பின்னால் இருந்து காலை வணக்கம் சொல்லும் பெண் குரல் கேட்டது.

அவனுக்குத் தெரியும், கொச்சு தெரிசா தான்.

உட்கார்ந்த படிக்கே காலை வணக்கம் சொல்லிக் கையை நீட்டினான் சங்கரன். பற்றிக் குலுக்கிய கரத்தை விடாமல், வெளியே போகலியா என விசாரித்தான்.

இது என்ன கேள்வி? இவளோடு பேச இன்னும் என்ன எல்லாம் உண்டு?

தெரிசா தோளில் மாட்டிய தோல்பையும், கருப்புக் கண்ணாடியும் அவள் எங்கோ போய்க் கொண்டிருக்கிறாள் என்று சொன்னது. வெளிநாட்டுப் பிரயாணிகளுக்கே உரித்தான, சகல நேரமும் ஊர் சுற்றிப் பார்க்கும் பரபரப்பு. போய் இருந்து பார்த்து வருவதை விட, போனேன் வந்தேன் என்று பத்து இடத்தைப் பார்வையிட்டு மனதில் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு போவது அந்தப் பரபரப்பின் வெளிப்பாடு என்று சங்கரனுக்குத் தெரியும்.

தெரிசா மேல் இருந்து வந்த மெல்லிய யுதிகோலன் வாடை சங்கரனுக்குப் பிடித்திருந்தது. இங்கிலாந்தில் மீன் பஜ்ஜி விற்கிற பெண். அழகானவள். அவனுக்கு உறவு வேறு. அவனை ஈர்க்கிறவள். அவனால் ஈர்க்கப்படுகிறவள். தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட மோகம் அது. தானே வந்து கவிவது. பற்றிப் பிடிக்கக் காத்திருந்த மாதிரி மழை நாளில் மேலோங்கி எழுகிறது. அவனுக்கு வேண்டியிருக்கிறது. அவளுக்கும்.

இங்கே இருந்து, கடலோரமாகப் படகில் போகலாம் என்று சொன்னார்களே. யாரையும் காணோமே.

தெரிசா விசாரிக்க, சங்கரன் சிரித்தான். உறங்கிக் கிடந்த போது எல்லோரும் எழுந்து, குளித்துப் பசியாறிப் படகுத் துறைக்குப் போயாகி விட்டது. திரும்பப் படகு வந்து அழைத்துப் போகாது.

படகு இங்கே வராவிட்டால், நாம் அதைத் தேடிப் போனால் என்ன?

தீர்வு கண்ட நிம்மதியோடு தெரிசா சங்கரனிடம் கேட்டாள்.

இங்கே சும்மா மோட்டுவளையையும், மழையையும் பார்த்துக் கொண்டு இருப்பதைவிடப் படகு தேடிப் போவது சுவாரசியமானதாகவே இருக்கும் என்று சங்கரனுக்குப் பட்டது. ஆயுசில் எத்தனை தடவை இப்படிப் படகையும் ஓடத்தையும் தேடி, ஒரு அழகான கருத்த பெண் கூட வர நடக்கக் கொடுத்து வைத்திருக்கிறது?

வரு பூவாம் என்றான் சுமாரான மலையாளத்தில். அவளை மரியாதை விலக்கி உரிமையோடு ஒருமையில் விளித்து, அதைச் சந்தோஷமாகத் தெரியப்படுத்திச் செயல்படுவது இந்த வினாடியில் அவனுக்கு உகந்த செயலாக இருந்தது.

கோவிலைக் கடந்து கொஞ்ச தூரம் போனால் படகுத்துறை வரும் என்று யாரோ எப்போதோ சொன்னது சங்கரன் நினைவில் உண்டு. அது கொஞ்ச தூரமாக இல்லாவிட்டாலும் சரிதான். இவளோடு நடக்கவும், பேசவும் நேரம் கிடைக்கிறதே.

தூறல் சிறுமழையாக அடர்ந்து கொண்டு வந்தது. தெரிசா கையில் எடுத்து வந்திருந்த பூப்போட்ட குடையை விரித்தாள். சங்கரன் குடைக் கம்பி மேலே படாமல் விலகி நடக்க, மழை இன்னும் வலுத்தது.

தெரிசா குடையை சங்கரனிடம் கொடுத்து விட்டு அவனுக்கு இன்னும் அருகில், குடைக்குக் கீழ் நடக்கத் தொடங்கினாள். சங்கரனுக்கு இது போதும் இப்போது.

போட் ஜெட்டி என்று இங்கிலீஷிலும், கீழே படி பொண்டன் என்று பிரஞ்சிலும் அதன் கீழ் மலையாளத்திலும் எழுதிய பலகை வைத்த இடம். வலது புறம் காட்டும் கை இங்கிலீஷிலும், இடது வசம் சுட்டும் கை பிரஞ்சிலும் வரைந்திருந்தது. மலையாளத்தில் கைக்கு இடமில்லை.

இங்கிலீஷோடு போவோம் என்று தெரிசாவிடம் சொன்னான் சங்கரன். அவன் நினைத்தபடி அந்தப் பாதை காயலோரமாக, படகுத் துறையில் முடிந்தது.

எல்லாப் படகும் காயலோடு போயிருக்க, வெறுமையாகக் கிடந்த துறையில் சங்கரனும் தெரிசாவும் நின்றபோது மழை விடை பெற்றுப் போயிருந்தது. படகுத் துறைக்காரன் இவர்களைப் பார்த்து நின்றான்.

சங்கணாச்சேரி படகுக்கு வந்தீங்களா?

மரியாதை விலகாமல் சங்கரனைக் கேட்க அவன் இல்லை என்றான்.

காயலில் கொஞ்ச நேரம் போய் விட்டு வரலாம்னு நினைச்சேன்.

அதுக்கென்ன? போகலாமே என்று படகுத்துறைக்காரன் சிரித்தான்.

போகலாம்னா, தண்ணீரிலே நடந்தா போகணும்?

தெரிசா கற்றுக் கொண்டிருந்த மலையாளத்தில் கேட்க, அதெதுக்கு என்றான் படகுத்துறைக்காரன்.

வர்க்கீஸேட்டன் படகு வர ரெடியா இருக்கு. இன்னிக்கு காயல்லே போக வேணாம்னு காலையிலே தீர்மானிச்சு ஒரு மணி நேரத்துலே முடிவை மாத்திக்கிட்டான். நீங்க தான் முதல் சவாரி. வாங்க

பெருக்கெடுத்து ஓடும் காயலின் நீர்மைக்கு மேலேறி அவன் குரல் கொடுத்தான். கூவென்று கூவும் குரலாக வர்க்கியேட்டனுக்குப் போகும் அழைப்பு. கொதும்பு வள்ளம் என்ற சிறு ஓடமும், சரக்கு கொண்டு போகும் படகு ஓட்டுகிறவனும், வலை காயப் போட்ட மீனவனும் ஏற்று வாங்கி எதிரொலிக்க, அது நாலைந்து முறை துறை முழுக்க எதிரொலித்துக் கடந்தது.

அப்புறம் குருவி சலசலக்கும் ஓசையும் மரங்கொத்தியின் இடைவிடாத கூச்சலும் ஒலிக்க, அவற்றோடு சேர்ந்து தொலைவில் இருந்து தேய்ந்து ஒலிக்கும் குரல் ஒன்று.

வரும் ஒலியை மகிழ்ச்சியோடு செவிகொடுத்தவன் தலையசைத்துச் சொன்னான் –

வந்துக்கிட்டிருக்கான்.

அவன் சொல்லிப் பதினைந்து நிமிடம் சென்று அழகான நெட்டி, மற்றும் சன்னமான மர வேலைப்பாட்டோடு ஒரு படகு வீடு கம்பீரமாக மிதந்து வந்து படகுத் துறைப் பலகைக்கு அடுத்து நின்றது.

ஏறிக் கொண்டார்கள். அடுத்த மழை ஆர்ப்பாட்டமாக நானும் வருகிறேன் என்று சேர்ந்து கொண்டது.

படகு புறப்பட்டபோது படகுக்காரன் சங்கரனையும் தெரிசாவையும், கூரை இறக்கி வேய்ந்த படகு முனையில் இட்டு வைத்திருந்த நாற்காலிகளில் சௌகரியமாக உட்காரச் சொன்னான்.

மழை அடர்ந்த காயலையும், காயல் நிறம் பகர்த்திய மழையையும் எந்தக் குறுக்கீடும் இன்றி பார்த்துக் கொண்டே பொழுதைக் கரைக்க அந்தப் படகு முனை தவிர வேறே இடம் இருக்க முடியாது.

இந்த நாள், இந்த நிமிடம், இந்த நொடி ஏற்கனவே நிச்சயப்படுத்தியபடி உருவாகிக் கடந்து போகிறது.

தெரிசா தனக்குள் சொல்லிக் கொண்டாள். யார் நிச்சயித்தபடி என்று தெரியாது. கயிற்றில் ஆடும் தோல்பொம்மைகளாக இயங்குவது தவிர அவளுக்கும் சின்னச் சங்கரனுக்கும் இப்போது வேறே காரியம் ஏதும் இல்லை.

அவள் மனதை எதிரொலிப்பது போல் பார்த்த சங்கரன் அவள் அருகே நெருங்கி அமர்ந்து கையைப் பற்றிக் கொண்டான். அவனுடைய வெப்ப மூச்சு அவளுக்குப் பரிச்சயமாகி இருந்தது.

இதெல்லாம் சரிதானா? இல்லாவிட்டால் தான் என்ன? தெரிசா சங்கரனையே பார்த்தபடி இருந்தாள். முசாபர் ஒரு வினாடி அவள் நினைப்பில் எழுந்து காயல் அலைகளில் கலந்து காணாமல் போனான்.

காயல்லே மழை காலத்தில் படகு விட்டுப் போகிறது பற்றி எங்க தீபஜோதிப் பாட்டி சொல்லியிருக்காங்க.

அவள் உற்சாகமாகச் சொன்னாள். சங்கரன் அவளையே பார்த்தபடி இருந்தான். நீர்த் தாவரம் எதுவோ படகோடு வருவதைப் பார்த்து விட்டு மறுபடியும் தலை உயர்த்தினாள் தெரிசா.

தீபஜோதி பாட்டித் தள்ளை, எங்க கிரான்மா. இவங்க தான்.

ஃபேம்லி ட்ரீ படத்தைக் கைப்பையில் இருந்து எடுத்து அவன் விரல்களோடு பிணைந்திருந்த தன் கை கொண்டு படத்தில் சுட்டினாள் தெரிசா. அந்த எழுத்துகளில் தோல் சுருங்கி மூத்த தீபஜோதியைக் கண்டிருந்தாள் அவள்.

பாட்டித் தள்ளை அவங்க அப்பா கண்ணூர் புரபசர் வேதையன், அம்மா பரிபூரணத்தம்மா, வீட்டிலேயே இருந்த உறவுக்காரர் துர்க்கா பட்டன் அம்மாவன். தீபஜோதி முத்தச்சி எல்லோரையும் பற்றி நிறையச் சொல்லி இருக்கா. அந்தப் பழைய வீடு பற்றியும்.

அவளுக்கு பாட்டியின் வார்த்தைகள் முழுக்க நினைவு இருந்தன. அந்த மொழியும் இப்போது சட்டென்று மனதிற்குள் திரும்ப வந்திருந்தது.

அவள் குழந்தை தீபஜோதியானாள். சங்கரனின் தோளில் தலை சாய்த்து, மழை ஆதரவாகத் தாளம் கொட்டச் சொல்லத் தொடங்கினாள் –
//
ரெண்டு பக்கமும் காய்த்துக் குலை தள்ளி இருந்த வாழை மரங்களுக்கு நடுவே துர்க்கா பட்டன் தவழ்ந்து கொண்டிருந்தான்.

ஆன, ஆன, கொம்பன் ஆன. வேகம் போ ஆன. திருசூர் பூரம் போ ஆன.

இது பேசுகிற ஆனை. குழந்தை கூடச் சேர்ந்து கொம்மாளி கொட்டிச் சிரிக்கிற ஆனை.

வேதையனின் பெண் குழந்தை தீபஜோதி அவன் முதுகில் உட்கார்ந்து பூக்குடலையைக் கவிழ்த்த மாதிரிச் சிரித்தது. அவன் வயிற்றில் சின்னக் காலால் மிதித்தது. ஆனையைத் தோட்டத்து வடக்கு மதில் சுவர் பக்கம் நகர்ந்து போகும்படி அடம் பிடித்துக் கொண்டிருந்தது அது.

வேதையன் வீட்டுத் தோட்டத்தில் வாழை மரங்களின் வரிசை முடிந்து இனி தென்னை, பலா, மா அப்புறம் பூச்செடிகள். ஆனை போக முடியாத ஒற்றையடிப் பாதையை அடுத்து சின்ன வாய்க்காலாக கிணற்றுத் தண்ணீர் பொசிந்து கொண்டிருந்தது. கடைகால் கடைகாலாக கிணற்றில் இருந்து நீர் சேந்தி அந்தச் சாலில் செலுத்திய படிக்கு வீட்டுப் பணிக்காரன் ஒருத்தன் தோட்ட வேலையில் கருத்தும் காரியமுமாக இருந்தான்.

பட்டரே, குஞ்ஞம்மையைக் குப்புறத் தள்ளிடாதேயும். தென்னை நட வெட்டி வச்ச குழி உண்டு அங்கே. பின்னே நீரும் கூடி அதிலே விழுந்து வைக்கப் போறீர். கண்ணு தொறந்து ஆனை நடக்கட்டும்.

பணிக்காரன் தண்ணீர் இறைப்பதை நிறுத்திச் சொன்னான். பட்டன் முதுகில் உட்கார்ந்து ஆனையை முன்னால் செலுத்திக் கொண்டிருந்த மூணு வயசுப் பெண் குழந்தை தீப ஜோதி மழலையில் அவனை அதட்டியது.

சும்மா போ தோமச்சா.

எண்டெ பொன்னு குஞ்ஞம்மே. தோமச்சன் சும்மாவும் போகும். சுகமாயிட்டு பாரம் சுமந்தும் போகும். விதிச்சது தீர்ந்தால் பின்னே குரிசுப்பள்ளி உண்டல்லே கிடக்க.

அவன் முடிப்பதற்குள் துர்க்கா பட்டன் குழந்தையை லாகவமாக இடுப்பில் இருந்து இறக்கி தோளில் சுமந்தபடி எழுந்து நின்றான்.

தோமச்சா. குஞ்ஞுக் குட்டியோடு சம்சாரிக்க வேறே விஷயம் ஒண்ணும் கெடக்கலியா உனக்கு?

அவன் குழந்தை நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வைக் கீற்றைத் தன் மேல் முண்டால் பதமாகத் துடைத்தான். குழந்தை நெற்றியில் மெலிசாக முத்தம் இட்டபோது அது அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு திரும்ப கூச்சலிட்டது.

அம்மாவா, ஆன, ஆன.

அம்மாவனு வல்லாத்த ஷீணம் குஞ்ஞே. ஒரு கவளம் சோறு கழிச்சு வந்நு ஆனக் கொம்பன் திருச்சூர் பூரம் காணான் இறங்கும். சரியா.

ஞானும் வயும். மன்னி, பூயம். பூயம்.

குழந்தை ஓட்ட ஓட்டமாக அம்மாவிடம் அனுமதி வாங்க ஓடியது.
//

தெரிசா பூயம் என்றாள். அவள் பிடரியில் முகம் புதைத்து முத்தியபடி சங்கரன் பூரம் என்றான்.

தெரிசாவின் வரியோடிய உதடுகளைத் தன் இதழ் கொண்டு மூடித் திறந்தான்.

அவளுடைய நாவைப் பரிசித்துச் சொன்னான் –

நமுக்கு பூரம் காணான் பூவாம்.

அவளுக்குள் இருந்து எழுந்து வாயின் மேலன்னத்தில் மோதி எதிரொலித்து வந்த குரலாக இருந்தது அது. தெரிசா உடல் சிலிர்க்க முதுகு குறுக்கி அவனோடு ஒட்டிக் கொண்டாள்.

இதெல்லாம் சரிதானா? சரியில்லை என்றால் என்ன போச்சு? புண்ணியம், பாவம், நல்லது, கெட்டது கூட்டிக் கழித்து யாரிடமும் கணக்கு ஒப்பிக்க வேண்டியதில்லை.

அவள் அந்தக் கணத்தில் கரைந்தாள்.

படகுக் காரன் சாயாக் கோப்பைகளை முக்காலியில் வைத்துவிட்டு ஒன்றும் பார்க்காத, எதையும் கேளாத பாவனையில் உள்ளே போனான்.

கண்ணூர் வீட்டுக்கு நான் போயிருக்கேன்.

சங்கரன் சொன்னான்.

மாமா படிச்சிட்டிருக்கார். முன்வசம் போகாதேன்னு ஒரு ஸ்தூல சரீரப் பெண், சொல்றது நினைவு வருது. அவளை பரிபூர்ண மாமின்னு கூப்பிடுவோம்.

தெரிசாவின் உதடுகளில் திரும்ப முத்தமிட்டுச் சொன்னான் சின்னச் சங்கரன்.

இதெல்லாம் சரிதானா? இல்லாவிட்டால் தான் என்ன? வசந்தி அவன் நினைப்பில் ஒரு வினாடி எழுந்து, அடர்ந்து நெய்த மழைத் திரிகளில் கரைந்து போனாள்.

சங்கரன் தெரிசாவை அணைத்துக் கொண்டான்.

காயலும் வானமும் நீர்த் திரையால் இணைய அடர்ந்த மேகங்கள் நின்று சுரக்க, மழை சீராகப் பெய்த வண்ணம் இருந்தது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன