New Bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 29 இரா.முருகன்


என்னைப் பழி வாங்கும் வேகத்தோடு ராத்திரி வேகமாக நகர்ந்து வந்தது.

ஞாயிற்றுக்கிழமை இரவு இப்படி வராது. அது ரத்னா தியேட்டரில் ஷான் கானரி நடித்த ஜேம்ஸ் பாண்ட் படமாக இருக்கும். கயலோடு ஒற்றை பாக்கெட் பாப்கார்னையும் ஆர்வமான விரல்களையும் பகிர்ந்து கொள்ளும் இனிமையான சினிமா தியேட்டர் அரையிருட்டாக இருக்கும். கபே ஹவுஸில் லெச்சுவோடு ஓயாத அரட்டையாக, கட்டி தட்டிப் போன சர்க்கரையை வலிந்து கலக்கி ரசித்துக் குடிக்கும் ஆறிப் போன காப்பியாக இருக்கும். கடல்புரத்தில் ஜோசபினைப் பக்கத்தில் உட்கார வைத்துப் பார்த்துக் கொண்டு, இரு கை தாழ்த்தி அளைகிற கடற்கரை ஈர மணலாக இருக்கும். எங்கே போனாலும் எவ்வளவு நேரம் ஆனாலும் சகல பாதுகாப்போடும் உறங்க வந்து சேரும் வீடாக இருக்கும். அப்பாவின் திருநீற்று வாசனையாக இருக்கும். அவருடைய அன்பான குரலாக இருக்கும்.

எங்கே போக? யார் என்னை வரவேற்று உபசரித்து ராத்தங்கிப் போகச் சொல்லி உபசரிக்கக் காத்திருக்கிறார்கள்?

நான் கயல் வீட்டை விட்டு கிளம்பும்போது சாயந்திரம் ஐந்து மணியாகி விட்டிருந்தது. என் பிரியமான கயல்விழிக் கண்மணியோடு சேர்ந்து இருக்கக் கிடைத்த ஒரு வினாடியைக் கூட நழுவிப் போக விடாமல், மனப் பாரத்தை எல்லாம் அவளுடைய சிரிப்பிலும், தெறித்து விழும் கண்டிப்பிலும் கரைத்துத் தீர்க்க முனைந்து உட்கார்ந்திருந்தேன். ஜாக்கிரதையான சுயநலத்தோடு, இரண்டு நாளாக நான் சுமந்து திரியும் பாவச் சிலுவையைப் பற்றிச் சொல்லாமல் மறைத்தேன். அதைச் சுமந்து நான் நரகத்தில் பிரவேசிக்கும் போது கயலின் சிரிப்பை மனதில் வழிய வழிய நிறைத்துப் போவேன்.

’இங்கேயே தங்கிட்டு காலையிலே போயேன்’. கயல் சொன்னாள்.

வேண்டாம். என் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. எவ்வளவு பாதுகாப்பாக அவள் இருந்தாலும் என் மனது அவள் உடம்பை விழுங்கச் சொல்லி ராத்திரி எழுந்து சூழ்ந்து கட்டளையிட்டு உறக்கம் கெடுத்து விடும். கிடைக்காத சந்தர்ப்பத்தைக் கற்பனையாக நிகழ்த்திப் பார்த்து மறுபடி மறுபடி உசுப்பி விட்டுச் சுற்றிச் சுற்றி வர வைக்கும். இங்கே இருந்து நினைவு தறிகெட்டு ஓட வழி செய்தபடி ராத்திரியை மன உளைச்சலோடு கழிக்க வேண்டாம்.

என்றால் வேறெங்கே? சித்தாந்த சாமி மடத்து வாசல்? அங்கே தூங்க விடுவார்களா? ராத்திரி பூரா கடற்கரையில் இலக்கின்றி அலைந்து வரலாமா?

எங்கிருந்தோ வல்லூரி சார் மனதுக்குள் தாண்டிக் குதித்து நினைவுகளைத் தாறுமாறாக்கி உடல் முழுக்க பிளாஸ்திரியும் மாவுக் கட்டுமாகக் கடந்து வந்தார். அவருடைய பழைய வீட்டை நினைத்தேன். பிரியமான லதா தீதியோடு வல்லூரி குடித்தனம் வைப்பதற்கு முன்னால் இருந்த அந்தக் கூட்டுக் குடித்தன வீட்டோடு, சக குடித்தனக்காரர்களான டெமான்ஸ்ட்ரேட்டர்களும் கூடவே நினைவுக்கு வந்தார்கள். டெமோக்கள் இன்னும் அங்கே தான் இருக்கிறார்கள். போனால் இன்று ஒரு ராத்திரியோ, தொடர்ந்து தங்கவோ வழி பிறக்கலாம். இந்த யோசனை காலையிலேயே மனதில் வராததற்காக வல்லூரி சாரைக் கோபித்துக் கொண்டபடி பெடலை மிதித்தேன்.

வல்லூரி இருந்த வீட்டை இடித்துக் காரையும் செங்கலுமாகக் குவித்து வைத்து விட்டு, நாமமும், கந்தர்வர்களும் பதித்த பழைய வாசல் கதவைக் கெல்லி எடுத்து டெம்போவில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். ரெட்டைத்தெரு வீடு மரித்த போது எனக்கு அனுபவப்பட்ட, அந்த இடத்தில் நிற்கும் போது கனமாக மனதில் கவிந்து கண்ணீர் விட வைத்த காட்சி இது. என் வயதில் ஒரு ஆணோ, பெண்ணோ ஓரமாக நின்று விசும்புவதை எதிர்பார்த்துத் தேடினேன். இந்த வீட்டிற்கு அப்படி யாரும் சொந்தம் இல்லை போலிருக்கிறது. யார் நினைவிலும் ஏறாமல் ஒரு வீடு இறந்து போய், பௌதிக எச்சங்கள் களையப்பட்டு வெறுமையான வெட்டவெளி எழுகிறது..

தெரு முழுக்க, ஊர் முழுக்க, அதற்கு மேலும் விரிகிறது அன்னியர்கள் சுவாசிக்கிற உலகம். அவர்கள் பேச்சும், பழக்கமும், பழகுவதில் காட்டும் அலட்சியமும், அவர்களோடு பேசவும் ஏற்படும் தயக்கமும், யாசிப்பின் வெட்கமும், நிலை தாழ்ந்து போனது குறித்த துக்கமுமாக எனக்காக விரியும் உலகம் இது. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இங்கே தான் இனி. இன்னும் எத்தனை காலமோ. வெறும் காமம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப் போடும் என்றால் எதைக் கொண்டு அதையும் மாற்ற?

இங்கே சுற்றி அலைந்து கொண்டிருப்பதை விட வல்லூரி வாத்தியாரையே அவருடைய வீட்டில் போய்ச் சந்திக்கலாம் என்று முடிவு செய்து ரங்கப்பிள்ளை தெருவில் அவர் வீட்டுக்குப் போனேன். மேல் மாடியில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருக்க, கீழே அடைத்துப் பூட்டி இருளடைந்து கிடந்த பெரிய வீடு அவருடையது.

கீழே இருந்தபடிக்கு சார், சார் என்று கூப்பிட, இருட்டில் ஆள் அடையாளம் தெரியாமல் பால்கனியில் எட்டிப் பார்த்துத் திரும்பக் குரல் கொடுத்தபடி இருந்தார் வல்லூரி. விழுந்து வைக்கப் போகிறார் என்ற பயத்தில் சைக்கிளை உடனடியாக ஸ்டாண்ட் போட்டு, மேலே படி ஏறினேன். அது ஜோசபினுடைய சைக்கிள். காணாமல் போனால் பின்னும் பெரும் கஷ்டம். கீழே உடனே வந்து பூட்டி சாவியை பாக்கெட்டில் போட்டபடி திரும்பப் படி ஏறினேன். கையில் நேற்றைய காலைத் தினசரியில் சுற்றிச் சடம்பு வைத்துக் கட்டிய துணிகள். கயல் தங்கம் பிரியத்தோடு துவைத்து மடித்து அயர்ன் செய்து கொடுத்து அனுப்பியவை அதெல்லாம். மானசீகமாக அவளுக்கு ஒரு முத்தம் ஈந்தேன்.

கையில் சப்பாத்தி இடும் உருட்டுக் குழவியும் கையில் அப்பிய மாவுமாக மடித்துக் கட்டிய சாயவேட்டியோடு எதிர்ப்பட்டார் வல்லூரி. லதா தீதி தோளில் பேட்டரி விளக்கைத் தலை சாய்த்து இடுக்கிக் கொண்டு சுவிட்ச் போர்டில் டெஸ்டரை வைத்து ஏதோ மின் இணைப்பைச் சோதித்துக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. வைத்தே வீட்டு ரிக்கார்ட் ப்ளேயரில் ஏதோ குளறுபடியாகி, ஹேமந்த் குமாரும், மன்னா டேயும், முகம்மது ரஃபியும், கிஷோர் குமாரும் கூட அந்த்வானாக ஒரே வார்த்தையை நம்பிக்கையோடு திரும்பத் திரும்பச் சொல்லி விட்டு சட்டென்று அடுத்த அடிக்குப் போவது தவறாமல் நடக்க, தீதி காசு வாங்க மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லி அதைச் சரிப்படுத்திக் கொடுத்தாள். ரேடியோ ரிப்பேர் கூட செய்வாளாம். வல்லூரி வாத்தியார் கொடுத்து வைத்தவர்தான். அவருக்கு மச்சினி இருந்தால் அந்த்வானுக்குக் கேட்கலாம் என்று லெச்சு அபிப்ராயம் வைத்திருந்தான். அக்கா டேப் ரிக்கார்டருக்கு செஞ்சதை தங்கச்சி உன் திக்கலுக்குச் செய்ய முடியும் என்று தவறான நம்பிக்கை கிடைத்த அந்த்வான் புறப்பட்டு லதா தீதியை விசாரிக்க அவளுக்கு வேறே அக்கா தங்கை அண்ணன் தம்பி இல்லை என்று தெரிய வந்தது வேறு கதை.

’ஏமி காவாலி’?

மூக்குக் கண்ணாடி அணியாத நிச்சயமின்மையோடு இன்னொரு தடவை நான் யார் என்று விசாரித்தார் வல்லூரி மாஸ்டர். சொன்னேன்.

’அடடே ஏம்பா சொல்லியிருந்தா நானே கபே ஹவுஸுக்கு வந்திருப்பேனே. நாடகம் எழுதறே. கதையை கேட்கணும். அதானே’?

நான் சிரித்தேன். நாடகம் எழுதுகிற வேலையில்லை இப்போது. நடித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த காட்சி என்ன என்று தெரியாது. முடிவும் அறியேன்.

’நடிக்கிறியா? ரொம்ப நல்லது.. என்னிக்கு இனாகுரேஷன்’? குன்றாத ஆர்வத்தோடு கேட்டார் வல்லூரி.

‘விரைவில் எதிர்பாருங்கள். ஆனா நான் அதுக்கு வரல்லே சார்’.

’தெரியும். இங்கிலீஷ் கவிதைத் தொகுப்பு. அதானே? எத்தனை கவிதை எழுதியிருக்கே? கொடு பார்க்கலாம்’.

என் கையில் வைத்திருந்த துணிப் பொதியை வாங்கக் கை நீட்டினார் அந்த அப்பாவி நண்பர்.

’அதெல்லாம் இல்லே சார். வந்து ..’

வந்து?

‘இன்னிக்கு ராத்திரி தங்க இடம் வேணும்’.

நம்ப முடியாமல் தலையைக் குலுக்கிக் கொண்டார். ‘என்ன ஆச்சு, வீட்டுச் சாவியைத் தொலைச்சுட்டியா’?

வல்லூரி கேட்க வேறு வழி இல்லாமல் கதைச் சுருக்கம் சொன்னேன். கண்ணாடியைத் தேடி எடுத்துப் போட்டுக் கொண்டு ஒரு வினாடி என்னையே கூர்ந்து பார்த்தார் அவர்.

’அப்பா கூட சண்டையா? அதுக்காக வீட்டை விட்டு வந்துடுவியா? நாகேஸ்வரராவ் சினிமா மாதிரி இருக்கு. அந்த சீன்லே கண்டசாலா பாட்டு ஒண்ணு தான் பாக்கி’.

சொல்லி விட்டு வல்லூரி சார் பாடினார். நல்ல குரல். தெலுங்கு சோகத்தோடு சிரிப்பும் சேர்ந்து வழிந்தது வல்லூரி முகத்தில். நாலு வரி பாடியதும், நான் மெதுவாகச் சொன்னேன் –

’சார், இப்படிக் கஷ்டப்படுத்தினாலும் பரவாயில்லே. ராத்தங்க இடம்..’.

நிச்சயம் உண்டு என்று என் தோளில் அன்பாகத் தட்டினார் தோழர் வல்லூரி. லெச்சுவிடம் சொன்னால் நாளைக்கு காபி ஹவுஸ் வாசலில் அவரைக் கௌரவிக்க அணிவகுப்பு மரியாதையே நடத்தி விடுவான்.

‘சார் வீட்டை விட்டு கோவிச்சுக்கிட்டு வந்துட்டாராம்’

லதா தீதிக்காக குரலை உயர்த்தி அவர் சேதி சொல்ல, ஹாலில் விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. தீதி ஸ்டூலை விட்டு இறங்கி வா என்று பிரியத்தோடு கூப்பிட்டாள்.

’சாப்பிடறியாப்பா’?

வல்லூரியை விட வேகமாகத் தமிழ் கற்றுக் கொண்டு விட்டாள் தீதி. அவரை விட வேகமாக மனிதர்களைப் புரிந்து கொள்கிறாள். அந்த அன்பான தம்பதிகளைப் பார்க்க மனதுக்கு இதமாக இருந்தது. சூரியன் மேற்கில் ஒருவேளை உதித்து நான் கயலைக் கல்யாணம் செய்து கொண்டால் இப்படித்தான் இருப்போம். நான் கைப்பிடிப்பது ஜோசபினாக இருந்தால்? எப்படி இருப்போமோ அது கயலுக்குக் கட்டாயம் பிடிக்காது.

வீணான கற்பனைகளைத் தள்ளி, சாப்பிடறேன் தீதி என்றேன். தீதி கையில் இருந்து ஸ்க்ரூ ட்ரைவரை வாங்கி உடனே அதைக் கீழே போட்டார் வல்லூரி. நழுவி விழுந்த அது அவர் கால் கட்டை விரலைப் பதம் பார்க்க, வல்லூரி நிமிடங்களாக அடுத்த பத்து நிமிஷம் போனது.

காலில் பிளாஸ்திரி ஏறியதும் அவருக்கே இயல்பான அமைதியை மீட்டெடுத்த வல்லூரி சாரோடு இருந்து ரொட்டியும் தால் சென்னாவும் சாப்பிட்டேன். தீதி நாளைக்கு காலேஜ் திறப்பதை நினைவு படுத்தினாள்.

கயல் சலவை செய்து கொடுத்த உடுப்பும், காலேஜ் காண்டீன் குழாய்த் தண்ணீரும், நண்பர்கள் யாராவது மனம் இரங்கிக் கொடுத்தால் பகலுக்கு ஓசி சோறுமாக நாளை நடந்துவிடும் என்றேன் அவளிடம்.

காலையில் சித்தாந்தசாமி கோவிலில் பிரசாதம் கிடைத்தால் அதைவிட விசேஷம் என்று பட்டது. ஆனால் அதை தீதியிடம் சொல்வதைத் தவிர்த்தேன். ஏற்கனவே நான் கிறுக்கி வரைந்த சொற்சித்திரத்துக்கே அவள் உருகிப் போய் உட்கார்ந்து விட்டாள்.

’சரி மொட்டை மாடியில் ஜிலுஜிலுன்னு காத்து வாங்கிட்டு உறங்கு.. விடிஞ்சதும் யோசிக்கலாம்’.

தீதி பாயும் தலையணையும் கொண்டு வந்து கொடுத்தாள். நான் மெல்ல மாடிப்படி ஏற, வல்லூரி சார் கிசுகிசுப்பாகத் தீதியிடம் முனியோட்டம் பற்றி தெலுங்கில் நினைவு படுத்தியதை கேட்டேன். முனீஸ்வரலு என்றால் முனிதான். தீதி அதற்கெல்லாம் பயப்படுகிறவள் இல்லை என்றாலும் எனக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. சாத்தானே மாரத்தான் ஓடியாகி விட்டது. முனியாவது ஒன்றாவது. விடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம்.

விளக்கை அணைத்துப் படுத்ததும் ராட்சச வெறியாக அமேலி அமேலி என்று தேகம் தகிக்க ஆரம்பித்தது. இரண்டு நாளாக இரை கண்ட உடல் சுகம் எதிர்பார்த்தது. இன்று நான் உன் பேச்சைக் கேட்கப் போவதில்லை. நிம்மதியாக உறங்குவேன்.

பத்து நிமிடம் தூங்கி இருப்பேன். அல்லது அரை மணி நேரம். குழப்பமான கனவில் கடல் புரத்தில் சுங்கச் சாவடிக் கதவுகள் அதிசயமாகத் திறந்திருக்க, கடல் பாலத்தை ஒட்டிக் கப்பல் ஒன்று நங்கூரமிட்டு நிற்கிறது. நான் சுங்கச் சாவடிப் பக்கம் ஒரு நிமிடம் ஓடி நின்று பின்னால் பார்க்க, கப்பல் சங்கொலி எழுப்பி இரைகிறது. தியூப்ளே போல உடுப்பணிந்த யாரோ அல்லது அவர் தானோ கடலுக்குள் இறங்கி நடந்து வந்தபடி என்னிடம் பிரஞ்சில் சத்தம் போடுகிறார். கப்பலில் ஏறச் சொல்கிறார் என்று நினைத்து முன்னால் பாயப் பார்த்தால், சுங்கச் சாவடியில் யாரோ மணல் மூட்டைகளைச் சுமந்து போய்க் கப்பலில் ஏற்றச் சொல்லி இரைகிறார்கள். ஒவ்வொரு மூட்டையாகத் தூக்கிப் போய்க் கடல் பாலத்தின் முனையில் வைக்க, தலை கனத்து வலிக்கிறது. உடல் தளர்ந்து வியர்வையில் குளிக்கிறது. ஒரு மணல் மூட்டையை எடுத்துத் தலையில் சுமந்து கொண்டு கப்பலில் பிரவேசிக்க அடி எடுத்து வைப்பதற்குள் கப்பல் புறப்படுகிறது. என் ஒரு கால் கப்பலிலும் மற்றது கடல் பாலத்திலுமாக இருக்க, நடுங்கி விழித்துக் கொண்டேன். கண் எரிந்து, ஒற்றைத் தலைவலி உச்சத்தில் வலிக்கத் துடித்து, உடல் வெப்பம் ஆகக் கூட, ஜன்னி வந்த நிலை. பிதற்றுகிறேன் என்று தெரிந்தே பிதற்றுகிறேன்.

எழுந்து உட்கார நினைக்கும்போது கை கால்கள் வேலை செய்யாமல் மனது அமேலி கொடுத்த மாத்திரை விழுங்கினால் எல்லா ரோகமும் சரியாகப் போகும் என்கிறது. சுவர் ஏறிக் குதித்து அமேலி கொடுத்த குளிகையோடு அவளையும் இன்னொரு முறை அனுபவித்து வரலாம் என்று ஆசை காட்டுகிறது மனதில் ஒரு ஓரத்தில் பதுங்கிய மிருகம்.

தலைவலி தாங்கமுடியாமல், கண் விழிக்க இயலாமல் இருட்டில் உட்கார்ந்து அமேலி டேப்ளெட் அமேலி நீ வேணும் என்று கதற விளக்கு எரிகிறது.

பக்கத்தில் வந்து உட்கார்ந்து ஆதரவாக என் தோளைத் தொட்டவர் வல்லூரி சார். சின்ன டம்ளரில் வென்னீரும், ஏதோ ஒரு மாத்திரையுமாக லதா தீதி எனக்கு வலுக்கட்டாயமாகப் புகட்டுகிறாள். நான் பாதிக் கண் திறந்து கஷ்டப்பட்டு பார்க்க அவள் என் அம்மாவாக மாறி இருக்கிறாள். அம்மா அம்மா அம்மா என்று அரற்றி அவள் காலைப் பிடித்துக் குமுறிக் குமுறி அழுதபடி கண் மூடி உறங்க நினைத்தேன். உறங்கினேன்.

எழுந்ததும் தீதி முகத்தில் தான் முதலில் விழித்தேன்.

’என்னப்பா ஏதோ பொண்ணு பேரை ராத்திரி முழுக்கச் சொல்லிப் புலம்பினியே. கீழே வரைக்கும் கேட்டுது உன் சத்தம். ஜூரம் அதிகமாகி ஜன்னி கண்டுதோன்னு பயந்துட்டோம். சார் உன்னை ஆஸ்பத்திரியிலே சேர்த்துடலாம்னாரு’ என்றாள் லதா தீதி.

நான் கையெடுத்து அவளைக் கும்பிட்டேன். இரவு இரண்டு தடவை எனக்காக மாத்திரையும் வென்னீரும் கொடுத்து காய்ச்சலை அவள் கட்டுக்குள் வைக்காவிட்டால் நான் பிழைத்திருப்பேனோ என்னவோ.

’சிநேகம் எல்லாம் நல்லது தான். ஆனா நாம் படிக்க வந்திருக்கோம். அது தானே முதல் வேலை. நான் செம்படவ இனம். வல்லூரி சார் பிராமணர். ரெண்டு பேருமே ரொம்ப ஏழைக் குடும்பம். கடல்லே போய் வரவங்களைக் கெஞ்சி எங்க நயினா வாங்கிட்டு வர்ற மீனை தெருத் தெருவா வித்து காசு சேர்த்து படிச்சேன். வல்லூரி, புரோகிதருக்கு அசிஸ்டண்டா, பொணம் தூக்கற பிராமணனா போய் காலேஜ் பீஸுக்கு பணம் சேர்த்தார். காலேஜ்லே தான் எங்க காதலும் வந்துச்சு. ஆனா அது படிப்புக்கு நடுவே வரலே. ரெண்டு பக்கமும் எதிர்ப்பு. அவருக்கு வேலை கிடைச்சு தான் கல்யாணம். ஒண்ணும் கொறஞ்சு போயிடலே. காதலும் இருந்தது. கல்யாணமும் நடந்தது. இன்னிக்கு யாரையும் எதிர்பார்க்கலே நாங்க. இன்னிக்கும் எதிர்ப்பு இருக்கு. ஆனா மத்தவங்களுக்கு எங்களால முடிஞ்ச உதவி செய்யற நிறைவும் உண்டு’.

நான் அவர்களைப் புது மரியாதையோடு பார்த்தேன். எவ்வளவோ சாதித்து விட்டு இவர்கள் எதுவுமே நடக்காத மாதிரி சகஜமாக இருக்க, ஒன்றுமே சாதித்து முடிக்காத நான் ரகளை செய்து ஊரைக் கூட்டிக் கொண்டிருக்கிறேன்.

’நீ செய்த தவறும் இனி செய்ய நினைத்து செய்யாமல் போனதும் எல்லாம் நேத்திக்கு உன் அழுகையிலே கரைச்சுட்டே. உன் கண்ணிலே என் மகனைப் பார்த்தேன். இனி எந்தத் தப்பும் செய்யாதே. படிச்சு நல்லா வா’.

என் அம்மா காப்பியோடு சொன்னாள். லதா தீதியாக அவள் வீடு நிறைய மங்கலமாக நிறைந்து நின்றாள்.

காலேஜ் கிளம்பும் போது தீதி கொடுத்த சாயாவும், முந்திய ராத்திரி இட்ட ரொட்டியை உதிர்த்துச் செய்த உப்புமாவும் சித்தாந்தசாமி கோவில் வரிசையில் ஆண்டி பரதேசிகளோடு நிற்காமல் தெம்பாக காலேஜுக்கு வண்டி மிதித்துப் போக வழி செய்தது. தீதி, மெர்சி பெகூ..

’என்னடா லேடீஸ் சைக்கிள்லே வர்றே’?

காலேஜ் உள்ளே நுழையும்போது லெச்சு குரல் கேட்டது.

சட்டென்று நின்று குருவே என்று இரண்டு கையும் எடுத்து பெரிசாகச் சுழற்றி சைக்கிளில் இருந்தபடிக்கே வணக்கம் சொன்னேன். எதிர்பார்க்காத மகிழ்ச்சி இது.

’நீ எப்படி இங்கே லெச்சு? டிகிரி முடிச்சாச்சே’?

கேட்க ஆரம்பித்தபோதே பட்ட மேல்படிப்பு ஆரம்பிக்கப் பட்டது நினைவு வந்தது.

‘இங்கிலீஷ் இலக்கியத்திலே எம் ஏ பண்றேண்டா’ என்றான் லெச்சு. ஓரமாக ஷேக்ஸ்பியரும் கீட்ஸும் ஷெல்லியும் நடுநடுங்கி குழையை இடுப்பில் சொருகிக் கொண்டு லெச்சு கட்டளைப்படி ராகிங் நடனம் ஆட இருப்பதாகக் கற்பனை செய்யச் சிரிப்பு வந்து விட்டது.

சன்னமான சலங்கை சத்தம். நான் லெச்சுவோடு பேசுவதில் மும்முரமாக இருக்க, அவன் தான் முதலில் திரும்பிப் பார்த்தான்.

’கயல் நிக்குதுடா. உன்னைத்தான் தேடி வந்திருக்கு போல’.

காலை வெளிச்சமும் தலை குளித்த அழகும் வெள்ளைச் சூடிதாருமாக அம்சமாக இருந்தாள் கயல். முதல் நாள் வகுப்புக்குப் போகாமல் அவளைப் பக்கத்தில் நின்று நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. காலப் புத்தகத்தில் இரண்டு தாள்களை மட்டும் கிழித்துப் போட்டு விட்டு கயல் துணையிருக்க மேலே போக வேண்டியதுதான்.

லெச்சு ஒதுங்கக் கயலும் நானும் என் சி சி கட்டடம் பக்கமாக இதமாகச் சக்கரங்கள் சேர்ந்து உருள நகர்ந்து போனோம். அந்தச் சில வினாடிகள் மறுபடி வாழ்ந்த புத்துணர்ச்சி. இன்று இது மட்டும் கூட வரட்டும்.

சைக்கிள் கூடையிலிருந்து சின்ன ஸ்டெயின்லெஸ் டப்பாவைக் கஷடப்பட்டு திறந்தாள் கயல்.

’என்ன, தேங்காப் பத்தையும் பச்சை மிளகாயுமா’?

’இந்த இளக்காரத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே. நாலு தோசை சுட்டு எடுத்தாந்திருக்கேன். முன்னாலேயும் பின்னாலேயும் பொத்திட்டு தின்னுட்டு கம்முனு கிளாசுக்குப் போ’ என்று கண்டிப்பு காட்டினாள் கயல்.

’அய்யே பொத்திகினு என்னத்த துண்றதாம்’?

’நீ துண்ணு நான் பொ..’

கயல் அட்டகாசமாக ஆரம்பித்து சட்டென்று ப்ரேக் பிடித்து நிறுத்தினாள்.

நான்? நான் ரெண்டு தடவை நானை அழுத்தமாக்ச் சொல்ல அவள் முகத்தில் படர்ந்த வெட்கத்துக்கு அது கல்லூரியாக இல்லாமல் இருந்தால் அவளை இறுக அணைத்து, ஆமா அதே தான். முத்தத்துக்கு ஏது நேரம் காலம்?

’பகலுக்கு வைச்சுக்கறேன் கயல்’ என்று கிளம்பினேன்

’எதை’? கயல் விசாரித்தாள்.

’உன்னைத்தான்’.

’ஏன் ராத்திரிக்கு அமேலியா’?

கண்ணை விரித்துப் பார்த்தபடி இன்னொரு தடவை இப்படிக் கேட்டால் எல்லா உண்மையையும் கக்கி விடுவேன்.

அவள் நகர்ந்து போக, வகுப்புக்குப் புறப்பட்டேன்.

’போன்ஜூர்’.

அமேலி குரல் இது. கண்களில் கருவளையமும் களைப்புமாக அந்த அழகு ஓவியம் நிலைகுலைந்து நிற்க நான், நான் மட்டும் தான் காரணம் என்ற மனக் குமைச்சல் கூடிக் கொண்டிருந்தது.

சாப்பிட்டியா என்று கேட்டாள் அமேலி தாழ்ந்த சத்தத்தில். கயல் இவளை உலக அழகி என்றது நினைவு வந்தது. நிச்சயம் உலக அழகிதான்.

தலையாட்டினேன்.

‘பசிக்குது. கேண்டீன் போகலாம் வா’ என்றாள் அமேலி.

முதல் வகுப்பில் ஆப்டிக்ஸோ எலக்ட்ரானிக்ஸோ இருந்தால் புரபசர்கள் கோபமாகப் பார்க்க வாய்ப்பு உண்டு. இனிமேலாவது படிக்கணும் என்று அமேலி தான் மோகம் வடிந்ததும் சொன்னாள்.

’அமேலி சைக்கிள் மேலே உட்காரு’ என்றேன். கயல் கொண்டு வந்த பாத்திரத்தைக் கையில் ஏந்திப் பிடித்தேன்.

‘ஐயோ உனக்கு யாரோ, யாரோ என்ன, கயல் தானே எடுத்து வந்தது? beauté noire பொத்தி நுவா .. beaux yeux போ ஸ்யூ .. கருப்பழகி கண்ணழகி’. அமேலி சின்னச் சிரிப்போடு கேட்டாள்.

ரெண்டு பேரும் ஒருத்தரைப் பற்றி மற்றவர் கிண்டலாகச் சொன்னாலும் அதில் உண்மை உண்டென்று இருவருமே உணர்ந்துதான் இருக்கிறார்கள்.

அமேலி துண்டு துணுக்காக மெல்லச் சாப்பிட்டு முரண்டு பண்ண, நாலு பக்கமும் பார்த்து யாரும் பக்கத்தில் இல்லை என்று, முக்கியமாகக் கயல் இல்லை என்று உறுதி செய்து கொண்டு அமேலிக்கு ஊட்டி விட்டு ஐந்தே நிமிடத்தில் காலிப் பாத்திரத்தோடு வகுப்புக்குப் போனேன்.

அட்டாமிக் பிசிக்ஸ் பற்றி சளைக்காமல் ரெண்டு மணி நேரம் வகுப்பெடுத்தார் பிரின்சிபால். சப் அடாமிக் துகள்கள் பற்றிச் சொல்லும்போது நல்ல சப்ஜெக்ட் என்றாலும் உறக்கம் எங்கே எங்கே என்று ஓடி வந்தது. வெளியே புதியதாக சேர்ந்த பெண்கள் படை ஒன்று மெல்ல நடந்து போக கயல் போல, ஜோசபின் போல, அமேலி போல ஜாடையுள்ள பெண் உண்டா என்று கவனிக்க ஆரம்பித்தேன்.

வகுப்பு முடிந்தபோது பாதிநாள் மட்டும் கல்லூரி இன்று இயங்கும் என்று தெரிய வந்தது. எதிர்பார்த்ததுதான். மற்ற நாள் என்றால் மகிழ்ச்சியான எதிர்பார்ப்பாக அது இருக்கும். இப்போது, எல்லோரும் போய்விட, தனித்து நிற்க நீண்ட பொழுதாகத்தான் இந்தப் பொழுது கணக்காக்கப் படும். நட்பும் அறிமுகமானவர்களும் இருக்குமிடம் என்று காபி ஹவுஸ் போகக்கூடத் தயக்கம். காசு இல்லாமல், எனக்கு யாராவது காப்பி வாங்கிக் கொடுக்கக் காத்திருந்து நான் கதையளந்து கொண்டிருப்பதாக யாரும் நினைக்கக் கூடும்.

எல்லா காலேஜ் பஸ்களும் புறப்பட்டுப் போனபின்., சைக்கிள்கள் கூட்டமாகவும் தனியாகவும் பறந்தபின், ஹாஸ்டல் மாணவர்கள் புது ஹாஸ்டல் மெஸ் சாப்பாட்டுக்கு எதிர்பார்ப்போடு கூட்டமாக நகர்ந்து போனபின், பிரின்சிபாலின் கார் வழக்கம் போல் ரெண்டு அடி எடுத்து நின்று ரேடியேட்டரில் காலேஜ் ப்யூன் காயாம்பு தண்ணீர் ஊற்ற மேற்கொண்டு ஊர்ந்தபின், கல்லூரி வளாகத்தில் நானும், கயலும், அமேலியும் மட்டும்.

திருட்டுத்தனம் எவ்வளவு வெளிப்படும், எப்படி வெளிப்படும் என்ற படபடப்போடு நான் ரெண்டு பேரோடும் புல்தரையில் அமர்ந்தேன்.

அமேலி மதிய உணவுக்கு எதுவும் கொண்டு வரவில்லை என்று வகுப்பிலேயே தெரிந்து கொண்டதால் அவளையும் என்னோடு சேர்ந்து சாப்பிட அழைத்திருக்கிறதாகச் சொல்லிக் கையோடு கூட்டி வந்து விட்டாள் கயல். மூன்று பேரும் இரண்டு லஞ்ச் பாக்ஸ்களில் இருந்து சாப்பிட, கயல் தான் ஆரம்பித்தாள்.

’அமீ, இவன் வீட்டை விட்டு வந்துட்டான் தெரியுமா’?

அமேலி மௌனமாக இருந்தாள். ஒரு வினாடி என்னைப் பார்த்து விட்டுத் தலையைக் கவிழ்ந்து கொண்டாள். கயல் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரியும். அவள் பார்வையைத் தவிர்த்தேன். வாழ்க்கை பூரா இப்படிக் குமைந்து குமைந்து அவள் கண்ணைச் சந்திக்காமல் வாழ வேண்டி இருக்குமா என்ன?

பார்க்காவிட்டால் பரவாயில்லை. கயல் பக்கத்தில் இருக்கக் கொடுத்து வைத்தாலே போதும்.

’தப்பு செஞ்சா ஏத்துக்கிட்டு மன்னிப்பு கேட்கறது எந்த விதத்திலும் வெட்கப் படவைக்கிற விஷயம் இல்லே. ஃபிரண்ட்ஸ் கிட்டே ஈகோ இல்லாம பழகறபோது பெற்ற தகப்பன் கிட்டே சரிக்கு சரியா சண்டை போட்டு கட்சி கட்டி நிக்கறது நல்லா இல்லே. உன் ப்ரண்ட்ஸ் உனக்கு முக்கியம்னா நான் சொல்றதைக் கேளு… இன்னொரு சப்பாத்தி போடட்டா..கடைசியா ஒண்ணு’

’முழு சப்பாத்தி சாப்பிட வயத்திலே இடம் இல்லே கயல்’ என்றேன். அவள் கேட்டதில் இதற்கு மட்டும்தான் பதில் சொல்ல முடிந்தது.

’அப்போ நீயும் அமேலியும் ஷேர் பண்ணிக்குங்க’. கயல் சாதாரணமாகச் சொன்னாள்.

அமேலி என்னையும் நான் அவளையும் ஒரே மாதிரி உரிமையும் குற்ற உணர்வுமாகப் பார்த்தது ஒரு வினாடி நிகழ்ந்து கடந்தது. நல்ல வேளை, கயல் ரெண்டு பேரையுமே பார்க்கவில்லை.

’நான் உங்கப்பாவை நாளைக்கு பார்த்துப் பேசப் போறேன்.. நீ தான் லூஸுன்னா அவர் பெருந்தன்மையா உன்னை மன்னிக்கலாம் இல்லே. என்ன தப்பு நீ செஞ்சேன்னு அவரும் சொல்ல மாட்டேங்கறார். நீயும் சொல்லலே’. கயல் ஒரு துண்டு சப்பாத்தியைக் கிள்ளி எடுத்துத் தின்றபடி சொன்னாள்.

அமேலி மறுபடியும் என்னைப் பார்க்க, நான் எழுந்தேன்.

’அமேலி, நீயும் நாளைக்கு என்னோடு வா. இவங்க அப்பாவை சந்திக்கலாம்’.

என் முதுகில் நிலைத்த நாலு விழிகளை சூடாக உணர்ந்தேன்.

‘யாரும் யாரையும் பார்க்க வேணாம். இது என் சிலுவை. நான் தான் சுமக்கணும்’. விட்டேத்தியாகப் பதில் சொல்லி விட்டு சைக்கிள் பக்கம் போனேன்.

’ஜோசபினையும் கூட்டிப் போகறேன்’.

ஏதோ துப்பு கிடைத்த துடிப்பில் கயல் சொல்ல நான் பெடலை மிதித்து நகர்ந்தேன்.

பிற்பகல் நாலு மணி வெய்யில் வீதிக்கும் காபி ஹவுசுக்கும் தீர்க்கமான மஞ்சள் பூசிச் சிறப்பித்திருந்தது. கல்யாணப் பத்திரிகைத் தலைப்பில் சாய்த்துப் பிடித்த தம்புராக்களோடு றெக்கை முளைத்துப் பறக்கும் கந்தர்வர்களின் சாயலில் வெயிட்டர்கள் கப்புக் கப்பாக காபி எடுத்துப் போய்க் கொண்டிருந்தார்கள். காபி ஹவுசுக்குள் ஓரமாக சுவரை ஒட்டித் தென்றல் வீசிக் கொண்டிருந்தது. ஜோசபின்.

’என் பட்டுத் தங்கம், எப்படிடா இருக்கே? பகலுக்குப் பசியாறினியா?’

வாஞ்சையோடு ஜோசபின் என் தலையை வருடிக் கேட்க மென்மையாக அவள் உச்சந்தலையில் முத்தமிட்டேன். மனசாலும், நினைவாலும் செயலாலும் எந்தத் தவறையும் என் ஜோசபின் கூட இருக்கும் போது என்னைப் பற்றிப் பிடித்துப் பித்தாகப் படர விடமாட்டேன். ஜோசபின் என்னை இனியும் மன்னிப்பாள். விழுந்து நசித்துப் போகாமல் தடுத்தாட்கொள்வாள்.

கயலும் நானும் சேர்ந்து அவள் கொண்டு வந்ததைச் சாப்பிட்டதைச் சொன்னேன். ஏனோ அமேலியும் எங்களோடு இருந்தாள் என்று சொல்லத் தோன்றவில்லை.

’ரொம்ப நாழியா வெயிட் பண்றியா’ என்று ஜோசபினைக் கேட்டேன்.

’இல்லே. இப்போ தான் வந்தேன். ஒரு ஹெல்ப் பண்றியா’?

எல்லா விதத்திலும் அடிபட்டு விழுந்தாகி விட்டது. இந்தப் பலகீனமான தருணத்தில் நானே எல்லோருடைய உதவியையும் யாசித்து நிற்கிறேன். நான் என்ன உதவி செய்ய? அதுவும் என்னில் அவள் பகுதியாகி, அவளில் நான் இருப்பதாக உணர வைக்கும் ஜோசபினுக்கு?

’என்னாலே முடியுமான்னு தெரியலே ஜோசபின். முடிஞ்சா கட்டாயம்…’

’வீடு மாத்தறதுக்கு ஹெல்ப் பண்றது உன் டிபார்ட்மெண்ட் இல்லியா’?

சிரிக்காமல் கேட்டாள் ஜோசபின். வெயிட்டர் கனகராயன் நாலு கேக்குகளும் கோப்பை நிறைத்த காப்பியுமாக என் முன் வைத்தார். நான் உள்ளே வரும்போதே பார்த்து ஜோசபின் ஆர்டர் செய்திருக்கிறாள்.

அதென்ன நாலு கேக்? பசியோடு திரிகிறவன் என்று அனுசரணையா? ஜோசபினே அனுதாபப் பட்டாலும் எனக்கு இரக்கத்தோடு இரை தருவது வேண்டாம். அது என்னை இன்னமும் பலகீனமானவன் ஆக்குகிறது.

வேண்டாம் என்று டிரேயைத் தள்ள, என் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவளாக ஜோசபின் டிரே விழுந்து விடாமல் தாங்கி, ஓரமாக நகர்த்தினாள்.

’இதெல்லாம் உனக்கில்லே. இத்தனையும் தின்னா என்னோட ஃப்ரண்ட்லி பேஷண்டா ஒபிதால்லே வந்து படுத்துப்பே’. அவள் சிரித்தபடி சொன்னாள்.

’அப்போ தம் கட்டித் தின்னுடறேன்’ என்றேன்.

‘வேணாம்டா.. ஒபிதாலே உனக்கு வேணாம்.. கிழங்கு மாதிரி நல்ல ஆரோக்கியமாத் திரி ஆயுசுக்கும்’. ஜோசபின் வாழ்த்தினாள்.

நாலு கேக் எதுக்கு ஜோஸ்ஸி?

’ஏய், எனக்கு ஒண்ணு, அப்புறம் இன்னொரு விசிட்டர் இருக்காங்க. உன்னைப் பார்க்கத்தான் வந்துட்டிருக்காங்க.. அவங்களுக்கு ஒண்ணு’.

யாரென்று கேட்டேன். அதான் நீயே பார்க்கப் போறியே ஏன் அவசரம்? ஜோசபின் குறும்பாகச் சிரித்தபடி என் சட்டையை முகர்ந்தாள்.

’இன்னிக்கு சுத்தமா இருக்கு எங்கே துவைச்சே’?

கயல் என்றேன். அந்தச் சந்தோஷத்தை இவளிடம் இல்லாமல் வேறு யாரோடு பகிரப் போகிறேன். அறுத்து விடுவதாக அவள் மிரட்டியதையும் சொல்லலாமா?

சொன்னேன்.

சீய்ய் என்றபடி காதைப் பொத்திக் கொள்வதாகச் சைகை எல்லாம் செய்தாலும், ஜோசபின் சிரிப்பை அடக்க முடியாமல் நெளிந்தாள்.

’உனக்கு அந்தக் கோலம் வராது. அமேலி வீடு மாறப் போறாளே’. ஜோசபின் சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள்.

’என்ன ஆச்சு? உனக்கு எப்படி தெரியும்?’ என்றபடி அவள் பாதி கடித்து தட்டில் வைத்திருந்த சாக்லெட் கேக்கை எடுத்துக் கொண்டேன்.

’அமேலி கர்னல் வீட்டை காலி பண்ணிட்டு இனி என்னோடு தான், நானும் எமிலியும் தங்கியிருக்கிற எல்லையம்மன் தெரு வீட்டுக்கு வந்துடப் போறா’.

’அப்போ விசாலி’?

அவசரமாகக் கேட்டேன். நாலு பேர் தங்க அந்த இடம் கீகடமாக இருக்கும் என தோன்றியது. ஜோசபின், விசாலி, ரோசாலி, அமேலி.

’விசாலிக்கு என்ன இப்போ’?

பின்னால் சத்தம் கேட்டது. தோளில் தபால்காரர் மாதிரி ஒரு டிசைனர் கைத்தறிப் பையை மாட்டியபடி நீல ஜீன்ஸும் சந்தனக் கலர் அழுத்தமான ஜிப்பாவுமாக விசாலி புன்னகையே வடிவெடுத்த மாதிரி நின்றாள்.

’நான் போறேன் ஜோசபின். நீங்க…’

வாக்கியத்தை முடிக்காமலேயே வாயில் போட்ட கேக் முழுக்கத் தின்று தீர்க்காமல் அவசரமாக எழுந்தேன். விசாலியை நான் எதிர்கொள்ள முடியாது. இனி என்றென்றைக்கும்.

’ஹலோ உன்னைத்தான் பார்க்க வந்திருக்கேன். கோவிச்சுக்கிட்டு கிளம்பினா எப்படி’பா’?

விசாலி என்னைத் தான் கேட்டாள்.

’நான் நான் ..’

குரல் உடைகிறது. உதவி கேட்டு ஜோசபினைக் கெஞ்சுகிற பார்வையோடு எந்தப் பக்கம் போவது என்ற நிச்சயமின்றி நின்றேன். நான் செய்த பாவம், தவறு எல்லாவற்றுக்கும் தண்டனை தர அனுப்பப்பட்ட ஜீன்ஸ் அணிந்த, கைத்தறிப் பை தோளில் ஆட வரும் தேவதையாக விசாலி நிற்கிறாள்.

தேவதூதர்கள் கருணை பொழியவும், மன்னிக்கவும் அனுப்பப் பட்டவர்கள். ஜோசபின் போல.

நானும் தான் என்பது போல் விசாலி நட்புக் கரம் நீட்டினாள். ஒரே ஒரு தங்க வளையல் அழகு செய்த அந்தச் சிவந்த கரத்தையே பார்த்தபடி நான் நிற்க அவள் முன்னால் வந்து என் கையைப் பற்றிக் குலுக்கினாள்.

’நாம எப்பவும் பிரண்ட்ஸ், ஓகே’? விசாலி என் கையை விடாமல் சொன்னாள்.

சரி.

’எப்பவும் ப்ரண்ட்ஸ்தான்..’

ஊம் என்று சும்மா சொன்னேன்.

.ப்ரண்ட்ஸ் அப்படீன்னா கோபதாபம் இருக்கும்…’.

‘தப்பு பண்றது’? நான் கேட்டேன்.

‘தப்பா எடுத்துக்கலே.. ஒரு செகண்ட்லே வந்த தடுமாற்றம்னு எடுத்துக்கிட்டா’?

‘அப்பவும் தப்பு தப்புதான்..’ என்றேன்.

‘இதையே திரும்பத் திரும்பச் சொல்லிட்டு இருந்தா காலம் நகராம நின்னுடுமா’?

அவள் தன் கைப்பையில் இருந்து ஒரு வெள்ளைக் கடித உறையை எடுத்தாள். உள்ளே மஞ்சள் நிறத்தில் வழுவழுப்பான காகிதம் எட்டிப் பார்த்தது. நான் இதை விசாலி வீட்டில் பார்த்திருக்கிறேன். பார்த்த அடுத்த வினாடி தான் அவள் மேல் ஆக்கிரமித்தது. அவளிடம் அடி வாங்கியது.

’என் கல்யாணக் கடுதாசு. அடுத்த மாதம் ரெண்டாம் தேதி பள்ளத்தூர்லே கல்யாணம். உங்க ஊர்லே இருந்து பக்கம் தான்..’

கல்யாணம் முடித்து ஊருக்கும் போகலாம் என்று அவள் ஆசை காட்டிய மாதிரி தெரிந்தது.

பிரியத்தோடு அவள் கையைக் குலுக்கி வாழ்த்து சொன்னேன். என்றென்றும் அவளை அந்த வாழ்த்துகள் சூழட்டும். என் மனம் எங்கே அழகைப் பார்த்தாலும் அலையடிக்காமல் இருக்காது. அது சூறாவளியாகி என்னையும் அடுத்தவர்களையும் அழிக்காமல் இருக்கக் கட்டுப்பாடுகள் வளரட்டும் எனக்குள்ளும்.

கல்யாணப் பத்திரிகையை வாங்கிக் கொண்டேன். ஜோசபின் எழுந்தாள்.

’சரி, சைக்கிளை எடுத்துப் போறேன்.. நீ வர வேணாம்.. விசாலி ஹெல்ப் போதும்னு நினைக்கறேன்.. தேவைன்னா கூப்பிடறேன்’.

’எனக்கு சைக்கிள் கிடையாதா?’ நிராசையோடு கேட்டேன்.

’உனக்கு வேறே வரும்’. நமட்டுச் சிரிப்போடு அவள் கிளம்ப, நிறுத்தினேன். குரலைத் தாழ்த்திக் கேட்டேன்

’‘ஏன் திடீர்னு அமேலியை உங்க வீட்டுக்குக் கூட்டிப் போறே? இங்கே இருந்தா நான் சுவர் ஏறிக் குதிச்சு அவளை .. அவளை அசிங்கப் படுத்திடுவேன்னு பயமா’?

’அரண்டவன்’டா நீ பையா.. வழியை விடு.. போகணும்..’ என்றாள் ஜோசபின்.

‘எனக்கு அப்படித் தோணலே..’ என்றேன்.

‘உன் மேலே உனக்கு இன்னும் முழு நம்பிக்கை இல்லேன்னு அர்த்தம்..’.

’பின்னே எதுக்கு அமேலி லலி தொலாந்தர் தெருவிலே வேணாம்கிறே?’

’அந்த மாத்திரை சனியனை விட்டு விலகி வரத்தான்.. இருபத்துநாலு மணி நேரமும் நானோ, ரோசாலியோ பக்கத்துலே இருப்போமே.. மாத்திரை சாப்பிடணும்னு ஆசை வந்தா, அது வெறியாகாம நாங்க பார்த்துப்போம்.. அவ படிப்புலே கவனம் செலுத்துவா.. வெட்டி வம்பு வளர்க்க பசங்க … உன்னை மாதிரி வக்கணையா பேசற பிள்ளைங்க வர மாட்டாங்க… கண்ணைப் பாரு.. முட்டைக் கண்ணா..இவ்வளவு அழகான கண்ணை வச்சுக்கிட்டு ஏண்டா சுவர் ஏறிக் குதிக்கறதை எல்லாம் நினைக்கறே’?

நான் கண்ணை மூடிக் கொண்டேன். அவள் கையை விட மனசே இல்லை.

’சரி நான் போறேன் .. சைக்கிள் சாவியைக் கொடு’. கொடுத்தேன்.

’ஆமா அமேலிக்கு மாத்திரை சாப்பிடணும்னு தோணினா அதை இல்லாம ஆக்க நீ ஹெல்ப் செய்வே. எனக்கு ஆசை வந்தா’?

’நரகத்துக்குப் போ’

அவள் கோபம் நடித்து நகர்ந்து பின் நின்றாள்.

’அப்படி ஆசை வந்தா, கஸ்டம்ஸ் ஹவுஸ் அடைச்ச கதவுப் பக்கம் வா’.

விசாலி சொல்ல, அவள் முதுகில் ஓங்கி அடித்தாள் ஜோசபின். சிரித்தபடி போகிற ரெண்டு பேரையும் பார்த்தபடியே நின்றேன்.

’சார், நர்சம்மா உங்க கேக், காபிக்கு பணம் கொடுத்துட்டாங்க.. நீங்க சாப்பிடாம மிச்சம் வச்ச கேக்கை உங்ககிட்டேயே கட்டித் தரச் சொன்னாங்க.. வெளியிலே ப்ளாட்பாரத்துலே பாக்கற முதல் சின்னக் குழந்தைக்கு நீங்க கொடுக்கணுமாம்’.

வெயிட்டர் கனகராயன் தட்டை எடுத்தபடி சொன்னார்.

’வீவ் லமிடீ .. நட்பு வாழ்க’.

பின்னால் இருந்து யாரோ தோளைத் தொட்டு கீச்சென்று சொன்னார்கள்.

சந்தோஷமாக இருந்தது. என் மனதுக்குப் பிடித்தவர்கள் எல்லாம் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து என்னைச் சந்திக்கிற மாலை நேரம் இது.

’போன் ஸ்வாஹி மிஸ்யூ விக்தொ’. குரலெடுத்துக் கூவியபடி திரும்பினேன்.

விக்தொ அங்கிள் என் கையைப் பற்றி வெளியே போகலாம் என்று இழுத்தார்.

’நானே வந்துட்டுத்தான் இருக்கேன் அங்கிள்’.

அவருடைய வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓடி முன்னால் நின்ற யார் மேலோ மோதிக் கொண்டு நின்றேன்.

நிமிந்து பார்த்தேன். அப்பா.

’படவா, அப்படி என்னடா கோபம் என் மேலே உனக்கு’?

அப்பா முகம் முழுக்க சிரிப்பு அப்பியிருக்கக் கேட்டார்.

ஓடிப் போய்க் கட்டிக் கொண்டேன் அவரை. ரொம்ப சில்லியாக இருந்திருக்கும். ஒரு இருபது வயது இளைஞன் செய்கிறதில்லை இது. அதை விட சில்லியானது என்றால் அப்பா தோளில் சாய்ந்து அப்புறம் ஐந்து நிமிடம் குழந்தை போல அழுதேன்.

என்ன செய்ய? வாழ்க்கையில் சில நிமிடங்களில் காலம் பின் நோக்கிப் போகவும் செய்கிறது. அந்த வயதில் நிறுத்தி அழ வைத்து, சிரிக்க வைத்து உடனே நினைவுகள் மட்டும் கூட வர முன்னால் இழுத்துத் தள்ளுகிறது. சில்லியான தருணங்கள் அதெல்லாம். தெரிந்தாலும் வேண்டித்தான் இருக்கிறது. வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிற அந்த முட்டாள்தனத்துக்கு நன்றி.

’போத்தாமா பேங்கு மேனேஜர் காரு’?

அப்பா தோளில் இருந்து தலையை நகர்த்திப் பார்த்தேன். வல்லூரி சார்.

’ஏண்டா, என்ன மாதிரியான சிநேகிதம் உனக்கு வாச்சிருக்கு. எனக்குக் கூட அமைஞ்சதில்ல இது போல.. இப்படி ஒரு காலேஜ் ப்ரபசர் தன் கிட்ட படிக்கற ஸ்டூடண்டுக்காக கிருஷ்ண பராமாத்மா மகாபாரதத்திலே நடந்தது போல, என் கிட்டே வந்து மன்னாடறாரு.. கூடவே மகாலட்சுமி மாதிரி அவரோட மனைவி வேறே.. இவங்களோட உன்னோட தோழி ஜோசபின் .. வாட் அ டிக்னிஃபைட் லேடி அந்தப் பொண்ணு.. அப்புறம் அதோ நிக்கறாரே எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லேன்னு .. சார் வாங்கோ.. நம்ம விக்தொ..நம்ம வின்செண்ட் நடராஜன்… போதாக் குறைக்கு டெலிபோன் செஞ்சு பார்வேந்தனார், அவரோட சூட்டிகையான பொண்ணு கயல்விழி… ஸ்மார்ட் கேர்ள்..’

’எல்லாரும் என்ன சொன்னாங்க அப்பா, என்னை தண்ணி தெளிச்சு துரத்திடச் சொன்னாங்களா’?

’இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே.. காலம்பற பத்து மணிக்கு பேங்க் திறக்கும்போது இவங்க ஒவ்வொருத்தரா வந்து என் கேபின்லே ஒரே கூட்டம்..’

’நீங்க சீட்டுக்குப் போங்கன்னாரு சார்.. நான் இன்னிக்கு லீவுன்னுட்டேன்’.

விக்தொ சிரிக்க அப்பா அவரை விடப் பலமாகச் சிரித்தார்.

‘நான் நாளைக்குத் தான் க்ளாஸ் எடுக்கப் போகணும் ஆகவே இன்னிக்கு பூரா இந்த வேலைதான்’. வல்லூரி கபே ஹவுஸ் வாசலில் வைத்திருந்த பூந்தொட்டியில் அபாயகரமாகக் கால் ஊன்றியபடி சொன்னார்.

அப்பா பதில் சொல்வதற்குள் தொட்டி கவிழ்ந்து வல்லூரியும் குப்புற விழ இருந்தார். விக்தொ அதற்குள் அவரைத் தாங்கிப் பிடித்து தொட்டிக்கு விபத்து வராமல் காப்பாற்றினார்.

’வண்டியிலே ஏறுடா’.

வண்டி கிளம்பும்போது அப்பாவிடம் சாரி சொன்னேன். மனசைப் புண்படுத்திட்டேன் என்றேன். இனி இப்படி நடக்காது என்றேன். தப்பு செய்ய மாட்டேன் என்றேன்.

’நான் கேட்டேனா, எனக்கு உன் மேலே எப்பவும் நம்பிக்கை உண்டு. நல்லா வருவே’ என்றார் அப்பா.

சைக்கிள் மணிச் சத்தம். பேங்க் வண்டியைத் தொடர்ந்து உற்சாகமாக விசில் அடித்தபடி விக்தோ சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். என் ராலே சைக்கிள் அது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன