கூகுல் கடோத்கஜன்

’தியூப்ளே வீதி’ வாழ்வியல் நாவலை முழுமையாக எடிட் செய்து சீராக்கி புத்தகமாக்கத்துக்கு அனுப்ப கிட்டத்தட்ட ஒரு வாரம் நல்ல உழைப்பு. முடிந்து மென்பிரதியை அனுப்பிய பிறகு ஆனந்தமான ஒரு களைப்பு. ‘கடல் புரத்தில்’ நாவலில் வண்ணநிலவன் கிறிஸ்துமஸுக்கு முந்திய தினம் வீட்டைச் சுத்தப்படுத்தி அலங்கரித்து களைத்துப் போய் உறங்கும் வீட்டு ஆண்களின் உறக்கம் அழகாக இருந்தது என்பார். அது போன்ற சுகமான களைப்பு இது.

சற்றே இளைப்பாற நான் போனது பிரியமான கிரேசி கிரியேஷன்ஸ் நண்பர்களின் ‘கூகுள் கடோத்கஜன்’ மேடை நாடகத்துக்கு.

யாராவது கணக்கு வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. அதிகமான மேடை நாடகங்கள் எழுதி, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து, அதிகமான முறை, அதிகமான நாடுகளில், ஊர்களில் சகல விதமான மேடைகளிலும் வெற்றிகரமாக நடத்துவதில் நண்பர் கிரேசி மோகன் எப்போதோ கின்னஸ் சாதனை புரிந்து அதைத் தொடர்ந்து நிலை நிறுத்திக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

அதுவும் எல்லா நாடகங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களின் பெயரும், ஏற்று நடிக்கும் நடிகர்களும் முப்பத்தேழு வருடம் முன்னால் கிரேசி கிரியேஷன்ஸ் தொடங்கி, முதல் தடவையாக திரையை உயர்த்தியபோது இருந்தபடிக்குத்தான் இன்றைக்கும்.

மேடையிலும் மேடைக்குப் பின்னாலும் உரிமையோடு உயர்த்தும் வாடா போடா அரட்டைகளும், நாடக நகைச்சுவைக்குச் சற்றும் குறையாத க்ரீன்ரூம் கலாட்டாக்களும் அந்தக் குழுவின் ஒட்டுமொத்தமான ஈடுபாட்டின் இன்னொரு ப்க்கம். மழையோ வெய்யிலோ சென்னையோ வெளியூரோ வெளிநாடோ இந்த ஈடுபாட்டையும் உற்சாகத்தையும் தவறாமல் பார்க்க முடியும். இன்றைக்கும் அதைக் கண்டு ரசித்தேன். கிரேசி கிரியேஷன்ஸ் நாடகம் பார்க்கப் போவது இந்த அனுபவத்தில் பங்கு பெறுவதற்கும் தான்.

நெருங்கிய உறவினர் வீட்டு விசேஷத்துக்குப் போகிறது போல் ரசிகர்கள் வந்து நிறைந்து கலகலப்பாகப் பேசிக் கொண்டிருக்க, நாடகம் ஆரம்பிக்கும் முன்பே அரங்கம் களைகட்டி இருந்தது. நாடகம் ஆரம்பிக்கும் வரை மேடையில் திரையிட்ட சார்லி சாப்ளின் சினிமா காட்சிகள் சூழ்நிலையை உற்சாகமாக்கிக் கொண்டிருந்தன. அவ்வப்போது அரங்கில் இருந்து ரசிகர்கள் மேடைக்குப் பின்னால் போய் மோகனுக்கும் பாலாஜிக்கும் மற்ற நண்பர்களுக்கும் ஹலோ சொல்லி விட்டு வருவது வீட்டு விசேஷச் சூழலை இன்னும் அதிகமாக்கியது. எல்லோருக்கும் மோகன் நல்ல தோழர். அவருக்கும் பல ரசிகர்களும் அதேபடிக்கு. இடைவேளையின் போதும் நாடக நிறைவு பெறும் நேரத்திலும் செயற்கைத்தனமே இல்லாத இந்தச் சிறு அரட்டைகளும் செல்பிகளும் இன்னும் அதிகமாகும் என்று தெரியும்.

சாக்லெட் கிருஷ்ணா முடிந்த இடத்தில் கூகுள் கடோத்கஜன் தொடங்குகிறது. பகவான் கிருஷ்ணனும் மாதுவும் சம்சாரி வாழ்க்கையின் சின்னச் சின்னத் தொந்தரவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, குசேலன் வருகிறதாக படு கேஷுவலாக நாடகத்தை ஆரம்பிக்கிறார் மோகன். அப்புறம் தொண்ணூறு நிமிஷம் இடைவிடாத நகைச்சுவை நேரம் தான்.

யாரையும் புண்படுத்தாத, ரெண்டாவது அர்த்தம் தொனிக்காத, ஆரோக்கியமான, கண்ணில் கண்ணீர் வர், குலுங்கிச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக்கு கிரேசி மோகனை விட்டால் வேறு யாரும் கிடையாது.

மோகன் இந்த நாடகத்தில் ரெட்டை வேடமாக சாக்லெட் கிருஷ்ணன், கடோத்கஜன் என்று வந்து கலக்குகிறார். வழக்கம் போல் மாதுவாக பாலாஜி மோகனோடு நடிப்பு ஜுகல் பந்தியில் வெளுத்து வாங்க, கூடையில் கம்ப்யூட்டர் சுமந்து விற்று வரும் வியாபாரியாக நீலு அண்ணா, தாத்தா ப்ரமோஷன் கிடைத்த ராமானுஜமாக அப்பா ரமேஷ், கௌசல்யா பாட்டியாக சுந்தர்ராஜன் சுந்தா, பார்த்தா பார்த்தசாரதி, ஜானகியாக மது இன்னும் மற்றைய கிரேசி கிரியேஷன்ஸ் நண்பர்களும் கலகலப்புக்குக் குறைவில்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இளைய தலைமுறை இசையமைப்பாளர் கௌஷிக் சுப்ரமணியத்தின் தலைப்புப் பாட்டு அமர்களமாக் உள்ளது. A peppy tune.

நாடகத்தில் தொடர்ந்து வரும் சிரிப்புச் சிதறலுக்கு நடுவே சட்டென்று மனதைக் கவ்வும் சிந்தனையோட்டமும் உண்டு. மோகனை ஒரு ஆன்மீகவாதியாகவும், நல்ல மரபுக் கவிஞராகவும், நேர்த்தியான ஓவியராகவும் அறிந்த நண்பர்களுக்குத் தெரிந்த அவருடைய பன்முக ஆளுமை வெளிப்படும் வசனங்களை – சாண்ட்விச் போல இரண்டு அதிரடிச் சிரிப்புகளுக்கு நடுவே சிந்திக்க ஒரு கருத்தாக வைத்துச் சொல்லியபடி போகிற சாமர்த்தியத்தை – ரசிக்காமல் இருக்க முடியாது.

மாது செயல் மறந்து நிற்கும் ஒரு வினாடியில் மன்னவன் நானே, மக்களும் நானே, மரம் செடி கொடியும் நானே, நீயும் நானே, நானும் நானே என்று கீதையின் சாரத்தை நச்சென்று கண்ணன் சொல்வது எவ்வளவு இயல்பானதோ அதே அளவு நயமானது மாதுவின், ‘ஒண்ணுமே புரியலே கிருஷ்ணா’ என்ற அப்பாவித்தனமான பதிலும். இரண்டையும் அவையில் கைதட்டி ரசித்ததைப் பார்க்க முடிந்தது. ‘நமக்குத் தேவை நிறைய யசோதைகள்’ இது போல் இன்னொரு முத்து.

எழுந்து நின்று சிரித்த ரெண்டு ஜோக் மாது கிருஷ்ணனிடம் கேட்கும் கேள்வியாகவும் அதற்கான பதிலாகவும் வருகின்றவை. ஒன்று, ‘கிருஷ்ணா, இன்னும் ஏன் கல்கி அவதாரம் எடுக்கலே நீ?’. மற்றது, ‘கிருஷ்ணா, நீ மந்திரம் போட்டு எனக்கு பத்மஸ்ரீ விருது வாங்கிக் கொடுக்கறியா?’. இரண்டுக்குமான பதிலை நாடகம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

திசம்பர் 1, 2015

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன