இரா.முருகன் – நூல் மதிப்பீடுகள்; ‘பானை’ சிறுகதைக்கு வாசகர் மதிப்பீடு

நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்த ’100 சிறந்த சிறுகதைகள்’ நூலுக்கு நான் தினமலரின் எழுதியிருக்கும் சிறு அறிமுகம் –

‘இவை எல்லாம் எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள். இந்த பட்டியலுக்கு வெளியிலும் சிறந்த கதைகள் உண்டு’ என்ற விளக்கத்தோடு, ஒரு நூறு சிறுகதைகளை, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கிறார். யார் எங்கே பட்டியல் போட்டாலும் இடம்பெறும், புதுமைப்பித்தனின், ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’, மவுனியின் ’அழியாச் சுடர்’ போன்றவற்றோடு, எஸ்.ரா., ஐந்து முக்கிய வரையறைகளை வைத்து தேர்ந்தெடுத்த மற்ற கதைகளும், இடம்பெற்ற நூல் இது. இவை பெரும்பாலும், எல்லா இலக்கிய வாசகர்களுக்கும் பிடித்தவை.

அங்கொன்றும், இங்கொன்றுமாக கதைகளை படித்து வந்தபோது, கு.ப.ராஜகோபாலன் எழுதிய, ‘விடியுமா’ கதை, சட்டென்று மனதில் கனமாக அப்பி கொண்டது. ‘சிவராமய்யர் டேஞ்சரஸ்’ என்று அந்த கால அபத்தமான ஆங்கிலத்தில் அடித்த தந்தி கிடைத்து, ரயிலேறும் குடும்பம் பற்றிய கதை. சின்னச் சின்ன உரையாடல்களும், நம்பிக்கை எழுவதும், விழுவதுமாக கும்பகோணத்தில் இரவில் துவங்கிய பயணம், சென்னையில் முடியும்போது, அந்த சிவராமனின் உடலை மருத்துவமனையில் பெற்றுக் கொள்கின்றனர். மனதில் இருந்து பயம் தீர்கிறது. பின்? விடிந்து விட்டது. கதை அவ்வளவு தான்.

‘மனதில், ஆழத்தில் பீதி அதுபாட்டிற்கு புழுப்போல துளைத்துக் கொண்டே இருந்தது. மேலே மட்டும் சமாதானம் கொஞ்ச நேரத்திற்கு ஒருதரம். அந்த திகில் மேல்மட்டத்திற்கு வந்து தலையெடுக்கும்; உடம்பு பதறும்; நெஞ்சு உலரும்; அடி வயிறு கலங்கும்; முகம் விகாரமடையும்; மறுபடி மெதுவாக சமாதானத்தின் பலன் அதிகமாகும்; பயத்தை கீழே அமுக்கி விடும்’.

‘கதை கருவிலும், சொல்லும் முறையிலும், மொழிநுட்பத்திலும், கதையின் வடிவத்திலும், ௭௦ ஆண்டுகளுக்கு முன், கு.ப.ரா., சாதித்ததை, அடுத்து வந்தவர்கள் கடந்தனரா அல்லது எட்டினரா? என்ற கேள்வியும், இந்த கதைகளை படிக்கும்போது எழுகிறது. ‘இந்திய அளவில், தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன’ என்ற, எஸ்.ரா.,வின் பிரகடனம் உண்மையாக இருக்கட்டும்
.
ஒரே எழுத்தாளரின் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள், புத்தகத்தில் அங்கங்கே தட்டுப்படுகின்றன, எஸ்.ரா., எழுதிய கதைகள் உட்பட. அதை தவிர்த்திருந்தால், இன்னும், 10 எழுத்தாளர்களின் அறிமுகம், இந்த புத்தகத்தின் மூலம் கிடைத்திருக்கலாம்.

எழுத்தாளர் இரா.முருகன் – தினமலர்
———————————————————————————————————

மாதவிக் குட்டியின் ‘இப்பிறவியில் இவ்வளவுதான்’ மொழிபெயர்ப்பு நூலுக்கு நான் தினமலரில் எழுதியிருக்கும் சிறு அறிமுகம் –

முப்பது ஆண்டுகளுக்கு முன், ‘கலாகவுமுதி’ என்ற மலையாள வார பத்திரிகையை தொடர்ந்து படித்து வந்தேன். மலையாள எழுத்தாளர் மாதவிக்குட்டி எழுதிய, ‘நீர் மாதளம் பூத்த காலம்’ என்ற, வாழ்க்கை வரலாறு, தொடராக வந்த நேரம் அது. மாதவிக்குட்டியின் எழுத்தில் தென்பட்ட எளிமையும், கவித்துவமும், அமைதியான அழகும், உண்மை தொனியும் மனம் கவர, அவருடைய கதைகளையும், புனைவல்லாத பிற படைப்புகளையும் தேடிப் படித்தேன் அப்போது.

பிறகு, அவருடைய கட்டுரை மொழி, மாறுதல் அடைந்ததை உணர்ந்தேன். எல்லா திசையில் இருந்தும் தாக்கப்படும் பெண்ணாக, தன் இருப்பையும், செயல்பாட்டையும் சதா நியாயப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளவராகத் தன்னைச் சித்தரித்து எழுதப்பட்டவை, பின்னாளில் வந்த அவர் கட்டுரைகள்.

இடையில் மாதவிக் குட்டி, இஸ்லாம் மதத்தைத் தழுவினார். ‘மதம் மடுத்து’ (மதம் அலுத்துப் போனது) என்று, பாரம்பரியம் மிகுந்த, ‘மாத்ருபூமி’ தினப் பத்திரிகையில் பேட்டி கொடுத்தார். அந்த நேர்காணலில் கண்ட சத்திய தரிசனத்தால் கவரப்பட்டு, அதை நான் உடனடியாக தமிழில் மொழிபெயர்த்து பிரசுரம் செய்வதற்குள், ‘நான் அப்படி ஒரு பேட்டியே தரவில்லை’ என்று சொல்லி விட்டார், சுரையாவாகப் பெயர் மாறிய மாதவிக்குட்டி.

இந்தியாவில் அடைக்கலம் புகுந்து வசிக்கும் வங்கதேச தஸ்லிமா நஸ் ரீன் தன் எழுத்துகளில், தற்போது கட்டமைத்துக் கொண்டிருக்கும் துன்புறுத்தப்படும் பெண்ணின் பிம்பத்தை, மாதவிக் குட்டியின் நீட்சியாகவே காண்கிறேன். கட்டுரைகளில், இப்படியான தன் முனைப்பு தென்பட்டாலும், மாதவிக்குட்டியின் சிறுகதைகள் வசீகரமானவை. அவற்றில் வரும் பெண்கள் சுயமாக சிந்திப்போர்; துணிந்து செயல்படுவோர்; சமுதாயம் மாறும் என்று நம்புவோர்.

மாதவிக் குட்டியின் தேர்ந்தெடுத்த சில படைப்புகளை, தமிழில் மொழிபெயர்த்து தொகுப்பாக வந்திருக்கும் புத்தகம் இது. புத்தகத்தின் தலைப்பான, ‘இந்தப் பிறவியில் இவ்வளவு தான்’ தொடங்கிய கட்டுரைகளோடு, ‘மதில்கள், திருநங்கை, சந்தனச் சிதை’ போல், மலையாளத்தில் பரவலாக வாசித்துக் கொண்டாடப்படும் சிறுகதைகளும் இடம் பெற்றிருக்கும் நூல். மு.ந.புகழேந்தி தொகுத்தது.

சட்டென்று கவனத்தை ஈர்க்கும் எழுத்து மாதவிக் குட்டியுடையது.

‘என்னுடைய பலவீனங்கள் அவிழ்த்துப் போடப்பட்ட ஆடைகளாகும். அவற்றை எடுத்துத் துவைக்க எனக்கு நேரமில்லை; பொறுமையுமில்லை. பக்தியென்னும் திரை மட்டும் என் ஆத்மாவினுடைய நிர்வாணத்தைப் பிறர் கண்களிலிருந்து மறைத்து வைக்கிறது.’
தமிழுக்கு மிக நெருங்கிய மொழி மலையாளம் என்றாலும், மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த, நான் படித்த பல படைப்புகள் மனநிறைவைத் தரவில்லை. புகழேந்தி இந்தப் புத்தகத்தில் நேர்த்தியான மொழிபெயர்ப்பு மூலம் பெருவெற்றி அடைந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

எழுத்தாளர் இரா.முருகன் – தினமலர்

————————————————————————————————————————————————————–

திரு. ஜெயகாந்த் ராஜு, என் ‘பானை’ சிறுகதையை மிக அழகாகப் பகுப்பாய்வு செய்திருப்பது இன்று தான் வாசிக்கக் கிடைத்தது. அவருக்கு நன்றி,
மாயயதார்த்தம்:

இதன் வரைமுறையை கீழ்கண்டவாறு பலவிதமாகச்சொல்லலாம்.

• புலன்களை மீறிய மாய அனுபவங்களை யதார்த்தத்தைச் சித்தரிப்பதுபோலவே துல்லியமான தகவல்களுடனும், காட்சித்தன்மையுடனும் சித்தரிக்கும் எழுத்துமுறை.
• மாயயதார்த்தம் மாயச்சம்பவங்களை யதார்த்தபாணியில் தகவல்களுடன் உணர்ச்சியில்லாமல் சொல்லமுயல்கிறது.
• மிக நுணுக்கமாக புனையப்பட்ட யதார்த்த உலகில் அநாயாசமாக வரும் மாயமே, மாயயதார்த்தம்
• மாயயதார்த்தம் மாயஉலகை அன்றாட வாழ்வின்தளத்தில் நிகழ்த்திக்காட்டும்.
• மாயயதார்த்தம் கதைக்கு அவசியமான அற்புத உணர்வை உருவாக்கும். உருவகங்கள் மூலம் கருத்துகளை முன் வைக்கும்.
• மாயயதார்த்தம் ஒரு நிலப்பகுதியின், மொழியின் பண்பாட்டுப்பின்புலம் கொண்டது.

இரா. முருகனின் பானை ( முதல் ஆட்டம் சிறுகதைத்தொகுதி- நர்மதாபதிப்பகம்).கதைமாந்தர் நால்வர்தான். மிகவும் எதிபார்ப்புக்களுடன் வாழ்க்கைப்பட்டு கணவன்வீட்டுக்கு வரும் ரங்கம்மா, பொதபொதவென்று ஊளைசதை மட்டுமே வளர்ந்த, சிந்திக்க, செயல்படலாயக்கில்லாத கணவன் சென்னகேசவன், வீட்டு முதல்மாடியில் வசிக்கின்ற ‘பெரியாத்தா’ என்கிற ஆவி/ பேய், கோர்ட்குமாஸ்தா.

ஒரு சாப்பாட்டு மெஸ்நடத்தலாமென்ற ஐடியாவில், மாடியில் சும்மா இருக்கும் அறையில் தன் சட்டிபானைகள் எல்லாம் வைத்துக்கொள்ளலாமா என்கிற ரங்கம்மாவின் யோசனையை பெரியாத்தா கடுமையாய் மறுக்கிறாள். சாமான்களைஎல்லாம் உருட்டுகிறாள். சென்னகேசவன் பெரியாத்தாவை சுவாதீனத்துடன் சமாதானம் செய்கிறான்.

நாட்கள் செல்லச்செல்ல ரங்கம்மா இந்த அசாதாரணமான சூழ்நிலைக்குத் தன்னைச் சமாதானம் செய்துகொள்கிறாள். பயம் அறவே விட்டுப் போகிறது. பெரியாத்தா கொட்டிக்கொள்ளும் வயிற்றெரிச்சலுக்கெல்லாம் சரிக்குச்சரி பேசி சண்டைபோடுகிறாள். கோர் ட்குமாஸ்தா மனத்தை பாதிக்கிறான். பெரியாத்தா எச்சரிக்கை செய்கிறாள்.

கடைசியில் அது நிகழ்ந்தே விடுகிறது. பெரியாத்தா கடுமையான தண்டனை வழங்குகிறாள். தலைமுடியைக்கூட வெட்டிவிடுகிறாள். ரங்கம்மா அழுது கதறுகிறாள்.இருபத்தைந்துவருஷம் கழிகிறது. சென்னகெசவன் புற்றுநோயால் மரிக்கிறான். வீட்டில் ரங்கம்மாவும், பெரியாத்தாவும்தான். பெரியாத்தாவின் அரைக்குள் நுழைந்து வெறிபிடித்ததுபோல் அவள் இருப்பதாகநம்பப்படும் பானைகளை கீழே கொண்டுவந்து உடைக்கிறாள். அதிலிருந்து அவள் பழைய ரவிக்கையும், முடியும் கீழே விழுகின்றன. ‘போயிடறேன், போயிடறேன்’ என்ற ரங்கம்மாவின் அழுகையோடு கதை முடிகிறது.

கதைசொல்லி இருபத்தைந்துவருஷங்களுக்கு மேற்பட்ட கதையை முன் பின்னாகநகர்த்தி non-linear ஆகவே சொல்லுகிறார். காலமயக்கத்துடன், பழையவீடும், புழுதிபடிந்த யாரும்புழங்காத இருளடைந்த அறைகளும், ஒரு மர்மமான களத்தை உண்டாக்குகின்றன.

மேலிருந்து வரும் சத்தமும், சென்னகேசவன் அதனோடு சாதாரணமாக உரையாடுவதும், உடனே கதையை மாயத்துக்கு இட்டுச்செல்கிறது. அதன் பின்னேயும் உருவம் முழுக்கச் சிதைந்து புகையாய் மிதந்தபடி வரும் பெரியாத்தா மாயத்தையே நமக்குக் காட்டுகிறாள்.

ஆனால் மறுவாசிப்பில் கொஞ்சம்கொஞ்சமாக ரங்கம்மவுக்கு மனச்சிதைவு (schizophrenia) நோய் இருக்குமோ என்கிற சந்தேகத்தை விதைக்கிறார். மாடிக்கே போயிராத, ஆனால் தொன்மத்தை முழுவதாக நம்பும் சென்னகேசவன்தான் ஏமாற்றத்தாலும், அதிர்ச்சியாலும் பாதிக்கப்பட்டிருக்கும் ரங்கம்மாவின் உளச்சிதைவுக்கு முதல்வினையூக்கி (catalyst). கோர்ட் கிளார்க்கிற்கு உடன்பட்ட குற்றஉணர்ச்சி அதை இன்னும் அதிகரிக்கிறது.

பெரியாத்தாவும் ரங்கம்மாவும் போடும் சண்டைகளெல்லாமே அவளின் பிளவுற்றமன ஆளுமையில் ஒன்றை ஒன்று ஆதிக்கம் செலுத்த முயல்வதன் வெளிப்பாடே. தண்டிப்பது பெரியாத்தாவின் மேல் ஏற்றிச்சொல்லப்படுகிறது.

கடைசியில் , மாடி அறைக்குள் இருந்து எடுக்கும் பழம்பானையை உடைக்கும்போது விழுவது கிளார்க்குடன் உறவுகொண்ட அன்றைக்குப் போட்டிருந்த ரவிக்கையும், அதன்பின்னர் வெட்டப்பட்ட அவளது முடியும். இப்போது நமக்குஉறுதியாகிவிட்டது.

ஆனால், இன்னுமொரு முடிச்சு பாக்கி இருக்கிறது.

‘போயிடறேன், போயிடறேன்’ என்ற ரங்கம்மாகிழவியின் அழுகையோடுஅல்லவா கதைமுடிகிறது. ரங்கம்மாவின் எந்த ஆளுமைப்பகுதி இப்போதுபோகும்? ஆசிரியர் பெரியாத்தா ‘போயிடறேன்’ என்று சொன்னாள் என்று சொல்லவேஇல்லை. ரங்கம்மாதான் போகிறேன் என்கிறாள். மாயம் நிலைத்து, யதார்த்தம் விலகுகிறதா? வாசகமுடிவுக்குக் கதை கட்டுப்படவேண்டுமா என்ன.ஒருவரிகூட அதிகமில்லாத, கச்சிதமானகதை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன