New bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 30 இரா.முருகன்

’எங்க ஊரு வந்தாச்சு’.

நான் சத்தம் போட்டபடி ரயில் பெட்டியில் இருந்து குதித்தேன்.

எதிரே விளக்குக் கம்பத்தில் கட்டிய பலகை இந்த வாரம் விகடன் வாசித்தீர்களா என்று விசாரித்தது. நல்லையா இன்னும் போடலே என்று வாய் வரை வந்த பதிலை அடக்கிக் கொண்டேன். இந்த ஊரில் இருந்து நான் வெளியே போய் மூன்றாவது வருஷம் இது. நல்லையா, விகடனும், கதிரும், குமுதமும், கல்கண்டும், பவன்ஸ் ஜர்னலும் இன்னும் வீடு வீடாகப் போட்டுக் கொண்டிருக்கிறாரா என்று ஊருக்குள் போய்த்தான் விசாரிக்க வேணும்.

கயல் கயல் கயல் கயல் என்று என் பின்னணிக் குரலாக அழைத்துக் கொண்டிருந்தான் அந்த்வான். வண்டி முழுக்க நின்றதும் இறங்கத் தயாராகக் கம்பார்ட்மெண்ட் கதவை ஜாக்கிரதையாகப் பற்றியபடி நிற்கும் கயலுக்குப் பின்னால் பொறுமையில்லாமல் அசைகிறான் அவன். மஞ்சள் புடவையில் மனசை அள்ளும் கயலைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

’கயல், சீக்கிரம் இறங்கு.. ரயில் ரெண்டு நிமிஷம் தான் நிக்குமாம்’. அந்த்வானை அடுத்து நின்ற லெச்சு பொறுமை இல்லாமல் கூவினான்.

பாவம் கயல். படி நிச்சயமில்லாமல் தயங்கிக் கீழே கால் வைத்தவள் சரிந்து என்மேல் துவண்டாள். இறுக அணைத்து ஏற்று வாங்கினேன். ரயிலுக்கு ஆயிரம் நன்றி சொல்லி மனசே இல்லாமல் அவளைப் பிரித்து நிறுத்தினேன்.

கயலைத் தொடர்ந்து அந்த்வானும், ருழே சாந்தியும், லெச்சுவும் இறங்கினார்கள். என்னையும் சேர்த்து எல்லோர் கையிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாளிகள். அவை நிறைய நிறைய லட்டும், ஃபாரீஸ் சாக்லெட்டும், மேரி பிஸ்கட் பாக்கெட்டும், பெரிய தேங்காய்களும், வெற்றிலை பாக்கும்.

விசாலி கல்யாணத்துக்குப் பள்ளத்தூர் போய்விட்டு அங்கே இருந்து எங்க ஊருக்கு வந்திருக்கிறோம். வாளி நிறையத் திருமண அன்பளிப்பு.

’நீ அடிக்கடி சொல்ற ரெட்டைத் தெருவைப் பார்க்கணும்டா’.

கயலும், அந்த்வானும் வெவ்வேறு சந்தர்பங்களில் சொன்னது நிறைவேற இப்போதுதான் சமயம் கிடைத்திருக்கிறது.

’இப்படியே பொடி நடையாகப் போயிட வேண்டியதுதானா’?

கயல் உதட்டுக்கு மேல் சன்னமாக வியர்வை பூக்கக் கேட்டாள். அவள் கூந்தலில் சூடி இருந்த மல்லிகைச் சரத்தில் ஒரு பூ எடுத்துப் பூ இதழால் அந்த வியர்வையை ஒற்ற வேண்டும் போல் இருந்தது.

’வேணும்னா சொல்லு உப்பு மூட்டை தூக்கிப் போறேன்’. தணிந்த குரலில் தொடர்ந்தேன். ‘சூரிய காந்திப் பூ மாதிரி இருக்கேடி குட்டி நான் தான் சூரியன்’..

இந்த அழகான ரயில்வே ஸ்டேஷன் எனக்குள் இருந்து கண்டிப்பாகக் காதல் கவிதை மட்டும் பாடும் கவிஞனை வெளியே கொண்டு வருகிறது. கயல் அவனுக்குக் கவிதை வசப்பட வைத்தவள். கவிதையானவள். இவளுக்கு ஊரைக் காட்ட வந்திருக்கிறேனா, ஊருக்கு இவளைக் காட்ட வந்திருக்கிறேனா.

’வரிசையா வாளியோட போனா, சாம்பார் மார்ச்னு பெயர் வச்சுடுவாங்க’

அந்த்வான் தடையே இல்லாமல் சொன்னான்.

‘கமலஹாசன் ஒரு தெலுங்குப் படத்துலே பக்கெட் பக்கெட்டா தூக்கிப் போய் செம காமெடி பண்ணுவார்டா’ என்றான் லெச்சு. அவன் இந்த ரெண்டு வருஷத்தில் கமலஹாசனின் வெறித்தனமான ரசிகன் ஆகியிருந்தான். ஆனால் அவன் எங்கே தெலுங்குப் படம் பார்த்தது?

’வல்லூரி சார் தெலுங்கு அசோசியேஷன் மெம்பர் இல்லே? ஒரு ஞாயித்துக்கிழமை அவங்க ஏற்பாடு பண்ணி மெஜந்தா தியேட்டர்லே காலைக் காட்சி போட்டாங்க. கமல் படம்னாரா, உடனே அவரோட ஒட்டிட்டுப் போய் உக்காந்துட்டேன். மொழிபெயர்பு அவர் தான்’ .

’தம்பி நல்லா இருக்கீகளா’? பழக்கமான குரல்.

சிவப்புச் சட்டை போட்டு அதில் பித்தளை வில்லை சூடிய ராம லட்சுமணர்கள் போல போர்ட்டர் சகோதரர்கள் நிறுத்தி விசாரித்தார்கள். ரெட்டைப் பிறவிகள்.

’ஐ, எங்க வீட்டுப் பிள்ளை எம்ஜிஆர் மாதிரி இல்லே டபிள் ஆக்ட்?

கயல் குழந்தை மாதிரி சந்தோஷப்பட, அதில் ஒரு போர்ட்டர் சொன்னார் – அது எல்லாம் இப்போ தானே… நாங்க உத்தம புத்திரன் காலத்து ஆளுங்க

எல்லோருடைய தோல்பைகளையும் பிடிவாதமாக வாங்கிச் சுமந்து கொண்டு அவர்கள் நடக்க, ’என்ன அப்பூ, பாசஞ்சர் ரயில்லே வரீக? காரைக்குடியிலா இருக்காப்பல’? என்று விசாரித்தார் போர்ட்டர் அண்ணனோ தம்பியோ.

’பள்ளத்தூர்லே ஒரு கல்யாணம் போனோம். அப்படியே நம்ம ஊரையும் சிநேகிதங்களுக்குக் காட்டலாமேன்னு தான் அண்ணே’.

ஜில்ஜில் என்று கயலுடைய சலங்கை சத்தத்துக்கு எசப்பாட்டாக இன்னொரு சத்தம். பழநி குதிரை வண்டி கயல் போல் கம்பீரமான, கச்சிதமான அழகுடன் திமிர்த்து நிற்கும் குதிரை. குதிரைக்குப் பூட்டிய மணி அசைந்து கயலின் சதங்கையோடு பாடியது. பழநி வண்டிக்குப் பக்கத்திலேயே துணையாக கூட்டு வண்டி நின்றது. அந்தக் குதிரை வண்டியும் பழநி வண்டி போலத்தான். ஆனால் அதை ஓட்டுகிறவர்கள் மாறி மாறி வருவதால் அதற்குப் பெயர் இல்லை.

’தம்பியை ரெட்டைத் தெருவிலே அவுக வீட்டுக்கு’.

ஆரம்பித்த போர்ட்டர் குரல் உறைந்து நிற்கச் சட்டென்று மனதை ஒரு வினாடி துக்கம் கவ்வியது. ரெட்டைத் தெருவிலே வீடேது எனக்கு இப்போது? அம்மா இல்லாத, வீடு இல்லாத அந்தத் தெருவே அந்நியம் தான் இனி என்றும்.

’தம்பி எங்கே போக’?

பழநி கேட்க, அரண்மனை வாசல் லாட்ஜுக்கு என்றேன். சொந்த ஊரில் லாட்ஜில் போய்த் தங்குகிறது பெரிய அவமானம் என்று அவருடைய வண்டிக் குதிரை தலையைக் குலுக்கி, சேணம் போட்ட கண்களோடு பக்கத்து வண்டிக் குதிரையிடம் அபிப்பிராயம் சொன்னது.

போர்ட்டர்கள் கேட்டதை விட பத்து ரூபாய் கூடுதலாகவே ருழே உபயத்தில் கொடுத்தானது. ஆனாலும் அவர்கள் வழக்கம் போல நெளிந்து நாட்டியமாடி விலைவாசி உசந்துடுச்சு என்று காரணம் காட்டி இன்னொரு ஐந்து ரூபாய் கூடுதலாக வாங்கிக் கொண்டு சந்தோஷமாகப் போனார்கள்

நானும் கயலும் ஒரு வண்டியில். எங்கள் பைகள் மிச்ச இடத்தில். மற்றவர்கள் பின்னால் வந்த குதிரை வண்டியில். வண்டி முழுக்க பசும்புல் மணத்தது. ஜமுக்காளம் விரித்த வண்டி ஆட்டத்தில் கயல் என் மேல் சுகமாக இடித்துக் கொண்டு வர இன்னும் நெருங்கி உட்கார்ந்தேன்.

’என்னடா, முத்தம் கொடுக்கப் போறியா’?

கயல் சீரியஸாக ஆனால் சத்தமின்றி விசாரித்தபடி என் தொடையில் கிள்ளினாள். பின்னால் வரும் வண்டிக்குள் இருந்து பார்க்கத் தடையாக லெதர் பைகள் எங்களுக்குப் பின்னால் குவிந்து திரையாகிக் கிடந்தன.

’சனியனே, இன்னொரு தடவை கிள்ளினா நெஜமாவே ஷான் கானரி ஜேம்ஸ் பாண்ட் மாதிரி முப்பது செகண்ட் தம் பிடிக்கற முத்தம் கொடுத்துடுவேன்’.

எதிர்பார்த்ததுபோல அவள் திரும்பக் கிள்ளினாள். ஷான் கானரி, வா இங்கே.

உதட்டு ஈரத்தை ஊர்க் காற்று சீக்கிரம் உலர்த்த விடாமல் புறங்கையால் மறைத்தபடி கயலைப் பார்த்துச் சிரித்தேன். தலை கொள்ளாமல் பூவும் காதில் ஆடும் ஜிமிக்கியுமாக எங்க ஊர் மருமகள் வந்து கொண்டிருக்கிறாள். அரண்மனை வாசலில் மதுரை மல்லி வாங்கித் தலையில் சூட்டி விடவேணும்.

மழை ஓய்ந்த காலை நேரம். மழைக் காற்றும் இதமான ஈர வாசனையும் இன்னும் சூழ்ந்து இருக்கிறது. ஆரஞ்சுச் சாற்றைக் கலக்கி வைத்த மாதிரி பாதையோரம் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. ஆள் அரவமில்லாத ரயில்வே ஃபீடர் ரோடு பச்சைச் செடி மணத்து வேப்ப மரங்களாக விரிந்து கிடக்கிறது. சின்னக் கற்களில் சக்கரம் மோதி ஆடி ஆடி வண்டி முன்னால் போகிறது.

’ஜோசபினையும் கூட்டி வந்திருக்கலாம்’.

கயல் சொன்னாள். எனக்கும் அதே வினாடியில் அப்படித்தான் தோன்றியது. அவளிடம் எத்தனை தடவை ஊர் நினைவைப் பகிர்ந்திருக்கிறேன். கூட்டிப் போடா என்று அவளும் கேட்டிருந்தாள். இவ்வளவு தூரம் பள்ளத்தூருக்கு வந்தவள் எங்க ஊருக்கு வரமுடியாமல் போய் விட்டது. விசாலி கல்யாணம் முடிந்து கடமை அழைக்க, வேலைக்கு ஓட வேண்டிப் போன கட்டாயம்.

’நீங்க வர்றீங்கன்னோ என்னமே ரெண்டு நாளா மழை அடிச்சுப் பெய்ஞ்சதுங்க தம்பி.. இன்னிக்குத் தான் வானம் வெளி வாங்கியிருக்கு’.

பழநி வண்டி ஓட்டிக் கொண்டே சொல்ல, என் கையை இதமாகத் தன் கைகளுக்குள் வைத்து மூடியபடி கயல் சொல்கிறாள்

’நீ என்ன இந்த ஊரு மகாராஜாவா?

ஆமா மகாராணி .. என்ன செய்யணும் நான்?

’கால்லே விழுந்து கும்புடுங்க ராஜா’.

சட்டென்று குனிந்து அவள் பாதத்தை நிமிர்த்தி முத்தமிட்டேன். டேய் டேய் என்று அவள் பதற, என்னமோ நடக்குது என்று குதிரை கனைத்தபடி ஓடியது. தெரிந்தாலும் கேட்க மனமின்றி யோகி போல அமர்ந்து பழநி வண்டி ஓட்டி வந்தார்.

கயல், கும்பிடு என்றேன் என் வலப்பக்கம் கை காட்டி. சிரத்தையாக இருகை உயர்த்திக் கண்மூடிக் கும்பிட்டு விட்டு எதைக் கும்பிட என்று கயல் கேட்டாள்.

’அந்தப் பக்கம் ஒரு கிலோமீட்டர் போனா பிள்ளைவயல் காளி கோயில் இருக்கு. பேறு காலத்துலே வேண்டிக்கிட்டு, பிள்ளை பிறந்ததும் மாவிளக்கு ஏத்த இங்கே தான் வருவாங்க’ என்றேன்.

’மாவிளக்குன்னா’? கயல் கேட்டாள்.

’நாம இங்கே வந்து ஏத்தும் போது தெரிஞ்சுப்பே’.

அவள் என் கையை அன்போடு இதழில் ஒத்தி விடுவித்தாள். மனம் றெக்கை கட்டிப் பறக்க அடுத்து வந்த பஸ் ஸ்டாண்டைக் கயலுக்குக் காட்டினேன்.

’இது தான் அரண்மனை வாசல்’. பெருமையாக அறிவித்தேன்

அரண்மனை எங்கேடா அவள் கேட்பதற்குள் கம்பீரமான மறவர் சீமை அரண்மனை முன்னால் எழுந்து நின்றது. பார் என்று காட்ட, என்னமோ நினைவில் கன்னத்தில் போட்டுக் கொண்டாள் கயல்.

அரண்மனை ஓரமாக சரவணராஜா கலையரங்கம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வெற்று மேடையையும் பின்னால் காயத்தோடு நிற்கிற சிமெண்ட் சுவரையும் அடுத்து நான் காட்ட வண்டி நின்றது. ஷண்முகா லாட்ஜ்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் குளித்து, பசியாறி, ஊர் சுற்றிப் பார்க்கத் தயாரானோம். குதிரை வண்டி கூப்பிடு என்றாள் கயல். அவளுக்கு அந்தச் சவாரி ரொம்பவே பிடித்துப் போயிருந்தது. மற்றவர்களுக்கும் கூடத்தான்.

’எல்லாமே நடந்து பார்க்கிற தூரம். காலைச் சாப்பாடு ஆச்சு இல்லே. ரெண்டு நாளா விசாலி கல்யாணத்திலே வேறே ஒரு கட்டு கட்டியாச்சு. நடங்க ..இதான் எக்சர்சைஸ’ என்று சொல்லித் தள்ளிக்கொண்டு போனேன் எல்லோரையும்.

அரண்மனைக்குள் போய்ப் பார்க்க வாசலில் நின்ற காவலர் அனுமதித்தார். சத்தம் போடாதீங்க, போட்டோ எடுக்காதீங்க பாத்ரூம் போகாதீங்க என்று அவர் நிபந்தனைகளைச் சொல்ல மொழிபெயர்ப்பில் அரை நிமிட இடைவெளியில் புரிந்து கொண்ட ருழே ஓங்கிச் சிரித்தாள்.

‘பான் கார்சன்’. அன்போடு காவலரின் கன்னத்தை ருழே சாந்தி தட்ட, அந்த மனுஷர் திகைத்துப் போய் நின்றார். ’நல் பய்யன் நீ .. நல் பய்யன்’ என்று பான் கார்சனை அவருக்காகத் தமிழ்ப் படுத்தவும் மறக்கவில்லை ருழேப் பொண்ணு.

அடைத்துப் பூட்டியிருந்த ராஜராஜேஸ்வரி கோவிலில் தொழுது விட்டு வெளியில் நிற்கும்போது சொன்னேன் – நவராத்திரி காலத்தில் அரண்மனைக் கதவுகள் சற்றே திறந்து உள்ளே ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் ஆராதனை நடக்கும்போது இந்த இடம் முழுக்கப் பெண்கள் சாம்ராஜ்யமாகி விடும். அரண்மனைக்குள் பெரியவர்கள் கையைப் பிடித்து கொண்டு நுழையும்போது உயரமான விதானத்தில் தலைகீழாகத் தொங்கும் வ்வ்வால்கள் ஜிவ்வென்று டைவ் அடித்து மேலே முட்ட வருகிறதுபோல் போக்குக் காட்டி சட்டென்று திரும்ப மேலே உயர்வதில் டூரிங் டாக்கீஸில் திகில் படம் பார்த்த மாதிரி இதயத் துடிப்பு அதிகமாகும்.

’டூரிங் டாக்கீஸ் இப்பவே பார்க்கணும்’. ருழே பிடிவாதமாகச் சொன்னாள். இன்னும் இருந்தா, திரும்பற நேரத்திலே பார்க்கலாம் என்றேன். மூன்று வருஷத்தில் பெரியதாக மாற்றம் இருக்காதுதான். நான் மாறி இருக்கிறேனே.

போஸ்ட் ஆபீஸ் வழியாக தெப்பக்குளக் கரைக்கு வந்தோம். அலையடித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் நிரம்பிப் பார்க்க அழகாக இருந்தது.

‘இங்கே தான் தினம் குளிப்பியா’? கயல் கேட்டாள்.

’ஆமான்னு சொல்ல ஆசைதான். ஆனா, வீட்டுலே வேம்பாவிலே வென்னீர் போட்டுத்தான் குளியல்’ என்றேன். வேம்பாவைப் பார்க்கவும் ஆர்வம் காட்டினாள் ருழே.

மற்றவர்களைப் போக விட்டுப் பின்னால் நடக்கும்போது நீ பத்து வயசுலே எப்படிடா இருந்தே என்று ஆர்வமாக விசாரித்தாள் கயல். இப்படித்தான் என்று குரங்கு பெடல் போட்டு விவேகானந்தர் பள்ளியை ஒட்டிய மேட்டில் சைக்கிள் இறங்கிய பையனைக் காட்டினேன். தொடர்ந்து, ‘இது ரெண்டு வயசுலே நான்’ என்று சிவன்கோவில் வாசலில் ஓடி வந்த நக்னமான குட்டிப் பையனையும் காட்டினேன். என் கையை இறுகப் பற்றி சீய்ய் என்றாள் ஓரக் கண்ணல் ரசித்தபடி அவள்.

சிவன் கோவிலில் மார்கழி உற்சவம் நடந்த விமர்சையை சிநேகிதர்களுக்குச் சொன்னேன் – மார்கழி விடிகாலையில் தலையில் கிழிசல் விழுந்த பட்டுத் துணியைக் கம்பீரமான முண்டாசாகக் கட்டிக் கொண்டு மீசை இல்லாத பாரதியார் போல வக்கீல் குமாஸ்தா வெங்கடேசன் சந்நிதானத்துக்கு முன்னால் நிற்பார். திருப்பள்ளி எழுச்சியும், திருவெம்பாவையும் ஒவ்வொரு பாட்டாகப் பாடி நிறுத்த, சுந்தரேசக் குருக்கள் பின்னால் வளைந்த காலை உந்தி திருவாச்சி விளக்கில் தீபாராதனை கொளுத்தி சிவனுக்குக் காட்டுவார். மடைப்பள்ளியின் வெண்பொங்கல் தயாராகிற வாடை சுகமாகக் காற்றில் மிதந்து வர, நாங்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டு காத்திருப்போம்.

’இவ்வளவு அழகான ஊரை விட்டுட்டு எதுக்கு கடலும் கரையுமா சதா கள்ளு வாடை அடிக்கற, மொழி கூட வேறேயான நம்ம ஊருக்கு வந்தே’? சண்டிகேசுவரர் சந்நிதி இருட்டில் கயல் மெதுவாகக் கேட்டாள்.

’இந்த அழகான பொண்ணை சந்திக்க. சந்திச்சு முத்தம் கொடுத்துட்டே இருக்க’.

’டேய் கோவில்டா’. அவசரமாக அவள் விலகியதும் நன்றாகத் தான் இருந்தது.

’இது சிவன் கோவில் தெரு. நேர் மேற்கே பெருமாள் கோவில் தெரு. ரெண்டு தெருவுக்கும் நடுவிலே இதோ ரெட்டைத் தெரு. நம்ம இடம்’.

வாய் உற்சாகமாகச் சொன்னாலும் பிறந்த இடத்தை ஆழத் தோண்டி அணைத்துப் பரவிக் காத்திருக்கும் உறவு வேர்கள் இல்லாமல் போன அகதி போல நிற்பது நெஞ்சை அடைத்தது. என்னை அந்நியனாக உணர்கிற வலி அது
.
அத்யாவசியமான பரபரப்போடும் ஞாயிற்றுக் கிழமைக்கான சோம்பலோடும் கிடந்தது தெரு. சைக்கிள்களில் மெல்ல ஊர்ந்து வரும் ராத்திரி ஷிப்ட் முடித்த கிராஃபைட் தொழிற்சாலை ஊழியர்களாகவும், ஓய்ந்து ஒலிக்கிற ’சாளூர்க் கத்தரிக்காய், அரைக்கீரை, முளைக்கீரை, குட்டைப் புடல், பூசணிக்கா, பரங்கிக்கா, மல்லித்தழை ஆத்தா’ குரலாகவும், யாரும் வாங்காமல் சுற்றிச் சுற்றி வரும் மீன்காரனாகவும், வாசல் தெளித்து கோலம் போட்ட வரிசை தப்பாத வீடுகளாகவும் ரெட்டைத் தெரு வாஞ்சையாக என்னை வரவேற்றது.

தெருவின் பிரதாபத்தை கயலுக்கும் மற்றவர்களுக்கும் சொன்னேன் –

ஊரில் ரெட்டைத் தெருவுக்கு ஒரு முகம் உண்டு. கிழடு தட்டிக் கொண்டிருக்கும் அந்த முகம் தலையில் டர்பன் கட்டியிருக்கும். கொஞ்சம் சிடுசிடுவென்று இருக்கும். இங்கிலீஷ் சரளமாகப் புரண்டு வரும் நாக்கு. லா பாயிண்ட்களைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லக் கூடிய மூளையும் டர்பனுக்கு உள்ளே உண்டு. ஊர்ப் பிரமுகர்களில் அரைவாசிப்பேர் டர்பன் கட்டிய ரெட்டைத் தெரு வக்கீல்கள், கால்வாசிப்பேர் அழுக்கு கோட் போட்ட அவர்களுடைய குமாஸ்தாக்கள். பத்து வருஷத்துக்கு முந்திய அந்தக் காட்சி இப்போது ஏறக்குறைய முடிவடைந்து விட்டது.

மருதமுத்து ஜூஸ் கடையில் எல்லோருக்கும் ப்ரூட் மிக்சர் வாங்கிக் கொடுத்தேன். அதன் ரெசிபியை ருழே கேட்க, சிதம்பர ரகசியம் என்றேன். மருதமுத்து சிரித்துவிட்டு டெமான்ஸ்ட்ரேட் செய்து காட்டினார். ஒவ்வொரு பழமாக நறுக்கிப் போட்டு கூழாக்கிக் குழைக்கும்போது பின்னால் நின்ற கயலிடம் படு சீரியஸாக ரீல் சுற்றினேன் –

’முன்னெல்லாம் நிறைய ப்ரூட் மிக்சர் போட்டு பழத்தைக் கூழாக்க நாலு அழகான பெண்களை கால் அலம்பி தட்டுலே ஏறி நின்னு மிதிக்கச் சொல்வாங்க. ரொம்ப இனிப்பா இருக்கும் அப்போ கிடைச்ச ப்ரூட் மிக்சர்’.

அடுத்த ஐந்து நிமிஷம் அந்தப் பிசாசு என்னோடு பேசவே இல்லை. தெருமுனைக்கு மற்றவர்கள் போக நான் பின்னால் நடந்தபோது அவள் சபித்தது – உன்னை எல்லாம் ஏறி மிதிச்சு .. கூழாக்கினாத்தான் இன்பம் .. இருக்குடா இருக்கு.. என் கிட்டே மாட்டுவே இல்லே.. விடமாட்டேன்.

அத்தனை வீட்டு வாசல்லேயும் அழகா கோலம் போட்டிருக்கறது பார்க்க நல்லா இருக்கு என்றாள் ருழே. இது என்ன பெரிசு, மார்கழியில் பார்க்கணுமே என்றேன். மார்கழியா? லெச்சு விசாரித்தான். சொன்னேன்.

எல்லா வீடுகளிலும் கூட்டுறவு முறையில் ஒரே நேரத்தில் வாசல் பெருக்கி, வாளி வாளியாகத் தண்ணீரை சீராக வீசியடித்துத் தெளித்துக் கோலங்களின் அணிவகுப்பு தொடங்கும். சாதா நாட்களில் விடிந்து வெகு நேரம் கழித்து மூணு புள்ளி நாலு வரிசை என்று வீட்டு வாசல் நடுவில் ஒப்புக்கு அவசர அவசரமாகப் இழுக்கப்படும் கோலங்கள் சினிமாஸ்கோப் வடிவத்தில் நூறு புள்ளி ஐம்பது வரிசை என்கிற மாதிரி பெரிய பட்ஜெட்டில் அரங்கேறும் வேளை அது. முணுக் முணுக்கென்று வாசலில் ஜீரோ வாட் பல்ப் வெளிச்சம் போதாமல், வீடு வீடாக வாசல் மாடத்தில் அகல் விளக்கை ஏற்றி வைத்துவிட்டுக் கோல ஆலாபனைகள் தொடங்கும். இப்படிப் பெரிய தோதில் போடும்போது டிசைன் சிக்கல் எழுந்தால், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து அங்கங்கே புள்ளிகளை இடம் மாற்றி, இணைப்புக் கோடுகளை ஷார்ட் சர்க்யூட் செய்து கோலத்தை முடிக்கிற அண்டை அயல் பெண்கள் ஒரு வாரம் முன்னால் எல்லைப் பேச்சுவார்த்தைகளில் எதிரும் புதிருமாக வாதாடியதை எல்லாரும் மறந்திருப்பார்கள். அங்கங்கே கலர்பொடி தூவி, கோலத்துக்கு நடுவே மஞ்சள் மின்னும் பரங்கிப் பூக்களை வைத்து அழகு படுத்தி, ஒரு வீட்டுக் கோலம், கச்சிதமாக வீட்டு எல்லையில் முடிகிற அடுத்த வீட்டுக் கோலத்தோடு நேர்த்தியான நகாசு வேலை மூலம் இணைக்கப்படும். விடிவதற்கு முன் இந்தக் காட்சி ஏகப்பட்ட சிரிப்பும் கும்மாளமும் இரைச்சலுமாக நடைபெறும். விடிந்தபிறகு பார்த்தால் ரெட்டைத் தெரு முழுக்க விதவிதமான வேலைப்பாட்டோடு தெருவுக்கு இரண்டு பக்கத்திலுமாக இரண்டு பிரம்மாண்டமான ரத்தினக் கம்பளங்கள் கோலம் போட்ட தரையில் விரிந்து கிடக்கும். அவற்றை மிதித்துக் கொண்டு நடக்கவே மனது வராது. அந்த ஈர மண்ணின் வாசனையை முகர்ந்தபடி லேசாக மேலே எழும்பி மிதக்க வேண்டும் என்று தோன்றும்.

’இங்கே இருந்து மார்கழியில் காலையிலே எழுந்திருச்சு திருப்பாவை கேட்டுக்கிட்டே வாசல்லே கோலம் போடணும்போல இருக்கு’.

கயல் சொல்ல, தலை குளித்துக் கோலம் போடும் என் வீட்டரசியாக அவளைக் கற்பனை செய்தேன். இதமாக, இன்பமாக இனித்து இருந்தது அது.

என் சந்தோஷமெல்லாம் ஒரு வினாடியில் வடிய, எங்கள் வீடு இருந்த இடம். அங்கே வேறே ஒரு கட்டிடம் எழும்பி நின்று கொண்டிருந்தது. குரல் இடறச் சொல்ல நினைத்தது இது. எவ்வளவு சொன்னேனோ, நினைவு இல்லை.

சலிக்காமல் என் கால் மிதித்து நடந்து, தரையில் படுத்து உருண்டு, உயரம் குறைந்த நிலைப்படியில் தலை இடித்து வலித்து, சுவரில் கிறுக்கி அழித்து, கிணற்றில் வாளியை நழுவ விட்டு, கூடத்தில் கொலு வைத்து, தீபாவளிக்கு நல்லையா குணேகா செண்ட் தெளித்த பத்திரிகை கொண்டு வந்து திண்ணையில் எறியக் காத்திருந்து வினாடி வினாடியாக இன்னும் மனதின் ஆழத்தில் பதிந்திருக்கும் என் வீடு இருந்த இடத்தில் வேறு ஒரு புதிய கட்டிடம் எல்லா வர்ணமும் பளிச்சிட எழும்பி நிற்கிறது. ஒரு கருப்பு வெளுப்பு புகைப்படம் கூட இல்லாமல் நினைவுகள் மட்டும் மிச்சம் இருக்க என் ரெட்டைத் தெரு வீடு காலமாகி விட்டது.

விம்மல் வெடிக்க நின்றேன். ருழே கயலை முன்னால் என் அருகே தள்ளினாள். கயல் என் தோளைத் தொட்டு காதில் கூறினாள் – ’நான் இருக்கேன் உனக்கு. எப்பவும் உன்னோடு தான் இருப்பேன் ராஜா’.

அவ்வளவு தான். அப்புறம் என் சோகம் எல்லாம் விலகி ஓடியது.

எதிர் வீட்டில் ஏதோ சர்க்கார் டிபார்ட்மெண்டின் அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆபீஸாகிய ஏ.டி ஆபீஸ் இன்னும் இருந்தது. இது தான் நான் காதலிக்கக் கத்துக்கிட்ட இடம் என்றேன். கயல் சுவாரசியமாகப் பார்க்க விளக்கினேன் –

ஒரு ராத்திரி .. ஏழு மணி இருக்கும்.. வாட்ச்மேன் தாத்தா சுருட்டு குடிக்க, அதோ, அந்த ஓரமாக இருக்கிற ராஜுத் தெருமுனைக்குப் போயிருந்த ஒரு ராத்திரியில் வானர சேனையாக ஏடி ஆபீசுக்குள் தைரியமாக் சத்தமின்றிப் படையெடுத்தோம். உள்ளே டைப் சத்தம் கேட்டது. நாற்காலி இழுபடும் சத்தம் அடுத்துக் கேட்டது. டைப்பிஸ்ட் அக்கா ஒருத்தி சீட்டில் உட்கார்ந்த படிக்கே சிரித்துக் கொண்டிருந்தாள். ஜெமினி கணேசன் போல அரும்பு மீசை வைத்த பக்கத்து சீட் மாமா நெருங்கி வந்து டைப்பிஸ்டுக்கு ஒரு அவசர முத்தம் கொடுத்து விட்டுத் தன் சீட்டுக்குத் திரும்பினார். திரும்ப டைப் அடிக்கிற சத்தம் கேட்டது.

’அந்த ஒரு முத்தத்துக்கே இவ்வளவு கதைன்னா, சிலபேர் வகை தொகை இல்லாம வாரி வழங்கறாங்களே அதுக்கு என்ன சொல்ல’?

லெச்சு பொதுவாகப் பார்த்துக் கொண்டு கேட்டாலும் புரிந்தது. கயல் கண்களில் நாணம் என்னால் வந்ததில் எனக்குப் பெருமை தான்.

காந்தி வீதியில் கடை கடையாகப் பார்த்தபடி போனபோது குண்டுராஜு எதிரில் வந்தான். ரோடு என்று பார்க்காமல் அவனை முடிந்த வரை தழுவிக் கொண்டேன். மூக்குப்பொடி வாடை ராஜுவிடம் பலமாக எழுந்து என்னை அடுக்கடுக்காகத் தும்ம வைத்தது. திருச்சி டிவிஷனில் அரசு போக்குவரத்துக் கழக டிரைவராக இருக்கிறானாம். ரெண்டு நாள் லீவில் வந்திருக்கிறான். அவனும் வீட்டை விற்க முயற்சி செய்கிறானாம்.

நினைத்துக் கொண்டது போல் குண்டுராஜு என்னிடம் கிசுகிசுத்தான்-

’டேய், உங்காளு மேகலா வந்திருக்காடா நேத்து பார்த்தேன்’.

மகிழ்ச்சியாக இருந்தது. துக்கமாக இருந்தது. குற்ற உணர்ச்சி எழுந்து வந்தது. மேகலாவை எப்படி மறந்தேன்? ஏன் மறந்தேன்? இனியும் நினைப்பேனா?

’அவ அத்தை வீட்டுக்கு வந்திருக்காடா’, என்று மேலதிகத் தகவல் சொன்னான். வேறே எங்கே வர முடியும் என்று கேட்க நினைத்தேன். கேட்கவில்லை.

சாத்தப்பையர் தெரு தானே? ஒரு வினாடி அதிகம் நடந்தால் மேகலாவைப் பார்க்கலாம் என்று தெம்பாக உணர்ந்தேன்.

’சாத்தப்பய்யர் தெருவா? எந்த உலகத்திலே இருக்கே நீ? அவ அத்தை வீடு இருந்த இடத்திலே வேறே கட்டிடம் வந்தாச்சு. அவங்க மஜித் ரோடுக்கு குடி போய்ட்டாங்க’ என்று எனக்கு சுவாரசியமான தகவல் தரும் பொறுப்போடு அறிவித்தான் ராஜு.

’எங்கே ஒத்த வீட்டுக் கிருஷ்ணன் வீடு இருக்கே அங்கேயா’? என்று கேட்டேன்.

’கரெக்ட்.. அதே இடம் தான்.. அதுக்கு கிழக்கே குடி போயிருக்காங்க. மேகலா அங்கே தான் இன்னும் இருக்கான்னு நினைக்கறேன்..’ கூடுதல் செய்தி இது.

ஷண்முக பவான்லே சாப்பிடலாம் என்றேன் குண்டுராஜுவிடம். அவனிடம் பேச எவ்வளவோ இருக்கிறது. கயல் யார் என்று சொல்ல வேணும் அவனிடம்.

வேலை இருக்கு, அப்புறம் முடிஞ்சா லாட்ஜிலே வந்து பார்க்கறேன் என்று சொல்லி விட்டு சைக்கிள் ஏறிப் போனான் குண்டுராஜு.

பகல் உணவுக்கு அப்புறம் எல்லோரும் உறங்கப் போனார்கள். சாயந்திரம் ஐந்து மணிக்குத்தான் ஊருக்குத் திரும்ப ரயில் வருகிறது. அது வரைக்கும்?

நான் மஜீத் ரோடுக்குப் புறப்பட்டேன். செருப்பை அணிந்து கொண்டு லாட்ஜ் வாசலில் சைக்கிளைத் தன்னிச்சையாகத் தேட, கயல் பின்னால் நின்று கொண்டு, என்னத்தைத் தேடறே என்று கேட்டாள்.

சைக்கிள் என்றேன் அசடாக சிரித்துக் கொண்டு.

து யெ ஃபு என்று கேட்டு அவள் என்னைப் பைத்தியமாக்க, அப்படித்தான் என்றேன்.

‘எங்கே கிளம்பிட்டே, திருட்டு தம் அடிக்கவா’?

அவளுக்குத் தெரியும் நான் வேறே பெண் பக்கம் போனாலும் போவேனே தவிர சிகரெட் பக்கம் போக மாட்டேன் என்று.

’மஜீத் தெரு போறேன். மேகலா வந்திருக்கா. எனக்கு மேகலா..’ தடுமாறினேன்.

இவளுக்கு மேகலாவைத் தெரியுமா? ஜோசபினிடம் சொல்லி இருக்கிறேன்.

’என்ன. உன் முதல் காதலி? அப்படித்தானே? சட்டென்று கேட்டாள் கயல்.

எப்படித் தெரியும் என்று கேட்டேன்.

’அது தான் பெண்புத்தி. சட்டுனு சில விஷயம் மனசிலே பட்டுடும்’, சர்வ சாதாரணமாகச் சொன்னாள் கயல்.

நீயும் வர்றியா என்றேன். சரி என்று உடனே கிளம்பினாள் படு சூட்டிகையாக.

கொஞ்சம் போல் வெய்யில். அவள் உடம்பு கொஞ்சமும் வாட வேண்டாம் என்று ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவைக் கூப்பிட்டு மஜீத் தெருவுக்குப் புறப்பட்டோம்.

வழியில் அலையடித்துக் கொண்டு சாத்தப்பன் ஊருணி. பக்கத்திலேயே கம்பீரமாக எழும்பி நிற்கிற, நான் படித்த பள்ளிக்கூடம்.

ரிக்‌ஷாவை ஐந்து நிமிடம் நிற்கச் சொல்லி விட்டு கயலோடு பள்ளிக்கூட பின் வாசல் வழியாக உள்ளே போனேன். பக்கத்தில் நெருங்கிப் படர்ந்திருக்கும் வேலிக்காத்தான் செடிகளை ஜாக்கிரதையாகத் தவிர்க்கச் சொன்னேன் அவளிடம். பாதத்தில் முள் தைத்துத் துடித்துப் போய்விடுவாள் என் கண்மணி.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆள் அரவமின்றி அடைத்துக் கிடக்கிறது பள்ளிக்கூடம். சரளைக் கல் இதமாகக் காலில் நெருடி மறந்துட்டியா என்று கேட்கிறது. நூற்று ஐம்பது வருட இளமையோடு கம்பீரமாக நிற்கிற படிகளில் ஏறி நிற்கிறேன். கட்டிடத்தை எல்லாம் கட்டிப் பிடித்துக்கொண்டு யாராவது ஆத்மார்த்தமாகப் பேசிக் கொண்டிருப்பார்களா? எனக்கு முடியும். கைதான் அந்தக் கம்பீரமான கல் மண்டபத்தை அணைத்துப் பிடிக்க அத்தனை தூரம் நீள மாட்டேன் என்கிறது. மவுனகுரு அடிகளும், கார்மேகம் வாத்தியாரும், வி.என்.ஆரும், இந்தி பண்டிட்டும், ஆசீர்வாதம் சாரும் பாடம் எடுக்கிற சத்தம் ஒரு சேரக் கலந்து காதில் விழுகிறது. அவர்கள் நலமாக இருக்கட்டும்.

சயின்ஸ் லேப் கட்டிடத்தின் பத்துப் படியும் ஏறி வந்து என் முன்னால் கயல் கண் கலங்க நின்றாள்.

’எப்படி நீ இவ்வளவு மென்மையான உணர்வு காணாமல் போகாம நினைவை எல்லாம் இன்னும் முழுக்க முழுக்க மனசிலே பத்திரமாப் பூட்டி வச்சிருக்கே? கட்டடத்தைக் கட்டிப் பிடிச்சுட்டு கண்ணீர் விடற மனசு அபூர்வமானது. எல்லாருக்கும் வாய்க்காது’ என்றாள் குரல் கரகரக்க.

கயலை அணைத்துக் கொண்டேன். ஏய்ய் கோவில் என்று விலகினாள்.

’அங்கே பாரேன்’.

கயல் குழந்தை மாதிரிக் கைதட்டி ரசித்து எனக்கும் காட்டியது ரெண்டு கால் ஆடுகளை. பின்னங்கால்களில் நின்று கை போல முன்னங்கால்களை முன்னால் நீட்டியபடி வேலிகாத்தான் செடியின் இலைகளை நாக்கில் முள் குத்தாத லாகவத்தோடு வாய்க்குள் உதிர்த்து அசை போட்டுத் தின்று கொண்டிருந்தன அவை. கூடவே ஓடி வருகிற அழகான வெள்ளாட்டுக் குட்டிக்கும் அவ்வபோது பார்த்துப் பார்த்து தழை தின்னத் தரும் அம்மா ஆடு.

’சர்வைவல். பிழைச்சிருக்க என்ன எல்லாம் செய்யலாம்னு மனுசன் மட்டுமில்லே, ஆடு மாடும் யோசிக்கும் போல. அதோட, காருண்யம், தாய்மை’

நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரிக்ஷாக்காரர் அந்த வேலிக் காட்டுக்குள் நெருங்கி விரியும் வழியைப் பிடித்து ஒயிலாக வண்டியை உள்ளே இறக்க கயல் என் மடியில் சாய்ந்தாள். அவள் எழுந்திருக்காமல் தலையை அழுத்திக் கொண்டேன்.

ரிக்ஷா நின்றபோது தான் கயலுக்கு விடுதலை கிடைத்தது. காற்றில் கலைந்திருந்த தலை முடியை ஒதுக்கிக் கொண்டு என்னைப் பார்த்த பார்வையை நொளினிகாந்த் சாட்டர்ஜி மோஷாய் பார்த்தால் அச்சு வெல்லக் கட்டியாக இன்னும் ரெண்டு கயல் சிலை அடுத்த நவராத்திரிக்காகச் செய்து கொடுத்திருப்பார். கூடவே அவள் காலைத் தாங்கிப் பிடித்தபடி என்னையும்.

’இந்த வீடு தானே’? ரிக்ஷாக்காரர் திரும்பாமலேயே கேட்டார். இதுவே தான்.

வீட்டு வாசலில் ஸ்டூலில் உட்கார்ந்து மோர் மிளகாய்களை தினப் பத்திரிகையில் பரத்திக் காய வைத்துக் கொண்டிருந்த கம்பவுண்டர் சம்சாரம் என்று மற்றவர்களும், மேகலாவின் அத்தை என்று நானும் குறிப்பிடும் அகிலாண்டம்மாள் ஒரு வினாடி குழப்பத்தோடு பார்த்து, நன்னா இருக்கியோடா அம்பி என்றாள். கூட நிற்கிற வடிவான பெண் யாரென்று தெரிய ஆர்வமும் சந்தோஷமுமாக கல்யாணம் ஆயிடுத்தா சொல்லவே இல்லியே என்ற போது மனது ஒரு வினாடி பறந்து விட்டு இறங்கியது.

வீட்டுப் படிக்கட்டிலும் வாசலிலும் திண்ணை முழுக்கவும் அழகான மாக்கோலம் அங்கங்கே கொஞ்சம் சிதைந்தாலும் அழகோடு காணப்பட்டது. கம்பவுண்டர் வீட்டு வாசல் நிலையை வாடிய மாவிலைத் தோரணம் அலங்கரித்தது.

’ஹலோ வாட் அ ப்ளஸெண்ட் சர்ப்ரைஸ்’.

மேகலா உள்ளே இருந்து உற்சாகமாகக் குரல் கொடுத்தபடி வந்தாள்.

பச்சைப் பட்டுப் புடவையும் தலை குளித்துப் பரத்திய கருங் கூந்தலுமாக, தெற்றுப்பல் சிரிப்போடு வரும் கோவில் விக்ரகம் மேகலா. அவள் பார்வை கயல் மேல் தான் இருந்தது.

ரெண்டு பெண்களுமே பேரழகிகள். இவளுடைய தெற்றுப் பல் சிரிப்பு மனசைச் சுண்டி இழுக்கிறது என்றால் அவளுடைய காந்தம் கவிந்த பெரிய விழிகள் என்னைச் சுற்றி வளையம் போட்டு வெளியே போகாதே என்று தடுத்து நிறுத்தும். இவள் குரல் கிண்கிணி என்றால் அவள் சிறகடிக்கும் பெண் குயில்.

சாண்டில்யன் எழுதிய சரித்திரக் கதையில் கதாநாயகன் இரண்டு கதாநாயகிகளை ஒருசேரக் கண்டு ஒப்பிடுவதெல்லாம் மனதில் ஓடி மறைய நான் ஆராதகனாக இருவரையும் ரசித்துக் கொண்டிருந்தேன்.

அப்புறம்?

மேகலா தான் தீர்க்கமான நாசியை விடர்த்தி அபூர்வமாகச் சிரித்து ஆரம்பித்து வைத்தாள். கயல் அவள் சிரிப்பை ரசிப்பதைக் கடைக்கண்ணால் பார்த்தேன்.

மேகலாவுக்கு அபூர்வமாகக் கடிதம் எழுதும்போது சம்பிரதாயமாக வீட்டில் இருக்கும் எல்லோருடைய நலமும் விசாரித்து ஊர்க் கதை கொஞ்சம் பேசித்தான் ஆரம்பிப்பது வழக்கம்.

என்ன, அம்மா, அப்பா, ஹெட்மாஸ்டர் தாத்தாஜி எல்லாம் சௌக்கியம்தானே?

’தாத்தா போன மாதம் போய்ச் சேர்ந்துட்டார்..’

மேகலா தணிந்த குரலில் சொன்னாள். மெய்யாகவே வருத்தப் பட்டேன். மேகலாவின் துக்கம் என் துக்கமும் தான்.

இங்க்லீஷிலும் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நல்ல புலவர் என்று குறைவாகப் பழகிய நானே அறிந்திருந்தேன் என்றால் மற்றவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். வெண்பாவில் விளங்காய்ச் சீர் வரலாம், விளாங்காய் வராது என்ற நுட்பமான இலக்கண அறிவெல்லாம் அவர் மூலம் தான் எனக்குக் கிடைத்தது.

’ஆமாப்பா எங்க அப்பா அவ்வளவு கல்விமான்.. ராஜ்யத்திலே பல பேருக்கு குரு.. என் தம்பியாத்திலே போகணும்னு விதிச்சிருக்கு.. மேகலா மேலே ரொம்ப பிரியம்.. சொல்லியிருப்பாளே .. தாத்தா போனாலும் நடக்கணும்னு அதான் நிச்சயதார்த்தத்தை நேத்து இங்கே வச்சது. முடிவு செஞ்சாச்சு தள்ளிப் போடக்கூடாது பாரு. உள்ளே போய் உக்காந்து பேசுங்களேன். புது ஃபேன் வாங்கி மாட்டியிருக்கு.. காத்து சிண்டைப் பிச்சுண்டு போறது பாத்துக்கோ’

அகிலாண்டம்மா படபடவென்று நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே நகர்ந்தாள்.

’இந்த வீட்டுக் கொல்லையிலே மலைவேம்பு, நிலவேம்பு ரெண்டு மரம் நல்லா இருக்கு. இங்கே இருந்தே தெரியுது.. பாத்துட்டு வந்துடறேன்’.

கயல் அகிலாண்டம்மா பின்னால் வேகமாகப் போய் ஏதோ சொல்ல, அவள் சிரித்தபடி கயலை அணைத்துப் பிடித்து அழைத்துப் போனாள். கயலை யாரென்று மேகலாவிடமும் அகிலாண்டாம்மாவிடமும் நான் அறிமுகப் படுத்தியிருக்க வேண்டும். யாரென்று?

யாருக்கு நிச்சயதார்த்தம் என்று மேகலாவை விசாரித்தேன்.

எனக்குத்தான் என்றாள் சகஜமாக.

’என்ன வெளையாடறியா’?

’இதிலே என்ன விளையாட்டு? என் லைஃப். விளையாட இது என்ன அடுத்தவங்க வாழ்க்கையா? சில பேருக்கு அதுதானே வழக்கம்’?

’என்ன சொல்றே நீ மேகலா? மனசுலே ஒண்ணு நினைச்சு வார்த்தையிலே வேறொண்ணு சொல்றே.. புரியலே யார் வாழ்க்கையிலே யார் விளையாடினது’?

அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

’மூணு கடிதாசு அதுவும் கடைசியா ரிஜிஸ்டர் போஸ்ட்லே அனுப்பினது.. வெட்கத்தை விட்டுக் கேட்டிருந்தேன்.. என்னை பிடிச்சிருந்தா வீட்டுலே சொல்லுன்னு..’

’எப்போ’?

’எதுக்கு? அதான் திரும்பி வந்துடுத்தே.. உனக்கு அங்கே ஃப்ரண்ட்ஸ் முக்கியமாப் போயாச்சு.. மேகலா ஜஸ்ட் டைம்பாஸ் ..இவளுக்கு என்ன லெட்டர் போடறது ..சும்மா விட்டா காலைச் சுத்தினது ஒழிஞ்சு போயிடும்னு நினைச்சிட்டே அதானே?. ஒரு வரி பதில்.. ஒரே ஒரு வரி..’ மேகலா படபடவென்று பொரிந்து கொட்டினாள். குரலை உயர்த்தவே இல்லை அவள்.

பேங்க் விலாசத்தில் கேர் ஆப் என்று குறித்தோ மேற்பார்வை என்று என் பேரோடு சேர்த்து எழுதியோ தான் அவள் எனக்கு எழுதிய கடிதம் எல்லாம் இருக்கும். அவள் சொல்கிற இந்த மூணும் கூட அப்படித்தானே இருந்திருக்கும்.

விக்தொ அங்கிளிடம் கேஷியர் சந்தானகிருஷ்ணன் சொல்லிக் கொண்டிருந்தது உடனடியாக நினைவு வந்தது –

’பேங்குக்கு போஸ்ட் பாக்ஸ் அலாட் பண்ணின அப்புறம் பேங்க் லெட்டர் ஒழுங்கா வந்துடுது.. பெர்சனல் கடிதம் தான் பேஜார்.. வர்றத்தில்லே.. ஊர்லே இருந்து எங்கம்மா போன மாசம் போட்ட போஸ்ட் கார்ட் இன்னிக்கு தான் நாலு இடம் சுத்திட்டு வந்துது சார்.. அதுலே ஒண்ணு திருப்பாதிரிப்புலியூர்..’

’சாரி மேகலா நான் உனக்கு போஸ்ட் பாக்ஸ் நம்பர் சொல்லியிருக்கணும்… விட்டுப் போச்சு ..சொல்லியிருந்தா வந்திருக்கும்’.

’நீயும் சொல்லலே நானும் வரலே இனிமேல் உன் பாதையிலே.. குட் லக்’.

’என்ன சொல்றேன்னு தெளிவா சொல்லேன்’. கெஞ்சினேன்.

’எங்க ஒண்ணு விட்ட சின்ன அத்தை பிள்ளை துபாய்லே இருக்கானு சொல்லியிருக்கேன் இல்லே.. அரபி நேஷனல் பேங்க்லே வேலை..’

’நினைவு இலலை மேகி’

’மேகி? செல்லப் பெயர் எல்லாம் நினைவு இருக்கு .. ஆனா என்னை உனக்கு ஞாபகம் இல்லே.. வாட் அ பிட்டி..’ மேகலா விரக்தியாகச் சிரித்தாள்.

’அத்தை பிள்ளைக்கு என்ன திடீர்னு அவசரம்’? முழுக்கத் தெரிந்து கொள்ள அவசரம் காட்டினேன்.

’அவன் அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்க எங்கப்பா கிட்டே கேட்டார்.. அவரோட அம்மாவும் அதான் என் சின்ன அத்தையும் கேட்டா ..அப்பா சரின்னுட்டார்.’

’உங்க அப்பாவுக்கு நான் உன்னை உன் மேலே நான். தெரியாதா ..’ பேச்சு கோர்வையாக எழும்பவில்லை. எனக்கு உரிமையானதை என்னிடம் இருந்து பறித்ததில் ஆற்றாமை. துக்கம்.

’என்னன்னு தெரியும்? நீ வாயைத் திறந்து யார் கிட்டேயாவது சொல்லியிருக்கியா? என் கிட்டே தவிர.. முத்தம் கொடுக்கறதிலே இருந்த மும்முரம் இதிலே எல்லாம் காட்டத் தவறியாச்சு.. பார்க்கச் சூட்டிகையா இருந்தாலும் உலகம் தெரியாத அம்மாஞ்சிடா நீ.. பாவம்னு தான் தோணறது’.

’சரி அசமஞ்சம் தான்.. அசடு தான்.. இப்பவே போய் உங்க அப்பா கிட்டே..’.

’ரொம்ப லேட்.. உங்க அப்பா வேறே நவராத்திரிக்கு முந்தி பொள்ளாச்சிக்கு வந்திருந்த போது.. சொல்லியிருப்பாரே’.

சொன்னார். மேகலா வீட்டுக்குப் போனதாகவும் அவளுடைய தாத்தாவோடு கம்பராமாயணம் விவாதித்தாகவும் சொன்னார். ஜோசபினுக்கு பிரச்சனை என்று நான் அலைந்த நேரம் அது. காதில் வாங்கியதோடு சரி அந்தத் தகவலை.

’உங்க அப்பா தாத்தா கிட்டே ராமனும் சீதையும் கல்யாணம் பண்ணிண்டது எந்த வயசிலேன்னு பேசிண்டிருந்தா.. நானும் அங்கே தான் படிச்சுண்டிருந்தேன்.. சின்ன வயசு கல்யாணம் பற்றி உங்கப்பா பேசறபோது உனக்கு இப்பவே கல்யாணப் 0பேச்சுவார்த்தைக்கு வரா.. ஆனா படிச்சு வேலைக்கு போன பிறகுதான்னு தீர்மானமாச் சொல்லிட்டேன்னார் தாத்தா கிட்டே..’.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று அவசரமாகக் கேட்டேன்.

நான் இருக்கறேங்கறதை உங்கப்பா கவனிக்கலே போல.. தாத்தா காது வேறே மந்தமா.. உங்கப்பா பெருமையாச் சொன்னதை நானும் கேட்டேன்… அவர் சொன்னார் .. ஜாதி, மதம் பார்க்காத, இருந்தாலும் அதிலே அதிகமா ஈடுபாடு இல்லாத ஊரிலே நான் இருக்கேன்.. ஒரு பக்கம் தனிமனுஷ சுதந்திரத்தை உயர்த்திப் பிடிக்கற பிரஞ்சு கலாசாரம் இன்னொரு பக்கம் இந்தியக் கலாசாரம் ஒரு வங்காளத்து புரட்சித் துறவி மூலமா.. வேறே மதம் இல்லே ஆனா ஜாதி.. அதுவும் தான் இல்லியே.. இன்னொரு தடவை அவனுக்கு சம்பந்தம் பேச வந்த பொண்ணோட அப்பா கேட்டா சரின்னு சொல்லிடப் போறேன்னாரு உங்கப்பா’.

’பெண்ணோட பேரு சொன்னாரா’? என் அவசரம் ஓயப் போவதில்லை.

‘ஆமா’.

‘என்ன பெயர்?’

’ஏதோ நல்ல தமிழ்ப் பெயர்.. பூவிழியோ கயல்கண்ணியோ…’ என்றாள் மேகலா.

அறை வாசலில் சத்தம்.

கயல், உள்ளே வா என்றேன்.

கயலை மேகலா பார்த்துக் கொண்டே நின்றாள்.

’கயல் இது இது’

’மேகலா .. தெரியும்’.

கயல் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டாள் மேகலா. கன்கிராட்ஸ் சொன்னாள். எதுக்கு என்று புரியாமல் கேட்டாள் கயல்.

‘சீக்கிரம் உங்க.. உங்க .’

’மேகலாவுக்கு கல்யாணம் வருது கயல்.. அபுதாபியிலே செட்டில் ஆகறா’.. கயலிடம் சொன்னேன், செயற்கையாகச் சிரித்து.

கயல் என்னைப் பார்த்த பார்வையில் பரிதாபமா, நிம்மதியா, சோகமா, சிரிப்பா இருந்ததென்று தெரியவில்லை.

காலேஜ், பேஷன், உடுப்பு, புத்தகம், சினிமா என்று ரெண்டு பெண்களும் இயல்பாகப் பேசிக் கொண்டிருக்க, எனக்கானதைப் பறிகொடுத்த மனநிலையில் யாரோடும் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தேன்.

’கல்யாணப் பத்திரிகையை அனுப்பணும் உன் அட்ரஸ் கொடு கயல்.. இவன் பேரை போட்டு கேர் ஆப் போட்டுடட்டா.. வேணாம் இவனுக்கு நோ கேர் .. ஹி கேர்ஸ் அபவுட் நோ ஒன்.. உன் வீட்டு அட்ரஸே கொடு’.

அவர்கள் நீ வா போ அந்நியோன்யத்துக்கு மாறியிருந்தார்கள். நான் தான் அந்நியனானேன்.

கனத்த மனதோடு படி இறங்கி நடந்தேன். தெருக் கோடியில் கயல் என் கையைப் பற்றிக் கொண்டாள்

’எப்பவும் சொல்றது தான்.. நான் உனக்கு இருக்கேன்.. ‘.

திரும்பிப் பார்த்தேன். வீட்டுத் திண்ணையில் நின்று மேகலா இரண்டு பேருக்கும் கையாட்டி விடை கொடுப்பாள் என்று ஏனொ தோன்றியது.. திண்ணை வெறுமையாக இருந்தது.

கயல், எங்கப்பா மேகலா வீட்டிலே என்ன சொன்னார் தெரியுமா?

ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கும் போது கயலைக் கேட்டேன்.

’சொல்லு’.

அந்த்வான் ஏதோ பேச வந்தான். பதில் சொன்னேன். ருழே அடுத்து ஏதோ கேட்டாள். பேசினேன்.

அவர்கள் கொஞ்சம் ஒதுங்க, சொல்லு, உங்கப்பா என்ன சொன்னாங்க என்று கேட்டாள் கயல்

’பார்த்து ஜாக்கிரதையா கூட்டிப் போடா. இவளையும் தொலைச்சிடாதே’.

மனசில் தெற்றுப்பல் அழகி சொல்லி ஜன்னல் அடைத்து உள்ளே போனாள்.

’உங்க அப்பா என்ன சொன்னார்னு கேக்கறேன் இல்லே..’ கயல் நச்சரித்தாள்.

’நான் உன்னை ..’.

உச்சத்தில் கூவிக் கொண்டு ரயில் வந்து நின்றது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன