New Bio-fiction தியூப்ளே வீதி அத்தியாயம் 31 இரா.முருகன்

நான் வல்லூரி சார் வீட்டில் நுழைந்த போது அவர் கை கட்டி நடு வீட்டில் நின்று கொண்டிருந்தார். லதா தீதி அவருக்கு முன்னால் நின்று அவருக்கு எலிமெண்டரி ஸ்கூல் கணக்கு சொல்லிக் கொடுப்பது போல் ஒகடி, ரெண்டு, மூடு, நாலகு என்று சத்தமாகச் சொல்லி விரல் மடக்கிக் கொண்டிருந்தாள்.

‘என்ன தீதி, சார் பாலை பொங்க விட்டுட்டு பேப்பர் படிச்சுட்டு இருந்த கணக்கா இல்லே பாத்ரூம் பைப்பை மூடாம வந்து தண்ணித் தொட்டி காலியான பிரச்சனையா’?

சுவாரசியமாக விசாரித்தேன். வல்லூரி சாருக்கு பிரச்சனை, எனக்கு குஷி.

’அதை ஏன் கேக்கறே.. அவமானம்.. அசிங்கம்’.

தீதி கெமிஸ்ட்ரி லேபரட்டரியில் கண்ணாடி குடுவையில் நிறைத்து வைத்த பொடாஷியம் பெர்மாங்கனேட் பிங்க் நிறக் கலவையை ஒரே மடக்கில் குடித்த மாதிரி உவ்வே என்றாள். வல்லூரி என்ன மாதிரியான பாதகம் செய்திருப்பார் என்று என்னால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை.

’இவருக்கு இதெல்லாம் தேவையா’? தீதி இன்னொரு கூக்ளி போட்டாள்.

வல்லூரி சங்கோஜமாகச் சிரித்துத் தடுத்தாடினார். லதா தீதி கண்ணை விழித்துப் பார்த்ததில் நானே பயந்து போனேன். எந்த நிமிஷமும் ரிடையர்ட் ஹர்ட் என்று காயத்தோடு வல்லூரி சார் பின்வாங்கக் கூடிய சூழ்நிலை.

ரெண்டு கையையும் திருப்பதி கோவில் தரிசன நேரத்தில் தலைக்கு மேலே வைத்துக் கும்பிடுகிற மாதிரி வைத்துக் கொண்டு கோவிந்தோ என்றேன் உரக்க. வல்லூரி இன்னொரு கோவிந்தோவும் கையுமாக என்னை ஓரமாக நாற்காலியில் தள்ளி அவரும் பாதுகாப்பாக என் பின்னால் உட்கார்ந்தார்.

’நல்ல உத்தியோகம். நல்ல பேரு. இதெல்லாம் பத்தி ஒரு கவலை இல்லை. செக்ஸ் படம் பார்க்க அலையறார் உங்க சார்’. தீதி முறையிட்டாள்.

சரிதான், இங்கே கேட்டு ரசிக்க விஷயம் உண்டு. நிமிர்ந்து உட்கார்ந்தேன். நானும் இப்போது விசாரணைக் கமிஷன் உறுப்பினனாகி விட்டேன்..

’கொஞ்சம் இருங்க தீதி .. சார் கிட்டே நான் கேக்கறேன். நீங்க ரொம்ப மிரட்டறீங்க. பாவம் பயப்படறார்’. .

உய் உய் என்றார் வல்லூரி சார் தலையை ஆட்டியபடி. மூணு வருஷத்தில் இந்த ஊரில் அவர் கற்றுக் கொண்ட பிரஞ்ச் அது தான்.

எந்த தியேட்டருக்கு சார் போனது?

’ராம் தியேட்டர்’ என்றார்.

எந்தக் காட்சி? ’சாடர்டே மார்னிங் ஷோ’.

இன்னிக்கா? ‘உய் உய்’.

என்ன சினிமா? ’இதாலியன் டைரக்டர் டெசிகாவோட மூவி’.

படத்தோட பெயர்? ’பைசைக்கிள் தீவ்ஸ் தட்டி வச்சிருந்தது. அதான் போனேன். க்யூலே நிக்கற போதுதான் நம்ம அந்த்வான் வந்தான் பார்த்தான் போனான்’.

வல்லூரி தன் பேரில் எந்தக் குற்றமும் இல்லை என்று நிரூபிக்கப் பார்க்க, தீதி என்னிடம் விளக்கம் சொன்னாள் – ’அந்த்வான் நேரே இங்கே வந்து என் கிட்டே சொல்லாட்ட இவரோட இந்த முகம் எனக்குத் தெரிஞ்சிருக்காது. அப்படி என்ன செக்ஸ் படம் பார்க்க வேண்டியிருக்கு? செப்பு’

தப்பு தான் என்று நிச்சயமாகச் சொல்லிக் கொண்டிருந்தபோதே இன்னொரு காட்சி மனதில் வந்து போனது. போன வாரம் டெசிகா படம் தான் போட எடுத்திருந்ததாக ராம் தியேட்டர் கேசவ் சொன்னான். தியேட்டர்காரக் குடும்பம் அவனுடையது. என்ன படம் தியேட்டரில் போட வேண்டும், வேண்டாம் என்று முடிவு செய்கிற உரிமை முழுக்க அவனுக்கு என்று சொல்லிக் கொள்கிறான். அதனால் தானோ என்னவோ ரெண்டு நாள் கழித்து அவனே வேறே மாதிரி சொன்னான் –

’ப்ரிண்ட் நேரே பாரீஸ்லே இருந்து வருதுன்னாங்க.. வழியிலே கோட்டக்குப்பம் சாராயக் கடைக்குள்ளே புகுந்துது போல.. அங்கே இங்கே பிஞ்சு தொங்குது.. போட்டா ப்ரஜக்டர் அழுவுது.. ஜோன்னு மழை வேறே பேயுது.. அம்புட்டு கீறல்.. வேலைக்காவாது.. வேறே படம் தான் சண்டே..’.

என்ன படம் என்று விசாரித்தேன். அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்தான்.

‘அது ஒரு மாதிரி மலையாளப் படம். நடுவிலே நச்சுனு பிட்டு எல்லாம் உண்டு. கூட ஆயிரம் ரூபாய் கொடுத்து டிஸ்ட்ரிப்யூட்டர் கிட்டே எடுத்தாலும் கியாரண்டியா காசு அடிச்சுடலாம்.. வர்றியாடா மச்சான்.. உனக்கு லைவாகவே கிடைக்கும்’. எங்கே சுற்றினாலும் இங்கே வந்து விடுகிறார்கள் எல்லோரும்.

அவன் காசு அடிக்க பைசைக்கிள் தீவ்ஸ் என்ற இத்தாலிய கலை இலக்கியத் தரமான படத்தை மாற்றி ஏதோ இன்ப இரவுகளைத் திரையிடத் தீர்மானிக்க, விஷயம் தெரிந்த கூட்டம் வாசலில் முட்டி மோதி க்யூவில் நின்றது. விஷயம் தெரியாமலேயே வல்லூரியும் நின்றிருக்கிறார்.

தீர்ப்பு வழங்க வேண்டிய நேரம். வல்லூரி சார் விடுவிக்கப் படுகிறார்.

தீதியிடம் முழுத் தகவலையும் மென்று முழுங்காமல் சொல்லி, நான் சொல்லியதெல்லாம் உண்மை என்று வல்லூரி சாரின் கர்ச்சீபைப் போட்டுத் தாண்டி தீதியைப் பிடித்த பழையனூர் நீலியை மலையேற வைத்தேன்.

வல்லூரிக்கு காலைச் சாப்பாடாக இட்லியும் எனக்கு காப்பியும் எடுத்து வர தீதி போனாள். அவள் முழுக்க நம்பினாள் என்று தோன்றவில்லை. வாத்தியாருடைய வேட்டியை உருவிப் போட்டுத் தாண்டியிருக்க வேண்டும்.

’போன் ஜூர் மிஸ்யே.. போன் ஜூர் தீதி..’. வீடு திரும்பும் காராம் பசுவின் கழுத்து மணியோசை போல இனிமையான குரல். ஜோசபின்.

ஜிவ்வென்று மனதில் மகிழ்ச்சி. இன்றைக்கு விடுப்பு என்பதால் சலவை, சர்ச், சமையல் என்று சரசரவென்று ஊர்ந்து கொண்டிருப்பாள் ஜோஸி. சரியான இடத்தில் சரியான நேரத்துக்கு வந்ததால் எனக்கு இந்தப் பரிசுத்தமான வெள்ளுடைத் தேவதையைக் கண்டு நெக்குருகித் துதிக்க வாய்த்திருக்கிறது.

இங்கே என்னடா பண்றே?’ கையை இடுப்பில் ஒயிலாக வைத்தபடி மிரட்டலாகக் கேட்டாள் ஜோசபின்.

’சட்டியும் பானையும் செஞ்சுட்டிருக்கேன்.. நீயும் வந்து ஒரு கை கொடு’

பின்னந்தலையில் ஒரு தட்டு தட்டிவிட்டுப் பக்கத்தில் உட்காந்தாள். இதற்கு என்ன தண்டனை என்று அவளுக்குத் தெரியும். எந்தக் கன்னத்தில், எப்போது அந்த முத்தம் வந்து அமரும் என்று தான் தெரியாது. நிச்சயம் இப்போதில்லை.

‘ரெண்டு நிமிஷம்.. அல்பாகாரம் பூர்த்தி சேஸி.. ப்ரேக்பாஸ்ட் முடிச்சு வரேன்’.

வல்லூரி கேட்டுக்கொண்டார். ஜோசபின் லதா தீதிக்கு பிரியமான தோழியாகி விட்டிருக்கிறாள். நான் வீட்டை விட்டு வெளியேறியதில் நடந்த நல்லவை லிஸ்டில் இதுவும் ஒன்று.

‘லதா, நா சோதரி ஜோசபின்கோசம் காப்பி தீஸ்குனி’ வல்லூரி சொல்ல, லதா தீதி ‘உங்க தங்கச்சி இட்லி சாப்பிட்டாத் தான் காபி’ என்று நிபந்தனை போட்டாள். ஜோசபின் வல்லூரிக்கு தங்கை என்றால் வல்லூரி எனக்கு யார்?

‘வேணாம் தீதி.. தண்ணி மட்டும் கொடுங்க மெர்சி’. ஜோசபின் தட்டிக் கழித்தாள்.

’பரவாயில்லே, இட்லி கொண்டு வாங்க, நான் முழுங்க வைக்கறேன்’ என்றேன். ’இல்லேடா பசியாறிட்டுத் தான் வந்தேன்’ என்றாள் ஜோசபின். தனியாக இருந்தால் கையை முகர்ந்து பார்த்திருப்பேன். எத்தனை முறை பிடித்தாலும் அலுக்காத கை அது.

வல்லூரி பசியாறி முடிக்கும் வரை உள்ளறையில் காத்திருந்தாள் ஜோசபின். நானும் காப்பிக் கோப்பையோடு உள்ளே போனேன். தோளில் மாட்டியிருந்த பெரிய பையில் இருந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

’ப்ளட் பிரஷர் செக் பண்ற கருவிடா’.

‘அது இருக்கட்டும். நாளுக்கு நாள் நீ பேரழகி ஆகற ரகசியம் என்ன’? அவள் காது மடலை வருடினேன். வாயை இறுக்க மூடிக் கண்ணால் சிரித்தாள்.

காபிக் கோப்பையை என் கையிலிருந்து பிடுங்கி கடைசி வாய்க் காபியை ஜோசபின் பருகிய எழிலைப் பார்த்தபடி நின்றேன்.

‘ம ஷெரி’ என்றேன். சரி என்றாள். ’மை ஏஞ்சல்’ என்று திரும்பச் சொன்னேன். சரிடா என்றாள். மறுபடியும் ’என் தேவதையே’ என்றேன்.. போடா என்றாள்.

‘உனக்கும் பிபி செக் பண்ணட்டா.. வெனி.. வெனி.. வா’

‘எனக்கு பிபி செக் பண்ண நீ வேணாம். அதிகமா காட்டும். உன்னைப் பார்த்தாலே எனக்கு பி.பி எகிறுது’

’திரும்ப ஆரம்பிச்சுட்டியா’?

‘முடிச்சாத்தானே ஆரம்பிக்க?

‘உன் கணக்கு படி எப்போ ஸ்டார்ட் பண்ணினே?’ கேள்வி மூடில் ஜோஸ்ஸி.

‘டவுண் ஹால்லே உன்னை மூணு வருஷம் முந்தி பார்த்தபோது ஆரம்பிச்சது.. உசிர் இருக்கற வரை இருக்கும்’ என் குரல் எதிர்பார்க்கதபடி கரகரக்க, ஜோசபின் என்னை அருகில் இழுத்து உச்சந்தலையில் மென்மையாக முத்தமிட்டாள். அவசரமென்றாலும் ஆத்மார்த்தமானது அது.

’போகலாம் வா.. வல்லூரி சார் சாப்பிட்டிருப்பார்’. எழுந்தாள். நெற்றியை மறைத்துப் புரண்டு வழிந்த அவள் தலைமுடியை ஆசையாக ஒதுக்கி விட்டபடி நானும் எழுந்து நின்றேன். காலி கோப்பை எங்கே?

வல்லூரி சாருக்கு சீரியஸா ஒண்ணும் இல்லியே’.

’இருக்காதுன்னு நினைக்கறேன் அடிக்கடி படபடன்னு ஆகிடறாராம்’. ஜோசபின் சொன்னாள்.

யார் சொன்னது? ’பக்கத்து வீட்டுக்காரரா சொல்வார்? தீதிதான்’.

’அவரை நீலப் படம் பார்க்க விடலேன்னா அப்படித்தான் ஆவார்’ என்றேன்.

அலமாரியில் பதித்த முகம் பார்க்கும் கண்ணாடியில் நாங்கள் சேர்ந்து நிற்பதைப் பார்த்தேன். ஒரே உயரம். ஒரே மட்டத்தில் கண்கள். ஒரே உடல்வாகு. நீல உடுப்பு இருவரும். கருப்பும் சிவப்பும இணைவது அழகுதான்.

நான் பிளட்பிரஷர் இன்ஸ்ட்ரூமெண்ட் பெட்டியை எடுத்துக் கொண்டு அவளோடு போனேன்.

’டேபிள்லே வச்சுட்டு நகரு’. ஜோசபின் உத்தரவிட்டாள்.

‘அட நான் சும்மா பார்த்துட்டு நிக்கறேன்.. நீ என்ன சார் கையை டர்ர்ர்ருனு கத்தி வச்சுக் கிழிச்சு ஆபரேஷன் செய்யப் போறியா? இல்லே கண்ணை நோண்டப் போறியா?’

வல்லூரி நடுநடுங்கி என்னையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தார்.

’சரி சும்மா நிக்கறதுக்கு இந்தப் பட்டையை அவர் கையிலே இறுக்கமாக் கட்டு’. அடுத்த கட்டளையிட்டாள் நர்ஸ் அழகி.

அடுத்த ஐந்து நிமிடம் நான் ஜோசபினுடைய உதவியாளனாக இருந்தேன்.

‘உங்க சிஸ்டலிக் 130 டயஸ்டாலிக் 90. நார்மல் 120, 80. உங்களுக்குக் கொஞ்சம் போல அதிகமா இருக்கு ரெண்டும். பரவாயில்லே. உப்பு போட்டுச் சாப்பிடாதீங்க.. எக்சர்ஸைஸ் பண்ணுங்க.. இவனோட கூட கடற்கரையிலே ஓடுங்க.. கூட்டிப் போயேண்டா’.

அவள் டாக்டராகி இருக்கலாம் என்று சொன்னேன். சின்னதாகச் சிரித்தாள்.

‘முடியலேன்னு தான் டாக்டர் வீட்டுக்காரியா இருந்தேன். அதுக்கும் நோ லக்’. ரகசியம் போல் காதில் சொன்னாள். கண் கலங்கி விட்டது. எனக்கும்.

கேட்டிருக்கவே வேணாம். பேச்சை மாற்றுவதற்கான நேரம் இது.

நான் கொண்டு போயிருந்த பழுப்பு கவரில் இருந்து அழைப்பிதழ்களை எடுத்து வெளியே வைத்தேன். சபாவில் நடக்கப் போகும் நாடகத்துக்கு ஐந்து காம்ப்ளிமெண்டரி சீட்டுகள். அப்பா காசு கொடுத்து வாங்கியவை. டிக்கெட் விற்பனை மூலம் சுமார் வசூல் தான் என்பதால் சபா செக்ரட்டரியாக அவர் ஐந்து டிக்கெட் வாங்கினாராம். மற்றவர்களும் அதே படிக்குத் தானாம்.

சினிமா டிக்கட்டா என்று கேட்டார் வல்லூரி பயம் கலந்த ஆர்வத்தோடு. பயத்துக்குக் காரணம் தீதி என்று சொல்லாமலேயே புரிந்தது.

’சினிமா இல்லே சார். நாடக பாஸ். மெட்றாஸில் இருந்து மாதவ தாமோதரன் டீம் நாடகம் போட வர்றாங்க… கலிபோர்னியாவில் கல்யாணம்’

ஊஹும் ஒருத்தரும் ஒரு வார்த்தை சொல்லவில்லை. நாடகம் என்றால் என்ன என்று ஒரு கிளாஸ் எடுக்க வேண்டும். தமிழ் நாடகம் பற்றி அப்புறம்.

வாசலுக்கு ஜோசபினோடு வந்தேன். கீழ் வீடு வழக்கம் போல் பூட்டியிருந்தது. திண்ணையில் உட்கார்ந்தோம்.

டியூட்டி ஆஃப் தானே?

’இல்லேடா. லீவு எடுத்திருக்கேன்.. லீவு வேஸ்டாத்தானே போகுது. அதான்’.

’சொல்லியிருந்தா நான் அங்கே வந்திருப்பேனே.. சினிமா போயிருக்கலாம்.. ஊசுட்டேரியிலே இன்னொரு தடவை போட்டிங் போயிருக்கலாம்..’.

’அங்கே இந்த வருஷம் தண்ணியே இல்லையாம்.. நீ விழுந்த அப்புறம் வரண்டு போச்சு போல’.

’கிண்டலா? உன்னைக் கூட்டிப் போய் பிடிச்சுத் தள்ளிடுவேன்’ என்று மிரட்டினேன்.

’தள்ளு, ஒரேயடியாப் போய்ச் சேர்ந்துடறேன்’. பதிலுக்கு மிரட்டினாள் அவள்.

’வீட்டுலே கெஸ்ட் வந்தாங்க’ என்றாள் திடீரென்று,

‘காரைக்கால் கோஷ்டியா’? அவசரமாக விசாரித்தேன். ஹென்றி போய் வேறே இரண்டாம் ஹென்றியோ அல்லது நாலாம் ஜேம்ஸோ ஜோசபினுக்கு மோதிரம் மாட்டி விட்டுக் கல்யாணம் செய்து கொள்ள வந்திருக்கலாம்.

ஒரு வினாடி மனதில் மேகலா வந்தாள்.

’நீயும் அவளை கல்யாணம் பண்ணிக்க தைரியம் இல்லே. அவளுக்கும் இது நட்பாத்தான் தோணறது. அவ நல்ல ஒரு ஹஸ்பெண்டை தேடிக்கறதிலே என்ன உனக்கு கஷ்டம்’? மேகலா கேட்டாள்.

’எனக்கு ஒரு கஷ்டமும் இல்லே. ஆனா அவளோட முதல் கல்யாணம் மாதிரி இதுவும் கருத்த அத்தியாயமாப் போயிடக் கூடாது. வாழ்க்கையிலே ஒண்ணு அந்த மாதிரிப் போனா அபூர்வம். அடுத்ததும் போனா, அறியாமை’.

’வக்கணையாப் பேசு. அது மட்டும் உனக்கு தானே வரும்’.

மேகலா உள்ளே போய் விட்டாள்.

’என்னடா திடீர்னு சைலண்ட் ஆகிட்டே’?

சைக்கிளில் உட்கார்ந்தபடி கேட்டாள் ஜோசபின். ஒண்ணுமில்லே என்றபடி பின் தொடர்ந்தேன். என்ன பேசிக் கொண்டிருந்தோம்?

’கெஸ்ட் வந்திருக்காங்கன்னு சொன்னியே யாரு’? பெடல் மிதித்தபடி பேச்சைத் தொடர்ந்தேன். எங்கே போகணும் என்று கேட்கவில்லை. தெரியும்.

’அமேலி டாடியும் மம்மியும் வந்தாங்கடா. லீவிலே வந்திருக்காங்க. அவளை கூட்டிப் போய் ஒரு வாரம் அவங்க கூட ஹோட்டல்லே வச்சுக்கறாங்களாம்’.

அமேலி உடனே கிளம்பி போயிட்டாளா என்று கேட்டேன். அப்பா அப்பாதான். ஆனால் அவர் கல்யாணம் செய்து கூட்டி வந்த ரெண்டாம் அம்மா? சரிப்பட்டு வரவில்லை என்று சொல்லியிருக்கிறாள். ரெண்டு நாள் நாங்கள், என்ன வெட்கம், நாங்கள் குடும்பம் நடத்தியபோது இதெல்லாம் அவ்வப்போது பேசவும் நேரம் இருந்தது அதிசயம் தான்,

’அமேலிக்கு போகறதுக்கு இஷ்டமே இல்லே. அவ அப்பா கிட்டே ரொம்ப பிரியம். அவருக்கும் இவளிடம் .. எல்லா அப்பாவும் அப்படித்தாண்டா. நாளைக்கே உனக்கு மகள் பிறந்தாலும் அதான் நடக்கும்’. ஜோசபின் சொன்னாள்.

கடற்கரையில் வண்டியை நிறுத்தி அவளைப் பார்த்தேன். மனம் பொங்கி வந்தது.

’எல்லாத்தையும் விட்டுட்டு வந்துடறேன் ஜோஸ்ஸிம்மா . ஏற்கனவே வந்தேன். இப்போ உருப்படியா ஒரு நோக்கம் .. நாம இனிமேல் ஒண்ணா சேர்ந்து இருப்போம். எப்படி அந்த லைஃப் இருந்தாலும் ஏத்துக்கத் தயார். நமக்கு ஒரே வயசு இல்லே.. ஆனா ஒரே மனசு. என்னோடு வர நீ ரெடியா’?

’போடா சும்மா ஜோக் அடிக்காதே. நடக்கற காரியம் பேசு’. ஜோசபின் பேச்சைக் கத்தரித்து விட்டாள்.

சுங்கச் சாவடிப் பக்கம் அலை அதிகமாக இருந்ததால் மேற்கே நடந்து கைப்பிடிச் சுவரை ஒட்டி உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். கடல் பாலத்துக்கு அருகே இருந்த பாறைக் கூட்டம் அந்த இடம்.

’அமேலி வீட்டுலே உன்னையும் அவளையும் பற்றி அரசல் புரசலா தெரிஞ்சிருக்கு போலே இருக்கு’. ஜோசபின் மெதுவாகச் சொன்னாள்.

‘என்னன்னு தெரியும்’?

‘நீங்க குடும்பம் நடத்தினது தெரியாதுன்னு நினைக்கறேன். ஆனா ஒருத்தர் மேலே ஒருத்தருக்கு ஆழமான பிரியம்னு நினைக்கறாங்க. சரிதானே’?

நான் மௌனமாக இருந்தேன். ஆமா அல்லது இல்லை எதையும் சொல்ல மனசு வரவில்லை. அந்த பந்தம் தொடர வேண்டாம் என்று அமேலியும் நானும் நினைப்பதை ஜோசபினுக்குச் சொன்னேன்.

‘நாங்க செஞ்சது பாவம்னா, இனியும் சேர்ந்திருக்கறது அதை விட கொடுமை. அன்பும் பரிவும் அடித்தளம் இல்லை அந்த உறவுக்கு, உடல் பசி மட்டும்தான்’.

ஜோசபின் ஒரு வினாடியில் பேச்சை மாற்றினாள். அடுத்த மாதம் கிறிஸ்துமஸுக்கு ஊருக்குப் போகலாமா அல்லது இங்கேயே கொண்டாடலாமா என்று யோசிப்பதாகச் சொன்னாள்.

ஊரெல்லாம் போகக் கூடாது என்று கண்டிப்பாகத் தெரிவித்து அவள் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டேன்.

’விடுடா’ என்றாள் வெடுக்கென்று. ‘மாட்டேன்’ என்றேன். ’

‘என் கிட்டே இதான் உன்னோட அத்து’ என்று தீர்மானமாகச் சொன்னாள். .

’இதுவாவது அனுமதியேன் ப்ளீஸ்’. அவள் புறங்கையில் இதழ் பதித்தபடி சொன்னேன். இன்னொரு தடவை பதிக்க ஆசை எழுந்தது. உடனே செய்தேன்.

’இன்னும் நாலு வருடம் கழிச்சு பிறந்திருக்கலாம்டா நான். இல்லே நீ முந்தி வந்திருக்கலாம். அப்புறம் ரெண்டு பேரும் ஒரே மதமா இருந்திருக்கலாம்’.

வெகு நேரம் அருகருகே இருந்து ஒன்றுமே பேசாமல் கடல் பாலத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

’கடல் பாலம்னு மலையாளப் படம் வந்திருக்கு தெரியுமா’? நான் கேட்டேன்.

‘எனக்கென்ன தெரியும். சொல்லு தெரிஞ்சுக்கறேன்’.

சுருக்கமாகச் சினிமாக் கதை சொன்னேன். அடுத்து வல்லூரி சார் செக்ஸ் படம் பார்க்க வரிசையில் நின்றது நினைவு வந்து அதையும் சொன்னேன்.

அதான் அவருக்கு பி. பி அதிகமாயிடுத்தா? ஜோசபின் கேட்டபடி சிரித்தாள். மனம் லேசாகி இருந்தது. ரெண்டு பேருக்கும்.

’காபி ஹவுஸ் வந்துட்டுப் போயேன்’.. ஜோசபினிடம் கோரிக்கை விடுத்தேன்.

’இல்லேடா. சான் பா கோவில் ஃபாதரைப் பாக்கணும். என்னை கிறிஸ்துமஸ் காயர்லே பாடச் சொல்றாங்க. பாடி ரொம்ப நாள் ஆச்சுன்னா விட மாட்டேங்கறாங்க’ என்றாள்.

’இங்கே தான் உனக்கு கிறிஸ்மஸ். அப்படித் தானே’? ஆறுதலோடு கேட்டேன்.

’என்னோட பாஸ் விடமாட்டேங்கறார் எப்படி போறதாம்’?. என் முகவாயை கையில் ஏந்திப் பிரியத்தோடு பார்த்தாள் ஜோசபின். பிரிந்தோம்.

காபி ஹவுசில் தனியாக நுழைந்தேன்.

என் பெயரை மிக மெதுவாகச் சொல்லி அழைக்கும் குரல் கேட்டது.

எனக்குத் தெரியும். இந்த அழைப்பு என்னை உள்வாங்கிக் கரைத்து ரசவாதம் செய்தது. பௌருஷம் ஆர்ந்த ஆணாக என்னை எனக்கு அறிமுகம் செய்தது.

அமேலி தான் கூப்பிடுகிறாள். துணையைப் பிரிந்த பெண் பறவையாக அகவும் குரல். இறகு முதிரும் முன் சேர்ந்து பறக்க அவசரப்பட்ட பறவைகள் நாங்கள். திரும்பினேன். கை காட்டினாள் அமேலி.

அவள் என் கண்களையும் நான் அவள் விழிகளையும் தவிர்க்க, அமேலியின் கூட அமர்ந்திருந்தவர்களை நோக்கினேன். ஜோசபின் சொன்னது நினைவு வந்தது. அப்பா மனதுக்கு இதமான பிம்பம் எழுப்ப, அம்மா அப்படி இல்லை.

’ஜோசபின் சொன்னாங்க.. உன் டாடி மம்மி வந்திருக்காங்கன்னு’.

நான் கை குலுக்க கை நீட்ட, அந்த அம்மா சொன்னாள் – பெத்த அம்மா இல்லே. நான் அமேலிக்கு வளர்ப்புத் தாய் தான். சித்தி..’.

நான் கேட்டேனா என்று தொனிக்க அவளை நோக்க, அமேலியின் அப்பா கை நீட்டி ‘நன்றி எல்லாத்துக்கும்’ என்று குரலில் போலித்தனம் எதுவும் தொனிக்காமல் சொன்னார். அவரைப் பிடித்துப் போனது.

’நான் நான்’ ஏனோ முடிக்க முடியாமல் தடுமாறினேன். அமேலியின் அம்மா என்னைப் பார்த்த பார்வையில் விரோதம் தெரியவில்லை. ஆனால், நீ யார் என்று எனக்கு ரொம்ப நல்லாத் தெரியுமே என்கிற இளக்காரம் உண்டு.

நீ நீ தான். அமேலி அமேலிதான். அமி போஷ்.. ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்னு கேட்டேன்.. எவ்வளவு க்ளோஸ்னு தெரியாது ஒண்ணுக்குள்ளே ஒண்ணா?’.

ப்ளடி பிட்ச் என்று அவளை மனதில் திட்டி முகம் நிறைய செயற்கையாகச் சிரித்தேன். அமேலியின் கண்கள் என்னிடம் தொடர்ந்து மன்னிப்பு கேட்டபடி இருந்தன. அவற்றின் மொழியை நான் அறிவேன். இருட்டிலும் அவை என்னோடு பேசியவை. அருகே இல்லாமலும் இணை கலக்க இழுத்தவை.

காபி கொண்டு வந்து வைத்தார் வெயிட்டர் சவுரிராயன்.

’இதென்ன யூனிபார்ம் துவைக்கவே மாட்டீங்களா? ஒரே அழுக்கா நிக்கறீங்க’?

சவுரிராயன், அமேலி அம்மா கேட்டதில் கூனிக் குறுகிப் போனார். அவர் உடுப்பு சுத்தம தான். அவரைக் குத்தி அவமானப்படுத்துவதில் இந்த பாரிஸ் நகர நாய்க்கு என்ன இன்பம்

’அம்மா, நான் பேசக் கூடாது. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து கபே கொடுக்கத் தான் சம்பளம். சந்தோஷமா சாப்பிடுங்க.. பொழுது ந்லலபடி இருக்கட்டும்’

அந்த முதியவர் வெறும் தட்டோடு உள்ளே போக, அமேலியின் அப்பா வாயே திறக்காமல் தலை குனிந்து கபே அருந்திக் கொண்டிருப்பது என்னவோ செய்தது. அவர் ஒரு தடவை உருட்டி விழித்தால் இவள் வழிக்கு வ்ந்து விடுவாள். செய்கிறவராகத் தெரியவில்லை..

’தம்பி அமேலியை உனக்கு நாளைக்கே ரிஜிஸ்தர் மேரேஜ் செஞ்சு தரேன். க்ளோஸ் ப்ரண்ட்ங்கறதை விட கௌரவமான உறவு. அவ உன்னோட அமேலி ஆகணும்னா ஒரே ஒரு நிபந்தனை தான்.. நீ எங்களோட மனுசன் ஆகணும். .. புரியலியா’?

அவள் குமட்டும் வாடையோடு ஏதோ பெர்ப்யூம் நனைந்த அழுக்குப் பழுப்புக் கைக்குட்டையை எடுத்து என் நெற்றியை அழுந்தத் துடைத்தாள். என்னையே உற்றுப் பார்த்தபடி நிதானமாக தன் கழுத்து சங்கிலியில் தொங்கிக் கிடந்த தங்கச் சிலுவையை உயர்த்திக் காட்டினாள்.

’ அழிச்சிட்டு வா.. அள்ளிக்கிட்டு போ.. அமேலியை..’.

’அவன் எனக்காக கிறிஸ்துவன் ஆகணும்னு கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு’? அமேலி பொங்கினாள். சாது மிரளும் நேரம் இது.

அப்பா ரொம்பக் காரியமாக ரெஸ்ட் ரூம் போனார். அம்மா ஆக்கிரமித்துக் கொணடாள். அமேலியை விட்டு விலகி நிற்க வைத்துச் சொன்னாள் –

‘தம்பி நீ மன்மதனா இருந்தாலும் சரி.. வரைமுறை வேணும் எல்லாத்துக்கும்.. எங்க் வீட்டுப் பொண்ணை கல்யாணம் கட்டிக்கிட்டு ஜோரா எஞ்சாய் பண்ணு.. அது இல்லாம அவளை உன்னோட மலையாள மாந்திரீகம் போட்டு மயக்கி பலான விஷயம் எல்லாம் கச்சிதமா முடிச்சிருப்பே.. தெரியும்.. மன்னிச்சுடறேன்.. எல்லாத்தையும்.. தலை முழுகிட்டு வா.. வேதத்திலே ஏத்தி விடறேன்.. படிப்பு முடிஞ்சதும் பாரீஸ் கூட்டிப் போயிடறேன் .. ரெண்டு பேருக்கும் நல்ல எதிர்காலம் காத்திட்டிருக்கு.. வா’

ரெஸ்ட் ரூம் வாசலில் இருந்து அமேலி அப்பா கை காட்டியபடி இருந்தார். நான் கவனித்து விட்டுச் சொன்னேன்.

’அவர் மாத்திரை சாப்பிடணும்.. இல்லேன்னா விழுந்துடுவார்’.

அமேலி அம்மா நகர, அமேலி அவசரமாக என்னிடம் சொன்னாள் –

’நீ இந்தப் பொம்பளையோட இனியும் பேச வேணாம்.. எக்செண்ட்ரிக்.. கல்யாணம், கன்வெர்ஷன் ஒண்ணும் வேணாம்.. நாம படிக்கற நேரம் இது.. இவ சொல்றதைக் கேட்டு சர்ச்சுலே போய் நிக்காதே.. பாரீஸ் கூட்டிப் போக மாட்டா.. பத்து கிலோமீட்டர் தள்ளி ஹைவேயிலே இறக்கிட்டுப் போயிடுவா’.

அவள் கண்களில் தெரிந்த கோபம் என்னையும் தகித்தது.

’அமேலி ஒ.கே உன்னை லாட்ஜ்லே வந்து பார்க்கறேன்.. எங்கே இருக்கீங்க’?

’நோ யா.. பாகூர்லே யாரோ சொந்தக்காரங்களை பார்க்கணுமாம் சித்திக்கு. டாக்சியிலே போறோம் இபபடியே.. வண்டிக்குத்தான் காத்திருக்கோம்’.

வாசலில் ஹாரன் அடிக்கும் அம்பாசிடர் டாக்சி அவளுக்குத் தான் போல.

’நாளைக்கு சாயந்திரம் அவசியம் வா அமேலி.. இது பேமிலி பாஸ்’.

கலிபோர்னியாவில் கல்யாணம் நுழைவு பாஸ் அட்டையை அவள் பெயர் எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வந்தேன். அமேலியை அந்த ராட்சசியிடம் இருந்து யார் காப்பாற்றுவது? வேறே வழியே இல்லை. பொறுத்தது போதும் என்று இன்னும் உறுதியாகப் பொங்கி எழவேணும் அமேலி. இழக்க அவளுக்கு ஏதுமில்லை. மேல் படிப்புக்குத் தனியே பணம் சேர்த்து வைத்த நல்ல காரியத்துக்காக அவள் அப்பாவுக்கு நன்றி சொல்லலாம். அதற்கு மட்டும்.

வெய்யிலே தட்டுப்படாத பகல். கடற்கரை ஓரமாகத் தனியாக சைக்கிள் ஓட்டிப் போவது மனசுக்கு நெருக்கமான ஜோசபினோடு உட்கார்ந்து ஒன்றுமே பேசாமல் நேரம் போக்குவது போல இதமாக இருந்தது. ஒன்றுமே நினைக்காமல் மனம் வெறுமையாகக் கிடந்தது. முன்னே விரியும் பாதையில் கண் வைத்துப் பார்த்தபடி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அது தவிர இந்தக் கணத்தில் செய்ய ஏதுமில்லை.

கயல் வீட்டைக் கடந்து ஒரு கிலோ மீட்டர் போனதும்தான் நினைவு வந்தது. திரும்பி வந்து காம்பவுண்ட் உள்ளே நுழையும் போது கயல் அம்மா கேட்டாள்

’ஏம்பா. அப்பவே நீ வர்றதைப் பார்த்தேன்.. நிக்காம நேரே பார்த்துக் கிட்டு.. வண்டி ஓட்டிட்டுப் போனே.. என்ன விஷயம்’?

மறந்து போச்சு என்றேன்.

’கயல் எங்கே ஆண்ட்டீ’?

உள்ளே வெறுமையாகத் தெரிந்த ஹாலைப் பார்த்தபடி கேட்டேன். இடது பக்கம் பெட்ரூம், நடுவே பாத்ரூம் வலது புறம் சமையல்கட்டு என்று டிராமாவுக்கு செட் போட்டது போல் முழு வீடு தெரிந்த்து.

நான் பார்த்திருக்க, ஒரு மின்னல் வெட்டிக் கூடத்துக்கு வலது பக்கம் இருந்து புறப்பட்டு, என்னை நோக்கி வந்தது திசைமாறி அது பெட்ரூமுக்குள் நுழைந்தது. சமிதிப் பெண் போல் கருப்பு ஷார்ட்ஸ், டீஷர்ட் அணிந்த கயல்.

சரியான ஷட்டர் ஸ்பீடில் சரியான நேரத்தில் சரியான ஒளியமைப்பில் சரியான கோணத்தில் சரியானவர்களை விசை அழுத்தி, காமிரா கலை மேதைகள் கார்டியர் ப்ரஸ்ஸெனோ, ஜேன் பௌனோ எடுத்த நேர்த்தியான புகைப்படம் போல் கயலை அப்படியே உள்வாங்கி மனதில் அடைத்தேன்.

பத்து நிமிடத்தில் கருப்பு சூடிதாரில் வந்தவளிடம் மதிமுகத்தம்மாள் சொன்னாள் – ’இந்தப் பிள்ளைக்கு வீடே மறந்துச்சாமே.. உன்னையும் என்னையும் எங்கே ஞாபகம் வச்சுக்க’?

என் முகத்தைப் பார்த்தாள். ’என்னாச்சுப்பா, பேயடிச்ச மாதிரி ஆயிட்டே’ என்று பயந்து போய்க் கேட்டாள்.

’மோகினிப் பிசாசு அடிச்சுடுத்தாம் அம்மா’ என்றாள் கயல். என்ன கோராமையோ என்று அலுத்துக் கொண்டு அம்மா உள்ளே போக, அவள் தலை மறைந்ததும், கையைக் குவித்து என் முதுகில் வைத்து ஓங்கிக் குத்தினாள் ரிவால்வர் ரீட்டா ஜோதிலட்சுமி மாதிரி.

’ பார்த்தே இல்லே .. உண்மையைச் சொல்லு’. உருட்டி விழித்தாள்.

என்னத்தை?

என் காலை..

கால்லே என்ன விசேஷம்? மிதந்துக்கிட்டு வந்தியா யட்சி மாதிரி?

கால்னா கால் இல்லே..

அப்ப வேறே என்ன

’டேய் என் தொடையைப் பார்த்தே இல்லே.. ஷார்ட்ஸ் கொஞ்சம் டைட்டா வேறே இருந்துச்சு.. பின்னாலேயும் .. அப்புறம் டீஷர்ட் இறுக்கி யூ நோ வேர்’

பார்த்த எதுவும் பழுதில்லை, அம்சமா இருந்தது என்றேன் அவள் திரும்பக் கையை இறுக்க மூடி என் முதுகுப் பக்கம் கோபத்தோடு நகர்த்தினாள். முதுகெலும்பு சிலிர்த்தது. இப்படி காட்டடி அடித்து இடும்பி பீமனை லவ் பண்ணிய மாதிரி காதலிக்கும் பெண் இவளாக மட்டும் தான் இருக்கும்.

’உள்ளே வந்து உட்காரேன்’. சட்டென்று அவள் குரல் மாறியது. எனக்கு மரியாதை எல்லாம் தர வேணாம் என்றேன்.. பின்னால் ஸ்கூட்டர் சத்தம். பார்வேந்தனார் சிற்றுந்தில் இருந்து இறங்கினார்.

அங்கிள் நீங்க ஸ்கூட்டர் ஓட்டறது பந்தாவா இருக்கு. ஆனா ஏன் சீட்டில் ஓரமா, இன்னும் யாரோ வர வேண்டியிருக்குங்கற மாதிரி இடம் விட்டு உக்காநதிருக்ருக்கீங்க? ஆண்ட்டியோட ஜாயிண்ட் ட்ரைவ் திட்டமா?

’பகடி செய்கிறாய் தானே தம்பி? என் நண்பர் ஒருவரும் இதுதான் கூறினார். நிலை பெறலைத் தேடி.. ஈக்குலிபிரியம் என்று அந்நிய மொழியில் குறிப்பிடுவார்களே.. அதைத் தேடி உடலே ஓரமாகவோ நேர் முன்போ பின்போ உந்துவண்டி ஓட்டும் போது அமர்ந்து கொள்கிறது போல. யார் மேலும் மோதாத வரை நான் தரையில் வீழாத வரை இதில் இடர் ஒன்றும் எவர்க்கும் இல்லை’.

அவர் வாக்குகளைச் செவ்வனே செவி மடுத்து நோக்க, கயல் ஷார்ட்ஸை கொடியில் உலர்த்திக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. இப்போதைக்கு அதையாவது அருகில் போய்ப் பார்க்கலாம் என்று உள்ளே போக யத்தனித்த போது நாடக அழைப்பிதழ் நினைவு வந்தது. அவர்க்கீந்தேன்.

’கலிபோர்னியாவில் கல்யாணம். நல்ல பெயர் தான். இன்னும் நல்ல தமிழில் திரை கடந்த திருமணம் என வைத்திருக்கலாமே’..

’வச்சிருக்கலாம் அங்கிள். அந்த டீம் கிட்டே சொல்றேன்.. இது உங்களுக்கும் ஆண்ட்டிக்கும். கயலை நான் கூட்டிப் போறேன். கம்பெனியா இருக்கும்’.

’ஏ அதெல்லாம் வேணாம்பா. கம்பெனி தர்றது எல்லாம் நம்ம சர்க்கிள்லே சரிப்படாது.. கேக்க நல்லா இல்லே.. உனக்கு என்ன வேணும்.. இந்தப் பொண்ணை அங்கே கூட்டிவரேன்.. பேசிக்க.. எனக்கு விரோதம் இல்லே..’.

பார்வேந்தனார் உலகையே ஆசி பொழிந்து நல்வாழ்வு காண வாழ்த்தும் பின்னங்கழுத்து வரை விரிந்த புன்னகையோடு சொல்ல மனசுக்குள் தெற்றுப்பல் சிரிப்போடு மேகலா ஒயிலாக வந்து நின்றாள்.

’அசமஞ்சம் அம்மாஞ்சி. உங்கப்பா எங்க வீட்டுலே கயல் பத்தி சொன்னாரே அதை இவர் கிட்டே சொல்லு] என்றாள் மேகலா. எதை என்று டியூப் லைட்டாகக் கேட்டேன். ’அட அறிவுக் கொழுந்தே.. நான் சொன்னேனே நினைவில்லையா.. இவர் உங்கப்பா கிட்டே இன்னொரு தடவை கல்யாண ஆலோசனையோடு வந்தா, எஸ்ஸுன்னு சொல்வேன்னாரே… அதைத்தான்’.

மேகலாவுக்கு நன்றி சொன்னேன். ’இனிமே இப்படி அடிக்கடி வர முடியாது.. இன்னொருத்தர் சம்சாரம் நான்.. சூட்டிகையா இருந்து ஜெயிச்சுவா’ என்றாள்.

மேகலா தலை நிறைய வைத்த பிச்சிபூ மணத்தோடு வாழ்த்திப் போக பார்வேந்தரிடம் சொல்ல வேண்டியதைச் சொல்லி மகிழ்வித்து விட்டு நானும் கிளம்பினேன். நாடக கோஷ்டி மதியம் வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய உதவி செய்யச் சொல்லி அப்பா கேட்டிருந்தார்.

விக்டோரியா லாட்ஜ் வாசலில் ஃப்ரான்ஸ்வாவும் அந்த்வானும் காத்திருந்தார்கள். ’மச்சான் நீ ஒரு மணிக்கு வரச் சொல்லிட்டு உங்க ஆள் கிட்டே கடலை போடப் போயிட்டே.. பார் மணி ரெண்டு.’ ப்ரான்ஸ்வா கைக் கடியாரத்தை காட்டினான். பாட்டியம்மா ஈசல் அரிசி மாதிரி அன்போடு கொடுத்த எச்.எம்.டி வாட்ச் அது. அதைக் காட்ட ஒரு வாய்ப்பையும் தவற விடுவதில்லை ப்ரான்ஸ்வா.

மேலே போனோம். ஐந்து அறைகளில் நாடகக் கோஷ்டி வந்து தங்கி இருந்தார்கள். மாதவ தாமோதரனிடம் சுருக்கமாக அறிமுகப் படுத்திக் கொண்டு சமூக மரியாதை விஷயங்களாகப் பயணம் எப்படி இருந்தது, சாப்பிட்டீங்களா, ஹால் போய் பாக்கணுமா.. லைட்டா டிபன் காபி சொல்லட்டா…. ஏதாவ்து உடனே நாங்க செய்யணுமா என்று கேட்டோம்.

நாடக் கோஷ்டி பதில்கள் மொத்தத்தில் இப்படி இருந்தன –

ஆறு மணி நேரம் பயணம்.. திண்டிவனம், விழுப்புரம், கடலூர் வழியா வந்து சேர்ந்தாச்சு.. ரோடு மோசம் .. கார் எடுத்து வந்திருக்கலாம்; வழியிலே செங்கல்பட்டுலே ஆர்ய பவான்லே சாப்பிட்டோம்.. அரிசி வேகவே இல்லே.. சாம்பார்லே நிலக்கடலையை பொழிஞ்சு வச்சிருந்தான்.. நம்மளவா சாம்பாரே இல்லே.; மெட்றாஸ் சபா மாதிரி இங்கே அமைப்பெல்லாம் கிடையாது போல.. ஹால்லே போய்ப் பார்த்தும் சவுண்ட், லைட்டிங்னு பெரிசா என்ன இனிமே சொல்லி நடக்கப் போறது.. ஸ்டேஜ் எப்படி இருந்தாலும் டயலாக்லே நம்ம டிராமா நிக்கும்.. சபா ஆடியன்ஸுக்கு லட்டு மாதிரி இஷ்டம்.. இங்கே சப் அர்பன்லே ரசனை இருந்தா இங்கேயும் பிச்சுண்டு போகும் .. இல்லே பகவான் கீதையிலே சொன்ன மாதிரி தான்..; பக்கோடா இங்கே பேமஸோ.. மெட்றாஸ் டு பாண்டிச்சேரி படத்துலே ஓ ஏ கே தேவர் கிட்டே பக்கோடா காதர் கேட்டு நச்சரிப்பாரே.. பக்கோடா இல்லாட்ட போண்டா, பில்டர் காபி இல்லாட்ட இன்ஸ்டண்ட் காபி… எதோ ஒண்ணு.. படிக்கறேளா.. காலேஜா.. இவாளும் தானே … பிரஞ்சுலே தான் பேசிப்பேளா யிருக்கும்… பொண் கொழந்தைகளும் உண்டோ.. அவாளும் பிரஞ்சா..பேஷ்; உடனே செய்யறதுன்னா.. நாலு நரிக்குறவாஸ், பெட்ரோமாக்ஸ் லைட், ஜான்வாச கார் கேட்டிருந்தோம்.. ஏற்பாடு ஆயிடுத்தான்னு கேளுங்கோ .. அப்புறம் எங்க லேடி ஆர்ட்டிஸ்ட் ரெண்டு பேர் இன்னும் ஒரு மணி நேரத்துலே வந்துடுவா.. பஸ் ஸ்டாணட்லே கூட்டி வரக் கார் அனுப்பறேன்னா.. ரெடியா பாருங்கோ..

நாடகமா கல்யாணமே நடத்தப் போறாங்களா? ப்ரான்ஸ்வா பிரமித்துப் போய்க் கேட்டான். மெட்றாஸ் டிராமா இப்படித்தான் என்று எல்லாம் தெரிந்தவனாகச் சொல்ல அந்த்வான் ஆதரித்தான்.

’சாஸ்திரி சீனை ஒத்திகை பார்த்துடலாமா’?

மாதவ தாமோதரன் அழைத்தார். ஒரே சிகரெட்டை ஆளுக்கு ஒரு தம் என்று மாறி மாறி ஊதிய லாரல் ஹார்டி ஜோடி சிகரெட்டை அணைத்துவிட்டு வந்து நின்று மாங்கல்யம் தந்துனானே என்று ஸ்பஷ்டமாக மநதிரம் சொல்ல ஆரம்பிக்க, நாங்கள் வெளியே வ்நதோம்.

அடுத்த பத்து நிமிடத்தில் அவர்கள் கோரிக்கை எல்லாம் நல்ல விதமாக நிறைவேறியது. இரண்டு நரிக்குறவக் குடும்பங்கள் ஒக்கலில் குழந்தையோடு இருக்கும் பெண்களும், அழுக்கு அரையாடை உடுத்த இரண்டு ஆண்களுமாக விக்டோரியா லாட்ஜ் வாசலில் நின்றதைப் பார்த்தபடி வைத்தேயைக் கூப்பிடக் கிளம்பினேன். லச்சு வரப் போவதில்லை என்று சொல்லி விட்டான். ஃபுட்பால் மேட்ச்னா சொல்லு வரேன் என்றான். இவனுக்காக நான் ப்ரஸீல் போய்ப் பந்தும் கையுமாகப் பிலேயைக் கூட்டி வர முடியுமா என்ன?

சாய்ந்திரம் ஐந்து மணிக்குக் கிளம்பும் முன்னால் கயலுக்கு டெலிபோன் செய்தேன்.

வந்திட்டிருக்கேண்டா.

ஷார்ட்ஸ் போட்டுட்டு வாயேன் கயல்.. வாஷ் பண்ணிப் போட்டது காஞ்சிருக்குமே?

அவ்வளவு காஞ்சு கிடக்கியா என்ன?

பின்னே இல்லியா?

மத்தவங்களும் பார்த்தா பரவாயில்லேயா?

நோ நோ.. எனக்கு மட்டும் தான் தரிச..

டேய் .. இந்த விஷயத்துக்கு புனிதமான வார்த்தையை யூஸ் பண்ணாதே.. நேர்லே வந்து அறைவேன்.. எகிறினாள் கயல்.

நான் ஒரு முத்தத்தை அச்சாரமாக அனுப்ப அந்தப் பக்கம் வேறே குரல் –’தம்பி முதல் வரிசை இல்லேன்னா ரெண்டாவதுலே கர்ச்சீப் போட்டுடுங்க.. பாட்டெல்லாம் நல்லா காதிலே விழணும்..’

’மன்னிச்சுக்குங்க ஆண்ட்டி… சாரி.. கயல்னு .. டிராமா ஒத்திகை’..

நடுங்கிப் போய் உளறினேன்.

‘நல்லா வேணும் உனக்கு.. நான் தான் குரலை மாத்திப் பேசினேன்’. ஓங்கிச் சிரித்து ஃபோனை வைத்தது கயல் பிசாசு.

ஐந்தரை மணிக்கு கல்யாண மண்டபம் களை கட்டி இருந்தது. ஒலிவாங்கிகளைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடுகிறவரும், தலையில் வைக்கும் டோப்பா முடி விக்கோடு வாசலில் நிற்பவரும், வாயில் டெஸ்டரைக்க் கௌவிக்கொண்டு சுற்றி வரும் எலக்ட்ரீசியனும், அப்பா மற்றும் சபா நிர்வாகிகள் உரத்த குரலில் பேசியபடி அங்கேயும் இங்கேயும் கூட்டமாக வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு நகர்வதுமாக க்ல்யாணக் களை. வாசலில் குந்தி இருந்த இரண்டு நரிக்குறவக் குடும்பங்கள் இதையெல்லாம் கவனியாமல் அவர்களுக்குள் பேசிச் சிரித்தபடி இருந்தார்கள்.

ஒரு டாக்சி வந்து நின்றது. பின் கதவை வேகமாகத் திறந்து அமேலி இறங்கினாள். கார் நகர்ந்தது. அமேலி என்னை நோக்கி வர, நான் நின்றேன்.

நகர்ந்த காரும் நிற்க இந்தத் தடவை அமேலியின் சித்தி இறங்கினாள். காருக்குள் நிஷ்டையில் இருக்கிறது போல் நேரே பார்த்து அமர்ந்திருந்த அமேலியின் அப்பா ஒரு வினாடி என்னைப் பார்த்து விட்டு நேரானார்.

’உன்னைத் தான்’. கூப்பிட்டபடி அந்த பிரஞ்சு அம்மா என் அருகே வந்தாள்.

‘பொண்ணை விட்டுட்டுப் போறேன்.. நாடகம் பாக்கணும்னா.. அதான்.. நீ நடுவிலே எங்கேயாவது கையைப் பிடிச்சு கூட்டிப் போய் இது வேணாம் .. ’

அவள் இடது கைக்குள் வலது கை வைத்துத் திருகியபடி கெட்ட வார்த்தை சொல்லி இளித்தாள். அறையலாம் போல் வந்தது. அவள் மேல் தப்பு இல்லை. யாரும் சொல்லாமலேயே அதைச் செய்தவன் நான்.

அமேலி திரும்பிப் போகிற காரை வெறித்தபடி சொன்னாள் – இனி நான் இவளோடு இருக்கறதிலே அர்த்தமில்லே.. ஜோசபின் வீட்டுக்கே போயிடறேன்.

’அமீ, ஜோசபின் இங்கே தான் வந்துட்டிருக்கா.. டிராமா முடிஞ்சு போ’..

’மறந்தும் உங்க வீட்டுக்கு வான்னு சொல்ல மாட்டியே.. நல்லா இரு’.

உதட்டைக் கடித்து அழுகையை அடக்கி நின்றாள் அமேலி. எத்தனை தடவை சொல்வது. அவள் மனதைக் கலைத்து உடம்பையும் உபயோகித்துக் கொண்ட தப்பு நான் தான் செய்தது. அவள் மட்டும் ஜாக்கிரதையாக தடுப்பு உறை எடுத்து வந்திருக்காவிட்டால் கருவைக் கலைக்கவும் இப்போது அலைந்து கொண்டிருப்போம்.

’சாரி அமேலி.. என் தப்பு தான்..’. எத்தனையாவது முறையாகவோ சொன்னேன். இதையே ஆயுசுக்கும் சொல்லிட்டி இரு என்றாள் அமேலி.

’வா, உள்ளே நல்ல சீட்டா காட்டறேன்’.

’எனக்கே தெரியும் எப்படி உள்ளே போறதுன்னு.. நீ வர வேணாம்’.

அவள் கையை இறுக பற்றி மெல்ல அழைத்துப் போனேன். ஒன்றும் பேசாமல் வந்தாள். மேடைக்கு எதிரே நல்ல சீட்டாகப் பார்த்து அமர்த்தி விட்டு வர, கல்யாண ஊர்வலக் கார் மண்டப வாசலில் வந்து நின்றது. பின்னால் ராவுத்தர் கடை டெம்போ வந்து இறக்கி வைத்த பெட்ரோமாக்ஸ் விளக்குகளில் எண்ணெய் நிறைத்ததை பார்த்தேன்.

ஜோசபின் தனியாக வந்தாள். உள்ளே அமீலி இருப்பதைச் சொன்னேன். அவள் சொன்னதை எல்லாம் அவசரமாக ஒப்பித்தேன்.

’நீ செஞ்ச காரியம் இருக்கே.. அவளும் கூட்டுக் களவாணிதான் .. இன்னும் கொஞ்ச நாள் உங்க ரெண்டு பேருக்குள்ளும் அந்த நினைப்பு அலை எழுப்பிட்டுத் தான் இருக்கும்.. அதை கண்டுக்காம விடறதே நல்லது’..

ஜோசபினை அமர்த்தி விட்டு வர, கயல் ஜோராக அவளுடைய அப்பாவின் ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வந்து நிறுத்தினாள். கம்பெனி கொடுக்க, எம்.ஏ இங்கிலீஷ் இலக்கிய சீனியர் வைஷ்ணவியின் ஸ்கூட்டர்.

’ஹேய் நீ இனிமே ஸ்கூட்டர் மெக்கானிக் ஆயிடு. ஊர்லே ஸ்கூட்டர் எண்ணிக்கை அதிகமாயிட்டிருக்கு’ என்றாள் வைஷ்ணவி. அவள் தான் கயலுக்கு மூன்றே நாளில் பத்திரமாக ஸ்கூட்டர் ஓட்டக் கற்றுக் கொடுத்திருக்கிறாள். வாழ்க்கை பூரா ஸ்கூட்டர் ஓட்டியவள் போல கயல் என்னைப் பெருமையோடு பார்க்க, பொறாமை கொழுந்து விட்டது. எரியவில்லை.

ஒரு வழியாக ஆறரைக்கு மணி எல்லாம் அடித்து, மேடைக்குப் பின்னால் பூஜை செய்து தீபாராதனை காட்டித் திரை தூக்கினார்கள். நாடகம் ஆரம்பம்.

ருழே மாதிரி தமிழ் பேசும் வெள்ளைக்காரர்கள், கூடவே அனுசரணையாக நடக்கிற சாஸ்திரிகள், மூக்குத்தி போட்ட தஞ்சாவூர் மாமிகள், கலிபோர்னியாவில் நடக்கும் கல்யாணத்துக்கான ஏற்பாடு என்று கதை பாதி நகர்வதற்குள் கயல் என்னடா என்னடா என்று நூறு தடவை கேட்டு விட்டாள். அவளுக்கு இது அந்நியமென்று புரிந்து கொண்டேன். சிட்டிபாபு வீணைக் கச்சேரியில் இருந்த ஈர்ப்பு கூட இங்கே இல்லை அவளுக்கு.

வெளியே பட்டாசு சத்தம் கேட்டது. நாதசுவரச் சத்தம், ரெட்டைத் தவில் அதிர்ந்து டமடம என்று ஒலிக்கக் கூடவே கேட்டது. நகர்கிற விளக்குகள்.

’மாப்பிள்ளை அழைப்பு வந்திண்டிருக்கே. அட ராமா உள்ளே உக்காந்துண்டு என்ன பண்றேள் எல்லோரும். அங்கே போங்கோ’.

மேடையில் ஒரு நாடக மடிசார் மாமி நீட்டி முழக்கி மைக்கில் சொல்ல உள்ளே இருந்த சகலரும் மண்டப வாசலுக்கு ஓடினோம். இருடா வரேன் என்று கயல் பின்வாங்க முன்னால் நடந்தேன். கயல், ரெஸ்ட் ரூம் அங்கே.

அமேலி அந்தக் கூட்டத்தில் ஜோசபின் கையைப் பிடித்துக் கொண்டு ‘போகறோம்’ என்றாள். அவளுக்கும் இது ரசிக்கவில்லை போல. ஜோசபின் முகத்தில் சங்கடம் தெரிந்தது.

’நீ இருக்கச் சொன்னா இருக்கேண்டா.. அமேலியை வீட்டுலே விட்டுட்டு வந்துடறேன்’ என்றாள் போகும்போது ஜோசபின்.

’இல்லே ஜோஸ்ஸி நீ போற படி போய்க்கோ’.. என்றேன். எல்லோரையும் உட்கார வைத்து சபா நாடக ரசனை பற்றி ஒரு வகுப்பு எடுக்க வேண்டும்.

நானும் கயலும் கல்யாண மண்டப காம்பவுண்டுக்குள் ஊர்ந்து போன நாடக மாப்பிள்ளை அழைப்பில் கலந்து கொண்டு நடந்தோம். காரை நிறுத்தி மாப்பிள்ளை இறங்கி அவரும் மற்ற நடிகர்களும் பலத்த கரகோஷத்துக்கு நடுவே மேடைப் படியேறி மேலே போக, நாங்கள் இருக்கைகளுக்குத் திரும்பினோம். ‘இஞ்சீனியஸ்.. தமிழ் தியேட்டர் ரெவல்யூஷன்’ என்று ஒரு கண்ணாடிக்காரர் பக்கத்தில் இருந்தவரிடம் பரவசத்துடன் சொல்ல, ஊர்வலத்தில் நடுநாயகமாகப் போன மாதவ தாமோதரனைப் புதிய மரியாதையோடு எல்லோரும் பார்த்தார்கள்.

கடைசி வரிசை நாடக மாமாக்களும் மாமிகளும் அதிக மேக்கப் போட்டு பொன் நிற விக் வைத்து வெள்ளைக்காரர்கள் ஆன நம்மாட்களும் மேடையேறி உள்ளே போக, கைதட்டு நிற்கவே இல்லை.

அடுத்து பெட்ரோமாக்ஸைத் தூக்கிக் கொண்டு வயதான ரெண்டு நரிக்குறவர்கள். கூடவே குழந்தையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு ரெண்டு இளம் நரிக்குறவப் பெண்கள், சிறுவர்கள் மேடையோரமாக நிற்க, யாரோ பின்னால் இருந்து ‘போங்க சடசடன்னு ஆகட்டும்’ என்று அவசரப்படுத்தினார்கள். இடம் புதிது. எரியும் பெட்ரோமாக்ஸ் விளக்குகளோடு படியேறி மேடைக்குப் போய் அங்கிருந்து எங்கே போவது என்று தெரியாத நிலையில் அந்த வயோதிக நரிக்குறவர்கள் பரிதாபமாக விழித்தார்கள். நகரச் சொல்லி விரட்டும் குரல் மறுபடி கேட்க, மெல்ல மேடைக்கு நடந்தார்கள்.

மற்றவர்களுக்கு கைதட்டு என்றால் இந்த கோஷ்டி மேடையில் தயங்கித் தயங்கி நுழைய, மண்டபம் முழுக்க ஒரே சிரிப்பு. மேடையைக் கடந்து அவர்கள் உள்ளே போக முற்பட, சபா நிர்வாகி ஒருத்தர் கோவணம் அணிந்து லைட் சுமந்து வந்த முதிய குறவர்களில் ஒருவரைத் தடுத்து மேடையைப் பார்த்துத் திரும்பி நிற்க வைத்தார். கூடவே மற்ற நரிக்குறவர்களும் மேடையில் நிற்க, கீழே இருந்து சிரிப்பு உச்ச கட்டத்தை அடைந்திருந்தது.

கயல் சடசடவென்று சந்நதம் வந்தது போல் மேடைக்கு ஓடினாள். என்ன ஏது என்று புரியாமல், கயல் கயல் என்று கத்திக் கொண்டே நானும் அவள் பின்னாலேயே ஓடினேன்.

நாடக மைக் ஒன்றின் முன் போய் நின்றாள். பக்கத்தில் நின்ற நரிக்குறவக் குழந்தையின் தோளில் ஆதரவாகக் கையைப் போட்டிருந்தாள் என் கயல். அவள் பேசினாள் –

’மனிதனை மனிதன் எள்ளி நகையாடும் இந்த அக்கிரமத்துக்கா கலை என்று பெயர்? இவர்களும் உங்களையும் என்னையும் போல சக மனிதர்கள் தானே? மூணு தலை இருக்கா, ஏழு கை இருக்கா? ஏழமை தான் இருக்கு இவங்க கிட்டே. உடுக்க புதுத் துணி எடுக்க காசு இல்லாம கிழிச்சுக் கிழிச்சுக் கட்டின துணி அந்தத் தாத்தாவோட கோவணமாக நம்மைப் பாத்து சிரிக்குது. இடுப்பிலே பசியோடு இருக்கற குழந்தை நம்மோட மூர்க்கத்தைப் பாத்துச் சிரிக்குது. இந்த அம்மாவும் பசங்களும் அவங்க தோளில் டால்டா டப்பாவும் நம்ம திமிரை, ஆணவத்தை, ரசனையைக் கிண்டல் பண்ணி சிரிக்குது. லெச்சை கெட்ட இந்தக் கூத்துக்கு நாடகம்னு எவன் பெயர் வைத்தது’?

மேடைக்குப் பின்னால் இருந்து மாதவ தாமோதரன் இரு கையும் கூப்பியபடி வந்தார். கயலையும் அடுத்து அந்த நரிக்குறவக் குடும்பத்தையும் அடுத்தாற்போல் அவையையும் குனிந்து வணங்கினார்.

‘எல்லோரும் முக்கியமா மேடையில் இருக்கற இந்த சகோதரர்களும் சகோதரிகளும் என்னையும் எங்க குழுவையும் மன்னிக்கணும். கல்யாண ஊர்வலத்தை நடத்திக் காட்டுவோம்னு நாங்க முன் வந்தபோது இப்படி ஆகும்னு சத்தியமாத் தெரியாது. இன்னிக்கு மேடையில் நடந்த இந்த அநாகரீகம் இனி ஒரு போதும் நடக்காதுன்னு நான் எங்க அம்மா மேலே, என் கலை மேலே சத்தியமா சொல்றேன். இந்த இளைய பெண் பாரதியின் புதுமைப் பெண். சிறுமை கண்டு சீறுவதை என்றும் அவள் என்றும் சீலமாகக் கொள்ள வாழ்த்துகள்’.

அரங்கத்தில் இதற்கும் கைத்தட்டு எழுந்தது.

நாடகம் முடிந்து அப்பாவிடம் கயல் சாரி அங்கிள் என்றாள். ’நாடகத்துக்கு நடுவிலே குழப்பம் உண்டாகிட்டேன்.. பொறுத்துக்க முடியலே.. அதான்.. ரொம்ப சாரி..’ என்றாள்.

அவர் அவள் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து விட்டு என்னிடம் சொன்னார் –

’நீ நிஜமாவே புத்திசாலி தான். இவ்வளவு அருமையான ஒரு பெண்ணை நம்ம வீட்டுலே விளக்கேற்றக் கூட்டி வருவியாக்கும்? இன்னும் ரெண்டு வருஷம் காத்திருக்கணும்… ஒர்த் வெயிட்டிங்க்.. ஆமா, கயல் மேகமா பொழியறா.. நீயானா வாயடைச்சுப் போய் நின்னுட்டே’.

’ஹேய் நான் இதை விட அழகா பேசியிருப்பேன் இங்கிலீஷ்லே. டயம் ஆச்சு.. நாடகத்தை முடிச்சுட்டு அவங்க ஊருக்குக் கிளம்பட்டும்னு விட்டுட்டேன்’.

அப்பா முன்னால் நகர்ந்திருக்க, மூஞ்சி என்று என் காதில் குரல். அந்தக் குரங்கு தான். (தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன