New novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 9 இரா.முருகன்


(அச்சுதம் கேசவம் – பகுதி 2 – அத்தியாயம் 53)

அடுத்த வாரம் குப்தா வீட்டுலே சத்சங்க் ஆரம்பம்.

ஜெயம்மா பேசப் புதிதாக விஷயம் கிடைத்த சந்தோஷத்தில் அறிவித்தாள்.

ஒரு மாசம் நடக்குமே? ராத்திரி பன்ரெண்டு மணி போல ஆகிடும். டோலக்கும் கஞ்சிராவுமா அத்தனை பேர் சேந்து ராம நாமம் சொல்றது குளிருக்கும் மனசுக்கும் இதமா இருக்கும்.

வசந்தி சொன்னாள். சங்கரனும் அவளும் போன வருஷம் தினசரி கலந்து கொண்டு விட்டு ஸ்கூட்டரில் பத்திரமாக வந்து சேர்ந்து இஞ்சி தட்டிப் போட்ட சாயா குடித்துத் தான் உறங்கப் போகிற நியமம். இந்த வருஷம் குட்டி பகவதி பிறந்து அதையெல்லாம் ரத்து செய்து விட்டாள்.

ஆமா, வாய் உலர கத்திக் கத்திப் பாடினா, நீர்க்கக் கரைச்சு வச்சு பானகம் கொடுப்பான். பிரசாதம்னு தொன்னை தொன்னையா கொண்டக்கடலை சுண்டலை கொடுத்து அனுப்பிடுவான் கழுதை விட்டை கை நிறையன்னு.

ஜெயம்மாவுக்குப் பிடிக்கும் தான் அந்த அகண்டநாம பஜனையும் கூட்டாக இருந்து பாடுவதும், சுடச்சுட ரொட்டியும் ஆலு சப்ஜியும் சாப்பிடுவதும். இருந்தாலும் குப்தாவை எதற்காவது கிண்டல் செய்ய வேண்டும்.

அவசரமான மொழிபெயர்ப்பையும் குப்தாவுக்கு அவளே செய்தாள். லட்சம் பிரதி வட மாநிலங்களில் தினம் விற்று ஊர் உலக நிலவரம் அறிவிக்கும் தினசரிப் பத்திரிகையின் ஆசிரியரான அவன் கொஞ்சமும் கோபமோ சங்கடமோ இல்லாமல் ஜெயம்மாவின் கிண்டலை சகஜமாக ஏற்றுக் கொண்டது மட்டுமில்லை, ரசித்துச் சிரிக்கவும் செய்தான். குப்தா சொன்னது-

பகவான் பிரசாதத்தை கழுதை விட்டைன்னு சொன்னா அடுத்த ஜன்மத்திலே ஜெயா தீதீ கர்த்தபமாத்தான் பிறக்க வேண்டி வரும். ரொம்ப ஒண்ணும் பெரிசா வித்தியாசம் இருக்காது தான்.

கடன் எழவே. சாம்பார் குடிக்கறதுக்குன்னே வந்து சேர்ந்திருக்கியே.
ஜெயம்மா அவனை இங்கிலீஷ் பத்திரிகையை மடக்கிக் கொண்டு முதுகில் அடித்து, இன்னும் கொஞ்சம் சாம்பாரும் ஓரம் கருகிய ரெண்டு வடையும் சுவாதீனமாகச் சமையல் கட்டில் போய் எடுத்து வந்து அவனுக்குக் படைத்தாள்.

சத்சங்கும் அகண்ட் நாம பஜனையும் தில்லி முழுக்கக் கொடி கட்டிப் பறக்கிறது. தெற்கத்தி மனுஷர்கள், வடக்கர்கள், மீன் வாசனையோடு கிழக்கில் இருந்து வந்த முக்கோபாத்தியாயா, சட்டோபாத்தியாயா வகையறாக்கள், இன்னும் மேற்கில் இருந்து நாசுக்காக வந்து சேர்ந்த காசு கனத்த தேஷ்பாண்டே, அப்யங்கர், கினி, தந்த்வாடேக்கள் என்று எல்லோரும் பங்கு பெறும் ஆராதனை இது.

வீடு வீடாக ராத்திரியில் ராமர் பட்டாபிஷேகப் படத்துக்கு ஜவந்திப்பூ மாலை போட்டு இருத்தி, விளக்கேற்றி வைத்து, ராம் ஏக் ராம் தோ ராம் தீன் என்று ஒவ்வொரு ராம் சொல்லும்போதும் கணக்கை ஏற்றி பதினாயிரம் ராம் வந்ததும் நீர்க்கப் பானகம் கரைத்துக் கொண்டாடுகிற ஆராதனைகள் அமர்க்களமாக அரங்கேறுகின்றன.

கோல்ஃப் லிங்க்ஸிலும், லோதி காலனியிலும் வீடு தவறாமல் இது நடக்க, தெருக் கோடியில் பிளாட்பாரத்தில் சட்டமாக உட்கார்ந்து, கட்டிடத் தொழிலுக்காக வந்த பீகாரிகளும் உத்தரப் பிரதேச பையாக்களும் இதே படிக்கு ராம் ஏக் ராம் தோ கணக்கோடு சாமான்ய ராம பஜனை செய்கிறார்கள். அது காடாவிளக்கு பஜனை என்பது தவிர வித்தியாசமில்லை.

பஜனையா? நான் வர முடியாதே. அடுத்த வாரம் கேரளா போறேன்.

சின்னச் சங்கரன் குறைப்பட்டதாகத் தொனித்துச் சொல்ல பிடார் ஜெயம்மா அவனை ஒரு கைத் தள்ளலில் ஒதுக்கினாள்.

இவன் ஒருத்தன். என்னடி சுப்பின்னா எட்டு மணிக்கு தயார்னு வேறே எதுவும் குப்பை பொறுக்க இங்கே இல்லாட்ட கேரளத்துக்கு போயிட வேண்டியது. வசந்தி, இவனை கொஞ்சம் நோட் பண்ணி வை. அங்கே அதிசௌந்தர்யவதிகள் உண்டு. உனக்குத் தான் தெரியுமே.

வசந்தி உள்ள படிக்கே பயந்து போனாள். எதுக்கு இப்போ கேரளாவும் மண்ணாங்கட்டியும். வீட்டோட இருக்கணும் என்று கல்சுரல் மினிஸ்டிரி அண்டர் செக்ரட்டரியை மிரட்ட அவன் பூனையாகிக் கூழைக் கும்பிடு போட்டு குப்தாவை ஆதரவுக்காகப் பார்த்தான்.

அந்தப் பேர்வழியோ வழிச்சு வார்த்த வடையையும் விடாமல் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டு வசந்தியிடம் சொன்னது – பெஹன் ஜீ, இவன் செய்யக் கூடியவன் தான். ஜெயம்மாவும் நானும் இங்கே வேலி தப்பாம பார்த்துப்போம். கேரளுக்கு யார் இவன் கூடக் கழுதை மேய்க்கப் போறது?

அடே, தர்ப்பையை வறுத்து நாக்குலே போட்டுப் பொசுக்க. அது கேரள் இல்லே. கேரளம். இப்படித் தப்புத் தப்பா எழுதியே பெரிய பத்திரிகைக்காரன் ஆயிட்டே.

ஜெயம்மா செல்லமாகக் குப்தாவின் கையை எடுத்து வைத்துக் கொண்டு சொல்லி பாவம்டா சங்கரன், விட்டுடுவோம் அவனை என்றாள்.

கேரளத்துலே என்ன தலை போகிற வேலை? குப்தா விசாரித்தான். அதானே என்றாள் வசந்தி சந்தேகம் குறையாமல்.

எங்க மினிஸ்டர் அங்கே கான்பரன்ஸ் தொடங்கி வைக்கிறார். நாம் போனோமே அம்பலப் புழை. அங்கே தான். நாட்டுப் புறக்கலைகள் விழா.

நைச்சியமாக வசந்தியைப் பார்த்துக் கொண்டு சொல்ல உள்ளே குழந்தை அழும் சத்தம். ஃபீடிங் டைம் என்று வசந்தி உள்ளே போனாள்.

இவனுக்கும் வேல இல்லே இவனோட மினிஸ்டர் அந்தத் தீவட்டித் தடியனுக்கும் தான்.

ஜெயம்மா சொல்லி விட்டுச் சிரித்தாள்.

ஒரு தடவை அந்தப் பீடைக்கு கேரளா வாசனை காட்டிட்டி வந்தாச்சு. மாசா மாசம் ஏதாவது சாக்கை வச்சுண்டு டூர் அடிக்கறான். ஒழக்குக்குக் கையும் காலும் மொளச்ச மாதிரி இருந்துண்டு ஆகிருதியான மலையாள ஸ்திரியைத் தேடி எச்சல் விட்டுண்டு போனா, அவ மந்திரம் போட்டு இடுப்பிலே தூக்கி வச்சுப் போய் சமுத்திரத்திலே தள்ளிடுவா.

பயமுறுத்தும் குரலில் சொன்னாள் ஜெயம்மா. சரிதான் என்றபடி குப்தா வாசலுக்கு நடந்தான்.

வாசலில் யாரோ கூப்பிடுகிற சத்தம். கோசாயி உடுப்பும் முகத்தில் மண்டிய தாடியுமாக ஒர் பைராகி. அப்படித்தான் தெரிந்தது சின்னச் சங்கரனுக்கு. பகவதிப் பாட்டி அரசூரில் சந்தித்த பைராகிகளின் மூணாம் தலைமுறையாக இருக்கும். சாமியாருக்கு ஏது தலைமுறை? அவனுக்குச் சிரிப்பு வந்தது.

வசந்தியின் அப்பா வாசலுக்குப் போய்ப் பார்த்து விட்டுத் தன் இந்தியைப் பரிசோதிக்க வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் பைராகியிடம் கேட்டார் –

விசேஷம் நடக்கற வீடுன்னு கண்டுபிடிச்சு சாப்பாட்டைக் கொண்டான்னு வந்திருக்கியே? எல்லாம் தீர்ந்து போச்சு. போய்க்கோ.

பைராகி முறைத்ததில் சப்தநாடியும் ஒடுங்கிப் போனார் அவர். சங்கரன் வெளியே வர, பைராகி முறையிட்டான் –

உங்க வீட்டுலே தான் பிக்‌ஷை ஏத்துக்கச் சொல்லி உத்தரவு. போடறதுன்னா போடு. இல்லேன்னா ஜலமும் வாயுவும் எதேஷ்டமா இருக்கு. போறேன்.

அதெல்லாம் வேண்டாம். கொஞ்சம் இரு.

பிடார் ஜெயம்மா பைராகியை நிற்கச் சொல்லி விட்டு சமையல் அறைக்கு வந்தாள். சாதம், உருளை ரோஸ்ட், பரங்கிக் காய்ப் பால் கூட்டு, திரட்டுப் பால், தேங்காய் அரைத்து விட்ட பூஷணிக்காய் சாம்பார், எரிசேரி, அவியல், எலுமிச்சை ரசம், கட்டித் தயிர் என்று கிண்ணம் கிண்ணமாக ஒரு பெரிய தட்டில் எடுத்துப் போய் பைராகியிடம் நீட்டி, அங்கே உக்காந்து சாப்பிட்டுப் போ என்றாள் கருணையோடு.

அன்னபூரணி என்று ஓங்கி விளித்து அவளைப் பைராகி கும்பிட்டு வாசலில் ஓரமாகக் குந்தி இருந்து சாப்பிடும்போது., தோட்டத்தில் சத்தம்.

சங்கரன் திரும்பிப் பார்க்க மயில் ஒன்று பறந்து வந்து சேர்ந்திருந்தது. பைராகி சங்கரனைப் பார்த்துச் சிரித்தான்.

நான் சீக்கிரம் சாப்பிட்டு முடிக்கறேன். அப்புறம் மயிலைப் பாரு. அது உனக்காகக் காத்திருக்கும்.

திரும்ப அவன் ஜெயம்மாவை வணங்க, அவள் திருப்தியாக அரட்டையைத் தொடர்வதற்காகத் திரும்ப உள்ளே போனாள். பெண்களுக்கே ஆன பேச்சு என்று சங்கரன் ஊகிக்க, அவனை விலக்கி வைத்திருந்தார்கள்.

மீரட் கத்தரிக்கோல் என்று வசந்தி உச்சக் குரலில் சிரித்தபடி சொல்ல, ஜெயம்மா ஏற்று வாங்கி இன்னும் கொஞ்சம் சுருதி சேர்த்தாள் அவுட்டுச் சிரிப்புக்கு. இந்தியா முழுக்க மீரட்டுனா வேறே ஞாபகமே வராது என்றாள் ஜெயம்மா அடுத்த சிரிப்புக்கு ஆயத்தம் செய்தபடி. அது என்ன என்று சங்கரனுக்குத் தெரியும் என்றாலும் அவன் சிரிக்க முடியாது.

பைராகி திருப்தியாகச் சாப்பிட்டு முடித்து பாயசமும், மோரும் ஒரு சொம்பு தண்ணீரும் வாங்கிக் குடித்துக் கொஞ்சம் வெற்றிலை கேட்டு வாங்கினான். ஐந்தே நிமிஷத்தில் சிரம பரிகாரம் முடிந்து அவன் கிளம்பும் முன்னால், வசந்திக்கும் அவள் குழந்தைக்கும் சகல விதமான சுகமும் அதிர்ஷ்டமும் வர பிரார்த்தனை சொன்னான். அவன் போனதும் தோட்டத்தில் மயில் ஆட ஆரம்பித்தது.

ஆடி முடியும் வரை அதைப் பார்த்தபடி இருந்தார்கள். பிடார் ஜெயம்மா எல்லோரிடமும் பிரியத்தோடு சொல்லிக் கொண்டு இன்னும் கொஞ்சம் ஊர்க் கதை பேசி, இன்னும் ஒரு டோஸ் புது டீகாக்‌ஷன் காப்பி சாப்பிட்டு ரெண்டு தரப்பிலும் பிரிய மனசே இல்லாமல் புறப்பட்ட போது பிற்பகல் மூணு மணியாகி விட்டிருந்தது.

அதற்குள், சங்கரனும் வசந்தியும் வேணாம் வேணாம் என்று மறுக்க, அசத்துகளே, சித்த சும்மா இருக்கணும் என்று அவர்களைக் கடிந்து கொண்டு ஜெயம்மா குழந்தை கழுத்தில் ரெண்டு பவுனுக்கு ஒரு புது சங்கிலி போட்டிருந்தாள். சிங்கப்பூர் போயிருந்த போது வாங்கியது என்று பளபளவென்று ராஜாக்களின் வஸ்திரம் போல மின்னித் திளங்கிக் கொண்டு ஜரிகையில் புட்டா புட்டாவாகப் போட்டு ஒரு புடவை வேறே கொடுத்தாள்.

சங்கரனுக்கு ஏது வாங்கித் தருவது என்று புரியாததால், கன்னாட் ப்ளேஸில் பேங்குக்குப் போய் கிப்ட் செக் இருநூறு ரூபாய்க்கு வாங்கியிருந்தாள்

பிரம்மஹத்திகள், டாய்லெட் போற வழியிலே எரவாணத்துலே சொருகி வச்ச பழைய பேப்பர்லே நாலு பூப் போட்டா கிப்ட் செக்காம். சரி அந்தக் கந்தல் காகிதத்துலே எழுதற போது பார்த்து எழுத வேணாமோ? இன்னும் பத்து வருஷம் கழிச்சு இருக்கற தேதியைப் போட்டுக் கொடுத்துடுத்துகள். வாங்கிப் பார்த்துட்டு சண்டைக்குப் போனா, அதனாலே என்னன்னு முழ நீளத்துக்குக் கீழேயே கோழிக் கிறுக்கலாக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடுத்துது ஏஜண்ட் பிரம்மஹத்தி. நீ முதல்லே நாளைக்கு அதை என்கேஷ் பண்ணு.

வசந்தியின் அப்பா ஜெயம்மாவின் தாராள குணத்தாலும் தன் மகளிடம் அவள் காட்டும் வாத்சல்யத்தாலும் பரவசமடைந்து சங்கரனிடம் சொன்னார் –

மாப்ளே, இந்த காஷ்மீர் லேஞ்சியை நீங்க பதில் மரியாதையாக் கொடுத்தா நிறைஞ்சு இருக்கும்.

சங்கரன் அவர் கையில் பிடித்திருந்த நீள வாட்டில் மடித்த துணியைச் சிரத்தையின்றிப் பார்த்தான். அதில் பத்து நிமிஷம் முன் அவனுடைய மைத்துனன் மூக்குத் துடைத்த ஞாபகம்.

பதில் மரியாதையாக அப்புறம் ரூபாய் முன்னூற்றொண்ணு பழுக்காத் தட்டில் வெற்றிலை பாக்கு புஷ்பத்தோடு வைத்து ஜெயம்மாவிடம் வசந்தி தர, அவள் ஒரு ரூபாய்க் காசையும் புஷ்பத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டாள்.

அவர் எப்போவாது வெத்திலை போடுவார். பல்லு சரியில்லேன்னு டெண்டிஸ்ட் அதுக்கு தடை போட்டிருக்கார். எனக்கானா இதெல்லாமே அலர்ஜி. நீயே உங்கப்பாவுக்கு நான் கொடுத்ததா கொடுத்திடு வசந்தி.

ஜெயம்மா சொல்ல, சங்கரன் இடைவெட்டினான் – எதுக்கு, அவர் திரும்ப தன் கடையிலே கொண்டு போய் விக்கறதுக்கா?

நீ இன்னொரு சோழ பிரம்மஹத்தி. ஜெயம்மா அவனுக்குப் பழிப்பு காட்டி விட்டு வாசலுக்கும் உள்ளுக்குமாக நின்றாள். அடுத்து ஏதாவது பேச யாராவது விஷயத்தை எடுத்தால் அவள் திரும்ப உள்ளே வந்து அதையும் பேசி முடித்துத் தான் போவாள் என்று தோன்றியது.

வசந்தி பழைய இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் சுற்றி எடுத்து வந்த இலையில் நாலு லட்டும், தேங்காய்ப் பருப்புத் தேங்காயில் பாதியும் இருப்பதாகச் சொன்னாள். வீட்டுக்குப் போனதும் ஓவல்டின் டப்பாவில் எடுத்து வைக்க மறக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள் அவள்.

ஓவல்டின் சப்ளை இல்லே இப்போ என்றார் வசந்தியின் அப்பா கரோல்பாக் தமிழ்க் கடைக் காரராகப் பொறுப்போடு யோசித்துச் சொன்னார் –

அதுக்கு பதிலா, மெட்ராஸில் இருந்து ஆல்விட்டோன்னு ஒரு புது பானம் வந்திருக்கு. நன்னா இருக்குன்னு எல்லோரும் சொல்றா.

அது வாயிலே ஒட்டிக்கறதே. ரெண்டு வாய் குடிச்சா உதடு கப்புனு ஒட்டி பேச்சே எழும்ப மாட்டேங்கறது என்றாள் புதுசாகப் பேசக் கிடைத்த ஜெயம்மா.

அடுத்த பத்து நிமிஷம் வேறே பேச்சே எழாமல், அவள் காரில் ஏறிக் கைகாட்டிக் கொண்டு புறப்பட்டுப் போக மழை பெய்து ஓய்ந்த அமைதி அங்கே. சங்கரன் ஒரு பத்து நிமிஷம் தூக்கம் போடலாம் என்று மெழுகு சீலைத் தலகாணியைத் தேட, வசந்தி உள்ளே இருந்து சத்தம் போட்டாள் –

இப்போ தூங்கினா ரெண்டுங் கெட்டானா ராத்திரி ஏழு மணிக்குத்தான் எழுந்திருப்பீங்க. அப்புறம் ராத்திரி முழுக்க

அவள் பாதியிலே விட்டதும் அதற்கு மேலும் அர்த்தமாக, தான் பிரசவம் கழிந்துப் பத்தே நாள் ஆன மனைவியை சரீர ரீதியாகச் சுகம் கொடுக்க கஷ்டப்படுத்துகிறவன் இல்லை என்பதை எப்படியாவது அவளுக்குச் சொல்லத் துடித்தான். மேல் மாடி பஞ்சாபிப் பெண்கள் போனால் அதைச் சொல்லலாம்.

சாயந்திரம் வரைக்கும் பொழுது உருப்படியாகப் போக பகவதியின் டயரியைப் படிக்கலாம் என்று முடிவு செய்து உள்ளே இருந்து அந்தப் பழைய ஹோ அண்ட் கோ வெளியிட்ட கருப்பு தோல் போர்த்திய டயரியை எடுத்து வந்தான். வசந்தியின் உறவுக் காரர்களும் மேல் மாடி பஞ்சாபிப் பெண்களும் குங்குமம் வாங்கிக் கொண்டு போக, அமைதியாகக் கிடந்த வீடு.

கதவை அடைத்து விட்டு வந்து படிக்க உட்கார்ந்தான் சின்னச் சங்கரன்.

(தொடரும்)

2 comments on “New novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 9 இரா.முருகன்
  1. Ashok kumar சொல்கிறார்:

    அற்புதமாக இருக்கிறது சார்! அந்தக் காலக் கட்டத்தை அப்படியே கண் முன் நிறுத்தி விட்டீர்கள்! ஆவலைத் தூண்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன