என்ன ஏது என்று தெரியாமலே கொட்டகைக்குள் புகுந்து புறப்பட்ட அரசூரார்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி

அவர் பார்வை பனியன் சகோதரர்களைத் தீய்க்க அவசரமாகத் தேடத் தெரு வளைந்து வலது வசம் திரும்பி மேற்கு திசையில் நீளும் வீதியில், வாசலில் கூரைக் கொட்டகை போட்ட கட்டிட வாசலில் அவர்கள் நின்றிருந்தார்கள்.

 

மரமேஜை போட்டு அங்கே நாலைந்து பேர் உட்கார்ந்து காகிதங்களைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முன்னால், ஒருத்தன் பிருஷ்டத்தை ஒட்டி அடுத்தவன் என்ற கணக்கில் சர்ப்பமாக வளைந்து மனுஷர்கள் வரிசையாக நின்றார்கள். கும்பினி உத்தியோகஸ்தர்கள் வரி வாங்கவோ புதுச்சேரியில் பிரஞ்சுக் காரர்களோடு யுத்தம் செய்ய ஆள் எடுத்து அனுப்பவோ ஏற்படுத்திய இடம் என்று ராஜாவுக்குத் தோன்றியது. பக்கத்திலே கெந்தி நடந்து வந்த புஸ்தி மீசைக் கிழவன் இல்லையெனத் திடமாக மறுத்தான். நடக்க வேணாம், தரையை ஒட்டிப் பிருஷ்டம் படப் பறந்து செல்லடா கொசுவே என கேட்டுக் கொண்டால் வெகு இஷ்டமாகச் செய்வான்.

 

இவங்க எல்லாம் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள். வெள்ளைக்காரன் சர்க்கார் இல்லே இப்போ நடக்கிறது. நம்மாளுங்க தான். ஆட்ட பாட்டமா நாலு நாள் வைபோகம் நடத்தி வெள்ளைக்காரனும் அபீசினியக் கருப்பனும் வந்து பார்த்து சந்தோஷப்பட ஏற்பாடு. இங்கே நிக்கறவன் எல்லாம் ஆடவும் பாடவும் வந்தவனுங்க. நேரம் ஒதுக்கச் சொல்லி காகிதத்துலே மனு கொடுக்கறாங்க.

 

என்ன தான் இளக்காரம் செய்தாலும் புஸ்தி மீசையானுக்கு இருக்கும் கற்பூர புத்தி தனக்கு இல்லை என்பதை ராஜா மனசார அங்கீகரித்தார். அது கிழவன் மேல் நொடி நேர அபிமானமாக மலர்ந்தது. அதுக்குக் காசா பணமா செலவு?

 

மாமா, எல்லாம் சரிதான். நம்ம களவாணிப் பயலுக அங்கே என்னத்துக்கு நிக்கறாங்க? உங்களையும் என்னையும் சப்ஜாடா ஒரு வெலை பேசி இங்கே சர்க்காருக்கு வித்துட்டுப் போகலாம்னு யோசிக்கறானுங்களோ?

 

செஞ்சாலும் செய்வானுக மாப்ளே. சூதானமா நடந்துக்கறது நல்லது. உனக்கு உடம்பு வேறே இப்போ சொடுக்கெடுத்து விட்டுட்டான் .  இவனுகளோட போனா, ம ச்சி  காட்டறேன் மத்ததைக் காட்டறேன்னு பெரிசா கருங்குழியிலே உன் தலையை நுழைச்சு விட்டுடுவானுங்க. அவமானம் எல்லாம் உனக்குத்தான் அப்புறம். உஷார்.

 

தான் கொஞ்சம் தாழ்ந்தாலும் உலகை ரட்சிக்க வந்த அவதாரம் போல உதடு வீங்கி நான்நான் என்று நிற்கிற கிழவனை போடா பருப்பே என்று மனதில் திட்டியபடி ராஜா அந்தக் கொட்டகைக்குள் நுழைந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன