புதிய சிறுகதை: மீனாக (இரா.முருகன்)


மீனாக
இரா. முருகன்

மலர் காலை ஐந்து ஐமபத்தைந்துக்கு இரண்டு உறுதிமொழிகளை எடுத்திருந்தாள். அவற்றில் ஒன்றைப் பத்து நிமிஷம் முன்னால் மீறினாள்.

‘காலையிலே எழுந்தா குளிப்போம், சாப்பிடுவோம், ஆபீஸ் போவோம்னு கிடையாதா. எப்பப் பாரு மீனைக் கொஞ்சிக்கிட்டு உக்கார வேண்டியது’.

‘இன்னிக்கு கேஷுவல் லீவ். எடுக்கலேன்னா வேஸ்டாப் போகுது’.

பிஜோ சிரித்ததைப் பார்க்க அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. ஹாய்யாக மீன் தொட்டியில் கையை நனைத்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறவன் சின்னச் சிணுங்கலாக அவ்வப்போது முனகுகிறான். மீன் விரலைக் கடிக்கிற சுகம் அது.

‘வேஸ்ட்.. நானே அதான்.. பிள்ளையைப் பறி கொடுத்திட்டு மனசு உடஞ்சு நாள் முச்சூடும் அழுதுக்கிட்டிருக்கேனே.. கருதல் இல்லாத கல் மனசு’..

இன்றைக்கு குரல் உயர்த்த மாட்டேன் என்பது அவள் இரண்டாவதாக எடுத்திருந்த சங்கல்பம். குரல் எழுப்பிக் கலைக்க அது விழுந்து உடைந்தது.

‘மோட்டு வளையைப் பாத்து அழுதிட்டிருந்தா பிள்ளை வந்துடுமா என்ன? என்ன பாவம் செஞ்சியோ எந்த ஜன்மத்திலே யார் குடியைக் கெடுத்தியோ. ஒண்ணு வயத்திலே பிள்ளை தங்க மாட்டேங்குது. வந்து விழுந்தா தரையிலே கால் நிக்கறதில்லே. கருதலும் கண்றாவியும் என்ன எழவுக்கு வேணும்?’

மீன் தொட்டியில் இருந்து எடுத்த ஈரக் கையைச் சுவரில் தீற்றியபடி வார்த்தையால் சுட்டான் பிஜோ. தொட்டிக்குள் நீந்தியபடி ரெண்டு மீன்கள் வாயைத் திறந்து திறந்து ஆமா ஆமா என்றன. மலர் அவற்றை எரிச்சலோடு பார்த்தாள்.

‘இதுகளை சாவு கொண்டு போகாதா?’

அவள் மீன் தொட்டியைப் பார்த்தபடி அடுத்த ஒரு வினாடி நின்றாள். தலையுச்சிக்கு ஏறிய கோபம் மனதில் பிசாசுகளை எழுப்ப முன்னால் பாய்ந்து வந்தாள். அசுர வேகத்தோடு தொட்டியைக் கெல்லித் தரையில் உடைத்தெறிய முற்பட்டது போல் பக்கத்தில் பிடித்து அசைக்க, உள்ளே நீந்திய இரண்டு மீன்களும் அவளையே பார்த்தபடி வாய் திறந்து வசவு உதிர்த்தன. சின்னக் கண் பயத்தில் விழித்திருக்க, தொட்டி அடியில் அவசரமாகப் புகலிடம் தேடின.

அவன் நழுவிய லுங்கியைக் கூடக் கவனிக்காமல் எழுந்து அவள் கன்னத்தில் ஈரமும் மீனும் வாடையடிக்கும் கையால் அறைந்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனாள் மலர்.

வேண்டாம். நினைக்க நினைக்க மனம் தறிகெட்டு எங்கேயோ போகும். எல்லாம் அவள் தவறு தான். இழப்பின் சோகம் அவளுக்கு மட்டுமானதாக விதிக்கப் பட்டிருக்கிறது.

போய்ச் சேர்ந்து விட்டான் ஷரண். ஆசை ஆசையாக வைத்த பெயரை வாய் நிறையச் சொல்லிக் கூப்பிடக்கூட அவகாசம் தரவில்லை அருவியாகக் கும்மாளி கொட்டி வந்த சந்தோஷம் சட்டென்று வடிந்த சோகம்..

வாசலில் விழுந்து கிடந்த காலைத் தினசரியோடு உள்ளே வந்த பிஜோ, மீன் தொட்டிக்குப் பக்கத்து அலமாரியைத் திறந்தான்.

மீன்களுக்கு ஆகாரம். எது தவறினாலும், ஷரண் தவறிய துக்கம் ஆறாத இன்னொரு தினம் என்றாலும், பிஜோ சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும், மலர் மூச்சு விட்டாலும் விடாவிட்டாலும் இவை தீனி விழுங்க வேண்டும்.

‘சே தீர்ந்து போச்சு.. எழவு வீட்டுலே எப்பவும் எதுக்கும் இல்லே பாட்டுதான்’.

பிஜோ தொட்டிக்குள் பார்த்துச் சொல்கிறான். அந்தத் தொட்டியை உடைத்து எறிய மறுபடி ஆவேசம் வந்தது மலருக்கு. கொடூரமான நினைப்பு அது. குரோதத்தை விலக்குவேன் என்ற இன்றைய காலையின் முதல் சங்கல்பம் உடைய, சகலமானதையும் காவு வாங்கி விடப் போகிறது.

உடைந்த தொட்டியிலிருந்து வழிந்து, வீடு முழுக்க நீரும் தரையில் நெளியும் மீனுமாக நினைக்கவே குமட்டியது. வேண்டாம். அவள் சாந்தமாக இருப்பாள்.

பிஜோவுக்கு மீன் தொட்டி தான் சகலமும். தண்ணீர் பாதி நிறைத்த பிளாஸ்டிக் பையிலோ கண்ணாடிக் குடுவையிலோ அவ்வப்போது தொட்டிக்கு மீன் வாங்கி வருவான். ஐயாயிரமும் பத்தாயிரமும் இதுகள் அடிக்கடி வைக்கும் செலவு. மாச பட்ஜெட்டில் கணிசமாகத் தின்றபடி பட்டை விரித்தது போல நெளிந்த இரண்டு பெரிய மீன்களைப் போன மாதம் கொண்டு வந்தபோது ஷரணுக்குப் பால் கொடுத்துக் கொண்டு இருந்தாள் அவள்.

’மீன் இல்லேன்னு யார் அழறாங்க’?

முகத்தைச் சுளித்தாள் மலர்.

’உனக்குத் தெரியாது மலர். வீட்டுக்கு வர்ற யார் கண்ணு எப்படியோ.. இது வாஸ்து மீன். நெகட்டிவ் வைப்ரேஷன் உள்ளவங்க, அதான் நாம நல்லா இருக்கறது பிடிக்காதவ்ங்க வந்தா அவங்களோட எதிர்மறை அதிர்வை இது தொட்டியிலே இருந்தபடிக்கே முழுங்கிடும். நமக்கே நெகட்டிவ் ஆன சிந்தனை வந்தா அதையும் கூடத்தான். அப்புறம் என்ன, சுபம் தான்’.

வாஸ்து மீன்கள் தொட்டி முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்ள ஏற்கனவே இருந்த தங்க மீன்கள் நண்பர்களுக்கு தானமளிக்கப்பட்டன. இந்த ஜோசிய மீன்கள் சாப்பிட கண்ணாடி ஜாடியில் நீருக்குள் நீந்தியபடி குட்டி மீன்கள்.

’மீன் சாப்பிடற மீனா? என்ன கொடூரம்.. இதுக்கு வைப்ரேஷன் வேறே’.

மலரின் ஆத்திரம் கரைகடக்க, அப்புறம் பிஜோ யார் யாரையோ விசாரித்து பிசாசுகளுக்கு இரையாகப் போட ஏதோ கடல்பாசி வாங்கி வந்தான். மாதம் இரண்டாயிரம் ரூபாய் செலவு வைக்கும் அந்த மீன் உணவு, பிஜோவும் மலரும் காலையில் சாப்பிடும் இரண்டாம் டோஸ் காப்பியையும் மாசாந்திர சினிமாவையும் வழியனுப்பியது.

பிஜோ குளித்து விட்டு உம்மென்று வந்தான். குளிர்ந்த நீரில் குளித்து வந்தவர்கள் முகத்தில் சோப்பு வாசனையோடு தாமரைப் பூவாக மலர்ந்திருக்கும் சந்தோஷம் அவனைத் தொடாமலேயே போயிருந்தது. ஈரத் தலையை வாரி சீப்பை டைனிங் டேபிளில் ரொட்டி பாக்கெட் பக்கம் அவன் வைத்தபோது இன்னொரு முறை கோபம் எட்டிப் பார்க்க மலர் அடக்கிக் கொண்டாள். இல்லை, இனி அவள் ஆயுசுக்கும் கோபப்பட மாட்டாள்.

அவன் ரொட்டிப் துண்டுகளோடு மீன் தொட்டிக்குப் பக்கத்தில் உட்கார, மலர் படுக்கை அறைக்குப் போய்க் கதவைச் சார்த்திக் கொண்டு அழுதாள். காய்கறி வண்டிக்காரனும், கோலப்பொடி விற்கிற பாட்டியும் குரலால் தட்டியும் திறக்காத வாசல் அது. அழறா அழறா என்று சந்தோஷமாகக் குதித்திருக்கும் வாஸ்து மீன்கள்.

அழுகை ஐந்து நிமிஷ கண்ணயர்வில் முடிந்தது, எழுந்து முகத்தைத் துடைத்தபடி மலர் முன்னறைக்கு வந்தபோது அவன் வெளியே போயிருந்தான்.

அவள் மீன் தொட்டியைப் பார்த்தாள். ஓரமாக நீந்திக் கண்ணாடிச் சுவரில் முகம் பதித்தபடி ஒரு மீன் அவளையே பார்த்தது. ஒரு வினாடியில் அந்த முகம் நேபாளி கூர்க்கா குழந்தையாக மாறி பொக்கை வாயோடு சிரிக்க, ஷரண் என்று ஆதூரத்தோடு சொன்னாள் மலர். பாசிடிவ் வைப்ரேஷன் என்றது கூடவே நீந்திய இன்னொரு மீன். யாருக்குத் தெரியும்? மலருக்குத் தெரியாது.

ஷரண் மூன்றாம் மாதத்தில் அவளை உதறிப் போய் விட்டான். தலை கொள்ளா முடியும், திறந்து மூடும் செப்பு வாயும், சதா வாயில் வைத்துக் கொள்ள விரையும் குஞ்சுக் கையும், மெத்து மெத்தென்ற பிருஷ்டத்தில் இதமான குழந்தை வாசனையும் மலர் நினைவில் இன்னும் உறைந்திருக்கிறது. மூன்று மாதமாகத் தினமும் சுத்தம் செய்து, உடுப்பு துவைத்து உலர்த்தி உலர்த்திக் குழந்தையின் கழிவு வாடையும் வீடு முழுக்க இன்னும் காற்றில் தீற்றி நிற்கிறது. அலமாரியில் புடவைகளுக்கு இடையே குழந்தையின் பட்டு மாதிரி இடுப்புத் துணியும், இத்தணூன்ண்டு நீல டிராயரும், குட்டி பொம்மைச் சட்டையும் உயிரோடு துடிக்கிறது.

இந்த மீன்கள் எல்லாம் அவள் குழந்தையை மாரோடு அணைத்துப் பாலூட்டுவதைப் பார்த்தவை. போன வாரம் எல்லாம் முடிய, ஷரணை எடுத்துப் போன போது மீன் தொட்டியைத் துணி போட்டு மூடி வைத்திருந்தான் பிஜோ.

இரண்டு நாள் அந்தத் தொட்டியை மூடிய துணி திறக்கப்படவே இல்லை. அதைத் திறந்து கொஞ்சம் கொஞ்சமாக மீன் உணவைத் தூளாகத் தொட்டிக்குள் விட்டது மலர் தான். மார்பில் பால் கட்டிக் கொண்டு உடம்பைப் பிய்த்து எறிவது போல் வலி எழும்ப, வேதனையின் உச்சம். வீட்டு வாசலில் யாரோ அழைக்கிற சத்தம் அந்நேரம்.

அந்த நாளும் நிமிடமும் வந்தவனும் மனதில் நிழற்படமாக நிற்கிறது. வாசலில் நின்றவன் நேப்பாளி கூர்க்கா. .

’ஏங்க, கூர்க்காவுக்கு மாசாந்திரப் படி கொடுக்கலியா?’ உள்ளே பார்த்துக் கேட்டாள்.

‘பெஹன் ஜி, பைசா நை சாஹியே’.

சொன்னது கூர்க்கா இல்லை. அவனுக்குப் பின்னால் இருந்து சற்றே நகர்ந்து முன்னே வந்த பெண். மலர் வயது தான். அவள் அணைப்பில் கண் மலர்ந்தபடி இன்னொரு ஷரண்.

ஷரண் ஷரண் என்று குழந்தையைக் காட்டியபடி மலர் தடுமாற, அந்தப் பெண் குழந்தையை மலர் கையில் கொடுத்தாள். இறுக அணைத்துக் கண் மூடி அவள் நின்ற போது காலம் அப்படியே உறைந்து விடாதா என்று நினைத்தாள் அப்போது. உள்ளே இருந்து பிஜோ அவளுடைய செல்போனோடு வந்தான்.

‘டாக்டரம்மா பேசறாங்க. இவங்களைப் ப்த்தித்தான்னு தோணுது’.

குழந்தையை அந்த நேபாளிப் பெண்ணிடம் கொடுத்து விட்டு ஃபோனை வாங்கினாள் மலர்.

டாக்டர் கோமதி வழக்கமான அன்போடும் கரிசனத்தோடும் பேசினாள். இந்த அன்புக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் வலிமை இருந்தால் மலர் பெற்ற ஷரணை அவள் அணைப்பிலேயே தக்க வைத்திருக்கும்.

’சர்மிளாவுக்கு உன் உதவி தேவைப்படறது மலர். பால் சுரக்காம கஷ்டப்படறா. உன் மாரிலும் பால் கட்டி, நெஞ்சிலேயும் வேதனை. மன வேதனையை காலம் தான் போக்கணும், உடம்பு வேதனைக்கு நான் சொல்றபடி கேட்பியா?’

அந்த நேப்பாளிப் பெண்ணின் அணைப்பில் அலை பாய்ந்தபடி அழத் தொடங்கிய சிசுவைக் கையில் வாங்கி, வாசலுக்கு முதுகு காட்டித் தரையில் அமர்ந்தாள் மலர்.

உச்சம் தொட்ட வலி இன்பமாக, மனம் கரைய, தாய்மை சுரந்து பெருக ’ஷரண்’ என்றாள் அவள் அந்த நிமிடங்கள் மெல்ல அலையடித்துப் போக.

நாலு தெரு தள்ளி ஒரு சிறு குச்சு வீட்டில் வாடகைக்கு இருக்கிறதாக நிறைய சைகையும் மீதி இந்தியுமாக சர்மிளா சொன்னாள். குழந்தை அவள் அணைப்புக்கு வயிறு நிறைந்து திரும்பி வந்து கண் வளரத் தொடங்கியிருந்த நேரம் அது. மலரின் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டு அவள் கேட்டது மொழி கடந்து மலருக்குப் புரிந்தது. அவள் வீட்டுக்கு வரவேண்டுமாம்.

பிஜோவிடம் கண் காட்டி விட்டு அந்தப் பெண்ணோடு அவள் வீட்டுக்குப் போய் இடத்தைப் பார்த்து வைத்துக் கொண்டாள். அப்போது சர்மிளா புடவைத் தலைப்பில் இருந்து எதையோ எடுத்தாள். மலிவான விலைக்கு வாங்கிய செல்போன் அது.

’பஹன் ஜீ ஆப் கி நம்பர்’.

அவள் அந்த போனை வாங்கி தன் மொபைல் எண்ணைப் பதிந்து, பெயரையும் எழுதினாள். ‘மலர்’ சத்தமாகப் படித்துக் காட்டி விட்டு சர்மிளாவிடம் போனைக் கொடுத்தாள் அவள்.

’உன் நம்பர்.. தும் நம்பர்… க்யா?’

மலர் விசாரிக்க அந்தப் பெண் பூப்போல சிரித்தாள்.

‘மாலும் நை பெஹன்’.

மலர் திரும்ப போனை பிடுங்கி தன் நம்பருக்கு அழைப்பு விடுத்தாள். பளிச்சிட்ட எண்ணை ’ஷரண் அம்மா’ என்று சேமித்து வைக்கும்போது கண்ணீர் எட்டிப் பார்த்து விட்டு மறைந்தது.

‘அவளோ இந்திக்காரி. சுட்டுப் போட்டாலும் தமிழ் வராது. உனக்கும் இந்திக்கும் ஒட்டும் இல்லே உறவும் இல்லே. என்ன பேசிக்கப் போறீங்க செல்போன்லே?’

பிஜோ சீண்டிய போது அவளுக்கு என்னமோ அந்த நேப்பாளிப் பெண் சார்பில் வாதாட வேண்டும் என்று தோன்றியது.

‘பாவம் அவ. ஸ்டேடஸ் சிம்பல் மாதிரி ஒரு செல்போன் வச்சிருக்கா. அவ ஊர்லே அது பெரிய ஆடம்பரமா இருக்கும். போன் வாங்கறவங்க, வேண்டி இருக்கோ இல்லையோ மத்தவங்க நம்பரை வாங்கி போட்டு வச்சுக்கறதைப் பாத்திருக்கா. அவ நம்பர் என்னன்னே அவளுக்கு தெரியாது.’

காலையில் சரியாக எட்டு மணிக்கு, சர்மிளாவின் குழந்தை ஞானசம்பந்தனாகிறான். மலர் திரும்ப அம்மாவாகிக் கொண்டிருக்கிறாள். அந்தி சாயத் தொடங்கும்போது சர்மிளா இங்கே மலரைத் தேடி வந்து விடுகிறாள். மற்றப்படி அவள் புட்டிப்பாலுக்கு வந்தனம் சொல்வது குறைந்திருக்கிறதாக மலர் புரிந்து கொண்டாள்.

மொபைல் இரைச்சலாகக் கூப்பிட ஆரம்பித்தது. ஓடிப் போய் எடுத்தாள்.

ஷரண் அம்மா கூப்பிடுகிறாள்.

ஒரு வினாடி திக்கித்துப் போய் நின்றாள் மலர். பிஜோவோடு தொடுத்த மீன் தொட்டி யுத்த மும்முரத்தில் எட்டு மணி கடந்ததே தெரியவில்லை.

அவசரமாக ஹலோ சொன்னாள். ஷரண் அம்மா இந்தியில் பேசினால், என்னத்தை பதில் சொல்றது?

போனில் யாரும் பேசவில்லை. குழந்தை அழுகுரல் மட்டும் சத்தமாகக் கேட்டது.

ஷரண் பாலுக்காக அழுகிறான்.

’அம்மா உடனே வா. பசிக்குது’

எந்த மொழியும் தேவையில்லாமல் மலரோடு பேசுகிறான். மலரைக் கூப்பிடுகிறான். சர்மிளா ஃபோனை அவன் அருகே வைத்திருக்கிறாள்.

மலர் வாசல் கதவை வெறுமனே சார்த்தி விட்டு இறங்கி ஓடினாள். நாலு எட்டு ஓடியதும் தான் காலில் செருப்பு இல்லை என்று நினைவு வந்தது. போகட்டும். ஓடும் போது செருப்பு ஒரு அவஸ்தை. எதற்கு அது?

வீட்டு வாசலில் நின்றிருந்த சர்மிளாவை நெட்டித் தள்ளி உள்ளே புகுந்தாள் மலர். குழந்தையை வாரி எடுத்தாள். ஞானசம்பந்தன் தாடையெல்லாம் வழியப் பால் உண்ணுகிறான் அம்மையிடம்.

சர்மிளா அவள் தோளில் ஆதரவாகத் தொட்டுக் குனிந்தாள். மெல்ல அவள் தலையில் முத்தமிட்டாள் மலர். உலகமே மென்மையும் அழகுமாகத் தெரிந்தது. அவளுடைய ஷரண் சிரித்தான். மீன் தொட்டியில் மீனாக நீந்தியபடி வாயைத் திறந்து மூடினான். சர்மிளா வீட்டுத் தரையில் கால் உதைத்தபடி விளையாடிவிட்டுத் தூங்கினான்.

மலர் வீடடுக்குப் போகு்ம் வழியில் மீன்களுக்காக எம்போரியத்தில் உணவு வாங்கிக் கொண்டாள். ’வந்தாச்சு உங்க வயிற்றுக்கும் படைக்கணும்’.

வாசல் கதவு திறந்திருந்தது. மீன் தொட்டி இருந்த இடம் வெறுமையாக இருந்தது. அவசரமாக உள்ளே நடந்தாள். தோட்டத் தரையில் பதித்த சிமிட்டித் தண்ணீர்த் தொட்டியின் இரும்பு மூடி தூக்கித் திறக்கும் சத்தம்.

பிஜோ தண்ணீர்த் தொட்டி பக்கம் தரையில் உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் காலியான மீன் தொட்டி.

அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தான்.

‘மலர்,. உன் சோகத்தையும் துக்கத்தையும் ஒரு தாயாக அனுபவிச்சுப் புரிஞ்சுக்க என்னாலே முடியாது. கடவுளுக்கும் கிடைக்காத அனுபவம் அது. நான் அதிக பட்சம் செய்யறது, உனக்கு ஆதரவா ரெண்டு வார்த்தை சொல்லி, அன்போடு அணைச்சுக்கிட்டு நேரம் போக்கி, சமையல்கட்டுலே காப்பி போட்டு உனக்கு எடுத்து வந்து.. இதுவரை செய்யலே.. இனிமேலாவது’

’மீன் எங்கேங்க’?

’தொட்டி எல்லாம் சின்ன இருப்பிடம். தண்ணித் தொட்டியில் விட்டுட்டேன். நீஞ்சட்டும். அதிகம் போனா இன்னும் ஒரு வருஷம் உசிரோடு இருக்குமா? தினம் புதுத தண்ணி, உள்ளே தரையெல்லாம் படர்ந்திருக்கற பாசி, புழு பூச்சி.. படைச்சு விட்டவன் பார்த்துப்பான். நம்ம மகனுக்குத் தான் உசிர்த் தண்ணி ஊத்தலே.. போகட்டும்.. மீனுக்கு தர மாட்டானா? வா சாப்பிடலாம். லஞ்ச் வாங்கிட்டு வநதிருக்கேன்’.

மலர் அவன் அருகில் உட்கார்ந்தாள்.

அவசரப்பட்டு வார்த்தையைக் கொட்டியிருக்க வேண்டாம். அவனுடைய சோகத்தை மீன் விழுங்க வைத்துக் கடத்திய இயலாமையை இப்படி நிஷ்டூரமாக மிதித்து அழித்திருக்க வேண்டாம்.

‘சீக்கிரம் இது ரெண்டும் போய்ச் சேர்ந்திடும் மலர். இது உறிஞ்சற எதிர்மறை எல்லாம் சேர்ந்து சீக்கிரமே இதுங்க ஆயுசை அழிச்சிடும்’.

அவளால் பேச முடியவில்லை. பிஜோ அவள் முகத்தை நிமிர்த்தினான். கண்ணாடித் தொட்டி உள்ளே சுவரோடு முகம் பதித்து வாய் திறந்து மூடும் மீனாகத் தன்னை உணந்தாள் அவள்.

கையில் இருந்த மீன் உணவைப் பிரித்து தண்ணீர்த் தொட்டியில் மலர் கவிழ்த்தபோது அடிவயிற்றிலிருந்து அழுகை சுருள் பிரிந்து மேலே உயர்நதது.

‘ஜன்னல்’ பத்திரிகையில் (2015 ஃபெப்ரவரி 15) வெளியானது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன