புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 17 : இரா.முருகன்


இங்கேல்லாம் நிக்கக் கூடாது. மந்திரி சாப் வீடு. ஹட் ஜா.

மலபார் ஹில்ஸ் மந்திரி பங்களா வாசலில் துப்பாக்கி ஊன்றி நின்ற போலீஸ் சேவகன் சொன்னான். சொன்னதோடு மட்டுமில்லை. திலீப் தோளில் கை வைத்து ஓரமாகத் தள்ளினான் அவன்.

மதராஸி மந்திரி. உள்ளூரில் மந்திரி இல்லை தான். ஆனால், டில்லியில் மத்திய சர்க்காரில் சகல சக்தியோடும் இருக்கப் பட்டவர். மதராஸில் இருந்து இங்கே எப்போதோ குடி பெயர்ந்து, யூனியனில் பிரபலமாகி, கணிசமாக ஓட்டு வாங்கி லோக்சபா, ராஜ்யசபா என்று டில்லிக்குப் போனவர். போலீஸ் சேவகர்களாலும், மேலதிகாரிகளாலும் மதிக்கப்படுகிறவர். மராத்திக்காரராக இல்லாவிட்டாலும்.

திலீப் ஓரமாக நின்றான். பகலிலும் சூரியன் தொடாமல் இருளோ என்று கிடந்த அறைக்குள் இருந்து, ஒட்டடையும், தூசியும், குப்பையும் மண்டிய முடை நாற்றமடிக்கும் அறைக்குள் இருந்து, மூத்திரச் சுவடுகள் உலராமல் குளம் கட்டி நிற்கும் உயரம் தணிந்த அறையிலிருந்து அம்மா குரல் எழுந்து வந்தது.

என்னைத் திறந்து விடு. நான் ஆடணும்.

திலீப்பின் அம்மா அவன் நினைவில் ஒவ்வொரு கதவாகத் தட்டிக் கூப்பிடுகிறாள். ஆஸ்பத்திரியில் அணிவித்த அழுக்கு வெள்ளைச் சேலையை லாவணி ஆடத் தயாராக தூக்கிச் செருகி, குச்சியாக மெலிந்த கால்கள் நடுங்க நிற்கிறாள். ஜன்னல் ஜன்னலாகத் திறந்து அழுதபடி கூப்பிடுகிறாள்.

திலீப்பை போலீஸ் சேவகன் கூர்ந்து பார்த்தான்.

இளைஞன். போலீஸ்காரனை விட இளையவன். மதராஸி. கை மடித்து விட்ட மஞ்சள் டெர்லின் சட்டையும், காக்கி பேண்டுமாக மதராஸிகள் உலகமெங்கும் சகல உரிமையோடும் திரிந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு மதராஸி இருக்கும் இடத்தை, அது உலகத்தின் கோடியில் என்றாலும் எப்படியோ மோப்பம் பிடித்துத் தேடி, ஓடி வருகிறார்கள். கதவுகள் திறக்குமென்று நம்பி நிற்கிறார்கள்.

என்றால், தெருவில் போகிற எவனும் மந்திரி வீட்டில் நுழைந்து விடாமல் காக்கவே சர்க்கார் சம்பளமும் காக்கித் துணி சலவைக்கான வர்தி பேட்டாவும் போலீஸ் உத்தியோகத்தில் மாதாமாதம் வருகிறது. இவர்கள் மேல் சகிப்பும் கருணையும் காட்ட வேண்டியதில்லை. விலங்குகள் போன்றவர்கள். காம்பவுண்டுக்குள் நுழைந்த நாயை விரட்டித் துரத்துவது நியாயமே. போ. அங்கே இங்கே காலைத் தூக்காதே.

திலீப் சற்றே பின்னால் போய் நின்றான்.

மாதாமாதம் மந்திரி வீட்டுக் காவலுக்கு நிற்கிற இந்த போலீஸ் உத்தியோகஸ்தர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வீட்டில் இருப்பவர்களுக்கு நெருங்கிய உறவுக்காரன் திலீப் என்று அவர்களுக்கு முதலில் தெரியாது போகும். மந்திரி பங்களா வாசலில் ஏங்கி அழுது புலம்பி நிற்கிற யாசகனை விரட்டுகிற மாதிரித் துரத்துவார்கள். உள்ளே வாக்கி டாக்கி மூலம் கேட்கச் சொல்லி ஆயிரம் தடவை வேண்டினால், வேண்டா வெறுப்பாக ஒரு தடவை, ஒரே ஒரு தடவை, கரகரவென்று குழாயைப் உயர்த்திப் பேசுவார்கள்.

வாசலில் ஒரு மதராஸி பையன் ரொம்ப தொந்தரவு செய்கிறான். பெயர் திலீப் என்று சொல்றான். மந்திரி சாப் உறவு என்கிறான். துரத்தி அனுப்பி விடலாம் இல்லையா?

உள்ளே இருந்து அநேகமாக ஜனனியோ, அபூர்வமாகப் பெரியம்மாவோ , அதைவிட அபூர்வமாக, மினிஸ்டர் பெரியப்பாவோ, வாசலுக்கு வந்து வாடா என்று கையைப் பிடித்துக் கூட்டிப் போவார்கள். திரும்பும் போது முன்னால் காட்டிய முரட்டுத் தனம் பற்றிய சங்கடமும் புதிய சிநேகமுமாகப் புன்னகை புரியும் அந்தப் போலீஸ் சேவகன், அடுத்த முறை திலீப் பெரியப்பா வீட்டுக்குப் போகும் போது மாறி இருப்பான்.

மாறட்டும். என்னைத் திறந்து விடு. நான் ஆடணும்.

திலீப்பின் அம்மா ஆஸ்பத்திரிக் கதவுக்குப் பின்னால் யாரோ பலமாகப் பிடித்துப் பின்னால் இழுக்க, திமிறித் திமிறிச் சொல்கிறாள்.

முன் வாசல் பரபரப்பானது. உயரமாக நடுவில் நின்ற போலீஸ் உத்தியோகஸ்தன் கையில் பிடித்திருந்த வாக்கி டாக்கி உயிர் பெற்றது. காலில் அணிந்த கருப்பு பூட்ஸ் சப்திக்கக் குறுக்கும் நெடுக்கும் மற்றவர்கள் என்னத்துக்கோ ஓடினார்கள்.

மந்த்ரிசாப் மந்த்ரிசாப் மினிஸ்டர் சார்.

உள்ளே கதவு திறந்தது. கையில் அள்ளிப் பிடித்த சிவப்புத் துணியில் கட்டிய காகிதப் பொதியோடு, மூலக்கச்ச வேட்டி அணிந்த ஒருத்தர் வெளியே வந்தார். தீ விபத்தான வீட்டில் இருந்து வெளியேறுகிற அவசரத்தோடு அவர் அவசரமாகக் கையசைத்தார். ஓரமாக ஷெட்டில் நின்ற கருப்பு அம்பாசிடர் காரின் இஞ்சின் உயிர் பெற்று உறுமி கார் மெல்ல வாசல் பக்கமாக நகர்ந்து வந்தது.

பிசாசே அந்தாண்டை போ. மினிஸ்டர்ஜி வரார்.

போலீஸ் சேவகன் உரக்கக் கத்தி திலீப் நெஞ்சில் கை வைத்துத் தள்ளும்போது பெரியப்பா உள்ளே இருந்து தந்த பிரேம் மூக்குக் கண்ணாடியும், வெள்ளை ஷெர்வாணியும், தொளதொள பைஜாமாவும், தோளில் மந்திரி கோலத்துக்குப் பாந்தமில்லாத துணிப்பையுமாக வெளியே வந்தார்.

பெரியப்பா.

அவன் குரலை உயர்த்திக் கூவினான்.

ஒரு வினாடி நின்று என்னடா என்றார் சிரித்தபடி. போதும். கடவுள் திலீப் வசம் தான். அவன் தனக்கு முன்னால் நின்ற போலீஸ் உத்தியோகஸ்தனைத் துச்சமாகப் பார்க்க காக்கிச் சட்டைக்காரன் கிட்டத்தட்ட வாய் விட்டுக் கதறி அழப் போகிற பதத்துக்கு வந்திருந்தான்.

இந்த மதராஸிகள் வினோதமானவர்கள். சகல அதிகாரமும் கொண்ட மந்திரிப் பதவியில் இருந்தாலும் சரி, சேஃப்டி பின் சொருகிய ஹவாய் செருப்பும் கையில் மஞ்சள், சிவப்பு நிறத்தில் துணிப்பையும், மதராஸி பாஷையில் சதா கூச்சலாக வருகிற சளசள பேச்சுமாக லோக்கல் ட்ரெயினில் தாதரில் இருந்து டோம்பிவிலி போகிற, முகத்தில் நாலு நாள் தாடி மண்டியவனாக இருந்தாலும் சரி, இவர்கள் எப்படியோ உலகம் முழுக்க ஒருத்தருக்கு இன்னொருத்தர் உறவுக்காரராக இருப்பார்கள். அதை நினைவில் கொள்ளாமல் தோரணை காட்டினால், இதோ இந்தப் பையன் மந்திரியிடம் புகார் சொல்ல, முன்னூறு மைல் தெற்கே, அம்பேகாம் போலீஸ் ஸ்டேஷன் சரகத்தில் கள்ளச் சாராயக் காரர்களைத் துரத்தியபடிக்கு இனிமேல் அவன் உத்யோகம் திசைமாறிப் போகப் போகிறது. சர்வ நிச்சயம்.

அவன் திலீபிடம் சாப் கூப்பிடறார் போங்க என்று மரியாதை நிமித்தம் சிரித்தபடி சொன்னான். திலீப் அங்கீகரித்தபடி பாய்ச்சலாக போர்ட்டிகோவுக்கு ஓடினான்.

வந்து, அப்பா, உங்க கிட்டே .

அவன் தயங்கித் தயங்கி ஆரம்பிக்க, பெரியப்பா அவன் தோளில் கை வைத்து அன்போடு பார்த்தார்.

புனா போயிண்டிருக்கேன். வந்து பேசலாம். உள்ளே போடா. சாப்பிடு. அவல் கேசரி பண்ணச் சொல்லி இருக்கேன்.

பெரியப்பா கடந்து போனார்.

உள்ளே போய் என்னைத் திறந்து விடு. நான் ஆடணும்.

திலீப்பின் அம்மா அவல் கேசரியை அள்ளி முழுங்கியபடி கண் கலங்கச் சொல்கிறாள். அவள் தலைமுடி நார் நாராகக் கலைந்து தூசி படிந்து சிடுக்கேறி இருக்கிறது. எச்சில் கையைத் தலைக்கு உயர்த்தி, முடியில் கேசரி அப்ப வெறும் விரலால் பரபரவென்று கோதிக் கொள்கிறாள்.

உள்ளே மாடிப் படிகளை ஒட்டி இருந்த விசாலமான அறையில் இருந்து திலீப்புக்குப் பழக்கமில்லாத ஏதோ மொழியில், மத்தளம் கொட்டியபடி யாரோ ஆண்குரல் பாட்டு சாவகாசமான வேகத்தில் இழைந்து கேட்டுக் கொண்டிருந்தது.

சோபாவில் அரைக் கண்மூடி உட்கார்ந்தபடி, மத்திய வயசுக்காரர் ஒருத்தர். நூறு பேர் முழங்கிக் கொட்டும் இசைக்குழுவை நடத்துகிற மாதிரி மிகையாகக் கையசைத்துத் தாளம் போட்டுக் கொண்டிருந்த அவர் பக்கத்தில் அவர் மனைவியாக இருக்கக்கூடும் என்று ஊகிக்கத் தக்க ஸ்தூல சரீரப் பெண்மணி.

மூக்கு நுனியில் கண்ணாடியும், கையில் பேனாவுமாக பெரிய கிரண்டிக் டேப் ரிக்கார்டரில் அந்த சங்கீதத்தைக் கேட்டபடி பெரியம்மா அதைத்தானோ அல்லது வேறு எதையோ க்ளிப் போட்டுப் பிடித்த காகிதத்தில் எழுதிக் கொண்டிருந்தாள்.

அவள் கையில் பிடித்திருந்தது மசிப் பேனா இல்லை என்பதை திலீப் கவனித்தான். அழகாக நிப்புக்குப் பதிலாக உருண்டு திரண்ட உலோக முனையோடு பால்பாயிண்ட் பேனா அது. திலீப்புக்கு வேலை கிடைத்ததும் இது போல ஒரு பால்பாயிண்ட் பேனா வாங்குவான். பால்பாயிண்ட் பேனாவை யாசிக்கக் கூடாது.

பெரியம்மா அவனைப் பார்த்தாள். டேப் சத்தத்தைக் குறைத்தாள். பால்பாயிண்ட் பேனாவை டேப்ரிக்கார்டர் பக்கத்தில் வைத்தாள்.

வாடா, ஒரு மாசமா ஆளே காணோம். எப்படி இருக்கே?

பெரியம்மா பக்கத்து சோபாவில் உட்காரச் சொல்லிக் கை காட்டினாள்.

நல்லா இருக்கேன். என்னைத் திறந்து விடு. நான் ஆடணும்.

அம்மா சகஜ பாவனையில் சொல்ல, டாக்டர் இஞ்செக்‌ஷன் போடுகிறார். உடனே பணம் கட்டாவிட்டால், இந்தம்மாளைக் கூட்டிப் போகணும் என்று கண்டிப்பாகச் சொல்கிறார். போகலாம் போகலாம் என்று நச்சரிக்கிறாள் திலீப்பின் அம்மா.

கிரண்டிக் டேப் ரிக்கார்டரில் சீராக மத்தளம் கொட்டி பாட்டு தொடர்ந்தது.

இது அந்த கன்னி காணணம்னு மலையாளத்திலெ பாடுவாளே அது தானே.

பட்டுப் புடவையில் சற்றே வியர்த்து நெற்றியில் குங்குமம் அலுங்கியிருக்க உட்கார்ந்திருந்த பெண்மணி தயக்கத்தோடு கேட்டாள்.

அசடே அது கனி காணறது. நாமெல்லாம் விடிஞ்சு உள்ளங்கை ரேகையைத் தேச்சுப் பார்த்தபடி எழுந்திருக்கற மாதிரி கேரளாவிலே பழ வர்க்கத்தைப் பார்த்துத்தான் தினம் முழிச்சுப்பா. படுக்கை பக்கமா வரிசையா வாழை, பலான்னு வச்சிருப்பா. திவசம் திதின்னா இன்னும் விசேஷம். உக்ராணத்துலேயே படுக்கை.

பெரியம்மா பெரிதாகச் சிரித்தாள்.

சாஸ்திரி மாமா, நம்ம மாமியா இதுக்கெல்லாம் அசருவா? பரத நாட்டியம் மட்டும் இல்லை, மத்ததிலும் அதாரிட்டிதான் அவா. என்னைப் போல, ஜமுக்காளத்திலே வடிகட்டின அசடா என்னா? ஆனாலும் சொல்வேன், நீங்க ரொம்ப மோசம் மாமா.

அசடு என்று விளிக்கப்பட்ட ராம சாஸ்திரிகளின் பெண்ஜாதி பெரியம்மாவின் இந்தக் கிண்டலால் உற்சாகமடைந்து அவரைப் புச்சமாகப் பார்க்க, அந்த மனுஷர் யாரிவன் என்று தெரியாமலேயே திலீப்பின் ஆதரவைக் கண்ணால் யாசித்தார்.

இவன் மினிஸ்டரோட அண்ணா பிள்ளை. படிச்சுட்டு வேலை தேடிண்டு இருக்கான்.

பெரியம்மா சுருக்கமாக திலீப்பை விருந்தாளிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

திலீப், சாஸ்திரிகள்னா தர்ப்பைக் கட்டைப் பிடிச்சுண்டு அமாவாசை தர்ப்பணம் பண்ணி வைக்க லோக்கல் டிரெயின்லே ஓடற பிரகிருதி இல்லே. கல்கத்தாவிலே கெத்தான பிஸ்கட் கம்பெனியிலே டைரக்டர். நாட்டிய சாஸ்திரத்திலே எக்ஸ்பர்ட். அகமதாபாத்லே வாசம். என் குஜராத் யூனிவர்சிட்டி டாக்டரேட் தீசிஸ் கைடு இவர் தான். இது அவாத்து மாமி. அந்தக் கால நாட்டிய மேதை. உங்கம்மா மாதிரி.

பிள்ளாண்டன் என்ன படிச்சிருக்கான் என்று நாட்டிய மேதை விசாரிக்க, அதைத் தொடர்ந்து, இவா அம்மா பேரு என்ன, பாத்திருப்பேனா இருக்கும், பந்தநல்லூர் பாணியா, வழுவூர் பாணியா என்று பிஸ்கட் கேள்விக் கணை தொடுத்தார்.

பி.ஏ படித்திருப்பதாக திலீப் அறிவித்தான்.

பேஷ். எகனாமிக்ஸா?

பிஸ்கட் சுவாரசியம் மாற்றுக் குறையக் கேட்டார்.

இல்லே மாமா, பி.ஏ மராட்டி.

பிஸ்கட்டுக்கு சுத்தமாக அக்கறை போயொழிந்தது.

பி.காம் என்னாக்க கல்கத்தாவிலே அமையறதான்னு பார்க்கலாம். பிஏவுக்கு கொஞ்சம். கொஞ்சமென்ன ரொம்பவே பிரயத்னப் படணும். அதுவும் மராட்டி பி.ஏ.

உள்ளூர்லே கிடைச்சாலும் சரிதான். என்னடா திலீப்?

பெரியம்மா மூணாம் மனுஷத்தனத்தோடு பொத்தாம் பொதுவாகச் சொன்னாள்.

இங்கே எங்க பிஸ்கட் கம்பெனி இருந்தா முயற்சி பண்ணலாம். பிடிவாதமா கல்கத்தாவிலே வச்சு என்ன ஒரு கஷ்டம் பாருங்கோ. அகமதாபாத்தில் இருந்து மாசம் ஒரு தடவை ப்ளேனைப் பிடிச்சு, உசுரைக் கையில் பிடிச்சுண்டாக்கும் போய்ட்டு வரேன். இவளுக்கு திருமாங்கல்யம் இரும்பிலே அடிச்சுப் போட்டிருக்கு. அதான் எனக்கும் சாவே இல்லை.

நாட்டியத் தாரகை திருமாங்கல்யத்தைக் கண்ணில் ஒற்றிக் கொள்வாள் என்று திலீப் எதிர்பார்த்தான். அந்தம்மாள் ஆமா, எப்பவும் அச்சானியமா எதாவது சொல்ல வேண்டியது என்று உரக்க முணுமுணுத்தாள்.

அதுவும் சுமங்கலிப் பிரார்த்தனைக்கு மினிஸ்டர் மாமியைக் கூப்பிட வந்த இடத்திலே. உங்களுக்குப் போறவே போறாது.

பிஸ்கட். சூழ்நிலையைச் சகஜமாக்க திலீப்பைப் பார்த்தார். மினிஸ்டர் உறவுக்காரன். மாமா என்று வேறே சொல்லி விட்டான். பிஸ்கட் கம்பெனி வகையிலும், தன் வகையிலும் மினிஸ்டர் கருணை தேவை. மினிஸ்டர் மாமி டாக்டர் ஆவதோடு தொடர்பு முடிந்து விடக் கூடாது. சுமங்கலிப் பிரார்த்தனை, காதுகுத்து, வளைகாப்பு. போய்ச் சேர்ந்து பத்தாம் நாள் எள்ளுருண்டை, அப்பம், வடை. மினிஸ்டர் வந்தா ரொம்ப சந்தோஷப் படுவோம். டாக்டர் மாமி வாங்கோ.

அம்பி, பேஷா நான் கல்கத்தா வரேன் மாமா, மாசாமாசம் என்ன கிடைச்சாலும் பரவாயில்லேன்னு சொல்லு, பார்க்கலாம்.

பிஸ்கட் ஆதரவாகச் சொன்னார். கரண்ட் போன கல்கத்தா ஆபீசில் மாசம் முழுக்கக் கணக்கு எழுதிய அப்புறம் நூறு பாக்கெட் உப்பு பிஸ்கட் சம்பளமாக வாங்குவதாக திலீப் கற்பனை செய்தான். அப்படியே இருந்தாலும், பம்பாயில் சமாளிக்கலாம். சாலில் விற்றுக் காசாக்கி ஒரு மாசம் ஓட்டி விடலாம். கல்கத்தாவில் சிரமம். பொழுதுக்கும் விதவிதமாக மீன் சாப்பிடுகிற ஊர் அது.

ஏதோ பாருங்கோ. திலீப் ஒரு அப்ளிகேஷன் அனுப்பு சாஸ்திரி மாமாவுக்கு.

அனுப்பிட்டு என்னைத் திறந்து விடு. நான் ஆடணும்.

ஆஸ்பத்திரி கட்டிலுக்குக் கீழே இல்லாத சலங்கைகளைத் தேடி, இரும்புச் சங்கிலியை எடுத்துக் கணுக்காலில் கட்டித் தோற்கிறாள் திலீப்பின் அம்மா.

குழப்பமாகப் பெரியம்மாவைப் பார்த்து, சரியென்றான் திலீப். பசிக்கிறது. வந்த விஷயம் பற்றி இன்னும் பேச முடியவில்லை. கிரண்டிக் டேப் ரிக்கார்டரில் மைல் கணக்காக நீண்ட டேப் சலிப்பில்லாமல் பாடிக் கொண்டிருந்தது.

இது சோபான சங்கீதம். அர்ஜுன நிருத்தத்துலே வர்ற பின்பாட்டு.

பெரியம்மா சொன்னாள்.

அர்ஜுன நிருத்தம்னா ஒத்தைக் கால்லே ஆடறதா?

நாட்டிய மாமி அடுத்த அசடு பட்டத்தை எதிர்பார்த்தபடியோ என்னமோ கேட்டாள்.

பெரியம்மா எழுந்து நின்றாள். அறிவுத் தெளிவு உண்டு பண்ண அவளுக்குக் கிடைத்த மகத்தான சந்தர்ப்பம் இது. நழுவ விடப் போவதில்லை எந்தக் காரணத்துக்காகவும்.

டேப் ரிக்கார்டரை சத்தம் தாழ்த்தி வைத்தபடி பெரியம்மா சொன்னாள் –

அர்ஜுன நிருத்தம் ஆண்கள் மட்டும் ஆடறது. சில சமயம் ரெண்டு ஆம்பளை சேர்ந்து ஆடறதும் உண்டு. மயில் நிருத்தம்னும் இதைச் சொல்லுவா. போன மாசம், கேரளத்தில் கோட்டயம் ஜில்லா போயிருந்த போது ரெகார்ட் பண்ணினேன். இடுப்பைச் சுத்தி தழையத் தழைய மயில் பீலி கட்டிண்டு ரொம்ப மெதுவா ஆடுவா.

உள்ளே எதாவது போட்டுப்பாளா இருக்கும். றக்கை உதுந்துடுத்துன்னா ரசாபாசமாயிடுமே?

ராம சாஸ்திரிகள் இடைவெட்டினார்.

அசடே என்று அவரைப் பார்த்துக் கனிவாகச் சிரித்தபடி பெரியம்மா தொடர்ந்தாள்.

அடுத்த மாசம் லண்டன் போகணும். அதுக்குள்ளே மயில் நிருத்தம் மோனோகிராப் தயார் பண்ணிடறேன். ரிசர்ச் தீசிஸோட சேர்த்துடலாம். சரியா சாஸ்திரி மாமா?

மந்திரி பத்தினியான அவள் சட்டென்று எட்டாத உயரத்தில் அறிவின் சிகரமாக, கலை, கலாச்சாரத்தில் யூனிவர்சிட்டி டாக்டர் பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளராக பிரம்மாண்டமாக வியாபித்து நிற்கிறாள். ஆராய்ச்சி கைட் என்றாலும் அற்பமாக ராமா சாஸ்திரி பிஸ்கட்டை எச்சில் படுத்திக் கடித்துக் கொண்டு வெகு கீழே நிற்கிறார். அது கூட இல்லாமல் மாடிப் படிக்கட்டில் சோபான சங்கீதம் கேட்டபடி கீழ்ப்படியில் செருப்புத் துடைத்துக் கொண்டு திலீப் உட்கார்ந்திருக்கிறான்.

சமையல்கார மாமி வந்து நின்று இலை போட்டாச்சு, சாப்பிடலாம் என்றாள்.

அப்புறம் சாப்பிடலாம். என்னைத் திறந்து விடு. நான் ஆடணும்.

திலீப்பின் அம்மா பொறுமையின்றிச் சொல்கிறாள்.

ஓசிச் சாப்பாடு கிடைக்கறது அம்மா. உனக்கும் எடுத்து வரேன். சாப்பிட்டுட்டு ஆடலாம்.

திலீப் சொல்கிறான்.

மதராஸி பிராமணச் சாப்பாடு வேணாம்டா. பெருங்காயம் நாறும். கொலிவாடா மீன் வாங்கி கமகமன்னு சமைக்கறேன். திறந்து விடு. ஆடிட்டு வந்து சமைக்கறேன்.

அம்மா நினைவின் உள் அறையில் காலில் இரும்புச் சங்கிலியோடு படுத்துக் கொள்கிறாள்.

வாங்கோ டைனிங் ரூம் மாடியிலே இருக்கு. திலீப், மாமாவைக் கூட்டிண்டு வாடா.

பெரியம்மா தான் இன்னும் இளமையாக இருப்பதாக பரதநாட்டிய மாஜி நடன மணிக்குக் காட்டவோ என்னவோ மாடிப் படியில் வேகமாக ஏறினாள்.

வாஷ்பேசினில் கை கழுவும்போது ராமசாஸ்திரி ரெஸ்ட் ரூம் எது என்று திலீபிடம் சத்தம் குறைத்து விசாரித்தார். அவன் வெகுளியாக இடது கைப்பக்கம் இருந்த பெரிய படுக்கை அறையைக் காட்ட, பெரியம்மா சிரித்தபடி வாஷ்பேசினுக்குப் பின்னால் சாத்தி வைத்திருந்த லெட்ரினைச் சுட்டினாள்.

ராமா சாஸ்திரி சட்டைக்குள் கை விட்டுப் பூணூலைத் தூக்கிக் காதில் மாட்டிக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே போக, திலிப் புதியதாக ஒரு வார்த்தை கற்றுக் கொண்ட பெருமையும் ஈரக் கையுமாக டைனிங் டேபிளுக்கு வந்தான். இந்தப் புத்தறிவுக்காக ஒரு வேலை உடனே கிட்டினால் நன்றாக இருக்கும். கழிப்பறைக் கட்டணம் வசூலிக்கிற வேலை என்றாலும் சரிதான். ஆனால் கல்கத்தாவில் எல்லாம் வேண்டாம்.

எலையை நேராப் போட்டுக்கோ. கும்மாச்சி மாதிரி குமிச்சு நிறுத்தி வச்சா பரிமாற மட்டுமில்லே சாப்பிடவும் கஷ்டமாச்சே.

சமையல் மாமி சொல்லியபடி செங்குத்தாக வைத்த திலீப்பின் வாழை இலையைக் கிடைமட்டமாக்கி, கத்தரிக்காய்க் கறியும் அரிசிச் சாதமும் வைத்துப் போனாள்.

மராத்தி பழக்கம் இப்படி நேரா எலையை வச்சுக்கறது.

பெரியம்மா நடனமணியின் தகவலுக்காகச் சொல்ல அவள் வேறு கிரகத்திலிருந்து வந்தவனைப் பார்ப்பது போல் திலீப்பைப் பார்த்தாள்.

ஜனனி எங்கே பெரியம்மா, காலேஜ் போயிருக்காளோ?

ஒப்புக்காகக் கேட்டான். இதை சந்தோஷமாக வரவேற்று ஆமா என்ற பெரியம்மா தன் மகள் படிக்கும் பெண்கள் காலேஜின் சரித்திரம், அவள் படிக்கும் வகுப்பின் மேன்மை, ஜனனியின் நாட்டிய, இந்துஸ்தானி சங்கீத ஈடுபாடு என்று சொல்ல ஆரம்பித்தது, எல்லோரும் சாப்பிடுவதில் மும்முரமானபோது தேய்ந்து மறைந்தது.

இந்தப் பிள்ளையாண்டான் பெங்களூர் அன்னபூர்ணா அக்கா வகைதானே. முகத்திலே ஜாடை அச்சு அசலாத் தெரியறதே. மைசூர்லே நீ பிறந்த போது நான் அங்கே புரகிராம் கொடுக்க வந்திருந்தேன். ஆச்சு இருபத்தஞ்சு வருஷம் இருக்கும். அன்னபூர்ணா அக்கா மாதிரி வேகமா ஃபுட் ஒர்க் வேறே யாருண்டு?

ரசம் கலக்கி இங்கே போடுங்கோ. சரியாப் போச்சு. இவன் அம்மா மராத்தி. பண்டர்பூர் கங்கா பாய். எனக்கு ஓர்ப்படி. லாவணி ஆடுவா. சதாராவிலே மேடையிலே ஆடிண்டு இருக்கறச்சே இவன் பிறந்தான். என்னடா சரிதானே?

அவல் கேசரி போடுங்கோ மாமி.

திலீப் வேறு எதுவும் பேச மாட்டான். இப்போதைக்கு.

ராமா சாஸ்திரி புறப்பட்டுப் போன பிறகு திலீப் பெரியம்மாவிடம் ஐயாயிரம் ரூபாய் பணம் கேட்டான். அம்மா வைத்தியச் செலவுக்கு. மனநோய் ஆஸ்பத்திரியில் ஆயிரம் ரூபாய் கட்டாவிட்டால் அவளை அழைத்துப் போகச் சொல்கிறார்கள்.

பெரியப்பா கிட்டே கேட்டியோ?

இல்லே, அவர் கிளம்பிப் போய்ட்டார்.

திலீப் அறை வாசலிலேயே நின்று கொண்டிருந்தான். பெரியம்மா ரிக்கார்டரை ஆன் செய்தாள். கிரண்டிக் டேப் மெதுவாகக் அகவுவது தொடர்ந்தது.

அறைக்குள் மயில் ஒன்று நாட்டியம் ஆடிக் கொண்டிருப்பதாக திலீப்புக்குப் பட்டது.

அம்மா ஜன்னல் கதவுக்குப் பின்னால் நின்றபடி அவனையே கூர்ந்து பார்த்தாள்.

என்னைத் திறந்து விடு. நானும் ஆடணும்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன