புதிய நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 18 இரா.முருகன்


கண்பத், சர்வலோக் கேலே?

ஹோகா. எல்லோரும் போயாச்சு

அணி, ஜண்டா வண்டா சக்ளா?

லேவுண் கேலே. கொடியெல்லாம் எடுத்துப் போயிட்டாங்க.

திலீப் சாங்க்லி பகுதி விவசாயிகளின் பேச்சு மொழியில் கண்பத் மோதகிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்.

அவன் இந்தக் கூட்டத்தைப் பொறுத்த வரை, பம்பாய் மாநகரத்துக்கு வேலை தேடி வந்தவன். கிராமத்தில் கரும்பு பயிரிட்டுப் பயிரும் ஜீவிதமும் கரிந்து போன விவசாயியின் பிள்ளை. எந்த வேலை, எவ்வளவு கூலி என்றாலும் அவனுக்கு சம்மதமே. சாப்பாட்டுக் கடையில் போய்ச் சத்தம் போடுவதும் அதில் ஒன்று தான்.

லுங்கிவாலா ஒருத்தனும் தெருவிலே நடமாடக் கூடாது.

மகாப் பெரிய தலைவர் சொன்னார். பெரிய தலைவர், தலைவர், பிரமுகரான தொண்டர், இடைப் பட்ட தொண்டர், கீழ் மட்டத் தொண்டர், தொண்டருக்குத் தொண்டர் என்று அடுத்த நிலை மனுஷர்களுக்கு அது எடுத்துரைக்கப் பட்டது. எத்தனாவது நிலை ஆசாமியோ, மிட்டாய்க்கடைக்காரரும், இந்தப் பகுதியில் கட்சியில் பிரமுகருமான பாலகிருஷ்ண கதம் திலீப்பை ஒரு பொருட்டாகக் கருதி இதை மந்திர உபதேசமாக அவனுக்கு எடுத்தோதினார். காசு கிடைக்குமென்றார்.

அண்டாகுண்டா வாலாக்களை அடித்து விரட்டணும். மதராஸுக்கு போகட்டும் வேசி மகன்கள் எல்லாரும். நமக்கு வரும் வேலை வாய்ப்பைத் தட்டிப் பறிக்கறாங்க பன்றிகள். நீர்யானைகள்.

திலீப் நீர்யானையைப் பார்த்தது கிடையாது தான். என்றாலும், உணர்ச்சிவசப்பட்டதாக முகத்தை வைத்துக் கொண்டு, குரல் பிசிறடிக்கச் சொன்னான்.

நாலு பேருக்கு முன்னால் குரலை உயர்த்தி, வசவு உதிர்த்துக் கோபப்பட இன்னும் அவனுக்குப் பழக்கமாகவில்லை. ஆனாலும் அவன் படித்தவன் என்பதால் பத்து இருபது பேரைக் கோஷம் போட நடத்திப் போகிறான். பணம் கிட்டும் ஏற்பாடு இது. அவனுக்கும், கூட வந்து சத்தம் போட்டு விட்டு நடக்கிற எல்லோருக்கும். அவனுக்குக் குரல் இன்னும் சத்தமாக வந்தால், நூறு இருநூறு பேரைக் கூட நடத்திப் போவான்.

பழக்கமாக வேண்டும். ஆகும். சீக்கிரம் அவனும் நேதாவாக, ஆயிரம் பேருக்கு வழி காட்டுவான். டெரிலின் சட்டையை தினசரி சாயந்திரம் துவைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இன்னும் ரெண்டு சட்டை வாங்குவான். கழட்டிப் போட்ட சட்டையில் நூறும் இருநூறும் எடுக்க மறந்து இருப்பதை எடுத்து, சோப்பு நுரைத்த ஈரக் கையோடு உள்ளே கொண்டு போய் வைக்கும்போது கையில் காசு புரளுகிற எக்களிப்பு கூடிவரும்.

கணபத் மோதக் தோளில் வழிந்து தொங்கும் ஜோல்னாப் பையோடு திலீப் பக்கத்தில் வந்தான். பைக்குள் கடமுட சத்தம் கேட்டது.

என்ன வச்சிருக்கே இதுக்குள்ளே?

பையைக் கொஞ்சம் போல் திறந்து காட்டினான் கண்பத். இறுக்கமாக மூடி போட்ட ஸ்டெயின்லெஸ் பாத்திரம். திலீப் சிரித்தான். அவனுக்குத் தெரியும் அந்தப் பாத்திரத்தை.

போராட்டத்துக்குப் போகிறபோது இது எதுக்கு கண்பத்?

என்ன அண்ணா சொல்றே? அங்கே போய் நாலு கோஷம் போட்டு இருக்கப்பட்டவனை நாலு சாத்து சாத்திட்டு வர மட்டுமா இப்படிக் காலங்கார்த்தாலே கிளம்பறோம்?

கண்பத் மோதக் மூணரை வரிசையாக வாயில் இருந்த பல் எல்லாம் முதலைக் குட்டி போல் தெரியக் கேட்டான்.

ஆமடா மோதகமே. அதுக்குத்தானே ஆபீஸ்லே காசு கொடுக்கறாங்க?

காசு மட்டும் கிடைக்குதுன்னு நான் வரல்லே,

கண்பத் மோதக் ரோஷத்தோடு சொன்னான். பின்னே வேறென்ன இருக்கும்?

இந்த ரெண்டு மாசத்துலே எத்தனை மதராஸி ஓட்டலுக்கு உள்ளே கூட்டம் சேர்த்து தடால்னு புகுந்திருக்கோம். போனதும் மதராஸியைத் திட்டி ரெண்டு கோஷம். பரிமாற எடுத்து வந்த பதார்த்தத்தை பறிச்சு தரையிலே வீசறது. உள்ளே உக்கார்ந்து சாப்பிடறவனை ஓட ஓட அடிச்சு விரட்டறது. கல்லாவில் இருந்து பைசாவை எடுக்கற மாதிரி போக்குக் காட்டறது மதராஸுக்குத் திரும்பப் போறேன்னு அங்கே இருக்கறவனை வலுக்கட்டாயமா சொல்ல வைக்கறது. அம்புட்டுத்தானே.

கண்பத் மோதக் கொஞ்சம் பொறு என்று கை காட்டி விட்டு, திலீப் தோளில் அவன் ஜோல்னாப் பையை மாட்டினான். கதவைத் திறந்து வைத்துக்கொண்டே ஆபீஸ் லெட்ரினில் தொரதொரவென்று மூத்திரம் பெய்துவிட்டுக் கையை பைஜாமா பாக்கெட்டில் விட்டபடி திரும்ப வந்தான்.

திலீப் அரை அடி இடைவெளி விட்டு நின்று அவனுடைய ஜோல்னாப் பையைத் திரும்ப நீட்டினான். இன்று முழுக்க இந்த மோதகன் தொட்டுக் கொடுத்த எந்தத் தீனியோ, பானமோ வாங்கப் போவதில்லை அவன்.

போன மாசம் வரைக்கும் நானும் அதெல்லாம் கிரமமா செஞ்சுட்டு வந்து இருபத்தைஞ்சு ரூபாய் வாங்கிட்டுப் போயிட்டிருந்தேன் திலீப் அண்ணா. இப்போ நிலைமை வேறே.

கணபத் மோதக் வாசல் கதவைப் பூட்ட பூட்டையும் சாவியையும் எடுத்துக் கொண்டான்.

விராரில் உள்ளொடுங்கி இருக்கப்பட்ட கட்டடத்தின் வெகு பின்னால் கதவு வைத்து இணைத்த மற்றொரு தொடுப்புக் கட்டடத்தில் நீள வாக்கில் பம்மிப் பதுங்கிய இடத்தில் பிளைவுட் சுவர் வைத்துத் தடுத்த பாதி அறை அது. வாசகசாலை. ரெண்டு பெஞ்ச், தலைவர் படம். பெரியதாக சத்ரபதி சிவாஜி மகராஜ் படம். கட்சி அலுவலகத்தில் திலீப்பும் கண்பத்தும் கையெழுத்துப் போட்டு வாங்கி வந்தது. நாலு தெரு தள்ளி பிரிஜ்வாசி மிட்டாய்க்கடை நடத்தும் பால்கிருஷ்ண கதம் வெள்ளைக் குல்லாய், பைஜாமாவில் வந்து திறந்து வைத்து, எல்லோருக்கும் எதிரி மதராஸி என்று முழங்கிப் போனது போன மாதம் தான்.

போன மாதக் கடைசியில் கண்பத் மோதக் கல்யாணம் ஆனது. திலீப் அழைக்கப் பட்டிருந்தான். பத்திரிகை வைக்கும்போதே பால் காச்சற குக்கர் வேணாம் அண்ணா என்று கோடி காட்டி விட்டான் கண்பத். வீட்டில் தினசரி புழங்க வேறு எது கொடுத்தாலும் அவனுக்கு இஷ்டமே என்று தெரிந்தது.

கண்பத் மோதக்கோடு தலைமை அலுவலகத்துக்குப் பத்திரிகை வைக்கத் துணைக்குப் போனபோது வாசல் முன்னறையில் மதராஸி சோக்ரி நீள விரல்களை நீட்டி நீட்டி எதோ டைப் அடித்துக் கொண்டிருந்தாள்.

என்ன தேவ் ஆனந்த் இங்கே விசிட்? ஷூட்டிங் இல்லியா?

அவள் திலீபைப் பார்த்துச் சிரித்தபடி இந்தியில் கேட்டபோது டைப்ரைட்டரோடு அவளைத் தூக்கி மடியில் வைத்துக் கொள்ள வேணும் போலிருந்தது அவனுக்கு. சனியன், ரெமிங்டன் டைப்ரைட்டர் எதுக்கு உல்லாச வேளையில் என்று புரியவில்லை.

அன்றைக்குத் தப்பித்தவறி அவள் தமிழில் பேசி விடுவாள் என்று ஒரு வினாடி பயந்தது தேவையில்லாதது என்று புரிந்தது திலீபுக்கு. இடம் பொருள் புரிந்து அவனோடு மராத்தியில் பேசினாள். தெய்வங்கள் கூட்டமாக நாகபுரி போயிருப்பதாகவும், அங்கே கல்யாணம், ஆபீஸ் திறப்பு, வாசகசாலை திறப்பு என்று மும்முரமாக இருப்பதாகவும் சொன்னாள்.

யாருமே என் கல்யாணத்துக்கு வர மாட்டாங்களா என்று கண்பத் சோகமாகக் கேட்டபோது, நான் வரேன் அண்ணா என்றாள் அவள். எத்தனையோ இந்தி, மராத்தி சினிமா பார்த்து உருகிக் கண்ணீர் விடும் பதத்தில் இருந்த கண்பத் உடனே நெகிழ்ந்து போய், ரெண்டு கையையும் நான் சொல்ல என்ன இருக்கு என்பது போல் விரித்தது திலீபுக்கு ஞாபகம் வந்தது.

உன்னை மாதிரி ஒரு தங்கை இருக்க எனக்குக் கொடுத்து வைக்கணுமே. பெயர் என்னம்மா?

கண்பத் கல்யாணப் பத்திரிகையைச் சணல் பையிலிருந்து எடுத்தபடி குரல் கமறக் கேட்டான்.

அகல்யா என்று பெயர் சொன்னாள் அவள்.

திலீப் மனதில் இந்தி நடிகை சைராபானு சிரிப்பதும் சாய்வதும் நிமிர்வதும் அகல்யா மாதிரித் தெரிய ஆரம்பித்தது அப்புறம் தான். சாய்ராபானு பூஞ்சை உடம்பு. அந்த உடம்புக்கு டைப்ரைட்டரோடு என்ன, மேஜை நாற்காலியோடு கூடவும் மடியில் இருத்திக் கொள்ளலாம் தான்.

கண்பத் கல்யாணத்துக்கு அகல்யா வரவில்லை. திலீப் கண்பத்துக்கு நாலு லிட்டர் பிடிக்கிற மாதிரி மூடி போட்ட தூக்குப் பாத்திரம் வாங்கிப் பரிசாகக் கொடுத்தான். அதுக்கு முந்திய வாரம் பரேல் உடுப்பி ஓட்டலுக்குப் போய் வந்ததில் கிட்டிய வருமானம் கிழங்கு மாதிரிப் பாத்திரமானது., கண்பத் மோதக்கின் கல்யாண அன்பளிப்பாக சிஞ்ச்போக்லி திலீப் மோரே கொடுத்தது என்று இங்கிலீஷில் பெயர் அடித்து இருப்பது அந்தப் பாத்திரம். பரிசாகக் கொடுப்பதற்கு முன் தாதர் ராணடே ரோடை அண்டி ஓரமாகப் படர்ந்திருக்கும் மதராஸி கடை வாசலில் எழுத்துக்கு இருபத்தைந்து பைசா கூலி வாங்கிக் கொண்டு தாடிக்கார மதராஸிக் கிழவன் பெயர் கொத்தித் தந்தான், அந்தப் பாத்திரத்தைத்தான் இப்போது கண்பத் கொண்டு வந்திருக்கிறான்.

விரார் ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்திருந்த சொற்ப நேரத்தில், பெண்டாட்டி ராத்திரி பல் துலக்கி, குளித்து விட்டுப் படுக்க வரச் சொல்வது பற்றியும், பிரிஜ்வாசி மிட்டாய்க்கடையில் இருந்து அவன் கல்யாணத்துக்குக் குறைந்த விலையில் பாலகிருஷ்ண கதம் கொண்டு வந்து கொடுத்த பாதி பரிசும் பாதி விலைக்கு வாங்கியதுமான தூத்பேடா, கல்யாண ராத்திரியிலேயே கெட்டுப் போயிருந்ததால், வீட்டுக்காரிக்கு வாந்தியாகி ராத்திரி முழுக்க அவளுக்கு வென்னீர் குடிக்கக் கொடுத்துப் பொழுது போனது பற்றியும் விளக்கினான் கண்பத்.

திலீப் நினைவு அகல்யாவைச் சுற்றி வந்து கொண்டிருந்தது. இந்தப் போராட்டம் இல்லையென்றால் அவளைப் பார்க்க, இன்று ஏதாவது சாக்கு சொல்லிக் கொண்டு கட்சி ஆபீசு போயிருப்பான். அகல்யாவை அவன் ஒரு நாள் அவன் கல்யாணம் செய்து கொள்வான். மதராஸிக் கல்யாணமாக அது இருக்காது. பால் காய்ச்சுகிற பீப்பாய் சைஸ் குக்கர்கள் அன்பளிப்பாக வரும் அப்போது.

ரயில் வந்து கொண்டிருந்த போது பாத்திரத்தைத் தட்டியபடி கண்பத் சொன்னது –

மதராஸி ஓட்டல் சாம்பாரும் வடையும் அவளுக்கு இஷ்டம்.

திலீப்புக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. இன்றைக்குப் போராட்டம் செய்ய வந்த எல்லோருமே புதுசாகக் கல்யாணம் ஆகி, எல்லோருடைய வீட்டுக்காரிகளுக்கும் மதராஸி ஓட்டல் பலகாரம் இஷ்டம் என்று, தூக்குப் பாத்திரங்களோடு வீட்டுக்காரர்களைக் குளிக்க, பல் துலக்க வைத்து அனுப்பியிருந்தால்?

தரையில் வீசி வீணடிப்பதற்குப் பதிலாக நாலு மராட்டிக் காரர்களாவது சாப்பிட்டு மதராஸியைத் துடைத்தெறியட்டும். போன காரியம் நல்ல படிக்கு நாசகரமாக முடிந்து, காசு வந்தால் போதும் திலீபுக்கு. யார் கொடுத்தாலும் சரி தான்.

ரயில் நிற்பதற்குள் கண்பத் ஓடி ஜன்னலைப் பிடித்தபடி ஏற, எதுக்கு அவசரப்படறே என்று சத்தம் போட்டான் திலீப். இப்படி யாராவது ஓடும் ரயிலில் ஏறினாலோ, நகர்கிற வண்டித் தொடரிலிருந்து குதித்து இறங்கினாலோ அவனைக் கன்னத்தில் அறைய வேண்டும் போல் ஆவேசம் வருகிறது அவனுக்கு.

ஐம்பது வயசிலும் இந்த தினசரி வாழ்க்கைக்கான சராசரி புத்தி கூர்மை இல்லாமல் அப்பா வீட்டில் உட்கார வேண்டிப் போனது இப்படி ஏறித்தான்.

கட்சிப் பத்திரிகையில் ஆங்கிலக் கட்டுரை எழுதுவதையும், இந்தியில் யாரோ எழுதிய நினைவுக் குறிப்புகளை இங்கிலீஷில் மொழிபெயர்க்க ஒப்புக் கொண்டதையும் இனி வேண்டாம் என்று அகற்றி வைத்தது அப்பாவின் சிறகு முறிந்த இந்த ஒரு வருடமாகத் தான். அவரும் அவருடைய மார்க்சிஸமும், சோஷலிசமுமாக, ரணதிவே, ரங்க்னேக்கர், லிமாயி என்று தேடிப் போய் பழசை அசைபோட்டு விட்டு கையில் நாலு பழைய புத்தகத்தோடு, அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றிய கவலையே இல்லாமல் அலைந்து கொண்டிருந்தவர் மனதால் மரித்த கணத்தை திலீப் அறிவான்.

அம்மா சித்தப் பிரமை கண்டதும் இந்த மாதங்களில் தான். திலீபின் பெரியப்பா அமைச்சரான போது, பாரம்பரியக் கலைகளைப் பாதுகாக்க சர்க்கார் நியமித்த ஏதோ கமிட்டியில் அவளை அங்கத்தினராக நியமித்திருந்ததால், மாதாமாதம் உருளைக்கிழங்கு வடையும் சாயாவுமாக ஒரு மீட்டிங், அதுக்குப் போய், நேரம் ஒதுக்கி விவாதம் செய்து – உருபடியாக ஒண்ணும் நடக்கலை என்பாள் அம்மா- திரும்பிய வகையில் உழைப்புக் கூலியாக ஒவ்வொரு கூட்டம் முடிந்தும் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிக் கையெழுத்துப் போட்டு இருநூறு ரூபாய் பேட்டா என்று இருந்த ஏற்பாடு அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ரொம்பவே தோதாக இருந்தது.

அம்மாவுக்கு வருகிற ஆர்டிஸ்ட் பென்ஷன் ரூபாய் முன்னூறும் அந்த இருநூறும் சேர, ஐநூறு ரூபாய் வந்து கொண்டிருந்தது. கஷ்டமில்லாமல் மூணு பேர் ஜீவிக்க, மழைக் காலத்தில் புதுக் குடை வாங்க, விநாயகர் சதுர்த்திக்கு நாலு நாள் கொண்டாடி பூஜை செய்து, விசர்ஜன் அன்று கடலில் விட, கலர் விநாயகர் நடுத்தர சைஸில் வாங்க, செவ்வாய் தோறும் சாபுதானா வடை நைவேத்தியத்தோடு அம்மா உபவாசம் இருக்க என்று சீராகச் செலவாகி வந்தது அம்மா சித்தம் பேதலித்ததோடு முடங்கியது. சேர்த்து வைத்திருந்த சொற்பமும் அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்த வகையில் கரைந்து போனது.

எலக்ட்ரிக் ரயிலில் வயசான ஒரு கம்யூனிஸ்ட் காரன் தாவி ஏறி எத்தனை பேர் வாழ்க்கையைக் கெடுத்துப் போட்டான். திலீப்புக்குக் கோபம் அடங்கவில்லை இன்னும்.

என்ன ஸ்டேஷன்?

பயாந்தர் என்றான் கண்பத் மோதக்.

ரயில் ஒரு நிமிஷம் நிற்க பெரிய கும்பலாக ஆபீஸ் போகிற ஒரு படை முன்னேறி சர்வ சுதந்திரமும் உரிமையுமாக இரைச்சலோடு கம்பார்ட்மெண்டில் நுழைந்தது. அவசரமாக உள்ளே வந்த ஒரு நீல நிற முழுக்கைச் சட்டை, இடுப்பில் இருந்து வழியும் ட்வீட் பேண்ட் காரர் கையில் வைத்திருந்த இங்கிலீஷ் பேப்பரை கர்ம சிரத்தையாகப் படிக்க ஆரம்பித்தார்.

போரிவ்லி வர, அங்கே இன்னொரு கூட்டம். யாரும் இறங்குகிற வழியாக இல்லை. திலீப் பக்கத்தில் கம்பத்தைப் பிடித்துக் கொண்டு நின்றவர் கைக் கடியாரத்தில் எக்கி மணி பார்த்தான். ஒன்பதரை. காத்திருப்பார்கள்.

கடிகாரக் காரர் என்னத்துக்காகவோ கடிகாரத்தையும் அப்புறம் முகத்தையும் கைக்குட்டையால் துடைத்ததை எரிச்சலோடு பார்த்தான் கண்பத் மோதக்.

என்ன அவசரம், பார்த்து ஏறுங்க என்று உள்ளே வந்தவர்களிடம் மராத்தியில் கூச்சல் போட்டான் அவன்.

அந்தேரியில் தானே இறங்கணும் திலீப் அண்ணா?

இல்லேப்பா. சாந்தாக்ரூஸ்.

இறங்கி ஐந்து பத்து நிமிடம் நடக்க வேண்டும். மற்றவர்கள் எல்லோரும் போய்ச் சேர்ந்து காத்திருபார்கள். காத்திருக்கட்டும்.

ஆமோதித்துத் திருப்தியைத் தெரிவித்தான் கண்பத். அவர்கள் வந்தபிறகு ஆரம்பித்தால் போதும்.

கண்பத் ஒரு வினாடி கண்மூடி நிற்க என்ன விஷயம் என்று கேட்டான் திலீப்.

பதார்த்தம் எதிலும் பெருங்காயம் போட்டு இருக்கக் கூடாதுன்னு சித்திவினாயகரிடம் வேண்டிக்கிட்டேன் அண்ணா.

கண்பத் மொணமொணத்தான். பலமாகச் சிரித்தான் திலீப்.

ட்வீட் பேண்ட்காரன், ஒரு வளைவில் ரயில் வேகமாகத் திரும்பியபோது தடுமாறி திலீப் மேல் மோதிக் கொண்டான். அவசரமாக விலகினான் அவன். மலம் உடுப்பில் பட்டது போல் முகம் சுளித்தான். கைக்குட்டையால் மேலே துடைத்து திரும்பவும் கடியாரத்தைத் துடைத்து, ஒதுங்கி அருவருப்போடு நிற்க, கண்பத் குரல் உயர்த்தினான் –

ஏன், உன் புழுத்த மதராஸ் உடம்பு அசுத்தப்பட்டுப் போச்சா, மராத்தியன் மேலே பட்டு?

கம்பார்ட்மெண்டில் எல்லோரும் கலவரத்தோடு பார்த்தபடி நின்றார்கள். கிட்டத்தட்ட முழுக்க மதராஸிகளின் கூட்டம், இந்த நேரத்தில் கூட்டமாகக் கிளம்பி ஆபீஸ் போகிறவர்கள் இவர்கள் தான்.

கூட்டமாகப் பக்கத்தில் பக்கதில் புறாக்கூண்டு ப்ளாட்டில் இருந்து, கூட்டமாக கோவில் கட்டி, கூட்டமாக வருஷம் ஒரு தடவை பூணூல் மாற்றிக் கொண்டு, கூட்டமாக தென்னிந்திய சங்கீதக் கச்சேரி கேட்டு சிலாகித்துக் கொண்டு, தினசரி ஓடி நடக்கிறவர்கள்.

இவர்கள் எல்லோரும் அடுத்த ஸ்டேஷன் வரும்போது இறங்கி அடுத்த கம்பார்ட்மெண்டில் ஏறிக் கொள்வார்கள் அல்லது இறங்கி, அடுத்த ரயிலுக்காகக் காத்திருப்பார்கள் என்று தோன்றியது திலீப்புக்கு.

இறங்கலாம் கண்பத் என்றான் திலீப், ரயில் வேகம் குறைந்து ஸ்டேஷனுக்குள் வந்தபோது.

நகருங்க நகருங்க என்று கண்பத் குரல் விட்டுக் கொண்டே முன்னேற, முழுக் கூட்டம் மதராஸிகளும் ஒதுங்கி நின்று வழிவிட்டார்கள்.

அண்ணா, மதராஸி உடுப்பி ஓட்டல் வடை பிரமாதமா இருக்கும். சீக்கிரம் போகாட்ட தின்னே தீர்த்துடுவானுங்க.

கண்பத் கண்ணில் கனவு தெரிய ஓட ஆரம்பித்தான். நில்லு நில்லு என்றபடி திலீப் அவன் நடைக்குச் சரியாக வேகமாக ஓட, அவனுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.

என்ன அண்ணா, நம்ம புள்ளைங்க மாதிரி இருக்கு?

எதிரே ஒரு சின்னக் கூட்டம் கோஷம், போட்டபடி வந்து கொண்டிருந்தது.

கண்பத் கண்ணில் கலவரம் தெரிந்தது.

திலீப்போடு இன்றைக்குப் போராட்டம் நடத்த வந்த கும்பல் தான் இது.

நேரம் ஆச்சு. வாங்க.

கண்பத் அவர்களை இழுக்காத குறையாகக் கூப்பிட வெகு சோனியாகப் பல்லி மாதிரி இருந்த ஒருத்தன், காணாதது கண்டதாகப் பிரமிப்பு நீங்காத குரலில் சொன்னான் –

மதராஸி ஓட்டல்லே மயில் படத்தில் இருந்து உதி விழுது.

முழங்காலுக்கும் தாழ்ந்து பிரம்மாண்டமான பையைத் தோளில் மாட்டி இருந்த அந்தச் சோனன் சொன்னான். அற்புதங்களோடு மோத அவனால் முடியாது என்ற பாவம் அவன் குரலில் பூடகமாகப் பூசி நின்றது.

என்னது?

நம்ப முடியாமல் கேட்டான் திலீப். இன்னிக்கு பேட்டா வராதா?

உதி. சாம்பல். தொரதொரன்னு பொடியா உதிருது. சாப்பிடற இடத்துலே சுவர்லே மாட்டி வச்ச படத்திலே இருந்து விழுது அண்ணா. நானே பார்த்தேன். நாங்க எல்லோரும் பார்த்தோம்.

அதுனாலே?

ரெண்டு மாசமா, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை ஒன்பதரை மணிக்கும் பகல் மூணு மணிக்கும் கண்ணாடிச் சட்டத்துக்குள்ளே மயில் கழுத்தில் இருந்து பொலபொலன்னு இப்படி சாம்பல் கொட்டறதாம். பிரதி சனிக்கிழமை ராத்திரி எட்டேகாலுக்கும் இது உண்டாம்.

ஏதாவது தூசியா இருக்கும். பழைய படத்தை எல்லாம் வருஷக் கணக்கா மாட்டி வச்சிருக்கானே சாலா மதராஸி. சுவருக்கு சுண்ணாம்பு அடிச்சிருப்பானா ஹராம்சாதே. பல்லு வெளக்குவானா கமீனே? தூத்பேடா செய்யத் தெரியுமா பேவகூஃப்? வாங்க போய் அந்த லுங்கிவாலா குத்தா தலையிலே நாலு தட்டு செல்லமா ஓங்கித் தட்டிட்டு வருவோம்.

வடைகளின் நினைவு அபாரமாகக் கவிய, மூட நம்பிக்கையை நிர்மூலம் செய்கிற, எதிரிகளை எள்ளி நகையாடும் தொனியில் கண்பத் சொன்னான்.

நாங்க வரலே. இன்னிக்கு வேணாம். செவ்வாயும், சனியும் இல்லாத நாளில் வச்சுக்குவோம்.

சோனன் கையைக் குவித்தான். அவனுடைய ஜோல்னாப் பைக்குள் என்ன இருக்கும் என்று பார்க்க வேணும் போலிருந்தது திலீப்புக்கு.

கண்பத் சோனனின் தோளில் அழுத்திக் கேட்டான் –

அன்னிக்கு வடை போட்டிருப்பானா என்ன?

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன