ஆளும் வளரணும் அறிவும் வளரணும்

 

Kungumam column – அற்ப விஷயம் -20

அஷ்டாவதானம் என்று ஒன்று உண்டு. நல்ல தமிழில் எண் கவனகம். அதாவது கவனத்தை ஈர்க்கும் எட்டு விதமான செயல்களை ஒரே நேரத்தில் செய்வது. உதாரணமாக, அஷ்டாவதானி முன்னால் ஒருத்தர் உட்கார்ந்து இறுதி அடியைக் கொடுத்து உடனே வெண்பா பாடச் சொல்லிக் கொண்டிருப்பார். இன்னொருத்தர் பதினெட்டு இலக்க எண்ணை ஐந்து நிமிடத்துக்கு ஒன்றாகத் தவணை முறையில் சொல்லி முழு எண்ணையும் திரும்பக் கூறும்படி கேட்பார். மற்றொருவர் கூட்டி வகுத்துப் பெருக்கிக் கழித்து ஒரு பெரிய மனக் கணக்காகப் போட்டு விடை வினவுவார். பின்னால் ஒருத்தர் பூவால் அவ்வப்போது மெல்லத் தொட்டு எத்தனை தடவை தொட்டேன் என்று கணக்கு விசாரிப்பார். இன்னொருத்தர் ஒவ்வொரு ராகமாகப் பாடி என்னென்ன என்று கண்டுபிடிக்கச் சொல்வார். கனமாக இருக்கா, சரி, அடுத்தவர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களின் பெயரை வரிசையாகச் சொல்லி, ஒவ்வொன்றுக்கும் கதாநாயகியின் பெயர் கேட்டபடி இருப்பார். இதோடு கூட இன்னும் ரெண்டு பேர் வேறு எதையாவது தூண்டித் துருவிக் கேட்பார்கள். எல்லாவற்றுக்கும் சரியாக, குறித்த காலத்துக்குள் விடை அளிக்க வேண்டும். இது நிச்சயம் திறமைதான். வருடம், மாதம், தேதி சொன்ன மாத்திரத்தில் என்ன தினம் என சட்டென்று சொல்வது, மணிக்கணக்காகப் பேசுவது, நாள் கணக்காகத் தொடர்ந்து நடனமாடுவது கூட அதேபடிதான். பார்க்கிறவர்கள் கைதட்டி சால்வை அணிவிக்கலாம். மாலை போட்டுக் கையில் எலுமிச்சம்பழம் தரலாம். மைக்கைப் பிடித்து நீட்டி முழக்கிப் பாராட்டிவிட்டு இறங்கலாம். அப்புறம்? இந்தத் திறமையால் என்ன பயன்? போட்ட சால்வையையும், எலுமிச்சம் பழத்தையும் தவிர.

பெரியவர்கள் தான் இப்படி மூளையை, உடலைக் கசக்கிப் பிழிந்து திறமையை வெளிப்படுத்த மெனக்கெடுகிறார்கள் என்றால் குழந்தைகளையும் நாம் விட்டுவைப்பதில்லை. முக்கியமாக, அறிவாளியாகக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில். பள்ளிக்கூடத்தில், பல பள்ளிகளுக்கும் இடையே மாவட்ட, மாநில, தேசிய அளவில், வானொலியில், தொலைக்காட்சியில் பொது அறிவுப் போட்டி, பரிசு என்று ஏற்படுத்தி அவர்களை பந்தயக் குதிரைகளாக்கி ஓட வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். காசும் கவுரவமும் அடையப் பந்தயம்.

வரலாறு, அறிவியல், கணிதத்தில் எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அடிப்படை அறிவுத் தகவல்கள் உண்டு. இந்தியாவுக்கு எப்போது விடுதலை கிடைத்தது? மின்னல் மின்னி நேரம் கடந்து இடிச் சத்தம் கேட்கக் காரணம் என்ன? துருவப் பிரதேசத்தில் உயிர் வாழும் விலங்குகள் எவை? காந்தியடிகள், அம்பேத்கர், லெனின், மார்ட்டின் லூதர் கிங் இவர்களும் மற்ற மொழி, இனம், நாட்டு எல்லை கடந்து போற்றப்படும் தலைவர்களும் சக மனிதனின் வாழ்க்கையை மேன்மைப்படுத்தச் செய்த செயல்கள் என்ன? நல்ல இலக்கியம் எவை?இதெல்லாம் தெரிந்திருந்தாலே சரியான உலகியல் கண்ணோட்டமும், அறிவுத் தெளிவும், வாழ்க்கைக்கு அடித்தளமும் அமைய வாய்ப்பு. எட்டாம் வாய்ப்பாடும் இப்படித்தான்.

ஆனால், டெண்டுல்கர் போன வருடம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் பந்தயத்தில் எடுத்த ரன் எத்தனை? ஒரு பென்சிலில் இருக்கும் கிராபைட்டை வைத்து எத்தனை கிலோ மீட்டர் நீளத்துக்குக் கோடு கிழிக்க முடியும்? இரண்டு வருடம் முன்னால் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட செயற்கைக் கோளின் பெயர்? உலகின் பெரும் பணக்காரர் யார்? போன வருடம் நடிப்புக்கு ஆஸ்கார் விருது யாருக்குக் கிடைத்தது? இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் என்ன? அல்லது ஆங்கிலத்தில் புழக்கத்தில் இல்லாத கடினமான சொற்களாகத் தோண்டி எடுத்து, சரியான உச்சரிப்பு, ஸ்பெல்லிங் இத்யாதி விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்து என்ன செய்யப் போகிறோம்? போட்டிக்கு நாம் இறக்கி விடும் குழந்தைகளுக்கு இவற்றைக் கட்டாயமாகக் கரைத்துப் புகட்டி அவையத்து முந்தி வரச் செய்வதால் அவர்கள் வருங்காலம் என்ன விதத்தில் சிறப்பாகும்? பிள்ளைப் பருவத்து மகிழ்ச்சியான விளையாட்டுக்குக் கூட நேரம் இன்றி தகவல் சுமை என்ற இன்பர்மேஷன் ஓவர்லோட் புத்தியில் ஏற்றிக் கொள்ள இந்தப் பிஞ்சுகளை இம்சிப்பது குழந்தைகளிடம் காட்டப்படும் வன்முறை அல்லாமல் வேறு என்ன?

உலகம் தோன்றிய காலம் முதல், போன விநாடி நிகழ்ந்தது வரையான எல்லா செய்தியும் தெரியாவிட்டால் பாதகமில்லை. தேவையான நேரத்தில் உடனே கிடைக்க இந்தத் தகவல்களை எங்கே தேடலாம் என்ற அறிவு இருந்தாலே போதுமானது. இண்டெர்நெட் வந்த பிறகு எல்லாமே மவுஸைக் க்ளிக்கி விரல் எட்டும் தூரத்தில் தான். பொது அறிவுப் போட்டியில் முதல் பரிசு வாங்க என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தலையணைப் புத்தகங்களை உருப்போட, படித்தது மனதில் தங்கி இருக்க ஞாபக சக்தி மாத்திரை விழுங்க, விழித்திருக்கும் நேரமெல்லாம் இப்படியான தேவையற்ற தகவல் குப்பைகளைத் தேடித் தேடிச் சேர்த்து வைக்க என்று எந்தச் சிறுவனும், சிறுமியும் துன்பப்பட வேண்டாம். அவர்களை ஆட விடுவோம். பாட விடுவோம். அவர்களாக இருக்க விடுவோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன