சத்திய சோதனை ஆந்திரா ஸ்டைல்

 

Kungumam column – அற்ப விஷயம் -24

எட்டுக்கால் பூச்சிக்குப் பட்ட காலிலே பட்டால் பரவாயில்லை. சொச்சம் இருக்கப்பட்ட ஏழு காலை வைத்து ஒப்பேற்றி வலை கட்டித் தொங்கிவிடலம். கம்ப்யூட்டர் துறை எட்டுக்கால் பூச்சி இல்லை என்பதால் அடி மேல் அடி விழுந்ததும் தாங்கச் சக்தி இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு தேசம் தந்த புத்தாண்டுப் பரிசு இந்த சட்டக் கல்லூரி ஹாஸ்டல் ஸ்டைல் அடி.

சாதாரணமாகவே பெரும்பாலான கம்ப்யூட்டர் கம்பெனிகளில் எழுதாத விதி ஒன்று உண்டு. ஆந்திரத்திலிருந்து யாராவது வேலைக்கு மனுப் போட்டால் நர்சரி ஸ்கூல் பாஸான சான்றிதழ் தொடங்கி பட்ட மேல்படிப்பு சான்றிதழ் வரை ஒன்று விடாமல் தூண்டித் துருவி, நிஜமாகவே வாங்கினதா இல்லை பெஜவாடாவில் யாராவது காசு வாங்கிக் கொண்டு உற்பத்தி செய்து கொடுத்ததா என்று ஆராய்ந்து தள்ளி விடுவார்கள். அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்கு ஆந்திர வாடுக்கள் போனாலும் இதே மரியாதைதான். இத்தனைக்கும் ஆந்திர சோதரர்கள் புத்தி கூர்மையிலும் படிப்பிலும் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை. ஆனாலும் அவர்களில் சிலர் முன்னொரு காலத்தில் செய்த சர்ட்டிபிகேட் மோசடியால் மற்றவர்களும் பாதிக்கப்பட்டார்கள். ஒரு மனவாடு செய்ததை விட மகாப் பெரிய மோசடியை கம்ப்யூட்டர் கம்பெனி நிர்வாகியான ஒரு ‘பெத்த மனவாடு’வே இன்று செய்தால்? பத்து நூறு பேர் இல்லை. ஐம்பத்திமூணாயிரம் தொழில்நுட்ப வல்லுனர்களை வைத்து மென்பொருள் உருவாக்கி, இயக்கி சேவையளித்து உலக வரைபடத்தில் ஒரு நாடு விடாமல் கம்ப்யூட்டர் கொடி நாட்டிய நிறுவனம் அது. பங்குச் சந்தையில் பத்து ரூபாய் மதிப்புள்ள இந்தக் கம்பெனியின் ஒரு ஷேருக்கு ஐநூற்றுச் சில்லறை ரூபாய் கொடுத்து வாங்க ஒரு காலத்தில் நாட்டில் போட்டா போட்டி.

கம்ப்யூட்டர் கம்பெனிகளுக்கே ஒரு தீராத ரோகம் உண்டு. மூன்று மாதத்துக்கு ஒருமுறை ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று பங்குதாரர்களுக்கும் மொத்த உலகத்துக்கும் பறைசாற்ற, வருமானம் பெருகிக் கொண்டே போவதை உறுதி செய்ய வேண்டும். நஷ்டக் கணக்கோ குறைந்த வருமானமோ காட்டினால் பங்கு மார்க்கெட்டில் ஷேர் மதிப்பு விழுந்து விடலாம். ஆந்திரக் கம்பெனியை ஆட்டி வைத்த பயம் இது. தெலுங்கு ஆத்ம கௌரவப் பிரச்சனை கூட ஆகியிருக்கலாம்.

வருடக் கணக்காக ஏதோ கொஞ்சம் போல் லாபம் அல்லது நஷ்டம் என்று வந்து கொண்டிருக்க, இதை எல்லாம் அப்படியே பூசி மறைத்து விட்டு லாபம், இன்னும் லாபம், கூடுதல் லாபம் என்று ஒரே டியூனில் பாடிக் கொண்டிருந்த கம்பெனித் தலைவர் புத்தாண்டில் கையைத் தூக்கி மாப்பு கேட்டார். ‘அறுநூற்று நாற்பத்தொன்பது கோடி ரூபாய் லாபக் கணக்கு காட்டினது சும்மா ஒளஒளாக்காட்டிக்கு. அசல் லாபம் அறுபத்தோரு கோடி தான். கம்பெனிக்கு இருக்கறதாச் சொன்ன சொத்து, கடன் விவரம் எதுவும் உண்மையில்லை, சாரி’.

பொய்க் கணக்கை வருஷக் கணக்காகக் காட்டி இவ்வளவு பெரிய கம்பெனி இத்தனை நாள் சிறந்த நிர்வாகத்துக்கான உலக விருது எல்லாம் வாங்கிச் சாதனை படைத்தபோது கம்பெனியின் ஆடிட்டர்கள் வாயில் பென்சிலை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘ஏய்யா, அறுநூத்துச் சில்லறை கோடி லாபம் வந்ததுங்கறியே. வங்கிக் கணக்கைக் கொண்டா. அந்தக் காசு வரவு வச்சிருக்கா பார்க்கலாம்’ என்று அடிப்படை கேள்வி கூட கேட்காமல் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்ட இந்தப் புண்ணியவான்கள் கொடுத்த நற்சான்றிதழை நம்பிய முதலீட்டாளர்கள் மோசம் போனார்கள். ஐநூறுக்கு வாங்கிய ஷேருக்கு இப்போது மதிப்பு வெறும் ஐந்து ரூபாய்தான். அட, கோவிந்தா.

ஆந்திரக் கம்பெனி நிர்வாகி செய்த தகிடுதத்தத்தால், மற்ற இந்தியக் கம்ப்யூட்டர் கம்பெனிகளும் சந்தேகப் பட்டியலில் உட்படுத்தப் படலாம். ஒரு புது ப்ராஜக்ட் கொடுப்பதற்கு முன்பு வெள்ளைக்கார கனவான்கள் சட்டமாக வந்து உட்கார்ந்து முந்தாநாள் குண்டூசியும், கழிப்பறை கழுவ பினாயிலும் வாங்கிய கணக்கு வரை சரிபார்த்து திருப்தி இருந்தால் தான் போ ரைட் என்று வேலையை ஆரம்பிக்க அனுமதி வழங்குவார்கள். இந்தக் கம்பெனிகளில் பணம் முதலீடு செய்யவும் யோசிக்கலாம் என்பதோடு ஏற்கனவே செய்த முதலீடுகளும் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு நாட்டில் பெரும் அந்நியச் செலாவணி நெருக்கடியை உருவாக்கலாம்.

இதை விடக் கொடுமை, அடுத்த மாதம் சம்பளத்துக்கு வழி தெரியாமல், வேலை நிலைக்குமா என்று புரியாமல் ஆந்திரக் கம்பெனியில் பணி புரியும் ஐம்பத்திமூன்றாயிரம் கம்ப்யூட்டர் கூலிகளும் குடும்பங்களும் நடுத் தெருவுக்கு வரக் கூடிய சூழ்நிலை. இந்தியாவிலேயே மிகப் பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியைப் பிறப்பித்த பெங்களூருக்காரர் கறாராகச் சொல்லி விட்டார் – ‘அந்தத் தீட்டுப் பட்ட தெலுங்கு கம்பெனியிலே இருந்து வேலை கேட்டு யாராவது வந்து நின்னா வெளியே துரத்து’. ஏன்’யா, தெரியாமல் தான் கேட்கிறேன். கம்பெனி நிர்வாகி செய்த தில்லுமுல்லுக்கு அங்கே வேலை பார்க்கும் பாவப்பட்ட ஊழியர்களைத் தண்டிப்பது என்ன நீதி? நிர்வாகியை கூண்டில் ஏற்றி விசாரியுங்கள். அதுக்கு முன்னால் அந்த ஆடிட்டர்களைப் பட்டை உரியுங்கள். ஆந்திரா கம்பெனியில் பொட்டி தட்டுகிறவன் எல்லாம் டுபாக்கூர் என்று அவசரமாக முடிவு கட்டாதீர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன