New novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 14 இரா.முருகன்

ஒடிந்து விழுவது போல் கதாநாயகி. அவளைப் படைத்தவனோ, உடுப்புத் தைத்தவனோ, சரீர பாரத்தை எல்லாம் ஸ்தன பாரமாக மட்டும் உடம்பில் வடக்குப் பிரதேசத்தில் உருட்டி வைத்து மற்றப்படி குச்சிக் கால்களோடு அவளைப் புல் தரையில் வெட்டுக்கிளி போலத் தத்தித் தத்தி ஓட வைத்திருக்கிறான். அவளைக் கட்டி அணைத்துத் தூக்கித் தட்டாமாலை சுற்றுகிற மீசை மழித்த கதாநாயகனை ஒரு நூற்றுச் சில்லரைப் பேர் கிராண்ட் ரோடு சினிமா தியேட்டரின் பூச்சி ஊறும் நாற்காலிகளில் உட்கார்ந்து, பகல் காட்சியில் அசூயையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திலீப்பும் அந்தக் கூட்டத்தில் உண்டு.

அம்பலப்புழையில் திலீப் வேலை பார்க்கிற மங்களூர் ஓடு வேய்ந்த ஆபீஸில் பிஸ்கட் ராமா சாஸ்திரி என்ற நிர்வாகிக் கடன்காரனிடம் கையைக் காலை, பீஜத்தைப் பிடித்துத் தாங்கிப் பத்து நாள் மாத்திரம் லீவு சொல்லி பம்பாய் வந்தது நேற்று நடுப் பகலுக்குத்தான்.

உன் அம்மா உடம்பு ரொம்பவே படுத்திண்டு இருக்குடா திலீபா. சியாமளா கிட்டே நான் சொன்னேன்னு ஒரு வாரம் ரஜா சொல்லிட்டு வா.

பாட்டி எழுதிய இண்லண்ட் லெட்டரை மகா நிர்வாகியான சியாமளா பெரியம்மாளிடம் திலீப் காட்டியபோது திலீப் தனக்கு என்ன உறவு என்றே மறந்து போனவளாக அவள் சர்க்கார்த் தனமாகச் சொன்னாள் –

சாஸ்திரி சார் கிட்டே லீவு சொல்லிட்டுப் போ. அடுத்த மாதம் முதல் வாரம் கான்பரன்ஸ் இருக்கு. வேலை ஏகத்துக்கு உண்டு.

பாட்டி உனக்கு மாமியார் தானே பெரியம்மா? என் அம்மா உனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் உன் ஓரகத்தி தானே. அப்படி என்ன அலட்சியம் அவர்களைப் பற்றி? என்னைப் பற்றி? காசு இல்லாது போனதா?

கேட்க நினைத்ததை மனதிலேயே அடக்கிக் கொண்டு, பிஸ்கட் நாய் சாஸ்திரி காலை நேர ஏப்பத்தோடும், அவனுடைய அதிசுந்தரி வானரமுகி பெண்டாட்டி உடுத்திக் கிழித்த பட்டுப் புடவைத் துணியில் லாலேலா என்று கோமாளி உடுப்பு போல தைத்த கால்சராயோடும், வாயில் ஸ்கலித வாடை அடிக்கும் தாம்பூலத்தோடும் உள்ளே நுழைந்தபோது லீவுக்காகத் திலீப் மன்றாட ஆரம்பித்தது வெற்றியில் முடிய சாயந்திரம் ஆனது.

ரொம்ப நன்றி சாஸ்திரி மாமா. அயோக்கியா, உனக்கென்ன நன்றியும் நமஸ்காரமும் நபும்சகனே. போய்ட்டு ஒரு வாரத்துலே ஓடி வந்துடறேன். உன் மயிர்பிடுங்கி மேனேஜர் பதவிக்காக இல்லேடா அல்பமே, பெரியம்மா ஏதோ மாசாமாசம் சம்பளமா விட்டெறியறாளே அந்தப் பணத்துக்காகத் தான் திரும்ப ஓடி வரேன். பாவம் உங்களுக்கு ஒரு வாரம் கொஞ்சம் அதிகம் வேலை. சும்மா மரச் சாமானை மத்தது வச்சுத் தேச்சுண்டு தானே உக்கார்ந்திருக்கே. குண்டி வணங்கி வேலை செய்யடா குண்டுசட்டி நரகல் புழுவே.

வடக்கே சூலம் தெற்கே ஈட்டி கிழக்கே கத்தி என்று பஞ்சாங்கத்தில் போட்டதோ என்னமோ காரணாமாகக் கிட்டத்தட்ட காலியாக இருந்த கம்பார்ட்மெண்டில், அவன் சுகமாக யாத்திரை செய்து பம்பாய் வந்தது நேற்றுப் பகலில்.

விச்சியா இருக்கியா என்று வரவேற்ற கற்பகம் பாட்டியிடம் அம்மா எங்கே என்று கேட்க, குடியிருக்கும் சால் காம்பவுண்டு சுவரை காட்டினாள் அப்போது.

கக்கூஸ் போற வழியிலே படுத்து வெயிலோ மழையோ சதா தூங்கிண்டே இருக்காடா உங்கம்மா. சாப்பாடும் வேணாம்கிறா. பயமா இருக்கு எனக்கு.

பாட்டி அழ ஆரம்பித்தாள். கிழிசல் பாயில் கிழிந்த கோரை போலக் கிடந்த அம்மாவைத் திலீப் பார்க்க அவன் கண்ணிலும் நீர் திரண்டது.

பாட்டி நான் பக்கத்து சால் தாய்டே மூலம் அட்டண்டர், அதான் அம்மாவைக் கவனிச்சுண்டு பகல் பூரா இங்கேயே இருக்க ஆள் ஏற்பாடு செஞ்சுடறேன். உனக்கும் உதவியா இருப்பா. இன்னும் ரெண்டே மாசம். பெரியம்மாவோட ஃபோல்க் ஆர்ட் ஃபோரம் ஆபீஸ் இங்கே திரும்பிடும். அப்புறம் ஆபீஸ் போய்ட்டு வந்து நானே பார்த்துப்பேன். பணம் எல்லாம் எதேஷ்டமா இருக்கு.

பாட்டி முகத்தில் கொஞ்சம் போல் நிம்மதி தெரிந்தது. புத்தி பேதலித்திருக்கும் பிரசித்தி பெற்ற மராட்டிய லாவணி நாட்டியக்காரி ஷாலினி மோரேக்குப் பணிவிடை செய்து ஓய்ந்து போயிருந்தாள் அவள். மருமகளானால் என்ன, சாதம் ஊட்டுகிறதும், பீ துடைக்கிறதும், உடுதுணி மாற்றுவதும் அலுக்காமல் எத்தனை வருடமாக அவள் செய்து வருகிறாள்! வீட்டுக்காரன், நாட்டுப் பெண் என்று அவள் சிஷ்ருஷைக்கு இதுவரை ரெண்டு பேர் வந்தாச்சு. அதில் ஒருத்தரை எல்லா உபசாரத்தோடும் மேலே அனுப்பியும் ஆனது.

இன்றைக்குக் காலையில் முதல் வேலையாக தாய்டே மூலம் அம்மாவுக்கு உதவி செய்ய ஆள் நியமித்து அட்வான்ஸ் பணமாக ஆயிரம் ரூபாயும் கொடுத்து ஒரு கடமை முடித்தான் திலீப்.

அடுத்து கட்சி ஆபீஸுக்குப் போய் கார்ப்பரேஷன் எலக்‌ஷனுக்கு கட்சி வேட்பாளர்களை முடிவு செய்கிறதைப் பற்றிக் கேட்க வேண்டும். எப்படியாவது அவன் இருக்கும் வார்டுக்கு நிற்க வைக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நின்று ஜெயித்தால் அவன் எங்கேயோ போய் விடலாம்.

எல்லா நினைவும் கனவுமாக லோக்கல் டிரெயின் ஏறப் போனபோது தான் ஸ்டேஷனில் கூட்டமே இல்லாததைக் கவனித்தான். ஸ்டேஷன் பெட்டிக்கடைக் காரன் சொன்னான் –

இன்னிக்கு புத்த பூர்ணிமா. லீவு நாளாச்சே. மறந்துட்டீங்களா திலீப் அண்ணா?

ஆர்வம் எல்லாம் உடனே தணிய, எடுத்த அடி திரும்ப வீட்டுக்குப் போகாமல் வேறே என்ன செய்யலாம் என்று யோசிக்க, கமர்தீன் நினைவில் வந்தான்.

கிராண்ட் ரோடு, பெடர் ரோடு வட்டாரங்களில் நயம் வெளிநாட்டு சரக்குகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கிற கமர்தீன் திலீப்பின் பால்யகால சகா.

அம்பலப்புழை வெக்கையும் உச்சி மண்டையில் துளைத்துப் புகும் கேரள வெய்யிலின் உஷ்ணமும் குறைக்க கூலிங் கிளாஸ் வாங்க கமர்தீனைப் பார்க்கக் கிளம்பினதும் தாமதமாகியது. அவன் மஸ்ஜித் பந்தர் சரக்கு கொள்முதலுக்குப் போயிருந்தான். இன்னும் ரெண்டு மணி நேரத்தில் வந்து விடுவான் என்றார்கள் அண்டை அயலில். குறைந்தது ரெண்டு மணியாகுமாம்.

சும்மா கிராண்ட் ரோடில் சுற்றி வருவதைத் தவிர்க்க சினிமா தியேட்டரில் புகுந்து இன்னும் இரண்டு மணி நேரம் இந்த நிழல் கதாநாயகியின் உருட்டித் திணித்த முலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க விதித்திருக்கிறது திலீப்புக்கு.

அம்பலப்புழை ஆபீசில் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள்? .அவன் நினைத்துக் கொண்டபோது கூட்டமாக விசில் அடிக்கும் சத்தம். திலீப் திரையைப் பார்த்தான்.

ஊஊஊ என்று காண்டாமிருகம் போலவோ, நிலக்கரி பற்ற வைத்து ஓட்டும் ரயில் இஞ்சின் போலவோ ஊளையிடும் அந்தத் தீக்குச்சி அழகியைப் பின்னால் இருந்து அணைக்க அடி மேல் அடி வைத்து நெருங்கி வருகிறான் கதாநாயகன். அழகான முன்பாரம் கொண்ட பெண். அவளுக்கு வாய் நாறும். திலீப்புக்கு எப்படியோ தெரியும். அது கவலைப்பட விஷயமில்லை. எல்லா துர்வாடையோடும் அவளை விடிகாலைக் கனவுகளுக்கு இடைபட்ட போர்வை நேரங்களில் அவன் அனுபவிப்பான். அந்தக் கதாநாயகி அகல்யாவாக உருமாறிக் குதித்து வரும்போது அவன் அடுத்த தூக்கத்துக்குப் போயிருப்பான்

மழைக்காலமும் தீபாவளியும் முடிந்து அடுத்த குறுகிய வேனல் காலம் எட்டிப் பார்க்கும் பொழுது இது. கடகடத்துச் சுழலும் கூரை மின்விசிறிகள் வெக்கையைக் கூட்டிப் புழுக்கத்தை சர்வ வியாபகமாக நிறுத்தி வைக்க, குளோசப்பில் உதட்டைச் சுழித்து அழகு காட்டும் கதாநாயகி, குச்சியில் செருகிய ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி கண்ணடிக்கிறாள்.

பெண்களே இல்லாத பார்வையாளர்கள் கூட்டத்தின் பொது ரசனையை இன்னும் இறக்கி அந்த உதடுகளுக்கு நடுவே புகுத்த வேண்டியது என்ன என்று கூப்பாடு எழுந்தது. அவள் முலைகள் திரையில் பெரும் பகுதியை ஆக்கிரமித்துத் திரண்டு நிற்கும்போது மூட்டைப்பூச்சி மண்டிய இருக்கைகளில் இருந்து பல இணைக் கைகள் அவற்றை அள்ளக் குவிகின்றன. திலீப்பும் ஒரு வினாடி கை குவித்துத் தன் நிலை உணர்ந்த சங்கடத்தோடு கரங்களைக் கால் சராய் பாக்கெட்டுகளில் நுழைத்துக் கொள்கிறான்.

திலீப்பின் பக்கத்து இருக்கையில் இருந்து கொங்கைகளுக்குக் கை நீட்டி லகரியோடு அரைக்கண் மூடியவன் திலீப்பின் அரைக்கட்டை வெறித்துப் பார்த்து விஷமமாகச் சிரிக்க அவன் பாக்கெட்டில் வைத்த கைகளைத் திரும்ப எடுத்து அவசரமாக மடியில் குறுக்கே வைத்துக் கொண்டான்.

கதாநாயகன் குரங்கு போலக் குதித்து யாஹு என்று சத்தம் போட்டுக் கதாநாயகியைத் துரத்திப் பிடித்து அவளைத் தூக்குகிறான். அவள் ஒரு வினாடி திகைத்து பின் சந்தோஷமாகச் சிரித்து அவன் உடம்போடு, மேலே பருத்த நீளமான அட்டைப் பூச்சி போல ஒட்டிக் கொள்கிறாள், அந்தக் காட்சியில் எல்லோருக்கும் ஏதோ கிளர்ச்சி இருப்பதாக திலிப் உணர்ந்தான். அந்தப் பெண்ணின் கவனத்தைச் சட்டென்று கவர்ந்து அவளை ஆக்கிரமிக்கும் செயலில் இருக்கும் மிருகத்தன்மை அதற்குக் காரணம் என்று தோன்றியது. இதை எல்லாம் அகல்யாவோடு பேசும்போது சொல்ல வேண்டும். அவள் சோடோ ஏ சப் கந்தா பாத் என்று ஒற்றைப் பொட்டு மூக்குத்தி அணிந்த மூக்கை விடர்த்திச் சொல்லும்போது எழும் காம உணர்ச்சி இந்த ஆக்கிரமிப்பு வெறிக்குச் சற்றும் குறைந்ததில்லை என்று திலீப்புக்குத் தெரியும்.

அரங்கத்தில் உள்ளே வரும் வழி ஓரமாக, ஒளிக் கற்றையைக் கசிய விட்டுக் கொண்டு ஒரு கதவு திறந்தது. கம்பளிச் சால்வையும், சரிகை மாலையும், புகையும் ஊதுபத்தியும் ஒரு தட்டில் சுமந்து ஒரு முதிய முகம்மதியர். அவர் இடுப்பில் இருந்து இறங்கி வழியும் பைஜாமாவும், மேலே இறுக்கமான கமீஸும் அதற்குச் சுற்றி மேலே அரைகுறையாக நிற்கும் கை இல்லாத கம்பளிக் கோட்டுமாக உள்ளே நுழைகிறார். நேரே நடந்து இடது பக்கம் கதவு திறந்து அவர் வெளியேறுகிறார். திலீப்புக்கும் அங்கே இருக்கும் எல்லோருக்கும் அவர் செய்கை புரியும்.

சினிமா தியேட்டர் வளாகத்தில் கபர்ஸ்தான் உண்டு. சரியாகச் சொல்லப் போனால், கபர்ஸ்தான் வளாகத்தில் தான் சினிமா தியேட்டர் எழுந்து நிற்கிறது. அடக்கத்துக்கு வரும் உடல்கள் பின் வாசல் வழியாக வரும் போதும், அங்கே கல்லறைகளுக்கு மரியாதை செலுத்த யாராவது போகும் போதும், தியேட்டருக்குள் குப்பென்று ஊதுபத்திப் புகை சூழும்.

மழையில் நனைந்த, வாய் நாறும் கதாநாயகியை ஹீரோ இறுக அணைத்து மின்னலும் இடியும் அனுமதி கொடுக்க, இரண்டு பேரும் களைந்த உடுப்புகள் தெறித்து விழுந்து, சுகத்தை யாசிக்கும் பாடலோடு திரை நிறைகிறது.

விசில் சத்தம் திரும்ப உயரும்போது, இன்னொரு முறை கதவு திறந்தது. ஊர்வலம் போல வரிசையாக, கையில் தட்டுகளில் சாதர் என்ற பூ வேலைப்பாடு கொண்ட சால்வையும், புகையும் ஊதுபத்தியும், சரிகை மாலைகளுமாக முதியவர்கள் உள்ளே வந்தார்கள். முப்பது பேராவது இருக்கும்.

உயர்ந்து எழுந்த சாம்பிராணிப் புகையில் தியேட்டரில் எல்லோரும் தும்மத் துவங்கினார்கள். ஒரே வினாடியில் சிருங்காரமும் காமமும் கலந்து வியர்வையாக வழிந்த சூழ்நிலை மாற, இறப்பையும் இழப்பையும் நினைவு படுத்தி தியேட்டர் அமைதியாக இருந்தது. அறைக்குள் சுற்றிச் சுற்றி வந்து இலை மறைவு காய் மறைவாக ஒன்று கலக்க முற்படுகிற ஜோடியை யாரும் சிரத்தையோடு கவனிக்கவில்லை. சாதரோடு வரும் பெரியவர்கள் ஒருவர் பின் ஒருவராகத் திரைக்கு முன்னால் கடந்து போவதை எல்லோரும் நோக்கி இருந்தார்கள்.

அந்த ஊர்வலம் கபர்ஸ்தானில் முடிந்த போது, மேலும் சினிமா பார்க்க அலுப்பு ஏற்பட்டவர்களாக அங்கே இருந்ததில் ஏழெட்டுப் பேர் தவிர மற்றவர்கள் வெளியே நடந்தார்கள், திலீப்பும் வெளியே வந்தான்.

உங்கப்பா கிட்டே உன் பங்கு சொத்தைக் கேளேன். காக்கி நிஜார் தான் ஐவேசுன்னாலும் உன் பங்குக்கு ஒரு கிழிஞ்ச நிஜார் வருமில்லே?

யாரோ யாரிடமோ கிண்டலடித்துக் கொண்டு ரெண்டு பேரும் ஒரு ஓட்டை ஸ்கூட்டரில் வேகமாகத் தெருவில் போய்க் கொண்டிருந்தார்கள்.

தேவ வசனம் கேட்ட அனுபூதிக்குப் போயிருந்தான் திலீப்.

அதானே, அப்பா போன தடமே தெரியவில்லை. மெட்ராஸ் வீட்டில் அவருக்கும் பங்கு உண்டே. அது திலீப்புக்கு இப்போது கை மாறி இருக்குமே. பெரியப்பாவைச் சந்தித்து தைரியமாக அப்பா பங்கை, தன் பங்கைத் தரும்படி கேட்டால் என்ன தப்பு?

வேலை கொடுத்திருக்கிறாளே பெரியம்மா. பங்கைக் கொடு பவிஷைக் கொடு என்று பெரியப்பாவிடம் கேட்டால் மாதச் சம்பளம் தரும் காமதேனு இனிமேல் சுரக்காமல் போகுமா?

போகலாம். வேலை இல்லாமல் அகல்யாவை எப்படிக் கல்யாணம் செய்ய? குடும்பம் நடத்தப் பணம்? கவுன்சிலர் எலக்ஷனில் நிற்பது உத்திரவாதமானதா? நின்றாலும் ஜெயிப்பது எவ்வளவு உத்திரவாதமானது?

எதிரே மோத வந்த மோட்டார் சைக்கிளைத் தவிர்த்து பிளாட்பாரத்தில் ஏறி நடந்தான் திலீப். வீட்டுக் கதவு திறந்து தலையில் சீப்போடு வந்த பெண் தெருவில் எறிந்த முடிக் கற்றை அவன் காலைச் சுற்றி விலகிப் போனது. அவள் கதவில் ஒயிலாகச் சாய்ந்து, நான் குளிச்சுட்டு ஃப்ரஷ்ஷா வரேன் உள்ளே வந்து இரு என்றாள் திலீப்பிடம் ரொம்ப நாள் பழகியது போல் அந்நியோன்யமாக. புத்த பூர்ணிமா தினத்தில் நடுப் பகல் நேரம் தான் சுகம் தேடுவதில்லை என்று பதில் சொல்லியபடி திலீப் நடந்தான்.

வாக்கேஷ்வர் சாலை வழியாக மலபார் ஹில் போகும் டவுண் பஸ், நிறுத்தத்தில் அவனுக்காகக் காத்திருந்தது. பெரியப்பாவை அவன் சந்திக்க எல்லாம் கூடி வந்திருக்கிறது. சண்டை போட வேண்டாம். சும்மா பேசினால் போதும்.

அவன் பெரியப்பாவிடம் சுமுகமாக, வம்சத்துச் சொத்து பற்றி விசாரிப்பான். அதோடு தொடர்பு இல்லாமல் கல்யாணம், சின்னதாக சிஞ்ச்போக்லியில் ஒரு பேக்கரி ஆரம்பிக்க உத்தேசம், செட்டில் ஆக அவசரம், அம்மாவின் உடல்நிலை என்று தகவல் பகிர்வான். பெரியப்பா பணம் கொடுத்தால், அது கூடக் குறைய இருந்தாலும் பரவாயில்லை, அவன் வாழ்க்கை முழுக்க அவரை நினைத்துத் தொழுவதாக வாக்குத் தத்தம் செய்வான். ஏற்கனவே மாசாந்திரச் சம்பளத்துக்கு வழி செய்த பெரியம்மாவைத் தினம் மனதில் நெற்றி அம்பலப்புழை தூசி படிந்த தரையில் பட நமஸ்கரித்து எழுவதாகச் சொல்வான். பிஸ்கட் சாஸ்திரிக்கும் பெரியப்பா சொன்னால் சாஷ்டாங்கமாக நமஸ்காரமோ, வாய், மெய் உபச்சாரமோ செய்யத் தயாராக இருப்பதாகவும் அறிவிப்பான் அப்போது.

பெரியப்பாவின் மினிஸ்டர் மாளிகை.

வாசலில் வழக்கம் போல் பாரா சேவகன் யாரையும் காணோம். புத்த பூர்ணிமா. ஊரோடு விருந்துச் சாப்பாடு முடித்துப் பகல் தூக்கத்தில் இருக்கும் நேரம். மலபார் ஹில் மட்டும் விதிவிலக்கா என்ன?

படியேறி உள்ளே போகும் போது வாசல் அறையில் பெரியப்பா குரல் காதில் விழுந்தது –

நேரு பற்றிய நினைவுகளை நெஞ்சின் உள்ளறைகளில் இருந்து பிரியத்தோடு கெல்லி எடுக்கச் சலிப்பதே இல்லை.

அடுத்து அதைப் பிரதி செய்தபடி ஒரு பெண் குரல், சலிப்பதே இல்லை என்றது, டைப்ரைட்டர் ஒலிக்கு நடுவே.

அப்புறம் சத்தமே இல்லை.

திலீப் கதவை மெல்லத் தள்ள, சோபாவில் பெரியப்பாவின் காரியதரிசியான கொங்கணிப் பெண்மணி கையிரண்டையும் உயர்த்தியபடிப் பின்னால் மலர்ந்து கிடப்பது கண்ணில் பட்டது. எதிரே தரையில் மண்டியிட்டு பெரியப்பா அவளுடைய நெஞ்சின் உள்ளறையில் இருந்து நேரு நினைவுகளைப் பிரியத்தோடு கெல்லி எடுத்துக் கொண்டிருந்தார்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன