new bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 33 இரா.முருகன்


தியூப்ளே வீதி – 33 இரா.முருகன்

நாளைக்கு கிறிஸ்துமஸ். நேற்றும் இன்றும் நாளையுமாக மார்கழி இந்த மூன்று தினங்கள் மட்டும் டிசம்பராகவும் வடிவம் எடுக்கும்.

மார்கழி பிறந்து இந்தப் பத்து நாளில் திருப்பாவையையும், திருவெம்பாவையையும் கோவில்களின் கூம்பு ஒலிபெருக்கிகள் காற்றில் பரப்பி வெளியை நிறைக்க, ஏசு விசுவாசிகளின் கிறிஸ்துமஸ் கீதங்கள் இடையிடையே இனிமையாக ஒத்திசைந்து ஒலிக்கும்.

இரண்டு நாள் முன்பாக திருவாதிரை வந்து போனது. இனி மூன்று பெரிய எதிர்பார்ப்புகளோடு விழாக் காலம் நீண்டு போகும். அடுத்தடுத்து குதூகலத்தைக் கூட்ட கிறிஸ்துமஸும், புத்தாண்டும், பொங்கலும் வந்து காற்றில் பனியும் குளிரும் குளங்களிலும் ஆற்றிலும் தணுத்த நீருமாகச் சூழும் பண்டிகை அனுபவத்துக்காகவே இங்கே பிறப்பெடுக்க வேண்டும்.

ஜோசபின் வீட்டில் நாங்கள் கூடியிருந்தோம். வீட்டை அலங்கரிக்கவும், மெழுகு திரி ஏற்றவும், கிறிஸ்துமஸுக்காக இனிப்பும் காரமுமாகப் பலகாரம் செய்யவுமாகச் சேர்ந்து இருந்து செயல்பட ஏற்பாடு.

முதலில் ஆஜரானது ருழே சாந்தி தான் வரும்போதே பிரான்ஸ் தயாரிப்பு மெஷினோடு வந்து இறங்கினாள் அவள். அஸ்பியாதர் என்றாள். முழித்தோம். விளக்கம் கூறும் தொனியில் நிறுத்தி நிதானமாக ஹூவர் என்றாள். ஊஹூம், தெரியாது. அது என்ன செய்யும் என்று எங்களில் யாருக்கும் புரியவில்லை. குப்பை போடற மிஷின் என்றாள் ருழே குழப்பத்தை அதிகமாக்க. இதுக்கெல்லாம் மெஷின் வைத்து ஏன் கஷ்டப்படணும்? அந்துவானையும் ப்ரான்ஸ்வாவையும் கூட்டி வந்து உட்கார்த்தினாலே ஒரு மணி நேரத்தில் ஒரு பெரிய நிலப்பரப்பு முழுக்க நிலக்கடலைத் தோலால், பிஸ்கெட் சுற்றிய காகிதத்தால் நிறைத்து விடக் கூடியவர்கள் ஆச்சே.

ருழே கொண்டு வந்த குட்டிப் பிசாசு சைஸ் யந்திரத்தை பிளக்கில செருகி ஓட விட்டதும் தான் தெரிந்தது அது வாக்குவம் க்ளீனர் என்று. அதுவரை பத்திரிகையில் படமாகத் தான் நாங்கள் பார்த்திருந்தது அது.

வீட்டில் தூசி, துப்பட்டை, தலைமுடி, துரும்பு, ஒட்ட்டை என்று கட்டிலுக்கு அடியில், சுவர் மேல், ஜன்னல் ஓரம் பதுங்கி இருந்தாலும் கெல்லிக் கிளப்பிக் கொண்டு வந்து உறிஞ்சி விடும் என்றாள் ருழே. ராட்சசப் பசியோடு, எதிர்ப்படும் மாசை எல்லாம் விழுங்கி உருண்ட ஹூவர் மூலம் அரை மணி நேரத்தில் ஜோசபின் வீடு தூய்மையாச்சு. கவிதையில் நான் படித்தபடி மனசு என்னமோ குப்பையாகவில்லை.

அள்ளிச் செருகிய பட்டுப் பாவாடையும் பிளாஸ்டிக் வாளியுமாக அதிரடியாகக் கயல் எண்ட்ரி கொடுக்க, ஊர் அமர்க்களமெல்லாம் இங்கே குவிந்த சந்தோஷம் அடுத்த வினாடி ஊற்று நீராகப் பீறிட்டது.

சும்மாத்தானே இருக்கே, பின்னாடி குழாய்லே தண்ணி பிடிச்சு வா என்று கயல் என்னை விரட்டினாள் முதலில். நாலு பழைய துணியை எடுத்துக் கிழித்து மூங்கில் கோல்களில் சுற்றும் வேலையை அந்த்வானிடம் ஒப்படைத்தாள். ஹாலில் உயரமாகக் கொடி கட்டி துணி உலர்த்த, எடுக்க இருந்த மூங்கில் கழிகள் உதவிக்கு வந்தன.

ஜோசபினுடைய பழைய நைட்டி ஒன்றை எடுத்து வந்து துணி கிழிக்கச் சொல்ல, நான் பக்கெட்டை வைத்து விட்டு அந்த வேலைக்கு உட்கார்ந்தேன். தனியாக மாட்டிய போது கயல் கிராதகி, என்ன பிரியமா நைட்டி கிழிக்கறேடா பையா தூள் கிளப்பு என்று உசுப்பி விட்டாள்.

’வேணாம்னா சொல்லு வச்சுடறேன்’ என்று நகர்த்தி வைத்தேன்.

’கோவிச்சுக்காதேடா தங்கம்.. சும்மா ஜோக்’.

அவள் அச்சு அசலாக ஜோசபின் குரலில் சொன்னது என் காதில் மட்டும் தான் விழுந்திருக்கும்.

சோப் பவுடரைத் தண்ணீரில் கலந்து கூடவே ஆஸ்பத்திரி ஸ்டோரில் வாங்கி வந்த கிருமி நாசினியும் ஊற்றி வீடு முழுக்கக் கழுவி விட்டு முடித்தபோது, டியூட்டி முடிந்து ஜோசபினும் வந்துவிட்டாள்.

’இங்கே ஸ்வீட் காரம் செய்ய முயற்சி செய்யப்படும்’.

ஜோசபின் அறிவித்தாள்.

உற்பத்தி செஞ்சதை யார் டெஸ்ட் பண்றது என்று நியாயமான கவலையை எழுப்பினாள் கயல்.

’இவன் எதுக்கு இருக்கான்’?

ஜோசபின் என் பக்கம் துச்சமாகப் பார்த்துக் கையை நீட்ட நான் கலவரமாகப் பார்த்தேன்.

’ஜோஸி இரு க்ளீனிங்க் முடிச்சுடறேன். சேர்ந்து பலகாரம் செய்யலாம்’

கயல் பாந்தமாக ஜோசபினை நிறுத்தி வைக்க் ருழே கடகடவென்று தரையைத் துடைத்து விளங்க வைத்து விட்டாள்.

’அரிசி மாவு இருக்கா ஜோஸி’? கயல் கேட்டாள். நாலைந்து டப்பாகளில் திறந்து பார்த்து விட்டு வெள்ளையாக ஏதோ ஒரு மாவை எடுத்து வந்து கொடுத்தாள் ஜோசபின். அதை வாங்கிக் கெட்டியாகக் கரைத்த கயல் அடுத்துச் செய்தது வித்தியாசமான காரியம்.

வீட்டு வாசலில் தொடங்கி கூடம் வரை மாக்கோலமாக ஒற்றைப் பாதத்தை வரைந்தாள் கயல்.

‘என்னது ஜோசபினை முறுக்கு சீடை போட வச்சு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட வச்சுடுவே போலே இருக்கே?’ என்று கேட்டேன் அவளை.

‘.எல்லாம் ஒண்ணு தான் இது கிறிஸ்து ஜெயந்தி’.

அவள் கூடத்தில் பாதி தூரம் வரை வருவதாகக் கால் இட்டபோது, அந்த்வானும் ப்ரான்ஸுவாவும் கிறிஸ்துமஸ் மரத்தோடு வந்து சேர்ந்தார்கள். அந்த மரத்தை கூடத்தில் நிறுத்தி பசும்புல் ஒட்டி மேலே கலர் பல்ப் இணைத்த சீரியல் செட் போட்டு அலங்காரம் செய்தான் அந்த்வான். ருழே மரத்தடியில் வைக்க குழந்தை ஏசு, ஜோசப், மரியன்னை, ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி என்று குட்டி குட்டியாக எடுத்து வைத்த பொம்மைகளை எங்கேயோ பார்த்த நினைவு.

’நான் தான் நளினிகாந்த் மோஷாய் கிட்டே சொல்லி வச்சு வாங்கி வரச் செஞ்சேன்’ என்றாள் கயல்.

‘இதெல்லாம் வாங்க காசு எப்படி கிடைச்சது’? சமையலறையில் அவளை மடக்கிக் கேட்டேன்.

‘ருழே கொடுத்தாள்’ என்றாள். ஒரு வினாடி இடைவெளி விட்டாள். ‘கேட்க நீ யாரு’ என்று சிவகாசி வாணமாகச் சீறினாள்.

’சீக்கிரம் தெரியும் பாருடி’ என்றேன்.

‘அடி புடின்னா, நேரே கிச்சன்லே போய், இருக்கறதிலேயே மொண்ணையா கத்தி எடுத்து வந்து இழுத்து வச்சு..’.

வேணாம். செய்யக் கூடியவள் தான். நான் விலகி ஓடினேன்.

’ஆரம்பிக்கலாமா, கயல்’?

கிச்சன் தரையில் உட்கார்ந்து கொண்டு முன்னால் பரத்திய தினசரி பேப்பரில் தாம்பாளம் வைத்தபடி ஜோசபின் இருந்த கோலம் அம்மாவை நினைவூட்டியது. தீபாவளிக்கு உக்காரையும் தேங்குழலும் செய்ய அவள் போய்ச் சேர முந்திய வருஷம் வரை அம்மா செயலாகத் தான் இருந்தாள். அவளோடு என் தீபாவளியும் போயானது. இப்போது கிறிஸ்துமஸ் நானாவது கூட வரலாமா என்று வாசலில் நிற்கிறது.

’உக்காருடா முறுக்கு சுட வருமா’? தண்ணீரும் எண்ணெயும், மிளகுப் பொடியும், உப்பும் இட்டுப் பிசைந்த மாவு தலையில் தீற்றியிருக்க ஜோசபின் கேட்டாள். அந்தக் கோலத்திலும் அவள் அழகு தான்.

‘இதுலே பிழிஞ்சா அதுக்குப் பெயர் முறுக்கு இல்லே. தேன் குழல்’ என்றேன் அவள் கையில் இருந்த குழல் செப்பைப் பார்த்துக் கொண்டு.

‘முறுக்குன்னா உலகம் பூரா இதான், தெரியுதா. சும்மா பந்தாவுக்கு அய்யர் வீட்டுலே ஆயிரம் பேரு வைப்பாங்க’. கயல் சொன்னாள்.

வாடி வா, நீ அங்கே தானே வரப் போறே. அவளை ஏற இறங்கப் பார்த்து விட்டு கலந்து வைத்த மாவின் பதம் பார்த்தேன். சரி தான்.

சின்ன உருண்டையாக உருட்டிய மாவை எடுத்து உள்ளங்கையில் அடக்கி, கீழே விரித்த வெள்ளைத் துணியில் கையை முறுக்கிப் பிடித்து நல்ல வட்டமாகவும், மூன்று சுற்று வருவதாகவும் பிழிந்து காய வைத்த எண்ணெயில் பொரித்தெடுத்தேன். பொன்னிறமாக வந்ததும் ஜாரிணிக் கரண்டி கொண்டு எடுத்து தட்டில் நடுவிலே இட்டேன்.

‘இதான் முறுக்கு’.

ஜோசபினும் கயலும் ஒரு சேரக் கைதட்ட ருழே தன் கேமிராவில் என்னையும் நான் பொரித்த முறுக்கையும் பதிவு செய்து கொண்டாள்.

’கயல், நீ கொடுத்து வச்சவ. பலகார சரக்கு மாஸ்டர் கைவசம். ஆம்பூர் பிரியாணியும் சொல்லிக் கொடுத்திடு இனிமே’ என்றாள் ஜோசபின்.

‘இவனா, பெருங்காய டப்பா. ஓடிடுவான்’ கயல் சொன்னாள். சொல்லு சொல்லு. நீ சொல்லாம வேறே யார் சொல்லப் போறாங்க? .

‘என்ன ஸ்வீட் செய்யப் போறே ஜோஸ்ஸி’? கயல் கேட்டாள். ஜாங்கிரி, பாதுஷா, ஜாமுன் என்று தொடங்கி முடித்தது மைசூர்பாக்கில்

’சமைத்துப் பார்’ புத்தகத்தை கயல் திரும்பத் திரும்பப் படிக்க, முக்கால் மணி நேரம் மைசூர்பாக் என்று ரெண்டு பெண்ணரசிகளும் கிண்டிக் கிளறி முடித்துப் பரத்திய பலகாரம், வீட்டுக்கு வரும் வேண்டாத விருந்தாளிகளுக்குக் கூடக் கொடுக்க முடியாதது.

விலகச் சொல்லி விட்டு நெய்யும், சர்க்கரைப் பாகும் அவசரமாகச் சேர்த்து அவர்கள் செய்து இறக்கிய கலவையைப் போட்டுப் புரட்டினேன். ஜோசபினை விரட்டி அவள் அந்துவானை விரட்டி முந்திரிப் பருப்பும், பேரிச்சம்பழமும் உலர்ந்த திராட்சையும் வாங்கிக் கொண்டு ஓடி வர, நான் எல்லாம் கலந்து கிண்டி இறக்கிப் பாளம் பாளமாகக் கீறி லாகவமாகத் தட்டில் வைத்து நீட்டினேன்.

பிரமிப்பு நீங்காத பெண்கள் கேட்ட ஒரே கேள்வி இந்த ஸ்வீட்டின் பெயர் என்ன?

சோனார் பங்க்ளா என்றேன் பங்களா தேஷையும் இந்திரா காந்தியையும் நினைவில் வைத்தபடி. ருழே கேமிராவுக்கு மறுபடியும் வேலை.

’நர்ஸம்மா’, வாசலில் யாரோ கூப்பிட்டுக் கதவைத் தட்டிய சத்தம்.

இந்தப் பையன்களை வியட்னாம் பேலேஸ் துணிக்கடையில் பார்த்திருக்கிறேன். அவர்கள் வெள்ளைத் துணியில் கட்டிய மூட்டையைத் தந்து விட்டுப் போக, ஜோசபின் அவசரமாக உள்ளே எடுத்து வைத்தாள். .

ஜோசபினும் கயலும் ருழேயும் அன்போடு தந்து உபசரித்த ஸ்வீட்டும் காரமும் நன்றி பலவும் விழுங்கி அவர்கள் சேர்ந்து தயாரித்த சுமாரான காப்பியும் ருசித்து முடிந்தது. நானும் கயலும் ஒருவரை ஒருவர் பார்த்துத் தலையசைத்தோம். போகலாமா என்று அர்த்தம் அதற்கு.

என்னடா, சீக்ரெட் மீட்டிங்கா என்றாள் ஜோசபின்.

‘இல்லெ ஜோஸி, ஒரு முக்கியமான வேலை இருக்கு. இவனைக் கிளப்பாட்ட, முறுக்கு பிழிஞ்சுக்கிட்டிருப்பான் அதான்’, என்றாள் கயல்.

‘போய்ட்டு சீக்கிரம் வந்துடுங்க. இன்னிக்கு கரோல் பாடிட்டு போகறது சீக்கிரமே எட்டு மணிக்கு ஆரம்பிச்சு பத்துக்கு முடிஞ்சுடும். அப்புறம் மிட்நைட் மாஸ்’ என்றாள் ஜோசபின் கடியாரத்தைப் பார்த்தபடி.

‘நீ வாடா, கையைக் கட்டிக்கிட்டு குரங்குத்தனம் பண்ணாம உக்காரணும். ஸ்கூட்டர்லே முன்னே பின்னே உக்காந்து வந்திருக்கியா’? என்று கேட்டாள் கயல். நேரம்.

நாங்கள் திரும்பி வந்தபோது ருழேயும் ஜோசபினும் எங்களுக்காகக் காத்திருந்தார்கள். சாகர் என்று பெயர் வைத்த புது ரெஸ்டாரண்டில் கொஞ்சம் போல ராத்திரிச் சாப்பாடு முடித்து சான் பால் மாதா கோவிலுக்கு அடுத்து நின்றோம்.

அமேயர் பாதிரியாரோடு பெரிய கூட்டம் வந்தது. லாந்தர் விளக்குகள் வர்ணக் காகிதம் பூண்டு நிறங்களைக் கசிய ஹோலிக்கு வண்ணம் பூசிய மாதிரி எல்லாமும் தெரிந்தது. எல்லோரும் தெரிந்தார்கள். அந்த்வானும், ப்ரான்ஸ்வாவும், லதா தீதியும் கூடக் கூட்டத்தில் இருந்தார்கள். கூட்டத்தின் நடுவே சற்றே குறைவான உற்சாகத்தோடு கிறிஸ்துமஸ் தாத்தாவாக எப்போதும் போல மிஸ்யே விக்தொ பூமோ.

’என்ன அங்கிள் முகம் வாட்டமா இருக்கீங்க’?

‘இனி நோ சாண்டா க்ளாஸ்’ என்றார் அவர் கொஞ்சம் ஏமாற்றத்தோடு.

‘ஏன், அடுத்த வருஷமும் நீங்க தானே சாண்டா’?

‘இன்ஷா அல்லாஹ்’ என்றார் ஆச்சரியத்தோடு பார்த்தேன்.

‘எங்க வீட்டுலே அவ போய்ச் சேரும் வரைக்கும் இப்படித் தான் சகலமானதுக்கும் சொல்லிட்டு இருப்பா’ என்றார் குரல் கரகரக்க.

’இன்ஷா அல்லாஹ்ன்னா’?

‘ஆண்டவனுக்கு விருப்பம் இருந்தான்னு அர்த்தம்’.

’நீங்க அடுத்த வருஷம் மட்டுமில்லே இன்னும் எத்தனையோ வருஷம் சாண்டா க்ளாஸா வருவீங்க. என்ன, மேக்கப் எதுவும் தேவை இருக்காது. ஒரிஜினல் சாண்டாவுக்கே சவால் விடற மாதிரி வெள்ளைத் தாடி, முகத்திலே அங்கங்கே சுருக்கம் இருந்தாலும் கண்ணு இதே போல குறும்புத்தனத்தோட சிரிக்கும். யூ காண்ட் பி அதர்வைஸ்’.

அவர் என்னைத் தழுவி நெற்றியில் முத்தமிட்டு ஆசீர் சொன்னார். பக்கத்தில் நின்ற ருழேயையும் அன்போடு கன்னத்தில் முத்தமிட்டார்.

’அங்கிள் பலம் துன்னு வந்தியா’? நமட்டுச் சிரிப்போடு மழலையில் ருழே கேட்க, ’பழசு தான் .. ஒரே ஒரு பெக் மால்ட் விஸ்கி’ என்றார்.

பாட்டு சத்தம் கேட்டது. அமைதியான இருட்டில் மென்மையும் இனிமையுமாகத் தனித்து ஒலிக்கும் குரல். ஜோசபின் பாடுகிறாள். சிலிர்க்க வைக்கும் ’சைலண்ட் நைட் ஹோலி நைட்’ கீதம் அது.

அமைதியான இரவு புனிதமான இரவு
எங்கும் அமைதி எங்கும் வெளிச்சம்
கன்னி மரியம், கையில் குழந்தை
மென்மைத் தளிரெனப் புனிதப் பிஞ்சு
விண்ணக அமைதியில் மெல்லத் துயிலும்
குழந்தை மெல்லத் துயிலும்.

வீடு திரும்பும் வரை அந்தக் குரல் என் கூட வந்தது. ஜோசபினிடம் இருந்து அதைப் பிரித்துத் தனியாக நினைவுகளில் பதுக்கி வைத்தேன். என்றைக்கும் எப்பிறவியிலும் அது என் உயிரில் கலந்திருக்கும்.

ருழே அங்கிருந்தே மெர்ரி கிறிஸ்துமஸ் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டாள். நடு ராத்திரி மாஸ் வர முடியுமா தெரியலை என்றாள். உறங்கிட்டு காலையிலே சர்ச் போகிற மூடில் இருந்தாள் அவள். நாங்கள் ஜோசபின் வீட்டுக்குப் புறப்பட்டோம்.

வீட்டுக்குள் நுழைந்ததும் கயல் கேட்டாள் – ஜோசபின், இந்த சந்தோஷமான நேரத்துலே என்ன தரப் போறே எங்களுக்கு?

ஜோசபின் உள்ளே போய் மில்க் சாக்லெட் பெட்டி ஒன்றை எடுத்து வந்து பிரித்தாள். ஷொகொலா எடுத்துக் கொண்டபடி கயல் மறுபடி கேட்டாள் – நானும் இவனும் ஒண்ணு தரலாமா?

‘என்ன அது கயல்’?

நான் மெல்ல தோளில் மாட்டி இருந்த பையில் இருந்து ஒரு சிவப்பு ஒயின் போத்தலை எடுத்து வைத்தேன்.

’ஆளுக்குக் கொஞ்சம். ப்ளீஸ்.. செலிபரேஷன் டைம்’

நான் ஜோசபினைக் கெஞ்சுதலோடு கேட்டேன்.

‘இல்லேடா, எப்போதாவது சோஷல் கேதரிங் அப்படின்னா இத்துணூண்டு எடுத்துக்கற வழக்கம். குடிக்கறது தப்புன்னு சொல்லாத குடும்பம். அதை ஒரு கொண்டாட்டமா ஒரு வாய் சாப்பிடற பழக்கம்..’

நான் அவளையே பார்த்தேன். சட்டென்று அவள் முகம் மலர்ந்தது.

’நாம டௌன் ஹால்லே முதல்லே சந்திச்சது ஞாபகம் இருக்கா’?

தன்னிச்சையாக என் கையைப் பற்றி அணைத்து அன்போடு என் கன்னத்தில் வருடினாள் ஜோசபின். கயல் ஒன்றும் சொல்லவில்லை. புன்னகையோடு பார்த்தபடி இருந்தாள்.

’என் கோப்பையில் இருந்து நீ அன்னிக்கு ஒயின் குடிச்சே. இன்னிக்கு அந்த இன்னொசன்ஸ்.. அறியாத்தனத்தை கொண்டாட ஆளுக்கு ஒரு சின்னக் கிண்ணம்.. உய்.. நான் ரெடி.. கயல்’?

உற்சாகமாகச் சொன்னாள் ஜோசபின். அவள் கண்கள் கிறிஸ்துமஸ் மரத்தடி வெளிச்சத்தில் அழகாக மின்னின..

பீரோவைத் திறந்து அழகான சிறு கண்ணாடிக் கிண்ணங்களை எடுத்து வந்தாள் ஜோசபின்.

‘சியர்ஸ்’..

எல்லோருக்கும் நல்லது விழைந்து ஒரு வாய் குடித்தோம்.

’நான் வேணா உள்ளே போறேன். நீயும் கயலும் ஒண்ணு செய்யணும்’, ஜோசபின் என்னை வேண்டிக் கொள்கிறவளாக நோக்கி நின்றாள்.

’என்ன செய்யணும் ஜோஸ்ஸி’?

’அந்த கிறிஸ்த்மஸ் மரத்துக்குக் கீழே நீயும் கயலும் முத்தமிட்டுக்கணும். உங்க காதல் நிலைச்சு நிற்கும். பழைய நம்பிக்கை’

எதுக்கு என்றேன். வேணாமே என்றாள் கயலும் சங்கடத்தோடு.

’பரவாயில்லே, கிறிஸ்துமஸுக்காக’, ஜோசபின் சொன்னாள். நாங்கள் இன்னும் சங்கடம் விலகாது ஒருவரை ஒருவர் பார்த்தோம். ’எனக்காக’ என்றாள் ஜோசபின் இரு கரங்களையும் நீட்டி.

கயல், வா.

ஜோசபின் சொன்னபடிக்கு கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் கயலோடு இதழ் கலந்தேன். மின்விசிறி நிறுத்திய அறையில் ஓரமாக என் ஜோசபின் நின்றிருக்கிறாள் என்று ஒரு வினாடி குற்ற போதம். அதைக் கயல் கண்ணிலும் கண்டேன்.

ஜோசபின் முகத்தில் சுடர்விட்ட மகிழ்ச்சியும் கிறிஸ்துமஸுக்கே உரிய, விசுவாசிகளின் முகத்தில் அபரிமிதமாகக் காணக் கிடைக்கும் அழகும் எல்லா குற்ற உணர்வையும் அழுத்தித் துடைக்க, கயலை அணைத்துக் கொண்டேன். மேலே இன்னும் இரண்டு கரங்கள் அடுத்து மெல்லக் கவிந்து இருவரையும் அணைத்தன. ஜோசபின்.

’ஜோஸ்ஸிம்மா என் ஜோஸ்ஸிம்மா’.

நான் சொன்னதில்லை இது. ஜோசபினைக் கட்டி அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டுக் கயல் சொன்னதாக்கும்.

’வென்னீர் போட்டு வச்சிருக்கேன். போய்க் குளிச்சுட்டு வாடா’.

ஜோசபின் கட்டளையிட்டு ஒரு டர்க்கி டவலையும் தோளில் போட்டாள்.

‘எதுக்கு ஜோஸ்ஸி நடு ராத்திரிக்குக் குளிக்கச் சொல்றே’?

’மிட்நைட் மாஸ் போகணும். குளிக்கணும்னு இல்லே தான். கோவிலுக்குப் போறபோது குளிச்சுட்டுப் போகறதுலே தானே உனக்கு இஷ்டம்? ரெட்டைத் தெருவிலே மார்கழி கொண்டாட்டம் பத்தி எவ்வளவு சொல்லியிருக்கே’, ஜோசபின் என் பள்ளிப் பருவத்தை நினைவு படுத்தினாள்.

’அதுக்காக நடு ராத்திரிக்கா’?

‘போடான்னா போகணும்’. கயல் ஹெட்மாஸ்டராக பின்னாலேயே வந்து விரட்டினாள்.

அது ஏன் நான் மட்டும் குளிக்கணும் என்று முரண்டு பிடிக்க கயல் டர்க்கி டவலோடு கிளம்பி விட்டாள்.

தலையில் அழகாக வேடு கட்டி வந்த கயல் ஹாய் என்றாள். இன்னொரு தடவை கிறிஸ்துமஸ் மரத்துக்குக் கீழே நின்றிருக்கலாம்.

’துணியை எல்லாம் நான் துவைச்சுக்கறேன். கழட்டிட்டு போய்க் குளி.. உள்ளே ஏதாவது போட்டிருந்தா அதையும் சேர்த்துத்தான்’.

’போடலே’ என்றேன். ’டர்ட்டி பெல்லோ இப்போ எடுக்கறியா இல்லே’.

வேகமாக நீக்கி விட்டு நகர்ந்தேன்.

‘இந்தா வேறே டவல் எடுத்து வேஸ்ட் பண்ண வேண்டாம். பெரிய டவலா இருக்கு. இதையே வச்சுக்க.’.

கயல் உடுத்திக் கொடுத்த ஈர டவலை ஆர்வத்தோடு வாங்கினேன். மனம் எல்லாம் கயல் நிறைந்திருக்க அதை உடுத்து குளியல் அறைக்குள் புகுந்தேன்.

கயல் உபயோகித்த அறை. சந்தன சோப்பும், வென்னீர் குளிர்ந்த காற்றில் பரத்திய நீராவியும், கயல் வாசனையுமாக கமகம என்று இருந்த இடத்தில் சந்தோஷமாகக் குளித்து விட்டு வந்தேன்.

கயல் ஜோசபின் கொடுத்த நைட்டியில் இருந்தாள். இரவல் துணி என்றாலும் அழகானது தான். ஜோசபினுடைய ரசனையும் கயலின் அழகும் மிளிரும் உடுப்பு அது.

எனக்கும் ஒரு நைட்டி கொடு என்றேன் ஜோசபினிடம். ஆமா, கூடவே ப்ளவுஸும் கொடு என்றாள் கயல்.

‘இரேண்டா, முக்கால் காலுக்கு டர்க்கி டவல் தானே கட்டி இருக்கே’. ஜோசபின் என்னை அடக்கி விட்டு நடந்தாள்.

ஜோசபினும் குளித்து இற்குகளைப் பொருத்திக் கொள்ளாத இனிய தேவதையாக எங்கும் வனப்பையும் மகிழ்ச்சியையும் கிறிஸ்துமஸையும் தூவிக் கொண்டு வந்தாள்.

ஜோசபின் பெட்ரூமுக்கு நடக்க, கயல் அவளைக் கொஞ்சம் இருக்கச் சொன்னாள். இரு வந்துடறேன் என்று அவசரம் காட்டினாள் ஜோசபின்.

அவள் தலை மறைந்ததும் கயல் என்னைக் கண்காட்டி அழைக்க தாவிப் போய் அணைத்தேன்.

’கொரங்கே. இதுக்கா கூப்பிட்டேன். காதுலே சோப்பு. ஒழுங்காக் குளிக்கத் தெரியாது உனக்கு’?

நான் பரிதாபமாகப் பார்க்க, டேய் உன்னைத் தெரியும்..போய் எடுத்து வா என்று விரட்டினாள். நான் சமையல் அறைக்கு ஓடினேன்.

ஜோசபின் என்னையும் கயலையும் அருகில் கூப்பிட்டாள்.

/இந்த கிறிஸ்துமஸுக்கு நான் எடுத்துக் கொடுக்கற துணி இது. இதைக் கட்டிக்கிட்டு தான் நீங்க ரெண்டு பேரும் என்னோடு சர்ச் வரணும்’.

அழகான கைத்தறிப் புடவை. கைத்தறி வேட்டி, சட்டை. மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டோம். மத்ததும் இருக்கு என்றாள் ஜோசபின் தணிந்த குரலில். என்ன மற்றது? அசடே கம்முனு இரு. கயல் திட்டினாள்.

ஜோசபின் நானும் டிரஸ் பண்ணிட்டு வரேன் என்று போனாள்.

கச்சிதமான ப்ளவுஸ் என்றாள் கயல். ஆமா என்றேன். எதுக்கு பார்த்தே? உன்னை யாரு கேட்டது என்று சிடுசிடுத்தாள் அவள்.

ஜோசபின் முன்கூட்டியே திட்டம் போட்டு வாங்கி, தைத்து வைத்திருந்த நேர்த்தியைக் கயல் பாராட்டி மகிழ நான் ஜாக்கிரதையாக பொதுவாகப் பார்த்தபடி ஆமா சொன்னேன். என்னத்தைப் பொதுவாக?

‘ஜோஸ்ஸி சேப்டி பின் கொடு. இவன் மோசம்’, கயல் முறையிட்டாள்.

ஜோஸி நில்லு.இது நாங்க உனக்காக எடுத்த கிறிஸ்துமஸ் புதுத் துணி.

கயல் என்னைக் கண் காட்ட, நானும் அவளும் கிறிஸ்துமஸ் மரத்துக்கு அருகே சேர்ந்து நின்று துணிப் பையை நீட்டினோம்..

முகம் மலர்ந்து வாங்கிக் கொண்டாள் ஜோசபின். அவள் கண் நிறைந்தது.

‘இந்த அஞ்சு வருஷத்திலே இப்போ தான் எனக்கு வேண்டியவங்க எனக்கு துணி எடுத்துக் கொடுத்தது’, குரல் இடறச் சொன்னாள் அவள்.

நானும் கயலும் ஜோசபினுக்காக செலக்ட் செய்து வாங்கி வந்த ஒற்றை இழை சரிகை போட்ட கேரளத்து வெள்ளைக் கைத்தறிப் பட்டுப் புடவை அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது.

வெள்ளைப் புடவையும், கருப்பு ரவிக்கையும், தாழ வாரிவிட்டு நுனி முடிச்சு போட்ட கூந்தலுமாக என் ஸ்வந்தம் அம்பலப்புழைக்காரி, பால்ய சிநேகிதியாக ரம்மியமாக இருந்தாள் ஜோசபின்.

‘யட்சி மாதிரி இருக்கே ராஜாத்தி’ என்றேன் அவள் சமையலறைக்குப் போனபோது பின்னாலேயே போய். கயல் படுக்கை அறையில் தலை சீவிக் கொண்டிருந்தாள் அப்போது.

’அடுத்த ஜன்மத்திலே நம்பிக்கை இல்லேடா எனக்கு. கிறிஸ்துவத்துலே அது கிடையாது தான்.. ஆனாலும் தோணுது. அப்படி ஒண்ணு இருந்தா, நீ நானாவும் நான் நீயாவும் ஒரே நேரத்துலே பிறந்து ஒரே ஊர்லே வளர்ந்து ஒரே வாழ்க்கையிலே ஒண்ணு சேரணும்’.

’ஜோஸ்ஸி ம ஷெரி..’. நான் கரைந்து போனேன் அந்த அன்பில்.

அவளுடைய தலையில் முத்தமிட்டு, போதாது என்று பட சிவந்த உதடுகளில் இன்னும் அழுந்த முத்தமிட்டு விலகி வெளியே நடந்தேன். சந்தோஷமும் துக்கமுமாக மாறி மாறி மனதில் கெக்கலி கொட்டிக் கொண்டிருந்தன.

புறப்படலாமா? இப்போ போனா மாஸ் ஆரம்பிக்க் முந்தி போய்ச் சேர்ந்துடலாம்.. உட்கார நல்ல இடமா கிடைக்கும்’.

ஜோசபின் அவசரப்படுத்த வெளியே வந்தோம். அவள் திரும்ப உள்ளே ஓடினாள். சிறிய குடைகளை எடுத்துக் கொண்டு திரும்ப வந்தாள்.

’மழை இல்லையே ஜோஸ்ஸி.’

’இல்லே தான். ஆனா, கிறிஸ்துமஸ் மாஸ் போகிற போது குடையை எடுத்துப் போகாட்ட எதுவோ விட்டுப் போன மாதிரி இருக்கு எனக்கு’.

நாங்கள் ஆர்வத்தோடு குடைகளை வாங்கிக் கொண்டோம். கயல் டியர் குடை சூடு என்றேன். ஜோசபின் என்ன என்று கேட்க, கயல் சொன்னாள் – இவனும் இவன் மலையாளமும். அறு வஷால்.

’அப்படீனா’? ஜோசபின் சுவாரசியத்தோடு கேட்டாள்

’யாருக்கு தெரியும்? இவனைத் தான் கேக்கணும். ப்ராந்தன்’.

‘து யெ ஃபூ’ ரெண்டு பேரையும் கைகாட்டி நானும் அவர்களோடு சேர்ந்து சிரித்தேன். சிரிக்கவும் களிக்கவும் கூடி இருந்து மகிழவும் தான் கிறிஸ்துமஸ். கடவுளும் அப்போதெல்லாம் நினைக்கப்படுவார்.

வீட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டிருந்தபோது ஒரு சைக்கிள் வேகமாக வந்து நின்றது.

‘நர்ஸம்மா நர்ஸம்மா.’

காபி ஹவுஸ் கனகராயன்.

என்ன அண்ணே என்று விசாரித்தேன். மெர்ரி கிறிஸ்துமஸ் சொன்னேன். அவர் அவசரத்தில் இருந்த்தால் கவனிக்கவில்லை என்பதில் கொஞ்சம் வருத்தம் கூட எனக்கு ஏற்பட்டது.

’நர்ஸம்மா, நம்ம சவரிராயன் மகளுக்கு பிரசவ வலி எடுத்துடுச்சு. ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போகலாம்னா, ஒரு வண்டியும் கிடைக்கலே. என்னேரமும் பிரசவமாயிடும்கிறா என் வீட்டுக்காரி. நாங்க பக்கத்து பக்கத்து வீடு தான். என்ன பண்றதுன்னே தெரியலே. புண்ணியமாப் போறது.. கிறிஸ்துமஸ் நேரத்திலே நீங்க கொண்டாட விடாம நான்.’

அவரை முடிக்க விடாமல் கை காட்டி நிறுத்தினாள் ஜோசபின். உள்ளே போய் ஒரு லெதர் பையோடு வந்தாள். சரியாக மூடாத பையின் ஸிப்பை அவள் சரியாக்கும் போது பார்த்தேன். அத்தியாவசியமான மருந்து, பஞ்சு, கத்தரி, மாத்திரை, ஊசி மருந்து, ஸ்டெதாஸ்கோப் என்று நிறைத்திருந்தது. ‘இதைப் பிடி’ என்று பையை என்னிடம் கொடுத்தாள்.

’கயல், நீ என்னை உன் ஸ்கூட்டர்லே ராயன் அண்ணன் வீட்டுலே விடு. நான் வழி சொல்றேன்.. நீ பின்னாலே வாடா’.

என் கையில் இருந்து பையைத் திரும்ப வாங்கிக் கொள்ள, இருட்டில் கயல் கம்பீரமாக ஸ்கூட்டர் ஓட்டிப் போனாள்.

நான் அவர்கள் போய்ச் சேர்ந்த இருபது அல்லது முப்பது நிமிடம் கழித்துத்தான் அங்கே போனேன். கயல் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இருட்டில் தெரு தெரியாத குழப்பம் வேறு.

சவரிராயன் வீட்டு வாசலில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் முணுக் முணுக்கென்று ஒளிரக் கீழே ஒரே ஆரவாரம். தெருவே கூடி இருந்தது. அந்துவான் முன்னால் நின்றான். அடுத்த தெரு தான் அவன். அமேயர் பாதிரியார் குரலில் தெளிவாக, தடங்கலின்றி அவன் சொன்னான் –

’நேடிவிடி டிராமா அரங்கேறியாச்சு. ரட்சகர் ஏசு பெண் குழந்தையாக சுப ஜனனம்’. எல்லோரும் கை தட்டினார்கள். பட்டாசு வெடித்தார்கள்.

ஜோசபினும் பின்னாலேயே அவளுடைய உதவியாளராகச் செயல்பட்ட கயலும் வீட்டுக்குள் இருந்து வர, தெருப் பெண்கள் அவர்களைச் சூழ்ந்து நின்று மகராசி நல்லா இருங்க என்று மனம் குளிர வாழ்த்தினது இதமாக இருந்தது.

ஆஸ்பத்திரி வேனும் வந்தாச்சு என்றாள் ஜோசபின். உள்ளே விரைந்த டாக்டரிடம் புன்சிரிப்போடு கை உயர்த்தி வெற்றி எனக் காட்டினாள் கயல். அவருக்கு எல்லோரும் மெர்ரி கிறிஸ்துமஸ் சொன்னோம்.

நாங்கள் சான் பால் மாதாகோவிலுக்குப் போனபோது கிறிஸ்துமஸ் நள்ளிரவுப் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. எல்லா மணிகளும் கிறிஸ்து பிறந்ததைச் சொல்லி ஒருசேர முழங்கிக் கொண்டிருந்தன.

வாங்க, உள்ளே போகலாம். வேகமா வாடா. நீங்க வர்ற வேகத்துக்கு அடுத்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்குத்தான் வந்து சேருவீங்க. கமான்!

ஜோசபின் மேல் படிக்கட்டில் நின்று பின்னால் திரும்பிக் கூப்பிட்டாள்.

வந்தாச்சு ஜோசபின் லூர்து லெபொ என் ப்ரிய ஜோஸ்ஸி குட்டியம்மா…

கயலோடு கை கோர்த்தபடி நான் சான் பால் தேவாலயப் படிகளில் வேகமாக ஏறினேன்.

பின் கதைச் சுருக்கம்
———————

ஆக, நாற்பது வருஷப் பழைய கதையை நினைவில் இருந்து எடுத்து விளம்பியாயிற்று. தூசி தட்டி எடுத்தேனா என்றால் இல்லை என்று தான் பதில் சொல்ல வேண்டும். பழசாக இருந்தாலும் நினைவின் முன்னறையில் பொக்கிஷமாக போற்றிப் பாதுகாப்பது ஆயிற்றே.

அப்புறம் என்ன ஆச்சு?

அடுத்த கிறிஸ்துமஸுக்கு நான் அங்கே இல்லை. ஜோசபினும் கூட. அவளுக்கு ஒரு பதவி உயர்வைக் கொடுத்துத் தலைமை நர்ஸ் ஆக்கி காரைக்காலுக்கு டிரான்ஸ்பர் செய்திருந்தார்கள்.

நானும் இயற்பியல் பட்ட மேற்படிப்பு எங்கள் கல்லூரியில் எதிர்பார்த்தபடி வராத காரணத்தால் படிப்பைத் தொடர மனசே இல்லாமல் திருச்சி போனேன்.

அது மட்டுமில்லை, நான் ஊரை விட்டுப் போக வேண்டிய கட்டாயமும் இருந்தது. அப்பா சென்னைக்கு டெபுடி ஜெனரல் மேனேஜராகப் பதவி உயர்வும் இட மாற்றமும் பெற்றதால் தியூப்ளே தெரு வீட்டை மனமில்லாமல் காலி செய்து விட்டுப் புறப்பட வேண்டிப் போனது.

விக்தொ என்னைப் பிரியும் போது விக்கி விக்கி அழுதார். அவர்கள் வீட்டிலேயே தங்கி, காலேஜில் எம்.ஏ எகனாமிக்ஸ் படிக்க ஆலோசனை கொடுத்தார் அவர். அதை வைத்து ஒரு வேலையும் தேட முடியாது, நீ பிசிக்ஸே போ என்று எனக்கு விளக்கி அனுப்பினார் வல்லூரி சார்.

வல்லூரி சார் விஜயவாடாவில் ஓய்வு பெற்ற பேராசிரியராக இருந்து இன்னும் இங்கிலீஷ் பத்திரிகைகளுக்கு அரசியல், சுகாதாரம், ஷேக்ஸ்பியர் பற்றிக் கடுமையான இங்க்லீஷில் லெட்டர்ஸ் டு தி எடிட்டர் எழுதிக் கொண்டிருக்கிறார்.

விக்தொ அங்கிள், சான் பால் மாதாகோவில் வளாகத்தில் அந்திம உறக்கத்தில் இருக்கிறார். போன முறை ஊர் போனபோது நானும் கயலும் அவருடைய கல்லறையில் பூங்கொத்து வைத்து அவருக்கு நித்திய இளைப்பாறுதலைத் தரப் பிரார்த்தித்து விட்டு வந்தோம்.

கயல் டிகிரி முடித்து தேன்மொழி அக்கா தூண்டுதலோடு பிரான்ஸில் பிரஞ்சு இலக்கியத்தில் மேற்படிப்பு படிக்கப் போனாள். அவளும் என்னைப் பிரிய மனசே இல்லாமல் தான் விமானம் ஏறினாள்.

பிரான்ஸில் இருக்கும்போது தேன்மொழி அக்காவின் வீட்டுக்காரர் தன் மலையாளி நண்பருக்குக் கயலைக் கட்டிக் கொடுப்பதில் ஆர்வம் காட்டுவதாக அவள் எனக்கு எழுதியிருந்தாள்.

கயல் திரும்பி வந்தபோது தான் நான் எம்.எஸ்ஸி முடித்து வேலைக்கான முதல் இண்டர்வியு போயிருந்தேன். படித்ததற்கும் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் முதல் நிலை அதிகாரியாகச் சேர்வதற்கான தகுதி என்ற எதிர்பார்ப்புக்கும் இருந்த வித்தியாசம் புரிய மலைப்பாக இருந்தது. நல்ல வேளை, வேலை கிடைத்தது.

கயல் என் அப்பாவிடமும், நான் பார்வேந்தனாரிடமும் மதிமுகத்தம்மாளிடமும், நாங்கள் இருவரும் வாழ்க்கையில் இணைய விரும்புவதை முறைப்படி சொன்னோம். மூத்தவர் சம்மதித்தனர்.

கல்யாணத்துக்கும் விருந்துக்கும் முதலில் நின்று கலகலப்பாகப் பங்கெடுத்துக் கொண்டவள் ஜோசபின். கல்யாணத்தில் அவளைக் கயல் ‘இடைவிடா சகாய மாதா’ பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டாள். ஜோசபின் இனிமையாகப் பாடினாள் –

’மாணிக்க வீணை ஏந்தும்
மாதேவி கலைவாணி
தேந்தமிழ் சொல்லெடுத்துப்
பாடுகின்றேன் அம்மா பாடுகிறேன்’

லெச்சு, அந்துவான், ப்ரான்ஸ்வா, வைத்தே, சிற்சபேசன் என்று ஒரு சகா விடாமல் கேரளத்தில் திருமாந்தாங்குன்னு பகவதி மகா க்‌ஷேத்ரத்தில் நடந்த என் கல்யாணத்துக்கு வந்திருந்தார்கள். லதா தீதியோடு வல்லூரி சாரும் வந்திருந்தார். திருமாந்தாங்குன்னு பக்கத்து அங்காடிப்புரம் ஸ்டேஷனில் ரயிலை விட்டு இறங்கும்போது படி வழுக்கி முழங்காலில் பேண்டேஜோடு கலந்து கொண்டார் அவர். தீதி அவ்வப்போது கயலுக்கு எழுதும் கடிதங்களில் வல்லூரி சாருக்கு சமீபத்தில் ஏற்பட்ட விபத்து என்று ரெண்டு வரியாவது இருப்பது வாடிக்கை. மற்றபடி அவர் கிழங்கு போல் ஒரு நோயும் அண்டாமல் திடகாத்திரமாக எழுபது சில்லறை வயதில் இருக்கிறார்.

கல்யாணம் முடிந்த கையோடு எர்ணாகுளத்தில் உத்தியோகம் கொடுத்தார்கள். அப்பா ரிடையர் ஆன நேரம். ஆனால் அவர் எரணாகுளம் வரச் சம்மதிக்கவில்லை. ரெட்டைத் தெரு இருந்த ஊர் அவருக்கும் பிள்ளைப் பிராய ஊர் ஆனதால் அங்கே சிறிய வீடு ஒன்றை வாங்கி இருந்து வந்தார். ரெட்டைத் தெருவில் மிச்சம் இருந்த என் தோழர்கள் குடும்ப சகிதம் அவருக்கு சகல விதத்திலும் உதவினார்கள்.

‘அத்தனையும் என் பிள்ளை தான்’. அப்பா குண்டுராஜுவின் மகா கனம் வாய்ந்த ரெண்டு வயசு மகனை தம் பிடித்துக் கொண்டூ கட்டித் தூக்கியபடி சொல்லும்போது ராஜு போட்டோ எடுத்ததைப் பகிர்ந்து கொண்டான். அப்பா எண்பத்தெட்டு வயதில் போன வருடம் காலமானார். அப்போது அவரோடு நானும் கயலும் இருந்தோம்.

ஜோசபின், எர்ணாகுளத்தில் நாங்கள் இருக்கும்போதும் தில்லிக்கு மாற்றலாகி அங்கே பத்து வருஷம் இருந்த போதும். அடுத்த பத்தாண்டு மும்பையில் இருந்தபோதும் பிறகு கொல்கத்தாவில் வசித்த போதும், அவ்வப்போது விடுமுறைக்கு வந்து தங்கி இருந்து போவாள். மகா இனிமையான பொழுதுகள் அவை எல்லாம். நான் போன ஆண்டு பணி ஓய்வு பெற்று கயல் சகிதம் சென்னையில் செட்டில் ஆனேன்.

நாலு வருடம் முன்பு ஜோசபின் பணி ஓய்வு பெற்றாள். அவள் கண்ணுக்குப் பார்வைக் குறைவு என்று நடந்த காடராக்ட் ஆபரேஷனுக்கு கயல் ஊருக்குப் போய் அவளைக் கவனித்துக் கொண்டிருந்து விட்டு வந்தாள். சோடா புட்டி மூக்குக் கண்ணாடியும் வாயில் மேல் வரிசைப் பல் விழுந்து நாலு இம்ப்ளாண்ட் பற்களோடும் ஜோசபின் இருக்கிறாள். அவள் நிறையப் படிக்கிறாள். அதில் மிகுதியும் பைபிள்.. அமேயர் பாதிரியார் தொடங்கி வைத்த, காரைக்கால் அருகே உள்ள அனாதை ஆஸ்ரமத்தில் அவள் தொண்டு செய்து வருகிறாள். போன வருடம் அவள் பாடிய பழைய கிறிஸ்துவ கீதங்களை யூடியூபில் ஏற்றினோம். ஆயிரத்த்து சொச்சம் லைக் வந்திருக்கிறது இதுவரை. குறுவட்டு வெளியிடவும் திட்டம் இருக்கிறது இன்ஷா அல்லாஹ்.

சென்னையில் நானும் கயலும் ஜோசபினோடு அவளுடைய அறுபத்தைந்தாம் பிறந்த தினத்தை சமீபத்தில் கொண்டாடினோம். ஜோசபின் இன்னும் எனக்கு அழகான வெள்ளுடைத் தேவதை தான். கயல் என்னைக் கிண்டல் செய்யும் போது ஜோசபினை உலகப் பேரழகி என்பாள் இன்றைக்கும். கருப்பழகி கண்ணழகி என்பேன் என் கயலை.

கயல் நான் உத்தியோக மாற்றம் பெற்றுப் போன நகரங்களில் எல்லாம் மிக எளிதாக பிரஞ்சு பேராசிரியையாக கல்லூரி உத்தியோகத்தில் இருந்தாள். நான் ஓய்வு பெற்ற போது அவளும் ஓய்வு பெற்றாள் கௌரவப் பேராசிரியராக இன்னும் போய் வந்து கொண்டிருக்கிறாள். அறுபது வயசுக்கு அவள் காரோட்டும் வேகம் அபாரம்.

கயலுக்கு நானும் எனக்குக் கயலும் குழந்தையாக இத்தனை வருடம் கடநது விட்டது. இனியும் அப்படியே நகரும். மறுபடி நாங்கள் பிறந்தாலும் கூட அப்படித்தான்.

அந்த்வான், ப்ரான்ஸ்வா, வைத்தே, லெச்சு எல்லோரும் பிரான்ஸில் குடியேறி விட்டார்கள். அடிக்கடி உத்தியோக விஷயமாக பிரிட்டன் போகும்போது சானல் டன்னல் பாதாளக் கணவாய் வழி போய் அவர்களை பாரீஸிலும் நைஸிலும் மார்செயில்ஸிலும் சந்தித்து வருவதை ரிடையர் ஆகும் வரை கடைப்பிடித்தேன். இனி அவர்கள் வந்தால் தான் என்று சொல்லி விட்டு வந்திருக்கிறேன். அந்துவான் அடுத்த மாதம் வருகிறான். பிரான்ஸில் முக்கியமான பத்திரிகையாளன் அவன்.

ருழே சாந்தி ப்ரான்ஸ் நாட்டில் சீனியர் டெலிவிஷன், நாடக நடிகையாகத் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறாள். போன மாதம் ஒரு பேப்பர் கட்டிங் அனுப்பி இருந்தாள். என் இளம் பிராய க்ரஷ் என்று என் புகைப்படத்தைப் போட்டிருந்தாள்.. சொல்லவே இல்லையே. பிரஞ்சில் இருந்த அந்த பேப்பர் கட்டிங்கை நூறு தடவை மெல்லப் படித்து மனப்பாடம் ஆக்கினேன். ஆனந்தமான அதிர்ச்சிக்கு வ்யது ஏது? கயலிடம் மெல்லச் சொல்ல வேணும் இதை. ருழேயும் என் காதலி!

அமேலி. என் வாழ்க்கையில் சூறாவளியாகப் புகுந்து என்னை எனக்கு இனம் காண வைத்த அந்த உலக அழகியை நான் மறக்கவில்லை. அவள் பிரான்ஸில் புகழ் பெற்ற சரித்திர ஆராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியை. சுவிட்சர்லாந்து பிரஜையும் ஒயின் தயாரிப்பில் பிரபலமான நிறுவனம் நடத்துகிறவருமான ஹென்றி ஆல்ஃபோன்ஸ் மனே என்ற கோடீஸ்வரரைக் கல்யாணம் செய்து கொண்டு சுவிட்சர்லாந்தில் குடியேறினாள். அவள் எனக்கு அவ்வபோது தமிழில் எழுதிய கடிதங்களில் அபரிமிதமான சிருங்காரம் உட்பட எல்லா ரசங்களும் கலந்து இருக்கும். அமேலி மட்டுமில்லை, அவளுடைய பிரஞ்சும் ஆங்கிலமும் கடிதங்களும் வெகு அழகு. ஆத்மார்த்தமான, இனிமையான அந்தக் கடிதங்களை நான் கயலுக்குக் காட்டியதில்லை. நான் அமேலிக்கு எழுதிய பதில் கடிதங்களையும் தான்.

சுவிட்சர்லாந்துக்கு முப்பது வருடம் முன் முதல் தடவையாகத் தொழில் நிமித்தமாகப் போனபோது அமேலிக்குத் தொலைபேசினேன். விவாகரத்து ஆகி இருப்பதாகத் தெரிவித்தாள். சந்திக்கலாமா என்று கேட்டேன். வரச் சொன்னாள். பெரிய வீடு. எல்லா வசதியும் உண்டு. சாப்பிட்டு விட்டு உட்கார்ந்து ஊர்க் கதை பேசிக் கொண்டிருந்தபோது பிரஞ்ச் ஷகொலா சாப்பிடறியா என்று கேட்டாள் அமேலி. அவள் கொடுத்த அழகான பெட்டியில் இருந்து சாக்லெட் எடுத்தபோது தான் கவனித்தேன். லலி தொலாந்தல் வீதியில் கர்னல் வீட்டில் அமேலி இருக்கும்போது பார்த்த பெட்டி போல இந்தப் பெட்டிக்கும் இரண்டு அறைகள். அன்றைக்கும் மறுநாளும் அங்கே தான் தங்கினேன்.

வருடா வருடம் ஏதாவது சாக்கு சொல்லி இங்கிலாந்து பயணமும், சுவிட்சர்லாந்தில் நானாக இழுத்துப் போட்டுக் கொள்ளும் கம்பெனி வேலையாக சுவிட்சர்லாந்து பயணங்களும் தொடர்ந்தன. அமேலி அடுத்த மாதம் இந்தியா வருகிறாள். தில்லியில் வரலாற்று மாநாடாம்.

கயலை அமேலி விஷயத்தில் மட்டும் ஏமாற்றி இருப்பதை அவளிடம் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவளுக்கு முன்பாக ஜோசபினிடம் இதைச் சொல்வேன். மன்னிக்க மாட்டார்கள். நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள். ஆனாலும் கை விடவும் மாட்டார்கள்.

முதுமை ஆதரவு தேடுவது. அன்பு தேடி ஏங்கி நிற்பது. அனைத்துப் பழைய குற்றங்களும் பாவங்களும் மன்னிக்கப் படும். நினைவுகளின் ஊர்வலம் பரிசுத்தமான நினைவுகளோடு மட்டும் தொடங்குகிறது.

(நிறைந்தது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன