தியூப்ளே வீதி – Honours & a letter from Uma Shakthi

தினமணி இணைய தளத்தில் 33 வாரம் வெளியான ‘தியூப்ளே வீதி’ பயோபிக்‌ஷன் நாவல் இன்று நிறைவு பெறுகிறது.

எழுதச் சொல்லிக் கேட்டுக் கொண்ட தினமணி பொது நிர்வாகி, நண்பர் ஆர் வி எஸ், இணையப் பதிப்பு ஆசிரியர் பார்த்தசாரதி இவர்கள் அளித்த ஊக்கம் 10 வாரத்தில் முடிக்க நினைத்த தொடரைச் சரம் சரமாகக் கதை சொல்ல வைத்து 600 பக்கங்களில், 33 அத்தியாயங்களோடு நிறைவு காண வைத்துள்ளது. இந்த நண்பர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

தியூப்ளே வீதி நாவல் விரைவில் வெளிவருகிறது. அது என் அன்புத் தோழி உமா ஷக்திக்கு நான் அர்ப்பணிக்க வேண்டிய நூல். ஒவ்வொரு வாரமும் எடிட்டராக மட்டும் இல்லாமல் முதல் வாசகராக, ரசித்துப் படித்து, வாசக அனுபவத்தைத் தொடர்ந்து வாராவாரம் எல்லா சஹ்ருதயர்களோடும் பகிர்ந்து கொண்டார் உமா.

பாராட்டுகிற அதே வேளையில் அன்போடு கிண்டல் செய்யவும் மறக்கவில்லை அவர். ‘என்ன முருகன், ஆரம்பத்திலே ரொம்ப விவரமா பாண்டிச்சேரி வீதி, கட்டடம், வீடு, ஹோட்டல், தியேட்டர்னு ஒண்ணு விடாம கவர் பண்ணினீங்க.. அப்புறம் அங்கே எல்லாம் அந்தப் பையன் சளைக்காம கேர்ள் ப்ரண்டுகளைக் கூட்டிப் போய் முத்தம் கொடுத்திட்டு இருக்கான்..’.

ஒவ்வொரு புது அத்தியாயம் எழுதும் போதும் இதை நினைத்துச் சிரிப்பேன்!

பயோபிக்‌ஷன்லே எவ்வளவு விழுக்காடு உண்மை? இந்தக் கேள்விக்கு நான் உமாவுக்கு இதுவரை நேரடியான பதில் சொல்லவில்லை. மேகலாவும், ஜோசபினும், கயலும், அமேலியும்… உண்டு ஆனா இல்லே. உமாவுக்கு மேகலாவை அறிமுகப்படுத்தியிருக்கிறேனாக்கும்!

இறுதி அத்தியாயங்களை ஒரு முறைக்கு இருமுறை வாசித்து, அற்புதமான ஒரு உட்பெட்டிக் கடிதமாக அனுப்பியிருந்தார் அந்தக் கவிதாயினி. அவர் கவிதை போல், அழகியல் ரசனையோடும் சிந்தனைத் தெளிவோடும் அற்புதமாக அமைந்த அந்தக் கடிதத்தைப் படிக்கப் படிக்க மனம் நிறைகிறது.

உமாவுக்காக இன்னொரு பயோபிக்‌ஷன் எழுதலாம்.

நன்றி உமா ஷக்தி

வாராவாரம் தினமணிக்கு அனுப்பும் போதே இன்னொரு நண்பருக்கும் அனுப்பி விடுவேன். பொறுமையாகப் படித்து அழகாகக் கருத்துத் தெரிவிப்பார் அவர். அச்சுதம் கேசவம், தியூப்ளே வீதி, வாழ்ந்து போதீரே மூன்றையும் விரிவாக விமர்சனம் செய்கிற, பாராட்டுகிற, கேள்வி கேட்கிற என் அருமை நண்பர் கிரேசி மோகனுக்கு நன்றி வெண்பா நானூறு பாட இருக்கிறேன்!

——————————————-

உமா ஷக்தி எழுதிய கடிதம்

வியாக்கிழமையை அழகிய தினமாக எனக்கு ஆக்கித் தந்த உங்களுக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும். இலக்கிய உலகில் எழுத்து எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சர்ச்ச்கையும் விவாதமும் அடிக்கடி நடைபெறும்.

என்னைப் பொருத்தவரையில் ஒரு வாசகனை நட்புடன் கரம் பிடித்து பக்கத்தில் உட்கார வைத்து அப்படியே அந்த எழுத்துக்குள் ஐக்கியமாக வைத்துவிடுவது தான். தங்கள் மேதமையை எழுத்தாக்கி வார்த்தைகளை வலிந்து திணித்து வாசகரை ஓரங் கட்டச் செய்யும் எழுத்து எனக்கு உவப்பானதல்ல.

தவிர தன்னுடைய சொந்த சோகங்களையும் துக்கங்களையும் படைப்பாக்கி, படிப்பவன் கசந்தும் வெறுத்துப் போகும் அளவிற்கு வாசனுக்குள் எதுவும் நிகழ்த்தாத எழுத்தையும் என்னால் ஒரு போதும் ரசிக்க முடியாது.

மாறாக எழுத்தை ஒரு ஊற்றாக்கி, மையில் தன் உயிரில் உணர்வில் கலந்தவற்றை மொழியின் துணையோடு முடிந்த வரையில் தன் ஆன்மாவை படிப்பவனுக்கு கடத்தச் செய்கிறவனே நல்ல எழுத்தாளன். இரா முருகன் அத்தகைய ஒரு எழுத்தாளர். அவர் படைப்புக்களைப் படிப்பவர் யாருக்கும் இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

வாழ்வை நுட்பமாக ரசித்து, உணர்ந்து, கற்று, கற்றதை மேலும் கற்பனை சேர்த்து சுய அனுபவம் கலந்து எழுதும் போது அந்த எழுத்து அமரத்துவம் பெறுகின்றது. தத்துவமும், தேடலும், ஆழமும் அழகியலும், நவீனத்தன்மையும் கொண்ட எழுத்து முருகனுடையது.

தினமணியில் கடந்த 33 வாரங்கள் வெளிவந்து கொண்டிருந்த தியூப்ளே வீதி அதற்கு மிகச் சிறந்த சான்று.

மனத்தை எப்படி கையாள்வது என்பது பெரிய வித்தை. ஞானிகளுக்கே அது சிரமம். பதின்வயதில் ஒருவன் தீர்மானிக்கும் சில விஷயங்களே அவன் ஒட்டுமொத்த வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்பதை இதை விட தெளிவாக ஒருவரால் எப்படி புனைவாக்க முடியும்?

தியூப்ளே வீதியில் அந்த அன்பின் உள்ளங்கள் இட்ட முத்தங்கள் காற்றில் கலந்திருக்கலாம். அவர்கள் மனத்தில் அந்நினைவு என்றென்றும் ஈரம் காயாதிருக்கும். அதன் சாரத்தை எழுத்தாக்கித் தருகையில் படிக்கும் ஒவ்வொருவரின் மனங்களிலும் அன்பின் வெளிச்சம் பரவும்.

இத்தகைய மாயங்களைச் செய்ய முருகனால் முடிந்திருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் இதோ என்னுடன் தான் இருக்கிறார்கள். கதையில் அவர்களின் பங்களிப்பு முடிந்துவிட்டாலும், கண்ணுக்குப் புலப்படாத தோழமைகளாக தொடர்கிறார்கள்.

மேகலா ஒரு அழகிய கவிதையாக நிஜத்திலும்…

தவிர கதை நாயகன் எனக்கு பத்து வருட காலமாக எனக்கு நல்ல நண்பர், மிகப் பிரியமான எழுத்தாளர். அவருடைய சில நாட்களில் உலவி வந்தது எனக்குக் கிடைத்த பேறு. இக்கதை நாவலாகும் போதும் முதல் வாசகியாகப் படிக்க ஆசை. நிச்சயம் இதை திரைப்படமாக எடுத்தால் மிகப் பெரிய கவனம் பெரும். உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி Merci Beaucoup Era.Murukan இரா.முருகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன