New Novel: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 18 இரா.முருகன்

சாமுவேல் என்று பெயர் சொன்னார். போன வாரம் வந்த போது சாமிவேல் என்று சொல்லியிருந்தார். அவருடைய பெயர் இந்த இரண்டில் எது என்று அரசூரில் ஒரு வாரமாகப் பலமான சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது.

எந்தப் பெயரோ, கருத்து மெலிந்த ஒட்டடைக் குச்சி போல ஓங்குதாங்காக வளர்ந்த ஒரு நடு வயசு மனுஷர் அரசூரில் வீடு வீடாக அத்து மீறிப் புகுந்து ரேடியோப் பெட்டிகளை உடைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

ரேடியோ பெட்டி வைத்து கானங்களையும், நேரம் கெட்ட நேரங்களில் யார் யாரோ தில்ரூபா வாசிப்பதையும், தேசப் பற்றைத் தூண்டும் பிரசங்கம் செய்வதையும், வீட்டுக்குள் சாய்வு நாற்காலியில் ஓய்வாக இருந்தபடி கேட்பதை இது தடை செய்தது. கிரிக்கெட்டில் ஈர்ப்பு உள்ள பிள்ளைகளையும் அவர்களின் நெருங்கிய உறவினர்களையும் யார் எத்தனை ஓட்டம் எடுத்தார், யார் பந்து வீசி அவரை வீழ்த்தினார் என்று சதா அறிவுத் தேட்டத்தில் ஈடுபடுவதையும் இந்த ஒட்டடைக் குச்சி மனுஷர் நிறுத்திப் போட்டார்.

பெட்டி வைத்திருக்க லைசன்ஸ் எடுத்தாக வேண்டும்.

அவர் கொட்டையை நெருக்கிய பிறகு தான் ஊரில் பாதிப் பேருக்கு இப்படி ஒரு சங்கதி இருப்பதே தெரிய வந்தது.

சர்க்கார் கேட்கச் சொல்லி பிராணனை வாங்குகிற பாட்டைக் கேட்க சர்க்காருக்கு ஏன் காசு கொடுக்கணும்? சங்கீதத்தை முறையாக எல்லோருக்கும் சொல்லித் தர ஏற்பாடு செய்யாமல், ராத்திரி உறங்கும் நேரத்தில் குடும்பத்தோடு விழித்திருந்து சங்கீதக் கச்சேரிகளை கேட்கச் சொல்வதற்கு அவர்கள் தானே காசு கொடுத்தாக வேண்டும்? அப்படி விழித்திருக்கிற, கம்பளி ஸ்வெட்டர் அணிந்த வடக்கத்தியக் குடும்பங்களைப் பத்திரிகை விளம்பரங்களில் மங்கிய புகைப்படமாகப் போட்டால் மட்டும் போதுமா?

ஊர்ப் பெரியவர்கள் கீழ்ப்பாத்தி கண்மாய்க் கரையில் விடிகாலை நேரம் கூடுவார்கள். விடிந்து விட்டது என்பதை நியாயப்படுத்துவதாக அவர்கள் கருதும் காரியம் முடிக்க அங்கே போய்க் குத்த வைக்கும் நேரம் அது. அப்போது புகைச் சுருட்டைச் செல்லாமாகக் கடித்தபடி பேச ஒரு தலை போகிற தகவல் கிடைத்தது.

ஏண்ணே, லைசன்ஸ் இல்லாட்ட பொட்டியை நடுத்தெருவிலே போட்டு உடைக்கறானாமே.

அதை ஏன் கேக்கறே’ப்பு? காளிமுத்தன் தெரு மாவன்னா ரானா வீட்டு ரேடியோவைப் இப்படி போட்டு உடைச்சு அது பத்து சுக்காகி தெரிச்சு விளுந்துச்சாம். ஒண்ணொண்ணும் ஒவ்வொரு ஓரம் ஓடினதாம். இப்போ நடு ராத்திரியிலே அவுக வீட்டுக் கிணத்துக்குள்ளே இருந்து ஐயங்கார் கச்சேரிப் பாட்டு பாடறது கேக்குதாம். மாடப் புறையிலே இருந்து மன்மத லீலையை வென்றாருண்டோ வருதாம். தோட்டத்திலே கீரைப் பாத்திக்கு உள்ளாற இருந்து குஜாலா கரகாட்டப் பாட்டு கேக்குதாமில்லே?

அது என்ன பாட்டு அண்ணே?

சனிக்கிளமை சாயந்திரம் சாயாக்கடை ஓரத்திலே வண்ண மணிக் குட்டச்சி

கேட்டதே இல்லையே. அங்கனக்குள்ள இருந்துக்கிட்டே முளுக்கப் பாடும்.

வேணாம். நீர் அதைக் கேட்டு வந்ததைத் தவிர வேறே காரியம் செஞ்சுடுவீர்.

டப்டப் என்று பிருஷ்டத்தில் அடித்தபடி புகை விட்டவர்கள் சிரித்தார்கள். ரேடியோ லைசன்ஸ் தீர்வை போல கீழ்ப்பாத்திக் கம்மாய்க் கரையில் கழிக்கவும் லைசன்ஸ் காசு கேட்பார்கள் இனி என்று எதிர்பார்க்கப் பட்டது.

ரெவ்வெண்டு லைசன்ஸா எடுத்தா சர்க்காரே ஆள் போட்டு அலம்பி விடுமாம். கட்டலேன்னா குண்டு வெடிக்கற மாதிரி குண்டி வெடிச்சுடும் ஆமா.

சிரிப்பு அவர்கள் வீடு போகும் வரை கூட வர வைத்த ரேடியோ இன்ஸ்பெக்டருக்கு அவர்கள் மனசார நன்றி சொல்லிக் கலைந்தார்கள்.

சாமுவேலோ சாமிவேலோ, அவர்களை வயசேறிய விடலைகள் ஆக்கியதில் அந்த மனுஷர் முழு வெற்றி பெற்றிருந்தார். அவர்கள் மட்டும் என்று இல்லை, ஒரு வாரமாக எல்லாப் பேச்சும் இதில் தான் போய் நிற்கிறது.

செட்டியூரணியில் இருந்து குடிதண்ணீர் சுமந்து போகும் பெண்கள், ரேடியோ லைசன்சுக்கார கழிச்சாலே போவான் சுக்கு நூறாகச் சிதறுத் தேங்காய் போல உடைத்துப் போட்ட ரேடியோப் பெட்டிகளில் இருந்து கரண்ட் தரையில் பரவி, வீட்டுத் தரை விரிசல் கண்டதாக உரக்கப் பேசி, தண்ணீர் சிலும்பி மேலே வழிந்து வளமான மாரிடம் நனைந்து, உடலில் வடிவாக ஒட்டிப் படிந்த சேலையோடு அதிரூப சுந்தரிகளாகக் குடம் சுமந்து போகிறார்கள்.

தணிந்த குரலில், அந்த மின்சாரம் பரவிய தரையில் இறுக்கப் பிணைந்து கிடந்து சுகிக்கும் ராத்திரி உறவின் போது நிறைய நேரம் ஈடுபட முடிவதாகச் சிரிப்புகளுக்கு இடையே தகவல் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ராத்திரிகளில் சப்தம் தாழ்த்தி வைத்த வானொலியில் ஒலிபரப்பாகும் அகில பாரத நாடகத்தில் குப்தாஜி, உங்கள் ஆசனத்தை உள்ளே கொண்டு வந்து, வாயை இனிப்பு ஆக்குங்கள் என்பது போன்ற வசனங்களைக் கேட்டபடிக் கலவியில் உச்சம் தொட்டதை விடத் தரையில் கசிந்த மின்சாரத்தால் வரும் சுகம் அதிகம் என்று அவர்கள் சொன்னாலும், அதற்காக ரேடியோ பெட்டியை உடைக்கக் கொடுப்பது தவறான நடவடிக்கை என்பதையும் கூடவே குறிப்பிடத் தவறுவதில்லை.

நவராத்திரி விடுமுறைக்கு அடைத்த நீதிமன்றங்கள் திறந்து, கேஸ் கட்டுகளை கேரியரில் வைத்துக் கொண்டு உற்சாகமாக உந்து வண்டி மிதித்துப் போன வக்கீல் குமாஸ்தாக்கள் மத்தியில் ரேடியோ உடைப்பு விதம் விதமாகச் சர்ச்சை செய்யப்பட்டது. அவர்களில் ஒருத்தர் ரேடியோ இன்ஸ்பெக்டர் வேலைக்கு சீமையில் தான் போய்ப் படித்து வரவேண்டும் என்றும் சர்க்கார் உத்தியோகங்களிலேயே, கலெக்டருக்கும், டிஸ்ட்ரிக்ட் கோர்ட் ஜட்ஜுகளுக்கும் கிடைக்கும் சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி சேர்த்து, இவர்களுக்கும் கிட்டும் என்றும் சொன்னார். எந்த வீட்டைக் கடந்து போகும்போதும் உள்ளே ரேடியோ இருக்கிறதா என்று ரேடியோ இன்ஸ்பெக்டர்களுக்குத் தெரிந்து விடும் என்றும் இதைக் கண்டுபிடிக்க, இடது கையில் தகடு கட்டி இருப்பார்கள் என்றும் இன்னொரு குமாஸ்தா தெரிவித்தார். லைசன்ஸ் இல்லாத ரேடியோக்களை மாசம் இவ்வளவு என்று இலக்கு நிர்ணயித்து உடைக்க அவர்களுக்கு உப ஜனாதிபதி மூலம் வருடம் இரண்டு முறை இந்தியில் எழுதிய தாக்கீது வரும் என்றார் அவர்.

வக்கீல்களுக்கும் நேரடியாக இல்லாவிட்டாலும் ரேடியோ லைசன்ஸ் பிரச்சனை மூலம் மறைமுகமாகப் பாதிப்பு இருந்தது.

கீழ்ப்பாத்திக் கம்மாய் வக்கீல்களுக்கு இல்லை என்பது எழுதாத விதி. அங்கே குமாஸ்தாக்களும், வேலை வெட்டி இல்லாத ஊர்ப் பெரிசுகளும் மட்டுமே சுருட்டோடும் புது வம்போடும் போய்க் குந்துவது வழக்கம்.

வக்கீல்கள் காலையில் வீட்டு வாசலில் வந்து விழும் ஆங்கிலப் பத்திரிகைகளில் விளையாட்டு பற்றிய பக்கத்தைத் திறந்தது, அதன் கீழ்ப் பகுதியில், யாரெல்லாம் செத்துப் போனார்கள் என்று புகைப்படங்களோடு அச்சடித்து அறிவிப்பு வந்திருப்பதைப் படித்ததும், கிரமமாகக் காலைக் கடன் கழிக்க அவரவர் தேகத்தைத் தயார் செய்து வைத்திருந்தார்கள். அதை விட விரசாகக் கழிவு நீக்க ரேடியோ சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

வக்கீல்கள் காலை ஏழரை மணிக்கு, ஆகாசவாணி, செய்திகள், வாசிப்பது என்று பத்து நிமிடம் வாசிக்கும் செய்தி அறிக்கை கேட்டு முடியும் போது அவர்களுக்கு வயிறு சந்தோஷ சமாசாரம் சொல்வது நடப்பானது. தினசரிப் பத்திரிகை வராத தினங்களிலும் ஆகாசவாணி உண்டென்பதால் நிலைமை சீராக இருந்தது.

அச்சமூட்டும்படி கூட்டம் கூட்டமாக வந்து இறங்கி ராப்பகல் பாராது, மழையும் வெய்யிலும் குளிரும் ஏற்படுத்திய காலநிலை வித்தியாசத்தை உணராமல் சதா மயில் ஆடிய வண்ணமாக இருந்தது போய், கழுகுகள் மட்டும் கூட்டமாகப் பறந்து கோயில் குருக்கள் மேலும் வக்கீல்கள் மேலும் தினசரி எச்சமிட்ட நேரம் அது. நடப்பதெல்லாம் நல்லதுக்குத் தானா என்று ராமாயணக் கதையை இன்னும் சுத்த ஜலம் நிறைத்த செம்பில் இருந்து தினமும் சொல்லி வரும் பஞ்சாபகேச சிரௌதிகளிடம் கேட்டார்கள். அவர் இதெல்லாம் நல்லதுக்கு இல்லை என்று தெரியப்படுத்திப் பரிகாரமும் சொன்னார்.

நமக்கு மூத்த குடியினர், முன்னூறு ஐநூறு வருஷம் முன் பயன்படுத்தாத, அதனால் நமக்கு அந்நியமான எல்லாவற்றையும் பகிஷ்கரித்தாலே போதுமானது என்றார் சிரௌதிகள். வக்கீல்கள் தவிர வேறே யாருக்கும் அதை எடுத்துச் செய்ய நேரமும் சிரத்தையும் கிட்டவில்லை. அவர்கள் புதுப் பழக்கத்தைப் பகிஷ்கரிப்பதற்காக டிகிரி காப்பி குடிப்பதையும் ஆங்கிலப் பத்திரிகை வாங்குவதையும் நிறுத்தி வைக்க வேண்டிப் போனது. முட்டைகோசும் காரட்டும் உருளைக் கிழங்கும் இதே நியாயத்திற்கு உட்பட்டு சாப்பிடுவது விலக்கப்பட வேண்டும் என்றாலும், செம்புத் தண்ணீருக்குள் பஞ்சாபகேசன் ஆவாஹனமாகாத நாளில் அவருடைய பெண் சிஷ்யை இந்த சாத்வீகமான காய்கறிகளைப் புசிக்க எந்தத் தடையும் இல்லை என்று நாலு ஸ்லோகங்களையும், பாரசீக, ஜப்பானிய, சீனப் பாடல்களையும் தலா ரெண்டடி பாடி நிரூபித்தாள். பஞ்சாபகேசன் செம்பில் இறங்கி இருந்தாலும் அதே தான் சொல்லியிருப்பார் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை.

ஒயிட் லெக்கான் கோழியும், முட்டையும் சாப்பிடத் தகுதி வாய்ந்தது தானா என்று ரயில்வே ஷ்டேஷன் மாஸ்டர் ரெட்டியார் பஞ்சாபகேசன் சிஷ்யையிடம் தகவல் கேட்க, அவள் ரயில் வராத தினங்களில் அப்படிச் செய்யலாம் என்று அபிப்பிராயம் சொன்னாள். ரெட்டியார் வெளியூருக்குப் போனாலும் அந்த விதிவிலக்கு உண்டு என்று கொசுறாக இன்னொரு சுலோகம் சொல்லி எடுத்துரைத்தாள். ரெட்டியார் வாரம் மூன்று தடவையாவது பத்து கிலோமீட்டர் கடந்து போய் விட்டு வருவதற்குக் காரணம் ஏதும் யாரிடமும் கூறுவதில்லை.

ரேடியோவை முன்னோர் உபயோகிக்காத பட்டியலில் சேர்த்து அதன் உபயோகத்தை நிறுத்தி விடுவதை வக்கீல்கள் விரும்பாததால் அதைப் பற்றி சர்ச்சை இல்லாமல் போனது. கரண்டில் இயங்கும் எதுவும் முன்னோர் ஆசியோடு உபயோகிக்கிறதால் எதேஷ்டமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பஞ்சாபகேசன் வகையறாக்கள் எடுத்துரைத்தார்கள். சிக்கல் இல்லாமல் போன ரேடியோ நடவடிக்கையை லைசன்ஸ் இன்ஸ்பெக்டர் சிக்கலானதாக்கி விட்டார். இவ்வளவுக்கும் வக்கீல்கள் பெரும்பாலும் பத்து ரூபாய் வருடாவருடம் அவரவர் வீட்டு ரேடியோவுக்கு லைசன்ஸ் எடுக்கிறவர்கள்.

இது இப்படி இருக்க, ராமாயணக் கதை மெல்ல முன்னேறுவதற்குக் காரணம் என்ன என்று ஓய்வு பெற்ற முன்சீப் கோர்ட் நீதிபதி நீலமேகம் பிள்ளை தலைமையில் தாங்களாவே ஏற்படுத்திக் கொண்ட ஏழு நபர் குழு ஆராய்ந்தது. கதை நேரத்தை ஆருடம் கேட்கப் பயன்படுத்துவதே காரணம் என்று அந்தக் குழு தீர்மானத்துக்கு வந்தாலும் அதை முழுக்க எடுத்துச் சொல்ல அவர்களுக்குச் சந்தர்ப்பம் தரப்படவில்லை. இவர்கள் குறிப்பிட்ட ஆரூடம் தினசரி கதை சொல்வதற்கு முன் கேள்வி பதில் ரூபத்தில் நிகழ்வது.

ஊர் நன்மையை உத்தேசித்து எழும் கேள்விகளில் ஒன்றாகப் போன வாரம் புதன்கிழமையன்று ரேடியோக்களை உடைத்துப் போடும் சர்க்கார் உத்தியோகஸ்தர் பற்றிச் செம்பு நீருக்குள் கேள்வி மரியாதையோடு தொடுக்கப்பட்டது. பஞ்சாபகேசனின் ஆதிகால சிஷ்யர்கள் கைத்தாளமிட்டும், ஜிங்குஜிங்கென்று கைக்கடக்கமான ஜால்ராக்களோடும் சந்தோஷ ஒலி எழுப்ப, தண்ணீரில் இருந்து வந்த பதில் இப்படி இருந்தது –

அந்த வெளியூர் மனுஷ்யர் சாமுவேலாக வரும் நாட்களில் நல்லவராகவும் சாமிவேலாக வரும் போது பிசாசு மேலேறியவராகவும் இருக்கிறார். பிசாசு தினங்களில் மட்டும் அவர் வானொலி உடைக்கிற துர்செயலில் ஈடுபடுகிறார். வீட்டு வாசல்களில் குங்குமம் பூசிய எலுமிச்சைகளை நிலைக்கு மேல் பொருத்தி வைத்தால் அவர் வீட்டுக்குள் நுழையாமல் இருப்பார். சர்க்காருக்குச் சேர வேண்டிய தொகையைச் செலுத்த எல்லோரிடமும் உபரியாகப் பணம் புழங்க, தினம் இங்கே உபரி சங்கீர்த்தனம் நடத்துவோம். எல்லோரும் புதிதாகப் பறித்த காய்கறிகளும், அரிசியும் பருப்பும், ரெண்டு ரூபாயிலிருந்து மேலே இஷ்டம் போலவும் உசிதம் போலவும் சுவர்ண புஷ்பமும் சமர்ப்பித்து எல்லா விக்னமும் விலகி ரேடியோ கேட்கலாம்.

செம்பில் இருந்து மேலதிக வழிகாட்டுதல் உத்தரவு கிட்டாவிட்டாலும், சிஷ்யை சொன்னதின் பேரில், எட்டு நபர் குழுவொன்று ரேடியோ உடைக்கும் சர்க்கார் உத்தியோகஸ்தனை, கடந்து போன சனிக்கிழமை காலையில் தெப்பக்குள மேற்குக் கரையில் உள்ள தபால் ஆபீசில் சந்தித்தார்கள்.

ரேடியோ உடைக்காத நேரங்களில் அந்த மனுஷர் போஸ்ட் ஆபீசில் தாற்காலிகமாக மேஜை போட்டு, ஏற்கனவே எழுதிய சர்க்கார் சாணித்தாள் கோப்புகளில் எல்லாப் பக்கங்களிலும் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். போனவர்கள் ஆச்சரியத்தோடு அதைப் பார்த்தபடி நின்றார்கள்.

இவர்களை அன்போடு வரவேற்று தன் மேஜை ஓரங்களிலும் பகுதி நாற்காலியிலும் உட்காரச் சொன்னார் அந்த மனுஷர், ஏன் பழைய கோப்புகளிலும் உதிரிக் காகிதங்களிலும் கையொப்பமிட வேண்டும் என்று அவரிடம் விசாரிக்கப்பட்டது. கை விரல்கள் நெறி கட்டி வலிக்காமல் இருக்க அப்படிச் செய்யச் சொல்லி நகரத்தில் டாக்டர்கள் ஆலோசனை கூறியதாகவும் ஐம்பது வருடத்துக்கு முந்திய பழைய ஃபைல்கள் இங்கே நிறைய இருப்பதால் கை விரல்கள் தற்போது சரியாக இயங்குவதாகவும் தெரிவித்தார் அவர்.

கை விரல்கள் சரியாக இல்லாவிட்டால் லைசன்ஸ் வாங்காத ரேடியோ பெட்டிகளை உடைப்பது சிரமமான காரியம் என்று விளக்கி அவர் வந்தவர்களிடம் வந்த காரணம் விசாரித்தார். அவர்களும் மென்று முழுங்காமல் அவர் செய்கிற இந்த நாசகாரச் செயலை உடனே நிறுத்திப் போட வேண்டும் என்று விண்ணப்பித்தார்கள். கையொப்பம் இடுவதையா என்று அவர் கேட்க, ரேடியோவை உடைப்பதை என்று விளக்கினார்கள்.

அவர் எழுந்து நின்று பிரசங்கி போல் உயர்த்திய குரலில் கூறியது :

உங்களுக்கு நான் ஒண்ணு சொல்ல வேண்டியிருக்கு. எதோ நான் உங்க ஊருக்கு வந்து தான் பொழுது போகாம வீடு வீடாகப் போய் ரேடியோ லைசன்ஸ் கேட்கறேன்னு தானே நினைக்கறீங்க.? அது சரியில்லே.

பின்னே எது தான் சரி? ரேடியோ சரஸ்வதி இல்லையா? சரஸ்வதி தான் வாணி. ஆகாசத்திலே இருந்து இறங்கின சரஸ்வதி அவ சாஸ்வதமா இருக்கற இடம் ரேடியோப் பெட்டி. அதைப் போய் உடைக்கறது என்ன புதுப் பழக்கம்?

அவரோ, இது புதுசொன்றும் இல்லை என்றும் லைசன்ஸ் கட்டணம் வசூலிப்பதை சர்க்கார் மும்முரமாக்கி இருப்பதால் போன வருஷமே அவரையும், விலாசம் சரியாக எழுதப்படாத கடிதங்களைப் பட்டுவாடா செய்யும் இறந்த கடிதங்களின் பிரிவிலிருந்து இன்னும் பத்து பேரையும் இந்த வேலைக்காக உத்தியோக மாற்றம் கொடுத்து அனுப்பி வைத்ததாகச் சொன்னார். சொற்பமான சம்பள உயர்வும் உண்டு என்பதை அவர் சொல்லாவிட்டாலும் அதிகமாக அது இருக்கும் என்பதையும் உடைக்காமல் இருக்க அவர் கையூட்டு வாங்கலாம் என்றும் எட்டு நபர் குழு நம்பியது.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, லஞ்சம் கொடுப்பது குற்றம் வாங்குவதும் குற்றம் என்று ரேடியோ அறிவிப்பாக அவர் தெரிவித்து, லைசன்ஸ் இல்லாத ரேடியோக்களை உடைத்துத் தகர்த்தெறியும் மன நிறைவான காரியத்தில் கை சுத்தமானவர்களே ஈடுபட முடியும் என்றும் இல்லையென்றால் மின் அதிர்ச்சியில் கை கருகி விழுந்து விடலாம் என்றும், அப்படியான ரேடியோக்கள் கேட்கும் போதே வெடித்து வீட்டுக்காரர்களுக்கும் துன்பம் தரும் என்றும் எச்சரித்தார்.

மலையாளக் கரையில் போன மாசம் வரை சர்க்காருக்காக இதே உத்தியோக கைங்கரியம் தான் செய்து வந்ததைக் குறிப்பிட்டு விளக்கினார்.

அங்கே சமுத்திரக் கரையில் ஒரு அம்பலம். அவங்க மொழியிலே கோவில். கோவில்லே பூசை வைக்கிற குருக்கள் வீடெல்லாம் கோவில் பக்கம். பெரிய குருக்களை மேல் சாந்தின்னு சொல்வாங்க. அவரோட வீட்டம்மா காலேஜ் வாத்திச்சியா இருந்து ரிடையர் ஆனவங்க. வீட்டுலே டெல்லி டிரான்சிஸ்டர் ரேடியோ உண்டு. அவங்க பாடுன்னு சொன்னா பாடும். பேசுன்னா பேசும். சும்மா இருன்னா இருக்கும். யட்சினி வேலை அடச்சு வச்ச பெரிய பெட்டி. சரியாப் பாடலேன்னு லைசன்ஸ் கட்டலே. நான் கண்டு பிடிச்சு உடைச்சுப் போடப் போனேன். மலையாளத்திலெ பெரிய விவாதம் எனக்கும் அந்த அம்மாவுக்கும். சோழி உருட்டி எல்லா குருக்களும் அவங்க தான் ஜெயிப்பாங்கன்னாங்க. ஆனா, கடைசியிலே சர்க்காருக்குத் தான் ஜெயம்.

மலையாளத்தில் பேசிப் பாடிய, கோவில் வீட்டம்மா சதா கேட்டுக் கொண்டிருந்த பெரிய பெட்டியை உடைத்துப் போட்ட தன் விரல்களைப் பாசத்தோடு பார்த்துக் கொண்டார் அவர்.

.அதெல்லாம் சரிதான், ஆனால், ரேடியோ இல்லாவிட்டால் நிறைய காரியம் கவனிக்க முடியாது என்பதை எல்லோரும் ஏகோபித்துச் சொன்னார்கள். சாப்பிடும் போது செய்தி அறிக்கை, பகல் நேரத்தில் சினிமா கானங்கள், சாயந்திரம் வித்துவான்களின் வாத்திய சங்கீதம் இதெல்லாம் இல்லாத வாழ்க்கை அலுப்படையச் செய்யக் கூடும், ஊரே இல்லாமல் போகலாம், அப்புறம் லைசன்ஸ் கட்ட ரேடியோ ஏது என்று பரவலான அச்சம் தெரிவிக்கப் பட்டது.

ரேடியோ இல்லேன்னா நல்லது நடக்கும்ங்கறதுக்கு ஒரே ஒரு உதாரணம் நம்ம பஞ்சு அண்ணா சொல்ற ராமாயணம் கேட்க நிறையக் கூட்டம் வரும்.

சிஷ்யர்களில் ஒருவர் புளகாங்கிதமடைந்து இரு கையும் தூக்கிக் கூப்பியபடி சொன்னார். அவருடைய கம்புக்கூட்டில் ரோமத் திரளை அருவருப்போடு பார்த்த ரேடியோக் காரர் திரும்புவதற்கு முன், அந்த சிஷ்யன், அதோ அந்த மயில்கள் போட ஆட வேண்டும் என்று பாடியாடி மற்றவர்களையும் கைகளை உயர்த்திப் பாடி ஆடச் சொன்னார். அக்குள்களின் அணிவகுப்பை எதிர்கொள்ளப் பயந்தவராக ரேடியோக் காரர், நல்லது, நான் நாளைக்குக் கதை கேட்க வருகிறேன் என்று சொல்லி வந்தவர்களை அனுப்பி வைத்தார். அது வேறே எங்கோ அழைத்துப் போகும் என்று அப்போது யாருக்கும் தெரியாது.

சொன்னபடி அவர் மறுநாள் வெள்ளியன்று கதைப் பந்தலுக்குப் போனார். பாரம்பரிய உடை தரித்து வராவிட்டாலும் ரேடியோக் காரர் மாட்டியிருந்த கால் சராய் உடம்போடு ஒட்டி விஜயசேனன், பிரஜாசேனன் போன்ற பெர்யகளுடைய ராஜகுமாரர்கள் கோட்டுச் சித்திரமாக்ச் சிறுவர்களுக்கான கதைப் புத்தகங்களில் உடுத்திக் காணபபடுவது போல தெரிந்தது. .அவர் சமயவேலாகத் தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினார்கள் அவரை வரவேற்ற சிஷ்யர்களும் ஒற்றை சிஷ்யையும்.

ரேடியோக் காரர் கையில் ஒரு கிடாரங்காயைக் காணிக்கை கொடுக்க வைத்திருந்ததையும் கூட்டத்தினர் கவனிக்கத் தவறவில்லை. முழுக்கப் பழங்களைக் காணிக்கையாகத் தராமல் காய்கறிகளையும் காப்பிக் கொட்டை, வெண்ணெய், பால், தயிர், நல்லெண்ணெய் போன்ற உன்னத உணவுகளையும் தரச் சொல்லிக் கதை கேட்க வருகிறவர்கள் சிஷ்யர்களால் ஊக்குவிக்கப் படுவது நடப்பதே. சிலர் அன்பின் மிகுதியால், வீட்டில் சமைத்த பொருட்களையும், கோழி முட்டை போன்ற வஸ்துக்களையும் எடுத்து வருவதைத் தடுப்பதும் அவர்களின் வேலையாக இருந்தது.

எனினும் இதுவரை எண்ணெயும் கார மிளகாயும் சேர்த்து ஊறுகாய் போட கிடாரங்காய் யாரும் காணிக்கை அளிக்கவில்லை என்பதை அவர்கள் நினைவு கூர்ந்தார்கள்.

வந்தவருக்கு எங்கிருந்தோ ஒரு மர முக்காலி கொண்டு வந்து ஆசனமாகப் போடப் பட்டது. அவரை முன் வரிசையில் அமரச் சொல்லியும் அன்றைய கதை முடிந்ததும் உபசாரமாகச் சில வார்த்தைகள் பேசச் சொல்லியும் அப்படியே ரேடியோ லைசன்ஸைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் குறித்து ஒரு பரவலான தெளிவை உண்டாக்கும் படியும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

ஒரு புன்முறுவலோடு அவர் அவர்களுடைய கோரிக்கைகளை, அவற்றில் முக்காலி தவிர மற்றவற்றை அங்கீகரித்தார். திரைக்குப் பின்னால் ஆவலோடு பார்வை நிலைக்க, கையில் பிடித்த கிடாரங்காயைப் பணிவாக ஏந்திய அவர் புண்ணியாத்மாக்களின் மன நிறைவை உடல்மொழியாகப் பிரதிபலித்தபடி நின்று கொண்டிருந்தார்.

கனமான குரலில் சிஷ்யகோடிகள் முன்னோடியாக வழக்கமாகப் பாடப்படும் தோத்திரப் பாடல்களைப் பாடி முடித்து ஒரு நிமிடம் இடைவெளி விட்டு பஞ்சாபகேச சிரௌதிகள் குரல் கொரகொரவென்று மெதுவாக ஒலிக்க ஆரம்பித்தது. இரண்டு நிமிடம் பேசி அது ஓய, பின்னால் பட்டுத் துணி விரிப்பில் பத்மாசனம் இட்டு அமர்ந்திருந்த சிஷ்யை தொண்டையைக் கனைத்துக் கொண்டு கம்பீரமாக அவர் விட்ட இடத்தில் தொடங்கினாள்.

ரேடியோக் காரரின் முகம் பொறுப்பையும் உத்தியோகத்தையும் பிரதிபலிக்க அவர் நிமிர்ந்து படை வீரன் போல நின்றார். கையில் கிடாரங்காய் அந்தக் கம்பீரத்தை அதிகரித்ததே ஒழியக் குறைக்கவில்லை.

அவர் ஏதோ கேட்கவோ சொல்லவோ கையுயர்த்த, பந்தலில் பலமான மௌனம் நிலவியது.

அந்த ரேடியோ பெட்டிக்கு லைசன்ஸ் இருக்கிறதா?

அவர் தண்ணீர் நிரப்பிப் பூமாலைகளும் மாவிலையும் சார்த்தி வைத்திருந்த செம்பைச் சுட்டிக் காட்டிக் கேட்டார்.

அது ரேடியோ இல்லை என்று அவசரமாக யார்யாரோ எழுந்து நின்று கை காட்டியும், உட்கார்ந்தபடிக்குச் சுற்றுமுற்றும் திகைப்போடு பார்த்து ஆமோதிக்க ஆள் தேடியும் கூச்சலாகச் சொன்னார்கள். ரேடியோக்காரர் எல்லாக் குரல்களையும் அரசு நடவடிக்கையாக உடனே தடை செய்து தன் புன்னகையை மறுபடி அணிந்து கொண்டு விளக்கினார் –

மனிதர்களின் பேச்சு தேகத்தில் இருந்து அந்நியப்பட்டு வந்து ஒரு ஜனக் கூட்டத்துக்குக் கேட்க கிடைக்கிறது. இதுவும் ஒரு வகை வானொலி தான். அவசியம் இதற்கான லைசன்ஸ் கட்டியிருக்க வேண்டும்.

ரேடியோக் காரர் முன்னால் நகர்ந்து செம்பைக் கைப்பற்றக் கை நீட்ட கூட்டத்தில் இரைச்சல். அவர் கம்பீரமாக எல்லோரையும் திரும்பிப் பார்த்துக் திரும்பவும் கையமர்த்தினார். பள்ளிப் பிள்ளைகளை சத்தம் போடாமல் கைகட்டி வாய்பொத்தி இருக்க உத்தரவிடும் ஆசிரியர்களின் சைகைகள் அவை என்று கூட்டத்தில் யாரோ அறிவித்தார்கள்.

சர்க்கார் உத்தியோகஸ்தரை வேலை செய்ய விடாமல் தொந்தரவு கொடுத்தால் உங்கள் எல்லோரையும் பிடித்துச் சிறையில் தள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு.

அவர் மிரட்டியபடியே தண்ணீர்ச் செம்பை எடுத்துக் கொண்டு வெளியே போனார்.

பேரிளம் பெண் ஒருத்தியும் கூடவே அவளுடைய வீட்டுக்காரன் என்று சொல்லத் தக்க விதத்தில் உயரமும் உடம்பு கனமும் கொண்ட ஒரு ஆணும் குதிரை வண்டி விட்டிறங்கி ரேடியோக் காரரை நோக்கி வந்தார்கள்..அந்தப் பெண் அவரை விசாரித்தாள் –

நான் கொச்சு தெரிசா.. இங்கிலாந்தில் இருந்து வரேன். கதாபிரசங்கம் நடக்கிற் இடம் இதுதானா?

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன